வியாழன், 26 ஜனவரி, 2012

95. மொஹஞ்சதாரோவில் வராஹப் பெருமாள்!


இந்தத் தலைப்பே மலைப்பைத் தருவதாக இருக்கிறதா?

மலைக்க வேண்டாம்.


சிறியதும், பெரியதுமாக அதிக அளவில் மொஹஞ்சதாரோவில் கிடைத்துள்ள உருவம், ஒற்றைக் கொம்புள்ள மிருகத்தின் உருவமாகும்.  

இதை ஆங்கிலத்தில் UNICORN  என்பார்கள்.

சமஸ்க்ருதத்தில் வராஹம் என்கிறோம்.

தமிழில் ஒற்றைக் கொம்புப் பன்றி அல்லது கேழல் என்கிறோம்.

ஒற்றைக் கொம்புள்ள மிருகத்தை இந்த முத்திரையில் காணலாம்.



அலங்கரிக்கப்பட்டதாகவும், அதற்கு முன்னால் பாத்திரங்கள் போன்ற வடிவத்தில் அமைப்புகள் இருப்பதையும் காணலாம். இதே போன்ற உருவம், பல அளவுகளில் கிடைத்துள்ளது.


மிகச் சிறிய அளவிலும் கிடைத்துள்ளனஇந்தப் படத்தில் இருப்பதைப் போல.



 

வெள்ளியில் செய்யப்பட்டவையாகவும் கிடைத்துள்ளன, இந்தப் படத்தில் இருப்பதைப் போல.


 


ஓரளவு பெரிய அளவிலும் கிடைத்துள்ளன இந்தப் படத்தில் இருப்பதைப் போல.




இதன்  பின்புற அமைப்பைக் கீழே காணலாம்,

 


எதனுடனோ கட்டுவதற்கோ அல்லது பொருத்துவதற்கோ ஏற்றாற்போல துளையுடன் அமைந்துள்ளது.



இந்தப் படத்தில் உள்ள முத்திரையின் அளவு, 2.9 செ.மீட்டர் மட்டுமே.



இப்படிப்பட்ட உருவம் ஒன்று, இரண்டல்ல, மொத்தம் 388 உருவ முத்திரைகள் மொஹஞ்சதாரோவில் மட்டும் கிடைத்துள்ளன. இவை ஹரப்பாவிலும் கிடைத்துள்ளன.

இவற்றின் மேல் புறம் எழுதியுள்ள எழுத்துக்களில் மட்டும் வித்தியாசம் இருக்கிறது. மற்றபடி இந்தப் பகுதி மக்களுக்கு இது மிக முக்கியமான அமைப்பு என்று சொல்லும் வண்ணம் மிக அதிக அளவில் கிடைத்துள்ளது.

 


ஹரப்பா மட்டுமல்ல, குஜராத்திலும் இவை கிடைத்துள்ளன. சிந்து சமவெளி நாகரிகம் என்பதே, குஜராத் மாநிலம் உட்பட, மஹாநதி வரை பரவியிருந்த ஒரே மாதிரியான கலாச்சாரம் என்பதை நாம் முன்னமே குறிப்பிட்டிருந்தோம், அந்த குஜராத்தில் கன்மெர் (KANMER) என்னுமிடத்திலும், ஒரே காலக்கட்டத்தில் சிந்து சமவெளி நாகரிகம் இருந்தது என்பதற்கான பல அடையாளங்கள் கிடைத்துள்ளன. கன்மெர் இருக்குமிடத்தைப் பின்வரும் வரைபடத்தில் காணலாம்.




இந்தப் படத்தில் மரக்கலரில் புள்ளி புள்ளியாகக் காட்டப்பட்டுள்ள இடங்களில், சிந்து சமவெளி அடையாளங்கள் கிடைத்துள்ளன. அவை, குஜராத்திலும், இன்றைய இந்தியாவிலுள்ள காக்கர்ஹக்ரா எனப்படும் சரஸ்வதி நதிப் படுகையிலுமே அதிக அளவில் இருப்பதைக் காணலாம்.


இன்றைய தமிழர்களது மூதாதையர் சிந்து சமவெளிப் பகுதியில் வாழ்ந்தவர்கள் என்று இன்னும், எந்தத் தமிழனாவது நினைத்துக் கொண்டிருந்தால், இந்தப் படத்தைப் பார்க்கட்டும். இன்றைய ஹரியானாவிலும், குஜராத்திலும் தான் அவர்கள் வாழ்ந்தார்கள் என்பதை ஒப்புக் கொள்வார்களா என்பது சந்தேகமே. ஆனால், இவற்றையெல்லாம் தாண்டி, ஈரானுடனும், அங்கிருந்த எலாம் பகுதியுடனும் சொந்தம் கொண்டாடத் தயங்க மாட்டார்கள். அப்படிச் சொந்தம் கொண்டாடுவதில் பயனில்லை. ஏனெனில், அங்கு சிந்து சமவெளி நாகரிகச் சுவடுகளே இல்லை. இன்றைய பாகிஸ்தான் - ஈரான் எல்லையைத் தாண்டி சிந்து சமவெளி நாகரிகம் செல்லவில்லை. ஆனால் அந்த நாகரிகத்தின் தாக்கம் சென்றிருக்கிறது. அதைப் போகப்போகப் பார்ப்போம்.


