செவ்வாய், 26 ஏப்ரல், 2011

51. திராவிடம் என்றால் என்ன?


திராவிடன் யார் என்பதையும், திராவிடம் எது என்பதையும்
பற்றிக் கூறும் மற்ற உள்ளுறைச் சான்றுகளைப்
(INTERNAL EVIDENCE) பார்ப்போம்.
பஞ்ச திராவிடர்கள் வாழ்ந்த பஞ்ச திராவிடம்
இருந்த இடத்தைப் பற்றி
கி.பி. 11 ஆம் நூற்றாண்டு நூலான ராஜ தரங்கிணி
சொல்லியுள்ளதென்று முந்தின கட்டுரையில் கண்டோம்.
அதே ராஜ தரங்கிணியில் திராவிட மந்திரவாதி என்று
ஒருவனைப் பற்றிய கதையும் வருகிறது.
5000 ஆண்டுகளுக்கு முன் நடந்த மஹாபாரதப் போரில்
பங்கு கொண்ட திராவிடர்களுக்குப் பிறகு,
திராவிடன் என்பவனைப் பற்றிய ஒரு விவரம் காணப்படும் நூல்
1000 வருடங்களுக்கு முன் எழுந்த ராஜ தரங்கிணி மட்டுமே.


ராஜ தரங்கிணி சொல்லும் திராவிடன் ஒரு மந்திரவாதி ஆவான்.
அந்தத் திராவிடனைப் பர்றிச் சொல்லும் காலக்கட்டம்,
இந்தத் தொடரில் பகுதி 33 இல்
ஸ்த்ரி ராஜ்ஜியம் என்னும் இடத்துக்குச் சென்றான்
என்று விவரிக்கப்பட்ட அரசனான ஜெயபீடன் ஆண்ட காலக்கட்டமாகும். 
கி.பி. 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த காஷ்மீர அரசனான
இந்த ஜெயபீடனைப் பற்றிச் சொல்கையில்,
சந்திரபுரம் என்னும் ஏரியைக் காப்பாற்றி
அதன் நீர்வளம் குறையாமல் செய்த அவனது செயலுக்குப் பின்னால்
ஒரு பரம்பரைக் கதை இருந்து வந்தது என்கிறார் கல்ஹணர்.


அந்தக் கதையின் படி, மஹாபத்ம நாகன் என்னும் நாக அரசன் இருந்தான். (கிருஷ்ணாவதாரத்தில் காளிங்கன் என்னும் நாகம் இருந்தாற்போல,
இவனும் ஒரு நாகன். இந்த நாகர்கள் பற்றிய விளக்கங்கள் இந்தக் கட்டுரையில் வருகின்றன.).
அவனும், அவனைச் சேர்ந்தவர்களும் சந்திரபுர ஏரியில் வசித்து வந்தனர். அவனை ஒரு திராவிட மந்திரவாதி தொந்திரவு செய்து வந்தான்.
நாகர்கள் வசிக்கும் ஏரியில் உள்ள நீரை வற்றச் செய்து விடுவதாக
அவன் பயமுறுத்தி வந்தான்.
அதனால் மாஹபத்ம நாகன், ஜெயபீட மன்னனின் கனவில் தோன்றித் தங்களை அந்தத் திராவிட மந்திரவாதியிடமிருந்துக் காப்பாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டான்.
அதற்குப் பிரதி உபகாரமாக,
தங்கச் சுரங்கம் இருக்கும் இடத்தைக் காட்டுவதாக நாகன் கூறுகிறான்.


இதனால் ஜெயபீட மன்னன் அந்தத் திராவிடனைக் கூப்பிட்டு விசாரித்தான். அவனுக்குத் தெரிந்த மந்திர வித்தையைச் சோதித்துப் பார்க்க வேண்டும்
என்று நினைத்து, ஏரித் தண்ணீரை வற்றச் செய்து காட்டச் சொன்னான். திராவிடனும் அவ்வாறே செய்ய,
ஏரியின் நீர் மட்டம் குறைய ஆரம்பித்தது.
இதைக் கண்ட மன்னன் உடனே அதைத் தடுத்து விடுகிறான்.
மீண்டும் ஏரியில் நீரை நிரப்ப வைத்து விடுகிறான்.
எனினும் முதலில் நீரை வற்றச் செய்ததால்
மனம் வருந்திய மஹாபத்ம நாகன், 
தான் உறுதி அளித்தது போல தங்கச் சுரங்கத்தைக் காட்டாமல்,
செப்புச் சுரங்கத்தைக் காட்டினான்.
இதுதான் அந்தக் கதை.


இதில் சில அதிசய ஒற்றுமைகள் உள்ளன.
நீரை வற்றச் செய்தும், பிறகு மீட்கச் செய்தும் காட்டக் கூடிய ‘மந்திர வித்தைதெரிந்தவன் திராவிடன் என்பதும்,
நீரை வற்றச் செய்ததன் தொடர்பாகச்
செப்புச் சுரங்கம் இருந்த இடம் தெரிய வந்தது என்பதும்
இயற்கையில் இருக்கக்கூடிய சில விவரங்களுடன் ஒத்துப் போகின்றன.


முதலில் ஜெயபீடனின் அரசாட்சி என்று எடுத்துக் கொண்டால்,
அவன் அதிக அளவு செப்பு நாணயங்களை வெளியிட்டுள்ளான்
என்று கல்ஹணர் கூறியுள்ளார்.
அவன் ஆட்சிக் காலத்தில் க்ரம ராஜ்ஜியம் என்னுமிடத்தில் உள்ள
செப்புச் சுரங்கத்திலிருந்து அதிக அளவில் செப்பு எடுக்கப்பட்டு
இந்த நாணயங்கள் அச்சடிக்கப்பட்டன என்றும் அவர் கூறுகிறார்.
இந்தச் செப்புச் சுரங்கத்தை அவன் அடையாளம் கண்ட நிகழ்ச்சியை
ஒரு கதையாக காஷ்மீர மக்கள் சொல்லி வந்திருக்கிறார்கள்.


அதில் ஒரு மஹாபத்ம நாகன் என்னும் பாம்பைப் பற்றிச் சொல்லப்பட்டுள்ளது.
இதே நாகனைப் பற்றி காஷ்மீர நாட்டு மற்றொரு பழம் இலக்கியமான
‘நீலமத புராணத்திலும்சொல்லப்பட்டுள்ளது.
விஸ்வகஸ்வன் என்னும் அரசனை வேண்டி
அவனது உதவியுடன் மஹாபத்ம நாகனும்,
அவன் கூட்டத்தினரும் தாங்கள் வசிப்பதற்காக
சந்திர புர ஏரியில்
குடி புகுந்தனர் என்று வழி வழியாக மக்கள் சொல்லி வந்துள்ளன்ர்
என்று சொல்லப்பட்டுள்ளது.
அந்த சந்திர புர ஏரியை வற்றச் செய்வதாகச் சொன்னவன்
திராவிட மந்திரவாதி என்பது ராஜ தரங்கிணி சொல்லும் விவரமாகும்.


காஷ்மீர வரலாற்றைத் தோண்டினால்,
அந்த நாடே ஒரு சமயம் ஏரியாக இருந்தது என்பது தெரிய வரும்.
அங்கு காஸ்யப முனிவர் வாழ்ந்து வரவே,
அதற்குக் காஸ்யப க்ஷேத்திரம் என்ற பெயர் இருந்தது.
அந்தப் பெயரே உருமாறி காஷ்மீர் என்றானது.
அந்த ஏரி மறைந்து நில பாகங்கள் மேலெழும்பின.
அதாவது லாவா எனப்படும் பூமிக் குழம்புகள்
பூமியிலிருந்து வெளிப்பட்டு மேலெழும்பி இருக்கின்றன.
அப்படி வெளிப்படும் பூமிக் குழம்புகளை
நாகம் என்று சொல்லும் வழக்கம் நம் நாட்டில் இருந்திருக்கிறது.


பாம்புகள் பூமிக்கடியில் வசிப்பதாலும்,
பூமியைக் குடைந்து அடி மண்ணைப் புரட்டிப் போட்டு
எறும்புகள் கட்டும் புற்றுக்குள் பாம்புகள் வசிப்பதாலும் இந்தப் பெயர்.
பூமியைப் புரட்டிப்போட்டாற்போல வெளிப்பட்டு,
பிறகு நிலபாகமாக மாறும்
பூமிக் குழம்புகள் உள்ள பகுதிக்கு
நாகர்கள் வசிக்குமிடம் என்று பெயரானது.


இப்படி எங்கெல்லாம் நிலபாகங்கள் ஏற்பட்டனவோ
அங்கு வசிப்பவர்களுக்கு நாகர்கள் என்னும் பெயரும் ஏற்பட்டது. நாகர்களுக்குத் தலைவன் ஆதி சேஷன் ஆவான்.
அவன் இந்தப் பூமியைத் தாங்கிக் கொண்டிருக்கிறான்
என்பதே பாரத நாட்டின் பரம்பரிய எண்ணம்.
தலைமை தாங்கும் சேஷன், பூமியின் நடுப் பாகத்தில்
CORE என்று மைய அச்சாக இருக்கிறான்.
இரும்புக் கோளமான அந்த மையப் பகுதி,
இந்தப் பூமியை, அதனைச் சார்ந்த காந்த மண்டலம் வரை
தன் பிடிக்குள் வைத்திருக்கவே,
ஆதி சேஷனே பூமியைத் தாங்குகிறான் என்று சொல்லப்படுகிறது.


பூமியின் உள் அமைப்பு.


அடுத்த முக்கிய நாகம், வாசுகி ஆகும்.
மேரு மலையை அச்சாகக் கொண்டு,
வாசுகியை நாணாகக் கொண்டு
தேவர்களும், அசுரர்களும் கடலைக் கடைந்தனர்
என்பது பல புராணாங்களிலும் சொல்லப்படும் கருத்து.
மேரு என்பது வடக்கு தெற்காகச் செல்லும் பூமியின் அச்சாகும்.
அதன் உச்சி வட துருவமாகும் என்பது சூரிய சித்தாந்தம் தரும் செய்தி.
இந்த அச்சு இடை விடாமல் சுழன்று கொண்டிருக்கிறது.
அந்த சுழற்சி காரணமாக,
பூமியின் வட பகுதியிலும், தென் பகுதியிலும்,
பருவ காலங்கள் மாறி மாறி வருகின்றன.
அந்தச் சுழற்சி காரணமாக,
கடலுக்கடியில் இருக்கும் பூமிக் குழம்புகள்
கடையப் படுவது போல அலைக்கழிக்கப்படுகிறது.


இதனால், பூமியடியில் உள்ள வாயுக்களும்,
கனிமங்களும், நிலப்பகுதிகளும்
மேலும், கீழுமாகப் புரட்டிப் போடப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.
இதுவே ‘சமுத்திர மந்தன்  என்னும் கடலைக் கடைதல் கதை.
இது மறை பொருளாகச் சொல்லும் இயற்கை வர்ணனையாகும்.
இந்த வருணனையில், பூமியின் அச்சு மேரு மலையாகும்.
வடபாகம் தேவர்கள், தென் பாகம் அசுரர்கள் ஆவார்கள்.
கடையப்படும் பூமிக் குழம்பு வாசுகி ஆவாள்.
இந்தக் கடைதலில் இரண்டு புறமும் நகர்ந்து கொண்டிருப்பது
ராகு, கேது என்னும் இரண்டு பாம்புகள். 


 அட்லாண்டிக் கடல் அடிவாரத்தில்,
கடைவது போல வெளிப்பட்டுக்கொண்டிருக்கும் பூமிக் குழம்பு.


இதை இன்னும் விவரித்துக் கொண்டே போகலாம்.
ஆனால் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது  
நாகர்கள் என்று யாரைச் சொல்லி இருக்கிறார்கள் என்பதுதான்.
எங்கெல்லாம், பூமிக் குழம்பு வெளிப்பட்டு,
குளிர்ந்து, நிலமாக ஆகி இருக்கிறதோ,
அங்கு வசிக்கும் மக்கள் நாகர்கள் எனப்பட்டிருக்கிறார்கள்.
அங்கு நாக வழிபாடும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
அதனால் காஷ்மீரிலும் நாகர்கள் இருந்திருக்கிறார்கள்.
இமயமலைப் பகுதிகள் பலவற்றிலும் நாகர்கள் இருந்திருக்கிறார்கள்
என்பதை மஹாபாரதம் மூலம் அறிகிறோம்.



காண்டவப்ரஸ்தத்தில் அர்ஜுனனால் நாகர்கள் விரட்டப்பட்டு
விந்திய மலைக்குத் தெற்கே குடியேறினார்கள் என்றும் பாரதம் சொல்கிறது.
கிருஷ்ணனது சகோதரனான பலராமன்,
சேஷனது அவதாரம் என்று சொல்லப்படுபவன்.
அவனது அடையாளம் கலப்பையாகும்.
பூமியை உழுது, புரட்டி எடுக்கும் வேலையைச் செய்ததால்
அவன் நாகன் எனப்பட்டிருக்க வேண்டும்.

மஹாபாரதம் 13- 132 இல் பலராமன் ஒரு நாகன் என்று சொல்லப்பட்டுள்ளது.

ஆரிய - தஸ்யூக்கள் என்ற ஐந்து மகன்களைப் பார்த்தோமே (பகுதி 30)
அவர்களது தாத்தாவான நஹுஷனை,
ஆரிய அரசர்களது சந்திர வம்சத்தில் வந்த நாகன்என்கிறது
மஹாபாரதம் (3-178)
அவன் ஆண்ட பகுதி பூமிக்குள்ளிலிருந்து
வெளிப்பட்ட பகுதியாக இருந்திருக்க வேண்டும்.

இவ்வாறே குந்தியின் கொள்ளுப் பாட்டனாரை
ஆர்யகன்என்ற நாகன் என்கிறது பாரதம் (1-128)


வடக்கில் இருப்பது போல, தென்னிந்தியாவிலும் நாகர்கள் உண்டு.
நாமிருக்கும் தக்காணப் பீடபூமியே,
பூமிக் குழம்பு வெளிப்பட்டு உண்டானதுதான்.
தொண்டை மண்டலத்தை நிறுபிய ஆதொண்டையின்
தாய் ஒரு நாக கன்னியாவாள்.
நாகர்கோவிலிலும் நாகர்கள் இருந்திருக்கிறார்கள்.
இந்தியக் கடலில் முழுகிய பகுதிகளிலும் நாகர்கள் இருந்திருக்கிறார்கள்.


இந்தியாவில் உள்ள பல இடங்களும்
இப்படி பூமிக் குழம்பு வெளிப்பட்டு நிலமானதுதான்.
பூமிக் குழம்பு வெளிப்பட்ட இடஙக்ளில்,
பாம்புகளும் அதிகம் வாசம் செய்கின்றன.
அங்கு நாக வழிபாடும் நடந்திருக்கிறது.
அந்த இடங்களில் இருந்த மக்களும் நாகர்கள் என்று அழைக்கப்பட்டிருக்கின்றனர்.


இந்தியர்களை ஆரியர், திராவிடர் என்று அழைத்திருப்பதற்குப் பதிலாக, நாகர்கள் என்று அழைத்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்.
நாகன் என்ற அடையாளத்தால் அவர்கள் ஒன்றுபட்டிருக்கின்றனர்.
உதாரணமாக கர்நாடகாவில்
ஹஸன் பகுதியில் ஹெரகு என்னுமிடத்தில் கிடைத்துள்ள கல்வெட்டில், 
ஹொய்ஸள மன்னன் ஆட்சியில் (கி.பி 1217)
காஷ்மீர க்ரம ராஜ்ஜியத்தில் இருந்த மக்கள்
ஹொய்ஸளத்துக்கு வந்து குடியேறினர் என்றும்
வந்த இடத்தில் இருந்த மகக்ளுடன் திருமண உறவுகள் வைத்துக் கொண்டனர் 
என்றும் எழுதப்பட்டுள்ளது.
நாகர் என்பது போல ஏதோ ஒரு ஒற்றுமை இருந்திருந்தால்தான்  
திருமண உறவு வைத்துக் கொள்வது போன்றவை சாத்தியமாகும்.


நமது முக்கிய ஆராய்ச்சிக்கு வருவோம்.
முழுவதுமே பூமிக் குழம்பு வெளிப்பட்டு உண்டான இடம் காஷ்மீரம் ஆகும். 
இமயமலை உண்டான காலம் தொட்டே,
அங்கிருந்த கடலை முட்டி மோதி, நிலப்பகுதி எழும்பியிருக்கிறது.
அதன் உச்சியில் ஏரியாக இருந்த பகுதி உடைந்து,
அதனால் வெளிப்பட்ட நிலமே காஷ்மீர்
என்பது நீலமத புராணம் சொல்லும் காஷ்மீர வரலாறு.
அதனால் அங்கு வாழ்ந்த பலவித மக்களுக்கும்
நாகர் என்ற சிறப்புப் பெயர் உள்ளது.
ஜெயபீட அரசனை எடுத்துக் கொண்டால்
அவன் கார்க்கோடக வம்சாவளியில் வந்தவன்.
கார்க்கோடகன் என்பது ஒரு பாம்பின் பெயர்.
பிரம்ம கருட சாஸ்திரம் என்று ஒரு நூல் உள்ளது.
அதில் ‘அஷ்டபணி நிதானம்என்ற ஒரு பகுதி
பாம்புக் கடிக்கு நிவாரணங்களைத் தருகிறது.
அதில் சொல்லப்பட்டுள்ள பாம்புகள் பெயரில்
நாக இன மக்கள் இருந்திருக்கின்றனர்.
அவர்களுள் பலரும் காஷ்மீரப் பகுதிகளில் இருந்திருக்கின்றனர்.


காஷ்மீரத்தில் உள்ள ஆனந்த நாக் என்னும் பகுதிக்கும்
அப்படியே பெயர்க் காரனம் ஏற்பட்டுள்ளது.
ராஜ தரங்கிணி எழுதப்பட்ட காலத்தில் காஷ்மீர் இரண்டு பகுதிகளாக இருந்தது.
ஸ்ரீநகர், ஆனந்த்நாக் போன்ற பகுதிகள் உள்ள தெற்குப் பகுதி
மதவ ராஜ்ஜியம் என்றும்,
பாரமூலாஉள்ள வட பகுதி
க்ரம் ராஜ்ஜியம் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறது.
க்ரம ராஜ்ஜியத்தின் பல பகுதிகள்
இன்றைக்குப் பாகிஸ்தானியக் கட்டுப்பாட்டில் உள்ளது.
அந்தக் க்ரமராஜ்ஜியத்தில் செப்புச் சுரங்கங்கள் கண்டுபிடிகக்ப்பட்ட வரலாறே, முதலில் சொன்ன கதை ரூபமாகச் சொல்லப்பட்டிருக்கிறது..


நாகர் உண்டான வர்ணனை போல,
எங்கெல்லாம் நீருக்குள்ளிருந்து நிலமானது எழுகிறதோ,
அங்கே வராஹ அவதாரம் நடப்பதாகக் கொள்வார்கள்.
காஷ்மீரில் அப்படி எழும்பிய ஒரு இடம்
‘வராஹ மூலம் என்று அழைக்கப்பட்டது.
அதுவே பாரமூலா (Baramulla) என்று திரிந்தது.
அந்த பாரமூலா பகுதியே ஜெயபீடன் காலத்தில்
க்ரம ராஜ்ஜியம் என்றழைக்கப்பட்டது.
அப்படி நிலம் வெளிப்பட்ட இடங்களில் செப்புச் சுரங்கம் வெளிப்பட்டிருக்கிறது. 
அப்படிப் பட்ட ஒரு சம்பவம் ஜெயபீடனின் காலத்தில் நடந்திருக்கிறது.
சந்திர புர ஏரிப் பகுதியில் நீர் மட்டம் குறைந்து,
அங்கு வெளிப்பட்ட நிலத்தில் செப்புச் சுரங்கங்களைக் கண்டிருக்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சியைத்தான் மஹாபத்ம நாகன்
கதையாகச் சொல்லி வந்திருக்கிறார்கள்.


இந்த இயற்கை நிகழ்வில் திராவிடன் பெயர் ஏன் அடிபடுகிறது?
அதிலும் அவன் மந்திரம் மூலமாக
ஏரித் தண்ணீரை வற்றச் செய்தும்,
பிறகு நிரப்பச் செய்தும் காட்டும் வித்தை என்று சொல்லப்பட்டுள்ளதே,
எந்தத் தமிழனாவது அப்படி ஒரு மந்திர வித்தை அறிந்திருந்தான்
என்று தமிழ் நூல்களில் எங்காவது செய்தி உண்டா?
இல்லையே. 

மூவேந்தர்கள் ஆண்ட தமிழ் நாட்டை எடுத்துக் கொண்டால், 
அவரவர்களுக்கென்று நதிகள் இருந்தன. 
கிடைத்த மழையின் அளவில் திருப்திப்பட்டுக் கொண்டு, 
வறட்சிக் காலங்களில், வறண்டு போன நிலங்களைப் பாலை நிலம் 
என்று ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். 
ஆனால் நிலத்தடி நீரை அறிந்து அதை சேமிக்கும் விதமாகக் 
குளம், குட்டை, ஏரிகள் என்று அபரிதமாக வெட்டியது 
காஞ்சிபுரம் பகுதிகளில்தான் என்பதை நாம் நினைவு கூற வேண்டும். 
அந்தப் பகுதிகள் மூவேந்தர் ஆளுகையில் இருந்திருக்கவில்லை, 
அந்தப் பகுதிகளில் திராவிடர்கள் குடியேறவே பின்னாளில்,
அங்கு நிலத்தடி நீரைத் தேடிச் சேமிக்கும் வழக்கம் வந்திருக்கிறது என்று தெரிகிறது. இவ்வாறு நிலத்தடி நீருக்கும், திராவிடனுக்கும் தொடர்பு காணப்படுகிறது.


மனு வாழ்ந்த திராவிட தேசத்துக்கு அந்தத் தொடர்பு உண்டு. 
மனுவும், ஸரஸ்வத ரிஷியும் மட்டுமே
நிலத்தடி நீர் சாஸ்திரம் தெரிந்தவர்கள்
என்ற விவரமும் உண்டு.  (பகுதி 49)
பரசுராமர் தயவால் நீரில் முழுகிய நிலங்களை மேலே வந்து,
அவை திராவிட அடையாளம் பெற்றன என்ற செய்தியும் உண்டு (பகுதி 49)
மனு வாழ்ந்த திராவிட நாட்டில், பனியுகம் காரணமாக மழை இல்லை.
ஆயினும், நிலத்தடியில் நீர் ஓடும் மார்கங்களை அறிந்திருக்கவே,
அந்த அறிவின் மூலம்
குளம், ஏரி ஆகியவற்றை வெட்டித்
தங்கள் நீர்த்தேவைகளைப் பூர்த்தி செய்திருக்கின்றனர்.

‘திராவிடம் என்னும் சொல்லே இதன் அடிப்படையில்தான்
எழுந்திருக்க வேண்டும்.
திராவிடம் என்பது வட மொழிச் சொல் ஆகும்.
அதை த்ரவ் + இட என்று பிரிக்கலாம்.
த்ரவ் என்றால் திரவம்.
ஓடுவது திரவமாகும்.
இடா என்றால் ஒடும் விதம் என்று பொருள்.
மூச்சுப் பயிற்சியில் இடகலை, பிங்கலை என்று சொல்கிறார்களே,
அந்த இட என்பது அது.
அது ஓடும் வழி அல்லது நாடி எனப் பொருள்படும்.
எனவே த்ரவ் + இட என்றால் திரவம் அல்லது
நீர் ஓடும் நாடி என்று பொருள் கொள்ளலாம்.
நிலத்தடி நீர் சாஸ்திரம் பயன்படும் பூகோள அமைப்பாக இருக்கவே
மனு இருந்த நாடு திராவிடம் என்ற பெயர் பெற்றிருக்கக்கூடும்.


த்ராவிட என்பதன் வேர்ச் சொல் ‘த்ரு அல்லது ‘த்ரா என்பதாகும்.
இதற்கும் ஓடுதல், ஓட்டம் என்றே பொருள்.
இது த்ராவதித்ராவ்ணா என்றெல்லாம் அதே பொருளில் வரும்.
எனவே திராவிடம் என்பது நீரோடும் இடம்என்று
பொருள் கொள்வதே சரியாக இருக்கும்.
நிலத்தடி நீரோட்டத்தை நம்பியே இருந்த இடமாக இருந்ததால்
அது திராவிடம் என்று அழைக்கப்பட்டது.
அவ்வாறு நிலத்தடியில் ஓடும் நீரை,
அந்தப் பகுதியில் உள்ள பாறைகள்,
அவற்றின் நிறம்,
அங்கு வளரும் மரம்,
அந்த மரத்துக்கு அருகில் உண்டாகும் புற்று போன்றவற்றின் அடிபப்டையில்
ஸரஸ்வத ரிஷியும்,
மனுவும் நிலத்தடி நீர் கண்டு பிடிக்கும் சாஸ்திரத்தைக் கொடுத்துள்ளனர் என்று
வராஹமிஹிரர் கூறுகிறார்.


