வெள்ளி, 25 பிப்ரவரி, 2011

40. தமிழ் வேந்தர்கள் ஆண்டது தென்பகுதி - திராவிடமல்ல.




தாமிரபணி ஆற்றுக்குத் தெற்கே மலய பர்வதத்துடன் கூடிய நிலப்பகுதி, முயல் போன்ற வடிவில் இருந்தது என்று சஞ்சயன் கூறினான். (பகுதி 39). இன்று அங்கு அப்பகுதி அந்த அமைப்பில் இல்லை.
ஆனால் மலய பர்வதம் என்று சொல்லப்பட்டது இன்று மேற்குத் தொடர்ச்சி மலையின் தென் பகுதியாகும். 

அது கன்னியாகுமரியுடன் முடிந்து விடுகிறது. ஆனால் மஹாபாரதம் மற்றும் ராமாயணம் கொடுக்கும் விவரங்களின்படி, தாமிரபரணி ஆறு தொடங்கி தெற்கில் மலய பர்வதம் இன்னும் செல்கிறது

இந்த மலயபர்வததைக் கொண்ட இடம் சாகத்துவீபம் என்று அழைக்கப்பட்டது.
இந்த உலகின் ஏழு பெரும் நிலப்பகுதிகளில் சாகத்த்வீபமும் ஒன்று.
பாரதவர்ஷம் இருக்கும் ஜம்புத்தீவு என்னும் நாவலந்தீவினைப் போல, சாகத்தீவும் சஞ்சயனால் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
அதன் முக்கிய மலை மலய பர்வதம் ஆகும்.


அதாவது இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலையின் தென் பகுதி மலய பர்வதம் எனப்படுகிறது.
அதன் தொடர்ச்சியாக இந்தியக் கடலுக்குள் அந்த மலை நெடுந்தூரம் செல்கிறது.
அதன் முழு நீளத்தையும் உள்ளடக்கி அந்த நாளில் இருந்த நிலப்பரப்பு சாகத் துவீபம் எனப்பட்டது.
மஹாபாரத காலத்தில் ஒரு சிறிய பகுதியாக, அதாவது ஜம்புத்துவீபத்தின் காது போல பாரத வர்ஷத்திலிருந்து தன் கடலில் இந்தப் பகுதி தொங்கிக் கொண்டிருந்தது என்பதை சஞ்சயன் வர்ணனையின் மூலம் தெரிகிறது.



சென்ற பகுதியில், பாண்டவர்கள் பக்கம் நின்று போரிட்ட சாரங்கத்துவஜன் என்னும் பாண்டிய மன்னனைப் பற்றித் தெரிந்து கொண்டோம். சாரங்கத்துவஜன், திருஷ்டத்யுமனுடன் சேர்ந்து துரோணரை எதிர்த்துப் போரிட்டான்.
போரில் துரோணர் கொல்லப்பட்டதைக் கேட்ட அவர் மகன் அஸ்வத்தாமன், வெறி கொண்டு பாண்டவப் படைகளை எதிர்த்தான்.
அப்படி அவன் எதிர்த்தவர்களுள் ஒருவன் பாண்டிய அரசனான மலயத்துவஜன் என்று மஹாபாரதத்தில் வருகிறது. (8-20).
அவர்கள் இருவருக்கும் நடந்த போர் விரிவாக விளக்கப்படுகிறது.
அந்தப் போரில் பாண்டிய அரசன் அஸ்வத்தாமனால் கொல்லப்பட்டான்.
தன் தந்தையைக் கொன்றவர்களுள் ஒருவனான சாரங்கத்துவஜன் மீது அஸ்வத்தாமனுக்குக் கோபம் இருந்திருக்கும்.
அவனுடன் நிச்சயமாகப் போர் புரிந்திருப்பான்.
மலயத்துவஜனுடன் விவரிக்கப்பட்டுள்ள போர் உண்மையில் சாரங்கத்துவஜனுடன் நடந்த போராக இருக்க வேண்டும்.
இதைத் தவிர வேறு எந்த பாண்டியனுடனும் அஸ்வத்தாமா போர் புரிந்ததாக சொலல்ப்படவில்லை.
துரோணரை எதிர்த்துப் போரிடட்வர்கள் பெயரில் சாரங்கத்துவஜன் பெயர் மட்டுமே வருகிறது.
மலய பர்வதம் கொண்ட பாண்டிய நாட்டு மன்னாக இருக்கவே, சாரங்கத்துவஜனுக்கு, மலயத்துவஜன் என்ற பெயர் குலம் அல்லது குடிப் பெயராக இருந்திருக்க வேண்டும்.



மலயத்துவஜ பாண்டியன் என்னும் பெயரில் நாம் அறிந்துள்ள மற்றொரு முக்கிய அரசன், மீனாட்சி அம்மையைப் பெற்றெடுத்த மலயத்துவஜ பாண்டியன்.
மஹாபாரதக் காலத்துக்கு முன்பே மீனாட்சி கதை வந்திருக்க வேண்டும்.
ஏனென்றால், மஹாபாரதக் காலக் கட்டத்தில் இன்று இருக்கும் மதுரை, பாண்டியன் வசம் இல்லை.
பாண்டிய நாடு தாமிரபரணிக்குத் தெற்கே மலய பர்வதத்தை ஒட்டி இருந்திருக்கின்றது.
இன்றைய இந்தியாவில் அந்தப் பகுதி மிகவும் சிறிய பகுதி.



எனவே மீனாட்சி பிறந்த மதுரை சங்க நூல் உரையாசிரியர்களால் சொல்லப்பட்ட, கடல் கொண்ட தென்மதுரை என்பது தெளிவாகிறது. மலயத்துவஜன் என்றே பாண்டியன் சாரங்கத்துவஜன் அழைக்கப்படவே, மலயத்துவஜ வம்சமாகப் பல மன்னர்கள் அவனுக்கு முன் இருந்திருக்க வேண்டும்.
எப்படி ராமனும், கிருஷ்ணனும் உண்மையில் வாழ்ந்தார்களோ, அப்படியே மீனாட்சி அம்மையும் மலயத்துவஜ பாண்டியனுக்கு மகளாகப் பிறந்தது உண்மையான நிகழ்ச்சியாக இருக்க வேண்டும். மலயத்தொடர்பு பற்றி மேலும் சில சான்றுகளைப் பார்ப்போம்.



மஹாபாரதத்தில் பாண்டியனைப் பற்றி இரண்டு வர்ணனைகள் அடிக்கடி வருகின்றன.
ஒன்று அவன் முத்து அணிந்திருந்தான்.
மற்றொன்று அவன் சந்தனம் பூசி இருந்தான்.
குறிப்பாக மலய பர்வத சந்தனம் பற்றி கூறப்பட்டுள்ளது.
யுதிஷ்டிரன் செய்த ராஜசூய யாகத்தில் கலந்து கொண்ட பாண்டிய மன்னன் மலய பர்வதத்தில் கிடைக்கும் சந்தனத்தை அளித்தான் என்று வருகிறது.
சுக்ரீவன் தரும் தென்னிந்திய வர்ண்னையிலும், தாமிரபரணி ஆற்றுக்குத் தென் புறம் சந்தன மரங்கள் அதிகம் என்று வருகிறது.
சந்தனம் பற்றிய சங்க நூல் குறிப்புகளில், வட குன்றத்துச் சந்தனம் என்று வட நாட்டில், இமய மலையில் கிடைக்கும் சந்தனத்தைப் பற்றியே அதிக இடங்களில் சொல்லப்பட்டுள்ளது. 


ஆனால் சிலப்பதிகாரத்தில் ஓரிடத்தில் ( ஊர்காண் காதை -80) ‘தெண்கண மலயச் செழுஞ்சேராடி “ என்று தெங்கணமும், மலய பர்வதமும் இணைந்த பகுதியில் கிடைக்கும் சந்தனம் பற்றிய குறிப்பு வருகிறது.
பாண்டியன் நிலம், தாமிரபரணிக்குத் தெற்கில் மலய பர்வதத்துடன் கூடி நீண்டிருந்தபோது, அந்தப் பகுதியிலிருந்து சந்தனத்தைப் பெற்றிருக்கிறான்.
அந்தப் பகுதி அடியார்க்கு நல்லார் கூறும் ஏழு நிலப்பகுதிகளில் தெங்க நாட்டுப் பகுதியாக இருக்கலாம்.
மலையை ஒட்டிய கடலோரப் பகுதிகளில் இருக்கும் இன்றைய கேரளத்தில் தென்னை மரங்கள் அதிகம்.
அந்த அமைப்பே நீண்டிருந்த அந்தப் பகுதியில் அந்த நாளில் இருந்திருக்க வேண்டும்.
அதைத் தெண்கண / தெங்கண மலயத்தில் கிடைத்த சந்தனம் என்று கூறியிருக்கலாம்.
இன்றைய கேரளத் தென் பகுதிகள் தெங்க நாட்டுப் பகுதியைச் சார்ந்திருக்கலாம்.



அந்த நிலப்பகுதிகளை கடலுக்கு இழந்த பின், வட நாட்டிலிருந்து சந்தனத்தை வரவழைத்திருக்கிறார்கள்.
இந்த விவரம் சந்தனம் பற்றிய சங்கப் பாடல்கள் மூலம் தெரிகிறது. (பு-நா- 380, அ-நா- 340).
மஹாபாரதக் காலத்தில், பாண்டியனுக்கு வேண்டிய சந்தனத்தை மலய பர்வதமே தந்திருக்கிறது என்பதால்,
மஹாபாரதம் நடந்த 5000 வருடங்களுக்கு முன், இன்றைய தமிழ் நாடு கடலுக்குள் நீண்டிருந்தது என்பது புலனாகிறது.