இங்கு நாம் ஆராய எடுத்துக் கொண்டது ஒற்றைக் கொம்பு மிருகம் ஆகும். இதன் உற்பத்தித் தலம்  மொஹஞ்சதாரோ என்று சொல்லும் வண்ணம் அங்கு அதிக அளவில் கிடைத்துள்ளது. ஹரப்பாவிலும் கிடைத்துள்ளது. குஜராத்தில் உள்ள  கென்மர் பகுதியிலும் கிடைத்துள்ளது. இது ஏதோ ஒரு அடையாளாமாகவோ, அல்லது ஏதோ ஒரு வர்த்தகப் பொருளைக் கட்டி வைக்கப்பட்ட சீல் எனப்படும் முத்திரையாகவோ தென்படுகிறது.


கென்மரில் கிடைத்துள்ள ஒற்றைக் கொம்பு மிருக சீல்களை இங்கே காணலாம். நடுவில் துளையிடப்பட்டு அதனூடே ஒரு கயிற்றைச் செலுத்தி, எதனுடனோ கட்டியிருக்கிறார்கள் அல்லது பொருத்தியிருக்கிறார்கள்.



குஜராத் பகுதியிலுள்ள கோள தோரோ (GOLA DHORO) என்னுமிடத்திலும், இந்த உருவ முத்திரைகள் கிடைத்துள்ளன. கோள தோரோ இருக்கும் இடத்தை இந்த வரைபடத்தில் காணலாம்.



அந்த இடத்தில் கிடைத்துள்ள முத்திரை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.




இந்த அமைப்பின் உட்புறத்தில், சொருகுவதற்கு ஏற்றாற்போல வெற்றிடம் இருக்கிறது. எதன் மீதோ, ஒரு அடையாளமாகவோ, அல்லது சீல் வைத்தது போன்றோ, பொருத்தி இருக்கிறார்கள்.


இவ்வாறு விதம் விதமாகக் கிடைத்துள்ள இந்த உருவம் பதித்த முத்திரைகள் இந்தியப் பகுதிகளில் மட்டுமே கிடைத்துள்ளன என்பது ஒரு முக்கிய விவரம்.

அதாவது, சிந்து சமவெளி முத்திரைகள் பல

மத்தியத் தரைக் கடல் நாடுகள் வரை ஆங்காங்கே கிடைத்துள்ளன.


அவற்றை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள், இந்த முத்திரைகள், வர்த்தகப் பொருட்களது மீது கட்டப்படும் முத்திரைகள் என்று முடிவு செய்துள்ளார்கள். இந்த முத்திரைகளும், அவற்றின் மீது காணப்படும் எழுத்துக்கள் போன்ற வடிவங்களும், அந்த வர்த்தகப் பொருளையோ, அல்லது அந்த வணிகர்களது அடையாளத்தையோ சுட்டுவதாக இருக்கலாம் என்றும் கருதுகிறார்கள். வர்த்தகத்தின் மூலமாக இந்த முத்திரைகள், அரேபியா, மத்தியத் தரைக் கடல் நாடுகள் போன்ற இடங்களுக்குச் சென்றிருக்கின்றன என்றும் தெரிய வந்துள்ளது.


அவ்வாறு அந்த இடங்களில் கிடைத்துள்ள முத்திரைகளைக் கீழுள்ள படத்தில் காணலாம்.

 


ஆனால் ஒற்றைக் கொம்பு மிருக முத்திரைகள் அங்கெல்லாம் கிடைக்கவில்லை.

அந்த முத்திரை பாரத நாட்டுக்குள்ளேதான் சுற்றி வந்திருக்கிறது.


இதன் மூலம், அந்த முத்திரை காட்டும் பொருள்,

பாரத நாட்டுக்கு மட்டுமே உரியதாக,

பாரத மக்களால் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படுவதாக இருந்திருந்திருக்கிறது

என்று தெரிகிறது. அது மட்டுமல்ல,

அதை அனுப்பினவருக்கும்,

பெற்றுக் கொண்டவருக்கும்,

பொதுவான பொருளாக அது அமைந்திருக்கிறது

என்றும்  தெரிகிறது.


அது காட்டும் பொருளின் பயன்பாடு பாரதத்திற்கு வெளியில் இல்லை என்றும் தெரிகிறது.

இந்த முத்திரை உருவத்தை ஆராய்ந்த டா. டேவிட் ஃப்ராலே அவர்கள்

இது வராஹம் என்றும், யூனிகார்ன் (UNICORN) என்றும் சொல்லப்படும்

ஒரு அபூர்வ மிருகத்தை ஒத்திருக்கிறது என்கிறார்.


 

இந்த உருவம் கிடைத்துள்ள இடம் பாரத நாடாகும்,

இங்குதான் வராஹம் என்ற ஒரு அவதாரக் கடவுள்

இன்றளவிலும் வணங்கப்பட்டு வருகிறார்.

விஷ்ணுவின் 10 அவதாரங்களில் வராஹ அவதாரம் ஒன்று.


கடல் நீருக்குள் முழுகியிருந்த நிலப்பகுதியை,

வராஹ ரூபத்தில்,

தன் முன் கொம்பால் குத்தித் தூக்கி,

நீருக்கு வெளியே எடுத்ததே வராஹ அவதாரமாகும்.

