வியாழன், 30 ஆகஸ்ட், 2012

103. பாரதத்திலிருந்து களவாடப்பட்ட யூத, கிருஸ்துவ நக்ஷத்திரங்கள்!


 

கிருஸ்துவத்திலும், யூத மதத்திலும் நக்ஷத்திரக் குறிக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. இவர்களைப் பின்பற்றி இஸ்லாத்திலும் நக்ஷத்திரக் குறியீடு முக்கிய இடம் வகிக்கிறது. நக்ஷத்திரங்களைத் தினம் தோறும் மனிதன் பார்த்ததினால் இப்படி அதற்கு முக்கியத்துவம் ஏற்பட்டது என்று சொல்லலாம். ஆனால் அப்படிச் சொன்னால், அப்படிப்பட்ட குறியீடுகள் சிந்து சமவெளிப் பகுதியில் ஏன் காணப்படவில்லை என்று கேட்கத் தோன்றுகிறது. சிந்து சமவெளியை ஆராய்ந்த பெரும்பாலான ஆராய்ச்சியாளர்கள் மேற்கூறிய மதக் கொள்கைகளில் வளர்ந்தவர்களே. அதனால்தானோ என்னவோ அவர்கள், நக்ஷத்திரக் குறியைச் சிந்து சமவெளியில் தேடுகிறார்கள். சிந்து சமவெளி முத்திரைகளில் பரவலாகக் காணப்படும் மீன் போன்ற அமைப்பில் இருக்கும் உருவத்தை, மீன் என்றே தமிழில் அழைத்து, அத்துடன் நில்லாமல், மீன் என்ற சொல் தமிழில் விண்மீனுக்கும் பொருந்தும், எனவே இந்த மீன் சின்னங்கள் நக்ஷத்திரத்தையே குறிக்கின்றன என்றும் சொல்கிறார்கள்.


 


 

முதலில், மீன் வடிவ அமைப்பை ஏன் தமிழ்ப் பெயர் என்று சொல்ல வேண்டும்? மீன் என்னும் சொல் சமஸ்க்ருதத்திலும் உண்டல்லவா? மீன ராசி என்கிறோமே அது சமஸ்க்ருதச் சொல். மீன் என்பது தமிழுக்கும், சமஸ்க்ருதத்துக்கும் பொதுவான சொல். ஆனால் அது தமிழ்ச் சொல் என்று சொல்லி, அதைக் கொண்டு அங்கிருந்தவன் தமிழன், திராவிடன் என்று சொல்வது சரிதானா?

 

சமஸ்க்ருதத்தில் அந்தச் சொல்லின் பயன்பாட்டை எடுத்துக் கொள்ளாமல், அப்படிப்பட்ட பயன்பாட்டில் மீன் என்பது எங்கேனும் சம்பந்தப்படுகிறதா என்று ஆராயாமல், மீன் வடிவம் தமிழ்ச் சொல்லைக் குறிக்கிறது என்று சொல்வது சரியல்ல.

 

அது மட்டுமல்ல, இந்தக் குறிகள் கிடைத்துள்ள ராஜஸ்தான் உள்ளிட்ட பகுதிகள், மத்ஸ்ய தேசம் (மத்ஸ்யம் என்றால் மீன்) என்று அழைக்கப்பட்டது. அரசாட்சி இருந்த காலத்தில் ஒவ்வொரு நாட்டுக்கும், குலத்துக்கும் சின்னங்கள் இருந்தன. ஒற்றை மீன், இரட்டை மீன் போன்றவை அரசச் சின்னங்களாகவும், அஷ்ட மங்கலச் சின்னங்களாகவும் நம் நாட்டில் இருந்திருக்கின்றன. மீன் உருவத்தை ஆன்மீகச் சின்னமாக புத்தர்களும், ஜைனர்களும் கருதினார்கள். உண்மையில் பாரதப் பகுதியில் மீன் சின்னத்துக்குக் கொடுக்கப்பட்ட புனித்த்தைக் கிருஸ்துவம் கடன் வாங்கிக் கொண்டது. அதைப் பிறகு பார்ப்போம்.

