புதன், 6 ஜூலை, 2011

59. சாகத்தீவும் குமரிக்கண்டமும்.- 3 (பெயர்க் காரணம்)சாகத்தீவின் அமைப்பைப் பற்றிச் சொல்லும்போது அது நாமிருக்கும் நாவலந்தீவைப் போல இரண்டு மடங்கு பெரியது என்று சஞ்சயன் சொல்கிறான். அதில் முக்கிய்மான மேரு போன்ற இரண்டு மலைகளைச் சொல்லிவிட்டு, பிறகு ரைவதம் என்னும் ஏழு மலைகளைச் சொல்லி விட்டு, அவைகளில் ஏழு வர்ஷங்கள் இருந்தன என்கிறான்.  

வர்ஷம் என்றால் அவை பெரும் நிலப்பகுதிகள். அவற்றை நாடுகள் என்றும் சொல்லலாம். அவற்றின் உட்பிரிவுகளாகக் கண்டங்கள் இருக்கும். அவையும் நாடுகள் ஆகும். உதாரணமாக, வேதச் சடங்குகள் செய்ய ஆரம்பிக்கும் போது சொல்லப்படும் சங்கல்ப மந்திரத்தில், பாரத வர்ஷே, பரதக் கண்டே என்று நாமிருக்கும் பாரத நாட்டை அடையாளம் சொல்கிறோம். பாரத வர்ஷம் என்பது இன்றைய பாரத நாட்டை விடப் பெரியது. அரேபியா, ஆஃப்கானிஸ்தானம், சீனப் பகுதிகள் உள்ளிட்ட இடங்களைச் சேர்த்து அந்த நாளில் பாரத வர்ஷம் இருந்தது. (பகுதி 30). அதற்குள் ஒரு நாடாக நமது பாரதம் (இந்தியா) இருந்தது. அதாவது வர்ஷம் என்பது பெரிய பகுதியாகும். 

சாகத்தீவில்7 வர்ஷங்கள் இருந்தன என்றால், அவை பெரும் நிலப்பகுதிகள் என்றும், அவற்றுக்குள் பல சிறு நாடுகள் இருந்திருக்கும் என்றும் தெரிந்து கொள்ளலாம்.

அவ்வாறான 7 வர்ஷங்களில் 6 வர்ஷங்களின் பெயரை சஞ்சயன் தருகிறான். 
அவை
மஹாமேரு,
மஹாகாசம்,
ஜலதம்,
குமுதோத்தரம்,
ஜலதாரம்,
ஸுகுமாரம்.

இந்தப் பெயர்களின் அர்த்தத்தைக் கொண்டு இந்த நிலங்களின் இயல்பைத் தெரிந்து கொள்ளலாம்.
மஹாமேரு என்பது மலை நாடாக இருக்கும்.

மஹாகாசம் என்றால், புல் தரைகளும், தீவனப் பயிர்களும் விளையும் இடம் என்று பொருள். இது ஆயர்களுக்கு உகந்த இடம்.

ஜலதம் என்பது நீர்மேகம் சஞ்சரித்துக் கொண்டிருக்குமிடம், ஜலதாரம் என்பது மழை பொழியும் இடமாகும்.

குமுதோத்தரம் என்பது இரவில் மலரும் குமுத மலர்கள் அதிகம் கொண்டதாக இருக்கும். சங்க நூல்களில் இந்த மலரை ஆம்பல் என்றார்கள். அல்லி (NYMPHAEA PUBESCENS) என்றும் சொல்வது உண்டு. அல்லி மலர்கள் குளங்களில் வளருமாதலால், குமுதோத்தரம் என்பது மருத நிலமாகும்.


ஸுகுமாரம் என்பது இளைஞனைக் குறிக்கும். முருகனுக்கும் குமாரன் என்பது பெயராதலால், குமரன் திருவிளயாடல் செய்த மலைகள் என்றும் சொல்ல முடியும்.

