வெள்ளி, 1 ஜூலை, 2011

58. சாகத்தீவும், குமரிகண்டமும் - 2 (மலைகளும்,நதிகளும்)



மஹாபாரதத்தில் சஞ்சயன் வாயிலாக நமக்குக் கிடைக்கும் சாகத்தீவு குறித்த விவரங்களையும், (-பா 6- 11). வற்றை ஒட்டிய பிற கருத்துக்களையும் ஆராய்வோம். 

சாகத்தீவில் ரத்தினத்தால் அலங்கரிக்கப்பட்ட 7 மலைகளும், கடல்களும் உள்ளன என்கிறான் சஞ்சயன். அதாவது ரத்தின மணிகள் கிடைக்கும் மலைகள் இருந்தன என்கிறான்.  
திருவிளையாடல் புராணத்தில், உக்கிர குமாரன் 
செண்டு என்னும் ஆயுத்த்தால் மலையை அடித்து, 
மாணிக்கம் போன்ற நிதிகளை எடுத்தான் என்று சொல்லப்பட்டுள்ளதும் (332), 
சிங்களத்தீவு தொடங்கி, தெற்கே செல்லச் செல்ல 
ரத்தினங்கள் கிடைக்கும் மலைகள் இருந்தன என்ற செய்திகளும் 
இங்கு பொருந்துகின்றன. (பகுதி 56)

 
முதலில் இரண்டு முக்கிய மலைத்தொடர்களைப் பற்றிச் சொல்கிறான்.  
அவற்றின் பெயர் மலயம், ஜலதாரம் என்பதாகும்

இவை தவிர முக்கிய மலைகளாக 

ரைவதகம்,
ஸ்யாமம்,
மஹோதயம் என்கிற துர்கசைலம்,
கௌமாரம்,
மணிகாஞ்சனம்,
கேசரம்,
மௌதாகி
என்னும் மலைகள் இருந்தன.


முதலில் நீண்டதான மலயம் என்னும் மலையைப் பற்றிச் சொல்கிறான். அதன் மலையுச்சியில் மேகங்கள் நான்கு பக்கங்களிலும் சஞ்சரிக்கின்றன என்கிறான்.


தென்னிந்தியாவின் மலய பர்வத்த்தின் தொடர்ச்சியாக இது இருக்கலாம்.
குமரி, கொல்லம் முதலியன அடையாளம் காட்டப்பட்ட இந்தியக் கடலின் மேற்கில் உள்ள மலைத் தொடர் சாகத்தீவின் மலயமாகத் தென்படுகிறது. இந்தப் படத்தில் நடுவில் கருப்பு நிறத்தில் அம்புக் குறியுடன் உள்ளது பூமத்திய ரேகை ஆகும்.




இதை அடுத்து சஞ்சயன் சொல்வது ஜலதாரம் என்னும் என்னும் பெரிய மலை.  
இது மலயத்துக்கு அப்பால் (परेण ) இருக்கிறது என்கிறான்

இந்திரன் அதிலிருந்து சிறந்த ஜலத்தினைத் தினந்தோறும் எடுத்துக் கொள்கிறான். அக்காரணத்தினால் வர்ஷா காலத்தில் (மழைக் காலத்தில்) மழையுண்டாகிறது” என்கிறான்.

இது மிகவும் முக்கியமான க்ளூவாகும். மேகங்கள் ஈரப்பதத்தை எடுத்துக் கொண்டு, 
பிறகு மழைக் காலத்தில் பெய்கிறது என்பது 
பருவ மழை பெய்யும் பாங்கினைச் சொல்வதாகும். 
ஜலதாரம் என்னும் மலையின் இருப்பிடம், 
இந்தியக் கடலிலும், இந்திய நாட்டிலும் பெய்யும் 
பருவழையின் உற்பத்தி ஸ்தானத்தை ஒத்திருக்கிறது.


இந்தியக்கடலில் முழுகின நிலையில் இரண்டு நீண்ட மலைத்தொடர்கள் இருக்கின்றன
 அவற்றுள் ஒன்று மேற்குத் தொடர்ச்சி மலையின் நீட்சியாக ஆப்பிரிக்கா வரை செல்கிறது. 
இதுவே மலயம் (குமரி மலை) எனப்படுகிறது.

இதற்கு அப்பால் இருப்பது, இந்தியக் கடலின் கிழக்குப் பகுதியில் உள்ள 
 90 டிகிரி மலைத் தொடராகும். இதுவே ஜலதாரம் என்பதாக இருக்கலாம்.  
இந்திரன் இங்கிருந்து ஜலத்தை முகர்ந்து கொள்கிறான் என்பதும்,  
அதுவே மழைக் காலத்தில் பொழிகிறது என்பதும் 
இன்றைக்கும் இருக்கும் நிலவரத்தை ஒத்திருக்கிறது.  
பூமத்திய ரேகைக்குத் தென் கிழக்கில் 
இந்தப் பகுதியில் எழும் பருவக் காற்றானது,  
பூமத்திய ரேகையைக் கடந்தவுடன், தென் மேற்குப் பருவக் காற்றாக 
இந்தியத்துணைக் கண்டத்தில் பொழிவதை ஒத்திருக்கிறது. 

இந்தியாவில் மட்டுமல்ல, கடலுக்குள் செல்லும் மலய பர்வதம் இருக்கும் பகுதிகளிலும்
இந்தியக் கடல் பகுதியிலும் இந்தப் பருவ மழை பெய்கிறது. 
எனவே ஜலதாரம் என்பது 90 டிகிரி மலையின் பகுதியாக இருக்க வேண்டும். 
இது பூமத்திய ரேகைக்குத் தென் கிழக்கில் அமைந்திருக்க வேண்டும்.  


இதை அடுத்து ரைவதகம் என்னும் மலையைப் பற்றிச் சொல்கிறான் சஞ்சயன். 
பெரிதான அந்த மலையில் ஆகாயத்தில் பிரகாசிக்கின்ற ரேவதி நட்சத்திரமானது 
எப்பொழுதும் நிலை பெற்றிருக்கிறது என்கிறான். 

இதே பெயருடன், இதே வர்ணனையுடன், குஜராத்தில் துவாரகை அருகே ஒரு மலை இருந்தது என்று மஹாபாரதம் கூறுவதை முந்தின கட்டுரையில் கண்டோம். 
அங்கு ரைவதக விழா நடக்கும். 
அப்படி ஒரு விழாவின்போது கிருஷ்ணனது தங்கை சுபத்திரையைக் கண்டு 
அர்ஜுனன் காதல் வயப்படுகிறான் என்று மஹாபாரதம் விவரிக்கிறது.

ரேவதி என்றாலே செல்வம் என்பது பொருள். 
ரேவதி நட்சத்திர அதிபன் பூஷன் என்னும் தேவன். 
அவன் பசு வளம், மழை வளம், செல்வம் ஆகியவற்றைத் தருவான் 
என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. 
மழையும், பசுவும் இருந்தால் அங்கு செல்வம் கொழிக்கும்.   
இதன் காரணமாகப், பசுக்களைப் பராமரிக்கும் 
யாதவ மக்களது இருப்பிடமான துவாரகை அருகே 
ரைவதக மலை என்று ஒரு மலையைக் குறிப்பிட்டு அங்கே விழா எடுத்திருக்கிறார்கள்.


உண்மையிலேயே இந்த ரைவதக மலையில் ரேவதி நட்சத்திரம் நிலை பெறுவதில்லை. 
அப்படிப்பட்ட ஒரு அமைப்பு பூமத்திய ரேகைப் பகுதியில்தான் சாத்தியமாகும்.  
ஏனெனெனில் சூரியன் தனது வட திசைப் பயணத்தின் போது 
(உத்தராயணத்தின் போது) 
பூமத்திய ரேகையைக் கடக்கும் காலத்தில், 
ரேவதி நட்சத்திரத்துக்கு நேர் எதிராக வருகிறான்
அப்பொழுது பூமத்திய ரேகைப் பகுதியில் உள்ள மலை மீது 
சூரியன் ஜொலிக்கும் போது, 
ரேவதி அங்கு நிலை பெற்றிருக்கிறது என்றும், 
பிரகாசிக்கிறது என்றும் சொல்ல முடியும். 
ரேவதி நட்சத்திரம், சூரியப் பாதையில் 
(இது உண்மையில் பூமியின் சுற்றுப் பாதை ஆகும்) 
அமைந்துள்ளதால் இப்படி வர்ணிக்கலாம். 
எனவே ரைவதகம் என்னும் பெயர் முதலில் 
சாகத்தீவில்தான் சொல்லப்பட்டிருக்க வேண்டும். 
சாகத்தீவின் குறுக்கே பூமத்திய ரேகை சென்றால்தான் இது சாத்தியமாகும். 



மலயத்துக்கு அப்பால் உள்ள ஜலதார மலையை அடுத்து ரைவதகத்தைச் சொல்லவே, 
இது 90 டிகிரி மலையில் பூமத்திய ரேகைக்கு அருகே இருந்திருக்க வேண்டும். 
அந்த நட்சத்திரத்தின் முக்கியத்துவத்தால்,  
சாகத்தீவின் ரைவதக மலையை ஒட்டி 
பசுக்களைப் பராமரிக்கும் மக்கள் (ஆயர்கள்) வாழ்ந்திருக்க வேண்டும்.

 
ரைவதகத்தின் முக்கியத்துவம் இன்னும் இருக்கிறது.  
ரேவந்தன் என்னும் பெயரிலிருந்தும் ரைவதகம் என்ற பெயர் உருவாகும்.  
ரேவந்தன் என்பவன் சூரியனது மகன் ஆவான். 
அவனது தோற்றம் பற்றிய கதையில் 
விண்வெளியில் நாம் நகர்ந்து கொண்டே செல்லும் பாதையும், 
இதற்கு முன் வந்த மனிதத் தோற்றம், 
இனி வரப்போகும் மனிதத்தோற்றம் எல்லாமே புதைந்துள்ளது.


மார்கண்டேய புராணம், விஷ்ணு புராணம் சொல்லும் இந்தக் கதையின்படி, 
ரேவதனும், வைவஸ்வத மனுவும், நாமிருக்கும் மனித குலத்தின் முன்னோடிகள். 
இவர்களுக்கு அடுத்து, சனியும், சாவர்ணி மனுவும் 
அடுத்து வரப்போகும் மனித குலத்தின் முன்னோடிகள் ஆவார்கள். 
சரஸ்வதி பகுதியில் குடியேறிய வைவஸ்வத மனு, 
சாகத்தீவு ரேவந்தனுடன் எப்படி தொடர்பு பெறுகிறான் என்று பார்ப்போம். 


இந்தக் கதையின் படி, சூரியனது மனைவியின் பெயர் சஞ்ஞை. 
சூரியனது ஒளியின் தாக்கத்தைத் தாங்க முடியாமல் 
அவள் ஒரு சமயம் கண் காணாத இடத்துக்குப் போய் விடுகிறாள். 
அவ்வப்பொழுது சூரியனது மனைவி காணாமல் போய் விடுவாள் 
என்று சொல்லப்படும் கதைகள் சில இயற்கை உண்மைகளைக் காட்டுகின்றன. 
சூரியன் இருந்தால்தான் உயிர் தழைக்கும், 
சூரியன் தன் மனைவியுடன் குடும்பம் நடத்துகிறான் என்று சொல்லும்போதெல்லாம், 
மனித குலம் தழைக்கும் என்று அர்த்தம். 
அப்பொழுது ஒருவனை மனு என்று அழைத்து, 
அவன் காரணமாக மனித குலம் பெருகுகிறது என்பார்கள். 


சில சமயம் சூரியனது மனைவி காணாமல் போய் விட்டாள் என்று வரும். 
அப்பொழுதெல்லாம் மனித குலம் அழிந்து விட்டது என்றும், 
உயிரினம் தழைப்பதற்கு ஏதுவாகத் தட்ப வெப்பம் இல்லை என்றும் 
நாம் புரிந்து கொள்ள வேண்டும். 
அப்படிச் சொல்லுமிடங்களிலெல்லாம் 
நம்முடைய ரிஷிகள் சூட்சுமமான துருப்புச்சீட்டு ஒன்றைத் தருவார்கள்.


இந்தக் கதையில் சூரியன் மனைவியான சஞ்ஞை என்பவள், 
சூரியனது வெப்பத்தைத் தாங்க முடியாமல் உத்தர குருவுக்குச் சென்று விடுகிறாள் 
என்கிறார் மார்கண்டேய ரிஷி. 
அப்பொழுது தனக்குப் பதிலாக ’சாயா’ என்பவளை வைத்து விட்டுப் போகிறாள். 
சாயா என்றால் நிழல் என்று அர்த்தம். 
அதாவது பூமியின் தென் பகுதியில் நிழலும், இருளும் சூழ்ந்த காலம் அது 
என்று எடுத்துக் கொள்ள வேண்டும். 
சஞ்ஞை உத்தர குருவுக்குச் சென்றதால், 
சூரியனும் அவளைத் தேடிக் கொண்டு உத்தர குரு செல்கிறான். 
இந்த விவரத்திலிருந்து, தென் பகுதியில் பனி யுகமும், 
வட பகுதியில் சூரிய ஒளி இருந்த காலம் என்றும் நாம் அறிந்து கொள்ளலாம். 


இங்கும் ஒரு துருப்புச் சீட்டைத் தருகிறார்கள். 
சஞ்ஞை ஒரு குதிரை வடிவில் இருந்தாள். 
எனவே சூரியனும், குதிரை வடிவுக்கு மாறி அவளைப் புணரவே, 
அஸ்வினி குமாரர்களும், ரேவந்தனும் பிறந்தனர். 
இவை இரண்டும் நட்சத்திரங்கள். இவை தற்சமயம் 
பூமிசெல்லும் பாதைக்கு எதிரில் உள்ளன. 



 


இந்த அமைப்பு எத்தனை ஆயிரம் வருடங்களுக்கு முன் ஏற்பட்டது என்று ஆராய்ந்தால், 
அது பூமியின் வட பாகத்தில் பனி யுகம் முடிந்து 
வெப்பம் பரவ ஆரம்பித்த காலத்துடன் ஒத்துப்போகும். 
அப்படிப்பட்ட காலக்கட்டத்தில் உண்டான மனித குலத்துக்குத் தலைவனாக 
வைவஸ்வத மனுவைச் சொல்கிறார்கள். 
இந்தக் கதையின் உருவகப்படி, அவன் பூமத்திய ரேகைப்பகுதி 
அல்லது அதற்குத் தென் பகுதியிலிருந்து வடக்கு நோக்கிப் பெயர்ந்து, 
சரஸ்வதி நதி வழியாகப் பாரதத்துக்குள் நுழைந்திருக்கிறான். 


இந்தக் கதையில் திராவிடவாதிகளுக்குப் பிடித்த ஒரு விவரம் இருக்கிறது
அது சஞ்ஞையும், சூரியனும் குதிரைகளாகிப் புணர்ந்தார்கள் என்பது. 
ஹிந்து மதத்தை இகழ்வதற்கு இதை அவ்வப்பொழுது எடுத்துக் கொள்வார்கள். 
ஆனால் இவையெல்லாம் உருவகங்களே என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. 
விஞ்ஞானத்தை என்றென்றும் நினைவில் வைத்துக் கொள்ளும் வண்ணம் 
எப்படி ஒரு எளிய கதையாகக் கொடுத்திருக்கிறார்கள் 
என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. 
குதிரை என்ற உருவகத்தில், 
கண்ணைக் கட்டி விட்டாற்போல ஒரே மாதிரி சூரியன் ஓடிக் கொண்டிருப்பதைச் 
சொல்கிறார்கள் என்பது தெரியவில்லை. 
அவர்கள் தெரிந்து கொள்கிறார்களோ இல்லையோ, 
நாம் இன்னும் பிற விவரங்களையும் தெரிந்து கொள்வோம். 


ரேவந்தன் சூரியனது மகனுக்குச் சிலை எடுத்து வழிபட்டிருக்கிறார்கள். 
சில்ப சாஸ்திரத்தில் ரேவந்தன் சிலை 
எப்படி வடிக்கப்பட வேண்டுமென்று விவரங்கள் இருக்கின்றன. 
தெய்வச் சிலைகளின் அமைப்பை விளக்குகையில்,  
வராஹ மிஹிர்ர், ரேவந்தன் அமைப்பையும் விளக்குகிறார். 
(ப்ருஹத் சம்ஹிதை – 58-56) 
ரேவந்தன் ஒரு குதிரை மேல் உட்கார்ந்து கொண்டும், 
அவனைச் சுற்றி வேடர் கூட்டம் இருக்க வேண்டும் என்றும் சொல்கிறார்.


2000 ஆண்டுகளுக்கு முன் இந்தப் புத்தகம் எழுதப்படவே, 
2000 ஆண்டுகளுக்கு முன்வரை நமது நாட்டில் ரேவந்த வழிபாடு இருந்திருக்கிறது 
என்று தெரிகிறது. 
சூரியனுக்கும் சிலை அமைப்பைப் பற்றி விதிகள் உண்டு. 
மார்பிலிருந்து கால் வரை உடையால் மறைக்க வேண்டும் என்றும், 
வட நாடுகளில் உள்ளது போல அலங்கரிக்க வேண்டும் 
என்றும் வராஹமிஹிர்ர் கூறுகிறார். 
(இதைப் பற்றிய விவாதத்திற்குரிய சில விவரங்கள் அடுத்த கட்டுரையில் வருகின்றன)
சூரியனையும், ரேவந்தனையும் வழிபடுவது சௌர வழிபாடு 
என்னும் சூரிய வழிபாட்டைக் காட்டுகிறது. 

ராமாயணம் காட்டும் தென் திசை நாடுகளில், 90 டிகிரி மலையில் சூர்யவான் மலை இருந்த்து என்று கண்டோம் (பகுதி 41) 
ரேவந்தன், ரைவதகம் இவை எல்லாம் சூர்யவான் பகுதியில் பொருந்துகின்றன

ரைவதகத்துக்கு வடக்கில் ஸ்யாமம் என்னும் மலை இருந்த்து. 
ஸ்யாமம் என்றால் கருப்பு என்று பொருள். 
அங்கு இருந்த மக்கள் எல்லோரும் கருப்பாக இருந்தார்கள் என்கிறான் சஞ்சயன். 
இந்த விவரத்தாலும், இந்த இடம் பூமத்திய ரேகையை ஒட்டி அமைந்த்து எனலாம். 


இதை அடுத்து சஞ்சயன் சொல்வது மஹோதயம் என்னும் துர்கசைலம் என்னும் மலையாகும். மஹோதயம் என்பது பெண்களைக் குறிக்கும் சொல்லாதலால், 
துர்க சைலம் என்பது துர்கை என்னும் பெண் தெய்வத்தைக் குறிப்பதாக இருக்கலாம். 
இங்கு ரேவதி என்பதன் இன்னொரு அர்த்தமும் பொருந்துகிறது.  
ரேவதி என்ற பெயரில் ஒரு செடியும் (பூவும்) இருக்கிறது. 
தமிழில் ‘பிச்சிப் பூ’ என்கிறார்களே அதற்கு சம்ஸ்க்ருத்த்தில் ரேவதி என்று பெயர். 
(Jasminum grandiflorum).


இது துர்கைக்கு உகந்த பூ. 
இது ‘பித்திகம்’ என்று சங்க நூல்களில் சொல்லப்பட்டுள்ளது.
இதுவே ஜாதி மல்லியாகும்
மொட்டாக இருக்கும்போது செவ்வரி ஓடி இருக்கும், 
அதைப் பெண்களது கண்ணுக்கு ஒப்பிட்டு வர்ணனைகள் இருக்கின்றன. 
கார்காலம் துவங்கும் போது இது பூக்கத்தொடங்கும் என்று சங்க நூல்களில் சொல்லப்பட்டுள்ளது.



ரேவதி என்னும் பிச்சிப் பூவின் பெயராலும், 
துர்க சைலம் என்று பெண் தெய்வத்திற்கான மலை இருந்ததாலும், 
சாகத்தீவின் பருவ காலமும், 
தெய்வ வழிபாடு, பெண்கள் விரும்பும் பூ முதலியவையும் 
ஒத்துப்போவதாலும், 
பாரதத்துக்கும் சாகத்தீவுக்கும் நில, தட்பவெப்ப அமைப்பில் வேறுபாடு அதிகமில்லை 
என்று தெரிகிறது.

ரைவதகத்தின் மூலம், சௌர வழிபாட்டின் (சூரிய வழிபாடு) சாத்தியத்தைக் கண்டோம். 
துர்க சைலத்தின் மூலம், சாக்த வழிபாட்டின் (சக்தி வழிபாடு) சாத்தியமும், 
சாகத்தீவில் இருந்தது என்று தெரிகிறது.


ரைவதகத்துக்கு அடுத்து கௌமாரம் என்னும் மலை இருந்தது. 
முருகனைக் குமரன் என்பார்கள். கௌமாரம் என்பது முருகனைக் குறிப்பது. 
அதற்கேற்றாற்போல, மேலே சொன்ன மலைகள் உள்ள இடங்களில் 
7 நாடுகள் (வர்ஷங்கள்) இருந்தன என்கிறான் சஞ்சயன். 
அவற்றுள் ஒன்றின் பெயர் ஸுகுமாரம்

அதுமட்டுமல்ல, குமாரி, ஸுகுமாரி என்ற பெயரிலும் சாகத்தீவில் ஆறுகள் ஓடின. இவையெல்லாம், துர்கை, முருகன் ஆகியோர் வழிப்படப்படும் இடங்களில் இருப்பவை.

முன்பே சரஸ்வதி பிராம்மணர்கள் பஞ்சாயதன முறையில்,  
சிவன் விஷ்ணு, தேவி, சூரியன், கணேசர் ஆகியோரை வழிபட்டு வந்தனர் என்றும், அவர்களுடன் முருகனையும் சேர்த்து, 
ஷண்மத வழிபாட்டை ஆதிசங்கரர் கொண்டு வந்தார் 
என்று பகுதி 50- இல் பார்த்தோம். 
சாகத்தீவிலும் அதன் சாயல்கள் இருக்கின்றன என்பது கவனிக்கத்தக்கது. 


இந்த மலைகளைத் தவிர, மகிழ மரங்கள் இருந்த கேசரம் என்னும் மலை சொல்லப்படுகிறது.
ஸ்யாம மலைக்கப்பால் மணிகாஞ்சன பர்வதமும்
கேசர மலைக்கப்பால் மௌதாகி மலையும் சொல்லப்படுகிறது. 

இந்தச் சாகத்தீவில்
கங்கை
ஸுகுமாரி
குமாரி (குமரி)
சீதா
காவேரகா
மஹாநதி
மணிஜலை
இக்ஷுவர்தனிகா
என்னும் நதிகள் ஓடின.


இந்தப் பெயர்கள் எல்லாமே பாரத நாட்டில் உள்ள பெயர்களின் சாயலைக் கொண்டுள்ளது.

கங்கை என்பது பொதுவாகவே ஒரு பெரும் நதியைக் குறிக்கும். 
மேருவைப் போல கங்கை என்று முந்தின பகுதியில் பார்த்தோம். 
பாரதத்திலும், முதலில் கங்கை இல்லை. 
அது மனித யத்தனத்தால் கொண்டு வரப்பட்டு பெயரிடப்பட்ட நதி. 
கங்கை என்பதற்கு மிகப் பழம் பெருமை இருந்திருக்க வேண்டும். 
அதனால் மனித குலம் தழைத்த இடங்களில், 
ஒரு கங்கையை அடையாளம் காட்டியுள்ளார்கள் என்று தோன்றுகிறது.


அடுத்து ஸுகுமாரி, குமாரி என்பவை, 
கன்னி ஆறு, குமரி ஆறு என்று 
தென்னன் தேசத்தில் ஓடிய நதியை ஒத்திருக்கிறது. 
குமரி ஆற்றின் முக்கியத்துவம் பற்றி பகுதி 42-இல் காணலாம்.


அடுத்து சீதா ஆறு. சீதா என்பது குளுமை என்னும் பொருளில் வருகிறது. 
இது ராமாயண சீதாவை நினைவுபடுத்துகிறது. 
அந்த சீதாவின் பெயர்க்காரணம் அவள் நிலத்தை உழும்போது கிடைத்தாள் 
என்று சொல்லப்படுகிறது. 
நிலத்தில் ஏற்படும் பிளவுக்கு சீதா என்று பெயர். 
சாகத்தீவின் சீதாவும், நிளப்பிளவில் (பள்ளத்தாக்கில்) ஓடியிருக்கலாம், 
குளிர் நீருடன் ஓடியிருக்கலாம். 
அதனால் சீதா என்ற பெயர் வந்திருக்கலாம். 
எல்லாப் பெயர்களும் சமஸ்க்ருதப் பெயர்களாக இருப்பதும் கவனிக்கத்தக்கது. 
இந்த சீதா என்னும் பெயர்த் தொடர்பை அடுத்தக் கட்டுரையில் காண்போம்.


அடுத்து காவேரகா என்னும் பெயரும் காவேரி நதியுடன் தொடர்பு கொண்டுள்ளது 
என்று முந்தின கட்டுரையில் கண்டோம். 
தமிழ் நாட்டில் மட்டுமல்ல, 
வைவஸ்வத மனு நுழைந்தானே அந்தப் பகுதியை ஒட்டி 
மத்தியப் பிரதேசத்தில் ஒரு காவேரி ஆறு ஓடுகிறது. 
நர்மதை ஆற்றில் கலக்கும் இந்தக் காவேரி கலக்கும் இடத்தில்  
 ”ஓம்” வடிவில் ஒரு சிறு தீவு உள்ளது. 
அங்கு “ஓங்காரேஸ்வர்” என்னும் சிவபெருமான் எழுந்தருளியுள்ளார்.


12 ஜோதிர்லிங்கங்கத் தலங்களில் இது ஒன்று.
அந்தக் கோவிலை இந்தப் படத்தில் காணலாம்.


ரைவதகம் என்று ஒரு மலையை அழைத்தார்கள். 
காவேரி என்ற பெயரிலும் ஒரு முன் தொடர்பு இருந்தால்தான் 
இப்படி ஒரு முக்கியத் தலத்தை ஒட்டி ஓடும் நதிக்குக் 
காவேரி என்று பெயரிட்டிருப்பார்கள்.

வைவஸ்வத மனுவுடன் வந்தவர்கள் பரவிய இடத்திலும் காவேரி, 
தமிழ் மக்கள் தொடர்பு கொண்ட தென்னிந்தியாவிலும் ஒரு காவேரி
இந்தக் காவேரியின் தந்தை காவேரகன் என்ற விவரம் வேறு நமக்கு இருக்கிறது. சாகத்தீவின் காவேரக நதிக் கரையில் வாழ்ந்த மக்கள் தமிழ் நாட்டிலும் குடியேறினார்களா? வைவஸ்வத மனுவுடன் வந்தவர்களிலும் காவேரகர்கள் இருந்தார்களா?


அதிலும் தமிழ் நாட்டுக் காவேரிக்கு ஏனிந்த முக்கியத்துவம்? 
நாவலந்தீவின் காவல் தெய்வத்தின் பெயரால் 
சம்பாபதி என்ற பெயரைக் கொண்ட புகார் நகரத்திற்குக் காவேரி வரவே, 
தொன்று தொட்டு அங்கு குடி கொண்ட சம்புத் தெய்வம், 
தன் பெயரை விடுத்து, காவேரியின் பெயரால், 
அந்த நகரத்துக்குக் ‘காவிரிப் பூம்பட்டினம்” என்று பெயர் சூட்டினாளே 
(மணிமேகலை பதிகம்), 
அது ஏன்? 
காவேரி பிறந்ததைக் கண்டு பூரிப்புடன், 
அவள் பின்னாலேயே வந்து, 
அவள் புகழ் பாடி ‘தண்டமிழ்ப்பாவை’ என்று போற்றினாரே அகத்தியர், 
அது ஏன்?  


காவேரிக்கும் ஒரு முன் பெருமை இருந்திருந்தால்தானே 
இப்படி ஆரம்பம் தொட்டே உயர்வாகப் போற்றியிருக்க முடியும். 
எந்த அகத்தியர், காவேரகன் நாட்டிலிருந்து காவேரியைக் கொண்டு வந்தாரோ, 
அதே அகத்தியரது வாசஸ்தலம் 
இந்தியக் கடலில் முழுகி விட்ட மலைத்தொடரிலும் இருந்த்தே, 
அங்கும் அந்தக் காவேரி, காவேரகாவாக இருந்தாளோ? 
இப்படியெல்லாம் நாம் சிந்திக்கும் வண்ணம், 
சாகத்தீவுக்கும், தென்னன் தேசம் என்று நாம் அடையாளம் கண்ட இடத்துக்கும் 
ஒற்றுமை இருக்கிறது.

அடுத்து இக்ஷுவர்தனிகா நதி என்னும் பெயரைப் பாருங்கள். 
இக்ஷு என்றால் கரும்பு என்று அர்த்தம். 
வைவஸ்வத மனுவின் மகன் பெயர் இக்ஷ்வாகு. 
அவன் பரம்பரையில் வந்தவன் ராமன். 
இக்ஷ்வாகு என்பதும் இக்ஷு என்று பொருள் படும் கரும்பிலிருந்துதான் வந்தது. இக்ஷுவர்தனிகாவுக்கும், வைவஸ்வத மனுவுக்குமொரு தொடர்பு இருந்திருந்தால்தானே, இப்படி ஒரு பெயரைத் தன் மகனுக்கு வைக்க முடியும்?


மேலும், கரும்பு விளையும் இடமாக இக்ஷுவர்தனிகா நதிப் படுகை இருந்திருக்க வேண்டும். வெப்பம் மிகுந்த நாடுகளில் கரும்பு வளரும். 
சாகத்தீவு என்பது ட்ராபிகல் (TROPICAL) எனப்படும் 
பூமத்திய ரேகைக்கு வடக்கிலும், தெற்கிலும் பரவி இருந்தால்தான் 
அங்கு கரும்பு விளைச்சல் நன்கு இருந்திருக்கும். 
இன்றைய ஆராய்ச்சிகள்படி, தெற்கு ஆசியா, தென் கிழக்கு ஆசியா 
ஆகிய இடங்களில்தான் முதன் முதலில் கரும்பு பயிரிடப்பட்டது என்று தெரிகிறது. 
இந்தப் பகுதியில் இன்று கடலுக்குள் முழுகி விட்ட சாத்தியத்தில் இருப்பது 
சாகத்தீவு ஆகும்.


இந்த நதிகளெல்லாம் புண்ணிய நதிகள் என்றும், 
இங்கிருந்த மக்கள் எல்லாம் தர்மத்தில் நிலை பெற்றவர்கள் என்றும் 
சஞ்சயன் விவரிக்கிறான். 
அத்துடன் அந்த மக்களைப் பற்றியும், 
அவர்கள் வணங்கிய தெய்வத்தைப் பற்றியும், 
சாகத்தீவு என்ற பெயர்க் காரணத்தைப் பற்றியும் விளக்குகிறான். 
அவற்றை அறிந்தால், 
பாரதத்துக்கும், 
தமிழ் பேசும் மக்களுக்கும், 
சாகத்தீவுக்கும் உள்ள தொடர்பு நன்கு விளங்கும். 
அவற்றை அடுத்த கட்டுரையில் காண்போம். 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக