திங்கள், 10 செப்டம்பர், 2012

104. ஐரோப்பாவில் காளி யந்திரம்!

 

 

உலகின் சில பகுதிகளிலுள்ள வயல்வெளிகளில் அவ்வபொழுது திடீரென்று சில வடிவங்கள் முளைக்கின்றன. இவற்றை CROP CIRCLE  என்கிறார்கள். அந்த வயல்களில் உள்ள செடிகளைக் கொண்டே இந்த வடிவங்கள் அமைகின்றன. அந்தச் செடிகள் வெட்டப்படாமல், பிடுங்கிப் போடப்படாமல், அப்படியே தலை சாய்த்து, ஒரு பெரிய கோலம் போல அல்லது ஒரு ஒழுங்கான வடிவத்தில் தோற்றமளிக்கின்றன.


 

இவை ஓரிரவிலேயே திடீரென்று தோன்றி விடுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. சில இடங்களில், பகல் வேளையிலேயே, யாரேனும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, கண்ணுக்கெதிரேயே அவை மடமடவென்று சரிந்தும், சாய்ந்தும், ஒரு குறிப்பிட்ட வடிவத்தை அடைந்து விடுகின்றன.


அந்த வடிவங்கள் குறிப்பிட்ட ஜியோமிதி வடிவங்களாக இருக்கின்றன என்றும், அவற்றை உண்டாக்க பல வட்டங்கள், சதுர செவ்வகங்கள், கோடுகள் போன்றவற்றை பல விதங்களிலும் ஒன்றன் மீது ஒன்று வரைந்து உருவாக்க முடியும் என்றும் கண்டு பிடித்தார்கள். இவ்வாறான வடிவங்களைக் கணினியிலோ அல்லது ஒரு தாளிலோ வரைந்து, அழித்து, முடிவான வடிவத்தைக் கொண்டு வர முடியும், ஆனால், பல சதுர மீட்டர் பரப்பளவில் வளர்ந்துள்ள செடிகளில், அவற்றுக்கு எந்த சேதம் வராமலும், சுற்றுப் பகுதியிலும் சேதம் விளைவிக்காமலும், ஒரே நாளில், அல்லது ஒரே இரவில் மனிதர்களாலோ அல்லது கருவிகளைக் கொண்டோ இவ்வாறு அமைக்க முடியாது என்பதை ஆராய்ச்சியாளர்கள் ஒத்துக் கொண்டிருக்கின்றனர்.


இவை எல்லா இடத்திலும் ஒரே மாதிரி தோன்றுவதில்லை. பலப்பல வடிவங்களில் தோன்றுகின்றன. அவற்றில் சில நாம் வரையும் கோலம் போல இருக்கின்றன. பிற  வடிவங்கள் யோகம், மற்றும் தந்திர மரபில் சொல்லப்படும் வடிவங்களை ஒத்திருக்கின்றன. அப்படி மிகச் சரியான ஒரு யந்திர அமைப்பில், 1993 ஆம் ஆண்டு செப்டெம்பர் 3 ஆம் தேதி, இங்கிலாத்தில் உள்ள கேம்ப்ரிட்ஜ்ஷையர் என்னும் இடத்திலுள்ள BYTHORN வயல்வெளியில், ஒரு வடிவம் திடீரென்று தென்பட்டது. ஆகாயத்திலிருந்து பார்க்கும் போது அது இப்படி இருந்தது.


 


இதன் நடுவில் 5 முனை நக்ஷத்திர அமைப்பு தென்படுகிறது. (இதே நக்ஷத்திர அமைப்பு கேர்னூனோஸ் தலையிலும் அமைக்கப்பட்டிருந்தது.) படத்தில் வெண்ணிறமாகத் தெரியும் இடங்களிலுள்ள செடிகள் நன்கு நேர்த்தியாக ஒன்றன் மீது ஒன்று சாய்ந்து படுத்த நிலையில் உள்ளன. எந்தச் செடியின் காம்பும் உடையவில்லை. கையால் அவற்றை அந்த அளவுக்கு வளைத்தால் இந்தச் செடிகள் உடைந்து விடக்கூடியவை. ஆனால் இவற்றை எலாஸ்டிக் பாண்டை இழுப்பது போல இழுத்து படுக்க வைத்தாற்போல இருக்கின்றன.