வராஹத்துக்கும், பாரதத்துக்கும் உள்ள தொடர்பு பழமையானது, இயல்பானது, வேத வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்துள்ளது.
வராஹம் என்பது ஒரு மிருகம் என்று சொன்னாலும், அதற்கும், பாரதக் கலாச்சாரத்துக்கும்தான் தொடர்பு இருந்து வந்திருக்கிறது.
வராஹ வழிபாடு என்பது இன்றும் தொடரும் ஒரு வழிபாடாக நம் பாரத நாட்டில் இருந்து வருகிறது.
வராஹ அவதாரம் என்பது வேத நெறியில் வாழ்ந்த மக்கள் போற்றிய ஒரு முக்கிய அவதாரமாகும்.
தற்போது நடக்கும் காலத்திற்கு, வராஹ கல்பம் என்று வேத மரபில் பெயர் சூட்டியிருப்பதன் மூலம் வராஹத்துக்குள்ள முக்கியத்துவம் நன்கு தெரிகிறது.
வராஹத்திற்கு இரண்டு சிறப்பம்சங்கள் உள்ளன.
ஒன்று அவதாரரீதியானது.
இரண்டாவது அதன் ஒற்றைக் கொம்பு.
வராஹம் என்றாலே சிறப்பானதும், வெளியே நீட்டிக் கொண்டிருப்பதுமானதும் என்று பொருள்.
'வரா' என்னும் சொல் 'சிறந்த' என்ற பொருளையும்,
'ஹ' என்னும் சொல் முன்னால் துருத்திக் கொண்டிருப்பது
என்ற பொருளையும் குறிக்கும்.
வராஹம் என்றால் சிறந்த கொம்புடையது என்று பொருள் கொள்ளலாம்,
முன் கொம்பைக் கொண்டு தோண்டினதால், கொம்புக்கும், வலிமைக்கும் வராஹம் பெயர் பெற்றது.
மக்கள் வாழத்தக்க வகையில் பூமியை வெளிக் கொண்டுவந்ததால்,
வராஹம் ஒரு அவதார தெய்வமாகப் போற்றப்படுகிறது.
வராஹம் வெளிக் கொணர்ந்த உலகமே அதன் உடல் என்றும்,
அதில் வாழும் உயிரினங்கள் அனைத்தும் அதனிலேயே ஐக்கியமாக வேண்டி
வராஹத்தைச் சரணடைய வேண்டும் என்றும் வேதாந்தக் கருத்து எழுந்தது.
இந்தக் கருத்து பாரத நாட்டில் எழுந்த கருத்தாகும்.
வராஹச் சின்னங்கள் மொஹஞ்சதாரோவில் கிடைத்துள்ளதால்,
5000 வருடங்களுக்கு முன் எழுந்த சிந்து சமவெளிக் கலாச்சாரம், பாரதக் கலாச்சாரமே என்பதில் ஐயமில்லை.
இதிலுள்ள முக்கிய விவரம், வராஹம் என்னும் மிருகம் பாரத நாட்டில் மட்டுமே காணப்பட்டது என்பதே. அதிலும் இந்த விவரத்தைப் பாரத நாட்டவரான நாம் சொல்லிக் கொண்டிருக்கவில்லை. இதைக் கிரேக்கர்கள் சொன்னார்கள்! ஐரோப்பியர்கள் சொல்லிக் கொண்டிருந்தார்கள்!!
வராஹம் என்னும் ஒற்றைக் கொம்பு மிருகத்தைப் பற்றி பல கதைகள், கட்டுக் கதைகள் கிரேக்க இலக்கியங்களிலும், ஐரோப்பியர்களிடையேயும் 2000 வருடங்களுக்கு முன்பே புழங்கி வந்திருக்கின்றன. அவர்கள் யாரும் அந்த மிருகத்தைப் பார்த்ததில்லை. அவர்கள் வாழ்ந்த பகுதிகளில் அந்த மிருகம் காணப்பட்டதில்லை. ஆனால் அந்த மிருகத்தைப் பற்றிக் கனவு போல, ஆச்சரியத்துடனும், ஆர்வத்துடனும் அவர்கள் பேசியிருக்கிறார்கள். அந்த மிருகத்தின் வலிமை, அதன் ஒற்றைக் கொம்பு, அந்தக் கொம்பின் வலிமை ஆகியவை அவர்களுக்கு எட்டாக்கனிகளாகத் தென்பட்டன.
அந்த மிருகம் இந்தியாவில்தான் வாழ்ந்தது என்பதை அரிஸ்டாடில், ப்ளினி உட்பட பல கிரேக்க ஆசிரியர்கள் எழுதியுள்ளார்கள். அந்த ஒற்றைக் கொம்பு மிருகத்தை ஓரிக்ஸ் (ORYX) என்றும் அழைத்தார்கள். அதைப் பற்றி எழுதிய யாரும் இந்தியாவுக்கு வந்து, நேரில் கண்டு எழுதினதாகத் தெரியவில்லை. அவர்களுக்கு முந்தின காலக்கட்டத்தில், மக்களிடையே புழங்கி வந்த கருத்தையே அவர்கள் வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.. ஆனால் அந்தக் கருத்து, மிகவும் பரவலாகவும், ஆழமாகவும், பல காலமாகவும் இருந்து வந்திருந்தால்தான், யூனிகான் (UNICORN) என்று ஆங்கிலத்தில் சொல்லப்பட்ட அந்த மிருகம் அந்த அளவுக்கு அவர்கள் கனவுகளிலும், கதைகளிலும், நூல்களிலும் இடம் பெற்றிருக்க முடியும்.
அப்படி இடம் பெற்ற ஒரு முக்கிய நூல் கிருஸ்துவர்களது மத நூலான பைபிள் ஆகும். முதலில் யூத மொழியில் எழுதப்பட்ட பழைய ஏற்பாட்டில் இந்த மிருகத்தின் பெயர் ரீம் என்று வருகிறது. அதை ஒட்டிப் பின்னாளில் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட பைபைளில் யூனிகான் என்னும் ஒற்றைக் கொம்பு மிருகம் என்றே சொல்லப்பட்டுள்ளது. யூனிகான் என்னும் சொல் மொத்தம் 9 இடங்களில் சொல்லப்பட்டுள்ளது.
- "God brought them out of Egypt; he hath as it were the strength of an unicorn."—Numbers 23:22
- "God brought him forth out of Egypt; he hath as it were the strength of an unicorn."—Numbers 24:8
- "His glory is like the firstling of his bullock, and his horns are like the horns of unicorns: with them he shall push the people together to the ends of the earth."—Deuteronomy 33:17
- "Will the unicorn be willing to serve thee, or abide by thy crib? Canst thou bind the unicorn with his band in the furrow? or will he harrow the valleys after thee? Wilt thou trust him, because his strength is great? or wilt thou leave thy labour to him? Wilt thou believe him, that he will bring home thy seed, and gather it into thy barn?"—Job 39:9–12
- "Save me from the lion's mouth; for thou hast heard me from the horns of unicorns."—Psalms 22:21
- "He maketh them [the cedars of Lebanon] also to skip like a calf; Lebanon and Sirion like a young unicorn."—Psalms 29:6
- "But my horn shalt thou exalt like the horn of the unicorn: I shall be anointed with fresh oil."—Psalms 92:10
- "And the unicorns shall come down with them, and the bullocks with their bulls; and their land shall be soaked with blood, and their dust made fat with fatness."—Isaiah 34:7
இவ்வாறு சொல்லப்படும் எந்த இடத்திலும், யூனிகானை ஒரு உருவகமாகச் சொல்லவில்லை. அதை ஒரு மிருகமாகவே சொல்லியுள்ளதால், ஐரோப்பிய மக்கள் பார்த்திராத, ஆனால் வியப்புடன் பேசிவந்த ஒற்றைக் கொம்பு மிருகத்தையே அது குறிக்கிறது என்று தெரிகிறது. இந்த மிருகத்தைப் பற்றி அரிஸ்டாட்டில் முதல், லியோனார்டோ டாவின்சி வரை பேசியிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் யாரும், இதை ஐரோப்பாவிலோ அவர்கள் வாழ்ந்த இடத்திலோ கண்டதாகப் பேசவில்லை. இந்தியாவில்தான் இவை இருந்தன என்பதைத் திட்டவட்டமாகச் சொல்லியுள்ளனர்.
அன்றைய பாரத தேசம், ஐரோப்பியர்க்ளுக்கு ஒரு கனவு நாடாக இருந்தது. வேத நெறியைப் பின்பற்றாதவர்களுக்கு பாரதத்தில் இடமில்லை. வேத நெறியில் வாழாதவர்களை மிலேச்சர்கள் என்று அழைத்தார்கள்.
மிலேச்சர்கள் பாரதத்துக்கு அப்பால், வட மேற்கிலும், மேற்கிலும் வாழ்ந்தார்கள்.
