ஞாயிறு, 28 நவம்பர், 2010

10. இந்திரன் மகனும், இளங்கோவடிகளும்.

தமிழ் நாட்டின் தென் பகுதியில் உள்ள புகார் நகரில் நடந்த இந்திர விழாவுக்கு, ஆரியர் துவன்ற  பேரிசை இமயம் எனப்பட்ட இமய மலைப் பகுதியிலிருந்து ஒரு புதுமணத் தம்பதி வந்தனர்.
தேனிலவு போலத் தங்கள் நேரத்தை ஆடல், பாடல், விழா போன்றவற்றில் செலவழிக்க வந்தனர்.
அப்பொழுதுதான் பங்குனிப் பௌர்ணமியன்று காமன் விழாவைத் தங்கள் ஊரில் கொண்டாடியிருந்தனர். இன்றைக்கு வட நாட்டவர்களால் ஹோலிப் பண்டிகை என்று கொண்டாடப்படுகிறதே, அதுவே காமன் பண்டிகை எனப்பட்டது.


அந்தப் பண்டிகை, பண்டைய தமிழ் நாட்டில், தெய்வத்தின் திருமண நாளாக - பங்குனி உத்திரத் திருநாளாக, எல்லாக் கோவில்களிலும்  கொண்டாடப்பட்டது. திருவரங்கத்தில் அத்திருநாள் கொண்டாடப்பட்ட விதம் அகநானூறிலும் சொல்லப்படுகிறது.  
ஆரிய மூட நம்பிக்கை என்றோ, ஆரியப் பழக்கம் என்றோ இன்றைய திராவிடத் தலைவர்கள் சொல்ல முடியாதபடி, அத்திருநாள் பாவை நோன்பின் பலன் தரும் திருமண  நாளாகவும் தமிழ் நிலத்தில் இருந்தது.


அந்தக் காமன் பண்டிகை நிறைவேறிய கையோடு , அதற்கடுத்த பௌர்ணமியில், அதாவது சித்திரா பௌர்ணமியில், இந்திர விழா நடந்தது.
அதைக் காணத்,  தன்  துணையுடன் வந்த அந்த இளைஞனை, இளங்கோவடிகள் விஞ்சை வீரன் என்கிறார். அவனது ஊர் வெள்ளி மலை என்று சொல்லப்படும் பனி படர்ந்த இமய மலைக்கும் அப்பால் உள்ள வட சேடி நாடு என்கிறார் அவர். 


இவ்விடத்தில் நாம் இது நடந்த காலம் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்.  கண்ணகி கதை நடந்த சில வருடங்களிலேயே சிலப்பதிகாரம் எழுதப்பட்டது. அதன் காலம் பற்றி நிர்ணயிக்கப் பல சான்றுகள் இருக்கின்றன. அவற்றுள் முக்கியச் சான்று, பத்தினிக் கோட்டம் என்னும் கண்ணகி கோவில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் செய்த போது, அதில் கலந்து கொண்ட இலங்கை அரசன் ஒருவனைப் பற்றியது. அவன் கயவாகு என்னும் இலங்கை அரசன்.  அவன் கி-பி- இரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இலங்கையை ஆண்டவன் என்று இலங்கையின் சரித்திரத்தில் எழுதப்பட்டுள்ளது. எனவே கண்ணகியின் காலம், கி-பி- முதலாம் நூற்றாண்டின் இறுதி அல்லது, இரண்டாம் நூற்றாண்டின் ஆரம்பம் எனலாம். 


கணணகி கதை நடந்து  1500 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டன. ஆனாலும்  நாம் இன்னும் அதை நினைக்கிறோம். அதைப் பற்றித் தெரிந்து கொண்டிருக்கிறோம். அந்தப் பத்தினி தெய்வத்துக்கு இன்றும் கேரளாவில், ஆட்டுக்கல் என்னும் இடத்தில் கோவில் இருக்கிறது. மதுரையை எரித்த பின் கண்ணகி சேர நாடு சென்ற வழியில் ஆட்டுக்கல்லில்  தங்கினாள் என்று அங்கே கதை வழங்குகிறது. அங்கே பகவதி கோவில் என்று அவளுக்கு ஒரு கோவிலும் இருக்கிறது. இன்றும் அங்கே வருடாந்திர பொங்கல் திருவிழா நடக்கிறது. அப்பொழுது கண்ணகியின் கதை பாடலாகப் பாடப்படுகிறது. அந்தக் கோவிலின் கோபுரத்திலும், கண்ணகியின் வாழக்கையில் நடந்த சம்பவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இவற்றை எல்லாம் மிஞ்சும் வண்ணம், அங்கு பொங்கல் விழாவன்று, பெண்கள் மட்டுமே பங்கு கொண்டு, பொங்கலிட்டு அந்தப் பத்தினித் தெய்வத்தை வணங்குகின்றனர். அதிகப்படியாக பெண்கள் கூடும் பண்டிகை என்று அது கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

                        
1,500 ஆண்டுகளுக்குப் பிறகும் தமிழ் நாட்டில் நடந்த சம்பவம் நினைவில் இருக்கும் போது, அதற்கு  1,500 ஆண்டுகள் முன்னால் நடந்த, ஆங்கிலேயர்கள் கூறும் ஆரியப் படையெடுப்பு, அதனால் வீடிழந்து, நாடிழந்து திராவிடர்கள் தென்னிந்தியப் பகுதிகளுக்கு ஓடி வந்த மாபெரும் துக்க வரலாறு ஏன் அன்று நினைவில் இல்லை?
ஒரு 1,500 ஆண்டுகளில் தங்கள் முந்தைய சரித்திரத்தை மறந்து விட்டு, தங்களை விரட்டிய இந்திரனுக்கு, புகார்நகரில்  விழா எடுக்கிறார்கள் என்றால் அது ஒத்துக் கொள்ளும்படியாக இருக்கிறதா?
 அப்படி நடந்த விழாவுக்கு, இந்திரனுடன் நட்பு பாராட்டிய நாட்டு மக்கள் வந்து கலந்து கொண்டார்கள் என்றால், அங்கே முன் பகை இருந்திருக்க முடியுமா?


இந்திர விழா அந்த வட சேடி நாட்டவர்க்கு முக்கிய விழா. அதற்குக் காரணம் இருக்கிறது.
முன்பொரு காலத்தில் வட சேடியை 'உபரிசர வஸு' என்னும் மன்னன்  ஆண்டு வந்தான். அவனைப் பற்றிய கதையை புராணங்களிலும், இராமாயண, மகா பாரதத்திலும் காணலாம். அவன் இந்திரனுக்கு நண்பன். இந்திரன் அசுரர்களை வெல்ல, நாராயணன் அருளால் நான்முகப் பிரம்மனிடமிருந்து ஒரு கொடியைப் பெற்றிருந்தான். பிறகு அதைத்  தன் நண்பனான உபரிசர வஸுவிடம் கொடுத்தான்.
உபரி சர வஸு தன் நாட்டில் அதை ஏற்றி  மிக விமரிசையாக விழா எடுத்தான்.
அந்த விழா எடுக்கும் மன்னனைப் பகைவர்கள் வெல்ல முடியாது.
அந்த நாட்டு மக்கள் சுகத்துடன் வாழ்வார்கள் என்று, இந்த விழா எடுக்கும் விதத்தை விரிவாக விளக்கும் வராக மிஹிரர் கூறுகிறார்.


வட சேடியில் கொண்டாடப்படும் இந்திர விழா, புகார் நகரில் நடக்கவே, அதைக் காண விரும்பி அந்த வித்யாதரத் தம்பதியினர் வந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது.


                                                      வித்யாதர ஜோடி

வட சேடி நாடு  இன்று இருக்கிறதா என்று யாருக்கும் தெரியாது.
ஆனால் அது இருந்த இடம கைலாய மலையில் உள்ள மானசரோவர் என்னும் ஏரிக்கு அப்பால் என்று வருணனைகள் உள்ளன.
அதன் படி வட சேடி நாடு  இன்றைய திபெத் நாட்டின் அருகே இருந்திருக்க வேண்டும். . 


அந்த நாட்டு மக்கள் வித்யாதரர்கள் எனப்படுவர். சிலப்பதிகார உரை ஆசிரியரும், இந்த விஞ்சை வீரனை வித்யாதரன் என்கிறார். இவர்கள் இந்திரனுக்கு  நண்பர்கள்!

இவர்கள் உயரமான மலைப் பகுதிகள் சஞ்சரிப்பவர்கள். அழகானவர்கள். வித்தைகளில் கற்றுத் தேர்ந்தவர்கள். அதனால்தான் வித்யாதரர் என்ற பெயரே அவர்களுக்கு ஏற்பட்டது. அவர்கள் நாட்டுப் பெண்கள் மிகவும் அழகானவர்கள். அவர்கள் ஜோடி சகிதமாக தென்னிந்தியாவின்  மலைப் பகுதிகளிலும் ஆங்காங்கே சஞ்சரிப்பார்கள் என்று பல நூல்களில் வர்ணனை வருகிறது. அனுமன் மகேந்திர மலையிலிருந்து  இலங்கைக்குத் தாவின போது அங்கிருந்த வித்யாதரர்கள் அதைப் பார்த்தனர் என்று  ராமாயணத்தில் வர்ணனை வருகிறது.
அந்த மலையின் பேரே மகேந்திர மலை! 
மகேந்தரன் என்பது தேவர்களுக்குத் தலைவனான இந்திரனுக்கு ஒரு பெயர். 
இந்த மலை இருப்பது தமிழ் நாட்டில்!
எந்த அளவு இந்திரனைத் தமிழ் மக்கள் கொண்டாடியிருந்தால் இப்படியெல்லாம் பெயர் வந்திருக்கும்!

இந்திர விழாவுக்கு வந்த வித்யாதர இளைஞனைப் பார்ப்போம். அவன் தன் காதலியோடு வரும் பயண வழியை இளங்கோவடிகள் விவரிக்கிறார். புகார் நகரில் இந்திர விழா சிறப்பாக நடக்கும், பார்க்கலாம் வா என்று தன் காதலியை அழைத்துக் கொண்டு,
இமய மலையைக் கடந்து,
அங்கிருந்து கங்கை நதியை அடைந்து,
பிறகு அங்கிருந்து உஜ்ஜயினி நாட்டைக் காட்டி,
பிறகு விந்திய மலையைக் காட்டி,
ஸ்ரீனிவாசப் பெருமான் எழுந்தருளியிருக்கும் திரு வேங்கட மலையைக் காட்டி பிறகு, காவேரி பாயும் சோழ நாட்டின்கண் புகார் நகரை வந்தடைந்தான் என்கிறார் இளங்கோவடிகள்.


இந்தியா முழுவதும் ஒரே கலாசாரம் இருந்திருக்கவே, இப்படி அவர்கள் வருகிறார்கள் என்றும் தெரிகிறது. 
அவன் வந்த வழி இப்படி இருந்தது. இன்றைய இந்தியாவே இந்தப் பயணத்தில் அடங்கி விட்டது.

 

வேங்கட மலையைக் கண்டு விட்டு, புகார் நகருக்கு வருகிறார்கள்.
அங்கு நடக்கும் இந்திர விழாவில் மாதவியின் ஆடலையும் பார்க்கலாம் என்று அந்த வித்யாதரன் தன் காதலியிடம்  சொல்கிறான்.
அந்த மாதவி யார் என்றும் சொல்கிறான்.


ஒரு முறை இந்திரன் ஆளும் தேவ லோகத்தில், ஆடல் பாடல் நடக்கிறது.

நாரதர் வீணை வாசிக்க, உருப்பசி என்னும் ஊர்வசி நடனமாடுகிறாள்.
மிக அற்புதமாக நடக்கிறது நடனம். அதைக் காண தமிழ் முனியான அகத்தியரும் அங்கு இருக்கிறார்.
அப்பொழுது ஊர்வசி ஆட்டத்தில் மயங்கின,  இந்திரன் மகனான ஜயந்தனும் ஆடல், பாடலில் கலந்து கொள்கிறான்.
அப்பொழுது ஊர்வசியும், ஜயந்தனும் ஒருவரை ஒருவர் பார்த்து லயிக்கின்றனர்.
அதில் காமக் குறிப்புகள் தென்பட்டன.
இதைக் கண்ட நாரதர் அவர்களை சுய நினைவுக்குக் கொண்டு வர அபஸ்வரம் மீட்டுகிறார்.
இதையெல்லாம் அறியாத அகத்தியர், அந்த அபஸ்வரத்தில் வெகுண்டு அவர்கள் அனைவரையும் சபிக்கிறார்.
நாரதரது வீணை மணையாகப் பிறக்க வேண்டும்;
நடனத்தின் போது அந்த மணையில் தட்டப் பாடும் கோலாக ஜெயந்தன் பிறக்க வேண்டும்.
ஊர்வசி புகார் நகரின்கண் கணிகையாகப் பிறக்க வேண்டும் என்று சாபமிடுகிறார்.
அப்படிப் பிறந்த ஊர்வசி மாதவி எனப்பட்டாள்.
அவள் வம்சத்தில் பிறந்தவள்தான் சிலப்பதிகாரம் நடந்த காலக் கட்டத்தில் வாழ்ந்த மாதவி.
இந்தக் கதையை வித்யாதரன் தன் காதலிக்குச் சொல்லி, மாதவியின் நடனத்தைப் புகழ்கிறான். அதைப் பார்க்கலாம் என்று அழைத்து வருகிறான்.