தமிழ் வளர்த்த தென்னன் தேசத்திலும் ஏழு நாடுகள் இருந்தன. அவை ஒவ்வொன்றும் ஏழு உட்பிரிவுகளை கொண்டிருந்தன என்பது இங்கே பொருத்திப் பார்க்கத்தக்கது.  

தெங்க நாடு ஏழு,
மதுரை நாடு ஏழு,
முன் பாலை நாடு ஏழு,
பின் பாலை நாடு ஏழு,
குன்ற நாடு ஏழு,
குணகரை நாடு ஏழு,
குறும்பனை நாடு ஏழு
என்னும் இந்தத் தென்னன் தேச நாடுகளில், 

தெங்க நாடுகளும், குறும்பனை நாடுகளும், கடலோர நாடுகள். 

குணகரை நாடுகள் கிழக்குக் கரையோர நாடுகள் (90 டிகிரி மலைப் பகுதி)

மதுரை நாடுகள், குமுதோத்தரத்தை ஒத்திருக்கின்றன. 

குன்ற நாடுகள், குமர நாடுகளை (ஸுகுமாரம்) ஒத்திருக்கின்றன.

மீதம் இருக்கும் பாலை நாடுகள் முன் பாலை, பின் பாலை எனப்பட்டதால், வருடத்தின் முன் பகுதி, பின் பகுதி என இரண்டு காலக்கட்டங்களில் மாறி மாறி பாலையாக மாறியிருக்கலாம். அல்லது, பூகோள அமைப்பின் படி இந்தப் பெயரைப் பெற்றிருக்கலாம். ஆனால் இப்படிப்பட்ட பெயரிலும், பாலைத் தட்ப வெப்பத்திலும் தென்ன தேசத்தில் நாடுகள் இருந்தன என்பது உண்மை. அந்தப் பகுதியே சாகத்தீவு என்றால், சாகத்தீவில் நிலங்கள் பாலையாக இருந்தன எப்படிச் சொல்ல முடியும் என்ற கேள்வி எழுகிறது. 


சாகத்தீவில் பாலை நிலங்கள் இருந்தன என்று சொல்லத்தக்க வகையில் சாகத்தீவில் ஒரு ரகசியம் உள்ளது.

அது சாகம் என்னும் அதன் பெயரில் உள்ளது.

மரத்தின் பெயரை வைத்துத்தான் இடத்துக்கே பெயர் இட்டிருக்கின்றனர். 

நாவல் மரங்கள் (ஜம்பு மரம்) அதிகம் காணப்பட்டதால் நாவலந்தீவு என்று பெயர் பெற்றதைப் போல, சாகை மரங்கள் அதிகம் இருந்ததால் அந்த நிலப்பரப்புக்கு சாகைத் தீவு என்ற பெயர் வந்திருக்கிறது.

சாகை மரங்கள் இருந்ததால் அந்த நிலப்பரப்புக்கு சாகத்தீவு என்ற பெயர் வந்தது என்கிறான் சஞ்சயன். 

சாகை மரம் என்பது என்ன?

சாகை என்றால் வாகை என்பது பொருள். 

தமிழில் நாம் சொல்லும் வாகை மரமே சமஸ்க்ருதத்தில் சாகை மரமாகும்.
வாகை (ACACIA SIRISSA) என்னும் சாகை மரங்கள் வளர்ந்ததால் அந்த இடம் சாகத்தீவு என்ற பெயர் பெற்றது. 

வாகை மரம் என்பது பாலை நிலத்துக்கான கருப்பொருள் எனப்படும் இலக்கணமாகும். தொல்காப்பியத்தில், பாலை நிலத்துக்குரிய திணை வாகைத் திணை என்று சொல்லப்பட்டுள்ளது. தமிழ் மண்ணில் சொல்லப்பட்டுள்ள ஐந்து நிலங்களில், ஒவ்வொரு நிலத்தின் பெயரும், அங்கு முக்கியமாக வளரும் மரம், அல்லது செடியின் பெயரைக் கொண்டே ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

பாலை நிலத்தில் வளரும் முக்கிய மரம் வாகை மரமாகும், இதை உழிஞ்சில் என்றும் உன்ன மரம் என்றும், பாலை மரம் என்றும் கூறி வந்தனர்.  இதன் பூ பொன்னிறமாக இருக்கும். வெற்றி வாகை சூடினான் என்பார்களே, அந்த வாகை இதுதான். வாகைபூவைத் தொடுத்து, வெற்றிச் சின்னமாகக் கழுத்தில் அணிந்துக் கொள்வர். பெண்கள் காதணியாக அணிந்து கொள்வர் என்று சங்க நூல்கள் தெரிவிக்கின்றன.


பாலை நிலத்தில் வளரக்கூடிய வாகை மரமே, தென்னன் தேசத்தில் இருந்த முன்பாலை, பின் பாலைக்கும் கருப்பொருளாக இருந்திருக்க வேண்டும். 

அந்த வழக்கத்தைப் பின்பற்றியே தொல்காப்பியரும், வட வேங்கடம் முதல் தென் குமரி வரை இருந்த இன்றைய நிலத்தில் பகுக்கப்பட்ட பாலை நிலத்துக்கும் உரியதாகச் சொல்லி இருக்கிறார். 

இன்றைக்கு நம்மிடம் இருக்கும் தொல்காப்பியம் என்பதே, இதற்கு முந்தின 2-ஆம் சங்க காலக்கட்டத்தில் இருந்த தொல்காப்பியம், அகத்தியம் போன்ற இலக்கண நூல்களைத் தழுவி எழுதப்பட்டது என்பதை நாம் நினைவில் கொண்டு இதை அணுக வேண்டும். நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில், என்மனார் புலவர்  என்று புலவர்களும், முன்னோடிகளும் அவ்வாறு சொன்னார்கள் என்று முன்பு சொல்லப்பட்டதையே தான் சொல்வதாகத் தொல்காப்பியர் எழுதியுள்ளதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.


எந்தத் தென்னன் தேசங்களில் பாலையும், வாகையும் இருந்ததோ, அதே பகுதியில் பொருந்துகிற சாகத்தீவிலும் பாலை நிலங்கள் இருந்து, அங்கு சாகை மரங்கள் வளர்ந்திருந்தால்தான், சாகத்தீவு என்ற பெயரே ஏற்பட்டிருக்கும். பாலை நாடுகள் பதினான்கினைக் கொண்டிருந்தத் தென்னன் தேசம் இருந்த இந்தியப் பெருங்கடலில்தான் சாகத்தீவும் இருந்தது என்பதை நிரூப்பிக்கும் மற்றுமொரு சான்று இது. 


இது உண்மையே என்று சொல்லும் வண்ணம் தொல்காப்பியத்தில் வேறு சில முக்கியச் செய்திகள் இருக்கின்றன.

இன்றைய தமிழ் நாட்டில் சொல்லப்பட்ட ஐந்திணைகளுள் ஒன்றான பாலை நிலம் என்பது, இன்றைய தமிழ் நாட்டில் குறிப்பாக எங்கும் கிடையாது. முல்லையும், குறிஞ்சியும் முறைமையில் திரிந்து பாலை என்பதோர் படிவம் கொள்ளும் என்றே பாலை நிலத்தைப் பற்றிச் சொல்லப்பட்டுள்ளது. (சிலம்பு நாடு- 64 -66)

இன்றைய தமிழ் நாட்டில் குறிப்பாக ‘இங்குள்ளதுஎன்று காட்டும் வண்ணம் இல்லாத பாலை நிலம், தென்னன் தேசத்தில் முன் பாலை, பின் பாலை என்று ஈரேழு பதினான்கு நாடுகளாக இருந்திருக்கிறது. இது அங்கிருந்த ஏழேழ் 49 நாடுகளில் கால் பங்குக்கும் மேலாகும். பூமத்திய ரேகைப் பகுதிக்கு அருகே இருந்து, மழை மறைவுப் பிரதேசத்தில் மலைகளை அடுத்து இருந்திருந்தால், முன் பாலை, பின் பாலை என்று நிலங்கள் வறண்டிருக்கும். 


சாகத்தீவு வர்ணனையில் வரும் அமைப்பைப் பார்த்தால், பூமத்திய ரேகைப் பகுதியில் இரண்டு மலைகளுக்கிடையே (மலயம், ஜலதாரம் என்னும் 90 டிகிரி மலை) மழை மறைவுப் பிரதேசங்கள் இருந்திருக்க முடியும். 90 டிகிரி மலைக்குக் கிழக்கே மழையும், அதன் மேற்கில் வறட்சியும் உண்டாக முடியும்.


அதே போல, மலய மலைகளின் தென் மேற்கே இன்று நமக்கும் பொழியும் மழை உண்டாகி, அதற்கு மறைவுப் பிரதேசமான மறுபக்கத்தில் பாலை நிலங்கள் உண்டாகி இருக்க முடியும். இந்த இரண்டு பகுதிகளும் சாகத்தீவின் மத்தியப் பகுதியில் அமைகிறது. சாகத்தீவின் மத்தியில் சாகை மரங்கள் அதிகம் காணப்படவே, அந்தத்தீவு சாகத்தீவு என்று அழைக்கப்பட்டது என்று சஞ்சயன் சொல்வது இங்கு பொருந்துகிறது. 

வாகை மரம் மட்டுமல்ல, வாகத்திணையை ஒட்டி தொல்காப்பியர் சொல்லும் மக்களைப் பற்றிய விவரமும் பொருத்தமாக இருக்கிறது.

வேறு எந்தத் திணைக்கும் சொல்லாமல், வாகைத்திணைக்கு அவர் ஒன்று சொல்கிறார்.

அது பிராமம்ணர் உள்ளிட்ட நான்கு வர்ணங்கள். (புறத்திணை இயல் 74).
 
அறு வகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும்
ஐ வகை மரபின் அரசர் பக்கமும்
இரு மூன்று மரபின் ஏனோர் பக்கமும்
 
என்னும் நான்கு வர்ணங்களையும், பாலைக்கு உரிய திணையான வாகத்திணையில்தான் தொல்காப்பியர் வைத்துள்ளார். 

அந்த வாகையின் பெயர் கொண்ட சாகத்தீவிலும் நான்கு வர்ணத்தவர் இருந்தனர். அதிலும், தத்தமக்கென்ற இடத்துடனும், அந்த இடங்களுக்கான பெயர்களுடனும், அந்தப் பெயரிலேயே அழைக்கப்பட்டும் இருக்கிறார்கள். மனு ஸ்ம்ருதியிலும் அப்படிப் பெயரிட்டு வர்ணங்கள் அழைக்கப்படவில்லை. நாவலந்தீவு உட்பட வேறு எந்த த்வீபத்திலும், நான்கு வர்ணத்தவர்களும் தனிப் பெயருடன் சொல்லப்படவில்லை.

சாகத்தீவில் உலகங்களால் சம்மதிக்கப்பட்டதும், புண்ணியம் உடையதுமான நான்கு தேசங்கள் இருந்தன என்று சொல்லி, அவற்றின் பெயரை சஞ்சயன் சொல்கிறான்.

அவை
மகம்,
மசகம்,
மானஸம்,
மந்தகம் என்பன.

இவற்றில் முறையே பிராம்மணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் இருந்தனர். 

அவர்கள் எப்பொழுதும் தர்மத்தையே அனுஷ்டித்தனர். அங்கே அரசனுமில்லை, தண்டனையுமில்லை, தண்டிக்கிறவர்களும் இல்லை. தர்மத்தை அறிந்தவர்களான அவர்கள், தத்தம் தர்மத்தினாலேயே ஒருவரை ஒருவர் ரட்சித்துக் கொண்டனர் என்கிறான் சஞ்சயன். 

இதை அவன் சொல்வது இன்றைக்கு 5000 ஆண்டுகளுக்கு முன், மஹாபாரதப் போர் துவங்குவதற்கு முன். அப்பொழுது சாகத்தீவு என்பது பெரிதும் அழிந்து போய், ஒரு சிறு நிலப்பரப்பாக, தென்னிந்திய முனையில் ஒரு முயலைப் போல ஒட்டிக்க் கொண்டிருந்தது. (பகுதி 38). எனவே அரசர்கள் இல்லாமலும், நான்கு வர்ணத்தவர் ஒருவரை ஒருவர் காப்பற்றிக் கொண்டும் இருந்தனர் என்று அவன் சொல்வது, பாண்டியன் அரச பரம்பரை ஏற்படுவதற்கு முந்தின காலக் கட்டத்தைப் பற்றிய வர்ணனை ஆக இருக்க வேண்டும். 


அப்பொழுது இருந்த நான்கு வர்ணத்தவர்களின் தொடர்ச்சி அரசர்கள் உருவான பிறகும் தொடர்ந்திருக்கிறது. காலப் போக்கில் மேலும் சில பிரிவுகளும் உண்டாகி இருக்கின்றன. அதை உள்ளடக்கிய சமூகமாகத் தமிழ் பேசி வந்தவர்கள் இருந்திருக்கிறார்கள். ஏனெனில், தொல்காப்பியர் மேலே சொன்ன நான்கு வர்ணத்தவர்களுடன் நிறுத்தி விடவில்லை, மேலும் மூன்று பிரிவுகளைச் சேர்த்து ஏழு பிரிவுகளை அந்தச் சூத்திரத்தில் கொடுத்துள்ளார். 


”அறு வகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும்
ஐ வகை மரபின் அரசர் பக்கமும்
இரு மூன்று மரபின் ஏனோர் பக்கமும்
மறு இல் செய்தி மூ வகைக் காலமும்
நெறியின் ஆற்றிய அறிவன் தேயமும்
நால் இரு வழக்கின் தாபதப் பக்கமும்
பால் அறி மரபின் பொருநர் கண்ணும்
அனை நிலை வகையொடு ஆங்கு எழு வகையான்”

அதாவது

பார்ப்பனர்,
அரசர்,
வணிகர்,
உழவர்,
அறிவன் என்னும் கணியன்,
தாபதர் என்னும் முனிவர்,
வாளானும், தோளானும் பொருதும் பொருநர்
என்ற ஏழு வகை மக்களைப் பாலை நிலத்துக்குரிய வாகத்திணையில் தொகுத்துள்ளார் தொல்காப்பியர்.


இதன் மூலம் தெரியவரும் விவரங்கள்:-

(1)     சாகத்தீவில் இருந்த நால் வகை மக்கள் என்ற நிலை மாறி, ஏழு வகை மக்கள் என்ற நிலை தென்னன் ஆண்ட காலத்தில் தோன்றி இருக்கிறது. 

(2)     வர்ணம் என்பது ஜாதி அல்ல. அவரவர் செய்த தொழில் மூலம், ஒருவருக்கொருவர் உதவி செய்யும் வண்ணம் இந்தப் பகுப்பு செய்யப்பட்டிருக்கிறது. மேலும் மக்கள் வாழும் நிலையின் அடிப்படையிலும் இவ்வாறு பகுத்திருக்கிறார்கள் என்றும் தெரிகிறது. 

(3)     ஆரியத்தாக்கம் என்று திராவிடவாதிகள் சொல்வது தவறு என்பதை இந்தப் பகுப்பு காட்டுகிறது. அப்படி ஒரு தாக்கம் இருந்திருந்தால், அது நான்கு பிரிவுகளுடன் நின்றிருக்கும். ஆனால் ஏழு பிரிவுகளுடன் இருக்கவே, இது இயல்பாகவே தமிழ் சமுதாயத்தில் தோன்றினதாக இருக்க வேண்டும்.