வராஹ புராணம் என்று ஒரு புராணமே இருக்கிறது.

அந்த வராஹ மூர்த்தியை இப்படிக் காட்டுகிறோம்,


 


உருவமாக இப்படிச் சித்தரிப்பது, சமீப காலங்களில்தான் உண்டாகியிருக்க வேண்டும்.

ஏனெனில், தெய்வ உருவங்களின் அமைப்பை விவரிக்கும் வராஹ மிஹிரர் (இவர் பெயரிலும் வராஹம் இருக்கிறது) வராஹத்தின் உருவச் சிலை அமைப்பைப் பற்றித் தனது நூலான பிருஹத் சம்ஹிதையில் எதுவும் தெரிவிக்கவில்லை.


அந்த நூல் இன்றைக்கு 1600 வருடங்களுக்கு முன் எழுதப்பட்டது என்பது ஆராய்ச்சியாளர்கள் கருத்து.

அதில் அவரது காலத்துக்கு முன்பிருந்த கருத்துக்கள்,

பழம் பெரும் ரிஷிகளது கருத்துக்கள் போன்றவற்றையே

தாம் சொல்வதாக வராஹ மிஹிரர் குறிப்பிடுகிறார்.

தெய்வச் சிற்பம் வடிக்கும் முறையைப் பற்றி விளக்கும் அத்தியாயத்தில்,

நாம் முந்தின கட்டுரையில் கண்ட சூரியன், அவனது மகன் ரேவதன் ஆகியோர் உட்பட

பல தெய்வ உருவங்கள் அமைக்கப்பட வேண்டிய லக்ஷணங்களைக் கொடுத்துள்ளார்.

ஆனால் வராஹக் கடவுளது சிற்ப அமைப்பைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை.


அதனால் 2000 ஆண்டுகளுக்கு முன்வரை வராஹச் சிற்பம் அமைக்கும் முறை இருந்திருக்கவில்லை என்று சொல்லலாம்.


 

அதற்கு ஒரு காரணம், வராஹ அவதாரம் என்பது இயற்கை நிகழ்ச்சியின் உருவகம் என்பதே.  பூமியின் நிலப்பகுதிகள், நீருக்கு வெளியே எழும்பிய விவரத்தை இந்த அவதாரம் உருவகப்படுத்துகிறது. நிலப்பகுதி வெளியே வந்ததால்தான், மனித குலம் வளர முடிந்தது. மனிதனும், நல்லது- கெட்டதைப் புரிந்து கொண்டு, தர்ம வழியில் வாழ்ந்தால்தான் உயர முடியும், இவை அனைத்தையும் காட்டுவது வராஹ அவதாரமாகும். இதை விளக்கும் பகுதிகள் மஹாபாரதத்திலும் இருக்கின்றன. தமிழ்ச் சங்க நூலான பரிபாடலிலும் இருக்கிறது.


வராஹமானது பூமியின் மீது பரிவு கொண்டது. அந்தப் பூமியோ, கடலுக்குள் முழுகி இருந்தாள். அவளைத் தேடி, தன் கொம்பால் கடலுக்குள் குகை போல இருந்ததை முட்டித் தூக்கி நிறுத்தவே, அதற்குக் கோவிந்தன் என்ற பெயர் ஏற்பட்டது என்று மஹாபாரதத்தில் சாந்தி பர்வத்தில் (346) கிருஷ்ணன் கூறுகிறான். கிருஷ்ணனது பல பெயர்களுக்கான பெயர்க் காரணத்தைக் கிருஷ்ணனே சொல்லுமிடத்தே இவ்வாறு கூறுகிறான்.


அதாவது கிருஷ்ணனே வராஹம்,


கிருஷ்ணனே, 'கோ' என்னும் குகையை அடைந்து (அவிந்தம்) அதைத் தூக்கி நிறுத்தினான், அதனால் கிருஷ்ணனே கோவிந்தன்.


நிலை நிறுத்திய பூமியில் அவனே தர்ம புருஷனாக, தர்மத்தின் காவலனாக ஆனான். அதனால் அவன் வ்ருஷாகபி

இவ்வாறு செல்கிறது சாந்திபர்வ வருணனை.


விருஷாகபி என்றாலும் ஒற்றைக் கொம்பு மிருகம் எனப்படும்.

வ்ருஷா என்றால் விருஷபம் அல்லது எருது எனப் பொருள்படும்.

கபி என்றால் கொம்பு. வ்ருஷாகபி என்றால் கொம்புள்ள எருது.

எருதுகளைப் பற்றி சொல்லும் வேதப் பாடல்கள் அவை ஆயிரம் கொம்புகள் கொண்டவை என்று வருணிக்கின்றன. ஆனால் ஒரே ஒரு கொம்பு இருந்தால் அது வ்ருஷாகபி ஆகும். அதை வராஹம் என்றே அழைத்தார்கள்.

வ்ருஷாகபியைப் பற்றிச் சொல்லும் ரிக் வேதப் பாடல் இருக்கிறது.

அதில் இந்திரனுக்கும், வ்ருஷாகபிக்கும் இருக்கும் சண்டையைப் பற்றிப் பேசப்படுகிறது. (ரிக் வேதம்-10 ஆவது மண்டலம், இந்திரன். LXXXVI.)

