ஞாயிறு, 23 செப்டம்பர், 2012

108. இரானியர்களும், ட்ரூயிடுகளும் பருகிய சோம பானம்!



ஆரியப் படையெடுப்பு என்று சொல்லிவிட்டால் மட்டும் போதுமா? இந்தியாவுக்கு வெளியிலிருந்து ஆரியன் வந்தான் என்பதை எப்பாடுபட்டாவது 'கண்டு பிடித்து' நிரூபிக்க வேண்டாமா? அந்த அவசியம் மாக்ஸ் முல்லர் போன்றவர்களுக்கு இருந்தது. அப்படி ஒரு நிரூபணத்தைத் தேடிய அவர்களுக்குக் கிடைத்த விவரம் 'சோம பானம்' என்பதே.


பாரதத்தில் எங்கு திரும்பினாலும், சோமன் இருந்தான் என்பது அவர்களுக்குப் பெரிதாகத் தெரியவில்லை. சோமன் என்னும் சந்திரன், அந்தச் சந்திரனைத் தலையில் சூடியதால் சோமநாதர் என்ற பெயர் கொண்ட சிவன், சோமனது பெயரால் சோம வாரம் என்னும் திங்கள் கிழமை, எந்தப் புராணத்திலும் சோமனைப் பற்றி ஏதேனும் ஒரு கதை, ஹோமங்களில் உயர்வானதான சோம யாகம், அந்த யாகம் செய்பவர்களுக்கு, சோமயாஜு என்ற குடும்பப்பெயர் இப்படி எத்தனையோ சொல்லிக் கொண்டே போகலாம். இவை எல்லாம் ஆங்கிலேயர் இந்தியாவுக்கு வந்த போது பிரபலமாக இருந்த பெயர்கள்.

 

பாரத நாட்டின் முதல் ஜோதிலிங்கம் சோமநாதபுர ஜோதிலிங்கமாகும். கஜினி முகம்மதுவில் ஆரம்பித்து, ஔரங்கசீப் வரை பல முகலாய மன்னர்களால் சூறையாடப்பட்டு, அழிக்கப்பட்ட ஆலயம் அது. ஆங்கிலேயர்களுக்கு அதைப் பற்றிய சரித்திர விவரம் நன்றாகவே தெரியும், அவர்கள் காலத்தில் அந்த ஆலயம் இருந்த நிலையைக் கீழுள்ள படத்தில் காணலாம்.





1869 –இல் சோமநாதபுர ஆலயம்.

 

சோமநாதர் என்னும் பெயரில் உள்ள சோமன் யார்?


சோம வாரத்தில் உள்ள சோமன் யார்?,


அவர்கள் பின்பற்றிய மண்டே என்னும் கிழமையிலும் சோமன் என்னும் சந்திரன் பெயர் வருகிறதே, அது எப்படி என்று ஆராய்ந்திருக்கலாம் அல்லவா?

அல்லது ஆங்கிலேயர்கள் இருந்த காலத்திலும் இந்தியாவில் சோமயாகங்கள் நடந்தனவே, அதைக் கொண்டாவது ஆராய்ந்திருக்கலாமே?


ஜான் ஸ்டீவென்சன் என்பவர் 1842 ஆம் வருடம் வெளியிட்ட சாமவேத மொழிபெயர்ப்பில், ஆங்கிலேயர்கள் மராத்தா நாட்டை ஆக்கிரமித்த காலத்தில் நாசிக், பூனா, சதாரா ஆகிய மூன்று இடங்களில் சோம யாகம் நடந்தது என்கிறார். அந்த யாகத்தில் சோம ரசத்தை இந்திரனுக்கும், ரிபுவுக்கும் அளிப்பார்கள். அதைக் கொண்டாவது சோம ரசம் என்றால் என்ன என்று ஆராய்ந்திருக்கலாமே?


 

இந்திரன்


ஆனால் அதெல்லாம் அவர்களுக்கு 'கிக்' ஏற்றுவது போல இல்லை. அதிலெல்லாம், குட்டையைக் குழப்புவதற்கு எந்த விவரமும் கிடைக்கவில்லை. ஆரம்பத்தில் மாக்ஸ் முல்லரும், சோம பானத்தை அசட்டையாக விட்டுவிட்டார். ஏனெனில் அது ஆபஸ்தம்ப சூத்திரத்தில் வருவது. அதனால் அது சூத்திர காலம், ஆனால் தனக்கு வேத காலம் தான் தேவை என்று அவர் கண்டு கொள்ளவில்லை.


இவர்களது காலப் பகுப்பே தமாஷாக இருக்கும். வேத காலம், உபநிஷத் காலம், இதிஹாச காலம், சூத்திர காலம் என்றெல்லாம் பிரித்துப் பார்த்துத்தான் இவர்கள் ஆராய்ந்தார்கள். இன்று வரை பாரத வரலாற்றை ஆராய்பவர்கள் அப்படித்தான் செய்து வருகிறார்கள். ஆனால் எந்த ஒரு காலக்கட்டத்திலும், இவை எல்லாமே ஒன்றாக இருந்தன. உதாரணமாக இதிஹாசம் என்று சொல்லப்படும் ராமாயணத்தில், ராமன் வாழ்ந்த காலத்தில் ரிக் வேத ரிஷிகளும் வாழ்ந்திருக்கிறார்கள்.  உபநிஷத்துக்களில் சொல்லப்படும்  ரிஷிகளது பெயரும் வருகின்றன. வேதாங்கங்களில் ஒன்றான கல்ப சூத்திரங்களும் இருந்திருக்கின்றன. இவற்றைத் தனித் தனியாகப் பிரிப்பது என்பது அபத்தமானது.

