புதன், 29 டிசம்பர், 2010

25. ரிக் வேதப் போர்களில் உள்ள இயற்கை உண்மைகள்



 ரிக் வேதம் 10 மண்டலங்களாகப் (பகுதிகளாக) பிரிக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு மண்டலத்திலும் பல பாடல்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் ஏதேனும் ஒரு தெய்வத்தைத் துதிப்பதாக உள்ளது. இந்தத் தெய்வங்கள் இன்றைக்கு நாம் கோவிலில் கும்பிடும் தெய்வங்கள் அல்ல. ஆனால் இந்த ரிக் வேதத் தெய்வங்களது பெயர்களை  ஒரு ஹிந்துவிடம் கூறினால் அவை தெய்வங்களது பெயர்களே என்று ஒப்புக் கொள்வான். அந்தப் பெயர்கள் வாஸ்து சாஸ்திரம், ஜோதிடம் போன்றவற்றில் சொல்லப்படும் பெயர்கள் என்று எளிதில் புரிந்து கொள்வான். ஆனால் இவை எதுவும் தெரியாத, அல்லது தெரிந்து கொள்ள விரும்பாத மாக்ஸ் முல்லர் போன்றவர்கள் இந்தத் தெய்வங்களின் மேல் இயற்றப்பட்ட பாடல்களிலிருந்து யுத்தத்தை கண்டு பிடித்தது, உலக மகா அபத்தம் என்று பட்டம் சூட்டத்தக்கது.


உதாரணத்துக்கு நம்மில் பலரும் அறிந்த கந்தர் சஷ்டி கவசப் பாடலை நினைவு கூர்வோம். அந்தப் பாடலில் எத்தனை இடங்களில் முருகப் பெருமான் அவர்கள், பகைவர்களை, நம்மைத்தாக்கும் பலவகைத் துன்பங்கள் என்னும் கூட்டங்களை அடிக்க வேண்டும், உடைக்க வேண்டும், அழிக்க வேண்டும் என்று பாடுகிறோம்? நம் தெய்வ வழிபாட்டைப் பற்றி அறியாத ஒருவர் தமிழ் ஆராய்ச்சி செய்வதாகக் கூறி, கந்தர் சஷ்டி கவசத்தைப் படித்து விட்டு, அதில் போர் பற்றிய வர்ண்ணை வருகிறது, முருகன் என்பவர் போர் வெறி பிடித்து எல்லோரையும் அழித்து, சிஷ்டர் என்னும் ஒரு சாராருக்கு உதவினார் என்று சொன்னால் எப்படி இருக்கும்? ரிக் வேதத்தைப் படித்து மாக்ஸ் முல்லர் போன்றவர்கள் சொன்னது அப்படிப்பட்டதுதான்.


நகரங்களை அழிப்பதைப் பற்றியும், மதில்களை அழிப்பதைப் பற்றியும் ரிக் வேதத்தில் பல இடங்களில் வருகிறது. அதிலும் விருத்திராசுரன் என்னும் அசுரனது 99 கோட்டைகளை இந்திரன் தகர்த்தான் என்றும் வருகிறது. அசுரன் என்றால் என்ன என்று முன்பே பார்த்தோம். தத்துவ ரீதியாகவும், உள்பொருள் வைத்தும், உருவகமாகவும், இந்தக் கதைகள் உள்ளன.


உதாரணமாக விருத்திராசுரனை அழித்ததைப் பார்ப்போம். விருத்திரன் என்றால் (போர்வை போல) மூடிக் கொண்டிருப்பவன் என்று பொருள். அவனை ஒரு பாம்பாகவும் வர்ணித்துள்ளனர். எப்பொழுதும் இந்திரன் நீரைக் கொடுப்பான். விருத்திரன் நீரைக் குடித்து விடுவான். இருவருக்குமே இதில்தான் சண்டை. இந்த விவரத்திலிருந்து தத்துவார்த்தமாக நாம் பொருள் காண வேண்டும்.

பொதுவாகவே பூமிக்குள் பாம்புகள் படுத்துக் கிடக்கின்றன என்பது நம் கதைகளில் சொல்லப்படுகிறது. அவை எப்பொழுது வெளியில் வரலாம் என்று காத்துக் கொண்டிருக்கின்றன. ராமாயணத்தில், அனுமன் கடலைக் கடந்தபோது, மைனாகம் என்னும் மலையைக் காண்பார். அந்த மலை பூமிக்குள்ளிலிருந்து பாம்புகள் வெளிவரும் ஒரு வாயிலை அடைத்துக் கொண்டு உட்கார்ந்திருப்பதாகச் சொல்லும். அப்படிச் சொன்னதன் பொருள் என்னவாக இருக்கும் என்று ஆராய்ந்தால், பூமி வெடித்து, எரிமலைக் குழம்புகள் வெளியே வராமல் இருக்க,  அப்படி வெடிப்பு ஏற்படக்கூடிய இடத்தில் ஒரு மலை உட்கார்ந்திருக்கிறது என்று சொல்லப்பட்டிருக்கிறது என்பது விளங்கும்.  


ராமர் சேதுப் பாலத்தை இடிக்க வேண்டும் என்று திராவிடவாதிகள் முனைப்பாக இருக்கிறார்களே, அந்த இடத்தின் அடிவாரம் எரிமலை வெடிப்புகள் நேரக்கூடிய இடம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். கடலடியில் இருக்கும் பழுதுபட்ட அடிவாரத்தை, மைனாக மலையும், ராமர் கட்டிய பாலமும், ஒட்டு போட்டு மூடி வைத்தாற்போல காப்பாற்றி வருகிறது. இயற்கையை ஒழுங்குபடுத்தி அதன் பயனாக மனித குலத்தையும் வாழ வைக்கிறது அந்தப் பாலம். மைனாக மலை அனுமனிடம் கூறுவதிலிருந்து, பூமிக்குள் இருக்கும் எரிமலைக் குழம்புகளைப் பாம்புகள் என்று சொல்லி வந்திருக்கின்றனர் என்று தெரிகிறது. நாம் பார்க்கும் நிலப்பகுதியே அப்படிப்பட்ட உள் குழம்புகள் வெளியேறி நாளடைவில் காய்ந்து, பொருக்கு தட்டினாற்போல ஆனதுதான். எனவே மூடியிருப்பவன் என்றும், பெரும் பாம்பு போன்றவன் என்றும் விருத்திராசுரனை வர்ணித்துள்ளதால், அது பூமியின் பொருக்கு போன்ற மேல்மட்ட நிலப்பகுதியே என்று அறியலாம்.


இன்னொரு கதையில் அந்தகாசுரன் என்னும் அசுரனை, ருத்திரன் போரிட்டு, வீழ்த்தி, பூமி மீது கவிழ்த்துப் படுக்க வைத்து விடுகிறார், அவன் மீண்டும் எழாத வண்ணம் 32 தெய்வங்கள் அவன் மீது உட்கார்ந்து விடுகின்றனர். அப்படிக் குப்புறப்படுத்த அசுரன் வாஸ்து புருஷன் என்று புராணம் கூறுகிறது. அந்தகாசுரன் என்றால் இருட்டானவன் என்று அர்த்தம். ருத்திரன் அவனை அடித்துக் குப்புறப் படுக்க வைத்தார் என்றால், இருள் குப்புற விழுந்தது, அதன் முதுகுப் புறம், அந்த இருளின் எதிர்பதமான ஒளி தெரியும் பகுதியாகும் என்றாகிறது. அதாவது ஒளி விழும் பூமியின் மேல் பகுதி என்று அர்த்தமாகிறது. அதாவது சூரிய மண்டலம் உண்டாகி, பூமியின் மீது வெளிச்சம் விழ ஆரம்பித்தது என்று பொருள் கொள்ள வேண்டும்.

இந்தப் படத்தில் குப்புறப் படுத்து இருப்பது அந்தகாசுரன். இவனே வாஸ்து புருஷன் ஆவான். எட்டு திசைத் தெய்வங்களும், 32 தெய்வங்களும் உலகைக் சூழ்ந்திருக்கின்றன. இவை எல்லாம் வேதத்தில் ஆங்காங்கே சொல்லப்பட்டுள்ளன. 

இந்தப் படத்தில் குறிக்கப்பட்டுள்ள எட்டு திசைத் தெய்வங்களில் வட திசைக்குரிய குபேரனைத் தவிர மற்ற தெய்வங்கள் ரிக்  வேதத்தில் அடிக்கடி பாடப்படுகின்றனர். அந்தப்  பாடல்கள் அடிப்படையில் முல்லரும், பிறரும் ஆரியப் படையெடுப்பையும், யுத்தங்களையும் 'கண்டு பிடுத்துள்ளனர்'. குபேரன் அதர்வண வேதத்தில் சொல்லப்படுகிறார். ரிக் வேதத்தில் குபேரனுக்குப் பதிலாக வட திசைக்கு சோமன் அதிபதியாகிறார். சோமன், இந்திரன் பற்றி வரும் வர்ணனைகளைக் கொண்டு, சோம பானம் என்பது ஒரு மது வகை என்றும், அதைத் தேவர்கள் விரும்பிப் பருகுவர் என்பதும், இந்த ஆராய்சியாளர்கள் மற்றும் திராவிடவாதிகள் கருத்து. ஆனால் வாஸ்து சாஸ்திரத்தை ஓரளவேனும் அறிந்தவர், இவற்றின் உள் பொருளை, உண்மைப் பொருளை நாம் சொல்லாமலே தெரிந்து கொள்வர்.

குப்புறப்படுத்த அந்தகாசுரனது முதுகுப்புறமான பூமியின் மீது விழும் ஒளியில் 32 தெய்வங்கள் குடி கொண்டுள்ளன என்கிறது வாஸ்து சாஸ்திரம். இவை உயிரினத்துக்கு உதவுகின்றன. அவற்றுள் ஒன்று இந்திரன். இந்த தெய்வங்களது சக்தியை வாஸ்து சாஸ்திரம் மூலம் அறிகிறொம். இந்த தெய்வங்கள் எல்லாம் ஆங்காங்கே வேதத்தில் வருகின்றன. அவை ஒவ்வொன்றுக்கும் ஒரு வேலை இருக்கிறது. அவை அடித்து விரட்டுகிறது என்ற பொருள் தொனிக்கும் இடங்களில், எதை அடித்து விரட்டுகிறது என்று கவனிக்க வேண்டும். தீய சக்திகளையோ, தீய குணங்களையோ, இயற்க்கைக்கு ஊறு விளைவிக்கும் சக்திகளையோ அவை அடித்து விரட்டும். இந்திரன் போன்ற தெய்வங்கள் ஆரியனுக்கு ஆதரவாக, அடித்து நொறுக்கி, தஸ்யூக்க்ளை விரட்டி விட்டனர் என்பதும் இவ்வாறு உட்பொருளுடன் ஆராய வேண்டிய கதைகளே.


ஒவ்வொரு தெய்வத்துக்கும் உள்ள பெயர், கதை போன்றவற்றின் அடிப்படையில், சில இயற்கை நிகழ்ச்சிகளை நாம் அடையாளம் கண்டு கொள்ள முடியும் வேதம், வாஸ்து, ஜோதிடம், புராணம் போன்றவை தரும் பல விவரங்களும், சுவாரசியமான புதிர் போலவே உள்ளன. அதனால்தான் இவற்றை அடக்கிய வேதத்தை வித்தை ஞானம் - என்கிறோம். வேதத்தை முன்னிட்டு இருக்கும் இந்து மதமானது அறிவுக்குப் புறம்பானது என்று கூப்பாடு போடுகின்ற - பகுத்தறிவு வாதிகள் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் திராவிடவாதிகளைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது.


விருத்திராசுரன் கதைக்கு வருவோம். திரவக் குழம்பாக பூமிக்கடியில் இருந்த லாவா என்னும் எரிமலைக் குழம்பு, பூமியின் மேலே மூடிக் கொண்டிருக்கிறது. இவனுக்கு விருத்திராசுரன் என்பது பெயர். இந்திரன் எவ்வளவு மழை பொழிந்தாலும், விருத்திராசுரன் குடித்து விடுவான் என்பது வேத, புராணக் கதை. ஆம். எவ்வளவு மழை பொழிந்தாலும் பூமி உள்வாங்கிக் கொண்டு விடும். இதை விருத்திராசுரன் இந்திரனை முழுங்கி விட்டான் என்கிறது கதை.


சில சமயங்களில் இந்திரன் விருத்திராசுரனை முழுங்கி விடுவான். அவனது 99 கோட்டைகளை நொறுக்கி அவனை அழித்துவிட்டான் என்றும் கதை இருக்கிறது. விருத்திராசுரன் ஒரு பிராம்மணன். அவனை அழித்து விடவே இந்திரனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது, அதனால் அவன் பயந்து போய், ஒரு தாமரை மலரில் ஒளிந்து கொண்டான் என்று இந்தக் கதை சொல்கிறது.


மேற்சொன்ன இயற்கை விளக்கத்தை இதில் பொருத்திப் பாருங்கள். விருத்திராசுரனது கோட்டைகளை அழித்து, இந்திரன்  அவனைக் கொன்றுவிட்டான் என்றால், இந்திரனது மழையால், பிரளயம் போல எங்கும் வெள்ளக்காடாகி விட்டது என்று அர்த்தம் கொள்ளலாம். நிலப்பகுதி மேலே தெரியாதவண்ணம், எல்லா இடமும், நீரால் மூடப்பட்டிருக்க வேண்டும். அதனால் உயிர்கள் அழிந்து போயிருக்கும். முழு முதல் கடவுளான ப்ரம்மம், உயிரினங்கள் வாழ்வதற்காக உலகைப் படைத்து, நிலத்தைப் படைத்திருக்கிறது. இடைவிடாது மழை பொழிந்து அதன் காரணமாக நிலம் மறைந்துவிட்டால், அந்த பிரம்மத்துக்குத் தவறு இழைத்ததற்கு ஒப்பாகும். அதுவே பிரம்ம ஹத்தி தோஷமாகும்.


