வெள்ளி, 26 ஜனவரி, 2024

இராமாயண காலத்தை அறுதியிடும் தொல்லியல் சான்று

Published in Geethacharyan Monthly Magazine


பக்தர்கள் அனைவரும் வணங்குவதற்கு வழி செய்யும் விதமாக, ஸாகேதபுரி எனப்படும் அயோத்தி மாநகரில் ஸ்ரீராமசந்த்ர பிரபுவின் ஜன்மஸ்தானத்தில் கோயில் அமைக்கப்படும் இந்தத் தருணத்தில், அங்குதான் இராமர் பிறந்தார் என்று உறுதியாகச் சொல்வதற்கு ஏதுவாகத் தொல்லியல் சான்றுகள் இல்லை என்பதுதான் உண்மை என்பது சற்று உறுத்தலாக இருக்கிறது. ஆழ்வார்கள் மங்களாசஸனம் செய்வித்த இராமர் இருந்த இடமா அது என்பதற்கும் எந்த ஆதாரமும் இல்லை; ஏனெனில் அயோத்தி முழுவதுமே நூற்றுக் கணக்கில் இராமர் கோயில்கள் உள்ளன. இவற்றுள் எது அவர் ஜனனம் எடுத்த இடம் என்பதில் அபிப்பிராய பேதங்கள் உள்ளன.

ஜன்மஸ்தானம் என்று இப்போழுது கட்டப்பட்டுள்ள கோயில் இருந்த இடத்தில் ஏற்கெனெவே கோயில் இருந்து இருமுறை அழிக்கப்பட்ட அடையாளத்தைத்தான் தொல்லியல் காட்டுகிறது. 1976-77-இல் முதன் முதலில் அங்கு தொல்லியல் துறை ஆராய்ந்தபோது, அது மசூதியாக இருந்தது. அதில் 12 தூண்கள் ஹிந்துக் கோயில் தூண்களாக இருந்தன. பூர்ணகலசம், மகர நீர் வாய் போன்ற அமைப்புகளும் இருந்தன. பிறகு, மசூதி இடிக்கப்பட்ட பிறகு பூமிக்கு அடியில் இருக்கும் அமைப்புகளைப் பார்க்கும் வண்ணம் ஆய்வுகள் நடந்தன. அவற்றின் மூலம், ஐம்பதுக்கும் மேற்பட்ட தூண்களது அடிப்பகுதிகள் பதினேழு வரிசைகளில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டன. கோயில் சிற்பங்கள் பலவும் உடைந்து புதைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இவற்றின் தொன்மை இரண்டாயிரம் வருடங்கள் வரையில், அதாவது, குஷானர்கள், பிறகு, குப்தர்கள் காலம் வரையில் மட்டுமே சொல்லும் வண்ணம் இருக்கின்றன. அதாவது கோயில் இருந்தது. அதைக் கொண்டு இராமன் காலத்தைச் சொல்லும் வண்ணம் ஆதாரம் கிடைக்கவில்லை. ஆனால் இந்தக் கோயில் இருந்த இடம் தான் மீண்டும், மீண்டும் அழிக்கப்பட்டு, கட்டப்பட்டிருக்கிறது.

இராமாயண காலத்திலிருந்து தேடினால், அண்ட சராசரங்களையும் இராமன் வைகுந்தத்துக்கு ஏற்றிக் கொண்டு போனபின் அயோத்தியில் யாருமே இல்லை. இராமனது மகன் லவன், ஸ்ரவஷ்டியைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி புரியலானான். குஸன், விந்தியமலைப் பகுதியிலுள்ள குஷாவதியிலிருந்து ஆள ஆரம்பித்தான். ஜைனர்களது முதல் தீர்த்தங்காரரான ரிஷப தேவரது காலம் வரை அயோத்தியாவில் மக்கள் நடமாட்டம் இல்லை என்று சொல்லப்படுகிறது. அதற்குப் பிறகு, அங்கு இராமன் பிறந்த மற்றும் வாழ்ந்த இடங்களைக் கோயிலாக்கி வணங்கி இருக்கிறார்கள். குறிப்பாக விக்ரம சஹாப்தத்தைத் துவங்கின விக்கிரமாதித்த அரசன் காலம் முதல், அயோத்யா பழம் பெருமையையும், புகழையும் அடைந்ததது என்கிறார்கள். ஜன்மஸ்தானத்தில், விக்கிரமாதித்தன் அதி அற்புதமான கோயிலைக் கட்டியிருக்க வேண்டும். ஆழ்வார்கள் கண்ட இராமர் கோயில் இந்தக் காலக்கட்டம், மற்றும் இதற்கு  முந்தினதாகத்தான் இருந்திருக்க வேண்டும்.

அந்தக் கோயில் 11-ஆம் நூற்றாண்டில் ஸாலர் மசூத் என்பவனால் அழிக்கப்பட்டது. இந்த ஸாலர் மசூத், சோமநாதபுரத்தை அழித்த கஜினி முஹம்மதுவின் தங்கை மகன். இவனது கூட்டாளிகள்தாம், மேல்கோட்டையை அழித்து, இராமப்பிரியனைக் கவர்ந்து சென்றவர்கள். அவர்களே தொண்டனூர் கோயில்களையும் சூறையாடியவர்கள். அந்த ஸாலர் மசூத்தை, ஸ்ரவஷ்டியைச் சேர்ந்த சுஹேல் தேவ் கொன்றான். அதன் பிறகு, ஜன்மஸ்தானக் கோயில் மீண்டும் கட்டப்பட்டது. கோயில் அழிவுற்று இருந்த போதும், மக்கள் அந்த இடத்தில் இராமனை வழிபட்டிருக்கிறார்கள். இதுவே, இந்தக் கோயில் ஜன்மஸ்தானமாக இருந்திருக்க வேண்டும் என்பதற்குச் சான்று என்கிறார்கள்.

11-12 நூற்றாண்டுகளில் அயனசந்திரன் என்னும் கஹர்வால் அரசன் அதே இடத்தில் இராமர் கோயிலை உன்னதமான முறையில் கட்டினான். அதற்கான கல்வெட்டு ஆதாரம் பாபர் மசூதியை இடித்த போது கிடைத்தது. அதில் பெருமாள் பெயர் ‘ஹரி விஷ்ணு’ என்று குறிக்கப்பட்டுள்ளது. வாலியையும், தசானனனையும் கொன்ற ஹரி விஷ்ணுவின் கோயில் என்று எழுதப்பட்டுள்ளது. இந்தக் கோயிலின் இருப்பிடமே இராமர் பிறந்த இடம் என்று மக்கள் கொண்டாடுவதாகவும், வழிபடுவதாகவும், அன்றைய முகலாய சரித்திர ஆய்வாளர்களும், வழிபோக்கர்களும் எழுதியுள்ளனர். சீதையின் சமையலறையின் மீதுதான் பாபர் மசூதி கட்டப்பட்டதாக, மிர்ஜா ஜன் என்பவர் எழுதியுள்ளார். இராமன் பிறந்த அரண்மனையை அழித்து மசூதி கட்டப்பட்டதாக இன்னொரு முகலாய எழுத்தாளர் எழுதியுள்ளார்.

பாபர் மசூதியில் கண்டுபிடிக்கப்பட்ட விஷ்ணு-ஹரி கல்வெட்டு

பெர்ஷிய மொழியில் எழுதப்பட்டுள்ள ஒரு நூலில், இராமனது அரண்மனைப் பகுதிகள் விரிவாக எழுதப்பட்டுள்ளன. அதன் மூலம், ஆதியில் எழுப்பட்ட கோயில், இராமனுடைய அரண்மனையின் பகுதிகளை அப்படியே தக்க வைத்துக் கொண்டு எழுப்பப்பட்டிருக்கிறது என்று தெரிகிறது. முகலாயர்கள் அதை ஆக்கிரமித்தபோது, அங்கு மூன்று கோயில்கள் இருந்தனவாம்: அவை ஜன்மஸ்தானம், ஸ்வர்கத்வாரம் எனப்பட்ட ராமரது தர்பார் மண்டபம், த்ரேதா கா தாகூர் என்னும் ராமர் கோயில். இவை அனைத்தையும் அழித்து, ஜன்மஸ்தானத்தில் பாபர் மசூதி எழுப்பப்பட்டது.

அவை அனைத்தையும் இழந்த நாம் மீண்டும் அதே இடத்தில் இராம ஜன்மஸ்தானக் கோயிலைக் கட்டுகிறோம். இராமன் வாழ்ந்த காலத்தைக் காட்டும் தொல்லியல் சான்று இன்றுவரை அயோத்தியில் கிடைக்கவில்லை. ஆனால் அப்படிப்பட்ட சான்று ஒன்று தமிழ்நாட்டில்தான் இருக்கிறது. அது இராமர் கட்டிய சேதுவில் கிடைக்கிறது.

இராமர் சேது: செப்பேட்டு ஆதாரம்

தனுஷ்கோடியையும், மன்னார் பகுதியையும் இணைக்கும் இராமர் சேது, இராமரால் கட்டப்பட்டது என்ற செய்தியை, இராஜேந்திர சோழனது திருவாலங்காடு செப்பேடுகள் தெரிவிக்கின்றன. தன்னுடைய தகப்பனான இராஜராஜ சோழனைப் பற்றிச் சொல்லும் போது, இவ்வாறு எழுதியுள்ளான்.

