வியாழன், 8 நவம்பர், 2012

114. இந்தோனேசியாவில் பிரஹல்லாதனும், விரோசனனும்.

இனி இந்தப் பாதாளத்துக்கும் மஹாபலிக்கும் உள்ள தொடர்பைக் கொண்டு, நாம் காட்டும் சுந்தாலாந்து என்னும் இந்தோனேசியப் பகுதியில்தான் பலி இருந்தானா என்பதைப் பார்த்து விட்டு  மேலே தொடர்வோம்.


மஹாபலி எனப்படும் பலி என்பவன் யார் என்பதைப் பல புராணங்களும் ஒரே மாதிரியே சொல்லுகின்றன. அவற்றில் பலி என்னும் அசுரன் மிகவும் பலம் பெற்று வந்ததாகவும், அவனை அழிக்க விஷ்ணுவே வாமன அவதாரம் எடுத்தார் என்றும் சொல்லப்பட்டுள்ளன. அவனிடம் மூன்றடி மண் கேட்டு, ஓரடியால் இந்த உலகத்தை அளந்து, இரண்டாம் அடியால், விண்ணை அளந்து, பிறகு மூன்றாமடிக்கு இடம் இல்லாததால், பலியின் தலையில் அந்த அடியை வைத்து, அவனைப் பாதாளத்தில் தள்ளினார். பாதளத்துக்குள் பலி சென்றதால், பலியின் ஆட்சி இந்திரனுக்குக் கிடைத்தது. இந்தக் கதை உயிருடன் வாழ்ந்த மனிதனைப் பற்றியும் இருக்கலாம். அல்லது ஒரு இயற்கை நிகழ்சியைக் குறிக்கும் உருவகக் கதையாகவும் இருக்கலாம்.


ஏனெனில், பல ஆயிரம் தேவ யுகங்கள் கழித்து இந்திரன் ஆட்சி முடிந்த பிறகு மீண்டும் பலியே ஆட்சிக்கு வருவான் என்று சொல்லப்பட்டுள்ளதால், இது மக்கள் பெருக்கம், அழிவு ஆகியவற்றைக் காட்டுவதாக உள்ளது. வாமன புராணம் சொல்லும் விவரத்தில் இப்படிப்பட்ட உட்பொருள்கள் புதைந்திருப்பதைக் காணலாம். மஹாபலியைக் கெட்டவனாகப் புராணங்கள் சித்தரிக்கவில்லை. அவன் மூவுலகையும் ஆண்டானென்றும், அவன் தர்மவானென்றும் அவை கூறுகின்றன. ஆனால் அவன் இந்திரனிடமிருந்து ஆட்சியைப் பிடுங்கிக் கொண்டதாகக் கூறுகின்றன.


இந்திரன் என்பவன், வடபுலத்தில் மக்கள் பெருக்கம் இருந்த காலக் கட்டத்தின் உருவகம் என்றால், அவனிடமிருந்து பலி ஆட்சியைப் பிடுங்கினான் என்பது, தென்புலத்தில் மக்கள் பெருக்கம் ஏற்பட்ட காலக் கட்டத்தைக் காட்டுகிறது. இந்த உருவகமே பலியின் கதையில் இருக்கிறது என்பதைக் காட்ட நாம் பிரஹல்லாதனைப் பற்றி மஹாபாரத்த்தில் வரும் விவரங்களை எடுத்துக் காட்டலாம். பிரஹல்லாதன் பலியின் தாத்தா. அவனை முன்னிட்டே, நரசிம்ம அவதாரம் நடந்தது. கிருஷ்ணனும், பகவத் கீதையில், தைத்தியர்களுள் தான் பிரஹல்லாதன் என்கிறான். அப்படிப்பட்ட பிரஹல்லாதன் இந்திரனிடமிருந்து  மூவுலகங்களையும் கவர்ந்து விடுகிறான். பிரஹல்லாதனுக்கும், இந்திரனுக்கும் கடுமையான சண்டை நடந்திருக்கிறது. மஹாபாரதப்போரில் இருட்டில் சண்டை தொடர்ந்த போது, அது ஆதியில் பிரஹல்லாதனுக்கும், இந்திரனுக்கும் நடந்த கடுமையான சணடையைப் போல இருந்தது என்று மஹாபாரதம் அடிக்கடி கூறுகிறது. பிரஹல்லாதன் நல்லவனாயிற்றே, அவன் ஏன் இருட்டில் இந்திரனுடன் சண்டை போட வேண்டும்?


அவன் மகன் பெயர் விரோசனன். விரோசனன் என்றால் ஒளி வீசுபவன் என்றும் நெருப்பு என்றும் பொருள். சூரிய னுக்கும் விரோசனன் என்ற பெயர் உண்டு. இதனால், பிரஹல்லாதன் காலத்தில் இந்திரனுலகமான வட புலத்தில் மக்கள் பெருக்கம் குறைந்து, தென்புலத்தில் பெருக ஆரம்பித்து விட்டது என்று தெரிகிறது. பூமியின் அச்சின் சாய்மான வேறுபாட்டால், சூரியனது தென்புல நகர்வு ஆரம்பித்த காலத்தில் பிரஹல்லாத – இந்திரன் சண்டை இருட்டில் நடந்து, முடிவில் சூரிய ஒளி அதிகரிக்க அதிகரிக்க, பிரஹல்லாதன் வென்றிருக்கிறான். அவனது மகன் பெயர் விரோசனன் என்பதால், சூரியனது ஆதிக்கம் தென் புலத்தில் இருந்த காலக் கட்டத்தை அது காட்டுகிறது. சூரியனது வெப்பம், தென் புலத்துக்கு அதிகம் கிடைக்க ஆரம்பித்திருக்கிறது.


விரோசனன் விஷயத்தில் சொல்லப்படும் ஒரு கதை புதிர் போல சில ரகசியங்களைக் கொண்டிருகின்றன. அந்தக் கதையை மஹாபாரத்த்தில், திரௌபதியைச் சூதில் வென்று மான பங்கப்படுத்தியபின் நடந்த விவாதத்தில் விதுரர் கூறுகிறார். (ம-பா 2-66). தன்னைச் சூதில் வென்ற செயல் சரியானதுதானா என்று திரௌபதி கேட்கிறாள். அதற்கு மிகச் சரியான பதிலைச் சொல்ல வேண்டும். பிரஹல்லாதன் சொன்னதைப் போல சரியாகச் சொல்ல வேண்டும் என்கிறார் விதுரர்.

ஒரு முறை பிரஹல்லாதனது மகனான விரோசனனுக்கும், ஆங்கிரஸ் என்னும் ரிஷியின் புதல்வனான சுதன்வான் என்பவனுக்கு ஒரு பெண் விஷயமாகப் போட்டி வந்து விடுகிறது. ஒரே பெண்ணையே இருவரும் மணக்க விரும்பினார்கள். அவர்களில் எவர் அதிகத் தகுதி வாய்ந்தவரோ, அவரே அந்தப் பெண்ணை மணக்க வேண்டும் என்று ஒத்துக் கொண்டனர். யாருக்குத் தகுதி அதிகம் என்பதைக் கூறுமாறு பிரஹல்லாதனை அணுகினர். விரோசனனோ பிரஹல்லாதனது மகனாவான். அதனால் மகனுக்குச் சாதகமாகப் பாரபட்சமாக்க் கருத்து சொல்லக்கூடாது என்று பிரஹல்லாதனிடம் சுதன்வான் கூறுகிறான். பாரபட்சமாகக் கருத்து சொன்னால் பிரஹல்லாதனது தலை சுக்கு நூறாக உடைந்து விடும் என்றும் எச்சரிக்கை விடுகிறான்.


தன்னால் சரியாகப் பதில சொல்ல முடியாதோ என்ற எண்ணத்தில், பிரஹல்லாதன் காஸ்யபரை அணுகிக் கேட்கிறான். காஸ்யபர் கூறும் பதில் புதிர் போல உள்ளது. அவர் யாருக்கு அதிக தகுதி என்று சொல்லவில்லை. மாறாக, பயமும், பேராசையும், கோபமும் இல்லாமல் சரியான பதிலை ஒருவன் சொல்ல வேண்டும், அதை ஆமோதிக்கும் சாட்சியாக இருப்பவனும் அவ்வாறாகவே இருக்க வேண்டும். இல்லையென்றால் வருணன் என்னும் கடலானது தனது 1000 பாசக் கயிறுகளால் அவர்களைப் பிணைத்து விடுவான் என்கிறார். அதாவது கடல் நீர் அவர்களை முழுகடித்து விடும் என்கிறார்.

