வெள்ளி, 23 டிசம்பர், 2011

90. மொஹஞ்சதாரோவில் நக்ஷத்திரக் கோவில்? -2


 

இனி 27 என்ற எண்ணை ஆராய்வோம்.


27 என்னும் எண் மொஹஞ்சதாரோ உள்ளிட்ட

சிந்து சமவெளிப் பகுதிகளின் அளவீட்டு முறைகளின் ஆதார எண்ணாக இருந்திருக்கிறது.


லோதாலில் கிடைத்துள்ள அளவுகோலில் (ஸ்கேலில்) 27 அளவுக் குறிகள் இருக்கின்றன. அதன் அடிப்படை அளவு 1.76 மி.மீ ஆகும். இதை ஒரு நக்ஷத்திரப் பாதத்தின் மிகச் சிறிய அளவீடு எனலாம்.


அதை நிரூபிக்க வாஸ்து அளவு உதவுகிறது. கோவில் கட்டுமானத்தில் மானாங்குல உத்தம அளவைக் கடைபிடிப்பார்கள் என்று 83 ஆவது கட்டுரையில் கண்டோம். இந்த அளவின் 24 அங்குலம் என்பது இன்றைய பிரிடிஷ் இன்ச் எனப்படும் அங்குலத்தின் 18 இன்சுகளுக்குச் சமம்.

24 அங்குலம் = 18 இன்ச்

1 இன்ச் = 2.54 செ.மீ

18 இன்ச் = 2,54 X 18 = 45.72 செ.மீ

24 அங்குலம் = 45.72 செ.மீ

1 அங்குலம் = 45.74 / 24 = 1.9 செ.மீ = 19 மி.மீ


 

வேத மரபில் விண்வெளி வட்டத்தை 27 நக்ஷத்திரங்களாகப் பிரித்தார்கள்.


அதாவது வானத்தை அளக்க நக்ஷத்திரங்கள் பயன்பட்டன.


அது மட்டுமல்ல, ஒவ்வொரு நக்ஷத்திரத்தையும் 4 பாதங்களாகப் பிரித்தார்கள்.

எனவே 27 X 4 = 108 பாகங்களாக விண்வெளி வட்டத்தைப் பிரித்திருக்கிறார்கள்.


மேலே சொல்லப்பட்ட அங்குலத்தை விண்வெளி அளவீட்டின் விகிதாச்சரத்தில் அமைப்பதென்றால், 1 அங்குலத்தை 108 ஆல் வகுக்க வேண்டும்.

1 அங்குல அளவான 1.9 செ.மீ என்பதை 108 ஆல் வகுத்தால், கிடைக்கும் எண் 0.0176 செ.மீ அல்லது 0.176 மி.மீ ஆகும்.

இந்த 0.176 என்பதன் மடங்குகளிலேயே லோதாலில் கண்டுபிடிக்கப்பட்ட ஸ்கேல் அமைந்துள்ளது. அதன் அடிப்படை அளவீடு 1.76 மி.மீ என்பதாகும்,



நம்மைச் சுற்றியுள்ள விண்வெளிப் பாதையை அளந்து,

அதன் விகிதாச்சாரத்தில்

மண்ணிலும் கட்டுமானங்கள் அமைக்கும்

இந்த முறை வாஸ்து சாஸ்திர முறையாகும்.


27 நக்ஷத்திரங்களால் வானம் அளக்கப்படுகிறது.

27 அங்குலங்களால் அளக்கப்படுவது ஒரு அடி என்கிறது மானசாரம் என்னும் வாஸ்து நூல்

அந்த அடியின் 4 மடங்காக ஒரு 'தனுஸ்' அமையும் என்றும் கூறுகிறது.

இது 108 அங்குலமாகும்,


இதுவும் விண்ணைப் பகுக்கும் ஒரு அளவீடு.


 

தனுஸ் என்பதற்கு ஈடாகத் தமிழில் கோல் என்கிறார்கள். ஆனால் வடமொழியில் தனுஸ் என்ற பெயரை அந்த அளவுக்கு இட்டிருப்பது ஒரு அதிசயமான உண்மையைக் காட்டுகிறது. 27 நக்ஷத்திரங்களும் ஆரம்பிக்கும் மூல ஆதாரமானது, மூல நக்ஷத்திரத்தைக் கொண்ட தனுஸ் என்னும் ராசியாகும். இதைக் கருத்தில் கொண்டே, கோல் அல்லது அடி என்பதற்கு, தனுஸ் என்று பெயரிட்டார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.



27 அளவுக் குறிகளைக் கொண்ட ஸ்கேல் ஒன்று லோதாலில் கிடைத்துள்ளதாலும்,

27 நக்ஷத்திரங்களைக் கொண்டே வாஸ்து அளவுகள் அமைந்துள்ளதாலும்,

27 மேடைகள் மூன்று வரிசைகளாக மொஹஞ்சதாரோவில் உள்ளதாலும்,

அந்த அமைப்புக்கும், நக்ஷத்திரங்களுக்கும் தொடர்பு இருக்க வேண்டும்

என்று தெரிகிறது.



http://www.mohenjodaro.net/indusgranary40.html

 


இந்தக் கருத்தை வலுப்படுத்தும் ஒரு புராணக் கதையும்,

அதனுடன் தொடர்பு கொண்ட ஒரு அமைப்பும்  உள்ளன.

அஸ்வினி முதலான 27 நக்ஷத்திரங்களின் பெயர்களில்

27 புதல்விகள், தக்ஷபிரஜாபதிக்கு இருந்தனர்

என்கிறது புராணக்கதை. 


இவர்களைச் சந்திரன் மணந்து கொண்டான்.

இந்த விவரத்தின் மூலமாக, இந்தக் கதை விண்வெளி அமைப்பைப பற்றியது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். 27 மனைவிகள் இருந்தாலும், சந்திரனுக்கு ரோஹிணி என்னும் மனைவியிடம்தான் அதிகப் பிரியம். இதனால் கோபமுற்ற பிற மனைவிகள், தங்கள் தந்தையான தக்ஷபிரஜபதியிடம் முறையிட்டனர். அவரும், சந்திரனை ஒளி குன்றுமாறு சபித்தார். அதன் காரணமாகத் தேய்ந்து கொண்டே வந்த சந்திரன், சிவ மெருமானிடம் அடைக்கலம் புகுந்தான். அவர் அவனைத் தன் ஜடாமுடியில் வைத்துக் கொண்டார். அப்பொழுது ஏற்பட்ட ஒரு சமாதான நடவடிக்கையாக, தக்ஷனது சாபத்தின் படி, சந்திரன் தேய வேண்டும் என்றும், தேய்ந்தாலும் சிவனது அருளால், மீண்டும் வளர வேண்டும் என்றும் ஏற்பட்டது. இதனால், சந்திரனுக்குத் தேய்பிறையும், வளர்பிறையும் மாறி மாறி ஏற்படலாயிற்று என்கிறது புராணக் கதை.

இந்தக் கதை ஒரு உருவகக் கதை என்று தெள்ளத்தெளிவாகப் புரிகிறது.



சந்திரனுக்கு ரோஹிணியின் மேல் அதிக அன்பு என்பதன் உட்பொருள் என்னவென்றால் இந்த 27 நக்ஷத்திரங்கள் ஒரே நேர்க் கோட்டில் அமையவில்லை. அவற்றுள், ரோஹிணி நக்ஷத்திரம் இருக்கும் இடத்தை ஒட்டி சந்திரன் செல்லும் பாதை அமைகிறது. மற்ற நக்ஷத்திரங்கள், சந்திரனது பாதையிலிருந்து சற்றுத் தள்ளி இருக்கின்றன. இதனால், வானில் சந்திரன் பயணிக்கும் போது, ரோஹிணி நக்ஷத்திரத்துக்கு மிக அருகில் செல்லும்.



அது போலப் பிற நக்ஷத்திரங்களுக்கு அருகில் செல்லாது.  இதனால் ரோஹிணி என்னும் மனைவியிடம் மட்டுமே சந்திரனுக்கு அதிக அன்பு என்று, மீதம் இருக்கும் 26 மனைவிகளும் தங்கள் தந்தையான தக்ஷபிரஜாபதியிடம் கோள் செய்தனர். அதனால் கோபமுற்ற தக்ஷனும், சந்திரனைத் தேய்ந்து போகும்படி சபித்தான்.

இந்தக் கதை உருவான நாளிலேயே, ஜோதிட சாஸ்திரம் ஆரம்பித்து விட்டது எனலாம். சந்திரனது பக்ஷங்கள் எனப்படும் வளர்பிறை, தேய் பிறை என்பவை மட்டுமல்லாமல், சந்திரன் செல்லும் 27 நக்ஷத்திரங்களையும் அப்பொழுதே நம் மக்கள் ஆராய்ந்து அளந்து விட்டனர். இது நடந்த காலம், வைவஸ்வத மனு, சரஸ்வதி தீரத்துக்குள் நுழைவதற்கு முன்பே என்பது நமது கருத்து.

 


ஏனெனில் இந்தக் கதையை ஒட்டி, சந்திரனை முடியில் சூட்டிக் கொண்ட சிவபெருமானுக்கு, சோமநாதர் என்ற பெயர் எழுந்தது. சோமன் என்பது சந்திரனது பெயர். சோமன் என்றால் சந்திரனுக்கு நாதர் என்று பொருள்.


சோமநாதர் என்னும் ஜோதிலிங்கமே பாரத மண்ணில் முதன் முதலில் ஸ்தாபிக்கப்பட்டது. மொத்தம் 12 ஜோதி லிங்கங்கள் வெவ்வேறு காலக்கட்டங்களில் ஸ்தாபிக்கப்பட்டன. அவற்றுள் முதன்முதலாக ஸ்தாபிக்கப்பட்டவர் சோமநாதர் ஆவார். கஜினி முகம்மது மீண்டும் மீண்டும் படையெடுத்து அழித்தானே சோமநாதர் ஆலயம், அந்த சோமநாதரே முதல் ஜோதி லிங்கமாகும்.



 

அழிக்கப்பட்ட நிலையில் சோமநாதர் ஆலயம்.





இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, சர்தார் பட்டேல் அவர்களது முயற்சியால், மீண்டும் கட்டப்பட்ட சோமநாதர் ஆலயம்



பின்புறம் அம்புக் குறி காட்டும் இடத்திலும் அழிக்கப்பட்ட சன்னிதியின் அடித்தளம் இருக்கிறது அதை இன்னும் புனரமைக்கவில்லை.


 

இந்த ஆலயம் இருக்குமிடம், இன்றைய குஜராத்தின் தென் பகுதியாகும். அந்த இடம் முழுவதுமே சிந்து சமவெளி நாகரிகத்தின் கீழ் வருகிறது. என்பதை நினைவில் கொள்வோம்.


சோமநாதர் ஆலயம் இருக்கும் இடத்தைப் பிரபாஸ க்ஷேத்திரம் என்று அழைத்தார்கள். மஹாபாரதக் காலம் வரை அதுதான் முக்தி க்ஷேத்திரமாக இருந்த்து. இன்றைக்கு தீர்த்த யாத்திரையின் உச்சக் கட்ட இடம் காசி என்றும், ராமேஸ்வரம் என்றும் சொல்கிறோம். ஆனால் மஹாபாரதக் காலம் வரை சோமநாதர் ஆலயம் இருந்த பிரபாஸம் தான் உச்சக் கட்ட தலமாக விளங்கியது.




 

பாண்டவர்கள் யாத்திரை சென்ற பொழுது, கடைசியாகப் பிரபாஸத்திற்கு வந்துதான் யாத்திரையை முடித்தார்கள். கிருஷ்ணனும் பிரபாஸத்திலிருந்துதான் உலகை விட்டு நீங்கினார். அதனால் அது முக்தி துவாரகை என்றும் பெயர் பெற்றது. இத்தனை முக்கியத்துவம் கொண்ட இந்த க்ஷேத்திரம் இன்று மீன் நாற்றம் அடித்துக் கொண்டிருக்கிறது. பரம்பரியத்தை மதிக்காத இந்திய அரசாங்கம், இங்கு மீன் ஆராய்ச்சி நிலயத்தை நிறுவியுள்ளது. இந்த இடத்தில் தொல் பொருள் ஆராய்ச்சி செய்தால் பல விவரங்கள் கிடைக்கும். இந்த இடத்தை இன்று வெராவல் (VERAVAL)  என்று அழைக்கிறார்கள்.


 

சோமநாதருக்கும், இந்தக் கட்டுரையில் எடுத்துக் கொண்டுள்ள பொருளுக்கும், ஒரு தொடர்பு இருக்கிறது.

சோமன் எனப்படும் சந்திரனுக்கு முக்கியமான கார்த்திகைப் பௌர்ணமியன்று,

அந்தப் பௌர்ணமிச் சந்திரன்  

சோமநாதரது தலைக்கு மேலே

அதாவது சோமநாதர் ஆலயத்தின் உச்சிக்கு மேலே

கடக்கும் வண்ணம்

இடத்தைத் தேர்ந்தெடுத்து ஸ்தாபித்திருக்கிறார்கள்!



இவ்வாறு ஸ்தாபித்தவர் யாரென்று தெரியவில்லை. நம்மிடம் இருக்கும் விவரங்களின்படி, கிருஷ்ணரது வளர்ப்புத் தந்தையான நந்தகோபனது குல குருவான சாண்டில்ய ரிஷி இங்கு சோமநாதரை வழிபட்டிருக்கிறார். அவரே குறுந்தொகைப் பாடலையும் எழுதியிருக்கக்கூடும் என்று எண்ணும் வண்ணம் பெண்கள் வழிபடும் வண்ணம் வானத்தில் தோன்றும் பிறைச் சந்திரனைப் பற்றிய பாடலை 80 ஆவது கட்டுரையில் கண்டோம்.





 

கார்த்திகை தீபம் என்பது தமிழர்கள் பண்டிகை என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் குஜராத்தில் உள்ள சோமநாதபுரியில் (பிரபாஸம்) கார்த்திகை தீபத்தன்று சந்திரனே ஒரு தீபமாக ஒளிர்ந்து கொண்டு, சோமநாதரது உச்சியில் செல்கிறான்!


அன்று சோமநாதரது ஜடாமுடியில் ஒளிரும் ஒளியின் காரணமாக, இந்த க்ஷேத்திரத்தையே பிரபாஸம் (ஒளி வீசுமிடம்) என்று அழைத்திருக்கிறார்கள்.

27 நக்ஷத்திரங்கள், சந்திரன், சோமநாதர் ஆகியோரைக் கொண்ட புராணக் கதையை அறிந்தவரும், விவரம் தெரிந்தவரும், விண்வெளியில் சந்திரன் செல்லும் அமைப்பைத் தெரிந்தவருமான ஒருவரோ, அல்லது ஒரு சமூகமோ இந்த க்ஷேத்திரத்தை அமைத்திருக்கிறார்கள். அது மட்டுமல்ல. அந்தக் கோவில் கோபுரத்திலிருந்து வடதென் துருவத்தை இணைத்தாற்போல ஒரு அம்புக் குறி வழிகாட்டியும் வைத்திருக்கிறார்கள்.


பாண-ஸ்தம்பம் என்றழைக்கப்படும் இந்த அமைப்பின் அம்புக் குறியானது காட்டும் திக்கில்  தென் துருவம் இருக்கிறது என்றும், தென் துருவத்திலிருந்து இந்த திக்கில் வரும் போது தென்படும் முதல் நிலப்பகுதி இந்தப் பிரபாஸ சோமநாதர்தான் என்றும் சமஸ்க்ருத்த்தில் எழுதப்பட்ட ஒரு கல்வெட்டு இந்தக் கம்பத்தின் கீழ் இருக்கிறது.



