வியாழன், 20 அக்டோபர், 2011

79. ஏறு தழுவுதல் திராவிடர் வழக்கமா? -1


இன்றைக்கு ஜல்லிக்கட்டு என்று சொல்வதைச்
சங்க காலத்தில் ஏறு தழுவுதல் என்றார்கள்.
ஐந்திணைகளுள் ஒன்றான
முல்லை நிலங்களில் வாழ்ந்த ஆயர் மக்கள்
ஏறு தழுவுதலைச் செய்தார்கள்.
5000 ஆண்டுகளுக்கு முன் உண்டானதாகக் கருதப்படும்
சிந்து சமவெளிப் பகுதியிலும்
ஏறு தழுவுதல் அமைப்பில் ஒரு முத்திரை கண்டெடுக்கப்பட்டுள்ளது

(படத்தை க்ளிக் செய்து பார்க்கவும்)




தமிழ் நாட்டிலும் ஏறு தழுவுதல் இருந்திருக்கிறது.
சிந்து சமவெளியிலும் ஏறு தழுவுதல் இருந்திருக்கிறது.
இதனால் சிந்து சமவெளியில் வாழ்ந்த திராவிடர்களும்,
தமிழர்களும் ஒன்றே என்ற கருத்தும் எழுந்துள்ளது.
இந்தக் கருத்து உண்மையா என்று ஆராய்வோம்.


தமிழ்ச் சங்க நூல்களுள் ஒன்றான கலித்தொகையில்
ஐந்திணைகளில் வாழ்ந்த மக்களது வாழ்க்கை முறை காணப்படுகிறது.
அவற்றுள் முல்லைக் கலிப் பாடல்கள் மூலம்,
ஆயர்கள் வாழ்ந்த வாழ்க்கையை
நம்மால் அறிந்துக் கொள்ள முடிகிறது


ஆயர் மரபுகள்.

அந்தப் பாடல்களில் ஏறு தழுவுதல் குறித்து
விரிவான செய்திகள் காணப்படுகின்றன.


அவை தரும் விவரங்கள் மூலம்
ஏறு தழுவுதல் என்பது ஒரு பரிட்சை போல இருந்தது என்று தெரிகிறது.
ஆயர்குலப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்றால்,
அவள் வளர்க்கும் காளையை ஒருவன் அடக்க வேண்டும்.
ஆயர் மகள் தெருவில் கூவிச் சென்று
மோர் விற்பவளாக இருப்பாள்.
இருந்தாலும் அவள் மோர் விற்கப் போகும் போது,
அவளைப் பார்ப்பவர்கள், இந்தப் பெண்ணின் கணவன்
கொல்லேறு’ (முட்டிக் கொன்று விடும் காளை மாடு) வென்றவன்
என்று பேசிக்கொள்ளும் வகையில்
தன்னை மணப்பவன் ஏறு தழுவ வேண்டும்
என்று இவள் நினைப்பாள். (கலி-தொ-106)





காதலனாக இருந்தாலும்,
அவன் பெற்றோர் முறைப்படி பெண் கேட்டு வந்தாலும்
ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்
ஏறு தழுவச் சொல்லுங்கள் என்று சொல்லி
ஏறு தழுவுதற்கு ஏற்பாடு செய்து,
பறை அறிவிப்ப்பார்கள் (-தொ- 102)
இதற்குக் காரணம்
·         ஏறு தழுவியவனுக்கே மகளை மணம் முடித்துக் கொடுக்க வேண்டும்
என்ற வழக்கம் இருந்தது (”வழக்குமாறு கொண்டு”)
என்று சொல்கிறது ஒரு பாடல் (-தொ 101)



இதைப் போல இன்னொரு வழக்கமும் அவர்களிடம் இருந்தது.
·         ஒரே நேரத்தில் பல ஆயர் பெண்களுக்குக்
கணவனைத் தேர்ந்தெடுக்க,
அவரவர்கள் வளர்க்கும் காளைகளை
எருமன்றம் என்று சொல்லப்பட்ட மாட்டுத்தொழுவத்தில் கூட்டுவார்கள்.
எந்தக் காளையை அடக்கினால்
எந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளலாம்
என்று முதலில் அறிவித்து விடுவார்கள்.
இப்படி அறிவிக்கும் வழக்கம் இருந்தது என்பதை
சிலப்பதிகார ஆய்ச்சியர் குரவையிலும் காண்கிறோம்.
ஒவ்வொரு காளையையும் அடையாளம் காட்டி,
இந்த காளையை அடக்குபவன்,
இந்த ஆயர் பெண்ணுக்கு மணமகனாவன் என்று
ஆய்ச்சியர் குரவை ஆட்டத்திலும் சொல்லப்படுகிறது.




·         மரபாக வரும் இன்னொரு வழக்கமும் சொல்லப்பட்டுள்ளது.
ஏறு தழுவியவுடன்,
அந்த ஆண், அவன் மணக்கப் போகும் பெண் உட்பட
ஊர் மக்கள் வட்டமாகக் கூடி குரவைக் கூத்து
என்னும் நடனம் ஆடுவார்கள்.
குரவைக் கூத்தையும் மரபின் வழிதான் செய்கிறோம் என்று  
குரவை தழீஇ மரபுளி பாடிஎன்றும் சொல்லப்பட்டுள்ளது. (-தொ 103)
வழி வழியாக வரும் மரபுகள் என்று சொல்லப்படும்
இந்த வழக்கங்கள்
எப்பொழுதிலிருந்து ஆரம்பித்தன?


இதே கலித்தொகைப் பாடல்களுள் ஒன்றில்தான்,
கடல் சீற்றத்தினால், தாங்கள் வாழ்ந்த பகுதிகளை இழந்தாலும்,
தென்னவன் தங்களுக்கு வாழ இடம் செய்ய,
சேர, சோழ நாட்டெல்லைகளில் இருந்த பகுதிகளை வென்று
அங்கு தங்களைக் குடியமர்த்தினான் என்று சொல்லப்பட்டுள்ளது. (- தொ 104)
இந்த சம்பவம் 3 ஆம் ஊழியைக் குறிக்கிறது.
3500 வருடங்களுக்கு முன்னால் 3 ஆம் ஊழி வந்தது.
அப்படியென்றால்,
இந்த வழக்கங்கள் 3500 வருடங்களாக இருந்தன என்று சொல்வதா
அல்லது அதற்கும் முன்,
தென் கடலில் குடியிருந்த காலத்திலேயே இருந்தவை என்று சொல்வதா?


