வெள்ளி, 26 ஜனவரி, 2024

இராமாயண காலத்தை அறுதியிடும் தொல்லியல் சான்று

Published in Geethacharyan Monthly Magazine


பக்தர்கள் அனைவரும் வணங்குவதற்கு வழி செய்யும் விதமாக, ஸாகேதபுரி எனப்படும் அயோத்தி மாநகரில் ஸ்ரீராமசந்த்ர பிரபுவின் ஜன்மஸ்தானத்தில் கோயில் அமைக்கப்படும் இந்தத் தருணத்தில், அங்குதான் இராமர் பிறந்தார் என்று உறுதியாகச் சொல்வதற்கு ஏதுவாகத் தொல்லியல் சான்றுகள் இல்லை என்பதுதான் உண்மை என்பது சற்று உறுத்தலாக இருக்கிறது. ஆழ்வார்கள் மங்களாசஸனம் செய்வித்த இராமர் இருந்த இடமா அது என்பதற்கும் எந்த ஆதாரமும் இல்லை; ஏனெனில் அயோத்தி முழுவதுமே நூற்றுக் கணக்கில் இராமர் கோயில்கள் உள்ளன. இவற்றுள் எது அவர் ஜனனம் எடுத்த இடம் என்பதில் அபிப்பிராய பேதங்கள் உள்ளன.

ஜன்மஸ்தானம் என்று இப்போழுது கட்டப்பட்டுள்ள கோயில் இருந்த இடத்தில் ஏற்கெனெவே கோயில் இருந்து இருமுறை அழிக்கப்பட்ட அடையாளத்தைத்தான் தொல்லியல் காட்டுகிறது. 1976-77-இல் முதன் முதலில் அங்கு தொல்லியல் துறை ஆராய்ந்தபோது, அது மசூதியாக இருந்தது. அதில் 12 தூண்கள் ஹிந்துக் கோயில் தூண்களாக இருந்தன. பூர்ணகலசம், மகர நீர் வாய் போன்ற அமைப்புகளும் இருந்தன. பிறகு, மசூதி இடிக்கப்பட்ட பிறகு பூமிக்கு அடியில் இருக்கும் அமைப்புகளைப் பார்க்கும் வண்ணம் ஆய்வுகள் நடந்தன. அவற்றின் மூலம், ஐம்பதுக்கும் மேற்பட்ட தூண்களது அடிப்பகுதிகள் பதினேழு வரிசைகளில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டன. கோயில் சிற்பங்கள் பலவும் உடைந்து புதைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இவற்றின் தொன்மை இரண்டாயிரம் வருடங்கள் வரையில், அதாவது, குஷானர்கள், பிறகு, குப்தர்கள் காலம் வரையில் மட்டுமே சொல்லும் வண்ணம் இருக்கின்றன. அதாவது கோயில் இருந்தது. அதைக் கொண்டு இராமன் காலத்தைச் சொல்லும் வண்ணம் ஆதாரம் கிடைக்கவில்லை. ஆனால் இந்தக் கோயில் இருந்த இடம் தான் மீண்டும், மீண்டும் அழிக்கப்பட்டு, கட்டப்பட்டிருக்கிறது.

இராமாயண காலத்திலிருந்து தேடினால், அண்ட சராசரங்களையும் இராமன் வைகுந்தத்துக்கு ஏற்றிக் கொண்டு போனபின் அயோத்தியில் யாருமே இல்லை. இராமனது மகன் லவன், ஸ்ரவஷ்டியைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி புரியலானான். குஸன், விந்தியமலைப் பகுதியிலுள்ள குஷாவதியிலிருந்து ஆள ஆரம்பித்தான். ஜைனர்களது முதல் தீர்த்தங்காரரான ரிஷப தேவரது காலம் வரை அயோத்தியாவில் மக்கள் நடமாட்டம் இல்லை என்று சொல்லப்படுகிறது. அதற்குப் பிறகு, அங்கு இராமன் பிறந்த மற்றும் வாழ்ந்த இடங்களைக் கோயிலாக்கி வணங்கி இருக்கிறார்கள். குறிப்பாக விக்ரம சஹாப்தத்தைத் துவங்கின விக்கிரமாதித்த அரசன் காலம் முதல், அயோத்யா பழம் பெருமையையும், புகழையும் அடைந்ததது என்கிறார்கள். ஜன்மஸ்தானத்தில், விக்கிரமாதித்தன் அதி அற்புதமான கோயிலைக் கட்டியிருக்க வேண்டும். ஆழ்வார்கள் கண்ட இராமர் கோயில் இந்தக் காலக்கட்டம், மற்றும் இதற்கு  முந்தினதாகத்தான் இருந்திருக்க வேண்டும்.