 

இங்கு சொல்ல வருவது சிந்து சமவெளி முத்திரைகளில் காணப்படும் மீன் உருவம் என்பது தமிழ்ச் சொல்லைக் குறிக்கிறது என்று சொல்வது சரியல்ல என்பதே, ஆரியதிராவிடப் போர் என்னும்  ஒரு கருத்தை முன்கூட்டியே வைத்துக் கொண்டு, அதற்கு ஆதாரம் தேடவே, உண்டான கருத்து என்றே தோன்றுகிறது. அது மட்டுமல்லாமல், அந்தச் சொல்லைக் கொண்டு நக்ஷத்திரத்தைத் தொடர்புபடுத்துவது, ஆபிரஹாமிய மதங்களில் காணப்படும் நக்ஷத்திரச் சின்னங்களால் ஏற்பட்ட தாக்கமே என்று கருத வேண்டியிருக்கிறது.

 

உண்மையில் மீன் என்ற தமிழ்ச் சொல்லை நினைவு படுத்தும் விவரங்கள் வேறு இடங்களில் இருக்கின்றன. ஒன்று ராஜஸ்தானில் செல்லும் ஆரவல்லி மலைத்தொடரில் வசிக்கும் மீனா என்றழைக்கப்படும் மக்கள். மற்றொன்று மீனோ அல்லது மீனோவர்கள் என்று சொல்லப்படும் 5000 வருடங்களுக்கு முற்பட்ட ஒரு இனம். மத்தியத்தரைக்கடலில் அமைந்துள்ள கிரீடி (CRETE)  என்னும் இடத்தில் இந்த மக்களின் தொன்மையைக் காட்டும் சின்னங்கள் இருக்கின்றன. அவற்றையும், ஆரவல்லியின் மீனா மக்களையும், அவர்களுடன் தமிழ் நாட்டு மீனையும் சேர்த்து ஆராயலாமே.

 

அதைப் பற்றி இந்தத் தொடரின் போக்கில் பிறகு ஆராய்வோம், ஏனெனில் இவர்களுக்கிடையே ஒரு முக்கிய ஒற்றுமை இருக்கிறது. இந்த இரு வகை மக்களும் (மீனா, மீனோவன்) மலை உச்சி மீதுதான் வசித்தார்கள். மீனா மக்கள் இன்னும் அப்படித்தான் வசிக்கிறார்கள். மீனா மக்களின் வாழ்க்கை முறை தமிழில் குறிஞ்சி நில மக்களின் வாழ்க்கையை நினைவு படுத்துகிறது. குறிஞ்சி மக்கள் மலை மேலும், மலையைச் சார்ந்தும் வாழ்ந்தவர்கள். மாலத்தீவு தொடங்கி, லக்ஷத்தீவுகள் வாயிலாகச் செல்லும் ஒரு ஆழ்கடல் மலைத்தொடரின் தொடர்ச்சிதான் ஆரவல்லி மலையாகும். இந்தத் தொடரின் பல பகுதிகள் 3000 வருடங்களுக்கு முன்பு வரை கடல் மட்டத்துக்கு மேலிருந்திருக்கின்றன. அதாவது தென்னன் தேசத்தின் ஏழு குன்ற நாடுகள் இந்த ஆரவல்லி மலையின் தொடர்ச்சியில் ஆங்காங்கே கடலில் இருந்திருக்கிறது. சுற்றிலும் கடல் இருக்கவே அந்த மக்கள் (குன்ற நாட்டு மக்கள்) பாதுகாப்புக்காக மலை உச்சியில் வாழ்ந்திருக்கிறார்கள். கடலைச் சார்ந்து மீன்பிடித் தொழிலும் செய்திருகிறார்கள். தென்னன் தேசத்தில் நெய்தல் என்ற தனி நிலப்பிரிவு கிடையாது. ஆனால் குன்ற மக்களும், குணகரை மக்களும் கடல் சார்ந்த வாழ்க்கையை (மீன் பிடித்தல்) வாழ்ந்திருக்க வேண்டும். இந்த மக்களுக்கும், ஆரவல்லி மீனா மக்களுக்கும் உள்ள ஒற்றுமையையும், தொடர்பையும் ஆராய்ந்தால் பல ஆச்சரியங்கள் கிடைக்கும்.

 

அதுபோல மீன என்னும் சொல்லோசையுடன் கூடிய பெயரைக் கொண்ட மக்கள் கிரீடி தீவில் குறைந்தது 3000 ஆண்டுகளுக்கு முன்பே வசித்திருக்கிறார்கள். இந்த ஒற்றுமை பெயரில் மட்டுமல்ல, வாழ்ந்த இடத்திலும் இருக்கிறது. அந்த மக்களும் மலை உச்சியில்தான் வாழ்ந்திருக்கிறார்கள் என்னும் விவரம் நம் ஆராய்ச்சிக்குத் தூண்டு கோலாகிறது. அங்கு என்னதான் இருக்கிறது என்று பார்த்தால், பாரதப் பண்பாட்டுக்கும், அந்த மக்களுக்கும் ஒற்றுமை இருப்பது தெரிய வருகிறது. அந்த விவரங்களைத் தனிக் கட்டுரையாக இடுகிறேன். இங்கு வாசகர் ஆர்வத்துக்குத் தீனி போட ஒரே ஒரு ஒற்றுமையை மட்டும் காட்டி விட்டு, மேலே தொடர்கிறேன்.

 

மீனோவ மக்கள் செய்த பொம்மைகள் நிறைய கிடைத்துள்ளன. அவை இப்படி இருக்கிறன.


நன்கு அலங்கரிக்கப்பட்ட பெண் உருவம். ஆனால் இது பொம்மை என்று சொல்லும் வண்ணம் இடுப்புக்குக் கீழே சிலிண்டர் வடிவம். கைகள் இரண்டையும் மேல் நோக்கித் தூக்கி வைத்துக் கொண்ட அமைப்பு. பிற பொம்மைகளும் இப்படித்தான் கையைத் தூக்கிக் கொண்டு 'போஸ்' கொடுக்கின்றன.

 

இவற்றைப் பார்த்த உடனேயே நமக்கு தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகளும், பொம்மலாட்ட பொம்மைகளும் நினைவுக்கு வருகின்றன அல்லவா? பொம்மலாட்ட பொம்மைகளது கையில் நூலை இணைத்து, திரைக்குப் பின்னிருந்து இயக்குவார்கள். அதனால் பெரும்பாலும் அவற்றின் கைகள் தூக்கின அமைப்பில்தான் இருக்கும்.

 

சாம்பிளுக்கு நம் நாட்டு பொம்மலாட்ட பொம்மைகளைப் பாருங்கள்.

 


 

இதைப் பார்த்தவுடன், மீனோவாவை நாம் இன்னும் ஆராய வேண்டும் என்பது தெளிவாகிறது. இவ்வாறு பல தொடர்புகள் எங்கெங்கோ செல்லுகையில், சிந்து சமவெளியில் காணப்படும் மீனை மீனாகப் பார்க்காமல், அதில் நக்ஷத்திரத்தைப் பார்ப்பது முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட மன நிலையைக் காட்டுகிறது.

 

இந்த மன நிலையைச் சொல்லிக் குற்றமில்லை. ஏனெனில் பைபிளில், கிருஸ்து பிறந்த போது ஒரு நக்ஷத்திரம் தோன்றி அவர் பிறந்த இடத்தை அடையாளம் காட்டியது என்ற கருத்து உள்ளது. ஆனால் எங்கெங்கெல்லாம் முடியுமோ, அங்கெல்லாம் நக்ஷத்திரங்களை உருவகப்படுத்தி, இதுவரை பல நக்ஷத்திரங்களைக் கிருஸ்துவர்கள், உருவாக்கி இருக்கிறார்கள். கிருஸ்துமஸ் மரத்தை அலங்கரிக்க 4-முனைகள் கொண்ட நக்ஷத்திரம் என்று 4 முனைகளில் ஆரம்பித்து, 5 முனை, 6 முனை, 8 முனை, 9 முனை, 12 முனை கொண்ட நக்ஷத்திரங்கள் என்று பல விதமான நக்ஷத்திரங்கள் கிருஸ்துவத்தில் உள்ளன.

 

இவையெல்லாம் சென்ற 500 முதல் 1000 வருடங்களுக்குள்தான் உருவாயின. இவை எல்லாம் உருவகங்களாக இருக்கின்றன. இவ்வாறு நக்ஷத்திரமாக உருவகிக்கக் காரணம், 1000 வருடங்களுக்கு முன் 6 முனை கொண்ட நக்ஷத்திரக் குறி கெல்டிக் நாடுகளில் கோலோச்சிக் கொண்டிருந்தது. இவற்றுக்கு முன்னோடியாக யூதர்களது 'ஸ்டார் ஆஃப் டேவிட்' (STAR OF DAVID) என்ற கருத்து யூதர்கள் பைபிளில் இருந்தது. அதற்குக் கொடுக்கப்பட்ட வடிவம் இப்படி இருந்தது.

 


 

இதைக் கொண்டே நாஜி ஹிட்லர், யூதர்கள் அனைவரும் மஞ்சள் நிறத்தில் நக்ஷத்திரக் குறியில் தங்கள் உடையில் அணிய வேண்டும் என்று வற்புறுத்தினான். யூதர்களை வெறுத்த அவனுக்கு, அவர்களை எளிதில் அடையாளம் காண இந்தக் குறி பயன்பட்டது.

 


 

இந்த நக்ஷத்திரச் சின்னத்தைப் பற்றி சென்ற 1000 வருடங்களுக்கு மேலாகவே ஐரோப்பியர்களுக்கிடையே குழப்பமான எண்ணம் இருந்து வந்திருக்கிறது.

டேவிடின் நக்ஷத்திரம் என்றழைக்கப்பட்ட இந்தச் சின்னம் பாதுகாப்பு தரும் தாயத்தாகக் கருதப்பட்டு வந்தது. 1000 வருடங்களுக்கு முன்னால் இந்தச் சின்னத்தை, சனி கிரகத்தின் அடையாளம் என்றும், அதைத் தாயத்தாகவும் மக்கள் அணிந்து வந்தார்கள். ஆனால் இந்தச் சின்னத்தைக் கொண்டு சூனியம் வைத்தல், பில்லி சூனியம் என்று மக்களைப் பயமுறுத்தும் வண்ணம் 1000 வருடங்களுக்கு முன் ஒரு சூழ்நிலை இருந்தது. சனி கிரகம் என்பவன் சாத்தான் ஆனான். இந்த்ச் சின்னத்தில் 6,6,6 பக்கங்கள் இருக்கின்றன என்றும், 666 என்பது சாத்தானைக் குறிக்கும் என்ற எண்ணங்கள் எழுந்தன.


 


 

