Published in Geethacharyan monthly Magazine.
இராவணன் ஆண்ட
இலங்காபுரியை, தென்னிலங்கையின் மலைப் பகுதியில் அடையாளம் கண்டோம். இராவணனுக்குப் பக்க
பலமாக இருந்தவர்கள் இலங்கையின் பூர்வ குடிகளான யக்ஷர்கள் (பலாங்கொடை மனிதன்) என்றும்
காட்டினோம். இராமாயணம் என்னும் சரித்திரம் சில ஆயிரம் வருடங்களுக்கு முன் நிகழ்ந்ததாக
இருந்தால்தான் இப்படிப்பட்ட அடையாளங்கள் ஏற்கக் கூடியதாக இருக்கும். ஆனால் இராமாயணம்
பல லக்ஷம் வருடங்களுக்கு முன்னால், த்ரேதா யுகத்தில் நிகழ்ந்தது என்று சொல்லப்படுகிறதே,
அப்படிப்பட்ட தொன்மையான காலத்தில் நிகழ்ந்த விவரங்களை உண்மை என்று எப்படிச் சொல்ல முடியும்?
இந்தக் கேள்வியை வெளிநாட்டவர்கள் மட்டுமல்ல, நம் நாட்டவர்களும் அடிக்கடி கேட்கிறார்கள்.
கேட்பவர்கள்
கேட்கட்டும் என்று நாம் அலட்சியப்படுத்திவிடக் கூடாது. நம் தெய்வங்களும், தெய்வ சரிதைகளும்
ஆய்வுக்கு உட்படுத்தப்படும் இந்தக் காலக் கட்டத்தில், நாம் அத்தகைய கேள்விகளையும் எதிர்
கொண்டு இதிஹாசத்தின் உண்மைத்தன்மையை நிலைநாட்ட வேண்டும். எந்த ஆய்விலும், கல்வெட்டுகளும்,
தொல்லியல் ஆய்வுகளும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அதனால், முதலில் இந்த வழிகளில்,
இராமன் அல்லது இராவணனைப் பற்றி ஏதேனும் விவரங்கள்
இருக்கின்றனவா என்று பார்த்து விட்டு த்ரேதா யுகக் கணக்கை ஆராய்வோம்.
பாண்டியர்களுடன்
சமரசம் செய்துகொண்ட இராவணன்.
இலங்காபுரி அமைந்துள்ள
ஸ்ரீலங்கை, தென்னிந்தியாவை ஒட்டியுள்ள பகுதியாக இருக்கவே, முற்கால சேர, சோழ, பாண்டியர்களில்
எவரேனும் இராவணன் காலத்தில் இருந்திருக்கலாம் என்ற சாத்தியக் கூறு இருக்கிறது. அதை
மெய்ப்பிக்கும் வகையில், பாண்டியர்களது செப்பேட்டில் இராவணனைப் பற்றிய குறிப்பு ஒன்று
வருகிறது. மதுரையில் உள்ள பெரியகுளம் பகுதியில் சின்னமனூர் என்னும் இடத்தில் உள்ள விஷ்ணு
கோயில் திருப்பணியின் போது பாண்டியர்களது செப்பேடுகள்
கிடைத்தன. அவற்றில் பாண்டிய வம்சத்தின் பெருமை எழுதப்பட்டுள்ளது.
செப்பேட்டின்
சம்ஸ்க்ருதப் பகுதியில் முற்காலப் பாண்டிய மன்னர்கள் செய்த செயல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
ஆனால் அவர்கள் ஒவ்வொருவரது பெயரும் இடம் பெறவில்லை. முற்காலப் பாண்டியர்கள் செய்த சாஹசங்களைப்
பற்றிச் சொல்லிக் கொண்டு வரும் போது, ஒரு பாண்டிய அரசன் இருந்தான், அவன் பத்துத் தலை
கொண்டவனை அடக்கி, அவனுடன் சமரம் செய்து, அமைதியை நிலை நாட்டினான் என்று எழுதப்பட்டுள்ளது.