5000 வருடங்களுக்கு முன் சிந்து சமவெளி நாகரிகம் ஆரம்பித்தது.
அப்பொழுது பாண்டியன், இன்றைய தமிழ் நாட்டுக்கும் தெற்கே வாசம் செய்திருக்கிறான் என்பதை இதன் மூலம் தெளியலாம். அப்பொழுது சோழனும், சேரனும் தமிழ் நாட்டுப் பகுதியில்தான் இருந்திருக்கிறார்கள், சிந்து சமவெளிப்பகுதியில் அல்ல.
அந்த காலக்கட்டத்தில் சோழன் ஆண்ட இடம் பற்றிய குறிப்புகள் இல்லை.
ஆனால் 9000 வருடங்களாகவே புகார் நகரம் புகழுடன் இருந்திருக்கவே, சோழன் புகாரைத் தலைநகரமாகக் கொண்டு ஆண்டிருக்க வேண்டும்.
அந்தக் காலக் கட்டத்தில் இருந்த சேர அரசன், உதியன் சேரலாதன் என்பவன்.
இவன் மஹாபாரதப் போரில் சண்டையிட்ட பாண்டவ, கௌரவப் படைகளுக்குப் பெருஞ்சோறு அளித்தான் என்று கூறும் புற நானூற்றுப்பாடல், அவன் வாழ்ந்த சம காலத்தில் எழுதப்பட்டதாக அமைந்துள்ளது. ( பு-நா-2) 


இந்தச் சேர மன்னன் செய்த இச்செயலை உறுதிப்படுத்தும் வண்ணம்
அகநானூறிலும் (233),
பெரும்பாணாற்றுப்படையிலும் (415-7),
நன்னூல் சூத்திர மயிலைநாதர் உரையிலும் (343),
விருத்தி உரையிலும் (344),
இலக்கண விளக்க உரையிலும் (247), சொல்லப்பட்டுள்ளது.
இவை தவிர சிலப்பதிகாரத்தில், மூவேந்தரையும் புகழும் ஓரிடத்தில்,(23-55) அவரவர் பரம்பரையில் உயர்ந்து நின்ற அரசனைப் பற்றிச் சொல்கையில்,
சோழப் பரம்பரையில் சிபியையும்,
பாண்டியன் பரம்பரையில் பொற்கைப் பாண்டியனையும்,
சேரன் பரம்பரையில் உதியன் சேரலாதன் பெருஞ்சோறு அளித்தமை பற்றியும் பாராட்டப்படவே,
மஹாபாரதக் காலத்தில் சேரன் வாழ்ந்தான் என்பது மறுக்க முடியாத உண்மை என்றாகிறது.


அந்த சேரன் ஆண்ட தமிழ்ப் பகுதியில், சூரியன் கிழக்குக் கடலில் உதித்து, மேற்குக் கடலில் மறைந்தது என்று அவனைப் பற்றிக் கூறும் புறநானூற்றுப் பாடல் கூறுகிறது.
அதாவது சேரன் உதியன் ஆண்ட பகுதி கிழக்குக் கடலிலிருந்து, மேற்குக் கடல் வரை பரவி இருந்திருக்கிறது.
வங்கக் கடலிலிருந்து, அரபிக் கடல் வரை பரவி இருந்தது.
அவன் ஆண்ட பகுதிக்குத் தெற்கே தாமிரபரணியும், அதற்குத் தெற்கே பாண்டியனும்.
சேரனது தென் கிழக்குப் பகுதியில் சோழனும் ஆண்டிருந்திருக்கின்றனர்.


மஹாபாரதம் நடந்த 5000 ஆண்டுகளுக்கு முன், தமிழக மூவேந்தர்களும் ஆண்ட பகுதி இவ்வாறு தென்னிந்தியாவில் இருக்க, அதே காலக் கட்டத்தில் சிந்து நதிப் பகுதியில் தமிழன் எவ்வாறு வாழ்ந்திருக்க முடியும்?
5000 வருடங்கள் அல்ல, அதற்கு முன்னும், மூவேந்தர்களும் இதே தென் பகுதியில்தான் வாழ்ந்திருக்கின்றனர் என்பதை ராமாயணம் காட்டுகிறது.


சீதையைத் தேட வானரங்கள் புறப்பட்ட போது, அவர்கள் தலைவனான சுக்ரீவன் நான்கு திசைகளிலுமுள்ள நாடுகள், மலைகள், நதிகள் போன்றவற்றை விவரிக்கிறான்.
பாரதத்தின் வட பகுதியைப் பற்றி அவன் கொடுத்த விவரங்கள் அடிப்படையில் உத்தர குரு போன்ற பிரதேசங்களை நாம் அலசினோம். (பகுதி -35).
அவன் கூறும் தென் பகுதி விவரங்கள் பழந்தமிழ் நாட்டு அமைப்புடன் ஒத்துப் போகிறது.
அவன் சொல்லும் விவரங்களை வால்மீகி ராமாயணம், கிஷ்கிந்தா காண்டம் 41-இல் படிக்கலாம்.


அனுமன் முதலான் வானரங்கள் தென் பகுதியில் செல்ல வேண்டிய வழியை சுக்ரீவன் சொல்கிறான்.
விந்திய மலையைத் தாண்டி தெற்கில் வந்தால் தண்டகாரண்ய வனம் வரும்.
கோதாவரி நதியானது அந்த வனத்தின் குறுக்கே செல்கிறது.
அதைத் தாண்டிச் சென்றால், ஆந்திரம், பௌண்டரம், சோழ, பாண்டிய, சேர நாடுகள் வரும்.
இதில் பௌண்டரம் என்பது ஒரிசா, வங்கப் பகுதியில் இருக்கிறது.
ஆந்திரம் என்பது ஆந்திரப் பிரதேசமாகும்.
ராமாயணத்திலும், ஆந்திரம் தனிப் பகுதியாக சொல்லப்படுகிறது.
மஹாபாரதத்திலும் அது தனிப் பகுதியாகச் சொல்லப்படுகிறது.
தமிழ்ப் பகுதிகளுடன் ஆந்திரத்தைச் சேர்த்துச் சொல்லப்படவில்லை.
வேங்கடத்துக்கு வடக்கே இருப்பது ஆந்திரா.
தமிழ் பேசும் மக்கள் அந்தப் பகுதியில் வாழ்ந்ததில்லை என்பதே தொல்காப்பியமும் கூறும் செய்தியாகும்.


இந்த நாடுகளைப் பற்றிச் சொன்னபின் சுக்ரீவன் மலய பர்வதத்துக்கு வந்து விடுகிறான்.
திராவிடம் என்ற நாடு பற்றி ராமாயணத்தில் பேச்சே இல்லை.
அவன் விளக்குவது இந்தியாவின் நேர் தெற்குப் பகுதியாகும்.
இதனால் நேர்த்தெற்கில் திராவிட நாடு இல்லை என்றாகிறது.
மஹாபாரதத்தில் பொதுவாகவே தென்னிந்தியாவில் இருந்த அனைத்து நாடுகளையும் பற்றிச் சொல்லவே அங்கு திராவிட நாடு பற்றி சொல்லப்பட்டு இருக்கிறது.
அதாவது திராவிடம் என்ற பகுதி தெனிந்தியாவில் இருந்திருக்கிறது.
ஆனால் தமிழகமும், ஆந்திரமும் கொண்ட தெற்குப் பகுதியில் அது அமையவில்லை.


ராமாயண வர்ணனையில், மூவேந்தர் நாடுகளைப் பற்றிச் சொன்னவுடன், மலய பர்வதமும், காவிரி நதியும் சொல்லப்படுகிறது.
அங்கு அகஸ்தியர் வாழ்ந்தது சொல்லப்படுகிறது.
அதற்குப் பிறகு தாமிரபரணி ஆற்றைக் கடக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.
அதற்கும் அப்பால் ‘கவாடம் பாண்டியாணாம் அதாவது பாண்டியர்களது கபாடபுரம் இருக்கிறது.
முத்துக்களாலும், பலவித ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்ட மதில் சுவரால் சூழப்பட்ட கோட்டை அங்கு இருந்தது.
அங்கிருந்து தெற்குக் கடலுக்கு வந்தால் மஹேந்திர மலையை அடையலாம்.
அகஸ்தியரால் அந்த மலை கடலுக்குள் அழுத்தப்பட்டது.
கடலில் முழுகாத பகுதியே மஹேந்திர மலை என்று தெரிகிறது.
அதாவது அந்த மலை ஒரு தொடராக நீண்டிருந்தது.
அதில் பெரும் பகுதி ராமாயண காலத்திலேயே மூழ்கி விட்டிருந்தது.
அங்கிருந்து கடல்புறம் 100 யோஜனை துரம் தாண்டினால் ஒரு தீவு வரும் (இலங்கை),
அங்கே சீதையைத் தேடுங்கள் என்கிறான் சுக்ரீவன்.


இதற்கு மேலும் இன்றைய தென் கடலான இந்தியப் பெருங்கடல் பகுதியில் இருந்த நிலங்கள் குறித்த வர்ணனைகள் வருகின்றன. அவற்றில் இருக்கும் ஒவ்வொரு சொல்லும் முக்கியமானவை.
அவை தரும் அமைப்பும், சாகத்தீவின் அமைப்பும்,
பாண்டியன் ஆண்ட முந்திய நாடுகளின் அமைப்பும் ஒன்றுக்கொன்று இயைந்து இருக்கின்றன.


அவற்றுக்குள் செல்வதற்கு முன், மஹேந்திர மலையையும், கவாடம் என்று சொல்லப்பட்ட அமைப்பையும் அறிவோம்.
இன்றைக்கு மஹேந்திர மலை என்பது திருக்குறுங்குடி என்னும் வைணவ திவ்விய தேசத்தில் இருக்கிறது.
இங்கிருந்துதான் அனுமன் இலங்கைக்குத் தாவிச் சென்றிருக்கிறான்.
இந்தப் பகுதியைப் பற்றிச் சொல்வதற்கு முன்னாலேயே, தாமிரபரணி ஆற்றைக் கடந்தபின் மலய பர்வதத்தின் தொடர்ச்சியாக சொல்லப்பட்ட இடத்தில் கவாடபுரம் என்னும் பாண்டியன் தலைநகரைப் பற்றி சுக்ரீவன் சொல்கிறான்.
இது தென்கடலுடன் இணையும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியாகும்.
இந்தப் பகுதியைப் பற்றிய சுவையான தகவல்களை அடியார்க்கு நல்லார் மூலம் நாம் அறிகிறோம்.


சிலப்பதிக்கார உரையில் (8-1), ஏழேழ் நாற்பத்தொன்பது நாடுகள் பற்றி அவர் கூறியதை முந்தின பகுதியில் கண்டோம்.
அவை எல்லாம் கடலுக்குல் அமிழ்ந்தன என்கிறார்.
அவற்றுடன் கடலுக்குள் அமிழ்ந்த பிற பகுதிகளில்,
குமரி கொல்லம் முதலிய பன்மலை நாடும்,
காடும், நதியும்,
பதியும்,
தட நீர்க் குமரி வட பெருங்கோட்டின்காறும்
கடல் கொண்டு அழிதலால்
என்கிறார்.
குமரி கொல்லம் முதலிய பன் மலை நாடு என்று சொல்லவே, மலய பர்வதத்தை ஒட்டி அமைந்துள்ள இன்றைய கொல்லம் என்னும் கேரளப் பகுதி பாண்டியன் வசம் அந்நாளில் இருந்திருக்கிறது என்று தெரிகிறது.



அந்த இடத்தில் குமரியின் வட பெருங்கோடு இருந்தது என்றும் இதன் மூலம் தெரிகிறது.

கோடு என்றால் மலைச் சிகரம் என்றும் பொருள். நீர்க்கரை என்றும் ஒரு பொருள் உண்டு.
இங்கு குமரி ஆற்றைச் சொலல்வில்லை.
ஏனெனில் இதே விளக்க உரையில், முதலிலேயே பஹ்ருளி ஆற்றையும், குமரி ஆற்றையும் சொல்லி அதற்க்கிடையே உள்ள தூரத்தையும் அடியார்க்கு நல்லார் சொல்லி விட்டார்.


எனவே இங்கு குமரிக் கோடு என்றதும், வட பெருங்கோடு என்றதும்,
குமரி மலைத் தொடரின் வடக்கில் உள்ள மலைச் சிகரமான குமரி என்னும் சிகரம் என்றாகிறது.
அது கொல்லத்தை ஒட்டி அமைந்திருக்கிறது.
இவை எல்லாம் உண்மையே என்பதை இந்தியப் பெருங்கடலின் அடிவாரத்தைக் காட்டும் படங்களில் காணலாம்.

இந்தப் படத்தில் தென்னிந்தியாவின் தென் முனையில்,
மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள மலய மலை கடலுக்குள் தொடர்வதைக் காணலாம்.
கொல்லத்துக்குத் தெற்கே அந்த மலையில் கவாடம் இருந்திருக்கிறது.
அது பஹ்ருளி ஆற்றங்கரையில் இருந்தது.
மலய மலையில் உள்ள மஹேந்திர மலையின் அடிவாரத்தில் இலங்கை இருந்தது என்று ராமாயணம் கூறுகிறது.
இந்தப் படத்தில் அப்படிபட்ட அமைப்பு இலங்கை வரை செல்வதைக் காணலாம்.
இந்தப் பகுதி ராமாயண காலத்திலேயே கடலுக்குள் மூழ்கி விட்டது.



சஞ்சயன் கூற்றின் அடிப்படையில், வட்டத்துக்குள் உள்ள பகுதியே, முயல் வடிவான சாகத்தீவின் பகுதியாக இருந்திருக்க வேண்டும்.
இந்தப் பகுதியில் அப்பொழுது கவாடபுரம் இருந்திருக்கிறது.


அதாவது பஹ்ருளி ஆறு முதல் குமரி ஆறு வரை இருந்த 700 காவதம் / காத தூரமுள்ள குமரிக் கண்டம்
மஹாபாரதக் காலத்துக்கு முன்பே கடலுக்குள் அமிழ்ந்து விட்டிருக்கிறது.


700 காவதம் / காதம் என்பது இன்றைய இந்தியாவின் நீளத்தைப் போல இரண்டு மடங்காகும்.
1 காதம் என்பது ஏழரை நாழிகை தூரம்.
ஏழரை நாழிகை என்பது மூன்று மணி நேரம்.
அந்த மூன்று மணி நேரத்தில் ஒருவன் எத்த்னை தூரம் விறுவிறுப்பாக நடந்து கடப்பானோ அதுவே ஒரு காதம்.
அதை 10 மைல் தூரம் என்று செந்தமிழ் அகராதி கூறுகிறது.
அது 7 மைல் தூரம் என்றும் கூறுவது உண்டு.


7 மைல் என்பது 11.2 கி.மீ ஆகும். மணிக்கு சுமார் மூன்றரை கி.மீ வேகத்தில் ஓரு சாதாரண மனிதன் நடக்க முடியும்.
எனவே காதம் என்பது 7 மைல் / 11.2 கி.மீ என்று வைத்துக் கொண்டால் 700 காதம் என்பது 7,640 கி.மீ என்றாகும்.
பஹ்ருளி ஆற்றுக்கும், குமரி ஆற்றுக்கும் இடையே அத்தனை தூரம் இருந்தது என்கிறார் அடியார்க்கு நல்லார்.
அவ்வளவு பெரிய பகுதி கடலுக்குள் அமிழ்ந்து விட்டது.
அந்தப் பகுதியில் தென்மதுரை இருந்தது.
அங்குதான் முதல் சங்கம் 4,440 வருடங்கள் நடந்தது.


அத்தனை பெரிய நிலப்பரப்பில், கடலும், மலையுமாக இருந்த பூலோக சுவர்கத்தில்
ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கோலோச்சிய தமிழர்கள்,
பரப்பில் மிகச் சிறிய சிந்து சமவெளி தீரத்திற்கு ஏன் வரவேண்டும்?

5000 ஆண்டுகளே ஆன சிந்து சமவெளி நாகரிகம் எங்கே?

அதற்கும் பல ஆயிரம் வருடங்களுக்கும் அப்பால் வாழ்ந்த தமிழர்கள் எங்கே?

அடாவடி திராவிடவாதிகளுக்குக் கொஞ்சமாவது பகுத்தறியும் சிந்தனை இருக்கிறதா?



செவ்வாய், 22 பிப்ரவரி, 2011

39. பாண்டியன் திராவிடனா?




மஹாபாரதத்தில் சஞ்சயன் விவரித்த பாரதவர்ஷத்தின் தென் பகுதி நாடுகளில், திராவிடம், கேரளம், சோள தேசம் என்னும் பெயர்களைக் காண்கிறோம்.
இவற்றுள் கேரளமும், சோள தேசமும் தொடர்ந்து அதே பெயரால் வழங்கப்பட்டு வந்துள்ளது.
ஆனால் திராவிட தேசம் என்னும் பெயரில் ஒரு நிலப்பகுதி சங்க நூல்களிலும், பிற்காலத் தமிழ் மன்னர்கள் குறித்த விவரங்களிலும் காணப்படவில்லை.
அதே போல பாண்டிய தேசம் என்னும் பெயரும் சஞ்சயன் கொடுத்துள்ள வர்ணனையில் இல்லை.
அதனால் பாண்டிய தேசம் என்பதை அந்த நாளில் திராவிட தேசம் அழைத்திருக்கலாமே என்ற கேள்வி எழலாம். அதையும் ஆராய்வோம்.


பாண்டிய தேசம் என்ற பெயரில் ஒரு நிலப்பரப்பை மஹாபாரதம் சொல்லவில்லையே தவிர, பாண்டிய மன்னனைப் பற்றியும், பாண்டியனது படைகளைப் பற்றியும் விவரங்கள் உள்ளன.
மஹாபாரதத்தில், மொத்தம் 13 இடங்களில் திராவிடர் என்ற சொல்லும், 6 இடங்களில் பாண்டியர் என்ற சொல்லும் வருகிறது.
இவர்கள் இருவரும் ஒருவரே என்று சொல்ல முடியாதபடி குரு‌ஷேத்திரப் போர் வர்ணனை வருகிறது.
அதாவது மஹாபாரதப் போரில் சோழர், சேரர், பாண்டியர், திராவிடர் என்று தனித்தனியாகச் சொல்லப்பட்ட மக்கள் அனைவருமே கலந்து கொண்டார்கள் (மஹாபாரதம் 8- 12).
இவர்கள் திரௌபதியின் சகோதரனான திருஷ்டத்யும்னன் சார்பில் அவனுக்குப் படை பலம் கொடுத்துப் போரிட்டனர். திருஷட்த்யும்னனுக்கு உதவியாகப் போர் புரிந்த மற்றொரு தென்னாட்டு மக்கள் சிங்களவர்கள் ஆவார்!
இவரகள் அனைவருமே த்ரோணாசாரியரை எதிர்த்துப் போர் புரிந்தனர்.
இவர்கள் அனைவருமே, அதாவது பாண்டியர், சோழர், திராவிடர் இவர்களுடன் சிங்களர், ஆந்திரகர்கள் என்று அனைவருமே யுதிஷ்டிரர் செய்த ராஜ சூய யாகத்துக்கு வந்தனர் என்றும், அதற்குத் தங்கள் காணிக்கைகளைக் கொடுத்தனர் என்றும் மஹாபாரதம் விவரிக்கிறது. எனவே திராவிடர்கள் வேறு, தமிழ் மன்னர்களான சேர, சோழ, பாண்டியர்கள் வேறு என்று தெரிகிறது.


இவர்களுள் பாண்டிய மன்னன் ஒருவனைப் பற்றி விவரங்கள் உள்ளன.
அவன் பெயர் சாரங்கத்துவஜன். (மஹாபாரதம் 7-23).
அவனுக்கு கிருஷ்ணனுடன் முன்பகை இருந்தது.
ஒருமுறை கிருஷ்ணன் அவனது நாட்டின் மீது படையெடுத்து அவன் தந்தையைப் போரில் கொன்று வென்றான்.
அதனால் சாரங்கத்துவஜனுக்கு கிருஷ்ணனைப் பழி வாங்க வேண்டும் என்ற உந்துதல் இருந்தது.
அதன் காரணமாக கிருஷ்ணன் ஆண்ட துவாரகை மீது படையெடுக்க விரும்பினான்.
ஆனால் மதியூகிகளான அவனது நண்பர்கள் அவனைத் தடுத்தனர்.
அவர்கள் ஆலோசனையின்படி, இந்தப் பாண்டிய மன்னன் கிருஷ்ணனுடன் நட்புறவு கொண்ட பாண்டவர்களுடன் சேர்ந்து போரிட்டான் என்று மஹாபாரதம் தெரிவிக்கிறது.
இதன் மூலம், கிருஷ்ணன் பாண்டி நாட்டுக்கு வந்திருக்கிறான் என்பது தெரிகிறது.


இறையனார் அகப்பொருள் உரையிலும், கடல் கொண்டுவிட்ட கபாடபுரத்தில் நடந்த இரண்டாம் சங்கத்துக்குத் துவரைக் கோமான் வந்திருந்தான் என்று குறிக்கப்பட்டுள்ளது.
துவரை என்பது துவாரகையாகும்,
அதை நிர்மாணித்து ஆட்சி செய்தவன் கிருஷ்ணன்.
எனவே இரண்டாம் தமிழ்ச் சங்கத்துக்கு வந்த துவரைக் கோமான் என்பவன் கிருஷ்ணன் என்று தெரிகிறது.
நட்பின் காரணமாக அவ்வாறு வந்திருக்க முடியும்.
ஆனால் மஹாபாரதப் போரில் கலந்து கொண்ட பாண்டிய மன்னன் சாரங்கத்துவஜனுக்கு கிருஷ்ணனுடன் நட்பில்லை.
அவன் நாட்டின் மீது கிருஷ்ணன் படையெடுத்துள்ளான் என்றால், அது முரண்பாடாக இருக்கிறதே என்று தோன்றும்.
இங்குதான் ஒரு முக்கிய விவரத்தை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.


அந்த நாளில் பாண்டிய தேசம், சோழ தேசம் என்று சொன்ன போது, அவை முழுதுக்கும், ஒரே அரசனே சொல்லப்படவில்லை. உதாரணமாக, சிலப்பதிகாரம் நடந்த கி-பி- 2- ஆம் நூற்றாண்டில் கண்ணகி நீதி கேட்ட மதுரையில் இருந்த மன்னன் பாண்டியன் நெடுஞ்செழியன்.
அவன் மறைவுக்குப் பிறகு பட்டம் ஏறினவன் வெற்றி வேல் செழியன் என்கிறது சிலப்பதிகாரம்.
இவன் கொற்கையை ஆண்ட மன்னன் என்று அந்நூல் கூறுகிறது.
அதாவது பாண்டியர்கள் ஆளுகைக்குள் ஆங்காங்கே இருந்த பகுதிகளை அவர்கள் உறவு வட்டத்தில் இருந்தவர்கள் ஆண்டிருகிறார்கள். அவர்களும் பாண்டியன் என்னும் பட்டப் பெயரைக் கொண்டிருக்கிறார்கள்.
கொற்கையை ஆண்டு வந்தவன் நெடுஞ்செழியனது தம்பியாக இருக்கலாம் என்ற கருத்து இருக்கிறது.