அப்படியல்ல,
இந்த வழக்கங்கள் இன்றைய தென்னிந்தியப் பகுதிகளில்
ஏற்கெனெவே இருந்திருக்கலாமே
என்றும் கேடகலாம்.
ஆனால் சோழ, சேர நாடுகளில் இந்த வழக்கம் இல்லை.
ஏறு தழுவுதல் குறித்த பாடல்களில்
பாண்டிய மன்னர்களையே போற்றியிருக்கிறார்கள்.
அதனால் இந்த மரபுகள் கொண்ட ஆயர் குல மக்கள்
பாண்டியன் வசம் இருந்த நாடுகளில்தான் வாழ்ந்தார்கள்
என்று எண்ண வேண்டியிருக்கிறது.


3500 ஆண்டுகளுக்கு முன்னாலிருந்த தென்னன் தேசத்திலிருந்து
இந்த வழக்கம் தொடருகிறது என்று நாம் ஒத்துக் கொள்வதாக இருந்தால்,
சிந்து சமவெளிப் பகுதியில் இந்த வழக்கம் எப்படி வந்திருக்க முடியும்?
அந்தப் பகுதியில் இருந்த திராவிடர்கள்,
இந்த வழக்கங்களைக் கொண்டு வாழ்ந்தனர்,
பிறகு ஆரியப் படையெடுப்பின் காரணமாக,
அவர்கள், தமிழ் நாட்டுக்கு வந்து அதை அப்படியே பின் பற்றியிருக்கலாம்
என்று சிலர் சொல்லலாம்.
அது உண்மையா என்று அறிய எறு தழுவுதல் கூறும்
பிற செய்திகளைப் பார்ப்போம்.


ஏறு தழுவுதல் நினைவுறுத்தும் மஹாபாரதம்!


ஊழியிலிருந்து தென்னனுடன் தப்பி வந்த தொல்குடி ஆயர் தாங்கள்
என்று சொல்லும் பாடலில் (-தொ 104),
ஒரு எருமன்றத்தில் நடந்த ஏறு தழுவுதல் நிகழ்ச்சி விவரிக்கப்படுகிறது.
அதில் அடக்கப்பட வேண்டிய காளைகளது அடையாளம் சொல்லப்படுகிறது.
அவை எப்படிப்பட்ட காளைகள் என்கிறார்கள்?
ஆரியம் என்று சொல்கிறார்களே
அந்த ஆரியத் தெய்வங்களைப் போல அந்தக் காளைகள் இருந்தனவாம்.
அந்தத் தெய்வங்களையும், நிறத்தால் அடையாளம் கூறுகின்றனர்.
வகைக்கு ஒரு நிறம் சொல்கிறார்கள்,
அதனுடன் ஒரு கடவுளைத் தொடர்புபடுத்திச் சொல்கிறார்கள்.  


பால் நிற வண்ணம் போலவும்,
பாலின் நிறத்தைப் பழிப்பவன் போலவும் இருந்த
பலராமன் போல ஒரு காளை இருந்தது.

இன்னொரு காளை திருமாலைப் போல கன்னங்கரேலென்று இருந்தது!
திருமாலின் மார்பில் இருக்கும் மறு போல
அந்தக் காளையின் மார்பிலும் ஒரு மறு இருந்தது
என்கிறது அந்தப் பாடல்.



அடுத்தது சிவப்பு நிறம்.
முக்கண்ணுடைய சிவனைப் போல செக்கச்செவேலென்று இருந்ததாம்.
 
இன்னொரு காளை,
மற்றுமொரு காளை சூரனை வென்ற முருகனைப் போல
இளஞ் சிவப்பு நிறமுடையதாக இருந்ததாம்.


இன்னொரு பாடலில் இதை இன்னும் விரிவாகச் சொல்கிறாள்
ஆயர் மகள். (தொ 105)
·         பலராமன் மார்பில் இருக்கும் சிவந்த மாலையைப் போல
மார்பில் சிவந்த மறுவுடன் ஒரு வெள்ளை எருது இருந்ததாம்.


·         வைணவர்கள் நெற்றியில் சூடும் நாமத்தைக்
கேலி செய்யாத திராவிடவாதி இருக்க முடியாது.
ஆனால் இந்தச் செந்தமிழ்ப் பாடலில்,
திருமாலின் நெற்றியில் சங்கு சூடினாற் போல,
நெற்றியில் வெள்ளைச் சுட்டியுடன் ஒரு கரிய காளை இருந்த்து
என்று சொல்லப்பட்டுள்ளது,


·         சிவனைப் போல நிறம் கொண்ட காளையின் கழுத்து
அந்த நீலகண்டனைப் போல நீல நிறமாக இருந்ததாம்

முருகனைப் பற்றிச் சொல்லும் விவரத்தைப் பாருங்கள்.

·         முருகன் அணிந்த வெள்ளைத் துகில் போல,
வெள்ளை நிறக் காலுடன் இருந்ததாம் ஒரு எருது.

இவர்களைத் தவிர

·         திராவிட எதிரியான இந்திரனையும் ஒப்பிட்டு
ஆயர் மகள் விவரிக்கிறாள்.
ஆயிரம் கண் கொண்ட இந்திரன் போல
பல புள்ளிகள் கொண்ட உடலைக் கொண்டிருந்ததாம் ஒரு காளை!


·         இந்தக் காளைகள் எல்லாம் ஊழியிறுதியில்,
உயிர்களைப் பறிக்கச் சுற்றி சுற்றி வரும்,
ஊழித்தீ, காலன், கூற்றுவன் போன்றவர்களைப் போல
அந்த எரு மன்றத்தில் சுற்றிச் சுற்றி வந்தனவாம்!


மாக்ஸ் முல்லர் முதலாக பல வெளி நாட்டவர்களும்
தமிழ் மக்களுக்குத் தந்த நிறம் கருப்பு ஆகும்.
ஆனால் தமிழ் மண்ணின் முதுகுடி மக்களான ஆயர்கள்
நிறப் பாகுபாடு கொண்டிருக்கவில்லை


அவர்கள் தரும் வர்ணனையின்படி,
தமிழ்க் கடவுளான முருகன் கருப்பு நிறம் கொண்டவனல்லன்.
அவன் இளஞ்சிவப்பு நிறம் கொண்டவன்.
(அதனால்தான் அவனைச்   செவ்வேள்என்று அழைத்தனர்.) 


எந்தக் கடவுளை ஆக் கடவுள் என்று திராவிடவாதிகள் அழைக்கிறார்களோ
அந்தக் கடவுள் கரிய நிறத்தவன்!
அவன் அண்ணன் வெள்ளை நிறத்தவன்.