அப்படி ஒளிந்தவன் எங்கே ஒளிந்தான்? 
தாமரைப் பூவில் ஒளிந்தான். 
தாமரை என்பது தண்ணீரில் இருக்கும். 
அதனால் இந்திரிய சக்தியும் வெளிப்பட முடியாமல் மறைந்திருக்கிறது என்று அர்த்தமாகிறது. உலகமே வெள்ளக் காடாகி விட்டது என்ற சூழ்நிலையை இது உணர்த்துகிறது என்றும் சொல்லலாம்.


மீண்டும் உயிரினம் எப்படித் தோன்றுகிறது என்று ஹிந்து மதம் சொல்கிறது. 
தாமரையில் அமர்ந்துள்ள பிரம்மன் மூலமாக உயிரினப் படைப்பு ஆரம்பமாகிறது என்பது புராணக் கதை. உயிரினங்கள் அழிந்து போகவே, இந்திரிய சக்திகளுக்கு ஒரு வெளிப்பாடு கிடக்காததால், அந்த இந்திரிய சக்திகளின் தலைவனான இந்திரன் தாமரைத் தண்டில் ஒளிந்தான் என்று சொல்லப்படுகிறது. 
மீண்டும் உயிரினம் உண்டாக வேண்டி, 
தாமரைப் பூவில் பிரம்மன் தோன்றி 
படைப்பை ஆரம்பித்தான். 
அதன் மூலம், இந்திரிய வெளிப்பாடு (இந்திரனது ஆட்சி) எற்படுகிறது. 
இப்படி வேதக் கதைகள் எப்படி ஒன்றுக்கொன்று இயைந்து இருக்கின்றன என்று பாருங்கள்.


தாமரை என்பதற்கு இன்னொரு அர்த்தமும் உண்டு. 
தாமரையில் லஷ்மி இருப்பாள். 
ஜோதிடத்தில், சுக்கிரன் என்னும் கிரகத்துக்கு லஷ்மி தேவதை ஆவாள். சுக்கிரன் ராஜஸ எண்ணங்களுக்கு அதிபதி. இந்திரியங்கள், அதாவது ஐம்புலன் நுகர்ச்சிகளுக்கு சுக்கிரன் அதிபதி. லஷ்மியின் அருள் இருந்தால், இந்திரிய சுகங்களான, வீடு, வாசல், குடும்பம், சொத்து, சுகம் எல்லாம் கிடைக்கும் என்கிறது ஜோதிடம். சுக்கிர கிரகத்துக்கு லஷ்மி தேவதை, இந்திராணி அதி தேவதை, இந்திரன் ப்ரத்யதி தேவதை என்கிறது ஜோதிட சாஸ்திரம். உயிர்களது புலன் நுகர்ச்சிகளுக்குத் தேவையான இந்திரன் தாமரையில் ஒளிந்து கொண்டான் எவ்வாறு என்பது இதனால் தெரிகிறது.


இப்படிப் பகுத்து புரிந்து கொள்ளாத திராவிட ஜால்ராக்கள், லஷ்மி என்பதன் தத்துவத்தைப் புரிந்து கொள்ளாமல், அவளைக் கேவலப்படுத்தி, கவிதை என்ற பெயரில் உளறுகிறார்கள். தாங்கள் பகுத்தறிவாளர்கள் என்றும் சொல்லிக் கொள்கிறார்கள். அவர்கள் பேச்சிலிருந்து அவர்கள் சாத்திரங்களைப் படித்ததில்லை, உள்ளர்த்தங்களைப் புரிந்து கொள்ளும் பக்குவமும் அவர்களுக்கு இல்லை என்று தெரிகிறது.



இந்திர விருத்திராசுரன் பற்றிய இன்னொரு கதையில், வேறு ஒரு இயற்கை உண்மை மறைந்திருக்கிறது. விருத்திராசுரனது தந்தை பெயர் துவஷ்டா. அவர் முதலில் த்ரிசிரஸ் என்னும் மகனைப் பெற்றார். த்ரிசிரஸ் என்றால் மூன்று தலைகளை உடையவன் என்பது பொருள். அவன் இந்திரனை வெல்லப் படைக்கப்பட்டான். அவன்  ஒரு தலையால் உணவு உண்பானாம், மறு தலையால் சுற்றுப் புறத்தில் என்ன நடக்கிறது என்று பார்ப்பானாம். மூன்றாவது தலையால் வேதத்தைப் படிப்பானாம். அவனை இந்திரன் கொன்று விடுகிறான் என்பது கதை.


த்ரிசிரஸ் இரண்டு புலன் நுகர்ச்சிகளும் ஆராயும் அறிவும் மட்டுமே கொண்டவன் என்று தெரிகிறது. உண்ணுதல், பார்த்தல் இருந்திருக்கிறது. வேதம் படித்தல் என்பதால், புரிந்து கொள்ளும் மூளை அல்லது அறிவு இருந்திருக்கிறது என்று தெரிகிறது. அதாவது இரண்டறிவு படைத்த உயிரினத் தோற்றம் பற்றி இங்கு சொல்லப்படுகிறது. இந்திரன் காட்டுவதோ ஐந்து புலன்கள் மூலமான உணர்ச்சிகள் ஆகும். இந்திரன் த்ரிசிரஸை வென்றான் என்றால், நீரில் தோன்றிய இரண்டறிவு அல்லது இரண்டு புலன்கள் கொண்ட உயிர்கள் காலத்தைக் கடந்து, ஐம்புலன்களைக் கொண்ட உயிர்கள் தோன்றின காலம் ஆரம்பித்து விட்டது என்று பொருள் கொள்ளப்பட வேண்டும்.


த்ரிசிரஸை இந்திரன் கொன்று விடவே, துவஷ்டா கோபம் கொண்டு விருத்திராசுரனைப் படைத்தான் என்கிறது கதை. விருத்திராசுரன் என்பவன் பூமியின் நிலப்பகுதியின் உருவகமாவான். அவன் படைக்கப்பட்டு விட்டான் என்றால், நிலப்பகுதிகள் தோன்றிவிட்டன என்று சொல்வதாகிறது. இதெல்லாம் இட்டுக் கட்டி சொல்கிற கதை என்று சொல்லலாம்.
அங்குதான் ரிக் வேதம் மறை பொருளைக் காட்டுகிறது.


இந்தக் கதையில் வரும் துவஷ்டா என்னும் தெய்வம், வேதத்தில் சொல்லப்படும் தெய்வம். இந்தத் துவஷ்டா ஜோதிடத்திலும் வருகிறார். (வேதத்தின் முக்கிய அங்கமான ஜோதிடத்தை அறியாமல், வேதக் கருத்து பலவற்றுக்கும் பொருள் சொல்ல இயலாது.) சித்திரை நட்சத்திரத்துக்கு அதிபதி துவஷ்டா ஆவார். இந்த நட்சத்திரம் கன்னி ராசியில் உள்ளது. இன்றைய வானவியல் சாஸ்திரத்தில் கண்டுபிடித்தபடி, கன்னி ராசி முக்கியத்துவம் வாய்ந்தது. அதாவது, நாமிருக்கும் சூரிய மண்டலம், இந்த்க் கன்னி ராசிப் பகுதியிலிருந்து ஒருகாலத்தில் தோன்றியது. நமது மண்டலம் கன்னி ராசியைச் இன்றும் சுற்றி வந்து கொண்டிருக்கிறது. 

அதாவது நாமிருக்கும் பூமி சூரியனைச் சுற்றி வருகிறது.
சூரியனுடன் நாமும் சேர்ந்து, நமது பால் வெளி காலக்ஸியின் மையத்தைச் சுற்றி வருகிறோம். 
நம்மையும் சேர்த்து, இந்தப் பால்வெளி காலக்ஸி, அருகிலுள்ள மற்ற காலக்ஸிகளுடன் சேர்ந்து சித்திரை நக்ஷத்திரம் இருக்கும் கன்னி ராசியைச் சுற்றி வருகிறது.

இதுவரையான சுற்றுகளை இன்றைய அறிவியல் அறிந்திருக்கிறது. 
எதை மையமாகக் கொண்டு சுற்றுகிறோமோ, அதிலிருந்து அந்தச் சுற்றும் பகுதிகள் உண்டாகி உள்ளன என்று தெரிந்து கொள்ள வேண்டியது.
அதாவது நமது பூமி சூரியனைச் சுற்றி வருகிறது என்றால்,
நமது பூமி ஒரு சமயம், சூரியனது பகுதியாக இருந்தது என்று அர்த்தம்.
இதைப் படிப்படியாக எடுத்துக் கொண்டு போனால், 
இன்றைய நமது உலகம் முதலில் எங்கிருக்கிறது அல்லது எதன் அங்கமாக உள்ளிருந்தது என்று தெரியும்.
அது கன்னி ராசி இருக்கும் ‘விர்கோ சூப்பர் க்ளஸ்டர்’ ஆகும்.
எனவே உலகத்துக்கு முன் காரணம், கன்னி ராசி ஆகும்.



Virgo Cluster  என்று காணப்படும் பகுதியில் நாம் இருக்கிறோம். 
இந்தப் படத்தில் உர்ஸா மேஜர் ( Ursa Major) என்பது சப்த ரிஷி மண்டலம்.
அது குறிக்கப்படுள்ள பகுதியில் நமது உலகம் உள்ளது.
இது விர்கோ க்ளஸ்டரைச் சுற்றி வருகிறது.


அதன் முக்கிய நட்சத்திரமான சித்திரைக்கு அதிபதியாக சொல்லப்படும் துவஷ்டா, த்ரிஸிரஸையும், விருத்திராசுரனையும் படைத்த தகப்பன் என்றால், நாம் இருக்கும் இந்த பூமிப்பகுதியின் மூலக்கூறுகள் துவஷ்டாவில், அதாவது சித்திரை நட்சத்திரப்பகுதியில் ஒரு காலத்தில் இருந்தன என்றாகிறது.

சித்திரை நட்சத்திரத்தை முன்னிட்டு சித்திரை மாதமும், அந்த மாதமே வருட ஆரம்பமாகவும், அந்த மாதத்தில் சித்திரா பௌர்ணமியில் புகார் நகரில் இந்திர விழா ஆரம்பிக்கப்பட்டது என்பதும் எதேச்சையாக வந்தவை போல இல்லை. நன்கு ஆராய்ந்து, அறிந்து நமது ரிஷிகள் இந்தப் பததிகளைக் கொண்டு வந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது.

இப்படி ஒரு அறிவுச் சுரங்கத்தைக் கொண்ட வேதத்தையும், வேதக் கடவுளர்களையும் மொழிபெயர்ப்பு ஆராய்ச்சி என்ற போர்வையில் ஐரோப்பியர்கள் எப்படி சீரழித்து விட்டனர்?
அந்த சீரழிவையே ஒரு இயக்கமாகக் கொண்டு இந்தத் திராவிடவாதிகள் அறிவுக்கு சமாதி கட்டிவிட்டார்களே!. 



செவ்வாய், 28 டிசம்பர், 2010

24. ரிக் வேதப் போர்களும், மாக்ஸ் முல்லர் தோல்வியும்.




ரிக் வேதத்திலிருந்து ஆரியப் படையெடுப்புக் கதையை எடுத்தவர் மாக்ஸ் முல்லர். ஆரியக் கதையை நம்பும் தமிழ் மக்கள், முல்லர் அவர்கள் தானே ரிக் வேத மூலத்தைப் படித்து, மொழி பெயர்த்து இந்த ஆரியப் படையெடுப்பைக் கண்டு பிடித்தார் என்று நினைக்கிறார்கள். ரிக் வேதத்தின் மூலத்தைப் படித்து அவர் இந்தக் கதையைக் கண்டு பிடிக்கவில்லை. வேதத்துக்கும், வேதம் ஓதுதலுக்கும் நம் நாட்டில் கொடுக்கப்பட்ட மரியாதையை அவர் ஒருபோதும் அறிந்ததில்லை. ஒரு முறைகூட அவர் இந்தியாவுக்கு வந்ததில்லை. இந்து மதத்தின் தத்துவ மரபை நேரில் கேட்டு, கண்டு அவர் அறிந்ததில்லை. அவரது கவனம் வரலாற்று ஆராய்ச்சியில் இருந்தது. ரிக் வேத மொழிபெயர்ப்புகளைப் படித்து அவர் உருவாக்கின வரலாற்றுச் சிந்தனையே ஆரியக் கதை.


‘A History of Ancient Sanskrit Literature – The primitive religion of the Brahmans’ என்னும் நூலை 1859 ஆம் ஆண்டு வெளியிட்டார். அதன் முன்னுரையில் மொழி ஆராய்ச்சியின் மூலம், வரலாற்றைக் கண்டு பிடிக்க வேண்டும் என்று கூறுகிறார். இந்தியாவில் சமஸ்க்ருத மொழியில் ஏராளமான நூல்கள் இருந்தன. எல்லா நூல்களிலும், வேதத்தைப் பற்றி புகழ்ந்து ஒரு குறிப்பாவது இருந்தது. யாரைக் கேட்டாலும், எந்த சமஸ்க்ருத நூலைப் படித்தாலும் வேதமே ஆதியானது என்று சொன்னர்கள். இது முல்லரின் கவனத்தைக் கவர்ந்தது. வேதம் என்பது ஆதி என்றால் அதில்தான் இந்திய வரலாற்றின் மூலம் இருக்க வேண்டும் என்று முன்னுரையில் வாதிட்டுள்ளார்.


