ஞாயிறு, 31 டிசம்பர், 2023

இராவணனது இலங்கை எது?

 Earlier published in Geethacharyan Monthly.

 Previous article to be read here to have continuity

இராமாவதாரத்தின் முக்கிய நோக்கமே இராவண வதம்தான். இராவணனை அவனுடைய இருப்பிடத்துக்கே சென்று அழித்தான் இராமன். அந்த இடம் இராவணனுடைய நகரமான இலங்கை. அது எங்கிருக்கிறது? இது நாள் வரை அது எங்கே இருக்கிறது என்ற சந்தேகமே எழவில்லை. தனுஷ்கோடியிலிருந்து ஆரம்பிக்கும் சேதுக் கரையைக் கடந்தால் எதிர்ப்புறம் இருக்கும் ஸ்ரீலங்காவில்தான் இராவணனது இலங்கை இருந்தது என்றுதான் சொல்லி வந்தார்கள். ஆனால் ஆங்கிலேயர்கள் வருகைக்குப் பிறகு, ‘ஆராய்ச்சி’ என்ற போர்வையில் இராமாயணம் நிகழ்ந்தது என்பதையும் நம்ப மறுத்தார்கள்; இராவணன் வாழ்ந்த இலங்கை, இன்றைய இலங்கைதான் என்பதையும் ஏற்க மறுத்தார்கள். ஆங்கிலேயர்களைப் பின்பற்றி நம் நாட்டவர்களும் ஆராயத் தொடங்கி, இராமாயணம் உண்மையாக நடந்த ஒரு வரலாறு என்பதை நம்பலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் உழன்றனர். வேறு சிலர், இராமாயணம் உண்மைதான், ஆனால் இலங்கை, இன்றைய இலங்கையல்ல என்று தாங்களும் குழம்பி, மக்களையும் குழப்பிக் கொண்டிருக்கிறார்கள். எனவே எங்கே இலங்கை, எது இராவணன் இலங்கை என்பதை நிறுவுவதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

இந்தக் குழப்பங்களுக்கு முக்கியக் காரணங்கள் மூன்று. அவை ஒவ்வொன்றையும் ஆராய்வோம்.

1. பாரத தேசத்திலேயே பல இலங்கைகள்

நம் நாட்டிலேயே இலங்கை என்ற பெயருடன் பல இடங்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் இராவணனது இலங்கையாக இருக்க வேண்டும் என்று சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.  அப்படி சொல்லப்படும் இலங்கையில் ஒன்று, ஒரிஸா மாநிலத்தில் ஸோன்பூர் என்னுமிடத்தில் மஹாநதியின் நடுவில் ஒரு மலையின் மீது ‘லங்கேஸ்வரி’ என்னும் கோயிலாக அமைந்துள்ளது. ஒரு காலத்தில் ஸோன்பூரை ‘பஸ்சிம லங்கை’ என்றே அழைத்தார்கள் என்றும் சுட்டிக் காட்டுகிறார்கள்.

லங்கேஸ்வரி

இன்னும் சிலர், மத்திய பிரதேசத்திலிருக்கும் ஜபல்பூரின் அருகே உள்ள ‘இந்திராணா’ மலையே இலங்கை என்றும் கூறுகின்றனர். இது நர்மதை ஆற்றின் நடுவே அமைந்துள்ளது.

வேறு சிலர், நர்மதை நதி ஆரம்பிக்கும் இடமான ‘அமர்கண்டக்’ மலையே இராவணனது இலங்கையாக இருக்க வேண்டும் என்கின்றனர். மற்றும் சிலர் மத்திய பிரதேசத்திலுள்ள ‘பஸ்தர்’ (Bastar) என்னுமிடமே இலங்கை என்கின்றனர்.

இன்னொரு இடம், குஜராத் கரையோரமுள்ள ‘பகத்ரவ்’ (Bhagatrav) என்னுமிடம். இராமாயணத்தில் தென்கடல் என்று சொல்லியிருப்பது குஜராத்தின் தெற்கிலுள்ள அரபிக் கடல் என்னும் எண்ணத்தில் இந்த இடத்தையும் ஆராய்ச்சியாளர்கள் விட்டுவைக்கவில்லை.

சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் போன்ற இடங்களில் இராவணனை வழிபடுகிறார்கள். இந்த இடங்களில் பல இடங்கள் இலங்கை என்ற பெயருடன் முடிகின்றன. எனவே இராவணன் இந்தப் பகுதியில்தான் வாழ்ந்திருக்க வேண்டும் என்பது மற்றும் சிலரது கருத்து.

ஸ்ரீலங்காவைத் தவிர, மற்ற இடங்களில் எல்லாம் இலங்கையைக் கண்டுவிட்டார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

2. நூறு யோஜனைத் தொலைவில் இலங்கை

இவ்வாறு இலங்கையை பாரத தேசத்துக்குள்ளேயே தேடுவதற்கு ஒரு காரணமாக, சம்பாதி சொல்லும் விவரத்தை ஆராய்ச்சியாளர்கள் காட்டுகிறார்கள். சீதையைத் தேடிக் கிடைக்காமல், நம்பிக்கை இழந்த நிலையில் அங்கதன் முதலான வானரர்கள் இருந்த போது, சம்பாதியை விந்திய மலைச் சாரலில் சந்தித்தனர். இராவணன், சீதையை அபகரித்துச் சென்றதைக் கண்டதாகச் சொல்லும் சம்பாதி, இராவணனது நகரமான இலங்கை, அந்த இடத்திலிருந்து நூறு யோஜனைத் தொலைவில் உள்ளது என்கிறான் (வா.இரா: 4-58-20).

ஒரு யோஜனை என்பது 8 மைல்கள் என்று எடுத்துக் கொண்டு, விந்திய மலையிலிருந்து 800 மைல் தொலைவில் இலங்கை இருப்பதாக அவன் சொல்கிறான் என்று நினைத்துக் கொண்டு, அதை விட அதிக தூரத்தில் ஸ்ரீலங்கா இருக்கவே, விந்திய மலைக்கு அருகிலேயே எங்கோ இலங்கை இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

3. பூமத்திய ரேகையின் மீது இலங்கை

மூன்றாவதாக, இலங்கை என்பது வானசாஸ்திரத்தில் பூமத்திய ரேகை மீது உள்ளதாகக் கூறப்படுகிறது. சூரிய சித்தாந்தம், சிந்தாந்த சிரோமணி போன்ற வான சாஸ்திர நூல்கள், பூமியின் அச்சு, குருக்ஷேத்திரம், உஜ்ஜயினி ஆகியவற்றையும், பூமத்தியரேகையில் உள்ள இலங்கையையும் ஒரே நேர்க் கோட்டில் இணைக்கிறது என்று சொல்வதால் ஸ்ரீலங்கா இலங்கை அல்ல என்று ஒரு சாரார் சொல்கிறார்கள்.

இவர்கள் காட்டும் இன்னொரு காரணம், கடலைக் கடக்க சேதுவை உருவாக்கினபோது, அது 100 யோஜனை தூரம் கட்டப்பட்டது என்று இராமாயணம் சொல்கிறது (வா.இரா: 6-22). அது 800 மைல்களுக்குச் சமானம். ஆனால் இராமர் சேது 30 கிலோமீட்டர் நீளமே உள்ளது. எனவே அது இராமாயணம் சொன்ன சேது அல்ல என்றும், அது இணைக்கும் ஸ்ரீலங்கா, இலங்கையுமல்ல என்றும் இவர்கள் கூறுகிறார்கள். இப்படிச் சொல்பவர்கள் இலங்கை என்று காட்டுமிடம், பாரதத்தின் தென் முனையிலிருந்து, இந்தியப் பெருங்கடலில் 800 மைல் தொலைவில் இலங்கை இருந்திருக்க வேண்டும் என்பதே. அங்கு ஆழமான கடல்தான் இருக்கிறது. ஆனால் அங்குதான் இலங்கை இருந்திருக்க வேண்டும் என்றும் அது கடலில் மூழ்கி இருக்க வேண்டும் என்றும் இந்தத் தரப்பினர் சாதிக்கிறார்கள்.

இந்தக் கருத்துக்கள் ஏற்கத்தக்கவையா என்று பார்ப்போம்.

இலங்கை என்பதன் அர்த்தம்.

பல இடங்கள் இலங்கை என்று ஏன் அழைக்கப்படுகின்றன என்று நாம் யோசிக்க வேண்டும். இலங்கை என்பது ‘ஆற்றிடைக்குறை’ என்று அகராதிகளும், நிகண்டுகளும் கூறுகின்றன. ஒரு ஆறுக்கு நடுவே மேடிட்ட பகுதிக்கு ஆற்றிடைக் குறை என்று பெயர். அது தீவு போல இருக்கும்.

இலங்கையும் துருத்தியும் எனவரும் பெயரோ(டு)

அரங்கமும், ஆற்றிடைக் குறையென வறைவர்

என்று சேந்தன் திவாகர நிகண்டும்,

“இலங்கை அரங்கம் துருத்தி, ஆற்றிடைக் குறை

என்று பிங்கல நிகண்டும் தெரிவிக்கின்றன.

இலங்கை என்ற சொல் மட்டுமல்ல, அரங்கம் என்ற சொல்லும் ஆற்றிடைக் குறை என்பதைக் குறிக்கும் என்று கூறப்பட்டுள்ளதால், காவிரி ஆற்றின் நடுவே மேட்டில் பெரிய கோயில் அமைந்துள்ள இடத்தைத் ‘திருவரங்கம்’ என்கிறோம் என்பது நிகண்டுகள் காட்டும் கருத்து. எந்த ஆற்றுக்கு நடுவிலும் மேடிட்டிருந்தாலும், அல்லது நிலம் இருந்தாலும் அது இலங்கை எனப்படும் என்பதும் நிகண்டுகள் மூலம் நமக்குத் தெரிகிறது.

‘லங்கேஸ்வரி’ மஹாநதியின் நடுவில் ஒரு மலை மீது இருக்கவே அந்தப் பெயரைப் பெற்றிருக்கிறது. அங்குள்ள சோன்பூருக்கு பஸ்சிம இலங்கை என்னும் பெயர் இருந்தது என்றால், மேற்கு இலங்கை என்று அர்த்தம். இலங்கை மேற்கில் இருந்ததாக இராமாயணம் சொல்லவில்லை. ‘தென்னிலங்கை’ என்றுதான் ஆழ்வார்களும் இருபத்தைந்து பாசுரங்களில் சொல்லியிருக்க, மேற்கிலங்கை இராவணனது இலங்கையாக இருக்க முடியாது.

அதைப் போலவே, இந்திராணா, அமர்கண்டக் போன்ற மற்ற இடங்கள் எல்லாமே ‘இலங்கை’ என்னும் ஆற்றிடைக் குறை அமைப்புக்குள் வந்துவிடுகின்றன. நர்மதையில் பல இலங்கைகள் இருப்பதாகச் சொல்லப்படும் அனைத்துமே ஆற்றின் நடுவே இருப்பவைதான். கோதாவரி ஆற்றின் மத்தியிலும், இலங்கைகள் உள்ளன. இந்தப் பெயரின் ஆரம்பத்தைத் தேடினால் இது, பழங்குடியின மக்களான ‘முண்டர்’ (Munda) என்பவர்கள் மொழியில் இருப்பது தெரிகிறது. ஆற்றிடைக் குறை, தீவு, ஏரிக்கு நடுவில் உள்ள அமைப்பு, சமவெளிப் பகுதியில் தனியாக நிற்கும் ஒரு மலை ஆகியவற்றை இலங்கை என்று அந்த மக்கள் அழைக்கிறார்கள். எனவே பாரதம் முழுவதும், ஆங்காங்கே இலங்கைகள் இருந்திருக்கின்றன.

நூறு என்னும் எண்ணின் பொதுத் தன்மை

அடுத்ததாக சம்பாதி சொன்ன நூறு யோஜனை தூரம், சம்பாதியின் வாக்கிலேயே மீண்டும் வருகிறது. ஆனால் இப்பொழுது சமுத்திரத்தில் நூறு யோஜனை தூரம் செல்லவேண்டும் என்று சொல்கிறான் (வா;இரா: 4-58-24). விந்திய மலையிலிருந்து நூறு யோஜனையில் இலங்கை இருக்கிறது என்ற சொன்ன ஓரிரு வரிகளுக்குப் பிறகு,  சமுத்திரத்தைக் கடக்க நூறு யோஜனை செல்ல வேண்டும் என்கிறான். ஒரே பேச்சிலேயே, இரண்டுவிதமாக நூறு யோஜனை என்பதை ஸம்பாதி சொல்வதன் மூலம், அது  பொதுப்படையாக சொல்லப்படும் எண் என்று தெரிகிறது.  

நூறு யோஜனைப் பேச்சு அனுமன் சமுத்திரத்தைத் தாண்டும்போதும் வருகிறது. இங்கு சமுத்ரராஜன், மைனாக மலையிடம் அனுமன் இளைப்பாற இடம் கொடுக்கச் சொல்கிறான். அப்பொழுது அவன் சொல்வது – நூறு யோஜனை கடந்தபின் அனுமன் இளைப்பாற நீ இடம் கொடு; அதன் பிறகு அவன் மீதி தூரத்தைக் கடக்கட்டும் - என்று நூறு யோஜனை முடிந்த பிறகு என்று இளைப்பாறட்டும் என்கிறான். ஆனால் தாண்ட வேண்டிய தூரம் நூறு யோஜனை மட்டுமே என்று சம்பாதியும் சொல்லியிருக்கிறான். கடலைத் தாண்டியபிறகு நூறு யோஜனை தூரம் அனுமன் தாண்டினான் என்று வால்மீகியும் சொல்கிறார் (வா.இரா: 5-1-200).

இதற்கிடையில் அனுமனை இடைமறித்த சுரஸா என்னும் நாக மாதாவின் வாயில் புகுந்து புறப்பட, அனுமன் 90 யோஜனை அளவு தன் உடலைப் பெரிதாக்கிக் கொண்டான் என்றும் சொல்லப்படவே (வா.இரா: 5-1-166) அப்படியே, கடலைத் தாண்டி இருக்கலாமே என்று கேட்கத் தோன்றுகிறது அல்லவா? எனவே நூறு என்ற அளவு, பெரிய அளவைக் குறிக்கப் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்று தெரிகிறது. சீதையும், அனுமனைப் பார்க்கும்போது, ஒருவன் பிழைத்து மாத்திரம் இருந்தால், நூறு வருஷங்களுக்குப் பிறகாவது ஸந்தோஷத்தை அனுபவிக்காமல் இருக்க மாட்டான் என்று நூறு என்பதை ஒரு பெரிய அளவீடாகக் கூறுகிறாள் (வா.இரா: 5-34-6). எனவே நூறு யோஜனை என்பதைக் கொண்டு இலங்கை இருக்கும் பகுதியை நிர்ணயிக்கக்கூடாது.

வான சாஸ்திரத்தில் இலங்கை

நாம் ஏற்கெனெவே இலங்கை என்பதன் பொருள் என்ன என்று குறிப்பிட்டுள்ளதன் அடிப்படையில், பூமத்திய ரேகைப் பகுதியில் ஒரு அமைப்பு இருந்திருக்க வேண்டும். உலக வரைபடத்தில், குருக்ஷேத்திரத்தையும், உஜ்ஜயினியையும் இணத்து ஒரு நேர்க்கோடு வரைந்தால், அது பூமத்திய ரேகையைத் தொடும் இடத்தில் மாலதீவுக் கூட்டம் இருக்கிறது. பூமியின் அச்சு செல்லுமிடத்தில் இன்று நிலம் இல்லை. கடல் நீர்தான் இருக்கிறது. ஆனால் அந்த இடத்தைச் சுற்றி மாலத்தீவின் தீவுப் பகுதிகள் இருக்கின்றன.


இராஜராஜ சோழன் கல்வெட்டில் காணப்படும் பழந்தீவு பன்னீராயிரம் என்பது மாலத்தீவாகத்தான் இருக்க வேண்டும். அவன் காலத்திலும், அதற்கு முன்பும் பல ஆயிரக்கணக்கான தீவுகள் இருந்திருக்க வேண்டும். அவற்றுள் ஒன்று பூமியின் அச்சு செல்லும் இலங்கையாக இருந்திருக்க வேண்டும். இன்று பன்னிரெண்டாயிரம் தீவுகள் இல்லை. ஆயிரத்து இருநூறுக்கும்  குறைவான தீவுகளே உள்ளன.

மாலத்தீவு, அதன் தலைநகரம் மாலே போன்ற பெயர்களைப் பார்க்கும்போது, அந்த இடங்கள், இராவணனது தாய்வழிப் பாட்டனான சுமாலியின் தம்பி மாலியின் பெயரை ஒத்திருக்கிறது. சுமாலி என்ற பெயருக்கு ஒத்தாற்போல சோமாலியா என்னும் நாடு கிழக்கு ஆப்பிரிக்காவில், மாலத்தீவுக்கு மேற்கே சிறிது தொலைவில் இருக்கிறது. அந்தப் பகுதிகளிலிருந்து, ஸ்ரீலங்கா பகுதியில் இருந்த இலங்கையில் வாழ்ந்த புலஸ்தியருக்குத் தங்கள் மகளான கைகசியை மணம் செய்து வைத்தனர் என்பது பொருத்தமாகவே இருக்கிறது. எனவே இராவணன் கிருஹத்தை ஸ்ரீலங்காவில் தேடுவதே பொருத்தமானது.

ஸ்ரீலங்காவில் தென்னிலங்கை

இராவணன் ஆண்ட இலங்கை என்பது ஸ்ரீலங்காவில்தான் உள்ளது என்று சொல்லும் வண்ணம் ‘தென்னிலங்கை’ என்று ஆழ்வார்கள் 25 பாசுரங்களில் குறித்துள்ளனர். குறிப்பாக இரண்டு பாசுரங்களில், தெற்கேதான் இலங்கை உள்ளது என்று அருளியுள்ளார்கள்.

“குடதிசை முடியை வைத்துக்

குண திசை பாதம் நீட்டி,

வடதிசை பின்பு காட்டித்

தென் திசை யிலங்கை நோக்கி”

என்று திருவங்கத்துக்குத் தெற்கில் இலங்கை இருப்பதைத் தொண்டரடிப்பொடியாழ்வார் திருமாலையில் (19) சொல்வதன் மூலமும்,

தென்பால் இலங்கை வெங்களம் செய்த நம் விண்ணோர் பிரானார்”

என்று தென்புறம் இருக்கும் இலங்கை என்று நம்மாழ்வார் திருவிருத்தத்தில் (77) அருளியதன் மூலமும், இராவணனது இலங்கை, தென் திசையில்தான் இருந்தது என்பது தெளிவாகிறது. அதை பாரதத்திற்குள் தேடி ஆராய்ச்சியாளர்கள் ஏமாறவேண்டாம்.

மொத்தம் 134 இடங்களில் ஆழ்வார்கள் இலங்கையைக் குறிப்பிட்டுள்ளார்கள். அவற்றுள் 22 பாசுரங்களில் கடல் நீரால் சூழப்பட்ட இலங்கை என்று சொல்லியிருக்கவே, பாரதத்தில் இருக்கும் இலங்கை என்னும் இடங்களுக்கும் இராவணனது இலங்கைக்கும் சம்பந்தமில்லை என்பது தெளிவாகிறது. மேலும், இராமாயணத்திலேயே, கடலுக்கு அப்பால், எதிர்க் கரையில்தான் இலங்கை இருக்கிறது என்றும் பல இடங்களில் சொல்லப்பட்டுள்ளது. கடலுக்கு நடுவில் இலங்கை இருக்கிறது என்று இராவணனே சீதையிடம் சொல்கிறான் (வா-இரா: 3-47-29).

அது ஸ்ரீலங்கைதானா என்று கேட்பவர்கள் இருக்கிறார்கள். ஸ்ரீலங்காவை சிலோன் என்று சொல்லவில்லையா? சிம்ஹளம் என்றும், இலங்கை என்றும் சொல்கிறார்களே, அத்துடன் ‘தாம்பபண்ணி’ என்றும் பண்டைக் காலத்தில் சொல்லியிருக்கவே ஸ்ரீலங்காதான், இராவணனது இலங்கை என்று எதன் அடிப்படையில் சொல்ல முடியும் என்றும் கேட்கிறார்கள். அவற்றுக்கும் விடை காண்போம்.

(to be continued) 

திங்கள், 25 டிசம்பர், 2023

தொங்கும் மதிள்களை அழித்த இராமன்

கீதாசரியன் மாதாந்திர புத்தகத்தில் வெளியான எனது கட்டுரை 

இராமன் பரம்பரையில் வந்தவர்கள் சோழர்கள் என்பதற்கு இலக்கியச் சான்றுகளும் உள்ளன. தமிழ்ச் சங்க நூல்களிலேயே இராமனைச் சோழர் குல முன்னோனாகச் சொல்லும் பாடல்கள் உள்ளன. ஆனால் அவை வெளிப்படையாக இராமன் என்ற பெயரைச் சொல்லாமல், இராமன் செய்த ஒரு செயலைச் சொல்லியே அடையாளப்படுத்துகின்றன. அந்தச் செயல், “தூங்கெயில் எறிதல்”! எயில் என்றால் மதிள் சுவர். தூங்கெயில் என்றால் தொங்கிக் கொண்டிருக்கும் மதிள் என்று பொருள். தொங்கிக் கொண்டிருக்கும் மதிள்களை உடைய இலங்கையை அழித்தான் என்பது பொருள். இலங்கையை அழித்தவன் ஒருவன் தான். அவன் இராமன்!

அது என்ன தொங்கும் மதிள்? மதிள் சுவர்கள் தொங்கிக் கொண்டிருப்பது எவ்வாறு என்ற கேள்வி எழுகிறது. வானிலிருந்து தொங்கிக் கொண்டிருப்பது போன்ற உருவில் நகரங்கள் சொல்லப்பட்டுள்ளன. இதுவரை பாரத நாட்டில் வழங்கி வந்துள்ள கதைகளில், வானின் கண் இருந்ததாகச் சொல்லப்படும் நகரங்கள்  இரண்டு.

ஒன்று, தேவர்களது தலைநகரான அமராவதி என்னும் நகரம். இது வானில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்த நகரத்தைக் காத்தவன் முசுகுந்தன் என்பவன், அவன் சோழர்களது பரம்பரையில் வந்தவன் என்று சோழர் வம்சாவளி காட்டுகிறது. மாந்தாதா வரையிலும், இராமனது இக்ஷ்வாகு பரம்பரையும், சோழர் பரம்பரையும் ஒரேவிதமான பெயர்களைத்தான் கொண்டிருக்கின்றன. மாந்தாதாவுக்குப் பிறகு முசுகுந்தன் பெயர் சோழர் பரம்பரையில் வருகிறது.

ஒருமுறை இந்திரனுக்கு உதவ அவன் நகரமான அமராவதியைப் பாதுகாத்ததாகவும், அதற்குப் பிரதிபலனாக நாளங்காடி பூதத்தை இந்திரன் கொடுத்ததாகவும், அதை அவன் பூம்புகார் நகரில் நிர்மாணித்ததாகவும் சிலப்பதிகாரம் கூறுகிறது. தஞ்சாவூர் பகுதியிலுள்ள சப்த விடங்க ஸ்தலங்களும் முசுகுந்தனால் நிர்மாணிக்கப்பட்டவையே என்று ஸ்தல புராணங்கள் கூறுகின்றன. இங்கு நமக்குத் தேவையான விவரம், அமராவதி வானில் இருந்தது என்று சொல்லப்பட்டதே.

அதைப் போலவே வானில் இருந்ததாகச் சொல்லப்பட்ட மற்றொரு நகரம், ராவணன் ஆண்ட இலங்கை நகரம். அது மலை மீது அமைந்திருந்தது என்று இராவணன் சீதையிடம் கூறுவான் (வா- இராமா: 3-47-29). மலை முகட்டில், மேகங்களினூடே அந்த நகரம் ஒரு ‘தொங்கும் நகரம்’ போல அமைந்திருந்தது. இலங்கை மதிள்களால் சூழப்பட்ட நகரம். மேகங்கள் மலையைச் சூழ்ந்து கொள்ள, கீழேயிருந்து பார்ப்பவர்களுக்கு, மலை உச்சியில் அந்த மதிள்கள் மட்டுமே தென்படும். அவை வானத்தில் தொங்கிக் கொண்டிருப்பது போல இருந்தன என்பதால், தொங்கும் மதிள் எனப் பொருள்படும் ‘தூங்கெயில்’ என்று அழைக்கப்பட்டிருக்கிறது. இதனால் இலங்கை நகரமே வானில் இருக்கும் நகரம் போல கருதப்பட்டிருக்கிறது.

இராவணன் தன் நகரத்தை இந்திரனது அமராவதி நகரம் போல இருக்கிறது என்றும் சொல்கிறான் (வா- இராமா: 3-48-10) இதன் மூலம், அமராவதியும், மலை மேல் அமைந்த ஒரு நகரமாக இருந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. தேவர்கள் என்று அழைக்கப்பட்டவர்கள் அங்கு வசித்திருக்கலாம். இந்திர த்வீபம் என்று தாய்லாந்து, பர்மா, வியட்நாம் பகுதிகளுக்குப் பெயரிடப்பட்டிருந்தது என்பதை நாம் இங்கு பொருத்திப் பார்க்க வேண்டும். இந்திரனைச் சேர்ந்தவர்களும் மனிதர்கள் தான் என்று சொல்லும் வண்ணம், இந்திரனது தேரோட்டியான மாதலி இராமனுக்கும் தேரோட்டினான். இந்திரனையே வென்றதால், இராவணனது மகன் இந்திரஜித் என்ற பட்டம் பெற்றான். இங்கு சொல்லப்படும் இந்திரன் நகமும், சதையுமாக மனித உருவில் வாழ்ந்தவனாகத்தான் இருக்க வேண்டும். இராமனது காலக்கட்டத்தில் அமராவதியும், இலங்கையும் மலை மேல் அமைக்கப்பட்ட நகரங்களாகவும், அழகிலும் அமைப்பிலும் ஒன்றை ஒன்று விஞ்சுவதாகவும் இருந்திருக்கின்றன.

இலக்கியத்தில் ‘தூங்கெயில் எறிந்த’ குறிப்புகள்

பொதுவாகவே சங்ககால இலக்கியங்களில், மன்னர் பெயரைக் குறிப்பிடாமல் அவர் செய்த செயலை மட்டுமே குறிப்பிடுவது வழக்கம். சோழர்களைப் பொறுத்தமட்டில் இரண்டு மன்னர்களது செயலைப் பெருமையாகக் குறிப்பிடுவது வழக்கமாக இருந்திருக்கிறது. புறாவுக்காகத் தன் தசையைக் கொடுத்த செயலையும், தூங்கெயில் எறிந்ததையும் சொல்லிப் புகழ்வார்கள். இதில் முதலாமவர் சிபி என்பது எளிதாகப் புரிந்து கொள்ளக் கூடியது. ஆனால் தூங்கெயில் எறிந்தவன் யார் என்பதை எந்தத் தமிழார்வலரும், ஆய்வாளரும் கண்டு கொள்ளவில்லை. எனவே தூங்கெயில் குறிப்புகளையும் கொடுத்து, தூங்கெயில் அழித்தவன் இராமன் தான் என்பதையும் நாம் இப்பொழுது நிரூபணம் செய்வோம்.

தூங்கெயில் ஏறிந்த விவரம் புறநானூறு 39 ஆம் பாடலில் காணப்படுகிறது. சோழ மன்னன் குளமுற்றத்துச் துஞ்சிய கிள்ளி வளவனை, மாறோக்கத்து நப்பசலையார் வாழ்த்துகிறார். அந்த மன்னன் உயிர்களிடத்தில் இரக்கம் கொண்டவன். தன்னை மற்றவர்கள் புகழ வேண்டுமென்று அவன் இரக்கத்தைக் காட்டுபவனில்லை. அவன் முன்னோனான புறாவுக்காத்  தன் உடம்பை அரிந்து கொடுத்தவன் மரபில் வந்துள்ளவன் ஆதலால், அவனுக்கு இரக்கம் காட்டுதல் என்பது இயல்பாக உள்ளது.

இந்த மன்னன் பகைவரை வெல்பவன். அது புகழுக்காகச் செய்வது அல்ல. இவனது முன்னோன் ஒருவன், தேவர்கள் நெருங்குவதற்குப் பயப்படும் ஆகாயத்திலிருந்து  தொங்கும் தூங்கெயிலை வென்றவன். அதனால் அப்படிப் பகைவரை வெல்லுதல் என்பது இவனுக்கு இயல்பாக உள்ளது என்கிறார் புலவர்.

“தூங்கெயில் எறிந்த நின் ஊங்கணோர்நினைப்பின்

அடுதல் நின்புகழும் அன்றே”

 

நல்லூர் நத்தத்தனார் என்னும் புலவர், சிறுபாணாற்றுப்படை) என்னும் சங்க நூலில்,

தூங்கு எயில் எறிந்த தொடி விளங்கு தடக்கை,

நாடா நல் இசை, நல் தேர்ச் செம்பியன்”  (வரிகள் 81-82)

என்று தூங்கெயில் எறிந்தவனையும், செம்பியன் என்னும் பெயரளித்த சிபியையும் பற்றிச் சொல்கிறார்.

 

தூங்கெயில் அழித்த பாங்கினை முன்றுறை அரையனார் தான் இயற்றிய  பழமொழி நானூறிலும் வைத்துள்ளார்.

வீங்குதோட் செம்பியன் சீற்றம் விறல்விசும்பில்

தூங்கும் எயிலும் தொலைத்தலால் - ஆங்கு

முடியும் திறத்தால் முயல்கதாம் கூரம்

படியிழுப்பின் இல்லை யரண். (49)

நன்கு புடைத்த தோள்களை உடைய செம்பியன் ஆகாயத்திலிருந்து தொங்கிக் கொண்டிருந்த மதிள்களை அழித்ததால், அம்பினை வலிவாகத் தொடுப்பின் கவசமும் பிளந்துபோதல் போல, முடிந்த அளவு முயற்சிசெய்தால் பயன் அடையலாம் என்பதே இந்தச் செய்யுளின் பொருள்.

