வியாழன், 18 அக்டோபர், 2012

111. ட்ரூயிட் அணிந்த பொன் தகடும், திரிமூர்த்தியும்.


சதுரம் முதலான ஜியோமிதி வடிவங்களை ட்ரூயிடுகள் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பதை முந்தின கட்டுரையில் கண்டோம்.



Fig 1


இதில் காணப்படும் ஜியோமிதி வடிவங்களில் சதுர வடிவம் நமக்கு மிகவும் பரிச்சயமானது. வேத மரபில் செய்யப்படும் வழிபாட்டில் இப்படிப்பட்ட சதுர வடிவிலான தகடுகளில், ஜியோமிதி வடிவத்தில் தெய்வத்தை ஆவாஹனம் செய்வார்கள். அதில் குறியீடுகளாக சில குறிகளையும், எழுத்துக்களையும் அமைப்பார்கள். அவற்றில் மந்திரம், மூலமாகக் குறிப்பிட்ட தெய்வத்தை ஆவாஹனம் செய்து, அதை வழிபடும் வழக்கம் இன்றும் பாரத நாட்டில் இருக்கிறது. ஜியோமிதி வடிவம் தெய்வத்துக்கு, தெய்வம் மாறுபடும். அதாவது ஒவ்வொரு தெய்வத்துக்கும் ஒரு குறிப்பிட்ட ஜியோமிதி வடிவம் இருக்கிறது. அதையே அந்தத் தெய்வமாக ஆவாஹனம் செய்வார்கள்.


மேலே காணப்படும் சதுரம், வேத மரபில் இருக்கும் மூன்று விஷயங்களுடன் ஒத்துப் போகிறது. அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

முதலாவது, ஆயுள், ஆரோக்கியத்துக்காக சோம ரசத்தைப் பருகும் விளக்கங்களில் வருவது. 108 ஆவது கட்டுரையில் ஆயுர் வேதத்தில் சோம ரசம் பருகுவது பற்றிய விவரங்கள் இருக்கின்றன என்று சொன்னோம், அவற்றை இந்த இணைப்பில் படிக்கலாம்.    

http://www.scribd.com/doc/77607146/Sachidananda-Padhy-and-Santosh-Kumar-Dash-The-Soma-Drinker-of-Ancient-India-An-Ethno-Botanical-Retrospect

 

ஆயுர் வேதத்தில் கொடுக்கப்பட்ட விவரத்தின்படி, உடல் வலுவும், நோயின்மையும், நீண்ட ஆயுளும் பெற இதைப் பருகினார்கள். இதைக் கிரமப்படி பருகுபவன் பலசாலியானான். அவனுக்கு எளிதில் சாவு வராது.


சுஸ்ருத சம்ஹிதை சொல்லும் கட்டு திட்டங்களில் முக்கியமானது, சோம ரசம் பருகுபவன் மூன்று சுற்றுகள் கொண்ட அறைக்குள் இருக்க வேண்டும் என்பதே.

அது இப்படி இருக்கும்.


Fig 2


முதலில் நடுவில் உள்ள அறையில் இருக்க வேண்டும். பிறகு படிப்படியாக வெளி அறைகளில் இருக்க வேண்டும். 4 மாதங்கள் இவ்வாறு இருந்த பிறகு, அவன் வெளியில் வரலாம். அப்பொழுது சோம ரசம் பருகினதன் முழு பலனும் அவனுக்குக் கிட்டும்.


இது வாஸ்து அமைப்பு. இதுவே யந்திர அமைப்பும் ஆகும்.


இதே போன்ற அமைப்பில் மேற்காணும் ட்ரூயிட் சதுரம் இருக்கிறது.



Fig 3


மூன்று சுற்றுகளுக்கு நடுவில் ஏதோ ஒன்றை ஆவாஹனம் செய்தது போல இருக்கிறது.

இதே அமைப்பில் ட்ரூயிடகள் வாழ்ந்த இங்கிலாந்தில் செய்யப்பட்ட அகழ்வாராய்ச்சியில் ஒரு பொன் தகடு கிடைத்துள்ளது. அதைக் கீழுள்ள படத்தில் காணலாம்.


 


Fig 4


இதிலும் மூன்று சுற்றுகளுக்கு நடுவில் ஏதோ ஒன்றை ஆவாஹனம் செய்திருக்கிறார்கள். அதில் உள்ள 3 X 3 என்னும் 9 கட்டங்கள் நவக்கிரக அமைப்பை ஒத்திருக்கிறது.


இந்தத் தகடு கிடைத்த இடம், ஸ்டோன்ஹென்ஞ் பகுதியாகும். இங்கிலாந்தில் வில்ட்ஷையர் பகுதியிலுள்ள ஸ்டோன்ஹென்ஞ்சுக்குச் சிறிது தொலைவில் புஷ் பாரோ (BUSH BARROW) என்னும் பகுதியில் ஒரு மேடு இருக்கிறது. (படத்தில் அம்புக் குறி காட்டுமிடம்)



Fig 5


படத்தில் உள்ள எல்லா அமைப்புகளுமே க்ராப் சர்கிளாக ஏற்பட்டவை. அதாவது ஏதோ ஒரு அதீத சக்தி அங்கு நடமாடியிருக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு இடம் இன்று மேடாக இருக்கிறது. படத்தில் அம்புக் குறி காட்டும் அந்த இடத்தை புஷ் பாரோ என்கிறார்கள். அதை ஆராய்ந்த போது அங்கு ஒரு கல்லறை இருப்பது தெரிய வந்தது. அதில் காணப்பட்ட ஆண் சடலத்தின் மார்பில் இந்தத் தகடு இருந்தது. இது ஒரு மரத்தகட்டில் பதிக்கப்பட்டிருக்கிறது.


இப்படிப்பட்ட தகடுகள் பாரத நாட்டின் யந்திர வழிபாட்டில் இருப்பவை என்பதை நாம் நினைவில் கொண்டு மேலே தொடர்வோம். இது அதீத சக்திகள் வெளிப்படும் வில்ட்ஷையர் பகுதியில் கிடைத்துள்ளது. இந்த மனிதனது காலம் இன்றைக்கு 4000 ஆண்டுகளுக்கு முன்பானது. இது ஸ்டோன்ஹெஞ்சுகள் எழுப்பட்ட காலம். எனவே இதை வைத்திருந்த மனிதன் ட்ரூயிடாக இருக்க வேண்டும்.


அந்த மனிதன் நல்ல உயரமும், பருமனுமாக, ஆஜானுபாஹுவாக இருந்திருக்கிறான் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். பாரத மரபில் செய்வது  போல தெற்கில் தலை வைத்து, தெற்கு- வடக்காக அடக்கம் செய்யப்பட்டிருக்கிறான். அவன் இறந்த காரணத்தை இன்னும் ஆராயவில்லை. ஆனால் அவன் நல்ல வலிமையுடன் இருந்திருக்கிறான் என்பது தெரிகிறது. அவனுடன் காணப்பட்ட பொருள்களுடன் அவன் எப்படி இருந்திருப்பான் என்று ஒரு ஊகப் படம் வரைந்திருக்கிறார்கள். அது இப்படி இருக்கிறது.



Fig 6


அவன் மார்பில் அந்தத் தங்கத் தகட்டைக் காணலாம். மார்பில் அந்தத் தகட்டுடன்தான் அவன் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறான். அதைக் கழுத்தில் மாலை போல அவன் அணிந்திருக்கிறான்.


இவனுடன் வேறு சில பொன்னாலான பொருட்களும் காணப்பட்டன. உதாரணமாக அவன் இடுப்பில் பெல்ட் கட்டும் வண்ணம் தங்கத்தாலான பக்கிள் இருக்கிறது. அவனது கத்தியின் கைப்பிடிகளில் நுட்பமான பொன் வேலை செய்யப்பட்டிருக்கிறது. கற்காலம் என்று ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் அந்தக் காலக் கட்டத்தில் தங்கத்தை உருக்குவது மட்டுமல்லாமல், அதைக் கொண்டு நுணுக்க வேலைகளையும் செய்திருக்கிறார்களே, அது எப்படி?


மற்ற பொருட்களுக்காவது ஒரு பயன்பாடு இருக்கிறது. இந்தத் தகட்டுக்கு என்ன பயன்பாடு இருந்திருக்க முடியும்? – இப்படி எல்லாம் கேள்விகள் எழுகின்றன.

நமக்கோ, அந்தத் தகட்டையும், அந்த மனிதனது உருவ அமைப்பையும் பார்க்கும் போது சோம பானம்தான் நினைவுக்கு வருகிறது. சோம பானத்தைப் பருகியவன் நல்ல ஆரோக்கியத்துடனும், உடல் வலிமையுடனும் இருப்பான். இந்த மனிதன் அப்படி இருக்கிறான்.


சோம பானத்தைப் பருகுபவன் மூன்று சுற்றுகள் கொண்ட சதுர அமைப்பில் இருக்க வேண்டும். இவனது பொன் தகடு அதை நினைவூட்டுகிறது.

இந்தத் தகடு, சோம பானம் அருந்தினவன் வாழும் இடத்தின் வாஸ்து அமைப்பை ஒத்திருக்கிறது.


Fig 7 & 8

 


இந்தத் தகடு மிகச் சரியான சதுரம் அல்ல. ராம்பஸ் என்னும் அமைப்பில் இருக்கிறது. அதை உருவாக்கிய தொழிலாளி பின்வருமாறு ஜியோமிதி வடிவத்தில் முதலில் வெட்டி, பிறகு இந்தத் தகட்டை வெட்டியிருக்க வேண்டும்.


Fig 9


இந்த அமைப்பில் 6- முனைகள் கொண்ட நக்ஷத்திரம் அமையும்.

 

 


Fig 10


இந்த நக்ஷத்திர அமைப்பே பல யந்திரங்களுக்கும் அடிப்படையான வடிவம்.




இந்தத் தகட்டின் நடுவிலுள்ள 9 கட்டங்கள் நவக்கிரக அமைப்பை நினைவூட்டுகின்றன.


Fig 11


இந்த 9 கட்ட அமைப்பு நவக்கிரக யந்திரத்தில் காணப்படுவது. இப்படிப்பட்ட யந்திரங்கள் இன்றும் இந்தியாவில்தான் இருக்கின்றன என்பதை நினைவில் கொள்வோம்.

Fig 12 & 13  நவக்கிரக யந்திரத் தகடுகள்


சோமபானம் பருகுவதால், சாவாமை வரும் என்று சொல்வது போல, நவக்கிரகங்களாலும் சாவாமை வரும் என்பது ராவணன் மகன் இந்திரஜித் பிறப்பைப் பற்றிய ஒரு கதையில் வருகிறது. ராவணனுக்குத் தன் மகன் இறவாமையைப் பெற வேண்டும் என்ற அவா. அதனால், அவன் மனைவியான மண்டோதரி கர்ப்பம் தரித்த போது எல்லாக் கிரகங்களையும் குறிப்பிட்ட ராசியில் (11 ஆவது ராசியில்) நிறுத்தச் செய்தான். அப்படியும் சனிக் கிரகம் சற்று நகர்ந்து விடவே தனது சந்திரஹாசக் கத்தியால் சனியின் காலை வெட்டினான். துண்டுபட்ட கால் 12 ஆவது ராசியில் விழுந்த்து.  அது மாந்தி என்னும் பெயர் பெற்றது. 12 ஆம் ராசியில் இருந்த மாந்தியால், ராவணனது மகனான இந்திரஜித்துக்கு மரணம் ஏற்பட்டது என்னும் கதை இருக்கிறது.


இந்தக் கதையின் உட்பொருள் என்னவென்றால் நவகிரகங்களும் குறிப்பிட்ட ராசிகளில் நிற்கும் போது ஒருவனுக்கு நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பதே. சந்திரஹாசக் கத்தியால் சனியின் காலை ராவணன் வெட்டினான் என்பதில், அந்தக் கத்தியின் பெயரில் சந்திரன் அதாவது சோமன் இருப்பதைக் கவனிக்கவும். நவக்கிரகங்கள், சோமன் ஆகியவை அமிர்தம் உண்டது போன்ற சாவாமையைத் தரவல்லன என்ற நம்பிக்கை ராவணன் காலத்தில் இருந்திருக்கிறது. ராவணன் நவக்கிரகங்களைக் குறித்து யாகம் போன்ற வேதக் கிரியைகளைச் செய்திருக்க வேண்டும்.


ராவணனுக்கு ஓரிரு நூற்றாண்டுகளுக்கு முன் த்ருஹ்யு இருந்திருக்கிறான். அப்பொழுதும் நவக்கிரகங்களால் சாவாமையைத் தர முடியும் என்ற எண்ணம் இருந்திருக்கும். சாவாமையைத் தரும் சோம பானத்தைப் பற்றிய ரிக்குகளும் அதே காலக்கட்ட்த்தில் இருந்தன. இந்த இரண்டையும் இணைத்துப் பார்க்கும் போது, பொன் தகட்டில் காணப்படும் அமைப்பு நவக்கிரகம் அல்லது சோமன் (சந்திரன்) ஆகியவற்றைக் குறிக்கும் யந்திரமாக இருக்க வேண்டும் என்று தெரிகிறது.



Fig 14 (சோமன்) சந்திரன் யந்திரம்.


ராமன் காலத்திலேயே பொன் வேலை மற்றும் உலோக வேலை தெரிந்தவர்களாக தானவர்கள் இருந்திருக்கிறார்கள். (107 ஆவது கட்டுரை). ரிக் வேதப் பழக்கமான சோம பானம் பருகுதலும், நவக்கிரத்தால் சாவாமையை வேண்டுதலும் இருந்திருக்கிறது. அந்த விவரங்களை எடுத்துக் கொண்டு வந்த த்ருஹுயுக்கள், பாரதத்தை விட்டு வெளியேறி 7000 வருடங்கள் ஆகியிருக்கின்றன. 4000 வருடங்களுக்கு முன் இருந்த இந்த ட்ரூயிட் காலம் வரை அந்த வழக்கங்கள் மாறவில்லை, அல்லது மறையவில்லை. அதற்கு இந்தத் தகடே சாட்சி.


சாவாமையைத் தரும் சோம ரசத்தை அந்த மனிதன் பருகியிருக்கிறான். அதனால் அவன் நல்ல உடல்வாகும், பலமும் பொருந்தினவனாக இருந்திருக்கிறான் என்று இத்தனை வருடங்கள் கழித்தும் அவனது சடலத்தின் மூலம் தெரிகிறது. சோம ரசம் உண்மையிலேயே சாவாமையைத் தருமா என்று கேட்டால், இல்லை. அது விஷத்துக்கு எதிரி. அது நோய்க்கு எதிரி. ட்ரூயிடுகளது ஓக் மர சடங்கைச் சொல்லும் ப்ளினி, அவர்கள் பிழிந்த சாறு, விஷத்தை முறிக்க வல்லது என்று சொன்னது கவனிக்கத் தக்கது. அதனால்தான் வேத மரபிலும் சோம பானத்தை அமிர்தம் என்று சொல்லியிருக்கிறார்கள்.


புஷ்பாரோவில் அடக்கம் செய்யப்பட்ட மனிதன் சோம பானமும், நவக்கிரக்க் காப்பு யந்திரமும் கொண்டிருந்தால் ஏன் இறந்திருக்க வேண்டும்?


நிச்சயமாக விஷத்தாலோ, நோய் காரணமாகவோ அவன் இறந்திருக்க முடியாது. அவனது வலிமை மிக்க உடல்வாகினால் அவன் நோய் வாய்ப்பட்டு, உடல் குன்றி இறக்கவில்லை என்று தெரிகிறது.


அப்படியானால் அவன் இறந்த காரணம் வில்ட்ஷையர் என்னும் அந்த இடத்தில் இருக்கிறது. அங்கு வெளிப்படும் அதீத சக்தி ஓட்டத்தினால் அவன் தாக்கப்பட்டிருக்கலாம். அதனால் அவன் இறந்திருக்கலாம். (அவன் உடலை இன்னும் ஆராய்ந்து இறந்த காரணத்தைக் கண்டுபிடிக்கவில்லை).  இறந்த இடத்திலேயே அவனைப் புதைத்திருக்கிறார்கள். அவனை அதுவரை காத்து வந்த, அல்லது அவனால் வழிபடப்பட்ட  யந்திரத் தகட்டை அவனது நெஞ்சில் வைத்திருக்கிறார்கள்.


பொதுவாக ட்ரூயிடுகள் (கெல்டுகள்) இறந்தவர்களை எரிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். இது வேதமதப் பழக்கத்தை ஒத்திருக்கிறது. இதை ஜூலியஸ் சீசரும், பிற பழைய வரலாற்று ஆசிரியர்களும் எழுதியுள்ளனர். அது மட்டுமல்ல, இறந்தவர்களது சிதையில் சில மிருகங்களையும் எரித்தனர் என்று சீசர் கூறுகிறார். இதுவும் த்ருஹுயுக்கள் காலத்தில் பாரத்த்தில் இருந்த வழக்கமாக இருக்க வேண்டும். ஏனெனில் ரிக் வேத்த்தில் பித்ரு-மேதா எனப்படும் அடக்கம் செய்யும் சடங்குகளில், இப்படி அடக்கம் செய்யும் விவரம் கூறப்பட்டுள்ளது. ராவணன் இறந்த போது பித்ரு- மேதா சடங்குகள் செய்யப்பட்டன என்றும், ஒரு ஆட்டைக் கொன்று அவனது சிதையில் இட்டார்கள் என்றும் வால்மீகி ராமாயணம் கூறுகிறது. அரசர்களை அடக்கம் செய்த போது இவ்வாறு செய்திருக்கலாம்.

வேத மரபில் அகால மரணம் அடைந்தவர்களை புதைக்கும் வழக்கமும் இருந்தது. இதைச் சொல்லும் ரிக் மந்திரங்கள் இருக்கின்றன. ட்ரூயிடுகளிடையே இந்த வழக்கமும் இருந்திருக்கிறது. புஷ்பாரோ மனிதன் அகால மரணம் அடைந்திருக்கவே அவனை புதைத்திருக்கின்றனர்.


நமக்கு அவன் வைத்திருந்த தகடுதான் முக்கியமானது. ஏனெனில் அதில் உள்ள அமைப்பை ஒத்த ஒரு அமைப்பை ஒரு முக்கிய வாஸ்து அமைப்பில் காணலாம். அது நாம் சொல்லப்போகும் இரண்டாவது விளக்கமாகும்.



Fig 15

 

இதன் அமைப்பை வரைபடமாகக் காட்டினால் அது இவ்வாறு இருக்கும்.


Fig 16


இதே அமைப்பில் மும்பையில் உள்ள எலிஃபண்டா குகையில் உள்ள சிவன் கோவிலின் அமைப்பு இருக்கிறது. அந்தக் கோவிலின் வரைபடம் கீழே.


Fig 17

http://indiatemple.blogspot.in/2005/12/moment-longer-at-elephanta-caves.html


 

இதில் சில கோடுகளை இழுத்தால் இப்படித் தெரிகிறது.

 

 

 

Fig 18

 

இதை ட்ரூயிட் தகட்டுடன் ஒப்பிடலாம்.

Fig 19

 

இவற்றின் உள்கட்ட அமைப்பு ஒன்றாக இருப்பதைக் காணலாம். எலிஃபண்டா கோயிலின் வாஸ்து அமைப்பும், பொன் தகட்டின் அமைப்பும் ஒன்றே.

அண்டத்தில் பரந்துள்ள சக்தியை, அதன் சிறிய அமைப்பில் (MINIATURE), அப்படியே அமைப்பது வாஸ்துவாகும், வாஸ்து என்றால் வசித்தல் என்றும் ஒரு பொருள் உண்டு. யார் வசிப்பதற்கு? அண்டத்தில் உள்ள தெய்வ சக்திகள், அண்டத்தில் எந்த அமைப்பில் வசிக்கின்றனவோ, அதே அமைப்பை பூமியிலும் உண்டாக்கி அங்கே அந்தத் தெய்வச் சக்திகளை வசிக்கச் செய்தல் வாஸ்துவாகும்.


இதைப் புரிந்துக் கொள்ள ஒரு உதாரணம் சொல்லலாம். உலகத்துக்கு ஒரே ஒரு சூரியன் தான் இருக்கிறான். ஆனால் பூமியின் மீது நீர் நிரம்பிய பல கிண்ணங்களை வைத்தால் அவை ஒவ்வொன்றிலும், தனித்தனியாக அந்தச் சூரியன் தெரிவான். இதையே வேறு விதமாகச் சொல்வதென்றால், மாபெரும் சூரியனை, அவனது தோற்றத்தில் எந்தவித மாறுதலையும் செய்யாமல், மிகச் சிறிய இடத்திலும் ஆவாஹனம் செய்து விட முடியும்.


அது போலத்தான் தெய்வங்களை கோயில்களில் ஆவாஹனம் செய்கிறோம், யந்திரத் தகடுகளில் ஆவாஹனம் செய்கிறோம். முதலில் உருவம் அல்லது வடிவத்தைக் கொண்டு வந்து விட்டு, பிறகு அந்தச் சக்தியை மந்திரம், ஜபம் மூலமாக அங்கே குடி கொள்ள வைப்பது வேத மரபின் வழிமுறையாகும்.

பூமியின் மீது மண்ணாலும், கல்லாலும் உருவம், வடிவம் மற்றும் தோற்றத்தைக் கொண்டு வருவதற்கு வாஸ்து சாஸ்திரம் அடி கோலுகிறது. கோயில் வழிபாட்டுக்கு அந்த வடிவம் பயன்படுகிறது. அதே வடிவத்தை இன்னும் சிறிய அளவில் கொண்டு வந்து, பொன், வெள்ளி, செப்பு போன்ற உலோகத்தகடுகளில் பதித்து, அதில் அதற்குரிய தெய்வ சக்தியை ஆவாஹனம் செய்து வழிபடுதல் யந்திர வழிபாடாகும். அது தனி நபர் செய்யும் வழிபாட்டுக்குப் பயன்படுகிறது. இவை இரண்டுக்கும் மூல வடிவம் ஒன்றுதான். அப்படிப்பட்ட ஒரு ஒற்றுமையை எலிஃபண்டா குகையில் உள்ள இந்தக் கோயிலின் அமைப்பிலும், எங்கோ இங்கிலாந்தில் வாழ்ந்த அந்த ட்ரூயிட் வழிபட்ட பொன் தகட்டிலும் காண்கிறோம்.


இவை ஒரே மூலத்தில்இருந்துதான் உண்டாகி இருக்க வேண்டும் என்று தெரிகிறது.. வெறும் கட்டட வேலை என்றால், அது ஒரு கலையாக ஒரே அளவு, அமைப்புகள் என்று உலகம் முழுவதும் பரவியது எனலாம். ஆனால் இங்கு காட்டப்பட்டுள்ள இரண்டு விவரங்களுமே, மத நம்பிக்கை சார்ந்தவை. இவை ஒரே மூல  மதத்திலிருந்து தோன்றியிருந்தால் தான் இப்படி அமைய முடியும். இவற்றின் காலக்கட்டம் வேறு வேறாக இருக்கலாம். ஆனால் மூலம் ஒன்றானதால், இந்தக் கருத்துக்களது பழமை தெரிகிறது.


கட்டட அமைப்புகள் எல்லாம் மய வாஸ்துவைப் பின்பற்றி அமைந்துள்ளன. 84, 85 ஆவது கட்டுரைகளில், மஹாபாரதக் காலத்திலேயே வட இந்தியாவில் மயன் தொடர்புகள் ஏற்பட்ட விவரங்களைப் பார்த்தோம். அந்த மயன் தானவன். அவன் ஒருவனல்லன். அவன் பெயரால் ஒரு குலம் அல்லது மக்கள் கூட்டம் இருந்திருக்கிறது. அல்லது மய வாஸ்துவைப் பின்பற்றிய மக்கள் உலகெங்கும் இருந்தார்கள் என்று சொல்லும் வண்ணம் ஒரே விதமான வாஸ்து விதிகளது அடிப்படையில் உலகின் பல இடங்களிலும் கோயில், அல்லது நம் நாட்டுக் கோயிலை ஒத்த அமைப்புகள் காணப்படுகின்றன.

இந்தப் படத்தில் அப்படிப்பட்ட அமைப்புகள் காணப்படும் இடங்கள் குறிக்கப்பட்டிருக்கின்றன


Fig 20 (மூலம்: 'VOYAGES OF THE PYRAMID BUILDERS' by ROBERT M.SCHOCH)


இங்கெல்லாம் பல் வேறு காலக் கட்டங்களில் ஒரே விதமான கோயில் கட்டடக் கலை பரவியிருக்கிறது. அவை வழிபாட்டு இடங்களாக இருப்பதால் அவை சார்ந்த மத நம்பிக்கைகள் ஆதியில் ஒன்றாக இருந்திருக்க வேண்டும், அவை காலப்போக்கில் மாறுபாடு அடைந்திருக்க வேண்டும்.


இவற்றுக்கெல்லாம் மூலம் இந்தியாவில்தான் இருந்தது என்று சொல்லும் வண்ணம், இவற்றுக்கானஅதாவது அந்த மத நம்பிக்கைகளுக்கான ஆதாரக் கருத்துக்கள் பாரதத்தின் வேத மரபு சார்ந்த நூல்களிலும், வழக்கத்திலும் இன்றும் இருந்து வருகிறது. அதாவது மய வாஸ்துக் கொள்கைகள் வேத மரபை ஒட்டி எழுந்துள்ளன. ஆனால் மெக்ஸிகோவில் காணப்படும் மயன் மக்கள் பின்பற்றிய மத நம்பிக்கைகள் அதில் கணப்படவில்லை. எனவே பல் வேறு காலக்கட்டங்களில் பல் வேறு மயன்கள் இருந்திருந்தாலும், அவர்கள் தானவர்கள் எனப்பட்டாலும், மய வாஸ்து என்பது ஒரு மூல சாஸ்திரமாக, வேதமரபின் சாஸ்திரமாகவே இருந்திருக்கிறது. 


அதற்கான ஒரு உதாரணமாக எலிஃபண்டா குகை அமைப்பும், புஷ் பாரோ மனிதனது பொன் தகடு அமைப்பும் இருக்கின்றன.  இன்னொரு உதாரணமாக, எலிஃபண்டா குகையில் உள்ள திரிமூர்த்தி சிலையைச் சொல்லலாம்.



Fig 21


எலிஃபண்டா குகையில் காணப்படும் இந்தச் சிலையில் சிவன் மூன்று முகங்களுடன் காட்சியளிக்கிறார். இதுவே பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளாகவும் இருக்கலாம். அல்லது பஞ்சமுக சிவனாகவும் இருக்கலாம் என்று சொல்கிறார்கள்.


ஆனால் சிற்பம் வடிப்பதற்கான சிற்ப லக்ஷணங்களைக் கூறும் மயமதம் என்ன கூறுகிறது என்று பாருங்கள். சிவனுக்கு மொத்தம் 16 உருவங்கள் இருக்கின்றன என்று சொல்லி அவற்றைச் சிலை வடிக்க லக்ஷணங்களையும், அளவுகளையும் அந்தப் புத்தகத்தின் 36 ஆவது அத்தியாயத்தில் விவரிக்கிறது. அவற்றில் ஒன்றான 'முகலிங்கம்" மேற்காணும் எலிஃபண்டா உருவத்தை ஒத்திருக்கிறது.


முகங்களுடன் கூடியதால் அது முகலிங்கம். இதில் நான்கு முகங்கள் இருக்கின்றன. நான்காவது முகம் பின்புறம் இருக்கிறது. அது செதுக்கப்படவில்லை. முன்புறம் (கிழக்கு) இருக்கும் முகம் தத்புருஷன். காதில் மகரக் குழையுடனும், மூன்றாவது கண்ணுடனும் இருக்கும். நமக்கு வலது புறம் (சிலைக்கு வடக்கு) இளமையுடனும், பூக்களுடனும், தலையில் பிறைச் சந்திரனுடனும் இருக்கும். நமக்கு இடது புறத்தில் (தெற்கு) உக்கிரமான அகோர ரூபத்திலும், பாம்புகளுடனும் இருக்கும்.  


மூன்று முகங்களுடன், பிரம்மா, விஷ்ணு, சிவன் என்னும் மூன்று முகங்களுடன் ரிஷி லிங்கம் என்னும் பெயரிலும் முக லிங்கம் அமையும் என்கிறது மயமதம். இந்த லக்ஷணங்களை இதில் பார்க்கிறோம். இங்கு நாம் காட்ட வரும் ஒற்றுமை என்னவென்றால், லிங்க உருவிலும், அதில் மூன்று முகங்களுடனும் ஒரு வடிவத்தைக் கெல்டு மக்கள் வழிபட்டுள்ளார்கள்.  

 

 

 

Fig 22

http://en.wikipedia.org/wiki/File:Autel_tricephale_MuseeStRemi_Reims_1131a.jpg


இந்தச் சிலை, கால் (GAUL) மக்கள் வசித்து வந்த ஃப்ரான்ஸ் நாட்டில் கிடைத்துள்ளது. இந்தக் கடவுளை லூ (LUGH அல்லது  LUGUS) என்றழைத்தார்கள். அதே லூ கடவுளை மூன்று முகங்கள் கொண்ட மனித உருவில் அதே ஃப்ரான்சில் உள்ள பாரிசில் கண்டுபிடுத்துள்ளார்கள். 

 


Fig 23


இந்த உருவம் செதுக்கப்பட்ட கல், லிங்க உருவில் இருப்பதைக் காணவும். இந்த உருவத்தின் ஒரு கையில் ஏதோ ஒரு பை போன்ற பொருள் இருக்கிறது. மற்றொரு கையில் கமண்டலம் போன்ற ஒன்றைப் பிடித்திருக்கிறார்.


கையில் உள்ள பை கேர்நூனோஸின் கையில் உள்ள பை போல இருக்கிறது.


Fig 24


குபேரனைப் போல காசுகள் கொட்டும் கேர்நூனோசைப் போலவே லூவும் ஒரு பையை வைத்திருக்கிறார். இப்படிக் காசுகள் கொட்டுவது வேத மரபில் லக்ஷ்மிக்கு உரியது என்பதை நினைவில் கொள்வோம். அதே நேரம் லூவின் கையில் உள்ளது, எலிஃபண்டா திரிமூர்த்தியின் கையில் உள்ளதை ஒத்தும், அதைப் போன்ற அமைப்பில் பெரிய வடிவத்திலும் ஏந்தியுள்ளது.  கீழுள்ள படத்தில் ஒப்பீட்டைக் காணலாம்.

 

Fig 25

 

அமைப்பு ஒற்றுமைகள் இதனுடன் முடியவில்லை. மயமதம் தரும் அளவுகள்படி, முகங்களின் அகலம், மொத்த உருவத்தின் உயரத்தில் பத்தில் மூன்று பங்கு இருக்க வேண்டும். லூ சிற்பத்தில் ஏறத்தாழ இருக்கிறது.

மும்முகக் கருத்து வேத மதக் கருத்து. மும்மூர்த்திகளைக் குறிக்கும் கருத்து. இந்தக் கடவுளையும் மும்மூர்த்திகள் என்று சொல்லி மூன்று தொழில்கள் செய்யும் கடவுள்களது தொகுப்பாக, ரோமானியக் கவிஞர் லூகன் (LUCAN) என்பவர் 2000 ஆண்டுகளுக்கு முன் எழுதி இருக்கிறார். ஆனால் பழைய கருத்துக்கள் அனைத்தும் அழிந்து விட்டதால் பல புனைக் கதைகள் பிற்காலத்தில் எழுந்து விட்டன. இந்த முகங்களைப் புதன், வியாழன் போன்ற கிரக தேவதைகளாக இன்று எண்ணுகின்றனர்.


இந்த லூ (LUGH  அல்லது LUGUS)  என்னும் கெல்டுக் கடவுளைப் பற்றி எந்த விவரமும் கிடைக்கவில்லை. எல்லாவற்றையும் அழித்தாகி விட்டது. ஆனால் 2000 ஆண்டுகளுக்கு முன் இந்தக் கடவுள் ஐரோப்பாவின் பல பகுதிகளிலும் முக்கியமாக வழிபடப்பட்டார் என்று சொல்லும் வண்ணம் ஸ்பெயினில் ஆரம்பித்து, இங்கிலாந்து, அயர்லாந்து உட்பட, ஃப்ரான்ஸ், போலந்து, ரஷ்யா என்று ஐரோப்பா முழுவதும் லூ என்னும் பெயர் தொடர்புடன் பல இடங்கள் இருக்கின்றன. இவரை முன்னிட்டு லூனசத் (LUGNASADH) என்னும் அறுவடைப் பண்டிகையும் செய்திருக்கிறார்கள். விவரங்களுக்கு இந்த இணைப்பைப் பார்க்க: (லூனசத்துக்கும் வேத மரபில் இருக்கும் ஒரு வழக்கத்துக்கும் இருக்கும் தொடர்பை இன்னொரு கட்டுரையில் காண்போம்.)

http://www.celtnet.org.uk/gods_l/lugus.html


இந்த உருவத்தை நாம் பார்க்கும் போது மும்மூர்த்தி உருவம் என்று தோன்றினாலும், இது முகலிங்கம் அல்லது திரிலிங்கம் எனப்படும் சிவனது உருவமே என்று சொல்லும் வண்ணம் ஒரு ஆதாரம் இருக்கிறது. இந்த மும்முகத்துக்கு ஒப்பாக பொ.பி 2 ஆம் நூற்றாண்டில் காந்தாரத்தில் சிவன் உருவம் ஒன்று கிடைத்துள்ளது. அதைக் கீழே காணலாம். கெல்டிக் லூ கடவுளைப் போலவே மீசையுடன் இருக்கும் இந்தச் சிலையில், நெற்றிக் கண்ணுடனும், கையில் திருசூலத்துடனும், பக்கவாட்டில் இரு முகங்களுடனும் சிவன் காட்சி தருகிறார்.


 


Fig 26

http://en.wikipedia.org/wiki/File:ThreeHeadedShivaGandhara2ndCentury.jpg


காந்தாரம் என்பது 7000 ஆண்டுகளுக்கு முன்பே த்ருஹ்யூக்கள் வெளியேறிச் சென்ற பகுதியாகும் என்று 105 ஆவது கட்டுரையில் கண்டதை நினைவில் கொண்டு வருவோம். இந்தக் காந்தார சிவன் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டது. அதற்கு முன் வரை த்ருஹ்யூக்கள் சென்ற அல்லது வாழ்ந்த ஐரோப்பாவில் இதே போன்ற சிலைகள், உருவ வழிபாடுகள் இருந்தன என்றால் அது திரிமூர்த்தி வழிபாடாக அல்லது சிவன் வழிபாடாகத்தான் இருக்க வேண்டும். (ஐரோப்பா முழுவதும் லிங்க வழிபாடு இருந்தது என்பதற்குப் பல சான்றுகளை இன்னொரு கட்டுரையில் காண்போம்.)


இதன்  மூலம் திரிமூர்த்தி கோயில் கொண்டிருக்கும் எலிஃபண்டா குகைக் கோயிலின் அமைப்பும், 4000 ஆண்டுகளுக்கு முற்பட்ட ட்ரூயிட் ஒருவன் வழிபட்ட பொன் தகடு யந்திர அமைப்பும் ஒன்றாக இருப்பதும் எதேச்சையானது அல்ல என்றும் தெரிகிறது. திரிமூர்த்தி வழிபாட்டின் அடிப்படை வடிவம் எலிஃபண்டா கோயில் அமைப்பில் இருக்கிறது. அதே போன்ற ட்ரூயிட் தகடும் சிவன் அல்லது திரு மூர்த்தி வழிபாட்டைக் குறிப்பதாக இருக்க வேண்டும்.


இனி மூன்றாவது விளக்கத்துக்குச் செல்வோம். இதில் லக்ஷ்மியின் தொடர்பு தெரிகிறது.  இந்தத் தொடர்பைக் காண சென்னைக்கு அருகிலுள்ள திருநின்றவூருக்குச் செல்ல வேண்டும். அது திரு நின்ற ஊர், அதாவது திரு என்னும் லக்ஷ்மி அங்கே நிலைபெற்று இருக்கிறாள் என்ற கருத்தில் உள்ளது. செல்வம் தரும் லக்ஷ்மியை வழிபட ஒரு யந்திர அமைப்பை அங்கு படமாக வரைந்து வைத்திருக்கிறார்கள். அது புஷ்பாரோ மனிதனது பொன் தகட்டில் உள்ள உள்ள 3 x 3 = 9 கட்ட அமைப்பே.

Fig 27


இதில் ஒவ்வொன்றின் கூட்டுத்தொகையும் 9 என்னும் நவக்கிரகங்களைக் குறிக்கிறது. இதை வழிபட சில பூஜா விதிகள் இருக்கின்றன. இதை வழிபடுவதால் லக்ஷ்மி கடாக்ஷமும், செல்வமும் கிடைக்கும்.


லக்ஷ்மிக்கும் பொன்னும் சம்பந்தம் உண்டு, அவள் பொன் மயமானவள் என்பது வேதக் கருத்து. அந்த புஷ் பாரோ ட்ரூயிட், பொன் தகட்டில் இந்த அமைப்பைக் கீறி லக்ஷ்மியை  வழிபட்டானோ என்று கருத இன்னொரு காரணமும் இருக்கிறது. அதுவும் திருநின்றவூரில் இருக்கிறது, அந்த க்ஷேத்திரத்தில் சமுத்திரராஜன் எனப்படும் வருண பகவானுக்கு விஷ்ணு காட்சி அளித்தார் என்று தல புராணம் கூறுகிறது. வருணன் பெயரில் வருண புஷ்கரிணி என்னும் குளமும் இருக்கிறது, அந்த வருணன் லக்ஷ்மிக்குத் தந்தையாவான் (லக்ஷ்மி கடலிலிருந்து தோன்றியதால் தந்தை). அந்த க்ஷேத்திரத்தில் தனது மாமனார் வீட்டில் விஷ்ணு தங்கியிருப்பதாகத் தல புராணம் கூறுகிறது.


அந்த வருணனுடைய இருப்பிடத்தில்தான் தானவர்கள் ஆதியில் வசித்து வந்தார்கள். வருணன் என்னும் கடல் சூழ்ந்திருந்த ஹிரண்யபுரத்தில் தானவர்கள் வசித்து வந்தார்கள் என்று மஹாபாரதத்தில் சொல்லப்படுகிறது. அவர்களுடன் அர்ஜுனன் சண்டையிட்டதையும், மாதலி தன் மகளுக்கு வரன் தேடினதையும் மஹாபாரதத்தில் விரிவாகக் காணலாம்.  அந்த விவரங்களில் ஹிரண்யபுரத்தின் இருப்பிடத்தையும் காண முடிகிறது. அது இந்தியப் பெருங்கடலில், பூமத்திய ரேகைக்கு அருகே இருந்தது. அங்கிருந்த தானவர்களே ஐரோப்பாவுக்குச் சென்றனர் என்பதைக் காட்ட மஹாபாரதத்தில் பல விவரங்கள் இருக்கின்றன.

'ஹிரண்ய' என்றால் பொன் என்று பொருள். லக்ஷ்மிக்கும் அதே பெயர்ஹிரண்மயிவேதத்தில் இருக்கிறது அவர்கள் பொன், ரத்தினங்களைக் கொண்டு அழகிய வேலைப்பாடுகள் அமைந்த பொருட்களை உருவாக்கினார்கள்.


வருணன் என்னும் கடலிலிருந்துதான் செல்வங்கள் உண்டாயின. அதனால் லக்ஷ்மி வருணனது மகள் ஆவாள்.


லக்ஷ்மியைக் கர்தம ரிஷியின் மகள் என்று  ரிக் வேத ஸ்ரீசூக்தம் கூறுகிறது. கர்தமரே பிரஜாபதிக்கு முதலில் பிறந்தவர் என்று ஜடாயு தன்னை ராமனிடம் அறிமுகப்படுத்திக் கொள்ளும் இடத்தில் கூறுகிறார். (வால்மீகி ராமாயணம் 3- 14).


கர்தமன் என்றால் மண் என்று பொருள். பூமியின் சுழற்சியால் கடல் கடையப்படுவதால் எழுந்த முதல் செல்வம் நிலப்பகுதியாகும். ஒரு பானை போல பூமியானது சுழன்று, வட பகுதிக்கும், தென் பகுதிக்கும் இருட்டு (அசுரன்) வெளிச்சம் (தேவன்) என்று மாறி மாறி இழுக்கப்படுவதால் (சமுத்ர மந்தன்) கடல் கடையப் படுகிறது என்றார்கள். அந்தக் கடைதலில் எழுந்த நிலத்தின் மண் முதல் பிறப்பாகும். அந்த மண்ணைக் குழைத்து பாண்டங்கள் செய்து அதில் உணவு சமைக்க மனிதன் கற்றுக் கொண்டதால் அந்த மண் முதல் செல்வமாகிறது. அதனால் லக்ஷ்மி கர்தம ரிஷியின் (மண்) மகளாகிறாள்.


மண்ணைக் கொண்டு உருவங்களும், வீடுகளும் கட்டியவர்கள் மயன் என்பவர்.


அவர்கள் தானவர்கள்!


அந்த மண்ணிலிருந்து கிடைத்த உலோகங்களைக் கொண்டு பொருட்களைச் செய்தவர்கள் தானவர்கள்.


கட்டடம், சிற்ப சாஸ்திரங்களில் உலோகம் பயன்படுகிறது. தானவர்கள் உலோக வேலை, பொன் முதலான உலோகங்களைக் கொண்டு பல பொருட்களைச் செய்தவர்கள் என்று அர்ஜுனன் கூறுகிறான். இதையே ஐந்திறம் என்று, ஒரு சிற்பிக்கு ஐந்து திறமைகள் இருக்க வேண்டும் என்று மயன் கூறியுள்ளான் என்பதை 2 ஆம் சங்கத்தில் அவன் அரங்கேறிய நூலில் காண்கிறோம்..


ஒரு கட்டடமோ அல்லது சிற்பமோ வடிக்க வேண்டுமென்றால் ஒருவனுக்கு, இயல், இசை, நாடகம், கட்டடம், சிற்பம் ஆகிய ஐந்து இயல்களில் திறமை இருக்க வேண்டும். இதை அறிந்தவர்கள் ஆதியில் ஹிரண்யபுரம் போன்ற தென் பகுதிகளில் இருந்தார்கள். பிறகு படிப்படியாக பாரத நாட்டின் வடமேற்கிலும், இமயமலைப் பகுதிகளிலும் குடியேறினார்கள். அவர்களுள் பலர் பாரத மக்களுடன் திருமண உறவு கொண்டனர், அப்படி ஏற்பட்ட ஒரு உறவில் பிறந்தவனே த்ருஹ்யு. அவனும், அவனைச் சேர்ந்தவர்களும் பாரதப்பண்பாட்டைத் தாங்கி ஐரோப்பாவுக்குச் சென்றவர்களே.

 

அந்த தானவர்களது பூர்வீகத்தைப் பற்றிய விவரங்களையும் நாம் வெளிக் கொணர்ந்தால்தான், தானவர்கள் இந்தியப் பகுதி வழியாகச் சென்றவர்கள் என்றும், இந்தியா வழியாகத்தான் கலாசாரம் ஐரோப்பாவுக்குச் சென்றிருக்கிறது என்பதை ஐயம் திரிபற நிரூபிக்கலாம். எனவே தானவர்களது ஹிரண்யபுர மூலத்தைச் சொல்லிவிட்டு மேலே தொடருவோம்.

 

 

 

 

 

 

 

 

2 கருத்துகள்:

  1. Hi Madam,

    Your work is amazing. While i was hearing Ramayana and Mahabharatha stories in my childhood, I was asking more doubts to my parents about Rama and Ravana. Now your articles cleared most of my doubts. Let me ask my questions in the Ramayana

    1. Could u mention the Rama and lakshman's travelling path (Especially in TamilNadu) after Sita had been taken away by Ravanna.

    2. Could u mention at which place did Rama meet Sabari?

    3. At which place did Rama kill the Ravana's uncle (Mareechan) who came like Deer?

    4. At which place sita has been kept by Ravana in Sri Lanka

    5. Where was Hanuman's birth place?

    All questions are related to the places... If u can pls, mention the places in ur reply.. else do a separate post.. Its my request. Keep posting madam. All the best.

    (As I dont know how to type in tamil, I asked my questions in English... Pls reply ur answer in Tamil.)

    Regards,
    Manikandan Bharathidasan

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. ராமாயண இடங்களில் நான் தனிப்பட ஆராயவில்லை, இந்தத் தொடருக்குத் தேவையான கருத்துக்களயே இதுவரை தந்துள்ளேன், ராமாயண இடங்களைப் பற்றி பல ஆராய்ச்சிகள் வந்து விட்டன. அந்த இடங்களைக் கண்டு பிடித்தும் விட்டார்கள். இணைய தளத்தில் தேடினால் கிடைக்கும்.

      நீக்கு