அதிலும் ஆரிய தஸ்யு போராட்டம் வருகிறது!!

எப்பொழுதும் இந்திரனே வென்று விடுவான். ஆனால் சோமம் என்னும் ரசத்தை உண்டவன் இந்திரனை வெல்வான் என்கிறது அந்தப் பாடல்.

இதன் உட்பொருள் என்னவென்றால், இந்திரன் என்பவன் இந்திரியங்களை, அதாவது நமது புலன்களை ஆட்டி வைக்கும் சக்தியாகும்.

புலன்களுக்கு அடிமையாகி நாம் பல தவறுகளைச் செய்கிறோம்.

அதனால் தஸ்யுக்களாக ஆகிறோம்.

இந்திரியங்களுக்கு அடிமையாகும் போது இந்திரன் வென்றவனாவான்.

அப்பொழுது தர்மம் தோற்றதாகும்,

அந்தத் தர்மம் வ்ருஷாகபி எனப்படுகிறது.

அந்த வ்ருஷாகபியானவன், சோமம் என்னும் சந்திரனை உட்கொள்ள வேண்டும்,.

சோமன் என்னும் சந்திரன் மனத்தை ஆட்டி வைப்பவன்.

'சந்த்ரமா மனசோ ஜாயத என்று வேதம் சொல்கிறது.

மனதைப் பயன் படுத்தி ஆழ்ந்து சிந்தித்தால், இந்திரியங்களிடம் அடிமைப்பட்டு கிடப்பது நமக்குப் புலனாகும். அப்பொழுது மனம் தர்மத்தின் வழி செல்ல முயலும், அப்படிபட்ட மனத்துக்கும், இந்திரியம் எனப்படும் புலன்களுக்கும் நடக்கும் சண்டையில், தர்மம் என்னும் விருஷாகபி வெல்வான். உயர்ந்த சிந்த்னை வெல்வதால் அது ஆரியன் ஆகும், தோற்றுப் போகும் புலன்கள் தஸ்யூவாகும். தோற்ற இந்திரியம், வென்ற தர்மத்துக்கும், மனதுக்கும் கட்டுப்படும். இந்தக் கருத்தே வ்ருஷாகபி குறித்த வேதக் கருத்தாகும்.

அந்த விருஷாகபி, ஒற்றைக் கொம்புள்ள வராஹமாகும். வேதம் சொல்லும் இந்தக் கருத்தை, கிருஷ்ணனுக்கு ஒப்புமை படுத்தி மஹாபாரதம் சொல்கிறது.

ராமனுக்கு ஒப்புமைப் படுத்தி, ராமனை "ஏக ஸ்ருங்கோ வராஹ:" என்று ராமாயணம் கூறுகிறது. அந்த அளவுக்கு வராஹ அவதாரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

வராஹ அவதாரம் ஆரம்பித்த பிறகு உண்டான மனித குலமே இப்பொழுது இருக்கிறது என்பதால், தற்போது நடக்கும் காலக்கட்டத்திற்கு 'வராஹ கல்பம்' என்றே பெயர். இதைச் சங்க நூலான பரிபாடலும் தெரிவிக்கிறது.

பரிபாடல் 2 இல்,

"கேழல் திகழ் வரக் கோலமொடு பெயரிய ஊழி" என்று சொல்லப்படும் விவரம், கேழல் என்னும் பன்றியின் உருவம் (வராஹம்) கொண்டு, நீரில் முழுகிக் கிடந்த நிலத்தை வெளிக் கொணர்ந்து, அங்கு உயிர்கள் வாழ வழி செய்ததால், அந்தப் பன்றியின் பெயரைச் சேர்ந்து இந்த ஊழி பெயர் பெற்றது, அதாவது வராஹ கல்பம் என்ற பெயரைப் பெற்றது என்கிறார் இதைப் பாடிய கீரந்தையார்.

முதல் சங்கம் நடந்த இந்தியப் பெருங்கடல் பகுதியில், ரிஷப மலை இருந்தது போல, வராஹ மலை எனப்படும் பன்றி மலையும் இருந்திருக்கிறது. திருவிளையாடல் புராணத்தில், ஆலவாய்க் காண்டத்தின் ஆரம்பத்தில், 2 ஆம் ஊழியில் பல பகுதிகள் அழிந்தன என்று சொல்லும் இடத்தில், அழியாமல் நீருக்கு மேலே தெரிந்த பகுதிகளாக பன்றி மலை என்னும் வராஹ மலை இருந்தது என்று சொல்லப்பட்டுள்ளது. இன்று அது இல்லை. 3 ஆம் ஊழியின் போது அழிந்திருக்க வேண்டும். இந்தியக் கடலுக்குள்ளிலிருந்து அது ஒரு காலத்தில் எழும்பியிருக்க வேண்டும். அதனால் வராஹ மலை என்ற பெயர் பெற்றிருக்க வேண்டும்.

இவற்றின் மூலம், வராஹக் கருத்து என்பது வட இந்தியாவில் மட்டும் இருந்தது என்று சொல்ல முடியாது.

சங்கத் தமிழர்களும் அதே கருத்தைக் கொண்டிருந்திருக்கிறார்கள்.