அந்த நீரோட்டத்துக்கு ‘ஜல நாடி என்றே பெயரிட்டிருக்கிறார்கள்.
மேலும் பாறைக்குக் கீழ் ஓடும் நீரோட்டங்களையும்
கண்டு பிடிக்கும் முறைகளும்,
அந்த நீரைக் கொண்டு வர, பாறைகளை எவ்வாறு உடைக்க வேண்டும் என்னும் முறைகளும் ஜல நாடி சாஸ்திரத்தில் உள்ளன.
மறைந்து போன அந்த சாஸ்திரம் இன்று நமக்கு
வராஹமிஹிரரது பிருஹத் சம்ஹிதை (அத்தியாயம் 54)
மூலமாகத்தான் கிடைத்துள்ளது.
பாறைகளுக்குக் கீழே நீரோட்டம்
உள்ள இடத்தைப் பற்றி சொல்கையில்,
அத்தகைய பாறைகள் நாகர்கள், யக்ஷர்கள் வசிக்கும் இடங்களில் காணப்படுகின்றன என்று வராஹமிஹிரர் சொல்வது
முக்கியமான ஒரு துருப்பாகும்.


அந்த சாஸ்திரத்தை அறிந்த திராவிடன்,
மந்திரவாதி எனப்பட்டிருக்க வேண்டும்.
நீரில்லாத இடத்தில் நீர் கிடைக்குமா என்பதையும்,
நீர் இருக்கும் இடத்திலிருந்து, அது வடிந்து போகக் கூடிய
நிலத்தடி நாடிகள் உள்ளனவா என்றும்
காலம் காலமாக அறிந்து வைத்தவர்கள் அந்தத் திராவிடர்கள்.
அப்படி ஒருவன் கொடுத்த துப்பின் மூலமாக
சந்திரபுர ஏரியின் நீர் மட்டம் இறங்கியும், பிறகு ஏறியும் இருக்கும்.
அதை அந்தத் திராவிடன் செய்த மந்திரச் செயல் என்று
மக்கள் நினைத்திருக்கிறார்கள்.
மேலும் இந்த இடமே காஷ்மீர நாகர்கள் வாழ்ந்த இடம்.
அங்குள்ள பாறைகளைக் கொண்டு நீர் நாடியைக் கண்டுபிடிகக் முடியும்.
எனவே அந்தப் பகுதிகளில்
நிலத்தடி சாஸ்திரம் தெரிந்த திராவிடனுக்கு வேலை இருந்தது.
அதனால்தான் குறிப்பாக, திராவிட மந்திரவாதி என்று
நிலத்தடி நீர் சாஸ்திர நிபுணனை அழைத்திருக்கிறார்கள்.


ராஜ தரங்கிணியின் மூலம் இவ்வாறு நாம்
இரண்டு துப்புகளைப் பெற முடிகிறது.
முதலாவது, பஞ்சத் திராவிடம் என்னும் பகுதிகளும்,
அங்கு வாழ்ந்து வந்த பஞ்சத் திராவிட மக்களும்.  
அவர்கள் அனைவரும் பிராம்மணர்கள்.
இந்த விவரங்களை முந்தின கட்டுரையில் பார்த்தோம்.
இரண்டாவது, நிலத்தடியில் ஓடும்
ஜலநாடி சாஸ்திரம் அறிந்தவன் திராவிடன்
என்ற செய்தியை இந்தக் கட்டுரையில் ஆராய்தோம்.
அதன் மூலமாக, திராவிடம் என்னும் வடமொழிச் சொல்லின் பொருள்
எவ்வாறு பொருத்தமாக இருக்கிறது என்றும் பார்த்தோம்.

இன்னும் ஒரு இடத்தில்
திராவிடர் என்னும் மக்களைப் பற்றி விவரங்கள் வருகின்றன.
அது மனு ஸ்ம்ருதி.
அந்த விவரத்தையும் ஆராய்ந்து விட்டு,
வராஹமிஹிரர் கூறும் திராவிட நாடு எது என்று பார்ப்போம்.





ஞாயிறு, 24 ஏப்ரல், 2011

50. திராவிடமும், திராவிடரும்.




தாங்களே திராவிடர்கள் என்று சொல்லிக் கொள்ளும் தமிழ் நாட்டுத் திராவிடவாதிகளைப் பார்த்து சிரிப்பதா அல்லது பரிதாபப்படுவதா என்று தெரியவில்லை.
ஏனெனில், திராவிடம் என்பதும், திராவிடன் என்பதும்,
இவர்கள் எதிரியாக நினைக்கும் ‘ஆரியப்பார்ப்பனர்களது அடையாளம்
என்பது இவர்களுக்குத் தெரியவில்லை.
ஆராய்ந்து தெரிந்து கொள்ளும் அறிவும் இல்லை. தமிழையே ஆராயாதவர்கள், திராவிடத்தையா ஆராய்ந்து தெரிந்து கொள்ளப்போகிறார்கள்?
அவர்கள் அதிகம் தேட வேண்டாம்.
ஒரு ஆயிரம் வருடங்கள் பின்னால் போனால் தெரிந்து விடும்.
காஷ்மீர நூலான ராஜ தரங்கிணியின் மூலம்
திராவிடம் அல்லது திராவிடன் என்பதைப் பற்றிய
விவரங்ளைத் தெரிந்து கொள்ள முடியும்.



கி.பி. 11 ஆம் நூற்றாண்டில் கல்ஹணரால் எழுதப்பட்ட
ராஜ தரங்கிணி என்னும் நூலில்,
பிராம்மணர்கள் குடியிருந்த பகுதிகளைப் பற்றிச் சொல்லும் இடத்தில், திராவிடம் வருகிறது.
விந்திய மலைக்கு வடக்கில் குடியிருந்த பிராம்மணர்கள்,
விந்திய மலைக்குத் தெற்கில் குடியிருந்த பிராம்மணர்கள்
என்று இரண்டு வகையாகச் சொல்லப்பட்டுள்ளது.
விந்திய மலைக்கு வடக்கில் ‘பஞ்ச கௌடர்கள் என்னும்
ஐந்து வகையான பிராம்மணர்கள் வசித்து வந்தனர் என்றும்,
விந்திய மலைக்குத் தெற்கே ‘பஞ்ச திராவிடர்கள் என்னும்
ஐந்து வகையான பிராம்மணர்கள் வசித்து வந்தனர் என்றும்
சொல்லும் அந்த வரிகள்  இங்கே தரப்பட்டுள்ளன.


கர்நாடகாஸ்ச தைலங்கா த்ராவிடா மஹாராஷ்ட்ரகா:
குர்ஜராஸ்சேதி பஞ்சைவ த்ராவிடா விந்த்ய தக்ஷிணே //
ஸாரஸ்வதா: கான்யகூப்ஜா கௌடா உத்கல மைதிலா:
பஞ்ச கௌடா இதி க்யாதா விந்த்யஸ்யோத்தர வாஸின: //


இதன் பொருள்:-
விந்திய மலைக்குத் தெற்கே கர்நாடகர், தைலங்கர், திராவிடர், மஹாராஷ்டிரர், குர்ஜரர் என்னும் ஐந்து திராவிடர்களும் (பஞ்ச திராவிடம்).
விந்திய மலைக்கு வடக்கில் ஸரஸ்வதர், கான்யகூப்ஜர். கௌடர், உத்கலர், மைதிலர் என்னும் ஐந்து கௌடர்களும் (பஞ்ச கௌடம்) வசித்து வந்தனர். 

இவர்கள் அனைவரும் பிராம்மணப் பிரிவுகள்.
ராஜ தரங்கிணி மட்டுமல்ல, ப்ராமமணர்கள் வரலாறை ஆராயும் ப்ராம்ணோத்பத்தி மார்தாண்டம்என்னும் வடமொழி நூலும்,
இந்த பஞ்ச கௌடர், பஞ்ச திராவிடர் என்னும் பத்து பிரிவினரையும் 
பிராம்மணர்களது பிரிவுகளாகச் சொல்கிறது.


வைவஸ்வத மனுவுடன், வந்த பிராம்மணர்கள்
ஸரஸ்வதி நதி தீரத்தில் குடியமர்ந்தனர்.
நாளடைவில் அவர்கள் பல் வேறு இடங்களுக்கும் குடியேறினர்.
அவர்கள் மட்டுமல்ல.
எல்லா வர்ணத்தவருமே ஆங்காங்கே பரவிச் சென்றனர்.
சிந்து நதிக்கு மேற்கே அரசமைத்த சிபியின் வம்சாவளியில் 
வந்த சோழவர்மன்,
தமிழ் நாட்டில் பூம்புகாரைத் தலை நகரமாகக் கொண்டு
சோழ நாட்டை நிர்மாணித்தான் என்று பார்த்தோம்.


பல்லாயிரக்கணக்கான வருடங்களாக மக்கள் பெயர்வு நடந்து,
பாரதம் முழுவதும் பரவியிருக்கின்றனர்.
அந்த வகையில், மிகவும் சமீபத்திய காலக்கட்டம் என்று சொல்லும் வண்ணம், ஆயிரம் வருடங்களுக்கு முன் இருந்த ஒரு குறிப்பிட்ட குடியமைப்பே
இந்த பஞ்ச கௌடர்களும், பஞ்ச திராவிடர்களும் இருந்த பகுதிகள்.


இதை நிச்சயமாகச் சொல்ல காரணம் இருக்கிறது.
மேலே கொடுக்கப்பட்டுள்ள வரிகளில் குர்ஜரம் என்பதை
எல்லோரும் குஜராத் என்று சொல்லி விடுகிறார்கள்.
இன்றைக்கு இருக்கும் குஜராத் என்று நாமும் நம்பி விடுகிறோம்.
ஆனால் விந்திய மலைக்குத் தெற்கே உள்ள குர்ஜரம் என்று சொல்லப்பட்டிருக்கிறதே,
இன்றைய குஜராத் விந்திய மலைக்குத் தெற்கே உள்ளதா
என்று யோசிக்க மறந்து விடுகிறோம்.
விந்திய மலைக்கு மேற்கே குஜராத் உள்ளது, தெற்கில் அல்ல.
அதனால் குர்ஜரம் என்று சொன்னது என்னவென்று
ராஜ தரங்கிணி எழுதப்பட்ட காலக்கட்டத்தில் பார்க்க வேண்டும்.


அப்பொழுது, குர்ஜர ப்ரதிஹாரர்கள் என்னும் அரசர்கள்,
6ஆம் நூற்றாண்டு முதல் 11 ஆம் நூற்றாண்டு வரை
தற்போதைய ராஜஸ்தான், குஜராத், விந்திய மலைக்குத்
தென் பகுதியில் இருந்த இடங்களை ஆண்டு வந்தனர்.
குர்ஜர நாடு என்பதே மிகவும் பெரிதாகப் பரவி இருந்தது.
அதன் அரசர்கள் “ஆரியவர்த்த மஹாராஜாதி ராஜா
என்ற பட்டப் பெயருடன் ஆண்டு வந்தார்கள்.
இதைக் கவனிக்க வேண்டும்.
குர்ஜரத்தை ஆண்ட மன்னர்கள் ஆரியவர்த்த ராஜாக்கள்
என்ற பெயர் கொண்டிருந்தனர்.
அந்த நாட்டின் விந்திய மலைக்குத் தெற்கில் இருந்த பகுதி
பஞ்ச திராவிடத்தில் ஒன்று!
குர்ஜர திராவிடர்கள் என்று அழைக்கப்பட்டவர்கள் பிராம்மணர்கள்!!


குர்ஜரம் என்பதைப் போல மஹாராஷ்டிரம் என்று
இன்றைய இந்தியாவில் இருக்கும் இருக்கும் பகுதியை நாம் பார்க்கிறோம். அந்தக் குடியிருப்புகள் ஏற்பட்ட காலத்தில் அது இருந்த பகுதி,
இன்றைய மஹாராஷ்டிரத்தின் ஒரு பகுதியாக மட்டுமே இருந்திருக்கும்.

தைலங்கம் என்பது ‘த்ரிலிங்கம்என்னும் பெயர் கொண்ட நாடு.
அது நாளடைவில் தெலுங்கம் என்று மாறி,
இன்று கிழக்குக் கரையோர மாநிலமான ஆந்திரா முழுவதுமாக இருக்கிறது.

அதைப்போலவே கர்நாடகமும்.
சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்குச் சிலை செய்ய
இமயமலைக்குச் சென்ற போது,
அவனை எதிர்த்துப் போரிட்டு வீழ்ந்த மன்னர்களுள்
‘கொடுங் கருநாடர்’, ’கொங்கணர் ஆகியோர் அடங்குவர்.
ஆங்காங்கே சிறு சிறு நாடுகளாகத்தான் இவை இருந்தன.
இன்றைக்கு சுதந்திர இந்தியாவில் நாம் பாகுபடுத்தியிருப்பது போல, கர்நாடகம், மஹாராஷ்டிரம், ஆந்திரா, குஜராத் முழுமையும் என்று இவை சொல்லப்படவில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.


அவ்வாறேதான் திராவிடம் என்று சொல்லப்பட்ட நாடும்.
அன்றைய வழக்கத்தில், தமிழ் நாட்டுக்குத் தனித் தனியாக,
சேர, சோழ, பாண்டிய நாடு என்ற அடையாளம் இருந்தது.
அப்படித்தான் மஹாபாரதத்திலும் அடையாளம் காட்டப்பட்டது
என்று பல இடங்களிலும், இந்தத் தொடரில் பார்த்தோம்.
ஆனால் அவையெல்லாம், 5000 வருடங்களுக்கு முந்தின நிலை
என்று சொல்லலாம்.
சமீப காலம் என்றால், கி.மு 3 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது
என்று சொல்லப்படும் அசோகர் காலக் கல்வெட்டிலும்
சேர, சோழ, பாண்டியர் என்று பிரித்துத்தான் சொல்லப்பட்டுள்ளது.
இந்தக் கல்வெட்டு காணப்படும் இடம்
குஜராத் மாநிலத்தில் உள்ள கிர்னார் என்னுமிடம்.
எனவே வட இந்தியா முழுவதும்,
தமிழ் மன்னர்கள் பெயராலேயே தமிழ் நாட்டை அறிந்திருக்கிறார்களே தவிர, திராவிடன் என்னும் பெயரால் அல்ல.


எனவே பஞ்ச திராவிடம் என்று சொல்லப்பட்ட ஐந்து இடங்கள்,
சேர, சோழ, பாண்டியர்களது ஆளுகைக்கு
அப்பாற்பட்டதாகத்தான் இருந்திருக்க வேண்டும்.



இதை மேலும் ஆராய, பஞ்ச கௌடர்கள் இருந்த இடங்களைப் பார்போம்.  பஞ்ச கௌடம் என்று சொல்லப்பட்டுள்ள
ஸரஸ்வதர், கான்யகூப்ஜர். கௌடர், உத்கலர், மைதிலர்
என்னும் இவை எதுவுமே இன்றைக்கு
அந்தப் பெயரில் இருப்பிடங்களாக இல்லை
என்பதை நாம் கவனிக்க வேண்டும்.
இவற்றுள் உத்கலர் என்பது, நமது தேசிய கீதத்தில் வருகிறது.
(திராவிட உத்கல வங்கா)
அதாவது, சுதந்திரம் வாங்குவதற்கு முன்
உத்கலம் என்னும் பெயரில் ஒரு இடம் இருந்திருக்கிறது.
தேசிய கீதத்தை ஆராய்ந்தால்,
அதில் சொல்லப்பட்டுள்ள இடங்கள் அனைத்துமே
பஞ்ச கௌட, பஞ்ச திராவிடம் மட்டுமே.


தேசிய கீதத்தில் "பஞ்சாப, சிந்து, குஜராத, மராட்டா, திராவிட, உத்கல, வங்கா’ 
என்று 7 இடங்கள் சொல்லப்படுகின்றன.
இவற்றுள் பஞ்சாப், சிந்து ஆகியவை ஸரஸ்வதர்கள் வசித்த இடம்.
குஜராத், மராத்தா என்பவை
குர்ஜரர்கள், மஹாராஷ்டிர திராவிடர்கள் வசித்த இடம்.
திராவிடம் என்பது பஞ்ச திராவிடத்தில் அடக்கம்.
உத்கல, வங்கம் என்பது உத்கல பிராம்மணர்கள் வசித்த இடம்.
சென்ற ஆயிரம் வருடங்களாக ராஜ தரங்கிணி சொல்லும் பத்து இடங்கள் முக்கியத்துவம் பெற்றிருக்கவே,
அவற்றை சொல்லிக் கொண்டு வந்திருக்கின்றனர்.
அதுவே தேசிய கீதத்திலும் வெளிப்பட்டிருக்கிறது.


ராஜ தரங்கிணியில் இந்தப் பத்து இடங்களும்
வரிசையாகத்தான் சொல்லப்பட்டிருக்கின்றன.
கௌடர்கள் வரிசையைப் பார்ப்போம்.
ஸரஸ்வதர், கான்யகூப்ஜர். கௌடர், உத்கலர், மைதிலர்
என்பது வரிசையாக
மேற்கில் ஸரஸ்வதி நதி முதல் ஆரம்பித்து, கிழக்கு வரை செல்கிறது.
மேற்கில் ஸரஸ்வதி நதி தீரத்தில் ஸரஸ்வதி பிராம்மணர்கள் வசித்தனர்.
அதற்குக் கிழக்கே மத்தியப் பிரதேசம், பீஹார் போன்ற இடங்கள் கான்யகூப்ஜம் எனப்பட்டது.
அத்ற்குக் கிழக்கே கண்டகி நதிக்கும், சரயு நதிக்கும் இடையில் இருந்த பகுதி கௌடம் என்று வழங்கப்பட்டது என்று
‘ஆதி கௌட தீபிகா என்னும் நூல் கூறுகிறது. 

அதற்கும் கிழக்கே உத்கலம் என்பது
இன்றைய ஒரிசாவும், ஜார்கண்டும், பெங்காலும் சேர்ந்த பகுதியாகும்.
அங்கிருந்து வடக்கே சென்றால் இமய மலைப் பகுதியில்
சீதை பிறந்த மிதிலா போன்ற இடங்களைக் கொண்ட
நேபாளப் பகுதிகள் மைதிலி பிராம்மணர்கள் வசித்த பகுதியாகும்.



இவை அனைத்தும் சேர்ந்த பகுதி அதாவது காஷ்மீரிலிருந்து (ஸரஸ்வதியிலிருந்து) பெங்கால் வரை பரவியிருந்த பகுதி
கௌட நாடு எனப்பட்டது என்று ஆதி கௌட தீபிகா கூறுகிறது.

பஞ்ச திராவிட நாடுகளும் அப்படியே
வரிசைக் கிரமமாக இருப்பதைக் காணலாம்.
ராஜ தரங்கிணி தரும் வரிசை :-
கர்நாடகர், தைலங்கர், திராவிடர், மஹாராஷ்டிரர், குர்ஜரர்

தற்போதைய கர்நாடகம்,
அதற்கு வடக்கில் தைலங்கப் பகுதிகள் (இன்றைய ஆந்திரப்பிரதேசம் அல்ல) இருந்திருக்க வேண்டும்.
முந்தின பகுதியில் மஹாபாரதப் போர் முடிந்தவுடன்
அர்ஜுனன், தென் இந்தியாவுக்கு வந்து,
திராவிடர்கள், ஆந்திரர்கள், மஹிஷர்கள், மற்றும் கொல்வ மலை
மக்களுடன் போரிட்டு வெற்றி பெற்றான் என்று பார்த்தோம்.
அவன் வரும் வழியில் வடக்கிலிருந்து தெற்காக
இவை அமைந்திருக்க வேண்டும்.
ஆந்திரர்களுக்குத் தெற்கில் மஹிஷர்கள் (மைசூர்),
அவர்களுக்குத் தெற்கில் கொல்வம் (கொல்லம்) என்று இருக்கவே, ஆந்திரத்துக்கு வடக்கில் திராவிடம் இருந்திருக்க வேண்டும்.


அதே வரிசையை ராஜ தரங்கிணி சொல்லும்
பஞ்ச திராவிடத்திலும் காணலாம்.

பஞ்ச திராவிடப் பகுதிகளில் தெற்கில் இருப்பது கர்நாடகம்,
அதற்கு வடக்கில் தைலிங்கம்,
அதற்கு வடக்கே திராவிடம்,
அதற்கு வடக்கே மஹாராஷ்டிரர்,
அதற்கு வடக்கே குர்ஜரர்.
இப்படி வரிசைக் கிரமமாக அமைந்திருப்பதை
பஞ்ச கௌடர்களிலும், பஞ்ச திராவிடர்களிலும் பார்க்கலாம்.



இந்தப் படத்தில், அரபிக்கடலிலிருந்து குஜராத் (துவாரகை) வழியாக நிலப்பகுதிக்குச் செல்லும் சிவப்புக் கோடு,
வெள்ளத்தில் மனு தப்பிச் சென்ற வழியாகும்.
அவன் சென்றடைந்தது ஸரஸ்வதி நதி.
வட இந்தியாவில் வரிசையாக ஐந்து வட்டங்கள்,
ஐந்து கௌடப் பகுதிகள் ஆகும்.
1-       ஸரஸ்வதர்
2-       கான்யகூப்ஜர்
3-       கௌடர்
4-       உத்கலர்
5-       மைதிலி
தெற்கில் அரபிக் கடலோரப் பகுதியில் கடலில் வெளிர் நிறத்தில் காணப்படுவது முழுகிய பகுதிகள்.
அவற்றுள் மீட்டெடுக்கப்பட்ட பகுதிகள்
பஞ்ச திராவிட பிராம்மணர்கள் வசித்த பகுதி.
அவை
6. கர்நாடகர்
7.தைலங்கர்
8.திராவிடர்
9.மஹாராஷ்டிரர்
10.குர்ஜரர்.

பிற்காலத்தில் இவை ஒட்டிய பிற பகுதிகளுக்கும் அந்தந்தப் பெயர்களே வந்திருக்க வேண்டும்.


திராவிட கௌடப் பகுதிகளை தமிழ் நிகண்டுகளும் சொல்கின்றன.
தமிழ் நாட்டைச் சுற்றி 18 நாடுகள் இருப்பதாக திவாகர நிகண்டு கூறுகிறது.
அவற்றுள் திராவிடம் ஒன்று.
அதாவது திராவிடம் என்பதைத் தமிழ் நாடு என்று சொல்லவில்லை.
அது தமிழ் நாட்டுக்கு வெளியே இருந்த நாடு.
அந்த 18 நாடுகள் வருமாறு:-
1.அங்கம்
2.வங்கம்
3.கலிங்கம்
4.கௌசிகம்
5.சிந்து
6.சோனகம்
7.திராவிடம்
8.சிங்களம்
9.மகதம்
10.கோசலம்
11.மராடம்
12.கொங்கணம்
13.துளுவம்
14.சாவகம்
15.சீனம்
16.காம்போஜம்
17.பருணம்
18.பர்ப்பரம்.

இது குறித்து இன்னொரு செய்யுளும் இருக்கிறது. அதன்படி தமிழ் நாட்டைச் சுற்றி 17 நாடுகள் இருந்தன எனப்படுகிறது. அவை

1.சிங்களம்
2.சோனகம்
3.சாவகம்
4.சீனம்
5.துளு
6.குடகு
7.கொங்கணம்
8.கன்னடம்
9.கொல்லம்
10.தெலுங்கம்
11.அங்கம்
12.மகதம்
13.கடாரம்
14.கௌடம்
15.கருங்குசலம்
16.கலிங்கம்
17.வங்கம்


இந்த இரண்டில் திராவிடம் ஒன்றிலும், கௌடம் மற்றொன்றிலும் இடம் பெற்றிருப்பது கவனிக்கத்தக்கது.
ஸ்கந்த புராணமும் பாரத தேசத்தில் இருந்த நாடுகள் என்று
ஒரு பட்டியல் கொடுக்கிறது. (மஹேஸ்வர காண்டம்).
அதில் கௌட தேசம் இருக்கிறது. திராவிட தேசம் இல்லை.


பஞ்ச கௌடம், பஞ்ச திராவிடம் என்று பிற்காலத்தில் பிரிந்திருந்தால் இவ்வாறு இருப்பது சாத்தியம்.
அதாவது முதலில் கௌட தேசம் என்று மட்டுமே இருந்தது.
கண்டகி நதியை ஒட்டி அமைந்த பகுதி கௌட தேசம் என்று அழைக்கப்பட்டது. மஹாபாரத காலத்துக்குப் பின் வந்த மன்னனான
ஜனமேஜயன் செய்த யாகத்திற்கு வந்த் பிராம்மணர்கள்
இந்த கௌட தேசத்தில் தங்கினார்கள் என்று
பிராம்மணோத்பத்தி மார்த்தாண்டம் என்னும் நூல் சொல்கிறது.
இந்த பிராம்மணர்கள் ஸரஸ்வதி கௌடர்
என்னும் பெயரைக் கொண்டிருந்தனர்.
ஆங்காங்கே அவர்கள் வசித்து வந்த இடங்களின் பெயரால்
பஞ்ச கௌடர்கள் என்னும் பெயர் வந்திருக்க் வேண்டும்.


முதலில் இருந்தது கௌடர்கள்.
பிறகு அவர்கள் பஞ்ச கௌடர்கள் ஆனார்கள்..
இந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டு,
பஞ்ச திராவிடர் என்று ஒரு பிரிவு எற்பட்டிருக்க வேண்டும்.
திராவிட கௌடகர் என்னும் பெயரால் ஒரு முனிவர் இருந்தார்.
கௌடர், திராவிடர் இருவருக்கும், பொதுவான முன்னோர்கள் இருந்தார்கள்
என்பதை இந்தப் பெயர் வலியுறுத்துகிறது.
இதை மேற்கொண்டு ஆராய்ந்தால்,
இந்தப் பெயர்கள், குறிப்பிட்ட சம்பிரதாயத்தைப் பின் பற்றி
உண்டாகி இருக்கலாம் என்று தெரிகிறது.



கி.பி. 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கௌடபதாசாரியார் (ஸரஸ்வதி பிராம்மணர்) என்னும் அத்வைத குருவைப் பின்பற்றிய பிராம்மணார்கள் கௌடர்கள் எனப்பட்டார்கள்.
இவர்கள் பஞ்சாயதன முறையைப் பின்பற்றியவர்கள்.
இந்த முறையில் சிவன் விஷ்ணு, தேவி, சூரியன், கணேசர்
ஆகிய ஐந்து மூர்த்திகளையும் வழிபட்டனர்.
இந்த ஐந்து மூர்த்திகளையும் ஒன்றாக வழிபட்டனர்.
அவரவர்களுக்கு இஷ்ட தெய்வமான ஒரு மூர்த்தியை நடுவில் வைத்து,
மற்ற மூர்த்திகளைச் சுற்றிலும் வைத்து வழிபட்டனர்.
குறிப்பிட்ட தெய்வத்தை மட்டுமே வழிபட வேண்டும்
என்ற கட்டுப்பாடுகளை இவர்கள் வைத்துக் கொள்ளவில்லை.


                               கௌடபதாச்சாரியர்

இவர்கள் அனைவரும் ஸரஸ்வதி பிராம்மணர்கள்.
அதாவது ஸரஸ்வதி நதிக் கரையில்
மனுவின் காலம் தொட்டு வசித்தவர்கள்.
பிறகு வட இந்தியா முழுவதும் குடியேறினார்கள்.
ஆங்காங்கே இருந்த இந்த மக்கள் முதலில்
கௌட தேசத்தின் சம்பந்தத்தால் கௌடர்கள் என்ற பெயர் பெற்றனர்.
கௌடபதாச்சாரியாரது அத்வைதக் கருத்துக்களையே
இவர்கள் பின் பற்றி வந்திருக்க வேண்டும்.
அதாவது கௌடபதாசாரியாரது காலம் வரை
இவர்கள் சம்பிரதாயத்தில் வேறுபாடு இருக்கவில்லை.


கௌடபதாசாரியரின் சிஷ்ய பரம்பரையில் வந்தவர் ஆதி சங்கரர் ஆவார். அவர் ஒரு மாறுதலைக் கொண்டு வந்தார்.
அவர் பஞ்சாயதன வழிபாட்டுடன் ஆறாவதாக,
சுப்ரமணியர் வழிபாட்டையும் சேர்த்துக் கொண்டார்.
ஷண்மதம் என்று அவர் ஸ்தாபித்தது, ஸரஸ்வதி பிராம்மணர்களது வழிபாட்டுடன் ஆறாவது வழிபாட்டு முறையையும் சேர்த்ததே.
ஆதி சங்கரரைப் பின்பற்றியவர்கள் பஞ்ச திராவிடர்கள்
என அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.
ஆதி சங்கரர் தன்னை ‘திராவிட சிசு என்று அழைத்துக் கொண்டார் (சௌந்தர்ய லஹிரி -75) என்பதே இதற்கு சாட்சி.
அவரைப் பின்பற்றிய பிராம்மணர்கள் பஞ்ச திராவிடர்கள்
என்று தங்களை அழைத்துக் கொண்டிருக்க வேண்டும்.
இதற்கு ஒரு முக்கியக் காரணம் இருக்கிறது.




பஞ்ச திராவிடம் இருந்த பகுதி அனைத்தும்,
பரசுராமரால் அரபிக் கடலிலிருந்து மீட்கப்பட்ட பகுதியாக
இருப்பதைக் காணலாம்.
7000 வருடங்களுக்கு முன் பரசுராமர் அவற்றை மீட்டெடுத்த போது,
அந்த இடங்களில் ஸரஸ்வதி பிராம்மணர்களை அவர் குடியமர்த்தினார்
என்று புராணங்கள் கூறுகின்றன.
ஆதி சங்கரர் அந்த பகுதியைச் சேர்ந்த பிராம்மணர் ஆவார்.
வைவஸ்வத மனு ஆண்ட திராவிட நாட்டின் பகுதிகளாக அவை இருக்கவே தங்களுக்கும் திராவிட அடையாளம் கொடுத்துக் கொண்டிருக்க வேண்டும். ‘திராவிட மார்கம் என்று சொல்லப்படுவது
இந்தக் கரையோரப் பகுதிகளாக இருக்கலாம்.


இங்கு இன்னொரு விவரத்தையும் பார்க்கலாம்.
தீர்த்த யாத்திரை செய்த பாண்டவர்கள் (பகுதி 49),
தென் கடலில் திராவிட நாட்டுப் பகுதிகளுக்கு வந்தார்கள் என்றும்,
அதன் தொடர்ச்சியாக அரபிக் கடலோரமாக பிரபாஸம் வரை
சென்றார்கள் என்றும் பார்த்தோம்.
பிரபாஸத்தை அடுத்து இருப்பது துவாரகை.
தீர்த்த யாத்திரையில் கிருஷ்ணரும் வந்தார்.
அவருக்கு இருப்பிடம் துவாரகை என்பதால்,
தென் கடல் என்று சொல்லப்பட்டது,
துவாரகைக்குத் தென் கடலான அரபிக் கடலாக இருக்க வேண்டும்.
அந்தக் கடலிலிருந்து மீட்கப் பட்ட பகுதிகளில் குடியேறிய பிராம்மணர்கள், ஆதி சங்கரரைப் பின்பற்றித் தங்களை திராவிடர்கள்
என்று அழைத்துக் கொண்டிருக்க வேண்டும்.


பஞ்சாயதன வழிபாட்டுடன் ஆறாவதாக சுப்ரமணிய மதத்தை சங்கரர்
ஏன் இணத்திருக்க வேண்டும் என்ற கேள்விக்குப் பதில் தேடினால்,  இன்னொரு சுவாரசியமான விவரம் கிடைக்கிறது.


சுப்பிரமணியர், திராவிட தேசத்தை ஆண்ட வைவஸ்வத மனுவுக்கு முன்னோர்கள் வாழ்ந்த தென்னாட்டின் கண் இருந்த தெய்வமாகும்.



வைவஸ்வத மனுவின் பூர்வீகத்தைத் தேடினால்,
அது இந்தியக் கடலுக்குள் முழுகிவிட்ட
தென்னன் தேசப் பகுதிகளுக்குச் செல்கிறது. 
வைவஸ்வத மனுவின் தந்தை விவஸ்வான் என்று
ஸ்ரீமத் பாகவதம் சொல்கிறது என்று பார்த்தோம்.
அந்த விவஸ்வான் யார்?
அவன் சூரியன்!
அந்த சூரியனுக்குப் பிறந்த பிள்ளை கர்ணன்.
இன்னொருவன் ரேவந்தன்.
அதே சூரியனுக்கும் சம்ஞைக்கும் பிறந்தவன் தான் வைவஸ்வத மனு.
அவர்களுக்கும் இனி வரப்போகும் மனுவான சாவர்ணி மனு பிறக்கப்போகிறான் என்று புராணங்கள் கூறுகின்றன.
இனி வரப்போகும் மனுவும், தற்போதைய வைவஸ்வத மனுவின் பெற்றோருக்குப் பிறக்கப் போகிறவன் என்றால்,
இவையெல்லாம் மறை பொருளாக கூறும் விவரங்கள்
என்று தெரிந்து கொள்ள வேண்டும்.


சூரியனை முன்னிட்டே மனுவின் பிறப்பு சொல்லபப்டுகிறது.
எங்கே சூரிய சக்தி நிலவுகிறதோ அங்கே மனித குலம் தளிர்க்கும்.
பனி யுகத்தின் போது, பூமியின் வட பாகம் சூரிய சக்தியைக் காணவில்லை.
அங்கு மூடியிருந்த பனியின் காரணமாக மக்கள்
அங்கு மக்கள் தொகை குறைந்து விட்டது.


அப்பொழுது பூமியின் தென் பாகத்தில்தான் மனித இனம் தழைக்கும் வண்ணம், சூரிய சக்தி இருந்திருக்கிறது.
அப்படித் தழைத்ததால் வந்தவர்களுள் தீரனாக இருந்தவன்
வைவஸ்வத மனு என்றும்,
அவனது முயற்சியால் மனித குலம் பெருகிற்று என்றும்
 நாம் பொருள் கொள்ள வேண்டும்.


வைவஸ்வத மனுவின் வம்சாவளி தக்ஷப் பிரஜாபதியிலிருந்து ஆரம்பிக்கிறது. தக்ஷப் பிரஜாபதியின் வழியில் வந்தவன் விவஸ்வான் என்றும்,
அவனுக்குப் பிறந்தவன் வைவஸ்வதன் என்று வருவதால்,
அந்த தக்ஷன் இருந்த தென்னாட்டுக்கு
நாம் பின்னோக்கிச் செல்ல வேண்டும்.


தக்ஷன் கதையில் அவன் செய்த யாகத்தில் சிவனுக்கு இடம் கொடுக்கவில்லை என்று சொல்லப்பட்டுள்ளது.
சிவன், அழிக்கும் தொழில் செய்யும் தெய்வம்.
தக்ஷ யாகத்தில் சிவனுக்கு இடம் இல்லை என்றால்,
தக்ஷனது நாட்டில் அழிவின் அறிகுறிகளே இல்லை
என்பதை இது தெரிவிக்கிறது.
ஆனால் காலச் சக்கரம் சுழலுகையில், அழிவும் ஏற்பட்டாக வேண்டும். அதனையே சிவனது கோபமாகவும்,
பிரளய கால அக்கினியாகவும் சித்திரித்துள்ளார்கள்.
பெரும் தீ வந்து மனித குலம் நாசம் அடைந்திருக்கும்.
அப்பொழுது தக்ஷன் சிவனை வேண்டுகையில்,
இந்த அழிவு, பிரளய கால அழிவு,
எப்படியும் செய்யப்பட வேண்டிய அழிவு என்று சிவன் சொல்கிறார்.


இதன் மூலம், முந்தின மக்கள் கூட்டம் தீயினால் ஆபத்தில் சிக்கிப்
பேரழிவு கண்டிருக்க வேண்டும்.
தீ என்னும் வெப்பத்தால் அழிவும்,
அதைத் தொடர்ந்து மழையும் வரும்
என்பது புராணங்கள் தெரிவிக்கும் செய்தி.
அதன் பிறகு மக்கள் தோற்றம் பெருகுகிறது.


அப்படிப்பட்ட காலக்கட்டத்தில்
சிவனும், உமையும்,
அவர்களுக்குப் பிறந்த குமரனும் (சுப்பிரமணியர்),
அவர்களுக்குப் பின் குறுமுனியும்
தோன்றிய இடம்  தென்னாடு என்பது
திரு விளையாடல் புராணம் சொல்லும் சரித்திரம்.
அதற்குப் பிறகுதான் பாண்டிய மன்னர்கள் வருகிறார்கள்.
அவர்கள் பரம்பரையில் வந்த மலயத்துவஜ பாண்டியன்
விஷ்ணுவை வேண்டி,
உமையவளே தடாதகைப் பிராட்டி என்னும் மீனாட்சி தேவியாகப் பிறக்கிறாள்.


அதற்கு சில ஆயிரம் ஆண்டுகள் முன்னால் வைவஸ்வத மனு இருந்திருக்கிறான்.
பனியுகம் முடிந்தபின் வந்த முதல் வெள்ளத்தில் அவன் பாதிப்பு அடைந்தான். ஆனால் அப்பொழுது தென்னாடு பாதிப்பு அடையவில்லை.
அந்தத் தென்னாடு பூமத்திய ரேகைக்கு மிகவும் தெற்கே இருந்திருந்தால்
இது சாத்தியம்.
தென் பகுதிக்கு உரியவர்களான அசுரர் பரம்பரையில் வந்த
தாரகாசுரன், சூரபத்மன் போன்றவர்களை
சுப்பிரமணியர் அழித்த போது,
வடக்கில் பனியுகமும்,
தெற்கில் சூரிய ஒளியும் இருந்த காலக்கட்டமாக இருக்க வேண்டும்.
அந்த காலகட்டத்தில் தோன்றிய வைவஸ்வத மனுவுக்கு
சுப்பிரமணியரும், ஒரு கடவுளாக எண்ணப்பட்டிருக்க வேண்டும்.


அதுவரை தென்னாட்டில் இருந்த மக்கள்
சிவன், விஷ்ணு, சூரியன், தேவி
ஆகிய நான்கு தெய்வங்களைத்தான்  வழிபட்டிருக்க வேண்டும். வெள்ளத்திற்குப் பிறகு ஸரஸ்வதி நதி தீரத்தை வந்தடைந்த மனுவும் ரிஷிகளும் இந்த நான்கு தெய்வங்களையும் வேதமுகமாகத் துதித்துள்ளனர். நாளடைவில் கணேசர், சுப்பிரமணியரையும் துதித்துள்ளனர்.
அவர்களுள் சுப்பிரமணிய வழிபாடு ஆதி சங்கரர் காலம் வரை முறைப்படுத்தப்படவில்லை.
ஸரஸ்வத கௌடர்கள் சுப்பிரமணியர் நீங்கலாக மீதி ஐந்து தெய்வங்களை வழிபட்டனர்.
மனு ஆண்ட முந்தின திராவிட தேசத்தின்
சுப்பிரமணியர் தொடர்பு காரணமாக,
ஆறாவதான சுப்பிரமணிய வழிபாடும் செய்யவே,
திராவிட அடையாளத்தை அவர்கள் பெற்றிருக்கலாம்.



வைவஸ்வத மனுவின் பூர்வீகம், பூமியின் தென் பாகத்திலிருந்தது என்று சொல்லும் வண்ணம், இன்னும் ஒரு சுவடு இன்றும் இருக்கிறது.
பூமியின் வடபாகத்தில் புது வருடத்தை சித்திரையில் ஆரம்பிப்பது போல,
பூமியின் தென் பாகத்தில் புது வருடத்தை ஐப்பசியில் ஆரம்பிப்பது பொருத்தமாக இருக்கும்.
நியூஸிலாந்து போன்ற இடங்களில் ஐப்பசி மாதத்தில்தான் புது வருடம் கொண்டாடுகிறார்கள்.
வட பகுதியிலிருக்கும் நம் நாட்டின் பல பகுதிகளிலும்
சித்திரையில் புது வருடம் தொடங்குகிறது இரண்டே இரண்டு இடங்களைத் தவிர.
ஒன்று துவாரகை இருக்கும் குஜராத்.
மற்றொன்று மைதிலி பிராம்மணர்கள் வசித்த நேபாளம்.
இந்த இரண்டு இடஙகளிலும் ஐப்பசியில் புது வருடம் கொண்டாடுகிறார்கள்.
தென்பகுதி வழக்கம் இன்றும் இங்கு தொடருவதற்கு
வேறென்ன காரணம் சொல்ல முடியும்?


அரபிக் கடலோரத் திராவிடப் பகுதிகளில் வாழ்ந்த ஸரஸ்வத மக்களை
ஆதொண்டை, தான் ஸ்தாபித்த தொண்டை மண்டலத்தில்
குடியேற்றிருக்க வேண்டும்.
காஞ்சி வாழ் பிராம்மணர்கள் வேதத்தைப் பரப்பினதற்குப் பெயர் போனவர்கள். வேதம் கற்பதற்கு, பாரதத்தின் பிற பகுதிகளிலிருந்து
காஞ்சிக்கு மக்கள் வந்தனர்.
பரசுராமர் காலம் தொட்டே மீட்கப் பட்ட திராவிடத்தில் குடியேறின
ஸரஸ்வத பிராம்மணர்களை, ஆதொண்டை
தன் நாட்டில் குடி வைத்திருக்கிறான்.
அவர்களது திராவிட நாட்டுத் தொடர்பால்,
காஞ்சியும் அதனைச் சார்ந்த இடங்களும் திராவிட நாடு
என்று பெயர் பெற்றிருக்கிறது.


காஞ்சிக்குத் திராவிட அடையாளம் கொடுத்தவர்கள், பிராம்மணர்களே. சாணக்கியர் காஞ்சி நகரைச் சேர்ந்த திராவிடப் பிராம்மணரே.
ஆனால் காஞ்சி நகரம், மஹாபாரதக் காலத்தில் திராவிடம் என்று அழைக்கப்படவில்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
ஆதி சங்கரருக்குப் பிறகே இந்த திராவிட அடையாளம்
அதிகம் ஏற்பட்டிருக்கிறது.
த்ரமிடாசார்யர் என்னும் வைணவ ஆசாரியர்,
திராவிட தேசத் தொடர்பால் அந்தப் பெயரைக் கொண்டிருந்தார்.
இவர்கள் அனைவருமே பிராம்மணர்கள் என்பதால்,
தமிழ்நாட்டு திராவிடவாதிகளின் திராவிடக்கருத்து அடி பட்டுப் போகிறது.


திராவிடம் இத்துடன் நிற்கவில்லை.
வராஹமிஹிரரும், திராவிட தேசம் என்ற
ஒரு இடத்தை அடையாளம் காட்டியுள்ளார்.
அது நாம் மேற் சொன்ன அரபிக் கடலோரப்பகுதியில்தான் இருக்கிறது.
அந்த விவரங்களை அடுத்தக் கட்டுரையில் பார்ப்போம்.