(4)     பிராம்மணன் என்பவன் வந்தேறியவன் என்று திராவிடவதிகள் சொல்வதும் தவறு என்பதை இந்தப் பகுப்பு காட்டுகிறது. வந்தேறிய அவன் தனது ஆதிக்கத்தைத் தமிழ் மக்கள் மீது காட்டினவனாக இருந்திருந்தால், அவன் தன்னையும் ஏழில் ஒன்றாக வைத்திருக்க மாட்டான். 

(5)     நான்கு வர்ணங்களையும் சேர்த்து ஏழு வகைகள் சொல்லப்படவே, வர்ணாஸ்ரமம் என்பது மனுவாதி சித்தாந்தம் என்றும், அது தமிழ் மக்கள் மீது திணிக்கப்பட்டது என்றும் திராவிடவாதிகள் சொல்வது அடிபட்டுப் போகிறது.

மனுவிலிருந்தோ, பிராம்மணர்களிலிருந்தோ, ஆரியப் படையெடுப்பாளர்களிலிருந்தோ ஏற்பட்டது என்று சொல்ல முடியாதவாறு, வர்ணங்கள் என்னும் பகுப்பு, தென்னன் தேசம் இருந்த இந்தியக் கடல் பகுதியிலேயே அதற்கும் முன் இருந்த சாகத்தீவின் தொடர்ச்சியாக இருந்திருக்கிறது. 

நாமிருக்கும் பாரத நாட்டின் நில நீட்சியாகத் தென்னன் தேசம் இருந்திருக்கவே, இந்த மக்கள் பகுப்பும், இந்த மக்களும், பாரதத்தின் இன்றைய தென் முனை வழியாக வைவஸ்வத மனுவுக்கு முன்பே வந்திருக்கிறார்கள். 

வைவஸ்வத மனுவின் வழியில் வந்த சிபியின் மூலம் வந்த சோழ வர்மன், சோழ தேசம் ஸ்தாபித்த போது, அங்கு அதற்கு முன்பாகவே சம்பாபதி என்னும் புகார் நகரம் இருந்திருக்கிறது, சம்புத் தேவி என்னும் பெண்மணி தாபத வேடம் கொண்டு, தவம் இயற்றித் தெய்வ நிலை கொண்டு அங்கு இருந்தாள் என்பதே இதற்குச் சாட்சி. 

சோழ வர்மன் வருவதற்கு முன்பே மாந்தாதாவின் காலத்தில், இந்திரனால் அளிக்கப்பட்ட நாளங்காடி பூதம் அங்கு குடி கொண்டது என்பதால், அதற்கும், சம்புத்தேவிக்கும் பூசைகள் அடங்கிய வேள்விகளைச் செய்யும் பார்ப்பனன் அங்கு இருந்திருக்க வேண்டும். 

தொல்காப்பியர் சொல்லும் பார்ப்பன வகை உள்ளிட்ட ஏழுவித மக்களைப் பற்றி நச்சினார்க்கினியர் போன்ற உரையாசிரியர்கள் சொல்வதைத் தெரிந்துக் கொண்டால், மேலும் தெளிவு பிறக்கும். அவற்றை மேற் கொண்டு பார்ப்போம்.

6 கருத்துகள்:

 1. Dear Jayasree Mam,
  //நாமிருக்கும் பாரத நாட்டின் நில நீட்சியாகத் தென்னன் தேசம் இருந்திருக்கவே, இந்த மக்கள் பகுப்பும், இந்த மக்களும், பாரதத்தின் இன்றைய தென் முனை வழியாக வைவஸ்வத மனுவுக்கு முன்பே வந்திருக்கிறார்கள்.//

  Could it be that long before in sakha theevu, people have spoken a language which later evolved in to sanskrit and tamil and later spread across the bharatha varsha.

