வியாழன், 6 டிசம்பர், 2012

121. இன்காவின் ஐய்மாரும், தமிழ் ஆயரும், ஐயும்.

 

இன்கா மக்களது முக்கியத் தெய்வமான பச்சமாமா என்பவளது உருவமும், இந்தியக் கோயில்களில் காணப்படும் ஒருவமும் ஒத்து இருக்கின்றன என்று முந்தின கட்டுரையில் கூறினோம். பச்சமாமா என்பதை, மாமா பச்ச என்றும் அழைக்கிறார்கள். அம்மா என்பதை அவர்கள் மாமா என்கிறார்கள். இதனால்  பச்சமாமா என்பது பச்சையம்மா என்பதன் திரிபு என்று தெரிகிறது. பூமியை அவர்கள் அன்னையாக் கொண்டு அப்படி அழைக்கிறார்கள். பூமியின் மேலாடை போல இருப்பது பச்சை பசேலென்று இருக்கும் தாவர இனங்களே. இதன் காரணமாக இந்தப் பெயர் ஏற்பட்டிருந்தால் அது நிச்சயமாக தமிழ் பேசிய சமுதாயத்திலிருந்து  வந்திருக்க வேண்டும்.


பச்சை என்பது இளமையையும், வளரும் நிலையையும் குறிக்கும். பச்சைக் குழந்தை என்கிறோமே, அந்தச் சொல்லில் பச்சை என்பது அப்பொழுதுதான் பிறந்த இளம் குழந்தை என்னும் பொருளில் வருகிறது. இந்தப் பச்சமாமாவின் கருத்தும், பச்சைக் குழந்தையைப் பிரசவிக்கும் தோற்றத்தில் இருக்கிறது. வயிற்றில் செடி போன்ற அமைப்பு காணப்படுவது இதை ஊர்ஜிதப்படுத்துகிறது. எந்த விவசாய முயற்சியையும் மனிதன் செய்யாமல், தானாகவே பூமியானது விளைபொருட்களைத் தரும் தோற்றமே பிரசவிக்கும் தோற்றமாகக் காட்டப்பட்டுள்ளது. இந்தக் கருத்தைக் காட்டும் வேத மரபுத் தெய்வம் எது என்று பார்க்கும் முன், இந்தப் பச்சமாமாவைப் பற்றிய சில விவரங்களை அறிவோம். 


 


இன்கா மக்களும் இந்தத் தெய்வத்தை, பூமியாகவும், பயிர்களைப் பிரசவிப்பவளாகவும் கருதுகின்றனர். பயிரிடும் போதும், அறுவடையின் போதும் இவளை வணங்கி விட்டே ஆரம்பிகின்றனர். இவளே நிலநடுக்கங்களை உண்டாக்குகிறாள் என்றும் நினைக்கின்றனர். இவளுக்குச் செலுத்தும் நன்றியாகவும், இவளால் நிலநடுக்கம் போன்ற கெடுதல் எதுவும் வரக்கூடாதென்பதற்காகவும், பூமி சம்பந்தப்பட்ட எந்த செயலைச் செய்வதற்கு முன்பும், இவர்கள் பூமிக்குப் படையல் செய்து விட்டுத்தான் துவங்குகின்றனர். தினசரி வாழ்க்கையிலேயே ஏதேனும் சாப்பிட ஆரம்பிப்பதற்கு முன் அதில் கொஞ்சம் எடுத்து பூமியில் அல்லது தரையில் போட்டு விட்டு, அதற்குப் பிறகுதான் சாப்பிட ஆரம்பிக்கின்றனர்.


பல சமயங்களில் தாங்கள் படையல் தரும் பொருட்களைப் பூமியைத் தோண்டி அதில் இட்டுப் பூஜை செய்கின்றனர். இவ்வாறு அவர்கள் படைக்கும் பொருளுக்கு 'சல்லா' அல்லது சல்லகு ('ch'allay'  / 'ch'allakuy') என்று பெயர். இவற்றையே நீரிலும் தெளிப்பார்கள். இதில் ஆச்சரியம் என்னவென்றால் சல்லா என்று இவர்கள் பூமிக்குள் புதைக்கும் பொருளுக்கு  சமஸ்க்ருத்ததில் சல்யா (SALYA) என்று பெயர். பொதுவாகவே பூமியில் ஏதேனும் புதைபட்டிருந்தால் அதற்குச் சல்யம் அல்லது சல்லியம் என்று பெயர்.


