வியாழன், 30 ஜூன், 2011

57. சாகத்தீவும், குமரிக்கண்டமும் -1 (நாகர்கள்)

  

வைவஸ்வத மனுவுடன் துவாரகை வழியாக சரஸ்வதி நதிக்குள் நுழைந்த மக்கள் புது வாழ்வு வாழத் தொடங்கினர். (பகுதி 48) அந்த மக்களுடைய பூர்வீகம் என்று சொல்லும் வண்ணம் ஓரிடம் இருக்கிறது. து சாகத்தீவு எனப்படும் சாகத்வீபம் எனலாம். த்வீபம் என்றால் நான்கு புறமும் கடலால் சூழப்பட்ட தீவு என்று பொருள் கொள்ளலாம். அல்லது இன்றைய வழக்கில் இருப்பது போல  பெரும் நிலப்பரப்பைக் கொண்ட கண்டம்’ (ஆசியா, ஐரோப்பா கண்டம் என்பது போல) என்றும் சொல்லலாம்


மஹாபாரதத்தில் குருக்ஷேத்திரப் போரைக் காண்பதற்காக ஞானக் கண் பெற்ற சஞ்சயன், முதலில் இந்தப் பூவுலகில் உள்ள நாடுகளையும், த்வீபங்களையும் காண்கிறான். அப்படிக் கண்டவற்றை, கண் தெரியாத அரசனான திருதராஷ்டிரனுக்குச் சொல்கிறான். இந்த உலகத்தில் இருந்த மொத்த நிலப்பரப்புகளையும் ஏழாகப் பிரித்து, அவற்றை சப்த த்வீபங்கள் (7 த்வீபங்கள்) என்று அழைத்தனர். அவற்றின் அமைப்புகள் பல புராணங்களிலும், ஸ்ரீமத் பாகவத்த்திலும் சொல்லப்பட்டுள்ளன. தமிழ் நிகண்டுகளிலும் இந்த 7 த்வீபங்களின் பெயர்கள் சொல்லப்பட்டுள்ளன. அவற்றைப்பற்றிய விரிவான விளக்கத்தை சஞ்சயன் தருகிறான்.

அவற்றுள் ஒன்று நாமிருக்கும் ஜம்புத்வீபம், இது நாவலந்தீவு என்ப்படுகிறது

மற்றொன்று சாகத்தீவு (SHAAKA DWEEPAM) என்பதாகும்

சாகத்தீவைப் பற்றி சஞ்சயன் தரும் விவரங்கள் நமக்கு சில ஆச்சர்யங்களைத் தருகின்றன.


அந்த விவரங்களில், சாகத்தீவுக்கும், நாவலந்தீவில் நாமிருக்கும் பாரதத்துக்கும் சில ஒற்றுமைகள் உள்ளன. அவற்றுள் ஒன்றினை முந்தின கட்டுரையில் கண்டோம்

அது ரைவதக மலை ஆகும்.  

  • ·         இன்றைய குஜராத்தில் ரைவதகம் என்ற பெயரில் ஒரு மலை இருந்தது என்றும், அந்த மலையில் ரேவதி நட்சத்திரம் என்னும் நட்சத்திரம் குடி கொண்டுள்ளதால் அந்தப் பெயர் வந்தது என்றும் மஹாபாரதத்தில் சொல்லப்பட்டுள்ளது. அதே பெயரில், அதே ரேவதி நட்சத்திரம் குறித்த விவரத்துடன் நாவலந்தீவுக்கு வேறான சாகத்தீவிலும் ஒரு வர்ணனை வருகிறது.

  • ·         அது மட்டுமல்ல, என்றோ, எங்கோ மறைந்து போன குமரி ஆறு பாரத வர்ஷத்தில் இருந்ததாக மஹாபாரதம் (6- 9) கூறுகிறது. பாரத நாட்டின் ஏழு முக்கிய நதிகளுக்குள் குமரி ஆறும் ஒன்று என்று தமிழ் நிகண்டான சூடாமணி நிகண்டு தெரிவிக்கிறது (பகுதி -18) அதே பெயருடன் சாகத்தீவிலும் ஒரு ஆறு ஓடியது என்று மஹாபாரதம் சொல்கிறது (6-11).

  • ·         தண்டமிழ்ப் பாவை காவேரி நதியானவள் காவேரகன் என்னும் மன்னனுக்குப் பிறந்தவள் (கவேர கன்னி) என்று திருவாலங்காடுச் செப்பேடுகளில் குறிக்கப்பட்டுள்ளது.(செப்பேடுகளின் சமஸ்க்ருதப் பகுதியின் 35 ஆவது பத்தி) அதாவது காவேரி ஆரம்பிக்கும் குடகு நாட்டைக் காவேரகன் என்னும் அரசனோ, அல்லது காவேரகப் பரம்பரையைச் சேர்ந்தவர்களோ ஆண்டு வந்திருக்கின்றனர். அதனால் காவேரி என்னும் பெயர் உண்டானது. காவேரி நதியானது நாமிருக்கும் பாரத நாட்டின் தென் பகுதியில் ஓடுகிறது. ஆனால் காவேரகா என்னும் பெயரில் சாகத்தீவிலும் ஒரு நதி ஓடியிருக்கிறது. இது ஒரு ஆச்சரியமான ஒற்றுமை.

  • ·         எல்லாத் த்வீபங்களிலும் கங்கையும் மேருவும் சொல்லப்பட்டுள்ளது. அதிலும் மேரு என்பது ஒரு பொதுப் பெயராக வருகிறது. மேரு என்பது பூமியின் அச்சின் மேல் முனை அல்லது வட முனையாகும். அதாவது வட துருவ உச்சி மேருவின் சிகரம் என்று சூர்ய சித்தாந்தம் (12-72) கூறுகிறது. சப்த ரிஷிகளும், (URSA MAJOR) சூரியனும், இந்தப் பிரபஞ்சமும் அந்த மேருவைச் சுற்றி (வட துருவத்தைச் சுற்றி) வருகின்றன. வட துருவத்திலிருந்து பார்த்தால் அவ்வாறு சுற்றுவது தெரியும். இது உலக அளவில் சொல்லப்படுவது.

pic courtesy


  • இதைத்தவிர, தனித்தனியான த்வீபங்களைச் சொல்லும் போதும், வர்ஷங்களைச் (நாடுகள்) சொல்லும் போதும், அந்தந்த இடங்களில் சிறப்பாகவும், உயரமாகவும் உள்ள மலைச் சிகரத்தை மேரு என்று சொல்வதை, புராண, இதிஹாச வர்ணனைகளில் காணலாம். நாவலந்தீவுக்கு இமயமலை முக்கியமானது. எனவே நாவலந்தீவுக்கு அதுவே மேருவாகும். நாவலந்தீவின் மேருவான இமயமலையை வென்றால், அது இருக்கும் நாவலந்தீவையே (ஜம்பு த்வீபத்தையே) வென்ற மாதிரி என்பதால், தமிழ் மன்னர்கள் மூவரும் (திருமாவளாவன் என்னும் கரிகால் சோழன், கொன்னவில் கோன் என்னும் கடுங்கோன் பாண்டியன் (பகுதி 44), சேரன் செங்குட்டுவன்) இமயத்தில் தங்கள் சின்னத்தைப் பொறித்தனர்.


  • மேருவைப் போல எல்லா த்வீபங்களிலும் சொல்லப்படும் நதி, கங்கை ஆகும். பகுதி 35 –இல் ரஷ்யாவில் அர்க்கைம் என்னுமிடத்தில் வேத மரபை ஒட்டிய அமைப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று பார்த்தோம்.



அந்த அர்க்கைம் என்னுமிடம் இரண்டு நதிகளுக்கிடையே உள்ளது.  

 (இந்தப் படத்தில் ஒரு பக்க நதி மட்டுமே தெரிகிறது)

அந்த நதிகளது பெயர் என்ன தெரியுமா?  

கரகங்கா (KARAGANKA), உத்யகங்கா (UTYAGANKA) என்பதே!! 

 இந்தப் பெயர் இப்பொழுது புதிதாக வைத்ததல்ல. வழி வழியாக வரும் பெயர்கள் இவை. இந்த நதிகளில் நீராடினால், நோய் நீங்குகிறது என்கிறார்கள் ரஷ்யர்கள். கங்கையை ஒத்த இந்தப் பெயர் ஆச்சரியமாக இருக்கிறது. ஆனால் வேத யாகம் செய்யும் அமைப்பில் உள்ள அர்க்கைமில் உள்ளதால் நமக்கு ஆச்சரியம் ஏற்படத்தேவையில்லை


  • ·         சாகத்தீவிலும் கங்கை என்னும் பெயரில் ஒரு நதி ஓடியது என்கிறான் சஞ்சயன். ஆனால் மேரு, கங்கை என்னும் இரண்டைப் போல, குமரியும், காவேரகமும் எல்லா த்வீபங்களிலும் சொல்லப்படுபவை அல்ல. அவை பாரதத்தில் மட்டுமே சொல்லப்பட்டுள்ளன. சாகத்தீவிலும் சொல்லப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

  • ·         இதைப் போன்ற மற்றொரு ஒற்றுமை மக்களைப் பற்றியது பாரதத்தில் இருப்பதைப் போலவே சாகத்தீவிலும் பிராம்மணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என்ற நான்கு வர்ணத்தவர் இருந்தனர் என்கிறான் சஞ்சயன்! இந்த நான்கு வர்ணத்தவருக்கும் தனித்தனியே பெயர்களும் இருந்திருக்கின்றன. இவர்கள் அனைவருமே இன்றைய பாரதத்தில் இருக்கிறார்கள் என்ற சாத்தியக்கூறு இருந்தாலும், ஒரு குறிப்பிட்ட வர்ணத்தவர் இன்றும் பாரதத்தில் இருக்கிறார்கள். அவர்கள் சில குறிப்பிட்ட காரணங்களுக்காக பாரத்த்துக்கு வரவழைக்கப்பட்ட ஆதாரங்களும் இருக்கின்றன. இதன் மூலம் சாகதீவுக்கும், பாரதத்துக்கும் இருந்து வந்த ஒட்டுறவு தெரிகிறது. அவற்றை மேற் கோண்டு பார்ப்போம். இந்த இடத்தில் நாம் சொல்ல வருவது, நான்கு வர்ணத்தவர் இருக்கிறார்கள் என்றால் அங்கு வேத தர்ம வாழ்க்கை முறை கடைப்பிடிக்கப்பட்டது என்று அர்த்தம். வர்ணத்தின் அடிப்படையில் கல்வி, தொழில், வாழ்க்கை முறை போன்றவை உள்ளதால், சாகத்தீவு மக்களும், பாரதத்தில் வாழ்ந்த மக்களும் ஒரே வாழ்க்கை முறையைப் பின் பற்றியிருக்கின்றனர் என்பது தெரிகிறது.

  • ·         அது மட்டுமல்ல, இந்த சாகத்தீவுக்கு தென்னாட்டுடைய சிவனே கடவுள் ஆவார்.


  • ·         பிற த்வீபங்களைச் சொல்கையில், அங்கெல்லாம், சிவ வழிபாடு சொல்லப்படவில்லை. உலகெங்கும் உள்ள முக்கிய வர்ஷங்களை (நாடுகள்) விவரிக்கையில், சஞ்சயன் சொல்வதும், ஸ்ரீமத் பாகவதம் அத்தியாயம் 4-5 –இல் சொல்லப்படும் வர்ணனையும் ஒன்றாக இருக்கின்றன. மற்ற வர்ஷங்களில் சிவனை வழிபட்டதாக அவை சொல்லவில்லை. ஆனால் சாகத்தீவுக்கு அதிஷ்டான தெய்வம் சங்கரன் என்னும் சிவ பெருமான் ஆகிறார் என்று இந்தக் குறிப்பிட்ட த்வீபத்தில் மட்டுமே சொல்லப்பட்டுள்ளது. அந்த சங்கரரே பாரத வர்ஷத்தின் வர்ணனையிலும், கைலாச கிரிக்கு நாதராகச் சொல்லப்படுகிறார். இந்தக் கைலாச கிரி பாரதத்தின் வட எல்லையில் உள்ள இமய மலையில் உள்ளது என்பதில் சந்தேகமில்லை.

  • ·         இமயமலைவாசியான சிவ பெருமான், சாகத்தீவில் பூஜிக்கப்படுகிறார் என்றால், சிவனுக்கும், சாகத்தீவுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்க வேண்டும்.  அதுமட்டுமல்ல, சாகத்தீவுக்குத் ‘தண்ட நீதி’ எனப்படும் (JUSTICE SYSTEM) நீதிமுறையை வகுத்தவர் சிவபெருமான் ஆவார். அதே சிவ பெருமானால் ஆக்கப்பட்ட (அதே) தண்ட நீதியே பாரத வர்ஷத்துக்கும் நீதி முறையாகும். அது தெரியாமல் வில்லியம் ஜோன்ஸ் அவர்கள் மனு நீதியே தண்ட நீதி என்று நினைத்துக் கொண்டு செய்த குழப்பமானது, திராவிடவாதிகளது வெறுப்பு –அரசியலுக்குத் துணை போனது. அதைப் பற்றி இந்தத் தொடரின் போக்கில் பிறகு காண்போம்.

  • (பிற வர்ஷங்களுக்கும் தெய்வங்கள் சொல்லப்பட்டுள்ளன. சஞ்சயன் வர்ணனை, ஸ்ரீமத் பாகவத வர்ணனை ஆகிய இரண்டிலும் கொடுக்கப்பட்டுள்ள தெய்வங்ககளின் பெயர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
  • (1)  பத்ராஷ்வ வர்ஷம் (இன்றைய ஜப்பான் இருக்கும் பகுதி), இன்றைய இலங்கைக்குக் கிழக்கே 90 டிகிரி தொலைவில், 6 மணி தூரத்தில் கிழக்கில் இந்தப் பகுதியில் ’யமகோடி’ என்னும் நகரம் இருந்தது. தெய்வம்:- ஹயக்ரீவர் அல்லது தர்ம தேவதை எனப்படும் யமன்.
  • (2)  ஹரி வர்ஷம் தெய்வம்:-  நரசிம்மர்
  • (3)  கேதுமாலா வர்ஷம் (இது இன்றைய இலங்கைக்கு மேற்கே 90 டிகிரி தொலைவில், 6 மணி தூரத்தில் மேற்கே உள்ளது. இந்தப் பகுதியில் இன்று அட்லாண்டிக் கடல் உள்ளது. கிரேக்க நூலகளில் சொல்லப்பட்டுள்ளஅட்லாண்டிஸ்என்பதாக இது இருக்கலாம்.) – தெய்வம்:- ஹ்ருஷீகேசன்
  • (4)  ஹிரண்மயா வர்ஷம் (இமயமலைக்கு வடக்கில் உள்ள பனி மலைப் பகுதி) – தெய்வம்:- கூர்ம்ம்.
  • (5)  உத்தர குருதெய்வம்:- வராஹம்
  • (6)  கிம்புருஷம் (நேபாளம்) - தெய்வம்:-  ராமன்
  • (7)  பாரத வர்ஷம் (இந்தியா) – தெய்வம்:- நாராயணன்.

இது 5000 ஆண்டுகளுக்கு முன்னால், மஹாபாரதப் போருக்கு முன் இருந்த நிலைமை. இவை எவற்றிலும் சிவன் தெய்வமாக வணங்கப்படவில்லை. பாரத வர்ஷத்தில் வணங்கப்பட்ட தெய்வம் நாராயணன் என்றும், சாகத்தீவில் வணங்கப்பட்ட தெய்வம் சிவன் என்றும் சொல்லியுள்ளது நினைவில் வைக்கத்தக்கது. இந்தத்தொடரின் பிந்தைய கட்டுரைகளில் இவற்றை மீண்டும் காண்போம். )
·          

  • சாகத்தீவுடனான மற்றொரு ஒற்றுமை நாம் இருக்கும் இந்தியாவின் தென் பகுதியில் செல்லும் மலய மலைத்தொடராகும். சாகத்தீவில் இரண்டு முக்கிய மலைகள் சொல்லப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று மலய மலைத்தொடர் என்கிறான் சஞ்சயன். இந்த ஒற்றுமையாலும், சாகத்தீவு, பாரதத்துக்கு மிக அருகாமையில் இருந்திருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது.

மலய மலைத்தொடர் இன்றைய இந்தியக் கடலுக்குள் செல்கிறது. அதன் தொடர்ச்சியாகச் செல்லும் மலைதொடரின் பாகங்களே லட்சதீவுக் கூட்டங்களும், மாலத்தீவுக் கூட்டங்களும் ஆகும். சாகத்தீவு என்பது இன்றைய இந்தியாவின் தென் பகுதியில், இந்தியப் பெருங்கடலில் இருந்த்து என்று சொல்வதற்கு இந்த ஒரு சான்று மட்டுமல்ல. வேறொரு சான்றும் இருக்கிறது. பகுதி 38-இல், தென்னிந்தியாவில், தாமிரபரணி ஆற்றுக்குத் தெற்கே முயல் வடிவில் சாகத்தீவு இருந்தது என்று சஞ்சயன் சொன்ன வர்ணனையை இங்கு நினைவுக்குக் கொண்டு வருவோம்.



காஸ்யபத் தீவும், சாகத்தீவும், நாவலந்தீவுக்கு இரண்டு பக்கத்திலும் காதுகள் போல இருந்தன என்கிறான் சஞ்சயன். காஸ்பியன் கடல் பகுதியில் உள்ள காஸ்யபத்தீவு வடக்கில் இருப்பதால், சாகத்தீவு தெற்கில் அமைந்திருக்க வேண்டும். மஹாபாரதக் காலத்திலேயே சாகத்தீவின் பெரும் பகுதி கடலுக்குள் மூழ்கி விட்டதால், காது போல ஒரு சிறு அமைப்பாகத் தொங்கிக் கொண்டிருந்தது என்று இப்படி ஒரு வர்ணனையை சஞ்சயன் தந்திருக்கிறான். (6-6)


இதில் நமக்குக் கிடைக்கும் இன்னொரு சுவாரசியமான தகவல், இந்தச் சாகத் தீவை, நாகத்தீவு என்று அழைத்திருக்கிறார்கள். பழைய மஹாபாரத நூல்களில் சிலவற்றில் நாகத்தீவு என்றும் சில நூல்களில் சாகத்தீவு என்றும் எழுதப்பட்டுள்ளது. இந்தக் கட்டுரையை எழுத நான் ஆதாரமாகக் கொண்டுள்ள மஹாபாரதத் தமிழாக்கம், திரிசிரபுரம், (திருச்சியின் ஒரிஜினல் பெயர்) செயிண்ட் ஜோஸப் கல்லூரியின் சமஸ்க்ருத பண்டிதரான .வே, ஸ்ரீநிவாஸாச்சார்யர் என்பவரால் எழுதப்பட்டு, 1919 ஆம் ஆண்டு பிரசுரிக்கப்பட்டது.  அவர் தானெழுதிய மொழி பெயர்ப்பில் சாகத்தீவு என்றும், பழைய உரையில் நாகத்தீவு என்று உள்ளது என்றும் குறிப்பிடுள்ளார். சாகத்தீவும், நாகத்தீவும் ஒன்றுக்கொன்று மாற்றிச் சொல்லக்கூடிய பெயராகவும், அல்லது ஆதியில் சாகத்தீவு என்று சொல்லப்பட்டு, பிறகு நாகத்தீவு என்று சொல்லப்பட்டதாகவும் இருந்திருக்க வேண்டும்.

நாகர்களும், நாகத்தீவும்

நாகர்களைப் பற்றி நாம் முன்பே பகுதி 51-இல் கண்டோம். பூமியைப் புரட்டிப் போட்டாற்போல, பூமிக் குழம்புகள் வெளி வந்த இடங்களில் வசித்தவர்களை நாகர்கள் என்று சொல்லியிருக்க்கூடும் என்று பார்த்தோம். சாகத்தீவை நாகத்தீவு என்று அழைத்திருக்கிறார்கள் என்பதால், நாகக் குடியிருப்புகள் இந்தியக் கடல் பகுதிகளில் இருந்திருக்கக்கூடும் என்று காட்டும் சில விவரங்கள் இருக்கின்றன.

 
தொண்டை நாட்டை நிர்மாணித்த ஆதொண்டை என்பவனைப் பற்றிச் சொல்லுமிடத்தேநாகப்பட்டினத்துச் சோழன் பிலாத்துவாரத்தால் நாக லோகத்தே சென்று நாக கன்னிகையைப் புணர்ந்தான்என்று நச்சினார்க்கினியர் பெரும் பாணாற்றுப்படை உரையில் சொல்லியுள்ளார். (பகுதி 49)
இதைப் படிக்கும் போது நாகலோகம் என்பதும் நாக கன்னி என்பதும் ஏதோ கட்டுக் கதை என்று நாம் நினைப்போம். ஆனால் சாகத்தீவு ஆராய்ச்சியில் நாம் இறங்கும் போது, இதன் உண்மையான அர்த்தம் விளங்குகிறது

இந்த உரையில் பிலாத்துவாரம் என்று சொல்லப்பட்டுள்ளது

பிலம் என்றால், குகை, பாதாளம், கீழ் அறை, மலைக் குகை என்றெல்லாம் பொருள் படும்

நாக லோகம் என்பது பூமிக்கு அடியில் இருப்பது என்று புராணக் கதைகளின் மூலம் தெரிகிறது. பிலாத்துவாரம் எனபது குகையின் வாயில். குகையானது நீண்ட நெடும்தூரம் பூமிக்கடியில் செல்லலாம். உள்ளே செல்லச் செல்ல விஸ்தாரமாகவும் இருக்கலாம். தேவையான வசதிகளுடன் வசிக்கத்தக்கதாகவும் இருக்கலாம். இமய மலையில் அப்படிப்பட்ட பல குகைகள் இருக்கின்றன என்கிறார்கள். ஆனால் அப்படிப்பட்ட அமைப்புள்ள குகைகள் பூமியின் மட்டத்துக்கு அடியில் இருந்தால் அது நாக லோகம் ஆகிறது. அப்படிப்பட்ட குகைகள் கடலுக்கடியில் முழுகிய மலைத்தொடரில் அமைந்திருந்தால், அந்த நாக லோகம் கடலுக்கடியில் இருக்கும் உலகமாகிறது. அதன் பிலாத்துவாரம், கடலுக்கு மேலே அமைந்திருக்கும். ஆதொண்டையின் தந்தை அப்படி ஒரு குகை வாயில் வழியாகச் சென்று, பூமிக்கடியில் இருந்த குகைப் பகுதிகளில் வசித்து வந்த ஒரு பெண்ணைப் புணர்ந்திருக்கிறான்


பூமிக்கடியில் குகைகளில் மக்கள் வசித்து வந்தார்கள் என்பது மிகவும் சாத்தியமான ஒன்று. கற்கால மனிதன் முதலில் குகைகளில்தான் வசித்திருக்கிறான். எதிரிகளிடமிருந்தும், விலங்குகளிடமிருந்தும், பருவ வேறுபாடுகளிலிருந்தும் அவனுக்கு ஒரு பாதுகாப்பை இந்தக் குகை அமைப்புகள் தந்தன. இந்த மனிதர்கள் நாகர்கள் எனப்பட்டனர். ஏன்?


நாகங்கள் எனப்படும் பாம்புகள் பூமிக்கு அடியே வசிக்கின்றன. பொந்துகளில் வசிக்கின்றன. எனவே பொந்துகள் போன்ற குகைகளிலும், பூமிக்கடியில் செல்லும் குகைகளிலும் வசிப்பவர்களை நாகர்கள் என்று சொல்லியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட குகை வாயில்களும், பூமிக்கடியில் செல்லும் அமைப்புகளும் நாகப்பட்டினம், நாகர்கோவில் பகுதிகளில் இருந்திருக்கக்கூடிய சாத்தியம் இருக்கிறது. அந்த இடங்களின் பெயராலும், ஆதொண்டை பிறந்ததும், கடலில் விடப்பட்டு அவன் காஞ்சிபுரம் அருகே கரை சேர்ந்தான் என்று நச்சினார்க்கினியர் சொல்வதாலும், அந்த குகை அமைப்புகள் (நாக லோகம்) இந்தியாவின் தென் கிழக்கு, மற்றும் இந்தியக் கடலின் கிழக்குப் பகுதியிலும் இருந்திருக்கிறது என்பது புலனாகிறது.


அந்தப் பகுதியில் இருப்பது 90 டிகிரி மெரிடியன் மலைத் தொடர்

கடல் மட்டத்துக்கு மேலே இன்று அதில் அந்தமான் தீவுகள் தெரிகின்றன. அந்தத்தொடர் வடக்கு நோக்கி பர்மா, பெங்கால் போன்ற இடங்கள் வரை செல்கிறது. இங்குள்ள ஒரு ஆச்சரியம் என்னவென்றால். இந்தப் பகுதியில்தான் நாகாலாந்து இருக்கிறது. (நாக லோகம் என்பது NAGA ’LAND’ என்று ஆங்கிலச் சொல் சேர்த்து சொல்லப்படுகிறது.) இந்தப் படத்தில் கருப்புக் கட்டத்தில் நாகாலாந்து பகுதி. கங்கை கடலில் கலக்கும் இடத்தில், கடலில் வண்டல் படிந்துள்ளதால், 90 டிகிரி மலை அங்கு வண்டலில் புதைந்துள்ளது. 



நாகாலாந்து என்னும் மாநிலமே மேற்கு வங்காளம், பர்மாப் பகுதிகளில் உள்ள இமயமலைத் தொடர் ஒன்றுடன் ஒன்று மோதி, அதனால் உயர்ந்த இடம். இந்த மோதலில் மலைக்குள் எத்தனையோ இடங்களில் குகைகள் ஏற்பட்டிருக்கலாம். அங்கெல்லாம் வாழ்ந்த மக்கள் நாகர்கள் என்று அழைக்கப்பட்டிருப்பார்கள்


நாகர்களுக்குச் சிவன் தெய்வமாவார். நாகாலாந்தில் சிவ வழிபாடு உண்டு. இந்தப் பகுதியில் ஆரம்பித்து, 90 டிகிரி மலை ஆஸ்திரேலியா வரை செல்கிறது. தன் தொடர்ச்சி, தென் துருவப் பகுதி வரை செல்கிறது. இந்தப் பகுதிக்கு நாகர்கள் சம்பந்தம் உண்டு என்று சொல்லும் வண்ணம் வால்மீகி ராமாயணத்தில் சுக்ரீவன் தரும் வர்ணனை இருக்கிறது.


பகுதி 40 & 41  –இல் மலய பர்வதத்தின் கீழ்த் தாழ்வரைகளுக்கு அப்பால் இலங்கை இருக்கிறது என்கிறான் சுக்ரீவன். அதற்கும் அப்பால் 100 யோஜனை தூரம் கடலைத்தாண்டினால் தெற்குக் கடலில் ஆங்காங்கே மலை முகடுகள் தென்படும். அவை முறையே புஷ்பித மலை, சூர்யவான் மலை, வைத்யுத மலை (வைடூர்ய மலை), மற்றும் குஞ்சர மலை.

குஞ்சர மலையில் அகஸ்தியர் வசிக்குமிடம் இருக்கிறது
அது ஒரு யோஜனை அகலமும், 10 யோஜனை உயரமும் கொண்டது என்கிறான் சுக்ரீவன்.  
அதற்கு அப்பால் ரிஷப மலை இருக்கிறது,  
அது சிவன் குடி கொண்ட இடம் என்றும் , அங்குதான் தென்னன் பாண்டியன் தோன்றியிருப்பான் என்றும் அந்தக் கட்டுரைகளில் கண்டோம்.

அகஸ்தியர் வாழ்ந்த இடத்துக்கும், ரிஷப மலைக்கும் இடையே ஓரிடத்தை சுக்ரீவன் சொல்கிறான். அந்த இடத்தின் பெயர் போகவதி”! 
போகவதி என்பது நாகலோகம் ஆகும்
 அங்கு வாசுகி என்னும் நாகம் வசிக்கிறது. (வால்மீகி ராமாயணம் – 4-41)  
இந்த இடம் இந்தியக் கடலில் குமரிக் கண்டம் என்றும், தென்னன் தேசம் என்றும் நாம் ஆராய்ந்த இடத்தில் உள்ளது என்பதைக் கவனிக்கவும்.
போகவதிக்குத் தெற்கே ரிஷப மலை சொல்லப்படவே, தென்னன் தலைநகரமான தென் மதுரை போகவதிக்கு அருகில் இருந்தது என்று தெரிகிறது.

அமராவதி என்னும் பட்டணத்தை, தேவர்களது தலை நகரம் அல்லது மேலுலக நகரம் என்பார்கள். அதற்கு இணையாக, போகவதியை கீழுலக நகரம் என்பார்கள். அமராவதி தேவர்களுக்கு உரியது என்பதால், போகவதி அசுரர்களுக்கு உரியது என்றாகிறது. ஆனால் மஹாபாரதம், புராணங்கள் போன்றவற்றில், நாகர்கள் உலகம் என்று சொல்லப்பட்டுள்ளதால், இவை எழுந்த காலக்கட்டத்தில் அங்கு வாழ்ந்த மக்கள் நாகர்கள் என்று அழைக்கப்பட்டிருக்க வேண்டும். 

இதனால் தென்னன் தேச மக்களை நாகர்கள் என்று சொல்வது சரியல்ல

நாகர்கள் பாரதம் முழுவதும் இருந்திருக்கிறார்கள்.. பூமிக்கடியில் செல்லும் குகையிலோ, பூமிக் குழம்புகள் உண்டான இடங்களிலோ வாழ்ந்தவர்கள் நாகர்கள் எனப்பட்டிருக்கிறார்கள். இவர்களைப் போல உரகர்கள், பன்னகர்களும் சொல்லப்பட்டிருக்கிறார்கள். ஆனால் நாகர் என்பது இனம் இல்லை. குறிப்பிட்ட வாழ்க்கை முறையைக் கொண்டதால் இவர்களுக்கு நாகர் என்ற பெயர் ஏற்பட்டது
தென் மதுரையில் தமிழன் வாழ்ந்த பொழுது பக்கத்திலேயே நாகர்களும் போகவதியில் பூமிக்கடியிலும், குகையிலும் வாழ்ந்திருக்கின்றனர்
தடாதகைப் பிராட்டியார் உக்கிரகுமரனைக் கருவுற்றிருந்தபோது, 
போக பூமி அரும் பெறல் உணவு” என போக பூமியின் அரிய உணவுகளை உண்டு மகிழ்ச்சியாக இருந்தார் என்று திருவிளையாடல் புராணம் (930) கூறுகிறது.  
திணை என்று நிலத்தைப் பாகுபடுத்தி வாழ்ந்த தமிழன் நாகன் என்ற குறியீட்டில் வரமாட்டான். தமிழன் வாழும் இடத்தில் நாகர் கோவில் இருப்பதாலும், நாகப்பட்டினம் இருப்பதாலும்
அவன் தன்னையும் நாகன் என்று சொல்லிக் கொள்ள முடியாது.


நாக லோகம் எனபதற்கும், போக பூமி என்பதற்கும் சம்பந்தம் உண்டு.

பாம்பின் உடலுக்குப் போகம் என்றும் ஒரு பெயர் உண்டு. பாம்பின் உடலைப்போல நீண்டும் வளைந்தும், பூமிக்கடியிலும் செல்லும் ஒரு அமைப்பாக போகவதிஇருக்க வேண்டும்.

போகம் என்றால் செல்வம் என்றும் ஒரு பொருள் உண்டு. பயிர் விளச்சலைப் போகம் என்றும் நாம் கூறுகிறோம்

போகம் என்பதற்கு இன்பம், புணர்ச்சி, சுகம், புசிக்கை என்றும் அர்த்தங்கள் உண்டு

போகம் என்பதிலிருந்து போக்கியம் என்ற சொல் வந்தது. போக்கியம் என்றால் சுக அனுபவம் என்று பொருள். ஜாதகத்தில் 7-ஆம் இடமான களத்திரத் தானத்தை, போகத்தானம் என்றும் கூறுவர். நாக கன்னிகைகள் கவர்ச்சிக்கும், விரும்பின வாழ்க்கை வாழ்வதற்கும் பெயர் போனவர்கள். எப்படி வடக்கில் தேவ லோகத்துடன் அப்சரஸ்கள் சம்பந்தப்படுகிறார்களோ, அப்படியே தெற்கில் நாக கன்னிகைகள் கருதப்பட்டார்கள்.

அப்படிப் போகம் அனுபவிக்கத்தக்க இடமாக இருந்ததால் அது போகவதி எனப்பட்டது.

புகார் நகரும் அந்தப் போகவதி போன்றதே என்று சிலப்பதிகாரம் கூறுகிறது
அவ்வாறு கூறுமிடத்தே, நாகர் தொடர்பையும் சேர்த்துக் கூறுகிறது.

நாக நீள் நகரொடு நாகனாடதனொடு
போக நீள் புகழ் மன்னும் புகார் நகரது தன்னில்
(சிலம்பு மங்கல வாழ்த்துப்பாடல்- 21& 22)

நாக நாடு என்பது, சுவர்க லோகத்துக்கும் பெயர்,  
அதுவே நாகர் வசிக்கும் கீழ் லோகத்துக்கும் பெயர் என்பதை அகராதியில் காணலாம்
 நாகநாதன் என்பது இந்திரனுக்கு ஒரு பெயர்.  
இந்த வரிகளில் சுவர்கம், மற்றும் நாக நாடான போகவதி போன்ற இடங்களுக்கு ஒப்பான புகார் நகரம் என்று சொல்லப்படுகிறது.  
அவற்றுடன் புகார் ஒப்புமை கூறப்படுவதற்கு ஒரு முக்கியக் காரணம் இருக்கிறது

12 வயதுக்குட்பட்ட ஒரு பெண்ணும் (11 ஆண்டும், 10 மாதங்களுமான
16 வயதுக்குட்பட்ட ஒரு ஆணும் (15 வயதும் 10 மாதங்களுமான
 ஒத்த மரபினர், ஒத்த அன்பினர் ஆகி,  
எல்லா வசதிகளுடனும் இருந்து,  
புணர்ச்சி இன்பம் அடையும் இடம் போக பூமி ஆகும் (பிங்கல நிகண்டு).  
கண்ணகியும், கோவலனும் அப்படிப்பட்ட வசதிகளுடன், சுக வாழ்க்கை வாழ்ந்தார்கள் 
என்று சொல்லுமிடத்தே நாகநாடும், போக பூமியும் வருகிறது.  
அடுத்த அத்தியாயத்தில் (காதை) ‘உத்தர குரு வை ஒத்த போக பூமியில் 
கண்ணகி வாழ்ந்தாள் என்கிறார். 


போக பூமி இந்த உலகில் மொத்தம் 6 இடங்களில் இருக்கின்றன.  
ஒன்று தேவருலகமான உத்தர குரு
நாம் முன்பே இந்தத் தொடரில் ஆராய்ந்த உத்தர குரு
அந்த உத்தர குருவுடன் இளங்கோவடிகள் புகாரை ஒப்பிடுகிறார் . 
 உத்தரகுரு போல தேவகுருஎன்னுமிடமும் போக பூமி ஆகும்.
(இவை தவிர ஆதியரி வஞ்சம், நல்லரி வஞ்சம், ஏம வஞ்சம் (ஹேம வஞ்சம் / இமய மலைப் பகுதி), ரண வஞ்சம் என்பவை பிற போக பூமிகள்)


உத்தரகுரு என்பது பூமியின் வட பாகத்தில் உள்ளது
 தேவ குரு என்பது பூமியின் தென் பாகத்தில் சொல்லப்பட்ட போகவதியாக இருக்க வேண்டும். ஏனெனில் போகி என்றும், நாக நாதன் என்றும் இந்திரனுக்குப் பிற பெயர்கள் உண்டு
(போகிப் பண்டிகை என்பதே இந்தச் சொல்லிலிருந்து வந்திருக்கலாம். செல்வம், வசதி, சுகம் ஆகியவை அனுபவிப்பது போகி ஆகும். பழையன விடுத்து, புது வசதிகளைப் புகுத்தி, அனுபவிக்க ஆரம்பிப்பதால் அது போகி என்றாகி இருக்க வேண்டும்)


நாகம் என்பது, சுவர்கம், ஆகாயம் என்றும் பொருள்படும்.  
பூமியின் வட பாகத்தில் மனித குலம் தழைக்கும் போது,  
வடக்கில் உத்தரகுரு சுவர்கத்துக்கொப்பான முக்கியத்துவம் அடைகிறது.  
பூமியின் சுழற்சியால் பூமியின் அச்சு சாய்மானம் மாறுபடும் போது
 பூமியின் தென் பாகத்தில் சூரிய ஒளி அதிகம் பட்டு,  
அங்கு மனித உற்பத்தி பெருகி, முக்கியத்துவம் அடைகிறது.  
அப்பொழுது இந்திரனும், இந்திர லோகமும், தென் பகுதிக்குப் பெயர்கிறது.


வாமன அவதாரத்தில், பூமியில் முழுவதையும் வாமனர், மஹாபலிச் சக்கரவர்த்தியிடமிருந்து பெற்று விடுகிறார்
பிறகு மஹாபலியை பாதாளத்துக்கு அனுப்பி விடுகிறார்
எனினும் அடுத்த மன்வந்திரத்தில் மஹாபலியே இந்திரனாவான் என்று அவர் வரம் கொடுத்தது இங்கு பொருத்திப் பார்க்கத்தக்கது.


பாதாளம் என்றால் கீழ் உலகம் என்று சொல்லப்படுவது.  
கீழ் உலகம் என்பது நாக லோகத்துக்கு மற்றொரு பெயர்
 இது உலகின் தென் பகுதியில் சொல்லப்படுகிறது
 பூமியின் தென் பகுதியில் மக்கள் பெருக்கம் குறைவதை எடுத்துக்காட்டுவதாக  
வாமன அவதாரம் இருக்கிறது.  

இந்தியக் கடல் பகுதிகள் பெருமளவில் முழுகிப்போய்,  
மக்கள் கூட்டம் வடக்குக்கு இடம் பெயர்ந்தது
 வடக்கில் பனியுகம் வரும் காலத்தில்
 மீண்டும் உலகின் தென் புறத்தில் மக்கள் இடப்பெயர்வும், மக்கள் பெருக்கமும் நடக்கும்.  
கடல் மட்டம் குறைந்து, இன்று முழுகிய பல இடங்களும் 
அப்பொழுது வெளியில் வரலாம்.  
அப்பொழுது உண்டாகும் மக்கள் கூட்டத்துக்கு மஹாபலியானவன் இந்திரன் ஆவான் 
என்பதே வாமன அவதாரத்தின் கருத்தாகத் தெரிகிறது


வாமன அவதாரம் பரசுராமருக்கு முன் வருகிறது. 
7000 வருடங்களுக்கு முன்னால் ராமாவதாரம் நடந்தது என்பதால், 
அதற்கு முன் பரசுராமரும், அதற்கும் முன் வாமனரும் வருகிறார்கள். 
வாமன அவதாரத்தின் போது மஹாபலி பாதாளத்துக்கு அனுப்பப்பட்டான் என்றால், 
அவன் தென் துருவப் பகுதிக்குச் சென்றிருக்க வேண்டும். 
அவன் நாடு கடலுக்குள் மூழ்கி இருந்தால்தான், 
நாம் மேலே சொன்ன இயற்கை அமைப்புகள் சரிவரப் பொருந்தும். 
அவ்வாறு பொருந்தும் வண்ணம், 7000 வருடங்களுக்கு முன்னால் 
இந்தியக் கடல் பகுதியில் 2-ஆம் ஊழி வந்தது என்று முன்பே கண்டோம். (பகுதி 45) 
அந்த ஊழியில் பெருமளவு நிலங்கள் அழிந்து விட்டன. 


ராமாயண காலத்தில் மீதமிருந்த பகுதிகளில், போகவதி எஞ்சி இருந்திருக்கிறது.  

இப்படி மாறி மாறி வரும் இடப்பெயர்வில், தென் பகுதி முக்கியத்துவம் பெற்ற காலத்தில் 
இருந்தது நாகத்தீவுகள்
அதன் தலைநகரம் போகவதி
வட பகுதியில் மக்கள் பெருக்கம் ஏற்பட்ட பொழுது, 
இந்திர லோகம் இந்திர லோகம் முக்கியத்துவம் பெற்றது. 
அதன் தலைநகரம் அமராவதி.

இந்தப் படத்தில் ராமாயண வர்ணனையின் அடிப்படையில் போகவதி காட்டப்பட்டுள்ளது.


பூமியின் அச்சு கருப்பு நிறத்தில் காட்டப்பட்டுள்ளது. 
இந்த அச்சுப் பகுதியின் மேலும், கீழும் (வடக்கிலும், தெற்கிலும்) 
மக்கள் நாகரிகம், குறிப்பாக வேத மத நாகரிகம், மாறி மாறி இடம் பெயர்ந்து கொண்டிருக்கிறது. இவை தவிர வேறு இடங்களிலும் வேத மதம் பின்பற்றப்பட்டிருக்கலாம். 
ஆனால் இந்த அச்சுப் பகுதிதான் புண்ணிய தேசம். 
இங்குதான் புண்ணிய நதிகள், புண்ணியத்தலங்கள் இருக்கின்றன. 
அது எப்படி என்று சொல்ல வேண்டுமென்றால், 
வேத மதம் சொல்லும் பிரபஞ்சப் படைப்பை நாம் விவரிக்க வேண்டும். 
சுருக்கமாக அதைச் சொல்வதென்றால், 
இந்த அச்சுப் பகுதியில் மேரு செல்கிறது. 
அதன் உச்சி மேருவின் சிகரமான வட துருவம். 
பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் நாராயணனது 
நாபிக் கமலத்தின் வழியாகப் பாயும் உயிரோட்டம் 
இந்த அச்சின் வழியாகச் சென்று, 
எங்கோ அதன் உச்சியில், நம்மால் கணிக்க இயலாத தொலைவில் 
பிரபஞ்சத்தை வளர்த்துக் கொண்டிருக்கும் நான்முகனை அடைகிறது.   


இந்த அச்சுப் பாதையை ஜோதிட சிந்தாந்தங்களில் அடையாளம் காட்டியிருக்கவே, 
இந்தப் பாதையில் உள்ள இடங்கள் முக்கியமானவை என்று தெரிகின்றன.
இந்தப் பாதையில் உள்ள பாரதத்தில் மட்டுமே இன்றைக்கு வேத மதம் இருக்கிறது.  
அதைத் திராவிடவாதிகளும், மற்றவர்களும் உதாசீனம் செய்யலாம். 
ஆனால் அந்நாளைய மக்கள் பாரதத்தின் மேன்மையை உணர்ந்திருந்தார்கள். 
அதனால் இந்த பாரதத்தைக் கைப்பிடிக்கச் சண்டையிட்டார்கள். 
இதைப் பற்றி திருதராஷ்டிரனிடம், சஞ்சயன் இவ்வாறு கூறுகிறான்:-
”பாரத வர்ஷமானது தேவனான இந்திரனுக்கும், வைவஸ்வத மனுவுக்கும்,
வேனனுடைய குமாரனான ப்ருதுவுக்கும், 
மஹாத்மாவான இக்ஷ்வாகுவுக்கும், யயாதிக்கும், 
அம்பரீஷனுக்கும், மாந்தாதாவுக்கும், 
நஹுஷனுக்கும் முசுகுந்தனுக்கும், 
உசீனர தேசாதிபதியான சிபிக்கும், ரிஷபனுக்கும், 
ஐலனுக்கும், ந்ருகனென்னும் அரசனுக்கும், 
குசிகனுக்கும், மஹாத்மாவான காதிக்கும், 
ஸோமகனுக்கும், திலீபனுக்கும், 
மிக்க பலசாலிகளான மற்ற க்ஷத்திரியர்களுக்கும் பிரியமானது”

 
இவ்வாறு சொல்லிவிட்டுத்தான் பாரதத்தில் இருந்த புண்ணிய 
நதிகளைப் பட்டியலிடுகிறான் சஞ்சயன். 
இதன் காரணமாகவே 
பாரதத்தின் மேருவான இமயத்தில் மூவேந்தர்களும், தத்தம் இலைச்சினையைப் பொறித்தனர். இத்தகைய மேன்மையை அறியாத திராவிடவாதக் கூட்டத்திற்குச் செவி சாய்த்து, 
நாம் இருக்கும் நாட்டின் முக்கியத்துவத்தை, 
அதன் மேன்மையை மறந்து விட வேண்டாம். 

இனி சாகத்தீவின் விவரங்களைக் காண்போம்..