இப்படி நினைத்தற்கு இன்னொரு காரணமும் உண்டு. அவர் பின் பற்றிய கிறிஸ்து மதத்தில் அவர்கள் மத நூலான பைபிளை முன்னிட்டே வரலாற்றை ஆராய்ந்தனர். கி-பி- 1654 ஆம் ஆண்டு, ஐயர்லாந்தைச் சார்ந்த உஷர் என்னும் ஆர்ச்பிஷப் அவர்கள் பைபிளில் உள்ள விவரங்கள் அடிப்டையில் கி-மு. 4004 ஆம் ஆண்டு அக்டோபர் 23 ஆம் தேதி காலை 9 மணியளவில் இந்த உலகம் தோன்றியது என்று கூறியுள்ளார். அதனால் அது முதற்கொண்டே உலகமும், மக்களும் இருந்திருக்கின்றனர் என்பதே அவர்கள் கோட்பாடு.


கி-மு- 4004 ஆம் ஆண்டு உலகம் தோன்றியிருந்தால், அதற்குப் பின் வந்த பைபிள் கூறும் பெரு வெள்ளம், கி- மு- 2448 ஆம் ஆண்டில் வந்திருக்க வேண்டும். பிறகு வெள்ள நீர் வற்றி மக்கள் வாழ்க்கையைத் தொடங்கி, அதன்பின் ஆங்காங்கு குடி பெயர, அடுத்த 1000 ஆண்டுகள் ஆகியிருக்கும். இந்தக் கணக்கின் அடிப்படையில் கி-மு- 1500 இல் ஆரியப் படையெடுப்பு நிகழ்ந்திருக்கும். இதுவே முல்லர் போன்றவர்களது கருத்து. இவர்கள் இந்திய நூல்களைப் படிக்கவில்லை. இந்தப் பிரபஞ்சம் தோன்றின வரலாற்றைச் சொல்கின்றன நமது நூல்கள். அவை சொல்லும் காலக் கணக்கை அறிவியல் ஆமோதிக்கிறது. இதையெல்லாம் அறியாத காலத்தில், முல்லர் புகுத்திய குழப்பத்துக்கு ஆதரவு தரும் திராவிட அறிவிலிகளிடத்தில் இன்னும் நாம் பலி கடா ஆகிக் கொண்டிருக்கிறோம்


பைபிளைப் படித்த முல்லர் போன்றவர்களுக்கு  இந்தியாவில் இருந்த பல நூல்கள் குழப்பத்தைத் தந்தன. மத நூல் என்று ஒரே ஒரு நூல் ஹிந்து மதத்தில் இல்லை. ஒரே ஒரு தெய்வம் இல்லை. தாங்களே இதற்கெல்லாம் விடை கண்டு பிடிப்பதற்கு முன், அவர்கள் ஹிந்து ஞானிகளை அணுகி விவரங்கள் கேட்டிருக்க வேண்டும். யஞ்ஞவாக்கியர் பாணியில் ஞானிகள்  சொல்லியிருப்பார்கள். தெய்வங்கள் மொத்தம் 3,003, 303, 33, 6, 3, 1-1/2, 1 என்று இயற்கை வழியில், தத்துவ நெறியில் கூறியிருப்பார்கள். ரிக் வேதத்தில் வரும் எல்லா தெய்வங்களும் இவற்றுக்குள் அடங்கி விடும். அப்படிக் கேட்காமல் ரிக் வேதத்தில் தாங்களாகவே இந்திய வரலாற்றைத் தேடினார்கள்.


முதலில் இந்திய சமஸ்க்ருதப் பண்டிதர்களிடம், இந்திய வரலாற்றைப் பற்றிக் கேட்டிருக்கிறார்கள். அந்தப் பண்டிதர்கள் ராமாயண, மஹாபாரதத்தையே உரைத்துள்ளார்கள். அவைதான் உண்மையில் நமது சரித்திரப் புத்தகங்கள். ஆனால் முல்லர் போன்றவர்கள் அவற்றுள் வேதம் இல்லையே என்றும், வேதத்தில் ராமாயண, மஹாபாரதம் வரவில்லையே என்றும் குழம்பியுள்ளனர். வேதம் ஞான வழி என்பதெல்லாம் அவர்களுக்குப் புரிபடவில்லை. ஐரோப்பியப் பல்கலைக் கழகங்களில் தாங்கள் படித்த சமஸ்க்ருத அறிவைக் கொண்டு, வேதத்தையும், உபநிஷத்தையும் ஆராய்ந்து, அவை தங்களுக்குள் ஒன்றுக்கொன்று முரணானவை என்றுகூட சொல்லி இருக்கிறார்கள். அவர்கள் புரிதலுக்கு ஒத்தாற்போல, இந்தியப் பண்டிதர்கள் கருத்து தெரிவிக்கவில்லை என்பதால், இந்தியர்களுக்கே வரலாற்று அறிவும், சிந்தனையும் கிடையாது என்று முடிவு செய்து விட்டனர். முல்லர் அந்த முடிவுக்கு வந்து விட்டார்.


ரிக் வேதத்தை ஆராய்ந்தால் மட்டுமே இந்திய வரலாற்றைக் கண்டு பிடிக்க முடியும் என்று தேட ஆரம்பித்ததன் விளைவாக ஆரியக் கதை பிறந்தது. திறந்த மனத்துடன், மாக்ஸ் முல்லர் அவர்கள் ரிக் வேதத்தைப் படித்திருந்தால், அதிலிருக்கும் அறிவியலைக் கண்டிருப்பார். அவர் வாழ்ந்த ஐரோப்பாவில் கோபர்னிகஸ் காலம் வரை சூரியனே பூமியைச் சுற்றி வந்தது என்று எண்ணியிருந்தனர். ஆனால் இந்தியாவில் அந்தக் கருத்து இல்லை. அதிலும் ரிக் வேதத்தில் குறிப்பாக, விஸ்வதேவஸ் பற்றி வரும் ஸ்லோகங்களில் (1-164) பூமி சூரியனைச் சுற்றி வருதலும், ராசி மண்டலமும் விவரிக்கப்பட்டுள்ளன. திறந்த மனத்துடன் அவர் ரிக் வேதத்தைப் படித்திருந்தால், வேதம் என்பது விஞ்ஞானம் என்பதைப் புரிந்து கொண்டிருப்பார்.


ஆனால் அதில் வரலாற்றைத் தேட முற்படவே அவர் கண்ணில் பட்டது, குதிரைகளும், ரதங்களும்தான். அன்றைக்கு அவர்கள் தெரிந்து வைத்திருந்த வரலாற்றின்படி. மத்திய ஐரோப்பியாவில் வெள்ளை இன நாடோடி மக்கள் இருந்தனர். ரிக் வேதத்தில் வெள்ளை நிறத்திலும், மஞ்சள் நிறத்திலும் இந்திரனும், ஆரியனும் சொல்லப்படவே, இவர்கள் அந்த நாடோடிகள் என்று முடிவு கட்டினர். இப்படி எல்லாம் முல்லர் எடுத்த முடிவுகளில் அவர் தோல்வியே கண்டுள்ளார் என்பதைக் காலமும், திறந்த கண்ணோட்டத்துடன் கூடிய ஆராய்ச்சிகளும் காட்டுகின்றன.


முதலில் முல்லர் கூறிய நாடோடிகளைப் பற்றிப் பார்ப்போம்.
நாடோடி மக்களுக்கு ரதமும், குதிரைகளும் எங்கிருந்து வந்தன?
அவர்களிடம் ரதங்களும், குதிரைகளும் இருந்திருந்தால் அவர்களை நாடோடிகள் என்று எப்படி அழைக்கலாம்?
ஐரோப்பியாவில் அந்தக் காலக் கட்டத்தில் நாடோடிகள் இருந்தனர் என்பது ஐரோப்பிய நூல்கள் மூலம் அவர்கள் தெரிந்து கொண்ட விவரம் என்றால், அந்த நாடோடிகளும், இவர்களும் எப்படி ஒன்றாவர்?


அடுத்து முல்லர் கூறுவது, குதிரைகள் மீதும் தேரில் பயணித்தும் இவர்கள் சிந்து நதியைக் கடந்தனர் என்பது. இந்த விவரங்கள் ரிக் வேதத்தில் வருவது. நதியைக் கடக்க படகுதான் வேண்டும். இந்திரனும், ஆரியனும், சுதாஸும் சிந்து நதியைப் படகில் கடந்து வந்து போரிட்டனர் என்று ரிக் வேதம் சொல்லவில்லை. படையெடுப்பு நடந்ததாகச் சொல்லப்படும் இடத்தில், தேருக்கும், குதிரைகளுக்கும் பயன் கிடையாது. அவற்றைக் கொண்டு போர் புரிந்திருந்தால், அவற்றைக் காப்பாற்றி, நதியைக் கடப்பதற்கு சிரமம் இருந்திருக்கும். அவை படை பலமாக இருந்திருக்க முடியாது. இதையெல்லாம் முல்லர் சிந்தித்துப் பார்க்கவில்லை.


ஹிந்து மதத்தைப் பற்றிப் புரிந்து கொள்ளாமல் முல்லர் செய்த பெரிய அபத்தம், சப்த சிந்துவைத் தாண்டி ஆரியர்கள் வந்தனர் என்பது. ரிக் வேதத்தில் சப்த சிந்து என்ற பதம் அடிக்கடி வருகிறது. இதை சிந்து நதி என்று முல்லர் உட்பட பல ஐரோப்பியர்கள் பொருள் கொண்டனர். சப்த என்றால் ஏழு என்பது பொருள். சிந்து நதியில் எங்கே ஏழு என்பது வருகிறது? சிந்து நதி என்பது ஒரு நதி. அதன் கிளைகள் ஐந்து. ஆக மொத்தம் ஆறு நதிகள்தான் உள்ளன. அப்படியானால் சப்த சிந்து என்பது சிந்து நதியைக் குறிக்கிறது என்று எப்படிச் சொல்ல முடியும்?


அடுத்து ‘ஆயம்என்னும் சொல் ரிக் வேதத்தில் அடிக்கடி வருகிறது. இதனை இரும்பு என்று மொழி பெயர்த்துள்ளன்ர். ஆயத்தின் அடிப்படையில் நகரங்களை நிர்மாணித்தனர் என்னும் பொருளில் இந்தச் சொல் வருகிறது. முல்லர் போன்ற ஐரோப்பியர்கள் கண்டு வைத்த வரலாற்று ஆராய்ச்சி இதை ஒரு காலக் கட்டமாகப்பார்த்தது. அதாவது, மனிதன் தோற்றத்தையும் வளர்ச்சியையும், மனிதன் பயன்படுத்திய பொருட்களது அடிப்படையில் வகைப்படுத்தினர். கற்காலம், செப்புக் காலம், பித்தளைக் காலம் என்று தாதுக்களை மனிதன் படிப்படையாகப் பயன் படுத்தத் தெரிந்து கொண்டான். அதைப்போல இரும்பைப் பயன்படுத்திய காலம் என்று இந்த ரிக் வேத காலத்தை முடிவு செய்தனர். ஆயம் என்னும் சொல் ரிக் வேதத்தில் வரவே இந்த முடிவுக்கு வந்தனர்.


இதைப் பற்றி நான் இங்கு கூறப்போகும் கருத்து இன்றைக்கு ஆரியப் படையெடுப்பு பற்றி ஆராயும் அறிஞர்கள் கவனத்துக்கு வர வேண்டும் என்று விரும்புகிறேன்.


ஆயத்தைக் கொண்டு நகரத்தை நிர்மாணித்தனர் என்பது ஆரியர்கள், த்ஸ்யூக்கள் என்று இரு தரப்பாருக்குமே சொல்லப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. இரும்பை உபயோகித்து நகர நிர்மாணம் செய்தனர் என்று இதற்குப் பொருள் கொண்டுள்ளனர். ஆயம் என்ற சொல் நகர நிர்மாணத்தில் வருவதால் அங்கு அதற்கு ‘இரும்புஎன்ற பொருள் சரிவராது. ஏனெனில், நகரமோ, நாடொ, வீடோ, தோட்டமோ, வயலோ, எந்த ஒரு இடமாக இருந்தாலும் அதில் ஆயம் என்ற ஒன்று இருக்கும் என்பது வாஸ்து சாஸ்திர விதி.


ஆயப் பிரகரணம் என்னும் ஒரு பிரிவு வாஸ்து சாஸ்திரத்தில் உண்டு. ஒரு நில அமைப்பின் நீள அகலத்தை அளந்து, சில கணித வழக்குகள் அடிப்படையில் அந்த நில அமைப்பு ஒருவருக்கு எந்த அளவு ஆயம் தரும் என்று அளவிட முடியும். ஆயம் என்னும் இந்தக் கணக்கிலிருந்துதான் ஆயத் தீர்வை என்பது வந்தது. அதாவது ஒரு நில அமைப்பு அதன் சொந்தக் காரருக்கு ஆயம் தருவது மட்டுமல்லாமல், அதன் அடிப்படையில் ஆயம் என்னும் வரும்படியை அரசுக்கும் தருகிறது. வீட்டு வரி போல என்று இதைக் கூறலாம். ஆயக் கணக்கு செய்தவன் ஆய் அண்டிரன் என்னும் வேள் அரசன். இவனைப் பற்றிப் புற நானூறில் பாடல்கள் உள்ளன. மெகஸ்தனிஸ் எழுதியுள்ள குறிப்புகளில் 7 வித மக்கள் இந்தியாவில் இருந்தன்ர் என்கிறார். அவர்களுள் ஒரு வகையில் ஆயம் கணக்கிட்டு, அதை வசூலிப்பவர் வருகிறார். சிந்து சமவெளிப் பகுதியில் ஆயம் கணக்கிடுபவர்கள் இருந்திருக்கிறார்கள். அவ்வலவு ஏன், இந்தியாவில் எல்லா இடஙளிலும் இருந்திருக்கின்றார்கள். இந்த ஆயம் ஆலயம், க்ருஹம் (வீடு), சிற்பம், யானம் ( கருவிகள்) என்று எல்லாவற்றுக்குமே உண்டு. அவ்வவற்றுக்கான கணக்கின் அடைப்படையில் ஆயம் அமைத்து இவற்றை அமைப்பர்.

ஆயம் ஒழுங்காக அமைய வேண்டும். அதாவது ஒரு கருவி செய்வதாக இருந்தாலும், அதற்கு சில கணக்கு, அளவுகள் உள்ளன. அதன்படி ஆயம் என்பதை அளவிடுவர். அது இந்திராம்சம், ராஜாம்சம், யமாம்சம் என்று வரலாம். இந்திராம்சம் இருந்தால் புகழும், மதிப்பும் கிடைக்கும். ராஜாம்சம் என்றால், செல்வம் பெருகும், யமாம்சம் என்றால், துக்கம், நஷ்டம் ஏற்படும். எனவே ஆயம் கணக்கிட்டு, யமாம்சத்தைத் தவிர்க்கும் வண்ணம் நீள, அகலம் போன்ற அளவீடுகளை அட்ஜஸ்ட் செய்து ஆயம் அமைப்பார்கள்.


அது போல ஒரு நகரம் அமைக்க வேண்டும் என்றால், அதன் நீள அகலங்களைப் பெருக்கி பரப்பளவு கண்டுபிடித்து, அதைப் பலவிதமான விதங்களில் பெருக்கியோ, வகுத்தோ, வெவ்வேறு ஆயங்களைப் பெறுவர். அப்படிப் பெரும் ஆயங்கள் மொத்தம் 8 உள்ளன. நகரம் அமைந்த திசை, மக்கள் தொழில் (இதை வருணம் என்றனர். தொழில் ரீதியாகவே மக்களைப் பிரித்தனர் என்பதை வாஸ்து சாஸ்திர ஆயப் பிரிவில் பார்க்கலாம், மெகஸ்தனிஸ் எழுதிய குறிப்புகளிலும் பார்க்கலாம்.) ஆகியவற்றின் அடைப்படையில் ஆயம் கணக்கிடப்படும்.  


ஆயம் என்பதற்குச் சரியான ஆங்கிலப் பதம் கிடையாது. அதை வருவாய் என்று மொழி பெயர்க்கலாம். ஆதாயம் என்ற சொல் ஆயத்தில் இருந்து வந்தது. ஒரு நில அமைப்பில் கிடைக்கும் ஆதாயம் ஆயம் ஆகும். அதற்கு எதிர்ப்பதம் விரயம் ஆகும்.


பலருக்கும் வியப்பைத்தரும் செய்தி, இந்த ‘ஆயம்என்னும் சொல்லுக்குத் தமிழில் பதம் உண்டு. சங்கத் தமிழில் உண்டு. அது ‘யாணர் என்பதாகும். புறநானூற்றில் 3 இடங்களில் யாணர் என்னும் சொல் வருகிறது. அதற்குப் ‘புது வருவாய்என்று உரை ஆசிரியர்கள் அர்த்தம் எழுதி உள்ளனர்.


இந்தச் சொல், ரிக் வேதத்தில் ஆயம் என்பது எப்படி நகரம், ஊர் என்பதை முன்னிட்டு வந்துள்ளதோ அவ்வாறே வந்துள்ளது.


உதியன் சேரலாதனைப் பற்றிய 2- ஆம் பாடலில் (புற நானூறு)
“யாணர் வைப்பின் நன்னாட்டுப் பொருந  என்று வருகிறது.
இதற்கு உரைஆசிரியர் (டா. உ.வே.சா அவர்கள் கண்டெடுத்த உரை)
“புது வருவாயை உடைய இடையறாத ஊர்களையுடைய நன்னாட்டிற்கு வேந்தே


ஊர்கள் ஆயம் கொண்டு அமைக்கப்பட்டுள்ளன. அதனால் மக்களுக்கும், அரசுக்கும் வருவாய் கிடைத்த்து. இன்றைக்கு வீட்டு வரி வசூலிப்பது போல, ஆயம் வசூலித்தார்கள்.


பாடல் 42 இல் “யாணர்த்தாகிய அரிநர் என்று வருகிறது.
இதன் உரை “புது வருவாயுடைத்தாய் நெல் அறுப்பர்.
வயல்காட்டுக்கும் ஆயம் உண்டு.
நெல் விளைச்சலுக்கும் ஆயம் வசூலிப்பர்.


பாடல் 375 இல் “யாணர் வரையணி படப்பை நன்னாட்டுப் பொருந என்று வருகிறது. இதன் உரை, இடையறாத செல்வ வருவாயையுடைய தோட்டங்களை உடைய நன்னாட்டு அரசனே என்பதாகும்.
படப்பை என்றால் தோட்டம் என்பது பொருள்.
தோட்டத்திலும் ஆயம் கிடைத்தது.


இன்று தமிழ் அறிந்தவர்களுக்கே யாணர் என்றால் என்ன என்று சொல்லத் தெரியாது. காரணம், ஆயப் பிரகரணம் அறிந்திருந்தால்தான் இதைப் பற்றித் தெரிந்து கொண்டிருக்க முடியும். ஆயப் பிரகரணம் வாஸ்து நூல்கள் எல்லாவற்றிலும் உள்ளது. தமிழ் நாட்டில் திராவிடவாதிகள் என்றைக்கு சமஸ்க்ருதத்தை ஒழித்தார்களோ அன்றிலிருந்து ஆயம் பற்றிய அறிவும் மறைந்து விட்டது.


முல்லர் தோல்வியைத் தழுவிய மற்றொரு கருத்து நகரங்களை அழிப்பது பற்றியும், மதில்களை அழிப்பது பற்றியும் ரிக் வேதத்தில் சொல்லப்பட்டுள்ள வர்ணனைகள். இந்த வர்ணனைகள் படையெடுப்பைக் குறிப்பதாகவே முல்லரும், அவரைச் சேர்ந்தவர்களும் நினைத்தனர். இவற்றின் உண்மை நிலவரத்தையும் பார்ப்போம்.



வெள்ளி, 24 டிசம்பர், 2010

23. சூத்திரன் என்பவன் யார்?




சுதாஸ் என்னும் அரசனுக்கு இன்னொரு பெயரும் உண்டு. அது பைஜவனன். பிஜாவனன் என்பவன் மகன் இவன், எனவே இவனுக்குப் பைஜவனன் என்ற பெயரும் உண்டு. இவன் இந்திரன் உதவியுடன், சிந்துவைக் கடந்து, மதில்களை அழித்து, தசராஜர்கள் எனப்படும் பத்து அரசர்களை வென்றான் என்று ரிக் வேதத்தில்  சொல்லப்பட்டுள்ளது. 


வாஜஸனேயி சம்ஹிதையில் இதே அரசன் 30 அரசர்களை வென்றான் என்று அந்த அரசர்களது பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளது. இவர்களில் ஆரியர்கள் என்ற அடைமொழி கொண்டவர்களும் உண்டு. தஸ்யூ என்னும் அடைமொழி கொண்டவர்களும் உண்டு. அதாவது ஆரியர்கள், தஸ்யூக்கள் என இரண்டு வகை மக்களும் சுதாஸுக்கு எதிரி என்று நினைக்க வேண்டியிருக்கிறது. அதாவது தஸ்யூக்களும், ஆரியர்களும் ஒன்று சேர்ந்தும் போரிடுகிறார்கள். அவர்கள் ஒன்றாக தஸ்யூவை எதிர்க்கிறார்கள். அல்லது தஸ்யூவே, தஸ்யூவை எதிர்த்தும் போரிடுகிறான் என்றும் பொருள் கொள்ள வேண்டியிருக்கிறது. 


அதுமட்டுமல்ல. எந்த வசிஷ்டர் சுதாஸுக்கு உதவி செய்தாரோ அவரது மகன்களை, சுதாஸின்  மகன்கள் கொன்று விடுகிறார்கள், அதனால் அவர்கள் அசுரர்கள் என்றும் புராணங்களில் அழைக்கப்பட்டார்கள். அசுரன், தேவன் என்னும் பெயர்கள் எவ்வாறு வந்தன என்று பகுதி 21– இல் நாம் தெரிந்து கொண்டோம். அசுரன் என்பது ஒரு இனமல்ல. ஒருவனது குணத்தால், நடவடிக்கையால், அந்தப் பெயர் வந்தது என்றும் பார்த்தோம். இங்கு தஸ்யூ என்ப்படுபவன் அசுரனாகிறான் என்பதால், தஸ்யூ என்பதும் குணத்தின் அடிப்படையில் வந்தது என்று சொல்லும் வண்ணம் இருக்கிறது. 


சுதாஸ் என்னும் பெயருள்ள அரசன் யார் என்று புராண, இதிஹாசங்களைத் தேடினால், இரண்டு இடங்களில் சுதாஸ் என்னும் மன்னனைப் பற்றி விவரம் வருகிறது. ஒன்று ராமன் பிறந்த சூரிய குலம், மற்றொன்று புரு வம்சத்தில் வரும் சந்த்ர குலம். ராமனுக்கு முன்பும், ஆனால், கங்கையை பூமிக்குக் கொண்டுவந்த பாகீரதனுக்குப் பின்னும் இந்த மன்னன் பெயர் வருகிறது. இது விஷ்ணு புராணத்தில் காணப்படுகிறது. ஆனால் சுதாஸ் என்னும் இவன் பெயர் ராமனது திருமணத்தின் போது வசிஷ்டர் சொல்லும் பரம்பரையில் வரவில்லை. எனவே இவன் பட்டத்து இளவரசனில்லாமல், மற்ற சகோதர்களது பரம்பரையில் வந்திருக்க வேண்டும். 


அதே விஷ்ணு புராணத்தில் சந்திர வம்சாவளியினர் பெயர் வருகிறது. அதில் முத்கலனுக்கு மௌத்கல்ய பிராம்மணன் பிறந்தான் என்றும், முத்கலனது பேரன் திவோதாஸன், அவனது பேரன் சுதாஸ் என்றும் வருகிறது.


ரிக் வேதத்தில் (7-18-25) சுதாஸின் தந்தை திவோதாசன் என்று வருகிறது. மருத்துக்களே, இவன் தந்தை திவோதாசனது விருப்பங்களை நிறைவேற்றினாற்போல, இந்தப் பைஜாவனனது விருப்பங்களையும் நிறைவேற்றுங்கள்என்று வேண்டப்படுகிறது. எனவே சந்திர வம்சாவளியில் சுதாஸ் வருகிறான் என்று நினைக்க இடமிருக்கிறது. தாத்தாவைத் தந்தை என்று சொல்லியிருக்கலாம். 


சந்த்ர வம்ச்சாவளி என்று கொடுக்கப்பட்டுள்ள பெயர்கள் எல்லாம்  அரசர்கள் பெயர்கள். சந்த்ர வம்சாவளியில் வரும் விளக்கத்தில், க்ஷத்திரிய அரசனுக்குப் ப்ராம்மணனும் பிறக்கிறான். பேரனாக சுதாஸ் என்னும் சூத்திரனும் பிறக்கிறான் என்று வருவது கவனிக்கத்தக்கது. திவோதாஸன் என்பதிலும் தாஸன் என்னும் சொல் வருகிறது. திவோதாஸன் என்றால் திவ்விய ஒளிக்கு தாஸன், அதாவது ஒளிமயமான தெய்வங்களுக்குத் தாஸன் என்பது பொருள். அதனால் தாஸன் என்பதும், தஸ்யூ என்பதும் கேவலமான பொருளில் வரவில்லை என்று தெரிகிறது.


தாஸன் அலல்து தஸ்யூ என்பது கேவலமான பொருளில் வரவில்லை என்றால், சுதாஸை, சூத்திரன் என்று ஏன் மஹாபாரதம் அழைக்கிறது?  (சாந்தி பர்வம் 60-39). ஒரு அரசனை, அதுவும், இந்திரன், வசிஷ்டர் போன்றோர் மதித்த அரசனை ஜாதிப் பெயரிட்டு சூத்திரன் என்று அழைப்பது தவறில்லையா? கீழ்த்தரமான புத்தியை அல்லவா அது காட்டுகிறது என்று நமக்குத் தோன்றுகிறது. அரசன் எப்படி சூத்திரனாவான்? அல்லது அவன் சூத்திர அரசனா? சூத்திரன் ஒருவன் அரசனாக இருப்பது தவறா? அரசனாகக் கோலோச்சி வந்ததால் அவனை சூத்திரன் என்று அழைக்கலாமா? இது போன்ற கேள்விகள் எழுகின்றன


மஹாபாரதம் மட்டுமல்ல, சாந்தோக்கிய உபநிஷத்தும் ஒரு அரசனை சூத்திரன் என்று ஒரு முறை அல்ல, இரண்டு முறை அழைக்கிறது.. ஆரிய திராவிடச் சண்டையை நம்பும் திராவிடவாதிகளுக்கு இந்த விவரங்கள் அல்வா போல இருக்கும். பிராம்மணனை ஆரியனாகவும், சூத்திரனை திராவிடனாகவும் இவர்கள் சித்தரித்து, மக்களிடையே வெறுப்பையும், துவேஷத்தையும் பரப்ப இந்த இரண்டு விவரங்கள் மட்டுமே போதும்.


எனவே உண்மை நிலவரத்தை நாம் ஆராய்வோம்.
சூத்திரன் என்பவன் யார்? சூத்திரன் என்று எவனை வேதம் தழுவிய இந்து மதம் அழைக்கிறது என்று தெரிந்து கொள்ள இந்த இரண்டு விவரங்கள் முக்கியமானவை.


சாந்தோக்கிய உபநிஷத்தில் ஜானஸ்ருதி என்னும் அரசனது கொள்ளுப் பேரனைப் பற்றிய விவரம் வருகிறது. இவன் பல தான தருமங்களைச் செய்தும், சத்திரம், சாவடிகளைக் கட்டிக் கொடுத்தும் மிகுந்த புகழ் பெற்று இருந்தான். தன்னைப் போல புகழுடன் இருப்பவன் ஒருவனும் இல்லை என்ற கர்வம் அவனுக்கு இருந்தது.


