வியாழன், 2 பிப்ரவரி, 2012

98. மொஹஞ்சதாரோ கொம்பும், வேதக் கருத்துக்களும்,


தலையில் கொம்பு முளைத்த வர்ணனைகள் வேத மரபில் பல இடங்களில் வருகின்றன. மலைக்குக் கொம்பு இருந்திருக்கிறது, மண்ணுக்குக் கொம்பு இருந்திருக்கிறது, மனிதனுக்குக் கொம்பிருந்திருக்கிறது, மிருகங்கள், தெய்வங்கள் என எல்லாவற்றுக்குமே பல கொம்புகள் இருந்திருக்கின்றன என்பது போன்ற வர்ணனைகள் வேதங்களிலும், பல நூல்களிலும் வருகின்றன. இவையெல்லாம் ஒரு உருவகமே. ஒரு விஷயத்தை அல்லது ஒரு நபரை உயர்வாகச் சொல்லுமிடங்களிலெல்லாம் கொம்பு இருப்பதாகச் சொல்லியுள்ளார்கள். யாராவது பெரியமனிதத்தனம் செய்தார்கள் என்றால், 'தலையில் கொம்பா முளைத்து விட்டது' என்று இன்றும்கூட  நாம் பேச்சு வழக்கில் சொல்வது, வேதங்களிலிருந்து தொடர்ந்து வந்திருக்கும் ஒரு உருவக வர்ணனையே. அதை அப்படியே உண்மையான விவரமாக எடுத்துக் கொண்டு, கொம்பு வைத்துக் கதை கட்டியவர்கள் ஐரோப்பியர்கள். அதன் பலனாக, யூனிகான் என்னும் கற்பனை மிருகத்தை உருவாக்கி கிருஸ்துவ பைபிளிலும் நுழைத்தாகி விட்டது!!

 

மொஹஞ்சதாரோவின் முத்திரைகளில் காணாப்பட்ட ஒற்றைக் கொம்பு மிருகத்தின் மறு பதிப்பாக யூனிகான் சித்தரிக்கப்பட்டது என்பதைக் கீழ்க்காணும் படங்கள் தெள்ளத் தெளிவாக விளக்குகின்றன. 

 


இடது புறம் இருப்பது இடைக்கால ஐரோப்பாவில் (1000 வருடங்களுக்கு முன்) சித்தரிக்கப்பட்ட யூனிகான். வலப்புறம் இருப்பது 5000 வருடங்களுக்கு முன் மொஹஞ்சதாரோவில் கண்டெடுக்கப்பட்ட முன் தலையில் ஒற்றைக் கொம்பு கொண்ட வராஹம்.

இதை வராஹம் என்று சொல்லக் காரணம், ஏக ஸ்ருங்கி என்று வராஹத்தைச் சொல்வதாலும், ருஷ்யஸ்ருங்கரது கதையை ஒட்டியே ஐரோப்பிய யூனிகான் கதை அமைந்துள்ளதாலும் என்பதை 96 ஆவது கட்டுரையில் கண்டோம். .


 

இந்தக் கட்டுரையில் கொம்பு அல்லது ஸ்ருங்கி என்பது எங்கெல்லாம் சொல்லப்பட்டது என்பதையும், அதைக் கொண்டு மொஹஞ்சதாரோவில் காணப்படும் உருவங்களது தாத்பரியத்தையும் பார்ப்போம்.


நாம் இருக்கும் பாரத வர்ஷம் என்னும் இந்த தேசத்தில் ஸ்ருங்கவான் (கொம்புடையவன் அல்லது கொம்பு முளைத்தவன்) என்னும் மலை இருந்தது என்று விஷ்ணு புராணம் கூறுகிறது. (2.8) இதன் வடக்கு, தெற்கு, மத்தியம் என்று மூன்று இடங்களில் கொம்பு இருந்தது என்று வர்ணிக்கும் இந்த ஸ்லோகம், சூரியன் வட கோடியிலும், தென் கோடியிலும் மத்தியில் விஷு என்னும் சம பகல்-இரவு தினத்திலும் சஞ்சரிக்கும் நிலையை விவரிக்கிறது.


அதாவது உச்சியில் என்று பொருள் படும் இடங்களில் கொம்பு என்ற உருவகத்தைக் கூறியிருக்கிறார்கள். சூரியன் கடகரேகையின் உச்சியிலும், மகரரேகையின் உச்சியிலும், பூமத்திய ரேகையின் உச்சியிலும் சஞ்சரிக்கும் போது வானில் எங்கு தென்படுகிறதோ, அவையே ஸ்ருங்கி அல்லது பாரத தேசத்தின் கொம்புகள் ஆகும்.

