சனி, 19 நவம்பர், 2011

85. திரிபுரம் முதல், தமிழகம் வரை பேசப்பட்ட மயன்! -2


ரோமக தேச மயன்.


திரிபுர மயனுக்கு அடுத்து மயனது பெயர்,
ரோமக தேசத்தில் வருகிறது.

மயன் என்னும் மிலேச்சன் ரோமக நாட்டைச் சேர்ந்தவன் என்றும்,
அவனுக்கு சூரியன் அருளிய வான சாஸ்திரமே சூரிய சித்தாந்தம் என்றும்
அந்த நூலில் சொல்லப்பட்டுள்ளது.

சமஸ்க்ருத்த்தில் இருக்கும் அந்த நூல்,
வராஹமிஹிரர் உள்ளிட்ட பலரும் பயன்படுத்திய நூலாகும்.
அந்த நூலில் ரோமக தேசத்தின் இருப்பிடம் சொல்லப்பட்டுள்ளது.
இந்த இடம் இலங்கைக்கு மேற்கே 90 பாகைகள் தொலைவில் இருக்கிறது.
அதாவது, லங்கையில் நண்பகல் வரும் பொழுது, 
ரோமக தேசத்தில் பொழுது விடிந்து கொண்டிருக்கும். 

இந்த இடம் இன்று அட்லாண்டிக் கடலுக்குள் இருக்கிறது.





46 ஆவது கட்டுரையில் நாம் காட்டிய அட்லாண்டிஸ் நகரமும்
இதே இடத்தில் அமைந்திருந்தது என்பதை நினைவுபடுத்திக் கொள்ளவும்.


(பார்க்க பகுதி 46)



அட்லாண்டிஸ் நகரம், கட்டிடக் கலைக்கும்,
நன்கு அமைந்த நகர அமைப்புக்கும் பெயர் போனது.
அந்த இடத்தில் ரோமக தேசமும் அமைந்திருக்கவே,
ரோமக தேசம் என்பதே அட்லாண்டிஸ் என்பதன்  பண்டைய பெயராக இருக்கக்கூடும்.
அங்கு மயன் இருந்தான் என்று சூரிய சித்தாந்தம் சொல்வதால்,
அந்த நகரத்தில் உயரிய கட்டடங்கள் இருந்தன என்று சொல்லப்படுவதில்
ஆச்சரியம் ஏதும் இல்லை.
அங்கிருந்த மயாசுரனுக்கு
இன்றைக்கு 10,000 ஆண்டுகளுக்கு முன் சூரியன்,
சூரிய சித்தாந்தத்தை உபதேசித்தான் என்று
அந்த நூலை ஆராய்ந்தவர்கள் கூறுகிறார்கள். 




மஹாபாரதத்தில் மயன்.


இந்தக் காலக் கட்டத்திற்குப் பிறகு மயனின் பெயர்
மஹாபாரதக் காலத்தில்தான் வருகிறது.
இந்தக் காலக் கட்டத்திலிருந்துதான் 
மயனது வாஸ்து நிபுணத்துவத்தைச் சான்றுகளோடு சொல்ல முடிகிறது.
மஹாபாரதத்தில், காண்டவ வனத்தை அர்ஜுனன் அழிக்கும் போது
மயன் பெயர் வருகிறது.


அந்த வனத்தில் இருந்த மயன், நெருப்பில் சிக்கிக் கொள்கிறான்.
(திரிபுர சம்ஹாரத்தில் நிகழ்ந்த்தைப் போல)
நெருப்பிலிருந்து அவனை அர்ஜுனன் காப்பாற்றுகிறான்
அதற்குத் தன் நன்றியைக் காட்டும் விதமாக
ஏதாவது கைம்மாறு செய்வதாக மயன் சொல்கிறான்.
அதற்கு அர்ஜுனன் மறுப்பு தெரிவிக்கிறான்.
அதைப் பார்த்துக் கொண்டிருந்த கிருஷ்ணன்,
கைம்மாறை ஏற்றுக் கொள்ளும்படி சொல்லி,
மயனை நோக்கி,
ஒரு மிகச் சிறந்த அரண்மனையைப் பாண்டவர்களுக்குக்
கட்டித்தருமாறு கேட்டுக் கொள்கிறான்.
மயனும் அவ்வாறே செய்வதாகச் சொல்கிறான் (-பா 2-1)



அவன் பாண்டவர்களுக்காக நிர்மாணித்த சபா மண்டபம்,
மயசபை எனப் புகழ் பெற்றது.



அதைக் கட்டுவதற்கு வேண்டிய அபூர்வப் பொருட்கள்,
சங்குகள், பலவித பளிங்குக் கற்கள் ஆகியவற்றை,
கைலாய மலைக்கு வடக்கிலிருந்து கொண்டு வருகிறான்.
அவற்றைக் கொண்டு 14 மாதங்களில் மய சபையை அமைத்துக் கொடுக்கிறான்.


அந்த மயன் கட்டிய அரண்மனையின் முக்கிய அம்சம்,
அரண்மனைக்குள்ளேயே இருக்கிற குளம் ஆகும்.


அது வருண சபையை ஒத்தது என்று அனைவரும் புகழ்கிறார்கள்.
வருண சபை என்பது இயற்கைச் சிற்பியான விஸ்வகர்மாவினால்
உலகில் நில பாகங்களிக்கிடையே உண்டான கடல்
என்பதை மஹாபாரத வர்ணனை மூலம் அறிகிறோம்.
இயற்கையில் இருந்த அமைப்பை,
அதற்கு ஒப்புமையாகக் கூறியுள்ளதால்,
மய சபையின் குளம்,
செயற்கையானதும், முதன் முதலில் ஒரு மாளிகைக்குள் கட்டப்பட்டதும் ஆகும்
என்று நினைக்க வாய்ப்பிருக்கிறது. 



மஹாபாரத விவரத்தைக் கொண்டு
மய வாஸ்து என்பது கிருஷ்ணனுடைய அனுமதியின் பேரில்
முதன் முதலில் பாரதத்தில் நுழைந்திருக்கிறது என்று தெரிகிறது.
மயவாஸ்து என்பதே,
குறிப்பாக யானம், சயனம், மாயத்தோற்ற அமைப்புகள்,
விசித்திர அமைப்புகள் இவற்றுக்குப் பெயர் போனவை. 


சிலப்பதிகாரத்தில் கோவலன்கண்ணகியின் கட்டில்,
மயன் நிருமித்த விதிகளால் செய்யப்பட்ட கட்டிலைப் போல இருந்த்து
என்ற குறிப்பு வருகிறது.
மயன் விதித்தன்ன மணிக்கால் அமளி” (சி- 2- 12) என்பதில்
அன்னஎன்று சொல்லியுள்ளாதால்,
மயனது விதிகளால் செய்யப்பட்ட கட்டிலைப் போல இருந்தது என்றாகிறது.
இதன் மூலம் மயனது தொழில் நுட்பம்
பாரதம் முழுவதும் பரவியிருந்தது என்று தெரிகிறது.



இதை மெய்ப்பிக்கும் வண்ணம் சிலப்பதிகாரத்தில் இன்னொரு விவரம் வருகிறது.
அதில் இந்திர விழா நடந்த போது வைக்கப்பட்டிருந்த
சில அபூர்வப் பொருட்களைப் பற்றிய விவரம் வருகிறது.
அவை கரிகால் பெருவளத்தான் வடதிசை நோக்கிப் பயணம் செய்த போது,
அவனுக்குத் திறையாகச் செலுத்தப்பட்டவை.


சோணையாற்றங்கரையில் இருந்த வஜ்ஜிர நாட்டு மன்ன்ன் கரிகாலனுக்கு,
முத்துப் பந்தல் தந்தான். 

மகத நாட்டு மன்ன்ன் பட்டி மன்றம் தந்தான். 

அவந்தி நாட்டு மன்னன் தோரண வாயில் கொடுத்தான். 

இவை எல்லாம் பொன்னாலும், மணியாலும் செய்யப்பட்டவை.
இவற்றைச் செய்த கம்மாளார், நுண்வினைஞர்கள் ஆகியோரது முன்னோர்கள்
தொன்மையான ஒரு காலத்தில்,
மயனுக்குச் செய்த உதவிக்குக் கைம்மாறாக,
மயனிடமிருந்து இந்த நுட்பங்களைத் தெரிந்து கொண்டார்கள்.

அவர்கள் வழியில் வந்தவர்களால் செய்யப்பட்ட இந்தப் பொருட்கள்
மயன் நிருமித்த வகையால் செய்யப்பட்டு,
பார்ப்போரை பிரமிக்கச் செய்வனவாக இருந்தன.
அந்தப் பொருட்களை, இந்திர விழாவின் போது பார்வைக்கு வைத்திருந்தனர். (சிலம்பு -5)



அவற்றை அமைத்த கம்மாளர்களுடைய முன்னோர் மயனுக்குச் செய்த உதவி என்ன,
அதற்கு ஏன் மயன் கைம்மாறு செய்தான் என்று தேடும் போது,
மய சபை நிர்மாணம் பொருந்துகிறது.
மயசபையைத் தனி ஒருவனாக மயன் கட்டியிருக்க முடியாது.
ஏற்கெனெவே அங்கிருந்த கம்மாளர்கள், தச்சர்கள், நுண் வினைஞர்கள்,
கட்ட்டக் கலைஞர்கள் ஆகியோரை வேலைக்கமர்த்தியிருக்கிறான். 


அந்த வேலையில், அவர்களும், மயனிடமிருந்து
பல நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டிருக்கின்றனர்.
அந்த நுணுக்கங்கள் பரம்பரை பரம்பரையாக சீடர்களுக்கோ
அல்லது அவரவர் வம்சாவளிகளுக்கோ கொடுக்கப்பட்டிருக்கிறது.
அந்தத் திறமையால் அவர்கள் வடபால் அரசர்களுக்குச்
செய்து கொடுத்த பந்தலும், பட்டி மன்றமும், தோரண வாயிலும்
கரிகாலன் வசம் வந்து பூம்புகாரில் காட்சிப் பொருள்களாக ஆயின.


இவற்றையெல்லாம் இங்கு சொல்வதற்குக் காரணம்,
இந்தப் பாடலில் தொல்லோர் உதவிக்கு மயன் விதித்துக் கொடுத்த மரபின்
என்று சொல்லப்பட்டுள்ள தொல்லோர், 
மஹாபாரதத்தில் பாண்டவர்களுக்கு மயன் மாளிகை கட்டிக் கொடுத்த போது
அவனிடம் வேலை செய்தவர்களாக இருக்க வேண்டும் என்று காட்டுகிறது. 


மயன் இட்ட பணிகளைச் செய்ததால்,
பதிலுக்கு மயன் அவர்களுக்குத் தன் தொழில் ரகசியங்களைக் கற்றுத் தந்திருக்கிறான்.
அது, இளங்கோவடிகள் வாயிலாக வெளிப்பட்டிருக்கிறது.
இதன் மூலம், மஹாபாரதமும், சிலப்பதிகாரமும் நடந்த விவரங்களையே
தந்திருக்கின்றன என்று தெரிகிறது.

மஹாபாரதத்தில் வரும் எல்லா விவரங்களுமே
சரித்திரச் சான்றுகள்
என்று ஏற்றுக் கொள்ளத்தக்கவையே என்று நிரூபிக்கின்றன.



அந்த மஹாபாரதம் நடந்து 5000 ஆண்டுகள் ஆகியுள்ளன.
அப்பொழுதே பரம்பரை விஸ்வகர்மாக்களும் இருந்திருக்கிறார்கள்.
அவர்கள் மய வாஸ்துவையும் கற்றிருக்கிறார்கள்.
விஸ்வகர்ம வாஸ்துவுக்கும், மய வாஸ்துவுக்கும்,
அளவு முறைகளில் அதிக வித்தியாசம் இல்லை.