ஆரியப் படையெடுப்பு ஆராய்ச்சியாளர்கள் வழியில் சொல்வதென்றால்,
அண்ணன் ஐரோப்பாவிலிருந்து வந்தவன்,. 

தம்பி (அவன் பெயரே கிருஷ்ணன்,
கிருஷ்ணன் என்றால் சமஸ்க்ருத்த்தில் கருப்பு என்று பொருள்)
சிந்து சமவெளிப் பகுதியைச் சேர்ந்தவன்

சிவனும், அவன் மகனான தமிழ்க் கடவுள் முருகனும்
பூமியின் தென்  கோடியில் இருந்த ரோஹிதர்கள்
என்னும் சிவப்பர்களைப் போன்றவர்கள் (பகுதி 68). 


ஒரு மாட்டை பார்த்தால் கூட
இந்த நிறங்களும், அந்த நிறங்களைக் கொண்ட கடவுளர்களும்தான்
பழந்தமிழ் ஆயர்களுக்கு நினைவுக்கு வந்தன.
அப்படியென்றால் அவர்கள் எந்த அளவுக்கு
இந்தத் தெய்வங்களைப் பற்றிய சிந்தனையில் இருந்திருப்பார்கள்?


இவர்கள் மட்டுமல்ல
புறநானூறிலும் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் அவர்கள்
பாண்டியன் இலவந்திகைப் பள்ளி துஞ்சிய நன்மாறனை
இங்கு மேலே சொன்ன தெய்வங்களைச் சொல்லி,
அந்த அரசன் அவர்களுக்கு ஒப்பானவன் என்றே எழுதியுள்ளார் (பு-நா – 56)


இந்தத் தெய்வங்கள் மட்டுமல்ல.
மஹாபாரதப் பாத்திரங்களும்
முதுகுடி ஆயர்களது நினைவை விட்டு அகலாமல் இருந்திருக்கின்றனர்.
ஏறு தழுவ முயன்ற ஒரு இளைஞனை
அந்த எருதானது, கொம்பினால் குத்தி,
தன் கொம்புகளுக்கிடையே அவனுடலைக் கொண்டு வந்து, கிழிக்கிறது.
இதைப் பார்ப்பதற்கு,
அந்த அழகுடையவளது தலைமயிரிலே கை நீட்டியவனது
நெஞ்சத்தைப் பிளந்து,
போர்க்கள நடுவில் தன் வஞ்சினத்தைத் தீர்த்தவன் போல இருக்கிறது என்கிறாள்.
இந்த சம்பவம் எதைச் சொல்கிறது என்று விளக்குகிறார் உரையாசிரியர்,
திரௌபதியின் தலைமயிரிலே கை நீட்டிய துச்சாதனனைப்,
போரிலே நெஞ்சத்தைப் பிளந்து அழித்து,
பகைவர் நடுவே தன் வஞ்சினத்தை நிறைவேற்றிய
பீமனைப் போல இருக்கிறதல்லவா என்று கேட்கிறாள்
ஒரு ஆயர் மகள் (-தொ 101)






அது மட்டுமல்ல, தன் தந்தையைக் கொன்றவன் தலையைத் திருகி
பழி தீர்த்தவன் போல ஒரு எருது கொன்றது
என்று அஸ்வத்தாமனைக் குறிப்பால் உணர்த்துகிறாள் அந்த ஆயர் மகள்.


இன்னொரு பாடலில்,
ஏறு தழுவியபின் இருந்த எருமன்றத்தின் நிலையை
மஹாபாரதப்போருடன் ஒப்பிடுகிறாள் ஒரு ஆயர் மகள்.
புரிபு மேற்சென்ற நூற்றுவர் மடங்க,
வரிபுனல் வல்வில் ஐவர் அட்ட
பொருகளம் போலும்  (-தொ 104)
என்னும் வரிகளில்
நூற்றுவரான கௌரவர்களும்,
ஐவரான பாண்டவர்களும் மோதிக் கொண்ட போர்க்களம் போல
அந்த எரு மன்றம் இருந்தது என்று சொல்லப்படுகிறது.


இவை எல்லாம் இந்தப் பாடல்கள் எழுதிய புலவரான நல்லுருத்திரனாரது
கற்பனை என்று சொல்லலாம்.
ஆனால் இந்தப் பாடல்கள் அனைத்துமே
அவர் இருந்த காலத்து மக்களது
சொல், செயல், எண்ணம், பேச்சு வழக்குக்ளையே பிரதிபலிப்பவை.
மக்கள் பேசின கதைகளை,
மக்கள் பேசின உவமைகளைப் புலவர் எடுத்தாண்டுள்ளார்.
மஹாபாரதப் போரின் தாக்கம் இந்த அளவுக்கு அவர்களிடம் எப்படி வந்திருக்கும்?


ஆரியத் தெய்வங்கள் !
கலித்தொகையில் மட்டுமல்ல,
சிலப்பதிகார ஆய்ச்சியர் குரவையிலும்,
காளைகள் நிறத்தைச் சொல்கையில்
சிவனும் முருகனும் வருவார்கள்,
மற்றபடி பாடல் முழுவதும்
மஹாபாரதப் பின்னணி அல்லது திருமால் பெருமைகள் மட்டுமே காணப்படுகின்றன.

ஏறு தழுவும் நிகழ்ச்சி முழுவதுமே -
ஆரியக் கடவுள் என்று திராவிடவாதிகள் சொல்கிறார்களே,
அவர்களைச் சொல்லியே அமைகின்றன.


ஏறு தழுவும் முன்
நீர்த்துறைகளிலும், ஆல மரத்தடியிலும், பழைய வலிவுடைய மரத்தடியிலும்
உறையும் தெய்வங்களுக்கு முறையாக வழிபாடு செய்து விட்டுப்,
பிறகுதான் காளையை அடக்கப் பாய்ந்தார்கள் (-தொ 101).
நீர்த்துறைகளில் திருமால் பள்ளி கொண்டிருப்பார்.
ஆல மரத்தடியில் பிள்ளையார் இருப்பார்.
தொல் மரங்கள் அடியில், பாம்புக் கடவுளும், துர்கையும் இருப்பார்கள்.


