சனி, 9 மார்ச், 2024

ஆழ்வார்கள் வாக்கில் செங்கோல்

Published in Geethacharyan

பரம காருணிகனான ஸர்வேச்வரன், மாந்தர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்பது போன்ற பல விஷயங்களையும் அறிவிக்க சாஸ்திரங்களை ஸ்ருஷ்டித்து, அவற்றின்படி நடக்க வேண்டும் என்ற ஆஜ்ஞையையும் பிறப்பித்துள்ளான். அந்த ஆஜ்ஞையின் உருவகமே செங்கோல்!

செங்கோல் குறித்து பலவிதமாகக் கேள்விப்படும் இந்தக் காலக்கட்டத்தில், அதிலும், மன்னர்தம் கையில் மாண்புடன் இருக்கும் செங்கோல், மக்களாட்சிக்கு எதற்கு என்றும் மக்கள் கேட்கும் இந்த நேரத்தில் நாம் நினைவு கூர்வது நீள்மதிள் அரங்கத்தாமானின் கையில் இருக்கும் நீண்ட செங்கோல்தான்.

ஆள்பவன் எவனோ அவன் தண்டதாரியாக இருக்க வேண்டும் என்று பீஷ்மர், பாண்டவர்களிடம் சொல்வார். பிரபஞ்சத்தையே ஆளும் பகவான் கையில் செங்கோல் இருப்பது மிகவும் பொருத்தமானது. அதையே தர்ம-தண்டம் என்று பீஷ்மர் பலவிதமாக விவரித்துள்ளார். திருவள்ளுவனாரும் அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நிற்பது மன்னவன் செங்கோல் என்கிறார். எனில் அமரருக்கும் மன்னனான ஆதிபிரான் ஏந்தியிருக்கும் செங்கோலின் பெருமையை என்னென்று சொல்வது? அப்படிப்பட்ட செங்கோலைப் பற்றி ஆழ்வார்கள் எங்கேனும் சொல்லியிருக்கிறார்களா என்ற ஆர்வம் எழுவது இயற்கைதான். அவ்வாறு தேடும் போது, பன்னிரண்டு இடங்களில் செங்கோல் பற்றின விவரம் கிடைக்கிறது.

ஆண்டாள் கண்ட செங்கோல்

திருவரங்கத்துச் செல்வன் வரவை எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஆண்டாள் நாச்சியார், அவன் கையில் சங்கு, சக்கரம் ஆகியவற்றுடன் செங்கோலும் இருக்கிறது. அவற்றுடன் பிரிவாற்றாமையால் கழன்ற தனது கை வளையும் அல்லவோ இருக்கிறது என்று அரற்றும் போது,

செங்கோலுடைய திருவரங்கச் செல்வனார்

எம்கோல் வளையால் இடை தீர்வர் ஆகாதே?” (நாச்-திரு: 11-3)

என்கிறாள். தன் வளையல் கழலும் அளவுக்கு பிரிவாற்றாமை என்னும் நோயைக் கண்ணன் கொடுத்தால், அவன் செங்கோல் சிறந்தது என்று சொல்லவா முடியும்? இதையே நம்மாழ்வார், திருவிருத்தத்தில் 25 -ஆவது பாசுரத்தில்,

“எம் கோல் வளை முதலா கண்ணன் மண்ணும் விண்ணும் அளிக்கும்

செங்கோல் வளைவு விளைவிக்குமால்”

என்கிறார். தலைவியின் துயரத்தைப் பற்றிப் பேசும் இடத்தில், நியாயம் தவறாமல் இருக்க வேண்டிய செங்கோல், பகவானின் திருத்துழாயின் தண்மையை எதிர் நோக்கியிருந்த தலைவிக்குக் குளிர் காற்றுக்குப் பதிலாக உஷ்ணக் காற்றடித்து, தலைவியைக் கண்ணீர் விடச் செய்தது. அதனால் அவளது நிறமே மாறி விட்டது என்கிறார். இதைச் சொல்லும் போது, செங்கோலை நினைவுபடுத்துகிறார் நம்மாழ்வார்.

“பனிப்பு இயல்வாக உடைய தண் வாடை இக்காலம் இவ் ஊர்ப்

பனிப்பு இயல்பு எல்லாம் தவிர்ந்து எரி விசும் அம் தண்ணம் துழாய்ப்

பனிப்புயல் சோரும் தடங்கண்ணி மாமைத் திறத்துக்கொலாம்

பனிப்புயல் வண்ணன் செங்கோல் ஒருநான்று தடாவியதே” (திருவிருத்தம்: 5)

பக்தைக்கு அருள் பாலிக்காமல் நோகடித்த பனிப்புயல் வண்ணனான மேக வர்ணக் கண்ணனது செங்கோல் வளைந்தது. தவறிழத்தவர்களைத் தண்டிக்கும் போது செங்கோல் நிமிர்கிறது. ஆனால் அன்பனாய்த் தன்னை அடைந்தவரை அரவணைக்காதபோது அவன் செங்கோல் வளைகிறது. ஆனால் அப்படி அவன் வளையவிட மாட்டான் என்பதுதான் இங்கு உள்ளிடைப் பொருளாகக் காட்டுவது. என்றுமே அவன் செங்கோல் வளையாதது.

இந்த மூன்று இடங்களைத் தவிர பிற இடங்களில், மன்னர்தம் செங்கோலாகவும், வேறுவிதமாகவும் அருளிச் செயல் காட்டுகிறது.

 

செங்கோலும், மன்னர் நீதியும்

நான்காவதாக நாம் காட்டும் செங்கோல், பரமேஸ்வர விண்ணகரம் பணிந்த, பல்லவர் கோன் ஏந்தின செங்கோலாகும்.

வெண் குடை நீழல் செங்கோல் நடப்ப

      விடை வெல் கொடி வேல்-படை முன் உயர்த்த

பண்பு உடைப் பல்லவர்-கோன் பணிந்த

      பரமேச்சுரவிண்ணகரம்-அதுவே   

(பெரிய திருமொழி: 2-9-6)

செங்கோல் ஏந்தினாலும், மண்ணுலகாளும் மன்னன், பரமேஸ்வரன் முன் பணிவான்.  

ஐந்தாவதாக நாம் பார்க்க இருப்பது, கண்ணன் தூது சென்றபோது துரியோதனாதியர் செங்கோலோச்சி வீற்றிருந்த  தகைமையைத் திருமங்கையாழ்வார் சொன்ன பாங்கு.

போது ஆர் தாமரையாள் புலவி குல வானவர்-தம்

கோதா கோது இல் செங்கோல் குடை மன்னர் இடை நடந்த

தூதா தூ மொழியாய் சுடர்போல் என் மனத்து இருந்த

வேதா நின் அடைந்தேன்-திருவிண்ணகர் மேயவனே

(பெரிய திருமொழி: 6-2-9)

குற்றமில்லாத செங்கோலுடைய மன்னர் என்று துரியோதனாதியரைச் சொன்னது, கண்ணனது தூதுச் செய்திக்கு நியாயமான பதில் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில்தான்.

ஆறாவதாக நாம் பார்க்க இருப்பதும் செங்கோல் ஏந்திய அரசன் ஒருவன், இறைவன் தாள் பணிந்தான் என்பதே.

செங்கோல் வலவன் தாள் பணிந்து ஏத்தித் திகழும் ஊர்-

நம் கோன் நறையூர்-நாம் தொழுதும் எழு நெஞ்சமே

(பெரிய திருமொழி: 6-4-3)   

நீதி வழுவா அரசனும், எல்லோருக்கும் நீதிமானான ஸர்வேஸ்வரனைப் பணிவன் என்பதைக் காட்டும் வண்ணம், செங்கோல் தரித்தமை காட்டப்பட்டுள்ளது.

இனி நாம் காட்டும் விவரங்கள் எல்லாம் திருவிருத்தத்தில் காணப்படுவன.

 

திருவிருத்தத்தில் செங்கோல்

‘தடாவிய அம்பும்’ எனத்தொடங்கும் 6-ஆவது பாசுரத்தில், ‘மதன செங்கோல் என்று சொல்லப்பட்டுள்ளது. மதன செங்கோல் என்றால் காமதேவனாகிய மன்மதனுடைய ஆஜ்ஞை என்று அர்த்தம். செங்கோல் என்பது ஆஜ்ஞையைக் காட்டுவது என்றே உரையாசிரியர்கள் கூறியுள்ளார்கள்.

யார் ஆஜ்ஞை செய்கிறார்களோ அவர்கள் செங்கோல் ஆள்வதாகக் கொள்ளவேண்டும் என்பதைத் திருவிருத்தம் 13-ஆவது பாடலில் காண்கிறோம்.

“தனி வளர் செங்கோல் நடாவு தழல் வாய் அரசு அவிய

பனி வளர் செங்கோல் இருள் வீற்றிருந்து பார் முழுதும்

வெப்பத்தைப் பரப்பும் சூரியன் பகலில் செங்கோல் ஓச்சுகிறான். குளுமையைப் பரப்பும் இருள் இரவில் செங்கோல் ஓச்சுகிறான்.

திருவிருத்தம் 33- ஆவது பாசுரத்தில் சுவாரசியமான ஒரு விவரம் வருகிறது. அருள் தரும் திருச் சக்கரத்தால் ஆகாயத்தையும், பூமியையும், அந்தகாரமான அஜ்ஞானம் என்னும் இருளையும், பாவங்களையும் கெடச் செய்யும் செங்கோல் எங்கிறார் ஆழ்வார்.

அருள் ஆர் திருச் சக்கரத்தால் அகல் விசும்பும் நிலனும்

இருள் ஆர் வினை கெட செங்கோல் நடாவுதிர்

சக்கரத்தையும் செங்கோலையும் சேர்த்துச் சொல்லவே, செங்கோலின் அமைப்பில் சக்கரம் இடம்பெற்றிருக்குமோ என்னும் எண்ணம் வருகிறது. இறைவனது ஆணையின் வெளிப்பாடாகத் திகழும் செங்கோலில், அவனது ஆணையைச் செய்யும் திருச் சக்கரம் உச்சியில் வீற்றிருப்பது பொருத்தமே.

திருவிருத்தப்பா 77-இல் செங்கோல் என்ற சொல் சூரியனது ஆஜ்ஞை என்ற பொருளில் வருகிறது.

திங்கள் அம் பிள்ளை புலம்ப தன் செங்கோல் அரசு பட்ட

செங் களம் பற்றி நின்று

திங்கள் என்னும் சந்திரன் புலம்பும் வண்ணம் சூரியன் தன் செங்கோல் ஓச்சினது என்று இந்தப் பாசுரம் கூறுகிறது.

அடுத்து 80-ஆவது பாசுரத்தில், செங்கோல் கொண்டு அரசாளும் மன்னர் சிலகாலம் கழித்து மறைவர், சூரியன் மறைவது போல என்கிறார் நம்மாழ்வார்.

“சீர் அரசு ஆண்டு தன் செங்கோல் சில நாள் செலீஇக் கழிந்த

பார் அரசு ஒத்து மறைந்தது நாயிறு

என்றுமே அழியாத செங்கோல் பகவானது செங்கோல்தான்.

அந்த எண்ணம்தான் மன்னராட்சியிலும், மக்களாட்சியிலும் ஓங்கி இருக்க வேண்டும். சூரியன் மறைந்து, தோன்றுவதைப் போல, மக்களை ஆள்பவர்களும், மறைந்தும், மாறிக் கொண்டும் இருப்பர். ஆனால் மாறாமல் இருப்பது சர்வேஸ்வரனுடைய செங்கோல். எங்கு, யாருக்கு, எதை, எப்படித் தருவது என்பது அவனது செங்கோலுக்கு மட்டுமே தெரியும். 25-ஆவது திருவிருத்தப்பாவில் சொல்வது போல குளுமையைத் தராமல் உஷ்ணத்தைத் தந்தாலும், எதற்கு நாம் தகுதியோ அதைத்தான் பகவான் தருவான் என்பதை ஆழ்வார் நமக்குக் காட்டுகிறார்.

 

வ்ருஷபம் என்னும் தர்ம தேவதை

அந்தச் செங்கோல் சக்கராயுதம் போல நீதி தவறாதது. அது ஒரு வ்ருஷபத்தைக் கொண்டிருக்கலாமோ என்று கேட்பின், பாகவத புராணத்தில் பரீக்ஷித் மஹாராஜா தர்ம தேவதையின் உருவில் இருந்த வ்ருஷபத்துடன் உரையாடினதை நினைவிற்குக் கொண்டு வருவோம். தர்ம தேவதை வ்ருஷபத்தின் உருவில் நான்கு கால்களில் நிற்கக்கூடியது. ஆனால் கலி யுகத்தில் மூன்று கால்கள் அடிபட்டுப் போய்விட்டன. அடிபட்டு விழுந்த வ்ருஷபம் எழுந்து நிற்க பரீக்ஷித் தர்மத்தை நிலைநாட்டினான். அதைத்தான் எக்காலத்திலும் ஆள்வோரும், மக்களும் கடைபிடிக்க வேண்டும். அதுவே தெய்வத்தின் ஆஜ்ஞை என்பதே செங்கோல் பற்றி ஆழ்வார்கள் காட்டும் கருத்தாகும்.