இந்த வானவியல் உண்மையை நம் பாரத மக்கள் என்றோ தெரிந்து கொண்டு விட்டார்கள். ஆனால், மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இதைக் கண்டு கொள்ள மாட்டார்கள். பாரத நாட்டில் இருந்த எந்த அறிவுப் பொக்கிஷத்தையும்  அவர்கள் கவனத்தில் கொள்ள மாட்டார்கள். ஆனால் எங்கோ அமெரிக்கவிலும், ரஷ்யாவிலும், ஐரோப்பாவிலும், அரைகுறையாக ஒரு அமைப்பு இருந்தால் மட்டும் போதும், அதைக் கொண்டு அங்கிருந்த பழங்கால மக்கள், வானவியலை ஆராய்ந்தார்கள் என்று சொல்லிக் கொண்டிருப்பார்கள். அதில் என்ன தமாஷ் என்றால், அந்த இடங்களிலெல்லாம் வருடம் முழுவதும் வெயிலே இருக்காது. பகல் வேளை என்பதே 8 மணி மணி நேரம் கூட இருக்காது. ஆனால் அவர்கள்தான் நாளைக் கண்டுபிடித்தார்கள், வாரத்தைக் கண்டு பிடித்தார்கள் சூரியனைக் கண்டு பிடித்தார்கள் என்று சொல்லிக் கொள்கிறார்கள். அந்த அபத்தங்களை எல்லாம் பிறகு பார்க்கலாம்.வானத்தில் சூரியன் தென்படும் நிலைகளைக் கொம்புகள் என்று வேத மக்கள் சொல்லி வந்தார்கள். அது போல, பூமிக்கும் கொம்புண்டு என்று சொல்வதை ஹரிவம்சத்தில் காணலாம் (1-57- 2 &3). கிருஷ்ணன் வடமதுரையை விட்டுச் சென்று விட்டான் என்று சொல்லுமிடத்தே, "ஸ்ருங்க ப்ருதிவ்யா" – அதாவது பூமிக்குக் கொம்பு போல இருந்த மதுராவை விட்டுச்.சென்று விட்டான் என்கிறது அந்த ஸ்லோகம். சிறந்த நகரங்கள் அல்லது இருப்பிடங்களைக் கொம்புள்ள இடங்கள் என்று சொல்லி வந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது.


அதுபோல மலையின் உயர்ந்த சிகரங்களை ஸ்ருங்கி என்று சொல்லியிருக்கிறார்கள். கோமந்தம் என்னும் மலைக்கு இரண்டு கொம்புகள் இருந்தன என்றும் அவை இரண்டு தெய்வங்கள் போல ஒளி வீசின என்று ஹரிவம்சத்தில் ஒரு வர்ணனை வருகிறது.


மலை உச்சியை தெய்வத்துடன் ஒப்புமை கண்டிருக்கிறார்கள், அது ஏன் என்று பார்த்தால், தெய்வம் என்ற சொல் 'திவ்' என்னும் வேர்ச் சொல்லிலிருந்து எழுந்தது. திவ் என்றால் ஒளி என்று பொருள். ஒளி வீசிக் கொண்டிருப்பதால் அவர்கள் தேவர்கள் அல்லது தெய்வங்கள் என்று அழைக்கப்பட்டார்கள். மலையின் உயர்ந்த சிகரத்தில் சூரிய கிரணங்கள் பட்டு, ஒளி வீசிக் கொண்டிருக்கும். ஒளி வீசுவதால், அந்தச் சிகரங்களைத் தெய்வங்கள் என்றும், உயரமாக இருப்பதால் கொம்பு (ஸ்ருங்கி) என்றும் ஒன்று சேர அழைப்பது வழக்கமாக இருந்திருக்கிறது. தெய்வத்தையும், கொம்பையும் ஒருங்கிணைத்து, அதாவது தலையில் கொம்புடன் தெய்வத்தை வருணிக்கின்ற மரபையும் உண்டாக்கியிருக்கிறது.