பாம்புக் கடவுளைப் பற்றியும் ஒரு பாடல் கலித் தொகயில் இருக்கிறது.
ஏறு தழுவும் ஆயர் மகன் ஒரு வெள்ளை எருதின் மீது பாய்ந்து
அதை அடக்கப் பார்க்கிறான்.
அவனை, அருகில் இருக்கும் காரி (கரிய எருதுதிருமாலுடன் ஒப்பிடப்பட்ட எருது)
இடை விடாது குத்துகிறதாம்
அதைப் பார்க்க நிலவை விழுங்க முயன்ற பாம்பினை
விடுவிக்கும் நீல நிற வண்ணனைப் (கிருஷ்ணன்) போல இருந்ததாம்.
இங்கு ராஹுவால் சந்திரன் பீடிக்கப்படுவதையும்,
அந்த கிரகணம் விட்டு விலகுவதையும்
அந்த ஆயர் மகள் ஒப்பிடுகிறாள். (-தொ 104).


ஏறு தழுவுதல் முடிந்து, குரவையாடி முடிக்கும் போது
ஞாபகமாகப், பாண்டிய மன்னனைப் போற்றி,
அதற்கடுத்து, திருமாலைப் போற்றி முடித்தார்கள்.
முல்லை நிலத்துக்கு மாயோன்தான் கடவுள்.
·         தமிழ் நாட்டு ஆயர்கள் தாங்கள் அடக்கிய காளைகளுக்கு கிருஷ்ணன் முதலான ஆரியத் தெய்வங்களின் பெயரிட்டு, அந்த தெய்வங்களையே தொழுது ஏறு தழுவினார்கள். அப்படியென்றால், ஏறு தழுவுதல் சின்னம் கிடைத்துள்ள சிந்து சமவெளிப் பகுதி மக்கள், எந்தத் தெய்வத்தைத் தொழுது ஏறு தழுவினார்கள்?


·         தமிழ் நாட்டு ஆயர்கள் மரபு வழியாகச் செய்கிறோம் என்கிறார்களே, அந்த மரபு சிந்து சமவெளியிலிருந்து தொடர்ந்து வந்ததா? அது சரியே என்றால், சிந்து சமவெளியிலும் இந்தக் கடவுளர்களைத் தொழுது, திருமாலைப் பாடி குரவை ஆடியிருக்க வேண்டுமே?


·         அல்லது, மரபு வழியாக இவர்கள் செய்து வந்தது தென்னன் தேசத்தில் இருந்தபோது செய்தவைதான் என்றால், அவர்களை எதற்காகச் சிந்து சமவெளியுடன் இணைக்க வேண்டும்? எப்படி இணைக்க முடியும்?

அப்படியல்ல,
வேறு வழியாக ஒரு பகுதி தமிழர்கள்
சிந்து சமவெளிப் பகுதியில் புகுந்தார்கள்
அவர்களே பிற்காலத்தில் ஆரியர்களால் விரட்டப்பட்டு
தமிழ் நிலங்களுக்கு வந்தார்கள் என்றும் சிலர் கூறுகின்றனர்.
அதை ஏற்றுக் கொண்டாலும்,
அங்கிருந்த (சிந்து சமவெளியிலிருந்த) மக்களை
ஆரம்ப கால மூலத் தமிழர்களாகச் சொல்வார்களா?
அல்லது தென்னன் தேசத்திலிருந்து வந்த மக்கள்
மூலத்தமிழர்கள் என்பார்களா?  


·         தென்னன் தேசத்திலிருந்து வந்த மக்கள் மூலத்தமிழர்கள் என்றால்,
அவர்கள் வழக்கில் மஹாபாரதக் கதைகள் எப்படிப் புகுந்தன?
·         ஆயர்கள் குறித்த எந்தப் பாடலிலும், திருமால் மட்டுமல்ல,
கிருஷ்ணனும் இருக்கிறானே, அது எப்படி?
·         முல்லை நில ஆயர்கள் ஏறு தழுவுதலையும்,
குரவைக் கூத்தையும் மரபு வழியாகச் செய்வதாகச் சொல்கிறார்கள்.
·         அவர்கள் மரபு எங்கே செல்கிறது?
கிருஷ்ணன் வாழ்ந்த காலத்திற்கா


தமிழ் நாட்டுடன் கிருஷ்ணன் தொடர்பு.


கிருஷ்ணனும் ஏறு தழுவியே மணந்துக் கொண்டான்.
மென் தோளி காரணமா வெங்கோட்டேறு ஏழுடனே என்று
நம்மாழ்வார் பெரிய திருவந்தாதியில் (48) கூறுகிறார்.
அதாவது ஏழு எருதுகளை அடக்கி
நப்பின்னை என்னும் ஆயர் குல மகளைக்
கிருஷ்ணன் மணந்து கொண்டான்.
அந்தப் பெண் உபகேசி என்பவள் என்று நல்கூர் வேள்வியார் சொன்னதை
முந்தின கட்டுரையில் கண்டோம்.
அவளே நப்பின்னை என்று திருக்குறளுக்கு உரை எழுதிய நேமிநாதர் கூறுகிறார்.
அவள் தமிழ் நாட்டுப் பெண்.


(நப்பின்னையைப் பற்றிய பிற குறிப்புகளுக்கு
இந்த இணைப்பில் உள்ள கட்டுரையைப் படிக்கவும்:-



கிருஷ்ணன் தமிழ்நாட்டு மாப்பிள்ளையாக இருந்திருக்கிறான்.
அவன் தமிழ் நாட்டுக்கு வந்து போனதைப் பற்றி
இறையனார் அகப்பொருள் உரையில் ஒரு சான்று இருக்கிறது.
இடைச் சங்கத்தில்துவரைக் கோமான் எனப்படும் துவராவதி அரசனான கிருஷ்ணன்
பங்கெடுத்துக் கொண்டிருக்கிறான். (பகுதி 39)
அப்படி வந்த ஒரு சமயத்தில் அவன் நப்பின்னையை மணந்திருக்க வேண்டும்.
அதை மெய்ப்பிக்கும் விதமாக ஒரு புறச் சான்று இருக்கிறது


மெகஸ்தனிஸ் குறிப்பும், கிருஷ்ணன் மகளும்.

கி.மு 3 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த
கிரேக்க யாத்திரிகரான மெகஸ்தனிஸ் என்பவர்
இண்டிகா என்னும் தனது நூலில் தாம் மதுரைக்கு வந்ததாக எழுதியுள்ளார்.
அதில் கிருஷ்ணனுக்கும், மதுரைக்கும் ஒரு தொடர்பைக் குறிப்பிட்டுள்ளார்.
கிருஷ்ணன் பாண்டையா என்னும் தன் மகளைத்
தென் கடலோரம் இருந்த ஒரு நாட்டில்,
365 கிராமங்களுடன் கூடிய இடத்தில் குடியமர்த்தினார் என்றும்,
அவளது குடும்பத்துக்கான பால், தயிர் தேவைகளை
தினம் ஒரு கிராமமாக,
இந்த 365 கிராம மக்களும் வருட முழுவதும்
கவனித்துக் கொள்ள வேண்டும் என்றும் ஏற்பாடு செய்திருந்தார்
என்கிறார் மெகஸ்தனிஸ்.