செப்பேட்டின் ஐந்தாவது வரியில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது.
“தசானனன் சந்திப
ரக்ஷகார நரேஷ்ஸ்வர: கக்ஷிதர கண்டிதாக்ஞா: “
(பக்: 451, South
Indian Inscriptions, Vol IV, copper plates from Sinnamanur, Tirukkalur and
Thiruchengodu, 1929)
பத்து முகங்களைக்
கொண்ட தசானனன் என்று சொல்லப்படுபவன் இலங்கையை ஆண்ட இராவணன் ஒருவனே.. உண்மையில் அவனுக்குப்
பத்து முகங்கள் அல்லது தலைகள் இருந்திருக்காது. அது ஒரு சிறப்பு அடையாளமாக இருந்திருக்கக்
கூடும். பத்துத் தலைகள் கொடுக்கக்கூடிய அறிவினை ஒருங்கே உடையவனாக இருந்திருக்கலாம்.
அல்லது தர்மம் தலை காக்கும் என்பார்களே, அவன் செய்த புண்ணிய காரியங்களும், தருமமும்,
பத்து மடங்கு அதிகமாக இருந்திருக்கும். பத்து முறை அவன் தலையைக் காக்கும் வண்ணம், அதாவது
மரணத்திலிருந்து பத்து முறை அவனைக் காப்பாற்றக்கூடிய அளவுக்கு அவன் புண்ணியம் செய்திருப்பான்.
அப்படிப்பட்ட ராவணனை ஒரு பாண்டிய மன்னன் அடக்கி, நாட்டில் அமைதியை நிலை நாட்டினான்
என்று சின்னமனூர் செப்பேடுகள் தெரிவிக்கின்றன.
அந்தப் பாண்டிய
மன்னனது பெயர் குறிப்பிடப்படவில்லை. சங்கப் பாடல்களிலோ அல்லது பிற்காலப் பாடல்களிலோ,
அப்படி ஒரு பாண்டியன் ராவணை வெற்றி கொண்டான் என்றும் சொல்லப்படவில்லை. ஆனால் அந்தச்
செய்தி வட மொழி இலக்கியத்தில் காணப்படுகிறது!
ரகுவம்சத்தில்
பாண்டியனும், இராவணனும்.
விக்ரமாதித்தன்
என்னும் மன்னனது சபையில் இருந்த காளிதாசர் என்பவர் இரகு வம்சம் என்னும்
பாடல் தொகுப்பை எழுதி உள்ளார். அதில் இராமனது
மூதாதையரான இரகு என்னும் மன்னனின் வரலாற்றைப் பற்றியும், அந்த மன்னனுக்குப்
பிறகு வந்த அரசர்களைப் பற்றியும், இராமன் மற்றும் அவனுக்குப் பின் வந்த சந்ததியரைப்
பற்றியும் எழுதியுள்ளார். இரகுவின் வம்சத்தில் வந்ததால் இராமனுக்கு இராகவன் என்று ஒரு
பெயரும் உண்டு. அந்த இராமனின் தாத்தா பெயர் அஜன். பாட்டியின் பெயர் இந்துமதி. அவர்கள்
திருமணம் பற்றிச் சொல்லுமிடத்தில் ஒரு பாண்டிய மன்னனைப் பற்றிய விவரம் வருகிறது. (ரகு வம்சம், 6 -ஆவது அத்தியாயம்)
இளவரசி இந்துமதியை,
சுயம்வரத்தின் மூலம் அஜன் மணம் புரிகிறான். அந்த சுயம்வரத்தில் போட்டியிட வந்த பல மன்னர்களுள் பாண்டிய மன்னனும் ஒருவன். அவன் எப்படிபட்டவன் என்று இந்துமதியின்
தோழி சுநந்தா விவரிக்கிறாள்.