ஆனால் அந்த ஊரில் ரைக்ரவர் என்னும் ஞானி ஒருவர் அதிகப் புகழுடன் இருந்தார் என்பது அவனுக்குத் தெரிய வந்தது. அவரது இருப்பிடமோ ஒரு வண்டியின் அடியில்தான். அவரிடம் பணம் காசு இல்லை. ஆனால் அவரது ஞானத்தால் அவருக்குப் பெருமை என்பதை இந்த அரசன் உணர்ந்தான். எனவே அந்த ஞானத்தைத் தானும் பெற விரும்பி, அறுனூறு பசுக்கள், காசு மாலை, சிறு குதிரைகள் பூட்டிய தேர் ஆகியவற்றை எடுத்துச் சென்று அவரிடம் கொடுத்து, தனக்கு ஞானத்தை உபதேசிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டான்.


அவர் அவனைப் பார்த்து, அடே சூத்திரனே, இந்த பசுக்கள், பொருள் இவையெல்லாம் உன்னிடமே இருக்கட்டும்.என்று திருப்பி அனுப்பி விடுகிறார். புகழ் பெற்ற அரசனை சூத்திரன் என்று அழைத்தத்ற்கு அவன் அசரவில்லை. மீண்டும் ஆயிரம் பசுக்கள், குதிரைகள், காசு மாலைகள் ஆகியவற்றுடன், தன்னுடய மகளையும் அழைத்துக் கொண்டு வந்து ‘என் மகளை உங்கள் மனைவியாக ஏற்றுக் கொண்டு, கூடவே இந்த செல்வத்தையும், ஒரு கிராமத்தையும் ஏற்றுக் கொண்டு எனக்கு உபதேசம் செய்யுங்கள்என்று வேண்டினான்.


ரைக்ரவர் இப்பொழுதும் அரசனை சூத்திரன் என்றே அழைத்தார். ‘ஹே சூத்திரா, இந்தக் கன்னிகையை முன்னிட்டு என்னைப் பேசச் செய்துவிட்டாய் என்று சொல்லி ஏற்றுக் கொண்டார். அரசனுக்கு உபதேசமும் செய்தார். ரைக்ரவர் வசித்த பகுதி ரைக்ரவபர்ணம் என்னும் பெயரையும் பெற்றது என்கிறது உபநிஷத்து. 


சூத்திரன் என்று ஒரு அரசனைக் கேவலப்படுத்தியது மட்டுமல்லாமல், இளவரசியான அவனது பெண்ணைப் பார்த்து மயங்கி விட்டார் என்று திராவிடவாதிகள் கூறுவார்கள். ஆனால் உண்மை அதுவல்ல.


அரசன் பொருளைக் கொடுத்து ஞானத்தை வாங்கலாம் என்று நினைத்தான். பொருள் நமக்கு அடிமையாக இருக்க வேண்டும், நாம் பொருளுக்கு அடிமையாகக் கூடாது. பொருளைக் காட்டி ஒருவரை அடிபணிய வைக்கலாம் என்று நினைப்பதும் தவறு. அப்படி நினைப்பவன், அதன்படி செயலாற்றுபவன் சூத்திரன் ஆவான்.


சூத்திரன் என்னும் சமஸ்க்ருதச் சொல்லுக்கு ‘துக்கப்படுபவன்என்பது பொருள். எனக்கு இது இல்லை, அது இல்லை, இது சரியில்லை, அது சரியில்லை என்று துக்கப்படுபவன் சூத்திரன். சூத்திரனுக்கு எதிர்ப் பதம் பிராம்மணன் இல்லை. சூத்திரனுக்கு எதிர்ப்பதம் ‘விப்ரன் என்பதாகும். விப்ரன் என்றால் எப்பொழுதும் ஆனந்தத்தில் இருப்பவன் என்பது பொருள். தெய்வத்தைப் பற்றிய நினைப்பில் இருப்பவனுக்கு பரமானந்தம் ஏற்படும். அப்படி இருப்பவனை விப்ரன் என்பார்கள். ஆனால் சூத்திரன் தனக்கு ஒன்று இல்லையே என்று சதா துக்கத்தில் இருப்பான்.


அதாவது எது தனக்கில்லையோ அதற்கு அடிமைப் பட்டிருப்பவன் சூத்திரன். பொருளுக்கு அடிமைப்பட்டிருப்பவன் சூத்திரன். அல்லது பொருளைக் கொடுத்து மற்றவர்களை வாங்கப்பார்ப்பவன் சூத்திரன். தான் பொருளுக்கு அடிமையாவதைப் போல, மற்றவர்களையும் பொருளால் அடிமைப் படுத்தி விடலாம் என்று நினைப்பவன் சூத்திரன். இங்கு ஜானஸ்ருதியின் கொள்ளுப் பேரனான அரசன், தன்னிடம் எல்லாம் இருக்கிறது என்று கர்வம் கொண்டிருந்தான். ஆனால் அது சரியல்ல. தன்னிடம், ஒரு ஞானியின் அறிவு இல்லை என்று தெரிந்ததும், துக்கப்பட்டான். இப்படிப்பட்ட துக்கம் ஒரு முறை நாரதருக்கும்  வந்தது. தனக்கு ஞானம் இல்லை என்று துக்கப்பட்டார். அதனால் தான் சூத்திரனாக இருக்கிறேன் என்று சனத்குமாரரிடம் சொன்னார்.


இங்கே ஜானஸ்ருதியின் பேரனான மன்னன், துக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல், பொருளைக் கொடுத்து அந்த ஞானத்தை வாங்கப் பார்த்தார். அதனால் ரைக்ரவர், சூத்திரனே, உன் பொருள் உன்னிடமே இருக்கட்டும், எடுத்துக் கொண்டு போ, என்று அனுப்பி  விட்டார். ஞானம் பெற வேண்டும் என்றால், அவன், தான் அரசன் என்ற பந்தாவை விட்டு விட்டு, அடக்கத்துடன், அவருக்கு சேவையைக் காணிக்கையாகக் கொடுத்து ஞானத்தை நாடி இருக்க வேண்டும்.


கிருஷ்ணர் போன்றவர்களே, குரு குலத்தில் சேர்ந்து, சுள்ளி பொறுக்கி, மாடு மேய்த்து, ஆச்ரமத்தைக் கூட்டி சுத்தம் செய்து, குருவின் ஹோமத்துக்கு வேண்டிய சுற்று வேலைகளைச் செய்துதான் உபதேசம் பெற்றனர். இப்படி செய்யச் சொல்வது அவர்களை மட்டம் தட்ட அல்ல. பணிவு, அடக்கம், பொறுமை, கோபப்படாமை போன்ற குணங்களை வளர்த்துக் கொள்ள இதையெல்லாம் செய்ய வேண்டும். இந்த குணங்கள் இருந்தால்தான் ஞானம் சித்திக்கும். பணத்தையும், பொருளையும் கொடுத்துவிட்டால், ஞானம் வந்து விடாது. ஆனால் பணத்தாலும் பொருளாலும், ஞானத்தை அல்லது ஒரு பொருளை வாங்க முடியும் என்று நினைத்தால் அது சரியல்ல. அப்படி நினைப்பவனை சூத்திரன் என்று அழைத்தனர்.


ஜானஸ்ருதியின் பேரனான அரசன், அசராமல் மீண்டும் வந்தான். இந்த  முறை தன் மகளை கன்னிகா தானமாக்க் கொடுக்க முன்வந்தான். அப்படி கொடுத்து ரைக்ரவரை வாங்கப் பார்த்தது தவறு. அது சூத்திரத் தனமானது. அதனால் அப்பொழுதும் சூத்திரன் என்றே அவனை ரைக்ரவர் அழைத்தார். ஆனால் பெண்ணை ஏற்றுக் கொண்டார். இது திராவிடவாதிகளுக்குக் கேலியாக இருக்கும்.


ஆனால் இங்கும் ஒரு சூட்சும விவரம் இருக்கிறது. ஒரு தகப்பன், தன் பெண்ணை, ஒருவனுக்குத் தாரை வார்த்துத் தர முன் வரும்போது, அந்த வரன் அப்பெண்ணை மறுக்ககூடாது. மறுத்தால் அவளுக்கு அவமானம். அதனால் அவளுக்கு வரும் துக்கத்துக்கு, மறுத்தவனே காரணமாகிறான்.


இதே போல மஹாபாரதத்தில் ஒரு சம்பவம் வருகிறது.
தன்னுடய மாறாந்தாய் மகனான, அரசுப்பட்டம் கொண்ட விசித்திரவீரியனுக்கு மணம் முடிக்க, பீஷ்மர் மூன்று பெண்களைக் கவர்ந்து வருகிறார். அவர்களுக்கு அப்பொழுது சுயம்வரம் நடந்து கொண்டிருந்தது. சுயம்வரத்தில், தங்களுக்குப் பிடித்த இளவரசனை அவர்கள் தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கும் போது, அவர்களை பீஷ்மர் கவர்ந்து வந்து விடுகிறார். அந்தப் பெண்களுள் அம்பை என்பவள் முன்பே ஒரு மணமகனை மனத்தில் வரித்திருந்தாள். எனவே அவனிடம் தன்னை அனுப்புமாறு கேட்டுக் கொண்டாள். பீஷ்மரும் அவளை அனுப்பி வைத்தார். ஆனால் அந்த வரன் (சல்வ நாட்டு அரசன்), அவளை ஒருவன் கவர்ந்து சென்றிடவே, தான் அவளை மணக்க முடியாது என்று மறுத்து விடுகிறான். கவர்ந்து வந்தது பீஷ்மர். எனவே அவரே தன்னை மணக்க வேண்டும் என்று அம்பை கேட்டாள். பீஷ்மரோ பிரம்மச்சரிய விரதம் பூண்டிருக்கவே தான் அவளைத் திருமணம் செய்ய இயலாது என்று மறுத்து விடுகிறார். அது அவளைப் பாதித்தது. அதன் பயனாக யாராலும் அழிக்க முடியாத பீஷ்மரை அழிக்க அவளே கருவியானாள். நெருப்பில் விழுந்து மாய்ந்து, மீண்டும் பிற்வி எடுத்து அவரைக் கொல்ல அவள் காரணமானாள்.


பெண் பாவம் பொல்லாதது என்பார்கள். பெண்ணின் மனது புண் படும்படி நடந்து கொண்டால், அதிலும், திருமண விஷயத்தில் அவள் தானமாகத் தரப்படும் போது, அவளை ஒதுக்கிவிடுவதால் அவளுக்கு ஏற்படும் துன்பம், ஒதுக்கினவனுக்கே சென்றடையும். எனவே ரைக்ரவர் அந்தக் கன்னிகையைத் தானமாகத் தந்ததை ஏற்றுக் கொண்டார். மறுக்க முடியாத தானத்தைத் தந்து, தான் விரும்பியதை அந்த அரசன் பெற முயலவே, அவனை சூத்திரன் என்று மீண்டும் அழைத்தார்.


சுதாஸ் என்னும் மன்னனைப் பற்றி வரும் மஹாபாரதப் பகுதியிலும், ஷூத்ரம் பைஜவனோ நாம சஹஸ்ராணாம் ஷதம் தாது.... “ என்று நூறாயிரம் குடம் பொன்னை தக்ஷிணையாகக் கொடுத்தான் பைஜவன் (சுதாஸ்) என்னும் பெயர் கொண்ட சூத்திரன் என்று வருகிறது. பணத்தைக் கொடுத்து ஒன்றை வாங்க முயல்பவன் எப்பேர்பட்டவனாக இருந்தாலும் அவன் சூத்திரன் என்பதே சூத்திரன் என்பதற்குப் பொருள்.


பணம் இல்லாமல் ஒன்றும் வாங்க முடியாதே என்று கேட்கலாம். அந்த நாளில் பண்டமாற்று இருந்தது. மேலும் எதைப் பணத்தாலும் பொருளாலும் வாங்க வேண்டும் என்ற நியதி இருக்கிறது. அறிவு, அன்பு, விசுவாசம் போன்ற பல குணங்களை பணத்தால் வாங்கக் கூடாது. இன்று பணத்துக்காக நாட்டையே விற்று விடுகிறார்கள். பணத்தைக் கொண்டு தவறான காரியத்தைச் செய்யத் தூண்டுகிறார்கள். பணத்தால் எதை வேண்டுமானாலும் வாங்கலாம் என்ற நிலை இன்று இந்தப் பாரத மண்ணில் இருக்கிறது. பணத்துக்காக, பணத்தால் செய்யப்படும் ஊழல்கள் இப்பொழுது நாட்டை அதிரச் செய்துக் கொண்டிருக்கின்றன. பணம், மற்றும் பொருளைக் காட்டி ஆதாயம் தேடுபவன் யாராக இருந்தாலும், எந்த ஜாதியில், எந்த குடும்பத்தில் பிறந்தவனாக இருந்தாலும் அவன் சூத்திரனே.


பணத்துக்கு எவன் அடிமையோ, பணத்தால் எதை வேண்டுமானாலும் வாங்கலாம் என்று ஒருவன் முனைகிறானோ அவன் சூத்திரன். இதிலிருந்துதான் சூத்திரனுக்குப் பணம் கொடுக்கக்கூடாது என்று விதி முறைகள் எழுந்தன. ஆனால் சூத்திரன் என்பது பிறப்பால் அல்ல, குணத்தால் மட்டுமே என்பதை மேற்சொன்ன விவரங்கள் தெரிவிக்கின்றன.


ஒருவன் அரசனே ஆனாலும், பணம், பொருளைக் கொண்டு வாங்கக்கூடாததை வாங்க நினைத்தால் அவன் சூத்திரன் ஆவான்.
சமஸ்க்ருத்தில் வழங்கும் ஒரு முக்கியப் பழமொழி, ‘பிறப்பால் அனைவரும், சூத்திரரே, குணத்தினால்தான் பிராம்மணன், க்ஷத்திரியன், வைஸ்யன் என்றாகின்றனர் என்கிறது.


