சனி, 24 டிசம்பர், 2011

91. மொஹஞ்சதாரோவும், மீனாட்சி கோவிலும்!


ஒரு ஊரையோ அல்லது ஒரு நகரத்தையோ உண்டாக்க வேண்டுமென்றால், முதலில் அங்கு ஒரு கோவிலை அமைத்து, அதைச் சுற்றி குடியிருப்புகளை உண்டாக்கும் வழக்கம் நம் நாட்டில் என்றென்றும் இருந்து வந்திருக்கிறது. திசைத் தெய்வங்கள், சதுக்க பூதங்கள் என்று பலதரப்பட்ட தெய்வங்களயும் வழிபட்ட விவரம், தமிழ் நூல்களில் மட்டுமல்ல, வால்மீகி ராமாயணத்திலும் இருக்கிறது.


ராமனுக்குப் பட்டாபிஷேகம் செய்ய வேண்டும் என்று தசரதன் முடிவெடுத்தவுடன், கோவில்களிலும், நாற்சந்திகளிலும் பூக்கள், உணவுப் பொருட்களுடன் வழிபாடுகள் செய்யச் சொல்கிறான்.


மஹாபாரதத்திலும், கோவில்கள் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. கிருஷ்ணன் - ருக்மிணி திருமணத்தில் ஒரு கோவில் முக்கிய இடம் வகித்தது. அந்தத் திருமணத்திற்கு ருக்மிணியின் சகோதரன் எதிர்ப்பு தெரிவிக்கவே, தன்னை ரகசியமாக அழைத்துக் கொண்டு போகுமாறு கிருஷ்ணனுக்கு ருக்மிணி சொல்லி அனுப்புகிறாள். அவ்வாறு அழைத்துக் கொண்டு போக அவள் தேர்ந்தெடுத்த இடம் பார்வதி கோவிலாகும். பார்வதி கோவிலுக்கு அவள் வழிபட வரும் போது அங்கு கிருஷ்ணன் வந்து, அவளைத் தன் தேரில் ஏற்றிச் சென்று விடுகிறான். 


மஹாபாரதக் காலத்திலேயே கோவில்கள் இருந்ததால், மோஹனஸ்ய தருவாக இருந்திருக்கூடிய மொஹஞ்சதாரோவிலும் கோவிலைக் கட்டி, அதை ஒட்டி நகரத்தை நிர்மாணித்திருக்க வேண்டும். ஒரு கோவில் என்றால், அதன் முக்கியத் தெய்வம், சுற்றுத் தெய்வங்கள், ஒரு குளம், மண்டபங்கள் போன்ற அமைப்புகள் இருக்க வேண்டும். மொஹஞ்சதாரோவிலும் அப்படிப்பட்ட அமைப்புகள் உள்ளன.


27 பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட அமைப்புக்கு வட கிழக்கே குளம் இருக்கிறது. இவை இரண்டுக்கும் கிழக்கே மடம் போன்ற அமைப்பில் அறைகள் கொண்ட அமைப்பு இருக்கிறது. வெளிநாட்டவர் பார்வையில், இதைக் கல்லூரி என்கிறார்கள்.




ஒன்றுக்கு ஒன்று என்று அமைக்கப்பட்ட அறைகள் இங்கு இருக்கின்றன

இப்படிப்பட்ட அமைப்பு வாஸ்து விதிப்படி ஏக பத வாஸ்து அல்லது

'சகல பத வாஸ்து' (Sakala padam) எனப்படும்.

இதை ஸ்வஸ்திகா அமைப்பு என்றும் சொல்வார்கள்.

இந்த அமைப்பில் ஆஸ்ரமங்கள் அமைக்கப்படும்,

இந்த அமைப்பில் துறவிகள், முனிவர்கள் இருப்பார்கள்.


குரு அல்லது பூஜாரி போன்ற அமைப்பில் ஒரு உருவ பொம்மை கிடைத்து என்று சொன்னோமே, அது இங்குதான் கிடைத்தது.

 




இந்த அமைப்புகளுக்குச் சற்று தொலைவில் தெற்குப் பகுதியில் 20 கால் மண்டபம் இருக்கிறது.

ஆம், நான்கு வரிசையில் ஐந்தைந்து தூண்களாக 20 தூண்கள் இருந்த அமைப்பு இருக்கிறது.





இதுவும் வாஸ்து சாஸ்திரப்படியே உள்ளது. வீடு, மாளிகை ஆகியவற்றுக்கு முன்புறம், வீட்டின் தொடர்ச்சியாகத் தூண்கள் கொண்ட நீட்சி அமையலாம். ஆனால் இப்படிப்பட்ட அமைப்பில் அதிக பட்சம் 16 தூண்களையே அமைக்க வேண்டும் என்பது வாஸ்து விதி. 16 க்கு மேல் தூண்கள் அமைக்க வேண்டுமென்றால், அவற்றைத் தனியாக அமைக்க வேண்டும். அந்த அமைப்புக்கு மண்டபம் என்று பெயர். மேலே காட்டப்பட்ட அமைப்பு, 20 தூண்கள் கொண்ட மண்டபமாகும். இப்படிப்பட்ட அமைப்புகள் கோவில்களில் இருக்கக்கூடியது. கோவில் உற்சவம், ஆடல், பாடல், சொற்பொழிவு, கூட்டம் கூட்டி முடிவெடுத்தல் போன்ற பல காரணங்களுக்காக இது பயன்படுவது.

இவற்றையெல்லாம் ஆராயும் போது, மீதம் நாம் பார்ப்பது கிடங்கு என்று சொல்லப்படும் 27 பகுதி அமைப்பும், அதற்கு வட கிழக்கில் உள்ள குளமுமேயாகும்.




27 பகுதிகளாக உள்ள அமைப்பு தானியக் கிடங்காக இருக்க முடியாது. குளத்துக்கு அருகே தானியக் கிடங்கு அமையாது. இங்கு தானியம் சேமித்து வைத்த அடையாளங்களும் இல்லாததால், இன்றைய ஆராய்ச்சியாளர்கள் இது கிடங்காக இருக்க முடியாது என்று கருகிறார்கள்.


இந்த அமைப்பை ஒரு கோவில் அமைப்பாகக் காணாலாம். கோவில் என்றால் முக்கியத் தெய்வம் இருக்குமிடம் தனிப்பட்டு இருக்கும். இந்த அமைப்பில் அந்த இடம் வெற்றிடமாக உள்ளது. அதை இந்தப் படத்தில் காட்டியுள்ளோம்.

 


 

 

இந்த அமைப்பு நம் நாட்டுக் கோவில்களின் அமைப்பேயாகும்.

இதைப் போன்ற அமைப்பில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலும் அமைந்துள்ளதைக்

கீழ்க்காணும் மீனாட்சி அம்மன் கோவில் வரைபடத்தில் காணலாம்.


மீனாட்சி அம்மன் கோவில் அமைப்பில் பொற்றாமரைக் குளம் இருக்கும் திக்கில், மொஹஞ்சதாரோ குளம் அமைந்திருக்கிறது. அதை ஒட்டி மீனாட்சி அம்மன் சன்னிதி இருக்கிறது. மொஹஞ்சதாரோவில் அந்த இடத்தில் 27 பகுதிகள் கொண்ட அமைப்பு (கிடங்கு) இருக்கிறது.


மீனாட்சி சன்னிதிக்கு இடப்புறம், முக்கிய அமைப்பாக சுந்தரேஸ்வரர் சன்னிதி உள்ளது. மொஹஞ்சதாரோவில் அந்த இடத்தில் தற்சமயம் எதுவும் இல்லை. ஆனால் மொத்த அமைப்பையும் நோக்கும் போது, அங்கு ஒரு பெரிய அமைப்பு – ஒரு முக்கிய அமைப்பு இருந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. அது அழிந்துவிட்டிருக்கிறது.

அதுவே மொஹஞ்சதாரோவின் முக்கியக் கடவுளாகவும் இருந்திருக்க வேண்டும். அது என்ன கடவுள் என்றறிவதற்கு முன், நாம் கவனிக்க வேண்டிய விவரங்கள் இங்கு இருக்கின்றன. மொஹஞ்சதாரோவின் அமைப்பும், மீனாட்சி கோவிலின் அமைப்பும் ஒத்தாற்போல இருக்கவே, மொஹஞ்சதாரோவில் இருந்தவன் திராவிடன். அவன் ஆரியனால் துரத்தப்பட்டுத் தமிழ் நாட்டுக்கு வந்த போது, அங்கு மொஹஞ்சதாரோவில் அமைத்தது போலவே, மீனாட்சி கோவில் அமைத்தான் என்று தயவு செய்து யாரும் சொல்ல வேண்டாம்.


திராவிடவாதிக்குத் தெய்வமே கிடையாது.


அவன் மொஹஞ்சதாரோவில் இருந்ததாகப் பரப்பப்பட்ட கதையை நம்புகிறான்.


ஆனால் மொஹஞ்சதாரோவில், தெய்வ வழிபாடு இருந்திருக்கூடிய சாத்தியங்கள் இருக்கின்றன என்பதை வலியுறுத்தவே இத்தனை விவரங்களையும் சொல்லி வந்தோம்.

மதுரையில் மீனாட்சி ஆலயம் அமைக்கப்பட்டது,3 ஆம் கடல் கோளுக்குப் பிறகு வந்த காலமாகும்.  குமரி, கொல்லம் எல்லாம் கடலில் முழிகினதால், தென் கடலிலிருந்து தப்பி, இன்றைய மதுரைக்குத் தென்னன் பாண்டியன் வந்திருக்கிறான். வந்த இடத்தில், ஆதியிலிருந்து அவனை வழிப்படுத்திய மீனாட்சி – சுந்தரேஸ்வர்ருக்கு ஆலயம் எழுப்பியிருக்கிறான். இன்றைக்கு 3500 ஆண்டுகளுக்கு முன் 3 ஆவது கடல் கோள் நடந்தது. எனவே இந்தக் காலக்கட்ட்த்துக்குப் பிறகே மீனாட்சி கோவில் கட்டப்பட்டிருக்க வேண்டும்.


 

5000 வருடங்களுக்கு முன்னால் மொஹஞ்சதாரோ அமைப்பு கட்டப்பட்டது. அதற்கு 3500 ஆண்டுகளுக்குப் பிறகு மீனாட்சி கோவில் கட்டப்பட்டிருக்கிறது, இரண்டிலும், பொதுவான அமைப்புகள் இருக்கின்றன என்பதால், பாரதம் முழுவதும் ஒரே மாதிரியான கட்டுமான அமைப்புகள் இருந்து வந்திருக்கின்றன, அவற்றுக்கு ஆதாரமான வாஸ்து அமைப்புகளும், அளவீடுகளும் கங்கை முதல், மறைந்து விட்ட குமரிக்கோடு வரை ஒன்றே போல இருந்து வந்திருக்கின்றன என்றே சொல்லத் தோன்றுகிறது.

அல்லது கட்டுமானப் பணியாளர்கள், பாரதமெங்கும் சென்றிருக்கிறார்கள். எங்கெல்லாம் தேவையோ அங்கெல்லாம் அவர்களை வரவழைத்து கட்டுமானங்கள் செய்திருக்கிறார்கள் என்றும் சொல்ல்லாம். எவ்வாறு மய தானவன், பாண்டவர்களுக்கு அரண்மனையும், நகரமும் கட்டிக் கொடுத்தானோ, அவ்வாறே, பல கம்மாளர்களும், சிற்பிகளும், தச்சர்களும், கொத்தனார்களும், ஆங்காங்கே சென்று கட்டுமானம் செய்வித்தும், சென்ற இடங்களில், அங்குள்ளவர்களுக்குக் கற்றுத் தந்தும் இருக்கிறார்கள் என்றே சொல்லவேண்டியிருக்கிறது.


பார்ப்பனர்களை வரவழைத்து ஆரியத்தைப் பரப்பினார்கள், வேதத்தைப் பரப்பினார்கள் என்று சொல்லும் திராவிடவாதிகள் இதற்கு என்ன சொல்லப்போகிறார்கள்?

ஆரியக் கோவில்கள் உருவாக்குவதில் பார்ப்பனர்களுக்குப் பங்கு இல்லை. கம்மாளார்களுக்கும், சிற்பிகளுக்கும், கட்டுமானப் பணியாளர்களுக்கும் தான் பங்கு இருக்கிறது. கோவில்களும், அவற்றில் நடக்கும் வேத வழிபாடுகளும் ஆரியமென்றால், அந்த ஆரியத்தைப் பரப்பினதில் இந்தத் தொழிலாளர்களுக்குத்தான் அதிக பங்குண்டு.

இவர்கள் எல்லோரையும் விட, இன்னொருவருக்கு அதிக பங்குண்டு. அவர் அந்தக் கோவிலைக் கட்டுவதற்கு ஆணை பிறப்பித்து, அதற்கான செலவையும் செய்யும் அரசனாவார்.


கண்ணகி கோவிலைக் கட்டினானே சேர மன்னன், அந்தக் கோவிலைக் கட்ட வேண்டும் என்று எந்த ஆரியப் பார்ப்பனனும் அவனைத் தூண்டவில்லை. கண்ணகி கதையைக் கேட்டதும் அந்தச் சேர மன்னன், தன் மனைவியிடம் கருத்து கேட்டான். கணவன் இறந்ததும் தன் உயிரை விட்ட பாண்டியன் மனைவி நல்லோர் வியக்கும் நலமுள்ளவளா? அல்லது கணவனை இழந்து அவனுக்கு ஏற்பட்ட பழியைத் தீர்த்து, அவனே தேவர்களுடன் விமானத்தில் வந்து மேலுலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட கண்ணகி அதிக நலமுடையவளா என்று பட்டிமன்ற பாணியில் செங்குட்டுவன் கேட்டான்.


அதற்கு அவன் பட்டத்து ராணியான இருங்கோ வேண்மாள், கண்ணகியைச் சுட்டிக் காட்டினாள். கணவனை இழந்ததால் ஏற்படும் துன்பத்தை அனுபவிக்காமல் இறந்துவிட்ட பாண்டியன் மனைவி, மேலுலகத்தில் கடவுளாக மதிக்கப்படுவாள். ஆனால் கணவனை இழந்து துன்பமுற்று, நம் நாட்டுக்கு வந்த இந்தப் பத்தினிக் கடவுளை நாம் வணங்க வேண்டும் என்று சொல்லவே, கண்ணகிக்குக் கோவில் எழுப்ப அரசன் முடிவு செய்கிறான்.

அந்தக் கோவிலை எப்படிக் கட்ட வேண்டும் என்பதை ஒரு கூட்டு ஆலோசனையாகச் சேர மன்னன் செய்தான். அவனது 'நூலறி புலவர்" இமயத்தில் கல்லெடுத்து, கங்கையில் நீராட்டிக் கொண்டு வருவதே சாலச் சிறந்தது என்கிறார். விரட்டப்பட்டவர்களாகத் தமிழர்கள் இருந்திருந்தால், ஆரியச் சின்னங்களுக்கு இவ்வாறான முக்கியத்துவம் தருவார்களா?


இத்துடன் கோவில் கதை முடியவில்லை. கல்லை எடுத்துக் கொண்டு வந்து கோவில் எழுப்புவதற்கு ஒரு ஒரு குழுவையே வைத்திருந்தான். கோவில் வேலையை மேற்பார்வை பார்ப்பதற்கு 'அறக்களத்து அந்தணர், ஆசான், பெருங்கணி, சிறப்புடைக் கம்மியர்" (கம்மாளர்) என்று இவர்களோடு அடிக்கடி கோவிலுக்குச் சென்று மேற்பார்வை பார்த்து வந்தான். ஒரு கோவில் அமைப்பில் அவரவர்களுக்கென்று பங்கு இருக்கிறது. அவர்களைச் செம்மனே வழி நடத்தி, தான் எண்ணியபடி கோவில் கட்டுபவன் அரசன் ஆவான்.  இன்றைக்குத் தமிழ் நாட்டில் கிடைத்துள்ள எந்தக் கல்வெட்டைப் பார்த்தாலும், அரசனது முடிவின்படியே கோவில்களும், வழிபாடுகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன என்று தெரிகிறதே தவிர, பார்ப்பனருக்கோ அல்லது ஒரு குறிப்பிட்ட இனம் அல்லது தொழில் கொண்டவருக்கோ அதிகாரம் இல்லை.

மீனாட்சி கோவிலைக் கட்டினதில் பாண்டிய அரசனுக்கு முக்கியப் பங்கு இருந்திருக்கும், ஆனால், அந்தக் கோவிலை அமைத்து, வழிபாடுகளைக் கொண்டு வருவதில், அவ்வவற்றுக்கான மக்களை ஈடுபடுத்தியிருப்பான்.



இனி இதை இன்னொரு கோணத்திலிருந்தும் பார்க்கலாம். இன்றைக்கு 3500 ஆண்டுகளுக்கு முன் கடலூழி கண்டு இன்றைய மதுரையில் தென்ன்ன் அமர்ந்தான். அதே காலக்கட்ட்த்தில் சிந்து சமவெளி நாகரிகமும் முடிவுக்கு வந்தது, அதாவது, சிந்து சமவெளிப் பகுதிகளிலிருந்து மக்கள் வெளியேறி இருக்கின்றனர், ஆரியர்களால் வெளியேற்றப்பட்ட அந்த மக்களே தமிழ் நாட்டுக்கு வந்து குடியமர்ந்தார்கள் என்ற மாக்ஸ் முல்லர் கதைக்கு எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. 88 ஆம் கட்டுரையில் சொன்னது போல, பொ.பி 2 ஆம் நூற்றாண்டு வரையிலும், மொஹஞ்சதாரோவில் மக்கள் இருந்திருக்கிறார்கள். ஹரப்பா உள்ளிட்ட சிந்து சமவெளிப் பகுதிகளில், அதே அமைப்புகள் கொண்ட வீடுகளில் மக்கள் தொடர்ந்து வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

 

 

ஓரிடத்திலிருந்து மக்கள் இடம் பெயர வேண்டுமென்றால் பஞ்சம் அல்லது இயற்கைப் பேரழிவு அல்லது போர் போன்ற காரணங்கள் இருக்க வேண்டும், இந்த்த் தொடரின் 18 ஆவது கட்டுரையில் பூம்புகார் மக்கள், அந்த நகரத்தை விட்டு விலகவேயில்லை. ஏனெனில் அங்கு பஞ்சம் இல்லை, போரும் இல்லை என்று சிலப்பதிகாரம் சொன்ன செய்தியைப் படித்தோம். இடம் பெயராத நலத்துடன் தமிழ் நில மக்கள் இருந்தனர். அந்தப் பேறு சிந்து சமவெளிப் பகுதி நகர மக்களுக்கு இல்லை. வெள்ளம், நிலநடுக்கம் போன்ற இயற்கைக் காரணங்களால் அவர்கள் வாழ்ந்த இடங்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன என்பதற்கே ஆதாரங்கள் கிடைத்துள்ளன.



இனி மொஹஞ்சதாரோ பகுதியில் 27 பகுதி அமைப்பில் இருந்திருக்கூடிய தெய்வங்களையும்,மொஹஞ்சதாரோவின் முக்கிய தெய்வத்தைப் பற்றியும் காண்போம்.




1 கருத்து:

  1. I have written in The Wonder That Is Meenakshi Temple article that Tikal in Guatemala (Maya Civilization) also had the same plan like Meenakshi temple according to the temple sthapathi who visited Tikal
    swami from London

    பதிலளிநீக்கு