அவர்கள் பாரதத்தில் வாழவில்லையே தவிர, பாரதத்துடன் தொடர்பை அறுத்துக் கொள்ளவில்லை.
மிலேச்சர்களாக இருந்தாலும், சாஸ்திரங்களில் வல்லவர்களாக இருப்பவர்களை ரிஷிகளுக்கொப்பாக மதிப்பதாக, 1500 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட பிருஹத் சம்ஹிதையில், (2-15) வராஹமிஹிரர் கூறுகிறார்.
அப்படி இருந்த ஒரு மிலேச்ச ரிஷி, ரோமகர் என்பவர்.
இவர் ரோமக நாட்டைச் சேர்ந்தவர். மிலேச்சராக இருந்தாலும், இவர் சமஸ்க்ருதம் அறிந்து ரோமக சிந்தாந்தம் என்னும் வானியல் ஜோதிட நூலை எழுதியுள்ளார்.
அதைத் தான் எழுதிய பஞ்ச சித்தாந்திகா என்னும் நூலில் விவரித்துள்ளார் வராஹமிஹிரர்.
ரோகமர் என்னும் அதே பெயரில் ஒரு சித்தர் தமிழில் பாடல்கள் எழுதியுள்ளதைச் சித்தர்கள் பாடல் தொகுப்பில் காணலாம்.
இந்த ரோமக சித்தர், ஒரு மிலேச்சரே என்று கருதும் வண்ணம் அவர் எழுதிய பாடல் தொகுப்பில் 13 ஆவது பாடலில் மிலேச்சர்களைப் பற்றிக் கூறுகிறார்.
" …. இந்த யோகம் விட்டால்
வெறுங்கடத்தில் ஈப்புகுந்தவாறு போல வேதாந்தம் அறியாத மிலேச்சர் தாமே."
என்று அவர் கூறுவது எதேச்சையானதாக இருக்க முடியுமா?
வேதாந்தம் அறியாத மிலேச்சர்கள் மத்தியிலிருந்து அவர் வந்திருக்கவே, தான் அறிந்த வேதாந்தம் தந்த யோக அறிவைப் பற்றி அவர் பாடலாகப் பாடியுள்ளார். மிலேச்சர்களுக்கு அந்த அறிவு கிடையாது என்றும் சொல்லியுள்ளார். அவரது வேத நெறி வாழ்க்கையின் காரணமாகவும், யோகப் பயிற்சியின் காரணமாகவும், சித்தர்களுள் ஒருவராக அவர் மதிக்கப்பட்டிருக்கிறார்.
இவரே சமஸ்க்ருதத்திலும், தமிழிலும் எழுதியவர் என்று கூறும் வண்ணம், இவரது பெயரால், பஞ்ச பட்சி சாஸ்திரம் என்னும் ஜோதிட நூலும் தமிழில் இருக்கிறது. அந்த சாஸ்திரம் சொல்லும் விவரத்துக்கும், மிலேச்ச நாடுகளுக்கும் உள்ள தொடர்பை வேறு இடத்தில் காண்போம். இங்கே நாம் கவனிக்க வேண்டிய விவரம், மிலேச்சரான ஒருவர், தமிழ், சமஸ்கிருதம் ஆகிய இரண்டு மொழிகளிலும் வல்லுனராக இருந்திருக்கிறார் என்பதே.
அன்றைய பாரத நாட்டில் பேச்சு மொழியாகத் தமிழும்,
படிப்பு மொழியாக சம்ஸ்க்ருதமும்
ஆண்டு வந்திருந்தால் மட்டுமே இது சாத்தியம்
என்பதை இது காட்டுகிறது.
பாரதத்துக்கு வந்து அயலார், மக்களுடன் பேசுவதற்காகத் தமிழையும்,
பண்டிதர்களுடன் விவாதிக்கவும், மற்றும் கல்வி பயில்வதற்காகவும்
சமஸ்க்ருத்தையும் கற்றுக் கொண்டிருக்க வேண்டும்
என்பதையும் இது காட்டுகிறது.
பாரத ரிஷிகளான சாண்டில்யரும், நெய்தல் கார்கியரும்
குறுந்தொகையில் தமிழ்பாடல் எழுதினதைப் போல,
வான்மீகியார் புறநானூற்றில் தமிழ்ப் பாடல் எழுதினதைப் போல,
மிலேச்ச ரிஷிகளும் தமிழில் பாடல் எழுதுவதை ஊக்குவிக்கும் வண்ணம்,
பாரத அளவில் முக்கியத்துவம் பெற்ற மொழியாகத்
தமிழ் இருந்திருக்க வேண்டும் என்பதை இது காட்டுகிறது.
