திங்கள், 18 ஜூலை, 2011

64. சங்க நூல்களில் பிற வர்ணத்தவர் ஆதிக்கம்.




மற்ற வர்ணத்தவர்கள், அந்தணர்களிடமிருந்து கல்வி கற்றார்கள். 
கற்ற கல்வியை வெளிப்படுத்தவும் செய்தார்கள். 
அப்படி வெளிப்படுத்திக் கொள்வதிலும், 
அந்தணர்கள் மற்ற வர்ணத்தவருடன் போட்டிக்கு வந்ததில்லை. 
அப்படிப் போட்டியிட்டிருந்தால், 
சங்க நூல்களில் அந்தணர்கள் ஆதிக்கமே அதிகமாக இருந்திருக்கும்.   

ஆனால் சங்க நூல்களில் அந்தணர்கள் எழுதிய பாடல்கள் குறைவு. 
அவர்கள் வேதம் ஓதுதலிலும், கற்பித்தலுமே காலத்தைக் கழித்திருக்கின்றனர். அவர்களிடமிருந்து கற்றுக் கொண்டவர்கள்,  
தங்கள் பெயரை நிலை நாட்டிக் கொண்டிருக்கின்றனர்.  
மற்றவர்களுக்கு ஒரு ஏணியாகத்தான் தமிழ்ப் பார்ப்பனன் இருந்திருக்கிறான்.


உதாரணத்துக்குப் புறநானூறை எடுத்துக் கொண்டால், 
அதில் அந்தணர்கள் எழுதிய செய்யுள்கள் குறைவு.  
அரசர்களும், வணிகர்களும் வேளாண் மக்களும் எழுதிய பாடல்களே அதிகம்.  
பிற சங்க நூல்களிலும் கடை இரண்டு வர்ணத்தவரே 
அதிக செய்யுள்கள் இயற்றியுள்ளனர்.


குறுந்தொகையை மட்டும் எடுத்துக் கொண்டால்

  • ஆசிரியன் பெருங்கண்ணனார் என்று ஆசிரியர் பட்டத்துடன் ஒருவரும்,
  • மதுரை ஆசிரியர் கோடங் கொற்றனார் என்ற ஒருவரும் என இருவரே
ஆசிரியர் என்ற பெயருடன் இருக்கின்றனர். பொதுவாகக் கற்பித்தலைப் பார்ப்பனர்கள் செய்யவே, இவர்கள் பார்ப்பனர்களாக இருக்க்க்கூடும்.


குறுந்தொகைப் பாடல்களை எழுதியவர்களில் மதுரையைச் சேர்ந்தவர்கள் என்று பிற வர்ணத்தவரே அதிகம் இருக்கிறார்கள்


  • அவர்களில் கொல்லர்கள் இருவர்.
  • அவர்களது பெயர்கள், மதுரைக் கொல்லன் புல்லன் (373),
  • மதுரைப் பெருங்கொல்லர் (141)

  • வணிக வர்ணத்தைச் சேர்ந்தவர், மதுரை அறுவை வணிகன் இளவேட்டனார். அறுவை என்றால் ஆடை என்று பொருள். இவர் துணி வியாபாரியாக இருக்க வேண்டும்.
  • மதுரை எழுத்தாளர் சேந்தம் பூதனார் என்பவர் எழுத்தாளர் பணியில் இருந்திருக்க வேண்டும்.
  • மதுரை வேளா தத்தர் என்றும் ஒரு புலவர் இருந்திருக்கிறார். இவர் வேளாண் மரபைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
  • மிளை வேள் தித்தனார் என்னும் பெயர் கொண்ட புலவரும் வேளாண் தொழில் செய்தவராக இருக்க வேண்டும்.

