ஞாயிறு, 19 டிசம்பர், 2010

20. இந்திரன் என்பவன் இயற்கையில் உள்ள ஒரு சக்தி!
தமிழ்ச் சங்க நூல்களில் இந்திரனை இயற்கைச் சக்தியாகக் காண்கிறோம். வேதத்திலும், புராணங்களிலும் சொல்லப் பட்டுள்ள இந்திரனைக் குறித்த பல கதைகளுக்குள் மறைந்துள்ள விளக்கங்களைத் தமிழ் நூல்களில் வரும் வர்ணனைகள் மூலம் சுலபமாக அறியலாம்.


இந்திரனது வில், மற்றும் வஜ்ராயுதம் பற்றி தமிழ் நூல்களில் வரும் குறிப்புகளை பகுதியில் பார்த்தோம். தமிழ் நாட்டில் சாதாரண மக்களும் இவற்றைப் பற்றி அறிந்திருந்தனர். இவற்றைப் பற்றிய விவரங்களிலிருந்து இவை இயற்கையில் இருக்கும் சில சக்திகள் என்பது புலனாகிறது.


உதாரணமாக பரிபாடலில் (8) ஒரு வர்ணனை வருகிறது. மதுரையில் ஒலிக்கும் முரசொலி, முருகன் எழுந்தருளி இருக்கும் திருப்பரங்குன்றத்தில் எதிரொலிக்குமாம். முரசின் ஒலியானது, கடலிலிருந்து நீரைக் குடித்த மேகம் எழுப்பும் ஒலியைப் போல, இந்திரனது இடியைப் போல ஒலித்தது என்கிறது பரிபாடல்.
மேகத்தில் எழும்பும் இடியை இந்திரனது வஜ்ராயுதம் என்று ஆங்காங்கே சொல்லி இருக்கிறார்கள்.

அப்படி இடிக்கும் போது மின்னல் பளீரெனத் தெரிகிறது. அந்த மின்னல், இடி ஒசையுடனும், சில நேரங்களில் இடி விழுந்தும் நாசம் செய்கிறது. அந்த மின்னல் பயத்தைக் கொடுக்கிறது. எனவே மின்னலை இந்திரனது மற்றொரு ஆயுதமான இந்திர வில் என்றிருக்கின்றனர். சேர நாட்டு மக்கள் அந்த வில்லுக்குத் தான் பயந்திருக்கின்றனர், பகைவர் வில்லுக்கு அவர்கள் பயந்ததில்லை, ஏனென்றால் அவர்களுக்குப் பகைவர் தொந்திரவு இருந்ததில்லை என்று புறநானூறு (20) கூறுகிறது.

அந்த இந்திரனைக் “கரியவன்என்கிறது மணிமேகலை (25- 55). மேகத்தின் நிறம் கருமை நிறம். அந்த மேகத்தை இந்திரனாக உருவகப்படுத்தி உள்ளனர். வேதம், புராணம் மற்றும் தமிழ் நூல்களிலும் அப்படி ஒரு உருவகமே வந்துள்ளது. ஆரியப் படையெடுப்பைச் சொல்வதாகக் கூறும் ரிக் வேத வரிகளில் இந்திரன் கருமையை விரட்டுபவன் என்று வருகிறது. அதாவது இந்திரன் வந்தான் என்றால் அங்கே இடி, மின்னல், மழை இருக்கும். இந்திரனே கரிய மேகம் என்பதன் உருவகம். அவனது ஆயுதங்களான இடியும் (வஜ்ராயுதம்) மின்னலும் (வில்) முழங்கினால், கரு மேகங்கள் மழையைப் பெய்விக்கின்றன என்று அர்த்தம். மழை பெய்யப் பெய்ய, கரு மேகம் சிதறுகிறது. கருமை சிதறுகிறது. இந்திரன் கருப்பர்களைச் சிதறச் செய்தான் என்று வரும் ரிக் வரிகள் இந்த இயற்கை சூழ்நிலையை எடுத்துக் காட்டுகிறது.


இந்திரன் ஆரிய நண்பர்களுடைய நிறத்தைக் காப்பாற்றினான், தன் வெண்ணிற நண்பர்களுடைய வயல்வெளியை, சூரிய ஒளியினாலும், தண்ணீரினாலும் காப்பாறினான் என்று ரிக் வேதம் கூறுகிறது. இங்கு மழையினால் வயல்வெளிகளது நிலை எப்படி இருக்கிறது என்று காட்டுகிறது. மழை இல்லாக் காலத்திலும், இந்திரன் தந்த மழை நீர் நிலத்தடி நீராக உதவுகிறது என்று இந்த வரிகள் தெரிவிக்கின்றன.

மழைக்கு அதிபனாக இந்திரன் இருக்கவே, எங்கெல்லாம் மக்கள் மழையை நம்பி உள்ளனரோ அங்கெல்லாம் இந்திரன் கடவுளாகப் பார்க்கப்பட்டான். அங்கு இந்திரனுக்கு விழா உண்டு.

தமிழ் நிலங்களில், மருத நிலத்துக்குக் கடவுள் இந்திரன். மருத நிலம், ஆற்று நீர், கிணற்று நீர் ஆகியவற்றை நம்பி இருப்பது. அந்த நீர் என்றென்றும் நிரந்தரமல்ல. மழை பெய்தால்தான் ஆற்றில் நீர் ஒடும், கிணற்றில் நீர் ஊறும். அதனால் மருத நிலத்தில் இந்திரனுக்கு விழா உண்டு. புகார் நகரில் இந்திர விழா எடுத்தார்கள் என்றால், அது ஒரு காலத்தில், கடற்கரைப் பட்டினமாக, நெய்தல் நிலமாக இருந்திருக்காது என்று புலனாகுகிறது. கடலிலிருந்து உள்ளடங்கிய ஊராகத்தான் இருந்திருக்க வேண்டும். சம்பாபதியாக அது இருந்தபோது மருத நிலம் சார்ந்ததாகத்தான் இருந்திருக்க வேண்டும். அதனால்தான் மக்களும், மன்னனும், ஆறு ஒன்று வேண்டும் என்று காவேரியைக் கொண்டு வந்திருக்கின்றனர். இந்திர விழாவையும் எடுத்திருக்கின்றனர்.

பின்னாளில் கடல் அரிப்பு அல்லது கடல் சீற்றத்தினால், நிலம் இழந்து, கடற்கரைப் பட்டினமாக மாறி இருக்க வேண்டும். அப்பொழுது சோழர்கள் தங்கள் தலை நகரை உறையூருக்கு மாற்றி இருக்க வேண்டும். அதற்கும் பின்னால்தான் தஞ்சாவூர் தலை நகரமாயிற்று.

மழைக்குப் பஞ்சமில்லாத குறிஞ்சி நிலத்தில் இந்திரன் தயவு தேவை இல்லை. மழையை நம்பி இருந்த மருத நிலத்தில் இந்திரன் தயவு தேவை. எங்கெங்கெல்லாம் வானம் பார்த்த பூமியாக இருந்தார்களோ, அங்கெல்லாம் இந்திரன் கடவுளாகப் போற்றப்பட்டான். மற்ற இடங்களில் இந்திரனுக்கு மவுசு இல்லை.

உதாரணமாக, கிருஷ்ணன் கோகுலத்தில் இருந்த போது, இந்திரனை வழி பட வேண்டாம், இந்திரன் தங்களுக்குக் கடவுள் இல்லை என்று சொல்லிவிட்டார். இந்திரனுக்குப் பதிலாக, கோவர்தனத்தைக் கடவுளாக வழிபடச் சொன்னார். கோவர்தனம் என்பது மலை. அந்த மலையில் மாடுகளுக்கு நல்ல மேய்ச்சல் இடங்கள் இருந்தன. கோகுலமும், மதுரா நகரும் தண்ணிருக்குக் கஷ்டப்பட்டதில்லை. வற்றாமல் என்றும் நீரைத் தர யமுனை நதி இருந்தது. அவர்களது வாழ்வாதாரம், பசுக்களும், பால் வியாபாரமும் ஆகும். பசுக்களுக்கு உணவு தரும் மேய்ச்சல் நிலம் வேண்டும். மழை வந்தால், பசுக்களால் மேய்சசலுக்குப் போக முடியாது. அதனால், கிருஷ்ணன் கோவர்தன மலையைக் கடவுளாக வழிபடுங்கள், இந்திரனைக் கடவுளாகக் கொண்டாடிப் பிரயோஜனம் இல்லை என்றார். இதனால் இந்திரன் கோபம் கொண்டு பெரு மழை பொழிந்தான் என்றும், அவன் கோப மழையிலிருந்து காக்கவே கிருஷ்ணன் கோவர்தனத்தையே, குடையாகப் பிடித்து, பசு மற்றும் மக்களைக் காப்பாற்றினான். 


மேலோட்டமாக பார்க்க இது ஒரு கதையாக இருந்தாலும், இதன் உள்ளே பொதிந்துள்ள உண்மைகள் கவனிக்கத்தக்கவை. ஒரு இந்திரனுக்கே இவ்வளவு தாத்பரியங்கள் என்றால், வேதத்தில் உள்ள கணக்கில்லாத விவரஙளுக்கும், கடவுளர்களுக்கும்  எத்தனை அர்த்தங்கள் இருக்க வேண்டும்? பல முனைகளில் இருந்தும் பார்க்க வேண்டிய விவரங்களை, சர்வ சாதாரணமாக வாய்க்கு வந்தபடி சொல்லி விட்டுப் போய் விட்டான் ஆங்கிலேயன். பகுத்தறிந்துப் பார்க்கத் தெரியாத திராவிடவாதிகளும் நம்மிடம் உள்ள அறிவுக் கருவூலத்தை இகழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.


எதையுமே மறைத்துச் சொல்வதில் தேவர்களுக்கு விருப்பம் என்று உபநிஷத்து சொல்கிறது அல்லவா? இந்திரனில் மறைந்துள்ள விவரம், அவனது ஆயுதங்களான இடி, மின்னலில் உள்ளது. இடி, மின்னலில் உள்ள இயற்கைச் சக்தி மின்சாரமாகும். இந்திரனைப் பற்றி இன்னும் புரிந்து கொள்ள வேண்டும் என்றால் அடுத்த நிலைக்கு நாம் செல்ல வேண்டும். இயற்கையில் எங்கெல்லாம், எப்படி எல்லாம் மின்சாரம் இருக்கிறதோ, அல்லது இயங்குகின்றதோ, அங்கெல்லாம் இந்திரன் இருப்பான். அங்கே இந்திரனைச் சுற்றி ஒரு கதை இருக்கும்.

அப்படி ஒரு கதை மருத்துக்கள் என்னும் கணங்கள் உண்டான கதை.

காஸ்யப முனிவரது மனைவி திதி என்பவள், இந்திரனை மாய்க்கக் கூடிய தேஜஸுடன் கூடிய ஒரு மகனைப் பெறுவதற்கு விரும்பினாள். அப்படியே ஆகுக என்று காஸ்யபரும் வரம் அளித்தார். அதன்படி நூறு ஆண்டுகள் நியமங்களுடன் அவள் தன் கர்பத்தைக் காப்பாற்றி வர வேண்டும். அப்படி இருந்தால் அவளுக்கு, இந்திரனை மாய்க்கும் வல்லமை கொண்ட ஒரு புதல்வன் பிறப்பான் என்கிறார். இந்த வரமே அபத்தம் என்போம். நூறு ஆண்டுகள் ஒரு கர்ப்பம் இருக்குமா என்பதே கேள்வி. ஆனால், சென்ற பகுதியில் பார்த்தோமே, தேவர்களுக்கு எதையும் மறைத்து வைப்பதில் ஆர்வம் உண்டு. எனவே இந்தக் கதையிலும், ஏதோ ஒரு மறை பொருள் இருக்க வேண்டும். நூறு ஆண்டு கர்ப்பம் என்பதிலேயே ஏதோ மறைமுக விவரம் இருக்கிறது என்று நாம் முதலிலேயே புரிந்து கொள்ள வேண்டும்.

இப்படி அவள் கருவைக் காத்து வந்த விவரம் இந்திரனுக்குத் தெரிய வந்தது. அப்படி ஒரு பிள்ளை பிறந்து, தனக்குப் போட்டியாக வரக் கூடாது என்பது அவன் எண்ணம். அதனால் அவன் திதியிடமே சென்று அவளுக்குப் பணிவிடை செய்ய வந்தான். இங்கும் நாம் புரிந்து கொள்ள வேண்டும் யாரை வெல்ல ஒரு பிள்ளையை விரும்புகிறாளோ, அவனையே தனக்குப் பணிவிடை செய்ய ஒருத்தி அனுமதிப்பாளா? எனவே இந்தக் கதையில் ஏதோ மறை பொருள் நிச்சயமாக இருக்கிறது என்று நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

நூறு ஆண்டுகள் முடிவதற்குச் சில நாட்கள் முன்னால் திதி தூங்கி விட்டாள். அதுதான் சமயம் என்று, இந்திரன் கையில் வஜ்ராயுதம் ஏந்தி, அவள் கர்ப்பத்தில் நுழைந்தான். இந்த விவரம் திராவிடவாதிகளுக்கு அல்வா போன்றது. ஆனால் இதன் பின்னால் ஒரு அறிவியல் உண்மை மறைந்துள்ளது என்பதைப் புரிந்து கொள்ளும் பக்குவம் அவர்களுக்கு இல்லை.

கர்ப்பத்தில் நுழைந்த இந்திரன், அந்தக் கருவை ஏழு துண்டுகளாக வெட்டினான். வஜ்ராயுதத்தால் அடிபட்டு அந்தக் கரு கூச்சலிட்டு அழுதது. இந்திரன் ‘அழாதேஎன்றான். ஏழு துண்டங்களாகியும் அந்தக் கரு இறக்கவில்லை.அதனால் ஒவ்வொரு துண்டையும் மீண்டும் ஏழு முறை வெட்டினான். அதனால் அந்தக் கரு 49 துண்டங்களானது. ஆனாலும் அவை அழியவில்லை. அவை அப்படியே நிலை பெற்று விட்டன. அழாதீர்கள் என்று பொருள் படும் “மா ரோதீஎன்று இந்திரன் அவர்களை அழைத்ததால் அவை மருத் என்ற பெயர் பெற்றன. அவற்றைத் தமிழில் ‘மருத்துக்கள்என்கிறோம்.

இதுதான் கதை. தனக்குப் போட்டி இருக்கக்கூடாது என்ற ஆசையில் இந்திரன் செய்த அட்டூழியம் என்று அறிவிலிகள் நினைப்பார்கள். ஆனால், இயற்கையில் இருக்கும் மின்சார சக்தியான இந்திரன் என்ற நோக்கில் பார்த்தால் வேறு விவரம் கிடைக்கிறது. இந்தக் கதை சூரியன் பிறந்த கதையை நினைவூட்டுகிறது.

இன்றைக்கு நாம் பார்க்கும் சூரியன், மூன்றாவது தலைமுறை நட்சத்திரம் ஆகும். அது இதற்கு முன் வேறொரு சூரியனின் பகுதியாக இருந்தது. அந்தச் சூரியன் தனது அந்திமத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. அப்பொழுது அது சூல் கொண்டாற்போல வளர்ந்தது. வளர்ந்து கொண்டே வந்து ஒரு நிலையில் அது வெடித்துச் சிதரும்.. அப்படி வளர்ந்த முத்தின நட்சத்திரமே திதியின் கர்ப்பம் என்று சொல்லப்பட்டது.

அந்தக் கர்ப்பம் நூறு ஆண்டுகள் தரிக்கப்பட வேண்டும். இது விண்வெளிக் கணக்கில் பல நூறு ஆயிரம் வருடஙள் ஆகும். அதன் முடிவில், அந்தக் கர்ப்பம் போன்ற வளர்ச்சி வெடித்துச் சிதறும். (Supernova Explosion). அந்த வெடிப்பை உண்டாக்குவது, இயற்கையில் இடி, மின்னலில் உள்ளது போன்ற மின்சாரம் போன்ற சக்தி ஆகும். அந்த மின்சாரத்தை இந்திரனது மின்னல், வஜ்ராயுதம் என்கிறோம். அந்தத் தாக்குதல் அந்தக் கருவுக்கு ஏற்பட்டது.

ஆனால் உண்மையில் நடந்தது அது குறைபிரசவம் போன்றது என்று அறிவியல் ஆராய்ச்சியில் தெரிய வருகிறது. அப்படி வெடித்துப்  பல சூரியன்கள் வரலாம். சூரியன் அல்லது நட்சத்திரம் என்றால் அது ஒரு அக்கினி கோளமாக இருக்க வேண்டும். மேலும் ஒரு நியூக்கிளியர் உலைக் களமாக அது இருக்க வேண்டும். ஆனால் நியூக்கிளியர் உலைக் களமாக ஒரே ஒரு சூரியன்தான் வந்திருக்கிறது. அது நாம் பார்க்கும் சூரியன். வெடித்தால் ஏற்பட்ட மீதித் துண்டுகள் சூரியனைப் போல அக்கினிக் கோளமாக ஆகாமல், துண்டுகளாகி ஆங்காங்கே இருக்கின்றன. இது விண்வெளியில் நமது சூரிய மண்டலம் தோன்றிய உண்மைக் கதை.

பல சூரியன்கள் தோன்றி இருந்தால், இன்று உலகம் என்பது தோன்றியிருக்க வாய்ப்பில்லை. மனித குலமும் தோன்றி இருக்க முடியாது. இந்திர சக்தியான இயற்கைச் சக்தியின் காரணமாக குறைப் பிரசவம் போல அந்தச் சூரியன் (Supernova) வெடிக்கவே, ஒரு சூரியனும், அவனைச் சுற்றி பல கணங்களும் வந்துள்ளன. இந்தக் கணங்கள் தோன்றிய உடனேயே அவற்றை அடக்க கணபதி வந்து விட்டார். வேத மரபில் கணங்களுக்கு அதிபதி அவர். உலகில் உயிரினம் தோன்றுவதற்கு ஊறு விளைவிக்காத வண்ணம் கணங்களை அடக்குபவர் கணபதி.


வெடித்தச் சிதறலில் உண்டான எல்லா கிரகங்களும் மருத்துக்கள்தாம். மொத்தம் 49 மருத்துக்கள் என்று இந்தக் கதை சொல்கிறது. (விஷ்ணு புராணத்தில் இந்தக் கதை வருகிறது.) அவை எல்லாம் நாம் இருக்கும் மண்டலத்தில் தான் இருக்கின்றன. சூரியனைச் சுற்றும் புதன் முதல், நெப்டியூன், ப்ளுடோ போன்ற கிரகங்கள் வரை எல்லாமே அவற்றுள் அடங்கும். இந்தக் கிரகங்கள் தவிர மேலும் பல மருத்துக்கள் நம் கவனத்துக்கு வராமல் உள்ளன. அவை நமது உலகம் செல்லும் பாதையில் குறுக்கிடாமல் இருக்கவும், அல்லது உயிரினத்துக்கு ஊறு விளைவிக்காமல் இருக்கவும் அவற்றைக் கணபதி என்னும் இன்னொரு இயற்கைச் சக்தி தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது. இன்றைக்கும் நவக்கிரக வழிபாட்டில், முதலில் கணபதியை வழிபட்டு விட்டுத்தான் நவக்கிரகங்களை வழிபட வேண்டும். காரணம் கணபதி அவற்றைத் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார்.


இப்படித்தான் இயற்கையில் உள்ள சக்திகளை வேதமும், அதன் வழியில் தமிழகத்தை உள்ளடக்கிய பாரதமும் கடவுளர்களாக வணங்கி வந்திருக்கிறது. இவற்றை இந்த மரபின் உள்ளிலிருந்து பார்த்தால்தான் புரியும். அப்பொழுதுதான் வேதம் மட்டுமல்ல, இந்து மதக் கடவுளர்களைப் பற்றியும் பேச அருகதை வரும். ஆங்கிலேயனுக்கு அந்த அருகதை கிடையாது. அறிவியலை உள்ளடக்கிய ஹிந்து மதம் பற்றி ஒன்றும் தெரியாத திராவிடம் பேசும் அறிவிலிகளுக்கு இவை எல்லாம் புரியாது.


4 கருத்துகள்:

 1. ஸ்ரீமதி ஜெயஸ்ரீ சாரநாதன் அவர்களே,

  அற்ப்புதமான பதிவு.இந்திரன் தன் வஜ்ராயுதத்தால் திதியின் கர்ப்பத்தை கலைத்த புராணக் கதையானது நம் சூரியக் குடும்பம் உருவான அறிவியல் உண்மையை அற்ப்புதமாக எடுத்துக்கூறுவதாக உள்ளது.அருமையாக, மிகச் சிறப்பாக ஆராய்ந்திருக்கிறீர்கள்.இதே போல் மகாவிஷ்ணு கூர்ம அவதாரத்தில் கடலில் மூழ்கிய பூமியை வெளிக்கொண்டு வருவதை, பனியுகம் முடியும் காலத்தில் பூமியில் நிலப் பகுதி தோன்றுவதுடன் அழகாகப் பொருந்திவருவதை அருமையாக ஆராய்ந்து கூறியிருந்தீர்கள்.இதைப் போல் பலரும் நம் புராணக் கதைகளை ஆராய்ந்து அதில் உள்ள அறிவியல், உண்மைகளை வெளிக்கொண்டுவர வேண்டும் என்று விரும்புகிறேன்.

  பதிலளிநீக்கு
 2. இந்து மதத்தில் உள்ள அறிவியலை ஆங்காங்கே இந்தத் தொடரில் எடுத்துத் தருகிறேன். திராவிடம் என்று எதைச் சொன்னார்கள் என்று விவரிக்கும் போது எங்கெங்கு எந்தெந்த நாடுகள் இருந்தன என்று எழுத இருக்கிறேன். (இவற்றுக்கு ஆதாரம்,பாகவதம், பீஷ்ம பர்வம் (மஹாபாரதம்), ப்ரிஹத் சம்ஹிதை.) அப்பொழுது கூர்ம வராஹ அவதாரங்கள் இயற்கை அடிப்படையிலானவை என்பது பற்றிய விளக்கங்கள் வரும். ஆர்வத்துடன் தாங்கள் தொடர்ந்து படித்து வருவதற்கு நன்றி திரு தனபால் அவர்களே.

  பதிலளிநீக்கு
 3. I like your way of thinking out of box. Carry on your good work

  பதிலளிநீக்கு
 4. The story of Tirisangu is the no gravitational area where our satelites are kept. Neither they can go up nor come down.

  Lord Krishna has said prior to Mahabaratha war, while performing Amavasya Tharpanam a day before the actual day, - SINCE YOU THE MOON AND SUN HAS COME TOGETHER HERE - today is Amavasya. It is practically what is right now.

  Long long before Galilio, Viswamithrar has said that the world is revolving and the noise that the world is making while revolving is OM.

  The CAR that we use in the temples itself is a great center of Gravity principle with the base weight and built up height calculation.

  Work of panjangam itself is a great algebra work.

  Tulsi is the only plant that breaths oxygen all the 24 hours. and linked to Lord Narayanan - the protector.

  Cow milk consists major vitamins and Minerals - all devas and devathas, While Buffalo milk has more of Col astral and linked to Lord Yama.
  Like this thousands of research work are hidden and said as stories in our mythology. You can work on them also.

  பதிலளிநீக்கு