வெள்ளி, 10 பிப்ரவரி, 2012

101. ஆதி சிவமா அல்லது அறியாமை தந்த பரிசா?



 


இந்த உருவத்தையே  PROTO – SIVA என்று கூறி, சிவன் என்னும் கருத்தாக்கத்துக்கு ஆதாரமானது என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்ல, அதையே உண்மை என்று பலரும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.


ஆனால் சிவனைப் பற்றிச் சொல்லத் தகுதி படைத்தவர்கள் இருவர் மட்டுமே. அவர்கள் மார்கண்டேயரும் பதஞ்சலியும் ஆவார்கள். மஹாபாரத்திலும், புராணங்களிலும், முனிவர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது, அவரவர் எந்தத் தெய்வத்திடம் பக்தி பூண்டிருந்தார்களோ அந்தத் தெய்வத்தைப் பற்றிக் கேட்பார்கள். மார்கண்டேயர், பதஞ்சலி ஆகியோரைப் பார்த்த மாத்திரத்திலேயே, அவர்களிடம்  சிவனது பெருமையையும், பெயர்களையும், பற்றித்தான் கேட்பார்கள். சிவன் மீது அவர்கள் அதீத பக்தி பூண்டிருந்ததால், சிவனைப் பற்றி அவர்கள் சொல்லும் சொல்லே இறுதியானது, உண்மையானது என்ற கருத்து இருந்தது. இவர்கள் மட்டுமல்ல, வியாசரும், கிருஷ்ணரும்கூட சிவனது உருவங்கள், தோற்றம் பற்றி மஹாபாரத்தில் கூறியுள்ளார்கள். அவை பிரபஞ்சக் கருத்துக்களாகவும், பரத்திலிருந்து தோன்றியவையாகவும் உள்ளன.


ஆதிக் கருத்தாக்கம் என்று சொல்லும் அயல்நாட்டு ஆராய்ச்சியாளர்கள், தங்கள் நாடுகளில் கருத்தாக்கங்கள் உண்டான பாணியில் PROTO –SIVA  என்று கருத்து சொல்லி விட்டார்கள். அவர்கள் நாடுகளில் கற்காலம் உண்டாகி, மனிதன் வளர்ச்சி பெற்று, தாங்கள் பார்த்தது, புரிந்து கொண்டது என்பது போன்றவற்றின் அடிப்படையில் கருத்துக்களை உண்டாக்கினார்கள்.


ஆனால் இந்தியாவைப் பொறுத்தமட்டில், ஒரு மில்லியன் வருடங்களுக்கு முன்பே இங்கு மனிதன் வாழ்ந்து, கற்கால நிலையைத் தாண்டி விட்டான். ஒரு மில்லியன் என்றால் 10 லட்சம் ஆகும். ஒன்றரை மில்லியன், அதாவது 15 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே சென்னைக்கருகில், திருவள்ளூரில் அத்திரம்பாக்கம் என்னுமிடத்தில் கற்கால மனிதன் வாழ்ந்த அடையாளங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.


ஆதாரம்:- http://www.telegraphindia.com/1110325/jsp/frontpage/story_13763075.jsp

3500 த்துக்கும் மேற்பட்ட கற்காலக் கருவிகள் இங்கு கிடைத்துள்ளன. அதுபோல கர்நாடக மாநிலத்திலும், 1.27 மில்லியன் வருடங்களுக்கு முன்பே மனிதன் வாழ்ந்த அடையாளங்கள் கிடைத்துள்ளன. அதிகபட்ச காலமாக 2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே மனிதன்  வாழ்ந்த கற்காலச் சின்னங்கள், இன்றைய ஜார்கண்ட், பீஹார் பகுதிகளில் கிடைத்துள்ளன.


இப்படிப்பட்ட தொன்மைக்குக் காரணம், தட்பவெப்பம், உணவு ஆகியவையே. இன்றைக்கு இந்தியாவும், சீனாவும் அதிகப்படியான மக்கள் தொகையுடன் இருக்கின்றன என்றால், அதற்குக் காரணம், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்த இடங்களில் மனித இனம் தொடர்ச்சியாக இருந்து, வளர்ந்து, பெருகி வந்தது என்பதுதான்.


பூமியின் சுழற்சியாலும், சாய்மானத்தாலும், பூமியின் வடக்கு, தெற்குக் கோடிகள் அதீத தட்பவெப்ப நிலைக்கு உள்ளாகி இருக்கின்றன. அப்படிப்பட்ட தட்பவெப்ப நிலைகளில் இயற்கையான உணவு கிடைக்காது. உணவுக்காகவும், உடைக்காகவும், மிருகங்களை வேட்டையாடிக் கொல்ல வேண்டிய அவசியம் அங்குள்ள மக்களுக்கு இருந்து. அந்தச் சூழ்நிலையில் உயிர் வாழ்வதும் அரிது. அதனால் அங்கு மக்கள் பெருக்கமும் குறைவு. மத்திய மற்றும் வடக்கு ஐரோப்பாவில் அப்படிப்பட்ட நிலமை இருந்தது. அங்கெல்லாம் அதீத தட்பவெப்ப காலங்களில் மக்கள் தொகை குறைந்தும், சுமுகத் தட்பவெப்ப நிலைக் காலங்களில் மக்கள் தொகைப் பெருக்கமும் ஏற்பட்டிருக்கிறது. இதைக் காட்டும் வண்ணம், சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வரை அங்கு கற்கால வாழக்கைச் சுவடுகள் இருந்த அடையாளங்கள் கிடைத்திருக்கின்றன.


ஆனால் இந்தியாவில் அப்படிப்பட்ட அதீத தட்பவெப்ப நிலை இருந்திருக்கவில்லை. உணவுக்காக உயிர்களைக் கொன்று தின்ன வேண்டிய நிலை இங்கு இல்லை. இங்குள்ள தட்ப வெப்ப நிலையில் தாவர வளார்ச்சி நன்கு அமைந்திருக்கிறது. உணவு, தகுந்த மழை, தண்ணீர், பொறுத்துக்கொள்ளக்கூடிய தட்பவெப்ப நிலை ஆகியவை இருந்தால், மனிதன் இடம் விட்டு இடம் பெயர அவசியம் ஏற்படாது. இடம் பெயராமல் ஒரே இடத்தில் அவன் இருக்கும் போது விவசாயமும், கால்நடை வளர்ப்பும் செய்ய ஆரம்பிப்பான். அவ்வாறு நெல் சாகுபடி செய்த அடையாளம், 10,000 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியா, தென் சீனாப் பகுதிகளில் ஆரம்பித்து விட்டது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.


அதாவது கற்கால வாழ்க்கை என்பது பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் முடிந்து விட்டது. தன்னைக் கவனித்து, தன் சுற்றுப் புறத்தைக் கவனித்து, பொருளாதாரத் தன்னிறைவு பெற்று, அதைத் தொடர்ந்து தியானம், தவம் என்று உள்முக வளர்ச்சியை இந்த இந்திய நாட்டிலிருந்த மக்கள் என்றோ அடைந்து விட்டார்கள். இதையே வேறுவிதமாகச் சொல்வதென்றால், பாரத மக்கள் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே உலகியல் தேவைகளைக் கடந்து விட்டார்கள். அதற்கப்பால் ஆன்மீகக் கருத்துக்களைத் தேடி அவர்கள் கண்ட கருத்துக்களே வேதாந்தம், ஹிந்து மதம் என்று உண்டாகியிருக்கிறது.

 

இவையெல்லாம் ஒரு சில ஆயிரம் ஆண்டுகளில் உருவாகாது. ஒரு பரிணாம வளர்ச்சியாக இவை முகிழப் பல ஆயிரம் ஆண்டுகள் ஆகும். அப்படிப்பட்ட நீண்ட காலக் கட்டம் பாரத மக்களுக்குக் கிடைத்தது.. உணவையும், அமைதியான வாழ்வையும் தேடி அவர்கள் இங்குமங்கும் அலைய வேண்டிய நிலை இல்லை. இதனால் பொருளாதாரத் தேடலைத்தாண்டி, ஆன்மத் தேடலைச் செய்ய அவர்களுக்குக் கால அவகாசம் கிடைத்தது.


தேடலின் ஒரு அங்கமாக முக்காலம் அறியும் திறன் கிடைத்தது. அதுவே ஜோதிடம் என்றும், அதை அறிந்தவன் அறிவன் என்றும் ஆனது. அறிவர்களை ஒரு தனிப் பிரிவாகத் தொல்காப்பியர் கூறுவதிலிருந்து, அந்த சாஸ்திரம் எந்த அளவுக்கு வேரூன்றி இருந்தது என்பதைப் புரிந்துக் கொள்ளலாம். (புறத்திணை இயல் -74)

சாஸ்திரமாகப் படிக்காமல், உள்முகமாகச் சிந்தனையால் அறிந்தவர்கள் தாபதர்கள் ஆனார்கள். உள்ளார்ந்த சக்தியால் முக்காலமும் சொல்லும் திறன் அவர்களுக்கு ஏற்பட்டது. இந்தப் பிரபஞ்சத்தையே மனக்கண்ணில் பார்க்கும் திறன் அவர்களுக்குக் கிடைத்தது. அவர்களையும் ஒரு தனிப் பிரிவாகத் தொல்காப்பியர் கூறியுள்ளதால், தவம் இயற்றுதலும், அந்த் தவத்தால் அதீத சக்திகளைப் பெற்றமையும், இந்த மண்ணில் எப்பொழுதோ ஏற்பட்டு விட்டது என்று தெரிகிறது.


காரணமில்லாமல் காரியம் கிடையாது. அதனால் ஒருவன் அனுபவிக்கும் இன்ப, துன்பங்களுக்கு முன் காரணமாகக் கர்ம வினை இருக்க வேண்டும் என்ற அறிவு, தாபதர்கள் செய்த தவத்தின் பயனாகப் பெற்றதாகும், ஒருவனுக்குப் பல பிறவிகள் அமைகின்றன என்பதையும், அவற்றை ஏற்படுத்தும் கர்ம வினையை முறிக்க வேண்டும் என்பதையும், அதற்கான வழிகளையும் கண்டு பிடித்து, மனித குலத்துக்கு எடுத்துரைத்ததும் தாபதர்கள் செய்த செயலாகும்.


சங்க காலத்தில் இவர்களெல்லாம் இருந்தனர் என்பது மட்டுமல்லாமல், இவர்கள் வழிகாட்டுதலில் மக்கள் வாழ்ந்தனர் என்பதையும் சங்கப் பாடல்கள் மூலமாக நாம் அறிகிறோம். சங்க கால நூலான பரிபாடலில், சிறுமியரும் அதிகாலைக் குளிரில், சில்லென்ற ஆற்று நீரில் குளித்து, தங்கள் தாய்க்கருகே நின்று பாவை நோன்பை நோற்று, தெய்வத்தைத் தொழுத நிலையைத், தவம் என்று சொல்லப்பட்டுள்ளது. முன் பிறவிகளில் செய்த தவத்தை, இந்தப் பிறவியிலும் செய்கிறாள் என்று அதைப் பிறவிதோறும் தொடரும் ஒரு செயலாகப் புலவர் கூறுகின்றார்.


