செவ்வாய், 28 ஆகஸ்ட், 2012

102. மொஹஞ்சதாரோவிலிருந்து ஐரோப்பா வரை பரவிய கொம்புத் தலைக் கடவுள்.


தமிழன் திராவிடனா? தொடருகிறது. இதன் முந்தைய கட்டுரையை இங்கே படிக்கலாம்.

http://thamizhan-thiravidana.blogspot.in/2012/02/101.html


தொடருவதற்கு முன், நாம் கடைசியாக அலசிய சில விவரங்களை நினைவில் கொண்டு வருவோம்.


மொஹஞ்சதாரோவில் கிடைத்துள்ள முத்திரைச் சின்னம் ஒன்றில், சிவன் என்னும் தெய்வம் உருவான ஆரம்பக் கருத்தாக்கம் கிடைத்துள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். அந்த உருவ முத்திரையைக் கீழே காணலாம்.


 


 

இதில் உள்ள உருவம் பசுபதி என்றும், இதிலிருந்துதான் சிவன் என்னும் கருதுகோள் தோன்றியது என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.


இவர்கள் சொல்வதை நாம் ஒத்துக் கொள்வதாக இருந்தால், மொஹஞ்சதாரோவில் இருந்த கலாசாரம், திராவிடமல்ல, அது வேத கலாசாரம் தான் என்று ஏற்றுக் கொள்ள வேண்டும்.


ஏனெனில் சிவன் என்னும் தெய்வம், வேத ஆரியர்களது தெய்வம்தான்.


மும்மூர்த்திகளில் ஒருவன் சிவன்.


சிவனது பிரபஞ்ச ரூபத்தை விவரிக்கும் 'ஸ்ரீ ருத்ரம்' என்னும் பகுதி யஜூர் வேத்த்தில் இருக்கிறது. ஹிந்து மதத்தில் எந்த தெய்வத்தை வழிபடுபவர்களாக இருந்தாலும், இந்த வேத ருத்ரத்தைச் சொல்லும் மரபு இன்று வரை இருக்கிறது.


இதில்தான் மரண பயத்தை வெல்லும் 'மிருத்யுஞ்சன மந்திரம்' இருக்கிறது.


சிவ மந்திரம் என்று சொல்லப்படும் ஐந்தெழுத்து மந்திரமான ஓம் சிவாய நமஹ என்பது யஜுர் வேதத்தின் கிளையான தைத்திரிய சம்ஹிதையில் காணப்படுகிறது.

இந்த மந்திரம் மக்களுக்கிடையே புழங்க ஆரம்பித்து பல ஆயிரம் வருடங்கள் ஆகியிருக்கும். ஏனெனில், 1800 ஆண்டுகளுக்கு முன் நடந்த சிலப்பதிகாரத்தில், கண்ணகியுடன் கோவலன் மதுரைக்குச் செல்லும் போது, வழியில் அவன் கண்ட மாங்காட்டுப் பார்ப்பனன், இந்த ஐந்தெழுத்து சிவ மந்திரத்தையும், எட்டெழுத்து மந்திரமான விஷ்ணு மந்திரத்தையும் சொல்லிக் கொண்டு காட்டைக் கடக்குமாறு அறிவுறுத்துகிறான்.


இதிலிருந்து 2000 வருடங்களுக்கு முன்பே இந்த மந்திரங்களை மக்கள் சொல்லி இருந்தார்கள் என்று தெரிகிறது. ஆனால் அதற்கு 1500 வருடங்களுக்கு முன்புதான் மொஹஞ்சதாரோவில் சிவன் என்னும் கருத்தாக்கம் உண்டானது என்றால், அதற்குப் பிறகுதான் மாடு மேய்த்த ஆரியர்கள் வந்து, பிறகு வேதத்தைக் கொடுத்தனர் என்றால், சிவ மந்திரம் உருவாகி மக்களிடையே புழங்க ஆரம்பிக்க, இந்தக் கால இடைவெளி போதாது.


 

மேலும் மேலை நாட்டு ஆராய்ச்சியாளர்களுக்கு தவம், ஜபம், மந்திரம், யோகம் என்பவையெல்லாம் தெரியாது. அவர்களைப் பொருத்த வரையில் கற்கால மனிதன், தட்டுத்தடுமாறி தானே உருவகித்த கொள்கைதான் தெய்வம் என்ற எண்ணம் இருக்கிறது. அவர்கள் நாடுகளில் தென்படும் அடையாளங்களைக் கொண்டு அவர்கள் அப்படி இருக்கிறது என்று சொல்கிறார்கள். ஆனால் நம் நாட்டில் நன்கு வளர்ந்த கடவுள் கொள்கையைத்தான் நாம் காண்கிறோம். ஐரோப்பாவில் மக்கள் கற்கால வாழ்க்கை வாழ்ந்த காலக் கட்டத்திலேயே, பாரத நாட்டில் அறிவு பூர்வமாக விவரிக்கும்படியான தெய்வக் கொள்கை வேரூன்றி இருந்திருக்கிறது. ஆராய்ந்தும், விவாதித்தும் தெய்வத்தை அறியுங்கள் என்றுதான் ஹிந்து மதம் கூறுகிறது. அந்த வழியை 'ஞான யோகம்' என்பார்கள். அந்த ஞானம் பெறுவதற்கான அடிப்படைகள் பல இருந்தன. அவற்றுள் ஒன்று யோகத்தில் அமர்ந்து, மூச்சுப் பயிற்சி செய்து, குண்டலினையை எழுப்பும் முறையாகும். அந்த வழிமுறையைத்தான் நாம் மொஹஞ்சதாரோவின் முத்திரைகளில் உருவமாகப் பார்க்கிறோம்.


உண்மையில், இந்தத் தவ முறையை ஆரம்பத்தில் பின்பற்றி, பிறகு நாளடைவில் மறந்து போய், அதன் காரணமாக தாறுமாறாக மாறிப் போன கடவுள் கொள்கைகளையே நாம் ஐரோப்பாவில் காண்கிறோம், அந்தக் கொள்கைகளைக் காப்பியடித்தும், உருமாற்றியும் உருவான மதமே கிருஸ்துவம் ஆகும். பொ.பி 4 ஆம் நூற்றாண்டுவாக்கில் உருவாக்கப்பட்ட கிருஸ்துவ பைபிள் சொல்லும் கருத்துக்கள் இந்தியாவிலிருந்து எகிப்து வரை சென்று, பிறகு கிரேக்கர்களால் உருமாற்றப்பட்டு, அதன் பிறகு சின்னாபின்னமாக்கப்பட்ட கருத்துக்களே ஆகும். இதை மெய்ப்பிக்க ஹிந்து மத நூல்கள் சொல்லும் கருத்துக்களுடன் நாம் ஒப்பிட்டுக் காட்டலாம். ஆனால் அவற்றை அன்னிய ஆராய்ச்சியாளர்களும், அவர்களுக்கு வால் பிடிக்கும் இந்திய ஆராய்ச்சியாளர்களும் ஏற்றுக் கொள்ள தயாராகவில்லை


ஆனால் உண்மை சாகாது. தொல்லியல் ஆதாரங்களாக அந்த உண்மைகள் மொஹஞ்சதாரோவில் இருக்கின்றன. அந்த ஆதாரங்கள் திராவிடத்தைப் பற்றிப் பேசவில்லை. அப்பொழுதே தொடர்ந்து வந்த வேத வாழ்க்கையைப் பற்றித்தான் பேசுகின்றன. அவை என்னவென்று காண்போம்.


அவற்றில் முதலாவதாக திணிக்கப்படும் பொய் மொஹஞ்சதாரோவில் காணப்படும் தவ வடிவம் பசுபதி என்பதும், அதுவே PROTO SIVA  எனப்படும் சிவன் என்பதன் கருத்தாக்கம் என்பதும் ஆகும்.

அது பசுபதியோ அல்லது வேறு எந்த தெய்வமோ அல்ல.


அந்த உருவம் தவயோகத்தில் ஈடுபட்டிருப்பவரது உருவம் என்பதை முந்தைய கட்டுரைகளில் கண்டோம். அதன் முக்கிய ஆதாரமாக புத்தரது உருவத்துடன் ஒப்பிட்டோம்.


புத்தர், காலத்தால் மொஹஞ்சதாரோவுக்குப் பிற்பட்டவர். அவர் ராமன் பிறந்த இக்ஷ்வாகு குலத்தில் பிறந்து துறவு மேற்கொண்டவர். அவர் இன்றைய பீஹாரில் கயை என்னுமிடத்தில் ஒரு அரச மரத்தடியில் தவம் இருந்து ஞானம் பெற்றார். அரச மரத்துக்கு போதி மரம் (போதிபோதனைஅறிவு) என்றே பெயர் உண்டு. அதை அஸ்வத மரம் என்று வடமொழியில் வழங்குவார்கள். அந்த மரத்துக்கும் ஞானம் பெறுவதற்கும் தொடர்பு உண்டு என்பது ஹிந்து மத நம்பிக்கை. இந்தப் பிரபஞ்சமே கவிழ்ந்த நிலையில் வளரும் அரச மரத்தைப் போன்றது என்பதே வேத, உபநிஷதக் கருத்து ஆகும். அந்த மரத்தின் வேர்கள் பிரபஞ்ச வெளியிலும், அதன் கிளைகள், இலைகள் ஆகியவை உயிர்கள் வாழும் இந்த உலகிலும் இருக்கின்றன என்றே அந்தக் கருத்து உருவகிக்கிறது.தோற்றம் மற்றும் வளர்ச்சியின் உருவகமாக அது இருப்பதால், பிரளய காலத்தில் இந்த உலகம் நீரில் முழுகி இருக்கும் போது அந்த அஸ்வத மரத்தின் இலையில் கண்ணன் தவழுவான். அப்பொழுது மீண்டும் உலகம் தோற்றம் பெறும், உயிர்கள் வளர ஏதுவா சூழ்நிலை ஏற்படும். ஆண்டாள் பிறந்த ஸ்ரீ வில்லிபுத்தூரில் மார்கண்டேய முனிவர் தவம் செய்து கொண்டிருந்தபோது, நீர் பிரவகித்து, எல்லாம் முழுகி விட்டன. அப்பொழுது மார்கண்டேருக்கு ஆலிலை மேல், கண்ணன் காட்சி அளித்தார். அந்தக் காட்சியை அவர் வட பத்ர சாயி என்ற பெயரில் தெய்வமாக அதே இடத்தில் பிரதிஷ்டை  செய்தார்.