அந்தக் கோயில் 11-ஆம் நூற்றாண்டில் ஸாலர் மசூத் என்பவனால் அழிக்கப்பட்டது. இந்த ஸாலர் மசூத், சோமநாதபுரத்தை அழித்த கஜினி முஹம்மதுவின் தங்கை மகன். இவனது கூட்டாளிகள்தாம், மேல்கோட்டையை அழித்து, இராமப்பிரியனைக் கவர்ந்து சென்றவர்கள். அவர்களே தொண்டனூர் கோயில்களையும் சூறையாடியவர்கள். அந்த ஸாலர் மசூத்தை, ஸ்ரவஷ்டியைச் சேர்ந்த சுஹேல் தேவ் கொன்றான். அதன் பிறகு, ஜன்மஸ்தானக் கோயில் மீண்டும் கட்டப்பட்டது. கோயில் அழிவுற்று இருந்த போதும், மக்கள் அந்த இடத்தில் இராமனை வழிபட்டிருக்கிறார்கள். இதுவே, இந்தக் கோயில் ஜன்மஸ்தானமாக இருந்திருக்க வேண்டும் என்பதற்குச் சான்று என்கிறார்கள்.

11-12 நூற்றாண்டுகளில் அயனசந்திரன் என்னும் கஹர்வால் அரசன் அதே இடத்தில் இராமர் கோயிலை உன்னதமான முறையில் கட்டினான். அதற்கான கல்வெட்டு ஆதாரம் பாபர் மசூதியை இடித்த போது கிடைத்தது. அதில் பெருமாள் பெயர் ‘ஹரி விஷ்ணு’ என்று குறிக்கப்பட்டுள்ளது. வாலியையும், தசானனனையும் கொன்ற ஹரி விஷ்ணுவின் கோயில் என்று எழுதப்பட்டுள்ளது. இந்தக் கோயிலின் இருப்பிடமே இராமர் பிறந்த இடம் என்று மக்கள் கொண்டாடுவதாகவும், வழிபடுவதாகவும், அன்றைய முகலாய சரித்திர ஆய்வாளர்களும், வழிபோக்கர்களும் எழுதியுள்ளனர். சீதையின் சமையலறையின் மீதுதான் பாபர் மசூதி கட்டப்பட்டதாக, மிர்ஜா ஜன் என்பவர் எழுதியுள்ளார். இராமன் பிறந்த அரண்மனையை அழித்து மசூதி கட்டப்பட்டதாக இன்னொரு முகலாய எழுத்தாளர் எழுதியுள்ளார்.

பாபர் மசூதியில் கண்டுபிடிக்கப்பட்ட விஷ்ணு-ஹரி கல்வெட்டு

பெர்ஷிய மொழியில் எழுதப்பட்டுள்ள ஒரு நூலில், இராமனது அரண்மனைப் பகுதிகள் விரிவாக எழுதப்பட்டுள்ளன. அதன் மூலம், ஆதியில் எழுப்பட்ட கோயில், இராமனுடைய அரண்மனையின் பகுதிகளை அப்படியே தக்க வைத்துக் கொண்டு எழுப்பப்பட்டிருக்கிறது என்று தெரிகிறது. முகலாயர்கள் அதை ஆக்கிரமித்தபோது, அங்கு மூன்று கோயில்கள் இருந்தனவாம்: அவை ஜன்மஸ்தானம், ஸ்வர்கத்வாரம் எனப்பட்ட ராமரது தர்பார் மண்டபம், த்ரேதா கா தாகூர் என்னும் ராமர் கோயில். இவை அனைத்தையும் அழித்து, ஜன்மஸ்தானத்தில் பாபர் மசூதி எழுப்பப்பட்டது.

அவை அனைத்தையும் இழந்த நாம் மீண்டும் அதே இடத்தில் இராம ஜன்மஸ்தானக் கோயிலைக் கட்டுகிறோம். இராமன் வாழ்ந்த காலத்தைக் காட்டும் தொல்லியல் சான்று இன்றுவரை அயோத்தியில் கிடைக்கவில்லை. ஆனால் அப்படிப்பட்ட சான்று ஒன்று தமிழ்நாட்டில்தான் இருக்கிறது. அது இராமர் கட்டிய சேதுவில் கிடைக்கிறது.

இராமர் சேது: செப்பேட்டு ஆதாரம்

தனுஷ்கோடியையும், மன்னார் பகுதியையும் இணைக்கும் இராமர் சேது, இராமரால் கட்டப்பட்டது என்ற செய்தியை, இராஜேந்திர சோழனது திருவாலங்காடு செப்பேடுகள் தெரிவிக்கின்றன. தன்னுடைய தகப்பனான இராஜராஜ சோழனைப் பற்றிச் சொல்லும் போது, இவ்வாறு எழுதியுள்ளான்.

“"இராகவர்களின் தலைவன் (அதாவது, இராமன்) சமுத்திரத்தின் குறுக்கே  திறமையான வானரர்களைக் கொண்டு பாலம் கட்டி, கடலைத் தாண்டி, இலங்கை மன்னனைக் (இராவணனைக்) கொன்றான்.” (80-ஆவது வரி)

அதே பகுதியை, அருள்மொழிவர்மன் (இராஜராஜ சோழன்) கப்பற் படையைக் கொண்டு கடந்து சென்று இலங்கை மன்னனை அழித்தான் என்று எழுதியுள்ளான். எனவே இராமர் சேதுப் பகுதி, இராமர் கட்டிய அணைப் பகுதியே என்பதே வழிவழியாக சொல்லப்பட்டு வந்து, செப்பேட்டிலும் இடம் பெற்றிருக்கிறது.

இராமர் சேதுவில் புவியியல் ஆய்வுகள்

வானர சேனைகள் பல கற்களையும், மரங்ககளையும் அடுக்கி, அணையை உருவாக்கினார்கள் என்று வால்மீகி இராமாயணம் கூறுவதால், அங்குள்ள கற்களையும், நில அமைப்புகளையும் புவியியல் சோதனை செய்தால் அதன் காலத்தைக் கண்டுபிடிக்க முடியும். அதன் மூலம், இராமாயண காலத்தையும் கண்டு பிடிக்கலாம் என்று 2007 ஆம் ஆண்டிலேயே ஆய்வுகள் நடந்தன.

அவை காட்டிய முக்கிய விவரம், பாரதமும், ஸ்ரீலங்கையும், நிலத்தால் இணைக்கப்பட்டுள்ளன என்பதே. அதாவது, ஸ்ரீலங்கை, பாரதத்தின் நிலநீட்சியே. ஆனால் இந்த நில இணைப்பு தற்சமயம் நீருக்குள் முழுகி இருக்கிறது. ஒரு காலக்கட்டத்தில் அது கடல் நீருக்கு மேலே இருந்திருக்கிறது. அப்பொழுது, மக்கள் அதன் மீது நடந்து சென்று கடந்திருப்பார்கள். பாலம் கட்ட வேண்டிய அவசியம் அப்பொழுது இல்லை. அப்படிப்பட்ட காலம் இராமாயண காலத்துக்கு முன் இருந்திருக்க வேண்டும். கடல் மட்டம் உயர்ந்து, அது நீரில் முழுகின பிறகுதான் இராமாயணம் நடந்திருக்க வேண்டும். பாலம் அமைத்து அதைக் கடக்க வேண்டிய அவசியம் இராமாயண காலத்தில்தான் ஏற்பட்டிருக்க வேண்டும். எனவே கடல் மட்டம் உயர்ந்த கால விவரத்தைக் கண்டுபிடித்தால் நம்மால் இராமாயண காலத்தைச் சொல்லிவிட முடியும்.

கடல் மட்ட ஆய்வுகள், இன்றைக்கு 18,000 ஆண்டுகள் வரை அளவீடுகளைத் தருகின்றன. கடுமையான பனி யுகம் இருந்த நேரம் அது. அப்பொழுது கடல் மட்டம் இன்றைய அளவைவிட 130 மீட்டர் குறைவாக இருந்தது. அப்பொழுது, நில இணைப்பு இயற்கையாகவே ஒரு பாலம் போலப் பயன்பட்டது. இன்றைக்கு 18,000 ஆண்டுகள் முன்பிலிருந்து, பனியுகம் மறைய ஆரம்பித்து, வெப்பம் பரவ ஆரம்பித்தது. இதனால், பனி உருகி, கடல் மட்டம் கொஞ்சம் கொஞ்சமாக உயரத் தொடங்கியது. இதன் காரணமாக, இன்றைக்கு 7200 ஆண்டுகளுக்கு முன் ஆரம்பித்து, 6800 ஆண்டுகள் வரை, இந்த நில நீட்சி கொஞ்சம் கொஞ்சமாக நீருக்குள் மறைய ஆரம்பித்தது. அந்த சமயத்தில்தான், நீருக்கு அடியில் மறைந்த நிலநீட்சியின் மீது, பாறாங்கற்களைப் போட்டு அதன் உயரத்தை அதிகப்படுத்த வேண்டியிருந்தது.

இந்தக் கணக்கின்படி, இராமாயணம் 7000 வருடங்களுக்கு முன்னரே நடந்திருக்க வேண்டும். இரண்டாம் தமிழ்ச் சங்கத்தின் தலைநகரமான கவாடத்தின் உச்சபட்ச காலமும் அதுவே என்று முந்தின கட்டுரையில் காட்டியிருந்தோம்.

இனி இந்தப் பாறாங்கற்களைக் கொண்டு செய்த ஆய்வுகளைக் காண்போம். National Institute of Ocean Technology என்னும் ஆய்வுக் கழகம், மத்திய அமைச்சரவையின் கீழ் இயங்குகிறது. இந்தக் கழகம் மேற்கொண்ட ஆய்வில், இராமர் சேதுவின் மீது பத்து இடங்களில் துளைகள் போடப்பட்டன. ஆறு மீட்டர் ஆழம் சென்றவுடன்,  கடல் மண் தென்பட்டது. மேலும் துளைத்தபோது, நான்கு முதல் ஐந்து மீட்டர் ஆழம் வரை, கடினமான படுக்கையாக கற்களும், பவழப்பாறைகளும் தென்பட்டன. மேலும் துளையிட்ட போது, அந்தப் பவழப்பாறைப் படுக்கைகள் கடல் மணல் மீது இருப்பது தெரியவந்தது. கடல் மணலை மேலும் துளைத்தால், கடினமான நிலமே தென்பட்டது.

இதில் தெரியவந்தது என்னவென்றால், அடித்தளமான நிலநீட்சியின் மீது, கடல் மணல் பரப்பப்பட்டு, அதன் மீது, 4 -5 மீட்டர் உயரத்துக்கு பவழப்பாறைகள், பலவிதமான கற்கள், மரத்துண்டுகள் ஆகியவை அடுக்கப்பட்டிருக்கின்றன. அவற்றின் மீது கடல் மணல் பரப்பப்பட்டிருக்கிறது. அதற்கு மேலே கற்கள், மண் என இவை அழுத்தமாகப் படிந்திருக்கின்றன.

இதில் ஆச்சரியம் என்னவென்றால், பவழப்பாறைகள் கடல் மணலில் உருவாகாது. பவழப்பாறைகள் இராமேஸ்வரம், தனுஷ்கோடி போன்ற இடங்களில் இயற்கையாகக் கடலோரத்தில் காணப்படுகின்றன. அவை உடைக்கப்பட்ட அமைப்பிலும் இருக்கின்றன. அவற்றை உடைத்து, நில நீட்சியின் மீது கடல் மணலைப் பரப்பி, அதன் மீது யாரேனும் போட்டிருந்தால்தான் பவழப்பாறைகள் அங்கு வரமுடியும். இன்று சேதுவுக்குச் செல்பவர்கள் ‘மிதக்கும் கல்’ என்று கொண்டு வருகிறார்களே அவை இந்த பவழப் பாறைக் கற்களே.

மேலும், இந்த அமைப்புகளை ஆராய்ந்த விஞ்ஞானிகள் மேலேயுள்ள கற்களும், பவழப்பாறைகளும் 7000 ஆண்டுகளுக்கு முந்தையவை என்று கண்டுபிடித்தார்கள். ஆனால் அவற்றுக்குக் கீழே உள்ள கடல் மண் படுக்கை, 4000 வருடங்களுக்கு முந்தையது என்கிறார்கள். இரண்டு முறை கடல் வெள்ளம் ஏற்பட்டிருக்கிறது என்றும் கண்டு பிடித்திருக்கிறார்கள் – 7000 வருடங்களுக்கு முன்பும், 4000 வருடங்களுக்கு முன்பும்.

வெள்ளத்திலிருந்து பாலத்தை உயர்த்த பழைய கற்கள் அடியிலும், புதிய கற்களும், மணலும் மேலாகவும் இருக்க வேண்டும். ஆனால் இங்கு மாறி இருக்கிறது. இதைச் சொல்லும் வெளி நாட்டு விஞ்ஞானிகளுக்கு இது வியப்பாக இருக்கிறது. ஆனால் நமக்கு வியப்பே இல்லை. 7000 ஆண்டுகளுக்கு முன், முதல் முறையாகப் பாலம் போடப்பட்டிருக்கிறது. இராமன் கடற்கரைக்கு வந்த போது ஓரிரு அடி ஆழத்தில் நில நீட்சி இருந்திருக்கிறது. அதற்கு முன் வரை ஆங்காங்கே நில நீட்சி வெளியே தெரிந்திருக்கும். சூர்ப்பனகை, மாரீசன் போன்றவர்கள் நடந்தே வந்திருப்பார்கள்.

ஆனால், இராமனது வன வாசம் முடிக்கும் போது, கடல் பொங்கியிருக்கிறது. நில நீட்சி நீரில் அமிழ்ந்து இருக்கிறது. அதை உயர்த்த கடல் மணலைப் போட்டு ஒரு தளம் அமைத்து அதன் மேல் பவழப்பாறைகளையும், மரம், கல் போன்றவற்றையும் நான்கிலிருந்து ஐந்து மீட்டர் உயரத்துக்கு அடுக்கி இருக்கிறார்கள். இந்தப் பாலம் இன்றைக்கு 4000 ஆண்டுகளுக்கு முன் வரை நீருக்கு மேலேயே இருந்திருக்கிறது. ஆய்வின்படி, 4000 ஆண்டுகளுக்கு முன் கடல் மட்டம் மீண்டும் உயர்ந்திருக்கிறது தெரிய வருகிறது. அப்பொழுது இராமர் கட்டின சேது முழுகி விட்டது. அந்த சமயத்தில் வாழ்ந்த மக்கள், அதன் புனிதத்துவத்தைக் கருதி, அப்படியே அந்தக் கற்களை எடுத்து, புதிதாக மணல் பரப்பி, அதன் மீது பழைய கற்களை அடுக்கி, பாலத்தைக் கட்டியிருக்கின்றனர். இதனால், 4000 ஆண்டுகளுக்கு முந்தைய மணல் அடியிலும், அதன் மீது, 7000 ஆண்டுகளுக்கு முந்தைய கற்களும்  அமர்ந்திருக்கின்றன.

கடல் நீருக்கு அடியில் அடுக்கப்பட்டுள்ள ராமர் சேது பாறைகள்

இந்த மாறுபட்ட கால அமைப்பைக் கொண்ட மணல் மற்றும் கற்கள் இராமர் சேதுவின் காலத்தை நிரூபிக்கும் காரணிகளாக இருக்கின்றன. 7000 ஆண்டுகளுக்கு முன் இராமர் சேது கட்டப்பட்டிருக்கிறது என்பதற்கு இராமர் சேதுவே தொல்லியல் ஆதாரமாக இருக்கிறது. நான்கு மைல் அகலத்துக்குக் காணப்படும் சேதுப் பாலம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வரை சோலைகளும், மரங்ககளும் கொண்டதாக இருந்திருக்கிறது. 10- ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அல்பெரூனி என்னும் முகலாய சரித்திர ஆய்வாளர் சேதுப் பாலம் ஆங்காங்கே கடலால் அரிக்கப்பட்டிருந்தது என்றும், அங்கு வானரங்கள் பல இருந்தன என்றும் எழுதியுள்ளார். அந்த வானரங்களுக்கு மக்கள் உணவு படைப்பார்கள் என்றும், ராம ஜபம் செய்தால் அவை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருக்கும் என்றும் கூறியுள்ளார். வழி தெரியாமல் தடுமாறுபவர்களை அவை வழி காட்டிச் செல்லுமாம்.

கடல் அரிப்புகள் ஏற்பட்டாலும், அவ்வப்பொழுது அவற்றைப் பழுது பார்த்திருக்கிறார்கள். 1480 வரை மக்கள் இராமர் சேதுவை, ஒரு தரை வழிப் பாலமாகப் பயன்படுத்தி இருக்கின்றனர். அதற்குப் பிறகு புயல்களால் சேதம் ஏற்பட்டு, அன்னியர் ஆட்சியும் வந்த பிறகு, அதன் முக்கியத்துவமும், பயன்பாடும் மறக்கப்பட்டு விட்டது. இராமாயண காலத்துக்கு முக்கியத் தொல்லியல் சான்றாக இருக்கும் அதனைக் காத்து, பழையபடி இராமர் அமைத்த கற்களால் அமைக்க வேண்டியது நமது கடமை.

இந்தப் பாலம் காட்டும் 7000 வருடத் தொன்மை, இராமர் பிறந்த த்ரேதா வருடத்துக்கு எவ்வாறு பொருந்தும் என்பதை இனி காண்போம்.

 

 

1 கருத்து: