வியாழன், 12 ஜனவரி, 2012

92. மொஹஞ்சதாரோவின் நக்ஷத்திரக் கோவில் -3


சிந்து சமவெளிப் பகுதிகளில்  27  என்ற எண்ணிக்கை அளவுகோலிலும்,

மொஹஞ்சதாரோவில் ஒரு கட்டுமானத்திலும் காணப்படுகிறது.

 

ஒவ்வொரு எண்ணுக்கும் பின்னால் அதற்கே உரிய ஒரு விவரம் இருக்கிறது.


1 என்றால் முழுமுதல் கடவுளான பரப்பிரும்மம். இந்த ஒன்றே எல்லாமுமாக ஆகிறது.

2 என்றால், அந்த முழுமுதல் பரப்பிரும்ம், புருஷன் (ஜீவன் அல்லது ஆத்மா), பிரக்கிருதி (பௌதிகக் கூறுகள்) என்று இரண்டாக ஆனது.

3 என்றால் நான்முகப் பிரம்மா, விஷ்ணு, சிவன் என்று மும்மூர்த்திகளாக அந்த முழுமுதல் கடவுள் ஆனது.

4 என்றால் அதுவே நான்கு வேதமானது.

5 என்றால் அதுவே ஐந்து இயற்கைச் சக்திகள் என்னும் பஞ்ச பூதமானது.


இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் இவையெல்லாம் ஹிந்து மதக் கருத்துக்கள் அல்லவா என்று ஆட்சேபித்தால், இவற்றையே தமிழ் மக்களும் சொன்னார்கள், பாரதம் முழுவதும் இருந்த மக்களும் சொல்லி வந்தார்கள். இவற்றைச் சங்க நூல்களிலும் காணலாம், ஆழவார் பாடல்களிலும் காணலாம்.


 

திருமாலைப் பற்றிய பரிபாடல் 3 –இல் இப்படிப்பட்ட கருத்துக்களைக் காட்டும் எண்கள் சொல்லப்படுகின்றன.

"இருநிழல் படாமை மூவே ழுலகமும் ஒருநிழலாக்கிய ஏமத்தை மாதோ

பாழெனக் காலெனப் பாகென ஒன்றென

இரண்டென மூன்றென நான்கென ஐந்தென

ஆறென ஏழென எட்டெனத் தொண்டென

நால்வகை ஊழியென் நவிற்றுச் சிறப்பினை.."


 

இதில் மூவேழ் இருபத்தொன்று (21) என்னும் எண் அத்தனை உலகங்களைக் காட்டுவது. அதாவது 21 என்னும் எண் எங்கேனும் வந்தால் அது சுவர்கம், மத்தியம், பாதாளம் என்னும் மூன்று வகையான 7 உலகங்கள் கொண்ட 21 உலகங்கள் என்று அர்த்தம்.


இந்தப் பாடலில் 1 என்னும் எண் பஞ்ச பூதங்களில் முதலாவதான வானத்தைக் குறிக்கிறது. அதாவது வானம் என்பதை 1 என்றும் சொல்லலாம். அல்லது 1 என்ற எண் சொல்லப்பட்டால் அதற்கு வானம் என்பது பொருள். இதை நீட்டிக் கொண்டு, வானத்தின் சிறப்பான பண்பான ஓசை, அது ஓம் என்பது – அதுவும் எண் 1 ஐக் குறிக்கும் என்றார்கள். இதையெல்லாம் சங்கத் தமிழ்ர்கள் சொல்லியிருக்கிறார்கள்.


அது போல (இந்தப் பரிபாடலில்)

2 என்னும் எண் காற்று,

3 என்னும் எண் – தீ,

4 என்னும் எண் நீர்.

5 என்னும் எண் நிலம்,

6 என்னும் எண் மனம்,

7 என்னும்  எண் அகங்காரம்,

8 என்னும் எண் புத்தி,

9 என்னும் எண் மூலப்பகுதி என்று சொல்லப்பட்டிருக்கிறது.


 

இவை தவிர இதே பாடலில் திருமாலுக்கு

ஒரு கை, இரு கை, முக்கை, நாற்கை, ஐங்கை,

அறு கை, எழுகை, எண் கை, ஒன்பது கை,

பதிற்றுக் கை, நூற்றுக் கை, ஆயிரம் கை,

பதினாயிரம் கை, நூறாயிரம் கை, ஆம்பல் என்னும் பேரெண் கை

என்று பல கருத்துகளுடன் கூடிய எண்களைச் சொல்லியுள்ளார்

புலவர், கடுவனிளவெயினனார்.


 

ஒவ்வொரு எண்ணுக்கும் இது போன்ற பல விவரங்களைத் தமிழ் நிகண்டுகளில் காணலாம். இந்த வரிசையில் எண் 9 க்கு, ஒன்பது, ஒன்பதாக மும்முறை வரும் 27 நக்ஷத்திரங்களைக் குறிப்பிடுகிறது, சூடாமணி நிகண்டு (12- 102).


அதிலும் இந்த நக்ஷத்திரங்கள் செய்யுளுக்குரிய நக்ஷத்திரங்களைக் குறிப்பது என்று இந்தச் சூத்திரம் சொல்வது முக்கியமானதாகும். அதைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம். இங்கு ஒன்பது ஒன்பதாக மூன்று முறை பிரிக்கப்பட்டு 27 நக்ஷத்திரங்கள் அமையும் என்பது நாம் கவனிக்க வேண்டிய விவரமாகும். அதாவது எண் 27 என்றால் அது அஸ்வினி முதலான 27 நக்ஷத்திரங்களைக் குறிப்பதாகும்.


ஒன்பது ஒன்பதாக மூன்று வரிசையில் 27 அடித்தளங்கள் மொஹஞ்சதாரோவில் அமைந்துள்ளதால், இந்த அமைப்புக்கும் 27 நக்ஷத்திரங்களுக்கும் தொடர்பு இருக்கிறது என்பது புலனாகிறது.





 

அஸ்வினி தொடங்கி 27 நக்ஷத்திரங்களை, ஒன்பது ஒன்பதாகப் பிரிப்பது ஜோதிடத்தில் உள்ளது. ஒவ்வொரு ஒன்பதையும் ஒரு பரியாயம் அல்லது வட்டம் என்பார்கள். ஒவ்வொரு பரியாயத்தில் உள்ள நக்ஷத்திரங்களுக்குள் பலவிதமான தொடர்புகள் உண்டு. அவற்றைக் கொண்டுதான் நக்ஷத்திரப் பொருத்தம், திருமணப் பொருத்தம் என்று பார்க்கிறார்கள். இதில் நமக்குத் தேவையான விவரம் என்று பார்த்தால், வேத மரபில் நக்ஷத்திர வழிபாடு இருந்தது என்பதும், பாரதம் முழுவதும், 27 நக்ஷத்திரம் சார்ந்த ஜோதிடமே பின்பற்றப்பட்டு வந்தது என்பதும் ஆகும்.


 

உலகத்தில் வேறு எந்த இடத்திலும், எந்த காலக்கட்டத்திலும், வான நக்ஷத்திரங்களில் 27 நக்ஷத்திரங்களை மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. வேத மரபில் மட்டுமே 27 நக்ஷத்திரங்கள் உள்ளன. 360 பாகைகள் கொண்ட வான வட்ட்த்தை 27 ஆகப் பிரித்து, அப்படிப் பிரிக்கப்பட்ட ஒவ்வொரு பகுதியும் ஒரு நக்ஷத்திரமாகும் என்றும், அதன் அளவு 13 பாகை, 20 கலை என்றும் குறித்துள்ளார்கள். இந்த 13-20 பாகைக்குள் பல நக்ஷத்திரங்கள் இருக்கும். ஆனால் அவற்றுள் இருக்கும் ஒரு நக்ஷத்திரத்தின் பெயரால், அந்த முழு அளவுமே ஒரே நக்ஷத்திரமாக்கச் சொல்லப்படுகிறது. அப்படி அமையும் நக்ஷத்திரத்துக்கு ஒரு தேவதை உண்டு. அந்த தேவதைக்கு வழிபாடு இருந்த்து.


இன்றைக்கு நவ கிரக அமைப்பு பரவலாக இருக்கிறது. மூன்று மூன்றாக மூன்று வரிசைகளில் அமையும் இந்த அமைப்பு கோவில்களில்தான் இருக்கும். அது போல ஒன்பது ஒன்பதாக் மூன்று வரிசையில் அமைந்துள்ள மொஹஞ்சதாரோ அமைப்பும் ஒரு கோவிலில்தான் அமைந்திருக்க முடியும்.

இன்றைய நவகிரக வழிபாட்டில் நாம் அந்த கிரகத்தையே தேவதையாக நினைக்கிறோம்.

ஆனால் உண்மையில், ஒவ்வொரு கிரகத்துக்கும் தனித் தனி தேவதை உண்டு.

அது மட்டுமல்ல,.

தேவதை, அதிதேவதை, பிரத்யதி தேவதை என்று மூன்று தெய்வங்கள் ஒவ்வொரு கிரகத்துக்கும் உண்டு.

நவகிரக வழிபாடுகளை அந்த தேவதைகளுக்குத்தான் செய்கிறார்கள்.




 


இது போலவே, நக்ஷத்திர தேவதைகளை நக்ஷத்திரங்கள் வாயிலாக வழிபட்டிருக்கிறார்கள். இவற்றுக்கு மந்திர, யந்திர வழியில் வழிபாடுகள் இருந்திருக்கின்றன. இந்த 27 நக்ஷத்திரங்களையும் ஓரெழுத்துச் சொற்களாக அழைத்திருக்கிறார்கள். அஸ்வினி தொடங்கி சொல்லப்படும் இந்த நக்ஷத்திரங்களை ஒரு குறிப்பிட்ட வகையில் ஒன்பது ஒன்பதாகப் பிரித்திருக்கிறார்கள். இதைக் காட்டும் ஒரு ஸ்லோகம் லகத ரிஷி அளித்துள்ள ரிக் ஜோதிடத்தில் (ஸ்லோகம் 14) உள்ளது.



அஸ்வினி தொடங்கி, ஆறாவதாக வரும் நக்ஷத்திரங்களை, அவற்றுக்கான ஓரெழுத்துப் பெயருடன் இந்த ரிக் வேதாங்க ஸ்லோகம் தருகிறது. அவற்றையும், அவற்றுக்கான முழுப்பெயரையும் கீழுள்ள அட்டவணையில் காணலாம்.



ஜோ (அஸ்வினி)

த்ர (திருவாதிரை)

கஹ (பூரம்)

 

கே (விசாகம்)

ஸ்வே (உத்ராடம்)

ஹி (உத்திரட்டாதி)

 

ரோ (ரோஹிணி)

ஷ (ஆயில்யம்)

சித் (சித்திரை)

 

மூ (மூலம்)

சக் (சதயம்)

ந்யே (பரணி)

ஸூ (புனர் வசு)

மா (உத்ரம்)

தா (அனுராதா /

அனுஷம்)

ண (திருவோணம்)

ரே (ரேவதி)

ம்ரு (மிருகசீரிஷம்)

கு (மகம்)

ஸ்வா (ஸ்வாதி)

ப (பூராடம்)

அஜ (பூரட்டாதி)

க்ரு (கிருத்திகை)

ஷ்ய (புஷ்ய /

பூசம்)

ஹா (ஹஸ்தம்)

ஜே (ஜேஷ்டா / கேட்டை)

ஷ்த (தனிஷ்டா/ அவிட்டம்)

 


அப்படி அமைந்துள்ள வரிசைகளில், நக்ஷத்திரங்களுக்குள் உள்ள பல விதமான தொடர்புகள் காட்டப்படுகின்றன. அவற்றுள் ஒரு தொடர்பை, 76 ஆவது கட்டுரையில் நாம் பேசிய, கூடலூர் கிழாரது பாடலான புறநானூறு 229 ஆம் பாடலில் காணலாம். ஆடிய அழல் குட்டம் என்று தொடங்கும் அந்தப் பாடலில், ப்ராசீ, உதீசீ என்னும் சமஸ்க்ருதச் சொற்களை அவர் கையாண்டதைக் காட்டினோம். அந்தப் பாடலில் அவர் சொல்லும் பிற விவரங்கள், மேலே காட்டப்பட்டுள்ள ரிக்ஜோதிட நக்ஷத்திர அமைப்பில் காணப்படுகின்றன.



அந்த ஒரு பாடலிலேயே, பாடப்பட்ட அந்த நாளின் நண்பகலில் சூரியன் இருந்த அமைப்பையும், நடு நிசியில் நக்ஷத்திரங்கள் இருந்த அமைப்பையும் கூடலூர் கிழார், பூடகமாகச் சொல்கிறார்.


'முடைபனையத்து வேர் முதலாக்

கடைக்குளத்துக் கயங்காயப்

பங்குனி"


என்று சொல்லுமிடத்தே, பங்குனியின் அந்த நாளில் அனுஷம் முதல் நக்ஷத்திரமாகவும், புனர் பூசம் கடை நக்ஷத்திரமாகவும் அமைந்தது என்கிறார். அதாவது சூரியன் உச்சிக்கு வரும் போது அதற்கு முன்னால் அனுஷம், மேற்கில் தொடுவானத்தில் இருக்கும், பின்னால் புனர்பூசம் கிழக்கில் தொடுவானத்தில் உதயமாகும். சூரியனைப் பொறுத்த வரையில் முன்னும் பின்னும் 9 ஆவது நக்ஷத்திரம் சொல்லப்படுகிறது. ஏனெனில், தொடுவானத்தைத் தாண்டியும் ஒரு நக்ஷத்திர தூரம் வரை வெளிச்சம் பரவியிருக்கும். அதனால், இதற்கு உரை எழுதிய உரையாசிரியர்கள் அனுடத்தின் அடி வெள்ளி, புனர்பூசத்தின் கடை வெள்ளி என்று வெள்ளென்னும் வெள்ளியைக் குறிப்பிடுகின்றனர்.



இதை மேற்காணும் நக்ஷத்திர அமைப்பில் காணலாம். அன்றைக்கு சூரியன் பூரட்டாதி நக்ஷத்திரத்தில் நின்றிருக்கிறான். பூரட்டாதிக்கும், அதிலிருந்து சம தூரத்தில் அனுஷம், புனர்பூசம் அமைவதற்கும் உள்ள தொடர்பை மேலே உள்ள அட்டவணையைக் கொண்டு காணலாம். உதாரணமாக, மக நக்ஷத்திரத்தில் சூரியன் இருக்கும் போது நண்பகலில் மேற்கு வெள்ளியில் பரணியும், கிழக்கு வெள்ளியில் மூலமும் இருக்கும்.



சூரியன் நின்ற நக்ஷத்திரத்தைச் சொன்ன கூடலூர் கிழார், நடுநிசியின் அமைப்பைச் சொல்கிறார். இருட்டு நேரமாதலால், 90 பாகை, 90 பாகை என்று முன்னும்பின்னும் 8 நக்ஷத்திரங்கள் தான் தென்படும். நடுநிசியின் நடு வானிலிருந்து உத்திர நக்ஷத்திரம் நகரும் போது, உத்தரத்துக்கு முன் உள்ள 8 ஆவது நக்ஷத்திரமான மிருக சீரிஷம் மறையும், உத்ரத்துக்குப் பின்னுள்ள 8 ஆவது நக்ஷத்திரமான மூலம் கிழக்கில் உதயமாகும். இதை மேலேயுள்ள ரிக் ஜோதிட நக்ஷத்திர அட்டவணையில் குறுக்காகக் காணலாம்.


மூ (மூலம்)

சக் (சதயம்)

ந்யே (பரணி)

ஸூ (புனர் வசு)

மா (உத்ரம்)

தா (அனுராதா /

அனுஷம்)

ண (திருவோணம்)

ரே (ரேவதி)

ம்ரு (மிருகசீரிஷம்)

 


அந்த மூல நக்ஷத்திரம் நேர்க் கிழக்காக இல்லாமல், சற்று தெற்கு நோக்கி வானில் அமையும். புலவர் சொல்லும் இரவில், ஒரு எரி நக்ஷத்திரம் கிழக்கிலும் அல்லாமல், வடக்கிலும் அல்லாமல் வீழ்ந்தது என்கிறார். மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி வந்த அந்த எரிகல், கிழக்கு, வட கிழக்கு அல்லாமல் தென் கிழக்கில், மூலம் உதயமாகும் பகுதியில் விழுந்திருக்கிறது. பங்குனி மாத்த்தின் நடுநிசியில் மூல நக்ஷத்திரம் உதயமாகிக் கொண்டிருக்கும் போது, அது இருக்கும் இடத்தில் எரி நக்ஷத்திரம் விழுந்ததால், தங்கள் அரசனுக்குக் கெடுதல் வரும் என்று கூடலூர் கிழார் சொல்கிறார். இதனால், அவர் குறிப்பிடும் அரசனான சேரமான் யானைக் கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை, மூல நக்ஷத்திரத்தில் பிறந்தவனாக இருக்கக்கூடும் என்று தெரிகிறது. அந்தப் பாடலில் ஒளித்து வைக்கப்பட்டுள்ள ரகசியங்கள் இவ்வளவு இருக்கின்றன!



அப்படி ஒரு எரிகல் விழுந்த 7 நாட்களுக்குள் புஷ்ய ஸ்நானம் போன்ற பரிகாரங்களை அந்த அரசன் செய்திருப்பான், அதனால் கெடுதி வராது என்று என்று புலவர் நினைத்திருக்கிறார். அப்பொழுது எந்தப் போரும் இல்லை. எனவே அரசன் நோய் வாய்ப்படாமல் இருக்க வேண்டுமே என்றும் கவலை கொள்கிறார். ஆனால் 7 ஆவது நாள் வந்தது, அரசன் இறந்தான் என்ற செய்தியும் வந்தது என்று செல்கிறது அந்தப்பாடல்.


இந்தப் பாடலை இங்கு விளக்குவதற்குக் காரணம், பாரத நாட்டில் வழங்கி வந்த ஜோதிடத்தில், நக்ஷத்திரங்களுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. ஆனால் கிரேக்க, ரோமானியர்களிடமிருந்து ஜோதிடத்தைக் கடன் வாங்கினோம் என்று இன்னும் பலர் சொல்லிக் கொண்டு திரிகிறார்கள். அவர்களது ஜோதிடத்தில் நக்ஷத்திரத்துக்கு இடம் கிடையாது.


நாம் அனுஷம் என்று சொல்லும் நக்ஷத்திரத்தை அநு என்று சுமேரியா, அக்காடியன், பாபிலோன் ஆகிய நாகரிகங்களில் சொல்கிறார்கள், அவர்களிடமிருந்துதான் நமக்கு வந்தது என்று சொல்லிக் கொண்டு, இதைக் கொண்டு ஆரியன் வந்தான், திராவிடன் வந்தான் என்று சொல்கிறார்களே, அவர்களுக்கு ஒரு கேள்வி, 

அந்த அநு என்பவன் யார்?


ஆரிய – தஸ்யு போராட்டம் என்று சொல்லப்பட்ட யயாதியின் ஐந்து மகன்களுக்கிடையேயான பதவிச் சண்டையில், அநு என்பவன் ஒருவன், அவன் தோற்கடிக்கப்பட்டு, இன்றைய அரேபியாவுக்கு அனுப்பப்பட்டவன் என்று பலமுறை இந்த்த் தொடரில் பார்த்தோம்.




அந்த அநு, இந்த பாரத பூமியைச் சேர்ந்தவன். வேத மரபில் வாழ்ந்தவன். அவனுக்கு அநு என்னும் பெயரே, அனுஷ நக்ஷத்திரத்தின் காரணமாக இடப்பட்டிருக்க்கூடிய சாத்தியம் இருக்கிறது. அவன் அனுஷ நக்ஷத்திரத்தில் பிறந்தவனாக இருக்க வேண்டும்.


அவன் மிலேச்சனாக சுமேரியப் பகுதிகளுக்குச் சென்று வாழ்க்கையத் தொடங்கிய போது, அவன் நக்ஷத்திரத்துக்கு முக்கியத்துவம் தந்திருப்பான். சுமேரிய வழக்கில் அநு என்பது பழமையானகடவுள். அது வான் வெளிக் கடவுள். அது மூன்றாக – அநு, எநில், என்கி என்ற மூன்று கடவுளர்களாக அமைந்திருக்கும் என்பது சுமேரியக் கருத்து.

உண்மையில் அனுஷ நக்ஷத்திரம், விருச்சிக ராசியில் மூன்றாக அமைந்திருக்கும்.


கீழ்க்காணும் படத்தில் விருச்சிக அமைப்பின் தலைப் பகுதியில் மூன்று நக்ஷத்திரங்கள் அம்புக் குறிகளால் அடையாளம் காட்டப்பட்டுள்ளன. இவை மூன்றும் சேர்ந்ததே அனுஷ நக்ஷத்திரமாகும்.



 

வேத ஜோதிடத்தில் சொல்லப்படும் இந்த அமைப்பின் மூன்று நக்ஷத்திரங்கள் மட்டுமே சுமேரியாவில் சொல்லப்படுகிறது. அவர்களுக்குப் பிற நக்ஷத்திரங்களைப் பற்றி – அதாவது நாம் சொல்லும் 27 நக்ஷத்திரங்களில் அனுஷம் நீங்கலாகப் பிற நக்ஷத்திரங்களைப் பற்றித் தெரிந்திருக்கவில்லை. அநுவின் மூலமாகத்தான் இந்த நக்ஷத்திரத்தைப் பற்றிய அறிவு அங்கு சென்றிருக்கிறது. பிற்காலத்தில் அது பல மாறுபாடுகளை அடைந்து விட்டது. 27 நக்ஷத்திரஙகள் குறித்த அறிவும், நக்ஷத்திர தேவதைகளுக்கு வழிபாடு செய்யும் முறையும் வேத மரபில்தான் இருந்து வந்திருக்கிறது.


இவற்றின் உள்விவரங்கள் தெரியாதவர்கள் சொல்லும் இன்னொரு பிரசாரமும் இருக்கிறது. இவையெல்லாம் வேதகால தெய்வங்கள், பிற்காலத்தில் இவற்றுக்கு முக்கியத்துவம் இல்லை, பிற்காலத்தில் வேறு, வேறு தெய்வங்கள் உருவாக்கப்பட்டு வழிபடப்பட்டன என்று பிரித்துப் பிரித்து சொல்லி வருகிறார்கள். அது அறியாமையின் வெளிப்பாடே.


நக்ஷத்திர தேவதை, கிரக தேவதை, குல தேவதை, கிராம தேவதை, பாலன தேவதை, ஒவ்வொரு ராசிக்கும் தேவதை என்று எக்கச்சக்க தேவதைகள் இருக்கின்றன. இதை இப்படி விவரிக்கலாம்:-


நம் உடலைப் பகுதி, பகுதியாகப் பிரித்து, அவற்றின் தன்மை, அந்த்த் தன்மையால் வரும் செயலாக்கம், அந்தச் செயலாக்கத்தில் வரக்கூடிய குறைபாடுகள், அவற்றை நிவர்த்திக்க வழிகள் என்று விஞ்ஞானம் சொல்வதைப் போல, இந்த பிரபஞ்சத்தின் ஒரு பகுதியான நமக்கும், பிரபஞ்சத்தின் பிற கூறுகளுக்கும் உள்ள தொடர்பு, அதனால் ஏற்படும் செயலாக்கம், அதில் வரும் குறைபாடுகள், அவற்றை நிவர்த்தி செய்ய முறைகள் என்னும் ஒரு அதீத ஞானத்தில் கண்டறிந்துள்ளதே வேத ஞானமாகும். பிரபஞ்சத்தின் பல கூறுபாடுகளும் தேவதைகளாக உருவகப்படுத்தப்பட்டுள்ளன. விஞ்ஞானத்தினால் நிவாரணத்தை உடலுக்குச் செய்வது போல, இந்த ஞானத்தால், கர்ம பலன்களிலிருந்து நிவாரணத்தைப் பெறும் வழிகளில் தேவதா வழிபாடு, நக்ஷத்திர வழிபாடு என்று வருகிறது.


இந்த நிவாரணம் உடலுக்கும், மனதுக்கும் மட்டுமல்ல. செய்யுளுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. நம் தமிழ்ப் பாரம்பரியத்திலேயே, ஒரு புலவன், செய்யுள் இயற்றும்போது, அது நின்று நிலைக்க வேண்டும் என்று விரும்பி, அதற்காகச் செய்யுளுக்குரிய நக்ஷத்திரத்தை அமைப்பான் என்று சூடாமணி நிகண்டில் ஒரு சூத்திரம் இருக்கிறது. (12-102)


" தனது நாளிற் பின்னாளும், சார்ந்திடும் நாலும், ஆறும்,
வினவிய எட்டு ஒன்பானும் விருத்தமொன்றில்லை தன்னான்
இனைய மூன்றுடன் ஐந்தாநாள் ஏழானாள் இவை பொருந்தா
நினையுமிம் மூன்று ஒன்பானான் நேர்படு மூன்று வட்டம்"


இதன்படி செய்யுளுக்குரிய நட்சத்திரம் ஒன்பது, ஒன்பதாக, மூன்று வட்டமாகப் பிரித்தறியப்படுகிறது. பாட்டுடைத் தலைவன் மீது பாடப்படும் முதல் பாவின் முதல் சீருக்குரிய முதல் எழுத்திற்கு அமைந்த நட்சத்திரம், அவன் நட்சத்திரத்திற்கு அடுத்த (இரண்டாவது) அல்லது, நான்காவது, ஆறாவது, எட்டாவது அல்லது ஒன்பதாவது நட்சத்திரமாக அமைத்தால் நன்று. அவ்வாறின்றி மூன்றாவது, ஐந்தாவது, அலல்து ஏழாவது நட்சத்திரமாக அமைந்தால் தீது என்கிறது இந்த சூத்திரம். எழுத்துக்குரிய நக்ஷத்திரத்தை, நாம நட்சத்திரம் என்கிறோம். இதை 'நாளெழுத்து' என்று யாப்பருங்கல விருத்தியுரை -536 குறிக்கிறது.



இந்த சூத்திரத்தில் சொல்லப்படுவது என்னவென்றால், பாவின் முதல் சீரின் முதல் எழுத்து எந்த நட்சத்திரத்திற்கு உரியது என்று பார்க்க வேண்டும். அந்த நட்சத்திரம், பாட்டுடைத் தலைவனது பிறந்த நட்சத்திரத்துக்கு 2,4,6,8,9 ஆவது நட்சத்திரமாக இருந்தால் நன்று. அதுவே செய்யுளுக்குரியது. அப்படி இல்லாமல் 3,5,7 -ஆவது நட்சத்திரமாக அமைந்தால் தீது. தீதான நக்ஷத்திர எழுத்தில் முதல் சீரின் முதல் எழுத்தை அமைத்தால் அந்தப் பாடல் நிலைக்காது, பாட்டுடைத்தலைவன் பெயரும் நிலைக்காது.


அது மட்டுமல்ல, கூடலூர் கிழார் போல, பல  புலவர்கள், சில செய்திகளை ரகசியமாகச் சொல்வதில் ஆர்வமுடையவர்கள். அவர்களது பாட்டுடைத்தலைவன் அல்லது இஷ்ட தெய்வத்தை இந்த முறையில் மறைமுகமாகச் சொல்லுதல் மரபு. அதைக் கொண்டு திருக்குறள் தேவனார் மனதில் இருந்த கடவுளையும் கண்டு பிடிக்க முடியும். அதை வேறொரு கட்டுரையில் செய்வோம். இங்கு நாம் சொல்ல வருவது என்னவென்றால், ஒன்பது, ஒன்பதாக மூன்று வட்டத்தில் அமையும் நக்ஷத்திரங்கள், செய்யுள் இயற்றுவது வரை ஊடுருவியுள்ளது, இதனால், 27 என்னும் மொஹஞ்சதாரோ அமைப்பு, ஏதோ ஒரு 27 அல்ல, அது 27 நக்ஷத்திரங்களைச் சொல்வதே என்பதாகும்.



இனி ரிக் வேதாங்க நக்ஷத்திர அமைப்புக்கு வருவோம். மேலே சூடாமணி நிகண்டு சொல்லும் தீதான நக்ஷத்திரங்களை அறியும் முறையை 'தாரா பலம்' என்பார்கள். ஒருவரது பிறந்த நக்ஷத்திரத்துக்குச் நன்மை தரும் சாதகமான நக்ஷத்திரம் எது, தீது தரும் பாதகமான நக்ஷத்திரம் எது என்று இந்த அமைப்பைக் கொண்டு பாமரர்களும் எளிதில் சொல்ல முடியும். அந்த அமைப்பை எண் வடிவத்தில் இப்படிக் காட்டலாம்.



1

6

2

7

3

8

4

9

5

 

இந்தக் கட்டத்தில் ஒன்பது நக்ஷத்திரங்கள் காட்டப்பட்டுள்ளன. இவை மேலேயுள்ள 27 நக்ஷத்திரங்கள் அமைந்துள்ள அமைப்பில்தான் காட்டப்பட்டுள்ளன. 1 ஆம் நக்ஷத்திரத்திலிருந்து பிற நக்ஷத்திரங்கள்  அமைந்துள்ள தூரத்தை எண்ணாகக் காட்டியுள்ளோம். 3,5,7 ஆகிய நக்ஷத்திரங்கள் பாதகமானவை. மேற்சொன்ன 27 நக்ஷத்திர அமைப்பில் மொஹஞ்சதாரோவின் நக்ஷத்திரக் கோவில் அமைந்திருக்குமேயானால், அங்கு வரும் மக்கள், தங்கள் நக்ஷத்திரத்தைக் கொண்டே, எந்தெந்த பகுதியில் அவர்களுக்குச் சாதகமான நக்ஷத்திரம் இருக்கிறது, அல்லது பாதகமான நக்ஷத்திரம் இருக்கிறது என்று கண்டு பிடித்து விடலாம். அதைக் கொண்டு எந்த நக்ஷத்திரத்துக்கு எந்த பூஜை செய்வது என்று முடிவெடுக்கலாம்.



மொஹஞ்சதாரோவில் அமைக்கபட்டுள்ள 27 அமைப்புகளும், தனித்தனி அஸ்திவாரம் கொண்ட அமைப்புகளாக உள்ளன என்பதே. இவை நக்ஷத்திர அமைப்புகளாக இருக்கக்கூடிய சாத்தியத்தை ஏற்படுத்துகின்றன. இன்றைக்கு வழக்கத்தில் இருக்கும் நவகிரக அமைப்புகளிலும், தனித்தனியாக 9 அடிவாரங்கள் அமைத்து அவற்றின் மீது நவகிரகங்களை பிரதிஷ்டை செய்ய வேண்டும். மொஹஞ்சதாரோவின் அமைப்பில், 27 தனித்தனி அஸ்திவாரங்களும், அவற்றுக்கிடையே தூண்கள் அல்லது கம்பங்கள் போன்றவை அமைத்திருப்பதற்கான அடையாளங்களும், மேல் விதானங்கள் இருந்திருக்கூடிய சாத்தியங்களும் தென்படுகின்றன. இன்றைய நவகிரக அமைப்புகளைச் சுற்றுவதற்கு குறுகிய சுற்று இருப்பது போல, அந்த நக்ஷத்திரங்களைச் சுற்றி வர வேண்டுமென்றால், குறுகிய வழியில்தான் சுற்றிவர வேண்டும்.

27 அமைப்புகளுமே, கிழக்கு – மேற்காக மூன்று வரிசைகளில் உள்ளன.




கிழக்கு மேற்காக அவை அனைத்தும் ஒரே நீளத்தில் உள்ளன. இன்றைய அளவுமுறையில் இது 4.5 மீட்டர் ஆகும். வடக்கு- தெற்காகக் குறுக்குவாட்டில் ஒவ்வொரு வரிசைக்கும் உள்ள நீளம் மாறுபடுகிறது. முதல் வரிசை 8 மீட்டராகவும், 2 ஆம் வரிசை 4.5 மீட்டராகவும், மூன்றாம் வரிசை 6 மீட்டராகவும் உள்ளது.


360 பாகையிலான வானத்தை 27 நக்ஷத்திரங்களால் அளப்பதே வாஸ்து சாஸ்த்திரத்தின் அள்வீட்டின் அடிப்படை என்றும், அந்த அடிப்படையே மொஹஞ்சதாரோ உள்ளிட்ட சிந்து சமவெளி நகரங்களில் காணப்ப்டுகின்றன என்றும் பார்த்தோம். அதை இங்கும் சரி பார்ப்போம்.


27 நக்ஷத்திர அமைப்பில், கிழக்கு மேற்காக ஒரே  சரியாக அமைந்துள்ள நீளம், எல்லா நக்ஷத்திரங்களும் ஒரே அளவில் குறிக்கப்ப்ட்டுள்ளதைச் சுட்டிக் காண்பிக்கிறது. இந்த நீளம் 4.5 மீட்டராக இருக்கிறது. இதுவே ஒவ்வொரு நக்ஷத்திரத்தின் நீளம் என்று கொள்ளலாம். வானத்தில் ஒரு நக்ஷத்திர நீளம் 13 பாகைகள், 20 கலைகள் ஆகும். 1 பாகை = 60 கலைகள். 13-20 என்பது, 13 X 60 = 780 + 20 கலைகள் = 800 கலைகள் ஆகும். அதாவது வானில் ஒரு நக்ஷத்திர தூரம், 800 கலைகள்.

 

மொஹஞ்சதாரோ அமைப்பில் 27 அமைப்புகளுமே ஒரே மாதிரியாக கிழக்கு – மேற்காக (நக்ஷத்திரங்கள் செல்லும் திசை) 4.5 மீட்டர் இருக்கின்றன. வானின் அளவான 360 பாகையை 4.5 ஆல் வகுத்தால், இவை நக்ஷத்திர அமைப்பே என்று நாம் சொல்லும் இந்த 27 அஸ்திவாரத்தின் நக்ஷத்திர நீளம் கிடைக்கும். அது 360 / 4.5 = 80 ஆகும். மொஹஞ்சதாரோ அமைப்பில் ஒரு நக்ஷத்திர நீளம் 80, அதுவே வானில் 800 கலை!


ஒரே விகிதாசாரத்தில் அமைந்துள்ளதே இது  தற்செயலானதா?


பிற அமைப்புகளில் வாஸ்து அளவீடுகள் அமைந்துள்ளது போலவே,

இதிலும் அமைந்துள்ளது. நக்ஷத்திர நீளத்தின் விகிதாச்சாரத்தில் அமைந்துள்ளதால்,

இந்த அமைப்பு நக்ஷத்திரக் கோவிலாகத்தானே இருக்க முடியும்?


 

வடக்கு- தெற்கு அமைப்பில், இந்த மூன்று வரிசைகளின் குறுக்களவு மாறுபடுகிறது. இன்று வரை யாருமே இந்த நக்ஷத்திரங்களின் அகலத்தை – அதாவ்து வானில் இவை பரவியுள்ள குறுக்குத்தூரத்தை பாகைகள் கணக்கில் அளந்திருக்கவில்லை. அல்லது இந்த அளவுகளுக்கு வேறு தாத்பரியம் இருக்கலாம். உதாரணமாக முதல் இரண்டு வரிசைகளிலும் உள்ள 18 நக்ஷத்திரங்களும் ஒன்றுக்கொன்று வேதை கொண்டவை. வேதை என்றால் வேதனை என்றும், ஒன்றையொன்று பாதிப்பன என்றும் பொருள். வானில் இவை ஒன்றுக்கொன்று எதிரெதிராக இருக்கின்றன. முதல் இரண்டு வரிசையில் ஒன்றுக்கொன்று வேதை உள்ள நக்ஷத்திரங்களை இந்த அட்டவணையில் ஒரே நிறத்தில் காணலாம்.


 

ஜோ (அஸ்வினி)

த்ர (திருவாதிரை)

 கே (விசாகம்)

ஸ்வே (உத்ராடம்)

ரோ (ரோஹிணி)

ஷ (ஆயில்யம்)

 மூ (மூலம்)

சக் (சதயம்)

ஸூ (புனர் வசு)

மா (உத்ரம்)

ண (திருவோணம்)

ரே (ரேவதி)

 கு (மகம்)

ஸ்வா (ஸ்வாதி)

 அஜ (பூரட்டாதி)

க்ரு (கிருத்திகை)

ஹா (ஹஸ்தம்)

ஜே (ஜேஷ்டா / கேட்டை)

 


மொஹஞ்சதாரோ அமைப்பில், இந்த இரண்டு வரிசைகளும் 2:1 என்ற விகிதத்தில் அடுத்தடுத்து அமைந்துள்ளன.

மூன்றாவது வரிசையில் உள்ள நக்ஷத்திரங்கள் தங்களுக்குள்ளேயே ஒன்றுக்கொன்று வேதையானவை. அது மட்டுமல்ல, ஒன்றன் கீழ் ஒன்றாக அவை அமைத்துள்ள வரிசையில், அவற்றின் கிரக அதிபர்கள் சுக்கிரன், சனி, செவ்வாய் என்று மீண்டும் மீண்டும் வரும்படி உள்ளன. ஆண், பெண் திருமண வாய்ப்புகளில் சுக்கிரன், செவ்வாய்க்கு முக்கிய இடம் உண்டு. அந்த வாய்ப்பைக் கெடுப்பதில் சனிக்கு முக்கியப் பங்குண்டு. இவை எல்லாம் ஒரு வரிசையில் இடம் பெறுகின்றன. இவ்வாறாக தாத்பரியங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.



மொஹஞ்சதாரோவின் 27 பகுதி அமைப்பின் கீழே குளத்து நீர் ஓடும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.




இதைக் கொண்டே, இந்த அமைப்பு தானியக் கிடங்காக இருக்க முடியாது என்று உறுதியாகச் சொல்லலாம். மேலும் இந்த அமைப்பில் ஒரு தானியமும் கிடைக்கவில்லை. மாறாக இந்த அமைப்பின் 27 பகுதிகளைச் சுற்றி தடுப்புகளும், விதானங்களும் அமைந்திருந்தன என்று சொல்லும் வண்ணமே இருக்கிறது. மேலும் இப்படி நீர் ஓடும் அமைப்பை ஒரு காரணத்துக்காகத்தான் செய்திருக்கிறார்கள்.


வானத்தைக் கடல் போல உருவகப்படுத்தி, ஆகாய கங்கை அல்லது பாற்கடல் என்று சொல்லும் வழக்கம் வேத மரபில் உள்ளது. ஆகாய கங்கையாக 27 நக்ஷத்திரக் கூட்டங்களும் அமைந்துள்ளன. அவற்றின் கணவனான சந்திரன் அவை ஒவ்வொன்றையும் ஒவ்வொரு நாள் சந்திக்கிறான் என்பதே இவற்றைப் பற்றிய உருவகமாகும். ஆகாய கங்கையாக உருவகிக்கப்பட்ட்தை, உண்மையாகவே நீரில் சுற்றி வரும் மீன்களாக இந்த நக்ஷத்திரங்களைக் காண விரும்பி, இந்த அமைப்பைச் சுற்றிக் குளத்து நீர் செல்லும் வண்ணம் அமைத்திருக்க் வேண்டும். மேலும், இந்த நக்ஷத்திரங்களே நீர்தாரை போல பலப்பல நன்மைகளைத் தரவல்லவை எனபதாலும் அவற்றைச் சுற்றி நீர்ப் போக்கு இருக்கும் வண்ணம் செய்திருக்க்க்கூடும்.



27 நக்ஷத்திரங்களுக்கும் நீர் சம்பந்தம் உள்ளது என்பதும், அவை குறித்து நீர்தானம் செய்தல் சிறந்த்து என்பதும், வேத மரபில் இருந்திருக்க வேண்டும். இதற்கும் ஒரு தொடர்பைத் தமிழ் நாட்டில் காணலாம்.


1818 ஆம் ஆண்டில் மெட்ராஸ் கலெக்கடராக இருந்த எல்லிஸ் என்பவர் குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்க 27 கிணறுகள் வெட்டினார். அவற்றில் ஒன்று ராயபேட்டை பெரிய பாளையத்தம்ம்ன் கோவிலில் இன்றும் இருக்கிறது. அந்தக் கிணறில் செதுக்கப்பட்ட வாசகங்கள் மூலம், அவர் 27 கிணறுகள் வெட்டினார் என்று தெரிகிறது. திருக்குறளால் ஈர்க்கப்பட்ட அவர், ஒரு நாட்டுக்கு நீர் வளம் முக்கிய உறுப்பாகும் என்று சொல்லும் குறளால் ஈர்க்கப்பட்டு, தான் அவ்வாறு செய்ததாகச் சொல்லியுள்ளார். அவர் எழுதியுள்ளதைக் கீழே காணலாம்.



"சயங்கொண்ட தொண்டிய சாணுறு நாடெனும்
ஆழியில் இழைத்த வழகுறு மாமணி
குணகடன் முதலாக குட கடலளவு
நெடுநிலம் தாழ நிமிர்ந்திடு சென்னப்
பட்டணத்து எல்லீசன் என்பவன் யானே
பண்டாரகாரிய பாரம் சுமக்கையில்
புலவர்கள் பெருமான் மயிலையம் பதியான்
தெய்வப் புலமைத் திருவள்ளுவனார்
திருக்குறள் தன்னில் திருவுளம் பற்றிய்
இருபுனலும் வாய்த்த மலையும் வருபுனலும்
வல்லரணும் நாட்டிற் குறுப்பு
என்பதின் பொருளை என்னுள் ஆய்ந்து
ஸ்வஸ்திஸ்ரீ சாலிவாகன சகாப்த வரு
..
றாச் செல்லா நின்ற
இங்கிலிசு வரு 1818ம் ஆண்டில்
பிரபவாதி வருக்கு மேற் செல்லா நின்ற
பஹுதான்ய வரு த்தில் வார திதி
நக்ஷத்திர யோக கரணம் பார்த்து
சுப திநத்தி லிதனோ டிருபத்தேழு
துரவு கண்டு புண்ணியாஹவாசநம்
பண்ணுவித்தேன்"


(ஆதாரம்:- http://en.wikipedia.org/wiki/Francis_Whyte_Ellis)



கிணறுகளும், கால்வாய்களும் வெட்டுவது, காலம் காலமாகப் பலரும் செய்து வந்திருப்பதுதான். ஆனால் குறிப்பாக 27 கிணறுகளை இவர் ஏன் அமைத்தார் என்ற ஒரு கேள்வி எழுகிறது.



அதை ஆராயும் முன், ஒரு வேண்டுகோள். இவரது குறள் ஆர்வத்தைக் கொண்டு யாரும் மயங்கி விட வேண்டாம்.

திராவிடக் கருத்தைப் பரப்பியதில் இவர் கால்டுவெல்லுக்கு முன்னோடி ஆவார்.

மதமாற்ற நோக்கில் திராவிட 'இனத்தை' உருவாக்கத் தமிழைத் தனிமைப்படுத்தியவர்களில் காலத்தால் இவருக்கு முதலிடம் உண்டு.    

சமஸ்க்ருத்த்திலிருந்துத் தென்னிந்திய மொழிகளைப் பிரித்து, தமிழைத் திராவிட மொழியாக்கிய செயல் இவருடையதுதான்.


திருக்குறளைப் படித்து, அதன் முதல் 18 அதிகாரங்களுக்கு உரை எழுதினாராம் இவர்.

னால் திருக்குறளில் எதைக் கண்டார்?

அதை ஒரு சமண நூலாக்கி, அதை எழுதிய திருக்குறள் தேவனாரையும், சமணராக்கிய பெருமை இவருக்கே உரியது.

அன்றைய காலக்கட்டத்தில், எடுத்த எடுப்பில் திருக்குறள் தேவனாரைக் கிருஸ்துவராக்க் முடியவில்லை.

அதனால் அவரைச் சமணராக்கி, சமணக்கோலத்தில் திருக்குறள் தேவனார் உருவம் கொண்ட மாதிரித் தங்கக் காசும் அச்சடித்தார்.


 


ஆனால் அன்றைய ஆங்கில அரசின் ஒரு கொள்கை முடிவினால், தங்கக் காசுகளை அச்சடித்து புழங்கவிட முடியவில்லை. இந்தக் காசுகள் புழங்கியிருந்தால், இந்தச் சமணக் கோலத்தை மறுப்பதற்கு மிகவும் பாடுபட்டிருக்க வேண்டும். 


ஆனால் எல்லிஸ் செய்த நற்செயல்கள் இரண்டு இருக்கின்றன.


  • தமிழ் நாட்டில் நுழைந்த முதல் கிருஸ்துவப் பிரசாரகரான நொபிலி, விஷமத்தனமாக எழுதிய யசூர் வேதம் என்னும் ஏசு வேதம் என்பது உண்மையிலேயே, ஹிந்து மத யஜூர் வேதம்தானா என்று இவரிடம் கருத்து கேட்கப்பட்டது. இவர் அது யஜூர் வேதமல்ல என்று தெரிவித்தது இவர் செய்த ஒரு நன்மை
  • மற்றொன்று 27 கிணறுகளை அமைத்தது.


அது என்ன 27 கிணறுகள்? 28 அல்லது 26 ஆக அமைத்திருக்கலாமே என்ற கேள்வி எழுகிறது. அல்லது முழு எண்ணாக 30 கிணறுகள் அமைத்திருக்கலாமே என்ற கேள்வி எழுகிறது. 27 என்னும் எண்ணிக்கைக்கு ஒத்தாற்போல, வேறு எந்த காரணமும் தென்படவில்லை. ஆனால் மக்கள் மத்தியில் 27 நக்ஷத்திரங்கள் பெயரில் நீர்தானம் செய்யும் வழக்கம் இருந்திருந்தால், அதற்கொப்பாகத் தானும் 27 கிணறுகளை அமைத்திருப்பார்.

அவர் செய்தது எல்லாமே, நம் மக்கள் மரபுகளை எல்லாம், தான் ஏதோ பெரிதாகத் தாங்குவது போன்ற பாவனையில்தானே செய்துள்ளார்?

நம்முடைய திருக்குறளை அவர் என்ன புரிந்து கொண்டு விட்டார்? 

திருக்குறள் தேவனாரைச் சமணராக்கி, அவரைப் பாராட்டும் முகமாகத் தங்கக் காசு வெளியிட்டார்.

அதுபோல மக்கள் வாழ்க்கை நெறிகளுக்கு மதிப்பு கொடுப்பது போன்ற பாணியில்

குறிப்பாக  27 என்ற எண்ணிக்கையில், நீர்தான அமைப்புகளை அவர் ஏற்படுத்தியிருக்க வேண்டும்.



27 கிணறுகள் அமைக்கப்பட்ட விவரத்தை நோக்கும் போது, மொஹஞ்சதாரோவில் உள்ள 27 அஸ்திவார அமைப்புகள், அவ்ற்றுக்குச் செல்லும் வண்ணம் அமைக்கப்பட்ட நீர் அமைப்பு ஆகியவை, பாரதம் தழுவிய நக்ஷத்திர வழிபாட்டினைக் காட்டுவதாகத் தெரிகிறது.

வேத மரபில் இருப்பது, மொஹஞ்சதாரோவில் இருந்திருக்கிறது.

அந்த மரபு சார்ந்த ஜோதிடமும், வழக்கங்களும் தமிழ் நாடு வரை இருந்திருக்கின்றன.

இது எங்கும் பரவியிருந்த பொது கலாச்சாரத்தை, அறிவுப் பெட்டகங்களைக் காட்டுகிறதே தவிர,

ஆரிய- திராவிடப் போரையோ, அல்லது

வேத மரபில் சாராத தமிழ்க் கலாச்சாரம் என்றோ காட்டவில்லை.


 

வராஹமிஹிரர் கூற்றுப்படி, 27 நக்ஷத்திர வழிபாட்டின் மூல தெய்வம் லக்ஷ்மி நாராயணன் ஆவார்.

அதாவது லக்ஷ்மி நாராயணனே, நக்ஷத்திர புருஷன் ஆவார்.

அதனால் கோவில் போன்ற மொஹஞ்சதாரோ அமைப்பின் நடுவில் லக்ஷ்மிநாராயணனை வழிபட்டிருக்க வேண்டும்.




மேலேயுள்ள பட்த்தில் 'இங்கு என்ன இருந்தது?' என்று நாம் காட்டும் இடத்தில் லக்ஷ்மிநாராயணன் கோவில் இருந்திருக்க வேண்டும். தானியக் கிடங்கு என்று சொல்லப்படும் பகுதியில் 3 வரிசையில் 27 பகுதிகள் இருக்கின்றன. அவற்றை நக்ஷத்திரக் கோவில் அமைப்புகள் என்றும், நக்ஷத்திர புருஷனுக்கு (லக்ஷ்மி நாராயணன்) அருகில் இப்படி அமைவது பொருத்தமே என்பதும் நம் கருத்து.


ராமாயண காலம் முதற்கொண்டே கோவில்கள் இருந்திருக்கின்றன.

ராமன், லக்ஷ்மி நாராயணனை வழிபட்டிருக்கிறான் என்று வால்மீகி கூறுகிறார். மஹாபாரத காலத்திலும் கோவில்கள் இருந்திருக்கின்றன.

பார்வதி கோவிலிலில் ருக்மிணி வழிபட வரும் போது, கிருஷ்ணன் ருக்மிணியை அழைத்துச் சென்று திருமணம் செய்து கொள்கிறான்.

எனவே, மஹாபாரத காலத்தை ஒட்டி எழுந்துள்ள மொஹஞ்சதாரோவில் லக்ஷ்மி நாராயணனுக்குக் கோவில் எழுப்பி வழிபட்டிருப்பதில் ஆச்சரியமில்லை.


கிருஷ்ணனது தாக்கம் கொண்ட ஒரு சமுதாயமே, கிருஷ்ணன் காலத்துக்குப் பிறகு அங்கு குடியமர்ந்தது என்று சொல்லும் வண்ணம் யாதவர்களது ஏறு தழுவுதல் சின்னம் அங்குக் கிடைத்துள்ளது.

மாட்டுத் தொழுவங்கள் நிறைந்த குறுகிய தெருக்கள் அமைந்துள்ளன.

நக்ஷத்திரக் கோவிலும், நக்ஷத்திரப் புருஷ்னான லக்ஷ்மி நாராயணன் கோவிலும் இருந்திருக்க வேண்டும்.

இதை மேலும் உறுதி செய்யும் வண்ணம், ஹரப்பாவில் 12 பகுதிகளாக அமைந்துள்ள 'கிடங்கு' ஒன்று காணப்படுகிறது.

அதையும் ஆராய்வோம்.




 

3 கருத்துகள்:

  1. மோகன்சதாரோ - என்ற சொல்லிற்கு சௌராஷ்டிர மொழியில் மொரன் + சத்தார் என்று பிரித்து பார்த்தல், இறந்தார்களின் சத்திரம் என்று பொருள் தருகிறது.

    பதிலளிநீக்கு
  2. கருத்துரைக்கு நன்றி திரு பாஸ்கர நாராயணன் அவர்களே. ஆனால் மொரன் சத்தார் என்பது மொஹஞ்சதாரோ என்று உருமாற்றம் அடைவது எளிதல்ல,

    இந்த்த் தொடரின் 80 ஆவது கட்டுரையைப் படிக்கவும், அதில் மோஹனஸ்ய தரு என்பது மொஹஞ்சதாரோ என்றாகி இருக்கலாம் என்று விளக்கியிருப்பேன்.
    81 ஆவது கட்டுரையில் குஜராத் மொழியில் வழங்கும் டேரா என்னும் சொல்லிருந்தும் இந்தப் பெயர் உண்டாகியிருக்கலாம் என்று விளக்கியிருப்பேன். படிக்கவும்.

    டேரா (Dera) என வழங்கும் குஜராத்திச் (சௌராஷ்ட்ரியத்திலும் இப்படியா?) சொல்லைக் கொண்ட கோலா டேரா என்னுமிடம் குஜராத்தில் சிந்து சமவெளி நாகரிகத்தில்தான் வருகிறது. இன்றைய பாகிஸ்தானத்தில், டேரா, டேரி என்று முடியும் இடங்கள் பல சிந்து சமவெளி அடையாளாங்களுடன் உள்ளன. டேரா, டேரி என்பவை கோவில்களுக்கான பெயர்கள் என்று ஒரு குஜராத்தி நண்பர் மூலம் அறிந்தேன். அந்தச் சொற்கள், மொஹஞ்சதாரோ, ச்ஹன்ன தாரோ போன்ற சிந்து சமவெளி இடங்களில் இருந்திருக்கலாம்.

    மொஹஞ்சதாரோவுடன் இறந்தவர்களைத் தொடர்பு படுத்தியவர்கள், ஆரியப் படையெடுப்பை நம்பிய ஆங்கில ஆராய்ச்சியாளர்களே. அந்த இடத்தில் போர் நடந்ததாகவோ, அல்லது மக்கள் விரட்டப்பட்டதாகவோ, அல்லது பல மக்கள் இறந்த அடையாளமோ இல்லை என்பதே ஆராய்ச்சிகள் காட்டும் முடிவாகும். அந்த இடம் மேடாக இருக்கக்காரணம், பல முறை வெள்ளத்தால் வீடுகள் அழிந்து விட்டிருக்கின்றன. அவற்றின் அடிச் சுவர்கள் மீதே மீண்டும் வீடுகள் கட்டி வாழ்ந்திருக்கிறார்கள். இதனால் அந்த இடமே மேடிட்டு விட்டது என்பதே.
    இறந்தவர்கள் அடையாளம், அல்லது கல்லறைகள், அல்லது புதைந்த எலும்புக் கூடுகள் ஆகியவை இல்லாததாலும், அந்த இடம் மேடிட்டிருப்பதற்கான மண்ணாராய்ச்சிக் காரணங்களாலும், இனியும் அந்த இடத்தை “இறந்தவர் மேடு” என்று பொருள் கொள்வது சரியல்ல.

    அதனால்தானோ என்னவோ, அந்த இடத்தைப் பற்றிய அதிகாரபூர்வமான இணையத்தில் மோஹன் என்னும் கிருஷ்ணன் பெயருடன் தொடர்பு இருக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த இணைப்பை இங்கே காணலாம்:-

    http://www.mohenjodaro.net/mohenjodaroessay.html


    அதனால்தானோ

    பதிலளிநீக்கு
  3. திரு பாஸ்கர் அவர்களே, உங்கள் வலைத்தளங்களைப் படித்தேன். நிறைய விவரங்கள் கிடைத்தன. சௌராஷ்டிர மொழி சம்பந்தமான விவரங்களுக்கு உங்களைத் தொடர்பு கொள்ளலாமா?

    பதிலளிநீக்கு