பிரஜாபதிக்கு, அக்னிக்கு, இந்திரனுக்கு, பரமேஷ்டிக்கு, என்று பலருக்கும், கொம்புகள் இருந்தன என்ற வர்ணனைகள் வேதங்களில் உள்ளன. கொம்பை ஒரு தாயத்தாகக் கருதி, நோய் நீக்க அது பயன்படட்டும் என்று சொல்லும் மந்திரங்கள் அதர்வண வேத்த்தில் இருக்கின்றன. (அ-வே 3-7).இந்தக் கருத்துக்களைப் பின்பற்றி எகிப்தியக் கடவுளர்களில் பலருக்கும் கொம்புகள் அமைக்கப்பட்டிருக்கலாம் என்று சொல்லும் வண்ணம் இந்த வர்ணனைகள், எகிப்தியக் காலக்கட்டத்துக்கு முன்பே பாரத நாட்டில் இருந்திருக்கின்றன. 


மாடுகளுக்கும், மனிதர்களுக்கும் கொம்புகள் இருப்பதாகச் சொல்லும் வேத மந்திரங்கள் இருக்கின்றன. இரண்டு தலை, நான்கு கொம்பு, 7 கைகள் என்றெல்லாம் வர்ணனைகள் வருவதைப் பார்க்கும் போது, இவற்றின் பிரதிபலிப்பு மொஹஞ்சதாரோ, ஹரப்பாவில் இருப்பது புலனாகிறது.


ஹரப்பாவில் காணப்படும் சில ஆண் உருவங்களுக்கு இரண்டு கொம்புகள் போன்ற அமைப்புகள் இருக்கின்றன. இது தலை அலங்காரமாகவும் இருக்கலாம், ஆனால் கொம்பு போன்ற அமைப்பில் அலங்காரம் செய்து கொண்டார்கள் என்பதை மறுக்க முடியாது.
 

பெண்கள் உருவப் பொம்மைகளிலும், அவர்களது தலை அலங்காரம் இரண்டு கொம்புகள் போலச் சித்தரிக்கப்படுகின்றன. 


கொம்புகள் பற்றிய வேதக் கருத்துக்களைத் தெரிந்து கொண்ட பிறகு இவற்றைக் காணும் போது, இந்தப் பொம்மைகள் உயர்ந்த நிலையில் இருப்பவர்களைக் குறிக்கின்றன என்றும், அவர்கள் எதோ ஒரு விதத்தில் சிறப்பு பெற்றவர்களாக இருந்திருக்க வேண்டும் என்றும் புலனாகிறது.

 

இதில் நாம் கவனிக்க வேண்டிய மற்றொரு விவரம் என்னவென்றால், இப்படிப்பட்ட பொம்மைகள் தமிழ் மக்கள் மத்தியில் இல்லை. இவற்றைச் செய்தவர்கள் மொஹஞ்சதாரோ, ஹரப்பாவைச் சேர்ந்தவர்கள், அவர்கள் தமிழர்களாக இருந்திருந்தால், அவர்கள் ஆரியப் படையெடுப்பால் இடம் பெயர்ந்திருந்தால், தமிழ் நாட்டில் வந்த பிறகும் இவற்றைச் செய்து இருக்க வேண்டுமே?


இவ்வாறு காணப்படும் உருவப் பொம்மைகளில் ஒரு குறிப்பிட்ட உருவக் கருத்து மட்டுமே தமிழ் நாட்டில் காணப்படுகிறது. அது விளக்குப் பெண் பொம்மை ஆகும். மின் விளாக்கு அறிமுகமாகும் வரை, எண்ணை விளக்குகள்தான் தமிழ் நாடு உட்பட எல்லா இடங்களிலும் பயன்படுத்தப்பட்டன.  1000 வருடங்களுக்கு முன்பே தமிழ் நாட்டில் பல வகையான விளக்குத் தருமங்கள் செய்யப்பட்டிருக்கின்றன என்பதைப் பல கல்வெட்டுகள் மூலம் அறிகிறோம். அவற்றில் விளக்குகளது பெயர்களும் குறிக்கப்பட்டுள்ளன. குடம், அனந்தலை, நிலை, தூக்கு, பாவை என்று அவற்றின் உருவத்தாலும், தன்மையாலும் பலவிதமான பெயர்களுடன் விளக்குகளைத் தமிழ் நாட்டில் செய்திருக்கிறார்கள். அவற்றுள் பாவை விளக்கு என்பது, ஒரு பெண் கையில் விளக்கேந்தியது போன்ற அமைப்பில் இருக்கும். இவற்றைத் தமிழகக் கோவில் தூண்களில் காணலாம். சிற்பங்களாகவும் காணலாம் – கீழுள்ள படத்தில் இருப்பது போல.