இவர்கள் நீரில் தெளிக்கும் சல்லாவும் சலம் அதாவது ஜலம் என்னும் சமஸ்க்ருதச் சொல்லை ஒட்டி இருக்கிறது. இதையே சலம், சலிலம் என்று தமிழிலும் கூறுகிறோம். சல்லா என்று இவர்கள் படையல் செய்வதை, ஹோமம் செய்வது போல யாத்திரி (yatiris) என்று அழைக்கப்படுபவர்களை வைத்துச் செய்கிறார்கள். யாத்திரி என்றால் யாத்திரை செய்பவன் என்று சமஸ்க்ருதத்தில் பொருள். அதே பொருளில் இந்தச் சொல் தமிழிலும் இருக்கிறது. எனவே இன்கா மக்களது 'யாத்திரி'யும் நமது ஆர்வத்தைத் தூண்டுகிறார். இன்றைக்கு இருக்கும் அவர்களது மொழியில் இதற்கு ஒரு அர்த்தத்தை அவர்கள் சொன்னாலும், யாத்திரையுடன் அந்த யாத்திரி தொடர்பு கொண்டவர் என்பது ஒரு அதிசயமான ஒற்றுமை.


அதாவது 'யாத்திரி'யாக ஆக விரும்புபவர், ஒரு குருவிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். இதற்காக அவர்கள் பயணம் செய்து ஒரு குருவை அடைந்து தங்களுக்குக் கற்றுத் தருமாறு கேட்டுக் கொள்வார்கள். ஆனால் அந்த குரு இவர்களை எளிதில் ஏற்றுக் கொள்ள மாட்டாராம். இதனால் இவர்கள் மீண்டும் மீண்டும் குருவின் இருப்பிடத்துக்குப் பயணம் செய்து அவரது கவனத்தைக் கவர்ந்து, தங்களை சீடர்களாக ஏற்றுக் கொள்ளுமாறு செய்வார்களாம். இது இந்தியாவின் வேத  மரபிலும் இருப்பது , ராமானுஜர் போன்றவர்கள் தங்களுக்குக் கற்றுத் தரும்படி மீண்டும் மீண்டும் குருமாரை அணுகினதற்கு ஒப்பாக இருக்கிறது. அடிக்கடி பயணம் செய்ததால் யாத்திரி என்ற பெயர் ஏற்பட்டிருக்க வேண்டும், இதை உறுதிப் படுத்தும் வண்ணம், இன்கா யாத்திரிகளும் தங்களது சடங்குக்  கல்வியைக் கற்பதற்காகப் பலமுறை பயணம் செய்தனர் என்பது கவனிக்கத்தக்கது.


இவர்களைப் பற்றிய இன்னொரு செய்தியும் தமிழ்- வேத மரபுடன் பொருந்தி வருகிறது. ஒருவனை யாத்திரி என்று அங்கீகாரம் செய்பவர், ஒரு குருவோ அல்லது தெய்வப் பெற்றோரோ ஆவர். தெய்வப் பெற்றோர் என்று இன்கா மக்கள் சொல்லும் பெயர்கள் இச்சுதாதா, இச்சுமாமா (ichutata ichumama) என்பவை. இவற்றில் தாதா, மாமா (அம்மா) என்பவை தமிழுடன் ஆச்சரியமான ஒற்றுமை கொண்டவை. ஈஸ்வரன் என்று தெய்வத்தைக் குறிப்பிடுவதே ஈசு என்றாகி இச்சு என்றானதோ என்று எண்ணும் வண்ணம் இந்தப் பெயர்கள் இருக்கின்றன.


இந்த யாத்திரிகள், ஆயர்மார் அல்லது ஐயர்மார் அல்லது ஐமாரா மக்களைச் சேர்ந்தவர்கள். ஆயர் என்றால் கூடவே மாடு, கன்றுகள் இருக்க வேண்டும். ஆனால் இன்கா மக்களிடம் ஆடுகள் இருக்கின்றன. அவர்கள் வாழும் மலைப் பகுதியில் காணப்படும் ஆடுகளை அவர்கள் வளர்த்தனர். அந்த ஆடுகளை பூஜையில் பலியும் இட்டனர். இது சிலப்பதிகார வேட்டுவ வரியில் வரும் வேட்டுவர்கள் செய்யும் எருமை பலியை ஒத்திருக்கிறது.


வேட்டுவ வரியில், வேடர்களது தெய்வத்துக்குப் பெயர் ஐயை. 'ஐயை செய்யவள் வெய்யவாள் தடக்கைப் பாய்கலைப் பாவை" என்று ஐயையை திருமகள் முதலான எல்லாப் பெண் தெய்வங்களாகவும் வேடர்கள் அழைத்தனர். அவளே மயிடன் (மஹிஷன்) என்னும் எருமைத் தலை அசுரனைக் கொன்றவள் என்று வேடுவர்கள் கொண்டாடி, அவளுக்குப் பலி இடுகின்றனர். அது என்ன பலி என்று சிலப்பதிகாரம் வெளிப்படையாகச் சொல்லவில்லை. ஆனால் அதில் சொல்லப்படும் பிற விவரங்கள் மூலம் அது எருமைப் பலி என்பது புலனாகிறது.


தங்கள் தேவைக்காக பிற இடங்களிலிருந்து ஆநிரையை கவர்ந்து வருவதை அந்த வேடர்கள் வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். அவ்வாறு கவர்ந்து வரச் செல்லும் போது, தங்கள் வெற்றிக்காகவும், துணை புரியவும், ஐயை என்னும் இந்தத் தேவியை வணங்கிச் சென்றார்கள். கவர்ந்து வந்த பின், பசுக்களை ஊரில் உள்ளவர்கள் அனைவருக்கும் பங்கிட்டுக் கொடுத்து விட்டு, நன்றி அறிவித்தலாக ஐயை என்னும் தேவிக்குப் பூஜையும், பலியிடுதலும் செய்திருக்கின்றனர். இந்த ஐயையை மஹிஷாசுர்மர்தினி என்றும், அவள் மஹிஷன் என்னும் எருமையின் தோள் மீதும், தலை மீதும் நின்று அவனைக் கொன்றவள் என்றும் அவர்கள் பாடுவதாகச் சிலப்பதிகாரம் சொல்வதால், அவளுக்கு எருமையைப் பலியிட்டிருக்க வேண்டும் என்று தெரிகிறது, இன்றும் மஹிஷாசுமர்தினியைக் காளியாக வழிபடும் நேபாள நாட்டில் அவளுக்கு எருமை மாடுகளைப் பலி கொடுக்கும் வழக்கம் இருக்கிறது. சிலப்பதிகாரக் காலக் கட்டத்தில் தென் தமிழ் நாட்டில் வேட்டுவர்களால் வழிபடப்பட்ட மஹிஷாசுரமர்தினிக்கும், நேபாளம், மற்றும் கல்கத்தா காளிக்கும் உள்ள தொடர்பை வேறு ஒரு கட்டுரையில் காண்போம்.ஆனால் மஹிஷாசுரமர்தினையை முன்னிட்டு, நவராத்திரியின் முடிவில்  கொண்டாடப்படும் துர்கா பூஜை, தமிழர் பண்டிகையே அல்ல என்றும், 'ஆரியர்களால்' திணிக்கப்பட்டது என்றும் திராவிட 'இனத்' தலைவர் கூறுவதை, சிலப்பதிகார வேட்டுவ வரி முறியடிக்கிறது என்பதைத் தெரிந்து கொள்வோம். வேடர்கள் வழிபட்ட தெய்வம் மஹிஷாசுரமர்த்தினி என்பதையும், அந்த வழிபாடு 2000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் நிலங்களில் இருந்திருக்கிறது என்பதையும் சிலப்பதிகாரம் காட்டுகிறது(வேடர்கள் வழிபட்ட தெய்வமாகத் துர்கையைக் காட்டும் 19 ஆம் நூற்றாண்டு கல் சித்திரம்)


