வெள்ளி, 9 நவம்பர், 2012

115. இந்தியாவிலும், இன்காவிலும் ஒரே சூரியக் கடவுள்.

விரோசனன் என்னும் பெயர் புராணத்திலும் உபநிஷத்திலும் வருகிறது என்பதை முந்தின கட்டுரையில் பார்த்தோம். வடபுலத்தில் இந்திரனைப் போல, தென் புலத்தில் விரோசனன் (VIROCHANA) இருந்தான் என்றால், அவனை முன்னிட்டு, தென் புலத்தில் சூரியன் சாரமும், மக்கள் பெருக்கமும் ஏற்பட்ட நிலையை அது காட்டுகிறது. விரோசனன் என்னும் பெயர் உச்சரிப்பை ஒட்டியே விரகோசன் (VIRACOCHA) என்னும் கடவுள் தென் அமெரிக்க இன்கா (INCA) மக்களால் வணங்கப்பட்டான். அந்தக் கடவுளது உருவத்தைக் கீழுள்ள படங்களில் காணலாம்.

 

விரகோசனது மகன் இன்டி (INTI) எனப்படும் சூரியன். அந்த சூரியக் கடவுள் உருவம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


 

இரண்டு கைகளிலும் எதையோ தாங்கிக் கொண்டு இருக்கிறார். அது மலர் அல்லது மொட்டு போல இருக்கிறது. தலை சூரியன் வடிவில் இருக்கிறது.

இதில் ஆச்சரியம் என்னவென்றால் இதே போலத்தான் வேத மரபிலும் சூரியன் உருவம் செதுக்கப்படுகிறது. கீழுள்ள படத்தைப் பாருங்கள்.

 


சிற்ப சாஸ்திரம், பிருஹத் சம்ஹிதை போன்ற நூல்களில் ஒவ்வொரு தெய்வத்தையும் எப்படி வடிக்க வேண்டும் என்ற விதி முறைகளைக் கொடுத்திருக்கிறார்கள். அதன் படி சூரியன் இரு கைகளில் தாமரை மலர்களை ஏந்தியும், நின்ற கோலத்திலும், வடக்குப் பகுதி நாகரிகத்தில் உடையும் அணிந்திருக்க வேண்டும். வடக்குப் பகுதி உடை என்று எதைச் சொன்னார்கள் என்று தெரியவில்லை. ஆனால் மத்தியப் பிரதேசத்தில் கிடைத்துள்ள கீழ்க்காணும் சிலையில் சூரியன் பைஜாமா (PYJAMA)   போல இடுப்புக்குக் கிழே உடையணிந்திருப்பதைக் காணலாம். மேலுள்ள படத்திலும் அவ்வாறே வித்தியாசமான உடை காணப்படுகிறது.