சனி, 10 நவம்பர், 2012

116. ‘மூ’வும், ‘லெமூரியா’வும்.


18 – 19 ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பியர் உலகெங்கும் சுற்றிக் கொண்டும், தங்களுக்குப் பரிச்சயமில்லாத புதிய இடங்களையும், புதிய கலாசாரங்களையும் பார்த்துக் கொண்டும் வந்தனர். அந்த காலக் கட்டத்தில்தான் விஞ்ஞானம் முதல் சரித்திரத் தொல் பொருள் ஆராய்ச்சிகள் வரை பல துறைகள் உருவாகிக் கொண்டும், புதிய கண்டுபிடிப்புகளை வெளியிட்டுக் கொண்டும் இருந்தன. சரித்திரத்தைப் பொருத்த வரையில், ஐரோப்பியர்களுக்குத் தங்கள் மூதாதையரைப் பற்றிக் கண்டு பிடிக்க முயன்று கொண்டிருந்தார்கள். அவர்கள் இருந்த நாட்டில் இருந்து வந்த கெல்டுகளது பாரம்பரியத்தை அவர்கள் வெறுத்த காலம் அது. அந்தக் கெல்டுகள் தான் தங்கள் மூதாதையர் என்று அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அது மட்டுமல்லாமல், கடலில் முழுகின அட்லாண்டிஸ் என்னும் பழைய நகரத்தைப் பற்றியும் கிரேக்க அறிஞர் ப்ளேட்டோ அவர்களது எழுத்துக்களில் அறிந்திருந்தார்கள். அதனால் முழுகிய அந்த இடம் எங்கிருந்தது என்பதை அறியவும் அவர்கள் முயன்றார்கள், இன்று வரை முயன்று வருகிறார்கள்.


அட்லாண்டிஸ் குறித்து அங்கொன்றும் இங்கொன்றுமாக நூல்களில் சொல்லப்பட்டதை வைத்துக் கொண்டு அவர்களது விஞ்ஞானிகளிலிருந்து, தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் வரை  அனைவரும் அந்த இடத்தைக் கண்டு பிடிக்க முயன்று வருகிறார்கள். தங்களுக்கும், அந்தப் பழமையான இடத்தின் நாகரிகத்துக்கும் தொடர்பு உள்ளது என்று நிரூபிக்க முடியுமா என்று தேடுகிறார்கள். ஆனால் நம் நாட்டில், மிக மிக அதிக அளவில் பல பழமையான நூல்கள், நம் பழம் சரித்திரத்தை எடுத்துக்கூறுகின்றன. உலகத்திலேயே அதிக அளவு பழமையான நூல்கள் இந்தியாவில்தான் இருக்கின்றன. ஆனால் அவை சொல்லும் எதையும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அவற்றை ஒதுக்கியும், தாங்கள் விரும்பிய வழியிலும் தான் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள்.


அப்படி அவர்கள் கண்டு பிடித்த கருத்துதான் ஆரியப் படையெடுப்பு மற்றும் ஆரிய-திராவிடப் போர் என்பது. அது போலவே அறைகுறையாகக் 'கண்டுபிடித்த' கருத்துகள் 'மூ' என்பதும் 'லெமூரியா' என்பதும் ஆகும். பசிஃபிக் பெருங்கடலில் 'மூ' என்னும் ஒரு பெரும் நிலப்பரப்பு இருந்தது என்றும் அது இப்பொழுது கடலில் முழுகி விட்டது என்றும் சொன்னார்கள். அது போலவே இந்தியப் பெருங்கடலில் 'லெமூரியா' என்னும் பெரும் நிலப்பரப்பு இருந்தது என்றும் அது இப்பொழுது முழுகி விட்டது என்றும் சொன்னார்கள். இதில் ஒரு ஆச்சரியம் என்னவென்றால் இந்த இரண்டு கருத்துக்களும் ஒரே ஆண்டில்தான் சொல்லப்பட்டன.


பசிஃபிக் பெருங்கடலில் இருந்ததாகச் சொல்லப்பட்ட 'மூ' கண்டம், கீழுள்ள படத்தில்.


http://en.wikipedia.org/wiki/Mu_%28lost_continent%29

 

இந்தியப் பெருங்கடலில் இருந்ததாகச் சொல்லப்பட்ட 'லெமூரியா' கண்டம் கீழூள்ள படத்தில்.


http://en.wikipedia.org/wiki/Lemuria_%28continent%29

 

 

 

1864 இல் ப்ரேஸர் டி போர்போர்க் (Charles Étienne Brasseur de Bourbourg)  என்னும் ஃப்ரென்சுப் பயணி, 'மூ' என்னும் சொல்லைக் கொடுத்தார். அதுவே தவறாகப் புரிந்து கொண்டு, தவறாக உச்சரித்து உருவாக்கப்பட்ட சொல். அவர் சொன்னதன் அடிப்படையில் அகஸ்டஸ் லி லாங்கியான் (Augustus Le Plongeon) என்னும் ஆங்கிலேயர் "மூ" என்னும் பெயரில் பசிஃபிக் கடலில் முழுகிய கண்டம் இருப்பதாகக் கூறினார்.  அதே வருடத்தில் ஃபிலிப் ஸ்க்லேடர் (Philip Sclater) என்னும் இன்னொரு ஆங்கிலேயர் லெமூரியா என்னும் முழுகிய கண்டம் இந்தியப் பெருங்கடலில் இருந்திருக்க வேண்டும் என்று தனது புத்தகத்தில் கூறினார்.


இவர்கள் இவ்வாறு சொன்ன காலக் கட்டத்தில் பல புதிய ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருந்தன. ஒருபுறம் விஞ்ஞானமும், மறுபுறம் அதுவரை அறிந்திராத மக்க்ள் தொடர்பும் ஐரோப்பியர்களுக்குக் கிட்டியது. இந்த இரண்டின் தாக்கத்தினால், அவர்களுக்குப் புரிந்த அளவில் உருவாக்கின கருத்துக்களே 'மூ'வும், லெமூரியாவும் ஆகும்.


இவற்றுள் 'மூ' என்னும் கருத்தாக்கத்துக்கு அடிப்படை அமெரிக்காவில் மயன் மக்கள். 'லெமூரியா' என்னும் கருத்தாக்த்துக்கு அடிப்ப்டை, டார்வின் பரிணாமக் கொள்கை. இந்த இரு கண்டக் கருத்துக்களையும் தந்தவர்கள் ஒரு விஷயத்தில் ஒருமித்த கருத்தைக் கொண்டிருந்தார்கள். ஆனால் அதை வேறு எந்த ஐரோப்பிய ஆராய்ச்சியாளரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அந்தக் கருத்தை அலட்சியப்படுத்திவிட்டே, அந்தக் கண்டங்களைப் பற்றிப் பேசினார்கள். அந்தக் கருத்து, மனித இனம் உலகின் தென் பகுதியில் உருவாகி, காலப்போக்கில் வட பகுதியை நோக்கி நகர்ந்தது என்பதே. அந்த மனித இனத்தை அவர்கள் இந்தியாவுடன் தான் தொடர்பு படுத்தினார்கள். அந்த மனித இனத்தின் சுவடு இந்தியாவில்தான் இருக்கிறது என்றும் சொன்னார்கள். எகிப்து முதலான நாகரிகங்கள் அனைத்துமே இந்த மனித இனத்திலிருந்துதான் உருவானது என்றார்கள். ஆனால் ஐரோப்பாவிலிருந்துதான் மனித நாகரிகம் வந்தது என்ற எண்ணத்தில் இருந்த (இன்னும் இருந்து வரும்) சக ஆராய்ச்சியாளர்கள், அந்த ஒரு கருத்தை எடுத்துக் கொள்ளவில்லை. அப்படி எடுத்துக் கொண்டிருந்தால், ஆரியன் ஐரோப்பாவிலிருந்து இந்தியாவுக்கு வந்து வேதத்தைச் சொல்லிக் கொடுத்தான் என்ற கருத்தாக்கம் என்றோ மறைந்து போயிருக்கும். 


இனி இந்த இரு 'முழுகின கண்ட' விவரங்களை விரிவாகப் பார்ப்போம்.


அமெரிக்காவில் ஐரோப்பியர் குடியேறி, அங்கிருந்த பழங்குடி மக்கள் வாழ்க்கையை அறிய முயன்ற நேரம் அது. அந்த மக்கள், அவர்களது பாரம்பரியக் கதைகள், நூல்கள் ஆகியவற்றிலிருந்து இவர்களாக உருவாக்கின கதையே 'மூ' கண்டமாகும். எப்படி இந்தியாவின் பாரம்பரியக் கருத்துக்களை ஒதுக்கி விட்டு, இவர்களாகவே ரிக் வேதத்துக்கு அர்த்தம் கற்பித்துக் கொண்டு ஆரியப் படையெடுப்புக் கதையை உண்டாக்கினார்களோ, அவ்வாறாகவே மயன் நூல்களிலிருந்து 'மூ' கருத்தை உருவாக்கினார்கள். உண்மையில் 'மூ' என்னும் சொல்லோ அல்லது கருத்தோ, மயன் நூல்களிலும், பாரம்பரியத்திலும் இல்லை. மயன் நூல்களை மொழி பெயர்த்த ப்ரேசர் டி போர்போர்க் என்னும் ஃப்ரென்சுப் பயணி, தனக்குப் புரிந்த அளவில் எழுதி வைத்து விட்டார்.


உதாரணமாக அவர் மொழிபெயர்த்த மயன் நூலான ட்ரோவனோ கோடெக்ஸ் (Troano Codex) என்னும் நூலின் ஒரு பக்கத்தை இங்கு பார்க்கலாம்.