திங்கள், 17 செப்டம்பர், 2012

106. அயர்லாந்து முதல் அனடோலியா (ANATOLIA) வரை பாரதச் சுவடுகள்!


 

ரோமானியப் பேரரசு உண்டாவதற்கு முன்னரே மேற்கு, மத்திய ஐரோப்பாவில் கெல்டுகள் (CELTS) என்னும் மக்கள் பரவியிருந்தனர். இவர்களுடைய மத குருமார்களை ட்ரூயிடுகள்  (DRUIDS) என்று அழைத்தனர். அந்த ட்ரூயிடுகள் போரிடும் வல்லமையையும் பெற்றிருந்தனர். இவர்கள் 7000 வருடங்களுக்கு முன் பாரதத்திலிருந்து வெளியேறிய த்ருஹுயுவும், அவனைச் சார்ந்தவர்களும் என்று சொல்ல, பல ஆதாரங்கள் இருக்கின்றன. ஆரிய – தஸ்யு சண்டை என்று மாக்ஸ் முல்லர் கூறிய யயாதியின் ஐந்து மகன்களுக்கிடையே நடந்த வாரிசுச் சண்டையில் தோற்றுப் போன இவர்கள், ஆரிய நெறிப்படி வாழாததாலும், தஸ்யு என்று சொல்லும்படி வாழ்ந்ததாலும், பாரதத்துக்கு வெளியே அனுப்பப்பட்டனர். இவர்கள் இந்தியாவுக்கு வடக்கு, வடமேற்குப் பகுதிகளுக்கு – அதாவது மத்திய ஐரோப்பாவுக்குச் சென்றிருக்கின்றனர் என்பதே விஷ்ணு புராணம் தரும் தகவலாகும். (பார்க்க முந்தின கட்டுரை).மத்திய ஐரோப்பாவில் இருந்த மக்களை இவர்கள் ஆண்டிருக்கின்றனர். தாங்கள் பாரத்த்தில் கடைப்பிடித்த பல வழக்கங்களையும் அந்த மக்களிடையே பரப்பி, பாரதத்தில் – அதாவது ஆரியவர்த்தம் என்று அழைக்கப்பட்ட அன்றைய வட இந்தியாவில் கிடைக்காத ஆளுமையை, ஐரோப்பிய ம்க்களிடையே செலுத்தி தங்களை பலப்படுத்திக் கொண்டனர். அது மட்டுமல்லாமல், தாங்கள் பூர்வீகத்தில் பின்பற்றிய வேத மதக் கொள்கைகளை மக்களிடையே பரப்பினர். இவர்கள் தஸ்யூக்கள் – அதாவது வேத நெறியிலிருந்து வழுவினவர்கள் என்றானாலும், வேத மதத்தின் பல கருத்துக்களை இவர்கள் பின்பற்றினர்.  

 

உருவ வழிபாடு, பல கடவுள் வழிபாடு, வழிபாட்டில் நைவேத்தியம் செய்தல் ஆத்மாவுக்கு அழிவில்லை என்னும் சித்தாந்தம், மறு பிறப்பில் நம்பிக்கை, முன்னோர் வழிபாடு போன்ற வேத மதக் கருத்துக்களையும், வழக்கங்களையும் கெல்டுகள் கொண்டிருந்தார்கள். இவர்களைப் பற்றி எழுதும் ஜூலியஸ் சீசர், இவர்கள் மதம், தத்துவம், வான சாஸ்திரம் போன்றவற்றில் தேர்ந்தவர்கள் என்றும் இவற்றைப் பற்றி ஆராய்ச்சி, தர்க்கம், பொருள் உரைத்தல் ஆகியவற்றைச் செய்தனர் என்றும் கூறியுள்ளார். இது உபநிஷதங்கள் எழுந்த விதத்தை ஒத்திருக்கிறது. வேதம் ஓதுவது போல கெல்டுகளும் ஏதோ ஓதியிருக்கிறார்கள். ஆனால் அவற்றை எழுதி வைத்து ஓதவில்லை. வேதம் ஓதுதலில் உள்ளது போலவே இதை ஓதுபவர்களும் பல கட்டுதிட்டங்களைப் பின்பற்றினர். இவை எதுவும் இன்று இல்லை. மதம் சார்ந்த இந்தச் செயல்களைச் செய்தவர்கள் ட்ரூயிடுகள் எனப்பட்டார்கள். வேத மதத்தில் பிராம்மணர்களைப் போல கெல்டுகளில் ட்ரூயிடுகள் இருந்திருக்கிறார்கள்.