  • வாயிலான் தேவனார்  என்றும், ‘வாயிளங் கண்ணனார் என்றும் பெயர் கொண்ட புலவர்கள் வாயில் காப்போனாக இருந்திருக்க வேண்டும். அவரவர் செய்த தொழிலைக் கொண்டும் பெயர் வைத்திருக்கின்றனர். வாயில் காக்கும் தொழில் கீழ்மையானது என்று எண்ணப்படவில்லை. எல்லாத் தொழில்களுக்கும் மரியாதை இருந்தது.
  • வண்ணக்கன் என்ற பெயரில் இரண்டு புலவர்கள் குறுந்தொகையில் எழுதி உள்ளார்கள். வண்ணக்கன் என்றால் நாணய பரிசோதகர் என்று பொருள். அந்த நாளில் வேறு பட்ட வேலைகள் இருந்திருக்கின்றன. அவற்றைச் செய்ய விசேஷ திறமைகளைக் கற்றுக் கொண்டிருக்க வேண்டும்.
  • வாத்தியக் கருவிகள் வாசித்தவர்களும் செய்யுள் இயற்றியுள்ளார்கள். ‘நெடும் பல்லியத்தனார்’, ‘நெடும் பல்லியத்தை என்ற பெயர்களில் இரண்டு புலவர்களது பாடல்கள் குறுந்தொகையில் காணப்படுகின்றன. பல்லியத்தை என்னும் அடை மொழி, பல வாத்தியங்களை உடையவர்களுக்கு அளிக்கப்படுவது
  • வாத்தியம் இசைத்தவர்களைப் போல கூத்தர்களும் பாடல்கள் எழுதி உள்ளனர். வேம்பற்றூர்க் கண்ணன் கூத்தனார் என்பவரது பெயர் அவர் கூத்தாடுபவர் என்பதைக் காட்டுகிறது.

செய்யும் தொழில், ஆர்வம் என வகை வகையாக இருந்தாலும், இவர்கள் அனைவரும் வேதமொழிந்த கல்வியாக, முதல், இடை, கடை என இலக்கண, இலக்கியம், தர்ம நூல் போன்றவற்றைப் பயின்று இருந்தால்தான் திணை, துறை சுத்தமாகச் செய்யுள் இயற்றி இருக்க முடியும்.


  • குலபதி என்ற அடைமொழியுடன்கிடங்கிற் குலபதி நக்கண்ணனார் என்ற புலவர் இருந்திருக்கிறார். ஆயிரம் மாணவர்களை ஆதரித்துக் கல்வி புகட்டுபவருக்குக் குலபதி என்ற பட்டம் கொடுப்பார்கள். கல்விக்கு எத்தனை முக்கியத்துவம் கொடுத்திருந்தால், இப்படி ஒரு வழக்கம் வந்திருக்கும்? இப்படி ஒரு பட்டம் வழங்கும் வழக்கம் இருந்துள்ளதால், ஆயிரக்கணக்கில் மாணவர்கள் படித்தனர் என்பதும் தெரிகிறது.

வர்ண மக்களை விடுங்கள். ஒரு ஆரிய அரசன் எழுதிய பாடல் குறுந்தொகையில் இருக்கிறது.
  • ஆரிய அரசன் யாழ்ப் பிரமத்த்தன் எனபது இவன் பெயர். (கு-தொ-184). இந்த அரசனுக்குக் கபிலர் தமிழ் கற்றுக் கொடுத்தார் என்று சொல்லப்படுகிறது. அதற்காக அவர் இயற்றியதே குறிஞ்சிக் கலி என்றும் சொல்லப்படுகிறது. ஆரியத் திணிப்பு நடந்தது என்று திராவிடவாதிகள் கூறுகிறார்களே, இதற்கு என்ன சொல்கிறார்கள். விரட்டியடித்தவனும், திணித்தவனுமாக ஆரியர்கள் இருந்திருந்தால், இந்த ஆரிய அரசன் எழுதிய பாடல் குறுந்தொகையில் எப்படி இடம் பெற்றிருக்கும்?

குறுந்தொகையில் உள்ள பிற பெயர்களைப் பாருங்கள். அவை வடபால் முனிவர்கள் பெயராக இருக்கின்றன.
  • கடம்பனூர்ச் சாண்டில்யன் என்ற ஒரு புலவர் எழுதிய பாடல் இருக்கிறது (307)
யார் இந்தச் சாண்டில்யன்? ஒரு ரிஷியா? சாண்டில்ய கோத்திரத்தில் வந்தவரா? அல்லது இந்தப் பெயரைக் கொண்ட வடபால் புலவர் ஒருவரா? ஆனால் அவருக்குத் தமிழ் தெரிந்திருக்கிறது என்பதைக் கவனத்தில் கொள்வோம். தமிழ்ப் புலமை இருந்திருக்கிறது என்பதையும் கருத்தில் கொள்வோம்.


  • இன்னொரு புலவர். இவர் பெயர் கருவூர்ப் பவுத்திரனார் (குறுந்தொகை – 162)
இந்தப் பெயர் பவித்திரம் அல்லது பேரன் என்ற பொருள் கொண்ட பௌத்திரன் என்னும் வட சொல்லாகும். ஆனால் அவரது ஊர்ப் பெயரோ கருவூர் என்பது.  தமிழும், சமஸ்க்ருதமும், சங்க காலம் வரை உறவாடியது என்பதற்கு இதை விட வேறு சாட்சி என்ன வேண்டும்?


  • இந்தப் பெயரைப் பாருங்கள். கருவூர் ஓத ஞானி. (கு-தொ – 71) ஓத ஞானி என்பது சமஸ்க்ருதப் பெயர். பரந்த ஞானம் என்பது இதற்குப் பொருள். வெறும் ஓத ஞானி என்னும் பெயரிலும் ஒருவர் எழுதியுள்ளார்.

  • இன்னொரு புலவர் நெய்தல் கார்க்கியர் எனப்பட்டார். (குதொ 212)
இவர் நெய்தல் நிலத்தைச் சிறப்பித்துப் பாடியுள்ளார். இவர் கார்க கோத்திரத்தைச் சேர்ந்தவரா, கார்க ரிஷியின் வம்சமா, அல்லது கார்க்கி என்னும் பெண்பால் ரிஷியின் வழி வந்தவரா? அல்லது வட புலத்திலிருந்து தமிழ் நாட்டு நெய்தல் நிலத்துக்கு வந்து தவ வாழ்க்கை மேற்கொண்டவரா? இவர் எழுதிய இரண்டு பாடல்களிலும், நெய்தல் நில வாழ்க்கையும், தலைவன் மணியொலிக்கத் தேரிலேறி கடற்கரைக்கு வரும் காட்சியும் சொல்லப்படுகின்றன. கடற்கரையோரம் தவ வாழ்க்கையை மேற்கொண்ட வடபால் தவ முனிவரோ இவர் என்று எண்ணும் வண்ணம் இவர் தாம் பார்த்த காட்சிகளை விவரிக்கும் பாங்கு அமைந்திருக்கிறது.


  • இன்னொரு பெயரும் இருக்கிறது. அது தேவ குலத்தார் குறுந்தொகையின் 3 ஆவது பாடல் இவரால் இயற்றப்பட்டது. தேவன் என்னும் பெயரில் பாரதம் பாடிய பெருந்தேவனாரும் இருக்கிறார். தமிழ் மக்களின் வாழ்க்கை வேத மரபின் அடிப்படையில் இல்லையென்றால், இப்படிப் பட்ட பெயர்கள் வரமுடியாது.


வேத மரபின் அடிப்படை என்பது மட்டுமல்ல, வடக்கு, தெற்கு வித்தியாசம் இல்லாமல் ஒரு கலந்துறவாடல் நடந்திருக்கிறது. தமிழும், சமஸ்க்ருதமும், தமிழ் நாட்டவரும் அறிந்திருந்தனர், வட நாட்டவரும் அறிந்திருந்தனர் என்பதை நச்சினார்க்கினியர் தெரிவித்துள்ளார்.


61 ஆம் கட்டுரையில் கூறிய தொல்காப்பிய வர்ண சூத்திரத்துக்கு உரை எழுதிய நச்சினார்க்கினியார் தமிழில் தலை ஓதல்என்பது பற்றிச் சொல்லும் விவரம் இதை நிலை நிறுத்துகிறது.


அவர் சொல்கிறார்:-


தமிழ்ச் செய்யுட் கண்ணும் இறையனாரும்,  
அகத்தியனாரும்,  
மார்க்கண்டேயனாரும்,
வான்மீகனாரும்,  
கவுதமனாரும் போலார் செய்தன தலை”.
என்கிறாரே இவர் சொல்லும் இந்தப் பெயர்கள் எல்லாம் தமிழ்ப் பெயர்களா?


  • இந்தப் பெயர்களில் இறையனார் என்பது சிவ பெருமானைக் குறிக்கும்.

  • அகத்தியனார், நமக்கு மிகவும் அறிமுகமானவர்.  
  • ஆனால் அவர் வடபால் முனிவர்தான்
  • அவரது மனைவி லோப முத்திரை என்பவள் உத்தர குருவைச் சேர்ந்தவள் என்று ஒரு கருத்து இருக்கிறது. ரிக் வேதத்தில் ஒரு பாடல் அவளால் இயற்றப்பட்ட்து. ராவணனைப் போரில் வெல்ல, ராமனுக்கு அகஸ்தியர் சமஸ்க்ருத்த்தில் ஆதித்திய ஹ்ருதயம் என்னும் பாடலை உபதேசித்துள்ளார். அவரே தமிழுக்கும் ஆசான் என்பது நாம் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும்.

  • அடுத்து மார்க்கண்டேயரைப் பற்றி நச்சினார்க்கினியர் சொல்லியுள்ளாரே, இவரும் சமஸ்க்ருத்த்தில் புராணம் தந்துள்ளார்.  
  •  
  • சிவ பெருமானது அருளால் சாவை வென்று என்றும் பதினாறாக, சிரஞ்சீவியாக இருப்பவர் என்று சொல்லப்படும் மார்க்கண்டேயர் தமிழில் எழுதியுள்ளார் என்பது தெரிகிறது ஆனால் தமிழ்க் கல்வியில் அவர் தந்துள்ள நூல்களைப் படிக்க வேண்டும் என்கிறாரே அது எப்படி? தமிழ் இலக்கிய, இலக்கணத்தில் மார்க்கண்டேயர் எழுதிய நூல்கள் இருந்தன என்றுதானே அர்த்தமாகிறது?

  • அடுத்து, கவுதமனார் என்ற பெயரைப் பாருங்கள். பாலை பாடிய கவுதமனார் என்று ஒருவர் இருந்தார். பதிற்றுப்பத்தில் மூன்றாம் பத்தைப் பாடியவரும் ஒரு கவுதமனார். இருவரும் ஒருவரே என்று சில ஏடுகளில் குறிக்கப்பட்டுள்ளது என்கிறார் டா. உ.வே.சா அவர்கள். இந்தக் கவுதமனார் ஒரு பார்ப்பனர். அவரும் அவரது மனைவியும் சுவர்கம் செல்ல வேண்டும் என்று ஒரு யாகம் செய்ய விரும்பினர். அந்த யாகத்தைச் செய்யச் சேர மன்னன், பல்யானைச் செல்கெழு குட்டுவன் உதவினான். இந்தக் கவுதமனாரைத்தான் நச்சினார்க்கினியர் சொல்லியிருக்க வேண்டும். இவர் கவுதம கோத்திரத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம். அந்தக் கோத்திரம் அவரை ஆரிய வர்த்த ரிஷிகள் மரபில் வைக்கிறது. அந்த மரபில் வந்த இவர் தமிழின் தலை ஓதலுக்கான இலக்கண இலக்கியம் படைத்தவர் என்பது, வடக்கு- தெற்கு என்ற வித்தியாசம் அன்று இல்லை என்பதையும், தமிழையும், சமஸ்க்ருதத்தையும் இன்றியமையாத இரு கண்களாக அறிஞர்கள் பார்த்தார்கள் என்பதையும் தெரிவிக்கிறது.

  • அது போல வான்மீகனார் என்கிறாரே? அவர் யார்? ராமாயணம் எழுதிய வால்மீகியா?
வான்மீகம் என்பது ஒரு சம்ஸ்க்ருதச் சொல்தான். கரையான் புற்றுக்கு வால்மீகம் என்று பெயர்



அவர் தியானத்தில் அமர்ந்த பொழுது அவர் மீது கரையான் புற்று கட்டி விடவே அவர் இந்தப் பெயர் பெற்றார். எனவே இது காரணப்பெயர். இந்தப் பெயரில் வேறு ஒருவர் இருக்க வாய்ப்பில்லை.

ஆனால் அவர் எழுதிய இலக்கண, இலக்கிய நூல்களைப் படித்தலே தமிழ் மொழியில் தலையாய கல்வி என்கிறாரே அது எப்படி?

தமிழில் வால்மீகி எழுதியுள்ளாரா?

அடுத்தக் கட்டுரையில் காண்போம்.