  பதிலளிநீக்கு
 2. தாங்கள் கூறும் இந்த ஆய்வறிக்கை புத்தக வடிவில் கிடைக்குமா ? இரா.கோ. மணிவண்ணன் rgmanivannan2007@rediffmail.com

  பதிலளிநீக்கு
 3. இந்தத் தொடரை முடித்த பிறகு, புத்தக வடிவில் கொண்டு வர உத்தேசித்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 4. சங்க நூல்களில் சூடுதல் ஏன் எதற்கு

  வாகை மலர் (Acacia sirissa) என்பர் நீங்கள் போட்டிருப்பது அன்று. இம்மலரின் அறிவியல் பெயர் (Albizia lebbeck) ஆங்கிலத்தில் இதனை, Woman's Tongue Tree என்று அழைப்பர். மேலும் இங்கு போடப்பட்டுள்ள படமும் தொட்டால் சார்ந்த படம் உள்ளது. இதன் சரியான படம் http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/0c/Starr_080531-4752_Albizia_lebbeck.jpg/220px-Starr_080531-4752_Albizia_lebbeck.jpg

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி திரு ராம்ஜி அவர்களே.

   இந்த வாகைப் பூவுக்கு ஸமஸ்க்ருதத்தில் ”ஷீரிஷா” என்று பெயர். இதையே சாகை, வாகை, காட்டு வாகை என்றார்கள்.

   From

   Tamil Lexicon, University of Madras (p. 3574)

   vākai: 1. Sirissa, Albizzia ; 2. Fragrant sirissa; 3. West Indian peatree; 4. Chaplet of sirissa flowers worn by victors; 5. Victory; 6. Theme of a conqueror wearing a chaplet of sirissa flowers and celebrating his victory over royal enemies; 7. Theme in which the members of the four castes, hermits and others exalt their characteristic attainments; 8. Good behaviour; 9. Gift; 10. Plenty; 11. Nature; 12. Penance

   Acacia sirissa என்பதே ஷீரிஷாவின் Botanical name.


   இந்தக் கட்டுரையை எழுதிய போது (3 வருடங்களுக்கு முன்னால்) Acacia sirissa என்னும் பெயரை கூகிள் செய்த போது நீங்கள் கொடுத்த இணைய தளமே வந்தது. இப்பொழுதும் இதே பெயரை எழுதி கூகிள் செய்யுங்கள். Albizia lebbeck என்ற பெயரில் இந்தத் தளம் வருகிறது.

   ஆனால் ஷீரிஷாவின் Botanical name Acacia sirissa என்று Monier Williams தெரிவிக்கிறது.

   From
   http://webcache.googleusercontent.com/search?q=cache:fgFbNIE2NtIJ:venetiaansell.wordpress.com/2010/06/10/shirisha/+Acacia+Sirissa+-+Tamil+name&cd=7&hl=en&ct=clnk&gl=in&source=www.google.co.in

   “Monier Williams identifies the śirīṣa – and all other synonyms as listed above – as the Acacia sirissa but the Pandanus database says that it is the Albizia lebbeck or Acacia lebbeck."

   மேற்படி இணைய தளக் கட்டுரையைப் படிக்கவும். ஷீரிஷாவின் பழமை, முக்கியத்துவத்தைக் கூறும் அக்கட்டுரையில் நீங்கள் காட்டும் படமே போடப்பட்டுள்ளது. ஆனால் கட்டுரையின் முடிவில் அந்தப் படம் Albizia lebbeck என்கிறது.

   “The image above is of Albizia lebbeck.” அதாவது அது ஷீரிஷா அல்ல. இந்தக் கட்டுரையை எழுதிய போது ஷீரிஷா என்பதற்கு நான் காட்டியுள்ள படமே இணைய தளத்தில் இருந்தது. எது ஷீரிஷா (வாகை) எது உண்மையான படம், எது ஷீரிஷாவைக் குறிக்கும் Botanical name என்று யாரேனும் விவரங்களோடு தெரிவித்தால், அந்தப் படம் மாற்றப்படும்.

   நீக்கு