இந்திர சபையில் ஊர்வசியின் நடனம் நடந்தது  போல, புகார் நகரில் மாதவியின் நடனம் நடைபெற்றது.
இது ஏதோ அந்த வித்யாதரன் சொன்ன கதை அல்ல.
முன்னமேயே அரங்கேற்றுக் காதையில், இந்தக் கதையைச் சொல்லித்தான் இளங்கோவடிகள், மாதவியின் நடன அரங்கேற்றத்தை விவரிக்கிறார்.
இளங்கோவடிகளின் வாயிலாகவே, அவருக்குப் பின் அடியார்க்கு நல்லார் போன்ற உரை ஆசிரியர்கள் வாயிலாக, இந்திர சபையில் ஆடிய ஊர்வசியே, தமிழ் நாட்டில் மாதவியாகப் பிறந்தாள் என்று சொல்லப்படுகிறது. அவள் வம்சத்தில் கோவலன் மயங்கிய மாதவி பிறந்தாள்  என்று சொல்லப்படுகிறது.
எந்த இந்திரன் திராவிடர்களை அடித்து விரட்டினா னோ அந்த இந்திரனது மகன், தலைக்கோல் என்று தமிழ் மரபிலும் வணங்கப்பட்டான். 
அந்த தலைக்கோலை  வணங்கி விட்டுத்தான் மாதவி நடனத்தை ஆரம்பிக்கிறாள். இன்றும் பரதம் ஆடுவோர், அதைத் தெய்வமாக வணங்கி விட்டே நடனத்தை ஆரம்பிக்கின்றனர்.


பரத நாட்டியத்தின் கதை இப்படி இந்திரனது சம்பந்தம் பெற்றிருக்கையில், இளங்கோவடிகளும், அந்த மரபுகள் தமிழ் மண்ணில் இருந்தது என்று காட்டி, அவற்றைப் பற்றி விவரித்திருக்கையில், நம் திராவிட விரும்பிகள் என்ன செய்தார்கள்?
பரத முனியின் நாட்டியம் என்றால், அது குறித்த ஆராய்ச்சி நமக்கு வேண்டாமாம்.
பரந்த நோக்கில் செய்யப்படும் அந்த ஆராய்ச்சிகளுக்குத் தரப்பட்ட நிலத்தையும் பிடுங்கிக்கொல்வார்களாம்.
ஏனென்றால் அது ஆரியப் பண்பாடாம்.
பரதம் ஆரியக் கலாசாரமாம். 
ஆனால் நமது கலாசாரம் திராவிடமாம். 
இளங்கோவடிகள்  இயற்றிய சிலப்பதிகாரத்தில் காணப்படும் நடனம் குறித்த விவரங்கள் ஆரியத்தனம் அல்லவாம்.
அவை பச்சை திராவிடனின் கலாசாரமாம்.


அதனால், இளங்கோவடிகளது பெயரையும் சேர்த்து அந்த ஆராய்ச்சி மையத்தைத் துவக்கினால் அதற்கு ஆரியத்த் தீட்டு போய், திராவிட சுத்தம் வந்து விடுமாம்.
இப்படி ஒரு கேலிக் கூத்தாக இந்த நடன ஆராய்ச்சி மையத்துக்குப் பெயரிட்டு வைத்திருக்கிறார்கள்.


இந்திரன் மகனே தலைக்கோலாக இருக்க, 
இந்திர லோக ஊர்வசியே, மாதவியின் தலை மகளாகத் தமிழ் மண்ணில் பிறந்திருக்கும் போது - 
இளங்கோவடிகளே அதை விவரிக்கும் போது, 
எங்கே இருந்து வந்தது ஆரியத் தீட்டு?

இளங்கோ பெயர் இருந்தால், மாதவி இந்திர லோகத்  தொடர்பு இழந்து விடுவாளா?
அல்லது இன்றும் வணங்கப்படும் தலைக் கோலாக ஒரு காலத்தில் இந்திரன் மகன் பிறந்தான் என்பது மூட நம்பிக்கை  ஆகி விடுமா?

அவை எல்லாம் மூட நம்பிக்கை என்றால், சிலப்பதிகாரம் முழுவதுமே மூட நம்பிக்கைதானே!
எத்தனை கடவுள்கள்,
எத்தனை  பூதங்கள் ,
எத்தனை  விழாக்கள்,
எவ்வளவு பேரை தெய்வம் ஆவிர்ப்பித்துக் குறி சொல்கிறது,
எத்தனை பூர்வ ஜன்மக் கதைகள் வருகின்றன சிலப்பதிகாரத்தில்!
இவை எல்லாம் ஆரியத் தாக்கம் என்று இந்தத் திராவிடத் தலைவர்கள் சொல்வார்களா?


சிலப்பதிகாரம் மட்டுமல்ல, அந்த நூலையும் சேர்த்து,
மாதவி பெற்ற மகளான மணிமேகலையைப் பற்றிய நூலும், தமிழின் ஐம்பெரும் காப்பியங்களுள் வைக்கப்பட்டுள்ளனவே?
அவை எல்லாம் ஆரியம் பரப்பும் நூல்கள்  என்று சொல்லலாமே?
சங்கத் தமிழில் ஆங்காங்கே இந்த ஆரியத்தனம்தானே காணப்படுகிறது? 
அதன்படி தமிழன் கலாச்சாரமே ஆரியத் தனமானதுதானே?
மூடத்தனமான, ஆரியத்தாக்கமான, தமிழை ஏன் இவர்கள் இன்னும் பிடித்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
திராவிடம் எங்கே என்று கண்டு பிடித்து அங்கே போய், திராவிடத்தனமாக இருந்து கொள்ளட்டுமே?

வெள்ளி, 26 நவம்பர், 2010

9. ஆரிய இந்திரன், தமிழரின் கடவுள்!

தச்யுக்களுக்கு எதிரியாகச் சித்தரிக்கப்பட்ட ஆரிய இந்திரனுக்குத் தமிழ் நாட்டில் மவுசு அதிகம்.
தமிழ் நாட்டில் இந்திரனுக்குக் கோவிலும், விழாவும் தொன்று தொட்டு இருந்திருக்கின்றன
ஆங்கிலேயனுக்குத்தான் தமிழர் சரித்திரம் தெரிந்திருக்கவில்லை .
அவன் பேசிய ஆரியப் படை எடுப்பை அப்படியே தத்து எடுத்துக்கொண்ட தமிழ் நாட்டு அறிவுஜீவிகளாவது, தமிழ் மரபில் இந்திரன் ஒரு தெய்வம்தானே என்று ஒரு கணம் நினைத்துப் பார்த்திருக்கக் கூடாதா?
தொல்காப்பியர் கூறும் ஐவகை நிலங்களில் மருத நிலத்துக்குக் கடவுள் இந்திரன் என்பதுகூட  அவர்களுக்குத் தெரியாதா?

தெரியாமல் இருந்திருக்காது.
ஆனால் அவர்கள் எல்லாம் பகுத்தறிவுவாதிகளாயிற்றே!
கடவுளை நம்புகிறவன் முட்டாள் என்று சொல்லும் பகுத்தறிவு வாதிகளுக்கு, தமிழர் வழிபட்ட தெய்வங்கள் எல்லாம் ஒரு பொருட்டா என்ன?
சிலம்பைப் பாராட்டி, கண்ணகி சிலைக்குப் போராடினாரே, அவர் சிலப்பதிகாரம் கூறும் இந்திர விழாவை எப்படி மறந்திருப்பார்?
அந்த இந்திரனைத் தானே ஆரியன் என்றும், ஆரிய வெள்ளைக்குத் துணை போனவன் என்றும், கருப்பு நிறத் திராவிடனை விரட்டியவர்கள் என்றும்  சொன்னார்கள்.
அப்படி விரட்டப்பட்டது உண்மை என்றால், ஓடி வந்த தமிழன் அந்த இந்திரனை ஏன் வழிபட வேண்டும்?
இந்த முரண்பாடு அன்று முதல் இன்று வரை ஏன் இந்த திராவிடத் தலைவர்களுக்கு உரைக்கவில்லை?
இந்த முரண்பாட்டைப் புரிந்து கொள்ளப் பகுத்தறிவு வேண்டாம்.
சாதாரண அறிவே போதும்.

அதனால் அவர்களுக்குப் புரியாமல் இல்லை  தெரிகிறது.
அவர்களுக்கும் தெரியும், தமிழன் வேறு, சிந்து சமவெளியில் இருந்தவன் வேறு என்று. ஆனால் இந்த ஆட்டம், அவர்களது ஏமாற்று அரசியலுக்கு - பிரித்தாளும் அரசியலுக்குத் தேவைப்பட்டது.
அது என்ன என்பதைப் பற்றி பிறகு பார்ப்போம்.
இப்பொழுது, இந்திரன் என்பவன் எப்படி தமிழர் வாழ்வில் முக்கியப் பங்கு கொண்டிருந்தான், அவன் யார், அவனைப் பற்றிய இந்தக் கதைகள் எல்லாம் ஏன், அவனை ஏன் தெய்வமாக வழிபட்டார்கள் என்று பார்ப்போம். இந்திரன் மட்டுமல்ல, அவனது வில், ஆயுதம், வெண்ணிறமான ஐராவதம் என்னும் அவன் யானை என்று அவன் சம்பத்தப்பட்ட எல்லாமே வழிபடத் தக்கதாக நினைக்கப்பட்டது.

 சமீபத்தில் நடந்து முடிந்த செம்மொழி மாநாடு என்னும் திராவிட மாநாட்டில், 'ஆரியத் தாக்கம் செம்மொழித் தமிழில் ஏற்படுத்திய கருத்துச் சிதைவு" என்னும் தலைப்பில் ஒரு கட்டுரை வாசிக்கப்பட்டது. இந்த மாநாடு உண்மையிலேயே தமிழ் குறித்த மாநாடாக இருந்திருந்தால், அல்லது தமிழின் உயர்வையும், தொன்மையையும் வெளிச்சம் போட்டுக் காட்டும் மாநாடாக இருந்திருந்தால் இந்தக் கட்டுரை அனுமதிக்கப்பட்டிருக்காது.

ஆரியக் கடவுளர்களையும், ஆரிய மூட பக்தியையும் பாரதம் திருவிளையாடல் புராணம் போன்ற நூல்களின் மூலமாகத் தமிழில் நுழைத்து விட்டார்கள் என்று இந்தக் கட்டுரை குற்றம் சாட்டுகிறது. தருமிக்கு இறையனார் என்னும் சிவ பெருமானார் கொடுத்த பாடல் குறுந்தொகையில் இரண்டாவது பாடலாகத் தொகுக்கப்பட்டுள்ளது. அந்தப் பாடலையும் மூட பக்தியில் நுழைக்கப்பட்ட பாடல் என்கிறது அந்தக் கட்டுரை.

இவையெல்லாம் ஆரியன் புகுத்தினது என்றால், 'உண்டாலம்ம' என்று தொடங்கும் புற நானூற்றுப் பாடலை ( 182 ) திராவிட விரும்பிகள் தங்களுக்கு வேண்டும்  என்கிறபோது மேற்கோள் காட்டுகிறார்களே, அது என்ன சொல்கிறது?
உண்டாலம்ம இவ்வுலகம் என்று சொன்னவுடன், "இந்திரன் அமிழ்தம் இயைவதாயினும்" என்று இந்திரனது அமிர்தமே கிடைத்தாலும் அதையும் தனித்து உண்ண மாட்டார். பிறருடன் பகிர்ந்துதான் உண்ணுவார் என்கிறதே அந்தப் பாடல்?
இந்திரன் அமிழ்து என்று மூட நம்பிக்கையைச் சங்கப்புலவரே புகுத்துகிறார்  என்று ஏன் சொல்லவில்லை?
சங்க நூல்கள் படித்திருந்தால் சொல்வார்கள்.
அதிலும் அந்த நூல்களில் எந்தக் கருத்தில் சொல்லப்பட்டதோ அந்தக் கருத்தைப்  படித்திருந்தால் சொல்வார்கள்.
பிறப்பினால் எல்லா உயிரும் ஒக்கும், அதனால் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று புது அர்த்தம் சொல்பவர்கள்  இவர்கள்!
எப்படி சங்கக் கருத்துக்களை அதன் அர்த்தத்தில் புரிந்து கொள்வார்கள்? 

புற நானூறு அன்றைய தமிழ் மக்கள் வாழ்ந்த வகையை, அவர்கள் கலாச்சாரத்தைச்  சொல்வது.
அந்த மக்கள்,  இந்திரனை தேவர்கள் அரசன், நூறு யாகங்கள் செய்ததால் இந்திர பதவி அடைந்தவன, அமிர்தம் உண்டவன, அதனால் சாகா வரம் பெற்றவன் என்று போற்றினர். இவை எல்லாம் கட்டுக்கதை அல்ல. மூட நம்பிக்கையும் அல்ல.
இந்த எண்ணங்கள் அனைத்துக்கும் உட் பொருள் உண்டு.
அவை  என்ன என்று பார்ப்பதற்கு முன்னால், இந்திரன் என்னும் கடவுள் எப்படி எல்லாம் தமிழர் வாழ்வில் இணைந்திருந்தான்  என்று பார்ப்போம்.

அந்நாளில், இந்திரனுக்குக் கோவில் இருந்தது. இந்திரனது ஆயுதம் வஜ்ராயுதம் எனப்பட்டது. அதனால் இந்திரன் கோவிலை வஜ்ரக் (வச்சிரக்) கோட்டம் என்றனர். ஆய் அண்டிரன் என்னும் அரசன் "வச்சிரத் தடக்கை நெடியோன் கோவிலுக்கு" அதாவது வச்சிரக் கோட்டத்துக்கு வந்த போது அந்தக் கோவிலில் முரசம் முழங்கி வரவேற்றார்கள். (புற நானூறு - 241 )

சிலப்பதிகாரத்தில் இந்திர விகாரம் ஏழு என்று வருகிறது. இது புத்த மதத்தவர்களது என்ற எண்ணம் ஒன்று உண்டு. பௌத்தத்திலும் இந்திரன் வழிபடப்படுகிறான். ஆனால்
இந்திரனுக்கு விழா எடுத்து ஹிந்து மரபில் வழிபட்ட சிலப்பதிகாரக் காலத்தில் இருந்த இந்திர விஹாரம் ஹிந்து சமயம் சம்பந்தப்பட்டதாகத்தான் இருக்க வேண்டும். பொதுவாக விஹாரம் என்னும் இடங்களில் துறவிகள் தங்குவதும், ஆன்மீக  சபைகள் கூட்டுவதும் உண்டு.

வைஸ்ய வருணத்தில் நிலை பெற்று வாழ்ந்த கோவலனது தந்தை மாசாத்துவான், தன் மகன் இறந்த செய்தியும், கண்ணகி மதுரையை எரித்து, வானுலகம் சென்ற செய்தியும் கேட்ட பின், தன் செல்வங்கள் எல்லாவற்றையும் தானம் செய்து விட்டு, இந்திர விஹாரம் ஏழனுக்குச் சென்று சந்நியாசம் வாங்கிக் கொண்டார் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது.

அதே போல, கோவலனும் கண்ணகியும், புகார் நகரை விட்டு மதுரைக்குச் செல்லும் போது, மணிவண்ணன் கோவிலில் பாம்பணையில் பள்ளி கொண்ட பெருமாளைத் தரிசித்து விட்டு, பிறகு இந்திர விகாரம் ஏழனுக்குச் சென்று வழிபாட்டு  விட்டு அதன் பிறகு பயணத்தைத் தொடங்கினர் என்று வருகிறது. (மாசாத்துவான் சந்நியாசம் பெற்றது இங்குதான் இருக்கும்)
இப்படிச் செய்ய அவர்களை எந்த ஆரிய மூட நம்பிக்கை அடிமைப்படுத்தியது?
இந்திரனால் கொல்லப்பட்டு, விரட்டப்பட்ட மக்களாக இருந்திருந்தால், வந்த இடத்தில் இப்படி அந்த இந்திரனுக்கே கோவில் கட்டி கும்பிட்டிருப்பார்களா?


அடுத்து இந்திர வில் என்பதைப் பற்றிப் பார்ப்போம். 
இந்திரன் வில் என்பது சங்க நூல்களில் அடிக்கடி சொல்லப்படுகிறது. வானவில்லை இந்திரன் வில்லுக்கு ஒப்பிட்டனர். சேரமான் யானைக் கட் சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறையின் நாட்டில் மக்கள் எந்தவிதக் கஷ்டமும் படவில்லை என்று சொல்லும்போது, அந்த நாட்டு மக்கள் இந்திரன் வில்லைத் தவிர, பகைவரது கொலை வில்லை அறியாதவர் என்கிறது புறநானூறு  (20 ).


'திரு வில்' என்று அழைக்கப்பட்ட இந்திரவில் ஐகுருநூறு, சீவக சிந்தாமணி, மணிமேகலை, சிலப்பதிகாரம் என்று பல நூல்களிலும் சொலல்ப்படுகிறது.
இவை எல்லாமே மூட நம்பிக்கையை வளர்ப்பது என்றும், ஆரியத் தாக்கத்தின் விளைவு என்றும் சொல்லலாமே?

சிலப்பதிகாரத்தில் வேட்டுவ மக்கள், கண்ணகி வானுலகம் போவதைக் காண்கிறார்கள். அது தெய்வச் செயல் என்று மகிழ்ந்து, குன்றக் குரவை ஆடுகிறார்கள். அதற்கு முன்  அருவியில் நீராடுகிறார்கள். அந்த அருவியானது மலை மேலே இருக்கும் பல வித வண்ணத் துகள்களை அடித்துக் கொண்டு 'இழும்' என்ற சப்தத்துடன் கொட்டுகிறது. அந்த வண்ணத் துகள்கள் அருவி நீரில் இந்திரனது வில் போலத் தெரிகிறது என்று பாடுகிறார்கள்.
வேட்டுவர்களுக்குக் கூட இந்திர வில் பற்றித் தெரிந்திருந்தால், எந்த அளவு, இந்திரன் என்னும் தெய்வமும் அவன் வில்லும் மக்களால் வணங்கப் பட்டிருக்க வேண்டும்? வெறும் ஆரியத் தாக்கத்தால் இப்படி நிகழுமா?

வில் மட்டுமல்ல. இந்திரனது ஆயுதமான வஜ்ராயுதம் ஆங்காங்கே சங்க நூல்களில் பேசப்படுகிறது. ஆய் அண்டிரன் சென்ற கோவிலைப் பற்றிச் சொல்லும் புறப்பாடல் வச்சிரத் தடக்கை என்கிறது. வச்சிராயுதம் ஏந்திய கையை உடைய இந்திரன் என்று அந்தப் பாடல் சொல்கிறது.


இவை எல்லாவற்றுக்கும் மேலாக, சிலப்பதிகாரம் விவரிக்கும் இந்திர விழா, இந்திரனை, தமிழ்ப் பகைவனாகச் சொல்ல முடியாதவாறு, ஒரு முக்கியக் கடவுளாகக் காட்டுகிறது. அந்த விழா நடக்கும் ஊர் புகார் நகரம்.
அது மருத வளநாடனான சோழனின் தலை நகரம்.
மருதத்தின் கடவுள் இந்திரன்.
இந்திரனுக்கு மட்டுமல்ல, அவனது, முரசு, அவனது வெண்ணிற யானை, அவனது மரமான கற்பகத் தரு ஆகிய அனைத்துக்குமே தனித் தனிக் கோவில் இருந்தது என்று சிலப்பதிகாரம் காட்டுகிறது.

இந்திர விழா துவங்கும் முன்னர்,வச்சிரக் கோட்டத்திலிருந்து  முரசை விமரிசையாக எடுத்து வந்து, இந்திரனின் ஐராவதம் என்னும் வெள்ளை நிற யானை இருக்கும் வெள்யானைக் கோட்டத்துக்குக் கொண்டு வருகிறார்கள்.
பிறகு அந்த யானையின் முதுகில் முரசினை ஏற்றி, விழாவினைப் பற்றி முரசறிவித்துப் , பிறகு கற்பகத தரு இருக்கும் தரு நிலைக் கோட்டத்திற்குச் சென்று, அங்கே இந்திரக் கொடி ஏற்றுகிறார்கள் என்ற வர்ணனை வருகிறது.

இன்றைக்கு கோவிலில் பிரம்மோத்சவம் ஆரம்பிக்கும் முன் கொடியேற்றி ஆரம்பிக்கிறோம். அது போல அந்த நாளில், இந்திரோத்சவம் நடந்தது.
அந்த உற்சவத்தில் இந்த்ரத்வஜம் எனப்படும் இந்திரனது கொடி ஏற்றப்படும்.
புகார் நகரில் நடந்த இந்திர விழா இந்திரோத்சவமே.
இந்திரன் கோவில்களில் இது நடந்தது.
காலப்போக்கில் இந்திரன் கோவில்கள் மறைந்த பிறகு, பிற தெய்வக் கோவில்களில் நான்முகப் பிரம்மனை முன்னிட்டு பிரம்மோத்சவம் செய்யலானார்கள்.

புகார் நகரில் நடந்த இந்திர விழாவில் இந்திரனுக்கு மங்கள நீர் அபிஷேகம் செய்யப்பட்ட விவரங்கள் வருகின்றன. இதை விட முக்கிய விவரம், இந்திர விழாவுக்கு வந்த ஒரு பயணியைப் பற்றியது.

வியாழன், 25 நவம்பர், 2010

8. நிறக் கொள்கை யாருக்கு ? - ஆரியனுக்கா, ஆங்கிலேயனுக்கா?




நிறப் பெருமையில் ஆங்கிலேயர்களையும், ஐரோப்பியர்களையும் யாரும் அடித்துக் கொள்ள முடியாது. தாங்கள் உயர்ந்த இனம் என்ற எண்ணத்தை அவர்களது வெள்ளை நிறம் தந்தது. அந்தக் காலக் கட்டத்தில் ஆப்பிரிக்கா முதல் அமெரிக்கா  வரை அவர்களது காலனி ஆதிக்கம் அமோகமாக நடந்து கொண்டிருந்தது. மாறுபட்ட உருவ அமைப்பு, நிறம் கொண்ட மக்களைப் பார்க்கையில், அந்த உருவ, நிற  அடிப்படியிலேயே மக்களை இனமாகப் பாகுபடுத்தத் தொடங்கினர். இதில் என்ன வினோதம் என்றால், இனம் என்ற சொல்லே ஆங்கிலத்தில் இல்லை. இனம் என்று பொருள்படும Race என்னும் ஆங்கிலச் சொல் 1580 -ஆம் ஆண்டுதான் ஆங்கில மொழியில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்தச் சொல் அராபிய மொழியிலிருந்து, இத்தாலிய மொழிக்கு வந்து பிறகு பிரெஞ்சு மொழியில் நுழைந்தது. அங்கிருந்து ஆங்கிலத்துக்கு வந்தது. இந்தச் சொல் 14- ஆம் நூற்ற்றண்டில்தான் மார்கோ போலோ அவர்களால் மக்கள் கூட்டத்தை இனம் காட்ட முதன் முதலில் உபயோகப்படுத்தப் பட்டது. 



அந்தக்  காலக்  கட்டத்தில் ஐரோப்பியர்கள் கடல் வழியே உலகைச் சுற்ற ஆரம்பித்தனர். ஆங்காங்கே அவர்கள் பார்த்த மக்களைப் பற்றி தங்கள் ஊர் மக்களிடம் சொன்னார்கள். அந்த மக்களை வருணிக்கும் போது, அந்த ஊர், அல்லது  அவர்கள் பெயர் அல்லது அந்த மக்களிடம் காணப்பட்ட குறிப்பிட்ட அடையாளத்தைச்  சொல்லி அந்த இனம் என்றனர். அப்படி அவர்கள் முதலில் தங்கள் பேச்சில் சொன்ன  இனம், 'பெர்ஷிய இனம்' (Persian race). மார்கோ போலோ அவர்கள், பெர்ஷிய மக்களை இப்படிக் குறிப்பிட்டார். 

முதலில் நாட்டை வைத்து இனம் என்றனர். நாளடைவில், மக்களது புறத்தோற்றத்தை வைத்து இனம் என்று பாகுபடுத்தினர். இதில் நிறம், உருவம், முக அமைப்பு ஆகியவை முக்கியக் காரணிகளாக ஆயின. அந்த அடிப்படையில் சீனர்களை  மங்கோலிய  இனம் என்றனர். ஆப்பிரிக்காவில் இருந்தவர்களை நீக்ரோ இனம், கறுப்பர் இனம் என்றனர். கருமை என்னும் பொருள்படும நீக்ரோ என்ற சொல் ஸ்பானிஷ், போர்சுகீசிய  மொழியிலிருந்து வந்தது. வெள்ளை நிறத்தவர்களான தங்களை 'காகசீய' இனம் என்று அழைத்துக் கொண்டார்கள். 



அந்த நாள் ஆங்கிலேயர் மற்றும் ஐரோப்பியர் கணிப்பில், உலகில் மொத்தம் மூன்று இன மக்களே உள்ளனர். ஏனென்றால் அப்படித்ததான் பைபிள் கூறுகிது. நோவாவின் மூன்று மகன்கள் மூலம் மூன்று இன மக்கள் உண்டாக்கினர். அந்த மூன்று இன மக்கள் மங்கோலியர், நீக்ரோ, காகசீயர் ஆவர் என்பது அவர்கள் கருத்து. இதில் கறுப்பு என்பது அவர்களுக்குப் பிடிக்காத நிறம். இந்த நிற வேற்றுமையால்   இவன் உயர்ந்த இனம், அவன் தாழ்ந்த இனம் என்று தங்கள் வசதிப்படி சொல்ல ஆரம்பித்தனர். இதனால் எத்தனையோ மக்கள் அடிமைப்பட்டும், சிறுமைப்பட்டும் இருக்க வேண்டி வந்தது.

வைரமும், தங்கமும் நிறைந்த தென் ஆப்பிரிக்காவில் வாழ்ந்த கறுப்பர்களுக்கு தங்களிடமிருந்த சொத்தைப் பற்றி தெரிந்திருக்கவில்லை. அதைத் தெரிந்து கொண்டவன் ஆங்கிலேயன். அங்கிருந்த கறுப்பர் இன மக்களைத் தனக்கு அடிமையாக்கி, அவர்கள் சொத்தை அவர்களைக் கொண்டே எடுத்து, தான் வளமாக வாழ்ந்தவன் அவன். கறுப்பர்கள் அடிமைத் தொழில் செய்வதற்கே பிறந்தவர்கள் என்பது வெள்ளையர்கள் கருத்து. அமெரிக்காவிலும் இதை நடைமுறைப்படுத்தினர். 

வெள்ளையர்கள் முதலில் இந்தியாவுக்கு வந்த போது இந்தியர்களைப் பார்த்து ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை. அவர்களுக்குத் தெரிந்த மூன்று இனங்களில் இந்தியர்களைச் சேர்க்க முடியவில்லை. இந்தியாவில் கறுப்பாகவும், மாநிறமாகவும் , வெளுப்பாகவும் என்று எல்லா விதத்திலும் மக்கள் இருந்தனர். முக அமைப்பும் அப்படியே. ஒரு இந்தியனிடம் காகசீய முக அமைப்பு என்று பார்த்தால், அவன் நிறம் கறுப்பாக இருக்கும். இப்படிப் புரிபடாத நேரத்தில்தான், ரிக் வேத மொழி பெயர்ப்பு அவர்களுக்கு புதுக் கருத்துக்களைக் கொடுத்தது. 



வெள்ளை நிறம், கறுப்பு நிறத்தை வென்றது. ஆரியன் வென்றான், தஸ்யு அழிக்கப்பட்டான் போன்ற மொழி பெயர்ப்புக்கள், தங்களைப் போலவே ஆரியர்களும் நிறம் சார்ந்த இனக் கொள்கை கொண்டவர்களாக இருந்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தைத் தந்தது. அதே சமயம், சம்ஸ்க்ருத மொழி ஆராய்ச்சியின் மூலம், ஐரோப்பிய மொழிகளுக்கும் சம்ஸ்க்ருதத்துக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற எண்ணமும் வேரூன்றி இருந்தது. அதனால் தங்கள் மூல சரித்திரம் இங்குதான் எங்கோ இருக்க வேண்டும் என்று அவர்கள் தேடிக் கொண்டிருக்கையில், சிந்து சமவெளிப் பகுதியில் அகழ்வாராய்ச்சி முடிவுகளும் வந்தன. அவை ஒருகாலத்தில் அங்கு மக்கள் வாழ்ந்த அடையாளங்களைக் காட்டின. இவற்றைக் கொண்டு ஆரியக் கதை  உருவாக்கினான்

ஆனால் அதில் ஒரு சிக்கல் இருந்தது. சிந்து சமவெளிப் பகுதியில் காணப்பட்ட நாகரீகம்  5000 வருடங்களுக்கு முன் ஆரம்பித்தது என்று தெரிய வந்தது. ஆங்கிலேயர் பின்பற்றிய கிருஸ்துவ  மதமும்,  5000  ஆண்டுகளுக்கு முன்தான் மனிதன் தோன்றினான் என்று கூறுகிறது. இனப் பெருமை கொண்ட அவர்களால் சிந்து சமவெளி நாகரீகக் காலத்தை ஒதுக்க முடியவில்லை. ஆனால் அவ்வளவு வருடங்கள் முன்பே உயர்ந்த நாகரீகம் இந்தியாவில் இருந்தது என்பதை ஒத்துக் கொள்ளவும் முடியவில்லை. கி- மு- 5000 -இல் ஆரம்பித்த அந்த நாகரீகம் கி- மு- 1500 - முடிந்தது என்று ஆராய்ச்சிகள் காட்டவே, அந்த நாகரீகம் எப்படி, ஏன் முடிந்தது என்பதற்கு ரிக் வேதத்தைத் துணை கொண்டான். ஆரிய- தஸ்யு சண்டையும்இந்திரன் கருப்பர்களை விரட்டியதும் நடந்த இடம் அந்த சிந்து சமவெளிப் பகுதிதான் என்று முடிவு கட்டினான்.

நிறம், மொழி ஆகிய இவையே முக்கிய கருத்துக்களாகக் கொள்ளப்பட்டன. வட இந்தியாவுக்கும், தென் இந்தியாவுக்கும் இந்த இரண்டு விஷயங்களில் வித்தியாசம் தெரிந்தது. நிறம் கொண்டவர்கள் வடக்கே, கறுப்பான மக்கள் தெற்கே;  
ஐரோப்பிய மொழி சாயலில் சம்ஸ்க்ருதமும்,  
அதன் கிளையாக  ஹிந்தியும் வடக்கே, திராவிடம் என்று சொல்லப்படும்  தமிழ் சார்ந்த மொழிகள் புழங்கியது தெற்கே என்று இருந்தது. 
இதன் அடிப்படையில், ரிக் வேதத்தில் தான் கண்டு பிடித்த ஆரிய வெற்றியை மையமாக வைத்து, கி-மு- 1500 -இல் ஆரியர்கள் என்னும் வெள்ளைத் தோல் மக்கள் சிந்து சமவெளிப் பகுதிக்கு வந்தனர். அவர்கள் அங்கிருந்த சிந்து சமவெளி நாகரீக மக்களை வென்று விரட்டியடித்து விட்டனர். அவர்களால் விரட்டப் பட்டவர்கள் தென்னிந்தியாவில் குடியேறினர். அவர்கள்தான் திராவிடர்கள். அவர்கள் தமிழ் உள்ளிட்ட பிற தென்னிந்திய மொழிகளைப் பேசினார்கள். இதுதான் அவர்கள் உருவாக்கிய ஆரியப் படையெடுப்புக் கதை.


வெள்ளை நிறத்துடன் இந்திரனும், ஆரியர்களும் சம்பந்தப்படவே, அவர்களைத் தங்களுடன் (ஐரோப்பியர்களுடன் ) தொப்புள் கொடி தொடர்பு படுத்திக் கொண்டனர். தங்கள் முன்னோர்கள்தான் ஆரியர்கள் என்று நினைத்து, நீங்களும், நாங்களும் ஒன்று. உங்களை ஆள வந்த நாங்கள் உங்களைக் காப்பாற்றவே வந்திருக்கிறோம் என்றெல்லாம் இந்தியர்களிடம் டைலாக் விட்டனர்.

இந்த நிறக் கொள்கையை இன்று சொல்லியிருந்தால் எடுபட்டிருக்காது. தோல் நிறம் பற்றி எத்தனையோ ஆராய்ச்சிகள் நடந்து விட்டன. அவை நிறம் என்பது இனத்துக்கு அடிப்படை அல்ல என்று தெரிவிக்கின்றன.
இந்தியா முழுவதும்  ஒரே கலாச்சாரம் உள்ள மக்கள் வாழ்கின்றனர். 
ஆனால் அவர்களுக்குள் நிறத்தில் வேறுபாடு இருக்கிறது. 
அதனால் அவர்களை வேறு வேறு இனத்தவர்கள் என்று சொல்லலாமா
கூடாது என்கின்றன நிற ஆராய்ச்சிகள். 


ஒருவரது நிறம், உலகில் அவர் வாழும் அட்ச ரேகைப் பகுதியால் நிர்ணயம் செய்யய்பப்டுகிறது. அதாவது சூரிய ஒளி விழும் அளவைக் கொண்டே தோல் நிறம் அமைகிறது. பூமத்திய ரேகைப் பகுதியில்,அதிக வெப்பமும், ஒளியும் விழுகிறது. கடக ரேகை முதல் மகர ரேகை வரை இந்த வெப்பம், ஒளியின் தாக்கம் இருக்கிறது. ஆனால் இந்த ரேகைகளுக்கு அப்பாற்பட்ட இடங்களில் ஒளியின் விழுகை  குறைவு. இதன் அடிப்படையில், ஒளி அதிகம் விழும் இடத்தில் மக்கள் கறுத்தும், பிற இடங்களில் வெளுத்தும் உள்ளனர். இந்தப் படம் சூரியனது ஊதாக் கதிர்கள் விழும் மண்டலங்களைக் காட்டுகிறது.







இதில் ஆப்பிரிக்காவின் பெரும் பகுதியும், இந்தியாவும் ஒளி மண்டலத்தில் வருவதைக் காணலாம். இதன் அடிபப்டையில் மக்கள் தோல் நிறம் அமைவதை இந்தப் படத்தில் காணலாம்.


                           

இதில் அதிகக் கறுப்பு மத்திய ஆப்பிரிக்கா, தென்னிந்தியாவின் தென் முனையிலும், ஓரளவு கருப்பு தென்னிந்தியாவிலும், அதை விட தெளிந்த நிறம் வட இந்தியாவிலும் அமைவதைக் காணலாம்.

இந்த நிற ஆராய்ச்சிகள் சொல்லும் மற்றொரு உண்மை இருக்கிறது. அதிக வெப்பப் பகுதிகளில் பல தலை முறைகள் வாழ்வதால் கறுப்பு நிறம் அமைகிறது. அப்படி கறுப்பு நிறம் கொண்ட ஒருவர், வெப்பம் குறைந்த தொலை தூர வட அட்சப் பகுதிகளில் வாழ்ந்தால் அவர் நிறம் மட்டுப்படும். அங்கேயே அவரது வம்சாவளியனர் வாழ்ந்தால், பல தலைமுறைகளுக்குப் பிறகு அவர்கள் ஒரு காலத்தில் கறுப்பராக இருந்தனர் என்றே சொல்ல முடியாதவாறு நிறம் மாறி இருக்கும். ஒரு 100 தலைமுறை கழித்து, அதாவது 2500 ஆண்டுகள் சென்று விட்டால், முதல் தலைமுறைக்கும், நூறாவது தலை முறைக்கும் சம்பந்தமே இல்லாமல் இருக்கும். அதிலும், தட்ப வெப்பம் மாறினால், நிறம் நன்றாகவே மாறி விடும். 


நிறத்தை நிர்ணயிப்பதில் மற்றொரு காரணியும் உண்டு. அது திருமண உறவால், மரபணு மூலமும் வருவது. தமிழ் நாட்டில் கறுப்பும், வெள்ளையுமாக மக்கள் இருப்பதற்கு  இவையே காரணங்கள். இங்கேயே பல தலை முறை வாழ்ந்தவர்கள் நிறம் கறுப்பாக இருக்கும். அவர்கள் உறவிலேயே சிலர் நிறமாக இருக்கலாம். இதற்குக் காரணம், ஏதோ ஒரு தலை முறையில் நிறம் கொண்டவர்கள் உறவு இருந்திருக்கும்.


ஆரியப் படையெடுப்பு கதையில்  இந்த நிற வித்தியாசங்களைப் பார்ப்போம்.
ஆரியர்கள் வெளியிலிருந்து வந்தவர்கள் என்பது ஆங்கிலேயர் / ஐரோப்பியர் கணிப்பு. ஆரியர்கள்  வெள்ளை நிறமென்றால் அவர்கள் வட அட்சப் பகுதியான ஐரோப்பாவை சேர்ந்தவர்கள் என்று அவர்கள் நினைப்பதை ஒன்று சொல்ல முடியாது.


ஆனால் சிந்து சாம்வெளிப் பகுதியில் வாழ்ந்தவர்கள் (தஸ்யுக்கள்) எப்படி கறுமை நிறம் கொண்டவர்களாக இருக்க முடியும்
இமயமலையை ஒட்டிய அந்தப் பகுதிகள் வெப்பமும், ஒளியும் அதிகம் விழாத வட அட்சப் பகுதிகள் தானே
அங்கு வாழும் மக்கள் எப்படி கறுப்பாக இருந்திருக்க  முடியும்
இன்றும் அந்தப் பகுதியில் வாழும் பாகிஸ்தானியர்கள் நல்ல நிறமாகத் தானே இருக்கிறார்கள்?
அதிலும் கி- மு- 3,000 முதல் கி-மு- 1,500வரை அந்த மக்கள் பல தலைமுறைகளாக அதே இடத்தில் வாழ்ந்துள்ளதால், கண்டிப்பாக அவர்கள் மாநிறத்துக்கும் அதிகமான நிறத்தில்தானே இருந்திருப்பார்கள்?
கறுப்பு நிறம் கொண்டவர்கள என்று அவர்களைத் தான் ரிக் வேதம் சொல்கிறது என்று எப்படிச்  சொல்லலாம்

இந்தக் கேள்விகள் ஆரியப் படையெடுப்பு கருத்தின் மூலமான நிறம் பற்றிய ரிக் வேத மொழி பெயர்ப்பை கேலிக்கூத்து ஆக்குகின்றன.
நிற  ஆராய்ச்சிகள் வந்தபிறகுதான் இதை நாம் தெரிந்து கொண்டிருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

அன்றே தமிழில், தமிழ் நாட்டில் இந்திரன் போற்றப்பட்டிருக்கிறான். 
அதுவும் எப்படி ? .
"கரியவன்" என்று. (மணிமேகலை -25-55)
கருமை நிறம் கொண்டவன் என்று போற்றப்பட்டிருக்கிறான்.
கரியவன் எனப்படும் ஒருவன், வெள்ளை நிறத்துக்கு உதவ வேண்டி கறுப்பு நிறத்தை எப்படி, அடித்திருப்பான்?
அவனால் அடித்து விரட்டப்பட்ட தமிழன் எப்படி அவனைத் தெய்வமாகப் போற்றியிருப்பான்

செவ்வாய், 23 நவம்பர், 2010

7. இந்திரன் செய்த "அட்டூழியங்கள்"

ரிக்  வேதத்தில் இந்திரனைப் பற்றி 250 பாடல்கள் உள்ளன. அதாவது நம்மிடையே உள்ள ரிக் வேதத்தில் கிட்டத்தட்ட கால் பங்கு இந்திரனைப் பற்றியது. 'நம்மிடையே உள்ள' என்று ஏன் சொல்கிறேன் என்றால், அநேக ஆயிரம் வேதங்கள் இருந்தன. பல் வேறு காலக் கட்டங்களில், பல முனிவர்கள் தங்கள் மோனத்தில் வேதத்தைக் கண்டு  ஓதினர். ஆனால்  அவை எல்லாமே இன்று இல்லை.


மகாபாரதப் போர் முடிந்த பிறகு, கிருஷ்ண த்வைபாயனர் என்னும் வியாசர் அவர்கள்,  வரப்போகும் கலி யுகத்துக்கு உதவக்கூடிய விஷயங்களை எல்லாம் தொகுக்கத் தொடங்கினார். அப்படி அவர் செய்த தொகுப்புகளில் ஒன்று வேதத் தொகுப்பு. அவர் வேதங்களை நான்காக வகைப்படுத்தினார். ரிக், யஜூர், சாம, அதர்வண என்னும் அந்த நான்கு வேதங்களும், அவை சொல்லப்பட்ட காலத்தால் வரிசைப் படுத்தப் படவில்லை. அதாவது வெவ்வேறு காலக் கட்டத்தில் சொல்லப்பட்ட வேதங்களை அவற்றில் காணலாம். அதனால் காலத்தால் ரிக் வேதம் முந்தியது, அதர்வண வேதம் பிந்தியது என்று சொல்ல முடியாது. வியாசர் அவர்கள் ஆங்காங்கே இருந்து எடுத்து தொகுத்திருக்கிறார் என்று தெரிகிறது. அதிலும் கலி யுகத்துக்கு என்று கொடுத்திருக்கிறார். அவற்றில் எவ்வளவு அழிந்து போனதோ நமக்குத் தெரியாது. வேதங்கள் வாய் வழியாகவே வந்திருக்கவே, அவற்றைச் சொல்பவர்கள் மறைந்த பிறகு, அவர்களிடமிருந்து யாரும் கற்றுக் கொள்ளாமல் இருந்திருந்தால் அவ்வளவுதான். அந்த வேதப் பகுதிகளை நாம் இழந்தவர்கள் ஆகிறோம்.

அதிலும் முஸ்லீம் படை எடுப்பின் போது வேதம் அறிந்தவர்கள் பெரிதும் அழிந்தனர். ராம் சரித மானஸ் என்று ராமாயணத்தை எளிய மக்களும் படிக்கும் வண்ணம் எழுதிய துளசி தாசர் அவர்கள், தன்னுடைய மற்றொரு படைப்பான 'துளசி சதகம்' என்னும் நூலில் அயோத்தியில் ராமர் பிறந்த இடம் அழிக்கப்பட்டதை விவரிக்கும் போது, பூணுல் அணிந்தவர்கள் எல்லாம் கொல்லப்பட்டனர். அப்படி கொல்லப்பட்டவர்களது மண்டை ஓடுகள் மலை மலையாகக் குவிக்கப்பட்டன என்கிறார். 
இதிலிருந்து, வேதம் பயின்றவர்கள் அன்று அதிக அளவில் இருந்தனர் என்று தெரிகிறது. ஆயிரம் வருடங்கள் ஓடிய முஸ்லீம் ஆதிக்கத்தில் வேதமும், வேதம் ஓதும் சூழ்நிலையும், அதை ஒதுபவர்களும் பெரிதும் அழிந்தனர்.


ஆனால் தமிழ் நாட்டில் எங்கும் வேத ஒலி கேட்டது என்று தெரிகிறது. பழந்தமிழ் நாட்டில் வேதமும், யாகமும், தெய்வ வழிபாடும் எங்கும் இருந்தன என்று சங்க நூல்கள் காட்டுகின்றன. கோவிலில் ஓதப்படும் வேத ஒலி கேட்டுத்தான் பாண்டியனும், மதுரை மக்களும் துயில் எழுவார்கள் என்று பரிபாடல் கூறுகிறது. யாகங்கள் செய்வதற்குப் பெயர் போனவனாக இருந்ததால், பாண்டிய மன்ன ஒருவன் 'பல் யாக சாலை முது குடுமிப் பெருவழுதி' என்றே அழைக்கப்பட்டான். இமயத்தில் வேத ஒலி கேட்பது போல, பொதிகையிலும் வேதம் முழங்கியது. இப்படிப்பட்ட நிலை சென்ற நூற்றாண்டு வரை இருந்தது என்பதை, 'வேதம் நிறைந்த தமிழ் நாடு' என்று மகா கவி பாரதியார் அவர்கள் சொல்வதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.
நாத்திகம் பேசும் திராவிடத் தலைவர்கள் என்று தலை எடுத்தார்களோ, அப்பொழுதிலிருந்து  நம் தமிழ் நாட்டில்  வேதம் தேய்ந்து விட்டது.


மதம் சார்ந்த வேதத்தை, அது சொல்லும் கருத்தை மத ஞானிகள் வாயிலாகத் தெரிந்து கொள்ள வேண்டும். வேதத்தின் பயன்பாடு இந்து மதத்தவரான நமக்குத் தான் தெரியும், ஆனால் அதை சரித்திரப்புத்திரமாக மாற்றிய பெருமை மாக்ஸ் முல்லரையே  சார்ந்தது. ரிக் வேதத்தைப் படித்து அதில் அடிக்கடி சொல்லப்பட்ட இந்திரனால்  மாக்ஸ் முல்லர் கவரப்பட்டார். இந்திரன் வெள்ளையர்களான தங்களைப் போலவே இருக்கிறானே என்று புளகாங்கிதம் அடைந்தார்.


அவர் கண்டுபிடித்த சாம்பிள்கள் சில:-
  • இந்திரன் தஸ்யுக்களை  அழித்து ஆரிய 'நிறத்தைக்' காப்பாற்றினார். (ரிக்-III -34-9) 
  • இந்திரன் தன் வெள்ளை நண்பர்களுக்கு வயலையும், சூரியனையும், நீரையும் கொடுத்தான். (ரிக் - I-100-18)
  • புயல் போன்ற அந்தக் கடவுள்கள், கோபமான காளை மாடு போலப் பாய்ந்து, கருப்பு நிறத்தைச் சிதற அடித்தார்கள். (ரிக் - IX -73-5) 
  • இந்திரன் ஆரியனுக்காக, மோசமானவர்களையும், கொடூரமானவர்களையும், ஒளி இழந்த நிறம் உடையவர்களையும் விரட்டி அடித்தான். கருப்பு நிறத்தை வெற்றி கொண்டதைப் பற்றி ரிக் -I-130-8 கூறுகிறது.
  • மோசமான தச்யுவின் நிறமான கருப்பு நிறத்தை இந்திரன் உள்ளிட்ட கடவுளர்கள் அழித்தனர். ரிக் - II-20- 7 & II-12-4
  • மூக்கில்லாத தஸ்யுக்களையும், கருமை நிற தஸ்யுக்களையும்  இந்திரன் அழித்தான்.
  • இந்திரனுடைய நிறம் பொன் நிறம். அவன் கன்னம் பொன் நிறம் தலை பொன் நிறம்.
  • இந்திரனுடைய தாடி மஞ்சள் நிறம். அவன் நகம், முடி எல்லாம் மஞ்சள் நிறம். 
  • இடியை ஆயுதமாக உடைய அவன் வெள்ளை நிறத்தவர்களின் நண்பன். 


இப்படியெல்லாம் இந்திரனைக் கண்டு பிடித்து, அவன் தனது ஆரிய நண்பர்களுக்கு உதவ வேண்டி, கருமை நிற, மூக்கில்லாத (சப்பை மூக்கு என்று முல்லர் போன்றவர்கள் உருவகப் படுத்திக் கொண்டார்கள்) தஸ்யுக்களை அழித்தான் என்று முடிவு கட்டி, தச்யுக்களைத் தேட ஆரம்பித்தனர்.


தஸ்யு என்ற சொல் பிரயோகம் ரிக் வேதத்தில் வருகிறது. தஸராஜன என்று பத்து அரசர்களை வெல்லும் சுதஸ் என்னும் அரசனைப் பற்றியும், அந்த வெற்றிக்கு உதவிய இந்திரனைப் பற்றிய செய்தியும் ரிக் வேதத்தில் வருகிறது.  இந்தக் கருத்துக்கள் உருப்பெற்று வரும் சமயத்தில்தான் 1920 களில் சிந்து நதிப் பகுதிகளில் மொஹஞ்சதாரோ, ஹரப்பா என்னும் இடங்களில் (தற் சமயம் பாகிஸ்தானில் உள்ளன)  அகழ்வாராய்ச்சிகளில் புதையுண்ட நகரங்கள் இருப்பது தெரிய வந்தது. 

 ஆரிய- தச்யுக்களைப் பற்றி ஆராய்ந்து கொண்டிருந்த ஆங்கிலேயர், ஐரோப்பியருக்கு இது புதுத் தெம்பு அளித்தது. ரிக் வேதத்தில் தாங்கள் கண்டெடுத்த கதைகள் உண்மையாகவே நடந்த கதைகள்தான் என்றே இந்த புதையுண்ட நகரங்கள் தெரிவிக்கின்றன என்று நினைத்தார்கள்.


அதற்குப் பிறகு அவர்கள் கதை பின்ன அதிகம் கஷ்டப்படவில்லை.
இந்தியாவில் யார் கருப்பாக இருக்கிறார்கள் என்று பார்த்தார்கள்.
தமிழன் மாட்டிக் கொண்டான்.
ஏற்கெனவே கால்ட்வெல் என்னும் மொழி ஆராய்ச்சியாளர் (இவரும் கிருஸ்துவ மிஷனரி தான்) 1856 ஆம் வருடம் "திராவிட அல்லது தென்னிந்திய மொழிகளது இலக்கணம் பற்றிய ஒப்பீடு" (Comparative grammar of the Dravidian or South-Indian family of languages) என்ற நூலை எழுதி இருந்தார். இவர்தான் திராவிட என்னும் சொல்லை அறிமுகப் படுத்தினார்.  
அது தமிழ் மொழியின் பெயராக இருக்கலாம் என்றும் கூறி இருந்தார்.
மொழியைப் பற்றியே சொன்னார் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.


இந்தத் திராவிடன் ரிக் வேத ஆராய்ச்சியாளர்களுக்கு உதவிக்கு வந்தான்.
தஸ்யுக்கள் கருப்பு நிறத்தவர்கள். அவர்கள் மூக்கும் சப்பை.
அவர்களை இந்திரன் உள்ளிட்ட ஆரியர்கள் வெற்றி கொண்டு விரட்டி விடவே, அவர்கள் அதுவரை வசித்து வந்த ஹரப்பா போன்ற இடங்களில் இருந்து தப்பி ஓடி தமிழ் நாட்டில் குடி ஏறி இருப்பான் என்று முடிவு கட்டினர்.
தஸ்யுக்கள் எப்படி திராவிடர்களாக ஆனார்கள் என்று அவர்களுக்குச் சொல்ல கால்ட்வெல் அப்பொழுது இல்லை.
அவர் இல்லை என்றால் என்ன?
மாக்ஸ் முல்லர் தன் மனைவிக்கு எழுதின கடிதத்தில் சொன்னாரே (இந்தத் தொடரின் பகுதி - 4) அது போல இந்தியர்களின ஆதார நூலை திரிக்க வேண்டும்.
ரிக் வேதத்தைத் திரித்து ஆரிய - தஸ்யுக்கள் சண்டையைக் காட்டியாகி விட்டது. இப்பொழுது திராவிடத்தின் துணை கொண்டு அதை, ஆரிய - திராவிட சண்டையாக மாற்ற வேண்டியதுதான் பாக்கி.


அதன் எதிரொலியே, 1929 -ஆம் ஆண்டு ஆங்கிலப் பிரதம மந்திரி பால்ட்வின் அவர்கள் அவர்கள் பார்லிமெண்டில் அறைகூவல் விடுத்தது. ( இந்தத் தொடரின் பகுதி -3). இந்தியர்களாகிய நீங்கள் ஆரியர்கள். ஆங்கிலேயரான நாங்களும் ஆரியர்கள்.
நாங்கள் நன்றாக இருக்கிறோம்.
நீங்கள் சீரழிந்திருக்கிறீர்கள்.
உங்களத் தூக்கி விடத் தான் நங்கள் வந்திருக்கிறோம் என்றார்.
இந்த வலை விரிப்பில் விழுந்தது தமிழ் பேசுபவர்கள்தான்.
இந்தியாவின் எந்த மொழியிலும் இல்லாமல், தமிழில் மட்டுமே ஏராளமான அளவில் இந்திய பாரம்பரியமும் , வேத மதமும் இருந்திருக்கின்றன.
அவற்றை எல்லாம் ஒதுக்கித் தள்ளிவிட்டு , நீதி தேடுகிறோம்  என்ற பெயரில் சுயநல அரசியல் செய்த சிலர் இந்த திராவிடத்தைப் பிடித்துக் கொண்டனர்.
முதல் முதலாக 'திராவிடர் சங்கம்' என்ற அமைப்பு 1912 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அது முதல் ஆரம்பித்தது, திராவிட அரசியல்!


6. வேதம் சரித்திரப் புத்தகம் அல்ல.

தமிழில் வேதத்தை "எழுதாக் கிளவி" என்பார்கள். அதாவது வேதத்தை எழுதி வைத்துப் படிக்க  மாட்டார்கள். வேதத்தைப் பாராயணம் செய்வார்கள். சொல்லும் விதம், தொனி, உச்சரிப்பு ஆகியவற்றுக்கு கவனம் செலுத்துவார்கள். அப்படி உச்ச்சரிக்கபப்டும் ரிக் வேதத்தையே பாட்டாகப் பாடும்போது, இறைவனே நேரில் வருவான் என்பது வேதத்தின் சிறப்பு. இறைவனைக் கவர்வது, வேதக் கருத்தாக இருப்பின், ரிக் வேதம் சொன்னால் கூட இறைவன் வர வேண்டும். ஆனால் அதை சாம கானமாக  இசைக்கப்படும்போது, அந்த  கானத்துக்குத் தான் இறைவன் கவரப் படுகிறார் என்றால், அங்கே பொருள் முக்கியமல்ல, ஓசை நயமே முக்கியம் என்று தெரிகிறது. அமிர்த வர்ஷிணி போன்ற ராகங்கள் இசைக்கப் படும்போது, இயற்கையே கவரப்பட்டு, மழை பொழிகிறது என்று கேள்விப்படுகிறோம். ஆக, ஓசையானது  ஒருவித அதிர்வலைகளை ஏற்படுத்தி அதன் மூலம் வேண்டும் பலன்களைத் தருகிறது என்று தெரிகிறது.


வேதம் என்பது இயற்கையுடன் ஒன்றிய ஒரு விஞ்ஞானம். வேதத்தின் ஆதாரம் அதன் ஓசை நயத்தில் இருப்பதால்தான் அதை வாய்மொழியாகச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். வேதம் சொல்வதை 'வேத கோஷம்' என்பார்கள். கோஷ்டியாக, கூட்டமாகச் சொல்ல வேண்டும். வேதத்தின் ஓசை நயத்தால், பலன் கிடைப்பதை அக்னி ஹோத்திரம் என்னும் ஹோமத்தைப் பற்றிய விஞ்ஞான ஆராய்ச்சியில் அறிந்துள்ளனர். அதிராத்திரம் என்னும் ஹோமத்திலும் அப்படிப்பட்ட விஞ்ஞான ஆராய்ச்சிகள்  நடந்தன. அடுத்த வருடம் திருச்சூரில் நடக்கப் போகும் அந்த ஹோமத்திலும் ஆராய்ச்சிகள் நடக்கப் போகின்றன. 


வேத மந்திரங்கள் சொல்லி நடத்தப்படும் யாகம் என்பதே, ஒரு விஞ்ஞானக் கூடத்தில் செய்யப்படும் பௌதிக அல்லது வேதியல் மாற்றம் போலத்தான். இன்னின்ன மாற்றம் அலல்து பலன் வேண்டுமென்றால், இன்னின்ன வகையில் ஹோமமும், வேத மந்திரம் ஓதப்படுதலும் வேண்டும் என்பதே வேதத்தின் ஆதார பயன். இந்த மந்திரங்களில் இந்திரன், வருணன், சூரியன், அக்கினி என்று பல பெயர்களும் வரும். அர்த்தம் என்று பார்த்தால் பல இடங்களிலும் கோர்வையாக அர்த்தம் இருக்காது. அங்கே அர்த்தத்துக்கு முக்கியத்துவம் இல்லை. ஓசை நயமோ, அதிர்வலைகளோ அல்லது அது போன்ற வேறு எதற்கோ தான் முக்கியத்துவம் இருக்கிறது. இந்து மதத்தை வழி நடத்திச் சென்ற  ஆச்சர்ய புருஷர்களும்  வேதத்தை எழுதி, அதற்குப் பொருள் சொல்லவில்லை. இதை நாம் நினைவில் வைக்க வேண்டும்.


வேதத்தை யாரும் உருவாக்கவும் இல்லை. எழுதவும் இல்லை. தாங்கள்தான் அதைச் செய்த ஆசிரியர்கள் என்று சொல்லிக் கொள்ளவும்  இல்லை. ஏனென்றால் தியானத்திலும், தவத்திலும் அமிழும் போது தானாகவே அவர்கள் வாயில் புறப்பட்ட சொற்களே வேதம் ஆயிற்று. அவற்றை ஓதும் போது, இயற்கை முதல் இறைவன் வரை அனைத்துமே ஆட்கொள்ளப்பட்டன. ஆனால் அந்த ஓதுதல் சுய நலத்துக்ககச்க் செய்யப்படவில்லை. உலக நலனுக்காகவும், மக்கள் நலனுக்காகவும் வேதம் ஓதப்பட்டது. அதன் பொருள் அறிந்து அதை ஆராய்ச்சி செய்வது என்பது ஹிந்து மரபில் கிடையாது.


வேதம் சொல்லும் கருத்து என்னவென்று அறிந்து கொள்ள வேண்டும் என்றால், தவம் செய்தவர்களையும், ரிஷிகளையும், ஞானிகளையும் நாடிச் சென்று அவர்களிடமிருந்து அறிந்து கொள்ள வேண்டும். அப்படி எழுந்தது உபநிஷத்துக்கள். வேதம் சொல்லும் ஞானத்தை உபநிஷத்துக்கள் மூலமாகத் தான் அறிய முடியும். அப்படித்தான் அறிந்தனர். வேதம், உபநிஷத்துக்கள் ஆகிய இவை இரண்டுமே செவி வழியாக அறியப்படவே, இவற்றுக்கு சுருதி என்று பெயர். இவற்றை எழுதிப்  படிக்கவில்லை.


வேதம் ஓதுதலும், கட்டுப்பாடான தவ வாழ்கை மேற்கொள்ளுதலும், ஆத்ம ஞானம் தேடுவதற்கு உதவியது. லௌகீக விஷயங்களுக்கு அவை தேவை இல்லை. குறுந்தொகையில் (156) ஒரு பாடல் வரும். பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணன் என்னும் பாண்டிய சேனாதிபதி ஒருவர் அதைப் பாடியுள்ளார். அதில் தலைவன், தலைவியைப் பிரிந்து வருந்துவான். அப்பொழுது அங்கே ஒரு பார்ப்பனர் வருகிறார். கையில் புரச மரத்திலிருந்து எடுக்கப்பட்ட தண்டம் என்னும் கோலுடனும், கமண்டலத்துடனும், விரத உணவை உண்பவராகவும்  அந்தப் பார்ப்பனர் சித்தரிக்கப்படுகிறார். அவரிடம் தன் பிரிவாற்றாமைக்கு ஒரு வழி கேட்கலாமா என்று தலைவன் எண்ணுகிறான். அப்புறம் தோன்றுகிறது, இவரைக் கேட்டு என்ன பயன் என்று.
தலைவன் சொல்லுகிறான், பார்ப்பன மகனே, பார்ப்பன மகனே, உன்னுடைய எழுதாக் கல்வியில் என் பிரிவுத் துன்பத்துக்கு மருந்து இருக்கிறதா? இல்லையே! என்கிறான்.


ரிக் வேதத்தை ஆராய்ந்து எடுக்கப்பட்ட ஆரிய - திராவிடப் போராட்டத்தை நம்பும் நம் திராவிடத் தலைவர்கள், இந்தப் பாடலை மறந்தது ஏன்?
வேதமே எழுதாத கல்வி.
அந்தக் கல்வியில்  காதல், லௌகீகம் போன்றவற்றைப் பற்றி ஒன்றும் இல்லை.
போரும், அதில் வெற்றியும் பற்றி இருந்தால் இந்த சேனாதிபதி அதைக் கேட்டுத் தெரிந்து கொள்ளாமல் இருந்திருப்பானா?
அது ஆரிய - திராவிடக்  கதை  சொல்லியிருந்தால்,   தமிழர்கள் அதை அன்றே அறிந்திருக்க மாட்டார்களா?


வேதம் என்பது படித்துப் பொருள் சொல்ல அல்ல.
அது கதைப் புத்தகமும் அல்ல.
அது சரித்திரப் புத்தகமும் அல்ல, அதிலிருந்து நம் சரித்திரத்தைத்  தெரிந்து கொள்ள.
தமிழ் வேதம் என்று போற்றப்படும் திருக்குறளே வேதம் எப்படிப்பட்டது, எதற்குப் பயன் படுவது என்பதற்குச் சாட்சி.
பொய்யா மொழி என்று திருக்குறளைப் போற்றும் சங்கப் புலவர் வெள்ளி வீதியார், அது செய்யா மொழிக்கு  (யாராலும் இயற்றப்படாத வட மொழி வேதம் ) திரு வள்ளுவர் மொழிந்த பொருள் என்கிறார். (திருவள்ளுவ மாலை).
அந்த செய்யா மொழியும் சரி, பொய்யா மொழியும் சரி, ஆரிய- திராவிடப்  போராட்டத்தைச் சொல்லவில்லை. 
திருக்குறள் இந்திய சரித்திரம் பற்றிச்  சொல்லவில்லை.
அது போல வேதமும் சரித்திரப் புத்தகம் அல்ல.
வேதம் உதவுவது ஆத்ம ஞானத்துக்கு, இறைவனை அடைவதற்கு. 

அதைப் பிரித்து பொருள் சொல்வது என்பதை ஐரோப்பியரே செய்தனர்.


அவர்களுக்கு இந்திய சரித்திரம் வேண்டுமென்றால், புராண இதிகாசங்களை நாடி இருக்க வேண்டும். அவை தெள்ளத் தெளிவாக நம் பழைய சரித்திரத்தைக் கூறுகின்றன. அவற்றில் இந்த ஆங்கிலேயருக்கும் ஐரோப்பியருக்கும் சுவாரசியம் இல்லை. வேதம் என்பது குறிப்பிட்ட  வாழ்க்கை முறைகளைப் பின்பற்றுபவர்கள்தான் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற நியதியை உடைத்து அவர்கள் அதைப் படித்ததினால் வந்த வினை இன்றும் நம்மை ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறது. இதைப் பார்க்கும் போது, காரணமில்லாமல் அந்த நாளில் அப்படிப்பட்ட  நியதிகள் போடவில்லை என்று புரிகிறது. நல்லவன் கையில் வேதம் அமிர்தம். 
அதுவே சுயநலமிக்க வல்லவன் கையில் ஒரு அம்பாகி விடுகிறது. 

மாக்ஸ் முல்லர் படித்தார்.
ஆரியன் என்கிறானே, இந்திரன் ஆரியனுக்கு உதவுகிறானே, இந்திரனது தாடி நிறம் மஞ்சள் நிறமாமே, அவன் தஸ்யனை அடித்து, ஆரிய நிறத்தைக் காப்பற்றினானாமே என்றெல்லாம் பொருள் கண்டு தங்களுக்கும் ஆரியன், இந்திரனுக்கும் ஒரு தொப்புள் கொடி தொடர்பைக்  கற்பனை செய்து கொண்டார். அவை என்னவென்று பார்ப்போம்.

5. அன்று ரிக் வேதம், இன்று திருக்குறள்.

ஆங்கிலேயர்களையும், அமெரிக்கர்களையும் பற்றி வேடிக்கையாக ஒன்று சொல்வார்கள். இருவருமே தங்கள் முன்னோர்களைப் பற்றித்தான் எப்பொழுதும் சிந்தித்துக் கொண்டும், பேசிக் கொண்டும் இருப்பார்களாம். ஆனால் அதில் ஒரு வித்தியாசம் உண்டு. ஆங்கிலேயர்கள் தங்கள் முன்னோர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பது பற்றியே பேசுவார்களாம்.  என் தாத்தா இப்படி வாழ்ந்தார், அவருக்குத் தாத்தா அப்படி வாழ்ந்தார் என்று பேசியே பொழுதைக் கழிப்பார்களாம்.

ஆனால் அமெரிக்கன் கதையே வேறு, என் தாத்தா யார், அவர் எங்கு வாழ்ந்தார், அவருக்குத் தாத்தா எப்படிப்பட்டவர் என்பதைத் தேடுவதிலேயே அவர்களுக்குப் பொழுது போய் விடுமாம். அதாவது அவர்களுக்குத் தங்கள் முன்னோர் யார், அவர்களது வம்சாவளி எது என்பதே தெரியாது.

ஆனால் இந்தியாவில் நமக்கெல்லாம் அந்த அவஸ்தை இல்லை. இன்றும் கூட கிராமப் புறங்களில் நம் மக்களிடம் உங்கள் பெயர் என்ன என்று கேட்டுப்பாருங்கள். இந்த ஊரைச் சேர்ந்த இன்னாருடைய மகன் இன்னானான என் பெயர் இது என்று ஒரு சிறு புராணமே பாடி விடுவார்கள். சங்கப் புலவர்கள் பெயரைப் பாருங்கள். அவர்கள் பெயரே ஊர் பெயரை ஒட்டியோ, அல்லது இன்னார் மகன் என்று தந்தை பெயரை ஒட்டியோ அல்லது செய்யும் தொழிலை ஒட்டியோதான் இருக்கும். தனி மனிதன் தன வம்சாவளியைத் தெரிந்து வைத்திருப்பது போல, நம் புராண, இதிகாசங்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வரை செல்லும் வம்சாவளியையும், சரித்திரத்தையும் சொல்கின்றன. அவை எல்லாம் சாதாரண மக்களுக்கும் தெரிந்திருந்தது. அந்தக் கதைகளைச் சொல்லித்தான் சோறு ஊட்டினார்கள், நல்லது கெட்டது  பற்றிய பிரித்தறியும் சிந்தனையை வளர்த்தார்கள்.

ஆனால் இடையில் வந்த ஆங்கிலேயனும், ஐரோப்பியனும்  தன் கதையைத் தேடி, நம் கதையில் கை வைத்து, அதைத் தன போக்கில் சொன்னதை நம்புவது முட்டாள்தனம். அதிலும் அவன் தேடினது என்ன? கண்டுபிடித்தது என்ன?

அவன் தேடினது, தங்களைப் போன்ற தம் முன்னோர்கள். அவர்களது உருவ அமைப்பு. அவர்களது முடியின் நிறம் கருப்பைத் தவிர எது வேண்டுமானாலும் இருக்கும். அவர்கள் கண்ணும் அப்படியே. அவர்கள் தோல் நிறம் வெளுப்பு. இந்த நிறப்பெயர்களை ரிக் வேதத்தில் படித்தான். உடனே முடிவு கட்டி விட்டான் - ரிக் வேதத்தில்  சொல்லப்பட்டது தங்கள் முன்னோர்கள் என்று.

இவர்கள் ரிக் வேதம் படிக்காமல், ஜோதிடம் படித்திருக்கக் கூடாதா என்பது என் ஆதங்கம். அதில் கருப்பு, சிவப்பு, வெளுப்பு, மஞ்சள், பச்சை, பல வர்ணம் என்று எல்லா நிறங்களுமே கிரகங்களுக்கு இருக்கும். அதைப் படித்திருந்தால், தாங்கள் மட்டுமல்ல, உலகின் எந்த மூலையில் பச்சை போன்ற நிறங்களில் மக்கள் இருக்கிறார்கள் என்று கண்டுபிடித்து, அவர்களும் இந்தியாவின் மீது படை எடுத்திருப்பார்கள் என்று உலகளாவிய அளவில் கண்டு பிடிப்புகள்  செய்திருக்கலாமே. அப்படி அவர்கள் செய்திருந்தால், அது எப்பேர்பட்ட உலக மகா உளறல் என்று நம்  மக்கள் தெளிவாக இருந்திருப்பார்கள்.

நம் துரதிர்ஷ்டம் அவர்கள் ரிக் வேதத்தை மட்டுமே குறி வைத்தார்கள்.
ஏன் ரிக் வேதம் முக்கியக் குறியானது?

ஆங்கிலேயன் இந்தியாவுக்கு வந்தபோது, இங்கிருந்த பல நூல்களைக் கண்டு ஆடிப் போய் விட்டான். அவனுக்கு இருந்த ஒரே நூல் பைபிள். ஆனால் இந்தியாவில் பல நூல்கள் உள்ளன. வேதம், உபநிஷத்து, கீதை, ராமாயணம், மகாபாரதம், புராணங்கள், அவை தவிர நீதிக் கதைகள், ஆங்காங்கே வட்டாரக் கதைகள் என்று பல இருந்தன. முன்பே எழுதியது போல, மாக்ஸ் முல்லர் பார்த்தார், எது ஆதார நூலோ அதை எடுத்து, அது சொத்தை என்று சொல்ல வேண்டும். அல்லது அது சொல்வது இதைத்தான் என்று தாங்கள் விரும்புவதைச் சொல்ல  வேண்டும். இப்படிச் சொன்னால் இந்த மக்களின் ஆதார நம்பிக்கையை அசைத்து விடலாம். இந்த முயற்சியில் பிறந்ததுதான் ஆரிய- திராவிடப் போராட்டம்.

இந்த வகையான அணுகுமுறையை , இன்றும் மிஷனரிகளிடத்தில் காணலாம்.  இந்தியாவுக்கு மிஷனரி நோக்கில் வந்த முதல் மிஷனரி  நொபிலி அவர்கள் காலத்திலிருந்து தமிழ்  நாடு,கிருஸ்துவ மிஷனரிகளது குறியாக இருந்திருக்கின்றது. முதலில், இந்து மதத்தைத் தழுவி கிருஸ்துவத்தை வியாபாரம் செய்தார்கள். ஆனால் இப்பொழுதோ, மாக்ஸ் முல்லரின் அடிப்படை அணுகு முறையையே பின்பற்றுகிறார்கள்.

தமிழுக்கு எது ஆதார நூலோ, தமிழனுக்கு எது வேதம் போன்ற நூலோ அந்த நூலை எடுத்துக் கொண்டுள்ளார்கள். அப்படிப்பட்ட நூல். தமிழ் மறை என்று சொலல்பப்டும் திருக்குறள். அந்தத் திருக்குறளை எழுதிய திருவள்ளுவர் ஒரு கிருஸ்துவரே என்ற பிரச்சாரம் கிளம்பி இருக்கிறது. திருவள்ளுவர் செயின்ட் தாமஸ் அவர்களது சிஷ்யர் என்ற கதையை இவர்கள் ஜோடித்திருக்கிறார்கள். அன்றைக்கு ஆரியப் படை எடுப்பைப் பற்றி கதை கட்டியது போல இன்று, திருக்குறளை விவிலிய வேதமாகவும், திருவள்ளுவரை கிருஸ்துவர் என்றும் கூறும் பித்தலாட்டம் நடந்து கொண்டிருக்கிறது.
கூடிய சீக்கிரம், திருக்குறளில் இருந்தே நம் 'சரித்திரத்தை' எடுத்துக் கொடுப்பார்கள் என்று எதிர் பார்க்கலாம்.

ரிக் வேதம் போல, திருக்குறளிலும் போர் பற்றிய குறிப்புகள்  இல்லையா என்ன?
குறள் 733 ஐப் பாருங்கள். 'பிற நாட்டு மக்கள் குடியேறுவதால் உண்டாகும் சுமையைத் தாங்கி, தன் அரசனுக்குரிய இறைப் பொருள் முழுவதும் தர வல்லது நாடு' என்கிறது இந்தக் குறள். பிற நாட்டிலிருந்து குடியேறி இருக்கிறான் என்று இந்தக் குறள் சொல்கிறது பாருங்கள். ஆரியன் குடியேறி இருக்கிறான். ஆனால் அதையும் பொறுத்து, அவனால் வரும் சுமையையும் பொறுத்து இங்கிருந்த திராவிட அரசன் ஆண்டான் என்று சொல்வதற்கு இவர்களுக்கு எவ்வளவு நேரம் ஆகும்? 

ஆரியன் வந்ததைக் காட்ட குறள்கள் இல்லையா? குறள் 936 ஐப் பாருங்கள்.  "மூதேவியாகிய சூதாட்டத்தில் மூழ்கியவர் வயிறு நிறைய உணவும் உண்ணாமல் பல வகைத் துன்பத்தையும் அடைவர்" என்கிறதே. மூதேவி என்பது ஆரியக் கருத்து. அந்தக் கருத்தைப் பரப்பும் ஆரியன், ஒரு பிராமணன். அவன்தான் விரதம் இருக்கிறேன் என்று உணவு உண்ணாமல் வயிற்றைக்  கட்டுவான். அப்படி  வந்தேறிய ஆரியனைக் குறள் சொல்கிறது பாருங்கள் என்று இவர்கள் ஆராய்ச்சி செய்யும் நாள் தூரத்தில் இல்லை.

இந்த வகையான ஆராய்ச்சிகளுக்கு ஆதரவு கொடுத்தது 'நடமாடும் தமிழே' என்று அடி வருடிகளைக் கொண்டு சொல்லப்படும் திராவிடத் தலைவர். இவர் 'திருவள்ளுவர் கிருஸ்துவரா? " என்னும் நூலுக்கு முன்னுரை  எழுதியவர். அந்தக் கருத்தை வைத்து சினிமா எடுக்கும் முயற்சிக்குத் தலைமை தாங்கியவர். இன்னும் ஒரு முறை அவருக்கு ஆட்சியைக் கொடுங்கள், அந்த சினிமா கண்டிப்பாக எடுக்கப்பட்டு விடும். ரிக் வேதத்துக்குத்  தப்பும் தவறுமாக  பொருள் கண்டது போல, தமிழ் வேதமான திருக் குறளுக்கும் அடாவடித்தனமாக பொருள் கூறுவார்கள்.

அப்படி செய்த அடாவடித்தனத்தில்  வந்ததுதான் ஆரியப் படை எடுப்பு, ஆரிய- திராவிடப் போராட்டம் என்னும் கருத்துக்கள். இவற்றில் அவர்கள் கண்டு கொண்ட முக்கியக் கதாநாயகன் இந்திரன் என்னும் தேவர்கள் தலைவன்.

சனி, 20 நவம்பர், 2010

4. ஆரிய இனம், ஆரிய மொழியாக மாறிய கதை



ஆங்கிலேயர்கள் காலனி ஆதிக்கம் செய்தபொழுது, மொழி ஆராய்ச்சியாளர்களுக்கு நிறைய கிராக்கி இருந்தது. இங்கிலாந்திலும், ஐரோப்பாவிலும் ஐரோப்பிய மொழிகள் ஆராய்ச்சி நடந்து கொண்டிருந்த நேரம் அது. ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மானிய  மொழி, செக் மொழி, ரஷ்ய மொழி இவையெல்லாம் ஒரே மொழிப் பிரிவைச் சேர்ந்தவை என்று ஆராய்ச்சி நடந்து கொண்டிருந்தது. ஆங்கிலேயர்கள் பல நாடுகளைத் தாங்கள் காலனிகளாக மாற்றிக் கொண்டிருக்கையில், இந்த மொழி ஆராய்ச்சியாளர்களை வேலைக்கு அமர்த்திக் கொண்டார்கள். மொழி ஆர்வம் கொண்ட அவர்கள் ஆங்காங்கு உள்ள லோக்கல் மொழியைக் கற்றுக் கொண்டு ஆட்சியாளர்களுக்கும், மக்களுக்கும் இடையே பாலமாக இருந்தனர்.
 

இங்கு ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் இந்த மொழி ஆராய்ச்சியாளர்கள் மிஷனரிகளாகவும் இருந்தனர். அல்லது மொழி ஆராய்ச்சியாளர்களை மிஷனரி வேலைக்குப் பயன் படுத்தினர். இவர்கள் அந்தந்த வட்டார மொழியையும் கற்றுக் கொண்டனர். அங்கு இருந்த மத நம்பிக்கைகளையும் தெரிந்து கொண்டனர். தெரிந்து கொண்டு அதைக் கிறிஸ்துவத்தில் புகுத்தி தாங்கள் கிறிஸ்துவம்தான் முதன்மையானது என்று மூளைச் சலவை செய்து மதம் மாற்றினர். அப்படி செய்து பலன் கண்டவர் முன்னரே சொன்ன நொபிலி என்பவர். இவர் தமிழ் வளர்த்த மதுரையில் உட்கார்ந்து, உங்கள் இந்துமதம் தான் எங்கள கிறிஸ்துவமும் என்று சொல்லி வேலையைக்  காண்பித்தார்.

 
இவரைப் போலவே மற்ற மொழி ஆராய்சியாளர்களும், தாங்கள் வேலையை மொழியுடன் நிறுத்திக் கொள்ளவில்லை. நம் மதத்தை ஊடுருவி, நம் சரித்திரத்தையே மறக்கடித்து விட்டனர். அவர்கள் மாற்றி எழுதின சரித்திரத்தைத்தான் நாம் பாடமாகப் படிக்க வைத்தனர். இந்து மதத்தில் ஆழமாக வேரூன்றி இருந்த மக்களை, ஆங்கிலேயனுக்கு அடி வருடியாக மாற்றச் செய்ய வேண்டும் என்றால், அவர்களுக்கு ஆங்கிலக் கல்வி கொடுக்க வேண்டும். அப்படிக் கொடுக்கும் கல்வியின் மூலம் இந்தியர்களை தங்கள் ரசனை, எண்ணம், கோட்பாடுகள், அறிவு என்ற வகைகளில் ஆங்கிலேயர்களைப் போல மாற்ற  வேண்டும் என்பதையே கல்விக் கொள்கையாக மெக்காலே கொண்டிருந்தார். 

                                 மெக்காலே 

அப்படி அவர் சொல்லி பதினைத்து வருடங்களாக ஒன்றும் உருப்படியாகச் செய்ய முடியவில்லை. அப்பொழுதுதான் அவர் கண்ணில் பட்டார் மாக்ஸ் முல்லர் என்னும் ஜெர்மானியர்.


முல்லர் பிறப்பால் ஜெர்மானியர். அவர் வேலை பார்த்ததோ இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில். அவர் சம்ஸ்க்ருதம் அறிந்த மொழி ஆராய்ச்சியாளர். மெக்காலே அவரைப் பிடித்தார். மெக்காலேயின் குறிக்கோளை முல்லர் நன்றாகப் புரிந்து கொண்டார். இந்தியர்களது மதமான இந்து மதம் அவர்களை இயக்குகிறது. அதன் பிடியிலிருந்து அவர்கள் வெளியே வந்தால் அவர்களை அடக்குவது சுலபம். இந்தக் கருத்தை தன் மனைவிக்கு 1866 -ஆம் வருடம் எழுதிய கடிதத்தில் இப்படி குறிப்பிடுகிறார். 'ரிக் வேதம் தான் இந்தியர்கள் மதத்தின் ஆதாரம். அந்த ரிக் வேதத்திற்கு  ஆதாரம் எது என்று நாம் காண்பிக்க வேண்டும். அப்படி காண்பித்தால்தான் மூவாயிரம் வருடங்களாக அவர்களைத் தன் பிடியில் வைத்திருந்த அந்த மதத்தை வேரோடு பிடுங்க முடியும் என்று நான் நிச்சயமாக எண்ணுகிறேன்" என்று எழுதினார்.


(“The translation of the Veda will hereafter tell to a great extent on the fate of India and on the growth of millions of souls in that country. It is the root of their religion, and to show them what the root is, I feel sure, is the only way of uprooting all that has sprung from it during the last 3000 years”

Source:- Müller, Georgina, The Life and Letters of Right Honorable Friedrich Max Müller, 2 vols. London: Longman, 1902.)

                                மாக்ஸ் முல்லர்

அந்த ரிக் வேதத்திற்கு ஆதாரம் என்று அவர் கண்டு பிடித்து சொன்னது ஆரியப் படைஎடுப்பு. படையெடுத்து வந்த ஆரியர்கள் கொடுத்ததுதான்  வேதமும், வேத மதமும் என்றார் அவர். ஆரியர்கள் எப்படியெல்லாம் இங்கிருந்த மக்களை அழித்தார்கள் என்று விளக்குகிறது  ரிக் வேதம் என்று சொல்லி, ஞான வழியாக விளங்கிய வேதத்தையும், இந்து மதத்தையும் கொச்சைப் படுத்தினார். இந்தக் கருத்து மொழி ஆராய்ச்சியாக மட்டுமல்ல, மிஷனரி பிரசாரமாகவும்  ஆனது. இதன் மூலம் மக்களுக்கு இந்து மதத்தின் மீது இருந்த பற்றை அழிக்கப் பார்த்தனர். அது மட்டுமல்ல, ஆரியர் விரட்டிய மக்கள் திராவிடர்கள் என்றும் கூறி, இன்றைய இந்தியாவில் இருக்கும் மக்களை ஆரியர்- திராவிடர் என்று பிரித்து ஒரு பகைமை உணர்ச்சியை மூட்டப் பார்த்தனர். ஆங்கிலேயனின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு ஆரிய- திராவிடப் பகை உரமானது.
 


ஆக, மொழி ஆராய்ச்சி என்ற பெயரில், நம் மதத்தை அழித்து, கிறிஸ்துவத்திற்கு மத மாற்றம் செய்வதற்கும், ஆங்கிலேயக் கூலிகளாக நம் மாறுவதற்குமே மாக்ஸ் முல்லர் பாடுபட்டார். இது சரித்திரம் சொல்லும் செய்தி. அப்படி அவர் சொன்னதை நம்பி, ஆரியப் படையெடுப்பில் ஓடி வந்த  திராவிடன் நாம் என்று சொல்லித் திரிவது தமிழனுக்கு மானக் கேடு.

 
ஐரோப்பிய நாடுகளிலிருந்து ஆரியன் வந்தான். வட இந்தியாவில் இருந்த தாச்யுக்களை  விரட்டினான். வந்த இடத்தில் உட்கார்ந்து விட்டான். ஆக்கிரமிப்பாளனாக வந்த ஆரியன் கங்கைக் கரையில் உட்கார்ந்ததும் அமைதியாளனாக   ஆகிவிட்டான். வேதம் படைத்தான். இந்து மதத்தைத் தோற்றுவித்தான் என்று அவர் எழுப்பிய கதையில், இந்தியர்கள் மயங்கினார்களோ இல்லையோ, ஐரோப்பியர்கள் மயங்கிவிட்டார்கள். தாங்கள் மூலத்தைத் தேடிக் கொண்டிருந்த அவர்கள் தாங்களே ஆரியர்கள் என்று நம்ப ஆரம்பித்துவிட்டார்கள். 


அந்த நம்பிக்கை தந்த எழுச்சியில் துண்டு பட்டிருந்த ஜெர்மனி ஒருங்கிணைந்தது.
1871 -இல் ஜெர்மனி ஒரு ஒருங்கிணைந்த பேரரசாக அறிவித்துக் கொண்டது. தங்களை 'ஆரிய நாடாகபிரகடனப்படுத்திக் கொண்டது. இதைப் பார்த்த பிரிட்டிஷ் அரசுக்குக் கிலி பிடித்துக் கொண்டது. இவர்கள் சொன்ன கதை இந்திய மக்களைக் கவர்வதற்காக. ஆனால் அதன் எதிரொலி அவர்கள் எதிரி முகாமில் கேட்கிறது. தாங்களே உயர்ந்தவர்கள் என்ற ஆரிய இன வெறியுடன் கூடிய ஜெர்மனி, அவர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியது.
 

மேலும் அந்த நேரத்தில்தான் இந்தியாவிலும் சுதந்திரப் போராட்டம் தலை தூக்கியது. 1857 - ஆம் ஆண்டு நடந்த முதல் சுதந்திரப் போராட்டம் ஆங்கிலேயனைக் கவலையில் ஆழ்த்தியது. ஆரிய இனக் கொள்கையைக் கொண்டு இங்கு கதை பரப்பிக் கொண்டிருக்கையில், அங்கே, ஜெர்மனி தான் ஆரிய நாடு என்று சொல்லிக் கொண்டதும் அபத்தமாக இருந்தது.


பார்த்தார்கள், எந்த ஜெர்மானியரான முல்லர் ஆரிய இனக் கொள்கையைப் பரப்பினாரோ, அவரைக் கொண்டே அந்தக் கருத்தை மறுக்கச் செய்தார்கள். முல்லரைப் பொறுத்தவரை, அவருக்கு சம்பளம் கொடுத்து சோறு போட்டவன் ஆங்கிலேயன். அவனுக்கு விசுவாசமாக் நடந்து கொள்ள வேண்டும். அதனால் ஆரிய இனம் என்று பறை சாற்றியதை, ஆரிய மொழி என்று திருத்திக் கொண்டார்.  ஆரிய நாடாகத் தன்னை ஜெர்மனி அறிவித்துக்கொண்ட சில மாதங்களில், ஜெர்மானிய ஆதிக்கத்தில் அப்போது இருந்த பிரெஞ்சுப் பகுதியில் இருந்த ஸ்டிராஸ்பெர்க் பல்கலைக் கழகத்தில் முதல் முறையாக ஆரிய இனக் கொள்கையை மறுத்தார். பிறகு, இந்த 'ஆரிய ரிஷி' தன் புது கொள்கையை விடாமல் பற்றிக் கொண்டார்.


அதாவது. ஆரியன் என்று ஒரு இனமே இல்லை. அதுவரை அவர் சொன்னதெல்லாம் ஆரிய மொழியைப் பற்றியது. ஐரோப்பிய மொழிகளுக்கும், சமஸ்க்ருதத்துக்கும் ஒற்றுமை உள்ளது. எனவே இம் மொழிகளை ஐரோப்பிய அல்லது ஆரியக் குடும்ப மொழிகள் என்று சொல்லலாம் என்று பல்டி அடித்தார். அவர் சொன்ன வசனம் சூப்பர் வசனம். ஆரிய இனம், ஆரிய ரத்தம், ஆரிய முடி, ஆரியக் கண் என்றெல்லாம் சொன்னால் அது பாபம். அது லோட்டாத் தலையன் அகராதி, சொம்புத் தலையன் இலக்கணம் என்று ஆளை ஒரு அடையாளமிட்டுச் சொல்வது போல ஆகும். ஆரியம் என்பது ஆள் அடையாளம் இல்லை. அது மொழி அடையாளம் என்றார்.
("I have declared again and again that if I say Aryas, I mean neither blood nor bones, nor hair, nor skull; I mean simply those who speak an Aryan language...to me an ethnologist who speaks of Aryan race, Aryan blood, Aryan eyes and hair, is as great a sinner as a linguist who speaks of a dolichocephalic dictionary or a brachycephalic grammar.")


 
இப்படிஎல்லாம் சொன்னாலும்  ஜெர்மனி தாங்கள் உயர்ந்த ஆரிய இனம் என்று சொல்லிக் கொண்டதை மாற்ற  முடியவில்லை. உலகப் போர் வந்து ஹிட்லர் அழிந்து, ஜெர்மனி அடங்கிய பிறகுதான், ஐரோப்பிய உலகமே இந்த இனக் கொள்கையில் வாயை மூடிக் கொண்டது.
 
அப்படியும் ஆரிய இன வாதத்தைத் தங்களுக்கு வசதியாக இருக்கும் போதெல்லாம் ஆங்கிலேயன் சொல்லிக் கொண்டு நம்மை ஆண்டு வந்தான். இப்படித்தான் ஆரிய இன வாதமும், ஆரியப் படையெடுப்பும் அரசியல் ஆதிக்கத்துக்கு உதவியாக ஏற்படுத்தப்பட்டன. இதில் முளைத்த திராவிட இன வாதம் இன்றைய ஆதிக்க சக்திகளுக்கு ஊறுகாயாக உதவுகிறது.