துக்கப்படுபவன், சூத்திரன் என்பதன் பொருள் என்று பார்த்தோம். பிற்க்கும் போது அனைவரும் அழுது கொண்டே பிறக்கின்றனர். அதனால் அனைவரும் சூத்திரனாகப் பிறக்கிறோம். மேலும் இது வேண்டும், அது வேண்டும் என்று இளமையில் ஆசைகள் அதிகம். அதிலிருந்து வெளிவர ஞானக் கல்வி தேவை. அந்த ஞானக் கல்வியை ஒரு குரு முகமாகப் பணிவுடன் பெற வேண்டும். ஞானம் என்பது வேதம் சார்ந்தது. மூன்று வேதங்களும் தன்னைக் கட்டுகிறது என்பதன் குறியீடாக பூணூல் அணிந்து ஞானக் கல்வியை ஒருவன் தொடங்க வேண்டும். அந்த ஞானத்தைத் தேடாதவன் சூத்திரன். அப்படித்தான் சூத்திரன் என்பது சொல்லப்பட்டது.


சமீப காலம் வரையிலும் அப்படித்தான் இருந்திருக்க வேண்டும். ராமர் பிறந்த இடத்தை பாபரின் படைத்தலைவன் அழித்து அங்கு மசூதி கட்டியபோது, துளசிதாசர் அயோத்திக்குச் சென்றிருந்தார். அங்கு அவர் கண்ட காட்சிகளை ‘துளசி சதகம் என்னும் பாடலாக இயற்றினார். அவர் சொல்கிறார், பூணூல் அணிந்தவர்களைப் பார்த்தாலே முஸ்லீம்கள் தலையைச் சீவினார்கள். அப்படி குவிந்த மண்டையோடுகள் ஒரு கோபுரம் போல பெரிதாக இருந்தது என்கிறார். அந்தக் காலக் கட்டத்தில், அதாவது முஸ்லீம் படையெடுப்புக்கு முன், அனைத்து மக்களுமே ஞானவழியில் நாட்டம் கொண்டிருந்தனர். அனைவருமே தெய்வ சிந்தனையில் இருந்தனர். அதனால் பெரும்பான்மையினர் பூணூல் அணிந்திருக்க வேண்டும். சூத்திரன் என்னும் நிலையில் அதிக மக்கள் இருந்திருக்க முடியாது. இந்துக்கள் என்பவர்களைப் பூணூல் மூலமாகத்தான் முஸ்லீம்கள் அடையாளம் கண்டிருக்கின்றனர். எனவே ஞானம் தேடாத சூத்திரன் என்பவன் எங்கோ சிலரே இருந்திருக்க முடியும்.


முஸ்லீம்கள் ஆட்சியில்தான் அடிமைகள், தாழ்த்தப்பட்டவர்கள் என்ற பிரிவுகளைக் கொண்டு வந்தார்கள். அவர்கள் வரும்வரை, இந்த நாடு ஞானம் தேடிய மக்களை அதிகமாக் கொண்டிருந்தது. தமிழ் நாட்டைப் பொருத்தவரை, மூன்று தலைமுறை முன்புவரை, பலரும் பூணூல் போட்டிருந்தனர். பூணூலை இகழ்ந்து, திராவிடத்தைக் கையில் எடுத்துத் துவேஷட்தைப் பரப்பும் திராவிடத் தலைவரது தந்தையான முத்துவேலரும் பூணூல் போட்டிருந்தது அன்னாரது பழைய புகைப்படத்தில் தெரிகிறது என்று சொல்கிறார்கள்.


வழி வழியாக வந்த வழக்கத்தை விட்டுவிட்டு, தெய்வ சிந்தனையைக் கொன்று, மக்களை மூளைச் சலவை செய்தவர்கள் திராவிடவாதிகள் என்பதை மக்கள் உணர வேண்டும்.


செவ்வாய், 21 டிசம்பர், 2010

22. இந்திரனிடம் உதவி பெற்ற சூத்திரன்!




இந்திரன், தேவன், அசுரன் போன்ற சொற்கள் எந்த அர்த்ததில் சொல்லப்பட்டன என்று சென்ற பகுதிகளில் பார்த்தோம். இவை பற்றி எதுவுமே அறியாத ஆங்கிலேயர்களும், பிற ஐரோப்பியர்களும் சூசகமான வேத மந்திரங்களுக்குப் பொருள் கூறத் தலைப்பட்டனர். அகராதி ஒன்றைக் கையில் வைத்துக் கொண்டு வேதத்திற்குப் பொருள் சொல்ல முற்பட்டனர். அவர்கள் பொருள் சொன்ன ரீதியில், திருக்குறளுக்கும் பொருள் சொல்லி இருந்தார்கள் என்றால் குறளிலும் ஒரு யுத்ததைக் கண்டு பிடித்திருப்பார்கள்.


உதாரணமாக, தீவினையெச்சம் அதிகாரத்தில்  ஒரு குறள் வரும். எப்படிப்பட்ட கொடிய பகையிலிருந்தும் ஒருவன் தப்பிவிட முடியும், ஆனால் ‘வினைப் பகை யிலிருந்து தப்ப முடியாது. அது அவன் பின்னாலேயே சென்று அவனைத் தாக்கும் என்கிறது அக்குறள். இங்கு வினை என்பது, ஒருவரது கர்ம வினையால் ஏற்படும் விளைவுகள் என்பது பொருள். ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும், என்பது சிலப்பதிகாரத்திலும் தெளிவுபடுத்தப்பட்ட ஒரு கருத்து. ஊழ்வினை, கர்ம வினை போன்ற கருத்துக்கள் நம்மிடையே வழி வழியாக வழங்கி வரவே நாம் அப்படியே எளிதாகப் பொருள் கண்டு விடுவோம்.


இப்படிப்பட்ட நம் எண்ணங்களையும், வாழ்க்கை முறையையும் அறியாத ஒருவர், ஆனால் தட்டுத்தடுமாறி அகராதிகள் துணையுடன் பொருள் காண விரும்புவர் என்னவென்று சொல்வார்? வினை என்பதற்குத் தொழில் என்றும் ஒரு பொருள் உண்டு. வினைப் பகை என்பதை “தொழில் பகை என்று அவர் பொருள் கொண்டு, ஒருவரால் எந்தப் பகையிலிருந்தும் தப்பி விட முடியும், ஆனால் தொழில் பகையிலிருந்து தப்பவே முடியாது, ஒருவனுடைய தொழில் எதிரி என்றைக்கும் விடாது துரத்தி வருவான் என்று இந்தக் குறள் கூறுகிறது என்று பொருள் கண்டால் எப்படி இருக்கும்? நமக்குச் சிரிப்புத்தான் வரும். இவனெல்லாம் அர்த்தம் கண்டு பிடிக்க வந்து விட்டான் பார் என்று தலையில் அடித்துக் கொள்வோம். அவன் அப்படி அதி மேதாவித்தனமாக எழுதியதைத் தூக்கிக் குப்பையில் போடு என்றும் சொல்வோம். ரிக் வேதத்திலிருந்து எடுக்கப்பட்ட கண்டுபிடிப்புகளும் அந்த ரகத்தைச் சேர்ந்தவையே.


அப்படி ஆங்கிலேயர்கள் கண்டு பிடித்த ஆரிய- திராவிடப் போர், முக்கியமான இரண்டு வகையான ‘சண்டைகளைஅடிப்படையாகக் கொண்டது. இவற்றுள் அதிக அளவு ரிக் வேதத்தில் சொல்லப்படும் யுத்தம், ‘சுதாஸ் என்பவனுக்கும், ‘தசராஜர்கள்எனப்படும் பத்து அரசர்களுக்கும் இடையே நடந்தது என்று  இவர்கள் மொழிபெயர்த்துச் சொல்லி இருக்கிறார்கள்.

சுதாஸ் என்பவன் பெயரில் ‘தாஸ்அதாவது ‘தாஸன்என்னும் சொல் இருக்கிறது. சுதாஸ் என்றால் சிறந்த தாஸன் என்று பொருள். தாஸன் என்ற வட மொழிச் சொல்லுக்கு நாம் என்ன பொருள் சொல்லுவோம்? அடியவன் என்போம். இந்தச் சொல் நம்மிடையே காலம் காலமாக வழங்கி வந்துள்ளது. இது ஒரு குறிப்பிட்ட இனத்தைக் குறிக்கும் சொல்லும் அல்ல. ஆனால் இதனை மொழி பெயர்த்த வெளிநாட்டான், இதை ‘அடிமைஎன்று பொருள் கூறி அதை ஒரு இனமாகக் கருதினான்.


அவர்கள் ஊரில் அடிமைகள் உண்டு. மனிதனை மனிதன் அடிமையாக நடத்தி வந்தது அவர்கள் நாட்டில் சமீப காலம் வரை நடந்திருக்கிறது. ஆனால் மனித அடிமை பாரத சரித்திரத்தில் இருந்திருக்கவில்லை. கி-மு- 3 ஆம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்து, வட இந்தியா, தென்னிந்தியா, தமிழ் நாட்டுப் பகுதிகள் என்று எங்கணும் சுற்றிப்பார்த்த கிரேக்கத்தூதர் மெகஸ்தனீஸ் அவர்கள் இந்தியாவில் அடிமைகளே இல்லை, மனிதனை அடிமையாக நடத்தும் செயலை எங்கும் தான் பார்க்கவில்லை என்று எழுதி இருக்கிறார்.


தாஸன் என்பதை நாம் என்றுமே அடிமை என்று பொருள் கொண்டதில்லை. தாஸனாக இருப்பது என்பது, தெய்வத்திற்கோ அல்லது தெய்வத்தொண்டு புரிபவர்களுக்கோ அடியவன் என்றும், அதாவது அடியார்க்கு அடியார் என்று இறையடியவர்களுக்கு நான் அடியேன் என்று சொல்லும் உயர்ந்த அடக்கப் பண்பாகத்தான் இருந்து வந்திருக்கிறது. நம்மிடையே வாழ்ந்த தாஸர்களைப் பாருங்கள் துளசிதாஸர், ராம தாஸர், கபீர்தாஸர், புரந்தர தாஸர். இந்த வரிசையில் என்றோ இருந்த மன்னர் ஒருவர் சுதாஸ்.


அது மட்டுமல்ல, அடியவன் என்பதிலிருந்து அடக்கம் என்பது வந்தது. ஒருவன் அடக்கத்துடன் இருக்கிறான் என்றால் அவன் எண்ணம், மொழி, மெய் (மனம், வாக்கு, காயம்) ஆகியவற்றை அடக்கியவன் என்பது பொருள். அடக்கமுடைமை என்னும் அதிகாரத்துக்குப் பழைய உரையாசிரியர்கள் இந்த அர்த்தம் தந்துள்ளார்கள். அப்படிப்பட்ட அடக்கம் உடையவன் அமரருள் உய்க்கும் என்று சொல்லி வள்ளுவர் அடக்கமுடைமை அதிகாரத்தையே ஆரம்பிக்கிறார். அமரர்களுக்குத் தலைவனான இந்திரன், சுதாஸன் என்பவனது உதவிக்கு வருகிறான் என்றால், அவன் யாருக்கு தாஸனாக இருந்திருப்பான் என்று நாம் ஊகித்துக் கொள்ளலாம்.


அந்த சுதாஸனுக்கு எதிரிகள் தஸ்யூக்கள் என்று ரிக் வேதத்தில் சில இடங்களிலும், ஆரியர்கள் என்று சில இடங்களிலும் வருகிறது. தஸ்யூ என்னும் சொல்லே தாஸன் என்றானது என்பது இந்த மொழிபெயர்ப்பாளர்கள் கருத்து. இந்த தஸ்யூக்களை ஆரியர்கள் எதிர்த்துப் போரிட்டு விரட்டினார்கள், அதில் அவர்களுக்கு இந்திரன் உதவி புரிந்தான் என்பதும் அவர்கள் கருத்து. இந்த தஸ்யூக்களே திராவிடர்கள் என்று சொல்லப்பட்டிருக்க வேண்டும் என்பதும் அவர்கள் கருத்து. அப்படி இருக்க தஸ்யூவான சுதாஸுக்கு இந்திரன் எப்படி உதவி செய்தான் என்பதில் லாஜிக் இடிக்கிறது.


ரிக் வேதம் 7- ஆவது மண்டலத்தில் பல இடங்களில் சுதாஸுக்கு இந்திரன் உதவி செய்த குறிப்புகள் வருகின்றன. அது மட்டுமல்ல, சுதாஸுடன் சேர்ந்த த்ருட்ஸுஸ் என்பவனுக்கும், இந்திரனும் வருணனும் சேர்ந்து உதவி செய்தார்கள் என்றும் வருகிறது. இந்திரனும், வருணனும், எதிர்ப்படையானவர்கள் என்று முன் பகுதிகளில் பார்த்தோம்.  அவர்கள் எப்படி ஒன்று சேர்ந்து ஒருவருக்கு உதவி செய்ய முடியும் என்பதிலும் லாஜிக் உதைக்கிறது.


சுதாஸ், த்ருட்ஸு இருவரும் ஒரே அணியில் இருப்பதாகப் பல இடங்களிலும் வருகிறது. அவர்களது வெற்றிக்கு இந்திரன் உதவுகிறான். ஆனால் வேறு இடத்தில், அதே இந்திரன் த்ருட்ஸுவைக் கொன்று அவனிடத்தில் இருந்த ஆரியர்களது பசுக்களை மீட்டான் என்றும் வருகிறது. இந்தக் குழப்பத்தை எல்லாம் எப்படித்தான் மொழி பெயர்த்து, பொருள் சொன்னார்கள் என்றுத் தெரியவில்லை.


சரி, த்ருட்ஸு கதை அப்படியே ஆகட்டும். இந்தக் கதையில் த்ருட்ஸு ஆரியர்களது பசுக்களை முன்னம் ஒரு முறை கவர்ந்திருக்கிறான் என்றாகிறது. அப்படி என்றால் த்ருட்ஸு தஸ்யூக்களில் ஒருவனாகிறான். அவன் சுதாஸைச் சேர்ந்தவன் என்றும் வருவதால், அவன் தஸ்யூ என்பதில் சந்தேகமில்லை என்றும் எடுத்துக் கொள்வோம். ஆனால், இந்திரன் சுதாஸுக்கு செய்த உதவி மீண்டும் மீண்டும் போற்றப்படுகிறது. இந்திரனுக்கும், மற்ற தெய்வங்களுக்கும் சுதாஸ் அள்ளி அள்ளிக் கொடுக்கிறார். குதிரைகள், பொன், பொருள் என்று ஏகப்பட்ட அன்பளிப்புகள், தானங்களைத் தெய்வங்களுக்குக் கொடுத்தான் என்று சுதாஸைப் பற்றி சொல்லப்படுகிறது. நம் திராவிடவாதிகள் பார்வையில் இவர்கள் ஆரியத் தெய்வங்கள். அவர்களுக்கு இத்தனை அன்பளிப்பா? அதுவும், தஸ்யூக்கள் கொடுக்கிறார்களா?


அது மட்டுமல்ல. எதிரிகளின் மதிளை அழித்து, அவர்களை விரட்டி,  சிந்துவைக் கடக்க சுதாஸுக்கு இந்திரன் உதவினான் என்றும் வருகிறது. இந்த சிந்து சப்த சிந்து எனப்பட்டது. இதையே சிந்து நதி என்று மொழிபெயர்ப்பாளர்கள் சொல்கின்றனர். சப்த சிந்து என்றால் ஏழு சிந்து என்று அர்த்தம். ஆனால் சிந்து நதியோ ஐந்து கிளைகளைக் கொண்டது. ஐந்து நதிகள் என்ற பொருள் தரும் பஞ்ச நதிகள் பாயவே, அந்த இடம் பாஞ்சாலம் என்று அழைக்கப்பட்டது என்ற சரித்திரம் எல்லாம், ஆங்கிலேயனுக்கு எப்படித் தெரிந்திருக்கும்?


அந்த சிந்துவைக் கடக்க ஆரியர்களுக்கும் இந்திரன் உதவி செய்தான், தஸ்யூவான சுதாஸுக்கும் உதவி செய்தான் என்றால் என்ன கருத்தை இதிலிருந்து எடுக்க முடியும்? தஸ்யூக்களும் படை எடுத்து வந்தார்கள் என்றுதானே பொருள் கொள்ள வேண்டும்?


இதை விடுங்கள். இந்த சுதாஸுக்குப் பகைவர்கள், பத்து அரசர்கள். தஸராஜர்கள் என்று இவர்களை ரிக் வேதம் அடிக்கடி கூறுகிறது. இந்தத் தஸராஜர்களை இந்திரன் உதவியால், சுதாஸ் துவைத்து எடுத்து விடுவான். அவர்களை வெற்றி கொண்டதற்காக, இந்திரனுக்கும், தேவர்களுக்கும் வாரி வழங்கினான். இதில் வசிஷ்டரும் அவனுக்குத் துணை.


அதே சுதாஸ், வேறு ஒரு சமயத்தில், வசிஷ்டரை ஓரம் கட்டி விட்டு விஸ்வாமித்திரரைத் தனக்கு உதவிக்கு வைத்துக் கொள்கிறான். ஒரு சமயம், தஸ்யூக்களுடன் சண்டையிடுவதாக வரும். இன்னொரு சமயம், ஆரியர்களையும் எதிர்ப்பதாக வரும். இதிலிருந்து என்ன கதையை எடுத்தார்கள் இந்த ஆங்கிலேயர்கள் என்று பிரமிப்பாக இருக்கிறது.


இந்த முரண்பாடுகளைப் பார்க்கும் போது, ரிக் வேதம் என்பதே ஒரு உளறல் பாடல் என்று சொல்லலாமே என்றால் இல்லை. ரிக் வேதத்திற்கு உரை எழுதி, யாரும் கற்பிக்கவில்லை. அதை ஒதும் முறையைத்தான் கற்று வந்திருக்கிரார்கள். சுபாஷ் கக் என்னும் விஞ்ஞானி, ரிக் வேதத்தில் சில அபூர்வ சங்கதிகள் (codes ) மறைந்திருக்கலாம் என்கிறார். சதபத பிராம்மண்ம் என்னும் நூலில் தரப்பட்டுள்ள ஹோம குண்டத்தின் விவரங்களின் அடிப்படையை ஆராய்ந்து, அதில் மறைந்துள்ள விண்வெளி உண்மைகளை நிரூபித்துள்ளார் இவர்.


‘மறைபொருளாக, அதாவது மறைந்துள்ள பொருளாக பல செய்திகளை வேதங்கள் கூறுகின்றன என்பதே வழி வழியாக வந்துள்ள கருத்து. அப்படி மறைத்துக் கூறும் பொருளை குரு மூலமாக, தத்துவ ரீதியாகத்தான் அறிய முடியும். சுதாஸ் கதையில் வரும் கருத்து என்ன என்பதை அடுத்த கட்டுரையில் பார்ப்போம். அதற்கு முன் சுதாஸைப் பற்றிய ஒரு விவரத்தைத் தெரிந்து கொள்வோம்.


வேதத்தில் வரும் பல பெயர்களும் ஒரு காலத்தில் வாழ்ந்தவர்களது பெயர்களாக இருந்திருக்கும் என்ற சொல்லும்படி, புராணக் கதைகளிலும், சம்ஹிதை போன்றவற்றிலும் அந்தப் பெயர்கள், அவர்களை ஒட்டிய கதைகள் வருகின்றன. அவற்றை ஆராயாமல், ரிக் வேத்தை மட்டும் படித்துப் பொருள் கொள்ளவே அறிவீனமான ஒரு கொள்கை பிறந்து அது, இந்திய மக்களை, குறிப்பாகத் தமிழ் மக்களை ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறது.


அந்தக் கதைகள் மூலம், இந்த யுத்தங்களைப் பற்றிப் பார்ப்போம்.


சுதாஸ் என்ற அரசனைப் பற்றி மஹாபாரதத்தில், சாந்தி பர்வம் (60 ஸ்லோகம் 38 முதல் 40 வரை) என்னும் பகுதியில் வருகிறது. இவன் ஒரு சூத்திரன் என்றும், இவன் இந்திராக்கினி என்னும் ஹோமத்தைச் செய்தான் என்றும், அதில் நூறாயிரம் கோடிப் பொன்னை தக்‌ஷிணையாகக் கொடுத்தான் என்றும் சொல்லப்பட்டுள்ளது. இன்றும், தலித்துக்கள் பற்றி அறிய பாரதக் கதைகளை ஆராய்பவர்கள் இந்த சுதாஸை சூத்திர அரசனாக எடுத்துக் காட்டுகிறார்கள்.


தஸ்யூ என்றும், சூத்திரன் என்றும் அடையாளம் காட்டப்பட்ட ஒருவனுக்கு இந்திரன் உதவி புரிந்து சிந்துவை கடக்கச் செய்து, வசிஷ்டர் முதல், விச்வாமித்திரர் வரை பெரிய ரிஷிகள் துணை நின்றிருக்கிறார்களே, அப்படி என்றால் படையெடுத்து வந்தவன் யார்? யார் யாரை விரட்டினார்கள்? ஹோமம் செய்தவன் சுதாஸ் என்னும் சூத்திரன் என்றால், அவன் பூணூல் அணியாமல் ஹோமம் செய்திருக்க முடியுமா? இந்த தஸ்யூ பூணூல் அணிந்தது மட்டுமல்லாமல், ஹோமம் செய்யத் துணை புரிந்த பிராம்மணர்களுக்கு நூறாயிரம் கோடிப் பொன் கொடுக்கத்தக்க அந்தஸ்துடன் இருந்திருக்கிறானே, இதற்கு என்ன அர்த்தம்? சூத்திரர்கள் ஆரிய மரபில் தாழ்த்தப்பட்டவர்கள் என்றால், எப்படி இது சாத்தியமாகும்? இங்கே சிந்து நதியைக் கடந்து போரிட்டு வந்ததும் சுதாஸ் போன்ற தஸ்யூக்கள் என்றால், வந்தவர்கள் தஸ்யூக்கள் அல்லது திராவிடர்கள் என்றுதானே ஆகிறது? ஆரியப் படையெடுப்பு நடந்தது என்பதற்கு இது முரண்பாடாக அல்லவா இருக்கிறது?


சுதாஸ் பற்றி பிற நூல்களில் வரும் குறிப்புகள் ஆரிய- திராவிடப் பிரிவைக் கேலிக்கூத்தாக்குகிறது. பாரத சரித்திரத்தைப் பற்றி ஒன்றும் தெரிந்து கொள்ளாமல் ஆங்கிலேயர் செய்த ‘ஆராய்ச்சி இன்றும் தமிழர்களை ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறது என்றால் தமிழனுக்குத்தான் வெட்கக்கேடு!


ஞாயிறு, 19 டிசம்பர், 2010

21. இந்திரனும், இந்திரியங்களும்.




இயற்கையில் பொருள்கள் மூன்று பரிமாணங்களில் உள்ளன. அவற்றை திட, திரவ, வாயு என்று அறிகிறோம். மனிதனுக்கும் இந்த முப்பரிமாணம் உண்டு. நமது உடல் திட வஸ்து என்றால், ரத்தம், சுரப்பிகளில் உண்டாகும் நீர் போன்றவை திரவங்கள் ஆகும். காண இயலாத நம் மனது, எண்ணம் போன்றவை வாயுவினால் ஆனவை எனலாம். 


இந்த முப்பரிமணம் எல்லாவற்றிலும் இருக்கிறது. உலக அளவில் இந்தப் பூமி, அந்தரிக்‌ஷம் எனப்படும் வாயு மண்டலம், கிரகங்கள் இருக்கும் ஆகாயம் என்று மூன்று பரிமணங்களை வேதம் சொல்கிறது. தேவேந்திரனான இந்திரனுக்கும் இப்படிப்பட்ட முப்பரிமாணம் உள்ளது.


இதந்திரன்என்று சொல்லப்படும் தெய்வ ரூபத்தில் இந்திரன் இருப்பது ஒரு பரிமாணம். தெய்வக் கரு, திசைக் கரு என்று சம்பாபதித் தெய்வம் சொல்லும் திசைத் தெய்வமாகவும் இந்திரன் கருதப்படுகிறான். கிழக்குத் திசைக்கான கடவுள் இந்திரன்.. கிழக்கு என்றால் உதயம், முன்னோடி என்றெல்லாம் சொல்லலாம். முன்னோக்கி அழைத்துச் செல்லும் தெய்வமாக இந்திரன் கருதபப்டுகிறான். இந்திரனை முன்னிடுத்தான் பிற தெய்வங்கள் வருகின்றன. அதனால் வருடத்தின் முதல் விழா இந்திரனுக்கு நடந்தது.  


அடுத்த பரிமாணம், கண்ணுக்குத் தெரியாத, ஆனால் உணரக்கூடிய சக்தியாக இந்திரன் இருப்பது. இடியிலும், மின்னலிலும், இருப்பவன் எவனோ, அவனது அந்த சக்தியைக் கொண்டே இன்று உலகத்தில் பல இயக்கங்கள் நடக்கின்றன. மொத்தம் 14 இந்திரன்கள் ஒரு கல்பத்தில் வருகிறார்கள். ஒவ்வொரு மன்வந்திரத்துக்கும் ஒரு இந்திரன் ஆட்சிப் பொறுப்பு ஏற்கிறான் என்று புராணங்கள் கூறுகின்றன. மன்வந்திரம் என்பது, குறிப்பிட்ட அமைப்புகளைக் கொண்ட மனித வர்கத்தைக் கொண்டுவரும். அந்த அமைப்புகளது உருவகமாக அல்லது அச்சாக அந்த மன்வந்திரத்தின் இந்திரன் அமைவான்.



இப்பொழுது நமக்கு 7- ஆவது மன்வந்திரம் நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. இதன் இந்திரன் இடி என்னும் வஜ்ராயுதம் தாங்கினவன். அது மின்னியக்கத்தை அடிப்படையாகக் கொண்டது என்று சென்ற பகுதியில் பார்த்தோம். அந்த மின் சக்தியே மனிதனது இயக்கத்திலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. மனிதனது சிந்தனை, செயல் எல்லாவற்றையும் நுண்ணிய மின் செய்திகள் மூலம் மனித மூளை இயக்குகிறது என்பதை அறிவியல் மெய்ப்பித்துள்ளது.


இந்த இரண்டாவது பரிமாணாத்தைப் பற்றி உபநிஷத்துக்கள் வாயிலாக நாம் இன்னும் சில விவரங்களைத் தெரிந்து கொள்ள முடிகிறது.


இந்த மன்வந்திரத்தின் மக்களை மூன்று விதமாக்ப் பிரிக்கலாம். அவை தேவன், மனிதன், அசுரன் என்பதே. தேவர்கள் உலகத்தை விட்டு வேறு எங்கோ இல்லை. மனிதனே, தேவனாகவும், அசுரனாகவும் இருக்கிறான். அவனே மனிதத்தனத்துடனும் இருக்கிறான். இது பற்றி பிருஹதாரண்யக உபநிஷத்தில் ஒரு விளக்கம் வருகிறது. (5-2- 1,2,3)



தேவர்கள், மனிதர்கள், அசுரர்கள் இவர்களுக்குத் தந்தை பிரஜாபதி ஆவார். (பிரஜைகளை உண்டாக்குபவர்) இவர்கள் ஒருமுறை, பிரஜாபதியிடம் சென்று தங்களுக்கு உபதேசம் செய்யுங்கள் என்று கேட்டார்கள். அவர், தேவர்களிடம் ‘என்று கூறி, ‘என்ன சொல்கிறேன் என்று தெரிகிறதா என்று கேட்டார். அவர்கள். தெரிகிறது. ‘தாம்யதஎன்கிறீர்கள். அதாவது ‘அடக்கமாக இருங்கள்என்கிறீர்கள் என்றனர். அது சரியே என்றார் பிரஜாபதி.
தேவர்களிடம் பல நல்ல குணங்கள் இருந்தாலும், புலனடக்கம் கொள்வது சிரமம். மேலும், புலன்களை அடக்கியவன் தான் தேவனாவான். அவர்களுக்கு எது முக்கியமோ, எது சிரமமோ அதுவே உபதேசமானது.


மனிதர்களிடம், ‘என்பதைத் தன் உபதேசமாகக் கூறினார் பிரஜாபதி. அதை ‘தத்தஎன்று மனிதர்கள் புரிந்து கொண்டார்கள். தத்த என்றால் ‘தானம் செய்தல்என்று பொருள். ஒரு பொருளை மற்றவர்களுக்கு எடுத்துக் கொடுக்க மனிதனுக்கு மனம் வராது. வள்ளல் தன்மை அவனுக்குக் கடினமானது. அதனால் எவன் தானப்பிரபுவாக இருக்கிறானோ அவனை மனிதர்களுள் உயர்ந்தவன் என்கிறார்கள். தமிழ் மரபில் ஏழு வள்ளல்கள் இருப்பதை இங்கு நினைவு கூறலாம். 


அசுரர்களிடம், ‘என்ற உபதேசத்தையே தந்தார் பிரஜாபதி. அவர்கள் அதைதயத்வம்என்று புரிந்து கொண்டார்கள். தயை தாட்சண்யம் காண்பிப்பது அசுரனுக்குக் கடினமான செயல். மற்றவர்கள் துன்பப்டுவதைப் பார்க்க அவர்களுக்கு இன்பமாக இருக்கும். அதனால் கருணை என்பதைத் தனது உபதேசமாகப் பிரஜாபதி அசுரர்களுக்குத் தந்தார்.



இவைதான் தேவ, மனித, அசுரர்களுக்கான இலக்கணம். இவர்கள் மூவருமே மனித உருவில் உள்ளவர்கள்தான். ஆனால் குறிப்பிட்ட குணம் ஒன்றைத் தூக்கலாக உடையவர்கள். திருமணப் பொருத்தம் பார்க்கும் பத்துப் பொருத்தங்களுள் கணப்பொருத்தம் என்று உண்டு. தேவ, மனித, அசுர (ரா‌ஷஸ) என்னும் மூன்றும் மூன்று கணங்கள் ஆகும். 27 நட்சத்திரங்களும் இந்த மூன்று கணங்களுக்குள் வருகின்றன. அவரவர் பிறந்த நட்சத்திரத்தை வைத்து என்ன கணம் என்று சொல்லும் வழக்கம் இருக்கிறது. ஆனால் மேலே சொல்லப்பட்ட குணத்தைக் கொண்டே ஒருவரது கணத்தைத் தெரிந்துக் கொள்ளலாம்.


அசுரர்களும் மனிதர்களாகப் பிறந்தவர்கள்தான். ஆனால் மற்றவர்களுக்குத் தொந்திரவு கொடுக்கும் குரூர குணம் 
அவர்களுக்கு இருக்கும். மற்றவர்கள் படும் துன்பத்தை அவர்களால் புரிந்து கொள்ள முடியாது. அதனால் இரக்க குணம் இல்லாதவர்கள் அசுரர்கள் அல்லது ராக்ஷஸர்கள் எனப்பட்டனர்.


இவ்வாறு மூன்று வித “தஎன்னும் உபதேசமே ‘தெய்வ வாக்குஎன்கிறார் யஞ்யவாக்கியர் என்னும் ரிஷி. இந்த தெய்வ வாக்கைத்தான் மேகம் இடிக்கும் போது ‘த-த-தஎன்று திருப்பித் திருப்பிச் சொல்கிறது என்கிறார்.


இதந்திரன் என்னும் பரமாத்மாவான இந்திரன், தன் வஜ்ராயுததால் த-த-த- என்று இடி ஒசை எழுப்பும் போதெல்லாம், நம் குணம் என்ன என்று நம்மைத் தட்டி எழுப்பிக் கேட்கிறது. இடி ஒசையைக் கேட்கும் போதெல்லாம் நாம் நம்மைச் சீர் தூக்கிப் பார்க்க வேண்டும்.  இதுவே உபதேசம்.


ஒருவன் சந்நியாசம் வாங்கி கொள்ளும்போது ஒரு தண்டத்தைக் கையில் ஏந்துகிறான். இது இந்திரனுடைய வஜ்ராயுதம் போன்றது என்று ஆருண்யோபநிஷத்து கூறுகிறது. மூன்றுவித மக்களை வாட்டும் மூன்றுவிதக் குணங்களை அவன் விட வேண்டும் என்பதை நினைவு படுத்தவே சந்நியாசியின் தண்டம் இப்படி உருவகப்படுத்தப்பட்டது. இப்படிபட்ட குண அடிப்படையில் வேதமும், புராண இதிஹாசங்கள் கூறும் எந்தக் கதையையும் புரிந்து கொள்ள வேண்டும்.


தேவர்கள் பலவித நற்பண்புகளை உடையவர்கள். பெயருக்கேற்றாற்போல ஒளி பொருந்தியவர்கள். ந்ல்லதே நினைப்பார்கள், நல்லதே செய்வார்கள். ஆனால் அவர்களுக்கு ஒரு வீக்னஸ் உண்டு. புலன்களை, அதாவது இந்திரியங்களை அடக்குவதற்கு அவர்கள் பாடுபட வேண்டும். அவர்களுக்குத் தலைவன் இந்திரன். இந்திரன் என்றால் இந்திரியங்களுக்குத் தலைவன் என்பது பொருள். புலன்கள் விஷயத்தில் அவன் தவறு செய்து அவதிப்படுவான். புராணக் கதைகளில் புலனடக்கம் இல்லாமல் இந்திரன் தவறு செய்யும் நிகழ்ச்சிகள் அடிக்கடி வரும். அகலிகையிடம் அவன் தவறாக நடந்து கொண்டது மிகவும் பிரசித்தமானது. அதற்குக் காரணம், தேவனாக இருந்தாலும், புலனடக்கத்தில் தவறி விடுகிறான்.


புலன்கள் என்பதை இந்திரியங்கள் என்கிறோம். இந்திரியங்களை அடக்கினால் அவன் தேவனாவான். புலனை அடக்கி யார் வேண்டுமானாலும் இந்திரப்பதவிக்குப் போட்டியிடலாம். அப்படி இந்திரனுக்கு நிறைய போட்டிகள் இருந்திருக்கின்றன என்று புராணங்கள் மூலம் அறிகிறோம். அதனால் இந்திரியங்களுக்கு அதிபதி எவனோ அவன் இந்திரன், அல்லது தேவேந்திரன் ஆவான் என்று சொல்லப்பட்டது. அதில் தவறும் போது இந்திரன் தன் ‘பதவியைஇழக்கிறான்.



இந்திரனுக்கு நேர்மாறாக இருப்பவன் அசுரன். திசைத் தெய்வ அமைப்பில், இந்திரன் கிழக்கு என்றால், அவனுக்கு நேர் எதிரே மேர்குத் திசையில் அசுரன் இருப்பான். ஆம் அசுரனையும் ஒரு தேவனாக உருவகப்படுத்தி உள்ளார்கள். அவனும் மனிதனைத் தன் பிடியில் வைத்துக் கொள்ளப் பார்ப்பான். அதிபதித்துவம், அதாவது தலைமைப் பண்புடன் மக்களைத்தன் பிடியில் அசுரனாலும் வைத்துக் கொள்ள முடிவதால் அவனுக்கும் தேவன் அல்லது தெய்வம் என்ற அந்தஸ்து கிடைக்கிறது.


இந்திரனைப் போல சூரியனுக்கும் திசை கிழக்கு. அவனுக்கு எதிராக மேற்குத் திசையில் இருப்பவன் வருணன். புராணங்களிலும், உபநிஷத்துக்களிலும் வரும் இந்தத் தத்துவங்கள் அற்புதமாக இருக்கும். தேவன் (சுரன்) அசுரன், சூரியன் வருணன் இவையெல்லாம் இரட்டைகள். ஒன்றில்லாமல் ஒன்று இருக்காது. இவை ஜோடியாக இருக்கும், ஆனால் ஒன்றுக்கொன்று மாறாக இருக்கும்.


இப்படிபட்ட இரட்டைகளை பிராணன் ரயி என்று ப்ரஸ்ன உபநிஷத்து சொல்கிறது. வெய்யிலும் நிழலும் இப்படி ஒரு இரட்டை. அது போல, பகலும் இரவும், வலமும் இடமும், சித்தும் ஜடமும், வடக்கும் தெற்கும், கிழக்கும் மேற்கும், முன்பு யுகக் கணக்கில் பார்த்தோமே ஏறு முகம் இறங்கு முகம் இவை எல்லாமே பிராணன் ரயி என்னும் இரட்டையர் ஆவர். வெவ்வேறாக இருந்தாலும், அவை தொடர்புடயவை.



உதாரணமாக, சூரியன் வெப்பம் உடையவன். அவனது ஜோடியான வருணன் என்றால் நீர் என்று பொருள். நீர் குளிர்ச்சியானது. சூரிய வெப்பத்துக்கு வருணன் எதிர்ப்பதம் ஆகிறான். ஆனால் சூரிய வெப்பம் இருந்தால்தான் நீராவி எழுந்து மேகமாகி மழையாகி நீர் கிடைக்கும். இப்படி ஒரு தொடர்பு இவற்றுக்குள் உண்டு. மற்ற ஜோடிகளிலும் இப்படி ஒன்றுக்கொன்று தொடர்பு இருப்பதைக் காணலாம்.


தேவர் அசுரர்களுக்கும் இப்படி தொடர்பு உண்டு. ஒளி உள்ளவன் ஒருவன். ஒளியை மறைப்பவன் மற்றொருவன். புலன்களை அடக்குபவன் ஒருவன். புலன்களால் அடக்கப்படுபவன் மற்றொருவன். புலனடக்கத்தில் தவறினாலும், தேவன் அதை நைச்சியமாகச் செய்வான். அசுரன் அடாவடியாகச் செய்வான். இந்தத் தொடரில் முன்பு இந்திரன் மகன் நடனமாடிக் கொண்டிருக்கும் ஊர்வசியிடம் மயங்கி, அதன் காரணமாக அகத்தியரிடன் சாபம் பெற்றான் என்று பார்த்தோம். அதே இந்திரன் மகன் ஒரு காகம் உருவம் எடுத்து சீதையைத் தொந்திரவு செய்த போது அசுர குணத்தைக் காட்டினான். சீதையைத் துன்புறுத்தி இன்பம் கணடதன் காரணமாக அவன் அசுரன் காகாசுரன் என்ற பெயரில் குறிக்கப்பட்டான்.


தேவாசுரர்களைப் பற்றிய கதைகளில் எப்பொழுதுமே அசுரர்கள் தேவர்களைச் சீண்டுவார்கள். சூரியனை மறைப்பார்கள், இருளைக் கொடுப்பார்கள், முனிவர்கள் செய்யும் யாகங்களைக் கெடுப்பார்கள், பெண்ணைத் தூக்கிக் கொண்டு போய்விடுவார்கள். தனக்கு ஒன்று கிடைக்கவில்லையானால், யாரால் அது கிடைக்கவில்லையோ, அல்லது யாருக்கு அது கிடைத்து விட்டதோ அவர்களைத் துன்புறுத்துவார்கள். சம்பாபதி தெய்வமும், நாளங்காடிப் பூதமும், புகார் நகரில் குடி கொண்டதற்குக் காரணம், அங்கு அப்படிப்பட்ட மக்களால் அடிக்கடி தொந்திரவு இருந்தது.


திராவிடன் என்று திராவிடவாதிகள் அழைக்கிறார்களே, அந்த ராவணன் அசுரன் என்று அழைக்கப்பட்டான். அவன் தந்தை புலஸ்தியர் என்னும் பிராம்மண ரிஷி. தந்தையைப் பின்பற்றியே ராவணனை பிராம்மணன் என்று சொல்ல வேண்டும். ஆனால் அவன் பிராம்மணன் என்று அறியப்பட்டதை விட அசுரன் (ரா‌ஷஸன்) என்றே அறியப்பட்டான்.  பிரம்ம வித்தை அறிந்த பிராம்மணனாக இருந்தாலும், அவனிடம் இந்த அசுர சுபாவம் குடி கொண்டிருக்கவே, ராவணன் அசுரன் எனப்பட்டான்.


புலன்களுக்கு அடிமைப்படுதல், அதாவது இந்திரியங்களுக்கு வசப்படுதல் என்பது மின்சார சம்பந்தமானது. முந்தின பகுதியில் இந்திரன் என்பவன் இயற்கையில் உள்ள மின்சார சக்தியின் உருவகம் என்று பார்த்தோம். இந்திரியங்களை மின்சார சமிஞ்ஞை மூலமாக நம் மூளையானது இயக்குகிறது. அதனால் நம் இந்திரியங்களுக்கும் இந்திரன் தலைவனாகிறான். 


இந்தப் பரிமாணத்தின் அடிப்படையில் ரிக் வேதத்தில் வரும் ஆரிய- தஸ்யூ சம்பவங்களை ஆராய வேண்டும். வேதங்களை மொழி பெயர்ப்பு மூலம் புரிந்து கொள்ள முடியாது. உபநிஷத்துக்கள் மூலமாகத்தான் வேதக் கருத்துக்களை அறிந்து கொள்ள முடியும் என்பதே காலம் காலமாக இந்த நாட்டில் வழங்கி வரும் வழக்கம். இதுவரை கண்ட உபநிஷத்துக்கள் விளக்கப்படி ஆரிய த்ஸ்யூ போராட்டதை ஆராய்வோம்.


அதன் பிறகு இந்திரனது மூன்றாவது பரிமாணமமான, லௌகீகமாக இந்திரன் என்பவன் வாழ்ந்தான் என்று காட்டும் ஆதாரங்களைக் காண்போம்.