இந்த சமயத்தில்தான் சாத்தானை அழிக்கிறோம் என்ற பெயரில், சூனியக் காரர்கள் என்று பலரையும் கொன்றார்கள். அதுவரை மக்களிடையே புழங்கி வந்த பல நம்பிக்கைகளையும், வழிபாட்டு முறைகளையும் அழித்தார்கள். அது மட்டுமல்ல, கிரகங்களைப் பற்றியும் உலகம் சூரியனைச் சுற்றி வருகிறது என்றும் விஞ்ஞான ரீதியாகச் சொன்னவர்களையும் கூடக் கொடூரமாகக் கொன்றார்கள். இதையெல்லாம் கிருஸ்த்துவத்தின் பெயரில், கிருஸ்துவர்கள் செய்தார்கள். ஆனால் கிருஸ்துவர்களால் நக்ஷத்திரத்தை விட முடியவில்லை. 6 முனை நக்ஷத்திரம், யூதர்கள் நக்ஷத்திரமாக இருந்தாலும், அது சாத்தான் என்று பெயர் பெற்று விட்ட்தால், அப்பொழுது புழக்கத்தில் இருந்த இன்னொரு நக்ஷத்திரமான 5- முனை நக்ஷத்திரத்தை, ஏசு பிறந்த போது வழிகாட்டிய நக்ஷத்திரமாக ஆக்கிக் கொண்டார்கள்.

ஸ்டார் ஆஃப் பெத்லஹேம் (STAR OF BETHLEHEM) என்று பெயர் சூட்டப்பட்ட அது கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 


 

இதையெல்லாம் இங்கு சொல்வதற்குக் காரணம், இந்த ஸ்டார் ஆஃப் பெத்லெஹேம் என்பது நாம் முந்தின கட்டுரையில் காட்டிய – தீபஸ் எழுத்துடன் கூடிய கேர்னூனோஸின் தலையில் உள்ள நக்ஷத்திரமே.

 


 

ஸ்டார் ஆஃப் பெத்லெஹேம் என்பதே யூதப் புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது.

யூதர்களது 'புக் ஆஃப் நம்பர்ஸ்' (BOOK OF NUMBERS)  என்னும் புத்தகத்தில் ஸ்டார் ப்ராஃபஸி (STAR PROPHECY) என்ற ஒன்று காணப்படுகிறது. அதில் ஒரு நக்ஷத்திரத்தின் வரவையும், அதனால் மக்களுக்கு ஏற்படப்போகும் நன்மையைப் பற்றியும் ஒரு எதிர்கால கணிப்பு சொல்லப்பட்டுள்ளது. (There shall come a Star out of Jacob, and a Sceptre shall rise out of Israel, and shall smite the corners of Moab, and destroy all the children of Sheth.)

 

இது 2000 வருடங்களுக்கு முன்னால், யூதர்கள் கோவில் இடிக்கப்பட்டு, பல எதிர்ப்புகளுக்கிடையே அவர்கள் அல்லல் பட்டபொழுது அவர்களுக்கு ஊக்கம் தர அவர்களது போதகர்களால் சொல்லப்பட்டது. இங்கு நக்ஷத்திரம் என்பது நம்பிக்கை நக்ஷத்திரம் என்ற பொருளில் சொல்லப்பட்டுள்ளது.

 

ஆனால் அதை ஏசுவுக்கு எடுத்துக் கொண்டு, ஏசு பிறந்த பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, அவர் பெயரைக் கொண்டு, கிருஸ்துவம் என்னும் ஒரு புது மதத்தை உருவாக்கி, இந்த நக்ஷத்திரத்தையும் சுவீகரித்துக் கொண்டு விட்டார்கள். தங்களை முன்னிறுத்திக் கொண்ட கிருஸ்துவ போதகர்களால் இந்த 5 முனை நக்ஷத்திரச் சின்னம் பிரபலப்படுத்தப்பட்டது. அதற்குப் பிறகு அதன்முனைகளுக்கு பல அர்த்தங்களைக் கற்பித்துக் கொண்டார்கள். ஆனால் இந்த நக்ஷத்திரத்தின் ஆரம்பம் யூத நம்பிக்கைகளில்தான் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

 

யூதர்களுக்காகச் சொல்லப்பட்ட நக்ஷத்திர ஆரூடம் அவர்களுக்கு நடந்தாற்போல் போலத் தெரியவில்லை. அவர்களுக்கு ஒரு நம்பிக்கை நக்ஷத்திரம் வரவில்லை. ஆனால் அவர்கள் அதுவரை அணிந்து வந்த டேவிட்டின் நக்ஷத்திரம், பில்லி சூனியத்துக்குத்தான் பெயர் பெற ஆரம்பித்தது. அந்த நக்ஷத்திரத்தை அணிந்தவர்கள் சூனியம் வைப்பவர்கள் என்று கருதப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.

 

யூதர்களுடைய நக்ஷத்திரத்தை ஆராய்ந்தால், அது சனி கிரகத்துக்கான தாயத்தாக, ஒரு காப்பாக அணியப்பட்டது என்று தெரிகிறது. சனிக்கும் அந்த 6- முனை நக்ஷத்திரத்துக்கும் என்ன தொடர்பு? அப்படி ஒரு தொடர்பை அவர்களுக்கு யார் சொன்னது என்று பார்த்தால், அங்கே வேத மதத்தின் தொடர்பைக் காணலாம்.

 

நான்கு வேதங்களில், முதல் மூன்றும் மந்திர அடிப்படையைக் கொண்டவை. நான்காவது வேதமான அதர்வண வேதம் யந்திர, தந்திர அடிப்படையைக் கொண்டது. பலவிதமான தாயத்துகள், பில்லி சூனியத்திலிருது பாதுகாப்பு போன்றவற்றுக்கான வழிமுறைகள் அதர்வண வேத்த்தில் காணப்படுகின்றன. அதில் யந்திர வழிபாட்டுக்கு அடிப்படையாக்க் குறிகளும் சின்னங்களும் உள்ளன. அவற்றில் அதிகம் காணப்படுவது கோண அமைப்புகளைக் கொண்ட பலவிதமான நக்ஷத்திரங்களே.

 

வேத மரபில் பல நக்ஷத்திரங்கள் இருந்தாலும் அவற்றைக் கல்லிலும், பொது இடத்திலும் செதுக்க மாட்டார்கள், அல்லது கழுத்தில் போட்டுக் கொள்ளும் தாயத்தாகவும் அணிய மாட்டார்கள். அவற்றைப் புனிதமாகக் கருதி பூஜையில் வைத்து வழிபடுவார்கள். இந்தியாவில் எந்த இட்த்திலுமே இந்த நக்ஷத்திரங்களைப் பொதுவில் பார்க்க முடியாது. வழிபாட்டுத் தகடுகளில்தான் பார்க்க முடியும். சிந்து சமவெளியில் நக்ஷத்திரக் குறி காணப்படாததற்கு இது ஒரு முக்கியமான காரணம்.

 

ஒவ்வொரு விதமான நக்ஷத்திர அல்லது கோண அமைப்புக்கும் ஒவ்வொரு அர்த்தம் உண்டு. அவ்வவற்றின் மந்திரங்களைக் கொண்டு அவற்றில் சக்தியை ஏற்றுவார்கள். தங்களைக் காப்பாற்றுவதற்காகவும், எதிரிகளை அழிப்பதற்காகவும், விரும்பியதைப் பெறவும் குறிப்பிட்ட சக்திகளைக் குறிப்பிட்ட யந்திர உருவத்தின் மூலம் பெற்றார்கள். அப்படிப்பட்ட சக்திகளை தவயோகத்தின் மூலமும் பெற்றார்கள். இவ்வாறு இருந்த பல யந்திரச் சின்னங்களுக்கு அடிப்படையான உருவம் 6 முனைகள் கொண்ட நக்ஷத்திரமே. அதிலும், சனி கிரக தேவதையை அந்த நக்ஷத்திரம் வடிவம் கொண்ட யந்திர வடிவில்தான் பூஜித்தார்கள்.

இதைக் காட்ட, திருவண்ணாமலை மாவட்ட்த்தில் இருக்கும் ஏரிக்குப்பம் என்னும் ஊரில் இருக்கும் சனி பகவான் சிலையைக் குறிப்பிடலாம். அதில் இந்த நக்ஷத்திர உருவம் செதுக்கப்பட்டிருக்கும்.