செயற்கரிய செயலாகத் தூங்கெயில் எறிந்தவிதம் இருக்கவேதான் கடின முயற்சிக்கு எடுத்துக்காட்டாக அதைச் சொல்லியுள்ளார்.

 

மணிமேகலையிலும், இந்திரவிழாவெடுத்த சோழ அரசனைப் பற்றிச் சொல்கையில் “தூங்கெயில் எறிந்த தொடித் தோள் செம்பியன்” என்று சீத்தலைச் சாத்தனார் எழுதியுள்ளார்.

பதினோராம் நூற்றாண்டில் எழுதப்பட்ட கலிங்கத்துப் பரணியில், ஆசிரியர் ஜெயங்கொண்டார், சோழ பரம்பரையைச் சொல்லுமிடத்தே, “தூங்கெயில் எறிந்தவனைப்” பற்றியும் குறிப்பிடுகிறார்.

 

தூங்கெயில் புதிர் நீக்கும் சிலப்பதிகாரமும், ஆழ்வாரும்

தூங்கெயில் புதிரை அவிழ்க்க சிலப்பதிகாரத்தில் இரண்டு குறிப்புகளைக் காண்கிறோம். முதலாவது, கங்கைக் கரையினில் சேர அரசன் செங்குட்டுவன் இருந்த பொழுது சொல்லப்படுகிறது. கண்ணகிக்குச் சிலை எழுப்ப, இமயத்திலிருந்து கல்லைக் கொண்டுவர சேர அரசன் செங்குட்டுவன் நாட்டை விட்டுக் கிளம்பி முப்பது இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன. திரும்பும் வழியில் அவன் கங்கை ஆற்றங்கரையில் தங்கியிருந்தான். அப்பொழுது சேர நாட்டைச் சேர்ந்த மாடலன் என்னும் பார்ப்பனன் கங்கைக்கு தீர்த்த யாத்திரையாக வந்தான். அவனிடம் தமிழ் நாட்டு நிலவரங்களை விசாரித்தான் மன்னன். மன்னனின் மைத்துனன்தான் சோழ நாட்டை ஆண்டு கொண்டிருந்த வளவன் கிள்ளி. அந்த மன்னனைப் பற்றிக் கூறுகையில், தூங்கெயில் மூன்றினை எறிந்தவனும், புறாவுக்காகத் தன் உடம்பைத் தராசுக் கோலில் இட்டவனும் வளர்த்த அறம் கொண்ட செங்கோல் திரிந்து  போகுமா? போகாது. சோழன் செங்கோல் எந்தக் குறைவும் இல்லாமல் இருக்கிறது என்று தூங்கெயில் கதையையும் நினைவு கூர்கிறான் மாடலன்

வெயில் விளங்கு மணிப்பூண் விண்ணவர் வியப்ப

எயில் மூன்றெறிந்த இகல் வேல் கொற்றமும்

குறுநடைப் புறவின் நெடுந்துயர் தீர

எறிதரு பருந்தின் இடும்பை நீங்க

அரிந்து உடம்பிட்டோன் அறந்தரு கோலும்

(சில 27- 164 -168)

தூங்கெயில் மூன்றினை எறிந்தவன் என்று மூன்று மதிள்களைக் குறிப்பிட்டுச் சொல்கிறான் மாடலன்.  தொங்கும் மூன்று மதிள்கள் மீண்டும் சிலப்பதிகாரத்தில் சொல்லப்படுகின்றன. அதைச் சொல்வது அம்மானை என்னும் விளையாட்டை ஆடிப் பாடும் சிறுமியர்.

 ‘அம்மனை’ என்பது விளையாடப்படும் காய். அதை ‘அம்மானை’ என்று சொல்லி தூக்கிப் போட்டு விளையாடுவார்கள். அப்படிப் போடும் போது, விடுகதை போல ஒரு கேள்வி கேட்க வேண்டும். அம்மனைக் காயைப் பிடிப்பவர் அதற்குப் பதிலாக ஒரு கேள்வியைக் கேட்டு, காயைத் தூக்கிப் போடுவார். அந்தப் புதிர்கள் சுவாரஸ்யமாகவும், சிறுமியருக்கு இருக்கின்ற அறிவு விலாசத்தைக் காட்டுபவதாவும் இருக்கும். உதாரணமாக இங்கு ஒரு அம்மானைப் பாடல்:

பொன்னேறு மார்பர் புகழ்சேர் திருவரங்கர்

எந்நேரமும் பாம்பிலே கிடப்பார் அம்மானை

எந்நேரமும் பாம்பிலே கிடப்பார் ஆமாயின்

என்னே தலைக்கு விடம் ஏறாதோஅம்மானை

ஏறுமோ செங்கருடன் ஏறினால் அம்மானை

எந்நேரமும் பாம்பில் கிடப்பார் திருவரங்கர் என்று ஒரு பெண் அம்மனைக் காயைத் தூக்கிப் போடுகிறாள்.

பாம்பில் கிடந்தால் விஷம் தலைக்கேறாதோ என்று இரண்டாமவள் கூறுகிறாள். கருடன் இருக்க எப்படி விஷம் ஏறும் என்று மூன்றாமவள் கேட்கிறாள்.

சுவையாகச் செல்லும் இந்தப் புதிர் கேள்விகளைப் போல சிலப்பதிகாரத்தில் சோழ மன்னர்களை வைத்து அம்மானைக் கேள்வி கேட்பதாக வருகிறது. அதில் முதல்  கேள்வி, இந்திரனுடைய உயர்ந்த அரண்களைக் காத்த சோழன் யார் அம்மானை?

அதற்குப் பதில் நமக்கும் இப்பொழுது தெரியும். அது முசுகுந்தன் என்னும் முன்னாள் அரசன். ஆனால் அந்த அம்மானைப் பாடலில் வரும் பதில் இப்படி இருக்கிறது: வானின் கண் அசைகின்ற மூன்று மதிள்களை அழித்தவனே அவன்.

“உயர் விசும்பில் தூங்கெயில் மூன்றெறிந்தவன் காண் அம்மானை” (சில: 29-16-4)

இந்திரன் மதிளைக் காத்தவன் முசுகுந்தன். அவன் அழிக்கவில்லை. ஆகவே இந்தப் பதில் அவனைப் பற்றியது அல்ல. இது வேறொரு அரசன் மதிள்களை அழித்த கதையைச் சொல்கிறது. அதிலும் அவை மூன்று மதிள்கள்.

மூன்று மதிள்கள் கொண்ட நகரமா?

அப்படி ஒரு நகரம் இருந்ததா என்றால், அங்குதான் வலிய செயல்களைச் செய்த கலியன் என்னும் திருமங்கை மன்னன் அற்புதமான குறிப்பு கொடுத்திருக்கிறார்.

மும்மதிள் இலங்கை இருகால் வளைய” என்று திருவெழுகூற்றிருக்கையில் ஆணியடித்தாற் போல் சொல்லிவிட்டார்.

மும்மதிளை உடையது இலங்கை. ஆழ்வார்கள் அருளிச் செய்த பல பாடல்களிலும் மதிள் இலங்கை என்ற குறிப்பு வந்தாலும், இந்த ஒரு பாடலில் “மும்மதிள் இலங்கை” என்று குறிப்பிட்டுச் சொல்லி இராமனால் அழிக்கப்பட்ட  இலங்கைக்கு மூன்று மதிள்கள் உண்டு  என்று காட்டிவிட்டார்.

எனவே மும்மதிள் கொண்ட தூங்கெயில் எறிந்தவன் இராமன்தான்.

அவனைத்தான் சோழர்குல முன்னோனாகத் தமிழ்ச் சங்கப் பாடல்கள் சொல்லியுள்ளன. சிலப்பதிகாரம், மணிமேகலை என்னும் இரு பெருங்காப்பியங்கள் இயற்றப்பட்ட 2000 ஆண்டுகளுக்கும் முன் வரையிலும், மக்கள் இராமனது இந்த செயலை நினைவு கூர்ந்து, அம்மானைப் பாடலில் சிறுமியரும் சொல்லும் வண்ணம் சிறு வயதிலேயே சொல்லிக் கொடுத்திருக்கின்றனர்.

அதற்குப் பிறகு, சங்க காலம் மறைந்து விடவே, கொஞ்சம் கொஞ்சமாக இந்த விவரங்கள் மக்கள் மத்தியில் மறக்கப்பட்டுவிட்டன போலும். ஆயினும், இந்த விவரங்களை, செப்பேடுகளிலும், கல்வெட்டிலும், சோழ மன்னர்கள் வடிக்கலாயினர். பதினோராம் நூற்றாண்டு முதல், இலக்கியங்களிலும் எழுத ஆரம்பித்தனர்.

கலிங்கத்துப் பரணியில் தூங்கெயில் எறிந்தவனைப் பற்றிச் சொன்னதையடுத்து, முதலாம் குலோத்துங்கனது மகனான விக்ரம சோழன் காலத்தில் அவன் மீது ஒட்டக் கூத்தரால் பாடப்பட்ட “விக்ரமசோழன் உலா  என்ற நூலில்

“கூடார்தம் தூங்கும் எயில் எறிந்த சோழனும்” (வரி 17)

என்று சோழர் குல முன்னோனைச் சொல்லுகிறார்.

அவன் பேரனான இரண்டாம் இராஜராஜசோழனைப் புகழும் “இராஜராஜசோழன் உலா” என்னும் இலக்கியத்தில், தசரதனையும் சேர்த்து வம்சாவளி கொடுக்கப்பட்டிருக்கிறது. எழுதியவர் விக்ரமசோழன் உலா எழுதின  ஒட்டக்கூத்தரே.

“இந்திரனை யேறாக்கி யேறினோன் -முந்தும்

ஒரு தேரால் ஐ இரண்டு தேர் ஓட்டி உம்பர்

வரு தேரால் வான் பகையை மாய்த்தோன் - பொருது

சிலையால் வழிபடு தெண் திரையைப் பண்டு

மலையால் வழிபட வைத்தோன் - நிலையாமே

வாங்கும் திருக்கொற்ற வாள் ஒன்றின் வாய்வாய்ப்பத்

தூங்கு புரிசை துணித்தகோன்” (வரிகள் 19-25)

இதன் பொருள்: “வானுலகிலிருந்து வந்த ஒரு தேரால் பத்துத் தேரினையும் துரத்தி பகைவனைத் தொலைத்தவனும், வில்லால் வழிபட்டு வணங்கிய கடலினை முற்காலத்தில் மலைகளால் வழியுண்டாகும்படி செய்தவனும், நிலை நில்லாமல் அழியும்படி செய்யும், ஒரு சிறந்த வாளாயுதத்தால் தொங்கும் கோட்டையைத் துண்டாக்கியழித்த மன்னன்.”

ஐயிரண்டு தேர் என்பது பத்துத்தேர். சம்பரன் என்ற அசுரன் பத்துத் தேருடையவன். ஒரு தேராற் பத்துத் தேரினையும் ஓட்டிப் பகையை மாய்த்தோன் என்கிறது இப்பாடல். அவ்வாறு செய்தவன் தசரதன், பத்துத்தேர்களையும் வென்றதனால் வந்த பெயர் இது. தசம் - பத்து. ரதன் - தேரினை வென்றவன். அடுத்த வரியில், சிலையால் வழிபடு தெண்டிரை என்றது இராமன் சிலை (வில்) வளைத்து அம்பு தொடுத்துக் கடல்நீரை வற்றச் செய்தது கண்டு அஞ்சி வந்து வருணன் வணங்கியதைக் குறிப்பாலுணர்த்தியது. தெண்டிரை என்றால் கடல். இது அதற்குரிய தெய்வமாகிய வருணனைக் குறித்தது. சிலை என்றால் வில். அதன் வலிமையையுணர்த்தியது. இராமன் வில் வலிமையாற் கடல் வற்றியதுகண்டு வருணன் வழிபட்டான் என்பது குறிப்பு.

அடுத்து மலையால் வழிபட என்று சொன்னது மலைகளைக் கொண்டு போட்டதனால் வழியுண்டாக என்று அர்த்தம். இது கடலிற் கரைகட்டி இலங்கைக்கு வழியுண்டாக்கியதைச் சொல்வது. இதைச் செய்தவன்  இராமன்.

இதற்கடுத்துச் சொல்வது “தூங்கு புரிசை துணித்தகோன்” புரிசை என்றால் கோட்டை. தொங்கும் கோட்டையை உடைத்தவன். மலையதனால் அணை கட்டி மதிளிலங்கை அழித்தவனைப் பற்றியே இங்கு சொல்லியிருப்பதால், தூங்கெயில் எறிந்தவன் யார் என்ற புதிர் சந்தேகத்துக்கு இடமில்லாமல் நிரூபிக்கப்பட்டு விட்டது.

அவன் வழி வந்தவர்களே சோழர்கள் என்கையில், இராமன் யார் என்ற கேள்விக்குத் தமிழ்நாட்டில் இடமே இல்லை. நப்பின்னையை மணந்ததன் மூலம் கிருஷ்ணன் தமிழ் மக்களது மருமகன் ஆனான் என்றால், சோழர் மரபையே கொடுத்த இராமன் தமிழ் மண்ணின் மகன் என்று சொல்வதுதானே பொருத்தமாக இருக்கும்?

 

சனி, 9 டிசம்பர், 2023

இராமன் பரம்பரையில் வந்தவர்கள் சோழர்கள்

 இராம ஜன்ம பூமியில் இராமர் கோயில் வரப்போகும் இந்த வேளையில், இராமரைக் குறித்தும், தமிழர்களுக்கும், இராமருக்கும் உள்ள தொடர்பு குறித்தும் கட்டுரைகள் இட இருக்கிறேன். அனைவருடனும் பகிர்ந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். 

****

இராமன் பரம்பரையில் வந்தவர்கள் சோழர்கள்

தமிழ் நாட்டுக்கும், இராமனுக்கும் உள்ள தொடர்பு சோழர்கள் காலம் முதலே தொடங்குகிறது. சோழ மன்னர்கள் தாங்கள் மனு, அவன் மகன் இக்ஷ்வாகு முதலானோரது பரம்பரையில் வந்தவர்கள் என்று செப்பேடுகளிலும், கல்வெட்டுகளிலும் எழுதி வைத்துள்ளார்கள். சுந்தர சோழச் சக்கரவர்த்தி, தனது மந்திரியான அநிருத்த பிரம்மராயருக்கு அளித்த அன்பில் தான பத்திரத்தில், திருமாலின் கண்ணொளியிலிருந்து தோன்றியவர்கள் சோழ குடும்பத்தினர் என்று எழுதியுள்ளார்.

மன்னர்கள், தங்களை தெய்வத்துக்குச் சமமாக உயர்த்திக் காட்டுவதற்கு அவ்வாறு எழுதியிருக்கலாம் என்று இதனை எளிதாகக் கடந்து போய்விட முடியாது. சோழர்கள், தாங்கள் விஷ்ணுவைப் போன்றவர்கள் என்று சொல்லிக் கொள்ளவில்லை. தாங்கள் விஷ்ணுவின் அவதாரமான இராமனின் பரம்பரையில் வந்தவர்கள் என்றே சொல்லிக் கொண்டார்கள். விஷ்ணு பரம்பரைத் தொடர்பை, மற்ற இரு தமிழ் அரசர்களான சேரரும், பாண்டியர்களும் சொல்லிக் கொள்ளவில்லை. ஆனால் அவர்களும், தங்களுக்கென சில தெய்வத் தொடர்புகளைச் சொல்லிக் கொண்டார்கள்.

சேரர்கள், இந்திரனிலிருந்து வந்தவர்கள் என்பதைத் தெரிவிக்கும் வண்ணம் ‘வானவர்’ என்னும் பட்டப் பெயரால் அழைக்கப்பட்டனர் என்று மு. இராகவையங்கார் அவர்கள் பண்டைய நூல்களும், நிகண்டுகளும் குறிக்கின்றன என்கிறார். சோழ, பாண்டியர்களைப் போலல்லாமல், ஆரம்பம் எங்கே, எப்பொழுது என்று தெரியாத புராதானத்தைக் கொண்டுள்ளதால், சேரர்களை முன் வைத்து, சேர, சோழ, பாண்டியர் என்று சொல்லும் வழக்கமும் வந்துள்ளது என்கிறார் அவர்.

பாண்டியர்கள், தாங்கள் தடாதகைப் பிராட்டி எனப்படும் மீனாக்ஷி அம்மையின் வழி வந்தவர்கள் என்றும், அதனால், தங்களைக் ‘கௌரியர்’ என்று அழைத்துக் கொண்டும், சிவ பெருமானின் அருளைப் பெற்றவர்கள் என்றும் சொல்லிக் கொண்டனர். எனினும், நாட்டைக் காக்கும் மன்னர் என்னும் போது, காக்கும் கடவுளான திருமால் அம்சமாகத் தங்களைச் சொல்லிக் கொண்ட பாண்டிய மன்னர் ஒருவருண்டு. அவரே, பெரியாழ்வார் பாடல்களில் காணப்படும் கோன் நெடுமாறன். இமய மலையின் பருப்பத சிகரத்தில் (அமர்நாத் சிகரம்) கயல் பொறித்ததும் அந்த மன்னன்தான். அந்த மன்னனது விஷ்ணு பக்தியைப் பற்றி வேறொரு கட்டுரையில் பார்ப்போம். இங்கு சொல்ல வருவது, பாண்டியர்களது வம்சாவளி, மீனாக்ஷி தேவியிடமிருந்துதான் ஆரம்பிக்கிறது என்பதே.

சேர, சோழ, பாண்டியர்களில் சோழர்கள் மட்டுமே தங்களை இக்ஷ்வாகு பரம்பரையில் வந்தவர்கள் என்று சொல்லிக் கொண்டனர். இதுவரை நமக்குக் கிடைத்துள்ள செப்பேடு, கல்வெட்டு போன்றவற்றுள் நான்கு சாசனங்கள் சோழ வம்ச பரம்பரையைப் பட்டியலிடுகின்றன. அவை, சுந்தரசோழன் அளித்த அன்பில் செப்பேடுகள், முதலாம் இராஜேந்திர சோழன் பெயரில் உள்ள லேடன் செப்பேடுகள், முதலாம் இராஜேந்திரன் அளித்த திருவாலங்காடு செப்பேடுகள் மற்றும் வீரராஜேந்திர சோழனது கன்யாகுமரி கல்வெட்டு.

சோழ பரம்பரையில் பரதனும், சிபியும், இராமனும்

இவை கொடுக்கும் வம்சாவளியின் ஆரம்ப கால அரசர்கள், வால்மீகி இராமாயணத்தில், இராமரது திருமணத்தின் போது வசிஷ்டரால் சொல்லப்படும் இராம வம்சாவளியை ஒத்திருக்கிறது. மாந்தாதா வரை ஒரே வம்சாவளிதான். மாந்தாதாவுக்குப் பிறகு, இராஜேந்திரன் செப்பேடுகளில் முசுகுந்தன் வருகிறான். அங்கிருந்து தொடரும் பெயர்கள் சிபிச் கக்கரவர்த்தியில் முடிகிறது. சிபிக்குப் பிறகு சோழ வர்மன் வருகிறான். இராஜேந்திரன் செப்பேட்டில், சிபிக்குப் பிறகு, மருத்தன், துஷ்யந்தன், அவனுக்கும், சகுந்தலைக்கும் பிறந்த பரதன், அவனது மகனாக சோழ வர்மன் குறிக்கப்பட்டுள்ளான்.

திருவாலங்காடு செப்பேடுகள்

இராஜேந்திரனது மகனான வீரராஜேந்திரன் கன்யாகுமரி அம்மனது கோயில் தூண்களில் செதுக்கியுள்ள சாசனத்தில்,  பிரம்மா, மரீசி, கஸ்யபர், வைவஸ்வதர், மனு, இக்ஷ்வாகு என்று ஆரம்பித்து, ஹரிசந்திரன், சகரன், பாகீரதன் என்று தொடர்ந்து, இராமன் வரை பட்டியல் நீள்கிறது. ராமனை நான்கு பாடல்களில் புகழ்ந்து, அதன்பின், அப்படிப்பட்ட ராமனது குடும்பத்தில் சோழன் என்னும் பெயர் கொண்டவன் பிறந்தான். அவனே சோழ ராஜ்ஜியத்தை நிறுவினான் என்றும் எழுதப்பட்டுள்ளது. இந்தக் கல்வெட்டில் சிபியின் பெயர் சொல்லப்படவில்லை. இந்த ஒரு கல்வெட்டில்தான் நேரிடையாக இராமனது சம்பந்தமும் சொல்லப்பட்டுள்ளது.

சம்ஸ்க்ருதத்தில் வம்சாவளிப் பெயர்கள்

இந்த நான்கு சாசனக்களில் காணப்படும் வம்சாவளி சம்ஸ்க்ருதத்தில் எழுதப்பட்டுள்ளன. நான்குமே, அடுத்தடுத்த நான்கு தலைமுறைகளைச் சேர்ந்த மன்னர்களது ஆணையால் 10 மற்றும் 11-ஆம் நூற்றாண்டுகளில் எழுதப்பட்டவை. இந்த காரணங்களால் இவை உண்மையாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை என்ற மறுப்பும் எழ வாய்ப்பிருக்கிறது. அத்துடன், சிபிக்கும், இராமனுக்கும் என்ன சம்பந்தம்; இந்த இருவரிடமிருந்தும் சோழ பரம்பரை வந்துள்ளது என்று எதைக் கொண்டு சொன்னார்கள் என்ற கேள்வியும் எழுகிறது.

இவற்றுக்கு பதில் தேடுகையில், அரசர்களது ஒப்புதல் இல்லாமல் இந்த வம்சாவளிகளை யாரும் எழுதியிருக்க முடியாது என்பதை நாம் ஏற்றுக் கொள்ளவேண்டும். அதே நேரம், அரசர்களும், பொய்யான பரம்பரையை எழுதிக் கொண்டிருக்க முடியாது. அதிலும், உலகம் புகழும் சிவாலயத்தைத் தஞ்சையில் எழுப்பிய முதலாம் இராஜராஜன் போன்ற அரசர்கள் இக்ஷ்வாகு வம்சத் தொடர்பு இல்லாமல், அந்த வம்சத்திலிருந்துதான் தான்  தோன்றியதாக ஒரு பொய்யுரையைப் பரப்பியிருக்க முடியாது.

சம்ஸ்க்ருதத்தில் எழுதப்பட்டிருப்பதாலேயே இந்த வம்சாவளியை யாரோ புகுத்தியிருக்கிறார்கள் என்று சொல்வதும் ஏற்புடையது அல்ல. சோழர்கள் மட்டுமல்ல, பாண்டியர்களும், சம்ஸ்க்ருதம் மற்றும் தமிழ் என்று இரு மொழிகளிலுமே சாசனங்களை அளித்துள்ளனர். குறிப்பாக வம்சாவளியைச் சொல்லுமிடத்தில் சம்ஸ்க்ருத மொழியைப் பயன்படுத்தி இருப்பதை பாண்டியர்களது சின்னமனூர், வேள்விக்குடி செப்பேடுகள் போன்ற பல சாசனங்களில் பார்க்கிறோம். (தானப் பகுதி மட்டுமே தமிழில் இருக்கும்)  சம்ஸ்க்ருதம் பாரத தேசம் முழுவதும் பரவலாக அறியப்பட்டிருந்ததால், அந்த மொழியில் எழுதப்படும் வம்சாவளியை நாடு முழுவதுமுள்ள மக்கள் அறிந்து கொள்ள உதவும் என்பதே இதற்குக் காரணமாக இருக்க முடியும்.

மேலும், சம்ஸ்க்ருதம் என்பது, வடசொல் என்னும் பெயரில் தமிழின் ஒரு அங்கமாக உள்ளது என்று தொல்காப்பியம் கூறுவதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும் (சொல்லதிகாரம், சூத்ரம்: 401, 402). சம்ஸ்க்ருதமும், தமிழும் ஒன்றாக உருவாக்கப்பட்டவை என்பதே தமிழ்ச் சங்கம் மூலம் பாண்டியர்கள் தமிழ் வளர்த்த பாங்கினைக் கூறும் திருவிளயாடல் புராணம் தரும் செய்தி. அதுவே வைணவம் வலியுறுத்தும் கருத்தும் ஆகும். வடவேங்கடம் முதல் தென் குமரி வரை என்று மங்கல திசையான வடக்கில் ஆரம்பித்து, பிறகு தெற்குத் திசையைத் தொல்காப்பியம் சொன்னதற்கு ஒப்ப, தமிழ் அரசர்களும், வடசொல்லில் தங்கள் குலப் பெருமையைப் பகர்ந்துவிட்டு, பிறகு தென் சொல்லாம் தமிழ்ச் சொல்லில் உலகியல் விவகாரங்களை எழுதியுள்ளார்கள். 

சம்ஸ்க்ருதப் புலமை உள்ளவர்கள்தான் அந்தப் பகுதியை எழுதியுள்ளார்கள் என்பதை, எழுதியவர் தன்னைப் பற்றி அந்தந்த சாசனங்களிலேயே குறிப்பிட்டு இருப்பதிலிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் அவர்கள் அதைத் தான்தோன்றித்தனமாக எழுதியிருக்க முடியாது. அரசனது ஒப்புதலோடும், அரசனது வழிகாட்டுதலோடும்தான் எழுதியிருக்க முடியும். அந்த அரசர்களும் வழிவழியாகச் சொல்லப்பட்ட வம்ச பரம்பரைக் கருத்துக்களது அடிப்படையில்தான் அவற்றை ஏற்றுக் கொண்டிருக்க முடியும். இல்லையென்றால், தந்தையான முதலாம் இராஜராஜன், சிபிச் சக்கரவர்த்தியிலிருந்து வந்தவன் முதல் சோழன் என்று சொல்ல, தனயனான முதலாம் இராஜேந்திரன், துஷ்யந்தனது மகனான பரதனுக்குப் பிறந்தவன் தான் முதல் சோழன் என்று எப்படிச் சொல்ல முடியும்? அவனது மகனான வீரராஜேந்திரன், அந்த முதல் சோழன் இராமனது குடும்பத்தில் வந்தவன் என்று எவ்வாறு சொல்லியிருக்க முடியும்.

முதலாம் இராஜேந்திர சோழன்.

இதன் மூலம் தெரிவது என்னவென்றால், துஷ்யந்தன் மகனான பரதனுக்கும், சிபிக்கும், இராமனுக்கும் ஏதோ தொடர்பு இருக்கிறது. தற்காலச் சிந்தனையில் சொல்வதென்றால், இவர்கள் மூவருமே ஒரே மரபணுவைக் கொண்டவர்கள், அதாவது தந்தை வழியில் ஒரே வம்சத்தில் தோன்றியவர்கள் என்று 11 ஆம் நூற்றாண்டு வரை தெரிந்து வைத்திருக்கின்றார்கள் என்பதே. அந்தத் தொடர்பு என்ன?

முதல் சோழனின் தந்தையான பரதன்

முதலில் பரதனது மகன், சோழ வர்மன் என்னும் திருவாலங்காடு செப்பேட்டு விவரத்தை ஆய்வோம். துஷ்யந்தனது மகனான பரதனுக்கு மூன்று மனைவியர் என்றும், அவர்கள் மூலம் மொத்தம் ஒன்பது மகன்கள் பிறந்தனர் என்பதும் விஷ்ணு புராணம் சொல்லும் செய்தி. அந்த ஒன்பது மகன்களும் தன்னைப் போல இல்லை என்று பரதன் சொன்னதாகவும், அதன் காரணமாக அந்த மனைவியர், அந்த ஒன்பது மகன்களையும் கொன்றுவிட்டதாகவும் விஷ்ணு புராணம் கூறுகிறது (வி.புரா: 4-19). பரதனுக்குப் பிறந்தவன்தான் சோழவர்மன் என்று திருவாலங்காடு செப்பேடு சொல்வதன் மூலம், அவன் அந்த மகன்களுள் ஒருவன் என்று தெரிகிறது.

அவன் தன் பெற்றோரைவிட்டு நீங்கி, தென் திசை நோக்கிப் பயணம் செய்து பூம்புகாரை வந்தடைந்திருக்கிறான். இந்தப் பயணத்தை, கன்யாகுமரி கல்வெட்டு விவரிக்கிறது. அவனைப் போலவே பரதனது மற்ற மகன்களும் எங்கெங்கோ சென்று தங்கள் பரம்பரையை வளர்த்திருக்கக் கூடும். பரதனது மகன்கள், தங்கள் தாய்மார்களால் கொல்லப்பட்டார்கள் என்பது ஒரு பேச்சுக்காகத்தான் என்று தெரிகிறது. அவர்கள் அனைவருமே பரதனைவிட்டு நீங்கினார்கள் என்பதை அவ்வாறு சொல்லியிருக்கிறார்கள்.

சோழன், சிபிச் சக்கரவர்த்தியின் மகனானது எப்படி?

சோழவர்மன் பரதனது மகன் என்பது உண்மையென்றால், அவனே எப்படி சிபிச் சக்கரவர்த்திக்கும் மகனாக இருந்திருக்க முடியும் என்ற கேள்வி எழுகிறது. சிபியை முன்னிட்டே, சோழர்களுக்கு, செம்பியன் என்ற பெயர் ஏற்பட்டது. இதை, சங்க நூல்களும் தெரிவிக்கின்றன.

சிபி யாரென்று பார்த்தால், அவன், பரதனது தந்தை வழிப் பாட்டனாருடைய சகோதரன் வழித் தோன்றலாகிறான். இதன் ஆரம்பம் ஐந்து சகோதரர்களில் இருக்கிறது. யது, துர்வஸு, த்ருஹ்யு, அநு, புரு என்னும் ஐந்து சகோதரர்களில், புருவில் வம்சத்தில் வந்தவன் துஷ்யந்தன். அவனை, புருவின் சகோதரனான துர்வஸுவின் வம்சத்தில் வந்த மருத்தன் தத்து எடுத்துக் கொள்கிறான் (வி.புரா. 4-16). மற்றொரு சகோதரனான அநுவின் வம்சத்தில் வந்த உசீனரனது மகன் சிபி ஆவான். ஆக, இவர்கள் எல்லோருமே, ஒரே தகப்பனுக்குப் பிறந்த மகன்கள் வழியில் வந்த பங்காளிகள்.

இவர்களுள், துஷ்யந்தனது மகனான பரதனுக்குப் பிறந்த சோழவர்மன், சிபிக்கு மகனாவான் என்று சொல்லப்பட்டுள்ளதால், சிற்றப்பன் வழி வந்த சிபி அல்லது அவன் குடும்பத்தினர் அவனை ஸ்வீகாரம் செய்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. பரதன் அவனைக் கைவிட்டுவிடவே, பரதனைப் பற்றி சோழ வம்சத்தினர் பெருமைப்பட்டுக் கொண்டதில்லை. சிபியைப் பற்றி மட்டுமே, அதிலும் அவன் புறாவுக்காக தன் தசையையே அரிந்து கொடுத்த செயலைப்பற்றிதான் சொல்லிக் கொண்டார்கள். அவ்வாறுதான் சங்கப் புலவர்கள் பாடியுள்ளார்கள். ஆனால், பரதனது தொடர்பை, திருவாலங்காடு செப்பேடு மட்டுமே தெரிவிக்கிறது. அதன் மூலம், வரலாற்றில் வேறு எங்கும் பதிவு செய்யப்படாத, மேற்சொன்ன விவரங்களும் தெரியவருகின்றன.

சோழனுக்கு இராமனுடனான தொடர்பு

பரதன் – சிபி ஆகியோருடனான சோழவர்மன் தொடர்பு, இராமனுடனும் எவ்வாறு தொடர்கிறது? இங்குதான் அந்த ஐந்து சகோதரர்களது தந்தையான யயாதி வருகிறார். யயாதியின் கதை பலரும் அறிந்ததே. ஆனால் அந்த யயாதி இராமனது முன்னோன் என்பது பலரும் அறியாதது. வால்மீகி இராமாயணத்தில் (1-70-42), இராமரது திருமணத்தின்போது வசிஷ்டரால் சொல்லப்படும் இராம வம்சாவளியில், நஹுஷன், அவன் மகன் யயாதி ஆகியோரது பெயர்கள் வருவதால், இராமனுக்கும், யயாதிக்கும் நேரடி மரபணுத் தொடர்பு இருக்கிறது புலனாகிறது.

அதே வால்மீகி இராமாயணத்தில், பரதனுடன் காட்டுக்குச் சென்று இராமனைத் திரும்பி வருமாறு அழைக்கும் கட்டத்திலும், வசிஷ்டர் இராம வம்சாவளியைச் சொல்கிறார். இராமனது பரம்பரையில் மூத்த மகன்தான் அரசுரிமை பெறுகிறான் என்று சொல்லும் போது, இன்னாருடைய மூத்த மகன் இன்னார் அரசரானார்கள் என்று வரிசையாக வசிஷ்டர் பட்டியலிடும்போது யயாதியின் பெயரைச் சொல்லவில்லை. நஹுஷனுக்குப் பிறகு அவனது மகனான நாபாகன் அயோத்தி அரசனானான் என்கிறார் (2-110-32).  இதன் மூலம் யயாதி மூத்த மகன் அல்லன் என்று தெரிகிறது.

மேலும், விஷ்ணு புராணத்தில் (4-6), அவன் சந்திர குலத்தில் வந்தவனாகச் சொல்லப்படுகிறான். இந்த குலத்தினர், இக்ஷ்வாகுவின் மூத்த சகோதரியான இலாவின் வழிவந்தவர்கள். இந்த குலத்திலும், நஹுஷன்- யயாதி என்பவர்கள் தந்தை-மகனாகச் சொல்லப் பட்டிருப்பது வினோதமாக இருக்கிறது. பரதன், சிபி, இராமன் என அனைவர் தொடர்பையும் சோழர்கள் சொல்லுவதால், இந்த யயாதி, சூரிய வம்சமான இக்ஷ்வாகு குலத்தில் பிறந்து சந்திர குலத்துக்குத் தத்து கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். அவன் மகன்களுக்குப் பிறந்தவர்கள் பரதனும், சிபியும். இந்த வகையில் இவர்கள் இருவரும், இராமனுடன் ஒரே மரபணுத் தொடர்பில் வருகிறார்கள். இதனால் சோழர்கள் பரம்பரையில் இம்மூவரும் வருகிறார்கள்.

இராமன் குலதனம் சோழர்களுக்கு

இராமனது பரம்பரையுடன் தொடர்பு இருந்ததால், பட்டாபிஷேகத்தின் போது இராமனால் விபீஷணனுக்குக் கொடுக்கப்பட்ட ‘குலதனம்’, சோழர்களிடம் சேர்ப்பிப்பதற்காக இருந்திருக்கலாம்.  பட்டாபிஷேகம் முடிந்து 'குலதனத்துடன்' விபீஷணன் திரும்புகிறான் (வா.இரா. 6-128 -90). இராமன் வைகுந்தம் செல்லத் தயாராகும் போது விபீஷணனிடம் இக்ஷ்வாகு குல தெய்வமான  'ஜெகந்நாதனை' வழிபடுமாறு இராமன் சொல்கிறான். (வா.இரா 7-121)

இதற்கு முன்னால் இராமன் விஷ்ணுவை வழிபடுவதைப் பற்றி வால்மீகி கூறுகிறார். தசரதன் ஏற்பாடு செய்த பட்டாபிஷேகத்தை முன்னிட்டு அதற்கு முந்தின தினம், இராமனும், சீதையும், அவர்களது வீட்டில் சில நியமங்கள், பூஜைகளை செய்கிறார்கள். அப்பொழுது விஷ்ணுவை வழிபட்டார்கள் என்றும் விஷ்ணுவை முன்னிட்டு ஹோமம் செய்தார்கள் என்றும், அதன் பிறகு விஷ்ணுவின் இருப்பிடத்தில் (கோயிலில்) குஶப் புல்லாலான பாயில் படுத்துறங்கினார்கள் என்றும் சொல்லப்பட்டுள்ளது. (வா.இரா 2-6) எனவே ராமன் தனக்கென்று விஷ்ணு விக்ரஹத்தை வைத்துக் கொண்டிருக்க வேண்டும்.

அந்த விக்ரஹமே குலதனம் என்றால், யாராவது அதை மற்றவர்களுக்குக் கொடுப்பார்களா என்ற கேள்வி வருகிறது. விபீஷணனுக்காக கொடுக்கப்பட்டதென்றால், அவன் ஏன் அதை காவிரியின் நடுவில் விட்டு விட்டுச் செல்ல வேண்டும்? தன் இருப்பிடத்துக்கு (இலங்கைக்கு) எடுத்துச் செல்வதுதானே யாரும் செய்யக்கூடியது?

அவனது இருப்பிடமான இலங்கைக்குச் செல்லும் வழியில், சோழ ராஜ்ஜியம் இருப்பதாலும், திடீரென்று ஏற்பாடு செய்த பட்டாபிஷேகத்துக்கு சோழர்கள் வரமுடியவில்லை என்பதாலும், இராமன் தன் பரிசாக, தான் வழிபட்ட பெருமாளை, தன் குலத்தில் வந்தவர்களான சோழர்களுக்கு அளிக்க, விபீஷணனைப் பணித்தானோ என்று எண்ண இடமிருக்கிறது. இதற்கு வலு சேர்க்கும் வகையில், விபீஷ்ணன் பெருமாளை சோழ நாட்டில் விட்டுவிட்டுச் சென்றிருக்கிறான். சோழர்களும், ஸ்ரீரங்கநாதரைத் தங்கள் ‘குலதனம்’ என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

ஸ்ரீ அரங்கநாதர்

ஸ்ரீரங்கம் கோயிலின் வெள்ளைக் கோபுரத்தின் உட்சுவரில் காணப்படும் மூன்றாம் குலோத்துங்கன் காலக் கல்வெட்டில், “குலோத்துங்க சோழ தேவர்க்குக் குலதனமாய் வருகிற கோயிலில்” என்று ஸ்ரீரங்கம் கோயிலைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது (SII Vol 24, No. 133, A.R. No. 89 of 1936-37) அந்த அரசனோ சைவத்தில் பற்று கொண்டவன். அவனுக்குக் குலதனமாகக் கிடைத்த கோயில் என்று எழுதப்பட்டுள்ளதால், இந்தப் பெருமாள் இராமனது குலதனமாக சோழர்களுக்குக் கிடைத்தவர் என்று அறிகிறோம். சோழர்களைத்  தன்னுடைய வம்சாவளியினர் என்று இராமன் நினைத்திருக்கவேதான், தான் வழிபட்ட மூர்த்தியை, தன்னுடைய குலதனமாக, சோழர்களுக்கு, விபீஷணன் மூலமாகக் கொடுத்திருக்கிறான்.



மூன்றாம் குலத்துங்க சோழன் 11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவன். எனவே இராமனது தொடர்பு என்பது பின்னாளில் இவர்களாகவே கற்பனை செய்துக் கொண்டது என்று யாரேனும் மறுப்பு சொல்லலாம். இராமனது தொடர்பு பின்னாளில் ‘கண்டுபிடித்த’தல்ல. சங்கப் புலவர்களும் இராமனை, சோழர்களது முன்னோன் என்று சொல்லியிருக்கிறார்கள். அவற்றையும் நாம் விவரிப்போம்.

 

 

சனி, 3 ஜூன், 2023

'ராமானுஜ இதிஹாசம்' புத்தகம் பற்றிய எனது வீடியோ பேச்சு

மெட்ராஸ் பல்கலைக்கழகத்தின் வைணவத் துறையின் முன்னாள் மாணவர் சங்கம் எனது ராமானுஜ இதிஹாச புத்தகத்தைப் பற்றி ஜூம் கான்பரன்ஸ் மூலம் பேச அழைத்தது.


மே 27, 2023 அன்று செய்யப்பட்ட விளக்கக்காட்சி தமிழில் இருந்தது. இந்த உரையில் ராமானுஜரால் கட்டப்பட்ட இந்தியாவின் முதல் வளைவு அணையான 'தொண்ணூர் கரை'யைப் பற்றி விவரித்தேன்.  11 ஆம் நூற்றாண்டில் தொண்டனூர் - மேல்கோட்டைத் தாக்குதலின் போது இறந்த காஜியின் உடலை வைப்பதற்காக தொண்டனூரில் உள்ள நரசிம்மர் கோவிலை இடித்த திப்பு சுல்தானால் எப்படி அணை அழிக்கப்பட்டது என்பது பற்றியும் விவரித்தேன். ஸாலர் ஸையத் மஸூதின் கூட்டாளிகளான அந்த காஜியும் அவனது கூட்டாளியும் தென்னிந்தியாவில் முதன்முதலில் இஸ்லாமிய ஊடுருவலைச் செய்தனர் என்பது பற்றியும் பேசினேன்.

மேல்கோட்டை தெய்வத்தின் விக்ரஹத்தை வைத்திருக்க விரும்பிய முஸ்லீம் பெண் (பீபி நாச்சியார்) மற்றும் அவளுடன் தொடர்புடைய விவரங்களையும் சுருக்கமாகக் கூறினேன்.

ராமானுஜரைத் துன்புறுத்தின கிருமிகண்ட சோழன் என்று பெயர் பெற்ற சோழ அரசன் உட்பட ராமானுஜ காலத்து சோழ மன்னர்களின் வரலாற்றைத் தொட்டுவிட்டு, திருச்சித்திரகூடத்தின் (சிதம்பரம்) கோவிந்தராஜப் பெருமான் இரண்டாம் குலோத்துங்கனால் கடலில் வீசப்பட்ட நிகழ்ச்சியையும் தெரிவித்தேன். . பேச்சின் முடிவில்  கேள்வி-பதில் அமர்வில் சோழர் காலத்தின் கூடுதல் விவரங்களைக் கொடுத்திருக்கிறேன்.

உரையாடலின் வீடியோ பதிவை இங்கே பார்க்கலாம்



திங்கள், 22 மே, 2023

முதல் வேத ஹோமம் எப்பொழுது யாரால் செய்யப்பட்டது?

'ஆரிய இடப்பெயர்வு' (ஆரியப் படையெடுப்பு என்றும் கூறப்படுவது) கோட்பாட்டை முன் வைப்பவர்களால், ஆரிய ஐரோப்பியர்களால் தான் ஹோமம் பாரதத்திற்குக் கொண்டுவரப்பட்டது என்ற கருத்து பரப்பப்படுகிறது. ஹோமத்தின் ஆரம்பம், நம்முடைய வேதங்களிலேயே குறிப்பிடப்பட்டு இருக்கிறது என்பதை அறியாததால் நம்மால் அதற்குப் பதிலடி கொடுக்க முடியாமல் இருந்து வந்திருக்கிறது. அந்தக் குறையைப் போக்கும் வண்ணம் இந்தப் புத்தகம் ஆங்கிலத்தில் முதலில் வெளியிடப்பட்டு, தற்போது, தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

தமிழ் தெரிந்த அனைத்து மக்களையும் இது சென்றடைய வேண்டுமென்று, இந்தத் தமிழ்ப் பதிப்பை எளிதில் தரவிறக்கம் செய்யுமாறு கொடுத்துள்ளேன்.

படித்து, உங்கள் நட்பு வட்டங்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

புத்தகத்தின் பிற முக்கியக் கருத்துக்கள்:

* தமிழ்ச் சங்க கால விவரங்கள்

* தமிழும், சம்ஸ்க்ருதமும் ஒன்றாகத் தோன்றி, வளர்ந்த வரலாறு

* வேத ஹோமம் ஆரம்பித்த இடம், காலக்கட்டம், அது மேலும் பரவிய விதம்

* அப்பொழுது இருந்த விண்வெளி அமைப்புகள் 

* மனுவின் காலக்கட்டம், அவன் வாழ்ந்த இடம்

* இராமாயண காலக் கட்டம் 

* ஸ்கந்தனே வேத ஹோமத்தை ஆரம்பித்த வரலாறு

* ஸ்கந்தனது குலம் ஐரோப்பா எங்கும் பரவின சுவடுகள்


தரவிறக்கம் செய்ய: முதல் வேத ஹோமம் எப்பொழுது யாரால் செய்யப்பட்டது?



வெள்ளி, 14 ஏப்ரல், 2023

சோபக்ருது புது வருடம் குறித்து எனது பேச்சு (Mediyaan News Channel)

 இனிய சோபக்ருது  வருஷப் பிறப்பு வாழ்த்துகள்

@mediyaannews


* தமிழ்ப் புத்தாண்டு இந்துப் பண்டிகை

* 60 ஆண்டு சமஸ்கிருதப் பெயர்கள் ஏன்?

* மேஷத்தில் சூரியனின் பிரவேசம் ஏன் புத்தாண்டாகக் கருதப்படுகிறது?

* தையில் புத்தாண்டு என்று கூறுவதில் ஏதேனும் நியாயம் உள்ளதா?




ஞாயிறு, 15 ஜனவரி, 2023

சேது சமுத்திர கால்வாய் திட்டம் ஏன் சாத்தியமில்லை? - தினமலருக்கு என் பேட்டி

12-01-2023 அன்று தி.மு.க அரசு சேது சமுத்திர கால்வாய்த் திட்டத்தை புதுப்பிக்க ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தது. இதைத் தொடர்ந்து இந்த திட்டத்தின் சாத்தியக்கூறுகள் குறித்து கருத்து தெரிவிக்க தினமலர் வீடியோ சேனல் என்னை அழைத்தது. தினமலர் பேட்டியாளர்  சியாமளாவுக்கு அளித்த பேட்டியில், என் கருத்துக்களை பகிர்ந்து கொண்டேன்.

நான் பேசிய கருத்துக்கள்: 

# ராமர் சேது பாலத்தின் வரலாற்றுத் தன்மை

# மீனவர்கள் உட்பட பல்வேறு கோணங்களில் கால்வாய் திட்டம் சாத்தியமில்லாத தன்மை 

# 'சேது சென்டிமென்ட்' இன்னும் பல.



'தமிழகம் - தமிழ் நாடு' சர்ச்சை - தினமலருக்கு என் பேட்டி

 சமீபத்தில் தமிழக ஆளுநர் "தமிழ் நாடு" என்பதை விட "தமிழகம்" என்று சொல்வது பொருத்தமானது என்று தனது கருத்தை வெளிப்படுத்தினார், இதற்கு தி.மு.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 'தினமலர்' நாளிதழுக்கு நான் அளித்த பேட்டியில், கவர்னர் ஏன் அப்படி பேசினார் என்பது குறித்து, அவரது கோணத்தில் ஆய்வு செய்தேன். அந்தச் சூழலில் திராவிடத்தைப் பற்றியும், காலனிய ஆங்கிலேயர்கள் திட்டமிட்டு பார்ப்பன வெறுப்பை விதைத்ததையும், அதைத் தொடர்ந்து தி.மு.க. பார்ப்பன வெறுப்பைப் பரப்பிக் கொண்டிருப்பது பற்றியும் பேசினேன் 




திருவள்ளுவரின் இந்து அடையாளம் - 'பேசு தமிழா பேசு' சேனலில் என் பேச்சு

அண்மையில் நான் 'பேசு தமிழா பேசு' தமிழ் சேனலுக்கு அளித்த பேட்டியில், பின் வரும் விஷயங்களில் கவனம் செலுத்தினேன்.

# திருவள்ளுவர் கிறிஸ்தவரா அல்லது சமணரா அல்லது பௌத்தரா அல்லது இந்துவா?

# இந்துவாக இருப்பது என்றால் என்ன?

# திருவள்ளுவரால் பூஜிக்கப்பட்ட கடவுள் யார்?




"யார் திராவிடன்?" - 'பேசு தமிழா பேசு'வில் எனது பேச்சு

 ஆரியம் - திராவிடப் பிரச்சினை குறித்து 'பேசு தமிழா பேசு'  தமிழ் சேனலுக்கு நான் அளித்த பேட்டியில் பின் காணும் பிரச்சினைகள் குறித்து நான் பேசினேன்

# தமிழர்கள் திராவிடர்களா?

# திராவிட நாடு என்று ஒன்று இருக்கிறதா?

# திராவிடம் என்று ஒரு மொழி இருக்கிறதா? 

# ஆதிசங்கரர் தன்னை "திராவிட சிசு" என்று அழைத்தது ஏன்?

# முதல் திராவிட மன்னர் யார்?



புதன், 4 ஜனவரி, 2023

"ராமாயணம் கட்டுக்கதை அல்ல" - 'பேசு தமிழா பேசு'வில் எனது பேச்சு

 பிரபல தமிழ் யூடியூப் சேனலான 'பேசு தமிழா பேசு'வில் ராமாயணம் என்ற தலைப்பில் 4 பகுதி வீடியோ உரையுடன் 2023 ஆம் ஆண்டைத் தொடங்கினேன்.  இராமாயணம் ஒரு கட்டுக்கதை என்று தமிழ்நாட்டில் நடந்து வரும் பிரச்சாரத்தை ஒழிப்பதே இதன் முக்கிய நோக்கமாக இருந்தது. ராமர் சேதுவின் தேதியை பகுப்பாய்வு செய்வது உட்பட பல முதன்மை ஆதாரங்களைப் பயன்படுத்தி நான் ராமரின் தேதியை நிறுவுகிறேன்.

இராமாயணத்தின் வரலாற்றுத் தன்மையை ஏற்றுக்கொண்டு, இராவணன் ராமரை விட உயர்ந்தவன் என்று கூறி, அவரை ஒரு நாயகன் என்று புகழும்  மற்றொரு கணிசமான பிரிவு தமிழ்நாட்டில் உள்ளது. இராம- இராவணன் போரை சைவத்திற்கும் வைணவ மதத்திற்கும் இடையிலான போராக அவர்கள் சித்தரிக்கிறார்கள். மேலும் வானரர்கள் என்னும் குரங்கினம் இருந்ததற்கான ஆதாரமும் இல்லை என்கிறார்கள். இந்தக் கேள்விகள், மற்றும் பல கேள்விகளுக்கு நான் நான்கு வீடியோக்களில் பதில் அளித்துள்ளேன். பார்க்கவும், பகிரவும். 

பகுதி 1: ராமர் பாலம் உண்மையாகவே கட்டப்பட்டதா?


பகுதி 2: சைவமும் வைணவமும் ஒன்றா ?


பகுதி 3: ராவணன் தமிழனா ?


பகுதி 4: பிள்ளையார் பார்வதியின் மகனில்லை !