செவ்வாய், 10 மே, 2011

53. திராவிடர்களும், திராவிட ராஜாவும்.




திராவிடன் என்பவன் யார் என்று மனுஸ்ம்ருதி (10-22) சொல்வதை முந்தின கட்டுரையில் கண்டோம். சுபாவத்தால் க்ஷத்திரியன் எனப்படும் ஒருவனது பரம்பரையில், அடுத்தடுத்து வந்த தலைமுறைகளில் வந்த பிள்ளைகள் க்ஷத்திரிய சுபாவத்தைக் கொள்ளவில்லை என்றால், அவ்வாறு வரும் ஏழாவது தலைமுறையில் வருபவன் திராவிடன் எனப்படுவான். அவன் முதற்கொண்டு அந்தப் பரம்பரையினர் திராவிடர்கள் எனப்படுவர்.


இந்த நிலைமை, 7000 ஆண்டுகளுக்கு முன் பரசுராமர் அவர்கள் 21 முறை க்ஷத்திரியப் பரம்பரைகளைக் கொன்ற போது ஏற்பட்டது. அவரிடமிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள நினைத்த க்ஷத்திரியர்கள், தாங்கள் க்ஷத்திரியர்கள் என்பதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், க்ஷத்திரியத் தொழிலான போர்த் தொழிலிலும் ஈடுபடாமல், படிப்படியாக க்ஷத்திரியத்தை விட்டொழித்தனர். அதாவது திராவிடர்கள் என்பவர்கள், வர்ணாஸ்ரம க்ஷத்திரியத்தை விட்டதால் ஏற்பட்டவர்கள். ஆரியப் படையெடுப்புக் கொள்கைவாதிகள் சொல்வதைப் போல தமிழர்களோ அல்லது சிந்து சமவெளிப் பகுதியில் வாழ்ந்தவர்களோ அல்ல என்பது இதன் மூலம் தெரிகிறது


அவர்கள் வாழ்ந்த பகுதிகளைப் பற்றியும் சில குறிப்புகள் மஹாபாரதத்தில் வருகின்றன.

(இங்கு நான் முக்கியமாக ஒன்றைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.


பரசுராமரால் க்ஷத்திரியர்கள் பலர் அழிக்கப்பட்ட விவரங்களை, நம்மை அடிமைப் படுத்தி ஆண்ட ஆங்கிலேயர்கள், பிராம்மண - க்ஷத்திரிய சண்டையாகப் பார்த்தனர். ஆரிய தஸ்யு சண்டையைக் கண்டு பிடித்த அவர்கள், விஷ்ணுவின் அவதாரமாகக் கொண்டாடப்பட்ட பரசுராமரால் செய்யப்பட்ட சண்டையை, பிராம்மணர்கள் க்ஷத்திரியர்களை அடக்கச் செய்த செயலாகப் பார்த்தனர். எந்த இந்தியரையும் சேர்த்துக் கொள்ளாமல், முழுக்க முழுக்க வெள்ளையர்களைக் கொண்டே இந்திய சரித்திரத்தை ஆராய்ந்த ஏஷியாடிக் சொசைட்டியால் எழுதப் பட்ட நூல்களில் இப்படி சொல்லப்பட்டிருப்பதைக் காணலாம். நம்முடைய மூலம், வழக்கங்கள், தெய்வ நம்பிக்கைகள், காரண - காரியங்கள் என எதையுமே தெரிந்து கொள்ளாமல் அவை எழுதப்பட்டன. அவற்றின் அடிப்படையில். இந்திய சரித்திரத்தை ஆராய்ந்தால், அது ஆங்கிலேயன் நம்மை எந்தக் கோணத்தில் பார்த்தானோ அந்தக் கோணத்தில்தான் நம்மையும் செலுத்தும். மாறாக, நமது மூல நூல்களைப் படித்து, இந்திய சரித்திரத்தை ஆராய்ந்தால்தான் உண்மை விவரங்கள் வெளி வரும்.)


க்ஷத்திரியர்களை அழித்தபிறகு, அவர்களிடமிருந்து தான் பெற்ற நாடுகளை பரசுராமர் காஸ்யப முனிவருக்குத் தானம் செய்துவிடுகிறார். தானம் கொடுத்தவன், தானம் கொடுத்த பிறகு அந்த இடத்தில் பாத்தியதை கொண்டாடி, இருக்க முடியாது. எனவே அவர் தென் கடல் பகுதிக்குச் சென்று விடுகிறார். அப்பொழுது அங்குக் கடலிலிருந்து நிலங்களை மீட்டு அந்த நிலத்தில் தற்போதைய மஹாராஷ்டிர மாநிலத்தில் அரபி கடலோரம் உள்ள உள்ள சூர்ப்பாரகம் (சோபோரா) என்னும் இடத்தில் தங்கி விடுகிறார். இந்த விவரத்தின் மூலம், அந்நாளில் தென் கடல் என்றது அரபிக் கடலையே குறித்திருக்கிறது என்று தெரிகிறது. சரஸ்வதிப் பகுதிக்குத் தென் புறம் இருப்பதால் அவ்வாறு சொல்லப்பட்டிருக்கலாம்.


இனி திராவிடர் உள்ளிட்ட மக்கள் இருந்ததாகச் சொல்லப்படும் பகுதிகளைக் காண்போம். பரசுராமர் காலத்தில் நடந்த விவரங்களைச் சொல்லிக் கொண்டு வருகையில், கிருஷ்ணர் தரும் பிற விளக்கங்கள் நமக்கு மேலும் தெளிவைத் தருகின்றன. (சாந்தி பர்வம், 49). பரசுராமர் க்ஷத்திரியர்களை ஒழித்த இடங்களில் அரசன் என்று ஒருவன் இல்லாததால், பாதுகாப்பு, நீதி, தண்டனை என்று எதுவும் இல்லாமல் போய்விட்டது.  மக்கள் தங்கள் மனம் போன படி வாழத் தொடங்கினர். எல்லா வர்ணத்தவர்களும், கெட்ட வழியில் சென்று, ஒருவரை ஒருவர் ஏய்த்தல், கொல்லுதல் என்று பலவிதத்திலும் தீய செயல்களில் ஈடுபட ஆரம்பித்தனர். இதனால் வர்ணாஸ்ரமத்தில் இருந்தவர்கள் விராத்தியர்கள் ஆனார்கள். விராத்தியர்கள் மிலேச்சர்கள் ஆனார்கள். இதன் காரணமாக பூமிதேவி துன்பம் அடைந்து பாதாளத்துக்குள் மறைந்தாள். அதைக் கண்ட காஸ்யப முனிவர் அவளைத் தன் தொடையில் தாங்கித் தூக்கினார். தொடை என்பதற்கு சமஸ்க்ருதத்தில் ஊரு என்று பெயர். தொடையில் தாங்கவே பூமி, உர்வி என்னும் பெயர் பெற்றாள்.


இந்த விவரம், அந்தக் காலக் கட்டத்தில் வந்திருக்கக்கூடிய பூகம்பத்தை விவரிப்பதாக இருக்கிறது. மக்கள் தீய செயலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, அதைத் தாங்க முடியாமல் அவர்கள் இருந்த பூமி நடுங்கி, பாதாளத்தில் சென்றாள் என்று சொல்லியிருக்கிறார்கள். பூகம்பத்தால் பல இடங்களில் நிலமானது உள் இறங்கி, வேறு இடங்களில் மேலெழும்பியிருக்கிறது. பூகம்பத்திற்குப் பிறகு வெளிப்பட்ட பூமி, மக்கள் வாழுத்தக்க வகையில் இருந்திருக்கவே அது ஊர் என்று அழைக்கப்பட்டிருக்கிறது. ஊர் என்பது தமிழ், சம்ஸ்க்ருதம் ஆகிய மொழிகளில் வாழுமிடம் என்னும் ஒரே பொருளைக் குறிக்கிறது. மக்கள் வசிக்கத்தக்கதாக இருக்கும் இடம் ஊர் ஆகும்.


ஈராக் நாட்டிலும் ஊர் என்று ஒரு இடம் உள்ளது. அகழ்வாராய்ச்சிகளின்படி இது வரை கண்டு பிடிக்கப்பட்ட இடங்களில் அதுவே உலகின் பழமையான ஊராகும் என்று தெரிய வந்துள்ளது.
படம்

5000 ஆண்டுகளுக்கு முன் ஆரம்பித்த சுமேரிய நாகரிகத்தில் இது முக்கிய இடம் வகித்தது. பகுதி 31-இல் ஆரிய- தஸ்யு சண்டை எனப்படும் யயாதியின் மகன்கள் சண்டையில், அநுவின் வழியில் வந்தவர்கள் மிலேச்சர்கள் எனப்பட்டு, அரேபியப் பகுதிக்கு (சுமேரியா) விரட்டப்பட்டு அங்கு குடி அமர்ந்தனர் என்பதை நினைவு படுத்திக் கொள்வோம். கடுமையான பருவ நிலைகளுடன் கூடிய பாலைவனமாக இருந்த அந்தப் பகுதிகளில் 16 இடங்களைத் தேர்ந்தெடுத்து, அஹூரா என்பவன் மக்களைக் குடியமர்த்தினான் என்று படித்தோம்.   


அந்தப் பகுதிகளில் வாழத்தக்க வகையில் புதிதாக உருவாக்கப்பட்ட இடங்களில் ஒன்றாக இந்த ஊர்இருக்கக்கூடும். வாழும் வகையில் அமைக்கப்படும் இடம் ஊர் எனப்படும் என்பது மேற்சொன்ன கஸ்யப பூமி கதையில் வருகிறது. சுமேரிய மொழியில் உரிம் என்னும் சொல்லிலிருந்து ஊர் என்னும் பெயர் வந்ததாகச் சொல்லப்படுகிறது. உர்வி என்பதன் ஒலியை ஒட்டி, இந்தச் சொல் இருக்கிறது. சுமேரிய மொழியில் உரிம் என்பது அந்த இடத்துக்குச் சொந்தக்காரியான பெண் தெய்வத்தின் பெயர். உர்வி என்பதும், பெண் தெய்வமான பூமியின் பெயரால் வந்தது என்று மஹாபாரதத்தில் கிருஷ்ணன் கூறுகிறார். 7000 ஆண்டுகளுக்கு முன்பே இந்தச் சொல் வழக்கத்தில் நமது நாட்டில் வந்து விட்டது. சுமேரியாவின் ஊரும், உரிமும், இங்கிருந்து வெளியேறி அங்குக் குடியமர்ந்த மக்கள் எடுத்துச் சென்ற வழக்கம் என்று தெரிகிறது.


காஸ்யபரின் தொடையில் தாங்கிக் கொள்ளப்பட்ட பூமி தேவியானவள், தன்னை ரட்சிக்க அதாவது, தன்னிடம் வாழும் மக்களைக் காப்பாற்ற க்ஷத்திரியர்கள் வேண்டும் என்று கேட்கிறாள். பரசுராமரால் அழிக்கப்பட்டாலும், பல க்ஷத்திரியப் பெண்கள் தங்கள் குழந்தைகளை மறைத்து வைத்துக் காப்பாற்றியுள்ளனர் என்றும், அவர்கள் வழியில் வந்த க்ஷத்திரியர்களை மீண்டும் அரசர்களாக ஆக்க வேண்டும் என்றும் சொல்கிறாள். அதாவது க்ஷத்திரியத்தை விட்டு, திராவிடர்களாக ஆனவர்கள் சிலர் இருந்தாலும், வேறு சில க்ஷத்திரியர்கள், தங்கள் சுபாவத்தை விடாமல் வாழ்ந்து வந்திருக்கின்றனர். அப்படி அவள் சொல்லும் க்ஷத்திரியர்கள், பரசுராமரால் வெல்லப்பட்ட இடங்களைச் சேர்ந்தவர்கள்.  அவள் சொல்லும் இடங்கள் மூலம் திராவிடம் என்னும் இடம் இருந்ததா என்று அறியலாம்.


(1)அவர்களுள் ஒருவன், புரு வம்சத்தைச் சேர்ந்த விதுரதனின் மகன். (புரு வம்சம் என்பது சரஸ்வதி நதி தீரத்தை ஆண்ட யயாதியின் மகன் புருவின் வம்சம்). அவன் ரிஷவான் என்னும் மலையில் கரடிகளால் வளர்க்கப்பட்டு வந்தான் என்கிறாள் பூமி தேவி. மஹாபாரதம் 12-51-இல் ரிஷவான் என்னும் மலை நர்மதை நதி இரண்டு கிளைகளாகப் பிரியும் இடத்தில் உள்ளது என்ற குறிப்பு வருகிறது. அதாவது இது விந்திய மலையை ஒட்டிய பகுதி.

கரடி என்பதும் ரிஷவானும் தொடர்பு கொண்டது. ராமாயணத்தில் வரும் ஜாம்பவான் ஒரு கரடியாகும். அவன் ரிக்ஷர்களுக்கு அரசன். அதனால் அவன் வாழ்ந்த பகுதி ரிஷவான் எனப்பட்டது. அந்த ரிஷவானில் கரடிகளால் புரு வம்சத்தவன் வளர்க்கப்பட்டான் என்று மஹாபாரதம் கூறுகிறது. ராமாயணத்தில் காணும் விவரம், தொடர்ந்து மஹாபாரதத்திலும் காணப்படுகிறது. ரிஷவான் இருக்கும் விந்திய மலைப் பகுதியைப் பற்றிய விவரங்கள் பதிற்றுப்பத்திலும் உள்ளது. காலம் காலமாகத் தொடர்ந்து இருந்துவரும் இத்தகைய அமைப்புகளின் மூலம் இவற்றைப் பற்றிப் பேசும் ராமாயணமும், மஹாபாரதமும் உண்மையில் நடைபெற்ற விவரங்களைத் தரும் வரலாற்றுப் பதிவுகள் என்பது நிரூபணமாகிறது. ராமாயணமும், மஹாபாரதமும் இதிஹாசங்கள் எனப்படுகின்றன. இதிஹாசம் என்றால் ‘இது இவ்வாறு நடை பெற்றதுஎன்பது பொருள். எனவே இவை தரும் விவரங்கள் ஆதாரமானவை. 


                       ஜாம்பவான் இருந்த ரிஷவான் பகுதி.


 (2)   அடுத்த அரசன் சௌதாசன் என்பவன். அவன் பராசர முனிவரால் பாதுகாக்கப்பட்டு, அவருக்கு எல்லாக் காரியங்களையும் செய்து வந்ததால்,  சர்வகர்மன் என்றழைக்கப்பட்டு சூத்திரன் போல வாழ்கிறான் என்கிறாள் பூமி தேவி.. ஆனால் அவன் க்ஷத்திரியன். அவனையும் அழைத்து வந்து அரசனாக்குங்கள் என்கிறாள். அவன் இருந்த இடத்தை அவள் குறிப்பிடவில்லை. ஆனால் பராசர முனிவர் நிச்சயமாக தென்னிந்தியாவிலும், தமிழ் நாட்டிலும் வாழ்ந்தவரில்லை. வட இந்தியப் பகுதிகளில் இந்த அரச குலத்தவனைக் காப்பாற்றி, மறைத்து வைத்திருக்கிறார். அவன் சூத்திரன் போல வாழ்ந்தான் என்பதால், இழிவு வாழ்க்கை என்று சொல்லவில்லை. அவனுக்கு சுபாவமான க்ஷத்திரியத்தை வெளிக்காட்டாமல் வாழ்ந்திருக்கிறான். சர்வ கர்மன் என்னும் பெயரால், எல்லாச் செயல்களையும் செய்வதில் சூத்திரன் வல்லவன் என்று தெரிகிறது. பிராம்மணர், க்ஷத்திரியர், வைசியர் என்னும் எல்லோரது தொழிலும், தர்ம்மும் ஒரு சூத்திரனுக்குத் தெரிந்திருக்கும்.


(3)    அடுத்து சிபியின் மகனான கோபதி. அவன் மாடு கட்டுமிட்த்தில், கன்றுகளால் வளர்க்கப்பட்டான் என்ற காரணத்தால் வத்ஸன் என்ற பெயர் பெற்றான் என்கிறாள் பூமி தேவி. (வத்ஸன் என்றால் கன்றுக் குட்டி என்று ஒரு பொருள் உண்டு). சிபி இருந்த்து சிந்து நதிக்கு மேற்கில் இருந்த சிபி ராஜ்ஜியமாகும் (பகுதி 32). இதனால் பரசுராமர் சிந்துப் பகுதி அரச்ரகளையும் விட்டு வைக்கவில்லை என்று தெரிகிறது.


(4)    அடுத்து அங்கன் என்பவன் கௌதம முனிவரால் கங்கைக் கரையில் பாதுகாக்கப்பட்டிருக்கிறான் என்கிறாள். இதுவும் வட இந்தியப் பகுதியாகும்.


(5)    அடுத்து பிருஹத்ரதன் என்பவன், க்ருத்ரகூடம் என்னும் மலையில் மந்திகளால் காப்பாற்றப்பட்டு வருகிறான். அவனையும் அரசனாக்குங்கள் என்கிறாள். தமிழ்நாட்டில் ஸ்வாமி மலைக்கு அருகில் புள்ளம் பூதங்குடி என்னும் வைஷ்ணவ திவ்ய க்ஷேத்திரம் இருக்கிறது. அந்த இடத்தில் ஜடாயுவுக்கு, ராமன் மோக்ஷம் கொடுத்ததாக ஸ்தல புராணம் சொல்கிறது. அங்கு ஜடாயு தீர்த்தம், க்ருத்ர தீர்த்தம் என்று இரண்டு தீர்த்தங்கள் இருக்கின்றன. க்ருத்ர என்னும் சொல், வெட்டுப் படுதல் என்னும் பொருளில் க்ருத் என்னும் வேர்ச் சொல்லிலிருந்து வந்தது. ராவணன் சீதையைத் தூக்கிக் கொண்டு போகையில் ஜடாயு என்னும் பறவை அவனுடன் போரிடுகிறது. முடிவில் ராவணன் அதன் சிறகுகளை வெட்டிக் குற்றுயிராக வீழ்த்தி விடுகிறான். இது நடந்த இடம் நர்மதை நதிக்கும், கோதாவரி நதிக்கும் இடையில் இருந்த பிரதேசம் என்று வால்மீகி ராமாயணம் மூலம் தெரிகிறது. ஜடாயு வெட்டுப்பட்ட இடம் க்ருத்ர கூடம் என்று பெயர் பெற்றிருக்கலாம். அது விந்திய மலைக்குத்தெற்கில் தண்டக வனத்தில் உள்ளது. அந்தப் பகுதிகளில் பிருஹத்ரதன் வாழ்ந்திருக்க வேண்டும்.  


(6)    அடுத்து மருத்தரின் வம்சத்தில் வந்தவர்கள் சமுத்திரத்தை அடைந்து அங்கே யாருக்கும் தெரியாமல் வாழ்ந்தார்கள். இது எந்த சமுத்திரம் என்று சொல்லவில்லை. எனினும், தண்டக வனத்துக்கு அடுத்து சொல்லப்படவே, மஹாராஷ்டிரத்துக்குத் தெற்கில் இருந்த கடற்கரைப் பகுதி  என்று எடுத்துக் கொள்ளலாம்.
இந்த ஆறு மக்களுடைய மூதாதையர்கள் பரசுராமரால் கொல்லப்பட்டவர்கள். இவர்கள் சிற்பிகளாகவும், தட்டான்களாகவும், வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் பூமியைக் காப்பாற்றக்கூடிய க்ஷத்திரியம் கொண்டவர்கள். இவர்களிடம் நாடாளும் பொறுப்பைக் கொடுங்கள் என்று காஸ்யபரிடம், பூமி தேவி சொல்கிறாள். அதை ஏற்று, காஸ்யபரும், இந்த அரச வம்சத்தினரிடம், நாட்டை ஒப்படைத்தார்.


இந்த ஆறு மக்களும் சொல்லப்பட்ட இடங்கள் பரசுராமரால் அழிக்கப்பட்ட இடஙகள். சிந்து நதியில் ஆரம்பித்து, கங்கை நதி வரையிலும், அதுபோல விந்திய மலைக்குத் தெற்கில் கோதாவரி வரையிலும், சமுத்திரப் பகுதி வரையிலும் இந்த மக்கள் மறைந்து வாழ்ந்திருக்கின்றனர். இந்த இடங்களில், விந்திய மலைக்கு வடக்கில் இருப்பவை ஆரிய வர்த்தம் ஆகும். பரசுராமரின் நேர் எதியான (அவரது தந்தையைக் கொன்ற) கார்த்தவீரியார்ஜுனன், இன்றைய மத்தியப் பிரதேசப் பகுதியை ஆண்டான். அவனுக்குத் துணையாக இருந்தவர்கள் வட பகுதி மன்னர்களே. மேற்சொன்ன 5 ஆவது, 6 ஆவது இடங்கள் ஆரியவர்த்ததில் சேராதவை.


பகுதி 50 இல் நாம் பார்த்தவாறு, அவை பஞ்சத் திராவிடத்தில் மஹாராஷ்டிரம், அதற்குத் தெற்கில் திராவிடம் என்ற அமைப்பில் இருந்திருக்கின்றன என்பது கவனிக்கத்தக்கது. இந்தப் பகுதிகளை இந்தத் தொடரின் போக்கில் பிறகு ஆராய்வோம்.




பச்சைநிற அம்புக் குறி பஞ்ச திராவிடத்தில் திராவிட நாட்டைக் காட்டுகிறது.


பரசுராமருக்குப் பயந்து க்ஷத்திரியம் விட்டவர்களாக அந்த வம்சத்தினர் திராவிடர்களைப் போல வாழ்ந்திருந்ததால், அந்தப் பகுதிக்கு திராவிடம் என்னும் பெயர் வந்திருக்கலாம் என்றும் ஒரு சாத்தியம் இருக்கிறது. ஏனெனில் திராவிடம் என்னும் சொல், த்ரு’, ‘த்ரா என்று ஓட்டம் என்னும் பொருளில் வருகிறது என்று முன்னமே ஆராய்ந்தோம் (பகுதி 51) உயிருக்குப் பயந்து, தங்களைக் காப்பாற்றிக் கொள்ள ஓடி வந்ததால் அவர்கள் திராவிடர்கள் என்றும் பொருள் கொள்ளலாம்!


க்ஷத்திரியத்தை விட்டு ஓடி விட்டதால்,
க்ஷத்திரியத்தை விட்டவனுக்கு
திராவிடன் என்று பெயர்
என்று மனுஸ்ம்ருதி சொல்லியிருக்கிறது
என்றும் நாம் ஏற்றுக் கொள்ள முடியும்.


க்ஷத்திரியனுக்கும், மற்ற வர்ணத்தவர்களும் உள்ள பெரிய வித்தியாசம், உயிருக்குப் பயம் என்பது பற்றித்தான். க்ஷத்திரியன் உயிருக்குப் பயப்பட மாட்டான். ஒருவன் சண்டைக்கு வந்தால், தைரியமாக எதிர் கொள்வான். புறமுதுகிட்டும், உயிருக்குப் பயந்தும் ஓடி ஒளிய மாட்டான். இதன் காரணமாக, க்ஷத்திரியம் விட்டவர்களை “ஓடினவர்கள் என்னும் பொருளில் திராவிடர்கள் என்று பெயரிட்டிருக்கலாம். 


இவர்களுள் திராவிடர்கள் என்பது இடம் சார்ந்து சொல்லப்படவில்லை. எந்த இடத்தில் இருக்கும் க்ஷத்திரியனும் திராவிடனாகலாம். சரஸ்வதி நதி தீரத்தில் வாழ்ந்த க்ஷத்திரியன் ஒருவன் திராவிடனாகலாம். அதற்கும் மேற்கே சிந்து நதிக்கப்பால் இருந்த சிபி நாட்டில் வாழ்ந்த க்ஷத்திரியனும் திராவிடனாகலாம். கங்கைக் கரையில் இருந்த க்ஷத்திரியனும் திராவிடனாகலாம். விந்திய மலைக்குத் தெற்கே வாழ்ந்த க்ஷத்திரியனும் திராவிடனாகலாம். க்ஷத்திரிய சுபாவத்தை விட்ட மக்கள் திராவிடனாகி இருக்கிறார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறதே தவிர, ஒரு இடம் அல்லது இனம் அல்லது மொழி தொடர்பாக இந்தத் திராவிடன் சொல்லப்படவில்லை.


தமிழ் நாட்டையே எடுத்துக் கொண்டால், வீரத்துக்கு முதலிடம் கொடுத்த நாடு தமிழ் நாடு.

அதாவது க்ஷத்திரிய தர்மம்  ஓங்கியிருந்த நாடு தமிழ் நாடு.

ஓயாமல் கொல்லன் பட்டறைக்கு வேலை கொடுத்து வந்த நாடு தமிழ் நாடு.

களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே என்று இளம் பருவத்திலேயே வீரனாக மக்களைக் கொண்ட நாடு தமிழ் நாடு.

உடல் முழுவதும் விழுப்புண் தாங்கியிருக்க வேண்டும், போரில் வீர மரணம் பெற வேண்டும் என்னும் மிக முக்கிய க்ஷத்திரியக் கொள்கைகள் கொண்டவர்கள் தமிழ் மக்கள்.
போரில் இறக்காமல், நோய் முதலான வேறு காரணங்களால் இறக்க நேர்ந்தால், இறந்த உடலை வாளால் கீறி அடக்கம் செய்தவர்கள் தமிழர்கள் என்பது புறநானூற்றுச் செய்யுள்கள் மூலம்  
 தெரிகிறது.


இதன் மூலம் முழு க்ஷத்திரியர்களாக தமிழ் நாட்டு க்ஷத்திரியர்கள் வாழ்ந்து வந்தனர் என்பது தெரிகிறது.

வட நாட்டில் 7000 ஆண்டுகளுக்கு முன்பே க்ஷத்திரிய சுபாவத்தை விட்ட க்ஷத்திரியர்கள் இருந்திருக்கின்றனர். ஆனால் 1000 ஆண்டுகள் முன் வரையிலும், க்ஷத்திரியத்தை விடாமல் இருந்தவர்கள் தமிழர்கள்.


எனவே திராவிடன் என்ற பேச்சுக்குத் தமிழ் நாட்டில் இடம் இருந்திருக்கவில்லை.
ஆனால் வட இந்தியாவில்தான் திராவிடர்கள் ஏற்பட்டிருக்கின்றனர். அப்படி இருந்தும் அவர்கள் என்றுமே திராவிடர்களாக இருந்திருக்கவில்லை. மீண்டும் க்ஷத்திரியத்தைக் கொண்டபின் நாட்டை ஆண்டிருக்கிறார்கள். அதனால், இவன் தான் திராவிடன் என்று சொல்லும் வண்ணம் வட இந்தியாவில் எந்த இடத்திலும் ஒரு மக்கள் கூட்டமோ, மக்கள் இனமோ இருக்கவில்லை.

மீண்டும் க்ஷத்திரியர்களாகி ஆண்ட மன்னர்கள், ஒரு காலத்தில் அவர்களுக்கு இருந்த திராவிட அடையாளத்துடன் சொல்லப்பட்டிருக்கிறார்கள்.
அப்படி ஒரு அரசன், ‘திராவிட ராஜா என்றும் அழைக்கப்பட்டிருக்கிறான். அந்த திராவிட அரசன் யார் என்று மேற்கொண்டு பார்ப்போம்.


மஹாபாரதம் 14-29இல் பரசுராமருக்குப் பயந்து க்ஷத்திரியத் தொழிலை விட்டுவிராத்தியர்கள்அதாவது தங்களது குல ஒழுக்கத்திலிருந்து விலகினவர்கள் என்று திராவிடர்கள், ஆபீரர்கள், புண்டரர்கள், சவரர்கள் என்று நான்கு வித மக்கள் சொல்லப்பட்டுள்ளார்கள்.


இவர்களுள் சவரர்கள் என்ப்படுபவர்கள், காடுகளில் வசிப்பவர்கள் என்றும், மத்திய தேசத்துக்கு அப்பால் வசிப்பவர்கள் என்றும் மஹாபாரதம் சொல்கிறது. மத்திய தேசம் என்று சொல்லப்படுவது சரஸ்வதி நதி தீரமாகும். சவரர்கள் இன்றைய ஒரிசா, ஜார்கண்ட், பீஹார் பகுதிகளில் வாழந்தவர்கள். அவர்களே முண்டா என்னும் ஆதிவாசி இனமாக இன்று சொல்லப்படுகிறார்கள்.


புண்டரர்கள் எனப்படுபவர்கள் இன்றைய பெங்கால் பகுதிகளில் வாழ்ந்தவர்கள். ஐதரேய ஆரண்யகம், ஐதரேய பிராம்மணம் போன்ற நூல்களில் இவர்கள் வங்க நாடு அதாவது பெங்கால் பகுதிகளில் வாழ்ந்தவர்கள் என்று சொல்லப்பட்டுள்ளனர்.


ஆபீரர்கள் எனப்படுபவர்கள் சரஸ்வதி நதியானது பூமிக்குள் மறைந்த பகுதிகளில் வாழ்ந்தவர்கள் என்பதை மஹாபாரதத்தின் மூலம் அறிகிறோம். ஆபீரர்கள் வாழ்ந்த இடம் ஹரியானா என்பதாகும் என்றும் ஒரு ஆராய்ச்சிக் கண்டுபிடிப்பு உண்டு. மாடு மேய்ப்பவனை ஆபீரன் என்று கூறுவார்கள். மேலே சொல்லப்பட்ட, மறைந்து வாழ்ந்த மகக்ளுள் சிபியின் மகன் கோபதி, மாடுகளுக்கிடையே வளர்க்கப்பட்டான் என்று சொல்லப்பட்டுள்ளது. அதனால் அவன் ஆபீரனாக வாழ்ந்தான் என்று தெரிகிறது.


இந்த இடங்கள் எல்லாமே புரு, துர்வஸு, யது என்னும் யாயாதியின் மகன்கள் (இவர்களுக்கிடையேயான பதவிச் சண்டையை ஆரிய-தஸ்யு யுத்தம் என்று சொல்லியுள்ளனர் என்று பலமுறை விவரித்தோம்) ஆண்ட ஆரியவர்த்தம் என்று சொல்லப்பட்ட வட இந்தியாவில் இருப்பவை என்பதைக் கவனிக்கவும். வர்ணதர்மத்தில் மாறாமலும், வேதக் கருத்துக்களிலிருந்து பிறழாமலும் இருக்கும் வரை அங்கிருந்த மக்கள் ஆரியர்கள் என்று ஏற்றுக் கொள்ளப்பட்டனர். அவற்றிலிருந்து பிறழ்ந்தால், அவர்கள் விராத்தியர்கள் எனப்பட்டனர். அவர்களுள் க்ஷத்திரிய விராத்தியன் திராவிடன் எனப்பட்டான். அவனைப் போல பிராம்மண, வைசிய, சூத்திர விராத்தியர்களும் உண்டு.


மேலே சொல்லப்பட்ட சவரர்கள், புண்டரர்கள், ஆபீரர்கள் ஆகியோர். வேத தருமத்திலிருந்து வழுவவே, சம்ஸ்க்ருத மொழியையும் அவர்கள் விட்டவர்கள் ஆயினர். சமஸ்க்ருதம் அல்லாத மொழியைப் பேசவே அதைத் திராவிடம் என்று கால்டுவெல்லுக்குப் பிறகு சொல்லப்பட்டு வந்துள்ளது. உண்மையில் அது பரவலாக, மக்களிடையே பேச்சு மொழியாக வழங்கி வந்த மொழியாகும். முன்பே பகுதி 32-இல் அசோக வனத்தில் சீதையிடம் அனுமன் சாதாரண மக்கள் பேசும்மனுஷ்ய பாஷையில் பேசினான் என்று கண்டோம். அவ்வாறான ஒரு மனுஷ்ய பாஷை, எல்லோரும் பேசக்கூடியதாக ராமாயண காலம் தொட்டு இருந்து வந்திருக்கிறது. சமஸ்க்ருத்த்தை விட்டு விட்டு, இந்த மனுஷ்ய பாஷையை மட்டுமே விராத்தியர்கள் பேசியிருக்கின்றனர்.


திராவிடர்களாக ஆனவர்கள், சூத்திர்ர்களாகவும் இருந்திருக்கிறார்கள். அப்படி சூத்திர்ர்களாக ஆனவர்கள், மீண்டும் க்ஷத்திரிய சுபாவம் கொண்டு நாட்டை ஆண்டிருக்கிறார்கள். நாட்டை ஆளும் அரசனானாலும், தங்களை திராவிட ராஜன் என்றும், சூத்திர ராஜா என்றும் சொல்லிக் கொண்டுள்ளார்கள். திராவிடன், சூத்திரன் என்பது ஒரு அடையாளமே. அவை இழிவானவை அல்ல என்பது இதன் மூலம் தெரிகிறது.


அப்படி திராவிட ராஜா என்றழைக்கப்பட்ட ஒரு அரசன் இலக்கிய உலகில் நீங்காத புகழ் பெர்றிருக்கிறான். அவன்  தமிழனோ அல்லது தமிழ் நாட்டுப் பகுதியிலிருந்து வந்தவனோ அல்ல.
அவன் ஒரு ஆபீரன்.
மேலே சொல்லப்பட்ட திராவிடர்கள் உள்ளிட்ட ஆபீரர்களுள் ஒருவன். ஆபீரர்கள் இருந்த பகுதி சரஸ்வதி நதி சென்ற பாதையில் இருந்த விநாஸனம் என்னும் இடம்.
விநாஸனம் என்றால் அழிந்து போன இடம் என்று பொருள். ஒரு காலத்தில் பரந்து விரிந்து சென்ற சரஸ்வதி நதி, 7000 ஆண்டுகளுக்கு முன் பூமிக்குள் ஆங்காங்கே மறைந்து விட்டது. அப்படி ஒரு இடத்தில் மைநாக மலை என்னும் இடம் பூகம்பத்தால் பூமிக்குள் சென்று விட்ட்து. அந்த இடமே விநாஸனம் என்று என்று மஹாபாரதம் தெரிவிக்கிறது (3-135)


இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் ‘ஊர்என்னும் பெயர்க் காரணம் சொல்லப்பட்ட இடத்தில் பரசுராமர் க்ஷத்திரியர்களை அழித்த பிறகு இருந்த காலத்தில் பூமி பாதாளத்தில் மறைந்தாள், அதாவது பூகம்பம் ஏற்பட்டது என்று பார்த்தோம். அதற்கு இயைபாக விநாஸனம் என்னும் இடம் உருவான விவரம் இருக்கிறது. நாம் முன்பே சரஸ்வதிப் படுகையில் பூமித்தட்டுகள் கூடுமிடம் இருக்கிறது என்று பார்த்தோம் (பகுதி 48) அவற்றின் உராய்வில் மைநாகம் என்னும் மலையே சமனாகி இருக்கிறது. அந்தப் பகுதியில் க்ஷத்திரியம் விட்ட ஆபீரர்கள் குடியேறினர்.


அவர்கள் வம்சத்தில் வந்த ஒரு அரசன், கி.மு. 2 ஆம் நூற்றாண்டுக்கு முன் இருந்தவன், வடமொழியில் மிகப் புகழ் பெற்ற மிருச்சகடிகம் என்னும் நாடகத்தை எழுதினான். இன்றைக்கு நம்மிடையே இருக்கும் வடமொழி நாடகங்களில் மிகவும் பழமையானது இது. 



அந்த நாடகத்துக்கு உரை எழுதிய பிருத்வீதாரன் என்பவர், தன்னுடைய முன்னுரையில், இவனை, ஆபீரனும், சண்டாளனுமாக இருந்ததிராவிட ராஜன் என்கிறார்.
இந்த அரசனின் இயற்பெயர் இந்திரானி குப்தன் என்று சொல்கிறார்கள்.

ஆனால் இவர் சூத்திரகர் என்னும் புனைப் பெயரில் இந்த நாடகத்தை எழுதியுள்ளார்.

இவர் எழுதிய மொழி ஆரியம் என்று தமிழ் நாட்டுத் திராவிடவாதிகளால் சொல்லப்படும் சமஸ்க்ருதம்

அந்த நாடகம் நடை பெறுவதாகக் காட்டப்படும் இடம் பீஹாரில் உள்ள பாட்னா எனப்படும் பாடலிபுத்திரம்

தமிழுக்கும், தமிழனுக்கும் சுத்தமாகத் தொடர்பே இல்லாத திராவிடராஜன் இவன்


இவன் இருந்தது வேதம் வளர்ந்த சரஸ்வதி நதி தீரத்தில்

இவனை எந்த ஆரியப் படயெடுப்பாளியும் விரட்டி அடிக்கவில்லை

க்ஷத்திரிய தர்மத்தைக் கைவிட்ட ஆபீரர்கள் பரம்பரையில் வந்தவன்.
அதனால் திராவிடன் எனப்பட்டான்.

திராவிடத்தை விட்டு, சூத்திரனாக மாறினவர்கள் பரம்பரையில் வந்தவன். 

தன்னைப் பெருமிதமாக சூத்திரகன் என்று சொல்லிக் கொண்டுள்ளான். இவனது நாடகத்து உரை எழுதியவரோ, இவனை சண்டாளனாக இருந்த திராவிட ராஜன் என்கிறார்.

காலப்போக்கில் வர்ண தர்மத்தை விட்டு, வேறு சுபாவத்தில் இருந்தாலும், அதனால் யாரும், யாரையும் இழிவுபடுத்தவில்லை என்றும்,
அப்படி வர்ணம் மாறினாலும் அவரவர்கள், தங்கள் போக்கில் அரசர்களாகவும், அறிஞர்களாகவும், கவிகளாகவும் இருந்திருக்கின்றனர் என்றும்,
அவரவர் பங்களிப்புக்குத் தக்க பெருமை கொடுக்கப்பட்டிருக்கிறது என்றும்,
எந்த வர்ணத்தவர்களாக இருந்தாலும், வடமொழிப் புலமை கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள் என்றும்
இந்த திராவிட ராஜன் மூலமாகத் தெரிகிறது.


இங்கு மேலும் சில விவரங்கள் திராவிடர்களைப் பற்றிச் சொல்ல வேண்டியிருக்கிறது


க்ஷத்திரியத்துக்குத் திரும்பியவர்களை மேலே கண்டோம். அப்படித் திரும்பாமல் திராவிடர்களாகவே ஆனவர்கள் மிலேச்சர்களாகவும் ஆனார்கள். சிபியின் முன்னோன் வகையில் உசீனர்ர்கள் மிலேச்சர்களாக ஆகி, வேத மதத்தை விட்டார்கள். அவர்களுடன் சேர்த்து திராவிடர்கள் பெயரும் மஹாபாரதத்தில் வருகிறது. அந்த உசீனரர்கள்சக்ஷுஸ் நதி வரை (காஸ்பியன் கடல்) சென்று குடியேறினர் (பகுதி 32). பாலிகம் என்னும் அரேபியா வரையும் சென்றனர். எனவே வேத மதத்திலிருந்து வழுவிய திராவிடர்கள் சென்ற இடங்களில், வேத மதத்தின் திரிபுகளும் அந்த இடஙகளில் இருப்பதில் ஆச்சரியமில்லை. அதில் கவனிக்கப்பட வேண்டியது, மிலேச்சர்களான திராவிடர்கள் இந்தியாவிலிருந்து வட மேற்கு ஐரோப்பா சென்றிருக்கக்கூடிய சாத்தியம் இருக்கிறதே தவிர, சிந்து சமவெளிப் பகுதியிலிருந்து, தமிழ் நாட்டுக்கு வந்திருக்க்கூடிய சாத்தியமே இல்லை என்பதுதான்


இத்துடன் திராவிடம் முடியவில்லை.
 
விஸ்வாமித்திரருக்கும், வசிஷ்டருக்கும் நடந்த சண்டை மஹாபாரதத்திலும், ராமாயணத்திலும் விவரிக்கப்படுகிறது. இது ராமர் காலத்துக்கு முன்பே நிகழ்ந்தது. வசிஷ்டரிடம் இருந்த காமதேனு என்னும் பசுவைப் பெற வேண்டி விஸ்வாமித்திரர் சண்டையிட்டார். வசிஷ்டரோ தனி மனிதன். சிறந்த தவசியும் கூட. விஸ்வாமித்திரரது படைகளை வெல்ல அவருக்குப் படை பலம் இல்லை. ஆனால் விரும்பியது கொடுக்கும் அந்தக் காமதேனு பசுவின் அருளால் அவர், பலவித மக்களை உருவாக்கினார். அவர்கள் முறைப்படி யுத்தப் பயிற்சி பெற்றவர்கள் இல்லை. ஆனால் கொடூரமாகச் சண்டை போடக் கூடியவர்கள். அவர்களைக் கொண்டு வசிஷ்டர் விஸ்வாமித்திரரை வென்றார் என்று இதிஹாசங்கள் சொல்கின்றன.



வசிஷ்டருக்கு உதவிய அந்த மக்களுள் திராவிடர்களும் ஒருவர்! (ம.பா 1-177)
இங்கு வாசகர்கள் ஒன்றை நினைத்துப் பார்க்கலாம். எத்தனை இடங்களில் திராவிடர் பெயர், எத்தனை விதமாக வருகிறது! 


நமது பாரபரியத்தின் - நமது நூல்களின் உள்ளுறை விஷயங்களை அறிந்து கொள்ளவில்லை என்றால், இவற்றை எந்த அர்த்தத்தில் சொன்னார்களோ அந்த அர்த்தத்தில் அறிந்து கொள்ள முடியாது. அவை எதுவும் தெரியாமல் இந்த திராவிட சங்கதிகளைப் படித்த ஐரோப்பியர்களுக்கு என்ன புரிந்திருக்கும்? வாய்க்கு வந்தபடி ஒரு அர்த்தம் கற்பித்து விட்டுப் போய் விட்டார்கள். அதை அப்படியே பிடித்துக் கொண்டார்கள் தமிழ் பேசும் திராவிடவாதிகள். 


வசிஷ்டர் விஸ்வாமித்திரர் சண்டையில் வசிஷ்டர் சார்பில் ஈடுபட்ட மக்கள் அனைவருமே மிலேச்சர்கள் என்று சொல்லப்பட்டவர்கள். இவர்கள் வேத மதத்துக்குப் புறம்பாக வாழ்ந்தவர்கள். (பகுதி 28) சாகர்கள், யவனர்கள், காம்போஜர்கள், பர்பரர்கள் எனச் சொல்லப்பட்ட பல மக்களுள் ஒருவராக திராவிடர்களும் சொல்லப்படவே, பரசுராமர் காலத்துக்கும் முன்பாகவே திராவிடர்கள் இருந்திருக்கின்றனர் என்று தெரிகிறது.


க்ஷத்திரியம் விட்டு திராவிடர்களானது ராமாயண காலத்துக்கு முன்பே ஆரம்பித்திருக்கிறது. பரசுராமர் காலத்திலும், க்ஷத்திரியம் விட்டு திராவிடர் ஆகியிருக்கிறார்கள். அவர்களில் சிலர் (அல்லது பலர்) மீண்டும் க்ஷத்திரிய வாழ்க்கைக்குத் திரும்பியிருக்கிறார்கள். திராவிடர்களாக அவர்கள் இருந்த போது வாழ்ந்த இடங்கள் திராவிட நாடு என்றாகி இருக்ககூடும் என்று சொல்லும் வண்ணம் மேற்சொன்ன 6 வகை க்ஷத்திரியர்களுள் 6 ஆவது வகையினர் வாழ்ந்த இடத்தை வராஹமிஹிரர், திராவிட நாடு என்று பிருஹத் சம்ஹிதையில் எழுதியுள்ளார். 


அந்த இடத்துக்கும், மற்ற அரசர்கள் மறைந்து வாழ்ந்த இடங்களுக்கும் ஒரு வித்தியாசம் இருக்கிறது.
மற்ற அரசர்கள் ஆரியவர்த்தத்தை விட்டு வெளியேறவில்லை.
6 ஆவதாகச் சொல்லப்பட்ட மருத்தரின் வம்சத்தினர் ஆரிய வர்த்ததை விட்டு வெளியேறி விந்தியமலைக்குத் தெற்கே வந்து சமுத்திரக் கரையில் தஞ்சம் புகுந்திருக்கின்றனர்.


பச்சை நிறக் கட்டத்தில் ஆரிய வர்த்தம்.


பிறகு அவர்கள் மீண்டும் தங்கள் நாட்டுக்குச் சென்ற பின்னும் கூட, அவர்கள் ஓடி ஒளிந்த இடமாக இருக்கவே, அவர்கள் சிறிது காலம் வாழ்ந்த சமுத்திரக் கரையோரப் பகுதி திராவிடம் என்ற பெயரைக் கொண்டிருக்க வேண்டும்.


அதன் காரணமாகவே, விந்தியத்திற்குத் தெற்கே குடியேறிய பிராம்மணார்கள் பஞ்சத் திராவிடர்கள் என்று அழைக்கப்பட்டிருக்க வேண்டும். 

ஐந்து என்ற பொருளில் பஞ்சத் திராவிடர்களாக இருந்தாலும், அந்தப் பகுதிகளில் குறிப்பாக ஒரே ஒரு இடத்தைத் திராவிடம் என்று சொன்னது, ஓடி ஒளிந்த மருத்த வம்சத்தினர் வாழ்ந்த இடமாக இருக்க வேண்டும். 

திராவிட நாடு என்று மஹாபாரதத்தில் சொல்லும் இடங்கள் பலவற்றில் சமுத்திரக் கரையை ஒட்டிய திராவிட நாடு என்றும், தெற்கில் உள்ள திராவிட நாடு என்றும் சொன்னது, விந்திய மலைக்குத் தெற்கில், கடலோரப் பகுதியில் (அரபிக் கடலோரம்) இருந்த நாடு என்று சொல்லியிருக்கிறார்கள் என்றும் எண்ணத் தக்க வகையில் இந்த இருப்பிடம் உள்ளது.


இங்கு இன்னொரு வித்தியாசம் இருப்பதையும் காணலாம்.

பஞ்ச திராவிடர் என்று சொன்னது பிராம்மணர்களை.

ஆனால் திராவிடர்கள் என்று சொன்னது க்ஷத்திரியர்களை. 

ஒரே காலக்கட்டத்தில், பிராம்மணர்களுக்கும், க்ஷத்திரியர்களுக்கும், இந்தத் திராவிடப் பெயருடன் சம்பந்தம் வந்திருக்காது. க்ஷத்திரியத் திராவிடர்கள் சம்பந்தம் பெற்ற இடம் திராவிடம் என்ற பெயரை முதலில் பெற்றிருகக் வேண்டும். 

பிற்காலத்தில் அந்தப் பகுதிகளில் குடியேறிய பிராம்மணர்கள், அந்த இடத்துடன் பெற்ற தொடர்பால், திராவிட நாட்டு பிராம்மணர்கள் என்று அடையாளம் பெற்றிருக்க வேண்டும்.


ஒரு இடத்தின் பெயராக திராவிடம் என்று வழங்கியது குறைந்தது 2000 வருடங்களுக்கு மேலாக இருக்க வேண்டும்

ஏனென்றால், திராவிட நாட்டின் அமைப்பைச் சொல்லும் வராஹமிஹிரரது காலம், இன்றைக்கு 1500 முதல் 2000 ஆண்டுகளுக்கு முன் இருக்கலாம் என்னும் கருத்துக்கள் உள்ளன. அவரும் தானாகச் சொல்லவில்லை, அவருக்கு முன் இருந்த ரிஷிகள் சொன்னதைத்தான் சொல்லியுள்ளேன் என்று சொல்லவே 2000 ஆண்டுகள் என்று சொல்லலாம். 

அப்படியென்றால் வைவஸ்வத மனுவை திராவிட தேசத்தரசன் என்று எவ்வாறு சொல்லியிருக்க முடியும் என்னும் கேள்வி எழுகிறது. திராவிட நாடு என்ற சமுத்திரக் கரையோரப் பகுதியை ஒட்டி அரபிக்கடலுக்குள் இருந்த  இடங்களில் அவன் வாழ்ந்திருந்தால், மனுவின் பூர்வீக இடத்தை அடையாளம் காட்ட முனிவர்கள் அவ்வாறு சொல்லியிருக்ககூடும்.


அல்லது அவன் வாழ்ந்த இடத்தின் நிலத்தடி நீர் சம்பந்தத்தால் ( பகுதி 51) அந்தப் பெயர் ஏற்பட்டிருக்கலாம். 

அல்லது மனுவும் ஒரு காலத்தில் தக்ஷன் வாழ்ந்த இந்தியக் கடல் பகுதியிலிருந்து, ஒரு அபாயத்திலிருந்து தப்பி ஓடி வந்தவனாக இருக்கலாம். ஓடி வந்து அரபிக் கடலில் புகலிடம் கொண்டதால், அவன் வாழ்ந்த பகுதிக்குத் திராவிடம் என்ற பெயர் ஏற்பட்டிருக்கலாம்.
இதன் சாத்தியத்தை ‘சாகத்தீவும், குமரிக் கண்டமும் என்னும் கட்டுரையில் பிறகு பார்ப்போம்.

இனி அடுத்ததாக வராஹமிஹிரர் சொல்லும் திராவிட நாட்டின் இருப்பிடத்தைத் தெரிந்து கொள்வோம். 
இந்த விவரங்கள் எதுவுமே அறிந்து கொள்ளாத கால்டுவெல் அவர்கள், தமிழில் திராவிடத்தை எந்த அடிப்படையில் கண்டு பிடித்தார் என்றும் காண்போம்.

8 கருத்துகள்:

  1. //இந்த விவரங்கள் எதுவுமே அறிந்து கொள்ளாத கால்டுவெல் அவர்கள், தமிழில் திராவிடத்தை எந்த அடிப்படையில் கண்டு பிடித்தார் என்றும் காண்போம்.
    //

    கால்டுவெல்,திராவிட அறிஞர்கள் எல்லோரும் முட்டாப்பசங்க. உலகத்தின் ஒரே அறிவாளி நீங்க தான். கலக்குங்க

    பதிலளிநீக்கு
  2. //கால்டுவெல்,திராவிட அறிஞர்கள் எல்லோரும் முட்டாப்பசங்க. உலகத்தின் ஒரே அறிவாளி நீங்க தான். கலக்குங்க//

    என்ன வஞ்சப்புகழ்சியா? ஆங்கிலேயர்கள் சொல்வதை நம்புவீர்கள், ஆனால் நம்நாட்டின் இதிகாச, புராணங்களை மறுப்பீர்கள். - Man

    பதிலளிநீக்கு
  3. எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும்
    அப்பொருள் மெய்பொருள் காண்பதறிவு..

    பதிலளிநீக்கு
  4. அருமை.........இதை வைத்து அரசியல் பிழைப்பு நடத்துபவர்களுக்கு சாட்டையடி.

    பதிலளிநீக்கு
  5. Its nice reading your articles. All vital information on ancient India enumerated in one place. Each and every Indian should read this blog.

    பதிலளிநீக்கு
  6. அதாவது எங்கிருந்தோ வந்த விருந்தாளிக்குப் பிறந்தவன் சொல்வதையெல்லாம் வைத்து இங்கு ஆண்டாண்டு காலங்களாய் வாழ்ந்து கொண்டிருப்பவர்களை ஆரியர் என்பார்கள். திராவிடம் என்று சொல்லிக் கொண்டு கடந்த நூற்றாண்டில் இவர்கள் சாதித்தது என்ன? எத்தனை சாதியை ஒழித்திருக்கிறார்கள்? மத துவேஷத்தை ஒழித்திருக்கிறார்கள்? நான் தமிழ் பார்ப்பணர். பாண்டிய தேசத்தில் அரசவையில் வேலை செய்த பரம்பரை பார்ப்பனன். இதே போல் மனதில் சோகத்தை வைத்துக் கோண்டு நிறைய பேர் உள்ளார்கள். இவர்கள் செய்த தகிடுதத்தம் கடைசியில் நம்மை தமிழராவும் இல்லாமல், இந்தியனாகவும் இல்லாமல், திராவிடனாகவும் இல்லாமல் கடைசியில் எங்களது அடையாளத்தையே பொசுக்குவதுதான்.

    பதிலளிநீக்கு