ஆனால் அந்தத் தமிழர்கள் மொஹஞ்சதாரோப் பகுதியில் இருந்தவர்கள்

என்பது உண்மையானால்,

அங்கு காணப்படும் வராஹ முத்திரைகள், வராஹச், சின்னம்

ஆகியவற்றில் ஏதேனும் ஒரு ஒன்றையாவது

தமிழ் நாட்டிலும் தொடர்ந்திருப்பார்கள் அல்லவா?

அப்படி ஒரு அடையாளமும் தமிழ் நாட்டில் காணப்படவில்லையே?

சங்கத் தமிழில் வராஹத்தைப் பேசியவர்கள், ஒரு மலைக்கு வராஹ மலை என்றே பெயரிட்டவர்கள், மொஹஞ்சதாரோவின் வராஹச் சுவடு ஒன்றைக் கூட தமிழ் நாட்டில் கொண்டு வராமல் இருந்திருப்பார்களா?

வராஹச் சின்னம் புழங்கிய மொஹஞ்சதாரோ காட்டும் நிலவரம் என்னவென்றால், ங்கிருந்த மக்கள் தமிழ் நாட்டுக்கு இடம் பெயரவில்லை என்பதே. அது மட்டுமல்ல, அந்த மக்கள் வேத முறையில் வாழ்ந்தவர்கள் என்பதைப் பறை சாற்றும் விதமாகவும் முத்திரைகள் இருக்கின்றன. அவை என்னவென்று பார்ப்போம்.

வராஹமே, பூவராஹமாக, லக்ஷ்மி வராஹனனாக, இந்த உலகைப் பரிபாலிக்கிறான் என்பதே, பாரதம் முழுவதும் உள்ள கருத்தாகும். பல இடங்களிலும் ஆதி வராஹம் என்னும் பெயரில் தெய்வ உருவங்கள் இருக்கின்றன. வராஹத்துக்குப் பிறகுதான் மனித குலமே வந்தது, பிற அவதாரங்கள் வந்தன என்பதால் ஆதி வராஹம் என்று பெயர் ஏற்பட்டிருக்கிறது.

அந்த வராஹம், தர்மத்தை நிலை நாட்டுகிறது என்பதே சாந்தி பர்வத்தில் கிருஷ்ணன் கூறுவதாகும். தர்மம் என்பதைத் தர்மச் சக்கரமாக்க் காட்டுவது வழக்கம். மொஹஞ்சதாரோவில் காணப்படும் பல ஒற்றைக் கொம்புச் சின்னங்களிலும் தர்மச் சக்கரம் இருப்பதைக் காணலாம்.


இந்த முத்திரையின் மேல்புறத்தில் சில சித்திர அமைப்புகள் உள்ளன. இவை வலது பக்கத்திலிருந்து, இட்து பக்கம் நோக்கி அமைக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கம் வேத மரபில் உள்ள வழக்கமாகும். இதன் கடைசி அமைப்பு சக்கர வடிவில் இருப்பதைக் காணலாம்.

 

வராஹம் என்பது தர்மத்தின் பாதுகாவலனாக மட்டும் சொல்லப்படவில்லை. அந்த வராஹமே யக்ஞங்களில் வழிபடப்படுபவனாகவும் வேத மதம் கூறுகிறது, யக்ஞவராஹம் என்ற பெயர் வராஹத்துக்கு உண்டு. இந்த முத்திரைகளில், யக்ஞத்தில் வழிபடப்படுவது போன்ற தோற்றத்தில், இந்த மிருகத்துக்கு முன்னால் வழிபாட்டுப் பொருட்கள் காணப்படுகின்றன.

வராஹம் என்பது தர்மத்தின் காவலன் என்பதையும், இந்திரனுக்கும், விருஷாகபிக்கும் நடக்கும் போரில், விருஷாகபி வெல்வதே தர்மத்தின் வெற்றியாகும் என்பதையும் தெரிவிக்கும் வண்ணம் ஒரு முக்கிய முத்திரை ஹரப்பாவில் கிடைத்துள்ளது.3.91 செ.மீ நீளத்திலும், 1.5 முதல் 1.62 செ. மீ. அளவிலான அகலத்திலும் கிடைத்துள்ள இந்த முத்திரையின் இரு புறமும் சில உருவங்கள் இருக்கின்றன.

இதன் ஒரு புறத்தில், நாம் இப்பொழுது பேசி வந்த தர்மச் சக்கரம் போன்ற அமைப்பு மேல் பகுதியில் இருக்கிறது. அடிப்பகுதியில் யானை ஒன்று தென்படுகிறது. இடைப்பட்ட பகுதியில் பெண் போன்ற உருவத்தில் ஒருவர், புலிகள் போன்ற இரண்டு மிருகங்களை நெறித்து ஒதுக்குகிறார்.



இதே முத்திரையின் பின்புறம் இப்படி இருக்கிறது.

பத்மாசனம் போன்ற அமைப்பில் ஒருவர் தியானத்தில் இருக்கிறார். அதையடுத்து, எருது போன்ற ஒரு மிருகத்தை ஒருவர் அடக்கிக் குத்துகிறார்.

இவை இரண்டும், நாம் இதுவரை சொல்லி வந்த விருஷாகபி இந்திரன் தத்துவத்தை விளக்கும் வண்ணம் இருக்கின்றன.