இந்த விவரத்தை மெய்ப்பிக்கும் வண்ணம், சிலப்பதிகாரம்,
ஆய்ச்சியர் குரவையின் ஆரம்பத்தில், ஒரு விவரம் வருகிறது.
ஆயர் மகளான மாதரி என்பவள்,
பாண்டியன் கோயிலுக்கு அன்றைக்கு நெய் தருவது தங்களுடைய முறை என்கிறள்.


வெண் குடைப் பாண்டியன் கோயிலில்
காலை முரசங் கனை குரல் இயம்புமாகலின்
நெய்ம்முறை நமக்கின்று ஆம் என்று..” கூறுகிறாள்.

இப்படி முறை வைத்துக் கொண்டு
நெய் போன்ற பசு மாட்டுப் பொருள்களைத் தருவது
ஏதேனும் ஒரு அரசாணையில்தான் நடக்க முடியும்.
தெய்வம் குடியிருக்கும் கோயிலுக்குத் தருவதாகச் சொல்லாமல்,
பாண்டியன் கோயிலுக்கு என்று சொல்லவே
அரச குடும்பத்துக்குத்  தருவதாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.


இதனால், நப்பின்னையின் மூலம்
தனக்குப் பிறந்த பெண்ணை
ஒரு பாண்டிய அரசனுக்குக் கிருஷ்ணன் மணம் முடித்திருப்பான்
என்று தெரிகிறது.
தென்கடலோரத்தில் இருந்த இடம் எது என்று சொல்லப்படவில்லை.
கிருஷ்ணன் இருந்தபோது கபாடபுரம் தலைநகரமாக இருந்த்து.
ஆனால் மாதரி இருந்தது மதுரையாக இருக்கவே,
அந்த மகளை மதுரையில் குடியமர்த்தியிருக்க வேண்டும்.


பாண்டியன் கோயில் என்று மாதரி சொன்னது,
அரசுக் கட்டிலில் இருந்த பாண்டியன் நெடுஞ்செழியனாக
இருக்க அவசியமில்லை.
பொதுவாகவே, அரசனுடைய சகோதரர்கள்
நாட்டில் ஆங்காங்கே சில பொறுப்புகளுடன் வாழ்ந்து இருக்கின்றனர்.
ஆராயாமல் கோவலனைக் கொன்ற பாண்டியன் நெடுஞ்செழியன்
மதுரையில் அரசு வீற்றிருந்த போது,
அவன் தம்பி வெற்றி வேல் செழியன் கொற்கையில் இருந்தான்.
அதாவது அந்தப் பகுதியை நிர்வகிக்கும் பொறுப்பில் அவன் இருந்திருக்கிறான்.
நெடுஞ்செழியன் இறந்து விட்ட பிறகு,
இந்தத் தம்பியே மதுரையில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறான்
என்கிறது சிலப்பதிகாரம். 


இதன் மூலம், அரச குடும்பத்தவர் ஆங்காங்கே
பொறுப்பேற்றுக் கொண்டிருக்கின்றனர் என்று தெரிகிறது.
கிருஷ்ணன் காலத்தில் தற்போதைய மதுரை, தலை நகரமாக இல்லை.
ஆனால் அங்கு ஒரு பாண்டிய வம்சத்தவன்
இருந்திருக்கக் கூடிய சாத்தியம் நிறையவே உண்டு.
3 ஆ ஊழிக்குப் பின் தென்னவன் மதுரையைத் தலை நகரமாக்கிக் கொண்டபின்னும்,
இந்த வம்சத்தினர் தங்கள் பாரம்பரியத்தைத் தொடர்ந்திருப்பர்.

ந்த வம்சத்தில் வந்தவனுக்குத் ன் மகளை மணமுடித்து,
அவளது பால் தேவைகளைக் கவனித்துக் கொள்ள
சுற்று வட்டாரத்தில் இருந்த 365 கிராமங்களில்
ஆயர்களைக் குடியமர்த்தியிருக்கிறான்


கிருஷ்ணனது மகள் பெயர் பாண்டையா என்று மெகஸ்தனிஸ் கூறுகிறார்.
பாண்டையா என்னும் மகளது வம்சத்தில் வந்தவர்கள் ,
பாண்டையார் என்றழைக்கப்பட்டு,
அந்தப் பெயர் நாளடைவில் மறுவிவாண்டையார்என்றாகி இருக்கலாம்.
கள்ளர் என்னும் பெயர்க் காரணத்தை நாம் ஆராயும்போது,
மேலும் சில விவரங்களைக் காணலாம்


அந்த 365 கிராமங்களுள் ஒன்றில் சிலப்பதிகார மாதரி வாழ்ந்திருக்கிறாள்.
அந்த மாதரியின் மூதாதையர் கிருஷ்ணன் பிறந்த மதுரையிலிருந்தோ,
அல்லது துவாரகையிலிருந்தோ வந்தவர்களாக இருக்கலாம்.
அவளைப் போல மீதம் இருக்கும் 364 கிராம மக்களும்
கிருஷ்ணனுடன் தொடர்பு கொண்ட வட இந்தியப் பகுதியிலிருந்து வந்திருக்கலாம்.
அல்லது அவர்களுள் பலர் மதுரையிலேயே இருந்தவர்களாகவும் இருந்திருக்கலாம்.


பசு வளர்க்கும் கலாசாரம் இந்தியா முழுவதும்
10,000 ஆண்டுகளுக்கு முன்பே இருந்தது என்று மரபணு ஆராய்ச்சிகள் கூறுவதால்,
தமிழ் நாட்டில் வழி வழியாக வாழ்ந்த ஆயர்களும் இருந்திருப்பார்கள்.
உதாரணமாக சிலப்பதிகார நாயகனான
கோவலனது பெயர் ஆயர் குலப்பெயராகும்.

கோ என்றால் அரசன் என்றும் பொருள்.
ஒரு கூட்டத்தின் தலைவனுக்கும் கோ என்ற பெயர் பொருந்தும்.
கோவினத்தாயர் மகன்ஆனேறு தழுவினதைப் பற்றிக் கலித்தொகை கூறுவதால்,
மூத்த அல்லது தலைமை தாங்கின ஆயர்கள் வம்சத்தினர்
கோவலர் என்று அழைக்கப்பட்டிருக்க வேண்டும்.
இவர்கள் பசுக் கூட்டங்களுக்குச் சொந்தக்காரர்களா இருக்க வேண்டும்.
கண்ணகியின் கணவன் கோவலன் என்ற பெயரைக் கொண்டவனாதால்,
அவன் மரபினர் ஆதியில், ஆயர்களாக இருந்திருக்க வேண்டும்.
பசுக்கள் தந்த செல்வதால், பிறகு வணிகர்களாக ஆகியிருக்க வேண்டும்

அவர்கள் புகார் நகரத்தில் வாழ்ந்தவர்கள்.
புகார் மகர மக்கள் தங்கள் நகரை விட்டு நீங்காத
பழங் குடியினர் என்று சொல்லப்பட்டதால் (பகுதி 18)
வணிகர்களான கோவலன் குடும்பத்தினர்,
ஆதியில் ஆயர்களாக இருந்திருப்பார்கள் என்பது சாத்தியமாகிறது. 


அப்படி இருந்த குடும்பத்திலிருந்து வந்த கண்ணகி,
மதுரை நகர மாதரியின் ஆய்ச்சியர் குரவையில் பங்கெடுக்கவில்லை.
’கண்ணகியும் காண யாம் ஆடுவோம்’ என்று மாதரி கூறவே,
கண்ணகிக்குப் பரிச்சயமில்லாத் ஆட்டமாக,
அல்லது அவள் வாழ்ந்த புகார் இருந்த சோழ நாட்டில் இல்லாத
ஒரு ஆட்டமாக அது இருந்திருக்க வேண்டும்.
ஆய்ச்சியர் குரவையிலும், முல்லைக் கலியிலும்
கிருஷ்ணன் சரிதம் கலந்திருக்கவே,
முல்லை நில மரபுகளும்,
ஆயர்கள் எனப்பட்டவர்களும்
கிருஷ்ணனுடன் தொடர்பு கொண்டவர்களாக இருக்க வேண்டும்.
இதற்கு மாறாக கோவலர், இடையர் போன்றவர்கள்,
பாண்டிய நாடல்லாத பிற தமிழ்ப் பகுதிகளில்
வாழ்ந்த ஆயர்களாக இருக்க வேண்டும்.



3 ஆம் ஊழிக்கு முன்பே ஆயர்கள்
தென் கடல் பகுதிகளில் இருந்திருக்கிறார்கள்.
ஆனால் அங்கே முல்லை நிலம் இல்லை.
3 ஆம் ஊழிக்குப் பின்பு ஏற்பட்ட ஐந்திணைகளில்தான்  
முல்லை நிலம் சொல்லப்படுகிறது,
அந்த நிலத்துக்குத் தெய்வமாக மாயோன் சொல்லப்படுகிறான்.
3 ஆம் ஊழி ஏற்பட்டு 3500 ஆண்டுகளே ஆகின்றன.
ஆனால் கிருஷ்ணன் தோன்றி 5000 வருடங்களுக்கும் மேல் ஆகிவிட்டன.
இதன் காரணமாக
3500 ஆண்டுகளுக்கு முன் ஏற்படுத்தப்பட்ட
முல்லை நிலக் கலாசாரத்தில்
கிருஷ்ணனது தாக்கம் நிச்சயமாக இருக்கும்.
ஆயர் மரபுகள் பலவும், கிருஷ்ணனால் உண்டாக்கப்பட்டதாகவோ
கிருஷ்ணனால் குடியமர்த்தப்பட்டவர்களாலோ
முல்லை நிலத்திற்கு வந்திருக்கிறது.


சிலப்பதிகாரக் காலக்கட்டத்தில் மதுரையில் வாழ்ந்த மாதரி என்னும் ஆயர் மகள்
தனக்கு நெய் முறைமை இருக்கிறது என்று சொல்லவே,
அவள் கிருஷ்ணன் வாழ்ந்த இடங்களிலிருந்து
குடி பெயர்ந்தவளாக இருக்க வேண்டும் என்று கூறினோம்.
அதை உறுதி செய்யும் விதமாக ஒரு விவரத்தைச் சிலப்பதிகாரம் தருகிறது.



கிருஷ்ணனைப் பற்றிய பழைய நினைவுகள்!

கோவலன் கொலையுண்டபோது சில இயற்கை உற்பாதங்கள் தோன்றின.
கோவலனுக்கும், கண்ணகிக்கும் இருக்க இடம் கொடுத்த மாதரி
அவற்றைக் கண்டு கவலைப்படுகிறாள்.
குடத்திலிட்ட பால் உறையவில்லை.
உறியில் வைத்த வெண்ணை உருகவில்லை.
ஆனேற்றின் கண்ணிலிருந்து நீர் சொரிந்த்து.
ஆட்டுக் குட்டிகளும் துள்ளி விளையாடவில்லை.
பால் கறக்க வேண்டிய பசுக்கள் மெய் நடுங்கி அரற்றின.
அவற்றின் கழுத்தில் கட்டப்பட்ட மணிகள் தெறித்து விழுந்தன.
இவையெல்லாம் ஏதோ துன்பம் வரப்போவதைப் பறை சாற்றுகின்றன.


இதை நீக்க வாலசரிதை நாடகங்களில்
தன் தமையனுடனும் (பலராமன்),
தன் பின்னை பிறந்தவளோடும் (சுபத்திரை)
எரு மன்றத்தில் முன்பு மாயவன் (கண்ணன்) ஆடிய
வாலசரிதைஆடல்களை நாமும் ஆடலாம்.
அதனால் துன்பம் நீங்கும் என்கிறாள்.


வாலசரிதை என்பது பாலசரிதை என்பதாகும்.
இது கிருஷ்ணனது பால்ய லீலைகளைக் கூறுவது.
இது கிருஷ்ணனது வாழ்க்கையைச் சித்தரிக்கும் ஹரிவம்சத்தில் காணப்படுவது.
இதை பாஸா என்பவர் பால சரிதா என்னும் பெயரில்
சமஸ்க்ருத நாடகமாக ஆக்கினார்.
அவரது காலம் கி.மு. 2 ஆம் நூற்றாண்டுக்கும் முற்பட்டது.
சிலப்பதிகாரம் அந்தக் காலக் கட்டத்துக்கு அருகில் வருகிறது.
எனவே, பால சரித நாடகம் அந்தக் காலக் கட்டத்தில் (2000 ஆண்டுகளுக்கு முன்)
தமிழ் நாட்டிலும், ஆயர்கள் மத்தியிலும் பிரபலமாகி இருக்கிறது  
என்று ஊகிக்கலாம்


ஆனால் சிலப்பதிகார ஆய்ச்சியர் குரவையும்,
கலித்தொகை குரவைக் கூத்தும்,
பாலசரிதத்திலிருந்து மாறுபடுகிறது.
பாலசரிதம் என்பது நாட்டிய நாடகமாகும்.
பாஸாவின் அந்த நாடகமும், அது போன்ற பிற சமஸ்க்ருத நாடகங்களும்
கேரளாவில் “கூடியாட்டம்” என்ற பெயரில் இன்றும்
நாட்டிய நாடகங்களாக நடத்தப்படுகின்றன.




இவை 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஆடப்பட்டு வருகின்றன.
இந்தப் பழமையை யுனெஸ்கோ நிறுவனமும் அங்கீகரித்துள்ளது.

ஆனால் மாதரி ஆயர் பெண்களுடன் ஆடின வாலசரிதை,
இப்படிப்பட்ட நாட்டிய நாடகமல்ல.
இது குரவைக் கூத்து எனப்பட்டது.
குரவைக் கூத்து என்பது 7 அல்லது 9 பேர் கை கோர்த்து ஆடும் நடனமாகும்.
அப்படி ஒரு நடனத்தையே சிலப்பதிகாரத்தில் காண்கிறோம்.
இதன் ஆரம்பம் கிருஷ்ணன் காலத்துக்கே செல்கிறது.


ஹரிவம்சத்தின் 89 ஆவது அத்தியாயத்தில்
ஹல்லிசாகா என்னும் நடனம் சொல்லப்படுகிறது.
ஆய்ச்சியர் குரவை அதை ஒத்து இருக்கிறது.
அந்த நடனத்தை கோகுலத்து எருமன்றத்தில்
கிருஷ்ணன் தன் தோழர், தோழிகளுடன் ஆடினான்.
நடுவில் கிருஷ்ணன் நின்று கொள்ள
அவனைச் சுற்றி கோபியரும், கோபிகைகளும்
கை தட்டியும், கை கோர்த்தும் ஆடினார்கள்

அதில் கையில் கோல் வைத்து ஆடினதும் உண்டு என்று
கிருஷ்ணரது நடனங்களை ஆராய்ச்சி செய்துள்ள
ஹிஸ்டரி ஆஃப் இந்தியன் தியேட்டர் ,
டான்ஸ் யலெக்ட்ஸ் ஆஃப் இந்தியாஎன்னும் நூல்கள் கூறுகின்றன.
அதாவது வட்டமாக சுற்றிக் கொண்டு ஆடும் கோலாட்டம்
என்னும் நடனமும் கிருஷ்ணன் ஆடியதே.


இதற்கு ஈடான ஒரு நடனமும் தமிழில் கூறப்பட்டுள்ளது.
அது அல்லியக் கூத்தாகும்.
ஹல்லிசாகா என்பதே அல்லியம் என்றாகி இருக்க வேண்டும்.


சிலப்பதிகாரத்தில் மாதவி 11 வகை நடனங்கள் ஆடுவாள்,
அதில் ஒன்று அல்லியம் என்னும் நடனம்.
அதை முதலில் ஆடியவன் கிருஷ்ணன்.
கம்சனது யானையான குவலயாபீடம் என்னும் யானையை கிருஷ்ணன் வென்றான்.
அதன் கொம்பின் மீது (தந்தம்) கிருஷ்ணன் நடனமாடி,
அந்தக் கொம்பை உடைத்து யானையைக் கொன்றான்.
அந்த யானையைக் கொன்ற வெற்றியை நடனமாக ஆடினான்.
அதுவே அல்லியக் கூத்து ஆகும்.
இது தமிழ் நாட்டிய வகைகளில் ஒன்றாகச் சொல்லப்பட்டுள்ளது.


யானையின் தந்தத்தைக் கொட்டி கோலாட்டம் ஆடியிருக்க வேண்டும்.
அதுவே தண்டா என்றும், இன்றைக்கு தண்டியா என்றும்
குஜராத்தியர் மத்தியில் ஆடப்படுகிறது.
இந்த நடனமும், ஹரிவம்சம் கூறும் நடனமும் ஒத்திருக்கிறது
என்று மேற்சொன்ன நடன ஆராய்ச்சி நூல்கள் தெரிவிக்கின்றன.
ஹரிவம்சம் கூறும் முறையில்,
கிருஷ்ணன் கோபியர்களுடன் ரசம் ததும்ப ஆடிய ஆட்டம் ஹல்லிசாகா என்பது.
தைப் போன்ற ஆட்டத்தை அரச குடும்பத்தினரும் ஆடினார்கள்.
கிருஷ்ணன் ஆடின ஆட்டத்தை ராஸ் என்றும்,
அரசர்கள் ஆடின ஆட்டத்தை சாலிக்யம் என்றும் அழைத்தார்கள்.
ராஸ் என்றால் சமஸ்க்ருத்தில் கூட்டம் என்று பொருள்.
ஜோதிடக் கட்டங்களை ராசி என்கிறோமே,
அந்தச் சொல் ராஸ் என்னும் சமஸ்க்ருதச் சொல்லிலிருந்து உண்டானது.
நக்ஷத்திரங்கள் கூடி இருக்கும் அமைப்பாதலால் அதற்கு ராசிச் சக்கரம் என்று பெயர்.
எல்லோரும் கூடியிருந்து, ஒன்றாக ஆடவே
கிருஷ்ணன் ஆடிய ஆட்டம் ராஸ் என்று சொல்லப்பட்டது.





அரசர்கள் ஆடிய சாலிக்கிய நடனம் பிற்காலத்தில்
சாக்கியக் கூத்தாகப் சொல்லப்பட்டிருக்க வேண்டும்.
ஏனெனில் பாசாவின் பால சரிதை போன்ற நாட்டிய நாடகங்களையும்,
சாக்கியக் கூத்தையும் இன்றும் கேரள நாட்டவர்கள்
கூடியாட்டம் என்னும் பெயரில் ஆடி வருகின்றனர்.


