ஞாயிறு, 15 ஜனவரி, 2012

94. தையில் புத்தாண்டா?


திரும்பிய பக்கமெலாம் தெய்வக் கோவில்கள் இருந்த பண்டைய தமிழ் நாட்டில், எந்த தினத்தைத் தேடி எடுத்தாலும் அதில் வேத 'ஆரியம்'தான் இருக்கும். அப்படியிருக்க, திராவிடவாதிகளது 'கண்டுபிடிப்பான' தை வருடப்பிறப்பில் மட்டும் அது இல்லாமல் போய் விடுமா? விடிய விடிய இவர்கள் திராவிடம் பேசினாலும், இவர்கள் வருடப் பிறப்பென்று சொல்லும் தை முதல் நாளை வேத மரபிலிருந்துதான் கடன் வாங்கியிருக்கிறார்கள். தை மாதத்திற்குப் பதிலாகச் சித்திரையையே ஏற்றுக் கொண்டிருந்தாலாவது, பழந்தமிழ் மன்னர்கள் வழியைத்தான் பின்பற்றுகிறோம் என்று சொல்லியிருக்கலாம்.


தைப் பொங்கலை திருமால் அடியார்களிடமிருந்தும், மாட்டுப் பொங்கலை முல்லை நில ஆயர்களிடமிருந்தும் கடன் வாங்கியிருக்கிறோம். தைப் பொங்கலின் ஆரம்பம் மார்கழியிலேயே தொடங்குகிறது. மார்கழியில் ஆரம்பித்து, கார்த்திகை மாதம் வரை, 12 மாதங்களும், கோகுலத்து ஆயர்களும், விஷ்ணு பக்தர்களும் விஷ்ணுவை ஆராதித்து வந்தனர்.


விஷ்ணுவுக்குத் துவாதச நாமங்கள் என்று பன்னிரண்டு பெயர்கள் உண்டு.


கேசவன், நாராயணன்,மாதவன், கோவிந்தன், விஷ்ணு,மதுசூதனன், திரிவிக்ரமன், வாமனன், ஸ்ரீதரன், ஹ்ருஷீகேசன் ,பத்மநாபன், தாமோதரன் என்னும் இந்தப் பன்னிரண்டு நாமங்கள் கொண்ட 12 விஷ்ணு ரூபங்களும், மார்கழி மாதம் தொடங்கி வரிசையாக ஒவ்வொரு மாதத்துக்கும் அதிபதிகள் ஆவார்கள். அவர்களை அந்தந்த மாதங்களில் வழிபடுவது ஆயர்கள் உள்ளிட்ட, திருமாலடியார்களிடம் இருந்து வந்த வழக்கமாகும்.


மார்கழிக்குக் கேசவனும், தைக்கு நாராயணனும் அதிபதிகள் ஆவார்கள். மார்கழியின் 30 நாட்களிலும், விடிவதற்கு முன்பே விஷ்ணுவைக் கேசவனாகத் துதித்து, பொங்கல் நெய்வேத்தியம் செய்யும் வழக்கம் இன்றுவரை இருந்து வருகிறது.


தே வழக்கம் 1000 வருடங்களுக்கு முன்பும் இருந்தது என்பதைக் கல்வெட்டு மூலம் அறிகிறோம். மார்கழி மாதம் முழுவதும் கோயிலில் நடைபெறும் இந்த வழிபாடு, நெய்வேத்தியத்துக்காகப் பணம் கொடுத்த விவரம் கிடைத்துள்ளது. (S.I.I.,Vol, VIII, p 137)   அவ்வாறு கொடுக்கப்படும் பணத்தைச் 'சேனைக் கடை" என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். மார்கழி முழுவதும் பொங்கல் அமுது படி செய்து, விஷ்ணுவைத் துதித்து, அதன் தொடர்ச்சியாகத் தை மாதம் பிறந்தவுடன், சங்கராந்தி பூஜை செய்திருக்கிறார்கள்.சங்ககால வழக்கம்.


சங்க காலத்தில் மார்கழிப் பௌர்ணமியில் பாவை நோன்பு ஆரம்பித்த வழக்கமும் இருந்திருக்கிறது. ஆனால், அந்த நோன்பை 4 மாத காலம் வரை கன்னிப் பெண்கள் செய்திருக்கிறார்கள். மார்கழியில் ஆற்று மணலில் பாவை செய்து, தை மாதத்தில் சிற்றில் இழைத்து, மாசி மாதத்தில் திருக்கூடல் விளையாடி, பங்குனி மாதத்தில், சேர்த்தி அல்லது இறைவனை அடைதல், அல்லது நல்ல கணவனை அடைதல் என்பது அன்றைய நம்பிக்கையாக இருந்தது. மார்கழிப் பௌர்ணமியில் ஆரம்பித்த நோன்பு, 4 மாதங்கள் கழித்துப், பங்குனிப் பௌர்ணமியில், கோயில்களில் தெய்வங்களின் திருமண விழாவுடன் முடிந்தது.இடைப்பட்ட காலத்தில் தை மாதத்தில் 'தைந்நீராடல்' நடந்தது என்ற ஒரு கருத்து ஆராய்ச்சியாளர்கிடையே இருக்கிறது. இதைக் கொண்டு தை முதல் நாளைப் புத்தாண்டு என்று சொல்லலாம் என்கிறார்கள்.

ஆனால் தைந்நீராடல் என்பது சங்க காலத்தில் பாவை நோன்பு காலத்தில் செய்யும் நீராடலாகவும்,

அதற்குப் பிறகு குலோத்துங்க சோழன் காலம் முதல் தைப் பூச நீராடலாகவும் செய்திருக்கிறார்கள்.


சங்க காலத்தில் மார்கழி மாதம் திருவாதிரை நக்ஷத்திரத்தில் பௌர்ணமி வரும் போது,

ஆற்றங்கரையில் ஹோமம் செய்து பாவை நோன்பை ஆரம்பித்தார்கள்.

அதை விளக்கும் பரிபாடல் 11 இல், சிறுமிகள் தங்கள் தாய் பக்கத்தில் நின்று தவமான நீராட்டலைச் செய்தார்கள் என்று வருகிறது.


"தையல் மகளிர் ஈர் அணி புலர்த்தர,
வையை! நினக்கு மடை வாய்த்தன்று.
மையாடல் ஆடல் மழ புலவர் மாறு எழுந்து,
பொய் ஆடல் ஆடும் புணர்ப்பின் அவர்,
அவர் தீ எரிப் பாலும் செறி தவம் முன் பற்றியோ, 90
தாய் அருகா நின்று தவத் தைந் நீராடுதல்?
நீ உரைத்தி, வையை நதி!"


என்று பரிபாடல் சொல்லும் இந்த வரிகளில்,

முன் ஜென்மத் தொடர்பாகத் தவம் செய்வதற்காகத் தாயின் அருகில் சிறுமிகள் நின்று

தவத்தைந் நீராடுகிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

இதைத் தை மாத நீராடல் என்று சொல்ல முடியாது.

ஏனெனில் இது விவரிக்கப்படும் மாதம் மார்கழியாகும்.'நீ தையில் நீராடிய தவம் தலைப்படுவாயோ? என்று கலித்தொகை 59 இல் சொல்லப்படுவது

தவமாகிய நீராட்டலைக் காட்டுகிறது.

மேலும் மார்கழி மாதப் பௌர்ணமியில் ஆரம்பித்த பாவை நீராடல், சந்திர மாதமான தைத் திங்கள் வரை செல்லும்.

மார்கழிப் பௌர்ணமிக்கு அடுத்த 15 நாட்களில் வரும் அமாவசைக்கு அடுத்த நாள் தைத் திங்கள் பிறக்கும்.

இது சந்திர மாதமாகும். அதனால் பாவை நீராடல் சந்திரமானத் தை மாதத்திலும் தொடரும்.இங்கு மாதங்கள் குறித்த ஒரு செய்தியைச் சொல்ல வேண்டும்,

தமிழ்நாடு உள்ளடக்கி, பாரதம் முழுவது, சூரிய- சந்திர வட்டம் பின்பற்றப்பட்டு வந்துள்ளது.

இதைத் தமிழ்க் கல்வெட்டுகளில் தெளிவாகக் காணலாம்.

ஒரு ராசியில் சூரியன் இருக்கும் மாதத்தைக் குறிப்பிடும் போது

மேட நாயிறு, சிம்ஹ நாயிறு, கன்னி நாயிறு என்பது போன்ற சொற்கள் இடம் பெறுகின்றன.

பொதுவாகத் தை மாதம் என்று சொல்லும் போது, ஒரு அமாவாசைப் பிரதமை  தொடங்கி,

அடுத்த அமாவசை வரையிலான சந்திர மாதம் உணர்த்தப்படுகிறது.

ஆனால் சமீப காலக் கல்வெட்டுகளில் சூரிய மாதத்திற்கும் சித்திரை, வைகாசி என்னும் பெயர்களே அமைந்துள்ளன.பண்டைய ஜோதிட சாஸ்திரத்திலும், ஐந்து அங்கங்கள் கொண்ட பஞ்சாங்கம் என்று இல்லை.

அதற்குப் பதிலாக எட்டு அங்கங்கள் கொண்ட அஷ்டாங்கம் இருந்தது என்பதைப் பழம் ஜோதிட நூல்கள் மூலம் அறிகிறோம்.

இவற்றுள் முதல் மூன்றும் திரியங்கம் எனப்பட்டன.


அவை

(1)  யுகக் கணக்கு (கிருத, த்ரேதா, துவாபர, கலி யுகங்கள்),

(2)  வருடக் கணக்கு (பிரபவ, விபவ முதலான் 60 வருடங்கள்) இவற்றை விவரிக்கும் :"வியாழ மாலை அகவல்" என்னும் நூல் 2 ஆம் தமிழ்ச் சங்கத்தில் அரங்கேறியது என்று இறையனார் அகப்பொருள் உரையில் நக்கீரனார் கூறுவதால், இந்த 60 வருடக் கணக்கு சங்க கால வழக்கமே என்று தெரிகிறது.

(3)  சித்திரை முதலான மாதக் கணக்கு.


அதாவது அஷ்டாங்கத்தின் 3 ஆவது அங்கத்தில் தெள்ளத்தெளிவாக வருடக் கணக்கு சித்திரை முதல் சொல்லப்படுகிறது. இவை மூன்றும் பாமரர்களும் எளிதில் அறிந்தவை என்பதால், இவை நாளடைவில் தனிப்பட சொல்லப்படவில்லை.


ஆனால் இவற்றைத் தொடர்ந்து வரும் கடை ஐந்து அங்கங்களுமே பஞ்சாங்கம் எனப்பட்டன. இவை வாரம், திதி, நக்ஷத்திரம், யோகம், கரணம் ஆகும். இவற்றை அறிய கணியன் எனப்படும் ஜோதிடன் உதவி தேவை,. எனவே இவற்றைச் சேர்த்து பஞ்சாங்கமாகக் கணிப்பது 2000 வருடங்களுக்கு முன்பே ஏற்பட்டு விட்டது. (ஆதாரம்:- சிலப்பதிகாரம், கால்கோள் காதை ""ஆறிரு மதியினுங் காருக வடிப் பயின்று ஐந்து கேள்வியும் அமைந்தோ"னான பெருங்கணியன்")


பிற்காலத்தில் வருடப்பிறப்பை வைத்து இப்படி குளறுபடி செய்வார்கள் என்று நம் தமிழ் முன்னோர்கள் கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை என்று தெரிகிறது. இல்லையென்றால்., பஞ்சாங்கத்துக்குப் பதிலாக அஷ்டாங்கத்தையே வைத்திருப்பார்கள்.

 

இனி தை மாதத்தின் மற்றுமொரு விழாவைக் காண்போம். தை மாதத்தில் நீராடும் வழக்கம் சங்க காலத்துக்குப் பின் வந்திருக்கிறது. அதுவும் தை முதல் நாளில் அல்ல. அந்த நீராட்டம் தைப்பூச நீராட்டமாகும். தைப்பூசம் என்பது  பௌர்ணமியாகும், அன்று கடலில் நீராடி, திருவிழா காணும் வழக்கம் குலோத்துங்க சோழன் காலத்தில்தான் ஏற்பட்டது. அரசர்கள், தங்கள் பிறந்த நாளன்று கோவில் திருவிழாக்கள் எடுப்பது வழக்கமாக இருந்து வந்திருக்கிறது அந்தச் சோழ மன்னன் தைப் பூச நக்ஷத்திரத்தில் பிறந்தவன். அதனால் தனது பிறந்த நாளன்று திருவிழா எடுக்கும் வழக்கத்தை அவன் ஆரம்பித்திருக்கிறான்.


"சக்கரவர்த்திகள் ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவர் திருநக்ஷத்திரமான பூசத்திருநாளில் எழுந்தருள" எனவரும் கல்வெட்டால் அறியலாம். (S.I.I.,Vol VII, No 763)

அப்பொழுது ஆரம்பித்த தைப் பூச விழா இன்றும் தொடர்ந்து வருகிறது. இவற்றைத் தவிர தை மாதத்துக்கு முக்கியத்துவம் வேறு காணப்படவில்லை.

 

தையில் இன்று கொண்டாடப்படும் பொங்கல் திருநாள், அறுவடைத் திருநாள் என்று திராவிடவாதிகள் சொல்வதும் உண்மையில்லை. ஏனெனில், கல்வெட்டுச் சான்றுகள்படி சித்திரையிலும், கார்த்திகையிலும்தான் அறுவடை நடந்திருக்கிறது. 'சித்திரைக் கார்" என்று சித்திரையில் அறுவடையான நெல்வகையைப் பற்றிக் கல்வெட்டுச் சான்று இருக்கிறாது. (S.I.I. Vol, XVII, No 243)


அது போல கார்த்திகையில் இன்னொரு அறுவடை நடந்திருக்கிறது. இதைக் கொண்டு 'கார்த்திகைக் காசு" என்ற சொல்வழக்கும் இருந்திருக்கிறது. இது கார்த்திகை மாத்த்தில் அறுவடைக் காலத்தில் அளிக்கப்படும் பணம் ஆகும். இச்சொல் 'கார்த்திகைப் பச்சை" என்றும், "கார்த்திகைக் காணிக்கை" என்றும் வழங்கப்பட்ட்து. (S.I.I. Vol., XXIV., No 721, S.I.T.I., Vol, III, pt 2.p.1416). இதனால் மார்கழியில் அறுவடை செய்து, தை மாத முதல் நாள் பொங்கலிட்டார்கள் என்றும், வருடப்பிறப்பு தையில் ஆரம்பித்து என்பதற்கும் ஆதாரமில்லை. மாறாகக், கார்த்திகைக் காசு கையில் கிடைத்தும், கார்த்திகைத் தீபத் திருவிழாவைக் கொண்டாடியிருக்கிறார்கள். அதுபோல சித்திரைக் கார் அறுத்தவுடன், "சித்திரைத் திருநாள்" கொண்டாடியிருக்கிறார்கள்.

 


சித்திரைத் திருநாள்.


சித்திரைத் திருநாள் என்பது சித்திரா பௌர்ணமித் திருவிழாவாகும். இந்த விவரத்தைப் பல கல்வெட்டுகளில் காண்கிறோம். ராஜராஜ சோழன் காலத்திலேயே "சித்திரைத் திருநாள்" என்னும் சொல்வடிவம் காணப்படுகிறது. இது ஒன்பது நாட்கள் நடக்கும் திருவிழாவாகும். (S.I.I., Vol XIX, No 442). வீரபாண்டியன் காலத்துக் கல்வெட்டிலும், "சித்திரைத் திருநாளுக்கு அமுதுபடி சாத்துப்படிக்கு"த் தானம் வழங்கினமை சொல்லப்படுகிறது. (A.R.E. 38. 1913, கல்வெட்டின் காலம் கி.பி. 1318).


திருநெடுங்குளம் கல்வெட்டில், சித்திரைத் திருநாளுக்கு விளக்கு ஏற்ற நெய் பெற வேண்டி ஆடுகள் தானம் செய்த்து சொல்லப்படுகிறது. "மன்றாடி மாறன் வலியன் வைச்ச ஆடு... சித்திரத் திருவிழாவுக்கு திருவிளக்கு நெய் எரிப்பிக்க பந்நிருநாழி அப்பந்நிருநாழியும் சந்திராதித்தவல் ஆட்டை வட்டம் அட்டுவதாக" என்று இந்தக் கல்வெட்டு கூறுகிறது. (A.R.E,689 / 1909).  இதற்கெல்லாம் தானம் அளித்தவர்கள். தை முதல் தினத்துக்கென்றோ, தைப் பொங்கலுக்கென்றோ, தையில் வருடப்பிறப்பென்றோ தானம் எதுவும் செய்தனர் என்றோ குறிப்புகள் இல்லை. அல்லது தைப் பொங்கலுக்குக் கோவில் விழாக்கள் நடந்தன என்றோ ஒரு குறிப்பும் இல்லை. 


 

பொங்கலா?  சங்கராந்தியா?


பொங்கல் என்பது அறுவடைப் பண்டிகையாக இருந்தால், அதன் அடையாளம் மருத நிலத்தில் தென்பட வேண்டும். அதற்கான ஆதாரம், சோறுடைத்தச் சோழ நாட்டில் கிடைக்க வேண்டும். ஆனால் சோறுடைத்த சோழன் தலைநகரமான தஞ்சையில் கிடைத்த ராஜ ராஜன் காலக் கல்வெட்டில், மகர சங்கராந்தி உட்பட பன்னிரெண்டு சங்கராந்திகளையும் கொண்டாடினதுதான் சொல்லப்பட்டுள்ளது.


சங்கராந்தி என்றால், நுழைதல் என்பது பொருள். சூரியன் ஒவ்வொரு ராசியிலும் நுழையும் நேரத்தை சங்கராந்தி என்பார்கள்.மகர ராசியில் நுழையும் நாள் தை முதல் நாள் ஆகும். அதை மகர சங்கராந்தி என்றார்கள். இதை மாதப் பிறப்பு என்கிறோம். அதைப் பொங்கல் என்றோ, வருடப் பிறப்பென்றோ கொண்டாடவில்லை. சங்கராந்தி என்றே கொண்டாடினார்கள். 12 மாத்த்திற்கு 12 சங்கராந்திகள் கொண்டாடினார்கள் என்பதைச் சோழ வளநாட்டுத் தஞ்சைக் கல்வெட்டு தெரிவிக்கிறது. அந்தக் கல்வெட்டில் ஒரு வருடத்தில் மொத்தம் 34 விழாக்கள் கொண்டாடப்பட்டன என்று சொல்லப்பட்டுள்ளது. அதில் தைப் பொங்கல் இடம் பெறவில்லை.

 

"திருச் சதயத் திருவிழா பன்னிரெண்டும், கார்த்திகத் திருநாள் ஒன்றும், சங்கராந்தி பன்னிரெண்டும், பெரிய திரு உற்சவம் நாள் ஒன்பதும் ஆக நாள் முப்பத்து நான்கும்" ("கல்லும் சொல்லும்", பக் 147, இரா. நாகசாமி)


என மொத்தம் 34 விழாக்கள் தஞ்சைக் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளன. சதயத்திருவிழா என்பது, ராஜராஜ சோழனது பிறந்த நாளை முன்னிட்டு எடுக்கப்பட்ட கோவில் விழாக்களாகும், குலோத்துங்க சோழனது பிறந்த நாளை பூசத்திருவிழா என்று கொண்டாடியது போல, ராஜராஜ சோழனது பிறந்த நாளை சதயத் திருவிழா என மாதம் தோறும் கொண்டாடியிருக்கிறார்கள்.  இது தவிர கார்த்திகைத் திருநாளைக் கொண்டாடியிருக்கிறார்கள். சித்திரை விஷுவைவும், ஐப்பசி விஷுவையும் விமரிசையாகக் கொண்டாடியிருக்கிறார்கள். இவை முறையே சித்திரை மாதப் பிறப்பும், ஐப்பசி மாதப் பிறப்பும் ஆகும். விஷு என்றால் 'சம பகல்- இரவு நாள்' என்று பொருள். இந்த இரண்டு நாட்களிலும் விமரிசையாக விழாவும், கொண்டாட்டங்களும் நடந்திருக்கின்றன என்றே கல்வெட்டுச் சான்றுகள் காட்டுகின்றன. சித்திரை விஷு என்பதே தமிழ் வருடப்பிறப்பாகும். விஷு என்றே 1000 வருடங்களுக்கு முன் வெட்டப்பட்ட  கல்வெட்டுகளில் எழுதியிருக்கிறார்கள்.


"விஷு இரண்டுக்கும் வைய்காசி விசாகமும் ஸ்தபநம் ஆடியருளி பெருந்திருவமுது செய்ய" (S.I.I., Vol XIX, No 331) என்னும் கல்வெட்டால், இன்றைக்கும் விஷு என்று சொல்லப்படும் சித்திர வருடப் பிறப்பன்று திருவிழா கண்டு திருவமுது படைத்துக் கொண்டாடியிருக்கிறார்கள் என்று தெரிகிறது.


 

தை மாத மகர சங்கராந்தி பிறந்த கதை


இதில் காமெடி என்னவென்றால், தை மாதத்தில் வரும் மகர சங்கராந்தியும், போகிப் பண்டிகையும், மாட்டுப் பொங்கலும், கிருஷ்ணனைத் தெய்வமாகக் கொண்டாடிய கோகுலத்து மக்கள் வழக்கமாகும். ராமனைத் திட்டியவர்கள், கிருஷ்ணனை அரவணைத்து பரிகாரம் தேடுகிறார்கள் போலிருக்கிறது!


மகர சங்கராந்தியைப் பற்றிய ஒரு உருவகக்கதை இருக்கிறது. மகாசங்கிராமே சக்தி என்னும் சக்தி இருந்தாள். அவள் தட்சிணாயன காலமான, ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி ஆகிய ஆறு மாதங்களில் மூதேவி உருவம் கொண்டு மனிதரையும், பசுக்களையும், புலி உருவம் கொண்டு துன்புறுத்தி வந்தாள். அந்தக் காலக்கட்டம் இருளும், மழையும் கொண்ட்தாக இருந்த்தால், மக்கள் பட்ட அவதியை இப்படிச் சொன்னார்கள். மக்கள் ஈசுவரனை வேண்ட தை மாதப்பிறப்பன்று, சூரியன் ஒளியால்  அவர்கள் துன்பம் நீங்கியது. அதனால், தை மாதப்பிறப்பன்று சூரியனை வணங்கி பொங்கலிட்டு வழிபட்டார்கள்.


அதாவது மகர சங்கராந்தியன்று பொங்கல் படையல் செய்யும் வழக்கம் இருந்து வந்திருக்கிறது. இதில் சங்கராந்தியை எடுத்து விட்டு, பொங்கல் என்று மட்டுமே அடையாளம் கொடுத்தது, திராவிடவாதிகள் தமிழைக் கையில் எடுத்துக் கபளிகரம் செய்ய ஆரம்பித்த பிறகுதான் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் சங்கராந்தி என்பது பன்னிரண்டு மாதங்களும் விழாவாகச் செய்துவந்த வழக்கத்தைப் பல கல்வெட்டுகளிலும் காண்கிறோம். அதில் ஒரு கல்வெட்டு மிகவும் சுவாரசியமானது.


திருச்சி திருக் கயிலாயமுடையார் கோவில் கருவறை வடக்குப் பட்டியில் காணப்படும் 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தக் கல்வெட்டில் "சங்கராந்திகளும், கிரஹணமும், மற்றும் திருக் கல்யாணங்கள் உள்ள் போது" பறை முதலிய வாத்தியங்கள் கொட்ட வேண்டிய முறைமையைத் தெரிவிக்கிறது.

இந்தக் கல்வெட்டில், பிற சொற்கள் தமிழிலும், சங்கராந்தி, கிரஹணம் என்னும் சொற்கள் மட்டும் கிரந்தத்திலும் எழுதப்பட்டுள்ளது. இது அன்றைக்கும் அதற்கு முன்னும் இருந்த சமஸ்க்ருத வீச்சைக் காட்டுகிறது. சங்கராந்தி என்பதே சமஸ்க்ருதச் சொல். அதில் செய்யப்ப்டும் விழாவும், ஹோமமும், ஆரியம் என்றால், அந்த ஆரியம் தமிழுக்கும் உரியதாகத்தான் இருந்திருக்கிறது என்பதை இந்தக் கல்வெட்டுகள் காட்டுகின்றன.

வற்றுள் மகர சங்கராந்தியைத்தான் திராவிடவாதிகள் தையில் வருடப்பிறப்பென்று சுவீகரித்துள்ளார்கள்.ஒவ்வொரு மாதப்பிறப்பையும், சங்கராந்தி என்று விழாவெடுத்துக் கொண்டாடியிருக்கிறார்கள். ஆனால் அவற்றுள், குறிப்பாகத் தை மாதப்பிறப்பான மகர சங்கராந்திக்குத் தனிப்பட்ட முக்கியத்துவம் கொடுத்து பொங்கல் என்றோ, வருடப்பிறப்பு என்றோ அழைத்த விவரம் கல்வெட்டிலும், இலக்கியத்திலும் காணப்படவில்லை.


பொங்கல் என்னும் உணவே மனநிறைவும், மகிழ்ச்சியும் மேலிடும் போது இறைவனுக்குப் படைக்கப்படும் உணவாகும். சூரியனுக்குத்தான் படைக்க வேண்டும் என்பதில்லை. சிலப்பதிகாரத்தில் இந்திர விழா நடந்த சித்திர மாதம், சித்திரைத் திருநாளான, சித்திரா பௌர்ணமியின் போது நாளாங்காடி என்னும் சதுக்க பூத்த்துக்குப் பொங்கல் படைத்தார்கள்.

இன்றைக்கும் ஆடியிலும், பிற காலங்களிலும் அம்மனுக்குப் பொங்கல் படைக்கும் வழக்கம் இருக்கிறது.


பொங்கல் என்ற சொல், பொங்கலாடுதல் என்ற சொல்லிலிருந்து வந்தது. இந்தச் சொல் சங்கத் தமிழில் காணப்படுகிறது.  (6 ஆம் பதிற்றுப் பத்து, 5 ஆம் பாடல்) நன்கு பெய்து ஓய்ந்த மேகமானது, பஞ்சினைப் போல வெண்மையாகப் பரவி, விரிந்து, பொங்கி, வானத்தின் மேலே போய் நிற்கும். அதாவது நல்ல பலனைத் தந்தபின், பஞ்சு போல வெண்மையாக மேலெழுந்து மேகம் நின்றால் அதற்குப் பொங்கலாடுதல் என்று பெயர். அரிசியைக் களைந்து உலையில் போட்டால் அது வெண்மையாகப் பொங்கும். அது மேகத்தின் பொங்கலாடுதல் போல இருப்பதால், அந்த உணவுக்கும் பொங்கல் என்ற பெயர் வந்தது. மன நிறைவு ஒரு முக்கிய காரணம் என்பதால், விழாக்களிலும், பண்டிகையிலும், அறுவடை முடிந்த பின்னும், பொங்கலிடுதல் வழக்கமாக இருந்திருக்கின்றது. தைப் பொங்கல் என்னும் சொல்லாட்சி சமீப காலத்தில்தான் ஏற்பட்டிருக்கிறது. உண்மையில் கார்த்திகை முடிந்து, மார்கழி ஆரம்பித்த்து முதல், தினமும் பொங்கலிட்டுப் படையல் செய்தல் திருமாலடியார்கள் வழக்கமாக இருந்து வந்திருக்கிறது.


 

போகிப் பண்டிகை


இனி போகிப் பண்டிகைக்கு வருவோம். வருடத்தில் 200 நாட்களுக்கும் மேல் விழாக்களும், விரதங்களும் இருந்தன என்று அவற்றைப் பட்டியலிட்டும், அவற்றின் காரணத்தையும் கூறும் 'ஜோதிட வருஷாதி நூல்' என்னும் நூல் போகிப் பண்டிகையை ஆயர் குல வழக்கமாகச் சொல்கிறது. இந்த நூலே பஞ்சாங்கம் எழுதுபவர்களுக்கு ஆதாரமான நூலாகும். நாள் கிழமைகளை நிறுவுபவர்கள், பஞ்சாங்கம் எழுதும் ஜோதிடர்களே தவிர, புலவர்களோ, பிறரோ அல்ல.


போகி கொண்டாடும் வழக்கம் கிருஷ்ணன் வாழ்ந்த கோகுலத்தில் ஆரம்பித்தது. கிருஷ்ணன் காலம் வரை, மக்கள் மழைக்காக இந்திரனை வழிபட்டனர். கிருஷ்ணர் அந்த வழக்கத்தை மாற்றினார். அவர்களுக்கு வாழ்வாதாரமான பசுக்கூட்டங்களுக்கு மழை பெய்தால் தொந்திரவு ஏற்பட்டது. ஆனால், கோகுலத்துக்கு அருகில் இருந்த கோவர்த்தன மலை, அந்த பசுக்களுக்கான உணவைக் கொண்டிருந்த்து. எனவே கோவர்த்தன மலையை வழிபடலாம், இந்திரனை அல்ல என்று கிருஷ்ணர் கூறினார். அதனால் மக்கள் இந்திரனை வழிபடுவதை நிறுத்தினர். அதனால் கோபமுற்ற இந்திரன், கன மழை பொழிந்து தீர்த்தான். இதனால் மேய்ச்சலுக்குப் போன பசுக்களும், ஆயர்களும் துன்பமுறாமல் இருக்க கிருஷ்ணர் கோவர்த்தன மலையையே தூக்கி ஒரு குடை போல ஆக்கினார். இதனால் இந்திரன் வெட்கப்பட்டு, கிருஷ்ணனை வேண்ட, அவரும், "தை மாதப் பிறப்புக்கு முதல் நாள் உலகோர் உன்னைப் பணியட்டும்" என்று அருளினார். அது முதல் கொண்டு தை முதல் நாளான மகர சங்கராந்திக்கு முதல் நாள் இந்திரனைக் குறித்து போகிப் பண்டிகை கொண்டாடினர். போகி என்பது இந்திரனது பெயர்.


போகியன்று இன்னொரு சம்பவமும் ஆயர்பாடியில் நடந்த்து. அந்த சமயத்தில் கிருஷ்ணன் காளிங்கன் என்னும் பாம்பை அடக்கினார். எனினும் பாம்புக் கடியால், அவரது உடலில் விஷம் ஏறியது. அதை முறிக்க மருந்து இட்டாலும், கிருஷ்ணன் தூங்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக ஆய்ச் சிறுவர்கள் தீக் கொளுத்தி, பறை கொட்டி விழித்திருந்தனர். இந்த நிகழ்ச்சியை வருடாந்திர வழக்கமாக ஆயர் மக்கள் செய்ய ஆரம்பித்தனர். எங்கெல்லாம் ஆயர் மக்கள் இருந்தனரோ, அங்கெல்லாம் இந்தப் பறை கொட்டும் வழக்கமும், தீக் கொளுத்தும் வழக்கமும் ஏற்பட்டது. இந்தப் பறை கொட்டும் வழக்கத்தை 1000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஆண்டாள் திருப்பாவையில் காண்கிறோம். இது ஆயர் வழக்கமே.


அந்த நாளில், தெய்வ வழிபாட்டில் பிரிவினை இல்லை. மார்கழி என்றால் பெருமாள் வழிபாடு என்று அனைவருமே பின்பற்றினர். அப்படிப் பின்பற்றுகையில், தீக்கொளுத்த பழையனவற்றைப் பயன் படுத்தலாயினர். இதுவே 'பழையன கழிதலும், புதியன புகுதலும்' என்ற வழக்கத்தில் கொண்டு விட்டது. இதுவும் வரலாற்றுக் காலத்தில் – அதாவது மூவேந்தர் காலம் வரை சொல்லப்படவில்லை.


அடுத்து மாட்டுப் பொங்கலும் ஆயர்பாடி வழக்கமாகவே இருந்தது. தட்சிணாயனத்தில், மாடுகள், மழையாலும், புலி ஆகிய மிருகங்களின் தொந்திரவாலும், தொழுவத்துக்குள்ளேயே கட்டி வைக்கப்பட்டன. தை மாதம் பிறந்து, மழையும், இருளும் விலகிடவே, அவற்றைக் கட்டவிழ்த்து விட்டனர். அதனால் மாடுகள் மகிழ்ச்சி பொங்க இருந்தமையால், அந்த தினத்தை மாட்டுப் பொங்கல் என்றனர்.


ஜல்லிக்கட்டும் ஆயர்களது வழக்கமே. அதை முல்லை நில ஆயர்கள் பின்பற்றினர். அதுவும், மணமகன் தேர்வுக்கே பின்பற்றினர். அதை ஒட்டு மொத்த தமிழர்களும் பின்பற்றவில்லை.


ஆயினும், அது தமிழ் மக்களான முல்லை நில மக்கள் பின்பற்றிய கலாச்சாரம் அல்லவா? அதனால் தாங்களும் அதைப் பின்பற்றுவதில் தவறில்லை என்று திராவிடவாதிகள் சொல்லலாம். அப்படியே ஆகட்டும். ஆனால் அந்த முல்லை நில ஆயர் கலாச்சாரத்தைப் பின்பற்றுகிறோம் என்றால், அதில் வழங்கி வந்த விவரங்களும் தமிழர்களுக்கு உரியது என்றும் ஒப்புக் கொள்ளட்டும்.


அதில் வழங்கி வந்த விவரங்கள் என்ன தெரியுமா?


கரிய திருமாலும், வெண்ணிற பலராமனும், சிவந்த முக்கண்ணனும், இளஞ்சிவப்பு முருகனும், ஆயிரம் கண் கொண்ட இந்திரனும் ஆகிய கடவுளர்களை அவர்கள் போற்றினார்களே, அது தமிழ்க் காலாச்சாரம்தானே?


"இடை தெரியா ஏஎர் இருவரும் தத்தம்

உடை வனப்பெல்லாம் இவட்கு ஈந்தார் கொல்லோ" (கலித்தொகைஒ 109)

என்று தன் காதலியான ஆய மகளுக்கு 'ஊர்வசி, திலோத்தமை தம் உடல் வனப்பைத் தந்தார்களோ?" என்று தேவ லோக மங்கைகளைப் பற்றி பேசியிருக்கிறார்களே, அதுவும் தமிழ்க் கலாச்சாரத்தைச் சேர்ந்ததுதானே? அதை ஆரியம் என்று சொல்லிவிட மாட்டார்களே?


அது மட்டுமல்ல,

"அகல் அல்குல், தோள், கண் என மூவழிப் பெருகி,

நுதல், அடி, நுசுப்பு என மூவழிச் சிறுகி"

என சமஸ்க்ருத சாமுத்ரிகா லக்ஷண நூல வழியில், ஆய மகன், தன் காதலியை வர்ணிக்கிறானே, அந்தச் சொல்லாடலும் தமிழ்க் கலாச்சாரம் அல்லவா?


முடிவாக, சூரியப் பொங்கல், சூரியப் பொங்கல் என்கிறீர்களே, அந்தச் சூரியன் எப்படி இருப்பான், அவன் உருவம் என்ன என்று இந்தத் திராவிடவாதிகளுக்குத் தெரியுமா?


இவர்களுக்குத் தெரிந்ததெல்லம்  ஒரு அரை வட்டம், இல்லையென்றால் முழு வட்டம் – ஞான சூனியம் என்பதைப் போல - அவ்வளவே. ஆனால் முல்லை நிலப் பெண் சொல்வதைக் கேளுங்கள். தன்னை விடாமல் துரத்தும் ஆய மகனை 'நீ என்ன பெரிய ஆளோ, நான் உன்னிடம் மயங்க" என்று கேட்க வேண்டி,

"பிறவோ அமரருள் ஞாயிற்றுப் புத்தேள் மகன்?" (கலித்தொகை 108)


அதாவது "நீ என்ன தேவர்களுள் ஒருவரான சூரியன் என்னும் தேவனின் மகனோ?" என்று கேட்கிறாள்.


சூரியனையே நமக்குத் தெரியாது. அவனுக்கு ஒரு மகனும் இருந்திருக்கிறான். அவனோ இவன் என்று அவள் கேட்க, தன்னைச் சூரியன் மகனுடன் ஒப்புமை காட்டவே, அவன் மகிழந்து, 'அதனால்தான் நீ என்னை நல்லவன் என்று இன்னும் என்னுடன் பேசிக் கொண்டிருக்கிறாய்' என்கிறான். தேவர்களுள் ஒருவனான சூரியனையும், சூரியன் மகனையும் பற்றி சாதாரண ஆயர் மக்கள் அறிந்திருக்கின்றனர். இது புலவர் கற்பனை அல்ல. அந்த மக்கள் பேச்சு வழக்கை அவர் பாடலாகக் கொடுத்துள்ளார்.

சூரியனுக்கு ஒரு உருவம் இருக்கிறது என்பது வேத மதத்தின் வர்ணனை.