செவ்வாய், 18 செப்டம்பர், 2012

107. ட்ரூயிட் (DRUID) என்னும் தானவர்கள்


புராணங்களில் ஆங்காங்கே பேசப்படும் தானவன் அயர்லாந்தின் பழமையான பாரம்பரியக் கதைகளிலும் சொல்லப்படுகிறான். இவன் ஒருவனல்லன். பல தானவர்கள் வடக்குப் பகுதிகளிலிருந்து கப்பல்களில் அயர்லாந்து வந்தனர். அவர்களே கெல்டிக் கடவுளர்களாகவும் சொல்லப்பட்டுள்ளனர். அவர்களே அயர்லாந்தை ஆண்ட அரசர்களாகவும் சொல்லப்படுகின்றனர். அவர்கள் தானுவின் மகன்களான கடவுள்கள் என்றழைக்கப்பட்டனர். இவர்கள் 'தூவத தே தானன்' (TUATHA DE DANANN) என்றழைக்கப்பட்டார்கள். இந்தச் சொல்லில் தே என்பது தெய்வம், தானன் என்பது தானுவின் மகன்கள் என்று பழைய அயர்லாந்து மொழியில் சொல்லப்படுகிறது. தூவத என்ற சொல் தூதன் என்பதை ஒத்திருக்கிறது.  தூவத தே தானன் என்பது "தானுவின் தேவ தூதர்கள்" என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்.


 

இவர்கள் வந்த காலத்தைப் பற்றியும் தெளிவாக பழைய ரெக்கார்டுகளில் இருக்கின்றன. இவர்கள் வெள்ளம் வந்த காலத்துக்குப் பிறகே வந்தார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. வெள்ளம் என்பது பனி யுகம் முடிந்த போது, ஆர்டிக் வட்டத்தில் பனிப்பாறைகள் உருகி, உடைந்து,,அட்லாண்டிக் பெருங்கடலில் திடீரென்று கடல் மட்டம் உயர்ந்த காலம்,இந்தப் படத்தில் அயர்லாந்துடன் கூடிய இங்கிலாந்து, மேற்கு ஐரோப்பா ஆகியவற்றைக் காணலாம். அவற்றைச் சுற்றி வெளிர் நீலமாக இருப்பது வெள்ளத்துக்கு முன் இருந்த நில நீட்சிகளே. இங்கிலாந்து தீவுகளூம், மேற்கு ஐரோப்பாவும் ஒரே நிலமாக இருந்தது என்பதை வெளிர் நீலப் பகுதிகள் காட்டுகின்றன. இவற்றைப் பற்றிய பிற விவரங்களை 46 ஆவது கட்டுரையில் எழுதினோம்.

 

பிரிட்டிஷ் தீவுகளும், மேற்கு ஐரோப்பாவும் நிலத் தொடர்புடன்  இருந்து வந்தன. ஆனால் ஆராய்ச்சிகள் காட்டும் விவரத்தின்படி, இன்றைக்கு 7000 ஆண்டுகளுக்கு முன் ஒரு கடல் வெள்ளம் வந்து, அதனால் கடல் மட்டம் உயர்ந்து இந்த நிலத் தொடர்பு கடலுக்குள் அமிழ்ந்து விட்டது. அது முதல் அயர்லாந்து உள்ளிட்ட பிரிட்டிஷ் பகுதிகள் கடலால் சூழப்பட்ட தீவுகள் ஆகி விட்டன. வெள்ளத்துக்குப் பிறகு தானுவின் மகன்கள் கப்பல்களில் வந்து அயர்லாந்தில் கரை ஏறினர் என்றால், அது இன்றைக்கு 6000 முதல் 7000 ஆண்டுகளுக்கு முன் வந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது.


வந்தவர்கள் தாங்கள் வந்த கப்பல்களை எரித்து விட்டனர். வந்த இடத்தை விட்டு மீண்டும் திரும்பிச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டாலும், அவ்வாறு திரும்பிப் போக முடியாதபடி இருக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறு எரித்து விட்டனர் என்று பழைய ஐரிஷ் வரலாறு கூறுகிறது. இதனால் வடக்கு அல்லது மத்திய ஐரோப்பாவிலிருந்து ஏதோ ஒரு காரணத்தினால் கிளம்பியவர்கள், தாங்கள் பழைய இடத்துக்குத் திரும்பிச் செல்லக்கூடாது என்ற வைராக்கியத்துடன் அயர்லாந்தில் தங்கி விட்டனர். அவர்களால் அயோர்னி என்ற பெயரைப் பெற்று, அந்த நாடு அயர்லாந்த் என்றானது.


இந்த விவரம் அவர்களது பூர்வீகத்தை மத்திய ஐரோப்பாவுக்கு இட்டுச் சென்றாலும், அங்கிருந்து இந்தியாவுக்கு அவர்களது பூர்வீகத்தைக் கொண்டு செல்வது தானு என்னும் பெயரே.


தானு என்பவள் தக்ஷபிரஜாபதியின் 13 மகள்களுள் ஒருத்தி. அவளும் அவளது சகோதரிகளும் காஸ்யப முனிவரைத் திருமணம் செய்து கொண்டனர். தானுவுக்கும், காஸ்யபருக்கும் பிறந்த பிள்ளைகள் தானவர் எனப்பட்டனர். பல புராணங்களிலும் தரப்பட்டுள்ள இந்தச் செய்தி கற்பனை என்றும் கட்டுக் கதை என்றும் வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்களும், அவர்களுக்கு வால் பிடிக்கும் இந்தியர்களும் சொல்லி விடுவர். ஆனால் எது புராணக் கற்பனை என்கிறார்களோ, அந்தப் பெயர் பிரிட்டிஷ் பகுதிகளிலும் இருக்கிறதே? உலகம் முழுவதும் ஒரேவிதமான கட்டுக் கதை என்று இதைச் சொல்லலாமா?


அயர்லாந்தில் மட்டுமல்ல, ஐரோப்பா முழுவதுமே இந்தத் தானுவின் பெயர் இருக்கிறது. தானுவின் பெயரைக் கொண்டு பல நதிகள் ஐரோப்பாவில் ஓடுகின்றன.  Don, Danube, Dniestr, Dniepr, என்னும் இந்த நதிகள் Danu  என்று சொல்லப்படும் பெண் தெய்வத்தை முன்னிட்டு எழுந்த பெயர்கள்.