வியாழன், 18 நவம்பர், 2010

நோக்கம்

தமிழுக்குக்  கட்டியம் கூற ஒரு தேவையும் இல்லை.
ஆனால்  தமிழன் யார் என்று  கட்டியம்  கூற இன்று  தேவை ஏற்பட்டிருக்கிறது.


நம்  தந்தையர்  நாடு  இதுதான் என்று  இந்த செந்தமிழ் நாட்டைப் பற்றி இன்று வரை  இருந்த கருத்தை மாற்ற ஒரு கூட்டம் முயற்சி  செய்துக்  கொண்டிருக்கிறது. 
நாம்  தமிழர்கள், நம் குடி தமிழ்க் குடி என்று தொன்று தொட்டு வந்து கொண்டிருக்கும் நம் குடிப் பெருமையில் மண்ணை அள்ளிப் போட  இந்தக் கூட்டம்  முயற்சித்துக்  கொண்டிருக்கிறது. 


நம்மை ஆள வந்த ஆங்கிலேயன் செய்த அரைகுறை ஆராய்ச்சியில் ஆதாயம் தேடி,  இன்று அந்த ஆராய்ச்சிகள் மண்ணைக் கவ்வி விட்ட நிலையிலும், அவற்றை உடும்புப் பிடியாகப் பிடித்துக் கொண்டு  நம் அடையாளத்தையே மாற்ற முயன்று கொண்டிருக்கிறார்கள்.  


திராவிடன் என்றால் யார் என்றே யாருக்கும் தெரியாது. ஆனால் அந்தத் திராவிடன் நாம் தான் என்று சொல்லிக் கொண்டு ஒரு அரை நூற்றாண்டு காலம் அரசியல் செய்து விட்டார்கள். 
இருப்பினும் "அடைந்தால் திராவிட நாடுஇல்லேயேல் சுடுகாடு" என்று பேசிய வீர வசனங்களுக்கு சமாதி கட்டியாகி  விட்டது என்று நினைத்தோம். 
டில்லி  'கை'க்குள்  இருக்கும் போது திராவிடம் எதற்கு என்ற பகுத்தறிவு வந்து விட்டது என்று நினைத்தோம். 
ஆனால் நாம் நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் எனபது ஏது? 
அதனால்தானோ   நம் நினைப்பில் மண்ணை வாரி இறைத்து 
தமிழ் மண்ணில் திராவிடப் பொய்யை விதைக்கும் முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதன் ஒரு காட்சியாக, கோவையில் செந்தமிழ் மாநாடு அரங்கேறியதை நாம் பார்த்தோம்.


இப்பொழுது,  டில்லி 'கை' விட்டுப் போய் விடுமோ என்ற அச்சம் வந்துள்ளது. 
அதனால் திராவிடமும், ஆரியமும் ஆபத்துக்குக் கை கொடுக்காதா என்று இனி வரும் நாட்களில், பழைய வசனங்களுக்கு இன்னும் வீரியம் ஊட்டி உலவ விடலாம்.


ஏமாறுபவர்கள் இருக்க, ஏமாற்றுபவனுக்கு என்ன குறை? தேர்தல் நெருங்கும் இந்த நேரத்தில் திராவிடப் பொய்களும், ஆரியத் துவேஷங்களும் வீறு கொண்டு எழலாம் என்ற கணிப்பில் இந்தத் தளத்தை ஆரம்பிக்கிறேன். 
தமிழ்ச் சங்க நூல்கள், இதிகாசங்கள் மற்றும் பிற பண்டைய நூல்கள் காட்டும் இந்திய வரலாறு, ஆரிய- திராவிடப் போராட்டம் குறித்த உண்மைகள், திராவிடர்கள் வாழ்ந்ததாகச் சொல்லப்படும் சிந்து சமவெளிப் பகுதிகள் தரும் உண்மைகள், மரபணு மற்றும் விஞ்ஞான ஆராய்ச்சிகள் காட்டும் உண்மைகள் ஆகியவை குறித்து, நான் அறிந்தவற்றின் அடிப்படையில் தமிழன் திராவிடனா இல்லையா என்ற கேள்விக்குப் பதிலைக்  கட்டுரைகளாக எழுத உள்ளேன். 


தேர்தல் கால மாயப் பேச்சில் தமிழன் மயங்காதிருக்க வேண்டி, எளியவளான நான் அறிந்ததை மக்களுக்குச் சொல்ல வேண்டும் என்ற ஆர்வத்தில் எழுதுகிறேன். 
நிறை குறை இருப்பின் சுட்டிக்காட்டவும். 
மெருகேற்றக் கருத்து இருப்பின் எமக்கு எழுதவும்;
அவற்றைக் கொடுத்தவர் பெயரில் வெளியிடுகிறேன். 


வாழிய செந்தமிழ்!
வாழ்க நற்றமிழர்!
வாழ்க  இத்தமிழகம்!


 

3 கருத்துகள்:

  1. திருமதி.ஜெயஸ்ரீ அம்மா அவர்களே,

    ///தமிழ்ச் சங்க நூல்கள், இதிகாசங்கள் மற்றும் பிற பண்டைய நூல்கள் காட்டும் இந்திய வரலாறு, ஆரிய- திராவிடப் போராட்டம் குறித்த உண்மைகள், திராவிடர்கள் வாழ்ந்ததாகச் சொல்லப்படும் சிந்து சமவெளிப் பகுதிகள் தரும் உண்மைகள், மரபணு மற்றும் விஞ்ஞான ஆராய்ச்சிகள் காட்டும் உண்மைகள் ஆகியவை குறித்து, நான் அறிந்தவற்றின் அடிப்படையில் தமிழன் திராவிடனா இல்லையா என்ற கேள்விக்குப் பதிலைக் கட்டுரைகளாக எழுத உள்ளேன்.///

    நான் தமிழ் ஹிந்து தளத்தில் உங்கள் பிரபஞ்சவியலின்...கட்டுரைகளைப் படித்து அதன் மூலம் உங்கள் தளத்திற்கு தற்செயலாக வந்தேன்.நானும் இந்த ஆரிய திராவிடக் கட்டுக்கதையை எதிர்த்து ஒன்றிரண்டு தளங்களில் பின்னூட்டமிட்டு வருகிறேன்.இந்த நேரத்தில் அந்த ஆரிய திராவிட கட்டுக்கதைப் பற்றிய உங்கள் பதிவைப் படிக்கும் போது நான் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.உங்கள் கட்டுரைகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.மிகவும் நன்றி.

    பதிலளிநீக்கு
  2. நன்றி திரு தனபால் அவர்களே.

    தங்கள் கருத்து ஊக்கமளிப்பதாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  3. Nehru & his bunch of Lunatics have completley Tampered History to suit their Benfits and are continuously doing it.
    Its time we need to know the Truth

    பதிலளிநீக்கு