ஆய்ச்சியர் ஆடிய குரவைக் கூத்து, நாட்டிய நாடகம் அல்ல.
பாலசரிதை என்று மாதரி சொன்னது,
ஹல்லிசாகா என்னும் அல்லியக் கூத்தாக இருக்க வேண்டும்.
எருமன்றத்தில் கண்ணன் ஆடிய கூத்தை ஆடுவோம் என்று மாதரி சொல்லவே,
கண்ணனுடைய காலத்தில் வாழ்ந்த ஆயர்கள் பரம்பரையில்
மாதரி வந்திருப்பாள் என்று தெரிகிறது.
5000 ஆண்டுகளுக்கு முன்பே
வட மதுரைப் பகுதிகளில் இருந்த ஒரு ஆயர் குழு
தமிழ் நாட்டு மதுரைக்கருகே குடியமர்ந்திருக்கிறது
என்று இதன் மூலம் தெரிகிறது.
இவர்கள் கண்ணன் மகள் பாண்டையாவின் ஆளுகைக்குக் கீழ் வாழ்ந்திருக்கின்றனர்.


தமிழுக்கு ஒரு கூத்து முறையைக் கொடுத்து,
அதை அவன் வாழ்ந்த காலம் முதலே தமிழ் மக்கள்
ஆடி வந்திருக்கின்றனர் என்றால்,
கிருஷ்ணன் தமிழுடனும்,
தமிழ் மக்களுடனும் அந்நியப்படவில்லை என்று தெரிகிறது.
கிருஷ்ணன் வாழ்ந்த வடமதுரை, துவாரகை தொடங்கி,
தமிழ் நாட்டு முல்லை நிலம் வரை,
அந்தக் கிருஷ்ணனைத் துதித்தே ஆயர் மக்கள் வாழ்ந்து வந்திருக்கின்றனர்.
பாரதம் முழுவதும் ஒரே கலாசாரமாக இருந்திருந்தால்தான் இது சாத்தியாமாகும்.
இதை ஆரியத் திணிப்பு என்றோ,
ஆரிய- திராவிட வேற்றுமை என்றோ சொல்ல இடமில்லை.


ஆயர் ஆடும் ஆட்டம் மட்டுமல்ல,
அரசர்கள் ஆடிய ஆட்டமும் பாரதமெங்கும் பொதுவாக இருந்திருக்கிறது.


சமஸ்க்ருதத்தில் எழுதப்பட்டுள்ள ஹரி வம்சத்தில்
அரசர்கள் கை கோர்த்துக் கூடி ஆடும் ஆட்டம் சொல்லப்பட்டுள்ளது.
அது போல ஒரு ஆட்டம் தொல்காப்பியத்திலும் சொல்லப்பட்டுள்ளது.
போரில் வெற்றி பெற்ற மன்னன்,
தேர்த்தட்டின் முன்னால்,
தனது படைத்தலைவர்களுடன் கை கோர்த்து குரவை ஆடுவான்.
இதை முன் தேர்க் குரவை என்றார்கள். (புறத்திணை இயல் 75)
அப்பொழுது அரசனது வேல் படையையும், ‘
பகை நீக்கும் ஆற்றலையும் புகழ்ந்து பாடுவார்கள்.
அப்படி ஒரு காட்சி சிலப்பதிகாரத்தில்,
சேரன் செங்குட்டுவன் பெற்ற வெற்றிக்குப் பிறகு நடக்கிறது.
அதில் பாடப்படும் பாடலில் திருமால் பெருமை தான் சொல்லப்படுகிறது.
திருமால் அசுர்ர்களை வென்றதும்,
ராமன் இலங்கையை வென்றதும்,
கிருஷ்ணன் தேரோட்டி வென்றதும் பாடப்படுகின்றன. (கால்கோள் காதை)


அந்தச் சேர மன்னன் ஆடிய இடம் கங்கைப்புறம் ஆகும்.
அங்கு கனக- விஜயர்களைத் தோற்கடித்த பின்
அவன் தன் படைத் தலைவர்களுடன் ஆடுகிறான்.
அவனுடன் ஆடிய அந்தத் தலைவர்கள் யாராக இருக்கூடும்?
அவர்கள் கங்கைக் கரைப் பகுதிகளில் இருந்த
நூற்றுவர் கன்னர் எனப்படும்சதகரணிஎன்னும் மன்னர்களாக இருக்கக்கூடும்.

(அவர்கள் உதவியுடன்தான் சேர மன்னன் கங்கையைக் கடக்கிறான்). 


ஹரி வம்சத்தில், மன்னர்களும் குரவை ஆடினார்கள் என்று பார்த்தோம்.
அந்தப் பழக்கம் வட இந்தியாவில் கிருஷ்ணன் காலத்திலேயே இருந்தது.
அந்தப் பகுதியைச் சேர்ந்த மன்னர்களாதலால்,
நூற்றுவர் கன்னரும் அந்த ஆடலில் பங்கேற்று இருக்கலாம்.
முன் தேர்க் குரவை போன்ற வழக்கங்கள்
பாரதம் தழுவிய வழக்கங்களாக இருக்க வேண்டும்.
.

இந்தப் பின்னணியில், ஏறு தழுதலையும்,
அதைத் தொடரும் குரவைக் கூத்தையும் காணும்பொழுது,
அந்த வழக்கங்கள்
கிருஷ்ணன் வாழ்ந்த 5000 ஆண்டுகளுக்கு முன்பே இருந்து வந்திருக்கிறது
என்று தெரிகிறது.
5000 ஆண்டுகளுக்கு முன் தோன்றின சிந்து சமவெளி நாகரிகத்தில்,
ஏறு தழுவுதலைக் காட்டும் ஒரு முத்திரை இருந்தால்,
அது கிருஷ்ணனது நினைவைத் தாங்கிய ஒரு சமூகமாகத்தான் இருக்க வேண்டும்.


ஒன்றை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.
கிருஷ்ணன் ஆண்ட துவாரகைப் பகுதிகளில்
இன்றுவரை ஹல்லிசாகாவும், தாண்டியாவும் நிலைத்து இருக்கின்றன.
2000 ஆண்டுகளுக்கு முன்பே
தமிழ் நாட்டிலும் அல்லியக் கூத்தும்
குரவைக் கூத்தும் கிருஷ்ணனை முன்னிட்டு நடந்திருக்கின்றன.

ஆனேறு தழுவுதலில்,
அந்த ஆயன் கிருஷ்ணனைப் போல இருக்கிறான்,
இந்த் ஆயர் மகன் கிருஷ்ணனைப் போல இருக்கிறான்
என்று ஒப்பிட்டு மகிழ்ந்திருக்கிறார்கள்.
அப்படியென்றால், கிருஷ்ணன் வாழ்ந்த காலக்கட்டத்துக்கருகே தோன்றிய
சிந்து சமவெளி மக்களிடையே
அவனது தாக்கம் இல்லாமல் இருந்திருக்குமா?


இதை மெய்ப்பிக்கும் விதமாக உள்ள சான்றுகளை
அடுத்த கட்டுரையில் காண்போம்.