ஐயை  மஹிஷாசுரனை அழித்தாள். அவள் உண்மையில் வாழ்ந்த ஒரு பெண்ணாகவும் இருக்கலாம். அதிக பலசாலியாகவும், மக்களைத்  துன்புறுத்துபவர்களை அழிப்பவளாகவும் இருந்திருக்கலாம். அப்படிப்பட்ட பெண்களை  ஐ அல்லது ஐயை என்று அழைத்திருக்கலாம். இந்த ஐ என்பதே ஆய்தாய் என்று மருவியிருக்கலாம். '' என்று பெண் முனிவர்களையும், யோகினிகளையும் அழைப்பார்கள் என்று அக்னிபுராணம் (348) கூறுகிறது.


ஐ என்பதே ஆதிப் பெயர் என்று சொல்லும் வண்ணம் ஐகா என்னும் பெயர் பாலினேசிய சமோவா மக்களிடையே இருக்கிறது. அவர்களை மடை (matai ) என்றும் அழைப்பார்கள் என்று 118 ஆவது கட்டுரையில் கண்டோம். அந்தச் சொல் மாதா என்பதன் திரிபாகவும் இருக்கலாம். மாதா, மடா, மடை என்று திரிந்திருக்கலாம். முற்கால சூழ்நிலையில், ஆண்கள் உணவு தேட வெளியில் சென்றிருக்கும் போது, வீட்டில் இருக்கும் பெண்கள் காட்டு விலங்குகளிடமிருந்து தங்கள் குழந்தைகளைக் காப்பாற்றும் வீர, தீரச் செயல்கள் நிறைய நடந்திருக்கும், தமிழ் வழக்கிலும், சங்க காலப் பெண்கள் புலியை முறத்தால் அடித்து விரட்டினர் என்று சொல்லப்படுகிறது. இந்த தீரச் செயல்களை தாய் அல்லது ஆய் செய்ததால், அந்த ஆய் என்பதன் ஆதிச் சொல்லான என்னும் பெயர் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களை அழைக்கும் பெயராக ஆகியிருக்கும்.


இப்படிப்பட்ட சூழ்நிலை, ஆடு, மாடு மேய்க்கும் ஆயர் மக்களிடையே தான் உருவாகி இருக்கும். ஏனெனில் அவர்கள் வீடுகளில் கட்டப்பட்டிருக்கும் ஆடு, கன்றுக் குட்டிகளைக் குறி வைத்துக் காட்டு விலங்குகள் அடிக்கடி தொந்திரவு கொடுத்

திருக்க்கூடிய வாய்ப்புகள் அதிகம்.


அது மட்டுமல்ல, ஐயன் என்னும் சொல் ஆயர் மக்களிடையே வழங்கி வந்திருக்கிறது என்பதை முல்லைக் கலியில் காணலாம். கலித்தொகை 107 இல் தமையன் (தன் ஐயன்), அண்ணன் என்ற பொருளில் வருவதைக் காணலாம். ஐ என்னும் பெயர் பெண்பால் பெயராக மாடு மேய்க்கும் ஆயர் மக்களிடையேதான் இருந்திருக்கிறது.  சிலப்பதிகாரத்தில் ஆய்ச்சியர் குரவை ஆடும் மாதரியின் மகள் பெயரும் ஐயை ஆகும்.  இதனால் ஆதியில் ஐ, ஐயர், ஐயா ,ஐயன் ஆகிய பெயர்கள் ஆடு, மாடு, எருமை போன்றவற்றை வளர்த்தவர்களிடத்தில் புழங்கி வந்திருக்கிறது என்று தெரிகிறது. நாளடைவில் ஐ என்னும் சொல்லே ஐயா, ஐயன், ஐயர் என்றானது. சிலப்பதிகாரத்தில் தந்தை, மூத்தோர், உயர்ந்தோர்  என்ற பொருளில் ஐயர் என்ற சொல் வருவதைக் காணலாம்.  


இந்தக் கட்டுரைக்குத் தேவையான விவரம் என்னவென்றால், ஆண்டிஸ் மலைப் பகுதியில் டிடிகாகாவில் நுழைந்த ஐயர்மார் அல்லது ஐமார் ன்னும் மக்கள் ஆயர் தொழிலில் ஈடுபட்ட மக்களாகவும், அங்கு வருவதற்கு முன் தலைமைப் பொறுப்பில் இருந்தவர்களாகவும் இருந்திருக்க வேண்டும் என்பதே.  

டிடிகாகா ஏரிக்கருகே குகைப் பாதையில் முதன் முதலில் வந்தவர்கள் நான்கு ஐயர்மார்களே. அவர்கள் வந்தபோது அங்கு ஏற்கெனெவே மக்கள் இருந்திருக்கின்றனர். அவர்களை விரட்டி விட்டே அங்கு ஐமாரா மக்கள் குடியமர்ந்திருக்கின்றனர். அப்படி விரட்டி அடித்த ஐமாரா, ஒரு பெண்ணாவாள். குகை வழியாக டிடிகாகா பகுதிக்கு வந்த பெண்ணான மாமா ஹுவாகோ (MAMA HUACO)  என்பவள் (http://www.sourcememory.net/veleda/?p=48) தங்களை எதிர்த்தவர்களை அடித்துத் துரத்தியிருக்கிறாள். நாம் கிட்டிப்புள் என்கிறோமே அப்படிப்பட்ட ஒரு கருவியால்தான் கல்லால் அடித்து விரட்டியிருக்கிறாள். கையில் கிடைத்தவர்களது நெஞ்சைப் பிளந்திருக்கிறாள். இவையெல்லாம் தமிழ் மரபில் ஐயையின் செயல்களே.


மேலே தொடர்வதற்கு முன்னால் இங்கு இன்னொரு விவரத்தையும் சொல்ல வேண்டும். ஐ என்பதும் ஐலா என்பதும், வேத மரபில் சமஸ்க்ருதத்திலும் வரும் சொற்கள்.  முன்பே 52 ஆவது கட்டுரையிலும், 61 ஆவது கட்டுரையிலும், ஐலன், ஐலா, இளா போன்ற பெயர்கள் பாரத மரபில், மனுவின் வழியில் வழங்கி வந்தன என்று கண்டோம். வைவஸ்வத மனுவின் பெண்ணுக்கு இளா என்று பெயர். அவளுக்கும் புதனுக்கும்  பிறந்தவன் புரூரவஸ்.புதனும், இளாவும்.


(இந்த புதன், சந்திரனுக்கும், பிருஹஸ்பதியின் மனைவி தாராவுக்கும் பிறந்தவன் என்று விஷ்ணு புராணம் போன்ற நூல்கள் தெரிவிக்கின்றன. இவற்றையெல்லாம் கட்டுக்கதை என்று சொல்ல முடியாதபடி, புதனும், தாராவும் ஐயர்லாந்து ட்ரூயிட் கதைகளில் இருக்கிறது. அவற்றைத் தக்க இடத்தில் பார்ப்போம்)


புரூரவஸ் வழியில் வந்தவர்கள் தான் ஆரியதஸ்யு போராட்டத்தில் வரும் பஞ்ச மானவர்கள். ளாவுக்குப் பிறந்தவன் என்பதால் புரூரவஸுக்கு ஐலன் என்று பெயர். ளாவின் வழியில் பிறந்தவர்களுக்கு ஐலன் என்றே பெயர். இங்கும் '' வருகிறது என்பதைக் கவனத்தில் கொண்டு மேலே தொடர்வோம்.

ளா என்னும் பெயரில் ஒரு நதியே ஓடிற்று. சரஸ்வதி போன்ற நதிகளைப் பற்றிப் பேசும் போது, இளா நதியும் சேர்த்துச் சொல்லப்படுகிறது. அந்த நதியின் பெயரால் இளாவ்ருதம் என்னும் நிலப்பகுதியை இந்தியாவுக்கு வடக்குப் புறத்தில் சுட்டிக் காட்டியுள்ளனர். அந்த விவரங்களை 52 ஆவது கட்டுரையில் கண்டோம்.