புதன், 8 பிப்ரவரி, 2012

99. மொஹஞ்சதாரோவில் ஆதிசிவம்?


மொஹஞ்சதாரோவின் முக்கிய அமைப்புகளாக 27 நக்ஷத்திரங்களை நினைவுறுத்தும் அடித்தளக் கட்டடம், குளம் ஆகியவை உள்ளன. இவற்றையொட்டி அமைந்துள்ள இடம் கோவிலாக இருக்க வேண்டும் என்று நாம் ஆராய ஆரம்பித்தோம்.



அதில் குளத்தைப் பற்றிய விவரங்களை அறிவதற்கு முன்னால், அங்கு இருந்த கோவில் மற்றும் தெய்வம் ஆகியவற்றைப் பற்றி ஆராயும்போது, பல கோணங்களிலும், வேத மரபில் இருந்துவந்த கருத்துக்களே தெரிய வருகின்றன. அப்படித் தெரிய வரும் ஒரு கருத்து வேதரிஷிகள் மேற்கொண்ட தவக்கோலமாகும்.


மொஹஞ்சதாரோவில் தவக்கோலத்தில் அமைந்துள்ள முத்திரைகள் கிடைத்துள்ளன..



மிருகங்களால் சூழப்பட்டு, தவக் கோலத்தில் அமர்ந்திருக்கும் இந்தக் கோலத்தில் இருப்பது பசுபதி என்னும் சிவன் என்பது ஆராய்ச்சியாளர்கள் கருத்து. சிவன் என்னும் தெய்வம் உருவானதற்குக் காரணமான ஆதி உருவம் இது என்று கருதி, இந்த உருவத்தை PROTO SIVA – ஆதி சிவம் என்று அழைக்கிறார்கள்.


கணக்கிலடங்காத சிவன் கோவில்கள் தமிழ் நாட்டில் இருக்கின்றன. அவற்றில் பலவும், பாண்டியர்களாலும், சோழர்களாலும் கட்டப்பட்டவை. அங்கெல்லாம் நாம் காணாத இந்த உருவத்துக்கு, மேற்கத்திய ஆராய்ச்சியாளர்கள் சொன்ன விளக்கத்தை அப்படியே ஏற்றுக் கொண்டு, திராவிடவாதிகள், செம்மொழிச் சின்னத்திலும் அமைத்துக் கொண்டார்கள். அந்தச் சின்னத்தில் இடது பக்கத்தில் இந்த PROTO- SIVA என்னும் தோற்றத்தை அமைத்துள்ளார்கள்.



 

அந்தச் சின்னம் இவ்வாறு இருக்கிறது. 


இதில் சுற்றிலும் மிருகங்கள் இல்லை.

 


இந்த முத்திரைகளில் மூன்று முகங்கள் தெரிகின்றன. முன்புறம் ஒரு முகமும், பக்கவாட்டுத் தோற்றத்தில் இரண்டு முகங்களும் தெரிகின்றன.



சிவனுக்கு முக்கண் உண்டு, ஆனால் மூன்று முகங்கள் உண்டா என்றெல்லாம் சிந்திக்காத, அல்லது சிவன் முதலான இந்துத் தெய்வங்களது தத்துவத்தை அறியாதவர்கள், இதைச் சிவன் என்றும், ஆதி சிவன் என்றும் சொல்லிவிட்டுப் போகட்டும். ஆனால், பல தெய்வங்களது கோவில்களைக் கொண்டுள்ள தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள் கொஞ்சமாவது சிந்திக்க வேண்டாமா? 


தமிழ் நாட்டைப் பொறுத்தவரையில், சிலப்பதிகாரக் காலமான பொ.பி 2 ஆம் நூற்றாண்டிலேயே, திருத்தமான அமைப்பில் தெய்வச் சிற்பங்கள் இருந்திருக்கின்றன என்பதற்குக் கண்ணகிக்குக் கோவில் எழுப்பினதே சாட்சி.அப்பொழுதே  சிவன், விஷ்ணு போன்ற கடவுளர்களுக்குக் கோட்டங்கள் என்ற பெயரில் கோவில்கள் இருந்தன என்று சிலப்பதிகாரம் மூலம் அறிகிறோம். அது மட்டுமல்ல, இன்றைக்கும் திருவரங்கத்தில் பள்ளி கொண்ட தோற்றத்தில் நாம் காணும் பெரிய திருமால் உருவமும், திருமலையில் நின்ற கோலத்தில் எழுந்தருளியிருக்கும் வேங்கடாசலபதி உருவமும், சிலப்பதிகாரக் காலத்திற்கு முன்னரேயேஅதாவது 2000 ஆண்டுகளுக்கு முன்பே இருந்திருக்கின்றன.  திருத்தலப் பயணமாக அந்தக் கோவில்களுக்குச் சென்ற சேரநாட்டு மாங்காடுப் பார்ப்பனன் அந்தத் தெய்வ உருவங்களை விவரிப்பதன் மூலம் இதை நாம் அறிகிறோம்.


இருந்தையூர் என்னுமிடத்தில் வீற்றிருந்த கோலத்தில் திருமால் எழுந்தருளியிருந்த்தாகப் பரிபாடலில் ஒரு பாடல் இருக்கிறது. அதுவே மதுரைக் கூடலழகராகும் என்றும், அந்தப் பாடல் 2 ஆம் சங்ககாலத்தில் பாடப்பட்டது என்றும் 44, மற்றும் 60 ஆம் கட்டுரைகளில் பார்த்தோம். 2 ஆம் சங்க காலம் என்பது 3500 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம். அந்தக் காலக் கட்டத்திலேயே, தமிழ் நாட்டில் திருத்தமாக அமைக்கப்பட்ட வடிவில் தெய்வ உருவங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன என்று தெரிகிறது.

இவற்றை நோக்கும் போது, 5000 ஆண்டுகளுக்கு முன்புதான் மொஹஞ்சதாரோவில் ஒரு தெய்வக் கருத்து உருவாகி அது சிவனைக் குறிக்கும் ஆதிக் கருத்தாகும் என்று சொல்லி, அதற்குப் பின்பே பிற தெய்வக் கருத்துக்கள் உண்டாயின என்று சொல்வதும், அல்லது, அங்கிருந்த மக்களை விரட்டிவிட்டு, 3500 ஆண்டுகளுக்கு முன் அங்கு குடியேறிய ஆரியர்கள் விஷ்ணு முதலான தெய்வக் கருத்துக்களை உருவாக்கினர் என்று சொல்வதும் தமிழ் நாட்டில் காணப்படும் இந்தத் தெய்வங்கள் உருவாக்கப்பட்ட காலத்துடன் பொருந்தவில்லை.


சிவனது தோற்றத்தைப் பொறுத்த மட்டில், தமிழ் நாட்டுக் கோவில்களில் லிங்க உருவங்களே அமைந்துள்ளன. குடிமல்லம், குடிமியான் மலை ஆகிய இடங்களில் உள்ள கோவில்களில் காணப்படும் சிவ லிங்கங்கள் 2000 ஆண்டுகளுக்கும் முற்பட்டவை என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். ராஜராஜ சோழன் காலம் வரையிலும், சிவன் உருவம் என்றால், லிங்க வடிவில்தான் அமைக்கப்பட்டன. 10ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு தோன்றின கோவில்களில்தான் வெவ்வேறு தோற்றங்களில் வார்ப்புகளாகச் சிவன் உருவங்கள் அமைக்கப்பட்டன என்று தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.

அப்படி உண்டான சிவனது திரு உருவங்கள் 25 ஆகும். ("தமிழகக் கலைகளும், கல்வெட்டுகளும்" – டாக்ட்ர் மா. ராஜமாணிக்கனார்) அவற்றில் பசுபதி என்று எந்த உருவும் அமைக்கப்படவில்லை. 


இந்த உருவங்களைத் தவிர நடராஜர் உருவம் மொத்தம் 108 இருந்தன என்று சிற்ப சாஸ்திர நூல்கள் தெரிவிக்கின்றன. அவற்றில் ஐந்து மட்டுமே கடந்த 1000 ஆண்டுகளில் அதிகமாக வார்ப்பெடுக்கப்பட்டிருக்கின்றன. மற்ற உருவங்களுக்கான சிற்ப விதிகள் உள்ளதால், அவற்றையும் ஒரு காலத்தில் செதுக்கி இருப்பார்கள் என்றுதானே அர்த்தமாகிறது? அப்படி அவற்றையும் செய்திருக்கக்கூடிய காலக் கட்டத்தைக் கணக்கில் எடுத்துக் கொணடால், நடராஜ உருவத்தை என்றைக்கு உண்டாக்கியிருப்பார்கள் என்று கணக்கிடவே முடியாதல்லவா?


கணக்கிடப்படும் காலமகவே இருந்தது என்று எடுத்துக் கொண்டாலும், தில்லை வாழ் அந்தணர் என்று சிவ பெருமானே அடியெடுத்துக் கொடுத்த தில்லையில் கோவில் கொண்ட  நடராஜர், மொஹஞ்சதாரோ 'பசுபதி'யின் கருத்தாக்கத்தில் எங்கு வருகிறார்? அந்த உருவத்தை PROTO- SIVA என்று ஏற்றுக் கொள்பவர்கள், நடராஜர் கருத்தையும், நடராஜர் உருவ ஆக்கத்தையும் எப்படி விளக்கப்போகிறார்கள்?



இன்னொரு கோணத்திலும் சிந்திப்போம்.


சிந்து சமவெளியில் காணப்படும் அந்தத் தோற்றம் பசுபதி என்றால், அந்த நாகரிகமே தமிழர் நாகரிகம் என்றால், அந்தத் தமிழர்கள் 3500 ஆண்டுகளுக்கு முன் ஆரியர்களால் தமிழ் நாட்டுக்கு விரட்டப்பட்டவர்கள் என்றால், அவர்கள் உண்டாக்கினதாகச் சொல்லப்படும் பசுபதிக் கருத்தாக்கம், 1500 ஆண்டுகளுக்கு முன் வரை தமிழகத்தில் தென்படவில்லையே, ஏன்?


அந்தப் பசுபதியை மையமாகக் கொண்ட பாசுபத மதத்தையும் லகுலீஸ்வரர் என்பவரே உருவாக்கினர் என்ற ஒரு கருத்து ஆராய்ச்சியாளர்களிடையே இருக்கிறது. இந்தக் கருத்து புராணங்களிலும் சொல்லப்படுகிறது. லிங்க புராணத்தின்படி, சிவ பெருமான் 28 முறை அவதாரங்கள் எடுத்தார் என்றும், அவற்றுள் 28 ஆவதான கடைசி அவதராம், லகுலீசர் என்றும் சொல்லப்பட்டுள்ளது. அவரே பாசுபத வழிபாட்டை மீண்டும் நிலை நாட்டுவார் என்று கூர்ம, வாயு, லிங்க புராணங்கள் கூறுகின்றன. மீண்டும் என்று சொல்வதால், பாசுபதம் முன்பே இருந்திருக்க வேண்டும்.


2-ஆம் சந்திரகுப்தரால் வட மதுரையில் 4 ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட தூணில், பாசுபத மதத்தின் 4 ஆவது குரு ஒருவரைப் பற்றிய செய்தி சொல்லப்பட்டுள்ளது. அது லகுலீஸ்வரர் வழி வந்த பரம்பரையைச் சொல்வதாக இருக்க வேண்டும். அதன் அடிப்படையில் லகுலீஸ்வரரது தோற்றம், 2000 ஆண்டுகளுக்கு முன் இருந்திருக்க வேண்டும்.



லகுலீஸ்வரர் – பொ.பி. 9 ஆம் நூற்றாண்டுச் சிற்பம்.


அவர் தமிழரல்லர். அவருக்கும் தமிழுக்கும் சம்பந்தம் கிடையாது. மேலும் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவின் மீது படையெடுத்து வந்த குஷானர்கள் இந்தப் பாசுபத மத்த்தை ஆதரித்தார்கள் என்னும் கருத்து நிலவுகிறது. குஷானர்கள் சக்ஷுஸ் எனப்படும் ஓக்சஸ் நதிக்கருகே (இன்றைய பெயர் (AMU DARYA) வாழ்ந்தவர்கள் என்றும் சொல்லப்படுகிறது.



 

இந்தப் படத்தில் காஸ்பியன் கடலருகே ஆரல் கடலில் அமு தார்யா என்னும் பெயர் கொண்ட சக்ஷுஸ் நதி கலப்பதைக் காணலாம். இன்றைய இந்தியாவும், பாகிஸ்தானும் ஆஃப்கானிஸ்தானும் காட்டப்பட்டுள்ளன. சிந்து சமவெளி நாகரிகம் என்பது பாகிஸ்தான் எல்லையுடன் முடிவடைந்து விட்டது.

அதற்கு அப்பாலிருந்த மத்திய ஐரோப்பாவிலிருந்து 2000 ஆண்டுகளுக்கு முன் வந்த குஷானர்கள் இந்தியாவின் பெரும் பகுதியை ஆண்டிருக்கிறார்கள். அவர்கள் காலத்தில் பாசுபதம் செல்வாக்கு பெற்றிருந்தது என்பதற்கு வீமகட்பிஸஸ் காசுகளே சான்று என்று தொல்லியலார் கருதுகிறார்கள். ("கோயம்புத்தூர் மாவட்டத் தொல்லியல் கையேடு" – 2010 வெளியீடு).


அப்படியென்றால் எங்கிருந்து, யாரிடமிருந்து பாசுபதம் வந்தது? அது உண்டானது சிந்து சமவெளியில் என்றால், அதுவே தமிழரது ஆதி இருப்பிடம் என்றால், அதை PROTO- SIVA  என்னும் கருத்தாக உண்டாகியவர்கள் சிந்து சமவெளி வாழ் தமிழர்கள் என்றால், இன்றைய தமிழ்ப் பகுதிக்கு வந்த பிறகு அந்தக் கருத்தை அவர்கள் ஏன் பரப்பவில்லை?


2000 ஆண்டுகளுக்கு முன் வந்தக் குஷானர்கள்தானே அதைப் பரப்பியிருக்கிறார்கள்? அதைத் தமிழர்கள் அல்லவா பரப்பியிருக்க வேண்டும்? ஆனால் அந்த மதம் தமிழ் நாட்டில் அரிட்டாபட்டி (மதுரை), பேரூர் (கோவை) ஆகிய இடங்களைத் தவிர வேறு இடங்களில் இருந்ததாக எந்தச் சான்றும் இல்லையே ஏன்?


அதிலும், பொ.பி 6 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகுதான் இதைப் பின்பற்றியவர்கள் இந்த இடங்களில் இருந்திருக்க வேண்டும் என்று ஊகிக்கப்படுகிறது. பசுபதி என்னும் கருத்தாக்கத்தைத் தமிழர்கள் பின்பற்றியதாக எந்தச் சான்றும் இல்லை.


மாறாக லிங்க வழிப்பாடே தமிழ் நாட்டில் பிரபலமாக இருந்திருக்கிறது. தமிழ் நாட்டில் மட்டுமல்ல, பாரதம் முழுவதும் 12 ஜோதி லிங்கங்கள் வழிபடப்பட்டு வந்திருக்கின்றன. அவ்வளவு ஏன்? சிந்து சமவெளிப் பகுதியில் சமயமே இல்லை என்றும், வேதமரபல்லாத சமயம் என்றும் எத்தனை முறை மேற்கத்திய ஆராய்ச்சியாளர்கள் கூறியிருப்பார்கள்?


ஆனால் 1940 இல் ஹரப்பாவில் ஆராய்ச்சி மேற்கொண்ட எம்.எஸ். வாட்ஸ் (M.S. VATS)  என்பவர் கல்லாலான மூன்று சிவ லிங்கங்களைக் கண்டுபிடித்ததாக எழுதியுள்ளார். அவர் அளித்துள்ள புகைப் படத்தை இங்கே காணலாம்.


 


இதை யாரும் மறுக்கவில்லை. இந்தியத் தொல்லியல் கழகத்தின் வலைத்தளத்தில் இந்தப் படத்தையும், இதைப் பற்றிய கட்டுரையையும் காணலாம்,

http://www.archaeologyonline.net/artifacts/scientific-verif-vedas.html


இந்த இடம் ஹரப்பாவில் எங்கே இருக்கிறது?


இந்த லிங்கங்கள் எங்கே இருக்கின்றன?


சுதந்திரம் பெறுவதற்கு முன் அகழ்வாராய்ச்சியில் இது கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது. அதே காலக்கட்டத்தில்தான், மரத்தைப் பிளக்கும் குழந்தை கிருஷ்ணன் முத்திரையும் கண்டு பிடிக்கப்பட்டது. அந்த முத்திரை இப்பொழுது இந்தியாவில் இல்லை. இந்த லிங்கங்களும் இந்தியாவில் இருப்பதாகத் தெரியவில்லை. சுதந்திரத்துக்கு முன்னால் கண்டு பிடிக்கப்பட்ட முத்திரைகள், பொருட்கள் எல்லாம் இங்கிலாந்தில் இருக்கின்றன. அல்லது தனியார் கலைப் பொருள் சேமிப்பில் இருக்கின்றனவோ தெரியைல்லை.


ஆனால் இந்த இரண்டு சான்றுகளும், ஆரியப் படையெடுப்பை உடைக்கும் சான்றுகள் ஆகும்.


சிந்து சமவெளி நாகரிக காலத்துக்கும் முன்பே கிருஷ்ணாவதாரம் நடந்து விட்டது என்றும், அதனால், பாரதத்தில் வழங்கி வரும் புராதானக் கதையான மஹாபாரதம் உண்மையே என்றும் மெய்ப்பிக்கும் சான்றுகள் ஆகும்.


சிந்து சமவெளி நாகரிகத்துக்கும் முன்பே வேத நாகரிகம், இருந்தது என்பதை மெய்ப்பிக்கும் சான்றுகள் ஆகும்.


இவற்றை வேண்டுமென்றே வெளிக் கொணரவில்லையென்றால்,

அது பாரதத்துக்கும்,

மனித குல சரித்திரத்துக்கும் செய்யப்படும் அநீதி என்றே அர்த்தம்.


4 கருத்துகள்: