வெள்ளி, 23 டிசம்பர், 2011

89. மொஹஞ்சதாரோவில் நக்ஷத்திரக் கோவில்? -1


மொஹஞ்சதாரோ காட்டும் பல விவரங்களும், மஹாபாரதத்தின் தொடர்ச்சியாகவோ அல்லது வேத வாழ்க்கையின் சின்னமாகவோதான் அமைந்துள்ளன.

கிருஷ்ணனையும், ஆயர்களையும் நினைவுபடுத்தும் ஏறு தழுவுதல் முத்திரை இங்கு கிடைத்திருக்கிறது. (பகுதி 79).


இந்த நகரம் அமைந்துள்ள சரஸ்வதி நதிக்கரை, வேத வாழ்க்கை மேற்கொண்டவர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது.

அந்த நதிக் கரையில் பல யாகங்கள் செய்திருக்கிறார்கள்.யாக கர்மங்களைக் கைவிட்டவர்களும், வர்ணாஸ்ரம க்ஷத்திரிய தர்மத்தை விட்டவர்களும், சரஸ்வதி நதிப் பகுதிகளை விட்டு விலகி வாழ வேண்டும் என்ற நியதி இருந்திருக்கிறது. அப்படி விலகிய ஆபீரர்கள், முண்டா, சவரர்கள், புண்டரர்கள் (இன்றைக்கு இவர்கள் பழங்குடியினர் அல்லது மலை ஜாதியினர்) ஆகியோர் சரஸ்வதி நதியை விட்டு விலகியும், அல்லது சரஸ்வதி நதி மறைந்து விட்ட பகுதிகளிலும் வாழ்ந்தனர் என்று மஹாபாரதம் கூறுவதை (14-29), 53 ஆம் கட்டுரையில் கண்டோம்.

குறுகிக் கொண்டே வந்த சரஸ்வதிக் கரையில், வேத வழிபாடு செய்பவர்களுக்கே இடம் கொடுத்ததால், சரஸ்வதியின் கரையில் அமைக்கப்பட்ட மொஹஞ்சதாரோவிலும், வேத வழிபாடுகள் நடந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது.


தோளாவீராவிலும், லோதாலிலும், காளிபங்கனிலும் வேத வாழ்க்கைக்கும், யாக வழிபாட்டுக்கும் ஆதாரங்கள் கிடைத்துள்ளன. பாகிஸ்தானில் அமைந்துள்ள மொஹஞ்சதாரோவில் இன்னும் கண்டு பிடிக்க வேண்டிய இடங்கள் அதிகமாக இருந்தாலும், 80 வருடங்களுக்கு முன்னால் கண்டு பிடிக்கப்பட்ட இடங்களைக் கொண்டே அங்கு வேத வாழ்க்கை இருந்தது என்று சொல்லலாம்.


அப்படி நாம் சொல்லக்கூடி ஓரிடம், மொஹஞ்சதாரோவில் காணப்படும் 'கிடங்கு' என்று சொல்லப்படுகிற அமைப்பாகும்.