இந்த அறிவுரையை ஏற்ற பிரஹல்லாதன், சுதன்வானே, தனது மகனான விரோசனனை விட தகுதியானவன் என்கிறான். எதற்குத் தகுதியானவன்? இங்கு பெண்ணுக்குத் தகுதியானவன் என்று சொல்லவில்லை. உயிர்களுக்கு அதிபதியாக இருக்கத் தகுதியானவன் என்கிறான். அதாவது இங்கு சொல்லப்பட்ட போட்டி மணப்பெண் குறித்தல்ல. மணப்பெண் என்பவள் ஒரு உருவகமே.


சுதன்வான் எதனால் அதிகத் தகுதியானவாகிறான் என்றால், அவனது தந்தையான ஆங்கீரஸ முனிவர், விரோசனனது தந்தையான தன்னை (பிரஹல்லாதன்) விட உயர்ந்தவர். அவனது தாயும், விரோசனனது தாயை விட உயர்ந்தவள், அதனால், சுதன்வாவுக்கே, உயிர்களை ஆள அதிகத் தகுதி என்கிறான். இதைக் கேட்ட சுதன்வான் புத்திர பாசத்தை விட நேர்மைக்கே இடமளித்த்தால், பிரஹல்லாதனிடம், தான் விரோசனனுக்கு விட்டுக் கொடுப்பதாகவும், இன்னும் ஒரு 100 வருடங்கள் விரோசனனே வாழட்டும் என்றும் கூறுகிறான்.


இந்தக் கதை ஒரு உருவக்க் கதையே. விரோசனன் என்றால் சூரியன் அல்லது ஒளி என்றோம். அந்த ஒளியால் பூமி செல்வங்களை வாரிக் கொடுக்க முடிகிறது. அந்தப் பூமியே மணப்பெண் ஆவாள். அவளை வரிக்க விரோசனன் விரும்புகிறான் என்றால், சூரிய வெப்பம் இருக்கும் இடத்தில் பூமியில் பல வித உயிரினங்கள் தோன்றும். பூமியே தாய், விரோசனன் தந்தை ஆவான். எப்பொழுதுமே பூமி பெண்ணாகவும், உயிர்களைத் தாங்குவதால் தாயாகவும் வர்ணிக்கப்படுகிறாள்.


இனி சுதன்வான் என்றால் என்ன என்று பார்ப்போம். சுதனா என்றால் சிறந்த தனம் அதாவது செல்வம் என்று பொருள். அவன் ஆங்கீரஸரது புதல்வன் என்பதால், ஆங்கீரசர் யார் என்று பார்க்க வேண்டும். ஆங்கிரஸ் என்பது அதர்வண வேதத்தின் யாப்பு அமைப்பாகும். ஆங்கீரசரும், அதர்வணரும் அதர்வண வேத்த்தைத் தந்தார்கள். பொதுவாக அதர்வண வேத்த்தை மற்ற வேதங்களுடன் சேர்க்க மாட்டார்கள். ஏனெனில் மற்ற மூன்று வேதங்களும் ஆன்மீகத்துக்கு என்றால், அதர்வண வேதம் லௌகீக அதாவது உலகியல் முன்னேற்றங்களுக்காகப் பயன்படுவது. யந்திர, தந்திர மாய முறைகளில் வெற்றி பெறுதல், நோயைக் குணப்படுத்துதல் போன்றவற்றுக்கு அதர்வண வேத்த்தில் முக்கியத்துவம் உண்டு. அதனால் ஏற்படும் லாபங்கள் மனிதர்களுக்குத் தனம் அதாவது செல்வம் என்று சொல்லலாம் ஆதலால், அவரது மகன் சுதன்வான் ஆகிறான்.


