ஞாயிறு, 23 செப்டம்பர், 2012

108. இரானியர்களும், ட்ரூயிடுகளும் பருகிய சோம பானம்!ஆரியப் படையெடுப்பு என்று சொல்லிவிட்டால் மட்டும் போதுமா? இந்தியாவுக்கு வெளியிலிருந்து ஆரியன் வந்தான் என்பதை எப்பாடுபட்டாவது 'கண்டு பிடித்து' நிரூபிக்க வேண்டாமா? அந்த அவசியம் மாக்ஸ் முல்லர் போன்றவர்களுக்கு இருந்தது. அப்படி ஒரு நிரூபணத்தைத் தேடிய அவர்களுக்குக் கிடைத்த விவரம் 'சோம பானம்' என்பதே.


பாரதத்தில் எங்கு திரும்பினாலும், சோமன் இருந்தான் என்பது அவர்களுக்குப் பெரிதாகத் தெரியவில்லை. சோமன் என்னும் சந்திரன், அந்தச் சந்திரனைத் தலையில் சூடியதால் சோமநாதர் என்ற பெயர் கொண்ட சிவன், சோமனது பெயரால் சோம வாரம் என்னும் திங்கள் கிழமை, எந்தப் புராணத்திலும் சோமனைப் பற்றி ஏதேனும் ஒரு கதை, ஹோமங்களில் உயர்வானதான சோம யாகம், அந்த யாகம் செய்பவர்களுக்கு, சோமயாஜு என்ற குடும்பப்பெயர் இப்படி எத்தனையோ சொல்லிக் கொண்டே போகலாம். இவை எல்லாம் ஆங்கிலேயர் இந்தியாவுக்கு வந்த போது பிரபலமாக இருந்த பெயர்கள்.

 

பாரத நாட்டின் முதல் ஜோதிலிங்கம் சோமநாதபுர ஜோதிலிங்கமாகும். கஜினி முகம்மதுவில் ஆரம்பித்து, ஔரங்கசீப் வரை பல முகலாய மன்னர்களால் சூறையாடப்பட்டு, அழிக்கப்பட்ட ஆலயம் அது. ஆங்கிலேயர்களுக்கு அதைப் பற்றிய சரித்திர விவரம் நன்றாகவே தெரியும், அவர்கள் காலத்தில் அந்த ஆலயம் இருந்த நிலையைக் கீழுள்ள படத்தில் காணலாம்.

1869 –இல் சோமநாதபுர ஆலயம்.

 

சோமநாதர் என்னும் பெயரில் உள்ள சோமன் யார்?


சோம வாரத்தில் உள்ள சோமன் யார்?,


அவர்கள் பின்பற்றிய மண்டே என்னும் கிழமையிலும் சோமன் என்னும் சந்திரன் பெயர் வருகிறதே, அது எப்படி என்று ஆராய்ந்திருக்கலாம் அல்லவா?

அல்லது ஆங்கிலேயர்கள் இருந்த காலத்திலும் இந்தியாவில் சோமயாகங்கள் நடந்தனவே, அதைக் கொண்டாவது ஆராய்ந்திருக்கலாமே?


ஜான் ஸ்டீவென்சன் என்பவர் 1842 ஆம் வருடம் வெளியிட்ட சாமவேத மொழிபெயர்ப்பில், ஆங்கிலேயர்கள் மராத்தா நாட்டை ஆக்கிரமித்த காலத்தில் நாசிக், பூனா, சதாரா ஆகிய மூன்று இடங்களில் சோம யாகம் நடந்தது என்கிறார். அந்த யாகத்தில் சோம ரசத்தை இந்திரனுக்கும், ரிபுவுக்கும் அளிப்பார்கள். அதைக் கொண்டாவது சோம ரசம் என்றால் என்ன என்று ஆராய்ந்திருக்கலாமே?


 

இந்திரன்


ஆனால் அதெல்லாம் அவர்களுக்கு 'கிக்' ஏற்றுவது போல இல்லை. அதிலெல்லாம், குட்டையைக் குழப்புவதற்கு எந்த விவரமும் கிடைக்கவில்லை. ஆரம்பத்தில் மாக்ஸ் முல்லரும், சோம பானத்தை அசட்டையாக விட்டுவிட்டார். ஏனெனில் அது ஆபஸ்தம்ப சூத்திரத்தில் வருவது. அதனால் அது சூத்திர காலம், ஆனால் தனக்கு வேத காலம் தான் தேவை என்று அவர் கண்டு கொள்ளவில்லை.


இவர்களது காலப் பகுப்பே தமாஷாக இருக்கும். வேத காலம், உபநிஷத் காலம், இதிஹாச காலம், சூத்திர காலம் என்றெல்லாம் பிரித்துப் பார்த்துத்தான் இவர்கள் ஆராய்ந்தார்கள். இன்று வரை பாரத வரலாற்றை ஆராய்பவர்கள் அப்படித்தான் செய்து வருகிறார்கள். ஆனால் எந்த ஒரு காலக்கட்டத்திலும், இவை எல்லாமே ஒன்றாக இருந்தன. உதாரணமாக இதிஹாசம் என்று சொல்லப்படும் ராமாயணத்தில், ராமன் வாழ்ந்த காலத்தில் ரிக் வேத ரிஷிகளும் வாழ்ந்திருக்கிறார்கள்.  உபநிஷத்துக்களில் சொல்லப்படும்  ரிஷிகளது பெயரும் வருகின்றன. வேதாங்கங்களில் ஒன்றான கல்ப சூத்திரங்களும் இருந்திருக்கின்றன. இவற்றைத் தனித் தனியாகப் பிரிப்பது என்பது அபத்தமானது.

 

இது எப்படி இருக்கிறதென்றால், வருடம், அயனம், மாதம், பக்ஷம், வாரம் என்று ஒன்றுக்குள் ஒன்று காலம் இருக்கிறதல்லவா? அவற்றை அயன காலம், மாத காலம், பக்ஷகாலம் என்று பிரித்து, ஒரு விவரம் இந்த அயனத்தில் நடந்தது என்ற குறிப்பும், இன்னொரு விவரம் இந்த பக்ஷத்தில் நடந்தது என்ற குறிப்பும் இருந்தது என்றால் அது அயன காலத்தைச் சேர்ந்தது, இது பக்ஷ காலத்தைச் சேர்ந்தது, அயனத்துக்குப் பிறகுதான் பக்ஷம் வரும், அதனால், அயனக் குறிப்புடன் வரும் விவரம் முன்னால் நடந்தது, பக்ஷக் குறிப்புடன் வரும் விவரம் பின்னால் நடந்தது என்று சொல்வதைப் போல உள்ளது.


ஆரம்பத்தில் மாக்ஸ் முல்லர் சோம ரசத்தை சூத்திர காலம் என்று ஒதுக்கி விட்டார். ஆபஸ்தம்ப சூத்திரத்துக்கு தூர்தவஸ்வாமியின் உரையில் ஆயுர் வேத்த்தைப் பற்றிப் பேசும்போது சோம ரசத்தைப் பற்றிச் சொல்லியுள்ளார். அதனால் சோம ரசம் என்பது காலத்தால் பிற்பட்டது என்று அதை அலட்சியப்படுத்தி விட்டார்.ஆனால் மாக்ஸ் முல்லர் காலத்தில் ஈரானில் பின்பற்றப்பட்ட அவெஸ்தன் மதத்தை ஆராய்ந்த ஐரோப்பியர்கள், அங்கு ஹவோமா (HAOMA)  என்ற பெயர் கொண்ட செடியை நசுக்கி, சாறு பிழிந்து வழிபாட்டில் பயன்படுத்தினார்கள் என்று சொன்னார்கள். அவ்வளவுதான், ஆரியன் வந்த வழியைக் கண்டுபிடிக்க இது ஒரு துருப்பு என்று எல்லோரும் அதில் முழுகி விட்டார்கள். மாக்ஸ் முல்லரும், 1888 ஆம் ஆண்டு  வெளியிட்ட BIOGRAPHIES OF WORD AND HOME OF THE ARYANS  என்னும் தனது வெளியீட்டில் THE ORIGINAL HOME OF THE SOMA என்று 20 பக்கங்களுக்கு எழுதி விட்டார். சோமம் எங்கிருந்து வந்ததோ அதுவே ஆரியன் இருந்த ஆரம்ப இடம் என்று சொல்வதே அவரது கருத்து.


ஆனால் ஈரானிய சோம ரசத்தை எங்கு, எப்படிப் பயன்படுத்தினார்கள் என்றும், பாரத நாட்டில் எங்கு, எப்படி பயன்படுத்தினார்கள் என்றும் இன்று வரை யாரும் ஆராயவில்லை. அதை ஆராய்ந்து சொல்ல எவருக்கும் விருப்பமில்லை. ஏனெனில் ஆராய ஆரம்பித்தால் அதற்கு முன்னோடி பாரத நாட்டில் இருக்கிறது என்பது எளிதில் தெரிந்து விடும்.


எந்த ஒரு வேத வழக்கத்தை எடுத்துக் கொண்டாலும், இந்திய- ஈரானிய வழக்கங்களை ஒப்பிடுதல் என்று சொல்லிக் கொண்டு, அது ஈரானில் இருக்கிறது என்று சொல்வதே இன்று வரை வழக்கமாக இருந்து வருகிறது.


அது போல வேத மரபில் உள்ள ஒரு சொல்லை எடுத்துக் கொண்டால் அது ஈரானிய மொழியில் அல்லது ஐரோப்பிய மொழியில் இருக்கிறது. அவற்றிலிருந்துதான் சமஸ்க்ருத்த்துக்கு வந்தது என்று சொல்வதும், அல்லது PROTO-INDO-IRANIAN  என்றும் INDO-EUROPEAN சொல் என்று சொல்வதும் வழக்கமாக இருக்கிறது.


சமஸ்க்ருத்த்தில் அதன் வேர்ச்சொல் எப்படிப் போகிறது அல்லது பாரதப் பண்பாட்டில் அதன் வீச்சு அதிகமாக இருக்கிறது என்ற ஆராய்ச்சியெல்லாம் தேவையில்லை. ஈரானைத் தாண்டித்தான் இந்தியாவுக்கு ஆரியன் வந்தான் என்று சொல்வதற்கு இந்த அணுகுமுறை உதவுகிறது.


இதற்குத் தலையாட்டுவதற்கு திராவிடவாதிகளும், செக்யுலர் வரலாற்று ஆராய்ச்சியாளர்களும் இருக்கவே இருக்கிறார்கள்.

 

ஆங்கிலேயர்கள் சோம ரசத்தை ஈரானில் தேடிப் பிடித்தார்களே, தங்களது நாடான இங்கிலாந்திலேயே அதன் சாயலில் ஒரு வழக்கத்தைக் கண்டு சொல்லியிருக்கலாமே?


ஆனால் சொல்லவில்லை.


ஏனெனில் இந்த சரித்திர ஆராய்ச்சியெல்லாம் வெளி நாடுகளில்தான்.

தங்கள் நாட்டில் கிடையாது.


தங்களுடைய சரித்திரத்தை அடித்து, நொறுக்கிக் கொன்று போட்டு விட்டுத்தான் அவர்கள் பிற நாடுகள் மீது ஆதிக்கம் செலுத்த வந்தார்கள்.


அவர்கள் நாட்டில் இருந்த கெல்டுகள், ட்ரூயிடுகள் வழக்கமெல்லாம் காட்டுமிராண்டி வழக்கங்கள். அவற்றை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று ஒழித்து விட்டார்கள், அதற்குத் தூண்டு கோலாக இருந்தது கிருஸ்துவம்தான். அதே கிருஸ்துவம் கொடுத்த மதமாற்ற வெறியில், நம் நாட்டு வரலாற்றையும் தங்கள் இஷ்டம் போலவே எழுதினார்கள்.


ஆனால் எந்த கிருஸ்துவம் அவர்களது மூதாதையர் மரபுகளை அழித்ததோ, அதே கிருஸ்துவம், அந்த மரபுகளையும், கருத்துக்களையும் திரித்து, தனது கருத்துக்களாக ஆக்கிக் கொண்டது. காரணம், மக்களைக் கிருஸ்துவர்களாக மாற்றினாலும், அவர்கள் வழிவழியாகப் பின்பற்றி வந்த பல வழக்கங்களை எளிதில் அழிக்க முடியவில்லை. அதனால் அவற்றைச் சற்று மாற்றி, அவையே கிருஸ்துவக் கருத்து என்று ஆக்கிக் கொண்டார்கள். அப்படி உருமாறின ஒரு வழக்கம்தான் ட்ரூயிடுகள்து சோம ரசம் ஆகும்.

 

இதைப் பற்றிப் பேசும் பொழுது, நாம் ஈரானிய ஹவோமாவையும் ஆராய வேண்டும். அப்பொழுதுதான் எது மூலம், எது காப்பி என்று தெரியும். இதற்கு நாம் வேத மரபில் இருந்து வந்த வழக்கத்தை முதலில் பார்ப்போம்.


சோமலதா என்னும் ஒரு மூலிகைச் செடியிலிருந்து சாறு பிழிந்து, எடுத்திருக்கிறார்கள். அதை இரண்டு வழிகளில் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஒன்று சோம யாகத்தில் அதை ஆஹுதி (யாகத் தீயில் இடுதல்) செய்திருக்கிறார்கள். மற்றொன்று அதைப் பருகியிருக்கிறார்கள்.


சோம யாகத்தில் காலை, மதியம், மாலை என்று மூன்று வேளைகளில் அதை நசுக்கிப் பிழிந்து காலையிலும், மதியத்திலும் இந்திரனுக்கும், மாலை யாகத்தில் ரிபுவுக்கும் படைத்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட வேள்வியை மதுக்கொள் வேள்வி என்று சேரன் செங்குட்டவனும் செய்திருக்கிறான் என்பதைச் சிலப்பதிகாரத்தின் மூலம் அறிகிறோம். இதையே சோமயாகம் என்று உரையாசிரியரும் கூறுகிறார். அதைச் செய்வதற்கு முன் சதுக்க பூதத்தை வஞ்சியுள் நிறுவி, பிறகு அந்த யாகத்தைச் செய்திருக்கிறான். இதனால் சதுக்க பூதத்தை பிரதிஷ்டை செய்த பிறகோ அல்லது சதுக்க பூதம் இருக்கும் இடத்திலோ இந்த வேள்வி செய்யும் வழக்கம் இருந்திருக்கிறது என்று தெரிகிறது.


'கொச்சிக்கு வடக்கே எட்டுக்கல் தொலைவில் உள்ள அழிந்துபட்ட பழைய வஞ்சிமாநகரப் பகுதியில்'  நல்ல வேலைப்பாடுகளுடன் கூடிய ஒரு மிகப் பெரிய கற்சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. அது சதுக்க பூத்த்தின் சிலையாக இருக்கலாம் என்று டா. மா. இராச மாணிக்கனார் கருதுகிறார். ('தமிழகக் கலைகளும், கல்வெட்டுகளும்' பக் – 51). இப்படி ஒரு சிலை இருக்கிறது என்பதே சிலப்பதிகார விவரங்கள் உண்மை என்பதைப் பறைசாற்றுகின்றது.


"சதுக்க பூதரை வஞ்சியுள் தந்து, மதுக் கொள் வேள்வி வேட்டோன்" என்று சிலப்பதிகாரம் கூறுவதால், (நடுகல் காதைவரிகள் 147 - 148). நான்கு தெருக்கள் கூடும் மையப் பகுதியில் சதுரமான இடத்தில் அந்த பூதத்தை நிறுவின கையோடு சோம யாக செய்யும் வழக்கமும் இருந்திருக்கிறது என்று தெரிகிறது இந்தச் சிலை நாட்டப்பட்டு 1800 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன.

 

இதற்கு முன் சதுக்க பூதம் என்னும் நாளங்காடி பூதத்தை, முசுகுந்த அரசன் இந்திரனிடமிருந்து பெற்று, பூம்புகாரில் நிறுவினான் என்று 11 ஆம் கட்டுரையில் கண்டோம்.
பூம்புகார்

 

சோழர்களது முன்னோனான சிபிச் சக்கரவர்த்திக்கும் முன்பே முசுகுந்தன் வந்துவிடுகிறான். அவன் காலம் இன்றைக்குப் 10,000 ஆண்டுகளுக்கும் முன்சென்று விடுகிறது. அந்த சதுக்க பூதத்தை நிறுவிய பின் அவன் மதுக் கொள் வேள்வியைச் செய்தானா என்ற கேள்வியும் வருகிறது. அதைப் பற்றி நமக்கு எந்த தகவலும் இல்லையென்றாலும், ஆரியப் பழக்கம் என்று சொல்லப்படும் சோம யாகம் தமிழ் அரசர்களால் தமிழ் மண்ணில் செய்யப்பட்டிருக்கிறது என்பதற்குச் சிலப்பதிகாரம் ஆதாரமாக இருக்கிறது.


அது மட்டுமல்ல, நாளங்காடி பூதம் என்று அந்தச் சதுக்க பூதத்துக்கு ஒரு இடப்பெயரும் இருப்பதால், அந்த இடத்தில் ஒரு அங்காடி இருந்திருக்கிறது என்று தெரிகிறது. நாளங்காடி என்பது காலைக் கடைத்தெரு என்று உரையாசிரியர் கூறுகிறார். நான்கு தெருக்கள் கூடும் நடுவில் இப்படிப்பட்ட சதுக்கமும், அங்கு அங்காடியும் அமைக்கப்பட்டால் அது ஒரு தலை நகரத்துடைய லக்ஷணம் ஆகும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. (மயமதம்- 9- 57-61, அர்த்த சாஸ்திரம் -2- 4-2).  

பூம்புகாரும், வஞ்சியும் தலைநகரங்களே. அதனால் அவை நடுவில் சதுக்கத்துடனும் முறைப்படி 4 பெருவாயில்கள், 8 சிறு வாயில்களுடன் கூடிய பெரு நகரங