"மலையிலிருந்து
கொட்டும் அருவிகளைப் போல, சிவந்த சந்தனம் பூசப்பட்ட மலை போன்ற மார்பில் தொங்கும் முத்துச்
சரங்கள் பல உடையவன் இந்தப் பாண்டிய மன்னன். அகத்திய முனிவர் வழி நடத்த, அஸ்வமேத யாகங்கள்
பல செய்ததால் அபிஷேக நீர் அவன் உடலில் இன்னும் ஒட்டிக் கொண்டிருக்கிறது.
இந்தப் பாண்டிய
அரசனது வலிமை எப்படிப்பட்டதென்றால், இலங்கையை ஆண்ட இராவணன் பாண்டியர்களிடம் சமரசம்
செய்து கொண்டவன். அப்படி அவன் சமரசம் கொள்ளவில்லை என்றால் பாண்டியர்கள் சிவ பெருமானிடமிருந்து
பெற்ற 'பிரம்ம சிரோ அஸ்திரத்தினால்' இராவணனுக்கு என்றோ அழிவு நேர்ந்திருக்கும்.
தக்ஷிண திசை
என்று சொல்லப்படும் தென் திசையிலிருந்து வரும் இந்தப் பாண்டிய மன்னனை மணந்து
கொண்டால் உனக்கு ஒரே ஒரு சக்களத்திதான் இருப்பாள். அவள் தென் திசையில் உள்ள பாண்டிய நாடு என்னும் நாடுதான்."
என்று சுநந்தா விவரிக்கிறாள்.
இதில் சில விஷயங்கள்
தெரிய வருகின்றன.
இராமனது தாத்தா
காலத்துக்கு முன்பே, தென் தமிழ் நாட்டில் பாண்டிய வம்சம் சிறப்பாக இருந்து வந்திருக்கிறது.
இராமனை ஏக பத்தினி விரதன் என்பார்கள். ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்ந்தவன் இராமன்.
அவனைப் போலவே பாண்டிய மன்னும் ஏக பத்தினி விரதம் கொண்டவனாக வாழக் கூடியவன். அவனுக்கு
ஒரு காதலி இருக்கக்கூடும் என்றால் அது அவன் ஆளும் நாடே ஆகும்.
பூகோள ரீதியாக
பாண்டிய நாடும், இலங்கையும் அருகருகே உள்ளன. அதனால் அவர்களுக்குள் சண்டை வந்திருக்க
வாய்ப்பு இருந்திருக்கின்றது. செப்பேடுகளிலும், இராவணன் தொந்திரவு கொடுத்தான் என்று
சொல்லும் வண்ணம் எழுதப்பட்டிருக்கிறது. பிரம்ம சிரோ அஸ்திரம் என்னும், தலை கொய்யும்
அஸ்திரம் பாண்டியர்களிடம் இருக்கவே, இராவணனால் அவர்களிடம் வாலாட்ட முடியவில்லை. எனவே
சமரசம் செய்து கொண்டிருக்கிறான். இதையே செப்பேடுகளில், அமைதியை நிலை நாட்ட பத்துத்
தலைக் கொண்டவனை அடக்கினான் ஒரு பாண்டியன் என்று சொல்லப்பட்டுள்ளது.
இங்கே ஒரு கேள்வி
எழுகிறது. இராவணன் வாழ்ந்தது இராமனது காலக்கட்டத்தில். இந்த சுயம்வரம் நடந்ததோ இராமனது
தாத்தா காலத்தில். அப்பொழுதே இராவணன் எப்படி இருந்திருக்க முடியும்?
இராமனது தாத்தா
மணம் முடிந்து, அவனுக்கு தசரதன் பிறந்து, அவனுக்கும் வயதான பிறகுதான் இராமன் பிறந்ததாக
இராமாயணம் கூறுகிறது. எனவே, அஜன் காலத்திலோ அல்லது அதற்கு முற்பட்டோ இராவணன் இருந்திருக்க
முடியாது. அதனால் இராவணனைப் பற்றிய விவரம் பொய் என்று சொல்ல முடியாது. இராவணன் பற்றிய விவரம், சின்னமனூர் செப்ப்டுகளிலும் எழுதப் பட்டுள்ளது.
அதனால் இந்த விவரம் உண்மையாகத்தான் இருந்திருக்க வேண்டும். மக்கள் மத்தியில் பரவலாகப்
பேசப்பட்டு இருந்திருக்க வேண்டும். அதன் அடிப்படையில், காளிதாசர் அவர்கள் இரகு வம்சம்
எழுதிய போது, பாண்டியர்கள் குலப் பெருமையை எழுதும் போது, கால வித்தியாசம் பாராமல்,
இராவணனை அடக்கிய கதையைக் குறிப்பிட்டுள்ளார் என்று தெரிகிறது. காளிதாசர் காலம் வரையிலும்,
அதாவது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்வரை, இந்த விவரம் மக்களுக்கிடையே பேசப்பட்டிருக்க
வேண்டும்.
இங்கும் ஒரு
கேள்வி எழலாம். கடவுளே அவதாரம் எடுத்து இராவணனை வெல்ல வேண்டியதாயிற்று. அப்படி இருக்க
பாண்டியர்களிடம் அந்த இராவணன் அடங்கி இருந்த செய்தியை ஏன் எந்தப் புலவரும் பாடவில்லை.
சிபியைப் பற்றியும், தூங்கெயில் எறிந்தவனைப் பற்றியும் பாடிய புலவர்கள், இராவணனை ஒரு
பாண்டியன் அடக்கிய தீரச் செயலை ஏன் பாடாமல் விட்டார்கள்?
இதற்கு ஒரு காரணம்
சொல்லலாம். பாண்டிய மன்னர்களும் சிவ பக்தர்கள். இராவணனும் சிவ பக்தன். ஆனால் அவன் அசுரப்
பண்புகளைப் பெற்றிருந்ததால், அருகில் உள்ள மன்னர்களைச் சீண்டியிருப்பான். பாண்டியர்களையும்
சீண்டியிருப்பான். சிவ பக்தியால் பாண்டியர்கள் பெற்ற அஸ்திரத்தைப் ஒரு சக- சிவ பக்தன்
மீது பிரயோகிக்க பாண்டியர்கள் யோசித்திருக்கலாம். ஆனாலும், நாட்டு நன்மைக்காக அவனை
ஒரு தட்டு தட்டி அடக்கி இருக்கலாம். இராவணன் ஒரு சிவ பக்தனாக இருக்கவே, அவனை வென்றதை
அவர்கள் பெருமையாகப் பேசிக் கொள்ள விரும்பியிருக்க மாட்டார்கள்.
இதற்கு ஆதாரமாக,
பெரிய புராணம் கூறும் மெய்ப் பொருள்நாயனார் சரித்திரத்தில் சிவ வேடம் தாங்கிய போலி
சிவனடியார் ஒருவர் நாயனாரைக் கொன்ற போதிலும், அவர் உடுத்திய சிவ வேடத்துக்கு மதிப்பு
கொடுத்து, அவருக்கு எந்தத் தீங்கும் ஏற்படாமல் காப்பாற்றிய உண்மைக் கதை இருக்கிறது.
இது பாண்டியர்களுக்கும் பொருந்தும். இராவணன் சிவ பக்தனாக இருக்கவே, அவனை வென்றதை அவர்கள்
பெருமையாகக் கூறிக்கொள்ளவில்லை எனலாம். அதனாலேயே, இராவணனை எதிர்க்க இராமனுக்கு உதவவும்
பாண்டியர்கள் முன் வரவில்லை போலிருக்கிறது.
ஆனால், இராவணனை
பாண்டியர்கள் அடக்கிய செய்தி செப்பேடுகளிலும், இரகுவம்சத்திலும் காணப்படவே, இராவணன்
என்ற ஒருவன் வாழ்ந்தது உண்மை என்று தெரிகிறது. அவன் வாழ்ந்தபோது, பாண்டியர்களும் தமிழ்
மண்ணை ஆண்டிருக்கின்றனர் என்று தெரிகிறது. அவர்கள் இருப்பிடம் தக்ஷிண பகுதியில் என்று
அழுத்தம் திருத்தமாகக் காளிதாசர் கூறி இருக்கிறார்.
இராமாயணத்தில்
பாண்டியர் தலைநகரம்
அடுத்த முக்கியச்
சான்றாக, பாண்டியர்கள் தலைநகரம், இராமாயணத்திலேயே உள்ளுறைச் சான்றாகக் காணப்படுகிறது.
சீதையைத் தேடி வானரர்கள் நான்கு திசைகளுக்கும் சென்ற போது, சுக்ரீவன், நான்கு திசைகளிலும்
தென்படக்கூடிய நாடுகளையும், பூகோள அமைப்பையும் விவரிக்கிறான். தென் திசையை விவரிக்கும்
போது, அகஸ்தியர் அப்பொழுது தங்கியிருந்த, காவிரி உற்பத்தி ஸ்தானத்தைச் சொல்லி, அதைக்
கடந்து சென்றால், தாமிரபரணி ஆறு வரும் என்று சொல்லி, அதன் பின், பாண்டியர்கள் நாடான
‘கவாடம்’ வரும் என்கிறான்.
“பாண்டியானாம்
கவாடம் ததா த்ரக்ஷயதா வானரா:” (வா.இரா: 4 -41- 19)
வானரர்களே, அங்கு
பாண்டியர்களது கவாடத்தைக் காண்பீர்கள், என்றான் சுக்கீவன்.
அதி முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஸ்லோகத்தை, இதுவரை
சம்ஸ்க்ருத பண்டிதர்கள் பாண்டியர்களது வாயில் என்றே பொருள் கொண்டனர். ஏனென்றால், கவாடம்
என்றால் நுழை வாயில் என்று சம்ஸ்க்ருதத்தில் அர்த்தம். ஆனால், கவாடம் என்பது, பாண்டியர்களது,
இரண்டாம் சங்க காலத்தின் தலைநகரின் பெயரும் ஆகும் என்பதை, இறையனார் களவியல் உரை மூலம்
அறிகிறோம்.
இதன் மூலம்.
இராமாயணம் நடந்த காலத்தின் உச்ச வரம்பு, இரண்டாம்
சங்க காலம் ஆரம்பித்த நேரம் எனலாம். இராமாயண காலத்தில் பாண்டியர்களே சக்தி வாய்ந்த
அரசர்களாக இருந்து வந்தார்கள் என்பதற்கு, இரகு வம்சம் மட்டுமல்லாமல், இராமாயணமும் ஒரு
சான்றாக இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. இறையனார் களவியல் உரையில் புலவர் நக்கீரர்,
சங்க காலங்களுக்குக் கால வரம்புகளைத் தருகிறார். அதன் படி, கவாடத்தைத் தலை நகரமாகக்
கொண்ட இரண்டாம் சங்க காலம், பொ.முன். 5550 (BCE) இல் ஆரம்பிக்கிறது. இது இன்றைக்கு
7000 வருடங்களுக்கு முன் என்று சொல்லலாம். இந்த இராமாயணச் சான்றால். இராமாயணம் நடந்த
காலம் 7000 ஆண்டுகளுக்குள்தான் இருந்திருக்க வேண்டும். அதற்கு அப்பால் இருக்க சாத்தியமில்லை
என்று புலனாகிறது.
இதில் ஆச்சரியப்படத்தக்க
தகவல் என்னவென்றால், பகவானின் இரு கண்களில் ஒன்றான தமிழ் இல்லாமல், சம்ஸ்க்ருத மொழியில்
இருக்கும் இராம சரிதத்தின் காலத்தைக் கணக்கிட இயலாது என்னும் அற்புத விவரம்தான். அதுமட்டுமல்ல,
பாரதத்தாயின் திருவடி போல விளங்கும் தமிழ் மண்ணிலிருந்துதான் இராமாயணத்துக்கான தொல்லியல்
சான்றும் நமக்குக் கிடைக்கிறது. அதைப் பற்றி அடுத்த கட்டுரையில் காண்போம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
பதிலளிநீக்கு