திங்கள், 19 நவம்பர், 2012

117. டிடிகாகாவின் தைத்தியத் தொடர்பு.


தானவர்களது ஆதி இருப்பிடமான ஹிரண்யபுரத்தைத் தேடி, இந்தோனேசியப் பகுதிக்குச் சென்று, அங்கிருந்த தைத்தியர்களைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்து,  இப்பொழுது தென் அமெரிக்காவில் இன்கா மக்களில் வந்து நிற்கிறோம். இப்படி நாம் சுற்றிக் கொண்டே இருப்பதற்குக் காரணம், ஒரு தனிப் பட்ட சமுதாயமாக ஆதியில் மக்கள் இல்லை. தானவர்களும், தைத்தியர்களும், மானவர்களும் அருகருகே வாழ்ந்திருக்கின்றனர். அவர்களுள் ஒருவரைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தால், தொடர்ச்சியாக இன்னொருவரைப் பற்றிச் சொல்ல நேரிடுகிறது. இவை அனைத்திலும், பாரதம் மற்றும் தமிழ் மக்களது மூலம் கலந்திருப்பதால், இவற்றைப் பற்றிச் சொல்ல வேண்டியிருப்பதும் அவசியமாகிறது.

இந்தோனேசியப் பகுதிகளில் அடிக்கடி எரிமலைச் சீற்றங்களும், நில நடுக்கங்களும் ஏற்பட்டு, நிலப்பகுதிகளும் முழுகும் நிலை அடிக்கடி ஏற்பட்டிருக்கிறது. அவற்றில் மிகப் பழமையான எரிமலைச் சீற்றம் இன்றைக்கு 70,000 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட தோபா எரிமலை வெடிப்பாகும். அந்த வெடிப்பில் எரிமலையே சிதறி, அது இருந்த இடம் பள்ளமாகி விட்டது.


அதற்குப் பிறகு எப்பொழுது எந்த எரிமலை வெடித்தது என்பதை இன்னும் விஞ்ஞான ஆராய்ச்சிகள் கண்டுபிடிக்கவில்லை. ஆனால் ஒரு சில முக்கிய வெடிப்புகள் கடந்த 10,000 ஆண்டுகளில் ஏற்பட்டிருக்கின்றன. அவற்றில் ஒன்றே வாமன அவதாரத்தில் வரும் மஹாபலியாகும். மஹாபலியின் கதை உண்மையில் வாழ்ந்த ஒரு அரசனது கதை, அதே நேரம் அந்தக் கதையைப் பயன்படுத்தி ஒரு இயற்கை நிகழ்ச்சியை விவரித்திருக்கிறார்கள் ரிஷிகள். அதைப் பற்றி போகப் போகப் பார்ப்போம்.

 

கடல் மட்ட ஆராய்ச்சிகளின் மூலம் சுமார் 21,000 ஆண்டுகளுக்கு முன் வடக்கில் பனியுகம் ஆரம்பித்த போது, தெற்கில் இந்தோனேசியா ஒரு பெரும் நிலப்பகுதியாக இருந்தது என்று தெரிய வருகிறது. இந்த ஆராய்ச்சியை மேற்கொண்ட கிரஹாம் ஹான்காக் காட்டும் இந்தோனேசிய வரை படத்தைக் கீழே காணலாம். 

பனியுகம் முடிந்து கடல் மட்டம் உயர ஆரம்பித்து இன்றைக்கு இருக்கும் நிலையை ஏறக்குறைய 7000 ஆண்டுகளுக்கு முன் அடைந்தது. இந்தோனேசியப் பகுதிகளின் இன்றைய அமைப்பு அப்பொழுது உருவாகி விட்டது. அதற்கு முன், எரிமலை, நிலநடுக்கம், அது உண்டாக்கும் ஆழிப் பேரலை ஆகிய இயற்கைச் சீற்றங்களினால் இங்கிருந்த பல பகுதிகள் கடலுக்குள் முழுகி விட்டன. இதனால் ஒவ்வொரு முறை இயற்கைச் சீற்றம் ஏற்பட்ட பொழுதும், மக்கள் கூட்டம் சிதறிப் போகும் நிலை ஏற்பட்டது. அப்படிச் சிதறின திசைகளை இந்தப் படத்தில் காணலாம். இதன்  விளக்கத்தை 115 ஆவது கட்டுரையில் கண்டோம்.இந்தச் சிதறலில் பிரிந்த மக்களில், இந்தியாவில் மட்டுமே அந்த ஆதி சமுதாயத்தின் சுவடுகள் புராணங்கள், மஹாபாரதம் வாயிலாகப் பதிப்பிக்கப்பட்டும், அந்தக் கலாசாரம் பின்பற்றப்பட்டும் வந்துள்ளது. அந்தக் கலாசாரத்தின் அடையாளங்கள் தென் அமெரிக்காவின் பண்டைய மக்களான இன்கா மக்களிலும் காணப்படுகின்றன. அது எவ்வாறு என்று நாம் அறிந்து கொண்டால்தான், பாரதத்தில் இன்று வரை  பின்பற்றப்பட்டு வரும் வேத கலாசாரமே ஆதி கலாசாரம் என்றும், அதுவே சிதறலுக்குப் பின் ஆங்காங்கே சென்றுள்ளது என்றும் தெரிந்து கொள்ளலாம். இதில் நாம் காணப்போகும், இன்னொரு விவரம், தமிழ்ச் சொற்களும், தென்னன் தேசச் சாயல்களும் தென் அமெரிக்காவில் இருக்கின்றன என்பதும் ஆகும்.

 

இனி விவரங்களுக்கு வருவோம். 115 ஆவது கட்டுரையில் நாஸ்கல் ரிட்ஜ் என்னும் ஆழ்கடல் மலைத் தொடர் இருக்கும் விவரத்தைக் கண்டோம். நாகன் என்பதே நாக்கல் என்றும், நாஸ்கல் என்றும் ஆனதை முந்தின கட்டுரையில் கண்டோம். இந்தப் படத்தில் ஈஸ்டர் தீவுகளில் ஆரம்பித்து, தென் அமெரிக்கா வரை அந்த்த் தொடர் செல்வதைக் காணலாம்.