முதலில் மேலே உள்ள தோற்றத்தைப் பார்ப்போம். புலன்கள் என்னும் இந்திரியங்களுக்கும், விருஷாகபிக்கும் சண்டை நடக்கிறது. இதில் இரட்டைக் கொம்புள்ள மாடு போன்ற தோற்றம் இருக்கிறது. விருஷாகபி என்னும் சொல்லில், வ்ரிஷா என்றால் விருஷபம் என்னும் ரிஷபம் அல்லது மாடு என்பதே பொருளாகும். கபி என்றால் கொம்பு. விருஷாகபி என்றால் கொம்புள்ள எருது என்றும் பொருள் கொள்ளலாம். ஆனால் விருஷாகபி என்றால் தர்மத்தின் காவலனான வராஹம் என்பதும் ஒரு பொருளாகும் என்று பார்த்தோம்.

இந்த முத்திரையில், ஒருவன் தவக் கோலத்தில் இருக்கிறான். அதாவது புலனடக்கம் செய்து, இந்திரியங்களை வெல்ல முயலுகிறான். அதன் காரணமாக அவனுக்கும் (அவனுக்குள் இருக்கும் இந்திரியங்களுக்கும்), ரிஷபத்துக்கும் (விருஷாகபி) சண்டை நடக்கிறது.

இந்திரனும், ரிஷபமும் எதிரெதிரானவை என்ற கருத்து வாஸ்து சாஸ்திர வர்கங்களிலும் உண்டு. அது போல இந்திரனுக்கும், வருணனுக்கும் பகை.. இந்திரனுக்கும் சர்ப்பத்துக்கும் (பாம்பு) ஒற்றுமை கிடையாது என்ற வர்க அமைப்புகளும் வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்படுகின்றன. இதில் இந்திரன் ஒரு திசையிலும், அதற்கு நேர் திசையில் ரிஷபம் அல்லது, வருணன் அல்லது சர்ப்பம் என்றும் அமைக்கப்படும். இவை எல்லாவற்றிலும் இந்திரன் இருப்பான். இந்திரியங்களது ஆக்கிரமிப்பை இது காட்டுவதாக உள்ளது. எதிர் திசையில், இடத்துக்கு ஏற்றாற்போல ரிஷபமோ, வருணனோ அல்லது சர்ப்பமோ அமையும். இவை காட்டும் கருத்துக்கள் ஐரோப்பாவிலும் பரவியிருந்தன என்பதைத் தக்க இடங்களில் இந்த்த் தொடரில் காணலாம்.

இந்திரனுக்கும், ரிஷபத்துக்கும் உள்ள சண்டையை மேலுள்ள முத்திரை காட்டுவதாக அமைந்துள்ளது.

இதன் அடுத்த நிலையை, இந்த முத்திரையின் பின்புறத்தில் அமைத்துள்ளார்கள்.


பின்புறம் தென்படும் இந்த அமைப்பில், கீழுள்ள யானை, ஐராவதம் என்னும் யானையைக் கொண்டுள்ள இந்திரனைக் குறிக்கிறது. அது இந்திரனுக்கு உருவகம்.

அதற்கு நேர் எதிரில், மேலே தர்மச் சக்கரம் காட்டப்பட்டுள்ளது. அது இந்திரனுக்குப் பகையான விருஷாகபியின் உருவகம் ஆகும். இவை இரண்டுக்கும் இடையே ஒரு மனிதன் அவனது ஆத்ம சக்தியைக் கொண்டு (இந்தச் சக்தி பெண்ணாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது) தன்னை அடக்க வரும் (இந்திரியங்களான) மிருகங்களை அடக்குகிறான்.

முடிவில் தர்ம்மே வெல்லும் என்பதைக் காட்ட, தர்மச் சக்கரம் மேல்புறம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் உருவகமான ஒற்றைக் கொம்பு மிருகமான வராஹம், மொஹஞ்சதாரோ, ஹரப்பா எங்கும் கொண்டாடப்பட்டிருக்கிறது.

மொஹஞ்சதாரோவின் காலம், கிருஷ்ணன காலத்தை ஒட்டிய காலமாகும். அப்பொழுது பாரத மக்கள் வராஹத்தை வழிப்பட்டனர். வராஹமே முக்திக்கு வழி என்று அவர்கள் நினைத்தனர். வராஹ சரம ஸ்லோகம் என்ற ஒரு ஸ்லோகமும் இருந்து வந்தது. வராஹமே இந்தப் பிரபஞ்சம் முழுவதும் பரவி இருக்கிறது. அதாவது இந்தப் பிரபஞ்சம் முழுவதுமே வராஹத்தின் உடலாகும் என்பதை ஒருவன் உணர்ந்து கொண்டு, அந்த வராஹத்திடம், அன்பு கொண்டு, சரணடைந்தால், சாகும் காலத்தில் உணர்விழந்து, மதியிழந்து, வராஹத்தை நினைக்கவில்லை என்றாலும் கூட, அந்த வராஹப் பெருமான் அவனை நினைப்பார். அவனுக்கு மறு பிறப்பில்லாத முக்தி அளிப்பார் என்பதே வராஹ சரம ஸ்லோகத்தின் கருத்தாகும். அதைப் பின் பற்றிய மக்களே, மொஹஞ்சதாரோ உள்ளிட்ட சிந்து சமவெளிப் பகுதிகளில் வாழ்ந்தனர் என்பதை வராஹ முத்திரைகள் காட்டுகின்றன.

அந்த வழிபாடு தொடர்பான போக்குவரத்துகளில், வராஹ முத்திரையைப் பயன் படுத்தியிருக்கின்றனர். அப்படி ஒரு முத்திரை குஜராத்தின் கோள தோரோவில் கிடைத்துள்ளது என்று கண்டோம்.


கோள தோரோ என்னும் பெயரைப் பாருங்கள். கோள வடிவிலான கோவில் என்று அது பொருள் படும் (கோள- கோளம் அல்லது வட்ட வடிவம்: தோரோ மொஹஞ்சதாரோ என்பதில் உள்ள தாரோ என்பதைப் போல தோரோ என்பது, டேரா எனப்படும் கோவில் என்று பொருள் படும் குஜராத்தியச் சொல்லாகத் தென்படுகிறது.)

விஷ்ணுவையும், கிருஷ்ணனையும் போற்றும் பாரத நாட்டுக்குள்தான் இந்த வராஹ முத்திரை பயணித்திருக்கிறது. இங்குதான் வேத கலாச்சாரம் இருந்திருக்கிறது. சிந்து சமவெளி நாகரிகம் வருவதற்கு முன்னமேயே இங்கு வேதக் கலாச்சாரம் இருந்திருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும். வராஹத்தை உருவ வழிபாட்டுக்குள் கொண்டுவராத காலக்கட்டமாக அது இருந்தது. அதனால் வராஹம் என்னும் மிருக உருவிலேயே அந்த தெய்வத்தை வடித்திருக்கிறார்கள்.

மொஹஞ்சதாரோ காலத்திற்குப் பிறகு, பொ.பி. 7 ஆம் நூற்றாண்டாண்டில்தான் வராஹ உருவம் மீண்டும் தென்பட ஆரம்பித்தது. அதில் ஆச்சரியம் என்னவென்றால் அந்த உருவத்தைக் கொண்டு வந்தவர்களும், சிந்து சமவெளிப் பகுதியில் வாழ்ந்தவர்கள்தான் என்பதே. இதை ஆராயும் போது, சிந்து சமவெளிப் பகுதியில் – அதிலும் குறிப்பாக மொஹஞ்சதாரோப் பகுதியில் வாழ்ந்த மக்கள் யார் என்ற கேள்விக்கும் பதில் கிடைக்கிறது.

பொ.பி.7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வராஹ உருவம் இதோ:-


ஆதிவராஹம் என்று சொல்லப்பட்ட இந்த வராஹம் கீழ்க்கண்டவாறு குர்ஜரப் பிரதிஹார அரசர்களால் வெளியிடப்பட்டது.


 

குர்ஜரப் பிரதிஹார்ர்கள் யார் என்று தேடினால், இவர்களது சரித்திரம், ராமாயண காலத்திலேயே ஆரம்பிக்கிறது. பிரதிஹார என்னும் பெயர், லக்ஷ்மணனுடன் தொடர்பு கொண்டது. காவல் புரிவோன் என்று அதற்கு அர்த்தம். லக்ஷமணன் வழியில் வந்த இவர்களைப் பற்றிய ஒரு முக்கிய செய்தியை வசிஷ்டர் எழுதியுள்ள யோக வாசிஷ்டத்தில் காணலாம். அந்தச் செய்திக்கும் தமிழ் நாட்டுக்கும் ஒரு தொடர்பு உள்ளது. அதை இந்த்த் தொடரின் தக்க தருணத்தில் காண்போம்.

ராமாயண காலத்தில் சரயு நதிக் கரையில் இருந்த இந்த மக்கள், மஹாபாரத காலத்தில் கிருஷ்ணனைத் தொடர்ந்து, வட மதுரைக்கும், பிறகு துவாரகைக்கும் வந்தனர் என்று இவர்களைப் பற்றிய ஆராய்ச்சி நூல்கள் கூறுகின்றன. கோகுலத்தில் கிருஷ்ணனுடன் இருந்த கோபர்களே இவர்கள் என்று குர்ஜர்ர்களுடைய வரலாற்றை ஆராய்ச்சி செய்யும் "The Royal Gurjars: Their contribution" என்னும் நூல் தெரிவிக்கிறது. மஹாபாரதப் போரில் இவர்கள் பாண்டவர்கள் பக்கம் போரிட்டிருக்கின்றனர்.

கிருஷ்ணன் காலத்துக்குப் பிறகு இவர்கள் எங்கே சென்றனர்?

மீண்டும் 2000 ஆண்டுகளுக்கு முன் அவர்கள் சரித்திரம் தெரியவரும் வரை எங்கே இருந்தனர்?

இந்தக் கேள்விகளுக்கு விடை தேடினால், இவர்கள் சிந்து சமவெளிப் பகுதியில், மொஹஞ்சதாரோ அல்லது குஜராத் உள்ளிட்ட பகுதிகளில் பரவி வாழ்ந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது.

7 ஆம் நூற்றாண்டில் தென்பட்ட ஆதிவராஹ உருவத்தையும், ஆதி வராஹ வழிபாட்டையும் இவர்கள் செய்து வந்தவர்கள் ஆதலால், அதன் ஆரம்பத் தோற்றம் காணப்படும் மொஹஞ்சதாரோ உள்ளிட்ட சிந்து சமவெளிப் பகுதிகளில் இந்த மக்கள் இருந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது.

சிந்து சமவெளிப் பகுதியைச் சேர்ந்த ராஜஸ்தான் பகுதிகளிலும் இவர்கள் இருந்து வந்திருக்கிறார்கள். 1966 ஆம் ஆண்டின் ராஜஸ்தான் மாநில வெளியீட்டில், இவர்கள் பல நூற்றாண்டுகளாகவே பாரதத்தின் வட மேற்கு எல்லை வழியாக அன்னிய சக்திகள் வராமல், தடுத்து, வட மேற்கு எல்லையைப் பாதுகாத்திருக்கிறார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த வட மேற்குப் பகுதி, சிந்து சமவெளி நாகரிகம் வளர்ந்த மொஹஞ்சதாரோ உள்ளிட்ட பகுதியாகும்,

இவர்கள் பெயரே 'பாது காவலர்கள்" என்ற பொருள்படும் பிரதிஹாரர்கள். மஹாபாரதக் காலத்திற்குப் பின் இந்தப் பகுதியில் வாழ்ந்த குர்ஜரப் பிரதிஹாரர்கள், பாரம்பரிய வேத மதத்தைக் காத்திருக்கிறார்கள். வராஹ வழிபாட்டை விடாது பின்பற்றியிருக்கிறார்கள். தாங்கள் வசித்து வந்த வட மேற்கு பாரதம் வழியாக அன்னியப் படையெடுப்பாளர்கள் வராமல் காத்திருக்கிறார்கள்.

இவர்கள் காத்த நாடு ஆரிய வர்த்தம் என்று சொல்லும் வண்ணம் தங்களை 'ஆரியவர்த்த மஹாராஜாதி ராஜர்கள்" என்று அழைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த விவரத்தை நாம் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும்.

குர்ஜர்கள் எனப்படும் இந்த மக்கள் வாழ்ந்த இடம் கூர்ஜரம் எனப்பெயர் பெற்றது

இதிலிருந்து குஜராத் என்ற பெயர் வந்தது.

இந்த குஜராத்தில் 5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சிந்து சமவெளிக் கலாச்சாரம் இருந்திருக்கிறது.

இந்தப் படத்தில் மஞ்சள் நிற செவ்வகக் கட்டத்தில் இருப்பது ஆரியவர்த்தம்.

சிவப்பு நிற வட்டப் பகுதி, சிந்து சமவெளிப் பகுதியைக் காட்டுகிறது.


மொஹஞ்சதாரோவில் காணப்பட்ட வராஹம்,

குஜராத்தின் கென்மர் பகுதியிலும்,

கோள தோரோ பகுதியிலும் காணப்பட்ட வராஹம்,

அதே பகுதியைச் சேர்ந்த குர்ஜர மன்னர் முத்திரைகளிலும் காணப்படுகிறது என்றால்,

அந்த மக்கள் மொஹஞ்சதாரோ தொடங்கி, 5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அங்கு வாழ்ந்து வந்தவர்கள் என்று தெரிகிறது.

அவர்கள் தங்களை ஆரிய அரசர்கள் என்று சொல்லிக் கொண்டதால், சிந்து சமவெளியில் இருந்தது ஆரியமே என்று தெரிகிறது.

ஆரிய-திராவிடப் போரைப் பற்றிய கதைகள் பொய்க் கதைகளே என்றும் தெரிகிறது. மஹாபாரதக் காலத்துக்கும் முன்பிருந்தே வராஹ வழிபாட்டைச் செய்து மக்களே மொஹஞ்சதாரோவிலும், ஹரப்பாவிலும், குஜராத்திலும் குடியேறியிருக்கின்றனர்.

1931 ஆம் ஆண்டு சர் ஜான் மார்ஷல் அவர்கள் முதன் முதலில் ஆராய்ந்தபோது, மொஹஞ்சதாரோவில் கண்டெடுத்த வராஹ முத்திரையைப் பாருங்கள்.

 

http://www.themeaningofvedas.com/CHAPTER%205.htm

 

குர்ஜரப் பிரதிஹார அரசர் மிஹிர் போஜர் அமைத்த வராஹத்தையும் பாருங்கள்.


http://en.wikipedia.org/wiki/Gurjara


தோற்றத்தில் இவற்றுக்குள்ளே ஒற்றுமை இருக்கிறது. ஒரே பகுதியில், ஒரே மூலத்தில் வந்த மக்களால் இவ்வாறு வடித்திருக்க முடியும்.

இந்தப் பகுதியை ஒட்டிய மத்தியப் பிரதேச உதயகிரியில் காணப்படும் வராஹம், இதை ஒட்டி அமைந்துள்ளது. இது பொ.பி 5 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது.


 

இது மட்டுமல்ல, குர்ஜரப் பிரதிஹார்ர்கள் ஆண்ட காலத்தில் பாரதத்தின் பல பகுதிகளிலும், இதே போன்ற அமைப்பில் வராஹ உருவங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. இதே தோற்றம், ஆந்திராவில் உள்ள அஹோபிலத்தில், பாறையில் செதுக்கப்பட்ட வராஹ உருவிலும் தொடர்வதைக் காணலாம்.