புதன், 8 பிப்ரவரி, 2012

100.மொஹஞ்சதாரோவில் பசுபதி?

 

லிங்க வழிபாடு இருந்திருக்கிற சிந்து சமவெளிப் பகுதியில் காணப்படும் தவக்கோல முத்திரையைக் கொண்டு அது PROTO- SIVA என்ற கருத்தைப் பரப்புவது, ஏற்கத்தக்கது அல்ல. அதற்கான காரணங்களை அறிந்து கொள்ள, அந்த உருவம் உண்மையிலேயே பசுபதியா என்று ஆராய்வோம்.



ந்த  உருவத்தில் மூன்று முகங்கள் தென்படுகின்றன என்றால், அதன் பின்புறமும் ஒரு முகம் இருக்க வேண்டும். இப்படிப்பட்ட முக அமைப்பு, பிரம்மனுக்குத்தான் உண்டு. சிவனுக்கு அல்ல. நான்கு முகங்கள் இருந்ததால்தான் பிரம்மனுக்கு நான்முகப் பிரம்மா என்ற பெயர் ஏற்பட்டது. ஆனால் சிலை அல்லது ஓவியத்தில் காட்டும் போது மூன்று முகங்களே தெரியும்கீழ்க்கண்ட ஓவியத்தில் உள்ளது போல.



            

இதுவே சிலையாக இவ்வாறு வடிக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலையின் காலம் தெரியவில்லை.


 


இந்தப் படத்தில் மூன்று முகங்களுடனும், நான்கு கரங்களுடன் இருந்தாலும் மொஹஞ்சதாரோ சின்னத்தில் இருப்பது போல, இரண்டு கரங்கள் முட்டி வரை நீண்டுள்ளன.

 

 

 

நான்முகப் பிரம்மா தவக்கோலத்தில், தியானத்தில்தான் இருப்பார். அவர்தான் படைப்புத் தொழிலைச் செய்பவர். அதனால் அவருடமிருந்துதான் எல்லா ஜீவராசிகளும் உண்டாகின்றன என்பது வேத மரபில் எழுந்த கருத்து. இந்த முத்திரையில் சுற்றிலும் மிருகங்கள் காணப்படுகின்றன. படைத்தல் தொழிலைச் செய்யும் நான்முகப் பிரம்மனுடன் இந்த மிருகங்கள் ஒத்துப் போகின்றன. நாராயணனது நாபியில் எழுந்த தாமரைப் பூவின் மீது நான்முகப் பிரம்மன் அமர்ந்திருப்பார். அதற்குப் பதிலாக ஒரு பீடத்தின் மீது அமர்ந்துருப்பது போல மொஹஞ்சதாரோ உருவம் இருக்கிறது.


மற்றுமொரு முத்திரையில் உள்ள அந்த உருவத்தைப் பார்ப்போம்.



இதில் தெளிவாகவே மூன்று முகங்கள் தெரிகின்றன. தவக் கோலமும், சுற்றிலும், ஜீவராசிகளும் நான்முகப் ப்ரம்மாவை நினைவு படுத்துகிறது என்று சொல்லாமே தவிர சிவனை ஒத்திருக்கிறது என்று எப்படிச் சொல்ல முடியும்? மேலும் இந்த முத்திரைகள் மொஹஞ்சதாரோவில் கிடைத்துள்ளன. மொஹஞ்சதாரோவுக்குக் கிழக்கில் சரஸ்வதி நதி ஓடியது. நான்முகப் பிரம்மாவின் மனைவி சரஸ்வதி ஆவாள். எனவே சரஸ்வதி நதியை ஒட்டி அமைக்கப்பட்ட மொஹஞ்சதாரோவில் பிரம்மாவின் சின்னம் உருவாக்கப்பட்டது என்பது பொருத்தமானதுதான்.


இனி சிவன் என்னும் கோணத்தில் ஆராய்வோம்.


சிவனுக்குப் பசுபதி என்னும் பெயர் உண்டு, பசுக்கள் என்றால் ஜீவராசிகள் என்று அர்த்தம், அவற்றில் உறைபவர் சிவன் என்பதால் பசுபதி என்று அழைக்கப்படுகிறார். அவரைச் சுற்றி மிருகங்கள் வடிக்கப்பட்டுள்ளதால் மொஹஞ்சதாரோவில் காணப்படும் முத்திரையில் உள்ள அந்த உருவம் பசுபதி என்று என்றால், அதே தோற்றத்தில் அங்கு கிடைத்துள்ள கீழ்க்காணும் உருவத்தை என்னவென்று சொல்வார்கள்?

            

இதைத்தான் செம்மொழிச் சின்னத்தில் பொறித்துள்ளார்கள். இந்த முத்திரையில் எந்த ஜீவராசியும் காட்டப்படவில்லை. இந்த உருவத்தைப் பசுபதி என்றே ஏற்றுக் கொள்வதாக இருந்தாலும், இதுவே சிவன் என்னும் கருத்தாக்கத்துக்குக் காரணமான ஆதி ரூபம் என்னும் PROTO SIVA  என்று சொல்ல முடியாது.


பசுபதி என்னும் கருத்தும், லகுலீசரிலிருந்து ஆரம்பிக்கவில்லை. லகுலீசர் மீண்டும் பாசுபதத்தை நிறுவுவார் என்று புராணங்கள் சொல்லியுள்ளதால், பாசுபதம் என்பது முற்காலத்திலேயே இருந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. அதைத் தேடினால் மஹாபாரதத்தில் பல விவரங்கள் கிடைக்கின்றன.


பசுபதி விழா என்னும் ஒரு விழாவைப் பற்றி மஹாபாரதம் கூறுகிறது. இது வாரணவதம் என்னும் இடத்தில் கொண்டாடப்பட்டது. அந்த இடத்தில் அமைக்கப்பட்ட அரக்கு மாளிகையில் பாண்டவர்கள் தங்கினார்கள். பாண்டவர்களை ஒழிக்க விரும்பிய துரியோதனன், புரோசனன் என்னும் கட்டடக் கலை நிபுணனைக் கொண்டு, எளிதில் தீப்பற்றிக் கொள்ளக்கூடிய பொருட்களால் அந்த மாளிகையை அமைத்தான். அங்கு பாண்டவர்களைத் தங்கச் செய்யவேண்டி, இந்தப் பசுபதித் திருவிழாவைப் பற்றி, பாண்டவர்கள் காதுபட பெருமையாகப் பேசும்படி செய்தான். பசுபதி விழாவைக் காண விரும்பிய பாண்டவர்கள் வாரணவதம் சென்று அரக்கு மாளிகையில் தங்கினார்கள் என்றால், அங்கு எழுந்தருளியிருந்த பசுபதி என்னும் இறைவனுக்கு இருந்த முக்கியத்துவம் தெரிகிறது.


இந்த வாரணவதப் பசுபதி, ராமாயண காலத்திலும் இருந்திருக்கிறார். ராமாயணம் எழுதிய வால்மீகி முனிவர், வாரணவதத்தில் தவம் செய்தார் என்று ஸ்கந்த புராணம் கூறுகிறது. அப்பொழுது பிசாசு பிடித்த ஒருவனை அவர் கண்டதாகவும், பசுபதியின் அருளால் அவனைப் பிடித்த பிசாசு நீங்கி அவன் நற்கதி பெற்றான் என்றும் அந்தப் புராணம் கூறுகிறது. இதனால் 'பிசாசு மோசன" இடம் என்றும் அந்த இடம் பெயர் பெற்றது.


