சனி, 8 ஜனவரி, 2011

29. தஸ்யுக்கள் யார்?ரிக் வேதத்தை ஒரு வரலாற்றுக் கவிதையாக பாவித்ததால், ஐரோப்பியர்களது அபத்தக் கற்பனையில் ஆரிய- தஸ்யு  போராட்டம் உண்டானது. அதைப் பற்றி அறியும் முன், மஹாபாரதத்திலிருந்து ஒரு சம்பவத்தைக் காண்போம். ஒரு முறை வேதங்களைத் தொகுத்த வியாச முனிவர், தன் மகன் சுக முனிவரைக் காண இமய மலையில் இருக்கும் அவரது ஆஸ்ரமத்துக்கு வந்தார். அப்பொழுது பலமாகக் காற்று வீசிக் கொண்டிருந்தது. ஆஸ்ரமத்தில் சுகரது மாணவர்கள் வேதம் ஓதிக் கொண்டிருந்தனர். வேதத்தை ஒன்று கூடி கோஷ்டியாக ஓதுவார்கள். வேதம் ஓதுவதை வேத கோஷம் என்றே கூறிப்பிடுவார்கள். அவர்கள் ஓதிக் கொண்டிருப்பதைக் கேட்ட வேதவியாசர், சுகரிடம், ஓதுவதை நிறுத்தச் சொன்னார். அப்படிச் சொன்னதன் காரணத்தையும் சொன்னார். (மஹாபாரதம் சாந்தி பர்வம் அத் 336)


அப்பொழுது சூறாவளி போல பலமாகக் காற்று வீசிக் கொண்டிருந்தது. அப்படி பெருங்காற்று அடிக்கையில் வேதம் ஓதக் கூடாது என்று சொன்னார். பிரபஞசம் தொடங்கி பூமி வரை ஏழு விதமான காற்று (சப்த வாயு) இயங்குகின்றன. அவற்றுள் ஒன்று நம்மைச் சுற்றியுள்ள காற்று ஆகும். அந்தக் காற்று சுகமாக வீச வேண்டும். இந்த வேதமானது படைப்புக் கடவுளான பிரம்மனின் மூச்சுக் காற்றாகும். பலமான காற்று வீசும் போது, நம் மூச்சு அலைபாய்வதைப் போல, பலமான காற்றில் வேதகோஷம் அலைக்கழிக்கப்பட்டு, அதனால் உலகம் பீடை அடையும். வேதமும் பீடிக்கப்பட்டு, அதனால் உலகமும் பீடிக்கப்படுவதால், காற்று நின்றபின், வேதம் ஒதுங்கள் என்றார்.


வேதம் பயில்வதில் உச்சரிப்புக்கும், ஒசைக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. வியாசர் சொல்லியிருப்பதன் மூலம், பெருங்காற்று அடிக்கும் போது வேதம் எழுப்பும் ஒலி அலைகள் சிதறடிக்கப்படுகின்றன, அதனால் வேத கோஷம் தரக்கூடிய பலன்கள் கிடைக்காமல் போகும். மேலும், சிதறடிக்கப்பட்ட வேதகோஷ ஒலி அலைகளால் மக்களுக்கும், துன்பம் நேரிடும் என்பது புலனாகிறது.


இந்த சம்பவத்தைச் சொல்வதற்கு ஒரு காரணம் இருக்கிறது. குறிப்பிட்ட ஒலி அலைகளை எழுப்புவது வேத கோஷத்தின் ஒரு முக்கிய அங்கமாகும். அதனால்தான், வாய் வழியாகச் சொல்லி சொல்லியே வேதத்தைக் கற்கிறார்கள். ஒவ்வொரு வேதத்திலுமே உச்சரிப்பு வேறு பாடு உண்டு. யஜூர்வேததில் மெல்லின அட்சரங்களுக்கு ஒரு தனி அழுத்தம் கொடுப்பார்கள். அது ரிக் வேதத்தில் காணப்படாது. சாம வேதத்தில் அது கீதமாக அமைகிறது. மேலும் ஒரே வரியைப் பல முறை வேறு வேறு தொனிகளில் ஓதுவார்கள். குறைந்தது 8 வருடங்கள் முதல்  14 வருடங்கள் வரை இப்படி ஓதுவதிலேயே கவனம் செலுத்துவார்கள். அப்படி ஓதுபவர்களிடம் என்ன ஓதினீர்கள் என்று கேளுங்கள். இன்ன வேதத்தில் இன்ன பிரிவினை ஓதினேன் என்பார்களே தவிர ஓதின வேதத்தின் பொருள் என்னவென்று தெரியாது. என்றைக்குமே பொருள் படித்து வேதம் ஓதினதில்லை.


ஒலி அலைக்குத்தான் அங்கே முக்கியத்துவம் என்பதால் அந்த ஒலி அலைக்கு ஏற்றாற்போலத்தானே சொற்கள் இருக்கும்?
ஆரியன் அல்லது இந்திரன் அல்லது தஸ்யு என்ற சொற்கள் காணப்பட்டால், அவை இடத்திற்கு ஏற்றாற்போல, எந்த ஒலி அலையை அல்லது ஒலி அதிர்வை உண்டாக்க வேண்டுமோ அத்ற்கு ஏற்றாற்போல அமைக்கப்பட்டிருக்கும்.
சமீபத்தில் இந்த உண்மையை அறிவியலும் கண்டு கொண்டது.
அக்னி ஹோத்திரம் என்னும் ஹோமத்தை அறிவியலார் ஆராய்ந்தார்கள்.
1984 ஆம் வருடம் போபால் நகரில் விஷ வாயு கசிந்து மக்கள் கூட்டம் கூட்டமாக இறந்துபோனார்கள். ஆனால் இரண்டு குடும்பத்தினர் மட்டும் உயிருடன் இருந்தார்கள். விஷ வாயுக் கசிவு ஆரம்பித்ததும், என்ன செய்வது என்று தெரியாமல், தாங்கள் தினசரி செய்து வரும் ஹோமமான அக்னி ஹோத்திரம் என்னும் ஹோமத்தைச் செய்தார்கள். ஹோமாக்கினியை அடுத்து இருந்த அவர்களுக்கு ஒன்றும் ஆகவில்லை.
வியாசர் சுகருக்குச் சொன்னதை இங்கு நினைவு கூறலாம்.
அன்று போபாலில் காற்று பீடிக்கப்பட்டிருந்தது.
வேத கோஷம் செய்யவில்லை என்றாலும், வேத மந்திரங்களைக் கொண்டு செய்யப்பட்ட ஹோமம் அவர்களைக் காப்பாற்றியது.

அறிவியல் ஆராய்ச்சியின் பயனாக உருவாக்கப்பட்டுள்ள அக்னிஹோத்திர ஹோம குண்டம், சாமான்கள்.


அந்த ஹோமத்தை விஞ்ஞானிகள் ஆராய்ந்து, அதன் உன்னத பலன்களைக் கண்டு பிடித்தார்கள். அந்த ஆராய்சியின்போது அதில் ஓதப்படும் வேத மந்திரங்களையும் ஆராய்ந்தார்கள். குறிப்பாக இரண்டு வரி மந்திரங்களால் பலன் ஏற்படுகிறது என்று கண்டார்கள். அந்த வரிகளை சமஸ்க்ருதம் அல்லாத பிற மொழிகளில் மொழி பெயர்த்து ஆராய்ந்தார்கள். லத்தீன், கிரேக்கம், தமிழ், மற்றும் உலகின் பழைய மொழிகளிலும் மொழிபெயர்த்து ஆராய்ந்தார்கள். அவை எதற்கும் பலன் ஏற்படவில்லை. சமஸ்க்ருத்தில் ஒரு குறிப்பிட்ட தொனியில், குறிப்பிட்ட உச்சரிப்பில் சொன்னபோதுதான் அந்த ஹோமத்திற்கே பலன் ஏற்பட்டு, அதனால் காற்றில் சில மாற்றங்கள் நிகழ்ந்தன. அந்த மாற்றங்கள் விஷத்தையும் முறியடிக்கக்கூடியவையாக இருந்தன.இதன் மூலம் வேத மந்திரங்களுக்கு அவற்றின் அட்சரங்களும், அவற்றை உச்சரிக்கும் விதமும் ஆதாரமானவை என்று தெரிகின்றன. வேதத்தின் இந்தக் குணத்தைத் தெரிந்து கொண்ட எவனும் அதை மொழி பெயர்த்து அதன் அடிப்படையில் ஒரு வரலாற்றை உருவாக்க மாட்டான்.


வேதத்தைத் தவறாகப் பயன்படுத்தக்கூடும் என்பதாலேயே, அதை எல்லாருக்கும் கற்றுக் கொடுக்கவில்லை.
விரதம் போல, ஒரு நியமத்துடன் அதைக் கற்றுக் கொள்கிறவன் எவனோ அவனுக்கே கற்றுத்தரப்பட்டது.
வேதத்தினால் பீடையைப் போக்க முடியும்.
தவறான பயன்பாட்டால் பீடையை உண்டாக்க முடியும்.
மிலேச்சன் கையில் போன வேதம் அப்படித் தவறான பயன்பாட்டுக்கு உள்ளாக்கப்பட்டது.


மொழி ஒப்பீடு என்றும், மொழி ஆராய்ச்சி என்றும் வேததை ஆராய்ந்த ஐரோப்பியர்கள், அதில் சண்டையைக் கண்டார்கள். இந்திரன் ஒரு படை வேந்தனாக இருந்து பலரையும் யுத்தத்தில் வெல்வதாக மொழி பெயர்பு செயதார்கள். அவர்கள் மாஹாபாரதத்தை ஆராய்ந்துவிட்டு, வேதத்தில் இதைப் படித்திருந்தால் உண்மையைப் புரிந்து கொண்டிருப்பார்கள்.


மஹாபாரதம், சாந்தி பர்வம் அத்தியாயம் 98 இல், இந்திரன் அம்பரீஷனுக்கு யுத்தம் பற்றி விளக்குகிறான்.
அதில் யுத்தத்தை யாகத்துடன் ஒப்பிடுகிறான்.
யுத்தம் என்பது யாகம் போன்றது என்கிறான்.
யுத்ததில் பயன்படும், யானை, குதிரை, தேர் ஆகியவை முதற்கொண்டு, எதிரைப் பிளக்கப் பயன்படும் ஆயுதங்கள், ஹோம குண்டம், அதில் சொரியும் அவிர்பாகம் என்று பல விவரங்களையும் ஒரு யாகத்தில் செய்யப்படுபவையுடன் ஒப்பிடுகிறான்.
அதைப் படித்து, ரிக் வேதத்தில் வரும் போர்ச் செய்திகளையும் படித்தால், போரைப்பற்றிச் சொல்வது போல யாகத்தைப் பற்றி வேதம் சொல்கிறது என்பது புரியும். யுத்ததில் ‘வெட்டு, பிள என்று கேடகப்படும் சப்தமானது, யமன் வரவுக்குக் காரணமான சாமகர்கள் செய்யும் சாம கானம் ஆகும் என்கிறான் இந்திரன்.


இந்த யுத்ததில் தஸ்யுக்கள் அழிக்கப்படுகிறார்கள் என்று வருவது, ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்களது கவனத்தைக் கவர்ந்தது.
ரிக் வேதத்தில் மொத்தம் 85 இடங்களில் தஸ்யு என்ற சொல் வருகிறது. இன்று நம்மிடையே இருக்கும் ரிக் வேதத்தில் 1,028 பாடல்கள் உள்ளன. இவற்றில் 10,600 மந்திரங்கள் உள்ளன.
ஒவ்வொரு மந்திரமும் இரண்டு வரிகளாக அமைந்துள்ளன.
அதாவது 21,200 வரிகள் உள்ளன.
21,200 வரிகளில் 85 இடங்களில் தஸ்யு என்ற சொல் வருகிறது.
அதாவது 0.4% அளவிலேயே வரும் ஒரு சொல்லுக்கு எந்த அளவு முக்கியத்துவம் இருக்கும்?
தஸ்யூக்கள் என்பவர்களை ஒடுக்கி, அவர்கள் இருந்த இடங்களைக் கைப்பற்றிய வெற்றிக் காவியமாக ரிக் வேதம் இருக்குமானால், அந்தப் பெயர் மட்டுமல்ல, யுத்தம் குறித்த வர்ணனைகள் நிறைய இருந்திருக்க வேண்டும் அல்லவா?


தஸ்யூ என்ற சொல்லை எடுத்துக் கொண்ட ஐரோப்பியர், எதிரிகளாகவும், அழிக்கப்பட்டவர்களாகவும் சொல்லப்படும் பிற சொற்களை ஏன் எடுத்துக் கொள்ளவில்லை?
ஏனென்றால், வெள்ளை நிறத்துடன் தொடர்பு கொண்டவர்களாக ஆரியன் என்ற சொல்லையும், அந்த ஆரியன் தங்களது ஆரிய இனம் என்றும் அவர்கள் முடிவு கட்டிவிடவே, ஒரு எதிரியைத் தேடும் அவசியம் அவர்களுக்கு ஏற்பட்டது.
வெள்ளைக்குக் கருப்பு ஆகாது.
தஸ்யு என்று வருமிடங்களில் கருப்புடன் தொடர்புபடுத்தி இருந்தது.


கிருஷ்ணயோனி, கிருஷ்ண கர்ப்பம் போன்ற சொற்கள் தஸ்யூவை ஒட்டி வந்துள்ளன. கிருஷ்ண என்றால் கருப்பு என்று அர்த்தம்.
ஆரியப் படையெடுப்பு நடந்தது என்று சொல்லும் ஆராய்ச்சியாளர்கள் ‘விருத்திராசுரனைக் கொன்ற இந்திரன் இருண்ட கர்ப்பத்தில் (அ) கர்ப்பத்தில் இருந்த கரிய தஸ்யுவைக் கொன்றான் என்று அர்த்தம் செய்துக் கொண்டு, தஸ்யூக்களை ஆரியர்கள் இந்திரன் உதவியுடன் கொன்று ஆக்கிரமிப்பு செய்தனர் என்கின்றனர். (ரிக் 2-20-7)


விருத்திராசுரன் யார் என்று முன்னம் பார்த்தோம். அவனை இந்திரன் கொன்றான் என்றால் எப்படி அர்த்தம் கொள்ளவேண்டும் என்று பார்த்தோம். இங்கு கிருஷ்ணயோனி என்பதை அவர்கள் நம் வேத தரும நூல்களைப் படித்து விட்டுப் பொருள் சொல்லி இருக்க வேண்டும்.


இவர்கள் கிருஷ்ண யோனி, கிருஷ்ண கர்பம் என்னும் சொற்களை மட்டும்தான் ரிக் வேதத்தில் பார்த்தார்கள். நம் நூல்களில் இவற்றுடன், கிருஷ்ணகதி, கிருஷ்ண நரகம் என்றெல்லாம் வருகிறது. மஹாபாரதத்தில் சனத்குமாரர், அசுர குருவான சுக்கிராச்சாரியாருக்கும், விருத்திராசுரனுக்கும் மோக்ஷ தர்மத்தைச் சொல்லும் பொழுது, மக்களுக்கு உள்ள வர்ணங்களை (நிறங்கள்) சொல்லுகிறார். (சாந்தி பர்வம் அத் 286)


ஜீவர்கள் 6 நிறங்களில் பிறக்கிறார்கள். அவை கிருஷ்ண வர்ணம் என்னும் கருப்பு வர்ணம், தூம்ர வர்ணம் என்னும் புகை போன்ற நிறம், சகிக்கக்கூடிய சிகப்பு, நடுத்தரமான நீலம், சுகமாயுள்ள மஞ்சள் நிறம், மிகவும் சுகமாயுள்ள வெண்மை.


இவை தோல் நிறமல்ல. ஒவ்வொரு நிறமும் ஒவ்வொரு குணத்தைக் காட்டுவது. வறுமையின் மிறம் சிகப்பு என்று படம் எடுத்தவன் தமிழன். அவனுக்கு நிறக் குழப்பம் வரலாமா? கோபத்தின் நிறம் சிகப்பு. தூய்மையின் நிறம் வெளுப்பு. மங்கலத்தின் நிறம் மஞ்சள். இப்படி எத்தனை வர்ணனைகள் நம் கலாச்சாரத்தில் உள்ளன. இவையெல்லாம் தெரியாத அன்னியர்கள் சொல்வதை கேட்டுக் கொண்டு இன்னும் பேசித்திரிகிறார்களே இந்தத் திராவிடவாதிகள், அவர்களுக்கு என்ன நிறம்?


சனத்குமாரர் சொல்கிறார், ஜீவர்கள் மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்னும் 14 விஷயங்களால் உந்தப்பட்டு செயல்கள் செய்கிறார்கள். அதன் காரணமாக மானுடத்தன்மையிலிருந்து விலகினால் கிருஷ்ண வர்ணம் அடைவார்கள். கிருஷ்ண வர்ணத்தினுடைய கதி இழிவானது.
அதில் இருக்கிறவன், நரகத்தில் முழுகுகிறான்.
கிருஷ்ண வர்ணத்தில் இருப்பவனால் மேலே எழும்ப முடியாது.
தாமச குணம் அதிகமாக இருப்பதால் கிருஷ்ண வர்ணம் அமைகிறது. தாமசத்தை விலக்க, விலக்க கொஞ்சம் கொஞ்சமாக அவன் மேலே எழுகிறான்.
அப்பொழுது அவனுக்கு தாவர ஜென்மம் அமைகிறது. தாவர ஜென்மத்தைத் தூம்ர வர்ணம், அதாவது கருப்பில்லாமல், ஆனால் புகை மூட்டம் போன்ற சாம்பல் வர்ணம் அது.
முழு தாமசம் என்ற நிலை குறைந்து அவன் தாவரமாக, பூமியிலிருந்து மேலே வளர்கிறான்.


தாவர வர்கங்களில் மீண்டும் மீண்டும் பிறந்து தாமசம் குறைந்து ராஜசம் தூக்கலாக இருக்கும் போது சிகப்பு வர்ணத்தில் பூமியில் நடமாடுகிறான். இது விலங்காகப் பிறக்கும் காலம். நம்முள் இருக்கும் ஜீவனே தாவரமாகவும், விலங்காகவும் பிறக்கிறது என்பது வேத தருமக் கொள்கை.


விலங்கு ஜென்மத்தில் ராஜசத்தைக் கழித்த பிறகு, சத்துவம் தலைக் காண்பிக்கும் போது, மனிதனாக நீல வர்ணத்தில் பிறக்கிறான். சத்துவம் மேலிட்டால் அவன் மஞ்சள் வர்ணத்தில் தேவனாகப் பிறக்கிறான். அதையும் தாண்டி சுத்த சத்துவமாக ஆகும் போது வெண்மை நிறமான பரப்பிரம்மாக அவனுக்குள் ஐக்கியமடைகிறான்.


இதுவே வேத தருமத்தின் நிறக் கொள்கை.
கிருஷ்ண யோனியில் இருக்கும் தஸ்யு அழிக்கப்படவேண்டும் என்று ரிக் வேதம் சொல்கிறது.
சனத்குமாரர் சொல்வதுபடி, அழிக்க்ப்பட வேண்டியது தாமச குணம்.
அது நம்மை என்றும் இருளில் மூழ்கடித்து விடும்.
தாமச குணத்தின் காரணமாக நாம் செய்யும் செயல்கள் நம்மை நரகத்தில் ஆழ்த்தும்.
இந்திரியங்களுக்கு அதிபதியான இந்திரன் உதவியுடன், தாமச தஸ்யூவை அழிக்கவேண்டிச் செய்யும் பிரார்த்த்னையே அந்த ரிக் வேத வரிகள்.


உண்மையில், தஸ்யூ என்று வரும் இடங்களையெல்லாம் பார்த்தால், அவை சில குறிப்பிட்ட அடைமொழிகளுடன் வருகின்றன.
‘அழிப்பவை அல்லது அழிக்கப்பட வேண்டியவை என்ற பொருளில் பல இடங்களில் வருகிறது.
தஸ்யு என்னும் சம்ஸ்க்ருதச் சொல்லுக்கு ‘தஸ் என்பது வேர்ச் சொல்.
அழி என்னும் பொருளைக் கொண்டது.
தஸ்யு என்பது தாஸ் என்றும் விரிகிறது.
ரிக் வேதத்தில் தாஸ் என்று வரும் இடங்களில் அமைதிக்கு எதிரி என்னும் பொருள் தரும் பதங்களை அடைமொழியாகக் கொண்டு வருகிறது.
இந்தச் சொல்லை தமிழன் என்றோ, திராவிடன் என்றோ சொல்லும் வண்ணம் எந்தக் குறிப்பும் இல்லை.
கர ஓசை காரணமாக, தஸ்யு, திராவிடன், தமிழன் என்று ஐரோப்பியர் ஒற்றுமை கூறிவிட்டனர்.
அவர்கள் செய்த மொழி ஆராய்ச்சி அவ்வளவுதான்.


தஸ்யூ என்பது இருளில், இருக்கும் நிலை என்பதை நிலைநாட்டும் வண்ணம் ஒரு முக்கிய மந்திரம் ரிக் வேதத்தில் வருகிறது. (5-14-4)

ஒளியானது தஸ்யுவான இருட்டை அழிக்க அங்கே அக்னி தேவன் ஒளி வீசினான் என்கிறது இந்த மந்திரம்.

தஸ்யூவுடன் சொல்லப்படும் குணங்களாக, திருட்டும், கயமையும், நற்செயல் செய்யாமையும், ஆன்மீக உணர்வு இல்லாமையும் ஆகிய தாமச குணங்கள் அடைமொழிகளாக வருகின்றன.
அசுர குணம் என்று முன்னம் பார்த்தோமே அதற்கு ஈடாக தஸ்யு என்பது வருகிறது.
உண்மையில் அசுரர்கள் என்று யாரும் இல்லை.
மனிதனே அசுரனாகிறான்.
மனிதனே தேவனாகிறான் என்று சாந்தோக்கிய உபநிஷத் கூறுவதைக் கண்டோம்.
வழக்கில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருவது அசுரன் என்ற சொல்லே.
தஸ்யு அல்ல.
ஏனென்றால், அசுரன் என்பவனும், வேத யாகங்களைச் செய்பவன். பிராம்மணனாகப் பிறந்த ராவணன் வேத வேள்விகள் செய்தவன்.
குரூர குணத்தால் அவன் அசுரன் எனப்பட்டான்.


தஸ்யூக்கள் விஷயம் வேறு.
அவர்கள் வேத யாகங்களில் பற்றில்லாதவர்கள்.
அவர்களைப் பற்றிக் கூறும் வேத வரிகளில் ‘அ-யஜ்வா என்ற பதம் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.
அ-யஜ்வா என்பது யஜ்வா என்பதன் எதிர்ப்பதம்.
யஞ்யங்களை செய்யாதவன் என்று பொருள்.


இதைப் போல ‘பிரம்மத்விஷ் என்னும் பதமும் தஸ்யுவைக் குறித்து வருகிறது.
மத நம்பிக்கை இல்லாதவன், ஆன்மீக எண்ணம் இல்லாதவன் என்று இதற்குப் பொருள்.


இன்றைக்குத் தன்னைத் திராவிடவாதி என்று சொல்லிக் கொள்பவர்கள் வெளிப்பார்வைக்கு அ-யஜ்வா வாகவும், நாத்திகமும் பேசலாம். ஆனால் உள்ளுக்குள் அவர்கள் செய்யும் வழிபாடு ஊர்ப்பிரசித்தம்.
அவர்களை ஏன் பார்க்க வேண்டும்?
சிந்து சமவெளியில் தங்கள் முன்னோர்கள் இருந்தார்கள் என்று சொல்லிக் கொள்கிறார்களே அவர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்று பார்ப்போம்.
அவர்கள் அ-யஜ்வாவாகவா இருந்தார்கள்?


சிந்து சமவெளி நாகரிகப் பகுதிகளில் யாக சாலைகள் தென்படுகின்றன. ராஜஸ்தானில் காலிபங்கன் என்னும் இடத்திலும், குஜராத்தில் லோதால் என்னும் இடத்திலும் சிந்து வெளி மக்கள் பயன்படுத்திய யாகசாலைகள் தொல் பொருள் ஆராய்ச்சிக் கழகத்தால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அந்த மக்கள் தஸ்யு என்னும் அ-யஜ்வாவாக இருந்திருந்தால், அங்கு யாகசாலைகள் எப்படி இருக்க முடியும்?
இவை ஆரியர்கள் வந்த காலம் என்று சொல்லப்பட்ட கி-மு-1500 க்கு முன் எழுந்தவை அல்ல.
சிந்துவெளி நாகரிகத்தின் ஆரம்பக் கட்டத்திலேயே இவை காணப்படுகின்றன.


இந்தியாவின் மேல் பகுதியில் ராஜஸ்தானத்தில் உள்ள சிவப்புப் புள்ளி காலிபங்கன்.
குஜராத் பகுதியில் உள்ள சிவப்புப் புள்ளி லோதால்.


இந்த நாகரிகம் தோன்றியது என்று சொல்லப்படும் கி-மு 3000 களிலேயே, காலிபங்கன் என்னும் இடத்தில் பல யாக சாலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.


ராஜஸ்தானில் உள்ள இந்தப் பகுதியில், வீடுகளிலும், பொது இடங்களிலும், ஊருக்குச் சற்றுத் தள்ளியும், ஹோம குண்டங்கள் அமைப்பு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. வேத முறைப்படி செய்யும் ஹோமங்களில் இந்த ஹோம குண்டங்கள் உள்ளன. கிழக்கு முகமாக உட்கார்ந்து செய்யும் வண்ணம் இருப்பது மட்டுமல்லாமல், பல காலம் உபயோகத்தில் இருந்த அறிகுறிகள் தென் படுகின்றன. இந்த இடம் சிந்து சமவெளியின் ஆரம்ப காலக் கட்டம் என்று கருதப்படுகிறது. கி-மு 2600 இல் இந்த இடம் காலியாகிவிட்டிருக்கிறது. காரணம் அங்கு வந்த நிலநடுக்கம் என்று தெரியவந்துள்ளது.தஸ்யுக்கள் அ-யஜ்வா, மற்றும் பிரம்மத்விஷ் (நாத்திகர்கள் அல்லது மத நம்பிக்கை அற்றவர்கள்) என்றால், சிந்து சமவெளி மக்கள் தஸ்யூக்கள் அல்லர். 
இங்கு வாழ்ந்த மக்கள் திராவிடர்கள் என்றால் அவர்கள் தஸ்யூக்கள் அல்லர். 
ஆரியர்கள் வந்து வேதத்தைத் தருவதற்கு முன்பே அங்கிருந்த மக்கள் வேத தருமத்தைப் பின் பற்றியிருக்கிறார்கள் என்பதற்கு காலிபங்கன் முக்கிய சாட்சி.


காலிபங்கனைப் பற்றிய இந்த விவரத்தை டாக்டர் பி.பி.லால் அவர்கள் தலைமையில் கண்டு பிடித்த இந்தியத் தொல்பொருள் ஆராய்ச்சிக் கழகம் ஏன் இந்த விவரத்தைப் பரப்பவில்லை?

நம் பாடப் புத்தகங்களில் ஏன் திருத்தத்தை கொண்டுவரவில்லை?

சிந்து சமவெளி நாகரிகம் வேத தரும நாகரிகம்தான் என்று ஏன் அதிகார பூர்வமாக அறிவிக்கவில்லை?18 கருத்துகள்:

 1. திருமதி ஜெயஸ்ரீ சாரநாதன் அவர்களே,

  அருமையாக கூறியிருக்கிறீர்கள்.நன்றி.

  சிந்து சமவெளிப் பகுதியில் யாகம் நடந்துள்ளது என்பதை இந்த திராவிட பகுத்தறிவு வாதிகள் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர்.ஏன் ??? உண்மையை ஏற்றுக் கொள்ள இந்தப் பகுத்தறிவு வாதிகளுக்கு ஏன் தயக்கம்???

  பதிலளிநீக்கு
 2. "அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
  உயிர் செகுத்து உண்ணாமை நன்று ". என
  திருவிடத்தான் திருவள்ளுவர் கூறியிருப்பதால் சிந்து சமவெளி
  வேள்வி முறைகளை தமிழர்கள் ஒதுக்கி இருக்கலாம்..
  ஆனால் தமிழன் வேள்வியும் செய்யவில்லை, உயிர் செகுத்து
  உண்ணுவதையும் நிறுத்தவில்லை..

  பதிலளிநீக்கு
 3. //ஆனால் தமிழன் வேள்வியும் செய்யவில்லை//

  அப்படியா?
  ”வெற்றி வேல் செழியன் (பாண்டியன் நெடுஞ்செழியன் தம்பி) நங்கைக்கு (கண்ணகி) பொற்கொல்லர் ஆயிரவரைக் கொன்று களவேள்வியால் விழாவெடுத்து சாந்தி செய்ய” என்று உரை பெறு கட்டுரையிலும்,

  ” கொற்கையிலிருந்த வெற்றி வேற் செழியன்
  பொற்றொழிற் கொல்லர் ஈரைஞ்ஞூற்றுவர் (2 x5 x 100 = 1000)
  ஒரு முலை குறைத்த திருமா பத்தினிக்கு
  ஒரு பகலெல்லை உயிர்ப் பலியூட்டி”
  என்று
  நீர்ப்படைக் காதையிலும்

  1000 பொற்கொல்லரை உயிர்ப்பலி கொடுத்த விவரத்தை,
  மொத்தம் 2 இடங்களில் சிலப்பதிகாரம் சொல்கிறதே?

  வேட்டுவவரியில், மயிடனை அழித்த மஹிஷாசுர மர்த்தினிக்கு, குருதிப் பலி கொடுத்த விவரம் மீண்டும் மீண்டும் சொல்லப்படுகிறதே?

  இன்னும் பல வேள்விகள் சங்க நூல்களில் சொல்லப்பட்டுள்ளன.
  பஃறுளி ஆற்றங்கரையில் இருந்த கவாடத்தைத் தலைநகரமாகக் கொண்ட புகழ் பெற்ற பாண்டிய அரசன் பெரு வழுதிக்குப் ‘பல்யாக சாலை முது குடுமி” என்ற பட்டப் பெயரே இருந்தது. வேள்விகள் செய்யாமல் இந்தப் பட்டப் பெயர் வருமா?

  மேலும் களவேள்வியைப் பற்றிச் சூத்திரங்கள் இருக்கின்றன.

  அவி சொரிந்து என்று திருக்குறள் தேவனார் அப்படிச் சொன்னதற்குக் காரணம், இப்படியெல்லாம் இருந்தாலும், கொல்லாமையைக் கடை பிடியுங்கள் என்பதே. அவர் வேள்விகள் செய்யாதீர்கள் என்று சொல்லவில்லை. அப்படிச் சொல்வதாக இருந்தால் அவர் அறம், பொருள், இன்பம் என்று மூன்று புருஷார்த்தங்களை முப்பாலாகக் கொடுத்த்கிருக்க மாட்டார்.

  அவர் புலால் உண்ணாமையையும் சொல்லியுள்ளதால், உயிர் செகுத்து உண்பவன் திருக்குறள் வழி நடக்கவில்லை என்பதாகிறது.

  பதிலளிநீக்கு
 4. //கவாடத்தைத் தலைநகரமாகக் கொண்ட புகழ் பெற்ற பாண்டிய அரசன் பெரு வழுதிக்குப் ‘பல்யாக சாலை முது குடுமி” என்ற பட்டப் பெயரே இருந்தது. வேள்விகள் செய்யாமல் இந்தப் பட்டப் பெயர் வருமா? //
  பாண்டிய அரசன் பெரு வழுதியின் ஆண்டு காலம் அல்லது அவனது ஆட்சிகாலம் என்ன?
  சிவனைப் பற்றிய செய்திகள் ஏதேனும் உள்ளனவா?

  பதிலளிநீக்கு
 5. கபாடபுரததை ஆண்டவனாதலால், அவன் காலம் 3500 ஆண்டுகளுக்கு முற்பட்டது. இந்தக் காலக்கணக்கு, தென்னாட்டுடைய சிவனைப் பற்றிய செய்திகள், கபாடபுரம் ஆகியவை குறித்து பல கட்டுரைகள் இந்தத் தொடரில் இருக்கின்றன. படிக்கவும்.

  பல்யாகசாலை என்னும் அடைமொழியை இந்த அரசன் பெற்றமை புற நானூறு 15 ஆம் பாடலில் தெரிகிறது. யூபத்தூண்கள் நட்ட பல வேள்விக் களம் கண்டவன் அந்த அரசனாவான்.

  “அருஞ் சீர்த்திப் பெருங்கண்ணுறை
  நெய்ம்மலி யாவுதி பொங்கப் பன்மாண்
  வியாச் சிறாப்பின் வேள்வி முற்றி
  யூபநட்ட வியன் களம் பலகொல்” (பு-நா-15)

  கி.பி 8 ஆம் நூற்றாண்டு வேள்விக் குடிச் செப்பேடுகளில் முற்காலப் பாண்டியர்தம் பெருமை சொல்லுமிடத்தே, இந்த அரசனது சிறப்பும் எழுதப்பட்டுள்ளது.

  “கொல்யானை பலவோட்டிக் கூடாமன்னர்
  குழாந்தவிர்த்த பல்யாக முதுகுடுமிப்
  பெருவழுதியென்னும் பாண்டியாதிராசன்”.

  இந்த அரசன் செய்துவந்த நீர்மையைப் பின்பற்றி அவனது மார்கத்தை விடாது செய்து வந்தமை குறித்து இந்தச் செப்பேடு இவ்வாறு தெரிவிக்கிறது:-

  ‘பல்யாக முதுகுடுமிப் பெருவழுதியென்னும் பாண்டியாதிராசனால் நாகமா மலைச்சோலை நளிர்சினை மிசை வண்டலம்பும் பாகனூர்க்க் கூற்றமென்மும் பழனக் கிடக்கை நீர்நாட்டுச் சொற்கணாளர் சொல்லப்பட்ட சுருதி மார்க்கம் பிழையாது...”

  பதிலளிநீக்கு
 6. This site has links to Velvikkudi inscriptions.

  http://www.whatisindia.com/.search?results_page=my_results.html&p=Velvikkudi&name=Search

  On Sinnamanur, I have already provided the link in one of the articles. The link is

  http://www.whatisindia.com/inscriptions/south_indian_inscriptions/volume_3/copper_plates_at_tirukkalar.html

  The following site has all the information on inscriptions documented so far.

  http://inscriptions.whatisindia.com/

  For this series on Thamizan Dravidanaa, I refer many books containing exact verses of the inscriptions in Tamil and as how they appear on the stone. I am also learning to read the inscriptions including Brahmi to assess for myself what I read in the books.

  பதிலளிநீக்கு
 7. பாண்டிய அரசன் பெரு வழுதியின் செய்திக்கு
  நன்றி
  வேதத்தில் சிவனைப் பற்றிய செய்திகள் ஏதேனும் உள்ளனவா?

  பதிலளிநீக்கு
 8. //பாண்டிய அரசன் பெரு வழுதியின் செய்திக்கு
  நன்றி
  வேதத்தில் சிவனைப் பற்றிய செய்திகள் ஏதேனும் உள்ளனவா? //

  இருக்கிறது. ரிக் வேதம் மட்டுமல்ல, உபநிடதங்களும், பல்வேறு நூல்களும் சிவனைப் பற்றிப் பேசுகின்றன. புரிந்து கொள்வதற்கு ஒரு வாழ்நாள் தேவை.

  இந்தத் தொடரிலேயே சோமநாதரான சிவனைப் பற்றி சமீபத்தில் கட்டுரை இட்டேன். அவற்றையெல்லாம் நீங்கள் படிக்கவில்லை என்று நினைக்கிறேன். சிவன் வட துருவத்திலும் இருப்பார், கைலாசத்திலும் இருப்பார், அமர்நாத்திலும் இருப்பார், தென்னாட்டுடைய தக்ஷிணாமூர்த்தியாகவும் இருப்பார், திரிபுர சம்ஹாரனாகவும் இருப்பார். பிரபஞ்ச அளவிலான ருத்ரனாகவும் இருப்பார், 11 ருத்ரர்களாகவும் இருப்பார், தேவதை, அதி தேவதை, ப்ரத்யதி தேவதையாகவும் இருப்பார், மும்மூர்த்திகளில் ஒருவராகவும் இருப்பார். ஆனால் மொஹஞ்சதாரோவில் Proto siva என்று சொல்கிறார்களே அதுவாக அவர் இல்லை.


  ஆராய்ச்சிக்காக சிவன் மட்டுமல்ல, எந்த பிற தெய்வத்தைப் பற்றி அறிய வேண்டுமென்றாலும், ஹிந்து மதத்தில் ஆழ்ந்து, அறிந்து கொண்டு பிறகு ஆராய்ச்சியில் கொண்டு வாருங்கள். அப்படி இல்லாமல் செய்யப்படும் ஆராய்ச்சிகள் அறைகுறையானவையே. அவை நிலைத்து நிற்காது.

  பதிலளிநீக்கு
 9. //இருக்கிறது. ரிக் வேதம் மட்டுமல்ல, உபநிடதங்களும், பல்வேறு நூல்களும் சிவனைப் பற்றிப் பேசுகின்றன//
  வேதத்தில் சிவனைப்பற்றிய செய்திளை கூறினால் நன்றாக இருக்கும் அல்லது
  சிவனைப்பற்றிய தங்கள் பதிவின் முகவரி தாருங்கள்

  பதிலளிநீக்கு
 10. சிவ சொரூபத்தின் அர்த்தத்தைப் பற்றி தமிழில் நான் எழுதியுள்ள சில கட்டுரைகள் இங்கே:-

  http://www.tamilhindu.com/2010/01/adimudi-kaanaa-athisayam-a-dimension-of-the-universe/

  http://www.tamilhindu.com/2010/02/creation-theory-2/

  http://www.tamilhindu.com/2010/03/creation-theory-3/

  http://www.tamilhindu.com/2010/04/vaikunta-ekadasi-and-mahasivaratri/

  ரிக் வேதத்தில் சிவனைப் பற்றிக் கூறும் ஸ்ரீ ருத்திரத்தின் விளக்கத்தை ஒரு ஆங்கிலக் கட்டுரையில் எழுதி என் வலத்தளத்தில் வெளியிட்டுள்ளேன். அதன் இணப்பு இங்கே:-

  http://jayasreesaranathan.blogspot.com/2008/05/where-is-bhagawan-in-this-cosmic-chakra.html

  உபநிடதங்களில் சிவனைப் பற்றி சொல்லப்பட்டுள்ளன. தக்ஷிணாமூர்த்து உபநிடதம் என்றே ஒரு உபநிடதம் உள்ளது. மொத்தம் 108 உபநிடதங்களும் ஒரு தொகுப்பாக, தமிழில் மிகக் குறைந்த விலையில் கிடைக்கின்றன. மாம்பலம், துரைசாமி ரோடு சப்வே அருகில் ராமகிருஷ்ண மடத்தவரது நூல் விற்பனை நிலையம் உள்ளது. அங்கு இவை கிடைக்கும்.

  நீங்கள் முதல் தடவை இந்து ஆன்மீகப் புத்தகங்கள் படிப்பவராக இருந்தால், கோரக்பூர் பதிப்பகத்தாரின் பகவத் கீதை தமிழ் பொழி பெயர்ப்பு படிக்கவும். இதுவும் மேற்சொன்ன இடத்திலேயே, மிகக் குறைந்த விலையில் கிடைக்கும். அதில் பல இந்து மத விஷயங்களது அடிப்படை விவரங்கள் எளிமையான நடையில் கொடுக்கப்பட்டிருக்கும். 11 ஆவது அத்தியாயத்தில் கிருஷ்ணன் தன்னை 11 ருத்திரர்களில் சங்கரனாகச் சொல்வார். அதற்கான விளக்கப்பகுதியில், யார் இந்த ருத்திரர், சிவன் போன்ற விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

  என்னுடைய ஆங்கிலப் பதிவில் 33, 303, 3003 கடவுளர்கள் யார் என்று ஹிந்து மதம் சொல்கிறது என்பதைப் பற்றி கட்டுரை இட்டிருப்பேன். அதிலும் 11 ருத்திரர்கள் வருவார்கள். அந்த கட்டுரை இங்கே:-

  http://jayasreesaranathan.blogspot.com/2008/03/3003-303-and-33-gods-of-hinduism.html

  பதிலளிநீக்கு
 11. /தக்ஷிணாமூர்த்து உபநிடதம் //

  தக்ஷிணாமூர்த்தி உபநிடதம் என்று படிக்கவும்.

  பதிலளிநீக்கு
 12. மிக்க நன்றி தொடர்கிறேன்

  பதிலளிநீக்கு
 13. Srikant Talageri in his book 'Rig Veda
  Historic Analysis' states that the term Dasyu refers to non-Vedic priestly classes and that the Dasyus are referred to in terms which clearly show that the causes of hostility are religious.
  What is your views on this?

  பதிலளிநீக்கு
 14. திரு சந்துரு அவர்களே,

  தனியாக ‘இவன் தஸ்யு” என்று சொல்லுவதாக எந்த ஹிந்து மத நூலிலும் இல்லை. தஸ்யூக்கள் வேத மரபிலிருந்து வழுவினவர்கள். அதன் பொருளைக் கட்டுரையில் எழுதியுள்ளேன். வேத மரபிலிருந்து வழுவியவர்கள் பாரத நாட்டிற்கு வெளியே வாழ்ந்தனர். இன்றைய ஆஃப்கானிஸ்தானத்திலுள்ள காந்தார நாட்டில் தஸ்யூக்களும், ஆரியர்களும் வாழ்ந்தனர் என்றும், அவர்களில் தஸ்யூக்களை ஆரியத்துக்கு மாற்றியர்கள் பௌத்தர்கள் என்றும் பௌத்த நூல்கள் கூறுகின்றன.

  உண்மையில் ஆரியன், தஸ்யூ என்னும் சொற்கள் பௌத்த நூல்களில்தான் உள்ளன.
  புத்த தர்மத்துக்குத்தான் ஆரிய தர்மம் என்று பெயர்.
  புத்தர் சொன்ன கருத்துகளின் பெயரே ‘ஆரிய-மார்கம்’ என்பது.
  புத்தர் போதித்த தர்மமும், வினயமும், “ஆரியஸ தம்மவினயம்” எனப்பட்டது.
  புத்த மத 4 உண்மைகள் ‘சத்வாரி ஆர்ய சத்யம்’ என்றே அழைக்கப்படுகிறது.
  பௌத்தர்கள் தங்களை ஆரிய புத்கலர்கள் என்று அழைத்துக் கொண்டார்கள்

  பௌத்தம் பரவின இடஙளில் பௌத்தர்கள் தங்களை ஆரியர்கள் என்றே அழைத்துக் கொண்டனர். இலங்கையின் புத்த நூல்களைப் படியுங்கள். தங்களை ஆரியர்கள என்றும், அவர்கள் மீது போர் தொடுத்து அமைதி வாழ்வைக் கெடுத்த தமிழ் மன்னர்களை அநாரியர்கள் என்றும் அழைத்துள்ளார்கள்.

  புத்த நூல்களில்தான் தஸ்யு பற்றிய குறிப்பு வருகிறது. புத்தர் தான் கண்ட ஆரிய மார்கத்தை ஆரியர், தஸ்யுக்கள், தேவர்கள், கந்தர்வர்கள் என்று அனைத்து மக்களுக்கும் போதித்தார் என்று புத்த நூல்கள் கூறுகின்றன. புத்தர் காலத்தில் காந்தார நாட்டில் தஸ்யூக்கள் இருந்திருக்கின்றனர் என்பதை, அவர்களை ஆரிய மார்கத்துக்கு (புத்த மதம்) மாற்றினதாகச் சொல்லும் புத்த நூல்கள் தெரிவிக்கின்றன.

  ஆக, மாக்ஸ் முல்லர் கிளப்பி விட்ட தஸ்யூ கதையின் உள் விவரம் இப்படியாக இருக்கிறது. Religious காரணம் என்று சொல்வதை விட வாழும் நெறியைக் கொண்டே தஸ்யூக்கள் என்று அழைக்கப்பட்டிருக்கின்றனர் என்பதை பௌத்த நூல் விவரங்கள் தெரிவிக்கின்றன.

  பதிலளிநீக்கு
  பதில்கள்

  1. பௌத்தம் - ஆரியம் பற்றி மேலும் அறிய, இந்த இணைப்பில் உள்ள கட்டுரையைப் படிக்கலாம்.

   http://bharatabharati.wordpress.com/2013/08/10/buddha-was-every-inch-a-hindu-koenraad-elst/

   நீக்கு
 15. //ரிக் வேதத்தில் சிவனைப் பற்றிக் கூறும் ஸ்ரீ ருத்திரத்தின் விளக்கத்தை ஒரு ஆங்கிலக் கட்டுரையில் எழுதி என் வலத்தளத்தில் வெளியிட்டுள்ளேன்//
  ஸ்ரீ ருத்ரம் யஜுர் வேதத்தில் அல்லவா இருக்கிறது?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ரிக் வேதத்திலும் இருக்கிறது. ரிக் வேதத்தில் உள்ள பல ரிக்குகள் யஜுர் வேத தைத்திரிய சம்ஹிதையில் தொகுக்கப்பட்டுள்ள ஸ்ரீ ருத்ரத்தில் உள்ளன. எவை எவை என்பதை இந்த இணைப்பில் படிக்கலாம்.
   http://omnamahshivay.tribe.net/thread/43a5d5c5-a54e-49ba-ab4c-d1b892980021

   நீக்கு