அது போலவே, சிலப்பதிகாரக் காலக் கட்டத்தில் சோழ நாட்டை ஆண்டவன் வளவன் கிள்ளி என்பவன்.
அவன் சேரன் செங்குட்டுவனது மைத்துனன் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது.
அவனுக்கும் ஒன்பது சோழ மன்னர்களுக்கும் சண்டை நடந்தது.
அதாவது ஒரே பரம்பரையில் வந்த உறவினர்களுக்குள்ளேயே ஆட்சிக்குப் போட்டி வந்து அதனால் சண்டை இட்டிருக்கிறார்கள்.
அந்த ஒன்பது மன்னர்களையும் வளவன் கிள்ளி ஒரு பகல் பொழுதிலேயே கொன்று தன் ஆட்சியை நிலை நாட்டியிருக்கிறான்.


இவ்வாறு ஒரே நாட்டில் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் தங்கள் உறவுக்குள்ளேயே சண்டையிட்டும், சுமுகமாகவும் இருந்திருக்கிறார்கள்.
சுமுகமாக இருந்த காலத்தில், கண்ணகி கதையில் வருவது போல, ஒருவர் மதுரையிலும், ஒருவர் கொற்கையிலும் தங்கள் ஆட்சியை அமைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதற்கு முந்தின பகுதிகளில் இக்ஷ்வாகு மன்னர்கள் பல பரம்பரைகளாகப் பரந்து விரிந்து, ஆங்காங்கே ஆட்சி செய்தனர் என்று பார்த்தோம்.
ஆனால் அவர்கள் அனைவருமே தங்களை இக்ஷ்வாகுப் பரம்பரையினர் என்று ஒரே பரம்பரையைச் சொல்லிக் கொண்டனர்.
நமக்கு இக்ஷ்வாகு பரம்பரை என்றால் ராமன் நினைவுதான் வரும்.
அயோத்தியைத் தலை நகரமாகக் கொண்டு ஆண்ட இக்ஷ்வாகு பரம்பரையில் ராமன் வருகிறான்.
பிற இடங்களில் இக்ஷ்வாகுப் பார்ம்பரையில் வந்த மற்றவர்கள் ஆண்டிருக்கின்றனர்.


அது போலவே பாண்டிய நாடு என்னும் பொழுது, அதன் பல நகரங்களில், வேறு வேறு பாண்டிய மன்னர்கள் ஆண்டு வந்திருக்க வேண்டும்.
கபாடபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட பாண்டியர், ராமனைப் போல மூத்தவன் பரம்பரையில் வந்தவர்களாக இருக்க வேண்டும்.
அந்தப் பரம்பரை வம்சாவளியினர் சங்கததை நடத்தியிருக்கிறார்கள்.
கபாடபுரததை ஆண்ட பாண்டிய மன்னன் கூட்டிய 2-ஆம் சங்கத்துக்கு கிருஷ்ணன் வந்திருக்கிறான்.


பாரதப் போரில் ஈடுபட்ட சாரங்கத்துவஜ பாண்டியன் மற்றொரு பாண்டியப் பகுதியை ஆண்டவனாக இருக்க வேண்டும்.
இவன் பாண்டவர் பக்கம் போரிட்டிருக்கிறான்.
ஆனால் வேறொரு இடத்தில், கௌரவர்களுக்காகப ஒரு பாண்டிய மன்னன் போரிட்டான் என்று நாம் எண்ணும் வண்ணம், பாண்டிய மன்னனைப் பாண்டவர்கள் கொன்றனர் என்ற செய்தி வருகிறது. (மஹாபாரதம் 9-2).
தங்கள் பக்கம் இருக்கும் பாண்டியனை பாண்டவர்கள் ஏன் கொல்ல வேண்டும்?
எனவே வேறோரு பாண்டிய மன்னனும் மஹாபாரதப்போரில் கலந்து கொண்டிருக்க வேண்டும் என்று இதன் மூலம் தெரிகிறது.
ஆக, மஹாபாரதம் மூலம், மூன்று பாண்டிய மன்னர்கள் ஒரே காலக்கட்டத்தில் இருந்திருக்கக்கூடும் என்று தெரிகிறது.
அவர்களுள் இருவர் பாரதப் போரில் எதிரெதிர் அணியில் சண்டையிட்டிருக்க வேண்டும் என்றும் தெரிகிறது.


சங்கம் கூட்டிய கபாடபுரம் இருந்த பாண்டிய நாடு, சாரங்கத்துவஜன் ஆண்ட நாடு, கௌரவர் பக்கம் போரிட்ட பாண்டிய மன்னனது நாடு என மூன்று பாண்டிய நிலங்கள் இருந்திருக்க வேண்டும்.
இவை தவிர வேறு எந்த நிலங்கள் இருந்தனவோ என்று நினைக்கும்போது, போன பதிவில் குறிப்பிட்ட நாடுகளில் சில பாண்டியன் ஆண்ட நாடுகளாக இருக்கலாம் என்ற சாத்தியம் இருக்கிறது.
அவற்றின் அன்றைய பெயர்கள் நமக்குத் தெரியாததால் நாம் குழப்பிக் கொள்கிறோம்.
இந்த நோக்கில் அடியார்க்கு நல்லார் அவர்கள் சிலப்பதிகார உரையில், கடல் கொண்ட குமரிக் கண்டத்தில் இருந்ததாகச் சொன்ன நிலப்பெயர்கள் நமக்கு மேலும் தெளிவைத் தருகின்றன.


சிலப்பதிகாரம் வேனில் காதையின் முதல் வரியில் வரும் ‘தொடியோள் பௌவம் என்னும் சொல்லை விளக்குகையில் உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் கடல் கொண்ட குமரிக் கண்டத்தின் பகுதிகளை விவரிக்கிறார்.
அவர் விவரித்தது, முதல் கடல் கோள் வருமுன்னர் இருந்த நிலப்பகுதியாகும்.
மஹாபாரதப் போர் நடந்த காலக்கட்டத்தில் அவற்றுள் பலவும் கடல் கொண்டு விட்டிருக்க வேண்டும்.
கபாடபுரததிற்கு கிருஷ்ணன் சென்றதாக சொல்லப்படவே, மஹாபாரதக் காலக்கட்டத்தில்,
அதாவது இன்றைக்கு 5000 ஆண்டுகளுக்கு முன்,
இன்றைய தமிழ் நாடு இன்னும் இந்தியப் பெருங்கடலுக்குள் நீண்டிருந்தது என்பது புலனாகிறது.
மேலும், சஞ்சயன், தாமிரபரணி ஆறு முதல் மலய பர்வதத்துடன் முயல் போன்ற அமைப்பில் நிலப்பகுதி தெற்கில் இருந்தது என்று சொன்னான் என்பதை முந்தின பகுதியில் கண்டோம்.
எனவே அடியார்க்கு நல்லார் சொல்லியுள்ள நில்ப்பகுதிகளில் சில அந்தப் பகுதிகளில் இருந்திருக்க வேண்டும்.


தென்பாலி முகத்துக்கு வடவெல்லையாக இருந்த பஹ்ருளி ஆற்றுக்கும், குமரி ஆற்றுக்கும் இடையே ஏழேழு என்ற எண்ணிக்கையில் நாற்பத்தொன்பது நாடுகள் இருந்தன என்கிறார்.
அவை ஏழு பெயர்களால் வழங்கி வந்தன. ஒவ்வொரு ஏழும், தனக்குள் ஏழு பிரிவாக இருந்திருக்கிறது.
அவை,
தெங்க நாடு ஏழு,
மதுரை நாடு ஏழு,
முன் பாலை நாடு ஏழு,
பின் பாலை நாடு ஏழு,
குன்ற நாடு ஏழு,
குணகரை நாடு ஏழு,
குறும்பனை நாடு ஏழு  


இந்தப் பெயர்களை, சஞ்சயன் கூறியுள்ள பெயர்களுடன் ஒப்பிட்டுப் பார்ப்போம்.
தென்பாலி முகம் தொடங்கி தெற்கில் இந்த நாடுகள் செல்கின்றன.
தனபாலம் என்ற பெயரை சஞ்சயன் குறிப்பிட்டுள்ளான்.
தென்பாலி என்பதன், மருவாக இது இருக்கலாம். தென்பாலிமுகம் என்று கூறவே, இது துறைமுகப் பட்டணமாகும்.


தெங்க நாடு என்னும் சொல்லுடன் இயைந்து ‘தங்கணம்’, ’பரதங்கணம்  என்னும் பெயர்களும் வந்துள்ளன.


மதுரை நாடு என்ற பெயர் இல்லை.
ஆனால் கபாடபுரம் மதுரை நாட்டின் தலைநகரமாக இருந்தது.
மருத நிலங்களே மதுரை என்று மருவி இருக்க வேண்டும். இந்த ஏழு பெயர்களுமே நில அமைப்பைப் பொறுத்து இருக்கவே மதுரை என்பது மருதம் என்பதன் திரிபு என்று சொலல் முடிகிறது.
அந்த மதுரை நிலப்பகுதியில் கபாடபுரம் இருந்தது. கிருஷ்ணன் சென்ற நகரமாகக் கபாடபுரம் இருக்கவே அதைப் பற்றிய குறிப்பு சஞ்சயன் வர்ணனையில் கண்டிப்பாக இருக்க வேண்டும்.
‘காலதம் என்னும் பெயரை சஞ்சயன் சொல்கிறான்.
இது கவாடம் அல்லது கபாடபுரத்தின் திரிபாக இருக்கலாம்.
மேலும் பல பெயர்களும் சம்ஸ்க்ருதப் பெயர்களாக இருப்பதைக் கவனிக்கவும்.
தமிழ், சம்ஸ்க்ருதம் இரண்டிலுமே இந்தப் பெயர்கள் இருந்திருக்க வேண்டும்.



பாலை, குன்றம், பனை நாடுகள் பற்றி சொல்ல முடியவில்லை.
ஆனால் குணகரை நாடு என்பது கீழ் நாடுகளாக இருக்கலாம்.
சஞ்சயன் ‘ப்ராச்சய நாடுகள் என்று சொல்கிறான்.
அதற்குக் கிழக்கு நாடுகள் என்பது பொருள்.
குணகரை எனபதில் உள்ள குண என்பதும் கிழக்கு என்ற பொருள் கொண்டது.
கிழக்குக் கரை நாடுகளுக்குக் குணகரை நாடுகள் என்ற பெயர்.
எனவே குமரிக் கண்டத்தில் இருந்த நாடுகளில், மதுரை (கபாடபுரம் / காடம்), தெங்கம், குணகரை நாடுகளை சஞ்சயன் குறிப்பிட்டுள்ளான் என்று தெரிகிறது.
இந்த நாடுகள் ஒவ்வொன்றும் ஏழு ஏழாக இருந்தன. அவற்றுள் எத்தனை மீந்தது என்று தெரியாது.
ஆனால் கீழை நாடுகள் என்று வருவதால், குணகரை நாடுகள் ஒன்றுக்கு மேல் இருந்திருக்க வேண்டும்.


இவை தவிர சஞ்சயன் கூறும் நாடுகளில், குகுரம், என்பது குக்குட்டம் என்ற சம்ஸ்க்ருதச் சொல்லாக இருக்கலாம்.
இதற்குக் ‘கோழி எனப்து பொருள்.
உறையூரின் பழைய பெயர் கோழி என்பதாகும்.

மஹிஷம் என்பது, மஹிஷாசுரனை வென்ற காரணத்தில் ஏற்பட்ட மைசூராகும்.

கர்ணாடகம் கர்னாடகப் பகுதியாகும்.

மாலவம் என்ற இடம் மாலத்தீவாக இருக்கலாம். 




இந்தப் படத்தில் வட்டத்தில் இருப்பது மாலத்தீவுகள்.


சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்குக் கோவில் எழுப்பிய போது அந்தக் கும்பாபிஷேகத்தில், மாளுவ மன்னன் கலந்து கொண்டான்.
இதை மாள்வா நாட்டுடன் சில ஆராய்ச்சியாளர்கள் இணைக்கின்றனர்.
மாள்வா என்பது மத்தியப் பிரதேசத்தில் இருக்கிறது.
ஆனால் மாளுவம் என்பது மாலத்தீவாகவும் இருக்கலாம்.
அங்கு சேர மன்னர்கள் தொடர்பும், மலையாளம் கலந்த மொழி சாயலும் இன்றும் இருக்கிறது.
மேலும் மாலவம் என்பது தென் பகுதியில் இருப்பதாக சஞ்சயன் சொல்லவே, மத்தியப் பிரதேச மாள்வாவாக அது இருக்க முடியாது.


பாண்டியனுக்கும் திராவிடத்துக்கும் தொடர்பு இருக்கிறதா என்று தேடும் போது, மேலும் ஒரு விவரம் கிடைக்கிறது.
யுதிஷ்டிரன் ராஜசூய யாகம் செய்த போது, தென் திசை நோக்கி பாண்டவர்களுள் ஒருவனான சஹாதேவன் படையெடுத்து வந்தான். அவன் வென்ற நாடுகள் என்று பௌண்டரியம் (பண்டரிபுரமாக இருக்கலாம்), திராவிடம், உத்ரகேரளம் (உத்ர கேரளம் என்பது சேர நாட்டுக்கு வடக்கில் இருந்த பகுதியாக இருக்கலாம்) ஆந்திரம், தலவனம் என்று சொல்லப்பட்டுள்ளது.
இவர்களைப் படை பலத்தால் வென்றிருக்கிறான்.
இங்கு தமிழ் மன்னர்களான சேர சோழ பாண்டியர்களின் மீது படை எடுத்ததாகவோ, அவர்கள் நாட்டுக்குச் சென்றதாகவோ எந்தக் குறிப்பும் இல்லை.

ஆனால் ராஜசூய யாகத்தில் சோழ, பாண்டியர்கள் கலந்து கொண்டு, தங்கம் நிரம்பிய பல பானைகளையும், மலய பர்வதத்தில் கிடைக்கும் சந்தனத்தையும் அளித்தார்கள் என்று வருகிறது.
அதாவது அவர்கள் பாண்டவர்களுடன் நட்புறவு கொண்டிருக்கவே அவர்கள் நாட்டின் மீது சஹாதேவன் படையெடுக்கவில்லை என்று புலனாகிறது.
திராவிட நாட்டின் மீது படையெடுத்துத் தங்கள் மேன்மையை ஒப்புக் கொள்ளச் செய்தான் சஹாதேவன்.
ஆனால் சோழ, பாண்டியர்கள் நட்புறவுடன் யாகத்தில் கலந்து கொண்டார்கள் என்பதால், திராவிடர்களுக்கும், திராவிடம் என்ற நாட்டவர்களுக்கும், தமிழின் மூவேந்தர்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று தெரிகிறது.



சோழ பாண்டியர்களைப் போல நட்புறவுடன் ராஜசூய யாகத்தில் பங்கு கொண்டவன் சிங்கள மன்னன்!
சஹாதேவன் தென்புறம் வந்து திராவிடர் போன்றோரை வென்றவுடன், கடலோரப்பகுதிகளுக்கு வந்து, தன் தூதுவர்களை புலஸ்தியர் பேரனான விபீஷணனைச் சந்திக்க அனுப்பினான் (சபாபர்வம் -30).
விபீஷணனும் மகிழ்ச்சியுடன் அவர்களை வரவேற்று, தன் காணிக்கைகளாகப் பல அபூர்வ ரத்தினங்களைக் கொடுத்தான்.
தான் இவ்வாறு அடிபணிய வேண்டியிருப்பது காலத்தின் கோலம் அன்று அவன் எடுத்துக் கொண்டான்.
இங்கு விபீஷணன் என்றது, ராமாயாண காலம் தொட்டு இலங்கையை ஆண்ட விபீஷணர் பரம்பரையாக இருக்க வேண்டும்.
ஒரு காலத்தில் ராமனுக்குத் தோழனாக, வீர தீரத்துடன் இருந்த அந்தப் பரம்பரையினர், பாண்டவர்கள் காலத்தில், பலம் குன்றியவர்களாக அவர்களுக்கு அடி பணிய வேண்டியிருப்பதை இது தெரிவிக்கிறது.


சஞ்சயன் சொன்ன நாட்டு வர்ணனையில் இலங்கை என்ற குறிப்பு இல்லை.
ஆனால் திரிகர்த்தம் என்ற பெயர் வருகிறது.
இன்றைக்கு இருக்கும் ஸ்ரீலங்கா முழுவதையும், ராமாயண காலத்தில் இலங்கை என்று சொல்லவில்லை.
திரிகூட மலையின் உச்சியில் இலங்கை இருந்தது என்றே ராமாயணம் கூறுகிறது.
பின்னாளில் திரிகூடம் என்பதை திரிகர்த்தம் என்று அழைத்திருக்கலாம்.
தன்னைத் தேடி வந்த சஹாதேவனது தூதர்களுக்கு விபீஷணன் தக்க சன்மானம் கொடுத்துவிடுகிறான்.
அவன் ராஜசூய யாகத்துக்கு வந்ததாகச் சொல்லப்படவில்லை.
ஆனால் ராஜசூய யாகத்தில் சிங்களவர்கள் கலந்து கொண்டு பரிசுப் பொருட்களைக் கொடுத்துள்ளனர்.
இதன் மூலம் சிங்களம் வேறு விபீஷணன் ஆண்ட பகுதி வேறு என்று தெரிகிறது.
சிங்களவர்கள் பாண்டவர்களுடன் நட்புறவாடி, போரில் அவர்களுக்காகக் கலந்து கொண்டுள்ளனர்.
ஆனால் விபீஷணனது நாட்டவர் போரில் கலந்து கொள்ளவில்லை.
மஹாபாரத காலக்கட்டத்தில் இலங்கைத்தீவில் இந்த மக்களும் (விபீஷணன் ஆண்ட மகக்ளும், சிங்களவர்களும்) பெயர் பெற்றவர்களாக இருந்திருக்க வேண்டும்.



நமக்குத் தேவையான திராவிடம் பற்றிய செய்திகளை அலசியதில், திராவிடம் என்னும் ஒரு பகுதி இருந்தது என்றும், அங்கிருந்தவர்கள் திராவிடர்கள் எனப்பட்டர்கள் என்பதும் மஹாபாரதம் மூலம் தெரிகிறது.
ஆனால் இந்தப் பகுதியும் சேர, சோழ, பாண்டியப் பகுதியும் வேறு வேறு என்றும் தெரிகிறது.
மேலும் அந்தக் காலக்கட்டத்தில் பேசும் மொழியால் ஒரு நாட்டையோ அல்லது மக்களையோ அடையாளம் காட்டவில்லை. நாட்டுக்கென்று ஒரு சிறப்புப் பெயரோ அல்லது நாட்டை ஆள்பவனது பெயர் அல்லது வம்சத்தினாலோ பெயர்கள் இருந்திருக்கின்றன. ஒட்டு மொத்தமாக மொழியின் பெயரால் மக்களை அடையாளம் காட்டவில்லை.



தொல்காப்பியர் தமிழ் கூறும் நல்லுலகம் என்று சொன்னதில் திராவிடம் என்ற நாட்டை எங்கும் குறிப்பிடவில்லை.
அதுபோல சிங்களை நாட்டையும் தமிழ் பேசும் நல்லுலகத்துடன் சேர்க்கவில்லை.
ஆனால் வேறொரு இடத்தில் சிங்களமும், திராவிடமும் வருகிறது.
அவற்றை அறியும் முன், முயல் போன்ற வடிவிலான சாகத்தீவையும், குமரிக் கண்டத்தையும் நாம் அறிந்து கொள்வோம்.
அவற்றைத் தெரிந்து கொண்டால்தான் திராவிடதேசத்திலிருந்து மனுவும் மற்ற மக்களும் வந்தார்கள் என்று ஸ்ரீமத் பாகவதம் சொன்னது எப்படி என்று புரிந்து கொள்ள முடியும்.
எனவே அடுத்தாக சாகத்தீவை ஆராய்ந்து,
அதன் தொடர்ச்சியாக
முந்தைய தமிழர் வாழ்ந்தது குமரிக் கண்டத்தில்தான், சிந்து சமவெளியில் இல்லை
என்று தெளிவோம்.


சனி, 19 பிப்ரவரி, 2011

38. நாவலந்தீவில் திராவிட தேசம்.




ஆரிய-தஸ்யூக்களின் முன்னோனார்கள் வாழ்ந்த இடம் இளாவ்ருதம்.
பாரதத்தையும், அதற்கும் அப்பால் சைபீரியா போன்ற வட பகுதிகளையும், திராவிடத்தையும், தமிழையும் இணைக்கும் ஒரு முக்கிய இடம் இளாவ்ருதம் எனப்படும் இளாவ்ருத வர்ஷம்.


இந்த இளாவ்ருதம் எதிர்பாராத இடத்தில் தன்னை அடையாளம் காட்டிக் கொண்டுள்ளது.
எந்த சிந்து சமவெளி நாகரிகம் தமிழனின் மூலம் என்று திராவிடவாதிகள் நினைக்கிறார்களோ, அங்கு கிடைத்த பானை ஓட்டில் காணப்படும் எழுத்துக்களை, ஆரியப் படையெடுப்பு ஒரு கட்டுக்கதை என்று நிரூபித்துள்ள என்.எஸ். ராஜாராம், மற்றும் நட்வர் ஜா என்னும் பெங்காலிய ஆராய்ச்சியாளர் ஆராய்ந்தபோது அவற்றுள் ஒரு சொல் “இளாவ்ருத வரஎன்று இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டது.
இளாவ்ருதத்தின் வரம் என்பது இதன் பொருள்.
‘The deciphered Indian Script” என்னும் அவர்களது நூலில் குறிக்கப்பட்டுள்ள இந்த விவரத்தைப் பற்றி 1999 ஆம் வருடத்திய மே 13-ஆம் தேதியிட்ட டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கையில் செய்தியும் வந்தது.
இந்த இளாவ்ருதம் பாரதத்தின் வடபாகத்தில், இமயமலைக்கும் வடக்கே இருந்த ஒரு பகுதி.
இதுவே ஆரிய, தஸ்யூக்கள் என்று சொல்லப்பட்ட பஞ்ச மானவர்கள் எனப்பட்ட, யது முதாலானவர்களது முன்னோர்கள் வசித்த இடம்!


அந்த முன்னோனின் பெயர் புரூரவஸ்.
இது மஹாபாரத, புராணங்களில் பல இடங்களில் சொல்லப்பட்டுள்ளது.
இந்தப் புரூரவஸின் வம்சாவளியில் வந்தவர்கள் நஹுஷன், அவன் மகன், யயாதி, அவன் மகன்களான ஆரிய தஸ்யூக்கள் (பகுதி 30) அவர்களது வம்சாவளியில் வந்தவன் துஷ்யந்தன். (துஷ்யந்தன் - சகுந்தலை கதை பலருக்கும் தெரிந்திருக்கும்.) அவர்களுக்குப் பிறந்தவன் பரதன், அந்த வம்சாவளியில் மேற்கொண்டு வந்தவர்கள் பாண்டவர்கள் என்று தொடர்பு செல்கிறது.
பரதன் வரை அதே வம்சாவளியைத் தங்கள் செப்பேடுகளில் சோழர்கள் (பகுதி 11) பொறித்து வைத்தார்கள்.
புரூரவசின் வழித் தோன்றலான யயாதியின் மகள் வழிப் பேரன் சிபி.
அந்த சிபியின் வம்சத்தில் சோழர்கள் வரவே இப்படி தொடர்பு செல்கிறது என்று பார்த்தோம். (பகுதி 32)
இவ்வாறாக, இளாவ்ருததை ஆண்ட புரூரவசுவிடமும் சோழர்களது ரத்த உறவு செல்கிறது.


இந்தப் புரூரவஸ் யார்?
இவனை ஐலன் என்று பல இடங்களிலும் மஹாபாரதம் கூறுகிறது.
ஐலன் என்ற ஒரு பரம்பரையே இருந்திருக்கிறது.
ஐலன் பரம்பரையிலிருந்து ஒரு நூறு வம்சாவளிகளும், இக்ஷ்வாகுவின் பரம்பரையில் ஒரு நூறு வம்சாவளிகளும் உண்டாகி அவர்கள் ஆங்காங்கே இந்த பாரத வர்ஷத்தை ஆண்டனர் என்று மஹாபாரதத்தில் சபாபர்வத்தில் 14 ஆவது அத்தியாயத்தில் கிருஷ்ணர் சொல்கிறார்.
பாரதத்தில் எங்கு திரும்பினாலும், எந்த மன்னன் எந்தப் பகுதியை ஆண்டாலும் அவர்களது மூலம் இந்த இரண்டு பரம்பரைகளில் ஏதேனும் ஒன்றில்தான் ஆரம்பித்திருக்கும்.


ஐலன் பரம்பரை சந்திர வம்சம், இக்ஷ்வாகு பரம்பரை சூரிய வம்சம்.
இந்தப் பெயர்கள் தாய் வழி வம்சம், தந்தை வழி வம்சம் என்று தொடர்பு கொண்டதில் உண்டானது என்பதை மரபணு ஆராய்ச்சி முடிவுகளை ஆராயும்போது அறிவோம்.
இவை ஆரிய-தஸ்யூக்கள் என்று மாக்ஸ்முல்லர் சொன்ன மக்களுக்கும் முன்பே இருந்த பரம்பரைகள் என்பதைக் கவனிக்க வேண்டும்.
ஆரிய- தஸ்யூ என்பவர்களுக்கு முன்பே இந்த நாட்டில் பரவலாக இரண்டு பரம்பரைகளும் வாழ்ந்துள்ளனர்.
ஆரிய- தஸ்யூ போரில் ஈடுபட்ட சகோதரர்கள், ஐலன் வம்சத்தில் வந்தவர்களே.


ஐலன் வம்சத்தில் முக்கியமாகச் சொல்லப்பட்டவன் புரூரவஸ்.
இந்தப் புரூரவசின் மனைவியின் பெயர் ஊர்வசி!!
ஆம், தேவருலக அப்சர மங்கைகளுள் ஒருத்தியான ஊர்வசி.
மாதவியின் பரம்பரையில், மாதவி என்னும் பெயருடனே பிறந்தவள் என்று இரு முறை சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகளால் சொல்லப்பட்ட ஊர்வசி! (பகுதி 10)
பல இடங்களிலும் இந்தப் பெயர் வரவே, ஒரு பெண்ணே பல காலக் கட்டங்களில் இருந்தாள் என்று எடுத்துக் கொள்ளக்கூடாது.
ஊர்வசி என்னும் அப்சர மங்கையின் வம்சாவளியில் வந்தவர்கள் இவர்கள் என்று பொருள் கொள்ள வேண்டும்.
ஒரு குடும்பத்தில் ஒரே பெயரே மீண்டும் மீண்டும் வருவது நம் நாட்டில் வழக்கில் இருந்திருக்கிறது.
சென்ற தலைமுறை வரை, பாட்டன் பெயரை, மகனுக்கு வைத்தார்கள். இரண்டு அல்லது மூன்று பெயர்களே மாறி மாறி குடும்பத்தில் வரும். அவ்வாறே ஊர்வசியின் பெயரும் வந்திருக்கிறது.


இந்த ஊர்வசி தேவ லோக மங்கை.
புரூரவசும் தேவருலகத்துடன் தொடர்பு கொண்டவன்.
அவன் இந்திர சபைக்கு அடிக்கடி போய் வருவான்.
அப்படிப்போய் வந்த காலத்தில் ஊர்வசியைக் கண்டு அவள் மீது காதல் கொண்டான். அவர்கள் இருவர் மீதும் ரிக் வேதத்தில் ஒரு பாடலே உள்ளது. அப்சர மங்கைகள் தங்கள் விருப்பம் போல் வாழ்ந்தவர்கள் என்று பார்த்தோம் (பகுதி 33).
ஊர்வசியும் அதேபோல திடீரென புரூரவசை விட்டு நீங்கி விட்டாள்.
அவர்கள் இருவரைப் பற்றிய கதை பழைய நூல்களில் சொல்லபப்ட்டுள்ளது. அவர்கள் சரித்திரத்தை ‘விக்ரம ஊர்வசீயம்என்னும் ஒரு காவியமாகக் காளிதாசர் எழுதியுள்ளார்.


ஊர்வசி, ஐலன் புரூரவசை விட்டு நீங்கிய காட்சி ரவி வர்மாவின் கை வண்ணத்தில்.


ஒருகாலத்தில் தேவர்கள் என்ற பெயருடன் மக்கள் வட துருவத்துக்கு அருகே வாழ்ந்தனர் என்று பார்த்தோம்.
20,000 வருடங்களுக்கு முன்னால் பனியுகம் முடிய் ஆரம்பித்தபோது, அந்த இனம் மறைந்து விட்டது.
அதைப் பற்றி தமிழில் கிடைத்துள்ள செய்திகளை முன்பு பார்த்தோம்.(பகுதி 36). தமிழ் நிகண்டுகளில் அறுவகைப் போக பூமி என்று குறிப்பிடும் இடங்களில் தேவகுருவம், உத்தரகுருவம் என்னும் அந்த இரு இடங்களும் சொல்லப்பட்டுள்ளது (சூடாமணி நிகண்டு -12-66).
தேவருலகத்துக்குத் தெற்கே இளாவ்ருதம் இருந்தது.
இளாவ்ருதத்துக்கும், தேவருலகத்துக்கும் தொடர்பு இருந்திருக்கிறது. புரூரவசின் பேரனான நகுஷன் ஒரு சமயம் தேவருலகத் தலைவனாக தேவேந்திரனாக இருந்திருக்கிறான்.
பல நியமங்களையும், யாகங்களையும் செய்து தேவருலகத் தலைவனான அவன், அகந்தையால் அந்தப் பதவியிலிருந்து வீழ்ந்தான்.
பூகோள ரீதியாக இளாவ்ருதமும், தேவருலகமும் அருகருகே இருக்கவே இப்படி தொடர்புகள் சாத்தியமாகி இருக்கின்றன.
இதை விளக்கும் பூகோள விவரங்கள் மஹாபாரதத்தில் வருகின்றன.


மஹாபாரதத்தில் பீஷ்ம பர்வத்தில் 6-ஆம் அத்தியாயத்தில் வரும் பூகோள வர்ணனை நாம் இருக்கும் ஆசிய, ஐரோப்பாக் கண்டங்களை ஒத்திருக்கிறது.  இந்த விவரங்களின் படி பாரதம், தமிழகம் போன்றவற்றின் இருப்பிடமும், அதை ஒட்டியே மரபணு ஆராய்ச்சி முடிவுகள் இருப்பதும் தெரிய வருகிறது. முதலில் நமது பூகோள அமைப்பு எப்படி இருந்தது என்று தெரிந்து கொள்வோம்.

த்வீபங்கள் ஏழு. இவற்றுள் நாம் இருப்பது ஜம்புத்வீபம்.
புகாரில் குடிகொண்ட சம்பாபதி தெய்வம் பற்றிய கட்டுரையில் இந்தத் த்வீபத்தில்தான் நாம் இருக்கிறோம் என்று அறிந்தோம். (பகுதி 17)
இந்தத் த்வீபத்துக்கு இன்னொரு பெயர் உண்டு.
அது சுதர்சன த்வீபம்.
சுதர்சன சக்கரம் போல வட்டமாக இது இருப்பதால் இந்தப் பெயர்.
சக்கரம் போல இருக்கவே இந்த நிலம் முழுவதையும் (சுதர்சன த்வீபம் என்னும் ஜம்புத் த்வீபம் என்னும் நாவலந்தீவு) தன் குடை கொண்டு வரும் மன்னன் சக்கரவர்த்தி எனப்பட்டான்.
சக்கரவாளச் சக்கரவர்த்திகள் என்று தமிழில் இருப்பதைக் கண்டோமே (பகுதி 36) அது தேவருலகத்தையும் உள்ளடக்கிய இந்த வட்டப்பகுதி.


இந்த நாவலந்தீவு முயல் வடிவாக இருந்தது.
நடுவில் அகன்றும், உயர்ந்தும் (மலைகள் இருந்ததால்) வடக்கிலும், தெற்கிலும் தாழ்ந்தும் இருந்தது.
இன்றைய ஆசியாக் கண்டத்தின் அமைப்புக்கு இது ஒத்துப் போகிறது.
இதில் பல நாடுகள், வர்ஷங்கள் என்னும் பெயரால் இருந்தன.
அமைப்பு ரீதியாக ஐராவத வர்ஷம் வடக்கிலும், பாரத வர்ஷம் தெற்கிலும், இவற்றுக்கிடையே இளாவர்ஷம் நடுவிலும் இருந்தது.
இவற்றின் அமைப்பை விளக்கும் போது,
தெற்கிலும் வடக்கிலும் உள்ள பாரத வர்ஷம், ஐராவத வர்ஷம் என்கிற இரண்டு வர்ஷங்களும் நன்றாக வளைத்து ஒன்று சேர்க்கப்பட்டிருக்கிற வில்லின் இரண்டு   நுனிகளைப் போலச் சேர்ந்திருக்கின்றன.
மத்தியில் உள்ளது இளாவர்ஷம்”, என்று சஞ்சயன் மஹாபாரதத்தில் கூறுகிறான்.



ஐராவத வர்ஷம் என்பது இந்திரன் இருந்த தேவ லோகம்.
ஆசியாவின் வட பகுதி. ஐராவதம் என்பது இந்திரனது யானையின் பெயர். 10,000 வருடங்களுக்கு முன் வரை அந்தப் பகுதியில் ஒரு குறிப்பிட்ட யானை வகை இருந்தது என்று பார்த்தோம் (பகுதி 34).
10,000 வருடங்களுக்கு முன் வட சைபீரியாவில் வாழ்ந்த யானை. வுல்லி மம்மொத்.

அந்த யானைகளை, ராமனின் தம்பி பரதனுக்கு அவனது தாத்தாவான கேகய நாட்டு மன்னன் கொடுத்தான் என்றும் பார்த்தோம்.
(இவையெல்லாம் ஒன்றுக்கொன்று முரண்படாமல் பலவித உள்ளூறை சாட்சிகளாக internal evidence - இருக்கின்றன என்று காட்டவே இப்படி தொடர்புகளைக் காட்டுகிறோம்.).
அந்த யானைகள் இப்பொழுது அழிந்து விட்டன.
அந்த வித யானைகள் உலாவிய சைபீரியப் பகுதி ஐராவதவர்ஷம் எனப்பட்டது. அது இந்திர லோகம் என்று அழைக்கப்பட்டது.


தெற்கில் உள்ள பாரத வர்ஷம் நாம் வாழும் பாரத நாடாகும்.
இதில் சீனா முதல் மத்திய ஆசியா வரையிலான நாடுகள் இருந்தன என்று முன்பு பார்த்தோம். (பகுதி 31)
ஐராவத வர்ஷத்துக்கும், பாரதவர்ஷத்துக்கும் இடையே ஒரு நதி ஓடுகிறது. இதற்கு இன்றும் இளி நதி என்று பெயர்.
நமது இதிஹாச, புராண நூல்களில் இதை இளை நதி என்றார்கள்.
இளை நதிகரையில் வாழந்தவர்கள் ஐலர்கள் எனப்பட்டார்கள்.
அவர்கள் வாழ்ந்த பகுதி இளாவ்ருதம் எனப்பட்டது.


இந்தப் பகுதி மக்களுக்கு, இதற்கு வடக்கிலும், தெற்கிலும் இருந்த ஐராவத, பாரத வர்ஷங்களுடன் தொடர்பு இருந்தது.
ஐராவத வர்ஷத்தை ஒட்டி, அதற்குத் தெற்கில் இருந்தது உத்தரகுரு வர்ஷம்.


நாவலந்தீவின் பகுதிகளான இவை அனைத்திலும் மக்கள் வேத மதத்தைப் பின்பற்றி வாழ்ந்தனர்.
இங்கு ஓடிய நதிகள், புண்ணிய நதிகளாகக் கருதபட்டன.
இங்கு தேவர்களும், மனிதர்களும் ஒன்று கூடி வாழ்ந்தனர், இவ்வாறெல்லாம் சஞ்சயன் மஹாபாரதத்தில் கூறுகிறான்.


இவற்றுள் தேவருலகமும், உத்தரகுருவும் போக பூமி எனப்பட்டது.
அங்கே மக்களுக்குத் துன்பமில்லை.
பாரத வர்ஷம் கர்ம பூமி எனப்பட்டது.
கர்ம பலனிலிருந்து விடுபட உதவும் புண்ணீய நதிகளும், புண்ணீய க்ஷேத்திரங்களும் இங்குதான் இருக்கின்றன.


இந்த நாவலந்தீவின் நடுவில் முயலின் முதுகு போல இருப்பது ஹேமகூடம் என்னும் கைலாச மலை.
அதாவது இமயமலை முதுகு போலவும் அதற்கு வடக்கிலும், தெற்கிலும் இருந்த நிலங்களும் நாவலந்தீவு ஆகும்.
இந்த அமைப்பையே முயல் போன்ற அமைப்பு என்று திருதராஷ்டிரன் கூறுகிறான். இதுவே சக்கர வடிவானது என்று சுதர்சனத் த்வீபம் என்றும் அழைக்கப்பட்டது.
இந்தப் பகுதிக்குள் இருந்த மக்களுக்குள் போக்குவரத்து இருந்தது.
பாரத வர்ஷத்தின் தென் பாகத்தில் இருந்த இலங்கை அரசன், ஐராவத வர்ஷத்தில் இருந்த இந்திர லோகம் சென்று வந்தான்.
அவன் மகனான இந்திரஜித் இந்திர லோகம் சென்று இந்திரனை வென்று, இலங்கையில் சிறை வைத்தான். இந்திரனை ஜெயிக்கவே அவனுக்கு இந்திரஜித் என்ற சிறப்புப் பெயர் கிடைத்தது.
இளாவ்ருத்தத்தில் வசித்த புரூரவஸ் வழியில் புரு வம்சம் பாரத நாட்டில் ஆட்சி செய்தனர்.
ரிஷிகளைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். அவர்கள் இந்த வர்ஷங்கள் எல்லாவற்றிலும் சஞ்சரித்துக் கொண்டிருந்தார்கள்.
இங்கு வாழ்ந்த மக்களுக்குள் அவன் ஒரு இனம், இவன் ஒரு இனம் என்ற பாகு பாடு இல்லை.
எல்லோருக்கும் ஒரே கலாச்சாரம்.
அதற்கு வேதம் தான் ஆதாரமாக இருந்தது.
இன்றைக்கு நாம் பார்க்கும் இந்தியா, அதன் மக்கள், அவர்கள் கடைபிடித்த கலாச்சாரம் ஆகிய எல்லாம் இந்த முழுப் பகுதியிலும் பரவி இருந்தது.
இதில் சிந்துவைத் தாண்டி ஆரியன் வந்தான் என்பது சிறிதும் ஆராயாமல் சொல்லப்பட்ட ஒரு விபரீதக் கருத்து ஆகும்.



சிந்துவைத்தாண்டி வட பகுதியில் இருந்த வர்ஷங்களுக்குச் செல்ல வேண்டும். கங்கைக் கரையில் வசித்த உத்தாலக ஆருணி என்னும் ரிஷியானவர், சிந்துப் பகுதியில் பாஞ்சாலத்தில் வசித்துவந்த ரிஷிகளுடன் சேர்ந்து, சிந்துவுக்கு அப்பால், சக்க்ஷுஸ் நதியருகே (சாஸ்பியன் கடலருகே) இருந்த கேகய நாட்டுக்குச் சென்று அந்நாட்டு மன்னனிடம் வேதக் கருத்துக்களைக் கேட்டு வந்ததை, சாந்தோக்கிய உபநிஷத்தில் காண்கிறோம். சிந்துவுக்கு அப்பால், புண்ணிய நதிகளும், புண்ணிய க்ஷேத்திரங்களும் இல்லாத இடங்களில் வேத வாழ்க்கை வாழாத மிலேச்சர்கள் வாழ்ந்தனர். மஹாபாரத காலத்தில், இந்த மிலேச்சர்கள் அதிக அளவில் ஐரோப்பா முழுவதும் பரவி விட்டனர்.


இனி அடுத்த முக்கிய பூகோள விவரத்துக்கு வருவோம்.
பீஷ்ம பர்வம் 6-ஆம் அத்தியாயத்தின் முடிவில் சஞ்சயன் சொல்கிறான் “பாரத வர்ஷமும், ஐராவத வர்ஷமும் (முயல் போன்ற) இந்தப் பகுதிக்கு இரண்டு விலாப்பக்கங்கள்.
சாகத்தீவும், காஸ்யபத்தீவும் காதுகள்.
தாமிரபரணிக்கு உற்பத்தி ஸ்தானமும் சம்பத்துமுள்ள மலய பர்வதமானது, நாவலந்தீவுக்கு முயல் போன்ற இரண்டாவது த்வீபமாகக் காணப்படுகிறது.” 

இந்தப் படத்தில் தற்போதைய ஆசியப் பகுதி காட்டப்பட்டுள்ளது. வட்ட வடிவமான அமைப்பின் காரணமாக சுதர்சன த்வீபம் எனப்பட்டது. முயல் வடிவமானது என்றும் சொல்லப்படுகிறது. நடுவில் இரண்டு கோடுகளாக இமயமலைப் பகுதி. இது ஹேம கூடம் எனப்பட்டது. அது முயலின் முதுகாக வர்ணிக்கப்பட்டது. அதற்குத் தெற்கே இருப்பது பாரத வர்ஷம். அதற்கு வடக்கே சிவப்புப் பெட்டியில் இளாவர்ஷம். அதற்கும் வடக்கே ஐராவத வர்ஷம். இளாவர்ஷத்தின் மேற்கே காஸ்பியன் கடல் பகுதி காஸ்யபத்வீபம். அது முயலின் ஒரு காது என வர்ணிக்கப்பட்டுள்ளது. பாரதத்தின் தெற்கே தாமிரபரணி ஆற்றிலிருந்து முயல் வடிவில் ஒரு நிலப்பகுதி இருந்தது. அது முயலின் மற்றொரு காது என வர்ணிக்கப்பட்டது. அது சாகத்த்வீபம் என்பபட்டது. 

ஆசியப் பகுதி என்னும் முயல் வடிவ ஜம்புத்தீவின் ஒரு புறம், காஸ்யபத்தீவு முயலின் ஒரு காது போல இருந்தது. இது காஸ்பியன் கடலாக இருக்கலாம். இது வட புறத்தில் இருக்கிறது.
மற்றொறு காது போன்ற அமைப்பில் இருந்த சாகத்தீவு பாரத வர்ஷத்தின் தென் புறம் இருந்தது என்கிறார் சஞ்சயன். அது எங்கே?


