வியாழன், 10 மார்ச், 2011

43. ஊழிகளும், சங்கமும் கண்ட குமரிக் கண்டம் – பகுதி-1



இந்தியாவுக்குத் தெற்கே இன்று பரந்து விரிந்திருக்கும் இந்தியப் பெருங்கடல் பகுதியில், ஒரு சமயம் மக்கள் வாழ்ந்தனர் என்று தமிழ் நூல்கள் சொல்கின்றன.
அதை வால்மீகி ராமாயணமும் உறுதிப்படுத்துகிறது.
ராமாயணம் நடந்த காலக்கட்டத்தில் கடல் மட்டத்துக்கு மேலே தெரிந்த இடங்களை நாம் சென்ற இரு பகுதிகளில் கண்டோம்.
அந்தப் பகுதிகளைப் பாண்டிய வம்சத்தினர் ஆண்டனர் என்றும்,
அந்த வம்சத்தில் உமையவளே மீனாட்சியாகப் பிறந்ததையும்,
அவளது மகனான உக்கிர குமார பாண்டியன் காலத்தில் நடந்த
முதல் ஊழியைப் பற்றியும்
திருவிளையாடல் புராணம் விரிவாகக் கூறுவதையும் கண்டோம்.


அந்த முதல் ஊழியின் போது கடல் பொங்கி மதுரையை அழிக்கும் வண்ணம் வந்தது.
அப்பொழுது தன் தந்தையான சோம சுந்தரரிடம் இருந்து பெற்ற வேலின் உதவியால் உக்கிரகுமாரன் கடல் பொங்கினதை நிறுத்தினான்.
அந்த சம்பவத்தின் காரணமாக அவனுக்குக்
கடல் வடிம்பலம்ப நின்ற பாண்டியன் என்ற பெயர் வந்தது.


இங்கு ஒரு கேள்வி வரலாம்.
ஒருவனால் பொங்கும் கடலை, வேலால் அடக்க முடியுமா?
முடியாது.
எனவே இது வெறும் கதைதான் என்று எண்ணலாம்.
இதற்கு இரண்டு விடைகள் இருக்கின்றன.


ஒன்று, அதே காலக்கட்டத்தில் கடல் பொங்கியது என்பதற்கு ஒரு ஆதாரம் இருக்கிறது.
அது என்ன காலக்கட்டம் என்பதை நிர்ணயம் செய்து,
அந்த ஆதாரத்தைப் பார்ப்போம்.
அந்த விளக்கங்கள் இந்தக் கட்டுரையின் கடைசியில் வருகின்றன. 


இரண்டாவது, ராமாயணத்தில் வரும் ஒரு சம்பவம்.
ராமன் கடலைக் கடக்க சமுத்திரராஜனை வேண்டுகிறான்.
அவன் வராமல் போகவே கோபம் கொண்டு, பிரம்மாஸ்திரத்தை விடுத்து கடலை வற்றச் செய்ய முடிவு செய்கிறான்.
அதாவது அந்த நாளில் அவர்கள் பயன்படுத்திய அஸ்திரத்தால்
கடல் நீரை அகற்றி,
கடல் மட்டத்தைக் குறைக்க முடிந்தது.
இயற்கையில் இது எப்படி நடக்கும்?

இன்றைக்கு அறிவியல் பூர்வமாக கடல் அலைக்ள் பொங்குவதையும்,
கடல் நீர் மட்டத்தில் வரக்கூடிய வேறுபாடுகளையும் நாம் அறிந்திருக்கிறோம்.
சமீபத்திய சுனாமியின் போது திருச்செந்தூரில் கடல் உள்வாங்கியதைப் பற்றி போன பகுதியில் கண்டோம்.



ஒரு இடத்தில் கடல் உள்வாங்கியோ,
அல்லது நீர் மட்டம் குறைந்தோ அமைய வேண்டும் என்றால்,
வேறு ஏதோ ஒரு இடத்தில் கடல் பொங்க வேண்டும்.


ராமாயணத்தில், பிரம்மாஸ்திரத்தைக் கடலின் வட பகுதியில் உள்ள ஓரிடத்தில் ராமன் செலுத்துகிறான்.
அதனால் அங்கு பள்ளம் ஏற்பட்டு, அதில் நீர் பெருக ஆரம்பித்தது என்று ராமாயணம் கூறுகிறது.
அதன் எதிரொலியாக மற்றொரு இடத்தில் கடல் மட்டம் குறைய வேண்டும். வானரங்கள் எளிதில் கடக்க அதிக நீரில்லாமல் தான் பார்த்துக் கொள்வதாக சமுத்திரராஜன் சொன்னதால்,
ராமன் நின்றுக் கொண்டிருந்த அந்தப் பகுதியில்,
அதுவரை தளும்பிக் கொண்டிருந்த கடல் மட்டம் குறைந்தது என்று தெரிகிறது.



இதைப் போன்ற சாத்தியக் கூறு,
பாண்டியன் எதிர்கொண்ட முதல் ஊழியில் நடந்திருக்க வேண்டும்.
ராமனுக்குப் பிரம்மாஸ்திரம் என்றால்,
உக்கிர பாண்டியனுக்கு வடி வேல்.
அதை எறிந்து கடலை வற்றச் செய்தான் என்று திருவிளையாடல் புராணம் உள்ளிட்ட பல தமிழ் நூல்களில் சொல்லப்பட்டுள்ளது.
அவன் எறிந்த வேலானது கடலுக்கு அடியில் தரையில் ஒரு பிளவை ஏற்படுத்தி இருக்கலாம்.
அல்லது கடலுக்குள் வேறு எங்கோ ஒரு இடத்தில் பூகம்பத்தை ஏற்படுத்தி இருக்கலாம்.
அதன் எதிரொலியாக, பொங்கிக் கொண்டிருந்த கடல்,
பாண்டியன் நகரத்தின் அருகே உள்வாங்கி இருக்கிறது.


உக்கிர பாண்டியனது இந்தச் செய்கையை
வடிவேல் எறிந்த வான் பகை என்று
சாதாரண மக்களும் நினைவு கூறும் ஒரு சம்பவமாகச் சிலப்பதிகாரம் காட்டுகிறது.
அந்தச் சம்பவம் நடந்த போது பெரும் மழையும் இருந்தது.
மழையும், கடலுக்குள் பூகம்பமும் அப்பொழுது இருந்திருக்க வேண்டும்.


இந்த முதல் ஊழி நடந்ததற்குப் பிறகுதான் முதல் சங்கம் ஆரம்பித்தது.
(முதல் ஊழிக்குப் பிறகும் ஒரு முறை
வருணனால் கடல் ஆபத்து வந்த போது,
மதுரை என்னும் மூதூர்
நான் மாடக் கூடல் என்ற பெயர் பெற்ற காரணத்தை நாம் சென்ற பதிவில் கண்டோம்.)


சோமசுந்தரனார் மதுரையை ஆண்ட போதே அவர் தலைமையில்
இந்த நான்மாடக் கூடல் எனப்பட்ட தென்மதுரையில்
சங்கம் கூட்டப்பட்டது.
சோம சுந்தரரை, இறையனார் என்று அழைத்தனர்.
சங்கம் என்றால் கூடுதல் என்று நாம் நினைக்கிறோம்.
ஆனால் திருவிளையாடல் புராணம் தரும் செய்திகளை ஆராய்ந்தால்,
அதற்கு வேறு ஒரு அர்த்தம் கிடைக்கிறது.


இறைவனே மனிதர்கள் மத்தியில் வாழ வந்ததால்,
மகக்ளது பாட்டு, பேச்சு, எண்ணம் எல்லாம் அவரைப் பற்றியே இருந்தது.
தன்னைப் பற்றிப் பாடுபவர்களுக்குத்
தன் ‘சங்கத் தோட்டினையே பரிசிலாகக் கொடுத்தார் இறையனார்.
சங்கத் தோடு என்றால்
சங்கு என்னும் காதணி கொண்ட செவி
அல்லது
சங்கினால் செய்யப்பட்ட காதணியை அணிந்த செவி
என்று பொருள்.
அதாவது புலவர்கள் பாடும் பாடலைச் செவி மடுத்தார் என்று அர்த்தம்.
அதைத்தான் சங்கத் தோட்டினைக் கொடுத்தார் என்று திருவிளையாடல் புராணம் சொல்கிறது.
சங்குத் தோடு அணிந்த காதால் இறையனார் பாடலைக் கேட்டார்
என்பதே புலவர்க்ளுக்குப் பரிசாக இருந்தது.
இப்படியே சங்கம் என்னும் பெயர் வந்திருக்கிறது.





ஒரு முறை பாணபத்திரன் என்பவன் நடு நிசியில் மழையில் வந்து
சேற்றில் நின்று கொண்டு பாடினான்.
எப்பொழுதும் சங்கத்தோட்டைக் கொடுக்கும் இறையனார்,
அவன் சேற்றில் நின்று கொண்டு பாடவே,
ஒரு பலகையைத் தந்து அதில் அமர்ந்து பாடச் சொன்னார்.
‘பரிசிலாக் கொடுத்த செவியிலூட்டும் தொண்டு கண்டு பலகை இட்டார் என்கிறது திருவிளையாடல் புராணம்.
பொதுவாகச் சங்கத்தோட்டுடைய செவியைப் பரிசாகக் கொடுப்பார்.
அந்தச் செவிக்குத் தொண்டு செய்யவே பாணபத்திரனுக்கு
நவமணிப் பலகை ஒன்றைப் பரிசாகத் தந்தார்.


இந்த சம்பவம் நடந்த காலக் கட்டத்தில்
இறையனார் கோவில் கொண்டு விட்டார்.
அப்பொழுது பாண்டிய நாட்டை வரகுண பாண்டியன் என்பவன்
ஆண்டு வந்தான்.
அவன் நடந்ததைக் கேள்விப்பட்டு,
அந்தப் பாணனைச் சிறப்பித்தான்.
இவ்வாறு
சங்கப் பலகை என்பது,
பாடும் புலவர்களுக்குப் பரிசிலாகப்
பொருளும், நிலமும் மற்ற பிறவும் தருவது என்று வழக்கத்தில் வந்திருக்கும். அதுவரை இறையனார் கேட்டார் என்பதே பரிசாக இருந்தது.
இந்தச் சம்பவம் பலகை இட்ட படலம்என்று கூடல் காண்டத்தில் வருகிரது.


கடல் கோளிலிருந்து பாதுகாப்பதற்காகக் கட்டப்பட்ட மதில்களால் சூழப்பட்டத் தென்மதுரையில்
இவ்வாறு தலைச் சங்கம் என்னும் முதல் சங்கம்
4,440 வருடங்கள் நடந்திருக்கிறது.
இது ஆரம்பமான போது மீனாட்சி சோமசுந்தரேஸ்வரர் இருந்திருக்கின்றனர். சோமசுந்தரரே இறையனார் என்று அதை ஆரம்பித்திருக்கிறார்.
அவர் கோவில் கொண்ட பின்னும் அவரை முன்னிட்டு,
புலவர்கள் பாடல்களை அரங்கேற்றி இருந்திருக்கிறார்கள்.


4,440 வருடங்களில், மொத்தம் 4449 புலவர்கள் பாடல் இயற்றியிருக்கின்றனர். அப்பொழுது பகுதி 40 இல் விவரிக்கப்பட்ட
பஹ்ருளி ஆறு முதல், குமரி ஆறு வரை
700 காத தூரம் (7,640 கி மீ) ஆங்காங்கே 7 7 = 49 நிலங்களில்
மக்கள் பரவி இருந்தனர்.


இந்த சங்கம் துவங்கி 4,440 வருடங்கள் கழித்து 2-ஆம் ஊழி வந்தது.
அதில் இந்த 700 காதம் வரையிலும் பரவிய நிலங்கள் பெரிதும் அழிந்து பட்டன.
திருவிளையாடல் புராணத்தின்படி கீர்த்தி பூஷண பாண்டியன் என்பவன் ஆண்டு கொண்டிருந்தபோது கடல் பொங்கி நிலங்கள் அழிந்துவிட்டன.
மீனாட்சி அம்மன் ஆலயத்தின் விமானமும், ரிஷப மலையும் மிஞ்சி நின்றன.
ராமாயண வர்ணனையிலும் ரிஷப மலை சொல்லப்படவே,
இந்த ஊழி ராமாயண காலத்துக்கு முன்பே நடந்திருக்கிறது.
தற்போதைய தமிழ் நாட்டுக்கு அருகாமை வரை இந்த ஊழியின் வீச்சு இருந்திருக்கிறது.
இது ஒரு சுனாமியாக இருந்திருக்க வாய்ப்பில்லை.
மாபெரும் இடஙகளும்,
இந்தியாவின் கிழக்கில் அந்தமான் போன்ற தீவுகள் அமைந்துள்ள 90 டிகிரி மலையின் பெரும் பகுதியும் அழிந்திருக்கிறது என்றால்,
இந்த ஊழிக்குக் காரணம் வேறாக இருக்க வேண்டும்.
அவற்றைப் பற்றிப் பிறகு ஆராய்வோம்.


இந்த 2-ஆம் ஊழிக்குப் பின்
இந்தியாவின் மேற்குக் கடல் பகுதியில் உள்ள குமரி மலையின் பகுதிகளும், முன்பே நாம் ஆராய்ந்த மலய பர்வதமும்
அதைச் சார்ந்த இடங்களும் மிஞ்சி இருந்தன.
இந்தப் பகுதியில் பஹ்றுளி ஆறு இருந்தது.
அதன் கரையில் இருந்த கபாடபுரம் என்னும் நகரம்
பாண்டியனது தலை நகரமானது.




கபாடம் அல்லது கவாடம் என்றால் கதவு என்று பொருள்.
கடல் கோளால் தத்தளித்த மக்களுக்கு
ஒரு கதவு திறந்தாற்போல இந்த இடம் இருந்திருக்கும்.
எனவே கபாடபுரம் என்று பெயரிட்டு அங்குக் குடி ஏறி இருக்கிறார்கள்.
இந்த ஊரைச் சுற்றியும் மதிள் சுவர் எழுப்பி,
கடல் தொந்திரவுகளிலிருந்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ராமாயணத்தில் சுவரால் சூழப்பட்ட நகரம் என்று சொல்லப்பட்டது நினைவு கூறத் தக்கது.
இந்த இடத்தின் அமைப்பைப் பற்றி முந்தின பதிவில் விரிவாகக் கண்டோம்.


இந்தத் தலைநகரம் பற்றிய செய்தியை திருவிளையாடல் புராணத்தில் தேடினால்,
ஊழிக்குப் பின் ஆலவாய் என்ற பெயரில்
ஒரு நகரம் உண்டாக்கப்பட்டது
என்று ஆலவாய்க் காண்டத்தில் சொல்லப்படுகிறது.


ஆலவாய் என்னும் சொல்லில் ஆலம் என்றால் கடல், வாய் என்றால் வாயில்.
அதாவது கடலினது வாயில் அல்லது கதவு என்று பொருளாகிறது.
கபாடபுரம் என்றாலும் கதவு என்று பொருள் என்று பார்த்தோம்.
எனவே திருவிளையாடல் புராணம் கூறும் ஆலவாயும், கபாடபுரமும் ஒன்று என்று சொல்லலாம்.


ஆனால் திருவிளையாடல் புராணத்தில்
சோமசுந்தரப் பெருமான் ஒரு சித்தர் வேடத்தில் வந்து,
தனது கையில் கங்கணமாக இருந்த பாம்பை ஏவி,
பாண்டியனுக்கு அவனது நாட்டின் எல்லைகளைக் காட்டுவாயாக என்று சொன்னதாகவும்,
அந்தப் பாம்பு தன் உடலை நீண்டு வளர்த்து,
வளைத்துக் காட்டிய நிலமே பாண்டியன் நகரமாக ஆனது
என்றும் சொல்லப்படுகிறது.


விஷமுடைய வாய் கொண்ட அந்தப் பாம்பின் நினைவாக,
ஆலவாய் என்னும் பெயரை அந்த நகரம் பெற்றது.
இதன் தத்துவார்த்தத்தை, சாகத்தீவும், குமரிக் கண்டமும் என்று இனி வரப்போகும் கட்டுரையில் காண்போம்.


இந்த நகரத்தில் முறைப்படி சங்கப் பலகை அமைக்கப்பட்டது என்கிறது
இந்தப் புராணம்.
சங்கப் பலகை கொடுத்த படலத்தில்
அப்பொழுதைய அரசனாக இருந்த வங்கியசேகர பாண்டியன் என்பவன்,
சோம சுந்தரர் கோவிலின் வடமேற்குப் பகுதியில்
ஒரு “சங்க மண்டபம்உருவாக்கினான்.
வாக்கு தேவியான சரஸ்வதி தேவியின் வடிவமாக
48 சமஸ்க்ருத எழுத்துக்களும் புலவர்களாகப் பிறக்க,
சோம சுந்தரரும் 49- ஆவது புலவராக வந்து
2-ஆம் தமிழ்ச் சங்கத்தை அரங்கேற்றினார்.


இந்த இரண்டாம் சங்கத்தின் போதுதான்
சங்கப் பலகை என்னும் பலகை அறிமுகப்படுத்தப்பட்டது.
சோம சுந்தரர் ஒரு சிறிய பலகையை புலவர்களுக்கு அளித்தார்.
அது இரண்டு ஜாண் அளவில் சதுரமாக இருந்தது.
சந்திரனைப் போல வெள்ளியதாக இருந்தது.
மந்திர சக்தி வாய்ந்தது.
அறிவில் முதிர்ந்த ஒருவர் உட்கார்ந்தால்
ஒரு முழம் வளர்ந்து அது இடம் கொடுக்கும்.
இப்படியே பலரும் வர வர, அது வளரும்.
எழுத்தால் சுருக்கமாக இருந்தாலும்,
பெரும் பொருள் தரும் சிறந்த நூல்கள் போல,
பார்க்கச் சிறியதாக இருந்தாலும் அனைவருக்கும் ஒக்க இடம் கொடுக்கும் என்று வர்ணிக்கப்படுகிறது.
அந்தப் பலகையில் புலவர்கள் அமர்ந்து பாடல்களை அரங்கேற்றினர்.
இறையனாரும் அந்தப் பலகையில் அமர்ந்து பாட்ல்களைச் செவி மடுத்தார்.
அந்தக் காலக் கட்டத்தில் நடந்ததுதான் தருமியின் கதை.


இப்படியாக 2-ஆம் சங்கம் 3,700 ஆண்டுகள் நடந்தது.
அதில் மொத்தம் 3,700 புலவர்கள் பங்கு பெற்றனர்.


சங்கப் புலவர்கள் மீனாட்சி- சுந்தரேஸ்வரர் கோவிலில்
தங்கள் பாடல்களை அரங்கேற்றி இருக்கின்றனர் என்று தெரிகிறது.
அதாவது சங்கம் கூடிய இடம் மீனாட்சித் திருக்கோவில்.
தெய்வமே இல்லை என்று சொல்லும் திராவிடவாதிகளுக்கு,
சங்கம் என்ன வேண்டிக் கிடைக்கிறது?
இறையனாரை வழிபடாமல்,
அவரது திருக்கோவிலில் கூட்டப்படாமல்,
4-ஆம் சங்கம் கூட்டினார்கள்!!
மேலும் மேலும் நினைத்தபடி மாநாடு போட்டு தமிழை வளர்க்கிறார்களாம்.
இதுவெல்லாம் தமிழ்ச் சங்கம் ஆகுமா?
இறையனார் அன்றி தமிழை வளர்க்க முடியுமா?



7 கருத்துகள்:

  1. இறையனார் அன்றி தமிழை வளர்க்க முடியுமா?

    sema point :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Can be rewritten as இறையனார் இன்றி தமிழை வளர்க்க முடியுமா?

      நீக்கு
  2. குமரி ஆறு,கிழக்கில் 90 டிகிரி மலை இருந்தபோது, அதாவது முதல் சங்கத்தின் பொது, இலங்கை தனித் தீவாக இருந்ததா? தயவு செய்து பதிலளிக்கவும்.
    ஸாரநாதன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தனித் தீவாக இல்லை. 47 ஆவது கட்டுரையில் கங்கை - ராமர் சேதுவைப் பற்றி படிப்பீர்கள். அதில் தெரியவரும். கங்கை உற்பத்தியான காலம் வரை இலங்கை பிரியவில்லை.

      விஞ்ஞான ஆராய்ச்சிகளின் படி 10,000 ஆண்டுகளுக்கு முன் இலங்கையும், இந்தியாவும் இணைந்தே இருந்தன. கடல் மட்ட ஆராய்ச்சிகளின் விளைவாக உருவாக்கியுள்ள வரைபடங்களில் இதைக் காணலாம். இதே தொடரில் ஆங்கிலத்தில் இட்ட கீழ்க்காணும் கட்டுரையில் அந்த வரைபடங்களைக் காணலாம்.

      http://thamizhan-thiravidana.blogspot.in/2012/02/who-is-dravida-mr-karunanidhi.html

      நீக்கு
  3. Dear Mrs. Jayashree,
    I have been reading all your posts with utmost interest. Would be very useful if the whole series can be published as a book.
    I have one question on the sangam timelines:
    My understanding is that the first happened even before Ramayanam - please correct me if I am wrong.
    If the mudhal sangam happened so long ago, how did we see in your other post that "Thuvarai Komaan" attended the sangam?

    Thanks for such an in-depth research!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Dear Ms Aarthi,
      Thanks for the suggestion. I will bring it out as a book in Tamil and English. I would like to make it a e-book available for all and free of cost and down loadable.

      2nd Tamil Sangam was under way when Ramayana happened. Krishna (Thuvaraik kOmaan) participated in the 2nd sangam. All these have been written in this series, please read other articles or select articles by using the search box by typing key words.

      நீக்கு