இதை விவரிக்கையில், பசுபதி என்பதற்கு வேறு ஒரு பொருள் தரப்படுகிறது. பசுபதியில் உள்ள பசு என்பது பாசக் கயிறைக் குறிக்கிறது. கால பாசத்தால் ஒருவன் பிணிக்கப்பட்டால், அவன் பசுபதியை வழிபட்டு, அதிலிருந்து விடுபடுவான் என்பதே பாசுபத வழிபாட்டின் அடிப்படை எனப்படுகிறது. ஒருவன் அகால மரணம், அல்லது துர் மரணம் அடைந்தால், இறந்த பின் செல்லவேண்டிய உலகங்களுக்குச் செல்ல முடியாமல் தவிப்பான். அதைப் பிரேத தோஷம் என்பார்கள். அந்த நிலையில் பேய், பிசாசு என்று அந்த ஜீவன் அலைகிறது. அதைப் பிணைத்து, காப்பாற்றி, உரிய உலகங்களுக்கு அனுப்புவதால் அந்த இறைவன் பசுபதி எனப்படுகிறான் என்பதே வாரணவர்த்த பிசாசுமோசனப் பெருமானான பசுபதியின் மகிமையாக இருந்தது. 

 

மொஹஞ்சதாரோ ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் பசுபதிக்கும், புராணங்கள் காட்டும் பசுபதிக்கும் எத்தனை வேறுபாடுகள் பாருங்கள்!


முத்தொழில் கொண்ட மும்மூர்த்திகளில் சிவனுக்கு அழித்தல் தொழில் உரியது. இறப்புக்குப் பிறகு நல்லுலகங்களை அடைய சிவனது அருள் வேண்டும். முன்பே 47 ஆம் கட்டுரையில் சகரர்களது துர் மரணத்தினால்,  அவர்களால் மேலுலகம் செல்ல முடியவில்லை என்றும், அதன் காரணமாகப் பாகீரதன் கங்கையைக் கொண்டு வந்தான் என்றும் கண்டோம். அதற்கான வழிபாட்டைப் பசுபதியான சிவனை நோக்கியே செய்ய வேண்டும். அதற்காக ஜோதி லிங்கத்தை ராமேஸ்வரத்தில் ஸ்தாபித்து பாகீரதன் வழிபட்டிருக்கிறான். பிரேத தோஷத்திலிருந்து விடுபட இன்றும் ராமேஸ்வரத்தில் உள்ள சிவபெருமானை மக்கள் வழிபடுகிறார்கள்.



சோமநாத்தில் ஸ்தாபிக்கப்பட்ட முதல் ஜோதி லிங்கமும், முதல் கடல் வெள்ளத்தில் மனு முதலனோர் தப்பித்தாலும், அப்பொழுது இறந்தவர்களது உய்வுக்காக ஏற்படுத்தப்பட்டது. அந்த க்ஷேத்திரத்தைப் பிரபாசம் என்றார்கள் என்று அழைத்தார்கள் என்று 80 ஆவது கட்டுரையில் பார்த்தோம், அதுவும் பிரேத தோஷ பரிகார ஸ்தலமாக விளங்கியது.



 

ராமேஸ்வரத்துக்குச் சென்று வழிபட்டாலும், காசி எனப்படும் வாரணாசிக்கும் சென்று சிவனை வழிபட வேண்டும் என்ற வழக்கம் இருந்து வருகிறது. அந்த க்ஷேத்திரம் ஒரு முக்தி ஸ்தலமாகவும் கருதப்படுகிறது. இந்த வாரணாசியே, பசுபதி விழா நடந்த வாரணவதமாக இருக்க வேண்டும். வாரண வதம் என்றால் யானையை வதம் செய்தல் என்று பொருள். சிவனைப் பற்றிய கதைகளில் கஜாசுரன் என்னும் யானையை வதம் செய்த கதை இருக்கிறது. சிவனடியார்களது தவத்தை கஜாசுரன் என்னும் யானை கலைத்து வந்தது. அதனால் அந்த யானையைக் கொன்று 'கஜாசுர சம்ஹார மூர்த்தி" என்னும் பெயரை சிவன் பெற்றார்.


பசுபதி விழா நடந்த வாரணவதம் என்னும் இடத்தில் அந்த யானையை சம்ஹாரம் செய்திருக்க வேண்டும். அங்கு பசுபதிக்குக் கோவில் இருக்கவே, சிவனடியார்கள் அங்குத் தவம் மேற்கொண்டிருக்க வேண்டும். வால்மீகி அவர்களும் அங்கு தவம் செய்தார் என்பது இதனுடன் பொருந்துகிறது. பாண்டவர்கள் தங்கிய அரக்கு மாளிகைக்கும் 'சிவம்" என்ற பெயரே இடப்பட்டது என்பதால் சிவனுக்கும் அந்த இடத்துக்கும் உள்ள நெருங்கிய தொடர்பு புலனாகிறது.