தொடரும் பிறவிகளைப் பற்றிய அறிவு வருவதற்கு ஆன்மத்தேடல் இருக்க வேண்டும். அது முகிழ, தொடரும் மனித வர்க்கமும், பெற்ற அறிவைப் வாழையடி வாழையாக உள்வாங்கிக் கொண்டிருக்கும் சமுதாயமும் இருக்க வேண்டும். இவை சிதறாமல் கட்டுக்கோப்புடன் இருக்கச் சரியான சூழ்நிலை இருக்க வேண்டும். உதாரணமாகப் பிசிராந்தையார் பாடிய ஒரு பாடலைக் கூறலாம். (பு –நா 191)


தனக்கு ஏன் முடி நரைக்கவில்லை என்பதற்குப் பிசிராந்தையார் கூறுகிறார் – மாட்சிமை பொருந்திய குணநலன்களுடன் கூடிய மனைவியும், மக்களும் தனக்கு இருக்கிறார்கள். தான் நினைப்பதைத்தான் அவர்களும் நினைப்பார்கள். ஏவலாளிகளும் நினைப்பார்கள். நாட்டைக் காக்கும் அரசனோ, முறையல்லாதன செய்ய மாட்டான். அது மட்டுமல்ல,அவர் இருந்த ஊரில் நற்குணங்கள் அமையப்பெற்று, பணிவும், ஐம்புலனும் அடக்கிய தன்மையுடைய சான்றோரும் இருந்தனர் என்கிறார். அவர் வாழ்ந்த சூழ்நிலையில் இப்படிப்பட்டவர்கள் இருந்ததால், அவருக்குக் கவலை, கஷ்டம் ஏதும் இல்லை. அதனால் முதுமையும் நரையும் இல்லை.


இப்படிப்பட்ட சூழல் பாரதமெங்கும் இருந்தது. இந்தச் சூழ்நிலையில்தான் ஆன்மீகமும், தெய்வக் கருத்துக்களும் வளரும். இந்தச் சூழ்நிலை ஐரோப்பாவிலும், பாலைவன நாடுகளிலும், இருக்கவில்லை, அதனால் அங்கு உருவான ஆப்பிரஹாமிய மதங்களில் மனிதப் பிறவியின் தொடரும் தன்மையைப் பற்றிய கருத்தும், மறு பிறப்பைப்பற்றியும், ஆன்மாவால் பரத்துவம் அடையக்கூடிய நிலையைப் பற்றியும் சொல்லமுடியவில்லை. பாரத மக்கள் தேடினது போன்ற ஆன்மத் தேடல் அங்கு முகிழவில்லை. ஆங்காங்கே சிலர் அப்படித்தேடினாலும், அது வளரப் போதிய காலக்கட்டம் அவர்களுக்கு அமையவில்லை.


இப்படிப்பட்டச் சூழ்நிலை இல்லாத மத்திய ஐரோப்பாவிலும், மேற்கு ஐரோப்பாவிலும், இருந்த மக்கள் ஆரியர்கள் என்றால், அவர்கள் 3500 ஆண்டுகளுக்கு முன்பு பாரதத்துக்கு வந்து, சிந்து சமவெளியில் இருந்த மக்களைத் துரத்தி விட்டு தாம் வாழ ஆரம்பித்தனர் என்றால், அவர்களிடம் எப்படி இப்படிப்பட்டக் கருத்தாழம் மிக்க ஹிந்து மதக் கொள்கைகள்  இருக்க முடியும், அல்லது உருவாக முடியும்?


 

அதனாலும்தான் சொல்கிறோம், பாரதத்தைப் பொறுத்த மட்டில், கற்காலம் என்பது என்றோ முடிந்து, மனிதனின் ஆன்மப் பரிணாம வளர்ச்சி பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உருவாகியிருக்க வேண்டும். தவமும், தியானமும் இருந்தால்தான் இப்படிப்பட்ட ஆன்மக் கருத்துக்களை அறிய முடியும்.  அதற்கான உள்ளப் பயிற்சியும், உடல் பயிற்சியும் செய்து,  உள்ளொளி மூலம் அவற்றைக் கண்ட முனிவர்கள் அவற்றை மக்களுக்கு எடுத்துரைத்திருக்கிறார்கள்.


இந்த முனிவர்கள் பிராம்மணர்கள் மட்டுமே அல்லர். அவர்கள் பலப்பல பின்புலங்களிலிருந்து வந்தவர்கள். அறிவுப் பரிணாமம், ஆன்மப் பரிணாமம் கண்டு இவற்றை அளித்துள்ளார்கள். தொல்காப்பியத்தில் மக்கள் வகைகள் 4 வர்ணங்கள் என்று சொல்லாமல் 7 என்று சொன்னதை இங்கு நினைவு கூற வேண்டும். (61 ஆம் கட்டுரை).


அதில் தாபதரைப் பற்றிச் சொல்லும்போது,

"நால் இரு வழக்கின் தாபதப் பக்கமும்" என்று தொல்காப்பியர் சொல்வது 8 வழக்கங்கள உடைய தவமுனிவர்களையே.


இந்த 8 வழக்கங்களும்

நீராடல்,

நிலத்திடைக் கிடத்தல்,

தோலுடுத்தல்,

சடை புனைதல்,

எரியோம்பல்,

ஊரடையாமை,

காட்டிலுள்ள உணவு கோடல்,

தெய்வப் பூசையும் அதிதி பூசையும் செய்தல்

என்று புறப்பொருள் வெண்பாமாலை (வாகை -14) விளக்குகிறது. இந்த் தாபர்கள்தாம் முனிவர்கள், சித்தர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். இவர்கள்தாம் தெய்வக் கருத்துக்களையும், ஆன்மீக்க் கருத்துக்களையும் மக்களுக்குத் தந்தார்கள்.


தமிழ் நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுவதுமே இப்படிப்பட்ட முனிவர்கள் இருந்தார்கள். எல்லா புராணங்களும் தவ வாழ்க்கையை மேற்கொண்டவர்களால் சொல்லப்பட்டவையே. புராணங்களைத் தொகுத்தவரும், மஹாபாரதத்தைத் தந்தவருமான வியாசரும் தவ வாழ்க்கையை மேற்கொண்டவர்தான். ராமன் வாழ்ந்த சமகாலத்திலேயே வாழ்ந்து ராமாயணம் இயற்றிய வால்மீகியும் தவ வாழ்க்கையை ஏற்றவர்தான். இத்தகையவர்களது வழிகாட்டுதல்களின் மூலமாகத்தான் தெய்வங்களைப் பற்றிய அறிவும், அவற்றை வழிபடும் முறைகளும் ஏற்பட்டனடவே தவிர ஆராய்ச்சியாளர்கள் சொல்வது போல, கற்கால மனிதனது அறிவு வளர்ச்சியில் கருத்துக்களை உண்டாக்கி, உருட்டிப்போட்டு, உருவாக்கவில்லை.


பாரதம் முழுவதும் இருந்த மக்கள் ஆங்காங்கே தத்தமக்கென்று ஒரு ஆன்மீகப் பிடிப்பைக் கொண்டிருந்தார்கள். சமீபத்தில் துணி வெளுக்கும் வண்ணார் மக்களைப் பற்றிய ஒரு செப்புப் பட்டயம் சிதம்பரத்தில் கிடைத்தது. (கல்வெட்டு காலாண்டிதழ் – 82, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை)  அதன் மூலம் சில அரிய செய்திகள் கிடைத்துள்ளன, இன்று நாம் மொழிரீதியாக மக்கள் இனம் பிரிந்திருப்பதாகச் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆனால், இந்தச் செப்புப் பட்டயம் எழுதப்பட்ட 17 நூற்றாண்டு வரையில், மக்கள் மொழி ரீதியாகத் தங்களை ஒரே இனம் என்று காணவில்லை, பிரிக்கவும் இல்லை. வண்ணார்கள் பாரதம் முழுவதும் இருந்தனர். ஒவ்வொரு இடத்திலும் இருந்தவர்கள், அந்தந்த இடங்களில் புழங்கிய மொழியைப் பேசியிருக்கின்றனர். வேறு வேறு மொழிகளைப் பேசிய வண்ணார்கள் தாங்கள் ஒரே இனம் அல்லது சாதி என்று கருதினார்கள். அவர்கள் தொழில், அந்த்த் தொழில் கொடுத்த வாழ்க்கை முறை அவர்களை ஒரே சாதியாக இனம் கண்டு கொள்ளப் பயன்பட்ட்து.


இதனால் ஒரு வண்ணார் இன்னொரு வண்ணாரைப் பார்த்தால், அவர்களுக்குள் ஒரு ஒற்றுமை ஏற்பட்டுவிடுகிறது. வட இந்தியாவிலிருந்து வந்த வண்ணாருக்குத் தென் இந்திய வண்ணாரிடம் ஒரு பற்றும், ஓரினம் என்ற எண்ணமும் ஏற்பட்டிருக்கிறது. இது போலவே அந்தந்த தொழில் செய்தவர்களுக்கு, அதே தொழிலைச் செய்தவர்களிடம் ஒரே இனம் என்ற எண்ணம் ஏற்பட்டிருகிறது. 

 

இந்தச் செப்புப் பட்டயத்தின் மூலம், விஜய நகரப் பேரரசர், சிதம்பரத்துக்கு வருகை தந்த விவரம் தெரிகிறது, அப்பொழுது அவரது துணிகளைத் துவைக்கும் வண்ணாரும் கூடவே வந்துள்ளார். வந்த இடத்தில், மற்ற வண்ணார்களைச் சந்திக்கிறார். வண்ணார் மடம் இருந்த இடத்தைத் தேடிப் போய்ப் பார்க்கிறார். வண்ணார்களுக்கென்று மடம் இருந்திருக்கிறது,, மடத்தலைவர் இருந்திருக்கிறார். வண்ணார் திருமணங்களை மடத்தலைவர் செய்து வைத்திருக்கிறார். திருமணத்தின் போது, இரு வீட்டாரும் மடத்தின் செலவுக்காக ஒரு காசு கொடுக்க வேண்டும் என்ற முறை இருந்திருக்கிறது.


அரசரது வண்ணார், வந்தபோது, சிதம்பரத்தில் இருந்த அந்த மடம் சரிவர இயங்கவில்லை. அதில் இருந்த குறைபாடுகளை, அவர் மன்னனிடம் எடுத்துச் சொல்லி, மடம் நன்கு இயங்க ஆவன் செய்கிறார். இவையே அந்தச் செப்பேட்டில் குறிக்கப்பட்டுள்ளன.


அதில் வண்ணார் சமூகத்தினர் உண்டான வரலாறும், அவர்கள் முன்னோர்கள் தவம் இயற்றிய பாங்கும் சொல்லப்படுகிறது. அவ்வாறு இருந்த ஒருவர் காசிக்குச் சென்று ரிஷிகளிடத்தில் தீட்சை பெற்று வந்த விவரமும் சொல்லப்பட்டுள்ளது. வண்ணார் சாதி என்று தங்களைச் சொல்லிக் கொள்ளும் அவர்களுக்குப் பல இடங்களிலும் மடங்கள் இருந்திருக்கின்றன, எல்லா மடங்களுக்குமாக ஒரு தலைவர் இருந்திருக்கிறார். அவர் சிதம்பரம் வரும் போது தங்கும் வசதி, உணவு ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்தது பற்றியும் அதில் சொல்லப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரே தொழிலைச் செய்தவர்களுக்கிடையே பாரதமெங்கும் தொடர்பு இருந்திருக்கிறது. அவர்களுக்குள் தவ வாழ்க்கை மேற்கொண்ட தாபதர்கள் போன்றவர்கள் இருந்திருக்கிறார்கள்.


வண்ணார்கள் மத்தியில் இப்படி இருந்தது போல பிற தொழில் செய்தவர்களுக்குள்ளும், தவப் பெரியோர்கள், மடங்கள், சமய வழக்கங்கள் இருந்திருக்கின்றன. அந்தத் தவசிகள் வழிகாட்டியபடி அந்தந்த மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள். அதனால் பாரதம் முழுவதும் தவசிகள் பரவலாக இருந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது.

இப்படிப்பட்ட தவயோகிகளைத் தொல்காப்பியரும் ஒரு தனிப் பிரிவாகக் காட்டியுள்ளார். இப்படிப்பட்ட ஒருவரைத்தான் நாம் மொஹஞ்சதாரோ முத்திரையில் பார்க்கிறோம்.

 


மிருகங்கள் சூழ இருக்கும் இவர் பசுபதி அல்ல. ஆனால் பசுபதியையோ அல்லது தன் மனத்துக்கு உகந்த சிவ ரூபத்தையோ உபாசிக்கும் தவ முனிவராவார். அது எவ்வாறு என்று காண்போம்.

·         அவரைச் சுற்றியுள்ள மிருகங்கள், காட்டில் அவர் தவம் செய்யும் சூழ்நிலையைக் காட்டுகிறது. தாபதர்கள் கட்டிலுள்ள உணவை உண்பவர்கள் என்று புறப்பொருள் வெண்பாமாலையில் சொல்லப்பட்டுள்ளது இங்கு பொருந்துகிறது. வாரணவதத்தில் அப்படித்தான் தவம் செய்திருக்கிறார்கள். அப்பொழுது மிருகங்கள் அவர்களைத் துன்புறுத்தியதில்லை. ஆனால் ஒரு யானை அவர்களைத் துன்புறுத்தியபோது, அவர்களைக் காக்க சிவனே வந்து அந்த யானையை சம்ஹரித்துள்ளார்.

பொதுவாக சாத்வீகமாக இந்தத் தவசிகள் தியானத்தில் இருக்கும் போது மிருகங்கள் துன்பம் செய்யாது. துன்பம் செய்ததால் அந்த யானையை அசுரன் என்று சொல்லியிருக்கிறார்கள்.

·         தாபதர்கள் தோலுடுத்துவார்கள் என்று மேலே கூறியதை ஒத்து, இந்தப் படத்தில் இருப்பவர் அணிந்துள்ள உடை தோலுடை போல உள்ளது. கீழ்க்காணும் முத்திரையின் கைப்பகுதியில் காணப்படும் தோற்றம், தோலுடை போல ஒரு உடை அணிந்த பாங்கினைக் காட்டுகிறது.


·         இவர் அமர்ந்திருக்கும் தோற்றம் ஒரு யோகாசனமாகும், இதை 'சித்தாசனம்" என்பார்கள். உறங்கிக் கிடக்கும் குண்டலினி சக்தியை எழுப்ப விரும்புபவர்கள், இந்த முறையில்தான் சம்மணமிட்டு தியானத்தில் அமர்வார்கள். இதை கீழ்க்காணும் படத்தில் தெளிவாகக் காணலாம்.

 


இந்த ஆசனத்தில் மூலாதாரத்தில் இரண்டு பாத முட்டியும் ஒன்றன் மேல் ஒன்று அமையும். யோக ஆசனமாக இது அமைந்துள்ளதால், மூலாதாரத்தில் உந்துதல் கொடுக்கப்பட்டு, குண்டலினி எழும். இரண்டு கால்களையும் நன்கு மடக்கி, கைகளை அவற்றின் மீது வைக்கப்பட்டுள்ள இந்த ஆசனமே மொஹஞ்சதாரோ சின்னத்திலும் காணப்படுகிறது. இந்த ஆசன அமைப்பில் குண்டலினி சக்தியை மேலேழுப்புவர்.



·         இந்த உருவத்தை உண்டாக்கிய சிற்பி, மூலாதாரத்தைக் குறிப்பிட்டுக் காட்டியுள்ளார் என்பதை இந்தப் படத்தில் சிவப்பு அம்புக் குறி மூலமாகக் காட்டப்பட்டுள்ளது.

·         இந்த ஆசன அமைப்பில் ஸ்வர சாதனம் செய்வார்கள். ஸ்வரம் என்றால் மூச்சு. சிவ ஸ்வரோதயம் என்னும் ஒரு நூலில் இதன் விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இடகலை, பிங்கலை என்னும் இரு பக்க மூச்சுக்களை ஒழுங்கு படுத்துவதன் மூலம், பாம்பு போல சுருண்டு கிடக்கும் குண்டலினி சக்தி, ஒவ்வொரு சக்கரத்தையும் தூண்டிவிட்டி எழும். அதன் பயனாக முக்காலமும் தெரியும். ப்ரஸ்ன ஜோதிட வகைகளில் ஸ்வர ப்ரஸ்னம் என்று ஒரு வகை இருக்கிறது. இந்த ஸ்வர சாதனம் செய்பவர்களுக்கே அது சித்திக்கும். ப்ரஸ்னம் கேட்கும் போது, தவசிக்கு இருக்கும் மூச்சு இடகலையா, பிங்கலையா என்பதைப் பொறுத்து பதில் சொல்வார்கள். அது சரியாக இருக்கும்.