 

இது எப்படி இருக்கிறதென்றால், வருடம், அயனம், மாதம், பக்ஷம், வாரம் என்று ஒன்றுக்குள் ஒன்று காலம் இருக்கிறதல்லவா? அவற்றை அயன காலம், மாத காலம், பக்ஷகாலம் என்று பிரித்து, ஒரு விவரம் இந்த அயனத்தில் நடந்தது என்ற குறிப்பும், இன்னொரு விவரம் இந்த பக்ஷத்தில் நடந்தது என்ற குறிப்பும் இருந்தது என்றால் அது அயன காலத்தைச் சேர்ந்தது, இது பக்ஷ காலத்தைச் சேர்ந்தது, அயனத்துக்குப் பிறகுதான் பக்ஷம் வரும், அதனால், அயனக் குறிப்புடன் வரும் விவரம் முன்னால் நடந்தது, பக்ஷக் குறிப்புடன் வரும் விவரம் பின்னால் நடந்தது என்று சொல்வதைப் போல உள்ளது.


ஆரம்பத்தில் மாக்ஸ் முல்லர் சோம ரசத்தை சூத்திர காலம் என்று ஒதுக்கி விட்டார். ஆபஸ்தம்ப சூத்திரத்துக்கு தூர்தவஸ்வாமியின் உரையில் ஆயுர் வேத்த்தைப் பற்றிப் பேசும்போது சோம ரசத்தைப் பற்றிச் சொல்லியுள்ளார். அதனால் சோம ரசம் என்பது காலத்தால் பிற்பட்டது என்று அதை அலட்சியப்படுத்தி விட்டார்.



ஆனால் மாக்ஸ் முல்லர் காலத்தில் ஈரானில் பின்பற்றப்பட்ட அவெஸ்தன் மதத்தை ஆராய்ந்த ஐரோப்பியர்கள், அங்கு ஹவோமா (HAOMA)  என்ற பெயர் கொண்ட செடியை நசுக்கி, சாறு பிழிந்து வழிபாட்டில் பயன்படுத்தினார்கள் என்று சொன்னார்கள். அவ்வளவுதான், ஆரியன் வந்த வழியைக் கண்டுபிடிக்க இது ஒரு துருப்பு என்று எல்லோரும் அதில் முழுகி விட்டார்கள். மாக்ஸ் முல்லரும், 1888 ஆம் ஆண்டு  வெளியிட்ட BIOGRAPHIES OF WORD AND HOME OF THE ARYANS  என்னும் தனது வெளியீட்டில் THE ORIGINAL HOME OF THE SOMA என்று 20 பக்கங்களுக்கு எழுதி விட்டார். சோமம் எங்கிருந்து வந்ததோ அதுவே ஆரியன் இருந்த ஆரம்ப இடம் என்று சொல்வதே அவரது கருத்து.


ஆனால் ஈரானிய சோம ரசத்தை எங்கு, எப்படிப் பயன்படுத்தினார்கள் என்றும், பாரத நாட்டில் எங்கு, எப்படி பயன்படுத்தினார்கள் என்றும் இன்று வரை யாரும் ஆராயவில்லை. அதை ஆராய்ந்து சொல்ல எவருக்கும் விருப்பமில்லை. ஏனெனில் ஆராய ஆரம்பித்தால் அதற்கு முன்னோடி பாரத நாட்டில் இருக்கிறது என்பது எளிதில் தெரிந்து விடும்.


எந்த ஒரு வேத வழக்கத்தை எடுத்துக் கொண்டாலும், இந்திய- ஈரானிய வழக்கங்களை ஒப்பிடுதல் என்று சொல்லிக் கொண்டு, அது ஈரானில் இருக்கிறது என்று சொல்வதே இன்று வரை வழக்கமாக இருந்து வருகிறது.


அது போல வேத மரபில் உள்ள ஒரு சொல்லை எடுத்துக் கொண்டால் அது ஈரானிய மொழியில் அல்லது ஐரோப்பிய மொழியில் இருக்கிறது. அவற்றிலிருந்துதான் சமஸ்க்ருத்த்துக்கு வந்தது என்று சொல்வதும், அல்லது PROTO-INDO-IRANIAN  என்றும் INDO-EUROPEAN சொல் என்று சொல்வதும் வழக்கமாக இருக்கிறது.


சமஸ்க்ருத்த்தில் அதன் வேர்ச்சொல் எப்படிப் போகிறது அல்லது பாரதப் பண்பாட்டில் அதன் வீச்சு அதிகமாக இருக்கிறது என்ற ஆராய்ச்சியெல்லாம் தேவையில்லை. ஈரானைத் தாண்டித்தான் இந்தியாவுக்கு ஆரியன் வந்தான் என்று சொல்வதற்கு இந்த அணுகுமுறை உதவுகிறது.


இதற்குத் தலையாட்டுவதற்கு திராவிடவாதிகளும், செக்யுலர் வரலாற்று ஆராய்ச்சியாளர்களும் இருக்கவே இருக்கிறார்கள்.

 

ஆங்கிலேயர்கள் சோம ரசத்தை ஈரானில் தேடிப் பிடித்தார்களே, தங்களது நாடான இங்கிலாந்திலேயே அதன் சாயலில் ஒரு வழக்கத்தைக் கண்டு சொல்லியிருக்கலாமே?


ஆனால் சொல்லவில்லை.


ஏனெனில் இந்த சரித்திர ஆராய்ச்சியெல்லாம் வெளி நாடுகளில்தான்.

தங்கள் நாட்டில் கிடையாது.


தங்களுடைய சரித்திரத்தை அடித்து, நொறுக்கிக் கொன்று போட்டு விட்டுத்தான் அவர்கள் பிற நாடுகள் மீது ஆதிக்கம் செலுத்த வந்தார்கள்.


அவர்கள் நாட்டில் இருந்த கெல்டுகள், ட்ரூயிடுகள் வழக்கமெல்லாம் காட்டுமிராண்டி வழக்கங்கள். அவற்றை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று ஒழித்து விட்டார்கள், அதற்குத் தூண்டு கோலாக இருந்தது கிருஸ்துவம்தான். அதே கிருஸ்துவம் கொடுத்த மதமாற்ற வெறியில், நம் நாட்டு வரலாற்றையும் தங்கள் இஷ்டம் போலவே எழுதினார்கள்.


ஆனால் எந்த கிருஸ்துவம் அவர்களது மூதாதையர் மரபுகளை அழித்ததோ, அதே கிருஸ்துவம், அந்த மரபுகளையும், கருத்துக்களையும் திரித்து, தனது கருத்துக்களாக ஆக்கிக் கொண்டது. காரணம், மக்களைக் கிருஸ்துவர்களாக மாற்றினாலும், அவர்கள் வழிவழியாகப் பின்பற்றி வந்த பல வழக்கங்களை எளிதில் அழிக்க முடியவில்லை. அதனால் அவற்றைச் சற்று மாற்றி, அவையே கிருஸ்துவக் கருத்து என்று ஆக்கிக் கொண்டார்கள். அப்படி உருமாறின ஒரு வழக்கம்தான் ட்ரூயிடுகள்து சோம ரசம் ஆகும்.

 

இதைப் பற்றிப் பேசும் பொழுது, நாம் ஈரானிய ஹவோமாவையும் ஆராய வேண்டும். அப்பொழுதுதான் எது மூலம், எது காப்பி என்று தெரியும். இதற்கு நாம் வேத மரபில் இருந்து வந்த வழக்கத்தை முதலில் பார்ப்போம்.


சோமலதா என்னும் ஒரு மூலிகைச் செடியிலிருந்து சாறு பிழிந்து, எடுத்திருக்கிறார்கள். அதை இரண்டு வழிகளில் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஒன்று சோம யாகத்தில் அதை ஆஹுதி (யாகத் தீயில் இடுதல்) செய்திருக்கிறார்கள். மற்றொன்று அதைப் பருகியிருக்கிறார்கள்.


சோம யாகத்தில் காலை, மதியம், மாலை என்று மூன்று வேளைகளில் அதை நசுக்கிப் பிழிந்து காலையிலும், மதியத்திலும் இந்திரனுக்கும், மாலை யாகத்தில் ரிபுவுக்கும் படைத்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட வேள்வியை மதுக்கொள் வேள்வி என்று சேரன் செங்குட்டவனும் செய்திருக்கிறான் என்பதைச் சிலப்பதிகாரத்தின் மூலம் அறிகிறோம். இதையே சோமயாகம் என்று உரையாசிரியரும் கூறுகிறார். அதைச் செய்வதற்கு முன் சதுக்க பூதத்தை வஞ்சியுள் நிறுவி, பிறகு அந்த யாகத்தைச் செய்திருக்கிறான். இதனால் சதுக்க பூதத்தை பிரதிஷ்டை செய்த பிறகோ அல்லது சதுக்க பூதம் இருக்கும் இடத்திலோ இந்த வேள்வி செய்யும் வழக்கம் இருந்திருக்கிறது என்று தெரிகிறது.


'கொச்சிக்கு வடக்கே எட்டுக்கல் தொலைவில் உள்ள அழிந்துபட்ட பழைய வஞ்சிமாநகரப் பகுதியில்'  நல்ல வேலைப்பாடுகளுடன் கூடிய ஒரு மிகப் பெரிய கற்சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. அது சதுக்க பூத்த்தின் சிலையாக இருக்கலாம் என்று டா. மா. இராச மாணிக்கனார் கருதுகிறார். ('தமிழகக் கலைகளும், கல்வெட்டுகளும்' பக் – 51). இப்படி ஒரு சிலை இருக்கிறது என்பதே சிலப்பதிகார விவரங்கள் உண்மை என்பதைப் பறைசாற்றுகின்றது.


"சதுக்க பூதரை வஞ்சியுள் தந்து, மதுக் கொள் வேள்வி வேட்டோன்" என்று சிலப்பதிகாரம் கூறுவதால், (நடுகல் காதைவரிகள் 147 - 148). நான்கு தெருக்கள் கூடும் மையப் பகுதியில் சதுரமான இடத்தில் அந்த பூதத்தை நிறுவின கையோடு சோம யாக செய்யும் வழக்கமும் இருந்திருக்கிறது என்று தெரிகிறது இந்தச் சிலை நாட்டப்பட்டு 1800 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன.

 

இதற்கு முன் சதுக்க பூதம் என்னும் நாளங்காடி பூதத்தை, முசுகுந்த அரசன் இந்திரனிடமிருந்து பெற்று, பூம்புகாரில் நிறுவினான் என்று 11 ஆம் கட்டுரையில் கண்டோம்.




பூம்புகார்

 

சோழர்களது முன்னோனான சிபிச் சக்கரவர்த்திக்கும் முன்பே முசுகுந்தன் வந்துவிடுகிறான். அவன் காலம் இன்றைக்குப் 10,000 ஆண்டுகளுக்கும் முன்சென்று விடுகிறது. அந்த சதுக்க பூதத்தை நிறுவிய பின் அவன் மதுக் கொள் வேள்வியைச் செய்தானா என்ற கேள்வியும் வருகிறது. அதைப் பற்றி நமக்கு எந்த தகவலும் இல்லையென்றாலும், ஆரியப் பழக்கம் என்று சொல்லப்படும் சோம யாகம் தமிழ் அரசர்களால் தமிழ் மண்ணில் செய்யப்பட்டிருக்கிறது என்பதற்குச் சிலப்பதிகாரம் ஆதாரமாக இருக்கிறது.


அது மட்டுமல்ல, நாளங்காடி பூதம் என்று அந்தச் சதுக்க பூதத்துக்கு ஒரு இடப்பெயரும் இருப்பதால், அந்த இடத்தில் ஒரு அங்காடி இருந்திருக்கிறது என்று தெரிகிறது. நாளங்காடி என்பது காலைக் கடைத்தெரு என்று உரையாசிரியர் கூறுகிறார். நான்கு தெருக்கள் கூடும் நடுவில் இப்படிப்பட்ட சதுக்கமும், அங்கு அங்காடியும் அமைக்கப்பட்டால் அது ஒரு தலை நகரத்துடைய லக்ஷணம் ஆகும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. (மயமதம்- 9- 57-61, அர்த்த சாஸ்திரம் -2- 4-2).  

பூம்புகாரும், வஞ்சியும் தலைநகரங்களே. அதனால் அவை நடுவில் சதுக்கத்துடனும் முறைப்படி 4 பெருவாயில்கள், 8 சிறு வாயில்களுடன் கூடிய பெரு நகரங்களாக இருக்க வேண்டும். அப்படி ஒரு சதுக்கத்தில் பூதத்தை நிறுவின பின் சேரன் செங்குட்டுவன் சோம யாகம் செய்திருக்கிறான்.


1800 ஆண்டுகளுக்கு முன்னரே இப்படிப்பட்ட நகர நிர்மாணமும், சதுக்க பூத நிர்மாணமும், அதைத் தொடர்ந்து சோம யாகமும் சேர நாட்டில் நடந்திருக்கிறது. இப்படித்தான் ஈரான் நாட்டிலும் நடந்ததா என்றால், இல்லை என்பதே உண்மை.


ஒரு மூலிகைச் செடியைப் பிழிந்து சாறு எடுக்கும் வழக்கம் அங்கு இருந்திருக்கிறது. அதைப் பற்றி அவெஸ்தன் யஸ்னாவில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் வேத மரபில் உள்ளவாறு யாக வழக்கங்கள் அங்கு இல்லை. யஸ்னா மந்திரங்களைச் சொல்லி காலையிலும், மதியத்திலும் சாற்றினைப் பிழிந்து மொத்தம் மூன்று பாத்திரங்களில் ஊற்றினார்கள். அதில் ஒன்றில் இருப்பதைக் கிணற்றிலும், நீர்நிலையிலும் விட்டார்கள். மீதி இரண்டில் இருப்பதை மந்திரம் சொல்லும் இருவருக்குத் தந்தார்கள். இந்தச் சாற்றினை நோயாளிகளுக்கும், குழந்தைகளுக்கும் கூட கொடுத்தார்கள். ஊட்டமும், நோயின்றி வாழவும் இது உதவும் என்ற கருத்தின் அடிப்படையில் இவ்வாறு தரப்பட்டது.


வேத மரபிலும் சோம ரசம் என்பது அமிர்தம் என்று கருதப்பட்டது. சோம ரசத்தைப் பருகுவதால் சாவாமை ஏற்படும் என்ற கருத்துடன், யாகத்தில் இந்திரன் முதலான தேவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. விஷ்ணு சஹஸ்ரநாமத்திலும், விஷ்ணுவுக்கு "சோமப, அம்ருத, சோம' என்ற பெயர்கள் உள்ளன.



சோமத்தைப் பருகுபவனும், அந்த சோமமான அமிர்தமும், சோமனும் விஷ்ணுவே ஆவார் என்பது இதன் பொருள்.

சாவாமையையும், நோயின்மையையும் விரும்பும் மக்களும் சோம ரசத்தைப் பருகியிருக்கிறார்கள்.


இதில் இன்னொரு உட்கருத்தும் இருக்கிறது. சோமன் என்பது சந்திரனது பெயர். அவன் நீருக்கு அதிபதி. நல்ல நீர் வளம் இருந்தால்தான் உணவு உற்பத்தி பெருகும். நோயில்லாத நீண்ட ஆயுளுக்கு நல்ல உணவு தேவை. அந்த உணவு உற்பத்திக்கு உதவும் நீர் வளத்தைத் தருவது மேகமாகும். அதனால் வேத மரபில், சந்திரனது மனைவியாகச் சொல்லப்படும் ரேவதி நக்ஷத்திரத்தில் சூரியன் சஞ்சரிக்கும் பங்குனி மாதத்தில் சோம யாகத்தைச் செய்து, அதில் சோம ரசத்தை விடுவார்கள். அப்படிச் செய்யப்பட்ட யாகத்தின் முடிவில் நல்ல மழை பெய்யும், அதனால் உணவுப் பெருக்கமும், நாட்டு வளனும் பெருகும் என்பதே இந்த யாகத்தின் கருத்தாகும். இதை இன்று வரை இந்தியாவில் செய்து வருகிறார்கள். சமீபத்தில் கேரளாவிலும் செய்யப்பட்டது.



 

இப்படிப்பட்ட விரிவான கருத்துக்களை அரைகுறையாகத் தெரிந்து கொண்டு செய்தால் எப்படி இருக்குமோ, அப்படித்தான் ஈரானிய ஹவோமா இருக்கிறது. அந்த நாட்டில் மழைக்கு வழியில்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். பருவ மழை பெய்யக்கூடிய பாரத நாட்டில்தான் இந்த யாகம் முதன் முதலில் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில் மழை பெய்யும் காலம், சந்திரன், சூரியனது சாரம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த யாகத்தின் காலம் தேர்ந்தெடுக்கப்படுகிறது. இந்த விவரங்கள் ஈரான் நாட்டுக்கு உதவாது. ஆனால் நீர் வளம் பெருக இந்த யாகமும், அதில் சோமரசம் விடுதலும் உதவும் என்ற கருத்தைத் தெரிந்து கொண்ட, அல்லது அந்தக் கருத்துடன் ஈரான் பகுதிக்குச் சென்றவர்கள், வராத பருவ மழையை வேண்டிக் கொண்டிராமல், நீர் நிலைகளில் அந்த ரசத்தை விட்டிருக்கின்றனர். இதனால் எந்த அளவுக்கு அந்த நீர் நிலைகளில் நீர் வளம் பெருகி இருக்கும் என்பது கேள்விக் குறியே. அதனால் தானோ என்னவோ, இந்த வழக்கம் அதிக நாள் தொடரவில்லை.


இந்த இடத்தில் 31 ஆவது கட்டுரையைத் திருப்பிப் பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.  ஆரிய- தஸ்யு சண்டை என்று தவறாகச் சொல்லப்பட்ட பஞ்ச மானவர் சண்டையில், பாரதத்தின் வடமேற்குப் பகுதிகளுக்கு த்ருஹ்யுவும், மேற்குப் பகுதிகளான ஈராந் ஈராக் பகுதிகளுக்கு அநுவும் சென்றனர் என்று பார்த்தோம். அசுரன் என்று கருதப்பட்ட அநுவும் அவனைச் சார்ந்தவர்களும் அங்கு 16 இடங்களைத் தேர்ந்தெடுத்து வாழ்க்கையைத் துவங்கினர். அவர்களை வேத மதப் பழக்கங்கள் தொற்றிக் கொண்டிருக்கவே இந்த சோம ரசம் பிழிவதையும் செய்திருக்கிறார்கள். ஆனால் யாகம் செய்யும் வழக்கம் இல்லாததால், தங்கள் நினைவிலிருந்த விவரங்களைக் கொண்டு, மந்திரங்கள் ஓதி, (யஸ்னா என்பதே யஞ்ஞா என்பதன் திரிபு) நீர் வரத்துக்கென சோம ரசத்தை நீர் நிலைகளில் விட்டிருக்கிறார்கள்.

சேர நாடு வரை பரவியிருந்த விரிவான சோம யாகம் எங்கே?

 

எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் நீர் வேண்டி சோம ரசம் போன்ற ஒரு மூலிகை ரசத்தை நீர்நிலைகளில் கொட்டிய இரானிய வழக்கம் எங்கே? சோமயாகத்துடன் அதை ஒப்பிட முடியுமா?


இவற்றுள் எது ஆரம்பக் கருத்து, எது திரிந்த கருத்து என்பதில் சந்தேகம் இருக்க முடியுமா?


ஈரானியக் கருத்துதான் திரிந்த கருத்து என்பதற்கு முக்கியச் சாட்சி, சாறு பிழி படலம் வெகு விரைவில் மறைந்து விட்டது என்பதே.


நீர் வளம் பெருகியிருந்தால் அந்த வழக்கத்தை விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டிருப்பார்கள். அது பாலைவன பூமி. அங்கு மழைக்கு வழியில்லை. அதனால் சாறு பிழி முயற்சிகள் பலிக்கவில்லை. சாறு பிழி மந்திரங்கள் யஸ்னாவில் அங்கொன்றும், இங்கொன்றுமாகக் காணப்படுகிறதே தவிர, அதைக் கொண்டு செய்யப்பட்ட வழிபாடுகளைப் பற்றிச சொல்லப்படவில்லை.


சாறு பிழியும் செடி எது என்பதில் கவனம் செலுத்தும் ஆராய்ச்சியாளர்கள் அந்த ஒரு ஒற்றுமையைக் கொண்டே, ஈரானிய ஹவோமாவே வேத சோம யாகத்துக்கு அடிப்படை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் யாகம் என்று பார்த்தால், சோம யாகம் பாரத பூமியில்தான் நடத்தப்பட்டிருக்கிறது. அது பாரதத்தின் தென் கோடியில் இருந்த தமிழ் நிலத்திலும் நடத்தப்பட்டிருக்கிறது என்னும் போது, பாரத்த்தின் எல்லையில் இருக்கும் ஈரானில் ஏன் அது நடத்தப்படவில்லை என்னும் கேள்வி எழுகிறது. ஏனெனில் வேத நெறி அங்கு பின்பற்றப்படவில்லை. வேத நெறி என்பது ஆரிய நெறி என்றால், அது அங்கு இல்லை என்பதே பதிலாக இருக்க முடியும்.

 

இதைவிட இன்னொரு முக்கிய கேள்வி இருக்கிறது.

ஆரியன் வெளியிலிருந்து வந்தான் என்று சொல்ல விரும்பினால்,

ஏன் ஈரானை நம்புகிறார்கள்?


இங்கிலாந்துக்குப் போக வேண்டியதுதானே?


அவர்கள் நாடுகளில் இருந்த ட்ரூயிடுகளும் இப்படி ஒரு சாறு பிழியும் செயலைப் பய பக்தியுடன் செய்தார்களே அதிலிருந்துதான் வேத மரபின் சோமயாக வழக்கம் வந்தது என்று சொல்வதற்கென்ன? அதன் அடிப்படையில், ட்ரூயிடுகள்தாம் படையெடுத்து வந்த ஆரியர் என்றுகூடச் சொல்லலாமே?


அப்படிச் சொல்லவில்லை. ஏனெனில் ஆங்கிலேயர் இந்தியாவுக்கு வந்த காலத்தில் அவர்களுக்கு ட்ரூயிடுகள் மீது நல்லெண்ணம் இல்லை. ஆனால் மக்களிடையே விடாப்பிடியான வழக்கமாக இருக்கவே ட்ரூயிடுகளது வழக்கம் திரிக்கப்பட்டு, அதைக் கிருஸ்துவம் தத்து எடுத்துக் கொண்டு விட்டது. அது கூடத் தெரியாமல், தாங்கள் வாழும் இங்கிலாந்தில் வாழ்ந்த அந்தப் பண்டைய மக்கள் என்ன செய்தார்கள் என்பதையும் ஆராயாமல், தங்கள் நாட்டிலேயே இருந்த தங்கள் சரித்திரத்தைப் பற்றித் தெரிந்து கொள்ளாமல், நம் நாட்டுக்கு வந்து நம் சரித்திரத்தை ஆராய்ந்தார்களாம். அவர்கள் சொன்னதை நம் சரித்திரம் என்று இன்னும் நாம் பிடித்துக் கொண்டிருப்பதைப் போன்ற வெட்கக் கேடு வேறு இல்லை.


ட்ரூயிடுகளது சோம ரசத்தைப் பற்றிக் காண்போம்.


ஈரானுக்குச் சென்ற அநுவைப் போலவே, மத்திய ஐரோப்பாவுக்குச் சென்ற த்ருஹ்யுவும், வேத மரபின் நினைவுகளை எடுத்துச் சென்றான். வேத மரபில் சொல்லப்படும் விதத்தில்ஆனால் சில திரிபுகளுடன் இந்த மூலிகைச் சாறு பிழியும் வேலையை மத வழக்கமாகச் செய்தார்கள் ட்ரூயிடுகள்.


ஆனால் இவர்களும் யாகம் போன்ற செயல்களைச் செய்யவில்லை. அவற்றில் நம்பிக்கை இல்லாததாலும், பின்பற்றாததாலும்தான் பாரதத்தை விட்டு வெளியேறினார்கள் அல்லவா? அதனால் யாகம் போன்ற வழிபாட்டை இவர்களிடமும் காண முடியாது. ஆனால் சோம ரசத்தை எதற்காகப் பருகினார்களோ அந்த காரணம் ட்ரூயிடுகளிடம் உள்ளது. அது என்ன காரணம் என்பதை வேத மரபில் தெரிந்து கொண்டு, பிறகு ட்ரூயிடுகளை ஆராயலாம்.


சோம ரசத்தைப் பற்றி ரிக் வேதப் பாடலகள் இருந்தாலும், அது என்ன செடி () மூலிகை, அதன் ரசத்தை எப்படித் தயாரிக்க வேண்டும் போன்ற விவரங்கள் ரிக் வேதத்தில் கிடையாது. அந்த விவரங்கள் ஆயுர் வேதத்தில் இருக்கின்றன. சோம ரசம் என்பது அமிர்தம் என்றும், சாவாமையைத் தரும் என்றும் ரிக் வேதத்தில் சொல்லப்படுகிறது, ஆனால் அதன் செய்முறை ஆயுர் வேதத்தில் உள்ளது. இந்த செய்தியால், அது மருத்துவப் பயன்பாடு கொண்டது என்று நாம் அறிந்து கொள்ளலாம். ஆனால் வேத மரபை இழிவுபடுத்தும் நோக்கத்துடன் வந்த ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்கள் அதை ஒரு போதைப் பொருள் என்றுதான் பொய்க் கதை பரப்பி வருகிறார்கள். அவர்களுக்கு ஆயுர் வேதம் என்ன சொல்கிறது என்பதில் அக்கரையில்லை. அதன் நோய் தீர்க்கும் குணத்தின் மீது அக்கரையில்லை. வேத வழக்கத்தைக் கேவலப் படுத்த வேண்டும் என்பதே குறிக்கோள்.

 

ஆயுர் வேதத்தில் சொல்லப்பட்டுள்ள சோம ரசம் தயாரிக்கும் முறை, அதைப் பருகும் முறை ஆகியவற்றை இங்கே காணலாம்:-

http://www.scribd.com/doc/77607146/Sachidananda-Padhy-and-Santosh-Kumar-Dash-The-Soma-Drinker-of-Ancient-India-An-Ethno-Botanical-Retrospection

 

சுஸ்ருத சம்ஹிதையில் சொல்லப்பட்டுள்ள விவரங்கள் மூலம், சோம ரசம் என்பது எந்த விஷத்தையும் முறிக்க வல்லதாகவும், நோய் எதிர்ப்புச் சக்தி தரவல்லதாகவும் அதனால் அமிர்தம் போல நீண்ட ஆயுளையும் தருவதாகவும் இருந்தது என்று தெரிகிறது. அதைப் பருகுபவர்கள் 4 மாதங்கள் பத்தியம் கடைப்பிடிக்க வேண்டும்.  

 

வேதமரபில் இந்தச் செடி மலை உச்சியில் இருக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது, அதில் இலைகளே இருக்காது. இலையில்லாத் தண்டுகளை நசுக்கி சாறு எடுக்க வேண்டும். சுஸ்ருதர் கூறும் வழியில், இந்தச் செடியின் இலைகள் 15 ஆகும், அவை சந்திரன் தேயத்தேய, நாளொன்றுக்கு ஒரு இலை என இலை விழும். முடிவில் அமாவசை அன்று ஒரு இலையும் இல்லாமல் இருக்கும், இலையில்லா இதன் காம்பை நிலவொளியில்பௌர்ணமியில் பறிக்க வேண்டும். அதை ஒரு சடங்காகச் செய்தார்கள். பறிக்கப்பட்ட மூலிகையை இரண்டு செம்மறியாடுகள் பூட்டிய வண்டியில் எடுத்துக் கொண்டு வந்து, யாக சாலையில் வைத்து, மந்திரங்களைச் சொல்லி, சாறு எடுத்தார்கள்.



இந்தக் கருத்தைக் கொச்சையாகப் பின் பற்றினால் எப்படி இருக்குமோ அப்படித்தான் ட்ரூயிடுகள் செய்தார்கள். இவர்களும் ஒரு சாற்றைத் தயாரித்தார்கள். அது விஷத்தை முறிக்கும் என்றும், நோயைக் குணப்படுத்தும் என்றும் சொன்னர்கள். அது கிடைக்கும் செடியானது உயரமான இடத்தில் வளரும் என்றார்கள். அதற்கு இலைகள் கிடையாது. அப்படிப்பட்ட செடி அவர்கள் வாழ்ந்த இடத்தில் காணப்பட்ட ஓக் மரத்தின் உச்சிக் கிளைகளில் எப்பொழுதாவது வளரும் மிஸில்டோ என்னும் ஒட்டுண்ணிச் செடியாகும்.


அந்தச் செடியை இந்தப் படத்தில் காணலாம்.



இதைச் சந்திரனை முன்னிட்டுத்தான் பறிப்பார்கள். வள்ர்பிறையின் 6 ஆவது நாளில் பல சடங்குகளுக்கிடையே, ஓக் மரத்தில் ஏறி, இந்தச் செடியைப் பறித்தார்கள். வேத மரபில் இரண்டு ஆடுகள் பூட்டிய வண்டியில் அதைக் கொண்டு வந்தார்கள். ஆனால் ட்ரூயிடுகள் இரண்டு காளைகளின் கொம்புகளைப் பூட்டி வைத்தார்கள். பிறகு அவற்றைப் பலி கொடுத்து, இந்தச் செடியின் ரசத்தை, பலி உணவுடன் சேர்த்துப் பருகினார்கள். இந்த ரசத்தைப் பாலில் கலந்து குடித்தால் அது விஷத்தை முறிக்கும், இதைப் பருகும் மிருகங்கள் இனப் பெருக்கம் செய்யும் என்று ட்ரூயிடுகள் நம்பினார்கள் என்று பொ.பி முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த ரோமானிய அறிஞர் பிளினி அவர்கள் கூறுகிறார்.



வேத மரபில் சோம ரசமானது சாவாமையைக் கொடுக்கும் அமிர்தம் என்று சொல்லியுள்ளது, விஷத்தைக் குடித்தாலும் மரணம் வராது என்பதைக் காட்டுவதாக உள்ளது. அதே கருத்து ட்ரூயிடுகளது மிஸில்டோ ரசத்திலும் இருக்கிறது. முதலில் மிருகங்கள் அதிக அளவில் இனப்பெருக்கம் செய்ய இதைக் கொடுத்திருக்கிறார்கள். இந்த சோம ரசத்தை ட்ரூயிடுகளும் பருகியிருக்கிறார்கள்.


இதே கருத்தை ஈரான் – ஈராக் பகுதியில் இருந்த அவெஸ்தன் மக்களும், ஜொராஸ்ட்ரியன் (ZOROASTRIAN) மக்களும் கொண்டிருந்தார்கள். அவர்களைப் பொறுத்தவரை, ஹவோமா பானத்தை நோய் தீர்க்கவும், பலம் பெறவும், மலட்டுத் தன்மை நீக்கவும், சிறந்த குழந்தை பெறவும் பயன்படுத்தினார்கள்.


நாளடைவில், இது மனிதர்களுக்கும் பொருந்தும் என்றும், ஆண்- பெண் மலட்டுத்தன்மையை போக்கும் ஒரு வழி என்றும் நினைத்தார்கள் RITUAL OF OAK என்று சொல்லப்படும், ட்ரூயிடுகளது இந்த நம்பிக்கைகளையும், வழக்கங்களையும் மக்கள் வழிவழியாகப் பின்பற்றி வரவே, கிருஸ்துவர்கள் அவர்களை ஒடுக்கிய பின்னும், இந்த நம்பிக்கைகளை சுவீகரித்துக் கொள்ளத்  தயங்கவில்லை.


மேலே சொன்ன மிஸில்டோ ரசத்தை எதற்குப் பயன்படுத்தினார்கள் என்றெல்லாம் ஆராய அவர்களுக்கு விருப்பமில்லை. அதன் ரசத்தைப் பருகினால் மலட்டுத்தன்மை போய்விடும் என்று மக்கள் தீவிரமாக நம்பினார்கள். அவர்களை கெல்டு நம்பிக்கைகளிலிருந்து வெளிக் கொணர விரும்பிய கிருஸ்துவப் பாதிரிமார், மிஸில்டோ ரசம் தேவையில்லை; ஆனால் மிஸில்டோ வளரும் மரத்துக்குக் கீழே ஆணும், பெண்ணும் முத்தம் கொடுத்துக் கொண்டால் போதும், அவர்கள்து மலட்டுத்தன்மை நீங்கி விடும் என்ற அரிய கருத்தைக் கண்டு பிடித்தார்கள்.


இந்த முத்த விவகாரம் ஒரு சடங்கு போலவே கிருஸ்துவத்தில் ஆகி விட்டது. இன்று மிஸில்டோ முத்தம், மிஸில்டோ அலங்காரம், மிஸில்டோ வாழ்த்துக்கள் என்று பலவிதமாக ஆக்கி தூள் கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதன் ஆரம்பம் அவர்கள் வெறுத்த ட்ரூயிடுகள் செய்த சடங்கில் இருக்கிறது, அந்தச் சடங்கு சோம ரசம் தயாரிக்கும் விதத்தை. ஒத்திருக்கிறது. 




மிஸில்டோ இலைகளுடன் புது வருட வாழ்த்து மடல்

 

மூலிகை போன்ற இந்த இலைகள் ட்ரூயிடுகளது ட்ரேட் மார்க் போன்றது. அவர்களது எழுத்துக்கள் இலை போன்ற வடிவம் கொண்டதுதான். ஒவ்வொரு எழுத்தும் ஒரு மரத்தை அல்லது செடியைக் குறிக்கும். அந்த எழுத்துக்களை 'ஓஅம்' (OGHAM)  அழைத்தார்கள். இது ஓம் என்ற ஒலியுடன் இருப்பதைப் பாருங்கள். OGHAM என்னும் எழுத்துக்கள் கிரேக்கர்கள் உருவாக்கினது. தேவையில்லாமல் GH என்பதை வைத்திருக்கிறார்கள். அது ஒலி அமைதி. பழைய ஐரிஷ் மொழியில் ஓஅம் என்றே அழைக்கிறார்கள்.


இந்த மொழியின் எழுத்துக்கள் இலை வடிவில் இருக்கின்றன. அதைக் காணும் போது இது சோம இலையின் நினைவாக எழுந்ததோ என்று தோன்றுகிறது. சோம் என்பது ஓம் என்று திரிந்திருக்கலாம் என்றும் சொல்லும் வண்ணம் சில விவரங்கள் இருக்கின்றன. அவற்றை அடுத்தக் கட்டுரையில் காண்போம்.