கிராமம், தெருக்கள் போன்றவற்றை அளக்கும் யோஜனை என்னும் தூரத்தில்தான்,
இரண்டிலும் அதிக வேறுபாடு இருக்கிறது.
மற்றபடி அவர்கள் அதிகம் மாறுபடுவதில்லை.


ஆனால் மய வாஸ்து என்பது,
கட்டடக்கலை (Architecture), யானம், சயனம்
ஆகியவற்றில் முக்கியத்துவம் கொண்டது. 


சமையல் அறையைத் தென் கிழக்கில் அமைப்பது,
மயமதம் சொல்லும் விதியாகும்.
ஆனால் ஒரு வீட்டின் வாயில் கதவு இருக்கும் திக்கின் அடிப்படையில்
சமையல் அறை உள்ளிட்ட அறைகளை அமைக்க வேண்டும் என்பது
விஸ்வகர்ம பிராகாசிகையின் கருத்து. 


ஒரு வீடு என்றால், முன்கட்டு, இடைப் பகுதி, பின் கட்டு என்று அமைத்து,
பின்கட்டில் சமையல் அறை அமைக்க வேண்டும்
என்பது விஸ்வகர்மா நிர்ணயித்த விதி.
அந்த அமைப்பில்தான், நமக்கு முந்தின தலைமுறை வரை,
வீடுகள் அமைத்தார்கள் என்பதால்,
தமிழ் நாட்டுப் பகுதிகளில்,
விஸ்வகர்ம வாஸ்துவே இருந்திருக்கிறது என்று தெரிகிறது. 


சிற்பங்கள், விசித்திர அமைப்புகள்,
யானம், சயனம் ஆகியவற்றில் மயவாஸ்துவைக் கற்றுக் கொண்டு
பின்பற்றியுள்ளார்கள் என்பதை
மயன் விதித்தன்ன மணிக்கால் அமளி
என்னும் சிலப்பதிகார வரிகள் மூலம் தெரிந்து கொள்கிறோம்.


சங்ககாலத்தில் மயன்.

மஹாபாரதக் காலத்துக்கு அடுத்தாற்போல
மயனது பெயர் வருவது இரண்டாம் தமிழ்ச் சங்ககாலமாக இருக்கலாம் என்று,
டா. கணபதி ஸ்தபதி அவர்கள் கண்டெடுத்துள்ளஐந்திறம்
என்னும் நூல் மூலம் தெரிகிறது.


தமிழ்ச் சங்கத்தில் தங்கள் நூல்களை அரங்கேறுவதில்,
பாரதம் முழுவதுமே மக்கள் ஆர்வமாக இருந்தனர் என்று பார்த்தோம்.
ராமாயணம் எழுதிய வால்மீகி முனிவர் முதல்,
கிருஷ்ணனது குல குருவான சாண்டில்யர் வரை
ஆரிய அரசன் எனப்பட்ட பிரமதத்தன் உட்பட பலரும்
தமிழ்ச் சங்கத்தில் தங்கள் படைப்புகளை அரங்கேற்றியுள்ளனர்.
அப்படிப்பட்ட பெருமை மிக்க சபையில்,
மயனும் அரங்கேற்றியுள்ளான் என்பது சாத்தியமே.



அதை உறுதி படுத்துவது போல ஐந்திறத்தில்
குமரி மாநிலம் நெடுங்கலை ஆக்கம்
அமர்நிலைப் பேரியல் வெற்புறம் திறனாய்
பல்துளி யாற்றுப் பெருமலை திறனிலைப்
புக்குறும் நிலைத்திறன் ஏழேழ் நிலமும்
ஏழேழ் நாடென இயம்புறும் காலை” (ஐந்திறம் – 812)
என்று சொல்லப்பட்டுள்ளதால்,
இந்நூல் கபாடபுரத்தில் நடந்த இரண்டாம் சங்க காலத்தில்
அரங்கேற்றிய நூலாக இருக்க வேண்டும்.



இந்த நூல் ஐந்திறம் எனப்பட்டது. இது ஐந்திரம் அல்ல.
தொல்காப்பியர் தாம் ஐந்திரம் அறிந்துள்ளதாகச் சொன்னது,
ஐந்திரன் என்னும் இந்திரன் இயற்றிய ஐந்திரம் என்னும் வியாகரண நூலாகும்.
இது இலக்கண நூல்.
இந்த ஐந்திர வியாகரண சாஸ்திரம்,
பொ-பி- 1800 ஆண்டுகள் வரை,
அதாவது ஆங்கிலேயர்கள் நம் பாட முறையை நீக்கித்,
தங்கள் பாட முறையைப் புகுத்தின வரையிலும்,
மெட்ராஸ் ப்ரெசிடன்சி எனப்பட்ட,
தமிழ் நிலங்களில் பாட சாலைகளில் கற்றுத்தரப்பட்டது.

முன்பே தமிழ்ப் பார்ப்பனர் கட்டுரையில், தமிழ், சமஸ்க்ருதம்
ஆகிய இரண்டு மொழிகளிலும் தலைஎன்னும் தலையாய பாடமாக,
இலக்கணம் சொல்லித்தரப்பட்டது என்று பார்த்தோம்.
இந்திரன் மஹேந்திர மலையின் மீதமர்ந்து உபதேசித்த
ஐந்திரம் என்னும் இலக்கண நூல் சமஸ்க்ருதப் பாடத்தில் சொல்லித்தரப்பட்டது. 



மயன் அரங்கேற்றிய ஐந்திறம் என்பது
சிற்ப சாஸ்திரத்தைக் கற்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய முறைகளைச் சொல்கிறது.


ஓம் என்னும் பிரணவ மந்திரத்தில் மனதை நிலை நிறுத்தி,
அதன் மூலம் ஒருவன் அடையும் உள்ளொளி முன்னேற்றத்தைத்
தத்துவ ரீதியில் அதில் சொல்லப்பட்டுள்ளது.
ஒரு சிற்பிக்கு அப்படிப்பட்ட மன நிலை தேவை.
அப்பொழுதுதான் அவனால்,
தெய்வ சக்தியை நிலைபெறச் செய்யக்கூடிய தெய்வ உருவை அமைக்க முடியும்.
ஓம் என்னும் மூலத்திலிருந்து பயணிக்கும் போது,
அந்த ஓங்காரம் ஊடுருவும் காலம்,
அதன் சீலம் (லயம்)
அது காட்டும் கோலம் (உருவம்)
அந்த உருவம் நிலைபெரும் ஞாலம் என்பவற்றை அடைய முடியும்.


இந்த ஐந்திறங்களும் அமையப் பெற்ற சிற்பி,
இயல், இசை, நாடகம், சிற்பம், கட்டடம் என்னும்
ஐந்து திறன்களிலும் தேர்ச்சி பெறவேண்டும்.


ஒரு இலக்கியவாதிக்கு இயல் (இலக்கணம்) மட்டும் தெரிந்தால் போதும்.
ஒரு இசைக் கலைஞனுக்கு இயலும், இசையும் தெரிய வேண்டும்.
சிலப்பதிகாரத்தில், மாதவி அரங்கேற்றத்தின் போது, அவளது இசை ஆசிரியர்கள்,
எவ்வாறு இயலில் தேர்ச்சி பெற்றவர்களாக இருந்தார்கள் என்று சொல்லப்படுகிறது.
அந்த்த் தேர்ச்சி இருந்தால்தான், பாடும் பாடலைக் குற்றமில்லாமல் பாட முடியும்.


ஒரு நாடக, அல்லது நடனக் கலைஞனுக்கு,
இயலும், இசையும் தெரிந்திருக்க வேண்டும்.
அப்பொழுதுதான் குற்றமில்லாமல், அவனது
நாடக / நடனக் கலையை வெளிக் கொணர முடியும்.


ஒரு சிற்பக் கலைஞனுக்கு, இயல், இசை, நடனம் / நாடகம்
என்னும் மூன்றுமே தெரிந்திருக்க வேண்டும்.
நடராஜர் சிலை வடிக்க வேண்டுமென்றால் இவை இல்லாமல் முடியுமா?


ஒரு கட்டடக் கலைஞனுக்கு, முன் கூறிய இயல், இசை, நாடகம், சிற்பக்கலை
என்னும் நான்குமே தெரிந்திருக்க வேண்டும்.
அப்பொழுதுதான், ஒரு கட்டடத்தின் பல் வேறு விதமான தேவைகளை
அவனால் சரிவரச் செய்ய முடியும்.


இந்தக் கருத்தை வெளிப்படுத்தும்
ஐந்திறம் தந்த மயன்,
தான் கட்டிய அமைப்பில் அவற்றைக் காட்டாமல் இருப்பானா?


பாண்டவர்களுக்கு அமைத்துக் கொடுத்த அரண்மனையில்
எல்லா சித்து வேலைகளையும் அவன் காட்டினான்.

அதன் சிறப்பு அம்சம்,
மாளிகைக்குள் அமைந்த குளமாகும். 

நீர் இருப்பதே தெரியாத அமைப்பில் அவன் கட்டினதால்,
அதில் துரியோதனன் விழுந்து,
அதைக் கண்டு திரௌபதி பரிகசிக்க,
மஹாபாரதப் போருக்கான வித்து அங்கு இடப்பட்டது. 


இங்கு நமக்குத் தேவையான விவரம்,
மாளிகைக்குள் குளம் அமைத்தான் என்றால்
அதற்கு எங்கிருந்து தண்ணீர் கொண்டு வரமுடியும்?
அந்தக் குளத்தில் பயன்படுத்திய தண்ணீரை எப்படி வெளியேற்ற முடியும்?   


அங்குதான் மயனது திறமை பளிச்சிட்டது.
அந்த்த் திறமையை அவனிடமிருந்து கற்றுக் கொண்ட தொல்லோர்
(சிலப்பதிகாரம் சொன்ன வரிகளை நினைவு படுத்திக் கொள்ளவும்),
தாங்கள் சென்ற இடங்களிலெல்லாம் வெளிக்காட்டாமல் இருந்திருப்பார்களா?

அந்த அபூர்வத் திறமை,
மொஹஞ்சதாரோ முதல்,
மஹாபாரதத்துடன் தொடர்பு கொண்ட எல்லா இடங்களிலும் தெரிகிறதே!.

அவை மஹாபாரத மயன் பள்ளியில் பயின்றவர்களால் செய்யப்பட்டது போல் இருக்கிறதே! 


அப்படி உண்டான ஒன்றல்ல - பல வாபிகள் என்னும் குளங்கள்
சிந்து சமவெளிப் பகுதிகளில் காணப்படுகின்றன. 
அவற்றை அமைப்பதற்கான பொறியியல் திறன் 
அதற்கும் முன்பே இருந்திருந்தால்தானே, 
சிந்து சமவெளிப் பகுதியில் அவற்றை நிர்மாணித்திருக்க முடியும்?

அந்தத் திறமை, பாண்டவர் அரண்மனையைக் கட்டிய 
மயனிடம் இருந்திருக்கிறது.
அவனிடம் பயின்றவர்கள்தானே 
அவற்றை மொஹஞ்சதாரோவுக்கும், ஹரப்பாவுக்கும் 
எடுத்துச் சென்றிருக்க முடியும்?


அவற்றை இனி ஆராய்வோம். 


(வட அமெரிக்காவுக்கும், தென் அமெரிக்காவுக்கும் இடையிருந்த
மாயன் () மயன் நாகரிகத்தைப் பற்றி ங்கு சொல்லவில்லை.
அதற்கும் நாம் சொல்லும் மயனுக்கும் தொடர்பு இருப்பதாக
எந்த பாரத நூலும் சொல்லவில்லை.
ஆனால், அந்த நாகரிகத்தவர் சொல்லும் சுக்கிரன் சுழற்சி என்பதில் உள்ள சுக்கிரனுக்கும்,
தானவ அசுரர்களுக்கும் தொடர்பு உண்டு. 


அவற்றையும்,
கட்டடக் கலைக்குப் பெயர் பெற்ற அந்த மயன் மக்களைப் பற்றிய விவரங்களையும்,
இந்தத் தொடரின் போக்கில் பிறகு காண்போம்)