ரோமக ரிஷியைப் பற்றிய விவரங்கள் மூலம் மிலேச்சர்கள் பாரதத்துடன் தொடர்பு கொண்டிருந்தனர் என்று தெரிகிறது. அவர்களில் வேதாந்த நாட்டம் உடையவர்களுக்கு இங்கு மதிப்பு இருந்தது. அவர்கள் மூலமாக, பாரத நாட்டு வழக்கங்கள், வேத நெறிகள், தவப்பயிற்சிகள் அவர்கள் நாட்டுக்கும் சென்றிருக்கக் கூடிய சாத்தியத்தை இவை உறுதி படுத்துகின்றன.
ரோமகர் போன்றவர்கள் மட்டுமல்லாமல், வாணிபக் காரணங்களுக்காவும் மிலேச்சர்கள் பாரதத்துக்கு வந்திருக்கின்றனர். வேலை நிமித்தமாக இங்கு வந்து தங்கியும் இருக்கின்றனர், 55 ஆம் கட்டுரையில் மூவேந்தர்கள் நாடுகளிலும், யவனர்கள் என்னும் மிலேச்சர்கள் காவல் பணியில் வைக்கப்பட்டிருந்தனர் என்பதைக் கண்டோம்,
யவனர்களுடனும், மிலேச்சர்க:ளுடனும் தொடர்பிருந்தாலும்,
அவர்களுடன் பாரத மக்கள் குடும்ப உறவுகள் வைத்துக் கொள்ளவில்லை.
மரபணு ஆராய்ச்சிகளின் மூலமும் இது உறுதி செய்யப்பட்டுள்ளது.
வால்மீகி ராமாயண காலத்திலேயே மிலேச்சர்கள் இந்தியாவுக்குள் வந்து போயிருக்கின்றனர்.
ராமனுக்குப் பட்டாபிஷேகம் செய்ய வேண்டும் என்று தசரதன் முடிவு செய்தவுடன் பல நாட்டு மன்னர்களும் அழைக்கப்பட்டனர்.
அப்பொழுது மிலேச்ச அரசர்களும் அழைக்கப்பட்டு, அவர்கள் தசரதனது சபையில் கூடினர் என்று வால்மீகி கூறுகிறார் (வா-ரா – 2-3-25).
அதைச் சொல்லுமிடத்தே "மிலேச்சாஸ்ச ஆர்யாஸ்ச" என்கிறார் வால்மீகி.
அதாவது நானா திசைகளில் ஆண்டு வந்த மன்னர்கள், காடு, மலைகளில் ஆண்டு வந்த மன்னர்கள், இவர்களுடன் மிலேச்ச மன்னர்கள், ஆரிய மன்னர்கள் ஆகியோரையும் பட்டாபிஷேகத்துக்கு அழைத்தார்கள் என்கிறார் வால்மீகி.
ஆரிய மன்னர்கள் என்பவர்கள் பாரதத்தில் இருந்தவர்கள். மிலேச்சர்கள் என்று இங்கு சொல்லப்பட்டவர்கள், இந்தியாவுக்கு மேற்கு, வட மேற்கில் இருந்த ஐரோப்பியப் பகுதிகளைச் சேர்ந்தவர்களே. அவர்கள் நட்பு முறையில் ராமன் காலத்திலேயே பாரதத்துக்கு வந்து போயிருக்கின்றனர். அவர்கள் மூலமாக ராமாயண காலம் தொட்டே வேத வழக்கங்கள் பற்றிய விவரங்கள் அவர்கள் இருந்த மேற்காசியா, ஐரோப்பா ஆகிய இடங்களுக்குச் சென்றிருக்கிறது. அப்படிச் சென்ற ஒரு விவரம்தான் வராஹம் பற்றிய செய்தியாகும்.
இதை மெய்ப்பிக்க ஐரோப்பாவில் யூனிகானைப் பற்றி நிலவும் கருத்தைப் பார்ப்போம்.
யூனிகான் என்னும் ஒற்றைக் கொம்பு மிருகத்தை
யாராலும் அடக்க முடியாது என்றும்,
அது கன்னிப் பெண்ணைக் கண்டால் மட்டுமே அவளிடம் அடங்கும் என்றும்
ஐரோப்பியர்கள் நம்பி வந்தனர்.
வலிமைக்குப் பெயர் போன அந்த மிருகத்தை ஒருவன் அடைய விரும்பினால், அதற்காக ஒரு கன்னிப் பெண்ணின் உதவியை நாட வேண்டும்,
அன்பும், பரிவும், அழகும் உள்ள அப்படிப்பட்ட ஒரு பெண்ணைப் பார்த்தால், யூனிகான் மிருகம் அவளிடம் அடங்கி, அவள் சொன்னபடி நடந்து கொள்ளும்.
கிரேக்கர்கள் மத்தியில் இருந்துவந்த இந்தக் கருத்தை 1479 இல் லியோநார்டோ டாவின்சி அவர்கள் சித்திரமாக வரைந்துள்ளார்.
http://www.universalleonardo.org/work.php?id=438
கன்னிப் பெண்ணைக் கண்டால் யூனிகான் சாதுவாக, அவள் மடியில் படுத்துறங்கும் என்ற நம்பிக்கை ஐரோப்பாவில் காலம் காலமாக இருந்து வந்திருக்கிறது.
இதைக் கொண்டு ஒரு பெண்ணின் கன்னிமைக்கு, யூனிகான் சாட்சியாக இருந்தது என்று அவர்கள் நினைத்தார்கள்.
அதை அப்படியே கன்னி மேரிக்குச் சாட்சியாக உருவகப்படுத்தவும் செய்தார்கள்.
இடைக்கால கிருஸ்துவ எழுத்தாளர்கள்,
கன்னியைக் கன்னி மேரி என்றும், ஏசுகிருஸ்துவை யூனிகான் என்றும் உருவகப்படுத்தினார்கள்.
கதைகளில், கன்னியிடம் அடங்கிய யூனிகானை, வேட்டைக்காரர்கள் எளிதில் பிடித்துக் கொன்றார்கள்
என்று சொல்லப்பட்டது.
அதை அப்படியே எடுத்துக் கொண்டு,
யாராலும் வெல்ல முடியாத யூனிகான் முடிவில் வெல்லப்பட்டதைப் போல,
ஏசுநாதர் சிலுவையில் அறையப்பட்டார் (PASSION OF THE CHRIST) என்று எழுதியும், பரப்பியும் வந்தார்கள்.
தாங்கள் காணாத, தங்கள் நாட்டில் இல்லாத ஒரு மிருகத்தை –
அதிலும் பாரத நாட்டில் மட்டுமே இருந்தது என்று
ஐரோப்பியர்களாலேயே சொல்லப்பட்ட ஒரு மிருகத்தைத் –
தங்களுக்கு வலிமை தரத் தங்களிடம் வர வேண்டும்
என்று பைபிளில் எழுதினார்கள்.
அது மட்டுமல்லாமல் கிருஸ்துவ நம்பிக்கைக்கு ஆதாரமான ஏசுவை
அந்த மிருகத்துடன் ஒப்பிட்டார்கள்.
இவர்கள் இவ்வளவு சொல்லும் யூனிகான் என்னும் மிருகம் உண்மையில் இருந்தது என்பதற்கு எந்த ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை. அது பாரதத்தில் மட்டுமே இருந்தது என்ற எண்ணத்தில் அவர்களுக்கு சந்தேகம் இருந்ததில்லை. ஆனால் அப்படி ஒரு மிருகம் இருந்தது என்பதற்கான FOSSIL எனப்படும் புதைபொருள் ஆதாரமும் இது வரை பாரத நாட்டில் கிடைக்கவில்லை. அப்படிப்பட்ட ஒரு மிருகம் கன்னிப் பெண்ணிடம் மயங்கி அடங்கும் என்ற கதையும் பாரத நாட்டில் என்றுமே இருந்ததில்லை.
ஆனால் அப்படி ஒரு எண்ணத்துக்கொப்பான ஒரு சம்பவம் ராமாயண காலத்தில் பாரத தேசத்தில் நடந்தது. (வால்மீகி ராமாயணம் 1-9)
ராமாயண காலத்தில் பாரத நாட்டில் ஒற்றைக் கொம்பு ரிஷி ஒருவர் இருந்தார்.
இவரை 'ருஷ்யஸ்ருங்கர்" என்று அழைத்தார்கள்.
ஸ்ருங்கி என்றால் கொம்பு என்று அர்த்தம்.
ருஷ்ய ஸ்ருங்கர் என்றால் கொம்புள்ள ரிஷி என்று அர்த்தம்.
ரிஷி என்பவர் ஒரு மனிதர்.
அவருக்குக் கொம்பு இருப்பது சாத்தியமா என்ற கேள்வி வருகிறது.
கொம்பு இருக்கும்!!
அதாவது ஒருவர் பெரிய அறிவாளியாகவோ, பெரிய மனிதராகவோ இருந்தால்,
நாம் 'அவருக்கென்ன, அவர் பெரிய கொம்பன்"
என்று சொல்வது வழக்கமல்லவா?
யாராவது பெரிய மனிதத்தனம் செய்தால்,
'அவன் என்ன கொம்பனா?' என்று கேட்பதும்,
'அவனுக்கென்ன கொம்பா முளைத்து விட்டது' என்று கேட்பதும்
நம்மிடையே இருக்கும் ஒரு வழக்கம்தான்.
அந்த நாளில் பெரிய மனிதனைக் கொம்புடையவன் என்று சொல்லி வந்திருக்கிறார்கள். மிகப் பெரிய கொம்பன் ஒருவர் இருக்கிறார். அவர் யார் தெரியுமா?
அவர் சாட்சாத் கடவுள்தான்.
விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் (57 ஆவது ஸ்லோகம்) விஷ்ணுவை 'மஹா ஸ்ருங்கி" என்று அழைக்கிறோம்,
ராமாயணத்தில் பிரும்மாதி தேவர்கள் ராமனை "ஏக ஸ்ருங்கி" என்று அழைத்தனர் (யுத்த காண்டம் – 117 -14)
கடவுள் அவதராங்களுக்குத்தான் ஸ்ருங்கி என்னும் கொம்பைக் கொடுத்து,
மிகப் பெரியவர், வலியவர், யாராலும் வெல்ல முடியாதாவர்
என்று உருவகமாகச் சொல்லி வந்தார்கள்.
அப்படியிருக்க ரிஷ்யஸ்ருங்கருக்கும் அந்தக் கொம்பன் என்னும் காரணப் பெயர் இருந்தது. அதற்குக் காரணம் அவர் மஹாஞானி.
அவரை ஞானத்திலும், யோகத்திலும் யாராலும் வெல்ல முடியாது.
அப்படிப்பட்டவர் காட்டிலேயே பிறந்து, காட்டிலேயே வளர்ந்து வந்தார்.
அவரது தந்தையும் ஒரு ரிஷியாவார்.
அவர் தன் மகனுக்கு எல்லா ஞானத்தையும் ஊட்டி, அவரை மக்கள் கூட்டத்திலிருந்து விலக்கியே வளர்த்து வந்தார்.
இதனால் அவர் பெண்களைப் பார்த்ததே இல்லை!
பிரம்மச்சாரியான அவருக்கு ஒரு பெண் எப்படி இருப்பாள் என்ற விவரமே தெரியாது.
அந்த காலக்கட்ட்த்தில் அங்க நாட்டை ரோமபாதன் என்பவன் ஆண்டு வந்தான்.
அவன் நாட்டில் கடுமையான வறட்சியும், பஞ்சமும் வந்தது.
ருஷ்யஸ்ருங்கர் போன்ற ஒரு ரிஷி நாட்டில் காலெடுத்து வைத்தால்,
மழை வரும் என்று அறிஞர்கள் சொன்னார்கள்.
ஆனால் ருஷ்யஸ்ருங்கரோ அவரது தந்தையான விபாந்தகரின் கண்காணிப்பில் இருந்தார். நாட்டுக்குச் சென்றால், தனது மகனது பிரம்மசரிய விரதத்துக்குப் பங்கம் விளையும் என்று, அவரை அனுப்பமாட்டார்.
இதனால், அரச சபையில் இருந்த கணிகையரை அனுப்புவது என்று முடிவு செய்யப்பட்டது
ஆய கலைகள் 64 ம் அறிந்த பெண்கள்,
கணிகையர் என்று அரசவையில் நியமனம் பெற்று இருந்தனர்.
அவர்கள் அறிந்த கலைகள் மூலமாக, ருஷ்யஸ்ருங்கரை மயக்கி வரவழைக்கத் திட்டமிடப்பட்டது.
ருஷ்யஸ்ருங்கரது தந்தை இல்லாத நேரமாகப் பார்த்து, அந்தப் பெண்கள் அவரது ஆஸ்ரமத்துக்குச் சென்று, ருஷ்யஸ்ருங்கரது கண்ணில் படும் படி உலாவி, பேச்சுக் கொடுத்தனர். பெண்களையே பார்த்திராத ருஷ்யஸ்ருங்கருக்கு அவர்களிடம் ஈர்ப்பு ஏற்பட்டது. அவர்கள் அழைக்க, அவர்கள் பின்னாலேயே தொடர்ந்து வந்து அங்க நாட்டுக்குள் நுழைந்தார். அங்க நாட்டில் அவர் நுழைந்தவுடன் மழையும் பெய்தது. அரசன் ரோமபாதனும் அவரை வரவேற்றுத் தன் மகள் சாந்தாவை அவருக்கு மணமுடித்து வைத்தார்.
இவ்வாறாக பெண் வாசனையே அறிந்திராத ஒரு ரிஷியை,
அதிலும் கொம்பன் என்று பாராட்டப்பட்ட ரிஷியை,
பெண்ணைக் காட்டி வரவழைத்து விட்டார்கள்.
இந்தச் சம்பவம் அந்தக் காலக் கட்ட்த்தில் மிகவும் பேசப்பட்டதாக இருக்க வேண்டும்.
ஏனெனில் இந்த ரிஷி சாதாரணமாவர் அல்ல.
இந்த ரிஷியே, பிள்ளைகள் இல்லாத தசரதனுக்குப்,
புத்திர காமேஷ்டி யாகம் செய்து வைத்து,
கடவுளையே ராமனாக பிறக்கச் செய்தவர்.
இதன் காரணமாகவே இவருக்குக் கொம்பன்
என்னும் பொருள்படும் ருஷ்யஸ்ருங்கர் என்னும் பெயர் ஏற்பட்டிருக்கலாம்.
அவரது ஞானத்தாலும், வேள்வியாலும் பிறந்த
ராமனது பட்டாபிஷேகத்துக்கு மிலேச்ச அரசர்கள் வந்திருந்தனர்
என்று பார்த்தோம்.
இதனல், ராமன் புகழ் மட்டுமல்ல,
அவர் பிறப்பதற்குக் காரணமான யாகத்தைச் செய்த ருஷ்ய ஸ்ருங்கரது புகழும்,
அவரை வளைத்துப் போட பெண்கள் உதவியை நாடியதும்
மிலேச்ச அரசர்கள் மூலமாக ஐரோப்பாவரை சென்றிருக்கும் சாத்தியம்
நிறையவே இருக்கிறது.
முதலில் உண்மைச் சம்பவமாகப் பேசப்பட்டு,
நாளடைவில், ரிஷியின் 'கொம்பு' மட்டுமே நினைவில் நிலைத்து நின்று,
அவர் பெண்ணுக்கு அடங்கி,
அவள் பின்னால் வந்தவர் என்பது மட்டுமே
கதையாக நிலைத்து விட்டிருக்கிறது.
நம் நாட்டில் ருஷ்யஸ்ருங்கரை பெருமை இன்றும் நிலைத்து நின்றிருக்கிறது.
இன்றும், ஒரிசா மாநிலத்தில் உள்ள கஞ்சம் பகுதியில், மழை பெய்யவில்லை என்றால்,
அங்குள்ள ருஷ்யஸ்ருங்கர் மலைக்கு மக்கள் சென்று, அந்த ரிஷியைப் போற்றிப் பாடுகின்றனர்.
இதனால் தங்கள் நாட்டில் மழை பொழியும் என்றும் நம்புகின்றனர். கடைசியாக 2009 –இல் இவ்வாறு செய்த சம்பவம், செய்தித்தாள்களில் வந்தது.
ஒரிசா என்பது அங்க நாடு இருந்த பகுதியாகும். அங்கிருந்த மலை அல்லது காட்டுப் பகுதியில் ருஷ்யஸ்ருங்கர் வாழ்ந்தார் என்பது சரியே. அப்பகுதியில் ரிஷிமால் என்ற பெயரில் ஒரு மலை இருக்கிறது,
அதை ருஷ்ய ஸ்ருங்கர் மலை என்கிறார்கள்.
அந்த மலையிலிருந்து ரிஷிகுல்யம், வம்சதாரா என்னும்
இரண்டு நதிகள் உண்டாகி வருகின்றன.
வம்சதார என்னும் பெயர், புத்திர காமேஷ்டி யாகம் மூலம்
தசரதனது வம்சத்தை வளரச் செய்த
ருஷ்யஸ்ருங்கரது பெருமையுடன் ஒத்து போகின்றது.
இந்த ரிஷியால் மழை மட்டும் பொழியவில்லை. வம்சவிருத்தியும் ஏற்பட்டது என்பதால்,
இன்று வரை மறையாத ராமாயண கால ஆதாரமாக இந்த மலையும், நதிகளும், இங்குள்ள மக்கள் நம்பிக்கையும் இருக்கின்றன.
நம் நாட்டில் இப்படி அமைந்த ஒரு வரலாறு,
பெண்ணிடம் அடங்கும் ஒற்றைக் கொம்புடைய வலிய, அரிய மிருகமாக
மிலேச்ச நாடுகளில் நாட்டுப்புறக் கதையாக ராமாயணம் காலம் தொட்டே
வழங்கி வந்திருக்க் வேண்டும்,
இந்தக் கதையைச் சொல்லும் எந்த ஐரோப்பிய நூல்களிலும்,
இது எப்பொழுது, ஏன், யாரை முன்னிட்டு எழுந்தது போன்ற விவரங்கள் இல்லை.
ஆனால் இந்தக் கொம்பன் பாரத நாட்டில் இருந்தவன் என்பதில் அவர்கள் கருத்தில் மாற்றம் இல்லை.
இந்தக் கொம்பனை அடைய விரும்பும் பிரார்த்தனைகள் சமயக் கொள்கையாக யூதர்கள் மரபில் முதலில் ஏற்பட்டது.
அந்த யூதர்கள், பாரத மரபிலிருந்து வந்தவர்கள் என்றும், இந்தியத் தத்துவ மேதைகள் வழியில் வந்தவர்கள் என்றும், அரிஸ்டாடில் (Book I:22.) தெரிவிப்பதாக பொ.பி, முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த யூத அறிஞர் ஃப்ளேவியஸ் ஜோசெபஸ் (Flavius Josephus (37 – 100 A.D.) என்பவர் தனது நூலான 'ஹிஸ்டரி ஆஃப் ஜூஸ்' என்னும் நூலுல் தெரிவித்துள்ளார். இதே கருத்தைப் பிற யூத அறிஞர்களும் தெரிவித்துள்ளனர்.
பாரதத்திற்குப் பல மிலேச்ச அறிஞர்கள் வந்துள்ளனர். அவர்களுள் ஒருவராக ரோமக ரிஷி இருந்ததை இந்தக் கட்டுரையில் முன்னமே கண்டோம். அவரைப் போல வந்த ஒரு பகுதியினரைக் 'காலேனியன்ஸ் (Calanians) என்று இந்தியாவில் அழைத்தனர். அவர்களே யூதர்கள் என்று சிரியாவில் அழைக்கப்பட்டனர் என்று அந்த நாட்டு அறிஞர்களே எழுதியுள்ளனர்,
இந்தியாவுக்குப் பொ.மு. 3 ஆம் நூற்றாண்டில் வந்த கிரேக்கப் பயணி மெகஸ்தனிஸ் அவர்களும் அவ்வாறே கூறியுள்ளார். (Anacalypsis, by Godfrey Higgins, Vol. I; p. 400.) பாரத மரபின் பிரம்மா, அவர்கள் மொழியில் ஆபிரஹாம் என்றானார். பிரும்மாவின் மனைவி சரஸ்வதி என்பதை அப்படியே அவர்கள் எடுத்தாண்டுள்ளனர், சரஸ்வதி, சரை என்றும் சாரா என்றும் ஆனாள்.
அரேபியாவில் கிடைத்துள்ள, அன்னப்பறவையுடன் கூடிய சரஸ்வதி.
ஒன்று இரண்டல்ல, பாரதத்துடன் ஒட்டியும் வெட்டியும் உறவாடிய மிலேச்சர்கள் பலர் இருந்தனர்.
மஹாபாரத யுத்தத்தில் அவர்கள் இரு பக்கமும் நின்று போரிட்டிருக்கின்றனர்.
யவனர், ரமதர், ரோமகர், தரதர், துஷார்ர், பஹ்ல்லவர்,
சாகர், ஹரஹூனர், சீனர், கிராடர், வாலிகர்
என்று பல மிலேச்ச மக்கள் பாரதத்துக்கு வெளியே வாழ்ந்து,
பாரதத்தை விட்டகல விரும்பாமல்,
வேத மதத்தின் வழக்கங்களைத் தங்கள் நாடுகளில்
அரைகுறையாகப் பின்பற்றி வந்திருக்கின்றனர்.
இங்கிருந்துதான் ஐரோப்பாவுக்குப்
பல வேதக் கருத்துக்கள் சென்றிருக்கின்றனவே தவிர,
பாரத்த்திற்கு வரவில்லை.
இதைப் பற்றி மேலும் பல விவரங்களை அடுத்த கட்டுரையில் காண்போம்.