திராவிடவாதிகள் பரப்பி வரும் பார்ப்பனக் கருத்துக்களுக்கு ஆதாரமில்லை என்பதைத் தொல்காப்பியச் சூத்திரம் மூலமாக முந்தின கட்டுரையில் கண்டோம். அதுபோல பார்ப்பனர்கள் மட்டுமே படிப்பாளிகளாக இருந்தார்கள் என்று பரப்பப்பட்டு வரும் கருத்தும் தவறு என்பதையும், யாரும், யாருக்கும் கல்வியை மறுக்கவில்லை என்பதையும் தமிழ்ச் சங்க நூல்கள் வாயிலாகவே இனி வரும் இரண்டு கட்டுரைகளில் பார்ப்போம்.
பார்ப்பனர்கள் கற்றலும், கற்பித்தலும் செய்தார்கள்.
அந்தக் கல்வி இரண்டு வகைப்பட்டது.
ஒன்று, வேதக் கல்வி,
மற்றொன்று வேதம் ஒழிந்த கல்வி அதாவது, வேதமோதுதல் அல்லாத பிற கல்வி என்று
இரு வகைகளாக இருந்தன.
அந்தக் கல்வியை தமிழிலும் படிக்கலாம், சமஸ்க்ருதத்திலும் படிக்கலாம் என்று இருந்தது என்பதை ”அறுவகைப்பட்ட பார்ப்பன இயல்” என்று தொல்காப்பியர் சூத்திரமாக எழுதியிருக்கிறார். அவற்றுள் முதல் இரண்டு வகை வேதக் கல்வியாகும், கடைசி ஆறு வேதம் ஒழிந்த கல்வியாகும். (பகுதி 61)
பார்ப்பனர்கள் உட்பட அனைத்து வர்ணத்தவர்களும் அவரவர்கள் விருப்பம், முயற்சி, ஆகியவற்றின் அடிப்படையில் இந்தக் கல்வியைக் கற்றிருக்கிறார்கள்.
நான்காம் வர்ணத்தவர் எனப்படும் வேளாண் மக்களும் கல்வியைக் கற்றிருக்கிறார்கள். (நான்காம் வர்ணத்தவரைச் சூத்திரன் என்று தமிழில் சொல்லவில்லை. அவர்களை வேளாண் மக்கள் என்றே சொன்னார்கள்.)
வேளாண் மக்களுக்கான ஆறு தொழில்கள் என்று சொல்லும் தொல்காப்பியச் சூத்திரத்துக்கு உரை எழுதும் நச்சினார்க்கினியர் ஆறில் ஒன்றாக இதைக் கூறுகிறார்.
உழவு,
உழவொழிந்த தொழில்
விருந்தோம்பல்
பகடு புறந்தருதல் (ஏரைப் பாதுகாத்தல்)
வழிபாடு
வேதம் ஒழிந்த கல்வி.
அரசர், வணிகர் ஆகியோருக்குச் சொல்கையில் ஓதல் என்று பொதுவாகச் சொல்கிறார். அந்த ஓதல் வேதக் கல்வியாகவும், இருக்கலாம், அல்லது வேதம் ஒழிந்த கல்வியாகவும் இருக்கலாம். ஆனால் வேளாண் மக்களுக்குக் குறிப்பாக வேதம் ஒழிந்த கல்வி என்று சொன்னதற்குக் காரணம் இருக்கிறது.
அவரவர் இயல்பு அடிப்படையில் வர்ணம் அமைகிறது. வேளாண் வகையின் முக்கிய இயல்பு பகடு புறந்தருதல் ஆகும். இந்த உலகமே வேளான் மக்களின் பகடு புறந்தரும் இயல்பை நம்பித்தான் இயங்குகிறது.
- · அப்படிப்பட்ட அவன் மண்ணிலும், சேற்றிலும் இறங்கி வேலை செய்யவும் வேண்டும், வேதக் கல்வி கற்றுக் கொள்ள வேண்டி பட்டினியும், விரதமும் இருந்து, வேளைக்கு ஒரு குளியலும் செய்து மந்திரம் ஓத வேண்டும் என்றால் எப்படி முடியும்?
- · வேதக் கல்வி விடியலுக்கு முன்னால் ஆரம்பிக்கும். வேளாண் வர்ணத்தவனும் விடியலுக்கு முன்னால் வயலுக்குச் செல்ல வேண்டும். அவன் வேதக் கல்வி படித்தான் என்றால் எதற்குச் செல்வான்? எதற்கு முன்னுரிமை தர முடியும்?
இந்த நேரப் பிரச்சினை அரசர், வணிகர் ஆகிய மீதமுள்ள வர்ணத்தவருக்குக் கிடையாது. அதனால் அவர்களுக்கு ஓதல் என்பதில் வேதக் கல்வியும், வேதம் ஒழிந்த கல்வியும் சேர்த்தே சொல்லப்பட்டது.
மேலும், வேளாண் மக்களை ஒரு சொத்தாகக் கருதினார்கள்.
தொல்காப்பியப் புறத்திணைச் சூத்திரங்களை விளக்கும்
புறப்பொருள் வெண்பாமாலையில், பாலைக் குரிய வாகைத்திணையில்,
வேளாண் வகையைச் சொல்லும் சூத்திரம் 165 –இல்
‘உழுவான் உலகுக்கு உயிர்’ என்று
அந்த நான்காம் வர்ணத்தவரை உலகத்துக்கே உயிர் போன்றவர்கள்
என்று சொல்லப்பட்டுள்ளது.
திருவள்ளுவரும் அவர்களது சிறப்பைத் தனியாக விவரித்துள்ளார்.
எனினும் சிறப்புப் பாயிரத்தில், இந்த ஒரு வர்ணத்தவரைப் பற்றி மட்டுமே குறிப்பாகச் சிறப்பித்துச் சொல்லியுள்ளார். வேறு எந்த வர்ணத்தவரைப் பற்றியும் சொல்லவில்லை.
அறவாழி அந்தணன் என்று சொன்ன இடத்திலும் (கடவுள் வாழ்த்து 8), ஆண்டவனைத்தான் சொன்னாரே தவிர, அந்தண வர்ணத்தைச் சொல்ல்வில்லை. ஆனால் பகடு புறந்தருதல் என்னும் அந்த ஏரைக் காக்க வானம் பொழிய வேண்டும் என்று இந்த ஒரு வர்ணத்துக்கு மட்டுமே (வான் சிறப்பு -4) பாயிரத்தில் இடம் தந்துள்ளார்,
நான்காம் வர்ணத்தவர், உலகத்துக்கும், தாங்கள் வாழ்ந்த நாட்டுக்கும் ஆதாரமாகக் கருதப்பட்டார்கள். அரசர்கள் படையெடுத்து பிற நாட்டைக் கொண்டாலும், அந்தப் படையெடுப்பினால் அந்த நாட்டு வேளான் மக்களுக்கு ஒரு துன்பமும் ஏற்படாமல் பார்த்துக் கொண்டார்கள். கழனிகள் பாதிப்படையாமல் பார்த்துக் கொண்டார்கள். இதைச் சொல்லும் ஒரு பாடல் புறநானூற்றில் இருக்கிறது.
குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் செய்த செயல்கள் என்று வெள்ளைக் குடி நாகனார் சொல்பவற்றில் முத்தாய்ப்பாகச் சிறப்பித்துச் சொல்லப்படுவது ’பகடு புறந்தருநர் பாரமோம்பி’ என்பதேயாகும் (பு-நா-35)
அந்த அரசன் எத்தனையோ வெற்றிகளைப் பெற்றவன். ஆனால் அவையெல்லாம் பெரிதல்ல. அந்த அரசனை உலகம் தூற்றக்கூடிய காலமும் வரும். மழை பெய்ய வேண்டிய காலத்தில் பெய்யாமல் போனாலும், விளைச்சல் குறைந்தாலும், இயல்பல்லாதன மக்கள் தொழிலில் தோன்றினாலும், உலகம் அரசனைத்தான் பழிக்கும். எனவே ஏரைப் பாதுகாப்பவரது குடியைப் பாதுகாத்து, அதனால் ஏனைய குடிகளையும் இந்த அரசன் பாதுகாக்கிறான் என்பதால், அவன் பகைவர்களும் அவனை வணங்குவர் என்கிறார் புலவர்.
இந்தச் செய்யுளையே தொல்காப்பியச் சூத்திரம் செய்யுளியல் 128 –க்கு விளக்கமாகக் கூறும் நச்சினார்க்கினியார், பகைவர் நாட்டை வென்றாலும், வெல்லப்பட்ட பகைவர்கள் இந்த அரசனைப் புகழ்வார்கள். ஏனெனெறால் வெல்லப்பட்ட நாட்டு வேளான் மக்களுக்கு இந்த அரசனால் எந்தத் துன்பமும் வராது. வென்ற நாட்டு கழனிகளுக்கும் எந்த அழிவும் வராது. ஏனெனில் வேளாண் மக்களைப் பாதுகாத்தால்தான், உணவும், செல்வமும் பெருகும். அதனால் மற்ற வர்ணத்தவரும் கவலையின்றி வாழ முடியும்.
இவ்வாறு சொல்லப்பட்டது கிள்ளி வளவனுடைய இயல்பு மட்டுமல்ல. இது தான் அரச வர்ணத்தின் ஐவகை மரபில் ஒன்று.
உலகத்துக்கு உயிராக விளங்கும் நான்காம் வர்ணத்தவருக்கு அவர்கள் செய்து வந்த தொழிலுக்குத் தலை வணங்கியே வேதக் கல்வி தேவையில்லை என்று வைத்தார்கள். காழ்ப்புணர்ச்சியாலோ, அடக்கு முறையாகவோ வேதக்கல்வியை மறுக்கவில்லை. நடைமுறைக்கு ஒத்து வராது (NOT PRACTICAL) என்றே அவ்வாறு வைத்தார்கள்.
ஆயினும், கல்வியே வேண்டாம் என்று சொல்லவில்லை, வேதம் ஒழிந்த கல்வி என்பதை ஒரு தொழிலாக வைத்தார்கள். அந்தக் கல்வி அவர்கள் கற்பனைக்கும், அறிவுக்கும் தீனி போடக் கூடியது. அதனால் அவர்கள் பாடும் ஏர்ப்பாட்டும், ஏற்றப்பாட்டும் அவர்கள் செய்யும் உழவின் சுமையைத் தவிர்க்கும்படி அமைந்தது.
இவையெல்லாம் மனுவாதி வர்ணாஸ்ரமத்தில், இந்த அளவுக்கு விரிவாகச் சொல்லப்படவில்லை. மனுவாதியில் நான்காம் வர்ணமே முதலில் ஏற்படவில்லை. காலப்போக்கில் அது ஏற்பட்ட பிறகும், தமிழில் சொல்லியுள்ளது போல அத்தனை விரிவாகச் சொல்லவில்லை. ஆனால் தமிழ் மரபில் இந்த வர்ண விவரங்கள் இருந்து வந்தன என்பதுதான் உண்மை என்று பறை சாற்றும் வண்ணம், ‘என்மனார் புலவர்’ என்று நொடிக்கொரு தடவை தொல்காப்பியர் எழுதி, இந்தக் கருத்துக்களை வைத்துள்ளார் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். மக்கள் இயல்பையும், சூழ்நிலையையும் பொருத்து, அவற்றைக் கவனித்து, பெரியோர்கள் சொல்லி வந்ததை, வழி வழியாக்க் கடை பிடித்து வந்தனர் என்பதே இந்த என்மனார் புலவர் என்று தொல்காப்பியர் கை காட்டி விடும் சங்கதியாகும்.
இனி நான்காம் வர்ணத்தவர் கல்வியைப் பெற்றார்கள் என்று காட்டும் சங்க நூல் ஆதாரங்களைப் பார்ப்போம்.
Why you have not added any material in 2013?
பதிலளிநீக்குBusy with other works, would start soon. Please stay put.
நீக்குhttps://youtu.be/WHddbkg2fvk
பதிலளிநீக்குhttps://youtu.be/WHddbkg2fvk
பதிலளிநீக்கு