·         இந்த ஆசனத்தில் ஒருவர் குண்டலினியை எழுப்பும்போது, கீழ்க்காணும் படத்தில் இருப்பது போல குண்டலினி எழும்பி, தலைக்கு மேலே செல்லும்.


 

இதை இப்படியும் காட்டலாம்.

 

 


மூக்கின் இரண்டு துவாரங்களின் வழியாகச் செல்லும் மூச்சை வழிப்படுத்துவதில், கீழிருந்து எழும் குண்டலினியும், சீற்றமாக மூச்சு விடும் பாம்பு போல் பிற நாடிச் சக்கரங்களைச் சுற்றிக் கொண்டு மேலே கிளம்பும். இது இரண்டு பாம்புகள் பின்னிப் பிணைந்து மேலே எழும்புவது போல உருவகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் இடது பக்கம் அந்த உருவகத்தைக் காணலாம்.


குண்டலினி மேலெழும்புவதைக் குறிக்கும் இந்தப் பாம்புப் பிணைப்புகள்,



உச்சியில் இருக்கும் சக்கரத்தை அடைந்தவுடன், பறக்கும் பருந்து அல்லது கருடன் போல குண்டலினி வெளிப்படுகிறது.

இந்த அமைப்பை மொஹஞ்சதாரோ சின்னத்தில், தலையில் வெளிக்கிளம்பும் கொம்புகளாக்க் காட்டியுள்ளார்கள்.



இந்தப் படத்தில் தலையில் இரண்டு கொம்புகள் போல இருப்பது உண்மையில் ஓங்கார ரூபமாகும். ஓங்காரத்தை மூலாதாரம் என்று சொல்வார்கள்.

 

ஓம் என்பது இப்படி இருக்கும்.



 

மூலாதார யந்திரத்தில் ஓங்காரம் இப்படி காட்டப்படுகிறது.




ஓம் என்னும் எழுத்தை இந்த மூலாதார யந்திரத்தில், பிள்ளையாரின் தலையின் மீது காணலாம். இதையே திருப்பிப் போட்டதைப் போல மொஹஞ்சதாரோ சின்னத்தில் இருக்கிறது. 12 நாடிகள் கூடும் லலன சக்கரத்தில் ஓம் என்னும் பீஜ மந்திரம் அமையும். இது சஹஸ்ர சக்கரத்துக்குச் சற்று கீழே இருக்கிறது. சஹஸ்ர சக்கரம் என்பது உச்சி மண்டையில் இருப்பது. குழந்தைகளுக்கு சிறு வயதில் அந்த இடம் மென்மையாக இருக்கும். அதற்குச் சற்று கீழே ஓங்கார ரூபத்தில் லலன சக்கரம் அமையும் என்பதால், இந்த முத்திரையில் காணப்படும் யோகி, லலன சக்கரத்தை அடைந்த நிலை காட்டப்பட்டுள்ளது.



 

இந்த நிலையில் சகல ஞானமும் சித்திக்கும்.


இதற்கும் மேலே உள்ள சஹஸ்ர சக்கரம் என்னும் நிலையை அடைந்தால், அந்தத் தவசி சிவனை அறிந்தவராவார், அல்லது சிவனை அடைந்தவராவார்.

இதை சஹஸ்ர பத்மம் என்று ஆயிரம் இதழ் கொண்ட தாமரையாக உருவகிப்பதும் உண்டு, இந்தப் படத்தில் இருப்பது போல.



மலக்குழிக்கருகே மூலாதாரதச் சக்கரத்தில் ஆரம்பித்து, மேலே கிளம்பும் குண்டலினி சக்தி இவ்வாறு கபாலத்துக்கு மேலே ஒளிரும்.


இதை மொஹஞ்சதாரோ சின்னத்திலும் காட்டியுள்ளார்கள்.


மேலெழும்பும் அமைப்பை அஸ்வத மரம் என்றும் கூறுவார்கள். இதைப் போதி மரம் என்பார்கள். ஞானத்தைத் தருவது என்று பொருள். புத்தர் இந்த மரத்தின் அடியில் இருந்துதான் ஞானம் பெற்றார். தமிழில் அரச மரம் என்கிறோம்,


மேலே காணும் படத்தில் தலைக்கு வெளியே தெரியும் இலைகள் அஸ்வத மரம் அல்லது போதி மரம் அல்லது அரச மரம் என்னும் மரத்தின் இலைகள் ஆகும்.




இந்த அமைப்பில், மேலே தெரியும் பகுதியைத் தனியாக மொஹஞ்சதாரோவின் சிற்பிகள் வடிவமைத்துள்ளார்கள்.

 

 

 

 

இந்த நிலையை, பிரபஞ்சத்தின் உருவகமாக ப்ரிஹதாரண்யக உபநிஷத்தில் யஞ்ஞ வாக்கியர் கூறியுள்ளார். இந்த் அச்வத மரத்துக்கு வேர்கள் மேலே, கிளைகள் பூமிக்குள்ளே என்பார். அவ்வாறே ஆன்மாவின் எழுச்சியின் சாதனமான குண்டலினி சக்தி, கீழே முடங்கிக் கிடக்கிறது. அதை மேலே எழுப்பினால் அது பரத்தத்துவத்தை அடைகிறது, அதைக் காட்ட, தலையிலிருந்து எழும்பும் மரமாக உருவகம் செய்துள்ளார்கள்.

 

பார்ப்பதற்கு ஒன்று போல இருந்தாலும், மொஹஞ்சதாரோவில் கிடைத்துள்ள தவ யோகச் சின்னங்களில் சில வேறுபாடுகள் உள்ளன. கீழே காணும் உருவங்கள் தலையை ஒட்டி அமையும் ஓங்காரம் என்னும் லலன சக்கரத்தைக் காட்டுகின்றன.  




இந்த நிலையில் முக்காலமும் தெரியும் என்பதை உணர்த்த மூன்று முகங்களைக் காட்டினார்கள் போலும்.


இந்த நிலையையும் கடந்த பிறகு, அந்தத் தவசி பிரபஞ்சத்துடன் ஒன்றிய நிலையை அடைகிறார். சஹஸ்ர சக்கரம் எனப்படும் அந்த நிலையில், தலையில் அஸ்வத இலைகளும், கொம்புகளும் தென்படுகின்றன.


 


இதில் மூன்று முகங்களைத் தெளிவாக்க் காட்டவில்லை. ஏனெனில் முக்காலமும் உணரும் நிலையையும் இங்கு தாண்டியாகி விட்டது. அஸ்வதம் வேர் கொண்டதை அறியும் நிலை இது. தலையில் உள்ள அமைப்பைத் தெளிவாக ஆனால் தனிச் சின்னமாகக் காட்டியுள்ளார்கள்.


 


ஒற்றைக் கொம்பு வராஹத் தலைகளும், அஸ்வதமும் காட்டப்பட்டுள்ளது.


மொஹஞதாரோ காலத்துக்கு முன்பே இந்தக் கருத்துக்கள் உண்டானவை என்பதை இவை நிரூபிக்கின்றன. அந்தக் கருத்துக்களுக்கு உருவம் கொடுக்கும் முயற்சிகளை நாம் மொஹஞ்சதாரோ சின்னங்களில் காண்கிறோம்.

 

இந்த நிலையை புத்தரும் அடைந்தார். அஸ்வகோசர் அவர்கள் எழுதிய 'புத்த சரிதத்தில்" பாண்டவ மலை மீது அமர்ந்து தியானம் செய்யும் போதிசத்திவரை, பிந்துசாரன் என்னும் அரசனது ஒற்றன் கவனிக்கிறான். அப்பொழுது புத்தர் யோகசக்தியை அடையும் தறுவாயில் இருந்தார். அப்பொழுது அவரைப் பார்ப்பதற்கு அந்த மலையின் கொம்புபோல இருந்தார் என்று வருணிக்கிறான்.

தர்மம் என்பதின் உருவகமான

ஸ்ருங்கியை ஓங்கார வடிவிலும்,

முக்தி பெற்றபின் பறக்கும் நிலையிலும், (கருடன்)

அஸ்வதத் தத்துவத்தைப் புரிந்து கொண்டு விட்ட நிலையிலும்

மொஹஞ்சதாரோ சிற்பிகள் மிகுந்த யோசனையுடன் செய்திருக்கிறார்கள்

என்றே சொல்லத் தோன்றுகிறது.

 

புத்தர் காலம் மொஹஞ்சதாரொவுக்கு மிகவும் பிற்பட்டது. அவர் ஹிந்து மதத் தவ மரபில்தான் தியானம் செய்தார். அந்தத் தியான முறை மொஹஞ்சதாரோ காலத்திலும் மாறாது இருந்தது. மாற முடியாத இயற்கை விதிகளைப் போல, தியான முறையும் மாறாது. குண்டலினியை அது எழுப்பும் முறையும் மாறாது.

தாபதர்கள் கண்டு பிடித்த இந்த முறையில்

பிரபஞ்சத் த்த்துவமாக சிவத்தைக் கண்டார்கள்.

அஸ்வதமாக்க் கண்டார்கள், சஹஸ்ர தாமரையாக்க் கண்டார்கள்.

அதுவே ஆதி சிவம்,

அதுவே PROTO SIVA.

 

அப்படிக் காணும் நிலைக்குச் சற்று முன் அந்த ஞான வழிக்குச் சாட்சியாக்க் பூமியைக் கூப்பிடுவார்கள். அப்பொழுது வலது கையால் பூமியைக் காட்டி, இட்து கையை மேல் நோக்கி மடியில் வைத்துக் கொள்வார்கள். அந்த முத்திரைக்குப் "பூமி ஸ்பர்ச முத்திரை" என்று பெயர்.

புத்தர் அவ்வாறு செய்தார்.



கைகள் அமைந்த இந்தக் கோலத்துக்குப் பூமி ஸ்பர்ச முத்திரை என்று பெயர்.

புத்தரின் தலையில் கொம்பு வளர்ந்த அமைப்பில் சித்திரித்திருப்பதையும் காணலாம்.

 

இதே முத்திரையைக் காட்டும் ஒரு உருவத்தை

மொஹஞ்சதாரோவில் கண்டு பிடித்துள்ளார்கள்.



இந்த உருவத்தின் தலை காணப்படவில்லை. பெரும்பாலும் தலையில் கொம்புகள் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் கைகளைப் பாருங்கள். வலது கை, பூமி ஸ்பர்ச முத்திரையைக் காட்டுகிறது.


புத்தர் சிலையில் இதே முத்திரை.

 


 

மொஹஞ்சதாரோவில் வேத மரபில் சொல்லப்பட்ட தியான முறைகள் இருந்திருக்கின்றன. குண்டலினியை எழுப்பும் ஞானிகளும் இருந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது.


அங்கு காணப்படும் யோகாப்பியாச உருவங்களும், இந்தக் கருத்துகளுக்கு வலு சேர்க்கின்றன.

உதாரணமாக இப்படிக் கிடைத்துள்ள உருவம் யோகாப்பியாச அமைப்பே.




இவையும் அவ்வாறே  யோகாப்பியாச தோற்றத்தில் உள்ளன.


 


யோகம் என்றாலே உடலும், உள்ளமும் சேர்ந்து இயங்குவது. அப்ப்டிப்பட்ட யோக அமைப்பில்தான் சித்தாசனத்தில் அமர்ந்து குண்டலினியை எழுப்புவார்கள்.

அப்படி அமைந்த தோற்றத்தினைத் தவ யோகிகளிடத்தே காணலாம்.

அந்தக் கோலத்தில் அவர்கள் சிவத்தை உணருவார்களே தவிர,

அந்தக் கோலமே ஆதி சிவம் என்று சொல்வது தவறு.


அப்படிப்பட்ட அமைப்பினைத் திராவிடம் என்று செம்மொழி சின்னத்தில் அமைத்தது, அறியாமையின் உச்சிக்கட்டம்,

 


அறிவுக்கும், ஞானத்துக்கும் உறுதுணையாகும் இந்தக் கோலம்,

அறியாமையின் வெளிப்பாடாக அமைந்தது,

காலத்தின் கோலமா?

அல்லது கால்டுவெல் தந்த பரிசா?

 

 

 

6 கருத்துகள்:

  1. Mam,
    Does the posting on this subject Thamizhan Dravidana - end here? I remember you mentioning about a stunning revelation of who's who in a climax.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Dear Mr Venky,

      The Series continues with 30 more articles. In the meantime I am stuck with other works, that is why the delay. But I posted my English articles here since I thought they have relevance to the theme of the series. I am happy to tell you and others that I have just started a research work for my PhD in Jyothisha on Vastu in Indus cities. That also drags my time from writing here.

      I have no helpers in this series to type the articles. I have to do all the typing and modification myself. That is also one reason. Please bear with me. I will continue the series after posting 3 to 4 articles on Brahmin hatred topic. Please read them also because those articles contain basic social structure, caste conflicts and also how the conflicts arose in Tamilnadu. Most of those information will be incorporated in this Tamil series on Thamizan dravidanaa in later parts.

      நீக்கு
  2. Dear Madam,

    i hv just started to read extensively Thamizhan dravidana after your article in Non random thoughts on Tamil as Manushya bhasha. Its treasure trove to miss by anyone knowing tamil.

    i was wondering how you manage your time for such extensive research works, pain you have taken to share and also have got the answers on your struggles. I pray that you get all strength to fulfill your endeavours which are selfless & unique.

    Regards
    Sheela

    பதிலளிநீக்கு
  3. Happy to see you here Ms Sheela.
    Yes, it is stressful to handle nearly 4 things at hand. But the love of the subject and the passion I have for it keep me going. Particularly in historical research like this, I feel I am being guided by God. It is by God's grace I bagged my Phd seat inspite of tough competition. I never aped to do Phd, after too many years of student life. He only is directing me to do things,

    Right from my childhood, say from my 8th year onwards, I have been obsessed with stars, skies, creation, past, Tamil and Epics. What I gathered and learnt over the years make me link up many stands. In doing that, I am listening to my Inner voice (God) in landing up at clues and proofs for my articles. One example I would say is how I linked birth of Ganges to Ram Setu. Another was posted only yesterday in my English blog - on Madhuram as ancient spoken language.

    பதிலளிநீக்கு
  4. Sir Iam 68 years old. Now only Iam fortunate enough to come across an Extensive research article by Your Great effort.
    Let Bhagawan showers strength to you
    Regards S N Krishnan

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் அம்மா.தங்களின் தமிழர் திராவிடரா? என்ற பதிவு அருமை. பிரமிப்பாக இருக்கிறது.101 பதிவு.இதுவரை யாரும் சொல்லாத கோணம்.ஆனால் எனக்கு சில குழப்பங்கள்.உங்களுக்கு நேரமிருந்தால் விளக்கம் தரவும்(விளக்கம் புரிந்துகொள்ளும்படி சிறியதாக இருந்தாலே போதும் அம்மா)
    1. ஆரிய-தஸ்யு சண்டையில் விரட்டப்பட்டவர்களே பாரசீக அரேபிய ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றதாக கூறுகிறீர்கள் புரிகிறது.ஆனால் புரூரவன் உத்திரகுருவில் இருந்ததாக கூறுகிறீர்கள் மற்றும் அப்சரஸ் தேவர்கள் உத்திரகுரு மற்றும் தேவலோகத்தில்(சைபீரியாவாக இருக்கலாம் என்று கூறியுள்ளிர்கள்)இருந்ததாக கூறுகிறீர்கள்.இவை ஆர்ய-தஸ்யு சண்டைக்கு முன்பாக உள்ள காலம்(புரூரவன் காலம்)என்றும் கூறுகிறீர்கள்.அப்படியானால் உத்திர குரு மற்றும் தேவலோகத்தில்(பைக்கால் ஏரி&அதற்கு மேல் உள்ள வடபாகம்)வாழ்ந்தவர்களின் முன்னோர் யார்?அவர்கள் பாரதத்திலிருந்துதான் சென்றனரா?
    2.பாரதம்,சாகத்தீவு(கடல்கோள் கொண்ட இடம்&எஞ்சியுள்ள மலேசிய இந்தோனேசியா தீவுகள்),கிருத்தவர்சம்(நேபாளம்),உத்திர மற்றும் ரிஷிவர்சமக்கள் ஆகியோர் ஒரே மூதாதையர்களின் மூலத்தைகொண்டவர்களா?
    3.மங்கோலியர்களும் பாரதத்தில் இருந்து சென்றார்களா?
    இப்படிக்கு உங்கள் அன்பு மகன் ஸ்ரீ..
    ( தமிழில் பதிலளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் அம்மா.எனக்கு ஆங்கிலம் ஓரளவுதான் தெரியும் அம்மா)

    பதிலளிநீக்கு