 

கெல்டுகள் மத்திய ஐரோப்பாவில் இருந்தனர் என்பதற்கு பிரிடிஷ் தீவுகளில் ஒன்றான அயர்லாந்தில் பல ஆதாரங்கள் இருகின்றன. ட்ரூயிடுகள் வடக்குப் பகுதிகளிலிருந்து அயர்லாந்துக்கு வந்தனர் என்று அயர்லாந்து வரலாற்று நூல்கள் கூறுகின்றன. மத்திய ஐரோப்பா, மற்றும் மேற்கு ஐரோப்பியப் பகுதிகள் அயர்லாந்துக்கு வடக்கில் இருக்கின்றன. வடக்குப் பகுதி என்று சொல்லப்படவே, ட்ரூயிடுகளின் மூலத்தைக் கிழக்கில் இருக்கும் பாரத்த்துடன் இணைத்துப் பார்க்க யாருக்கும் தோன்றவில்லை.

 

அது மட்டுமல்லாமல், கெல்டுகளைத் தங்கள் ஆளுகைக்குக்கீழ் கிரேக்க ரோமானியர்கள் கொண்டு வந்த போது, அவர்கள் செய்த முதல் வேலை, பெயர் மாற்றம் செய்த்துதான். எல்லா இடப்பெயர், மக்கள் பெயர்களையும் கிரேக்கத்திலோ, லத்தீனிலோ அவர்கள் மாற்றி விட்டார்கள். அவற்றுக்குப் புதிய அர்த்தங்களைக் கொடுத்து விட்டார்கள். கிரேக்கம் சாராத யாராக இருந்தாலும் சரி, அவர்களுக்குப் புதுப் பெயர்கள் கொடுக்கப்பட்டன. உதாரணமாக, கிருஷ்ணன் என்பது சமஸ்க்ருதப் பெயர். வேறு எந்த மொழியைப் பேசுபவர்களாக இருந்தாலும், கிருஷ்ணனைக் கிருஷ்ணன் என்றுதான் அழைப்பர். ஆனால் கிரேக்க மொழியில் கிருஷ்ணனை 'ஹெரக்ளெஸ்" (HERAKLES) என்று அழைத்தார்கள். 2,200 ஆண்டுகளுக்கு முன்னால் பாரத்த்துக்கு வந்த கிரேக்கரான மெகஸ்தனிஸ், கிருஷ்ணனை ஹெரக்ளெஸ் என்றே குறிப்பிட்டுள்ளார். 'ஹரி க்ருஷ்ணா' என்பதை ஹெரக்ளெஸ் என்றார் என்றும் ஒரு கருத்து இருக்கிறது.  

 

யமுனா நதியை ஜோபரெஸ் (JOBARES) என்றார். கிருஷ்ணாபுரம் என்பதை க்லீஸோபோரா (KLEISOBORA) என்றார். தங்களுக்குப் பழக்கமில்லாத பெயர்களாக இருந்தாலும், சரியான ஒலிக் குறிப்பைக் கவனமாகக் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் இல்லாதவர்கள் அவர்கள். அவ்வாறிருக்க,  தாங்கள் வென்ற மக்களது பூர்வீகத்தை அழிக்க விரும்பிய அவர்கள், அந்த மக்களுடன் தொடர்புடைய பெயர்களில் எந்த அளவுக்குப் புகுந்து விளையாடியிருப்பார்கள்? அவர்களது ஆதிக்க வெறியும், தங்கள் வழி தனி வழி, அதுவே சிறந்த வழி என்ற மேலாதிக்க எண்ணமும், உலக வரலாற்றை மறைப்பதற்குத்தான் உதவின என்பதைக் காலம் காட்டுகிறது.  யாராவது பேசுவது புரியவில்லை என்றால் கிரேக்க – லத்தீன் போல இருக்கிறது என்பார்கள். எல்லோரும் ஒன்று சொன்னால் அதை வேறுமாதிரியாகச் சொல்லும் வழக்கம் கிரேக்கர்களுக்கு இருக்கவே இப்படிச் சொல்வது ஏற்பட்டது. தொடர்பும், தொடர்ச்சியும் இல்லாத வண்ணம் புதிதான சொல்லாக்கத்தைக் கிரேக்கர்கள் புகுத்தினார்கள். அதனால் பாதிப்பு அடைந்தது கெல்டிக் மொழியே. அதுமட்டுமல்ல, பல கெல்டிக் கடவுளர்களும் புது அரிதாரத்துடனும், புதுப் பெயர்களுடனும் கிரேக்கத்தில் உருமாற்றப்பட்டனர். இன்று கிரேக்க நாகரிகத்தைப் பற்றி ஒஹோவென்று புகழ்கிறார்கள். ஆனால் அது கடன் வாங்கிய கலாசாரமே.

 

கிரேக்கர்கள் ஆதிக்கம் குறைந்த போது, மக்கள் மீண்டும் தங்கள் பாரம்பரிய கெல்டிக் வழக்கங்களைப் பின்பற்ற முடியாதபடி, கிருஸ்துவம் அவர்களை ஆக்கிரமித்துக் கொண்ட்து. கிருஸ்துவமும் முழுக்க முழுக்க கெல்டிக் வழக்கங்களை அழிப்பதில் மும்முரம் காட்டியது.

ஆனால் சமீப காலமாக பழைய கெல்டிக் வழக்கங்களையும், சொற்களையும், பெயர்களையும் தேடிய போது, மத்திய, மேற்கு ஐரோப்பாவில் கெல்டிக் கலாசாரம் இருந்தது உண்மைதான் என்று தெரிய வந்துள்ளது. அந்தச் சொற்களுக்கு கிரேக்கத்தில் கொடுக்கப்பட்ட சொற்கள், அவற்றின் அர்த்தங்கள் ஆகியவற்றுக்கும், பழைய கெல்டிக் சொற்களுக்கும் தொடர்பு இல்லை என்று தெரிய வந்துள்ளது. பல கெல்டிக் சொற்களுக்கு அர்த்தமும் தெரியவில்லை. ஆனால் அந்தச் சொற்கள் சம்ஸ்க்ருத சாயலிலும், சம்ஸ்க்ருத அர்த்த்துடனும் இருக்கின்றன.  

உதாரணமாக ஹங்கேரி நாட்டில் கெல்டிக் கலாசாரமே இருந்திருக்கிறது என்று தெரிய வந்துள்ளது. அங்கு கெல்லெர்ட் (GELLERT) என்னும் ஒரு மலை இருக்கிறது. இந்தப் பெயர் 11 ஆம் நூற்றாண்டில் ஹங்கேரியில் கிருஸ்துவத்தைப் பரப்ப வந்த ஒரு கிருஸ்துவப் பாதிரியாரது பெயர் என்று நினைக்கிறார்கள்.கெல்டிக் வழக்கங்களான உருவ வழிபாடும், பல தெய்வ வழிபாடும் ஹங்கேரியில் இருந்துவந்த நேரம் அது. அப்பொழுது இருந்த அந்தக் கலாசாரத்தை மாற்ற முயன்ற அவரை ஒரு பீப்பாயில் போட்டு மலையிலிருந்து உருட்டி விட்டனர். பின்னாளில் அவரைத் தியாகியாகச் சித்தரித்து அந்த மலைக்குக் கெல்லெர்ட் என்று பெயரிட்டனர் என்று மக்கள் நம்பிக் கொண்டிருக்கின்றனர்.ஆனால் அந்த மலைக்குக் 'கேலன்' என்ற பழைய கெல்டிக் பெயர் இருந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கேலன் என்பது கெல்லெர்ட்டாக மாற்றப்பட்டிருக்கிறது. ப்ருங்கி மலை, பரங்கி மலையாகி, அதற்கு ஒரு 'தியாகச் செம்மல்'  பெயரால் தாமஸ் மலை என்ற பெயரையும் சூட்டியிருக்கிறார்களே, இப்படிப்பட்ட தகிடுதத்தங்கள், கெல்டுகளை அழிக்க ஆரம்பித்த காலத்திலேயே வெற்றிகரமாகச் செயல்படுத்தப்படிருக்கின்றன.

 

கேலன் என்ற பழைய பெயர் சம்ஸ்க்ருதத்தில் விளையாட்டு (கேலா) என்ற பொருளில் வருகிறது. அங்கு ஏதோ விளையாட்டு நடந்திருக்கிறது. அது என்ன விளையாட்டு என்று தேடினால், இந்த மலை இருக்கும் புடாபெஸ்ட் நகரம் (ஹங்கேரியின் தலைநகரம்) அதற்கு முன் அங்கிருந்த ஆப்வன் (AUBHWN) என்னும் இடத்தின் மீது கட்டப்பட்டிருக்கிறது. அந்த இடம் நீர் விளையாட்டுகளுக்குப் பெயர் பெற்றது. சமஸ்க்ருத்த்தில் 'ஆப' என்று தண்ணீரச் சொல்லுவார்கள்.   இந்த இடம் கெல்டுகளது குடியிருப்பாகவும் இருந்திருக்கிறது. இன்றைக்கும் புடாபெஸ்ட் நகரத்தில் கேல்தா (KELTA) என்னும் தெரு இருக்கிறது.

 

இந்த நகரத்துக்கு வடக்கே 'சிகம்ப்ரியா' (SICAMBRIA) என்னும் இடம் இருக்கிறது. இதுவும் பழைய கெல்டுகளது நகரமாகும். இந்தப் பெயருக்கு அமருமிடம், பென்ச் (BENCH) , மலையுச்சி என்று கெல்ட் மொழியில் பொருள் காணப்படுகிறது. மலையுச்சி என்றால் தமிழ், சமஸ்க்ருதம் இரண்டிலும் சிகரம் என்போம். சிகரம் எனபதே சிகம்ப்ரியா என்றாகி இருக்கிறது. அங்குதான் கெல்டுகள் கோலோச்சியிருகிறார்கள்.  அருகே ஆப்-வனில் நீர் விளையாட்டு விளையாடியிருக்கிறார்கள். அவர்களது விளையாட்டு விருப்பத்தினால், கேல்தி, கெல்ட் என்ற பெயர் ஏற்பட்டிருக்க வேண்டும். இன்றைக்கும் புடாபெஸ்டில் கெல்லெர்ட் நீர் விளையாட்டுகள் பிரசித்தமானவை.

 

நீர் விளையாட்டுகள் மட்டுமல்ல, வீர விளையாட்டுகளும் கெல்டுகளுக்குப் பிடிக்கும். அது மட்டுமல்ல அவர்கள் ஐரோப்பியர்களுக்கு அறிமுகமில்லாத 'போர்- விளையாட்டு' என்ற ஒன்றை விளையாடியிருக்கிறார்கள். ஒரு மரப்பலகை மீது உருவங்களை வைத்து விளையாடி, அவற்றை மாயமாக மறையச் செய்யும் விளையாட்டு என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இப்படிப்பட்ட விளையாட்டைச் சதுரங்க விளையாட்டு என்போம். இந்த விளையாட்டு பாரத நாட்டில் மட்டும்தான் பிரபலமானது. அப்படி ஒரு விளையாட்டில்தான் போரிடாமலே, தங்கள் நாட்டைப் பாண்டவர்கள் இழந்தார்கள். அதனால் சதுரங்க விளையாட்டுக்குப் போர் விளையாட்டு என்று பெயரிட்டது பொருத்தமாக இருக்கிறது. இந்த விளையாட்டைக் கெல்டுகள் விளையாடியிருக்கிறார்கள் என்றால், அந்த விளையாட்டின் ஆரம்பம் எங்கு செல்கிறது? கெல்டுகளே பாரதத்துக்கு வந்து, இங்கு தங்கள் கலாசாரத்தைப் பரப்பினார்கள் என்றால், அந்தக் கெல்டுகளது  பெயரும், ஞாபகமும், பாரதத்தில் இருக்க வேண்டும். ஆனால் அது ஐரோப்பாவிலும், அயர்லாந்திலும் அல்லவா இருக்கிறது?

 

இது வரை பட்டியலிட்ட கெல்டு வழக்கங்கள் எல்லாம் அவர்கள் உருவாக்கி, அவர்களிடமிருந்து பாரதத்துக்குள் பரவினது என்றால், அவர்கள் மாக்ஸ் முல்லர் சொல்லும் ஆரியர்களா? அவர்களைப் பற்றி விரிவாகச் சொல்லும் அயர்லாந்து கதைகள் எதுவும் அவர்களை ஆரியர்கள் என்றும் சொல்லவில்லை. எந்த ஆரியரைப் பற்றியும் சொல்லவில்லை. அவ்வளவு ஏன்? அவர்களது வழக்கங்களை எந்த ஐரோப்பியரும் ஏற்றுக் கொள்ளவில்லையே? ஆனால் அதே வழக்கங்களின் திருத்தமான வடிவம் பாரதத்தில் இன்று வரை தொடர்ந்து வருகிறது. அவற்றின் திரிபான வழக்கங்கள் ஐரோப்பாவில் இருந்தன என்றால், அவற்றைப் பின்பற்றியவர்கள், தங்கள் மூலத்துடன் தொடர்பை இழந்து விட்டதால் காலப்போக்கில் ஏற்பட்ட திரிபே என்றாகிறது.

இவர்கள் மூலத்திலிருந்து பிரிந்து சென்ற மக்களே என்று சொல்லும் வண்ணம் இவர்கள் நாட்டுக்கும் பெயரிட்டிருக்கிறார்கள். பொ.பி முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்த தாலமி அவர்கள், அயர்லாந்தின் பழைய கெல்டிக் பெயராக 'அயோர்னியா' (IOUERNIA) என்று குறிப்பிடுகிறார். அயோர்னி என்பது காலப்போக்கில் அயர் என்றாகி அயர்லாந்து என்றாகி இருக்கிறது. இந்தப் பெயர் அயோர்னியா - அயோனியா – அயோனி என்ற ஒலியில் அமைகிறது.. அயோனி என்றால் யோனியில் பிறவாதவன் என்று சமஸ்க்ருத்த்தில் பொருள்.

அவர்கள் யோனியில் பிறக்கவில்லை என்றால், யோனியில் பிறந்தவர்கள் யார்?

அவர்கள் பிறந்த இடம் யோனியல்ல என்றால், எதுதான் யோனி?

ட்ரூயிடுகள், த்ருஹ்யுக்களது வழியில் வந்தவர்களாக இருந்தால், மூல நாடான பாரதத்திலிருந்து பிரிந்து, பாரதத்துக்கு வெளியே பிறந்தவர்கள் என்ற பொருளில் வருகிறது. இதனால் யோனி என்பது பாரத நாடு என்றாகிறது.

தோற்றமும், ஆக்கமும் நடக்குமிடம் யோனியாகும்.

பாரத நாடு ஒரு யோனி குண்டமாக இருந்து வந்திருக்கிறது.

முக்கோண வடிவத்தைப் பற்றி 104 ஆவது கட்டுரையில் ஆராய்ந்தோம், அப்பொழுது பாரதநாடும் முக்கோண வடிவில் இருக்கிறது என்பதை நினைவு படுத்தினோம்.