திங்கள், 13 டிசம்பர், 2010

16. பூம்புகாரின் தொன்மை 11,500 ஆண்டுகள்.

மனித வாழ்க்கைக்குத் தொடர்புடைய சப்தரிஷி யுகம் அல்லது லௌகீக யுகம் கி-மு- 17,476  ஆண்டு ஆரம்பித்திருக்கக்கூடிய சாத்தியக் கூற்றினைப் பார்த்தோம். அது உலகெங்கும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் ஒத்துக்கொண்டுள்ள பனியுகம் முடிந்த காலத்துடன் ஒத்துப் போகிறது என்ற ஆச்சரியமான உண்மையையும் பார்த்தோம். அதன் தொடர்பாக நம் தமிழ் மண்ணிலும் சில ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அதில் முக்கிய ஆதாரம் பூம்புகார்!

இந்தத் தொடரில் இந்திரன் சம்பந்தப்பட்ட விவரங்களில்தான் நாம் இன்னும் இருக்கிறோம். இந்திரன் சம்பந்தப்பட்ட இடம் புகார் நகரமாகும். அங்கு நடந்து வந்த இந்திர விழா குறித்த தமிழ் ஆதாரங்களைப் பார்க்கும்போது, போனஸாக பல விவரங்களும் கிடைக்கின்றன. அப்படிக் கிடைத்ததுதான், முசுகுந்தனும், மனுவில் ஆரம்பித்த சோழ பரம்பரையும், சோழர்கள் கொண்டாடிய சிபியின் உறவு முறையில் வரும் ராமனும்.

அவர்களைப் பற்றிய விவரங்களைப் பார்க்கும் போது, அவர்கள் வாழ்ந்த காலம் பற்றிய விவரங்கள் நமக்குக் கிடைத்தன. அதை ஆராய்ந்தபோது யுகங்களைப் பற்றியும், ராமன் வாழ்ந்திருக்ககூடிய காலத்தைப் பற்றியும் கண்டோம். அப்படிக் கண்டபோது நமக்குக் கிடைக்கும் விவரம், பனியுகம் பற்றியது.

பனியுகம் (Ice Age) என்றால் என்ன என்பதைப் பற்றி சுருக்கமாக அறிந்து கொண்டால், மேற்கொண்டு சில விவரங்களைப் பார்க்க நமக்கு உதவியாக இருக்கும். 

பூமி தன் அச்சில் தற்சமயம் 23-1/2 டிகிரி சாய்ந்துள்ளது. இப்படி சாய்ந்து இருக்கவேதான் பருவங்கள் மாறி மாறி வருகின்றன. பூமியின் சுழற்சியின் காரணமாகவும், சுற்றியிருக்கும் கிரகங்களது இழுப்பு சக்தியின் காரணமாகவும் இந்த சாய்வு மெதுவாக வேறுபடுகிறது. இந்த வேறுபாடு 22 டிகிரி முதல் 25 டிகிரி வரை ஆகிறது என்று அறிவியலார் கூறுகின்றார்கள். இந்த இரு நிலைகளும் இடையே சுமார் 41,000 ஆண்டுகள் ஆகின்றன என்கிறார்கள், இதனுடன், சூரியனின் பின்னோக்கு இடப்பெயர்வும் (Precession ), சூரியனைச் சுற்றி பூமி செல்லும் பாதையில் ஏற்படும் மாற்றங்களும், பூமியில் நிலவும் தட்ப வெப்ப நிலையில் சில மாறுதல்களை உண்டாக்குகின்றன. அதனால் குறிப்பிட்ட அட்ச ரேகைப் பகுதிகளில் படிப்படியாக குளிர் அதிகமாகி பனி படிய ஆரம்பிக்கிறது.

பனிப்பாறைகளாக இருக்கும்  இப்படிப்பட்ட நிலை  பல்லாயிரக்கணக்கான வருடங்கள் நீடிக்கும் . அப்படி பனி நீடிக்கும் காலத்தைப்  பனி யுகம் என்கிறார்கள். ஆனால் பனி யுகம் என்றுமே இருந்து விடாது. பூமியின் சாய்மானம், சுழற்சி என்று முன் சொன்ன காரணங்கள் மாறி மாறி வருவதால், சூரிய ஒளி  அதிகம் பட ஆரம்பித்து, பனி உருக ஆரம்பிக்கும். இப்படிப் பனி உருக ஆரம்பித்தது, 17,000 - 20,000 ஆண்டுகளுக்கு முன்னால் ஆரம்பித்தது என்று கணித்துள்ளனர். இனி வரப்போகும் காலத்தில், இன்றைக்கு 50,000 வருடங்களில், மீண்டும் பனியுகம்  ஆரம்பிக்கும் என்கிறார்கள். 

சூரிய  வெப்பம்  பூமியின் மீது விழ விழ, பனி உருக ஆரம்பிக்கிறது. அதனால், அதுவரை வெளியில் தெரியாத நிலப்பகுதிகள் தெரிய வரும். புது நதிகளும் தோன்றலாம். அப்படித் தோன்றிய ஒரு நதி, கங்கை ஆகும். கங்கோத்ரி என்னும் பனிக் கருவிலிருந்து, பனி யுகம் முடிந்த பின் கங்கை உருகி வர ஆரம்பித்தது.

இவ்வாறு பல ஆறுகள் பெருக்கெடுக்கவே, அவை சேரும் கடல் மட்டமும் அதிகரிக்கிறது. பனி யுகம் முடிந்த காலம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதும், இன்றைக்கு 17,000 ஆண்டுகளிலிருந்து   7,000 ஆண்டுகளுக்குள், உலகெங்கும் பல இடங்களில் கடலோரப் பகுதிகள் கடலுக்குள் முழுகி விட்டன.
இன்றைக்கு இருக்கும் அமெரிக்காவின் அளவுக்கு ஆங்காங்கே நிலப்பகுதிகளைக்  கடல் கொண்டு விட்டது என்று க்ரஹாம் ஹான்காக் (Graham Hancok) என்னும் ஆழ் கடல் ஆராய்சியாளர் கருதுகிறார்.
 
க்ரஹாம் ஹான்காக்

இப்படி கடல் மட்டம் ஏறின விவரங்களை ஆராய்ச்சி செய்துள்ளார் க்லென் மில்னே (Glenn MIlne) என்னும் ஆராய்ச்சியாளர்.
அவர்கள் கூறும் விவரப்படி, இந்தியாவின் பரப்பளவுக்குச் சமமான அளவு ஆஸ்திரேலியப் பகுதியில் நிலப்பரப்பு கடலுக்குள் அமிழ்ந்து விட்டது. 
அது போல தென் கிழக்கு ஆசியா - அதாவது இந்தோனேசியா, இந்தியாவின் தெற்கில் உள்ள இந்தியப் பெரும்கடல் பகுதியிலும், இந்தியாவின் பரப்பளவு அளவுக்கு நிலப்பகுதி கடலுள் மறைந்து விட்டது என்கிறார்கள்.
இதை ஒரு ஹேஷ்யமாக அவர்கள் சொல்லவில்லை.
கடலின் ஆழம், பனி யுகம்  முடிந்து கடல் மட்டம் உயர்ந்த விவரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் உலகெங்கும் கடல் பகுதி, கடலோரப்பகுதில் உள்ள கடலின் ஆழம் ஆகியவற்றை அளந்து கொண்டு வருகிறார்கள்.
அதில் நம் இந்தியப் பகுதியைப் பொருத்தமட்டில், மேற்சொன்ன இடங்களும், துவாரகை இருக்கும் குஜராத் பகுதியும் அடங்கும்.


அப்படி அவர்கள் காட்டும் ஒரு இந்தியப் பகுதி பூம்புகாரை ஒட்டியுள்ள கடல் பகுதி ஆகும். இன்றைக்கு இருக்கும் பூம்புகார் நிலப்பகுதியிலிருந்து கடலுக்குள் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில், 70 அடி ஆழத்தில் U - வடிவில் குதிரையின் லாடம் போன்ற அமைப்பைக் கண்டு பிடித்துள்ளார்கள்.

அதன் மொத்த நீளம் 85 மீட்டர்.
'U' அமைப்பின் கை போன்ற இரு அமைப்புகளின் இடையே உள்ள தூரம் 13 மீட்டர். இந்த அமைப்பின் உயரம் 2 மீட்டர்.
கை போன்ற அமைப்புப் பகுதி துண்டு துண்டான கற்களால் ஆனது போல இருக்கிறது. இயற்கையில் இந்தஅமைப்பு தானாகவே இருக்க முடியாது.
இதை ஆராய்ச்சி செய்தவர்கள் இப்படி வரைபடமாகக் காட்டியுள்ளார்கள்.இதைப் படம் பிடித்து 2001 - ஆம் ஆண்டுவாக்கில் இங்கிலாந்தில் தொலைக்காட்சியில் காட்டினார்கள்.

ஆழ்கடலில் இதன் பகுதிகள் இப்படி இருக்கின்றன:-

இந்த அமைப்பு  ஒரு கோவிலின் சுவராகவோ, அல்லது ஏதேனும் ஒரு கட்டுமானத்தின் அடித் தளமாகவோ இருக்கலாம் என்று நினைக்கிறார்கள்.
இந்த அமைப்பு இருக்கும் இடம் ஒரு காலத்தில் நிலப்பரப்பாக இருந்திருக்க வேண்டும்.
க்லென் மில்னே அவர்களது கடல் மட்டக் கோட்பாட்டின் படி அந்த இடம்  11,500  ஆண்டுகளுக்கு முன் நிலப்பரப்பாக இருந்திருக்க வேண்டும். 
அதாவது 11,500  ஆண்டுகளுக்கு  முன் அதைக்  கடல் கொண்டிருக்க வேண்டும்.


அவர் சொல்லும் காலக் கட்டத்தைப் பாருங்கள்!
எத்தனை பழமை!
எந்த ஆங்கிலேயர்கள் ஜெர்மானிய மாக்ஸ் முல்லர் துணையுடன், இந்தியாவின் தொன்மையை அழிக்க முற்பட்டார்களோ, தங்கள் மூதாதையரான ஆரியர்களே இந்தியாவில் 3,500 ஆண்டுகளுக்கு முன் புகுந்து, இன்றைக்கு இந்தியா எங்கும் பரவி விட்டனர் என்றார்களோ, அந்த ஆங்கிலேய நாட்டைச் சேர்ந்தவர்களான இரண்டு ஆராய்ச்சியாளர்கள் இன்று உலகெங்கிலும் கண்டுபிடிக்கப்பட்ட மனித நாகரீகத்திலேயே, மிகவும் தொன்மை வாய்ந்தது, இங்கே தென்னிந்தியாவில் இருக்கும் பூம்புகாரில்தான் என்கிறார்கள். 
இதுதான் இயற்கையின்  நீதி (Natural Justice ) என்பதோ!


அது மட்டுமல்ல. அவர்களது இந்த  ஆராய்ச்சியை நமது நாட்டு ஆழ்கடல் ஆராய்ச்சியாளர்கள் (NIO ) முன்னிலையில் சொல்லி உள்ளார்கள். ஆனால் அப்போதைய அதன் தலைவர் (Dr A.S. Gaur) இதெல்லாம் சாத்தியமில்லை என்று சொல்லி விட்டார்.
லாட வடிவிலான அந்த அமைப்பைச் செய்ய உயர்ந்த டெக்னாலஜி தேவை.
11,500 ஆண்டுகளுக்கு முன் அந்த அளவு அறிவு கொண்ட மக்கள் இங்கு வாழ்ந்ததாக ஆதாரம் இல்லை என்று சொல்லி விட்டார்!!

இதைக் கேட்டு அந்த ஆராய்ச்சியாளர்கள் மட்டுமல்ல, இந்திய சரித்திரத்தை ஆராயும் டேவிட் பிராலே (David Frawley)  போன்றவர்களும் நொந்து போய் இருக்கிறார்கள்.

எத்தனை விஷயங்கள் இந்த நாட்டில் இருக்கின்றன!
எத்தனை விஷயங்களில் நாம் முன்னோடிகளாக இருக்கிறோம்!
ஆனால் அவற்றைப் பற்றிய எந்த அறிவும், விழிப்புணர்வும் இல்லாமல் நாம் இருக்கிறோம்.
நாம் தானே இதை எல்லாம் முன் நின்று சொல்ல வேண்டும்.
அதை விட்டு விட்டு கேவலம், 3,500  வருடங்களுக்கு முன் ஆரியன் வந்தானாம்,
அவன் விரட்டி விடவே, தமிழ் நாட்டுக்கு வந்தோமாம்
என்று கதை பரப்பிக் கொண்டு,
அதன் அடிப்படையில் எவனைத் திட்டலாம்,
அதில் என்ன ஆதாயம் சம்பாதிக்கலாம் என்று பார்க்கும் திராவிடவாதிகளின் பசப்பில் மக்கள் மயங்கி கிடக்கிறார்கள்.

நம்மிடம் ஆதாரமா இல்லை?
நம் தமிழ் நூல்கள் சொல்லாத பழம் பெரும் நாகரீகமா?
அந்த ஆதாரங்களை நாம் பார்ப்போம்.

6 கருத்துகள்:

 1. வணக்கம்.. சில நாட்களாக இந்த தளத்தை பின் தொடர்ந்து வருகிறேன்.. பல பயனுள்ள தகவல்கள் கிடைக்கின்றன. நன்றி.


  ஆனால் ஒரு சந்தேகம். ஆரியார்க்ளை திராவிடர்கள் விரட்டவில்லை. அவர்களே நம்மையும் நாம் புகழயும் அழிக்க இயலாமல், இல்லாததியும், பல கற்பனைகளையும் அரங்கேற்றினார்கள் என்று கருதுகிறேன். சூர பானம் குடிக்கும் அவர்கள் சூரர்கள் என்றும், குடிக்காத தென் நாட்டவர் அசுரர்கள் என்றும் புனைந்து பல கதைகளை எழுதினார்கள் என்று கருதுகிறேன். (அசுரர்கள் அனைவரும் கருப்பாகவே சித்தரிக்கும் அவர்கள் பழக்கத்தை கவனிக்க). கடவுள் நம்பிக்கைகளின் மூலம் உள் நுழைந்து சமுதாயத்தில் பல வேறுபாடுகளை உருவாக்கினார் என்று கருதுகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் பதிலுக்கு நன்றி. படித்துக் கொண்டுதான் இருக்கிறேன். ஹிந்து மதம் கூறும் பல வரலாற்று உண்மைகள் இருக்கலாம். ஆனால் மதம் என்று ஏதும் இல்லை. வாழும் முறையே இப்போது மதமாக ஆக்கப்பட்டிருக்கிறது என்பதை நம்புபவன் நான். சமஸ்கிருதம் நிச்சயம் அந்நிய மொழியே. பல ஆயிரம் ஆண்டுகளாக தமிழ் பேசி வந்த மக்களை தாழ்ந்த குலமாக ஆக்கியது அம்மொழி பயின்றவர்கள் சிலர் என்பதை மறுக்க இயலாது.

   நீக்கு
 2. இந்திரன் தமிழ் மக்கள் வணங்கி வந்த கடவுள். அவரை கடன் வாங்கி கொண்ட வட நாட்டவர் எழுதிய பல இதிகாச நூல்களில் இந்திரன் என்பவன் எப்போதும் தோற்ப்பவன், அவனை காப்பாற்ற ஒருவர் பிறக்க வேண்டும் என்று எழுதி வைத்தார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பிற கட்டுரைகளையும் படித்து விட்டுப் பேசுங்கள். இந்திரனைப் பற்றியும் கட்டுரைகள் இருக்கின்றன. 19, 20, 21, 22, 94 ஆம் கட்டுரைகளைப் படிக்கவும். நீங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றால், போகிப் பண்டிகையை ஏன் கொண்டாடுகிறீர்கள்? கலித்தொகையில் முல்லைக் கலியைத் தூக்கி எறிந்து விடலாமே?

   அதற்கு முன் உங்கள் பெயரில் இருக்கும் 'அருண்' என்ன மொழி, என்ன வேர்ச் சொல் என்று ஆராய்ந்தீர்களா? அருண் என்ற ஒருவருக்கு ஒரு கட்டுரையில் பின்னுரையில் விளக்கம் கொடுத்திருப்பேன். தேடித் பார்த்துத் தெரிந்து கொள்ளவும்.

   நீக்கு
 3. Arun Pandiyan _சமஸ்கிருதம் நிச்சயம் அந்நிய மொழியே # அப்படி இருக்க வாய்ப்பில்லை என எண்ணுகிறேன் !!! ஏன் என்றால் , சமஸ்கிரதத்தில் பல வார்த்தைகள் ., தமிழ் வார்த்தைகளை கொண்டுள்ளது .தமிழ் .,சமஸ்கிரதம் இவ்விரண்டு மொழியில் இருந்தே சில மொழிகள் ஒருவாகி இருக்கலாம் .

  பதிலளிநீக்கு