வாரணவதம் என்னுமிடத்தை மஹாபாரதம் விவரிக்கிறது. தன் மூலம்,
அது இருந்த இடம் இன்றைய உத்தரப் பிரதேசம் என்று தெரிகிறது. அங்கிருந்த அரக்கு மாளிகையிலிருந்து தப்ப, பாண்டவர்கள் ஒரு சுரங்கப்பாதை வெட்டினார்கள். அதன் வழியாக அவர்கள் தப்பிச் சென்ற விவரங்களின் அடிப்படையில், வாரணவதம் என்னும் நகரம் கங்கைக்கு வட கரையில் இருந்தது என்று தெரிகிறது. வாரணாசியும் கங்கையின் வடகரையில் உள்ளதால், வாரணவதம் என்றழைக்கப்பட்ட தலமே வாரணாசி என்று நாளடைவில் அழைக்கப்பட்டிருக்கிறது என்று தெரிகிறது.

தங்களை ஆபத்தில் சிக்க வைத்த இடமாக இருந்தாலும், போரைத்தவிர்க்க தங்களுக்கு ஐந்தே ஐந்து ஊர்களைத் தருமாறு பாண்டவர்கள் கேட்ட இடங்களுள் வாரணாவதமும் ஒன்று. பசுபதி விழாவுக்குப் பெயர் போன ஊரில் அவர்களை எது ஈர்த்தது? சிவனது முக்கியத் தலம் என்பதே அவர்களை அந்த ஊரின்பால் இழுத்திருக்கிறது.


மொஹஞ்சதாரோவில் காணப்படும் முத்திரையைப் பசுபதி என்பவர்கள், பசுபதியின் பெயர் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே பாரதத்தில் இருந்திருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். பாசுபத ப்ரம்ம உபநிஷத்து என்றும் ஒரு உபநிஷத்து இருக்கிறது. அதில் பசுபதியே சாட்சியாக இருந்து எல்லா ஜீவ ராசிகளிலும் வசிக்கிறான் என்று சொல்லப்படுகிறது. இதனால் இதற்கு உருவம் கற்பிக்கப்படவில்லை.


ஆனால் 'ருத்ர ஹ்ருதய உபநிஷத்து' என்னும் உபநிஷத்தில் சிவனுக்கு ஒரு உருவம் கற்பிக்கப்படுகிறது. இந்த உபநிஷத்தை வியாசர் தனது மகனான சுகருக்குக் கற்பிக்கிறார். இதில் ஆணும், பெண்ணுமான அர்த்தநாரீஸ்வர ரூபத்தில் சிவனை வர்ணிக்கிறார்.



சிவனது உருவங்களில், அர்த்தநாரீஸ்வர உருவத்துக்கும், லிங்க உருவத்துக்கும் மட்டுமே சிற்ப சாஸ்திர விதிகளை, பிருஹத் சம்ஹிதையில் வராஹமிஹிரர் தந்துள்ளதால், 2000 ஆண்டுகளுக்கு முன் வரை இந்த இரண்டு உருவங்கள் மட்டுமே சிலையாக வடிக்கப்பட்டன என்று தெரிகிறது.

நடராஜர் சிற்ப விதிகளைப் பற்றி வராஹமிஹிரர் ஒன்றும் சொல்லாததாலும், தமிழ் நாட்டில் மட்டுமே நடராஜர் சிற்பங்கள் காணப்படுவதாலும், தமிழ் மக்களுக்கிடையே பிரபலமாக இருந்த மூர்த்தி நடராஜர் என்று சொல்லாமே தவிர, பசுபதி அல்லது PROTO- SIVA அல்ல.


தென்னாட்டுடைய சிவன் என்று தமிழ் நூல்களில் சொல்லப்பட்டது நடராஜரே, தெற்குத்திசையின் மூர்த்தி என்ற பொருள்படும் தக்ஷிணாமூர்த்தி அல்ல என்று சொல்லும் வண்ணம் தக்ஷிணாமூர்த்தியைப் பற்றிய விவரங்கள் தக்ஷிணாமூர்த்தி உபநிஷத்து என்னும் உபநிஷத்தில் காணப்படுகின்றன.


அதில் ப்ரம்,வர்த்தம் என்னும் நகரில் சௌனகர் முதலான ரிஷிகள் மார்கண்டேயரை அணுகி தத்துவ ஞானத்தைப் பெறும் வழியைப் பற்றிக் கேட்கின்றனர். பிரம்மவர்த்தம் என்பது வாரணாசியின் பழைய பெயர். (வாரணவதம்)


அவர் தக்ஷிணாமூர்த்தியை உபாசித்து ஞானத்தைத் தேட வேண்டும் என்று கூறி, தக்ஷிணாமூர்த்தியின் உருவ அமைப்பை விவரிக்கிறார். விபூதிப் பூச்சால் வெண்மையான உடல், தலையில் பிறைச் சந்திரன், உடலைச் சுற்றிப் பாம்பு, கைகளில் ஞான முத்திரை, அக்ஷ மாலை, வீணை, புத்தகம் ஆகியவற்றுடன் ஆலமரத்தடியில் அமர்ந்திருப்பார் என்று சொல்கையில், அவர் யானைத் தோலாலான ஆடையை அணிந்துள்ளவர் என்றும் சொல்வது முக்கியமானது.


 

யானையை சம்ஹாரம் செய்தததால், அந்த இடம் வாரணவதம் என்ற பெயர் பெற்றது.. ஞானத்தைத் தேடியவர்கள் பசுபதியை அங்கு வழிபட்டனர். அதே வாரணவதம், பிரம்மவர்த்தம் என்றழைக்கப்பட்ட காலத்தில், யானைத் தோலுடை அணிந்த  தக்ஷிணாமூர்த்தியைத் தியானிக்க வேண்டும் என்று மார்கண்டேயர் சொல்வது வாரணவதம் செய்த சம்பவத்துடனும், வாரணவதம் என்னும் க்ஷேத்திரத்துடனும் பொருந்துகிறது.


இதில் நடராஜர் தாண்டவக் கருத்து வரவில்லை. தக்ஷிணம் என்னும் தென் திசைக்கும் பொருந்தி வரவில்லை. நடராஜர் பற்றி இந்தத் தொடரில் வேறொரு இடத்தில் ஆராயும் போது தென்னாட்டுக்கும் அவருக்கும் ஏற்பட்ட சம்பந்தத்தை அறிவோம்.


உபநிஷத்தில் பசுபதிக்கு உருவம் சொல்லவில்லை. உருவமாகச் சித்தரிக்காத பசுபதியை நோக்கித் தவம் இருந்து கால பாசத்திலிருந்து விடுபட்ட காலம் முடிந்து விட்டது போலும், அதனால்தான் கடைசி அவதாரத்தில் லகுலீசராக சிவன் அவதரித்து மீண்டும் பாசுபத மதத்தை நிறுவினார் என்று புராணங்கள் சொல்லியிருக்கின்றன.

உருவமில்லாச் சிவனை மனதில் நிறுத்தும் போதும் அதே க்ஷேத்திரத்தில் (வாரணவதம்) தவம் செய்திருக்கின்றனர். உருவமாக தக்ஷிணாமூர்த்தியையும் அதே க்ஷேத்திரத்தில் (வாரணாசி) தியானம் செய்திருக்கின்றனர்.


உருவமும், அதற்குப் பின் இருக்கும் கருத்தாழமும், முனிவர்கள் தங்கள் தவ வலிமையால் கண்டு சொன்னவை.

மொஹஞ்சதாரோ ஆராய்ச்சியாளர்கள் சொல்வது போல ஒரு கருத்தாக்கம் ஏற்பட்டு, அதிலிருந்து பிற தெய்வங்களைக் கண்டுபிடிக்கவில்லை.

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக