திங்கள், 31 ஜனவரி, 2011

35. ரிஷிகள் வாழ்ந்த சைபீரியா!



ரஷ்யாவின் சைபீரியாப் பகுதி அதிக மனித நடமாட்டம் இல்லாத பகுதி.
அங்கு குளிரும் பனியும் அதிகம்.
பூமியின் சாய்மானத்தைப் பொறுத்து இந்தப் பகுதிகளில் மக்கள் வாழ்வதற்கு ஏற்றவாறு சீதோஷ்ண நிலை அமைகிறது.
பூமி தன்னுடைய அச்சில் இடை விடாமல் சுழன்று கொண்டிருக்கவே இந்த சாய்மானம், 22 டிகிரி முதல் 25 டிகிரி வரை மாறுபடுகிறது.
சாய்மானத்தில் இந்த வேறுபாடு வருவதற்கு 41,000 ஆண்டுகள் ஆகின்றன என்று கண்டுபிடித்துள்ளார்கள். மிலன்கோவிட்ச் என்பவர் இதைக் கண்டுபிடிக்கவே இதற்கு மிலன்கோவிட்ச் தியரி என்று பெயர்.


இதன்படி பூமியின் தற்போதைய சாய்மானமான 23-1/2 டிகிரி என்பது குறைந்து கொண்டே வருகிறது. அதிக சாய்மானம் இருந்த போது பூமியின் வடபாகம், அதாவது சைபீரியாப் பகுதிகள் பனியில் உறைந்து கிடந்தன. அந்தக் காலக் கட்டத்தைப் பனியுகம் என்கிறார்கள்.
சாய்மான மாறுபாட்டால், அந்தப் பகுதிகளில் வெயில் விழ ஆரம்பிக்கவே பனி யுகம் முடிந்தது.
பனி யுகம் முடிவுக்கு வந்த காலம் இன்றைக்கு 13,000 ஆண்டுகள் முதல் 17,000 ஆண்டுகளுக்குள் இருந்திருக்க வேண்டும் என்பது விஞ்ஞானிகளின் கணிப்பு.
இந்த விவரம் மிக முக்கியமான விவரம். பனியுகம் முடியவே பனி உருகி கடலில் கலந்து, அதனால் கடல் மட்டம் உயர்ந்து, மூன்று முறை கடல் கோல்களால் குமரிக் கண்டம் மூழ்கடிக்கப்பட்டது.

பனியுகம் முடிந்ததால், பாரதத்துக்கும், சைபீரியப் பகுதிகளுக்கும் போக்குவரத்து ஆரம்பித்தது.
இமயமலைக்கு அப்பால், வடக்கில் இருந்த அந்தப் பகுதி பல பெயர்களால் அழைக்கப்பட்டது.
மொத்தப் பகுதிக்கும் ஐராவத வர்ஷம் என்று பெயர்.
ஐராவதம் என்பது இந்திரனது யானையின் பெயர்.
இந்திரனது உலகம் அங்கு இருந்தது.
அதுவும் ஒரு ராஜ்ஜியமாகத்தான் இருந்திருக்கிறது.
இந்திரனுக்குச் சக்கரன் என்று இன்னொரு பெயரும் உண்டு.
அந்தப் பெயரைக் கொண்டு அந்தப் பகுதியை சக்கரவாளச் சக்கரவர்த்திகள் ஆண்டார்கள் என்று தமிழிலும்,
நான் அறிந்த வரையில் இரண்டு இடங்களில் சொல்லப்பட்டுள்ளன.
அவற்றை வரும் பகுதிகளில் காண்போம்.

ஐராவத வர்ஷத்தின் வடக்கில் வட கடல் உள்ளது (ஆர்டிக் கடல்)
அதை ஒட்டிய வட துருவப்பகுதி சோம கிரி என்ப்பட்டது.
ஐராவத வர்ஷத்தின் தென் பகுதி அதாவது இமய மலையின் வட பகுதி உத்தர-குரு என்றழைக்கப்பட்டது.
(கு என்பதைக் குயில் என்னும் சொல்லில் உள்ள கு- வைப் போல உச்சரிக்க வேண்டும்)

உத்தரம் என்றால் வடக்கு என்பது பொருள்.
இமய மலைக்கு வடக்கில் உள்ளது உத்தர குரு.
இமய மலைக்குத் தெற்கில் உள்ள நாட்டை தக்‌ஷிண குரு என்று அழைக்கவில்லை.
அதைப் பாரத வர்ஷம் என்றே அழைத்தனர்.
தெற்கில் குரு வம்சத்தினர் வாழந்தார்கள்.
பாண்டவர்கள் குரு வம்சத்தைச் சேர்ந்தவர்கள்.
அவர்களது மூதாதையர் உத்தர குருவில் வாழ்ந்தனர் என்றே சொல்லியுள்ளனர்.
அதாவது இவர்களில் ஒரு பிரிவினர் உத்தர குரு சென்று குடி அமர்ந்துள்ளனர்.


இன்னொரு வகையிலும், உத்தர குருவுக்கு பாரத மக்கள் குடி பெயர்ந்துள்ளனர். அது எப்படி என்று வால்மீகி ராமாயணம் கூறுகிறது.

பொதுவாக ராமாயண காலத்தில் ரிஷிகள் இரண்டு இடங்களில் வாழ்ந்துள்ளனர். தென்னிந்தியாவில் உள்ள தண்டகாரண்ய காட்டுப் பகுதிகளில் கிருஹஸ்த வாழ்க்கையில், மனைவியுடன் குடும்பம் நடத்திய ரிஷிகள் வாழ்ந்தனர்.
ராமன் வனவாசம் சென்ற போது இவர்களைச் சந்தித்தான்.

கிருஹஸ்த வாழ்க்கையை விட்ட ரிஷிகள் வானப்ரஸ்ததுக்கு வைகானஸ ஏரிப் பகுதிக்குச் சென்றிருக்கின்றனர்.
கடை நிலையான சன்யாசி வாழ்க்கை, மற்றும் யோக வாழ்க்கையை இமய மலையில் கழித்துள்ளனர்.
வானப்ரஸ்த நிலையை மேற்கொண்ட ரிஷிகள் வைகானஸ ஏரிப்பகுதிக்குச் சென்றனர்.
வானப்ப்ரஸ்த நிலைக்கே ‘வைகானஸ நிலை என்று பெயர். 
வைகானஸ ஏரிக்கரையில் அமையவே இந்தப் பெயர் வந்தது என்று தெரிகிறது. 
இந்த வைகானஸ ஏரியைப் பற்றிய வர்ணனை வால்மீகி ராமாயணத்தில் வருகிறது.


சீதையைத் தேட வானரர்கள் நான்கு திசைகளிலும் சென்றனர்.
அவர்களுக்கு வானர அரசனான சுக்ரீவன் கட்டளைகள் பிறப்பிக்கிறான். ஒவ்வொரு திசையைப் பற்றியும் அவன் சொல்லும் போது, பாரதத்திலிருந்து அந்தந்தத் திசையில் செல்லும் போது பார்க்ககூடிய நாடுகள், காடுகள், மக்கள், அவர்கள் வழக்கங்கள் என்று பல விவரங்களையும் தெரிவிக்கிறான்.
வடக்கு நோக்கிப் போகும்போது தெரிவிக்கும் விவரங்களின் மூலமாக அவன் சைபீரியப் பகுதிகளை விவரித்துள்ளான் என்று புலனாகிறது.
(கிஷ்கிந்தாகாண்டம் -43)

இமயமலைப் பகுதியில் கைலாச மலையைத்தாண்டி,
பிறகு மானசரோவரைத் தாண்டிச் செல்ல வேண்டும்.
இமய மலைப் பகுதிகளைக் கடந்து வடக்கில் சென்றால்,
வைகானஸ ஏரி வரும்.
அதன் கரையில் ரிஷிகள் தவத்தில் இருப்பார்கள்.
அவர்களைத் தொந்திரவு செய்யாதீர்கள் என்று சுக்ரீவன் கூறுகிறான்.
இந்தப் பகுதியில் இன்று இருப்பது பைகால் ஏரி என்னும் ஏரியாகும்.


இந்தப் படத்தில்
(1)     சக்‌ஷுஸ் நதிப் பகுதி (கேகய நாட்டுப் பகுதி)
(2)     புரூரவஸ் இருந்த பகுதி (விவரங்கள் பிறகு)
(3)     பைகால் ஏரி
(4)     ஸ்த்ரீ ராஜ்ஜியம் (விஷ்ணு கோயில் இருந்த இடம்)
(5)     அர்க்கைம் (ரஷ்யாவில் ஆராய்ச்சிகள் நடந்த இடம்)


                             பைகால் ஏரி


இந்த ஏரியின் நீர் மிகவும் சுத்தமானது.
கங்கை நீரைக் குடத்தில் வைத்திருந்தால், எந்த நுண் கிருமியும் உண்டாகாமல் எப்படி கெடாமல் இருக்கிறதோ அது போலவே இந்த ஏரியின் நீரும் கெடாமல் இருக்கிறது.
வைகானஸ ஏரி ஒரு புண்ணிய தீர்த்தம் என்று சொல்லப்பட்டுள்ளது.
பல மில்லியன் வருடங்களாக இந்த ஏரி இருந்து வந்திருக்கிறது.
இந்த ஏரிக் கரையில் ரிஷிகள் வைகானஸ வாழ்க்கை மேற்கொண்டனர் என்கிறான் சுக்ரீவன்.
வைகானம் என்பது உருமாறி பைகால் என்று காலப்போக்கில் ஆகியிருக்கலாம்.


சுக்ரீவன் சொல்லும் பிற குறிப்புகளும் ஒத்துப் போகின்றன. இந்த ஏரிப் பகுதி 55 டிகிரீ வடக்கில் இருக்கிறது. இங்கு சூரிய சந்திரர்கள் எப்போதும் தெரிவதில்லை.
இதைச் சுட்டிக் காட்டும் சுக்ரீவன் இந்த ஏரியின் வடக்கில் செல்லும் ஷைலோதம் என்னும் நதியைப் பற்றி விவரிக்கிறான்.
இந்த நதியை ரிஷிகள் கீசகம் என்னும் மரத்தின் கிளைகளைத் தெப்பமாகக் கொண்டு கடந்து செல்வர் என்கிறான்.
இந்த மரம் மூங்கில் போல் குழலுடன் கூடியது அதனால் ஒலி எழுப்புவது என்றும் கூறுகிறான். அந்த மரத்தின் கட்டைகளைக் கட்டி, அவற்றில் ஏறி நதியின் மறுகரைக்குச் சென்றனர் என்கிறான்.

அப்படிப்பட்ட மரங்கள் இன்றும் அங்கு அதிக அளவில் வளருகின்றன.
சென்ற பகுதியில் பார்த்தோமே பிர்ச் என்னும் பூர்ஜ பத்ர மரம்,
அதன் வகையைச் சார்ந்தது இந்த மரம்.
இன்றைக்கும் அந்த மரத்தைக் கொண்டு கட்டுமரம் செய்து அதில் பயணித்து பைகால் ஏரி மற்றும் அந்தப் பகுதி நதிகளைக் கடக்கிறார்கள்.
இந்த மரத்தைக் கொண்டு வாத்தியக் கருவிகள் செய்கிறார்கள்.


பைகால் ஏரியின் வடபகுதியில் ஓடும் பல ஆறுகளுள் அங்காரா நதி முக்கியமானது. சுக்ரீவன் சொன்ன நதி இதுவாக இருக்கலாம்.
இது வட கடலில் கலக்கிறது.
கீசகம் என்னும் பெயரை நினைவுறுத்தும் விதமாக கிசேரா என்னும் நதியும் பைகால் பகுதியில் உள்ளது.
அதைக் கட்டுமரம் கொண்டுதான் கடக்கிறார்கள்.


                               அங்காரா நதி


வைகானஸ ஏரிக்கு வடக்கே உத்தர குரு இருப்பதாக சுக்ரீவன் கூறுகிறான். 
புண்ணியம் செய்தவர்கள் அங்கே பிறக்கிறார்கள்.
அங்குள்ள மக்களுக்குள் போட்டி, பொறாமை, கெடுதி, கெட்ட எண்ணம் என்று எதுவும் இல்லை.
ஆடை முதற்கொண்டு எல்லாம் அவர்களுக்குக் இயற்கையில் கிடைக்கிறது. விருப்பம் போல அவர்கள் வாழ்ந்தார்கள்.
இசையும், இன்பமுமாக அவர்கள் வாழ்ந்தார்கள்.

மஹாபாரதத்திலும் சஞ்சயன் தூர திருஷ்டி மூலம் கண்டு இவ்வாறே கூறுகிறான்.
அங்கு மக்கள் ஜோடி ஜோடியாக (மிதுனம், தம்பதி) வாழ்ந்தனர்.
ஒருவரைப் பிரிந்து ஒருவர் வாழவில்லை.
அப்சரஸ் என்னும் பெண்கள் அங்கு வாழ்ந்தனர்.
அந்தப் பெண்கள் விருப்பப்படி வாழ்ந்தனர்.
உத்தர குருவுக்கு அப்பால் இந்திரனுலகம் உள்ளது என்று சுக்ரீவன் கூறுகிறான். 
உத்தரகுருவைப் போலவே இந்திர லோகத்தில் இருந்த மக்களும் கவலை, கஷ்டம் இன்றி, சந்தோஷமாக வாழ்ந்தனர். 
புராணக் கதைகளில் இந்திர லோகத்தில் எப்பொழுதும், ஏதாவது ரிஷி வந்து போய்க் கொண்டிருப்பார். வைகானஸ ஏரிப்பகுதியில் ரிஷிகள் வாழ்ந்தார்கள் என்பது இந்த சாத்தியத்தை அதிகப்படுத்துகிறது. 
பூமியின் ஒரு பகுதியில்தான் தேவர்கள் வாழ்ந்தார்கள் என்பதை வலியுறுத்தும் வண்ணம் தேவர்களுக்குப் பிறந்த வீரர்கள் நம் நாட்டில் பேசப்பட்டுள்ளனர்.


பாண்டவர்கள் அனைவருமே தேவர்களுக்குப் பிறந்தவர்கள்.
குந்திக்கு, இந்திரனிடம் பிறந்தவன் அர்ஜுனன் என்றால் அந்த இந்திரன் எங்கோ உலகில் இருந்தவனாகத்தானே இருக்க முடியும்?
இதில் வேற்றுலத் தொடர்பு எதுவும் இல்லை என்று சொல்லும் வண்ணம் ஒரு விவரம் இருக்கிறது.


கர்ணன் சூரியனுக்குப் பிறந்தவன் ஆவான்.
அந்த சூரியன் எங்கிருந்தான் என்று சொல்லப்படவில்லை.
ஆனால் அதே சூரியனுக்கும், சம்ஞ்ஞா என்பவளுக்கும் உத்தர குருவில் ரேவந்தன் என்பவன் பிறந்தான் என்று மார்கண்டேய புராணம் கூறுகிறது.
அந்த சூரிய புத்திரன் உதீச்சய வேஷத்துடன் இருந்தான்.
அதாவது கவச குண்டலத்துடன் பிறந்தான் என்று அந்தப் புராணம் கூறுகிறது. உதீச்சயம் என்றால் வடக்கு என்று பொருள்.
உத்தரகுரு மக்களைப் போன்ற அலங்காரத்துடன் அவன் இருந்தான்.
அவனைப் போலவே சூரியனுக்குப் பிறந்த கர்ணனும் கவச குண்டலத்துடன் உதீச்சய வேஷத்துடன் பிறந்தான்.

கர்ணனுடன் இந்த ஒற்றுமை இருப்பதால், ரேவந்தனின் தந்தை சூரியனும், கர்ணனது தந்தை சூரியனும் ஒருவனே அல்லது ஒரே வம்சத்தில் அதே பெயருடன் வந்தவர்களே என்று தெரிகிறது.
ரேவந்தனின் தந்தையான சூரியன் உத்தர குருவில் வாழ்ந்தான் என்பதாலும் அந்தப் பகுதி தேவலோகம் என்றும் தெரிகிறது.


சுக்ரீவனும் இப்படியே சொல்கிறான்.
மஹாபாரததில், சாந்தி பர்வத்தில் பிருகு முனிவர், பாரத்வாஜ முனிவர் ஆகிய இருவருக்கிடையேயான உரையாடலில் (அத்- 196) இது விரிவாக சொல்லப்படுகிறது.
இமய மலைக்கு வடக்கில், பூமியின் வட பாகத்தில் உள்ள இடம் சுவர்க லோகத்துக்குச் சமமானது.
அதனைப் பர லோகம் என்றும் சொல்வர்.
புண்ணியத்தைச் செய்த மக்கள் அங்கே பிறக்கிறார்கள் என்று பலவிதமாக விவரிக்கப்படுகிறது.

இந்திரனும், சூரியனும் பல இடங்களில் சொல்லப்படுகிறார்கள்.
நாம் முன்பு பார்த்த நாளங்காடிப் பூதம் இந்திரனைச் சேர்ந்தது.
இந்திரன் தனது நகரமான அமராவதியைப் பார்த்துக் கொள்ளுமாறு சோழ அரசன் முசுகுந்தனுக்குச் சொல்லிவிட்டுச் செல்கிறான்.
தன்னைத் தொந்திரவு செய்த அசுரர்களை அடக்க வேண்டி இந்திரன் செல்லவே முசுகுந்தனிடம் தன் நகரப் பாதுகாப்பை ஒப்படைத்தான்.


சோழ அரச பரம்பரையில் வரும் மற்றொரு மன்னனான உபரிசிரவஸு இந்திரனது நண்பன்.
அவன் இருந்த இடம் இமயமலையில் மானசரோவர் ஏரிப்பகுதி.
அங்கிருந்து புகார் நகரில் இந்திர விழாவுக்க்கு 2000 ஆண்டுகள் முன் வரை மக்கள் வந்திருக்கிறார்கள் என்று முன் பகுதிகளில் கண்டோம்.


ராவணனின் மகன் பெயர் இந்திரஜித் ஆகும்.
இந்திரனை வென்றதால் இந்தப் பெயர் பெற்றான்.
இந்திரன் ஊருக்குச் சென்று அவனை வென்று, அவனை இலங்கைக்குக் கொண்டு வந்தான்.
பூமியில் நடக்காமல் வேறு எங்கு இது நடந்திருக்கும்?


அதுபோல பிரம்மவைவர்த புராணத்தில், பல இந்திரர்கள் தோன்றி மறைந்தனர் என்ற விவரம் வருகிறது.
இந்திரன் என்னும் பட்டப் பெயரில் பல மன்னர்கள் இந்திர லோகத்தை ஆண்டிருக்கின்றனர்.
அவர்கள் இருப்பிடத்தைச் சாராத ஒருவர் இந்திரனாக முடி சூட்டப்பட வேண்டுமென்றால் 100 அஸ்வமேத யாகங்கள் செய்ய வேண்டும்.


12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பாஸ்கரர்-2 என்னும் பாரத வான் சாஸ்திரி (அவர் பெயரில்தான் இந்தியாவின் முதல் விண்கலம் அனுப்பட்டது.)
சித்தாந்த சிரோமணி என்னும் தனது நூலில் இந்த உலகைப் பற்றியும், விண்வெளியைப் பற்றியும் பல விவரங்கள் தந்துள்ளார்.
இன்றைய இந்திய விண்வெளி அறிவியலின் முன்னோடியான அவர் சொல்வது என்ன தெரியுமா?
இந்த உலகில் 4 வகையான மக்கள் வாழ்ந்தார்கள்.
அவர்கள், தேவர்கள், மனிதர்கள், அசுரர்கள், தைத்தியர்கள் என்கிறார். தேவர்கள் என்று சொல்லப்பட்ட மக்கள் இந்த உலகில் வாழந்தனர் என்கிறார்.


எதனால் ஒருவன் தேவனாகிறான் என்று முன்னம் பார்த்தோம்.
அப்படிப்பட்ட குணங்கள் கொண்ட தேவர்கள் வாழ்ந்தது உத்தர குரு, அதற்கும் வடக்கே இருந்த பகுதிகள் இந்திர லோகம்..
அர்ஜுனனுக்கு அது தந்தை வீடு.
பாசுபத அஸ்திரத்தைப் பெற்ற பிறகு அர்ஜுனன் இந்திர லோகத்துக்குச் செல்கிறான். அங்கு நடந்த ஒரு சம்பவத்தால் அவன் பெண்ணாக இருக்கும் படி சாபம் பெறுகிறான். அதை அஞ்ஞாத வாசம் செய்தபோது ப்ருஹந்நளை என்னும் பெண்ணாக உருமாறி தீர்த்துக் கொள்கிறான்.


இங்கு, நாம் முன்பு இந்திரனைப் பற்றிய கட்டுரைகளை நினைவுபடுத்திப் பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன். (பகுதி 21).
இந்திரன் என்பவனுக்கு மூன்றுவித முகங்கள் உள்ளன.
இந்திரன் என்னும் தெய்வம்.
இந்திரன் என்னும் இயற்கைச் சக்தி.
உடலுடன் உலகில் நடமாடிய இந்திரன் என்னும் அரசன்.
இந்த நுட்பமான வேறுபாடுகளை நாம் தான் புரிந்துகொள்ளாமல், கட்டுக்கதை என்று விட்டிருக்கிறோம். 
ரஷ்யாவில் இதுவரை கிடைத்துள்ள தகவல்கள்படி உத்தரகுரு என்பது உண்மையில் இருந்தது என்பதற்கு முதல் நிலை ஆதாரம் கிடைத்துள்ளது. 

அதன் மூலம் அதற்கப்பால் இருந்த தேவலோகம் பற்றிய வர்ணனைகள் உண்மையே என்றும் தெரிகிறது. 
உத்தரகுரு, தேவர்கள் நாட்டுக்குத் திறவுகோல் போன்று விளங்கியது.
யாரையும் எளிதில் உத்தரகுருவுக்குள் நுழையவிட்டதில்லை.
அர்ஜுனன், ராஜசூய யாகத்துக்காக திக் விஜயம் சென்றபோது, உத்தரகுருவுக்குள் நுழைய விடாமல் தடுக்கப்பட்டான். 
வெளியாட்கள் அங்கு நுழைந்தால், அங்கு வாழ்ந்த மக்களது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் என்று காரணம் சொல்லப்பட்டது. 
ஆனால் வெளியாட்களைத் தடுப்பதன் மூலம், அந்தப் பகுதிகளைக் கற்பனைக்கெட்டாத தூரத்தில் வைத்து, அங்கு வாழ்ந்த தேவர்களைப் பற்றிய எண்ணங்களை - அடைய முடியாத, ஆனால் அடையப்பட வேண்டிய வேருலகம் என்று உருவாக்க முடிந்தது.


அதைதான் நாம் பிருகு- பரத்வாஜர் உரையாடலில் காண்கிறோம்.




சைபீரியப் பகுதிகளில் பல தடயங்கள் மறைந்துள்ளன.
இதுவரை அர்க்கைம் போன்ற இடங்களில் கிடைத்துள்ள தடயங்கள், அந்தப் பகுதிகளில் மனித வர்கத்தின் பழைய சரித்திரம் இருப்பதைப் பறை சாற்றுகின்றது.
இன்னும் பைகால் ஏரிப் பகுதி அதன் வடக்குப் பகுதிகளை ஆராயவில்லை. அந்தப் பகுதியை ஆராய்ந்தால் உத்தரகுருவின் உண்மை தெரியவரும். 

உத்தர குருவும், அதற்கப்பால் தேவர்கள் எனப்படும் மக்கள் வாழ்ந்தனர் என்பதர்கான சாத்தியக் கூறுகள் மரபணு ஆராய்ச்சியில் தெரிகிறது. 
ரஷ்யாவில் தற்சமயம் நடந்து வரும் ஆராய்ச்சிகளிலேயே, அந்தப் பகுதிகளில் தேர் போன்ற வசதிகளைக் கொண்ட மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்று தெரியவந்துள்ளது.
இதுவரை கண்டுபிடித்த அர்க்கைம் போன்ற இடங்களிலேயே அவர்களால் விடை கண்டுபிடிக்க முடியாத புதிர் இருக்கிறது.

அந்தக் குடியிருப்புகள் அனைத்தும், தீ வைத்துக் கொளுத்தப்பட்டுள்ளன.
ஆனால் தீயில் கருகிய சாமான் ஒன்றும் இல்லை.
அதாவது அங்கு வாழ்ந்த மக்கள், அந்த இடங்களைக் காலி செய்து விட்டு அந்த இடத்தைத் தீ வைத்து அழித்துள்ளனர். 
ஏன் தீ வைத்தார்கள் என்பது ஒரு கேள்வி.
தீ வைத்து விட்டு அவர்கள் எங்கு சென்றார்கள் என்பது அடுத்த கேள்வி.

 அர்க்கைம் பற்றிய விவரங்களை இங்கு படிக்கலாம்:-


அங்கு வாழ்ந்த மக்கள் ரகசியமாகவும், மற்ற மக்களிடமிருந்து தனித்து வாழவும் விரும்பினர் என்பது மீண்டும் மீண்டும் நாம் உத்தரகுரு வர்ணனைகள் மூலம் அறிகிறோம். 
அவர்கள் குடியிருப்புப் பகுதிகளில் அன்னியர் நடமாட்டம் அல்லது அன்னியர் ஊடுருவல் இருந்திருந்தால், இப்படிக் காலி செய்து, தங்கள் இருப்பிடத்தையும் யாரும் பயன் படுத்த முடியாதபடி தீக்கிரையாக்கிச் சென்றிருக்க முடியும். 
அங்கிருந்து அவர்கள் சென்றது, கிழக்கு சைபீரியப் பகுதி அல்லது வடக்கு சைபீரியப் பகுதியாக இருக்க முடியும். 
தெற்கில் வந்த அடையாளாங்கள் இல்லை. 
எனவே சைபீரியப் பகுதியை ஆராய வேண்டியது மிக முக்கியம்.
பெரும்பாலும் இந்த நூற்றாண்டின் முடிவுக்குள், இவர்களைப் பற்றிய அபூர்வமான விவரங்கள் வெளி வரலாம்.


உத்தர குரு பகுதிகளைச் சார்ந்த மரபணு ஆராய்ச்சிகள் படி
அங்கு குடியிருப்புகள் 40,000 வருடங்கள் முன் தோன்றின என்று தெரியவந்துள்ளது.
இது இந்தியா வழியாகத்தான் சென்றிருக்கிறது.
காஸ்பியன் கடல் அருகில் ஒரு கூட்டம் தங்கி அவர்களிடமிருந்து மக்கள் பெருக்கம் ஏற்பட்டது.
இன்றைய மத்திய ஐரோப்பா மக்கள் அவர்களிலிருந்து உண்டானார்கள்.
கஸ்யப ரிஷியின் பெயரால் காஸ்பியன் கடல் வந்திருக்க வேண்டும். எங்கெல்லாம், கஸ்யபர் பெயர் இருக்கிறதோ அங்கெல்லாம் மக்கள் பெருக்கம் உண்டாகும்.


40,000 முதல் 20,000 வருடங்களுக்கு முன் வரை வட துருவப் பகுதி வெப்பமாக இருந்தது.

தேவர்கள் இருந்த வட பகுதி அது.
தேவருலக வர்ணனைகளில் வருவது உண்மையே.
அங்கு அவர்களுக்கு பகல் 6 மாதம், இரவு 6 மாதம்.

அந்தப் பகுதி 20,000 ஆண்டுகளுக்கு முன் பனி யுகத்தில் உறைந்தது.
அதனால் அங்கிருந்து தென் பகுதிக்கு ஒரு ரிவர்ஸ் குடி பெயர்ப்பு ஆனது. அந்த காலக்கட்டத்தில் தேவ லோகத்தின் பொற்காலம் முடிந்து விட்டது.
மிஞ்சி இருந்தது உத்தர குரு மட்டுமே.

அந்த உத்தரகுருவில் எஞ்சிய தேவலோக வாசிகளது வம்சாவளியினர் வழியில் வந்தவன் புரூரவஸ்.

அவனைச் சேர்ந்தவர்கள் மீண்டும் பாரதம் திரும்பி ஸரஸ்வதி நதிப் பகுதியில் குடி அமர்ந்தனர்.
அப்பொழுது கங்கை பிறக்கவில்லை.
புரூரவஸின் வம்ஸத்தில் வந்தவன் யயாதி.
அவனுக்குப் பிறகு நடந்தவற்றைத்தான் இதுவரை பார்த்தோம்.


உத்தரகுரு பெண்கள் சுதந்திரமானவர்கள் என்று பார்த்தோம்.
உத்தரகுருவைச் சேர்ந்த ஒரு பெண் லோபமுத்திரை.
இவள் அகத்திய முனிவரது மனைவி. .
இவள் எழுதிய பாடல் ரிக் வேதத்தில் உள்ளது.

இவளது போக்கில் என்றுமே அகத்தியருக்கு ஒரு சந்தேகம் இருந்திருக்கிறது. ஏனெனில் உத்தரகுரு பெண்கள் அப்படிப்பட்டவர்கள்
சந்தேகத்தின் விளைவாக, தன் மாணவனுடன் அவருக்குப் பிணக்கு ஏற்பட்டது.
அதன் பயனாக நம் தமிழ் நாட்டில் நமது மூலத்தை வெளிப்படையாக சொல்லாமல் விட்டார் தொல்காப்பியர்!
அந்த மூலம் தெரியாததால், பிரித்தாளும் சக்திகளது துவேஷப் பிரசாரத்தால் இன்றைய தமிழர்கள் மூடத்தனத்தில் மூழ்கிக் கிடக்கிறார்கள்.
அதை விவரிக்கும் போது லோபமுத்திரையைச் சந்திப்போம்.

இந்தக் கட்டுரையில் உத்தரகுரு இருக்கும் ரஷ்யாவைப் பற்றி இன்னும் சில விவரங்கள் அறிவோம்.

ரஷ்யப் பகுதிகள்  'ரிஷி வர்ஷம்' என்றும் அழைக்கப்பட்டது.  
வர்ஷம் என்றால் நாடு என்று பொருள்.
ரிஷிகள் வாழ்ந்த நாடு என்பதால் அந்தப்பகுதிக்கு இந்தப் பெயர்.


மகா  ஸ்வாமிகள் என்று அழைக்கப்பட்ட காஞ்சி சங்கராச்சாரியார் அவர்கள் பழைய நூல்களில்  சொல்லப்பட்டுள்ள  ரிஷி வர்ஷத்தை விளக்கியுள்ளார். ராமபிரானின் மாமனாரான ஜனக மகா ராஜாவின் சபையில் யஞ்ஞவாக்கியர் என்னும் ரிஷி வாதத்தில் வெற்றி பெற்றார்.
ப்ருஹதாரண்யஉபநிஷத்து என்னும் உபநிஷத்தைத் தந்தவர் அவர். 
அவர் ரஷியாவின் வட பகுதியில் வேத ஆராய்ச்சி மையமே நடத்தி வந்தார். அவர் வைகானஸ்  என்னும் பைகால் ஏரிக்கு அருகில் வாழ்ந்தார்.


இன்றும் ரஷ்யாவின் வடக்குப் பகுதியில் பேசப்படும் மொழி சமஸ்க்ருதத்தை ஒத்திருக்கிறது.
ரஷ்ய மக்களின் பெயர்களும் சமஸ்க்ருதத்தை நினைவு படுத்தும் வணணம் உள்ளன.
இன்றைய ரஷ்ய அதிபர் பெயர் மேட்வேதேவ் என்று வேதம்’   அல்லது தேவன் என்னும் சொல்லைக் கொண்டுள்ளது.

                                               ரஷ்ய அதிபர் மெட்வேதேவ்

குருஷேவ் என்னும் பெயர் ரஷியாவில் அதிகம் காணபபடுவது. 
முன்னாள் ரஷ்ய அதிபர் பெயரும் அதுவே.
'உத்தர குரு'  என்பதில் உள்ள குருவுக்கு ஒத்ததாக இருப்பதைக் கவனிக்கவும்.


எல்லாவற்றையும் விட சுவாரசியமான தகவல் ரஷியர்கள் எழுதும் முகவரியில் இருக்கிறது. ரஷியர்களைத் தவிர உலகில் எல்லா இடத்திலும் முகவரி எழுதும் போது முதலில் பெயரை எழுதி, பிறகு வீட்டு  எண், தெருவின் பெயர், ஊரின் பெயர், நாட்டின் பெயர் என்று எழுதுகிறார்கள்.
ஆனால் ரஷ்யாவில் ரிவர்சில் எழுதுவார்கள்.
முதலில் நாட்டின் பெயர், பிறகு, ஊர், தெரு, வீட்டு எண் என்று  வரும். அதாவது பெரிய பகுதியான நாடு முதல் ஆரம்பித்து படிப்படியாக சிறிய பகுதி வரை முகவரி அமையும்.


இந்த  முறைதான் வேத மரபிலும் உள்ளது. எந்த  வழிபாட்டிலும், ஹோமத்திலும் சங்கல்பம் என்று ஒன்று சொல்வார்கள்.
ஒருவர் எங்கே, எந்த காலகட்டத்தில் அந்த வழிபாட்டைச் செய்கிறார் என்று முகவரி சொல்வது  போல அமையும். அதை, பெரிய பகுதியில் ஆரம்பித்து, படிப்படியாக கடைசிப் பகுதி வரை சொல்வார்கள்.
அதாவது பிரபஞ்சத்தில் ஆரம்பித்து, இந்த உலகில் பாரத வர்ஷத்தில், பரதக் கண்டத்தில் என்று சொல்லி, தமிழ்நாட்டில் இருப்பவர் என்றால் தட்சிணப் பகுதியில் (தெற்கு பாரதத்தில்) என்று முடிப்பார்கள்.


இந்த வகையில் முகவரி அமைவது வேத மரபு.
இதை நாம் விட்டு  விட்டோம். ஆங்கிலேயன் சொன்னான் என்று அவன் மரபுகளைப் பின் பற்ற ஆரம்பித்து விட்டோம்.
இன்னும் ஆங்கிலேயத் தாக்கம் இல்லாத ரஷ்யாவில் இந்த முறை இருக்கிறது என்றால், அது அங்கு வாழ்ந்த ரிஷிகளால்தான் வந்திருக்க வேண்டும்.
நம்மைப் போல ரஷ்யர்களும், ரிஷி வம்சத்தை மறந்து விட்டார்கள்.
நடந்து கொண்டிருக்கும் ஆராய்ச்சிகள் பாரதத்தின் ஒரிஜினல் சரித்திரங்களான இராமாயண, மகா பாரதத்தை மெய்ப்பிக்கும் வண்ணம் வந்து கொண்டிருக்கின்றன.
இவை ஆரியம் - திராவிடம் என்பதற்கு அப்பாற்பட்டவை.



சனி, 29 ஜனவரி, 2011

34. ரஷ்யாவில் வேத நாகரிகம்.


   
ஆரியப் படையெடுப்பு நடந்தது என்பதற்கு ஆதாரம் இல்லை என்று பல வெளி நாட்டு ஆராய்ச்சியாளார்களும் முடிவுக்கு வந்த இந்த நேரத்தில், சில ஆரியச் சின்னங்கள் ரஷ்யாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஹோம வழிபாடு அமைப்புகளும், ஸ்வஸ்திக் சின்னங்கள் பொறிக்கப்பட்ட பொருட்களும் ரஷ்யாவில் கிடைத்துள்ளன. அது மட்டுமல்ல குதிரைகள் அடக்கம் செய்யப்பட்ட சமாதிகள் பலவும் இருப்பது தெரியவந்துள்ளது. அஸ்வமேத யாகம் என்னும் யாக முறைப்படி செய்யப்படும் பலியில் உள்ள அமைப்பிலேயே குதிரைகள் புதைக்கப்ப்ட்டுள்ள விவரங்கள் தெரிய வந்துள்ளன. இதை ஆராய்ச்சி செய்தவர்கள், வேத முறையில் சொல்லப்பட்டுள்ள விவரங்களிலிருந்து இவை ஒரு மில்லிமீட்டர் அளவு கூட பிசகவில்லை என்கிறார்கள். இது குறித்த பிற விவரங்கள் இன்னும் வெளி வரவில்லை. இந்த அமைப்புகள் இன்றைக்கு 3,700 முதல் 4000 ஆண்டுகளுக்குள் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது ஆராய்ச்சிகளில் தெரிய வந்துள்ளது.


ஆரியப் படையெடுப்புவாதிகள் 3500 ஆண்டுகளுக்கு முன் ஆரியப் படையெடுப்பு நடந்தது என்று சொல்கிறார்கள். அதனால் அதற்கு 500 ஆண்டுகளுக்கு முன் ரஷ்யாவில் வாழ்ந்த மக்களே இந்தியாவுக்கு வந்தனர் என்று எண்ண வாய்ப்பிருகிறது. அப்படி ஒரு எண்ணம் உருவாகும் போன்ற சூழ்நிலை இப்பொழுது இருக்கிறது. ஆனால் அப்படிப்பட்ட முடிவுக்கு வருவது தவறு என்று நிரூபிக்க இரண்டு முக்கிய விவரங்கள் உள்ளன.
ஒன்று அந்த அகழ்வுகளில் தென்படும் ஒரு சின்னம்.
மற்றொன்று ராமாயண, மஹாபாரதம் மூலம் பாரதம் உள்ளடக்கிய ஆசிய- ஐரோப்பிய சரித்திரத்தைப் பற்றி நாம் அறிவது.


ஷ்யாவில் 20 இடங்களில் புதையுண்ட குடியிருப்புப் பகுதிகளைக் கண்டு பிடித்துள்ளார்கள். இந்த அகழ்வாராய்ச்சிகளில் கிடைத்துள்ள சில பொருட்களில் காணப்படுவது ஸ்வஸ்திக் சின்னம் ஆகும்.

குடியிருப்புகளின் வட்டமான அமைப்பு மேலே, 
ஸ்வஸ்திக் சின்னங்கள் கீழே தரப்பட்டுள்ளன..

இந்த ஸ்வஸ்திக் சின்னத்தைதான் அவர்கள் ஆரிய அடையாளமாகப் பேசுகிறார்கள்.
ஸ்வஸ்திகா என்ற சொல்லே சமஸ்க்ருதச் சொல்தான்.
இது ‘ஸ்வஸ்தி என்ற சொல்லிலிருந்து வந்தது.
தமிழில் நாம் 'சொஸ்து' என்கிறோமே  அது ஸ்வஸ்த்  என்னும் சம்ஸ்க்ருதச் சொல்லின்  தமிழ் மருவுதான்.
ஸ்வஸ்த் என்றால் குணம் அடைதல்நலமாக இருத்தல் என்று பொருள். இன்றைய வழக்கில் சொல்வதென்றால் 'வாழ்க வளமுடன்' என்று நமக்கு ஊக்கம் தர ஒரு சின்னமாக் ஸ்வஸ்திகா இருந்திருக்கிறது.
 

ரஷ்யாவில் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த கைவினைப் பொருள்கள் மீது ஸ்வஸ்திகா  அடையாளம் வரையப்பட்டுள்ளது அல்லது முத்திரையாகக் குத்தப்பட்டுள்ளது.
ஸ்வஸ்திகா சின்னத்தைப் பார்த்த  ஆராய்ச்சியாளர்கள் அங்கிருந்த  மக்கள் ஆரியர்களே என்று புளகாங்கிதம் கொண்டிருக்கிறார்கள்.
நம் திராவிட அரசியல்வாதிகள் இதை அறிந்தால் இன்னும் ஒரு படி மேலே போய் விழாவே எடுத்து விடுவார்கள் - ஆரியன் என்பவன் இந்தியாவுக்கு வெளியிலிருந்து வந்தவன் என்பதற்கு இது ஒரு சான்றாகி விடும் அல்லவா?


ஆனால் ஒரு நிமிடம் அவர்கள் யோசிக்க வேண்டும்.
சிந்து சமவெளிப் பகுதியை சொந்தம் கொண்டாடுகிறார்களே,
அங்கு மட்டும் கிட்டத்தட்ட 60 ஸ்வஸ்திகா சின்னங்கள் கிடைத்துள்ளன.
அவை பெரும்பாலும் முத்திரை எனப்படும் சீல்களாக உள்ளன.
சிந்து சமவெளிப்பகுதியில் என்றோ கண்டுபிடிக்கப்பட்டு தற்போது பிரிட்டிஷ் மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ள  இந்த ஸ்வஸ்திகா சீல்களைப் பாருங்கள்.




இவை ஈரமான களிமண் மீதோ அல்லது ரஷியாவில் கிடைத்துள்ளதே அந்த மாதிரி பொருள்கள் மீது பெயின்டிங்கில், ஒரு டிசைனாக ஸ்வஸ்திகா வடிவத்தைப் பதிக்கவோ பயன்படுத்தப்பட்டுள்ளன.


ஸ்வஸ்திகா சின்னம் வேத மரபின் அதாவது இந்து மதத்தின் ஆதார வடிவம். இது ஆரியனுக்கு உரியது, ஆனால் திராவிடனுக்குச் சம்பந்தம் இல்லாதது  என்று சொல்ல முடியாதவாறு, ஸ்வஸ்திகா சின்னங்கள் சிந்து சமவெளிப்பகுதியில் அதிகம் கிடைத்துள்ளன.

ஸ்வஸ்திகா சின்னங்களும் பாதுகாப்பு குறித்து ஒரு ரட்சை போல பயன்படுத்தப்படுகின்றன. சிந்து சமவெளிப் பகுதியில் இன்றும் தொடர்ந்து வாழும் வட இந்திய மக்கள், இந்த ஸ்வஸ்திகா  சின்னத்தை, நாம் போடும் வாசல்படி கோலம் போல வாசல் படியில் இப்பொழுதும்  போடுகிறார்கள்.




தமிழ் நாட்டில் நாம் வாயிலில் போடும் கோலங்களிலும் ஸ்வஸ்திக் சின்னம் இடம் பெறுகிறது.

 

இந்த ஸ்வஸ்திகா என்பது வேதமரபில் வருவது. இன்றும் இந்தியா முழுவதும் தெய்வ  வழிபாட்டில் அங்கம் வகிக்கிறது.


                            ஸ்வஸ்திகா வழிபாட்டு யந்திரம்.

வேதம் தந்தவன் ஆரியன் என்றால், சம்ஸ்க்ருத மொழி அந்த ஆரியனின் மொழி என்றால், இவர்கள் சொல்வது போல ஆரியன் படையெடுத்து  வருவதற்கு முன் ஸ்வஸ்திகா சின்னம், சிந்து சமவெளி திராவிடனிடத்தில் எப்படி நுழைந்திருக்க முடியும்


சிந்து சமவெளியிலும் ஸ்வஸ்திகா இருக்கிறது.
ரஷியாவிலும் அதே காலக் கட்டத்தில் ஸ்வஸ்திகா டிசைன் இருந்திருக்கிறது. அந்த ஸ்வஸ்திகாவின் அடிப்படையில்  ரஷியாவில் வாழந்தவன் ஆரியன்  என்றால் அந்தப் டிசைன்களுக்கான  அச்சைத் தயாரித்த சிந்து சமவெளிக்காரன் யார்
அவனும் ஆரியன் என்றுதானே ஆராய்ச்சியாளர்கள் முடிவு கட்டுவார்கள்? அல்லது ரஷியாவில் இருந்தவன் திராவிடன் என்று முடிவு கட்டுவார்களா? இந்தக் குழப்பத்திற்கு விடை ஆரிய - திராவிட வேறுபாட்டில் இல்லை. பாரதத்தின் பழமையான சரித்திரத்தில் இருக்கிறது.


ரஷ்யாவில் காணப்படும் குடியிருப்பு அமைப்புகள் உள்ள இடம், முன் பகுதியில் பார்த்தோமே ஸ்த்ரீ ராஜ்ஜியம் அதற்குக் கிழக்கே உள்ளது. அர்ஜுனன், காஷ்மீர அரசர்கள் போன்றவர்கள் உத்தர-குரு சென்ற பாதையில் இது வருகிறது.


இந்தியாவிலிருந்து வட மேற்குத் திசையில் உள்ள ஸ்த்ரீ ராஜ்ஜியத்தை அடைந்து அங்கிருந்து கிழக்கு நோக்கித் திரும்பி, இந்தியாவுக்கு அப்பால் வட பகுதியில் உள்ள உத்தர-குருவுக்குச் சென்றிருக்கிறார்கள்.


மேலும் கண்டெடுக்கப்பட்ட இந்தப் பகுதிகள் ராமாயணத்தில் வரும் கைகேயியின் பிறந்த வீடான கேகய தேசம் இருந்த பகுதியை ஒட்டியது!!
கைகேயினது தந்தை பெயர் அஸ்வபதி.
அதாவது குதிரைளுக்கு நாயகன்.
அவன் நாடு குதிரைகளுக்குப் பெயர் போனது.
பார வண்டிகளை இழுத்துச் செல்லும் கழுதைகளும், சிறந்த அங்க லக்‌ஷணங்கள் கொண்ட குதிரைகளும், சிறு தேர்களும், குளிருக்குத் தேவையான கம்பளங்கள் தயாரித்தலும், பொன்னும், ரத்தினங்களும் அவனது தேசத்தில் அதிகம்.
ராமாயணத்தில் வரும் குறிப்புகள் மூலம் இந்த ராஜ்ஜியம் தற்போதைய கஸக்ஸ்தான் பகுதியில் சக்‌ஷுஸ் (ஓக்சஸ்) நதிக்கு வடக்கே இருந்தது என்று சொல்ல முடிகிறது.


ராமாயணத்தில் தசரதன் இறந்த போது ராமர் காட்டுக்குச் சென்றுவிட்ட்டார். அடுத்த பிள்ளையான பரதன் தன் தாய் வழிப் பாட்டனான அஸ்வபதியின் கேகய தேசத்தில் இருந்தான். அவனை அழைத்து வர வீரர்களை அனுப்பினார்கள். அங்கிருந்து பரதன் கிளம்பி வந்த வழித்தடத்தை வால்மீகி விவரிக்கிறார்.
அவன் வருவதற்கு 7 நாட்கள் ஆயின.
அதாவது 7 நாட்கள் பயணம் செய்து அவன் அயோத்தி திரும்பினான்.
இதற்கும் அவன் நடந்து வரவில்லை.
குதிரை மீதோ அல்லது தேரில் பயணம் செய்தோதான் வந்தான்.
அபப்டியும் ஒரு வாரம் ஆனது என்றால், கேகயம் சற்று தொலைவில் இருந்தது என்று தெரிகிறது.  


அவனை வெறும் கையுடன் அஸ்வபதி அனுப்பவில்லை.
அவனும், அவன் மகனும்  (பரதனது மாமன் யுதாஜித்) பல வெகுமதிகளைக் கொடுத்தனுப்பினார்கள்.
அந்தப் பொருட்கள் மத்திய ஐரோப்பா அல்லது கசக்ஸ்தான் பகுதிகளிலும், ரஷ்யாவிலும் கிடைப்பவை.


ஆரிய- தஸ்யு போராட்டத்தில் விரட்டப்பட்ட யயாதியின் மகனான அநு என்பவனின் பரம்பரையில் வந்தவர்கள் கேகய நாட்டவர்கள் என்று பாகவத புராணம், வாயு புராணம், மத்ஸ்ய புராணம் போன்றவை தெரிவிக்கின்றன. அநு, சிந்துவின் மேற்கே ஆண்டான்.
அவனைச் சேர்ந்தவர்கள் ஆங்காங்கே பிரிந்திருக்கின்றனர்.
சோழனது முன்னோனான சிபியின் தந்தை உசீனரன், அநுவின் வம்சாவளியைச் சேர்ந்தவன் என்று பாகவத புராணம் கூறுகிறது.
எனவே இவர்கள் ஆண்ட நாடுகள் எல்லாம் சிந்துவுக்கு அப்பால் மேற்கு, வட மேற்கில்தான் அமைந்திருக்க முடியும்.
சிபி சிந்துவுக்கு மேற்கில் தங்கி விட்டான்.
கேகயர்கள் வட மேற்கில் சென்றிருக்கின்றனர்.
ஆயினும் அவர்கள் வேத வாழ்க்கையை விடவில்லை.


கைகேயினது தந்தையான கேகய மன்னன் அஸ்வபதி பல ரிஷிகளும் அறியாத வைஸ்வானரம் என்னும் ஆத்ம ஞானத்தை அறிந்திருந்தான் என்பதை சாந்தோக்கிய உபநிஷத்து மூலம் அறிகிறோம்.
அவனை அண்டி மற்ற ரிஷிகள் அந்தப் பிரம்ம ஞானத்தைத் தெரிந்து கொண்டனர்.
எனவே அஸ்வபதி வேத ஞானத்தில் தலை சிறந்து விளங்கினான் என்று தெரிகிறது.

இனி அவன் கொடுத்த பொருட்கள் என்னவென்று பார்ப்போம்.



  • சித்திரக் கம்பளங்கள் (கம்பள உற்பத்தி அந்தப் பகுதியில் அதிகம்)
  • மான்தோல் (அபூர்வ வகை மான்கள் அந்தப் பகுதியில் காணப்படுகின்றன)
  • பலவித தனங்கள், 2000 பொன். (சக்‌ஷுஸ் நதிப்பகுதி பொன் உற்பத்திக்குப் பெயர் போனது.)
  • 1,600 சிறந்த குதிரைகள் ( விஸ்வாமித்திரர் கவலரிடம் குரு தட்சிணையாகக் கேட்டது போன்ற அஸ்வமேதக் குதிரைகளாக இருக்க வேண்டும், ஏனென்றால் அப்படிப்பட்ட அபூர்வக் குதிரைகள் இந்தியாவில் இல்லை. அந்தக் காலக் கட்டத்தில் மொத்தம் 600 குதிரைகளே மூன்று அரசர்களிடம் இருந்தன. அபூர்வ குதிரைகள் கேகய நாட்டிலிருந்து வந்தன.) இன்றைக்கும் குதிரை விளையாட்டுகள் அந்தப் பகுதியில் மிகவும் பிரசித்தம். இன்றைய மக்கள் உணவும் குதிரை மாமிசம்தான். அந்த அளவுக்கு அவர்கள் வாழ்க்கையில் குதிரை கலந்துள்ளது.
  • அஜீனா என்னும் மரப்பட்டைகள். இதை பூர்ஜபத்ரம் என்று சமஸ்க்ருதத்தில் சொல்வார்கள். இது எழுதுவதற்குப் பயன்படும். எல்லா நூல்களையும் இந்த மரப்பட்டைகளில்தான் எழுதி வந்தார்கள்.




இது கிடைக்கும் மரம் பிர்ச் ( birch)  என்னும் வகையைச் சார்ந்தது. அந்த மரம் இமயமலை தொடங்கி வட ஐரோப்பா, சைபீரியா போன்ற பகுதிகளில் காணப்படுவது. அதன் பட்டையை உரிக்கலாம். அதை ஆடையாகவும் பயன்படுத்தி உள்ளனர்.



உத்தரகுரு மக்களுக்கு இயற்கையிலேயே ஆடைகள் கிடைத்தன.
அந்த ஆடைகள் மரத்தில் தொங்கின என்று சஞ்சயன் பாரதப் போரைக் காண தூர திருஷ்டி பார்வை கிடைத்தவுடன், அதன் மூலம் பார்த்து இவ்வாறு திருதராஷ்டிரனிடம் சொன்னான். அஜீனா எனப்படும் பட்டைகள் கொண்ட மரங்களை அவர் சொல்லியிருக்க வேண்டும்.

  • இந்திரசிர மலையில் காணப்படும் ஐராவதம் போன்ற அபூர்வ யானைக் கூட்டங்கள். இது ஒரு முக்கிய ஆதாரம். கேகயம் என்னும் தேசம் இந்தியாவைச் சேர்ந்தது அல்ல. அது இந்தியாவுக்கு வடமேற்கே இருந்தது என்று ராமாயண வர்ணனைகளின் மூலம் தெரிகிறது. அந்தப் பகுதிகளில் தற்சமயம் யானைகள் தென்படுவதில்லை. ஆனால், சைபீரியப் பகுதிகளில் 10,000 ஆண்டுகளுக்கு முன்வரை அந்தப் பகுதியில் மட்டுமே காணபப்டும் அபூர்வ வகையான உல்லி மம்மொத் எனப்படும் யானைகள் இருந்தன என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். மம்மொத் அன்ற சொல்லே ரஷ்ய மொழியிலிருந்து வந்தது. கேகயத்தில்ருந்து யானைகள் அனுப்பபட்டன என்றால் அவை ரஷ்யப் பகுதிகளில் அந்நாளில் இருந்த யானைகளாகத்தான் இருக்க முடியும். (இன்று அவை அழிந்து விட்டன).

ரஷ்ய மியூசியத்தில் உள்ள அந்தப் பகுதியில் காணப்பட்ட யானை.


இந்த யானைகள் இந்திரசிர மலையில் இருப்பவை என்கிறார் வால்மீகி.
இந்திர சிரம் என்றால் இந்திரனது தலை போன்ற மலை என்று அர்த்தம். ரஷ்யாவின் வடக்கே செல்லச் செல்ல இந்திரனது தேவலோகப் பகுதிகள் உள்ளன என்று முன்னம் கூறினோம். (இனி வரும் பகுதிகளில் அது குறித்த விவரங்களும் வரும்.) எனவே வட ரஷ்யாவின் அபூர்வ யானைகளை பரதனுக்குக்  கொடுத்திருக்கிறார்கள் என்று தெரிகிறது.

  • அவற்றுடன் நன்கு பழக்கப்படுத்தப்பட்ட பெரிய நாய்கள், நூற்றுக்கும் மேற்பட்ட தேர்கள், படைகள் போன்றவற்றையும் அனுப்பியிருக்கிறானர்


குதிரைகள், பார வண்டி இழுக்கும் கழுதைகள் போன்றவற்றுக்குக் கூடவே இந்த நாய்கள் பாதுகாப்பாக வருபவை. கஸக்ஸ்தான் போன்ற மத்திய ஐரோப்பா பகுதிகளில் வேட்டை நாயுடன் குதிரை மேலேறிச் செல்வார்கள். அந்த வர்ணனை பரதன் பயணத்தில் நமக்கு நினைவுக்கு வருகிறது.

யானைகள், படைகள் சகிதமாக வரவே அவன் வந்த வழி நல்ல பாதை உள்ள வழியாகத்தான் இருக்க வேண்டும்.
கேகயர்களின் தலை நகரான ராஜகிருகத்தை விட்டுக் கிளம்பியவுடன், பரதன் கிழக்கு நோக்கிச் செல்லும் இரண்டு நதிகளைக் கடந்தான் என்று வால்மீகி கூறுகிறார்.
அமூதர்யா எனபப்டும் சக்‌ஷுஸ் நதிகள் இரண்டினை அவன் கடந்திருக்க வேண்டும்.
அவற்றைக் கடந்து விட்டால், ராஜ பாட்டை போன்ற பாதையில் பயணிக்கலாம்.
சில்க் ரூட் எனப்படும் பாதை ஐரோப்பாவையும், சீனாவையும் இணைப்பது. பரதன் காலத்தில் பாரதத்தை இணைக்கும் விதத்தில் இந்தப் பாதை ஓரளவேனும் இருந்திருக்க வேண்டும்.
உத்தர-குரு வரை சென்று வரும் பழக்கம் இருந்திருக்கவே கேகயம் வழியாகச் செல்லும் வழி சீராக இருந்திருக்க வேண்டும்.
மேலும், யானைகள், படை முதலியவற்றைக் கொண்டு வரவே அந்தப் பாதை நன்கு அமைதிருக்க வேண்டும்.
இதுவே பின்னாளில் சில்க் ரூட் என்று ஆகியிருக்கலாம்.



இந்தப் படம் 2000 வருடங்களுக்கு முன்பிருந்த பாதை.
இதில் டாக்சிலா (Taxila) என்ற இடத்தைப் பாருங்கள்.
இந்த நகரம் தக்‌ஷசீலம் என்று அழைக்கப்பட்டது.
இதை உண்டாக்கியவன் பரதன்.
இந்தப் பகுதியை வென்று இக்ஷ்வாகு ஆட்சிக்குள் கொண்டுவர்மாறு பரதனுடைய மாமன், யுதாஜித் அவனிடம் சொல்லவே இவ்வாறு செய்தான் என்று காளிதாசர் ரகு வம்சத்தில் கூறுகிறார்.
ஏன் யுதாஜித் இவ்வாறு சொல்ல வேண்டும்?
அந்தப் பகுதி கேகயத்துக்கும் பாரதத்துக்கும் இடையே இருந்த பாதையில் இருந்திருக்க வேண்டும்.
படை, வேட்டை நாய்கள் போன்றவற்றை அனுப்பவே, அந்தப் பாதை பாதுகாப்பு இல்லாமல் இருந்திருக்க வேண்டும்.
அங்கு தனது ஆட்சியை அமைத்தால் பாதை பாதுகாப்பாக இருக்கும்.
இந்தப் பாதை மத்திய ஐரோப்பாவை அடைகிறது. அங்கிருந்து வடக்கே இரண்டு நதிகளைக் கடந்தால் கேகய நாடு இருந்தது.


ரஷ்யாவில் கண்டெடுக்கப்பட்ட இடங்கள் கேகயத்துக்கு அருகில் வடக்கில் வருகின்றன.



நீல நிறத்தில் சக்‌ஷுஸ் நதிகள்.
அவற்றுக்கு வடக்கே கேகயம்.
கேகயத்துக்கு வட மேற்கே ஸ்த்ரீ ராஜ்ஜியம்.
வடக்கில் செல்யாபின்ஸ்க் என்ற இடத்தைக் காட்டும் அம்புக் குறி ஆராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட இடங்கள்.
இந்தப் பகுதிகளில், அஸ்வமேத குதிரைகளை அடக்கம் செய்யப்பட்டது போன்ற அமைப்புகள் இருக்கின்றன.
அப்படி பல அமைப்புகள் உள்ளன என்கிறார்கள்.
100 அஸ்வமேத யாகம் செய்துதான் இந்திரன் இந்திர பதவி அடைகிறான். அந்தப் பகுதிகள் தேவ லோகப் பகுதிகளை ஒட்டியவை என்பதையெல்லாம் தொடர்பு படுத்திப் பார்க்காமல் நம்மால் இருக்க முடியவில்லை.


மேலும் அஸ்வபதி போன்ற கேகய மன்னர்கள் யாகங்கள் செய்த அரசர்கள். ராமன் காலத்தில், அதாவது 7000 வருடங்களுக்கு முன்பே அந்தப் பகுதியில் வேத வாழ்க்கை வாழப்பட்டிருக்கிறது.
பாரதத்தின் தொடர்ச்சியாகத்தான் அவர்கள் இருந்திருக்கின்றார்கள்.


ஆராய்ச்சி செய்த இடத்தின் பெயரைப் பாருங்கள்.
அர்க்கைம்.
சூரியனுக்கு அர்க்கா என்று ஒரு பெயர் உண்டு.
அதை ஒட்டி அந்த ஊரின் பெயரும் அமைந்திருக்கிறது.


இந்தப் பகுதி மலைப் பள்ளத்தாக்கில் இரண்டு நதிகள் கூடும் இடத்தில் அமைந்துள்ளது.
நதி சங்கமம் வேத மரபில் சிரப்பு வாய்ந்தது.
அந்த நதிகளின் பெயரைப் பாருங்கள் கரகங்கா, உத்யகங்கா !!
இரண்டு கங்கைகள்!


ராமன் காலத்துக்கு முன்பே கங்கை உண்டாகி விட்டது.
பனி யுகம் முடிந்த காரணத்தால் கங்கோத்திரி உருகி, கங்கை பிறாக்க ஏதுவாயிற்று.
10,000 வருடங்களுக்கு முன் கங்கை தோன்றியிருக்க வேண்டும்.
அந்தக் காலக் கட்டத்தில் ஆரியப் படையெடுப்புவாதிகளின் ஆரியர்கள் இந்தியாவுக்குள் வரவேயில்லை.
இந்தியாவிலும் கங்கை,
அர்க்கைமிலும் கங்கை என்ற பெயர்கள் எப்படி வந்திருக்க முடியும்?

எது எப்படியோ, இன்றைய ரஷ்யர்கள்  அந்த நதிகளைக் கங்கைக்கு இணையாகக் கருதுகிறார்கள். அர்க்கைம் கண்டுபிடிக்கப்படட் பிறகு, மக்களுக்குத் தங்கள் மூதாதையர் யாராக இருக்கக் கூடும் என்ற ஆர்வம்  உண்டாகி இருக்கிறது.
அந்தப் பகுதிகளை வந்து பார்க்கிறார்கள்.
அந்த கங்கையில் குளித்தால் நல்லது என்று நினைக்கிறார்கள்.


மற்றொரு விஷயம். அந்தப் பகுதிகளில் வாழும் மக்கள் பேசும் மொழி ‘மோக்‌ஷம்  எனப்படுகிறது.
ரஷ்யாவின் மிகப் பழைமையான மொழி என்று அது சொல்லப்படுகிறது.
இன்று அதைப் பேசும் மக்கள் குறைந்து விட்டார்களாம்.


வோல்கா நதியின் ஒரு கிளை நதியின் பெயரும் ‘மோக்‌ஷா ஆகும்.
வோல்கா நதியே ரஸா என்று அழைக்கப்பட்டது.
அதன் இன்னொரு கிளை நதியின் பெயர், மோக்‌ஷாவை ஒட்டி மோக்ஸ்வா என்று உள்ளது.
இந்த நதிக் கரையில் மாஸ்கோ உள்ளது.
மோக்ஸ்வா என்னும் பெயரால் இந்தப் பெயர்.

மோக்‌ஷா மொழி பேசும் மக்கள் உருவ வழிபாடு செய்பவர்கள்.
இந்திரன், வாயு போன்ற தெய்வங்களை அவர்கள் வழிபடுகின்றனர்.
இப்படி ரஷ்யாவில் வேத மரபுகள் அதிகம்.
அதன் முக்கியக் காரணம், பாரதத்தின் நீட்சியாக ரஷ்யா இருந்திருக்கிறது.
கேகயம், அர்க்கைம் பகுதிகளை ஒட்டிய பகுதிகளில் யயாதியின் முன்னோர்கள் வாழ்ந்தனர். அதனால் அந்தப் பகுதிக்கும், பாரதத்துக்கும் இடையே போக்குவரத்து இருந்து வந்திருக்கிறது.
அந்தத் தொடர்பையும் காண்போம்.