அது மட்டுமல்ல, ஆங்கிரஸ் என்றால் அக்னியிலிருந்து உண்டானது என்றும் அர்த்தம். அக்னியை பலவிதமாகச் செம்மையாகப் பயன் படுத்தினால் பல உலோகப் பொருள்களைப் பெறலாம். அதுவும் மனித குலத்துக்குக் கிடைத்த பெரும் தனம்தான். அதனால் அவர் மகன் சுதன்வான் ஆகிறான்.

அது மட்டுமல்ல. இவர் பிரம்மாவின் மனதில் தோன்றிய சப்த ரிஷிகளில் ஒருவர். இதனால் இயற்கையிலேயே இந்த சுதனத்தைப் பெற முடியும் என்பது தெரிகிறது. அதை எப்படிப் பெறுவது என்பதற்கும், அவரது கதையில் க்ளூ இருக்கிறது. கர்தமப் பிரஜாபதிக்கும், தேவஹூதிக்கும் பிறந்த 9 மகள்களில் சிரத்தை என்பவளை ஆங்கிரஸ் மணக்கிறார். கர்தமரைப் பற்றி 111 ஆவது கட்டுரையில் கண்டோம். கர்தமன் என்றால் மண். அந்தக் கர்தமரது மகள் லக்ஷ்மி என்னும் செல்வம் ஆவாள். பிரஜாபதியிலிருந்து தோன்றிய முதல் தோற்றம் மண் என்னும் கர்தமர் என்று ஜடாயு சொன்னான் என்று அந்தக் கட்டுரையில் பார்த்தோம்.


அதில் அவன் மேலும் சொல்கிறான், கர்தமரைத் தொடர்ந்து, சேஷன் (நாகம் அல்லது பாம்பு) பிறந்தான். அவனைத் தொடர்ந்து சம்ஷ்ரயன் (வீடு அல்லது தங்குமிடம்) பிறந்தான் என்கிறான். (வால்மீகி ராமாயணம் 3- 14-7). அதாவது மண் தோன்றியவுடன் அங்கு நாகம் வசிக்க ஆரம்பித்து விடுகிற்து. அது வசிக்க பூமிக்குள் வளை அல்லது பொந்து ஏற்படுத்திக் கொண்டு அதில் சுகமாக வசிக்கிறது. உலகின் முதல் கட்டடக் கலையை மனிதன் நாகத்திடமிருந்துதான் கற்றுக் கொண்டிருக்கிறான் என்பதை இது காட்டுகிறது.


கல் தோன்றி மண் தோன்றாக்காலம் என்கிறோமே, உலகம் குளிர்ந்து உறைந்த போது கல்லாலான மலைகள் உண்டாயின. காற்று, மழை ஆகியவற்றின் செயலால் மலை சரிந்தும், தேய்ந்தும், மண் உருவானது. அந்த மண்ணுக்குள் புதைந்தும், பூமிக்கடியில் இருந்த பொந்துகளிலும், நாகங்கள் வசிக்க ஆரம்பித்தன. அவை போலவே இயற்கைப் பொந்து, குகைகளிலும் வாழ்ந்த மனித நாகன் எனப்பட்டான். அந்த மனித குலத்துக்கு உருவக அதிபதியாக ஒருவனை இந்திரன் என்றும், அவன் மண்ணுக்குள் (குகை) வசித்ததால் நாகநாதன் என்று பெயர் பெற்றான். இந்த இடங்கள் இந்தியக் கடலில் தென் துருவம் வரை ஆங்காங்கே இருந்த மலைப் பகுதிகளில் தான் இருந்தன. மற்றொரு இடம் இந்தோனேசியப் பகுதி!

கர்தமன் என்னும் மண்ணைக் கொண்டு பெறப்படும் செல்வம் வீடுகள் ஆகும். அந்த்த் தொழில் நுட்பத்தை வளர்த்துக் கொண்டவர்கள் மய தானவர்கள்!


சுதன்வான் கதையில் கர்தமரது மகளான சிரத்தை என்னும் முயற்சி (அ) ஈடுபாடு என்பவள் ஆங்கீரசை மணக்கிறாள் என்றால் அக்னியால் மண்னைக் கொண்டு பொருட்களை உருவாக்கும் முயற்சியை அது காட்டுகிறது. அப்படி எழுந்த முதல் செல்வம் பானையாகும். மண்ணில் பானை வனைந்து, அதைச் சுட்டு கடினமாக்கி, உணவினைச் சமைக்க ஆரம்பித்த காலத்தை அது காட்டுகிறது. அது மட்டுமல்ல மண்ணில் மறைந்துள்ள பல கனிமப் பொருட்களையும் பிரித்தெடுக்க அக்னியின் உதவி தேவை. அந்த முயற்சிகளால் கிடைக்கும் செல்வதையே சுதன்வான் குறிக்கிறான்.


இப்பொழுது யாருக்குத் தகுதி அதிகம் என்று நாம் சொல்வோம்? சுதன்வானுக்குத்தானே அதிக தகுதி? விரோசனன் வெப்பத்தைக் கொடுத்தான். அதனால் உயிர்ப் பெருக்கம் ஏற்பட முடிந்தது. அந்த உயிர்கள் சிறப்பாக வாழ, சுதன்வான் தேவையல்லவா?


ஆனால் சுதன்வான் விரோசனனுக்கு விட்டுக் கொடுத்து விடுகிறான். இன்னும் இந்த முயற்சிகள் ஏற்படாமையை இது காட்டுகிறது.


இதன் காலம் என்னவென்று பார்த்தால், வடக்கில் பனியுகம் வந்து, தெற்கில் சூரியன் வெப்பம் தந்த காலம். இது தோபா எரிமலை வெடித்த 70,000 ஆண்டுகளுக்கும் முன் சென்று விடுகிறது. ஒரு லக்ஷம் வருடங்களுக்கு முன் ஆப்பிரிக்காவிலிருந்து மனிதன் இந்தியக் கடல் நோக்கி வந்த காலம் அது. அதற்கு முன் வடக்கிலிருந்து, தெற்கு நோக்கி மனித இடப்பெயர்வு ஆகி, தென்பகுதி வெப்பம் அடைந்தும், ஆனால் மண்ணையும், அக்னியையும் பயன்படுத்தத் தெரியாத காலத்தை அது காட்டுகிறது.


அத்தனைப் பழமையை புராணக் கதைகள் சொல்லுகின்றன. பானையும், கல் அமைப்புகளும், உலோகப் பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்ட விவரங்களைக் கதைகளாகச் சொல்லியிருப்பதையும் இவற்றில் நாம் காணலாம். இவை நடந்த இடம், தென்கிழக்கு ஆசியக் கடல் பகுதியே என்பதைப் புராணமும் காட்டுகிறது. பன்முனை ஆராய்ச்சிகள் வாயிலாக இதையே ஓப்பன்ஹீமரும் சொல்லியுள்ளார் என்பது, நம் புராண, இதிஹாசங்களின் நம்பகத்தன்மையை உறுதிப் படுத்துகிறது. இதில் ஆச்சரியமே இல்லை. இவை எல்லாம் எந்த சுய நோக்கும் இல்லாத ரிஷிகளால் உலக நன்மைக்குச் சொல்லப்பட்டவையே. அவை தரும் சரித்திர விவரங்களை இன்றைய ஆராய்ச்சித் துறைகளைக் கொண்டு நிரூபிக்க முடியும் என்பதையே நாம் காண்கிறோம்.


மேலே தொடர்வோம். நரசிம்ம அவதாரத்தில் கொல்லப்படும் ஹிரண்யன் ஒரு தைத்தியன். அவனது மகன், பிரஹல்லாதன். அவன் மகன் விரோசனன். அவன் மகன் பலி.


இவர்களைப் பற்றிப் பல இடங்களிலும் சொல்லப்பட்டுள்ள விவரங்கள் ஒரே சீராக இருக்கின்றன. அதாவது உண்மையாக நடந்த கதைகளாக இருந்தால் மட்டுமே இவ்வாறு சீராகப் பல நூல்களிலும் சொல்லியிருக்க முடியும். மஹாபாரதம், ராமாயணம், புராணங்கள் மட்டுமல்ல, உபநிஷதங்களிலும் இவர்களைப் பற்றிய கதைகள் வருகின்றன. உதாரணமாக சாந்தோக்கிய உபநிஷத்தில், தேவனான இந்திரனும், அசுரனான விரோசனனும் 32 வருடங்கள் பிரம்மச்சரிய விரதம் இருந்து, பிரஜாபதியிடமிருந்து பாடம் கற்றனர் என்று இந்த உபநிஷத்து கூறுகிறது.

 

(சா- – 8 -7.2 முதல் 8.5 வரை) ஆத்மாவைத் தேடிக் கண்டால், எல்லா உலகங்களையும், எல்லா ஆசைகளையும் அடையலாம் என்பதால், தாமும் ஆத்மாவைத் தேடிக் காண்போம் என்று, ஒரே சமயத்தில் இந்திரனும், விரோசனனும் பிரஜாபதியிடம் பாடம் படிக்க வந்தனர். அவரும் கண்ணில் காணும் புருஷன் எவனோஎவன் நீரிலும், கண்ணாடியிலும் என எல்லாவற்றிலும் தெரிபவனோ அவனே ஆத்மா என்றார்.  நகை, உடை அலங்காரம் ஆகியவற்றால் ஒருவன் தன்னை நன்கு அலங்கரித்துக் கொண்டால் அவ்வாறாகவே கண்ணாடியில் தெரியும். அதுவே ஆத்மாவின் சொரூபம் என்று விரோசனன் நினைத்துக் கொள்ளவே, அதையே உபநிஷதமாகத் தன்னைச் சேர்ந்தவர்க்ளுக்கு உபதேசித்தான். இதனால் அசுரர்கள், பொன், ரத்தினம், அவற்றால் செய்யப்பட்ட அலங்கார ஆடம்பரப் பொருட்களைச் செய்வதில், அவற்றை அணிவதில் ஆர்வம் காட்டினர். பொருட்செல்வத்தைச் சேர்ப்பதில் ஆர்வம் காட்டினர். ஒருவர் இறந்த பின்னும் ஆத்மாவின் சொரூபம் என்று அவரை நன்கு அலங்கரித்து அடக்கம் செய்தனர். இதையே சாந்தோக்கிய உபநிஷத்து, "தானமின்றி, சிரத்தையின்றி, யஜ்ஞமின்றி இருக்கும் ஒருவனைப் பார்த்து, " ஐயோ, அவன் அசுரர்களைச் சேர்ந்தவன். இதுதான் அவர்களது உபநிஷத்து. அவர்கள் பிரேத சரீரத்தை அன்னத்தாலும், ஆடையாலும், ஆபரணங்களாலும் மேன்மைப் படுத்துகின்றனர். இதனால் அவர்கள் ஜெயிக்க வேண்டிய உலகத்தை ஜெயித்து விட்டதாக்க் கருதுகின்றனர்." என்று கூறுவர்" என்கிறது. (சா. . 8-8.5)


பொன்னாலும், அலங்காரமாகவும், உணவுப் பொருட்களுடனும், அடக்கம் செய்யப்படும் எகிப்திய வழக்கங்களையும், வில்ட்ஷையரில் புதைக்கப்பட்ட புஷ் பாரோ ட்ரூயிட் மனிதனையும் இங்கு ஒத்து நோக்கலாம். எங்கெல்லாம் இவ்வாறாக இறந்தவர்கள் அடக்கம் செய்யப்பட்டார்களோ அவர்கள் தானவ, தைத்தியர்கள் என்று தெரிகிறது.


இந்த விரோசனனை இங்கு சொல்வதற்குக் காரணம் விரோசன் என்னும் பெயரை ஒட்டியே விரகோசன் (VIRACOCHA) என்பவனை சூரியக் கடவுளாக தென் அமெரிக்காவின் மேற்கில் வாழ்ந்த இன்கா மக்கள் கருதினர். இன்கா மக்கள் வாழ்ந்த பகுதியைக் கீழ்க் காணும் படத்தில் தென் அமெரிக்காவின் மேற்குக் கரையோரம் வண்ணத்தில் காணலாம்.


இதைப் பற்றிய பிற விவரங்கள் அடுத்த கட்டுரையில்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக