வெள்ளி, 24 டிசம்பர், 2010

23. சூத்திரன் என்பவன் யார்?




சுதாஸ் என்னும் அரசனுக்கு இன்னொரு பெயரும் உண்டு. அது பைஜவனன். பிஜாவனன் என்பவன் மகன் இவன், எனவே இவனுக்குப் பைஜவனன் என்ற பெயரும் உண்டு. இவன் இந்திரன் உதவியுடன், சிந்துவைக் கடந்து, மதில்களை அழித்து, தசராஜர்கள் எனப்படும் பத்து அரசர்களை வென்றான் என்று ரிக் வேதத்தில்  சொல்லப்பட்டுள்ளது. 


வாஜஸனேயி சம்ஹிதையில் இதே அரசன் 30 அரசர்களை வென்றான் என்று அந்த அரசர்களது பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளது. இவர்களில் ஆரியர்கள் என்ற அடைமொழி கொண்டவர்களும் உண்டு. தஸ்யூ என்னும் அடைமொழி கொண்டவர்களும் உண்டு. அதாவது ஆரியர்கள், தஸ்யூக்கள் என இரண்டு வகை மக்களும் சுதாஸுக்கு எதிரி என்று நினைக்க வேண்டியிருக்கிறது. அதாவது தஸ்யூக்களும், ஆரியர்களும் ஒன்று சேர்ந்தும் போரிடுகிறார்கள். அவர்கள் ஒன்றாக தஸ்யூவை எதிர்க்கிறார்கள். அல்லது தஸ்யூவே, தஸ்யூவை எதிர்த்தும் போரிடுகிறான் என்றும் பொருள் கொள்ள வேண்டியிருக்கிறது. 


அதுமட்டுமல்ல. எந்த வசிஷ்டர் சுதாஸுக்கு உதவி செய்தாரோ அவரது மகன்களை, சுதாஸின்  மகன்கள் கொன்று விடுகிறார்கள், அதனால் அவர்கள் அசுரர்கள் என்றும் புராணங்களில் அழைக்கப்பட்டார்கள். அசுரன், தேவன் என்னும் பெயர்கள் எவ்வாறு வந்தன என்று பகுதி 21– இல் நாம் தெரிந்து கொண்டோம். அசுரன் என்பது ஒரு இனமல்ல. ஒருவனது குணத்தால், நடவடிக்கையால், அந்தப் பெயர் வந்தது என்றும் பார்த்தோம். இங்கு தஸ்யூ என்ப்படுபவன் அசுரனாகிறான் என்பதால், தஸ்யூ என்பதும் குணத்தின் அடிப்படையில் வந்தது என்று சொல்லும் வண்ணம் இருக்கிறது. 


சுதாஸ் என்னும் பெயருள்ள அரசன் யார் என்று புராண, இதிஹாசங்களைத் தேடினால், இரண்டு இடங்களில் சுதாஸ் என்னும் மன்னனைப் பற்றி விவரம் வருகிறது. ஒன்று ராமன் பிறந்த சூரிய குலம், மற்றொன்று புரு வம்சத்தில் வரும் சந்த்ர குலம். ராமனுக்கு முன்பும், ஆனால், கங்கையை பூமிக்குக் கொண்டுவந்த பாகீரதனுக்குப் பின்னும் இந்த மன்னன் பெயர் வருகிறது. இது விஷ்ணு புராணத்தில் காணப்படுகிறது. ஆனால் சுதாஸ் என்னும் இவன் பெயர் ராமனது திருமணத்தின் போது வசிஷ்டர் சொல்லும் பரம்பரையில் வரவில்லை. எனவே இவன் பட்டத்து இளவரசனில்லாமல், மற்ற சகோதர்களது பரம்பரையில் வந்திருக்க வேண்டும். 


அதே விஷ்ணு புராணத்தில் சந்திர வம்சாவளியினர் பெயர் வருகிறது. அதில் முத்கலனுக்கு மௌத்கல்ய பிராம்மணன் பிறந்தான் என்றும், முத்கலனது பேரன் திவோதாஸன், அவனது பேரன் சுதாஸ் என்றும் வருகிறது.


ரிக் வேதத்தில் (7-18-25) சுதாஸின் தந்தை திவோதாசன் என்று வருகிறது. மருத்துக்களே, இவன் தந்தை திவோதாசனது விருப்பங்களை நிறைவேற்றினாற்போல, இந்தப் பைஜாவனனது விருப்பங்களையும் நிறைவேற்றுங்கள்என்று வேண்டப்படுகிறது. எனவே சந்திர வம்சாவளியில் சுதாஸ் வருகிறான் என்று நினைக்க இடமிருக்கிறது. தாத்தாவைத் தந்தை என்று சொல்லியிருக்கலாம். 


சந்த்ர வம்ச்சாவளி என்று கொடுக்கப்பட்டுள்ள பெயர்கள் எல்லாம்  அரசர்கள் பெயர்கள். சந்த்ர வம்சாவளியில் வரும் விளக்கத்தில், க்ஷத்திரிய அரசனுக்குப் ப்ராம்மணனும் பிறக்கிறான். பேரனாக சுதாஸ் என்னும் சூத்திரனும் பிறக்கிறான் என்று வருவது கவனிக்கத்தக்கது. திவோதாஸன் என்பதிலும் தாஸன் என்னும் சொல் வருகிறது. திவோதாஸன் என்றால் திவ்விய ஒளிக்கு தாஸன், அதாவது ஒளிமயமான தெய்வங்களுக்குத் தாஸன் என்பது பொருள். அதனால் தாஸன் என்பதும், தஸ்யூ என்பதும் கேவலமான பொருளில் வரவில்லை என்று தெரிகிறது.


தாஸன் அலல்து தஸ்யூ என்பது கேவலமான பொருளில் வரவில்லை என்றால், சுதாஸை, சூத்திரன் என்று ஏன் மஹாபாரதம் அழைக்கிறது?  (சாந்தி பர்வம் 60-39). ஒரு அரசனை, அதுவும், இந்திரன், வசிஷ்டர் போன்றோர் மதித்த அரசனை ஜாதிப் பெயரிட்டு சூத்திரன் என்று அழைப்பது தவறில்லையா? கீழ்த்தரமான புத்தியை அல்லவா அது காட்டுகிறது என்று நமக்குத் தோன்றுகிறது. அரசன் எப்படி சூத்திரனாவான்? அல்லது அவன் சூத்திர அரசனா? சூத்திரன் ஒருவன் அரசனாக இருப்பது தவறா? அரசனாகக் கோலோச்சி வந்ததால் அவனை சூத்திரன் என்று அழைக்கலாமா? இது போன்ற கேள்விகள் எழுகின்றன


மஹாபாரதம் மட்டுமல்ல, சாந்தோக்கிய உபநிஷத்தும் ஒரு அரசனை சூத்திரன் என்று ஒரு முறை அல்ல, இரண்டு முறை அழைக்கிறது.. ஆரிய திராவிடச் சண்டையை நம்பும் திராவிடவாதிகளுக்கு இந்த விவரங்கள் அல்வா போல இருக்கும். பிராம்மணனை ஆரியனாகவும், சூத்திரனை திராவிடனாகவும் இவர்கள் சித்தரித்து, மக்களிடையே வெறுப்பையும், துவேஷத்தையும் பரப்ப இந்த இரண்டு விவரங்கள் மட்டுமே போதும்.


எனவே உண்மை நிலவரத்தை நாம் ஆராய்வோம்.
சூத்திரன் என்பவன் யார்? சூத்திரன் என்று எவனை வேதம் தழுவிய இந்து மதம் அழைக்கிறது என்று தெரிந்து கொள்ள இந்த இரண்டு விவரங்கள் முக்கியமானவை.


சாந்தோக்கிய உபநிஷத்தில் ஜானஸ்ருதி என்னும் அரசனது கொள்ளுப் பேரனைப் பற்றிய விவரம் வருகிறது. இவன் பல தான தருமங்களைச் செய்தும், சத்திரம், சாவடிகளைக் கட்டிக் கொடுத்தும் மிகுந்த புகழ் பெற்று இருந்தான். தன்னைப் போல புகழுடன் இருப்பவன் ஒருவனும் இல்லை என்ற கர்வம் அவனுக்கு இருந்தது.


ஆனால் அந்த ஊரில் ரைக்ரவர் என்னும் ஞானி ஒருவர் அதிகப் புகழுடன் இருந்தார் என்பது அவனுக்குத் தெரிய வந்தது. அவரது இருப்பிடமோ ஒரு வண்டியின் அடியில்தான். அவரிடம் பணம் காசு இல்லை. ஆனால் அவரது ஞானத்தால் அவருக்குப் பெருமை என்பதை இந்த அரசன் உணர்ந்தான். எனவே அந்த ஞானத்தைத் தானும் பெற விரும்பி, அறுனூறு பசுக்கள், காசு மாலை, சிறு குதிரைகள் பூட்டிய தேர் ஆகியவற்றை எடுத்துச் சென்று அவரிடம் கொடுத்து, தனக்கு ஞானத்தை உபதேசிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டான்.


அவர் அவனைப் பார்த்து, அடே சூத்திரனே, இந்த பசுக்கள், பொருள் இவையெல்லாம் உன்னிடமே இருக்கட்டும்.என்று திருப்பி அனுப்பி விடுகிறார். புகழ் பெற்ற அரசனை சூத்திரன் என்று அழைத்தத்ற்கு அவன் அசரவில்லை. மீண்டும் ஆயிரம் பசுக்கள், குதிரைகள், காசு மாலைகள் ஆகியவற்றுடன், தன்னுடய மகளையும் அழைத்துக் கொண்டு வந்து ‘என் மகளை உங்கள் மனைவியாக ஏற்றுக் கொண்டு, கூடவே இந்த செல்வத்தையும், ஒரு கிராமத்தையும் ஏற்றுக் கொண்டு எனக்கு உபதேசம் செய்யுங்கள்என்று வேண்டினான்.


ரைக்ரவர் இப்பொழுதும் அரசனை சூத்திரன் என்றே அழைத்தார். ‘ஹே சூத்திரா, இந்தக் கன்னிகையை முன்னிட்டு என்னைப் பேசச் செய்துவிட்டாய் என்று சொல்லி ஏற்றுக் கொண்டார். அரசனுக்கு உபதேசமும் செய்தார். ரைக்ரவர் வசித்த பகுதி ரைக்ரவபர்ணம் என்னும் பெயரையும் பெற்றது என்கிறது உபநிஷத்து. 


சூத்திரன் என்று ஒரு அரசனைக் கேவலப்படுத்தியது மட்டுமல்லாமல், இளவரசியான அவனது பெண்ணைப் பார்த்து மயங்கி விட்டார் என்று திராவிடவாதிகள் கூறுவார்கள். ஆனால் உண்மை அதுவல்ல.


அரசன் பொருளைக் கொடுத்து ஞானத்தை வாங்கலாம் என்று நினைத்தான். பொருள் நமக்கு அடிமையாக இருக்க வேண்டும், நாம் பொருளுக்கு அடிமையாகக் கூடாது. பொருளைக் காட்டி ஒருவரை அடிபணிய வைக்கலாம் என்று நினைப்பதும் தவறு. அப்படி நினைப்பவன், அதன்படி செயலாற்றுபவன் சூத்திரன் ஆவான்.


சூத்திரன் என்னும் சமஸ்க்ருதச் சொல்லுக்கு ‘துக்கப்படுபவன்என்பது பொருள். எனக்கு இது இல்லை, அது இல்லை, இது சரியில்லை, அது சரியில்லை என்று துக்கப்படுபவன் சூத்திரன். சூத்திரனுக்கு எதிர்ப் பதம் பிராம்மணன் இல்லை. சூத்திரனுக்கு எதிர்ப்பதம் ‘விப்ரன் என்பதாகும். விப்ரன் என்றால் எப்பொழுதும் ஆனந்தத்தில் இருப்பவன் என்பது பொருள். தெய்வத்தைப் பற்றிய நினைப்பில் இருப்பவனுக்கு பரமானந்தம் ஏற்படும். அப்படி இருப்பவனை விப்ரன் என்பார்கள். ஆனால் சூத்திரன் தனக்கு ஒன்று இல்லையே என்று சதா துக்கத்தில் இருப்பான்.


அதாவது எது தனக்கில்லையோ அதற்கு அடிமைப் பட்டிருப்பவன் சூத்திரன். பொருளுக்கு அடிமைப்பட்டிருப்பவன் சூத்திரன். அல்லது பொருளைக் கொடுத்து மற்றவர்களை வாங்கப்பார்ப்பவன் சூத்திரன். தான் பொருளுக்கு அடிமையாவதைப் போல, மற்றவர்களையும் பொருளால் அடிமைப் படுத்தி விடலாம் என்று நினைப்பவன் சூத்திரன். இங்கு ஜானஸ்ருதியின் கொள்ளுப் பேரனான அரசன், தன்னிடம் எல்லாம் இருக்கிறது என்று கர்வம் கொண்டிருந்தான். ஆனால் அது சரியல்ல. தன்னிடம், ஒரு ஞானியின் அறிவு இல்லை என்று தெரிந்ததும், துக்கப்பட்டான். இப்படிப்பட்ட துக்கம் ஒரு முறை நாரதருக்கும்  வந்தது. தனக்கு ஞானம் இல்லை என்று துக்கப்பட்டார். அதனால் தான் சூத்திரனாக இருக்கிறேன் என்று சனத்குமாரரிடம் சொன்னார்.


இங்கே ஜானஸ்ருதியின் பேரனான மன்னன், துக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல், பொருளைக் கொடுத்து அந்த ஞானத்தை வாங்கப் பார்த்தார். அதனால் ரைக்ரவர், சூத்திரனே, உன் பொருள் உன்னிடமே இருக்கட்டும், எடுத்துக் கொண்டு போ, என்று அனுப்பி  விட்டார். ஞானம் பெற வேண்டும் என்றால், அவன், தான் அரசன் என்ற பந்தாவை விட்டு விட்டு, அடக்கத்துடன், அவருக்கு சேவையைக் காணிக்கையாகக் கொடுத்து ஞானத்தை நாடி இருக்க வேண்டும்.


கிருஷ்ணர் போன்றவர்களே, குரு குலத்தில் சேர்ந்து, சுள்ளி பொறுக்கி, மாடு மேய்த்து, ஆச்ரமத்தைக் கூட்டி சுத்தம் செய்து, குருவின் ஹோமத்துக்கு வேண்டிய சுற்று வேலைகளைச் செய்துதான் உபதேசம் பெற்றனர். இப்படி செய்யச் சொல்வது அவர்களை மட்டம் தட்ட அல்ல. பணிவு, அடக்கம், பொறுமை, கோபப்படாமை போன்ற குணங்களை வளர்த்துக் கொள்ள இதையெல்லாம் செய்ய வேண்டும். இந்த குணங்கள் இருந்தால்தான் ஞானம் சித்திக்கும். பணத்தையும், பொருளையும் கொடுத்துவிட்டால், ஞானம் வந்து விடாது. ஆனால் பணத்தாலும் பொருளாலும், ஞானத்தை அல்லது ஒரு பொருளை வாங்க முடியும் என்று நினைத்தால் அது சரியல்ல. அப்படி நினைப்பவனை சூத்திரன் என்று அழைத்தனர்.


ஜானஸ்ருதியின் பேரனான அரசன், அசராமல் மீண்டும் வந்தான். இந்த  முறை தன் மகளை கன்னிகா தானமாக்க் கொடுக்க முன்வந்தான். அப்படி கொடுத்து ரைக்ரவரை வாங்கப் பார்த்தது தவறு. அது சூத்திரத் தனமானது. அதனால் அப்பொழுதும் சூத்திரன் என்றே அவனை ரைக்ரவர் அழைத்தார். ஆனால் பெண்ணை ஏற்றுக் கொண்டார். இது திராவிடவாதிகளுக்குக் கேலியாக இருக்கும்.


ஆனால் இங்கும் ஒரு சூட்சும விவரம் இருக்கிறது. ஒரு தகப்பன், தன் பெண்ணை, ஒருவனுக்குத் தாரை வார்த்துத் தர முன் வரும்போது, அந்த வரன் அப்பெண்ணை மறுக்ககூடாது. மறுத்தால் அவளுக்கு அவமானம். அதனால் அவளுக்கு வரும் துக்கத்துக்கு, மறுத்தவனே காரணமாகிறான்.


இதே போல மஹாபாரதத்தில் ஒரு சம்பவம் வருகிறது.
தன்னுடய மாறாந்தாய் மகனான, அரசுப்பட்டம் கொண்ட விசித்திரவீரியனுக்கு மணம் முடிக்க, பீஷ்மர் மூன்று பெண்களைக் கவர்ந்து வருகிறார். அவர்களுக்கு அப்பொழுது சுயம்வரம் நடந்து கொண்டிருந்தது. சுயம்வரத்தில், தங்களுக்குப் பிடித்த இளவரசனை அவர்கள் தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கும் போது, அவர்களை பீஷ்மர் கவர்ந்து வந்து விடுகிறார். அந்தப் பெண்களுள் அம்பை என்பவள் முன்பே ஒரு மணமகனை மனத்தில் வரித்திருந்தாள். எனவே அவனிடம் தன்னை அனுப்புமாறு கேட்டுக் கொண்டாள். பீஷ்மரும் அவளை அனுப்பி வைத்தார். ஆனால் அந்த வரன் (சல்வ நாட்டு அரசன்), அவளை ஒருவன் கவர்ந்து சென்றிடவே, தான் அவளை மணக்க முடியாது என்று மறுத்து விடுகிறான். கவர்ந்து வந்தது பீஷ்மர். எனவே அவரே தன்னை மணக்க வேண்டும் என்று அம்பை கேட்டாள். பீஷ்மரோ பிரம்மச்சரிய விரதம் பூண்டிருக்கவே தான் அவளைத் திருமணம் செய்ய இயலாது என்று மறுத்து விடுகிறார். அது அவளைப் பாதித்தது. அதன் பயனாக யாராலும் அழிக்க முடியாத பீஷ்மரை அழிக்க அவளே கருவியானாள். நெருப்பில் விழுந்து மாய்ந்து, மீண்டும் பிற்வி எடுத்து அவரைக் கொல்ல அவள் காரணமானாள்.


பெண் பாவம் பொல்லாதது என்பார்கள். பெண்ணின் மனது புண் படும்படி நடந்து கொண்டால், அதிலும், திருமண விஷயத்தில் அவள் தானமாகத் தரப்படும் போது, அவளை ஒதுக்கிவிடுவதால் அவளுக்கு ஏற்படும் துன்பம், ஒதுக்கினவனுக்கே சென்றடையும். எனவே ரைக்ரவர் அந்தக் கன்னிகையைத் தானமாகத் தந்ததை ஏற்றுக் கொண்டார். மறுக்க முடியாத தானத்தைத் தந்து, தான் விரும்பியதை அந்த அரசன் பெற முயலவே, அவனை சூத்திரன் என்று மீண்டும் அழைத்தார்.


சுதாஸ் என்னும் மன்னனைப் பற்றி வரும் மஹாபாரதப் பகுதியிலும், ஷூத்ரம் பைஜவனோ நாம சஹஸ்ராணாம் ஷதம் தாது.... “ என்று நூறாயிரம் குடம் பொன்னை தக்ஷிணையாகக் கொடுத்தான் பைஜவன் (சுதாஸ்) என்னும் பெயர் கொண்ட சூத்திரன் என்று வருகிறது. பணத்தைக் கொடுத்து ஒன்றை வாங்க முயல்பவன் எப்பேர்பட்டவனாக இருந்தாலும் அவன் சூத்திரன் என்பதே சூத்திரன் என்பதற்குப் பொருள்.


பணம் இல்லாமல் ஒன்றும் வாங்க முடியாதே என்று கேட்கலாம். அந்த நாளில் பண்டமாற்று இருந்தது. மேலும் எதைப் பணத்தாலும் பொருளாலும் வாங்க வேண்டும் என்ற நியதி இருக்கிறது. அறிவு, அன்பு, விசுவாசம் போன்ற பல குணங்களை பணத்தால் வாங்கக் கூடாது. இன்று பணத்துக்காக நாட்டையே விற்று விடுகிறார்கள். பணத்தைக் கொண்டு தவறான காரியத்தைச் செய்யத் தூண்டுகிறார்கள். பணத்தால் எதை வேண்டுமானாலும் வாங்கலாம் என்ற நிலை இன்று இந்தப் பாரத மண்ணில் இருக்கிறது. பணத்துக்காக, பணத்தால் செய்யப்படும் ஊழல்கள் இப்பொழுது நாட்டை அதிரச் செய்துக் கொண்டிருக்கின்றன. பணம், மற்றும் பொருளைக் காட்டி ஆதாயம் தேடுபவன் யாராக இருந்தாலும், எந்த ஜாதியில், எந்த குடும்பத்தில் பிறந்தவனாக இருந்தாலும் அவன் சூத்திரனே.


பணத்துக்கு எவன் அடிமையோ, பணத்தால் எதை வேண்டுமானாலும் வாங்கலாம் என்று ஒருவன் முனைகிறானோ அவன் சூத்திரன். இதிலிருந்துதான் சூத்திரனுக்குப் பணம் கொடுக்கக்கூடாது என்று விதி முறைகள் எழுந்தன. ஆனால் சூத்திரன் என்பது பிறப்பால் அல்ல, குணத்தால் மட்டுமே என்பதை மேற்சொன்ன விவரங்கள் தெரிவிக்கின்றன.


ஒருவன் அரசனே ஆனாலும், பணம், பொருளைக் கொண்டு வாங்கக்கூடாததை வாங்க நினைத்தால் அவன் சூத்திரன் ஆவான்.
சமஸ்க்ருத்தில் வழங்கும் ஒரு முக்கியப் பழமொழி, ‘பிறப்பால் அனைவரும், சூத்திரரே, குணத்தினால்தான் பிராம்மணன், க்ஷத்திரியன், வைஸ்யன் என்றாகின்றனர் என்கிறது.


துக்கப்படுபவன், சூத்திரன் என்பதன் பொருள் என்று பார்த்தோம். பிற்க்கும் போது அனைவரும் அழுது கொண்டே பிறக்கின்றனர். அதனால் அனைவரும் சூத்திரனாகப் பிறக்கிறோம். மேலும் இது வேண்டும், அது வேண்டும் என்று இளமையில் ஆசைகள் அதிகம். அதிலிருந்து வெளிவர ஞானக் கல்வி தேவை. அந்த ஞானக் கல்வியை ஒரு குரு முகமாகப் பணிவுடன் பெற வேண்டும். ஞானம் என்பது வேதம் சார்ந்தது. மூன்று வேதங்களும் தன்னைக் கட்டுகிறது என்பதன் குறியீடாக பூணூல் அணிந்து ஞானக் கல்வியை ஒருவன் தொடங்க வேண்டும். அந்த ஞானத்தைத் தேடாதவன் சூத்திரன். அப்படித்தான் சூத்திரன் என்பது சொல்லப்பட்டது.


சமீப காலம் வரையிலும் அப்படித்தான் இருந்திருக்க வேண்டும். ராமர் பிறந்த இடத்தை பாபரின் படைத்தலைவன் அழித்து அங்கு மசூதி கட்டியபோது, துளசிதாசர் அயோத்திக்குச் சென்றிருந்தார். அங்கு அவர் கண்ட காட்சிகளை ‘துளசி சதகம் என்னும் பாடலாக இயற்றினார். அவர் சொல்கிறார், பூணூல் அணிந்தவர்களைப் பார்த்தாலே முஸ்லீம்கள் தலையைச் சீவினார்கள். அப்படி குவிந்த மண்டையோடுகள் ஒரு கோபுரம் போல பெரிதாக இருந்தது என்கிறார். அந்தக் காலக் கட்டத்தில், அதாவது முஸ்லீம் படையெடுப்புக்கு முன், அனைத்து மக்களுமே ஞானவழியில் நாட்டம் கொண்டிருந்தனர். அனைவருமே தெய்வ சிந்தனையில் இருந்தனர். அதனால் பெரும்பான்மையினர் பூணூல் அணிந்திருக்க வேண்டும். சூத்திரன் என்னும் நிலையில் அதிக மக்கள் இருந்திருக்க முடியாது. இந்துக்கள் என்பவர்களைப் பூணூல் மூலமாகத்தான் முஸ்லீம்கள் அடையாளம் கண்டிருக்கின்றனர். எனவே ஞானம் தேடாத சூத்திரன் என்பவன் எங்கோ சிலரே இருந்திருக்க முடியும்.


முஸ்லீம்கள் ஆட்சியில்தான் அடிமைகள், தாழ்த்தப்பட்டவர்கள் என்ற பிரிவுகளைக் கொண்டு வந்தார்கள். அவர்கள் வரும்வரை, இந்த நாடு ஞானம் தேடிய மக்களை அதிகமாக் கொண்டிருந்தது. தமிழ் நாட்டைப் பொருத்தவரை, மூன்று தலைமுறை முன்புவரை, பலரும் பூணூல் போட்டிருந்தனர். பூணூலை இகழ்ந்து, திராவிடத்தைக் கையில் எடுத்துத் துவேஷட்தைப் பரப்பும் திராவிடத் தலைவரது தந்தையான முத்துவேலரும் பூணூல் போட்டிருந்தது அன்னாரது பழைய புகைப்படத்தில் தெரிகிறது என்று சொல்கிறார்கள்.


வழி வழியாக வந்த வழக்கத்தை விட்டுவிட்டு, தெய்வ சிந்தனையைக் கொன்று, மக்களை மூளைச் சலவை செய்தவர்கள் திராவிடவாதிகள் என்பதை மக்கள் உணர வேண்டும்.


2 கருத்துகள்:

  1. ஓரளவிற்கு தெளிவு கிடைத்தது. இன்னும் இதைப் பற்றி அதாவது நான்கு ஜாதி வர்ணனை பற்றி தெரிந்துக் கொள்ள விரும்புகிறேன். நன்றி வணக்கம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @ Anu Dixit.

      Please click the archives in the side bar to choose the articles on the varnas. Articles numbered 22, 23, 26, 29, 52, 61, 62, 63 & 64 give more info on varnas and jathis

      நீக்கு