சனி, 9 ஜூலை, 2011

60. தென்னனுடன் தொடரும் வேத கலாச்சாரம்.


மூன்று இடங்களில், நான்கு வர்ணங்களான  
பிராம்மண, க்ஷத்திரிய, வைசிய, சூத்திர வர்ணங்கள் அமைந்திருந்தன  
என்று இதுவரை இந்தத் தொடரில் கண்டோம்.  
ஒன்று வைவஸ்வத மனுவைப் பின்பற்றி அமைந்தது. (பகுதி 52).  
இன்னொன்று சாகத்தீவில் இருந்த 
மக பிராம்மணர்கள்,  
மசக க்ஷத்திரியர்கள்
மானச வைசியர்கள்,  
மந்தக சூத்திரர்கள் என்பவர்கள் (பகுதி 59)  
(मग, मशक, मानस, मन्दग )  
மற்றுமொரு வகை, நான்கு வர்ணத்தவருடன் 
மேலும் மூன்று பிரிவுகளைக் கொண்டு தமிழ் நிலங்களில் இருந்தனர் 
என்று தொல்காப்பியம் சொல்வது.இவற்றில் நான்கு வர்ணத்தவரும், பொதுவாக இருப்பதால்,  
ஒரு வகை மக்களே இந்த மூன்று இடங்களில் இருந்தனரா
அல்லது இந்த மூன்று வகைகளில் உள்ளவர்களும்  
ஒருவருக்கொருவர் தொடர்பு கொண்டவர்களா அல்லது,  
இந்த மூன்று வகைகளும்
ஒரு வகையிலிருந்து இன்னொரு வகை என்று தோன்றினவர்களா  
அல்லது, ஒரு வகையினர், இன்னொரு வகை மக்களைத்  
தன் வயப்படுத்தித் தங்கள் வர்ணாஸ்ரமத்தை அவர்கள் மீது திணித்தார்களா  
என்று பல கேள்விகள் எழுகின்றன


இந்த மூன்று வகைகளுள் சாகத்தீவு வர்ண முறையைத் 
திராவிடவாதிகளும், ஆரியப் படையெடுப்பைப் போதிப்பவர்களும் அறிந்ததில்லை
ஏனெனில் நம்மிடம் இருக்கும் நூல்கள் சொல்வதைவிட,  
ஆதிக்க சக்திகளான வெளி நாட்டவர் சொல்வதைக்  
கண்ணை மூடிக் கொண்டு கேட்பவர்கள் இவர்கள்.  
அந்த வெளி நாட்டவரும், நம்மிடையே இருக்கும் உட்சான்றுகளை  
மதிப்பவர்களும் இல்லை. படித்தவர்களும் இல்லை.  
அவர்கள் வழியைப் பின்பற்றும் திராவிடவாதிகள்,  
தமிழ் மக்கள் மீது வர்ணாஸ்ரமப் பகுப்பை
மனுவாடி ஆரியர்கள் திணித்ததாகச் சொல்கிறார்கள்
அதனால் இந்தக் கோணத்தை ஆராய்வோம்.


தொல்காப்பியம் சொல்லும் வர்ணாஸ்ரமத்தைப் பார்ப்போம்
மனுவாடியில் நான்கு வர்ணங்கள்தான் சொல்லப்பட்டுள்ளன.  
ஆனால் தொல்காப்பியத்தில் ஏழு பிரிவுகள் சொல்லப்படுகின்றன
நான்கு வர்ணங்களுடன், தாபதர், கணியன், பொருநர்  
என்று மூன்று பிரிவுகளைச் சேர்த்துச் சொன்னதால்
மக்களது குணம், அந்த குணத்தினால் செய்யும் தொழில் 
அல்லது செயலைப் பொருத்தே இந்தப் பிரிவுகளை உண்டாக்கி இருக்கின்றனர் என்றும்,  
இது மக்களை இழிவு படுத்தும் செயல் அல்ல என்றும் தெரிகிறது.


மேலும் படையெடுத்து வந்த ஆரியர்கள் வர்ணாஸ்ரமத்தைத்  
தமிழ் மக்கள் மீது திணித்திருந்தார்கள் என்று 
திராவிடவாதிகள் சொல்வது உண்மையென்றால்,  
கூடுதலாக மூன்று பிரிவுகள் எப்படி உண்டாகி இருக்க முடியும்


முதலில் நான்கு பிரிவுகள் தான்,  
அவையே பிற்காலத்தில் ஏழாகப் பெருகியது  
என்று சொல்லலாம்.  
அதுவே உண்மை என்று ஏற்றுக் கொள்வதாக இருந்தால்,  
அப்படிப் பெருக அதிகக் காலக்கட்டம் ஆகியிருக்குமே
3500 ஆண்டுகளுக்கு முன் தான் ஆரியப் படையெடுப்பு நடந்தது என்பது  
ஆரியப் படையெடுப்பாளர்களின் கருத்து
3500 ஆண்டுகளுக்கு முன் வந்து,  
சிந்து சமவெளியிலிருந்த மக்களைத் தமிழ் நாட்டுக்குத் துரத்திவிட்டு,  
பிறகு அவர்கள் மீதே வர்ணாஸ்ரமத்தைத் திணித்து,  
அது ஏழாகப் பெருகியது என்றால்
இந்தப் பிரிவுகளைப் பட்டியலிடும் தொல்காப்பியம்  
எப்பொழுது எழுதப்பட்டிருக்க முடியும்?


இன்றைக்கு இருக்கும் தொல்காப்பியமே
3-ஆம் ஊழியில், கபாட புரம் உள்ளிட்ட  
ஏழேழு நாற்பத்தொன்பது நாடுகளும் கடலில் அழிந்த பிறகு தோன்றியது. 
அந்த அழிவு 3500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று முன்பே கண்டோம். (பகுதி 35)
 

இன்றைக்கு இருக்கும் தொல்காப்பியம்,  
கடைச்சங்கத்துக்கான இலக்கண நூல் ஆகும்
3500 ஆண்டுகளுக்கு முன் இடைச் சங்கமான 2- ஆம் சங்கம் அழிந்தவுடன்,  
தென்னன் தேசத்தின் மீதமிருந்த மக்களையும், ஏற்கெனெவே இருந்த 
(இன்றைய தென்னிந்தியாவின் தென் பகுதியில்) இருந்த மக்களையும்,  
அவர்கள் குணம், தொழில், அந்தத் தொழிலைச் செய்யக்கூடிய இடம்
அந்த இடத்தின் தட்ப வெப்பம் போன்றவற்றின் அடிப்படையில் 
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று பகுத்திருக்கிறார்கள்


ஆரியப் படையெடுப்பு வடமேற்கு இந்தியாவில் நடந்தது என்று சொல்லப்பட்ட போதே, தமிழ் நாட்டில் ஊழியால் மக்கள் அவதிப்பட்டு, 
புது வாழ்வு துவங்கி இருக்கிறார்கள். அவர்கள் வாழ்வை முறைமைப்படுத்தி, 
அந்த விவரங்களை நிலம் என்றும், கருப்பொருள் என்றும் 
எழுதிய தொல்காப்பியம் உண்டாகி விட்டது. 


அது மட்டுமல்ல. ஆரியப் படையெடுப்பை ஆதரித்துப் பேசும் ஆராய்ச்சியாளர்களுக்குப் பிடித்த விவரம் குதிரைகளைப் பற்றியது. 
சிந்து சமவெளிப்பகுதியில் குதிரைகள் கிடையாது என்றும், 
ஆரியர்களே குதிரைகளை இந்தியாவில் அறிமுகப்படுத்தினர் என்றும் 
அவர்கள் சொல்கிறார்கள். 
ஆனால் தொல்காப்பியத்தைப் பாருங்கள். 
குதிரை நிலை என்ற ஒரு துறை சொல்லப்படுகிறது. 
அதிலும், வீர சுவர்கம் புகுவதற்கு, வீரனும், யானையும், குதிரையும் போடும் போட்டியை ஒரு சூத்திரமாக எழுதி வைத்துள்ளார் தொல்காப்பியர். (புறத்திணை இயல் 72)

”தானை, யானை, குதிரை என்ற
நோனார் உட்கும் மூவகை நிலையும்”
என்பது அந்தச் சூத்திரம்.
இதற்கு உரை எழுதும் நச்சினார்க்கினியர் பின் வருமாறு கூறுகின்றார்.

வீரத்தில், மறத்தில் சிறந்தவர் யார் என்றால் முதலில் வீரன். 
அவனுக்கடுத்தது யானை. 
ஏனெனில் மதத்தால், கதம் (வலிமை) சிறக்க அது போரிடும்.
யானைக்கு அடுத்தது குதிரை. 
ஏனெனில் மதம் இல்லயென்றாலும், அதற்குக் கதம் அதிகம், 
எனவே வீர சுவர்கம் போகத் தகுதியானவர்களில் குதிரையும் ஒன்று. 
நான்கு படைகளில் முதலில் சொல்லும் ரதத்திற்கு கதம் கிடையாது. 
ஏனெனில் அது குதிரையால் செலுத்தப்படுகிறதே அன்றி 
அதற்கு மறம் இல்லை என்று உரை எழுதியுள்ளார்கள். 
நானறிந்த அளவில் குதிரை மறம் என்னும் துறையில் 
இரண்டு பாடல்கள் புற நானூற்றில் இருக்கின்றன. இந்த அளவுக்குக் குதிரைக்கு முக்கியத்துவமும், கதமும், 
அதனால் மறமும், அதனால் வீர சுவர்கமும் கிடைக்கப்பெறும் 
என்று சொல்லப்படுகிற வழக்கு, 
3500 ஆண்டுகளுக்கு முன்னால் ஏற்பட்டதாகச் சொல்லப்படும் படையெடுப்பால் ஆகுமா? இந்தப் புற நானூறு பாடல்கள் எழுதி 2000 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டதே, 
அதற்கு 1500 வருடங்களுக்கு முன்னால் குதிரைகளை ஆரியர்கள் கொண்டு வந்து,
அதை அவர்கள் தமிழர்கள் மீது திணித்து,
அதை இந்த அளவுக்கு தொல்காப்பியத்தில் அதற்குள் செம்மைப்படுத்தி இருக்க முடியுமா? அல்லது போர்க்கள இயலில் அதற்குள் புகுத்தி இருக்க முடியுமா? 
முடியாது. 


தென்னன் தெளிந்த தேசம்.

ஊழியில் தப்பி வந்த தென்னன் பாண்டியனது நாட்டின் தொடர்ச்சியாக,  
இன்றைய தமிழ் நாடு இருந்திருக்கிறது
ஏற்கெனவே பாண்டியன் இருந்த கபாடபுரம்,  
அரபிக்கடல் பகுதியில் இருந்த கொல்லம் என்னுமிடத்தை ஒட்டி இருந்தது 
என்று கண்டோம். (பகுதி 41).  
அவன் ஆண்ட கொல்லம் கடலில் முழுகி விட்டதுஇன்றைக்கு இருக்கும் கொல்லம், அதை ஒட்டி ஏற்படுத்தப்பட்டு இருக்க வேண்டும். இன்றைய கொல்லமும், அதை ஒட்டிய பகுதிகளும் 
பாண்டியன் வசம் அப்பொழுது இருந்திருக்க வேண்டும்


இன்றைய மதுரையும் அன்றைய தென்னன் வசம் இருந்திருக்க வேண்டும்.  
அப்பொழுது அதன் பெயர் இருந்தையூர். பரிபாடல் திரட்டில் பாடப்படும்   
இருந்தையூர் கோவில், இன்றைய மதுரையின் ஆதி தெய்வமான கூடலழகர் கோவில் என்பது, அந்தப் பாடல் குறித்த ஆராய்ச்சியில் தெரிகிறது
 இடைச் சங்கத்தில் பாடிய ஒரு புலவர் பெயர் இருந்தையூர் குறுங்கோழி ஆகும்.  
அவர் இந்த இருந்தயூரைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.  
இந்தப் பாடல் அவரால் இடைச் சங்கத்தில் அரங்கேற்றம் செய்யப்பட்டிருக்கலாம்


3- ஆம் ஊழியில் கொல்லம், குமரி போன்றவை முழுகி விட்டாலும் 
பகைவர்களை (மேவார்) வென்று நாட்டைப் பெருக்கிக் கொண்டான் என்று  
கலித்தொகையில் ஆயர் மகள் சொல்லும் கருத்து, ஊழியில் தப்பித்த ஆயர் குல மக்களைப் பாண்டியன் குடியமர்த்தின செய்தியாக இருக்கிறது. (பகுதி 44) 


அந்த இடங்கள்
சோழ நாட்டெல்லையில் இருந்த முத்தூர்க் கூற்றம்
சேரமானாட்டுக் குண்டூர்க் கூற்றம்
என்கிறார் அடியார்க்கு நல்லார்.

முத்தூர் என்னும் பெயரில் காவேரி அருகே இன்றும் ஒரு இடம் இருக்கிறது.  
காவேரிப் பகுதிகள் சோழன் வசம் இருந்ததால், 
சோழ நாட்டெல்லையில் இருந்த முத்தூர்க் கூற்றம் 
என்று அவர் சொல்வது இந்த முத்தூராக இருக்க வேண்டும்.அதை மெய்ப்பிக்கும் வண்ணம் இந்த ஊருக்கருகே இருக்கும்  
காங்கேயம் பகுதி காளைகள் ஜல்லிக் கட்டுக்குப் பெயர் போனவை.  
முத்தூரில் குடியமர்ந்த ஆயர் மக்கள் இந்தக் காளைகளை வளர்த்து,  
தங்கள் குல வழக்கமான ஏறு தழுவுதலைச் (ஜல்லிக் கட்டு) செய்திருப்பார்கள்சோழ நாட்டெல்லையாக இருந்த  இந்த இடத்தைப் பாண்டியன் 
தன் வசம் கொண்டு வந்தான் என்று சொல்லவே,  
அதுவே பாண்டிய நாட்டெல்லையாக அமையும்
எல்லைப் புறம் என்பதால் அங்கு பல பாளையங்களை நிறுவியுள்ளான் பாண்டியன். பாளையம் என்றால் பாசறை, படை என்று பொருள்.  
பாளையம் என்று முடியும் பெயர்களில் இந்தப் பகுதியில் இன்றும் பல ஊர்கள் உள்ளனஆயர்களை அவன் குடியமர்த்தின காலக்கட்டத்தில்,  
மேலும் பல குடியிருப்புகள் ஏற்பட்டன.  
அவற்றை இந்தத் தொடரின் போக்கில் பிறகு பார்க்கலாம்.  
இங்கு சொல்ல வருவது,  
இன்றைய தமிழ் நாடு,  
அன்றைய தென்னன் தேசத்துடன் 
ஒரு தொடர்ச்சியான நிலப்பகுதியாக இருந்தது என்பதே.


நிலத் தொடர்பால் மக்கள் தொடர்பும்,  
அதனால், மொழி, கலாச்சாரத் தொடர்பும் என்றும் இருந்திருக்கிறது.  
அதனால், கடைச் சங்க காலத்தில்,  
நிலப் பாகுபாடு செய்த பொழுது இருந்தையூர் என்னுமிடம் மதுரையானது
 இன்றைய மதுரை, இடைச் சங்க காலத்து மதுரை நாடுகளைச் சேர்த்து 
8 ஆவது மதுரை நிலமாகவும் இருந்திருக்கலாம்.  
ஆனால் முதல் சங்கத்துத் தென் மதுரையானது கடல் கொண்ட  
ஏழு மதுரை நாடுகளுள் ஒன்றாக இருந்திருக்க வேண்டும்இன்றைக்கு நம்மிடம் இருக்கும் தொல்காப்பியம் சொல்லும் 
நெய்தல் நாடுகளில் சில முந்தின அமைப்பில் குணகரை நாடுகளாக  
இருந்திருக்க வேண்டும்.
 சேர நாட்டுப் பகுதிகள், தெங்க நாட்டுப் பகுதிகள்  
என அழைக்கப்பட்டிருக்க வேண்டும்.

குன்ற நாடுகளில் ஒன்று இன்றைய திருப்பரங்குன்றமாக இருக்கலாம்
முருகன் விளையாடி, வள்ளியை மணம் புரிந்த இடம்
கடல் கொண்ட மலைப்பகுதியில்சாகத்தீவின் ஸுகுமார மலையாக இருக்கலாம். இவ்வாறு ஒரு தொடர்ச்சியாக நிலங்களும்,  
அந்த நிலங்களை ஒட்டி மக்கள் வாழ்க்கையும்,  
கலாச்சாரமும் அமைந்திருக்கிறது
 பண்பட்ட நிலையில் அமைந்த அந்த மக்கள் வாழ்க்கை
 ஊழியின் காரணமாக அலைக்கழிக்கப்பட்டாலும்,  
மீண்டும் அவர்கள் வாழ்க்கையைத் துவங்கின போது முந்தின அமைப்பின் தொடர்ச்சியாகத்தான் வந்திருக்க வேண்டும்


ஊழிக்குப் பிறகு மீதமிருந்த நிலத்தை  
அதன் தட்ப வெப்பம், பயன் பாடு போன்றவற்றின் அடிப்படையில் ஐந்தாகப் பிரித்தார்கள். அதே போல அந்த நிலத்தில் தொடரும் மக்களையும் 
ஏழு வகைபட்டவர்கள் என்று பகுத்திருக்கிறார்கள்
முந்தின நிலையின் தொடர்ச்சியாக இது இருக்க வேண்டும்
இதில் ஆரியத் திணிப்பு என்று சொல்வதற்கு  எந்த ஆதாரமும் இல்லை
திணித்ததாகச் சொன்னால்,  
அது தென்னன் பாண்டியன் செய்த திணிப்பாகத்தான் இருக்க முடியும்
அவன் தான் சங்கம் கூட்டினான்,  
அந்தச் சங்கத்தை முன்னிட்டுத்தான் தொல்காப்பியம் எழுந்தது
எனவே கடல் கொண்ட அவன் நாட்டில் நான்கு வர்ணத்தவர் இருந்திருந்தால்தான்,  
கடைச் சங்கத்திலும் அவர்களைத் தொல்காப்பியச் சூத்திரத்தில் சொல்லியிருக்க முடியும்.


தமிழ் நிலங்களில் இயல்பாகவே வர்ண அந்தணர் இருந்தனர் 
என்பதை உறுதி செய்யும் வண்ணம் புறநானூறில் பாடல்கள் உள்ளன.  
புற நானூறு பாடும் மன்னர்களில் இரண்டு மன்னர்கள் 3500 வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்தவர்கள்.  
அவர்களுள் ஒருவன் 5000 வருடங்களுக்கு முற்பட்ட  
பாரதப்போரில் பெருஞ்சோறு படைத்த உதியன் சேரலாதன்.  
அவனைப் பற்றிய பாடலில், வேதங்கள், அந்தணர் பற்றிய குறிப்பு வருகிறது


நால் வேத நெறிதிரிந்தாலும், உதியன் நெறி தவற மாட்டான் 
என்று நால் வேதத்தைப் பற்றிய குறிப்பு வருகிறது.

அது போல, அந்தணர், ஆகுதி செய்யும் யாக சாலையின் கண், மான் பிணைகள் தூங்கும் என்று அந்தணர் பற்றிய குறிப்பு வருகிறது.  

அது மட்டுமல்ல, மானக்ள் தூங்கும் அந்தக் காட்சி
 பொதிகை மலையிலும், இமய மலையிலும் இருப்பதைப் போன்றது 
 என்று சொல்லி அந்தப் பாடல் முடிகிறது.  

தமிழகம் முதல் இமயம் வரை அனைவரும் 
வேத கலாச்சாரத்தைப் பின் பற்றினர் என்பதற்கு இது ஒரு சாட்சி
3500 ஆண்டுகளுக்கு முன்தான் ஆரியப் படையெடுப்பு நடந்ததென்றால்
5000 ஆண்டுகளுக்கு முன்பே உதியன் நாட்டில் யாகங்கள் செய்ய  
எங்கிருந்து அந்தணர்கள் கிடைத்தார்கள்


புற நானூறு சொல்லும் இன்னொரு அரசனைப் பார்ப்போம்.
அவன் 3500 வருடங்கள் முன்னால், 3-ஆம் ஊழிக்கு முன்னால்  
இருந்த பஹ்ருளி ஆற்றங்கரையில் அமைந்திருந்த 
கபாட புரத்தைத் தலைநகரமாகக் கொண்டு ஆண்ட 
முது குடுமிப் பெரு வழுதி என்னும் பாண்டிய அரசன்.  
அவனுக்குப் பல் யாக சாலை என்ற பட்டப்பெயர் உண்டு
பல யாகங்களைச் செய்தவன் என்பதால் இந்தப் பெயர்.
யாரைக் கொண்டு அந்த யாகங்களை அவன் செய்திருப்பான்?  
பார்ப்பனர்களை கொண்டுதானே


3500 வருடங்களுக்கு முன்னால் சிந்து நதிப் பகுதியில்  
ஆரியப் படையெடுப்பு நடந்ததென்றால்,  
அதைச் செய்தவர்கள் பார்ப்பனர்கள் என்றால்
அதற்கும் முன்னால் பாரதத்தின் தென் கோடியில் 
எங்கோ இருந்த கபாட புரத்தில் பல யாகங்களைச் செய்ய  
எங்கிருந்து பார்ப்பனர்கள் கிடைத்தார்கள்?  
அந்த யாகங்களைச் செய்ய வேத அடிப்படை வேண்டுமே,  
அதை அவர்களுக்கு யார் அளித்தார்கள்?
அல்லது அது அவர்களுக்கு எப்படி வந்தது?


ஒரு வாதத்துக்கு, அந்தப் பாண்டிய மன்னன் செய்த யாகங்களை 
நடத்திக் கொடுத்தவர்கள் பார்ப்பனர்கள் அல்ல என்றும்,  
அவர்கள் செய்த யாகங்கள் வேத்தை அடிப்படையாகக் கொண்டது அல்ல என்றும் 
வைத்துக் கொள்வோம்.  
அப்படியான வாதம் தவறு என்று அந்த மன்னனைப் பற்றி, காரி கிழார் அவர்கள் பாடிய பாடல் (பு-நா- 6) தெரிவிக்கிறது.


அந்தப் பாடலில், யாருக்கும் வணங்காத அந்த மன்னன் தலை
நான்கு வேதங்களையும் அறிந்த அந்தணர்  
அவனை வாழ்த்துகையில் பணியும் என்று சொல்லப்பட்டுள்ளது.  
அந்தப் பாடலில் நான் மறை என்று குறிப்பிட்டுச் சொல்லியுள்ளதால்
3500 ஆண்டுகளுக்கு முன்பே கபாட புரத்தில் 
நான்கு வேதங்களும் ஓதப்பட்டிருக்கின்றன என்று தெரிகிறது.  


இனி வேறு கோணத்தில் பார்ப்போம்.
3500 வருடங்களுக்கு முன் நடந்ததான ஆரியப் படையெடுப்பு என்பதே 
ஒரு அபத்தக் கருத்து என்று விட்டு விடுவோம்
இதற்கு முன் இந்தத் தொடரில் சொல்லி வந்த  
வைவஸ்வத மனுவைப் பற்றிய விவரங்களையே எடுத்துக் கொள்வோம்
அவன் வழியாக பகுக்கப்பட்ட வர்ணக் கருத்துக்கள்
தமிழர் மீது திணிக்கப்பட்டிருக்கலாமே
சரஸ்வதி பிராம்மணர்கள் என்று சொல்லி வந்தோமே அவர்கள்
தமிழ் மக்களை ஆதிக்கம் செய்து, இந்த வர்ணப்பகுப்பைச் செய்திருக்கலாமே  
என்ற கேள்வி வருகிறது.


அவ்வாறு இருக்கச் சாத்தியமில்லை என்னும் கருத்தைத் 
 தொல்காப்பியம் சொல்லும் அந்த வர்ண சூத்திரமும்,  
அதற்கு நச்சினார்க்கினியர் எழுதிய உரையும் காட்டுகிறது
அவற்றை அடுத்தக் கட்டுரையில் காண்போம். 
 

7 கருத்துகள்:

 1. Dear Jayasree Mam,
  I happened to view the site of a Sanatana Dharma Sri Dharma Pravartaka Acharya (Dr. Frank Morales, Ph.D.).In an article he explains about the celtic Europeans and how they were related to the vedic culture, also writes about uttara kuru.

  Interesting to find different pieces of information, analysis slowly fitting together and emerging of the real history.

  Regards
  Chalam

  பதிலளிநீக்கு
 2. Well researched and wisely composed article. Many Congratulations Jayasree.

  /*அந்தப் பாடலில் ’நான் மறை’ என்று குறிப்பிட்டுச் சொல்லியுள்ளதால்,3500 ஆண்டுகளுக்கு முன்பே கபாட புரத்தில் நான்கு வேதங்களும் ஓதப்பட்டிருக்கின்றன என்று தெரிகிறது*/

  I need a clarification how does u relate 'நான் மறை' to vedas ?
  In Self introduction about tolkappiar in tolkappiam states as below,
  வட வேங்கடம் தென் குமரி
  ஆயிடைத்
  தமிழ் கூறும் நல் உலகத்து
  வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின்
  எழுத்தும் சொல்லும் பொருளும் நாடிச் 5
  செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு
  முந்து நூல் கண்டு முறைப்பட எண்ணிப்
  புலம் தொகுத்தோனே போக்கு அறு பனுவல்
  நிலம் தரு திருவின் பாண்டியன் அவையத்து
  அறம் கரை நாவின் நான்மறை முற்றிய‌ 10
  அதங்கோட்டு ஆசாற்கு அரில் தபத் தெரிந்து
  மயங்கா மரபின் எழுத்து முறை காட்டி
  மல்கு நீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த‌
  தொல்காப்பியன் எனத் தன் பெயர் தோற்றிப்
  பல் புகழ் நிறுத்த படிமையோனே. 15

  1) if considering 'நான் மறை' as vedas then,
  */நிலம் தரு திருவின் பாண்டியன் அவையத்து
  அறம் கரை நாவின் நான்மறை முற்றிய
  அதங்கோட்டு ஆசாற்கு அரில் தபத் தெரிந்து‌/*
  Pandian court had a veda learned men.
  */மல்கு நீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த‌
  தொல்காப்பியன் எனத் தன் பெயர் தோற்றிப்/*
  ஐந்திரம் நிறைந்த‌ - tolkappiar, a brahmana who learned vedas in Aindran school of Sanskrit grammar before composing this ancient tamil grammer work.

  2) But feel considering 'நான் மறை' as wisdom, knowledge in this place suit more appropriate than vedas.
  */நிலம் தரு திருவின் பாண்டியன் அவையத்து
  அறம் கரை நாவின் நான்மறை முற்றிய
  அதங்கோட்டு ஆசாற்கு அரில் தபத் தெரிந்து‌/*
  Pandian court had tongue which spells righteousness, considering the wisdom from four directions
  */மல்கு நீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த‌
  தொல்காப்பியன் எனத் தன் பெயர் தோற்றிப்/*
  ஐந்திரம் நிறைந்த‌ - tolkappiar, a capable saint who controlled five senses.

  What's ur thought ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Thanks for your compliments.

   நீங்கள் கேட்பவற்றில் சில விவரங்கள் அடங்கியுள்ளன. அவற்றை ஒன்றுக்கொன்று குழப்பமில்லாமல் அணுக வேண்டும்.

   பொதுவாக நான் மறை என்றால் அவை நான்கு வேதங்களே. அவை ஒவ்வொன்றும் கடல் போன்றவை. அவற்றைச் சரியான உச்சரிப்புடன் பயில்வதற்கு பல வருடங்கள் தேவை. மேலும் ஒருவராலேயே அவை அனைத்தையும் பயில முடியாது.அதனால் வழக்கத்தில் உள்ள யாகங்களுக்கும், பூஜைகளுக்கும் தேவையானதை நன்கு பயிற்றுவிக்கும் முறை வந்தது.

   உதாரணமாக புத்திர காமேஷ்டி யாகத்தைச் சொல்லலாம். தசரதன் அதைச் செய்துதான் ராமனைப் பெற்றான். அதைச் செய்விக்ககூடிய பயிற்சியும், ஒழுக்கமும் கொண்டிருந்தவர் அந்தக் காலத்திலேயே யாரும் இல்லை. ரிஷ்ய ஸ்ருங்கர் என்னும் முனிவர் மட்டுமே அதை அறிந்திருந்தார். அந்த யாகம் போல, பல யாக முறைகளும் அந்தத வேதத்தில் கற்பிக்கப்பட்டன. இன்று அவற்றில் 10 சதவிகிதம் கூட நம்மிடையே இல்லை.

   பல்யாக சாலை முது குடுமி என்னும் பாண்டிய அரசன், பல யாகங்களைச் செய்தான் என்பதைப் புற நானூறு 15 ஆம் செய்யுள் மூலமும், வேள்விக்குடி செப்பேடு மூலமும் அறிகிறோம். புறநானூறு 6 இல் கார்கிழார் அவர்கள் அந்த மன்னன் தலை, நான்மறை ஓதுபவர்களுக்கு முன் மட்டுமே குனியும் என்கிறார்;

   ”நின் சென்னி சிறந்த நான்மறை முனிவரேந்துகை யெதிரே வாடுக”

   இந்த நான்மறை,பலவித யாகங்களைச் செய்யத் தேவையான வேத சாகைகளை அறிந்தவர் என்று பொருள் கொள்ள வேண்டும். இன்றும் அவ்வாறு அறிந்தவர்கள் இருக்கிறார்கள். அவர்களே வேத யாகங்களைச் செய்கிறார்கள். எனவே, மறை என்பதற்கு வேறு விளக்கங்களுக்கு இங்கு இடமில்லை. “நான் மறை மரபின் தீமுறை ஒருபால்” என்று இளங்கோவடிகள் இந்திர விழாவின் போது சொல்வதும், வேத ஹோமங்களைச் செய்ய உதவும் வேத சாகைகளை அறிந்தவர் என்பதேயாகும்.

   (cont'd)

   நீக்கு
  2. இனி தொல்காப்பியத்துக்கு வருவோம்.
   அறுவகைப் பட்ட பார்ப்பின இயல்” சூத்திரத்துக்குப் பொருள் காணும் நச்சினார்க்கினியார் அவர்கள் இதைத்தான் சொல்கிறார். பார்ப்பனர்கள் ஓதிய மறைகளாக, எசூர், (யஜூர்)சாமம், அதர்வணம் என்பவை என்று சொல்வதை அன்னாரது தொல்காப்பிய உரையில் காணலாம்.

   அந்தப் பகுதி இங்கே:-

   " ஆறு பார்ப்பியல் என்னாது வகை என்றதனான், அவை தலை, இடை, கடை என ஒன்று மும்மூன்றாய்ப் பதினெட்டாம் என்று கொள்க; அவை ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், கொடுத்தல், கோடல் என ஆறாம் இருக்கும், எசுரும், சாமமும் இவை தலையாய ஓத்து. இவை வேள்வி முதலியவற்றை விதித்தலின் இலக்கணமுமாய், வியாகரணத்தான் ஆராயப்படுதலின் இலக்கியமும் ஆயின. அதர்வமும், ஆறங்கமும் தருமநூலும் இடையாய ஓத்து. இதிகாசமும் புராணமும் வேதத்துக்கு மாறுபடுவாரை மறுக்கும் உறழ்ச்சி நூலும், அவரவர் அதற்கு மாறுபடக் கூறும் நூல்களும் கடையாய ஓத்து.“

   இந்தச் சூத்திரத்தின் மொத்த கருத்தையும் இந்தத் தொடரின் 61 ஆவது கட்டுரையான “தமிழ்ப் பார்ப்பனர்” என்பதில் காணவும்.

   இதே நச்சினார்க்கினியார், நீங்கள் மேற்கோளிட்ட பாயிரச் செய்யுளுக்கு உரை காணுமிடத்தில், “நான்கு கூறுமாய் மறைந்த பொருளும் உடைமையான் நான்மறை என்றார். அவை தைத்திரியமும், பௌடிகமும், தலவகாரமும், சாம வேதமும் ஆகும்” என்கிறார். இதனால் சுமார் 1000 வருடங்களுக்கு முன், அதாவது நச்சினார்க்கினியர் காலத்தில் இவையே கற்றுத் தரப்பட்டன என்று கொள்ளலாம்.

   1) தைத்திரியம் என்பது தைத்திரிய உபநிஷத்து (தளபதி சினிமாவில் ஷோபனாவின் அப்பா வேத பாடம் சொல்லிக்கொடுப்பார். அவரது மாணவர்கள் ஓதுவார்கள். அது தைத்திரியம்.)

   (2) பௌடிகம் என்பது போதாயன் சூத்திரங்கள்.இது பவிஷ்யமாக இருக்கலாம் என்று சொல்லும் வண்ணம் ஒரு கல்வெட்டுக் குறிப்பைக் கண்டேன். எதுவாக இருப்பினும், இவை யாகத்திற்கு அல்லாமல், வேத கோஷ்டியாகச் செய்யப்படுபவை.

   (3) தலவகரம் என்பது சாம வேதத்தின் ஒரு பிரிவு. இதன் ஒரு பகுதி கேனோபனிஷத்தில் உள்ளது. ஜைமினி ரிஷி அவர்கள் தந்தது. வேத வியாசர் அவரது காலத்தில் ஆயிரக்கணக்கில் இருந்த வேதங்களில் சிலவற்றை மட்டும் நான்கு வேதங்களாகத் தொகுத்து, ஒவ்வொரு வேதத்தையும், ஒவ்வொரு முனிவருக்கு ஓதினார். அவர்கள் திசைக்கு ஒருவராக, பாரதத்தின் நான்கு பகுதிகளுக்கும் சென்று, அதைப் பிறருக்குக் கற்றுக் கொடுத்தனர். அவர்களுள் ஜைமினி அவர்கள் வியாசரிடமிருந்து சாம வேதத்தைப் பெற்றுக் கொண்டார். அவர் பாரதத்தின் தென் பகுதிக்கு வந்து கற்றுக் கொடுக்கவே, சாமவேதமும், அவர் கற்றுக் கொடுத்த தலவகரமும், 1000 ஆண்டுகளுக்கு முன்வரை புழக்கத்தில் இருந்திருக்கிறது.

   அவர் தென்னாட்டைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணம், தென்னாட்டில் அதற்கும் முன்பே சாம வேதம் புழக்கத்தில் இருந்திருக்கிறது. ராவணன் சாம வேதத்தில் சமர்த்தன். சிலப்பதிகாரத்தில் சொல்லப்படும் ஆயிரம் நரம்பு யாழ்கள் எல்லாம் கந்தர்வ வேதத்தில் வருபவை. அதன் இசைக்கு, சாம வேதம் மூலாதாரமாகும். அது போல யஜூர் வேதத்தில் கிருஷ்ண யஜூர் வேதம் என்பது தமிழ் நாட்டில் மட்டுமே இருக்கிறது. யாகங்களைச் செய்ய் இது தேவை. பல்யாக சாலை முதுகுடுமி, யாகங்களைச் செய்தவன் என்பதால், இது இன்றும் காணப்படுவதில் வியப்பில்லை.

   (4) சாம வேதம்.

   இந்த நான்கையும் கூறும் கல்வெட்டுச் செய்தியும் உள்ளது.
   1000 வருடங்களுக்கு முந்தின கோக்கரு நந்தடக்கன் கால, பார்த்திவசேகரபுரம் சாலையில் தலவகரம் உள்ளிட்ட வேதங்கள் கற்றுத் தரப்பட்டன.
   பார்த்திவ சேகரபுரம் கல்வெட்டில் இவை வருகின்றன.

   “இச்சாலைக்குப் பெய்த கலத்தில்
   பவிழிய சரணத்தாருடைய கலம் நாற்பத்தைந்து,
   தயித்திரிய சரணத்தாருடைய கலம் முப்பாத்தாறு,
   தலவகாரச் சரணத்தாருடைய கலம் பதினாலு..”

   இவை தவிர “அறங்கரைந்து வயங்கிய நா” என்று பதிற்றுப் பத்து 64 கூறுவது போல, மீண்டும் மீண்டும் பாராயணம் செய்து, அந்த நாவுக்கு வேறு ஒன்றும் தெரியாது என்பது போல ஓதப்படும் வேத சாகைகளும், மீமாம்சம், கல்ப சூத்திரம் ஆகியவையும், தெய்வ சன்னிதியில் ஒன்பது முறை ஒதப்பட வேண்டும் என்றும் அந்தக் கல்வெட்டு கூறுவது, இன்று வரை தொடரும் வேதக் கல்வியையும், பாராயணத்தையும் ஒத்தவையே.

   நீக்கு
  3. //Pandian court had tongue which spells righteousness, considering the wisdom from four directions//

   இவையெல்லாம் நாம் விரும்பினபடி பொருள் காண்பதே, ஆனால் வேதங்களை ஓயாமல் ஓதும் மக்கள், அவற்றுடன், உத்தரபாகம் என்னும் வேதாந்தத்தையும் அறிவர். பல சூத்திரங்களையும் கற்றுக் கொள்வர். அவை அனைத்துக்கும் வேதங்களே மூலம். இவையெல்லாம் ரிஷிகள் எடுத்துக் கொடுத்தவை. அவர்கள் உபதேசத்தால், மன்னன் உட்பட மக்கள் அனைவரும் அறக் கல்வி பெற்றனரே தவிர, வேதம் விடுத்து, அறம் கிடையாது. அறக்கல்வி கிடையாது.

   ஐந்திரம் என்பதற்கு, ஐந்திறம் என்று பொருள் காணும் குழப்பவாதிகளுக்காக நிறைய எழுதியுள்ளேன். இந்தத் தொடரின் 85 ஆவது கட்டுரையைப் படிக்கவும்.
   அதன் இணைப்பு இங்கே:-

   http://thamizhan-thiravidana.blogspot.in/2011/11/85-2.html

   நீக்கு
 3. Considering ’நான் மறை’ related to vedhas during bhakthi period and not during tholkappiar period.

  பதிலளிநீக்கு