“"இராகவர்களின் தலைவன் (அதாவது, இராமன்) சமுத்திரத்தின் குறுக்கே  திறமையான வானரர்களைக் கொண்டு பாலம் கட்டி, கடலைத் தாண்டி, இலங்கை மன்னனைக் (இராவணனைக்) கொன்றான்.” (80-ஆவது வரி)

அதே பகுதியை, அருள்மொழிவர்மன் (இராஜராஜ சோழன்) கப்பற் படையைக் கொண்டு கடந்து சென்று இலங்கை மன்னனை அழித்தான் என்று எழுதியுள்ளான். எனவே இராமர் சேதுப் பகுதி, இராமர் கட்டிய அணைப் பகுதியே என்பதே வழிவழியாக சொல்லப்பட்டு வந்து, செப்பேட்டிலும் இடம் பெற்றிருக்கிறது.

இராமர் சேதுவில் புவியியல் ஆய்வுகள்

வானர சேனைகள் பல கற்களையும், மரங்ககளையும் அடுக்கி, அணையை உருவாக்கினார்கள் என்று வால்மீகி இராமாயணம் கூறுவதால், அங்குள்ள கற்களையும், நில அமைப்புகளையும் புவியியல் சோதனை செய்தால் அதன் காலத்தைக் கண்டுபிடிக்க முடியும். அதன் மூலம், இராமாயண காலத்தையும் கண்டு பிடிக்கலாம் என்று 2007 ஆம் ஆண்டிலேயே ஆய்வுகள் நடந்தன.

அவை காட்டிய முக்கிய விவரம், பாரதமும், ஸ்ரீலங்கையும், நிலத்தால் இணைக்கப்பட்டுள்ளன என்பதே. அதாவது, ஸ்ரீலங்கை, பாரதத்தின் நிலநீட்சியே. ஆனால் இந்த நில இணைப்பு தற்சமயம் நீருக்குள் முழுகி இருக்கிறது. ஒரு காலக்கட்டத்தில் அது கடல் நீருக்கு மேலே இருந்திருக்கிறது. அப்பொழுது, மக்கள் அதன் மீது நடந்து சென்று கடந்திருப்பார்கள். பாலம் கட்ட வேண்டிய அவசியம் அப்பொழுது இல்லை. அப்படிப்பட்ட காலம் இராமாயண காலத்துக்கு முன் இருந்திருக்க வேண்டும். கடல் மட்டம் உயர்ந்து, அது நீரில் முழுகின பிறகுதான் இராமாயணம் நடந்திருக்க வேண்டும். பாலம் அமைத்து அதைக் கடக்க வேண்டிய அவசியம் இராமாயண காலத்தில்தான் ஏற்பட்டிருக்க வேண்டும். எனவே கடல் மட்டம் உயர்ந்த கால விவரத்தைக் கண்டுபிடித்தால் நம்மால் இராமாயண காலத்தைச் சொல்லிவிட முடியும்.

கடல் மட்ட ஆய்வுகள், இன்றைக்கு 18,000 ஆண்டுகள் வரை அளவீடுகளைத் தருகின்றன. கடுமையான பனி யுகம் இருந்த நேரம் அது. அப்பொழுது கடல் மட்டம் இன்றைய அளவைவிட 130 மீட்டர் குறைவாக இருந்தது. அப்பொழுது, நில இணைப்பு இயற்கையாகவே ஒரு பாலம் போலப் பயன்பட்டது. இன்றைக்கு 18,000 ஆண்டுகள் முன்பிலிருந்து, பனியுகம் மறைய ஆரம்பித்து, வெப்பம் பரவ ஆரம்பித்தது. இதனால், பனி உருகி, கடல் மட்டம் கொஞ்சம் கொஞ்சமாக உயரத் தொடங்கியது. இதன் காரணமாக, இன்றைக்கு 7200 ஆண்டுகளுக்கு முன் ஆரம்பித்து, 6800 ஆண்டுகள் வரை, இந்த நில நீட்சி கொஞ்சம் கொஞ்சமாக நீருக்குள் மறைய ஆரம்பித்தது. அந்த சமயத்தில்தான், நீருக்கு அடியில் மறைந்த நிலநீட்சியின் மீது, பாறாங்கற்களைப் போட்டு அதன் உயரத்தை அதிகப்படுத்த வேண்டியிருந்தது.

இந்தக் கணக்கின்படி, இராமாயணம் 7000 வருடங்களுக்கு முன்னரே நடந்திருக்க வேண்டும். இரண்டாம் தமிழ்ச் சங்கத்தின் தலைநகரமான கவாடத்தின் உச்சபட்ச காலமும் அதுவே என்று முந்தின கட்டுரையில் காட்டியிருந்தோம்.

இனி இந்தப் பாறாங்கற்களைக் கொண்டு செய்த ஆய்வுகளைக் காண்போம். National Institute of Ocean Technology என்னும் ஆய்வுக் கழகம், மத்திய அமைச்சரவையின் கீழ் இயங்குகிறது. இந்தக் கழகம் மேற்கொண்ட ஆய்வில், இராமர் சேதுவின் மீது பத்து இடங்களில் துளைகள் போடப்பட்டன. ஆறு மீட்டர் ஆழம் சென்றவுடன்,  கடல் மண் தென்பட்டது. மேலும் துளைத்தபோது, நான்கு முதல் ஐந்து மீட்டர் ஆழம் வரை, கடினமான படுக்கையாக கற்களும், பவழப்பாறைகளும் தென்பட்டன. மேலும் துளையிட்ட போது, அந்தப் பவழப்பாறைப் படுக்கைகள் கடல் மணல் மீது இருப்பது தெரியவந்தது. கடல் மணலை மேலும் துளைத்தால், கடினமான நிலமே தென்பட்டது.

இதில் தெரியவந்தது என்னவென்றால், அடித்தளமான நிலநீட்சியின் மீது, கடல் மணல் பரப்பப்பட்டு, அதன் மீது, 4 -5 மீட்டர் உயரத்துக்கு பவழப்பாறைகள், பலவிதமான கற்கள், மரத்துண்டுகள் ஆகியவை அடுக்கப்பட்டிருக்கின்றன. அவற்றின் மீது கடல் மணல் பரப்பப்பட்டிருக்கிறது. அதற்கு மேலே கற்கள், மண் என இவை அழுத்தமாகப் படிந்திருக்கின்றன.

இதில் ஆச்சரியம் என்னவென்றால், பவழப்பாறைகள் கடல் மணலில் உருவாகாது. பவழப்பாறைகள் இராமேஸ்வரம், தனுஷ்கோடி போன்ற இடங்களில் இயற்கையாகக் கடலோரத்தில் காணப்படுகின்றன. அவை உடைக்கப்பட்ட அமைப்பிலும் இருக்கின்றன. அவற்றை உடைத்து, நில நீட்சியின் மீது கடல் மணலைப் பரப்பி, அதன் மீது யாரேனும் போட்டிருந்தால்தான் பவழப்பாறைகள் அங்கு வரமுடியும். இன்று சேதுவுக்குச் செல்பவர்கள் ‘மிதக்கும் கல்’ என்று கொண்டு வருகிறார்களே அவை இந்த பவழப் பாறைக் கற்களே.

மேலும், இந்த அமைப்புகளை ஆராய்ந்த விஞ்ஞானிகள் மேலேயுள்ள கற்களும், பவழப்பாறைகளும் 7000 ஆண்டுகளுக்கு முந்தையவை என்று கண்டுபிடித்தார்கள். ஆனால் அவற்றுக்குக் கீழே உள்ள கடல் மண் படுக்கை, 4000 வருடங்களுக்கு முந்தையது என்கிறார்கள். இரண்டு முறை கடல் வெள்ளம் ஏற்பட்டிருக்கிறது என்றும் கண்டு பிடித்திருக்கிறார்கள் – 7000 வருடங்களுக்கு முன்பும், 4000 வருடங்களுக்கு முன்பும்.

வெள்ளத்திலிருந்து பாலத்தை உயர்த்த பழைய கற்கள் அடியிலும், புதிய கற்களும், மணலும் மேலாகவும் இருக்க வேண்டும். ஆனால் இங்கு மாறி இருக்கிறது. இதைச் சொல்லும் வெளி நாட்டு விஞ்ஞானிகளுக்கு இது வியப்பாக இருக்கிறது. ஆனால் நமக்கு வியப்பே இல்லை. 7000 ஆண்டுகளுக்கு முன், முதல் முறையாகப் பாலம் போடப்பட்டிருக்கிறது. இராமன் கடற்கரைக்கு வந்த போது ஓரிரு அடி ஆழத்தில் நில நீட்சி இருந்திருக்கிறது. அதற்கு முன் வரை ஆங்காங்கே நில நீட்சி வெளியே தெரிந்திருக்கும். சூர்ப்பனகை, மாரீசன் போன்றவர்கள் நடந்தே வந்திருப்பார்கள்.

ஆனால், இராமனது வன வாசம் முடிக்கும் போது, கடல் பொங்கியிருக்கிறது. நில நீட்சி நீரில் அமிழ்ந்து இருக்கிறது. அதை உயர்த்த கடல் மணலைப் போட்டு ஒரு தளம் அமைத்து அதன் மேல் பவழப்பாறைகளையும், மரம், கல் போன்றவற்றையும் நான்கிலிருந்து ஐந்து மீட்டர் உயரத்துக்கு அடுக்கி இருக்கிறார்கள். இந்தப் பாலம் இன்றைக்கு 4000 ஆண்டுகளுக்கு முன் வரை நீருக்கு மேலேயே இருந்திருக்கிறது. ஆய்வின்படி, 4000 ஆண்டுகளுக்கு முன் கடல் மட்டம் மீண்டும் உயர்ந்திருக்கிறது தெரிய வருகிறது. அப்பொழுது இராமர் கட்டின சேது முழுகி விட்டது. அந்த சமயத்தில் வாழ்ந்த மக்கள், அதன் புனிதத்துவத்தைக் கருதி, அப்படியே அந்தக் கற்களை எடுத்து, புதிதாக மணல் பரப்பி, அதன் மீது பழைய கற்களை அடுக்கி, பாலத்தைக் கட்டியிருக்கின்றனர். இதனால், 4000 ஆண்டுகளுக்கு முந்தைய மணல் அடியிலும், அதன் மீது, 7000 ஆண்டுகளுக்கு முந்தைய கற்களும்  அமர்ந்திருக்கின்றன.