பாண-ஸ்தம்பம் (பாணக் கம்பம் / அம்புக் கம்பம்)

தென் துருவத்தைக் காட்டும் அம்பை இந்தப் படத்தில் காணலாம்.

 


தெற்கு நோக்கி அது காட்டும் திசையில் நிலப்பகுதி எதுவும் இல்லை.

வெறும் கடல்தான் இருக்கிறது.


சோமநாதரது தலை உச்சியிலிருந்து, தென் துருவம் வரை நடுவில் கடல்தான், நிலப்பகுதி கிடையாது. இந்த அமைப்பும் ஆதியில் யாரோ செய்தது. அதை அப்படியே வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படி ஒரு அமைப்பை ஏன் வைக்க வேண்டும்?



அந்த அம்புக் குறி காட்டும் திக்கில் ஒரு பழைய தொடர்பு இருந்தால் மட்டுமே இப்படி அமைத்திருப்பார்கள்.


பூமத்திய ரேகைக்குத் தெற்கில் ஆரம்பித்து, படிப்படியாக மக்கள் சமுதாயம், கடல் கோளில் சிக்கிச் சிதறுண்டது என்பதை இந்தத் தொடரில் கண்டோம்.

ஒவ்வொரு முறையும் தப்பித்துப் புது இடம் கண்டு, அங்கும் கடல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு முடிவாக இன்றைய குஜராத் பகுதியில் கரையேறின மக்களால் அந்தப் பழைய நினவை மறப்பது எளிதாக இருக்காது.



வந்த இடத்தில் சோமநாதர் ஆலயம் எழுப்பினது இவர்கள் பட்ட அவதியை உறுதிபடுத்துகிறது.


அகால மரணமடைந்தவர்களுக்கும், துர் மரணம் அடைந்தவர்களுக்கும், ஈமக் கிரியைகள் செய்யப்படாதவர்களுக்கும் சிவனை முன்னிட்டு பூஜைகள் செய்வது மரபு.

அதன் வெளிப்பாடாக ராமேஸ்வரம் சேதுக் கரையில் சகரர்ளுக்கு ஈமக்கிரியை செய்ய கங்கை கொண்டு வரப்பட்டாள் என்று 47 ஆவது கட்டுரையில் கண்டோம். சோமநாதரை பிரதிஷ்டை செய்ததும் அப்படி ஒரு காரணத்திற்காக இருக்க வேண்டும். கடல் பிரளயத்தில் இறந்த முன்னோர்களுக்காக அந்தத் தெய்வத்தை ஸ்தாபித்துத், தாங்கள் வந்த வழியையும் விவரிக்க இயலாத உணர்வுடன் நோக்கி இருக்கிறார்கள். 


அவ்வாறு ஸ்தாபித்த தெய்வம் சோமநாதராக இருப்பதால், 27 நக்ஷத்திரக் கணக்கைக் கொண்ட ஜோதிட சாஸ்திரம், பிரபாஸத்திற்கு வருவதற்கு முன்பே உண்டாகி இருக்க வேண்டும். அதாவது தெற்கில் இந்த மக்கள் சமுதாயம் இருந்தபோதே 27 நக்ஷத்திரத்தைப் பற்றிய அறிவு உண்டாகி விட்டது.




இந்தப் படத்தை முன்பே இந்தத் தொடரில் காட்டியுள்ளோம். இன்றைக்கு மரபணு ஆராய்ச்சிகள் காட்டும் மனித குல இடப்பெயர்வினபடியே புராணக் கதைகளும், தமிழ் நூல்கள் காட்டும் இடப்பெயர்வும் அமைந்துள்ளன. அவற்றை அம்புக் குறிகளாக இந்தப் பட்த்தில் காணலாம். படிபடியாகத் தென் திசையிலிருந்து இந்தியா நோக்கி மக்கள் இடப்பெயர்வு நடந்திருக்கிறது. அரபிக் கடலிலிருந்து இந்தியாவுக்குள் குஜராத் வழியாக நுழைந்த காலக்கட்டத்தை சோமநாதர் ஆலயம் தெரிவிக்கிறது. அங்கு மக்கள் நுழைந்த போது, அங்கிருந்து, தென் துருவம் வரை செல்லும் நேர்ப்பாதையில் நிலப்பகுதி இல்லை என்பதை பாண-ஸ்தம்பம் காட்டுகிறது. அல்லது அந்த நேர்ப்பாதையில் அவர்கள் படிபடியாக இடம் பெயர்ந்து, முடிவில் எல்லாவற்றையும் இழந்த நிலையையும்  இது காட்டுவதாக்க் கொள்ளலாம். இப்படி நுழைந்தவர்கள் வைவஸ்வத மனுவைச் சேர்ந்தவர்கள் என்று நாம் 48 ஆவது கட்டுரையில் கண்டதை நினைவுபடுத்திக் கொள்வோம்.


 

நாம் சொல்லி வரும் இந்தக் கருத்துக்களை உறுதிப் படுத்தும் இன்னொரு விவரம் இருக்கிறது.  கார்த்திகைப் பௌர்ணமி வரும் கார்த்திகை மாதம் தான் குஜராத் மக்களுக்கு வருடத்தின் முதல் மாதமாகும். ஐப்பசி விஷுவுக்கு அடுத்து வருவது அது. பூமத்திய ரேகைக்குத் தென் பகுதியில் உள்ளவர்களுக்குதான் அது வருட ஆரம்பமாக இருக்க முடியும். அப்படி வருடப் பிறப்பு கொண்டாடியவர்கள்தான், வேற்றிடம் பெயர்ந்தாலும், பழைய நினைவில் அதே வருடப் பிறப்பைக் கொண்டாடி வர முடியும். குஜராத் என்றாலே யாதவர்கள் நாடு. வைவஸ்வத மனுவின் பரம்பரையில் வந்த யயாதியின் மகனான யது குடியமர்ந்த நாடு. அங்குள்ளவர்கள் இன்றும்,



கார்த்திகை பௌர்ணமி வரும் மாதத்தைக் 'கார்தக் மாதம்' என்றழைத்து, அதையே வருத்தின் முதல் மாதமாகக் கொண்டாடுகிறார்கள்.



அதற்கடுத்த மாதம், 'நக்ஷத்திர மாதம்'!



சந்திரனை முன்னிட்டு முதல் மாதம்.


அதை அடுத்து, சந்திரன் செல்லும் நக்ஷத்திரங்களை முன்னிட்டு இரண்டாம் மாதம்.


கார்தக் மாதத்தில் சந்திரன் செல்லும் பாதையில் ஒரு கோவில்.

அதற்கடுத்தான நக்ஷத்திர மாதத்தின் பௌர்ணமியில்

மொஹஞ்சதாரோவின் உச்சியில்  மிருக சீரிஷ நக்ஷத்திரத்தில்

சந்திரன் பயணிக்கிறது என்பது என் ஊகம்.


நேரில் சென்று ஆராய்ச்சி செய்பவர்கள் இதையும் ஆராயலாம்.



 

மிருகசிரீஷத்தின் தேவதை சந்திரன் ஆவான்.

சந்திரனைச் சூடிய சோமநாதருக்கு

அந்தச் சந்திரன் செல்லும் வழித்தடத்தில் கோவில் அமைத்தவர்கள்,

சந்திரனை தேவனாக்க் கொண்ட மிருகசிரீஷ நக்ஷத்திரத்தில்

பௌர்ணமி வரும் நக்ஷத்திர மாதத்தில்,

நக்ஷத்திரக் கோவில் கட்டி வழிபட்டிருப்பார்கள்

என்பதைக் காட்டுவது போல அல்லவா,

27 பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட அந்த அமைப்பு இருக்கிறது.?


இதைப் பற்றி மேலும் சில விளக்கங்களை அடுத்தக் கட்டுரையில் காண்போம்.






 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக