ஞாயிறு, 4 செப்டம்பர், 2011

70. அறிவன் என்னும் தமிழ் ஜோதிடன்.




மக்கள் வகை ஏழு என்று
 
சொல்லும் புறத்திணை இயல் 74 ஆவது சூத்திரத்தில்
 
பல விவரங்கள் புதைந்துள்ளன. (பகுதி 61).
 
அந்தச் சூத்திரத்தைப் படித்து விட்டு

பார்ப்பனன் முதலான நான்கு வர்ணங்கள் மட்டுமே இருந்தனர்
 
என்று திராவிட போதை கொண்டவர்கள் நினைக்கின்றனர்

அதே சூத்திரத்தில் சொல்லப்பட்டுள்ள
 
அறிவன், தாபதர், பொருநர்
 
என்னும் வகைகளையும் சேர்த்தே
 
அனை நிலை வகையொடு ஆங்கு எழு வகையான்
தொகை நிலை பெற்றது என்மனார் புலவர்

என்று தொல்காப்பியம் சொல்வதை
ஏனோ அவர்கள் பார்க்க விரும்பவில்லை.
அவர்கள் பார்த்தார்கள் என்றால்
இந்த வகைகள் எந்த அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டன
என்ற விவரம் புலனாகி இருக்கும்.
உயர்வு- தாழ்வு என்ற அடிப்படையிலோ,
பிறப்பு அடிப்படையிலோ
நம் முன்னோர்கள் இந்த வகைகளை உண்டாக்கவில்லை.
இதை அறிவன், தாபதர் என்ற இரண்டின் மூலமாகவே
நாம் தெரிந்து கொள்ளலாம்.


அறிவன் என்பவன் காலக் கணிதன்.
இன்றைய வழக்கில் சொல்வதென்றால்
அவனுக்கு ஜோதிடன் என்று பெயர்.
தாபதர் என்பவர் தவமுனி.
குடும்ப வாழ்க்கையை விட்டுவிட்டு,
ஜடாமுடியுடன், தவ வாழ்க்கையை மேற்கொண்டவர்.
இந்த இரண்டு வகைகளும்
ஜாதியின்பாற்பட்டோ, அல்லது
ஒரு திணிப்பாகவோ ஏற்படுவதில்லை.
அவரவர் இயல்பின் படி,
சில ஆர்வங்கள் உண்டாகின்றன.
அதனால் சில திறமைகள் உருப்பெறுகின்றன.
அந்தத் திறமையின் அடிப்படையில்
அவர் செய்யும் தொழில் அல்லது செயல் அமையப் பெறுகிறது.
இந்த உருவாக்கத்தை நாம் ஜோதிடருக்கும் சொல்வோம்.
தவ முனிக்கும் சொல்வோம்.


இதே அடிப்படைதான் வர்ணங்களுக்கும்
என்று நாம் முன்பே பார்த்தோம் (பகுதி 52).
சிலவிதமான இயல்புகளின் காரணமாக
சிலவிதமான திறமைகள் இயல்பாகவே அமையப் பெறுகின்றன.
அவற்றின் அடிப்படையில் தொழில் செய்வதுதான் விவேகம்.
நான்கு வர்ணத்தைச் சேர்ந்தவர்கள் யாராக இருந்தாலும்,
இயல்பு அல்லது சுபாவத்தின் அடிப்படையில்
அவர் ஜோதிடர் ஆகலாம்.
தவமுனியாகலாம்.
இயல்பு அல்லது சுபாவத்தால் ஏற்படும் திறமையின் காரணமாக
ஓரிடத்தில் முக்கியத்துவம் கிடைக்கலாம்.
இன்னொரு இடத்தில் முக்கியத்துவம் கிடைக்காமல் போகலாம்.


உதாரணமாக பார்ப்பான் பாங்கன்என்னும்
தொல்காப்பிப் பொருளதிகாரச் சூத்திரம், 490,
பார்ப்பனனுக்கு முதலிடம் கொடுக்கிறது.
எங்கே?
தலைவன் காதல் வயப்பட்டு,
களவியலில் ஈடுபடும் பொழுது,
அவன் தான் செய்வது சரியா தவறா என்று
கேட்க வேண்டுமென்றால் அதற்கு முதல் ஆளாகப்
பார்ப்பனனைத்தான் கேட்பான்.
அவனுக்குப் பிறகுதான் பாங்கன் (தன்  நண்பன்) வருகிறான்.  


அது ஏன் என்று உரையாசிரியர் கூறுகிறார்.
பார்ப்பனன் என்பான் நன்றும், தீதும் ஆராய்ந்து
உறுதி கூறுவான் என்படும்.
பாங்கன் என்பான் அவ்வாறன்றித்
தலைமகன் வழி நின்றொழுகி வருமாகலின்
அவனை அவன் பின் (பார்ப்பன்னுக்கு அடுத்து) வைத்தார்.”

பார்ப்பானது கல்வி வேதக் கல்வியாகவும்,
தர்ம சாஸ்திரம் படிப்பதாகவும் இருப்பதால்
அவனுக்கு ஒரு செயலின்
தர்ம நியாயங்கள்,
அதனால் எற்படும் பாவ புண்ணியங்கள் தெரியும்.
அதனால் களவியலில் ஈடுபடுவோருக்கு
நல்லது கெட்டது எடுத்துச் சொல்வான்.

பாங்கன் என்னும் நண்பனோ
நட்புக்காக,
தலைவன் மனம் எப்படியோ
அதற்கேற்றாற் போல் சொல்வான்.
அதை முழுவதும் நல்லது என்று எற்றுக் கொண்டுவிட முடியாது.
இதனால் களவு நட்பில் ஆலோசனை பெறவேண்டி
பார்ப்பனனை நாடினர்.
இதை வெளிப்படுத்தும் ஒரு பாடல் குறுந்தொகை 156 இல் வருகிறது.


ஆனால் கற்பியலில் ஏற்படும் சந்தேகங்களத் தீர்க்க,
பார்ப்பனனுக்கு முதலிடம் தரவில்லை.
அங்கு பாணனுக்குத்தான் முதலிடம்!
இதை அடுத்த சூத்திரத்திலேயே சொல்கிறார்.
பாணன், கூத்தன், விறலி, பரத்தை, அறிவர், கண்டோர்
என்னும் மக்களிடம்
கற்பியலுக்கு ஆலோசனை பெற்று வந்தனர்
என்கிறார் தொல்காப்பியர்.
கற்பியல் என்றால்
இன்றைய பாஷையில் அரேஞ்டு மாரேஜ்”.
இரண்டு பக்கத்திலும் தாய், தந்தையர் சம்மதத்துடன்,
ஊரறிய சடங்குகள் செய்து திருமணம் செய்வித்தல் எனப்படும்.
இந்த வகையில் திருமணம் செய்யப்போகும் பெண்,
மற்றும் ஆணினது குணம், இயல்பு இவையெல்லாம்
தெரிந்துக் கொள்ள
பாணனிடம் முதலில் கேட்டுத்தெரிந்து கொள்ள வேண்டும்.

பாணன், பறையன், துடியன், கடம்பன் என்னும்
தொல்குடி மக்கள் நான்கு என்று
சங்க நூலில் சொல்லப்பட்ட (பகுதி 68) பாணன்,
கற்பியலுக்கு முதல் ஆலோசகன் ஆவான்.

அங்கு பார்ப்பனனுக்கு முதலிடம் இல்லை.
இன்றைக்குக் கீழோர் என்று ஆக்கப்பட்ட பாணன் வகையினர்,
ஒரு பெண் அல்லது ஆணின் கற்பு நிலையை
மிகச் சரியாகக் கணித்துக் கூறக்கூடியவர்
என்ற நிலையில் அன்று இருந்தனர்.
பாணனுக்கு மனித சுபாவம் நன்றாகத் தெரியும்.
நாடு முழுவதும் சென்று கொண்டிருப்பவர்கள் அவர்கள்.
அவர்கள் எல்லாவிதமாக மக்களையும் கண்டிருப்பர்.
அதனால் அவர்கள் ஒருவரைப் பார்த்த மாத்திரத்திலோ
அல்லது தாங்கள் அவர்களை
ஏற்கெனெவே பார்த்திருக்கக்கூடிய சாத்தியத்தாலோ
அவர்களது கற்பியல்புகளைப் பற்றி விவரங்களைக் கொடுப்பர்.

அதுமட்டுமல்ல பாணனுக்குச் சொல் வன்மை உண்டு.
அதனால்தான் அவனால் பாடிப் பரிசில் பெற முடிந்தது.
அந்தச் சொல்வன்மையை,
களவியலில் ஈடுபட்ட ஆண்கள்
பயன் படுத்திக் கொண்டனர்.
தலைவிக்குத் தூது விடவும்,
தலைவியை சமாதானப் படுத்தவும்
பாணனையே அழைத்தனர்.
அவனது சொல் வன்மையில் மயங்கி
அவனுக்கு விருந்து கொடுக்கிறேன்
என்று தலைவி சொல்லும் சங்கப் பாடலும் உண்டு.


அதே நேரம், தம்பதிகளான கணவன் மனைவிக்கு
இடையே இருக்கும் ஊடலையும் புரிந்துக் கொண்டு,
எப்படிப்பட்ட கற்புடையவளாகத் தலைவி இருக்கிறாள்
என்று பாணன் கண்டு கொள்ளும் சங்கப் பாடல்களும் உள்ளன.
இதனால் அக வாழ்க்கையில்
ஒருவர் குணத்தை,
இயல்பை,
கற்புடைமையைத் தெள்ளத் தெளிவாகப் புரிந்து கொண்டவன்
பாணனைப் போல வேறு ஒருவரில்லை என்பதால்,
கற்பியல் கேள்விகளுக்கு அவனுக்கே முதலிடம்.


இப்படி இயல்பு பார்த்துதான் செயல்பாடு கண்டிருக்கிறார்கள்.
அதன் அடிப்படையில் வகைப் படுத்தியிருக்கிறார்கள்.
ஆரியத் திணிப்பாகப் பார்ப்பனன் திணித்த கலாசாரமாக இருந்திருந்தால்,  
களவியலுக்குத் தன் பெயரையும்,
கற்பியலுக்குப் பாணன் பெயரையும்
முன்னிறுத்தி இருக்க மாட்டார்கள்.
மேலும் ஏழு வகை என்று
புறத்திணை இயல் சூத்திரம் சொல்வது போல
இவையெல்லாம் என்மனார் புலவர் சொன்னது.
அதாவது வழி வழியாக வந்தவை
இந்த வகை, வழக்கங்கள் என
புலவர்கள் சொல்வார்கள் என்கிறார் தொல்காப்பியர்.


கற்பியல் சூத்திரத்தில் அறிவனையும் சொல்லியிருப்பதைக் காணலாம்.
பெற்றோர் பார்த்துச் செய்யும் திருமணத்தில்
அறிவனுக்கு என்ன வேலை என்றால்,
மணப்பெண், மணமகன் ஆகியோரது
பிறந்த நாள், நக்ஷத்திரம், ஜாதகம் என்பவற்றின் அடிப்படையில்
அந்தத் திருமணம்,
கடவுள் சித்தத்தினால்
ஊழ்வலியால் ஏற்படுத்தப்பட்ட வாழ்கைதானா,
அது நன்றாக அமையுமா என்று கண்டு சொல்வதுதான்.

களவியலைப் பற்றிச் சொல்லும்போது,
ஒரு ஆணும் ஒரு பெண்ணும் எதிர்ப்பட்டு நோக்கி,
தங்கள் மனதைப் பறி கொடுத்து
ஒன்று சேர்வது ஊழ் வலியாலே என்று சொல்லப்படுகிறது.
வ்விதமாக ஒருவரை ஒருவர் சந்திக்காமல்,
மற்றவர்களால் அந்த மணம் ஏற்படுத்தப்படும் போது,
ஊழ் வலி இருக்கிறதா என்று பார்த்துச் சொல்ல
அறிவன் தேவை.
இதனால் கற்பியலில்
திருமணத்தை உறுதிப் படுத்த
அறிவன் பெயர் வருகிறது.
இதன் மூலம்,
ஜோதிட ரீதியாக திருமணப் பொருத்தம் பார்ப்பது என்பது
பழந்தமிழர் வாழ்வில் இருந்திருக்கிறது
என்று தெரிகிறது.


சீர்திருத்தத் திருமணங்கள்
திராவிட போதை உள்ளவர்களது வழக்கம்.
அறிவன் சொல்கேட்டு திருமணம் நிச்சயிப்பதும்,
அதையும் அவன் சொல்படி நாள் பார்த்துச் செய்வதும்
சங்ககாலத் தமிழர் வழக்கம்.

அந்த அறிவனை ஒரு தனி வகையாகச் சொல்லக் காரணம் என்ன?
அதற்கு அவர்களது இயல்புதான் காரணம்.
ஒவ்வொரு வர்ணமும் ஒவ்வொரு இயல்பின்படி
சொல்லப்பட்டுள்ளது என்பது போல,
சில குறிப்பிட்ட இயல்புகள் தூக்கலாக இருந்தால்
அவன் அறிவன் ஆகிறான்.
அந்த இயல்புகளை,
மறுவில் செய்தி மூவகைக் காலமும் நெறியின் ஆற்றிய அறிவன் தேயமும் என்கிறது தொல்காப்பியம். (தொ-காப்- பு-இயல் 74) 

மூவகைக் காலங்களியும் ஆராய்பவன் அறிவன்.
அந்த மூவகைக் காலங்கள் பல வகைப்படும்.
அவை ஒவ்வொன்றையும் பார்ப்போம்.

(1)  இறந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் என்பது ஒரு மூவகை.
இதையே கணியன் பூங்குன்றனாரது பாடலில் காண்கிறோம்.
யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்று துவங்கும் பாடல்
கணியன் என்னும் அறிவர்,
அதாவது ஜோதிடரால்
எழுதப்பட்டது.

 யாதும் ஊரே யாவரும் கேளிர்’ – என்னும்
இந்த ஒரு வரியை மட்டும் மேற்கோளிட்டு,
இதுவே பண்டைய தமிழனின் நாகரீகம் என்பர்.
ஆனால் இந்த வரிகள் எழுதப் பட்ட இடம், பொருள் வேறு.
இவை கர்ம வினையின் பாற்பட்டு,
ஊழின் கண் அடித்துச் செல்லப்படும் வாழ்கை நிலையைப்
புரிந்து கொண்டமையால் ஏற்பட்ட தெளிவின் வெளிப்பாடு.
கடந்த காலத்தால் நிகழ் காலம் உண்டாகிறது.
கடந்த காலத்தில் செய்யப்பட்ட வினைகள்,
ஊழ் வினை என்று தொடர்ந்து வந்து,
நிகழ் காலத்தில் நன்மையையும், தீமையையும் உண்டாக்குகிறது.
ஊழ்வினையைக் கொண்டே ஒருவருக்கு அமையப் போகும் எதிர்கால வாழ்க்கையைப் பற்றி சொல்லி விடலாம்.
இதையே திருப்பிப் போட்டால்,
நிகழ்காலத்தில் நடக்கும் அனுபவங்களைக் கொண்டு,
அதற்குக் காரணமான கடந்த கால ஊழ்வினை என்ன என்று சொல்லி விடலாம்.
அந்த ஆராய்ச்சிகள் செய்தவர்கள்தான் அறிவர்கள்.


அதை அறிந்த பூங்குன்றனார் தன் பாடலில்
முழுக்க முழுக்க ஊழ்வினைக் கருத்தையே எழுதியுள்ளார்.

தீதும், நன்மையும், சாதலும், நோதலும் பிறர் தர வருவதில்லை.
அவை கர்ம வினையின் படியே ஏற்படுகின்றன.
ஒருவர் பெரியோராக இருத்தலும்,
அல்லது சிறியோராக இருத்தலும்,
முன் பிறவியில் செய்த வினையின் படியே அவ்வாறு இருக்கின்றனர்.
 எனவே, பெரியோரைப் பார்த்து வியப்பதும் இல்லை,
சிறியோரை இகழ்வதும் இல்லை.
மற்றவர் யாரும், நம்முடைய இன்ப துன்பங்களுக்குக் காரணமாகாது,
நாமே நம் நிலைக்கு காரணம்
ஆகையால், எல்லாரும் நமக்கு ஒன்றுதான்.
அதனால், ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்என்னும்
கர்ம வினைத் தத்துவக் கருத்து கொண்டது இப்புறப் பாடல்.
இந்தத் தத்துவத்தின் அடிப்படை, ஜோதிடம் தரும் முக்கால அறிவால் ஏற்படுகிறது.


இதே கருத்துதான் சிலப்பதிகாரத்தின் முக்கியக் கருத்துமாகும்.
ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் என்று சொல்லும் சிலப்பதிகாரம்,
கோவலன் கொலயுண்டதற்கு முன் வினையே காரணம்
என்று ஒரு கிளைக் கதையையும் சொல்கிறது.
சிலப்பதிகாரம் நெடுகிலும்,
இந்த ஊழ்வினைக் கருத்துதான் ஆங்காங்கே சொல்லப்படுகிறது.


திருவள்ளுவரும் ஊழ் என்னும் தலைப்பில்
ஒரு அதிகாரமே அளித்துள்ளார். (அதி -38)
அதன் கடைசியில் முத்தாய்ப்பாக,
’ஊழினும் வலிமை வாய்ந்தது எது உள்ளது? (எதுவுமில்லை)
அவ்வூழை நீக்க மற்றொரு வழியை ஆராய்ந்தால்
அங்கும் அவ்வூழே முன் நிற்கும்’ என்கிறார்.
இது
விதியை மதியால் வெல்ல முடியும் –
அதற்கு விதியும் இடம் கொடுத்தால்”
என்னும் ஜோதிட அறிவாலும், அனுபவத்தாலும் வரும் அறிவு.



இதையெல்லாம் அறிந்தவன் ’அறிவன்; எனப்பட்டான்.
வள்ளுவர் என்பதே ஒரு ஜோதிடப் பரம்பரை ஆகும்.
எப்படி சுபாவத்தால் சொல்லப்பட்ட வர்ணம்,
பரம்பரையாகத் தொடர்ந்த்தோ,
அப்படியே அறிவன் என்னும் சுபாவச் செயலும்,
பரம்பரையாக வரவேதான்
நாளடைவில் அறிவன் என்ற சொல் மறைந்துபோய்,
வள்ளுவர் என்ற குலம் என அடையாளம் காட்டப்பட்டிருக்கிறது.


வள்ளுவரும்,
கணியன் பூங்குன்றனாரும் காட்டும் ஊழ்வினைக் கருத்துக்கள்,
அவர்களுக்கும் முன்னால்,
பல காலம் இருந்து வந்திருக்கிறது.
அவர்களுக்கு முற்பட்ட காலத்திலிருந்த
நூல்களிலும் அவ்வாறே சொல்லப்பட்டுள்ளது என்று
யாதும் ஊரே பாடலில் கணியன் பூங்குன்றனார் கூறுகிறார்.


யாதும் ஊரே; யாவரும் கேளிர்;
தீதும் நன்றும் பிறர்தர வாரா;
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;
சாதலும் புதுவது அன்றே; வாழ்தல்
இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்,
இன்னாது என்றலும் இலமே; "மின்னொடு
வானம் தண்துளி தலைஇ, ஆறாது
கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம்" என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே." (புற நானூறு – 192)


டா. உ.வே. சா. அவர்களால் கண்டெடுக்கப்பட்ட
பழைய உரையில் கீழ்க்கண்டவாறு கொடுக்கப்பட்டுள்ளது :- 


எமக்கு எல்லாம் ஊர்; எல்லாரும் சுற்றத்தார்; கேடும் ஆக்கமும் தானே வரினல்லது, பிறர் தர வாரா; நோதலும் அது தீர்தலும் அவற்றையொப்பத் தாமே வருவன; சாதலும் புதிதன்று; கருவில் தோன்றிய நாளே தொடங்கியுள்ளது; வாழ்தலை இனிதென்று உவந்ததும் இலம்; ஒரு வெறுப்பு வந்தவிடத்து இன்னாது என்று இருத்தலும் இலம்; மின்னுடனே மழை குளிர்ந்த துளியைப் பெய்தலான் அமையாது கல்லை யலைத்து ஒலிக்கும் வளவிய பேர்யாற்று நீரின் வழியே போம் மிதவை (மிதவை – தெப்பம்) போல அரியவுயிர் ஊழின் வழியே படுமென்பது நன்மைக் கூறுபாடறிவோர் கூறிய நூலாலே தெளிந்தோமாகலான், நன்மையான் மிக்கவரை மதித்தலும் இலேம்; சிறியோரைப் பழித்தல் அம்மதித்தலினும் இலேம்.”

இதில் காட்டாற்று வெள்ளத்தில் அடிக்கப்பட்டு வரும் தெப்பம் போல
வாழ்க்கை இருக்கிறது.
ஊழ் வினையால் அவ்வாறு நடக்கிறது.
ஊழின் வழியே உயிர்ப் படுமென்பது,
நன்மைக் கூறுபாடு அறிவோர் கூறிய நூலாலே தெளிந்தோம்
என்று சொல்லியுள்ளார்.
நன்மை எது, தீமை எது என்னும் கூறுபாடுகள் அறிந்தோர்
எழுதிய நூல்களில் இருந்து தாம் கற்று அறிந்தோம்
என்று பூங்குன்றனார் கூறுகிறார்.
இதனால் நூல்முகமாகவே ஊழ் வினைக் கருத்தும்,
அதன் அடிப்படையில் ஜோதிடக் கருத்தும்
அவருக்கும் முன்னால் இருந்து வந்திருக்கிறது என்று தெரிகிறது.
அது எந்தக் காலம் என்று தேடினால்
நச்சினார்க்கினியர் உரையில் ஒரு கருத்து கிடைக்கிறது.


முதல் சங்கத்தில் வழங்கப் பட்டவை பற்றிச் சொல்ல வருகையில்
நச்சினார்க்கினியர் அவர்கள்,
முந்து நூல் அகத்தியமும், மாபுராணமும், இசை நுணுக்கமும்,
அவற்றுட் கூறிய இலக்கணங்களாவன :
எழுத்து, சொல், பொருள், யாப்பு, சந்தம், வழக்கியல்,
அரசியல், பார்ப்பனவியல், சோதிடம், காந்தருவம், கூத்தும் பிரிவுமாம்”
என்று கூறுகையில் சோதிடத்தையும் குறிப்பிட்டுள்ளதால்,
ஜோதிடம் என்னும் சாஸ்திரம்,
முதல் சங்கம் ஆரம்பித்தபோதே,
 12,000 ஆண்டுகளுக்கு முன்பே இருந்து வந்திருக்கிறது என்று தெரிகிறது.


இன்றைக்கு நமது திராவிடப் பகுத்தறிவுப் பகலவர்கள்
ஜோதிடத்தைப் பழித்தும், இழித்தும் கூறுவது மட்டுமல்லாமல்,
அது அறிவுக்கு ஒப்பானது அல்ல என்கிறார்களே,
பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாக
முக்காலத்தையும்
மூவகைப் பட்ட பிற நுணுக்கங்களையும்,
வாழையடி வாழையாக,
குரு- சிஷ்ய பரம்பரையாக,
உள்ளுணர்வு பலத்தாலும்,
ஊழ்வினை பற்றிய அறிவு கொடுக்கும் ஞானத்தாலும்,
தெய்வ பலத்தாலும்
அறிந்து வந்திருக்கிறார்களே
அப்படிப்பட்ட அறிவை,
அறிவன் தேறும் அறிவைப் பற்றிப்
பேசக்கூட இவர்களுக்கு அருகதை இல்லை..


அந்த அறிவர் சொல்லி வைத்த
வாழ்க்கையின் ஆரம்பமானாலும் சரி,
வருஷத்தின் ஆரம்பமானலும் சரி,
அது பிறர் திணிப்பால் வந்து விடுமா?

ஆதாரமேயில்லாத திராவிட ‘உணர்விலும்’
நாத்திகக் கொள்கையிலும் முழுகிய
500 பேர் சித்திரையில் ஆரம்பிக்கும் 
வருஷத்தை மாற்றினார்கள் என்கிறார்களே,
அவர்கள் அறிவர்களா?
அவர்கள் இந்த அறிவர்களுக்கு முன் நிற்க முடியுமா?

ஆனானப்பட்ட தொல்காப்பியத்தையே அதங்கோட்டாசான் ஆராய்ந்து,
குற்றம் குறை சொல்லி சரி பார்த்து
’அரில்தப’ அறிந்து ஒத்துக் கொண்டார் என்று
நச்சினார்கினியார் தொல்காப்பிய உரையில் கூறியுள்ளார்.
இந்த ஐந்நூறுவர் சொன்னது என்ன என்பதை
எந்த சபையில் ஆராய்ந்து
சீர்தூக்கினார்கள்?
இவர்களுக்கு அறிவன் சாஸ்திரமான ஜோதிடமும் தெரியாது,
அதில் நம்பிக்கையும் கிடையாது.
ஆனால் ஜோதிட சாஸ்திரத்துக்கு உட்பட்ட ஒரு விவரத்தை
இவர்கள் எப்படி முடிவு செய்யலாம்?


அறிவன் அறிந்த சாஸ்திரத்தை ஆரியத் திணிப்பு என்கிறார்கள்.
ஆனால் இந்த ஐந்நூறுவர் சொன்ன கருத்தை நம் மீது திணிக்கிறார்கள்.
இந்த்த் திணிப்பு மட்டும் நியாயமாகுமா?


இவர்கள் சொல்வது போல ஆரியன் திணிக்க முற்பட்டாலும்,
அதை அறிவர்கள் அப்படியே ஏற்றுக் கொண்டிருப்பார்களா?
அதை அரில்தப உணர்ந்துதானே அறிவர்கள் ஏற்றுக் கொண்டிருப்பார்கள்.
மேலும் ஆரியன் வந்த்தாக இவர்கள் சொல்லும் காலத்துக்குப்
பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே
அறிவன் வகையினர் இருந்திருக்கின்றனர்.


இந்த அறிவெல்லாம் இல்லாமல்,
வழிவழியாக வந்த அறிவன் சாஸ்திரத்தையும் இகழ்ந்து,  
ஊழ்வினை காட்டும் சமயக் கோட்பாட்டையும் ஒதுக்கி விட்டு
தங்கள் மனம் போல் அர்த்தம் கண்டுபிடிக்கும்
திராவிடவாதிகளைப் பார்க்கும் போது
ஊழ் அதிகாரத்தின் 3 ஆம் குறள் தான் நினைவுக்கு வருகிறது.
திருவள்ளுவர் இவர்களுக்காகத்தன் அதை எழுதியுள்ளார் போலிருக்கிறது.


’நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை அறிவே மிகும்.”

நுட்பமான அறிவைத் தரும் பல நூல்களைக் கற்றவனாயினும்,
அவனிடம் உள்ள உணர்வுக்கு ஏற்பவே அறிவு பெருகும்
என்பது இதன் பொருள். 

திராவிட உணர்வு பொங்கும் இவர்களிடம்
ஊழ்வலியை நம்பும் தமிழன் உணர்வு பொங்குமா?

17 கருத்துகள்:

  1. ஜெயஸ்ரீ அவர்களே, அருமையான கட்டுரை, “அறிவன்” வார்த்தைக்கு பொருள் மிகவும் வியப்பாக இருக்கிறது, வாழ்த்துக்கள், திருக்குறளில் வரும் “வால்அறிவன்” வார்த்தைக்கு பொருள் கூறவேண்டும், அறிய ஆர்வமாக உள்ளது....

    பதிலளிநீக்கு
  2. மிக அற்புதமான தொகுப்பு. நன்றி.

    பதிலளிநீக்கு
  3. @ Kavi
    வால் அறிவன் என்றால் ’மெய்யுணர்வினை உடையவன்’ என்று பரிமேலழகர் பொருள் கூறுகிறார். மெய்யுணர்வு = உண்மையறிவு, ஐயம் திரிபு இல்லாத அறிவு, தத்துவ ஞானம் என்பது பொருள்.

    பதிலளிநீக்கு
  4. சென்ற மாதம் வெளியான திரு.குணா அவர்களின்
    தொல்காப்பியத்தின் காலம் என்ற ஆராய்சி நூல், 7000 ஆண்டுகளுக்கு முன் என நிறுவியிருப்பதாக அறிந்தேன்.

    பதிலளிநீக்கு
  5. நன்றி திரு குமார் அவர்களே.
    நான் திரு குணா அவர்களின் நூலைப் படிக்கவில்லை. நூலின் பெயரைத் தரவும்.வாங்கிப் படிக்கிறேன்.

    தற்போது நம்மிடம் உள்ள தொல்காப்பியம் 3ஆம் ஊழி முடிந்த பிறகு உண்டான கடைச் சங்க கால நூலாகும். எனவே இதன் காலம் 3500 ஆண்டுகளுக்கு உட்பட்டதே. இடைச் சங்கத்திலும் தொல்காப்பியம் இருந்தது. அந்தத் தொல்காப்பியத்தின் நிலப் பகுப்பு ஏழேழு நாற்பத்தொன்பதாக இருக்க வேண்டும். தற்போதைய தொல்காப்பியத்தில் முல்லை, மருதம் என்னும் ஐந்து வகைகளே உள்ளன. பழைய தொல்காப்பியத்தை ஒட்டியே எழுத்து, சொல் இலக்கணங்கள் இருக்க வேண்டும். நிலமும், கருவும், உரிப்பொருளும் மட்டும் மாறி இருக்கும். 7000 வருடங்களுக்கு முந்தின தொல்காப்பியம் இடைச் சங்க இலக்கணமாகும், அது இப்பொழுது இல்லை.

    தொல்காப்பியம் என்பதும், தொல்காப்பியர் என்பதும் பொதுப் பெயர்கள். வேதத்தைத் தொகுத்த வியாசர் என்பது போல.வியாசர் என்றால் தொகுப்பாளர் என்பது பொருள். பல காலக் கட்டத்திலும், வேதம் தொகுக்கப்பட்டு, அதனால் பல தொகுப்பாளர்கள், அதாவது வியாசர்கள் இருந்திருக்கிறார்கள். அது போல இலக்கண நூலான தொல்காப்பியமும் வேறு வேறு காலக் கட்டத்தில் இருந்து வந்திருக்கிறது. அதைக் கொடுத்தவருக்குப் பொதுப் பெயராக தொல்காப்பியர் என்றும் இருந்திருக்க வேண்டும்.

    நம்மிடம் புழங்கி வரும் தொல்காப்பியம் 3500 ஆண்டுகளுக்கு முன்னால் துவாரகையிலும், (தற்போது பேட் துவாரகை என்று சொல்லப்படுவது)தென்னன் தேசத்திலும் ஒரே சமயம் கடல் கொண்ட பிறகு உருவாக்கப்பட்டது. இந்த விவரங்கள் இந்தத் தொடரில் பின்னால் வருகின்றன.

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் ஜெயஸ்ரீ அவர்களே.

    நூலின் பெயர் : தொல்காப்பியத்தின் காலம்

    பதிப்பகத்தின் பெயர் தெரியவில்லை. திரு.குணா அவர்களின் ”தமிழக ஆய்வரண்” ஆக இருக்கலாம். நூல் கிடைத்தால் தெரிவிக்கவும்.

    //இந்த விவரங்கள் இந்தத் தொடரில் பின்னால் வருகின்றன.//

    தங்களது அரிய பணி தொடர வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  7. தமிழ்நாட்டில் வள்ளுவன் எனும் சாதியினர் ஜோதிடம் கணித்துச் சொல்லும் தொழிலைச் செய்து வருகின்றனர்.

    http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D

    நீங்களாக புது பெயர் இடவேண்டாம். எச்சரிக்கை...

    பதிலளிநீக்கு
  8. @thamizhan

    எச்சரிக்கை விடுவதற்கு முன்னால் அடுத்த கட்டுரையையும் படியுங்கள்.

    அறிவன் என்ற பெயர் தொல்காப்பியத்தில் சொல்லப்பட்ட பெயர்.

    பதிலளிநீக்கு
  9. தொல்காப்பியத்திற்கு உரை எழுத மகாபலிபுரம் சென்ற கருணாநிதி, தாங்கள் அதி விமரிசையாக பற்ப்பல அசைக்க முடியாத மேற்கோள்கள் காட்டி நிலை நிறுத்திய சூத்திரங்களுக்கு என்ன வியாக்கியானம் கொடுத்துள்ளார்?
    நன்றி. ஸாரநாதன்.

    பதிலளிநீக்கு
  10. ஸ்ரீமதி.ஜெயஸ்ரீ அவர்களுக்கு
    நான் சமீபத்தில் திரு.கல்கி அவர்களின் சில ஆரோக்கியமான விவாதங்கள் ஒன்றைப் பற்றி வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ள ஒரு புத்தகத்தைப் படித்தேன். (புத்தகத்தின் தலைப்பு – எல்லோரும் ஒர் இனம்). கல்கி அவர்கள் ஆனந்தவிகடனில் ”தமிழன் மூளை” என்ற தலைப்பில் ஒர் கட்டுரை திரு.சோமசுந்தர பாரதியார் எழுதிய ஒரு தமிழ் கட்டுரையின் ஆங்கில மொழிபெயர்பு கட்டுரைக்கு விளக்கம் அளித்துள்ளார். விவாதம் ஆரியர்-திராவிடர் தமிழர் திருமணம் தொல்காப்பியர் சொன்னது என்ன என்பதை பற்றிய விவாதம். அதில் தெய்வ பக்தி தேச பக்தி நிறைந்த மூத்த தமிழ் அறிஞர்கள் சிலர் சோமசுந்திர பாரதி மறைமலை அடிகள் போன்றோரும் இப்படி பிரிவினையை தூண்டும் ஆராச்சியில் ஏன் இறங்குகிறார்கள் என்ற தன் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். இதில் தமிழரின் திருமணம் பற்றி தொல்காப்பியர் கூறுகையில்
    ”பொய்யும் வழுவுந் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப”
    இதில் வரும் ஐயர் என்பவர் யார் என்று தங்கள் கருத்தை அறிய விரும்புகிறேன். அதைப்போல் களவு கற்பு கரணம் மணமுறை பற்றி ஒரு சிறிய விளக்கம் கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன். சோமசுந்தர பாரதியார் கூற்றுப்படி ”ஐயர்” என்ற சொல் ஆரிய இருடிகளை குறிப்பதில்லை. ஐயன் என்ற ஆண்பால் சொல்லும் ஐயை என்ற பெண்பால் சொல்லும் சங்க இலக்கியங்களில் காண்பது வெளிப்படை. அவற்றின் பண்மை சொல்லே ”ஐயர்” அதன் பொருள் மேலோர் என்பதாகும். இதற்கும் ”ஆரிய” வட சொல்லிற்கும் தொடர்பு கிடையாது. இது ”அறிவர்” என்ற ஒரு வகுப்பினரை குறிக்கும். பார்பனருள் சிறந்தாரை ”அந்தணர் என்றும்” அவரின் வேறுபட்ட தமிழ் பெருமக்களை ”ஐயர்” அல்லது ”அறிவோர்” என்று சுட்டுவதும் தொல்காப்பியர் மரபு. இதற்கு எடுத்துகாட்டாக கற்பியல் 5ஆம் சூத்திரத்தி்ல் ஒரு செய்யுளையும் சொல்லி அதில் அந்தணர் ஐயர் என்று தனித் தனியே கூறியுள்ளதையும் எடுத்துக்காட்டியுள்ளார்.

    பதிலளிநீக்கு
  11. திரு வேதம் கோபால் அவர்களே,

    நீங்கள் குறிப்பிட்டுள்ள விவரங்களை இந்தத் தொடரில் கொண்டு வருகிறேன்.
    திராவிடவாதிகள் எழுப்பின அந்தக் கேள்விகளுக்கும், நெருடலான விவரங்களுக்கும் விளக்கம் தருகிறேன். இவற்றையெல்லாம் சுருக்கமாகச் சொல்ல இயலாது. உதாரணமாக சமஸ்க்ருத - தமிழ் ஒருங்கிணைந்து உண்டான விதத்துக்கு நேரிடையாக ஆதாரம் கிடையாது. ஆனால் பல கதைகள். அவற்றில் புதைந்துள்ள விவரங்கள் மூலமாக ஆதாரம் கிடைக்கிறது. காரணம், இவற்றின் மூலம், சரித்திர காலம் என்று நாம் சொல்லும் சில ஆயிரம் வருடங்களையும் தாண்டி. 10,000 வருடங்களுக்கு முன் சென்று விடுகிறது. அப்பொழுது பயனாகும் ஆதாரங்களே வேறு.

    அதில் ஒன்றுதான் ஐயர் என்பது. இலக்கிய ஆதாரத்தின் படி, நீங்கள் கடைசியில் குறிப்பிட்டுள்ளவையே இருக்கின்றன.
    ஐ என்பது பெண் - தலைமைப் பெண். அதுதான் ஆதியில் வந்த சொல். அது ஐயை ஆயிற்று. பிறகு அது ஆண்பால் விகுதி சேர்த்து ஐயன், ஐயா, ஐயர் என்றாயிற்று. ஐ என்பதும் ஐயன் என்பது தலைவனைக் குறிப்பதாகவே ஆதியில் இருந்திருக்கிறது. ’ஐயனே’ என்று இறைவனை அழைப்பது வழக்கம். அவனே அனைவருக்கும் தலைவன் என்பதால் இப்படி அழைக்கிறோம்.

    ஐ என்னும் பெண்பால் விகுதியிலிருந்து ஐயன் என்பது உண்டானதால், ஆதியில் பெண்ணிடம்தான் தலைமை இருந்தது என்றாகிறது. தக்ஷ யாக காலத்திலேயே (நெருப்பு ஊழி) இது வந்து விட்டது. சதி தேவி சொல்லும் 108 தேவி நாமங்களை அலசினால் இது விளங்கும். மத்ஸ்ய புராணத்தில் வரும் இந்த நாமங்களில் 31 ஆவது பெயர் குமரி. குமரி தேவி,குமரி தீர்த்தம் என்றெல்லாம் இருந்திருக்கிறது. அவள் குடிகொண்ட இடம் மயபுரி என்கிறாள் சதி தேவி. இன்றைக்கு இந்த இடத்தை மேற்கு வங்கத்தில் காட்டுகிறார்கள். ஆனால் ஆதியில் மயன் இருந்தது, எரிமலைப் பகுதியான இந்தோனேசியா! அந்த இடத்துக்கு அருகாமையில் தென்னன் மதுரை இருந்தது என்று நாம் சொல்லி வருகிறோம். அங்கு இருந்த இடமே ஆதி மயன் இருப்பிடமாகும். அழிந்து போனாலும், ஆதி பெயர்கள் அனைத்தையும் இன்றைய பாரத நாட்டில் காணலாம். ஊழியில் இடம் பெயர்ந்தாலும், வந்த இடத்தில், பழைய பெயர்களை வைத்திருக்கிறார்கள். இதற்கான முக்கிய உதாரணம் ‘பாதாளம்’. பாதாளம் என்றொரு இடம் சிந்து முகத்துவாரத்தில் பாகிஸ்தானில் இருக்கிறது.

    (தொடரும்)

    பதிலளிநீக்கு
  12. விட்ட இடத்தில் தொடருவோம். ஐ என்னும் பெண் தலைமையின் முக்கியத்துவத்தை வலியுறுத்த சிந்து சமவெளி சினன்ங்களும், வேட்டுவ வரி துர்கையும் இருக்கிறாள். ஜம்புத்தீவு அதிபதியான சம்பாபதி என்னும் ஜம்பு தேவியே பெண் தான்.
    மக்கள் கூட்டத்தை ஆண்டு வந்த ஆதி உருவகம் பெண் தான். அவளை ஒற்றை எழுத்தில் ஐ என்றனர். இந்தப் பெண் தெய்வம் சிந்து சமவெளியிலிருந்து ஐரோப்பா சென்று, பைபிளில் அஷேராவாக ஆனாள். உருவ ஒற்றுமையைக் கொண்டு இதை இந்தத் தொடரில் விளக்க உள்ளேன்.

    ஐ என்பதிலிருந்து ஐயன் உண்டானது. ஆண்பாலைக் குறிக்கும் இந்தச் சொல் ஆரிய - பார்ப்பன ஆதிகக்ச் சொல் என்கிறார்களே, இந்தச் சொல் எங்கு இருக்கிறது தெரியுமா? தென் அமெரிக்காவின் மேற்குக் கடற்கரையோரமாக இருந்த இன்கா நாகரிக மக்களிடையே இருக்கிறது. அந்த மக்கள் இனத்தின் ஆரம்ப மக்கள் ஐயர்மார்!

    அது ஐயரா அல்லது ஆயரா என்னும் உச்சரிப்புக் குழப்பம் இருக்கிறது. ஆயர் என்றால் மாடுகள் கூட இருக்க வேண்டும். ஆனால் இவரகளுக்கு மாடுகளும், மாடு மேய்த்தலும் இல்லை. ஆனால் ஐயா, அம்மா என்றழைக்கப்பட்ட நான்கு, நான்கு பேர், ஒரு ஊழியில் தப்பி குகைக்குள் புகுந்து சுரங்கப்பாதை போன்ற அதில் பயணித்து. ஆண்டிஸ் மலை மேல் வந்து சேர்ந்திருக்கிறார்கள். அவர்கள் ஆரம்பித்த கலாசாரமே இன்கா என்பது.

    அந்த அம்மாவுக்குப் பாச்ச மாமா (பாச்சியம்மன்) என்று பெயர். அவளது உருவமும் கிடைத்திகிருக்கிறது. இப்பொழுது வெளியிடப்போகும் 113 ஆவது கட்டுரையில் அந்த விவரங்கள் வரப்போகின்றன. அதில் விவரிக்கிறேன்.

    இங்கு சொல்ல வருவது என்னவென்றால், ஐயன், அம்மா பாச்சியம்மா (பேச்சியம்மா?) போன்ற சொற்கள் இன்றைய இந்தோனேசியப் பகுதியைச் சுற்றி வாழ்ந்து வந்த மக்களிடையே 10,000 வருடங்களுக்கு முன்பே இருந்திருக்கிறது. அங்கு அவ்வப்பொழுது எரிமலைகள் வெடித்த பொழுது, நெருப்பு சார்ந்த ஊழியும் (தக்ஷ யாகம் இதைக் குறிக்கிறது, அதில் தப்பி வந்தவன் தான் திராவிட மனுவான வைவஸ்வத மனு என்று கொண்டு வரப்போகிறேன்), நீர் சார்ந்த ஊழியும் ஏற்பட்டிருக்கின்றன. பாண்டியனைப் பொறுத்த மட்டில் அவன் வாழ்ந்த இடங்களில் நீர் சார்ந்த ஊழியை மூன்று முறை சந்திதிருக்கிறான். இதனால் திராவிடேஸ்வரனுக்கும், பாண்டியனுக்கும் ஆதியில் ஒரே மூலம் இருந்தாலும், பிரிந்த வழியில் வேறுபாடு இருக்கிறது.

    தென் கடலில் 10,000 வருடங்களுக்கு முன்பே அருகருகே வாழ்ந்த மக்கள் பேசின மொழிகள் தமிழும், சமஸ்க்ருதமும் ஆகும். ஐயன் என்னும் சொல் அங்கிருந்து வருகிறது. அவர்களில் ஒரு பகுதி ஊழியில் தப்பி மேற்கு நோக்கி தென் அமெரிக்கா சென்றிருக்கிறார்கள். அவர்களும் ஐயா, அம்மா என்ற சொற்களை ஆதி தந்தை, ஆதி தாய் என்று சொல்லியுள்ளதால், ஐயன் என்னும் சொல்லுக்கு கண்டபடி பொருள் காண்பதைப் போல அபத்தம் வேறு இல்லை.

    இன்றைக்குப் பல துறை ஆராய்ச்சிகள் எவ்வளவோ பெருகி விட்டன. உலகின் மாபெரும் சரித்திரச் சொத்தான தமிழ் இலக்கியத்தை நம் வசம் வைத்துள்ள நாம் இந்தத் துறைகளது துணை கொண்டு, தமிழனது மூலத்தை மட்டுமல்ல, இன்றைய உலக மக்கள் இனத்தின் மூலத்தையே சொல்லி விடலாம். அதைச் செய்ய முதலில் இந்தத் திராவிட போதையிலிருந்து வெளி வர வேண்டும்.

    (தொடரும்)

    பதிலளிநீக்கு
  13. //பொய்யும் வழுவுந் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப”//

    இந்த வரிகளது பொருளை மு. ராகவ ஐயங்கார் அவர்கல் எழுதியுள்ள ‘தொல்காப்பியப் பொருளதிகார ஆராய்ச்சி” என்னும் நூலில் படிக்கலாம்.

    இதைச் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், ஆதியில், பொய், ஏமாற்றுதல் இல்லை. களவு, கற்பு என்னும் இரண்டு வழிகளிலுமே மணந்து கொண்டனர். இரண்டிலுமே ஒத்த உரு, திரு, அறிவு, குலம் கொண்டவர்கள்தான் மணம் புரிந்தார்களே தவிர பொருந்தா மணம் இல்லை. இன்றைய காதல் திருமணம் போல இல்லை.

    கள்வு வழியில் பெற்றோர், உற்றோர், பெரியோர் எடுத்துத்தராமல், தாங்களாகவே ஒருவருடன் ஒருவர் ஈர்க்கப்பட்டது களவின் ஆரம்ப கட்டமாகும். இதை அவர்கள் ஊழ் வலி என்றே எண்ணினர். கணாவன் மனைவி உறவே ஊழ் வலியால் ஏற்படுகிறதென்பது அன்றைய கருத்து.

    இந்தக் களவிலும் 3 ஸ்டேஜ் இருக்கிறது என்பதற்கு சங்கப் பாடல்கள் ஆதாரம் தருகின்றன. முதலில் எதேச்சையாக எதிர்ப்பட்டு ஒருவருக்கொருவர் ஈர்க்கப்படுகின்றனர். அதனால் அடிகக்டி யாருக்கும் தெரியாமல் சந்திக்கின்றனர். இது முதல் ஸ்டேஜ் / கட்டம்.
    இதன் பிறகு, பெண் வீட்டில் உள்ளவர்கள் சந்தேகப்பட்டு பெண்ணை வெளியில் அனுப்பாமல் வீட்டில் சிறைப் படுத்துகின்றனர். இது இரண்டாவது கட்டம். இங்குதான் பாங்கன், பாணன், பார்ப்பனன் எல்லோரது ஆலோசானையும் பெறப்படுகின்றன.

    3 ஆவது கட்டத்தில் திருமணம். அறிவன் என்னும் ஜோதிடனது ஆலோசனையையும் பெற்று திருமணத்துக்கு ஒப்புதல் அளித்தலும் இருந்திருக்கிறது. வீட்டார் ஒத்துக் கொண்டு ‘கரணம்’ செய்து திருமணம் செய்துள்ளனர். கரணம் என்றால் சடங்கு என்ற பொருளில் வந்துள்ளது.

    இதிலேயே, வீட்டார் ஒப்புதல் இல்லாமல் ஓடிப் போய் காந்தர்வ மணம் புரிதலும் நடந்திருக்கிறது. இதைத்தான் தமிழர் கலாசாரம் என்று சொல்லிக் கொண்டு அண்ணா துரை முதல் பல திராவிட வாதிகளும் ஆபாசமாக தங்கள் கதைகளில் எழுதியுள்ளனர். ஓடிப் போய் செய்ய்ம் திருமணத்தில் கரணம், அதாவது சடங்குகள் கிடையாது. காந்தர்வ மணம் எனப்படும் அதில் மனம், உடல் ஒப்பி உறவு கொண்டனர். அது களவொழுகக்மாக இருப்பினும், கூடிய பின் அது கற்பொழுகக்மாகக் கருதப்பட்டது. ஏனெனில் ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்ந்து, அந்தப் பெண்ணை ஏமாற்றாமல் ஒழுங்காக வாழ்க்கையை நடத்தினர்.

    இந்த ஒழுக்கம் குறிஞ்சி நிலப்பகுதிக்கு உரியது. மலை நாட்டில்தான் யாருக்கும் தெரியாமல் ரகசியமாகச் சந்திக்க வசதிகள் இயற்கையாக இருந்த்ன. மக்களும் களவிலிருந்து கற்பொழுக்கம் பிறந்த்தால் அதை ஏற்றுக் கொண்டனர்.

    ஆனால் நாளடைவில் அதில் பொய்யும், வழுவும் ஏற்படலாயிற்று. கரணம் இல்லாமல், அதாவது உற்றாரது முன்னிலையில் உறுதி எடுத்துக் கொள்ளும் சடங்கு இல்லாததால், தன்னை நம்பி வந்த பெண்ணைக் கைவிடுதல் ஏற்படலாயிற்று. இதை நிறுத்த அந்த மக்களுக்கும், கரணம் அதாவது திருமணச் சடங்குகளை ஏற்படுத்தினர்.

    இதுதான் நடந்த கதை.

    தொல்காப்பியர் காலத்துக்கு முன்பே, களவில் பொய், ஏமாற்று வந்து விட்டது. அதனால் அவர் காலத்துக்கு முன்பே வந்து விட்ட கரணத்தைத் தொல்காப்பியர் கூறுகிறார்.

    அந்தச் சூத்திரத்துக்கு உரை சொல்லும் நச்சினார்க்கினியர், ஐயர் என்பவரை ரிஷிகள் (இருடிகள்) என்கிறார். உண்மையில் எல்லா சடங்கு, சாஸ்திரங்களைத் தந்தவர்கள் ரிஷிகளே. பார்ப்பனர்கள் அல்லர். பார்ப்பனர்களுக்கும் சேர்த்து வாழும் முறைகளை ரிஷிகள் வகுத்துக் கொடுத்துள்ளனர். மனு, பார்ப்பனன் அல்லன். அவன் அரசன். அவனது தண்ட நீதியே மனு நீதியாகும்.

    உண்மையில் மனு நீதியில்தான் பெண்களுக்குப் பாதுகாப்பு கருதி, தந்தை, கணவன், மகன் ஆகியோர் பாதுகாப்பில் பெண்ணானவள் இருக்க வேண்டும் என்றார். அவர் இருந்த காலக் கட்டத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பிலை என்றும், ஆண்- பெண் உறவுகளில் பாதுகாப்பு இல்லாமல் இருந்தது என்றும் தெரிகிறது.

    (தொடரும்)

    பதிலளிநீக்கு
  14. ”ஐயர் யாத்தனர்’ என்பதில் உள்ள ஐயர் என்பவர்கள் இருடிகள் என்று நச்சினார்க்கினியர் கூறியுள்ளதில் ஆரிய இருடி, ஆரியமில்லா இருடி என்பது கிடையாது. ரிஷிகளுக்கான தமிழ்ச் சொல் தாபதர் என்பதாகும், ‘அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும்” சூத்திரத்தில், தாபதர் என்பவர்களையும் ஒரு வகையாகச் சொன்னதைக் கவனிக்கவும். இவர்களே, சித்தர்கள், யோகிகள், தவசிகள், குருமார்கள் ஆவார்கள். எந்த ஜாதியினரையும் எடுத்துக் கொண்டாலும், அவர்களுக்கென்று குருமாரோ அல்லது ஒரு துறவியோ இருப்பார். அவரது வழிகாட்டுதல்படி திருமணம் முதல் பல சடங்குகளையும் செய்து வருகின்றனர்.

    முன்பே ஒரு கருத்துரையில் வண்ணார் சமூகத்தைப் பற்றி செப்புத் தகடு ஆதாரம் எழுதியிருப்பேன். அதில் அவர்களுக்கென்று குரு ஒருவர் இருந்தார் என்றும், அவர் வழிகாட்டுதல்படியே திருமணத்தை மடத்தில் செய்தனர் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
    ஆகவே ஒட்டு மொத்த மக்களுக்கும் ஏதோ ஓரிரு ரிஷிகள் (ஐயர்)கரணம் யாத்திருக்க முடியாது. ஆங்காங்கு இருந்த மக்கள் கூட்டத்தினருக்கு ஏற்பட்ட பிரச்சினைகள் அடிப்படையில், அவர்களிடையே இருந்த துறவிகள், குருமார்கள் கரணத்தைச் சொல்லி வழி காட்டியிருக்கின்றனர்.
    இவ்வாறு சொல்பவர்களைத் தலைவர்களாக ஏற்றுக் கொள்வதால் அவர்களுக்கு ஐயர் என்று பெயர்.

    ஐயங்கார் சமூகத்தில், குல குருவைத்தான் ஐயங்கார் என்று சொலி வந்தார்கள். ஐயன் என்பதுடன் கார் என்னும் விகுதி தெலுங்கு காரு என்பதிலிருந்து ஏற்பட்டது. அவரது மனைவியை அம்மங்கார் என்றுதான் அழைப்பார்கள். அம்மா காரு என்பது அம்மங்கார் என்றாகி இருக்கிறது. ஐயரும், அம்மாவும் பொதுவான சொற்களாகக் காலம் காலமாக இருந்து வந்திருக்கின்றன.

    இதுவே இன்கா மக்களது முதல் மகக்ளது பெயர் என்பதால் (ஐயர்மாரா, பாச்சமாமா)இந்தச் சொற்களின் பழமை தெரிகிறது. யாரேனும் திணித்தா இவற்றைக் கொண்டு வந்திருக்க முடியும்?

    பதிலளிநீக்கு
  15. அந்தணர் என்றால் ’அந்தத்தை அணவினவர்’ என்று நச்சினார்க்கினியர் சொல்வதாக சூடாமணி நிகண்டு பொருள் தருகிறது. அந்தம் என்பது வேதாந்தம் என்று பொருள். வேதத்தின் முடிபான பொருளை ஆராந்தறிபவர் அந்தணர் ஆவார்.

    ஐயர் என்னும் சொல்லுக்குப் ‘பூஜிக்கத்தக்கவர்’ என்று இந்த நிகண்டு பொருள் தருகிறது.

    பதிலளிநீக்கு
  16. ஸ்ரீமதி.ஜெயஸ்ரீ அவர்களுக்கு
    சிரமம் பாராமல் நீண்ட விளக்கங்கள் அளித்ததற்கு நன்றி

    பதிலளிநீக்கு