கடல் நீருக்கு அடியில் அடுக்கப்பட்டுள்ள ராமர் சேது பாறைகள்

இந்த மாறுபட்ட கால அமைப்பைக் கொண்ட மணல் மற்றும் கற்கள் இராமர் சேதுவின் காலத்தை நிரூபிக்கும் காரணிகளாக இருக்கின்றன. 7000 ஆண்டுகளுக்கு முன் இராமர் சேது கட்டப்பட்டிருக்கிறது என்பதற்கு இராமர் சேதுவே தொல்லியல் ஆதாரமாக இருக்கிறது. நான்கு மைல் அகலத்துக்குக் காணப்படும் சேதுப் பாலம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வரை சோலைகளும், மரங்ககளும் கொண்டதாக இருந்திருக்கிறது. 10- ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அல்பெரூனி என்னும் முகலாய சரித்திர ஆய்வாளர் சேதுப் பாலம் ஆங்காங்கே கடலால் அரிக்கப்பட்டிருந்தது என்றும், அங்கு வானரங்கள் பல இருந்தன என்றும் எழுதியுள்ளார். அந்த வானரங்களுக்கு மக்கள் உணவு படைப்பார்கள் என்றும், ராம ஜபம் செய்தால் அவை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருக்கும் என்றும் கூறியுள்ளார். வழி தெரியாமல் தடுமாறுபவர்களை அவை வழி காட்டிச் செல்லுமாம்.

கடல் அரிப்புகள் ஏற்பட்டாலும், அவ்வப்பொழுது அவற்றைப் பழுது பார்த்திருக்கிறார்கள். 1480 வரை மக்கள் இராமர் சேதுவை, ஒரு தரை வழிப் பாலமாகப் பயன்படுத்தி இருக்கின்றனர். அதற்குப் பிறகு புயல்களால் சேதம் ஏற்பட்டு, அன்னியர் ஆட்சியும் வந்த பிறகு, அதன் முக்கியத்துவமும், பயன்பாடும் மறக்கப்பட்டு விட்டது. இராமாயண காலத்துக்கு முக்கியத் தொல்லியல் சான்றாக இருக்கும் அதனைக் காத்து, பழையபடி இராமர் அமைத்த கற்களால் அமைக்க வேண்டியது நமது கடமை.

இந்தப் பாலம் காட்டும் 7000 வருடத் தொன்மை, இராமர் பிறந்த த்ரேதா வருடத்துக்கு எவ்வாறு பொருந்தும் என்பதை இனி காண்போம்.

 

 

வெள்ளி, 12 ஜனவரி, 2024

பாண்டியர்களைக் கண்டு பயந்த இராவணன்.

 Published in Geethacharyan monthly Magazine.

 

இராவணன் ஆண்ட இலங்காபுரியை, தென்னிலங்கையின் மலைப் பகுதியில் அடையாளம் கண்டோம். இராவணனுக்குப் பக்க பலமாக இருந்தவர்கள் இலங்கையின் பூர்வ குடிகளான யக்ஷர்கள் (பலாங்கொடை மனிதன்) என்றும் காட்டினோம். இராமாயணம் என்னும் சரித்திரம் சில ஆயிரம் வருடங்களுக்கு முன் நிகழ்ந்ததாக இருந்தால்தான் இப்படிப்பட்ட அடையாளங்கள் ஏற்கக் கூடியதாக இருக்கும். ஆனால் இராமாயணம் பல லக்ஷம் வருடங்களுக்கு முன்னால், த்ரேதா யுகத்தில் நிகழ்ந்தது என்று சொல்லப்படுகிறதே, அப்படிப்பட்ட தொன்மையான காலத்தில் நிகழ்ந்த விவரங்களை உண்மை என்று எப்படிச் சொல்ல முடியும்? இந்தக் கேள்வியை வெளிநாட்டவர்கள் மட்டுமல்ல, நம் நாட்டவர்களும் அடிக்கடி கேட்கிறார்கள்.

கேட்பவர்கள் கேட்கட்டும் என்று நாம் அலட்சியப்படுத்திவிடக் கூடாது. நம் தெய்வங்களும், தெய்வ சரிதைகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்படும் இந்தக் காலக் கட்டத்தில், நாம் அத்தகைய கேள்விகளையும் எதிர் கொண்டு இதிஹாசத்தின் உண்மைத்தன்மையை நிலைநாட்ட வேண்டும். எந்த ஆய்விலும், கல்வெட்டுகளும், தொல்லியல் ஆய்வுகளும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அதனால், முதலில் இந்த வழிகளில், இராமன் அல்லது இராவணனைப் பற்றி  ஏதேனும் விவரங்கள் இருக்கின்றனவா என்று பார்த்து விட்டு த்ரேதா யுகக் கணக்கை ஆராய்வோம்.

பாண்டியர்களுடன் சமரசம் செய்துகொண்ட இராவணன்.

இலங்காபுரி அமைந்துள்ள ஸ்ரீலங்கை, தென்னிந்தியாவை ஒட்டியுள்ள பகுதியாக இருக்கவே, முற்கால சேர, சோழ, பாண்டியர்களில் எவரேனும் இராவணன் காலத்தில் இருந்திருக்கலாம் என்ற சாத்தியக் கூறு இருக்கிறது. அதை மெய்ப்பிக்கும் வகையில், பாண்டியர்களது செப்பேட்டில் இராவணனைப் பற்றிய குறிப்பு ஒன்று வருகிறது. மதுரையில் உள்ள பெரியகுளம் பகுதியில் சின்னமனூர் என்னும் இடத்தில் உள்ள விஷ்ணு கோயில் திருப்பணியின்  போது பாண்டியர்களது செப்பேடுகள் கிடைத்தன. அவற்றில் பாண்டிய வம்சத்தின் பெருமை எழுதப்பட்டுள்ளது.

செப்பேட்டின் சம்ஸ்க்ருதப் பகுதியில் முற்காலப் பாண்டிய மன்னர்கள் செய்த செயல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால் அவர்கள் ஒவ்வொருவரது பெயரும் இடம் பெறவில்லை. முற்காலப் பாண்டியர்கள் செய்த சாஹசங்களைப் பற்றிச் சொல்லிக் கொண்டு வரும் போது, ஒரு பாண்டிய அரசன் இருந்தான், அவன் பத்துத் தலை கொண்டவனை அடக்கி, அவனுடன் சமரம் செய்து, அமைதியை நிலை நாட்டினான் என்று எழுதப்பட்டுள்ளது. செப்பேட்டின் ஐந்தாவது வரியில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது.

“தசானனன் சந்திப ரக்ஷகார நரேஷ்ஸ்வர: கக்ஷிதர கண்டிதாக்ஞா: “

(பக்: 451, South Indian Inscriptions, Vol IV, copper plates from Sinnamanur, Tirukkalur and Thiruchengodu, 1929)

பத்து முகங்களைக் கொண்ட தசானனன் என்று சொல்லப்படுபவன் இலங்கையை ஆண்ட இராவணன் ஒருவனே.. உண்மையில் அவனுக்குப் பத்து முகங்கள் அல்லது தலைகள் இருந்திருக்காது. அது ஒரு சிறப்பு அடையாளமாக இருந்திருக்கக் கூடும். பத்துத் தலைகள் கொடுக்கக்கூடிய அறிவினை ஒருங்கே உடையவனாக இருந்திருக்கலாம். அல்லது தர்மம் தலை காக்கும் என்பார்களே, அவன் செய்த புண்ணிய காரியங்களும், தருமமும், பத்து மடங்கு அதிகமாக இருந்திருக்கும். பத்து முறை அவன் தலையைக் காக்கும் வண்ணம், அதாவது மரணத்திலிருந்து பத்து முறை அவனைக் காப்பாற்றக்கூடிய அளவுக்கு அவன் புண்ணியம் செய்திருப்பான். அப்படிப்பட்ட ராவணனை ஒரு பாண்டிய மன்னன் அடக்கி, நாட்டில் அமைதியை நிலை நாட்டினான் என்று சின்னமனூர் செப்பேடுகள் தெரிவிக்கின்றன.

அந்தப் பாண்டிய மன்னனது பெயர் குறிப்பிடப்படவில்லை. சங்கப் பாடல்களிலோ அல்லது பிற்காலப் பாடல்களிலோ, அப்படி ஒரு பாண்டியன் ராவணை வெற்றி கொண்டான் என்றும் சொல்லப்படவில்லை. ஆனால் அந்தச் செய்தி வட மொழி இலக்கியத்தில் காணப்படுகிறது!

ரகுவம்சத்தில் பாண்டியனும், இராவணனும்.

விக்ரமாதித்தன் என்னும்  மன்னனது  சபையில் இருந்த காளிதாசர் என்பவர் இரகு வம்சம் என்னும் பாடல் தொகுப்பை எழுதி உள்ளார். அதில் இராமனது  மூதாதையரான இரகு என்னும் மன்னனின் வரலாற்றைப் பற்றியும், அந்த மன்னனுக்குப் பிறகு வந்த அரசர்களைப் பற்றியும், இராமன் மற்றும் அவனுக்குப் பின் வந்த சந்ததியரைப் பற்றியும் எழுதியுள்ளார். இரகுவின் வம்சத்தில் வந்ததால் இராமனுக்கு இராகவன் என்று ஒரு பெயரும் உண்டு. அந்த இராமனின் தாத்தா பெயர் அஜன். பாட்டியின் பெயர் இந்துமதி. அவர்கள் திருமணம் பற்றிச் சொல்லுமிடத்தில் ஒரு பாண்டிய மன்னனைப் பற்றிய விவரம் வருகிறது. (ரகு வம்சம், 6 -ஆவது அத்தியாயம்)

இளவரசி இந்துமதியை, சுயம்வரத்தின் மூலம் அஜன் மணம் புரிகிறான். அந்த சுயம்வரத்தில் போட்டியிட வந்த பல மன்னர்களுள்   பாண்டிய மன்னனும்  ஒருவன். அவன் எப்படிபட்டவன் என்று இந்துமதியின் தோழி சுநந்தா விவரிக்கிறாள்.

"மலையிலிருந்து கொட்டும் அருவிகளைப் போல, சிவந்த சந்தனம் பூசப்பட்ட மலை போன்ற மார்பில் தொங்கும் முத்துச் சரங்கள் பல உடையவன் இந்தப் பாண்டிய மன்னன். அகத்திய முனிவர் வழி நடத்த, அஸ்வமேத யாகங்கள் பல செய்ததால் அபிஷேக நீர் அவன் உடலில் இன்னும் ஒட்டிக் கொண்டிருக்கிறது.

இந்தப் பாண்டிய அரசனது வலிமை எப்படிப்பட்டதென்றால், இலங்கையை ஆண்ட இராவணன் பாண்டியர்களிடம் சமரசம் செய்து கொண்டவன். அப்படி அவன் சமரசம் கொள்ளவில்லை என்றால் பாண்டியர்கள் சிவ பெருமானிடமிருந்து பெற்ற 'பிரம்ம சிரோ அஸ்திரத்தினால்' இராவணனுக்கு என்றோ அழிவு நேர்ந்திருக்கும்.

தக்ஷிண திசை என்று சொல்லப்படும் தென் திசையிலிருந்து வரும் இந்தப் பாண்டிய மன்னனை  மணந்து  கொண்டால் உனக்கு ஒரே ஒரு சக்களத்திதான் இருப்பாள்.  அவள் தென் திசையில் உள்ள பாண்டிய நாடு என்னும் நாடுதான்." என்று சுநந்தா விவரிக்கிறாள்.

இதில் சில விஷயங்கள் தெரிய வருகின்றன.

இராமனது தாத்தா காலத்துக்கு முன்பே, தென் தமிழ் நாட்டில் பாண்டிய வம்சம் சிறப்பாக இருந்து வந்திருக்கிறது. இராமனை ஏக பத்தினி விரதன் என்பார்கள். ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்ந்தவன் இராமன். அவனைப் போலவே பாண்டிய மன்னும் ஏக பத்தினி விரதம் கொண்டவனாக வாழக் கூடியவன். அவனுக்கு ஒரு காதலி இருக்கக்கூடும் என்றால் அது அவன் ஆளும் நாடே ஆகும்.

பூகோள ரீதியாக பாண்டிய நாடும், இலங்கையும் அருகருகே உள்ளன. அதனால் அவர்களுக்குள் சண்டை வந்திருக்க வாய்ப்பு இருந்திருக்கின்றது. செப்பேடுகளிலும், இராவணன் தொந்திரவு கொடுத்தான் என்று சொல்லும் வண்ணம் எழுதப்பட்டிருக்கிறது. பிரம்ம சிரோ அஸ்திரம் என்னும், தலை கொய்யும் அஸ்திரம் பாண்டியர்களிடம் இருக்கவே, இராவணனால் அவர்களிடம் வாலாட்ட முடியவில்லை. எனவே சமரசம் செய்து கொண்டிருக்கிறான். இதையே செப்பேடுகளில், அமைதியை நிலை நாட்ட பத்துத் தலைக் கொண்டவனை அடக்கினான் ஒரு பாண்டியன் என்று சொல்லப்பட்டுள்ளது.

இங்கே ஒரு கேள்வி எழுகிறது. இராவணன் வாழ்ந்தது இராமனது காலக்கட்டத்தில். இந்த சுயம்வரம் நடந்ததோ இராமனது தாத்தா காலத்தில். அப்பொழுதே இராவணன் எப்படி இருந்திருக்க முடியும்?

இராமனது தாத்தா மணம் முடிந்து, அவனுக்கு தசரதன் பிறந்து, அவனுக்கும் வயதான பிறகுதான் இராமன் பிறந்ததாக இராமாயணம் கூறுகிறது. எனவே, அஜன் காலத்திலோ அல்லது அதற்கு முற்பட்டோ இராவணன் இருந்திருக்க முடியாது. அதனால் இராவணனைப் பற்றிய விவரம் பொய் என்று சொல்ல முடியாது. இராவணன் பற்றிய  விவரம், சின்னமனூர் செப்ப்டுகளிலும் எழுதப் பட்டுள்ளது. அதனால் இந்த விவரம் உண்மையாகத்தான் இருந்திருக்க வேண்டும். மக்கள் மத்தியில் பரவலாகப் பேசப்பட்டு இருந்திருக்க வேண்டும். அதன் அடிப்படையில், காளிதாசர் அவர்கள் இரகு வம்சம் எழுதிய போது, பாண்டியர்கள் குலப் பெருமையை எழுதும் போது, கால வித்தியாசம் பாராமல், இராவணனை அடக்கிய கதையைக் குறிப்பிட்டுள்ளார் என்று தெரிகிறது. காளிதாசர் காலம் வரையிலும், அதாவது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்வரை, இந்த விவரம் மக்களுக்கிடையே பேசப்பட்டிருக்க வேண்டும்.

இங்கும் ஒரு கேள்வி எழலாம். கடவுளே அவதாரம் எடுத்து இராவணனை வெல்ல வேண்டியதாயிற்று. அப்படி இருக்க பாண்டியர்களிடம் அந்த இராவணன் அடங்கி இருந்த செய்தியை ஏன் எந்தப் புலவரும் பாடவில்லை. சிபியைப் பற்றியும், தூங்கெயில் எறிந்தவனைப் பற்றியும் பாடிய புலவர்கள், இராவணனை ஒரு பாண்டியன் அடக்கிய தீரச் செயலை ஏன் பாடாமல் விட்டார்கள்?

இதற்கு ஒரு காரணம் சொல்லலாம். பாண்டிய மன்னர்களும் சிவ பக்தர்கள். இராவணனும் சிவ பக்தன். ஆனால் அவன் அசுரப் பண்புகளைப் பெற்றிருந்ததால், அருகில் உள்ள மன்னர்களைச் சீண்டியிருப்பான். பாண்டியர்களையும் சீண்டியிருப்பான். சிவ பக்தியால் பாண்டியர்கள் பெற்ற அஸ்திரத்தைப் ஒரு சக- சிவ பக்தன் மீது பிரயோகிக்க பாண்டியர்கள் யோசித்திருக்கலாம். ஆனாலும், நாட்டு நன்மைக்காக அவனை ஒரு தட்டு தட்டி அடக்கி இருக்கலாம். இராவணன் ஒரு சிவ பக்தனாக இருக்கவே, அவனை வென்றதை அவர்கள் பெருமையாகப் பேசிக் கொள்ள விரும்பியிருக்க மாட்டார்கள்.

இதற்கு ஆதாரமாக, பெரிய புராணம் கூறும் மெய்ப் பொருள்நாயனார் சரித்திரத்தில் சிவ வேடம் தாங்கிய போலி சிவனடியார் ஒருவர் நாயனாரைக் கொன்ற போதிலும், அவர் உடுத்திய சிவ வேடத்துக்கு மதிப்பு கொடுத்து, அவருக்கு எந்தத் தீங்கும் ஏற்படாமல் காப்பாற்றிய உண்மைக் கதை இருக்கிறது. இது பாண்டியர்களுக்கும் பொருந்தும். இராவணன் சிவ பக்தனாக இருக்கவே, அவனை வென்றதை அவர்கள் பெருமையாகக் கூறிக்கொள்ளவில்லை எனலாம். அதனாலேயே, இராவணனை எதிர்க்க இராமனுக்கு உதவவும் பாண்டியர்கள் முன் வரவில்லை போலிருக்கிறது.

ஆனால், இராவணனை பாண்டியர்கள் அடக்கிய செய்தி செப்பேடுகளிலும், இரகுவம்சத்திலும் காணப்படவே, இராவணன் என்ற ஒருவன் வாழ்ந்தது உண்மை என்று தெரிகிறது. அவன் வாழ்ந்தபோது, பாண்டியர்களும் தமிழ் மண்ணை ஆண்டிருக்கின்றனர் என்று தெரிகிறது. அவர்கள் இருப்பிடம் தக்ஷிண பகுதியில் என்று அழுத்தம் திருத்தமாகக் காளிதாசர் கூறி இருக்கிறார்.

இராமாயணத்தில் பாண்டியர் தலைநகரம்

அடுத்த முக்கியச் சான்றாக, பாண்டியர்கள் தலைநகரம், இராமாயணத்திலேயே உள்ளுறைச் சான்றாகக் காணப்படுகிறது. சீதையைத் தேடி வானரர்கள் நான்கு திசைகளுக்கும் சென்ற போது, சுக்ரீவன், நான்கு திசைகளிலும் தென்படக்கூடிய நாடுகளையும், பூகோள அமைப்பையும் விவரிக்கிறான். தென் திசையை விவரிக்கும் போது, அகஸ்தியர் அப்பொழுது தங்கியிருந்த, காவிரி உற்பத்தி ஸ்தானத்தைச் சொல்லி, அதைக் கடந்து சென்றால், தாமிரபரணி ஆறு வரும் என்று சொல்லி, அதன் பின், பாண்டியர்கள் நாடான ‘கவாடம்’ வரும் என்கிறான்.

“பாண்டியானாம் கவாடம் ததா த்ரக்ஷயதா வானரா:” (வா.இரா: 4 -41- 19)

வானரர்களே, அங்கு பாண்டியர்களது கவாடத்தைக் காண்பீர்கள், என்றான் சுக்கீவன்.

 அதி முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஸ்லோகத்தை, இதுவரை சம்ஸ்க்ருத பண்டிதர்கள் பாண்டியர்களது வாயில் என்றே பொருள் கொண்டனர். ஏனென்றால், கவாடம் என்றால் நுழை வாயில் என்று சம்ஸ்க்ருதத்தில் அர்த்தம். ஆனால், கவாடம் என்பது, பாண்டியர்களது, இரண்டாம் சங்க காலத்தின் தலைநகரின் பெயரும் ஆகும் என்பதை, இறையனார் களவியல் உரை மூலம் அறிகிறோம்.

இதன் மூலம். இராமாயணம் நடந்த காலத்தின் உச்ச வரம்பு,  இரண்டாம் சங்க காலம் ஆரம்பித்த நேரம் எனலாம். இராமாயண காலத்தில் பாண்டியர்களே சக்தி வாய்ந்த அரசர்களாக இருந்து வந்தார்கள் என்பதற்கு, இரகு வம்சம் மட்டுமல்லாமல், இராமாயணமும் ஒரு சான்றாக இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. இறையனார் களவியல் உரையில் புலவர் நக்கீரர், சங்க காலங்களுக்குக் கால வரம்புகளைத் தருகிறார். அதன் படி, கவாடத்தைத் தலை நகரமாகக் கொண்ட இரண்டாம் சங்க காலம், பொ.முன். 5550 (BCE) இல் ஆரம்பிக்கிறது. இது இன்றைக்கு 7000 வருடங்களுக்கு முன் என்று சொல்லலாம். இந்த இராமாயணச் சான்றால். இராமாயணம் நடந்த காலம் 7000 ஆண்டுகளுக்குள்தான் இருந்திருக்க வேண்டும். அதற்கு அப்பால் இருக்க சாத்தியமில்லை என்று புலனாகிறது.

இதில் ஆச்சரியப்படத்தக்க தகவல் என்னவென்றால், பகவானின் இரு கண்களில் ஒன்றான தமிழ் இல்லாமல், சம்ஸ்க்ருத மொழியில் இருக்கும் இராம சரிதத்தின் காலத்தைக் கணக்கிட இயலாது என்னும் அற்புத விவரம்தான். அதுமட்டுமல்ல, பாரதத்தாயின் திருவடி போல விளங்கும் தமிழ் மண்ணிலிருந்துதான் இராமாயணத்துக்கான தொல்லியல் சான்றும் நமக்குக் கிடைக்கிறது. அதைப் பற்றி அடுத்த கட்டுரையில் காண்போம்.

 

வியாழன், 4 ஜனவரி, 2024

ஸ்ரீலங்கையில் இராவணனது லங்காபுரி

ஸ்ரீலங்காவை, இலங்கை என்றே அழைத்து வந்தார்கள் என்ற கருத்து இருந்து வருகிறது. ஆனால் ஆயிரத்து ஐநூறு வருடங்களுக்கு முன்னால் வராஹமிஹிரரால் எழுதப்பட்ட ‘ப்ருஹத் சம்ஹிதை’ என்னும் நூலில் நாடுகளின் அமைப்புகளைச் சொல்லுமிடத்தில் தென்திசையில் இலங்கை உள்ளது என்று சொல்லும் பகுதியில், சிங்களம் என்றும் தனியாக ஒரு நாடும் சொல்லப்பட்டுள்ளது (14: 11-16). இன்றைக்கு நாம் அறிந்தவரையில் இலங்கையில் உள்ளவர்கள்தாம் சிங்களர்கள் என்னும் மக்கள். அதனால் இலங்கையே சிங்களம் என்றும் அழைக்கப்படுகிறது என்று நாம் எண்ணுகிறோம். பாரதியாரும், சிங்களத் தீவுக்குப் பாலம் அமைக்க வேண்டும் என்று பாடவில்லையா?

இந்த இரண்டு பெயர்கள் தவிர, இலங்கையை ‘சிலோன்’ என்று சொல்லும் வழக்கமும் இருக்கிறது. அசோக மன்னன் கல்வெட்டுகளைப் பார்த்தால், அவற்றில் இலங்கையைத் ‘தாம்பபண்ணி’ (Tambapanni) என்று குறித்து வைத்துள்ளார்கள்.  மெகஸ்தனிஸ் போன்ற கிரேக்க வரலாற்றாசிரியர்கள், ஸ்ரீலங்காவை ‘தாப்ரோபேன்’ (Taprobane) என்று எழுதி வைத்துள்ளது, ‘தாம்பபண்ணி’ என்னும் பெயரின் திரிபாகத் தெரிகிறது. இந்த காரணங்களால், இராவணனது இலங்கை நகரம் ஸ்ரீலங்காவில்தான் இருந்தது என்று எப்படிச் சொல்லலாம் என்பது பல ஆய்வாளர்களுக்கும் இருக்கும் கேள்வி.

மேலும், ஸ்ரீலங்காவில் எந்த இடத்தில் இராவணனது நகரம் இருந்தது என்பதும் புதிராக இருக்கவே, இராமாயணத்தின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குறியாக்குபவர்களும் இருக்கிறார்கள்.

கல்வெட்டுகளில் இலங்கை

இந்த சந்தேகங்களுக்கு விடை காண சமீபகாலத்திலிருந்து, நாம் பின்னோக்கிச் செல்வோம். 16-ஆம் நூற்றாண்டில் ஸ்ரீலங்காவுக்கு வந்த போர்சுகீசியர், அந்த நாட்டை அவர்கள் மொழியில் ‘சேலன்’ (Seylan) என்றனர். அவர்கள் வைத்திருந்த வரைபடத்தில் அந்தப் பெயரில் இருந்த ஒரு தீவைத் தேடி வந்தார்கள். ஸ்ரீலங்காவைப் பார்த்தபின் அதுவே சேலன் என்று கருதி அந்த நாட்டை ஆக்கிரமிக்க ஆரம்பித்தார்கள். அந்தப் பெயரே ‘சிலோன்’ என்றாகியது. எனவே சிலோன் என்பது நானூறு வருடங்களுக்கு முன் கொடுக்கப்பட்ட பெயர்.

ஆனால், நம் நாட்டில் ஸ்ரீலங்கா முழுவதையும் இலங்கை என்றே அழைத்து வந்தனர் என்பதை, சோழர் காலக் கல்வெட்டுகள் பலவற்றின் மூலம் அறிந்து கொள்கிறோம். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இராஜேந்திர சோழன் வெளியிட்ட திருவாலங்காடு செப்பேட்டில், அவன் தந்தை இராஜராஜ சோழனைப் பற்றிச் சொல்லுமிடத்தில், இராமன் இலங்கைக்குச் சென்று இலங்கை அரசனை வீழ்த்தியது போல இராஜராஜனும் கடலைக் கடந்து இலங்கைக்குச் சென்று அதன் அரசனை வென்றான் என்று சொல்வது இன்றைக்கு ஸ்ரீலங்கா என்று அழைக்கப்படும் நாட்டையே.

செப்பேட்டின் விவரம்: (செப்பேட்டுச் செய்யுள்:80)

ராகவர்களின் தலைவன் (அதாவது, இராமன்) திறமையான குரங்குகளைக் கொண்டு சமுத்திரத்தின் நீரின் குறுக்கே பாலம் கட்டி, கூரிய முனைகள் கொண்ட அம்புகளால் லங்கைவின் அரசனை (அதாவது ராவணனை) மிகவும் சிரமத்துடன் கொன்றான்; (ஆனால்) இந்த பயங்கரமான தளபதி (மன்னர் அருண்மொழிவர்மன்) கப்பல்கள் மூலம் சமுத்திரத்தைக் கடந்து இலங்கையின் அதிபதியை எரித்தார். எனவே இராமனை இந்தச் சோழ மன்னன் (இராஜராஜ சோழன்) மிஞ்சினான்.”

இராமனையே மிஞ்சினவன் என்ற புகழ் பாடிக் கொள்ள இவ்வாறு எழுதி வைத்தாலும், நமக்குக் கிடைக்கும் முக்கியச் சான்றான இராவணனது இலங்கை ஸ்ரீலங்காதான் என்பதைச் செப்பேட்டின் இந்த வரிகள் நிரூபிக்கின்றன. கடலுக்குக் குறுக்கே வானரர்களால் பாலம் கட்டிய விவரத்தையும், அந்தக் கடல், சோழ நாட்டுக்கும், ஸ்ரீலங்காவுக்கும் இடையேயான கடல் என்பதையும், அதை கடந்துதான் இலங்கைக்குச் சென்று இராவணனை இராமன் வென்றான் என்பதையும் தெளிவாகக் காட்டும் செப்பேடு இது மட்டுமே. இதில் இலங்கை என்றுதான் குறிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் சிங்களமும், தாம்பபண்ணியும்

ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னால், சிங்களம் என்ற பெயரும், அதற்கும் முன்னால், தாம்பபண்ணி என்ற பெயரும் வந்துவிட்டது. அது எவ்வாறு என்பதை இலங்கையின் அரச வம்சங்களையும், பௌத்தம் பரவின விதத்தையும் சொல்லும் ‘மஹாவம்சம்’ விவரிக்கிறது. கௌதம புத்தர் இந்த உலகை விட்டு நீங்கின அன்று, விஜயன் என்பவன் பாரத தேசத்திலிருந்த வங்கம் என்னும் நாட்டிலிருந்து இன்றைய ஸ்ரீலங்காவின் வடக்குக் கரைக்கு கப்பல் மூலம் வந்து இறங்கினான். அங்கிருந்த மண் தாமிர வர்ணத்தில் இருந்ததாம். அந்த மண்ணில் அவன் உட்கார்ந்தபோது அவனது கையில் தாமிர வர்ணம் ஒட்டிக் கொள்ளவே அந்த இடத்தை ‘தாம்ரவர்ணி’ என்று அழைத்தான். பௌத்தம் பரவினபோது பாலி மொழியும் அங்கு பேசப்படவே, அந்த மொழியில், தாம்பபண்ணி என்று அழைக்கப்படலாயிற்று. இந்தப் பகுதி, ஸ்ரீலங்காவின் வடக்குப் பகுதியில் உள்ள யாழ்ப்பாணமாகும். ஸ்ரீலங்கா முழுவதற்குமே இந்தப் பெயர் வழங்கப்படவில்லை.

இனி சிங்களம் எது என்று பார்ப்போம். விஜயனது தந்தையின் பெயர் ஸிம்ஹபாஹு அல்லது சீஹபாஹு என்பதே. சிங்கத்தை அடக்கியதால் அந்தப் பெயர். அவன் இருந்த நகரத்துக்கும் சிங்கபுரம் என்று பெயர். அவன் மகனான விஜயனுக்கு விஜய சிங்கன் என்று பெயர். இந்தக் காரணங்களால், விஜயன் வந்திறங்கிய ஸ்ரீலங்கா பகுதிக்கு சிங்களம் என்ற பெயர் ஏற்பட்டது. அவனுடன் வந்த அவனைச் சேர்ந்த மக்கள் சிங்களர் எனப்பட்டனர். இந்தப் பகுதியும் வட ஸ்ரீலங்கா பகுதிதான்.

ஏறத்தாழ கி.மு. 500 வாக்கில் விஜயன் வந்த போது, இந்தப் பெயர்கள் ஏற்பட்டன. அப்பொழுது  ஸ்ரீலங்கை முழுவதையுமே இலங்கை என்றே மஹாவம்சம் குறிப்பிடுகிறது. அந்த காலக் கட்டத்தில் இலங்கையில் இருந்ததாக, இரண்டே இரண்டு நகரங்களைத்தான் மஹாவம்சம் குறிப்பிடுகிறது. ஒன்று வட இலங்கையில் இருந்த ‘சிரீசவத்து’ (ஸிரீஷவஸ்து என்பதன் பாலி மொழித் திரிபு). மற்றொன்று தென்னிலங்கையில் இருந்த லங்காபுரி!

தென்னிலங்கைக் கோமான்’ என்றும் ’தென்னிலங்கைச் செற்றான்’ என்றும் ஆண்டாள் மற்றும் மற்ற ஆழ்வார்கள் கூறுவது, தென் திசையில் இருந்த இலங்கை என்பதற்காக மட்டுமல்ல, இலங்கைத் தீவிலேயே, அதன் தென் பகுதியில் லங்காபுரி என்னும் நகரம் இருந்து, அதனை இராவணன் ஆண்டும் வந்தான் என்பதால் இருக்குமோ என்ற எண்ணம் நமக்கு ஏற்படுகிறது.

கி.மு. 500 க்கு முன்பே தென்னிலங்கையில் மலைப் பகுதியில் லங்காபுரி இருந்தது என்றும் அங்கு யக்ஷர்கள் வாழ்ந்து வந்தனர் என்றும் மஹாவம்சம் கூறுகிறது. காதும், மூக்கும் அரியப்பட்ட சூர்ப்பனகை, தலையில் அங்கை வைத்து, “மலை இலங்கை புகச் செய்த தடந்தோளன்’ என்று திருமங்கை ஆழ்வார் கூறுவதிலிருந்து மலையின் மீதுதான் இலங்கை இருந்தது என்று தெரிகிறது. (பெரிய திருமொழி: 3-9-4). அவ்வாறே இராவணனும் சீதையிடம் கூறினான் (வா- இராமா: 3-47-29).  

தென்னிலங்கையின் மலைப் பகுதி

இராவணனது தலைநகரம்

இலங்கையில் (ஸ்ரீலங்காவை அவ்வாறே நாம் இனி குறிப்பிடுவோம்), அதன் தென் பகுதியில் மட்டுமே மலைப்பகுதிகள் இருக்கின்றன. குறிப்பாகச் சொல்ல வெண்டுமென்றால், கொழும்புவுக்குக் கிழக்கே, தென்னிலங்கையின்  மத்தியப் பகுதியில் மலைச் சிகரங்கள் இருக்கின்றன. அங்குதான் லங்காபுரி இருந்தது என்று மஹாவம்சம் கூறுகிறது. அந்தப் பகுதியில் இருக்கும் சிகரமான, ‘ஆதாம் சிகரம்’ எனப்படும் ‘மலய மலை’யே ராவணன் வசித்த பகுதி என்று இலங்கையில் வழங்கி வரும் பௌத்த மத புத்தகமான ‘மஹாயான லங்காவதார சூத்ரம்’ என்னும் நூல் தெரிவிக்கிறது. யக்ஷர்களது தலைவனும், இலங்கையின் அரசனுமான இராவணனது இருப்பிடமான அந்த மலையின் மீது கௌதம புத்தர் தன் கொள்கைகளைப் போதித்த போது இராவணனே ஒரு பூந்தேரில் அங்கு வந்து செவிமடுத்தான் என்று இந்த நூல் கூறுகிறது.

இந்த நூலின் முதல் அத்தியாயத்தில், ஆதாம் மலை என்று இன்று அறியப்படும் மலையே இராவணன் வாழ்ந்த லங்காபுரி என்று சொல்லியிருப்பது கற்பனையாக இருக்க முடியாது. இலங்கையில் புத்த மதம் முதன் முதலில் தழைக்க ஆரம்பித்த காலக் கட்டத்தில், பௌத்தத்தைக் காலூன்றச் செய்வதற்காக, இராவணனே புத்த மதத்தைப் பின்பற்றினான் என்று எழுதியிருக்கிறார்கள். ஆனால் இராவணனது காலம் மிகவும் முந்தையது என்பதால், கௌதம புத்தர் இலங்கைக்கு வந்தபோது, மேலுலகில் இருந்த இராவணனே நேரில் வந்து தனது நகரமான லங்காபுரிக்கு அழைத்தான் என்றும் அவரிடம் உபதேசம் பெற்று, உயர் நிலையை அடைந்தான் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

இராவணன் வந்த விவரம், இந்த நூலின் முந்தைய பதிப்பில் இல்லை என்று கூறப்படுள்ளது. எனினும், போதனை நடந்த இடம், இராவணனது இலங்கை நகரமாக இருந்தது என்பதில் வேறுபட்ட கருத்து காணப்படவில்லை. பௌத்தத்தை இலங்கையில் பரப்புவதற்கு இந்தக் கதை பயன்பட்டிருக்கும். ஆனால், இராவணன் குறித்த விவரமும், அவனது நகரம் இருந்த மலய மலையும் மக்கள் மத்தியில் ஏன் நிலைக்கவில்லை என்ற கேள்வியும் வருகிறது. அதற்கு விடை, காலப்போக்கில் இலங்கையில் மஹாயானம் பின்பற்றப்படவில்லை என்பதே. தேரவாத பௌத்தம் என்னும் பிரிவே இலங்கையில் பிரபலமானது. அதனால் மஹாயானத்தைச் சேர்ந்த நூல்கள் மறக்கடிக்கப்பட்டன. அத்துடன், மஹாயான நூல் கூறும் இராவணனும், அவனது மலையும் மக்களுக்குத் தெரியாமலேயே போய் விட்டது. இலங்கையின் பௌத்தம், இராமாயணத்தை மறக்கடிக்கச் செய்து விட்டது.

இரண்டாயிரத்து ஐநூறு வருடங்களுக்கு முன்பிலிருந்து இலங்கையில் வேரூன்றிய பௌத்தம், அதற்குப் பல்லாண்டுகளுக்கு முந்தைய இராமாயண தொடர்புகளை அழித்து விட்டிருக்கிறது. ஆனால், இராவணனது நகரம் என்று மலைப்பாங்கான தென்னிலங்கையின் முக்கிய சிகரத்தைச் சொல்லியுள்ளது, அந்தப் பழைய வரலாற்றை தங்களுக்குச் சாதகமாக எடுத்தாளப் பயன்படுத்திக் கொண்டது எதிர்பார்க்கக்கூடியதே.

வால்மீகி இராமாயணத்தில் காட்டப்படும் வர்ணனைகள் இந்தச் சிகரத்துக்குப் பொருந்துகின்றன. இது அமராவதியைப் போல இருக்க வேண்டும். ஆம், இருக்கிறது. வானிலிருந்து தொங்குவது போல, மேகங்களுடன் உறவாடும் முகட்டைக் கொண்டுள்ளது இந்த மலை. இந்த மலையை ஸ்வர்கம் என்றே குறிப்பிட்டு வருகிறார்கள், ஸ்வர்காரோஹணம் என்னும் பெயரைக் கொண்ட இந்த மலை ‘ரோஹண மலை’ என்றும் நாளடைவில் வழங்கப்படலாயிற்று. மலய மலை என்றும் இலங்கை என்றும் இந்த மலைதான் அழைக்கப்பட்டிருக்கிறது. இன்றும் இந்த மலை அழகும், அற்புதமும் நிறைந்த இடமாகவும், குளுமையும், இயற்கை அழகும் கொண்டதாகவும் இருக்கிறது.

இராமாயணம் இராவணனது இலங்கை மலையை ‘திரிகூடமலை’ என்கிறது (வா. இரா: 5-2-1). திரிகூடம் என்றால் மூன்று சிகரங்களின் சேர்க்கை அல்லது மூன்று கூம்புகளின் (hump) சேர்க்கை என்று அர்த்தம். மூன்று சிகரங்களுடன் தென்னிலங்கையில் மலை எதுவும் இல்லை. ஆனால், மூன்று கூம்புகளுடன், மூன்று முகப்புகளுடன் ஆதாம் மலை என்னும் இந்த மலை காட்சி அளிக்கிறது.

இராவணனது திரிகூட மலை கைலாச மலையைப் போலிருக்கிறது என்று இராமாயணம் கூறுகிறது (வா.இரா: 5-2-23). மூன்று பக்கங்களுடன் பிரமிடு போல கைலாசமும், திரிகூடமும் ஒரே மாதிரி இருக்கின்றன.

கைலாய மலையும், இராவணனது திரிகூட மலையும்

அதனால்தானோ என்னவோ, இலங்கை நகரை நிர்மாணித்த குபேரன், அதை இராவணன் பிடுங்கிக் கொண்டபோது, அந்த மலையைப் போன்ற அமைப்பில் இருந்த கைலாயத்தைத் தனது இருப்பிடமாக ஆக்கிக் கொண்டான் போலிருக்கிறது. மற்றொரு காரணம் கைலாயத்தில் குடி கொண்ட சிவபெருமான் தன்னை இராவணனிடமிருந்து காப்பாற்றுவார் என்பதாக இருக்கும்.

இராவணன் சிவ பக்தன் என்பதால், அவன் இருந்த திரிகூட மலை நாளடைவில் “சிவனொளிபாத மலை’ என்ற பெயரைப் பெற்றிருக்கிறது. இதுவே ‘சமனொளி மலை என்று பௌத்தம் வந்ததும் பெயர் பெற்றிருக்கிறது. மக்கள் சமனொளி மலையைச் சுற்றி வலம் வந்தனர் என்ற விவரம் மணிமேகலையில் காணப்படுகிறது. அந்த பெயரைக் கொடுத்தவர் சமன் தேவன் என்னும் பௌத்தர். அவர் இந்த மலையில் வாழ்ந்தார் என்கிறார்கள். அவர் இறந்தபின் இந்த மலையின் காவல் தெய்வமாக ஆகிவிட்டார் என்றும் நம்புகிறார்கள். கௌதம புத்தர் இலங்கைக்கு வந்தபோது, இந்த சமன் என்பவரைச் சந்தித்ததாகவும், அவர் புத்தரிடம் போதனை பெற்றதாகவும் சொல்லப்படுகிறது. அது முதல் அவர் புத்த மதத்தின் முக்கியக் கடவுளாக இந்த மலையில் வணங்கப்பட்டிருக்கிறார். இந்த வகையிலும் இராவணன் முழுவதும் மறக்கப்பட்டிருக்கிறான்.

கெலனியா விஹாரத்திலுள்ள சமன் தேவன்

இந்த மலையின் உச்சியில் நின்று கொண்டு ஹனுமான் சுற்றுப் புறத்தைக் கவனித்து இலங்கை நகருக்குள் எவ்வாறு நுழைவது என்று யோசித்திருக்கிறான் (வா.இரா: 5-2-32). மலையின் அமைப்பைப் பார்த்தால் அது சாத்தியம் என்று தெரிகிறது. இராவணனுடைய நகரம் மொத்த மலைப் பகுதியிலும் பரவலாக இருந்திருக்க வேண்டும். முக்கோண மலையாக இருப்பதால், முக்கோண வடிவில் மதிள் சுவர் இருந்திருக்கிறது. அதைத்தான் இராமன் உடைத்தான் என்று தமிழ்ச் சங்க நூல்கள் தெரிவிக்கிறன.

மலை மேல் ‘பாகவ குகை’, ‘தீவ குகை என்ற இரு குகைகள் இருக்கின்றன. மலைச் சரிவிலே மும்மதிள்கள் கட்டி அவற்றுக்குள்ளேயே வனத்தில் சீதையைச் சிறை வைத்திருக்க முடியும். மலை மேலிருந்து பார்த்தால், மேற்கில் கடல் பகுதி தெரிகிறது. கடல் வழியாக யார் வந்தாலும், மலையிலிருந்தே பார்க்க முடியும். மலையைச் சுற்றி ரத்தினங்கள் கிடைக்கின்றன என்பதும் இராமாயணம் சொல்லும் செய்தியை மெய்ப்பிக்கிறது. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக, மலையடிவாரத்தில் ரத்தினபுரம் என்னுமிடத்திலிருந்துதான் மலையேறும் பாதை இருந்திருக்கிறது.

இந்த மலை பௌத்தர்கள் காலம் தொடங்கி சமீபத்தில் ஆங்கிலேயர்கள் ஆண்டது வரையில், பலராலும் சொந்தம் கொண்டாடப்பட்டது. எனினும், புத்தரின் காலடி என்று ஒரு பாதச் சுவடு மலை மீது பாதுகாக்கப்பட்டு, அதனால் ‘ஸ்ரீபாத மலை’ என்றும் இது அழைக்கப்படுகிறது.

ஸ்ரீபாதம்

இந்த பாத அமைப்பு கௌதம புத்தருடையது என்று நம்பப்பட்டாலும், அதற்கு ஆதாரம் கிடையாது. பொது யுகத்துக்கு முன்பிலிருந்தே இந்தப் பாதம் இருந்திருக்கிறது. இது கல்லில் செதுக்கப்பட்டிருக்கிறது. இது இருப்பதே யாருக்கும் தெரியாது. பொ.மு. 104 ஆம் வருடம், வாலகம்பன் என்னும் அரசன் மான் வேட்டையாடியபோது, அது இந்த மலை மீது ஏறி விட்டது. அதைத் தொடர்ந்து அந்த மன்னனும் மலை ஏறினான். அப்பொழுதுதான் முதல் முறையாக மலையுச்சியில் பாதம் செதுக்கப்பட்டுள்ளதைப் பார்த்தான். அது புத்தருடைய பாதம் என்று தெய்வம் அவனுக்கு உணர்த்தியது என்றும் அது முதல் அந்தப் பாதம் புத்தரது பாதம் என்றும் மக்கள் நம்ப ஆரம்பித்தார்கள்.

இராவணனது மலையான இந்த மலையில் பௌத்தம் வருவதற்கு முன், இப்படிப்பட்ட பாதம் யாரைக் குறித்து உருவாக்கப்பட்டிருக்க முடியும் என்ற கேள்வி நமக்கு வருகிறது. இராமன் இந்த மலை நகரத்தை வென்றான் என்பதைக் குறிக்க பின்னாளில் யாரேனும் செதுக்கினார்களோ என்ற எண்ணம் நமக்கு எழாமல் இல்லை.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மறக்கடிக்கப்பட்ட இராவண சரித்திரத்தைத் துழாவி எடுக்க வேண்டியிருக்கிறது.  கண்டி பகுதியில் ஹிந்து அரசர்கள் ஆண்ட பொழுது 16, 17 ஆம் நூற்றாண்டுகளில் இந்த மலையிலிருந்த பௌத்தர்களை வெளியேற்றி, ஹிந்து ஸ்தலமாக மாற்றினார்கள். மீண்டும் இது பௌத்த ஸ்தலமாக ஆகி விட்டது. பௌத்தத்தினால், இராமாயண வரலாறே இலங்கையில் மறக்கப்பட்டும், திரிக்கப்பட்டும் விட்டது. சமீப காலம் வரை இலங்கைவாசிகள் இராமாயணத்தை உண்மைச் சரித்திரம் என்று நம்பவேயில்லை. இராவணன் ஒரு எதிர்மறை கதாபாத்திரம் என்பது ஒரு காரணம். பௌத்தம் வேரூன்றி இருந்தது என்பது மற்றொரு காரணம். இந்த மலையில் புதைந்துள்ள பல இரகசியங்களை அகழ்வாராய்ச்சியின் மூலம் காண முடியும். ஆனால் அதற்கு இலங்கை தயாராக இருக்க வேண்டும்.

ஆயினும், விபீஷணன் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தன் இருப்பைக் காட்டிக் கொண்டு இருந்திருக்கிறான். இராவணனை மறந்தாலும், விபீஷணனை இலங்கை அரசர்கள் மறக்கவில்லை. இராவணனைக் கொன்று இலங்கையை இராமன் எரித்தான். அதற்குப் பிறகு இராவணன் வாழ்ந்த மலையில் விபீஷணன் வாழ்ந்தாற்போலத் தெரியவில்லை. அவனுக்கென்று ஓரிடத்தை வைத்துக் கொண்டிருந்தான் என்று எண்ணும் வண்ணம் மலையடிவாரத்திலிருந்து 120 கிலோமீட்டர் தொலவில் மேற்கே, விபீஷணன் கோயில் இருக்கும் ‘களனி’ (Keleniya) என்னுமிடம் இருக்கிறது. ‘கல்யாண’ என்னும் பெயர் பாலி மொழியில் கெலேனியா என்றாகி, இன்று தமிழில் களனி என்று வழங்கப்படுகிறது. இதற்கு அருகில் கொழும்பு நகரம் இருக்கிறது.

இலங்கையில் எழுந்த பல சந்தேஸ காவியங்கள் களனியில் விபீஷணன் கோயில் இருந்த விவரத்தைச் சொல்கின்றன. பல அரசர்கள், தங்கள் ராஜ்ஜியம் தங்களிடமே இருக்கவும், இழந்த ராஜ்ஜியத்தைப் பெறவும், இராமனால் ராஜ்ஜியம் கிடைக்கப்பட்ட விபீஷணனை வழிபட்டிருக்கின்றனர். சில காவியங்கள் களனி கோயிலில் இருப்பது இராமன் என்றும், விஷ்ணு என்றும் குறிக்கின்றன. இன்று வரை விபீஷணன் கோயில் இருந்து வருவது, ஸ்ரீலங்காதான் இலங்கையின் இருப்பிடம் என்பதைப் பறை சாற்றுவதாக இருக்கிறது.

இராவணனது அடையாளம்

இலங்கையின் பூர்வ குடிகளாக யக்ஷர்கள் இருந்தனர் என்று மஹாவம்சம் கூறுகிறது. குபேரன் ஒரு யக்ஷன் தான். அவன் பராமரித்த இலங்கையை இராவணன் பிடுங்கிக் கொண்டான் என்று இராவணனே, சீதையிடன் சொல்வான் (வா.இரா: 3-48-5). அதுவே இன்றைக்கு ஆதாம் சிகரம் எனப்படும் மலய மலையாக இருக்க வேண்டும். அதையே லங்காபுரி என்று மஹாவம்சம் கூறியிருக்கிறது.

குபேரன் தன் தாயான, யக்ஷர் குலத்தைச் சேர்ந்த ‘இலவிலா’வைப் போல  உருவ அமைப்பில் இருந்திருக்க வேண்டும். குபேரனின் தந்தையான விஸ்ரவஸ், புலஸ்தியருக்குப் பிறந்தவர். ரிஷியான அவர் மானவ குலத்தவராக இருக்க வேண்டும்.  அவரே இராவணனுக்கும் தந்தை ஆவார். அவர் அரக்கியர் குலத்தில் பிறந்த கைகசியை மணம் செய்து இராவணன், கும்பகர்ணன், விபீஷணன் என்னும் மகன்களைப் பெற்றார்.

இராவணன் உருவ அமைப்பில் தன் தாயை ஒத்திருக்க வேண்டும். அவன் மந்தர மலையைப் போல பெருத்த சரீரம் உடையவன் என்று ஓரிரு இடங்களில் வால்மீகி இராமாயணம் கூறுகிறது. அது மட்டுமல்லாமல் அவன் கருமேகம் போல கருத்த சரீரத்துடனும் இருந்தான் என்றும், நல்ல கழுத்து அமைப்புடன் இருந்தான் என்றும் வால்மீகி கூறுகிறார் (வா.இரா: 5-22-24). இந்த விவரங்கள் மூலம் அவன் அரக்கியர் குலத்தவளான தனது தாயைப் போல இருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஏற்கெனெவே கிழக்கு ஆப்பிரிக்காவிலுள்ள சோமாலியா என்னுமிடம் சுமாலி என்னும் பெயருடன் ஒத்திருக்கிறது என்று சுட்டிக் காட்டினோம். சுமாலி என்பவன் இராவணனுடைய தாய் வழிப் பாட்டன். இராவணனுடைய உருவ விவரங்கள் ஆப்பிரிக்க கருப்பர் இன மக்களுடன் ஒத்துப் போவதை நாம் கவனிக்க வேண்டும்.

இராவணனைப் போலவே அவன் தம்பியான விபீஷணன் இருக்கவில்லை. குணத்தில் அவனைப் போல இல்லை. உருவ அமைப்பிலும் அவனைப் போல இல்லை என்பதை இலங்கையில் எழுந்துள்ள காவியங்களில் அவன் பெயரை ‘உத்பலவர்ணன்’ என்று சொல்லியிருப்பதன் மூலம் தெரிகிறது. அதாவது ‘தாமரை வர்ண’னாக அவன் இருந்திருக்கிறான். அவன் யக்ஷர்களை ஆண்டதைப் போலத் தெரியவில்லை. ஏனெனில், யக்ஷர்கள் என்று சொல்லும் வகையில், இராவணனது மலையைச் சுற்றியுள்ள பல குகைகளில்  ஆதி மனித எலும்புக் கூடுகள் கிடைத்திருக்கின்றன. பலாங்கொடை என்னும் குகையின் பெயரால் ‘பலாங்கொடை மனிதன்’  (Balangoda Man) என்னும் வேறு விதமான மனிதர்கள் 35,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து வாழ்ந்து வந்ததாக தொல்லியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பெருத்த உடல், கழுத்து இல்லாத தோற்றம், சப்பை மூக்கு, துருத்திக் கொண்டிருக்கும் புருவப்பகுதி, கோரமான பற்கள் என்னும் தோற்றத்தில் இருந்த இந்த மக்கள், குபேரன் உருவம் என்று நாம் பார்க்கிறோமே அதை ஒத்து இருக்கிறது. இந்த உருவம் யக்ஷன் உருவம். இந்த உருவம் நம் கோயில் சுவர்களில், உத்தரத்தைத் தாங்கி நிற்கும் உருவங்களாகப் பார்க்கலாம். தென் கிழக்கு ஆசியா முழுவதும், இந்த உருவச் சிலைகளே காணப்படுகின்றன. இவனே இலங்கையின் ஆதி மனிதன்.

இந்த யக்ஷர்களை,  கைகசிக்குப் பிறந்த இராவணன் தனக்குக் கீழ்ப்படியுமாறு வத்திருந்திருக்கிறான்.  இராவணனது கழுத்து நன்கு அமைந்திருந்தது (வா-இரா: 5-22-24) கழுத்தே இல்லாத யக்ஷர்களுக்கு, சிறந்த கழுத்துடைய இராவணனைப் பார்த்தால், பத்து கழுத்துள்ளவன் போலத் தெரிந்திருக்கும். அதனால்தானோ என்னவோ, இராவணன் ‘தசக்ரீவன்’ – பத்து கழுத்துடையவன் – என்னும் பெயர் பெற்றானோ! அதனால் தசமுக இராவணன் எனப் பெயர் பெற்றிருப்பான்.

இராவணன் சொன்னதைச் செய்ய இந்த யக்ஷர்களும், தாய் வழியாக வந்த கருப்பர் இன மக்களும் இருந்திருக்க வேண்டும். சீதைக்குக் காவல் இருந்தவர்கள் அவர்களே. அவர்களைத் திருப்திப்படுத்த தண்டகாரண்யத்துக்கு அனுப்பி, வேண்டியபடி நர மாமிசம் சாப்பிட்டுக் கொள்ளுங்கள் என்று இராவணன் விட்டிருப்பான். இராமன் வந்து அவர்கள் அனைவரையும் அழித்தான். ஆனால் இலங்கையில் இருந்த யக்ஷர்கள் பலரும் இராமன் மற்றும் சீதையின் கருணையால் உயிர் தப்பியிருப்பர். அவர்கள் கி.மு.6500 ஆண்டுகள் வரை இருந்த அடையாளம் ஆராய்ச்சியில் தெரிகிறது. அதற்குப் பின்னும் அவர்கள் வாழ்ந்திருக்கின்றனர். நாளடைவில் பல மாறுதல்களை அடைந்துள்ளனர். இன்று ‘வெத்தா’ (Vedda) எனப்படும் வேடுவர் மக்கள் அந்த யக்ஷர் (பலாங்கொடை மனிதன்) மரபணுவைக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உருவ அமைப்பில் நம்மைப் போல இருக்கவே, நம்மைப் போன்ற மனிதர்களுடன் அவர்கள் கலந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது.

திரிகூட மலையடிவாரத்தில் யக்ஷர்கள் வாழ்ந்த குகைகள்

இராவணனைப் போன்ற ஆப்பிரிக்கக் கருப்பர் யாரும் இலங்கையில் இன்று இருப்பதாகத் தெரியவில்லை. அவர்கள் அன்றும் அதிகம் இருந்திருக்க மாட்டார்கள். மீதம் இருந்தவர்கள் இராவணன் காலத்துக்குப் பிறகு இலங்கையை விட்டு வெளியேறி இருப்பார்கள்.

இந்த விவரங்கள் மூலம் இராவணன் இருந்தது ஸ்ரீலங்கா என்னும் இலங்கைதான் என்று நாம் நிரூபித்தாலும், அவன் வாழ்ந்த காலம் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே என்னும் தோற்றத்தை இந்தக் கட்டுரை எழுப்புகிறது என்ற எண்ணம் வருகிறது அல்லவா? அதையும் ஆராய்ந்து விடுவோம

 ***

References:

Sri Pada - Adam’s Peak: https://www.buddhanet.net/e-learning/buddhistworld/sri-pada.htm 

Mahayana Lankavatara Sutra:  https://huntingtonarchive.org/resources/downloads/sutras/08technicalMayayana/Lankavatara%20Sutra.doc.pdf

https://www.colombotelegraph.com/index.php/ravana-sinhala-buddhism-a-strained-relationship-ridden-with-contradictions/

Saman Deva: https://sripada.org/saman.htm