தாமிரபரணி ஆறும், அது ஆரம்பிக்கும் மலய பர்வதமும், பொதிகை மலைப் பகுதியாகும். அந்தப் பகுதியுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையை மலய பர்வதம் என்று இன்றும் சொல்கிறோம்.
அதை உள்ளடக்கிய முயல் போன்ற நிலப்பகுதி சாகத்தீவு என்கிறார்.
 
அது எங்கே இன்று இருக்கிறது? அப்படி முயல் வடிவத்தில் தாமிரபரணியின் தென் பகுதியில் நிலப்பகுதி இன்று இல்லை.
பாரதத்தின் தென் கோடியில் முயல் வடிவில் அப்படி ஒரு நில அமைப்பு இருந்தது என்று சஞ்சயன் கூறுவது இன்று கடல் மூடிய பகுதியாக அல்லவா இருக்கிறது?
அப்படி ஒரு பகுதி இருந்தால் அது இந்தப்படத்தில் தமிழ் நாட்டின் தென் கோடியில் வரையப்பட்டுள்ள கோடுக்குத் தெற்கே இருக்க வேண்டும்.


இந்த அமைப்பு இன்று இல்லை. வடக்கே ஒரு காது போல காஸ்பியன் பகுதி இருக்கிறதே அது போல தெற்கே இருந்ததாகச் சொல்லப்பட்ட சாகத்தீவு எங்கே போனது?

மஹாபாரதத்தில் வரும் இந்தக் குறிப்பு, குமரிப் பகுதி என்ற பகுதி கடலில் மறைந்தது என்று தமிழ் நூல்களில் வழங்குவதை உறுதிப்படுத்துகிறது.
இந்தத் தொடரில் சாகத்தீவை விவரிக்கும் போது குமரியைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.
இப்பொழுது இந்தக் கட்டுரையில் சொல்ல வந்த முக்கிய விஷயம், இவ்வாறாக சஞ்சயன் விவரித்த நாவலந்தீவில் உள்ள பாரத வர்ஷத்தில் தமிழ் நாடு எங்கே இருந்தது என்பதாகும்.


சஞ்சயன் ஒவ்வொரு பகுதியாக பாரதவர்ஷத்தை விவரிக்கிறான்,
அதன் தென்புறத்தில் உள்ள நாடுகள் என்று அவன் சொல்லும் நாடுகள் இவை:-
திராவிடம்
கேரளம்
கீழ் நாடுகள்
பூஷிகம்
வனவாஸிகம்
கர்ணாடகம்
மஹிஷம்
விகல்பம்
மூஷிகம்
ஜில்லிகம்
குந்தலம்
சௌஹ்ருதம்
நபகானனம்
கௌகுட்டம்
சோளதேசம்
கொங்கணம்
மாலவம்
நரம்
சமங்கம்
கரகம்
குகுரம்
அங்காரம்
மாரிஷம்
த்வஜினி
உத்ஸவசங்கேதம்
த்ரிகர்த்தம்
ஸாலவசேனி
வ்யுகம்
கோகபகம்
புரோஷ்டம்
சர்மம்
வேகவசம்
விந்தியசுலிகம்
புளிந்தம்
வல்கலம்
வல்லவம்
அபரவல்லவம்
குளிந்தம்
காலதம்
குண்டலம்
கரடம்
தன பாலம்
நீபம்
கடஸ்ருஜ்சயம்
அடிதம்
பாசிவாடம்
தநயம்
ஸுநயம்
ரிஷிகம்
விதபம்
தங்கணம்
பரதங்கணம்.

இந்தத் தொகுதியில் திராவிடம், கேரளம் (சேர நாடு), சோளதேசம் (சோழ நாடு) என்று தனித்தனியே நாட்டின் பெயர்கள் வந்துள்ளன.
எனவே திராவிட நாடு வேறு, சேர சோழ நாடுகள் வேறு என்று தெளிவாகிறது.

பாண்டிய நாடு என்ற பெயர் இல்லை. ஆனால் தங்கணம் என்னும் பெயர் உள்ளது.
கடல் கொள்வதற்கு முன் இருந்த குமரிக் கண்டத்தில் தெங்க நாடு இருந்தது என்று அடியார்க்கு நல்லார் சிலப்பதிகார உரையில் கூறியுள்ளார்.
தங்கணமும், பரதங்கணமும் கடல் கொண்ட பாண்டி நாட்டுப் பகுதிகளாக இருக்ககூடும்.
பிற இடங்களும் இன்று பெயர் மாறி இருக்க வேண்டும்.
தங்கணம் என்பதே தக்கணம் அல்லது தக்காணப் பீடபூமி அல்லது ஆங்கிலத்தில் டெக்கான் என்று மறுவி இருக்க வேண்டும்.
ஏனெனில் மணிமேகலையில் பல இடங்களில் மதுரை நகரைக் குறிக்கையில் ‘தக்கணப் பேரூர் என்றே சொல்லப்பட்டுள்ளது.
தக்கணம் என்பதை தக்கிணம் அல்லது தக்‌ஷிணம் என்று இருக்கலாம். அல்லது தெங்கணம் என்பது மருவியதாகவும் எடுத்துக் கொள்ளலாம்.
தக்‌ஷிணம் என்றால் தெற்கு என்று அர்த்தம்.
தக்‌ஷிணப் பகுதியை ஆண்டதால் பாண்டியனைத் தென்னவன் என்றே சங்க காலம் தொட்டு அழைத்து வந்திருக்கிறார்கள்.
தெங்கணம் என்ற பழைய குமரிக் கண்ட நகரத்தின் பெயராக இருக்க வேண்டும்.


ஆக தமிழ் நிலங்கள் மூன்றும் தனித் தனியே சஞ்சயனால் சொல்லப்பட்டுள்ளன.
அவை தவிர்த்து திராவிட நாடு என்று சொல்லப்படவே, திராவிடம் என்ற நிலப்பகுதி வேறு, தமிழ் மன்னர்கள் ஆண்ட நிலப்பகுதிகள் வேறு என்றும் தெரிகிறது. 


இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் சொன்ன இளாவ்ருதத்துக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?

சம்பந்தம் இருக்கிறது.

இக்ஷ்வாகு பரம்பரை வட இந்தியாவில் இருந்ததே அதன் ஆரம்பம் மனுவில் ஆரம்பிக்கிறது.
ஆனால் எந்த மனுவை திராவிடவாதிகள் வெறுக்கிறார்களோ அந்த மனுவும் அவனைச் சேர்ந்தவர்களும் வட இந்தியவைச் சேர்ந்தவர்கள் அல்லர்.
கடல் கோள் வந்தபோது, திராவிட நாட்டுப் பகுதியிலிருந்து, வெள்ளத்திலிருந்து தப்பி வடக்கில் குடி அம்ர்ந்தவர்கள் என்று ஸ்ரீமத்பாகவதம் (9.1.2-3) கூறுகிறது.
அந்த மனுவின் வழித்தோன்றல் இக்ஷ்வாவாகு ஆவான்.
அவன் பரம்பரையில் வந்தவர்கள் ராமனும், சோழனும் என்று பார்த்தோம்.


திராவிட நாடு என்ற பகுதி தென்னிந்தியாவில்தான் இருந்திருக்கிறது என்று சஞ்சயன் கூறுவதால், தென்னிந்தியப் பகுதிகளில் கடல் கோள்கள் நடந்திருக்கிறது என்பதைக் கடல் ஆராய்ச்சியாளர்களும் சொல்வதால், பாகவதம் கூறும் கருத்து உண்மையே என்று தெரிகிறது.
திராவிட தேசம் தெற்கில் இருக்க, வடக்கில் சிந்து நதிக்கரையில் திராவிடர்கள் வாழ்ந்தார்கள் என்பதும், 
அந்தப் பகுதியே அவர்களது மூலப் பகுதி என்பதும் தவறு என்றும் தெரிகிறது.
இதனால் அங்கிருந்தவர்கள் திராவிடர்கள் என்பதும், அவர்கள் ஆரியப் படையெடுப்பு காரணமாக தெற்குக்கு விரட்டியடிக்கப்பட்டவர்கள் என்பதும் சாத்தியமே இல்லை என்பதும் தெளிவாகிறது.
மேலும் ஆரியர்கள் என்று மாக்ஸ்முல்லர்வாதிகள் அடையாளம் காட்டியவர்கள் எல்லோருமே, திராவிட தேசத்திலிருந்து வடக்கே சென்ற மக்களது வழித்தோன்றல்களாக இருந்திருக்கிறார்கள்.
அப்படி இருக்க இந்த மக்களுக்குள் இனப்பாகுபாடு எப்படி இருக்க முடியும்?



இன்னொரு விவரமும் இருக்கிறது.
எந்த மனுவின் பெயரைக் கேட்டாலே எரிந்து விழுகிறார்களோ அந்த மனுவின் மகள் இளை என்பவள்.
அவளுக்குப் பிறந்தவன் புரூரவஸின் வம்சாவளியினர்.
அவர்கள் குடி அம்ர்ந்தது இளாவ்ருதம்.
அதாவது இது வரை நாம் சொன்ன எல்லா மக்களும் ஒரே மூலத்திலிருந்து, தென்னிந்தியாவின் ஒரு பகுதியிலிருந்து சென்று, பல்கிப் பெருகியவர்களே என்று தெரிகிறது.
மனுவின் வழி சூரிய வம்சமும், இளையின் வழித் தோன்றல்கள் சந்திர வம்சம் என்றும் இந்தப் பாரத வர்ஷம் முழுவதையுமே ஆக்கிரமித்திருந்தனர். சோழனும், சேரனும் அவர்களுக்குள் அடக்கம்.

அவர்கள் முன்னோர்கள் பிரளயத்திலிருந்து தப்பி, தென் பகுதியில் திராவிடம் என்னும் இடம் இருந்த பகுதியிலிருந்து, வடக்கிற்குச் சென்றனர்.
பிறகு அவர்கள் பல்கிப் பெருகி அவர்கள் சந்ததியினர் தெற்குக்குத் திரும்பியிருக்கின்றனர்.
அப்படி வந்த சோழவர்மன் சோழப்பேரரசை நாட்டியிருக்கிறான்.
அதாவது, திராவிட தேசத்திலிருந்து மக்கள் வடக்கில் சென்றபோது சோழ நாடு என்ற நாடே இருந்திருக்கவில்லை!
சோழ நாடு பிறகுதான் வந்திருக்கிறது.
ஆனால் பாண்டியனைப் பற்றி இந்தக் குறிப்புகளில் ஒரு விவரமும் இல்லை. அப்படி என்றால் பாண்டியன் ஆண்ட குமரிப் பகுதி, திராவிடம் எனப்பட்டதா??
விடை தேடுவோம்.